Saturday, February 2, 2019

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு அன்பளிப்பு.

இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதியிடம் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி, உறுதியளிப்பு

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் சர்வதேச நியமங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படை தொழிநுட்பத்தை பயன்படுத்தி கடற்படை பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஆறு வாரகால குறுகிய காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற மற்றுமொரு படகையும் இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சீஷெல்ஸ் அரசாங்கம் இலங்கை கடற்படையிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகளை கையளிக்கும் நிகழ்வுக்கு சீஷெல்ஸ் நாட்டின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் இலங்கைக்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதியினால் படகுகளை கையளிப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கொன்ரட் மெடரிக், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, கடற்படை பணிக்குழாம் பிரதானி ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதே நேரம் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் அவர்கள் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி​ைமைத்ரிபால சிறிசேவைின் சீஷெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்னெடுப்பது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சகோதர நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளினதும் மக்களின் சுபீட்சத்திற்காக அந்த இணக்கப்பாடுகளை பலமாக முன்னெடுத்துச்செல்ல அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் உப ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி சீஷெல்ஸ் உப ஜனாதிபதியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சீசெல்ஸ் ஜனாதிபதி டெனி போ வின் வாழ்த்துச் செய்தியையும் சீஷெல்ஸ் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


Read more...

இலங்கையின் சுதந்திர தினத்தை, ''கரிநாளாக கடைபிடிக்க'' தீர்மானித்த கேப்பாபுலவு மக்கள்.

நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை, கரிநாளாக அனுஷ்டிக்க கேப்பாபுலவு மக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம், தமது காணிகளினுள் உள் நுழையும் போராட்டமொன்றையும் முன்னெடுக்க முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர்களது ஜனநாயக போராட்டத்தை முடக்க, மக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் குதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

704 ஆவது நாளாக, இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த மக்களது நில மீட்பு போராட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில், மீதமாகவுள்ள காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.

அந்த காணிகளில் இராணுவத்தினர் தமது படை முகாங்களை அமைத்து நிலை கொண்டுள்ளனர் . இந்த காணிகளை முழுமையாக விடுவிக்க கோரி மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இதனிடையே மக்களது போராட்டத்தை எதிர்கொள்ள, படையினர் முகாம் வாயில்களில் முள்ளுக்கம்பிகளை கொண்டு, பல்வேறு தடுப்புக்களை அமைத்து முகாமை பலத்த பாதுகாப்புக்குள் கொண்டுவந்துள்ளனர். 24 மணிநேரமும் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற சர்வதேச மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் மாணவர்கள் சென்று சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த மாணவர்கள் நேற்று மாலை முல்லைத்தீவில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 695 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் சென்று தங்கள் ஆய்வுகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்பாதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் ராணுவத்திடம் சரணடைந்த பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழர்களை அச்சுறுத்திய ப்ரியங்க பெர்ணான்டோவின் பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டது!

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவின் பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இலங்கையின் கடந்த சுதந்திர தின நிகழ்வின் போது பிரித்தானியாவிலிருள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பாக அவரது கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் அவர், நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், பல புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொல்லப்பட்ட போதே, குறித்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதம நீதவான் எம்மா அரபுத்னொட் அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

Read more...

காணி பத்திரங்கள், உடனடியாக வழங்கப்பட வேண்டும் - தேர்தலை குறிவைத்து நகரும் ஹிஸ்புல்லா.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு, உடனடியாக காணி பத்திரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், மூன்று மாவட்டத்திற்கும் பிரித்து இந்த காணி பாத்திரங்களை கையளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டும், அவை மக்களுக்கு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும், உள்ளமை தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள இதுவரை வழங்கப்படாத காணி உறுதிப் பத்திரங்கள் அனைத்தும், பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதன் வேலைகளை பூர்த்தியாக்கி மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை எதிர்க்கு மட்டக்களப்பின் பல இடங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எனவே மக்களின் மனங்களை வென்று அடுத்த தேர்தலில் தமக்கான இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறார் என, பல்வேறு தரப்பினர் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

Read more...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அறிவிப்பை வரவேற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 140 ரூபாயாக மேலதிக கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமையினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதி, பகுதியான வேதனத்தை பெறுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் கோரிய கடினமான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

தொழிலாளர்களின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய புதிய கூட்டு ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

இதன்படி தோட்டத் தொழிலாளி ஒரு நாள் தொழிலுக்கு சென்றாலும் 750 ரூபாய் வேதனத்தை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணி மேலும் 140 ரூபாயை மேலதிக கொடுப்பனவாக பெற்றுக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

மீண்டும் கண்டியில் தீ விபத்து

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் குறித்த கட்டிடத்திற்கும் அதில் இருந்த பல பொருட்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில், கண்டி மற்றும் அதனை அண்மித்த நகரங்களைச் சேர்ந்த தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாக பாடுபட்டதன் பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் கண்டி – யட்டிநுவர பகுதியில் தீக்கிரையான கட்டிடத்தில் இருந்து, 100 அடிகள் தொலைவிலேயே இந்த கட்டிடமும் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், தீ பரவல் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பாக இதுவரை காரணம் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டதை மாதம் எட்டாம் திகதி, கண்டியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பலரின் கவனத்திற்குச் சென்றது.

