Monday, January 28, 2019

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் புதிய சலுகை

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வாடகை மோட்டார் வாகன சேவைகளை ஆரம்பிக்க 20 லட்சம் ரூபா நிவாரண கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், 35 வயதிற்கு மேற்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இந்த கடனை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்று நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more...

அரசியல்வாதிகளின் நலனுக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட கூடாது - பெப்ரல் அமைப்பு

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளின் நலனுக்காக இல்லை எனவும் ரோஹண ஹெட்டியாராச்சி இதன்போது தெரிவித்துள்ளார்.

Read more...

வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீடமைப்பு கடன்

வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வௌிநாட்டில் பணிபுரியும் ஒருவருக்கு 10 மில்லியன் ரூபா வீடமைப்பு கடன் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் 2 வருட நிவாரண காலத்துக்கு உட்பட்ட வகையிலும் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பலர் தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் சந்தர்ப்பத்தை பெறுகின்றார்கள்.

எனவே வௌிநாட்டு பணிகளில் உள்ள இலங்கையர்கள் கணிசமான தொகையை இலங்கை வங்கிகளில் வைப்பீடு செய்துள்ளவர்களாக இருப்பாரானால் அவரகள் இந்த கடனை பெறும் தகுதியை பெறுகின்றார்கள். கடன் திட்டத்தின் வட்டியில் 75 வீதம் அரசினால் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இரணைமடு விவகாரம் தொடர்பில் ஆழமான ஆராய்வு

இரணைமடு குளம் விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் சென்றவாரம் ஆராயப்பட்ட விடயங்ககள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள், பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்றை புதிதாக அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. .

கடந்த ஐம்பது வருடங்களில் கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு குளத்திற்கு நீர் வரும் பகுதிகள் போன்றவற்றில் பதிவாகிய
மழை வீழ்ச்சி மற்றும் குளத்தின் நீர் சேமிப்பு தொடர்பான முழுமையான அறிக்கையினை பெற்று விரிவாக ஆராய்ந்து, அதனடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது வலியுறுத்தினார்.

சென்ற வருடம் பெய்த மழை குறித்த பகுதியில் அதிகமாக பதிவான காரணத்தினால், இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த நீர் முகாமைத்துவத்தை உரிய முறையில் பேணுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரணைமடுக்குளத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முடியாமற்போகும் மக்களின் பொருளாதரா நிலைமையினை தொடர்ந்தும் பேண்தகு நிலையிலேயே வைத்துக்கொள்ள, சாத்தியமான வழிமுறைகள் தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது.

ஆகவே இது தொடர்பில் காப்புறுதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக புதிய விவசாயக் காப்புறுதியொன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதாகவும் ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.


Read more...

ஓரிரு வாரத்துக்குள் அர்ஜுன் மஹேந்திரன் இலங்கையில் - ஜனாதிபதியின் வேண்டுகோள் சாத்தியமாகுமா?

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்புர் சுற்றுலாத் துறையினருடன் கலந்துரையாடியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் பிரகாரம், இன்னும் ஓரிரு வாரத்துக்குள் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர முடியுமாக இருக்கும் எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம நம்பிக்கை வெளியிட்டார். இதனிடையே மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்று மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மத்திய, சப்ரகமுவ, மேற்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு காலை வேளையில் பனியுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இன்று அதிக வெப்பநிலையை இரத்தினபுரி பிரதேசத்தில் அவதானிக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Read more...

Sunday, January 27, 2019

என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் - குமார வெல்கம.

தாம் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது பல மோசடிகள் இடம்பெற்றதாக, கோப் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என, போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக கோப் குழுவினரின் அறிக்கை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர், இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே இதனை கூறினார்.

கோப் குழுவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான சுயாதீனமான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க நான் தயார்.

ஆனால் அவர்கள் என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

போக்குவரத்து அமைச்சராக நான் இருந்த போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஒரு தொகுதி பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்பொழுது எவ்விதமான நிதியுதவியும் எமக்கு வழங்கப்படவில்லை. மாதந்தக் கொடுப்பனவுகளின் ஊடாகவே பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன.

அத்துடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே குறித்த கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என நாடாளுமனற்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டார்.

Read more...

நாளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால், சட்ட நடவடிக்கை - 700 ரூபாய் எமக்கு வேண்டாம் - பெருந்தோட்ட மக்கள்..

கூட்டு ஒப்பந்தத்தினூடாக கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம், எமக்கு வேண்டாம் என தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ ஹற்றன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி, இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் கெம்பியன், பெற்றசோ, செல்வகந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாளை கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள், வாக்குறுதி வழங்கியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளமே எமக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என்றும் கூறியதுடன், அதையும் மீறி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினர்.

இதன்போது ஹற்றன் தொடக்கம், பலாங்கொடை வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து, பல மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஆவா குழுவின் உறுப்பினர்கள் மூவர் யாழில் கைது - காவல்துறை.