இன, மத, மொழி, பால் வேறுபாடுகளைக் கடந்த மனித நேயத்தின் மகத்துவத்தை இந்த சம்பவம் உணர்த்தியிருந்தது.

தனது உயிரைப் பணயம் வைத்து, 3 பிள்ளைகளினதும் மனைவியினதும் உயிரைக் காத்த ராம்ராஜ் என்பவர், நாட்டு மக்கள் பலரதும் இதயத்தில் வீரத் தந்தையாக இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கொழும்பு - கண்டியை இணைக்கும், அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சீனா கடனுதவி.

இலங்கையில் பாரிய முதலீட்டு நடவடிக்கைககளை மேற்கொள்ளும் சீனா, புதிய நெடுஞ்சாலை திட்டமொன்றிற்கு கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி கொழும்பு – கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சீனா இந்த நிதியுதவியை வழங்கவுள்ளது.

இந்த கடனுதவியின் முதற் கட்டமாக சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து, ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. இலகு கடன் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ந்த கடனுதவி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கையில் காணப்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், சீனாவின் முதற்கட்ட நிதியுதவியைக் கொண்டு இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

Friday, February 1, 2019

கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூராகவும் இயங்கிய புலிகளின் பினாமிகளால் கையாடப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்தது.

அவ்வாறு கையாடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவும் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றது.

இவ்வாறான சொத்துக்களை மீட்க அல்லது அது சார்பாக குரல்கொடுக்கவென கனடாவிலிருந்து 'தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு' என்ற பெயரில் குழுவொன்று இயக்குகின்றது. அக்குழுவான கீழே காணப்படுபவர்களிடம் மக்களின் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளது.

கனடிய தகவல்களின் பிரகாரம் இது ஒரு குழுவினரே என்பதும் இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளோரின் எண்ணிக்கை பல மடங்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.

கனடாவில் செயற்படுவது போன்ற அமைப்புக்கள் உலக நாடுகள் எங்கும் உருவாகி அந்தந்த நாடுகளில் மக்கள் பணத்தை சுருட்டியுள்ளோரின் விபரங்கள் வெளியிடப்படவேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

புலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.

பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.

1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை).

2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).

3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).

4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).

5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).

6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).

7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்).

ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).

9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).

10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).

11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா).

12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).

13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).

14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).

15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).

16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).

17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).

18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).

19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா).

20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).

21) சுரேஷ்(spicyland உரிமையாளர்).

22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).

23) பாலா(கணக்காளர்).

24) செந்தில்(மின்னல்).

25) பாபு(பாபு உணவகம்).

பெயர் பட்டியல் தொடரும் .............

நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.


Read more...

சுதந்திர தினத்திற்கு வரமாட்டேன்! அடம் பிடிக்கின்றார் சரத் பொன்சேகா.

எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள 71 சுதந்திர தினக் கொண்டாட்டங்களை பகிஷ்கரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இது தொடர்பாக அவரிடம் ஊடகம் ஒன்று வினவியபோது, உலக நடைமுறைகளின் பிரகாரம் பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு வழங்கப்படும் கௌரவம் வழங்கப்படாதவிடத்து அந்த நிகழ்வில் பங்கு பற்றுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை சரத் பொன்சேகாவிற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இதே நேரம் காலிமுகத் திடலில் நேற்று ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெற்றள்ளது. அதன்போது பிரமுகர்களின் பெயர்கள் வர-pசைக்கிரமமாக அழைக்கப்பட்டுள்ளது. அங்கு பீல்ட் மார்ஷலின் பெயர் இடம்பெறவில்லை என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்;டுள்ளது.

இந்த முரண்பாடு தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கருத்துரைக்க மறுத்துள்ளார்.

இதே நேரம் இம்முறை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் நி-கழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் அவருக்கான அழைப்பிதழ் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

ஜனநாயகமும் வேண்டாம் சோசலிஸமும் வேண்டாம் குடியரசு மட்டும் போதும். சம்பிக்க

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு என இலங்கையை அழைக்கவேண்டிய தேவை இல்லை என்றும் இலங்கை குடியரசு என்று மாத்திரம் அழைத்தால் போதுமானது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டமொன்றை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், சிலர் பெயரை மாற்றுவது இனவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் இடமளிக்குமென பொய்பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் பிரச்சினைகளை கொடுத்தாலன்றி எந்த பிரச்சினையும் வராது என்று தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாவதற்கு சிலர் முண்டியடிக்கின்றனர். ஆனால் இந்நாட்டில் இன்று நடந்திருப்பது என்ன? நாம் செய்து கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விட 3 மடங்கு கடன் உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் எவரும் கதைப்பதில்லை. எல்லோரும் நத்தார் பாப்பா போல் நாடு பிரிவது தொடர்பாகவே பேசுகின்றனர்.

புதிதாக நிறைவேற்ற உத்தேசிக்கப்படும் அரசியல் யாப்பில் இலங்கை அழைக்கப்படும் விதத்தில் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று பா.உ சுமந்திரன் வாதபிட்டிய என்ற சிங்கள நிகழ்சி ஒன்றில் முதன்முறையாக குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மைத்திரிபாலவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். நிறைவேறியது தீர்மானம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அவர்களையே நிறுத்தவேண்டும் என பா.உ துமிந்த திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுன வுடன் கூட்டமைத்தே எதிர்வரும் தேர்தலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடவுள்ளது என்று அறிவித்துள்ள நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பொது ஜன பெரமுன தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்துக்களும் வெளியாகவில்லை.

பொதுஜன பெரமுன வின் பெரும்பாண்மையானா ராஜபக்சர்களில் ஒருவரே தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளபோது இத்தீர்மானமானது சிக்கலை அல்லது முடிவை கொண்டுவரலமாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

லண்டன் நீதிமன்றத்திற்கு முன்பாக, புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.

தாம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த போது, கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து, இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் லண்டனிலுள்ள நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம், தீர்ப்பை மீள பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில், அறிவிக்கப்பட மாட்டாது - பிரதமர் திட்டவட்டம்.

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் தொடர்பான எந்த தகவல்களும், எதிர்வரும் 05ம் திகதி வெளியாகவுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட மாட்டாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தை, இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அடிப்படை சம்பளத்தை 700 ஆக அதிகரிக்க கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் ரணில் இந்த நிலைப்பாட்டினை உறுதியாக அறிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அரச கருமை மொழிகள், இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் , கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன், பிரதி தலைவர்களான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கிரிக்கெட்டை பாதுகாக்க, ஊடகங்களின் ஒத்துழைப்பும் தேவை- அர்ஜூன ரணதுங்க.

நாட்டின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றான கிரிக்கட்டை பாதுகாப்பதற்கு, ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

நாட்டின் பிரதான விளையாட்டான கிரிக்கெட்டை பாதுகாத்து, வலுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் தொடர்ந்தும் போராடும்.
கடந்த காலத்தில் நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியவர்களை கூட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்படுவதற்கு முடியாத வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

அந்த சட்டத்தை முறியடிக்க விருப்பமின்றியே, உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.வாக்கு பலமின்றி 20 வாக்குகளை கூட பெறாத ஒருவரே தேசிய பட்டியலினூடாக வந்து இன்று கிரிக்கெட்டை அழித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க கூடாது. அவற்றை சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு பொறுப்புவாய்ந்த அனைத்து ஊடகங்களுக்கு உண்டு.

நாட்டின் பிரதான விளையாட்டை பாதுகாப்பதற்கு ஒரு சில திருடர்களை தவிர, நாட்டிலுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகையில் அதற்கான ஆதரவை ஊடகங்களும் வழங்க வேண்டும் என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

Read more...

1000 ரூபாய் சம்பளம் வேண்டி, இன்றும் தொடர் போராட்டம்.

தமக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தி, இரத்தினபுரி – சூரியகந்தை பிரதேசத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டம் ன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இரத்தினபுரி சூரியகந்தை தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடும்பாவியை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து சூரியகந்தை சந்தியில் வைத்து கொடும்பாவியை தீ வைத்து எரித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 400 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 4 மணித்தியாலம் வரை இரத்தினபுரி தெனியாய பிரதான வீதியை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி, தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படை சம்பளமாக, 700 ரோப்பாவை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த கூட்டு ஒப்பந்தத்திரிக்கு எதிராக, தற்போது பல அமைச்சர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஒருபோதும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க, அனுமதிக்க மாட்டோம் - சாணக்க.

எதிர்கட்சியுடன் தாம் இனைந்துள்ள வரை, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி.சாணக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும், ஐக்கிய தேசிய கட்சியினர் தமது பைகளை நிரப்பி கொள்வதையே இலக்காக கொண்டுள்ளனர்.

குறிப்பாக தேசிய அரசாங்கம் அமைப்பதையும், அமைச்சு பதவிகளை பெறுவதுமே அவர்களின் பிரதான பிரச்சினையாகவுள்ளது.

வரவு – செலவு திட்டத்தை வெற்றிக்கொள்ள அவர்கள் தற்போது முயற்சிக்கின்றனர். அதற்காக அரசியல் அமைப்பை மீறியாவது அவர்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க, முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக தற்போது நாடாளுமன்றில் யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாம் எதிர்க்கட்சியில் இருக்கும் வரை தேசிய அரசாங்கம் ஒன்று அமைய ஒருபோதும் விடமாட்டோம்“ என தெரிவித்துள்ளார்.

Read more...

சுதந்திர தினமன்று இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் யுத்த உபகரணங்கள் முதல்முறையாக வெளிவருகின்றது.

எதிர்வரும் 4 ம் திகதி இலங்கையின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்படும் உபகரணங்கள் முதல்முறையாக வெளிவரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவக்கும் நிகழ்வுகளின்போது இவை வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை படையினரால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வேறு உபகரணங்களுக்கு மூளையாக செயற்பட்ட கலாநிதி சந்தண டி சில்வா மற்றும் பிரிகேடியர் கலாநிதி திரான் த சில்வா ஆகியோருக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேற்படி உற்பத்திக்கான ஆலோசனை மற்றும் அதற்கு தேவையான பயிற்சி என்பனவற்றை முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவே பெற்றுக்கொடுத்ததாக அறியமுடிகின்றது.

Read more...

பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு காரணம் - சந்தியா எக்னெலிகொட.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமையும், தனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்கு ஒரு காரணமாக இருந்ததாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா எக்னெலிகொட, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை கையளித்தார்.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தில் கலகொட அத்தே ஞானசாரரை, ஜனாதிபதி விடுவிக்கவுள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக சட்டமா அதிபர், ஜனாதிபதி, புத்தசாசன அமைச்சர் ஆகியோருக்கு நான் அறிவித்திருந்தேன்.

பிரகீத் வழக்கில் சாட்சியாளர் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவரும் நானே. சாட்சியாளர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையின் கீழ் எனக்கு இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும். அது தொடர்பாக ஜனாதிபதிக்கு இன்று கடிதமொன்றை கையளித்துள்ளேன்.

அதன் பிரதிகளை நீதி அமைச்சு, சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு கையளித்துள்ளேன்.

பிரகீத்தை கிரித்தலேக்கு கடத்திச் சென்று அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவுடனான தொடர்பு என்னவென்று வினவியுள்ளனர். தேர்தல் பிரசாரம் தொடர்பாக வினவியுள்ளனர். இதனடிப்படையில் மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோரே பிரகீத்தை கடத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும், ஒரு வகையில் அவரது கடத்தலுக்கு ஒரு காரணம். இதனால், தமக்கு ஆதரவான ஊடகவியலாளர்களை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மஹிந்த மற்றும் கோட்டாவை தாழ்மையுடன் கோருகிறேன். இதேவேளை, பிரகீத்தை கடத்தியது மஹிந்தவும், கோட்டாவுமே என்பதை எந்த இடத்திலும், எந்த தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என சந்தியா எக்னெலிகொட தமது கடித்தது குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மாகாண சபை தேர்தல் இடம்பெறும் காலத்தை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு.

எதிர்வரும் மே மாத இறுதியில், அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இதனை தெரிவித்தார். இன்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயகத் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள டிசம்பர் மாதத்திற்கு முன்னர், மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

நாட்டுக்கு உகந்த தேர்தல் முறை எது என்பது தொடர்பில் நான் கூற விரும்பவில்லை. அதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் தற்போது உடனடியாக பழைய முறைமைக்கு அமையவே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது.

புதிய முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதென்றால் நிறைவேற்றப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை ஒன்று இல்லை.

அவ்வாறு இல்லாமல் எந்ததெந்த தொகுதிகள் என்பதை விளங்கிக் கொள்வது, கடினம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

Read more...

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் 20 பொலிஸாரை காப்பாற்றிய சார்ஜன்ட் மரணம்.

1984 ல் ரெலோ இயக்கத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலிருந்து 20 பொலிஸாரை மிகத் திறமையாக காப்பாற்றிக்கொண்டு காட்டுவழியே சென்று கிளிநொச்சி இராணுவ முகாமை அடைந்த சார்ஜன்ட பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை கடந்த 29 ம் திகதி மரணமடைந்துள்ளார்.

வடமாராட்சி பருத்திதுறையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை 1962ம் ஆண்டு பொலிஸ் கொஸ்தாபலாக சேவையில் இணைந்து 27 வருட சேவையின் பின்னர் 1989 ம் ஆண்டு ஒய்வுபெற்றிருந்தார்.

ஓய்வு பெற்ற சார்ஜனின் உடலத்திற்கு இன்று வட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசில குமார உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டு குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 3 ம் திகதி பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெறும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.







Read more...

ஜனாதிபதியை மீண்டும் மீண்டும் சீண்டும் குமார வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாத சூழ்நிலையே காணப்படுவதாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் வெளியிட்டு, ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக குமார வெல்கம வெளியிட்டு வருகின்றார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு மாத்திரமே தகுதியுள்ளது என்று கட்சி அறிவித்துள்ளதாக, அதன் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மூன்றாவது நாளாகவும் தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற் சங்கத் போராட்டம்

சுங்க அதிகாரிகளின் தொழிற் சங்கத் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்வதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தராமையே, தொடர் போராட்டத்திற்கு காரணமென சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜெனரல் H G .சுமணசிங்க சுங்க அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகமாக நேற்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அவசியமற்ற கட்டணங்களை அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு

மாணவர்களுக்கு அவசியமற்ற கட்டணங்களை அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வசதிக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை சட்டவிரோதமாக அறவிடும் அதிபர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளருக்கு இந்த விடயம் தொடர்பில்ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதிக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்தை அறிவிடும்பொழுது தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பாடசாலையாயின் மாகாண கல்வி செயலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.

அவ்வவாறு இல்லாத பட்சத்தில் தமது விருப்பத்திற்கமைவாக சுற்றறிக்கையை மீறிய வகையில் பாடசாலை அதிபர்கள் கட்டணங்களை அறிவிட முடியாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.

Read more...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விண்ணப்பத்திற்கான இறுதி நாள் இன்று வரை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீடித்துள்ளது.

ஆகவே எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சி - லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் நல்லாட்சி கொள்கைகளுக்கு உடன்பட்டுச் செல்லும் ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு புதிய இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுக்கும் நோக்குடன் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ஷாக்களின் கடன் சுமைகளை செலுத்திக் கொண்டு மக்களுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவது மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளுக்காக ஆதரவு வழங்கும் சகல கட்சிகளும், இணக்கப்பாட்டு கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கப்பாட்டு கூட்டணி தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ள கட்சி எது என்பது தொடர்பில் தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது பாராளுமன்றத்தில் கண்டுகொள்ள முடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.


Read more...

Thursday, January 31, 2019

புத்தர் சிலையுடைப்பு - வெடிபொருள் மீட்பு சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய பொலிஸார், தீவிரவாதத்திற்கான ஆரம்பம் என்கின்றனர். .

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு – லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணாவுக்கு அறிவித்தது. நேற்றைய தினம் குறித்தவழக்கு விசாரணைக்கு வந்தபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க, வணாத்துவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களை நீதிமன்றில் ஒப்படைத்து இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது நீதிவான் முன்னிலையில் விசாரணைகளின் நிலைமையை அறிவித்த கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன, இந்த சிலை உடைப்பு விவகாரம் இன, மதவாதத்தை தூண்டி இலங்கையில் மற்றொரு யுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஆரம்பம் என்பது விசாரணைகளில் தெளிவாவதாகக் கூறினார்.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யால் வணாத்துவில்லுவில் வைத்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் தவிர ஏனைய 11 பேரும் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். விசாரணையாளர்கள் சார்பில் கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓ.பி. அமரபந்து, தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன, மாவனெல்லை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள உள்ளிட்டோரும் சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் டயஸும் ஆஜராகினர்.

சந்தேக நபர்கள் சார்பில், வெளி மாவட்டம் ஒன்றிலிருந்து வருகைதந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்த நிலையில், மாவனெல்லை நீதிமன்றில் கடமையாற்றும் அனைத்து சட்டத்தரணிகளும் (நேற்று மன்றில் இருந்தோர்) விசாரணையாளர்களுக்கு கூடுதல் பலமாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜராவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் முதலில் கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அபேரத்ன, உதவிப் பொலிஸ் பரிசோதகரின் நெறிப்படுத்தலில் மேலதிக விசாரணை நிலைமைகளை தெளிவுபடுத்தினார். அதன்படி, கேகாலை தீர்க்கப்படாத குற்றவிசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சான்றுகள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

‘ கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இவ்வழக்கின் 10 ஆவது சந்தேக நபரான மொஹமட் இப்ராஹீம் என்பவரின் (இப்ராஹீம் மெளலவி) பொறுப்பிலிருந்த, சிலை உடைப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அவரிடமிருந்து ஹுவாவி ரக தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டது. அவை கைப்பற்றப்பட்ட வீட்டுச் சோதனையின் போது சிக்கிய வெடிமருந்தென சந்தேகிக்கப்படும் தூள், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப அனுமதி கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது). அதேநேரம் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட எயார் ரைபிள் தொடர்பில் மேலதிக விசாரணை நடக்கின்றது. இந்நிலையில் இன்று முதல் இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை நாம் பூரணமாக சி.ஐ.டி.யிஒடம் ஒப்படைக்கின்றோம் என்றார்.

இதனையடுத்து சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மன்றுக்கு விசாரணை நிலமையை விளக்கினார்.

“இதுவரை நாம், இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் மாவனெல்லை, கேகாலை பொலிஸாருக்கு உதவியாகவே விசாரணைகளை முன்னெடுத்தோம். இன்று முதல் குற்றவியல் சட்டக் கோவையின் 125 ஆம் அத்தியாயத்துக்கமைய அந்த விசாரணைகளை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கின்றோம்.

முதலில் நாம் இந்த விவகாரத்தில் தற்போதும் தேடபப்டும் பிரதான சந்தேக நபர்கள் இருவரை (சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா) தேடி விசாரித்தோம். இதன்போது சி.ஐ.டி.யினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வணாத்துவில்லு பொலிஸ் பிரிவின் லக்டோ ஹவுஸ் எனும் இடத்தில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள்ளிருந்து நாம் பெருமளவு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றுடன் 4 சந்தேக நபர்களைக் கைது செய்தோம்.

அந்த இடம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு இடம் என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாம் நைட்ரேட், சிட்றிக் அமிலம், டெடனேட்டர்கள் என பல அடையாளம் காணப்பட்ட பொருட்களை மீட்டோம்.

(மீட்கப்ப்ட்ட அத்தனை பொருட்கள்யும் சி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் டயஸினால் தனியான ஜீப் வண்டியில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அதன் மாதிரிகள் சிறு பெட்டியொன்றில் அடைக்கப்பட்டு நீதிவானிடம் முன்வைக்கப்பட்டது)

வணாத்துவில்லுவில் நான்கு சந்தேக நபர்களையும் வெடிபொருட்களுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6(1) ஆம் ஷரத்தின் கீழ் கைது செய்ததுடன், அவர்களுக்கு எதிராக அச்சட்டத்தின் 9(1) ஆம் ஷரத்தின் கீழ் தடுப்புக்காவல் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றோம்.

இதில் இந்த சிலை உடைப்பு விவகாரமானது, இலங்கை முழுவதுமுள்ள புத்திசாலித்தனம் மற்றும் திறமைமிக்க இளைஞர்களை இணைத்து திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தற்சமயம் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றோம்.

எமது தடுப்பிலுள்ள நான்கு சந்தேக நபர்கள் உட்பட பலரின் ( சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள நால்வருடன், 9,10,11 ஆம் சந்தேக நபர்களின்) வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அதற்கான அனுமதியையும் அவர்களது தொலைபேசி அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வுக்கான அனுமதியையும் வழங்குமாறு கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது).

அதன்படி இவ்வழக்கில் வழக்குப் பொருட்களாக 40 பொருட்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவை தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறவும், டெடனேட்டர் தொடர்பில் மட்டும் அதனை அழிக்க கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கு உத்தரவிடுமாறும் குற்றவியல் சட்டத்தின் 124 ஆம் அத்தியாயத்துக்கு அமையக் கோருகின்றோம் (உத்தரவளிக்கப்பட்டது).

இந்த விவகாரத்தில் நாம் முன்னெடுக்கும் விசாரணைகளில் தற்போது எமது தடுப்பிலுள்ள 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து ஓர் ஆவணத்தை நாம் மீட்டுள்ளோம். அந்த ஆவணத்தில் லக்டோ ஹவுஸ் தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களைக் கொண்டு எவ்வாறு குண்டொன்றினை உருவாக்குவது, தயாரிப்பது என்பது குறித்த பூரண வழிகாட்டல் குறிப்புக்கள் இருக்கின்றன. அதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடக்கின்றன” என்றார்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “இங்கு கூண்டிலுள்ள சந்தேக நபர்கள் எவரும் இக்குற்றத்துடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் சமய வகுப்புக்களுக்கு சென்றமை உண்மை. தற்போது தேடபப்டும் சந்தேக நபர்கள் இருவரின் சமய வகுப்புக்களில் கலந்துகொண்டமை எனும் ஒரே காரணத்துக்காக அவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

எனவே, தேடபப்டும் இருவரையும் விரைவில் கைது செய்து, இங்குள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை வெளிப்படுத்தவும். எயார் ரைபிள்களை பயன்படுத்தவோ வைத்திருக்கவோ அனுமதி தேவையில்லை. எனவே அதனை உடன் வைத்திருந்தமை குற்றமாகாது” என கூறினார்.

சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க சி.ஐ.டி. கடும் எதிர்ப்பு வெளியிட்டது.

சந்தேக நபர்களின் சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களை பொலிசார் மறுத்தனர்.

சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்கவும், கேகாலை தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்னவும் மாறி மாறி அச்சட்டத்தரணியின் வாதத்துக்கு எதிரான விசாரணைத் தகவல்களை முன்வைத்தனர்.

“சந்தேக நபர்களிடம் 7 எயார் ரைபிள் ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. அவற்றில் நான்கே வணாத்துவில்லுவில் வைத்து கைப்பற்றப்பட்டன. மற்ற ஒன்று 10 ஆவது சந்தேக நபரின் பொறுப்பிலிருந்து சிக்கியது. இன்னும் இரு எயார் ரைபிள்கள் தேடப்படும் சந்தேக நபர்களின் பொறுப்பிலிருக்க வேண்டுமென நம்புகின்றோம்.

இவர்கள் சமய வகுப்புக்களில் கலந்துகொள்ளவில்லை. இது திட்டமிட்ட ஒரு குழு. இவர்களில் இருவர் வீதம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புத்தர் சிலைகள், உருவச் சிலைகளை தகர்க்க நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நோக்கம் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இன, மத மோதல்களை உருவாக்குவது மட்டுமே. இவை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வணாத்துவில்லு தோட்டம் பயிற்சி நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எயார் ரைபிள்களை பயன்படுத்த அனுமதி தேவை இல்லை. எனினும் இங்கு தெளிவாக அவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தெல்கஹகொட பள்ளிவாசல் செயலாளர் உள்ளிட்ட மூவரின் வாக்குமூலங்களில் மிகத் தெளிவாக 10 ஆவது சந்தேக நபர் தொடர்பில் கூறியுள்ளனர். இன, மத முறுகலை தூண்டி, இலங்கையில் யுத்தமொன்றினை பிரகடனம் செய்யும் வகையில் அவரது போதனைகள் இருந்ததாக அவ்வாக்குமூலங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் சமய வகுப்புக்கள் எனக் கூறும் அந்த வகுப்புக்களில் தான், ரீ 56 ரக துப்பாக்கிகள் கழற்றி , பூட்டி எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எயார் ரைபிள்கள், இலக்குகள் தொடர்பில் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

10 ஆவது சந்தேக நபரின் வீட்டிலிருந்து, இக்குழு தொடர்புகொள்ளப் பயன்படுத்திய வோக்கி டோக்கிகள் இரண்டு மீட்கப்பட்ட நிலையில் அதுகுறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த திட்டமிட்ட குழு எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த திட்டம் தீட்டியவர்கள். இங்குள்ள ஒவ்வொரு சந்தேக நபர்களுக்கும் ஒவ்வொரு புனை பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாகவே அவர்களுக்குள் தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன” என்றனர்.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் உபுல் ராஜகருணா, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 13 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் அன்றைய தினம் 90 நாள் காவலிலுள்ள நான்கு சந்தேக நபர்களையும் மேற்பார்வைக்காக மன்றில் ஆஜர்படுத்தவும் உத்தர்விட்டார்.

( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து MFM பஸீர்).

Read more...

மண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.

மண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் கசிப்பு , கஞ்சா , சட்டவிரோ மதுபாணம் மற்றும் போதைப் பொருட்களை விற்றுவருதாகவும், இதற்கு கிராம மக்கள் பெரும் எதிர்ப்பினை காண்பிக்கின்றபோதும் அவர்களால் அவ்வியாபாரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை எனத் தெரியவருகின்றது.

இவ்வாறு கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அவளால் வியாபாத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடிவதற்கான காரணம், மண்டுர் கோட்டைமுனை கிராம உத்தியோகித்தர் ஆனந்தன் என்பவன் வசந்தி என்பவளுக்கு தொடர்ந்து ஒத்தாசை புரிந்துவருவதே என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பில் பிரதேச நலன்விரும்பிகள் தொடர்ச்சியாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களுடாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தங்களது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

மேற்படி சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தினால் கிராமத்திலுள்ள பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கிராமத்தின் ஒழுக்க மற்றும் சமூகக்கட்டமைப்புகள் தொடர்பாக அக்கறையுடன் செயற்படவேண்டிய கிராம சேவை உத்தியோகித்தர் சட்டவிரோ செயற்பாட்டுக்கு பொறுப்புணர்சியற்று உதவுகின்றார் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் மாவட்ட செயலாளர் உதயகுமார் குறித்த கிராம சேவை உத்தியோகித்தருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் வசந்திக்கு எதிராகவும் மாவட்ட செயலர் உதயகுமார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.

Read more...

கோட்டாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, பெப்ரவரியில் - மேல் நீதிமன்றம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிக்கு எதிரான வழக்கை, விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை, எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிர்க்கி எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த வழக்கை விசாரிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, பிரதிவாதிகள் தரப்பில் எதிர்ப்பு வாதங்கள் வௌியிடப்பட்டன.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இரண்டு தரப்பும் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு, பெப்ரவரி 11ம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை மேல்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

Read more...

கல்முனை நீதிமன்றினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உட்பட பொருட்கள் 2ம் திகதி ஏல விற்பனையில்..

நீதிமன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவையும், உரிமை கோரப்படாதவையுமான ஒரு தொகை பொருட்கள் எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இப்பொருட்கள் தொடர்பான விபரக் கோவை நீதிமன்ற அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கு உரிமை கோருபவர்கள் எவராவது இருந்தால் ஏல விற்பனை தொடங்குவதற்கு முன்னர் அவர்களின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்முனை நீதிவான் ஐ.என். ரிஸ்வான் கோரியுள்ளார்.

ஏல விற்பனை தொடங்குவதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னதாக நீதிமன்ற பதிவாளரின் அனுமதியுடன் பொதுமக்கள் எவரேனும் பொருட்களை பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொருட்களை விலை வைத்து வாங்குவோர் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி உரிய பொருட்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளார்கள்.

சகல கொடுப்பனவுகளும் பணமாகவே செலுத்தப்பட வேண்டும் என்றும் காசோலைகள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றும் விலைகள் ஒவ்வாத பட்சத்தில் எந்த பொருளையும் விற்பனையில் இருந்து மீள பெற நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்றும் அறிய தரப்பட்டு உள்ளது.

14 வழக்குகளோடு சம்பந்தப்பட்டு பகிரங்க ஏல விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இப்பொருட்களில் கையடக்க தொலைபேசி, சைக்கிள்கள், தங்க நகைகள் ஆகியனவும் அடங்குகின்றன.

(எஸ்.அஷ்ரப்கான்).

Read more...

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வாண்டில் கையெழுத்தாகும்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை மேற்கோளிட்டு China Daily இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதரகத்தின் தகவலின் படி, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை உருவாக்கும் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகள் 2017 மார்ச் மாதம் முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில் உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீன சந்தையில் அதன் ஏற்றுமதிகளை விரிவுபடுத்த மிகவும் ஆர்வமாக இலங்கை உள்ளது என, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்தார்.

அத்துடன் சீனாவின் சர்வதேச இறக்குமதியாளர் எக்ஸ்போ சீன சந்தையில் நுழைவதற்கு, அதன் தயாரிப்புகளுக்கான ஒரு முக்கியமான தளமாக இலங்கை கருதுகிறது என்றும், எக்ஸ்போ மூலம் நாட்டிற்கு அதிக வாய்ப்புகளை கொண்டு வரும் எனவும் அவர் கூறினார்.

Read more...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக, மண்டையன் குழுத் தலைவர் நீலிக்கண்ணீர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக, தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென, வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகணேசன் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து, அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

எனினும் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் பொது மக்களின் குடும்ப உறவினர்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன. அவ்வாறு தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் வடக்கிலே கொலை, கொள்ளை, கற்பழிப்புக்க இடம்பெற்று வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோர் பொலிஸாரின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதன் ஊடாக சமூக விரோதிகளை ஊக்குவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கின்றனர்.

Read more...

ஆயுர்வேத வைத்தியம் என்ற பெயரில் விபச்சாரம். திருமைலையில் இளைஞர்கள் எதிர்ப்பார்பாட்டம்

திருகோணமலையில் தமிழர் கிராமத்தை காப்பாற்ற தற்போது தமிழ் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் அளவு பணம் படைத்த வர்க்கத்தினால் உடற்பிடிப்பு நிலையம் எனப்படும் ஆயுள்வேத மசாச் நிலையங்கள் எனும் பெயரில் அலஸ்தோட்டமும் அதை சூழவுள்ள கடற்கரை கிராமங்களில் இயங்கி வருகின்றது.

இதன் மூலம் பல விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. இதை இப்படியே பார்த்துக் கொண்டிருப்பதால் தமது கிராமத்தின் பண்பாடு கலாச்சாரத்தை மற்றையவர் எள்ளி நகையாட வேண்டி வரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

இன்று விடுமுறை நாள் இல்லாத போதும், ஆதங்கத்துடன் தமது கடமைகளை புறக்கணித்து கிராமத்தை காப்பாற்ற, ஆர்ப்பாட்டத்தில் தமிழின பற்று இளைஞர் அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,பாடசாலை மாணவர்கள்,விளையாட்டு கழகங்கள்,ஆலய தலைவர்கள் ,இராவண சேனைஅமைப்புகள் என்பன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் கிராமம் ஒன்றில் புதிதாக மாற்றினத்தவர் குடியேறி காணிகளை அபகரித்தால் தான் ஒரு கிராமம் பறிபோகிறது என யோசிக்கலாம்.

ஆனால் உண்மையிலே காணிகளை பிடிப்பதை விட ஒரு இனத்தின் பண்பாட்டை ,கலாச்சாரம் ,சமூக கட்டமைப்பை சீர்குலைத்தாலே போதும் ஒரு தமிழர் ஊர் பறிபோகின்றது என கருதலாம்.

இப்படி கைங்கரியான செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட அலஸ்தோட்டம் எனும் அழகிய கடற்கரை கிராமத்தில் பதிவாகி வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது...

“இன்றைய உடல் பிடிப்பு நிலையம், நாளைய எயிட்ஸ் போன்ற பாலியல் நோயின் ஆரம்பம்”

சட்டவிரோத,சட்டபூர்வமான உடல்பிடிப்பு நிலையங்கள் எமது அலஸ்தோட்ட கிராமத்திற்கு தேவையா???

உடல்பிடிப்பு நிலையங்களால் அலஸ்தோட்டத்தில் தமிழின கலாச்சார சீரழிவு இடம்பெறுவது உப்புவெளி பிரதேச சபை கண்களுக்கு தெரியவில்லையா?,?

உங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் கிராமமா கிடைத்தது???

''உப்புவெளி பிரதேச சபையே எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்று. உடல் பிடிப்பு நிலையம் எமக்கு வேண்டாம்'',என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com