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நபர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது, குறித்த நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டு தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. குறித்த வாள்வெட்டுகளின் பின்னணியில் ஆவா என்ற குழு செயற்படுவதாக பல்வேறு தரப்பினரால் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த மூவரிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read more...

தொண்டமானும், சுரேஷும் மஹிந்தவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டியிருந்து , பின்னர் கழன்று விட்டனர். கிஷ்ணன் செல்வராஜ்.

ஆறுமுகன் தொண்டமானும், வடிவேல் சுரேஷும் மஹிந்தவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டியிருந்து, பின்னர் கழன்று விட்டதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம், ஹட்டனில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் தமது பதவியைத் தூக்கி எறிவதாக ஆறுமுகன் தொண்டமானும், ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொடுக்க தீக் குளிக்க போவதாக சொன்ன வடிவேல் சுரேஷும் மஹிந்த ராஜபக்ஷவின் பிணாமி அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு, பின் அதிலிருந்து விலகியவர்கள்.

தொழிலாளர்களை அடமானம் வைத்து அரசியல் குளிர் காயும் இவர்கள் தற்பொழுது 750 ரூபாய் சம்பளத்தை வழங்கி, 234 ரூபாயை மாதாந்த சந்தா பணமாக பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இந்த விடயம் தலைவர்களுக்கு வெற்றியே தவிர, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வெற்றி அல்ல.

அத்தோடு இது நியாயமான சம்பள உயர்வு அல்ல. இதற்காக எமது சங்கம், ஜே.வி.பி உள்ளிட்ட பல தரப்பினர்களுடனும் இணைந்து எதிர்காலத்தில் போராடவுள்ளோம்.

அதற்கு முன்பதாக இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பில், தமது தரப்புடன், நேரடி விவாதத்தை எதிர்கொள்ள ஆறுமுகன் தொண்டமானுக்கும், வடிவேல் சுரேசுக்கும் அழைப்பு விடுப்பதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிஷ்ணன் செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பிரிக்க முடியாத இந்த நாட்டில், அனைத்து உரிமைகளையும், தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் - கலாநிதி சுரேன் ராகவன்.

பிரிக்க முடியாத இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று, மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வர வேண்டும்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்துள்ளோம்.

யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில்சேவையினை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமாகவே பார்க்கின்றோம்.

இது பிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, நானும் எமது மக்களும் தயாராகவே இருக்கின்றோம் என வட மாகாண ஆளுநர் கலாநிதி, சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை - விசேட விசாரணைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளவேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

2019 ம் ஆண்டுக்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உரிய நேரத்தில் மாணவர்களுக்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் கிடைக்காமை காரணமாக மேல், வட மத்திய, மத்திய மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் 97 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான புத்தங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கையேடுகள், அச்சகத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் விநியோகிக்கப்படுவதாகவும் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் பாடசாலை அதிபர் ஊடாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

பதவி ஆசை பிடித்தவர்களின் பட்டியலில், சம்பந்தனும் நுழைந்து விட்டார். எதிர்கட்சித் தலைவர்.

பிரதமர் நகரும் பாணியில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்கொள்ளத் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் போன்று பதவி ஆசை பிடித்தவர்கள் பட்டியலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து கொண்டதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டமை அநீதியான செயலென்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருப்பதற்கு, மஹிந்த ராஜபக்ச தகுதி இல்லாதவர் என்றும் , கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்து உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் சம்பந்தனின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை நான் கேட்டு வாங்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரிந்துரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபாநாயகர் எனக்கு வழங்கியிருந்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தனர்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது பதவிக்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதனை சந்திக்க தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

Read more...

ஞானசாரரின் விடுதலை குறித்து ஜனாதிபதி பீதியடைய தேவையில்லை - இலங்கை இந்து சம்மேளனம்.

ஞானசாரரின் விடுதலை குறித்து ஜனாதிபதி பீதியடைய தேவையில்லை என இலங்கை இந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை குறித்து,நேற்றைய தினம் கருத்து வெளியிட்ட போதே டி.அருண்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் புதிய பிரச்சினைகள் உருவாகுமென்று ஜனாதிபதி அச்சமடைய தேவையில்லை.

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற பாரிய குற்றங்கள் எதனையும் புரியவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்துக்காகவே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.

மேலும் அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்களை வேறு மதங்களுக்கு மாற்றுகின்ற அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்ட போது, விழிப்புணர்வை ஏற்படுத்தி அவ் வேளையில் மக்களை பாதுகாத்தார்.

இவ்வாறு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய ஞானசார தேரருக்கு, சிறை தண்டனை வழங்குவது முறையல்ல.

எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அருண்காந்த் வலியுறுத்தியுள்ளார்.

Read more...

இரண்டாவது நாளாகவும், கேப்பாபுலவு மக்களின், முற்றுகை போராட்டம் தொடர்கிறது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவு படை முகாம் வாயில் முன்பாக, ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம், தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல்,இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்தில், பல பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. அத்துடன் இந்த போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும் தம்மிடம் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் மக்கள் தற்போது இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமக்கான தீர்வை உரிய தரப்பினர் பெற்றுக்கொடுக்கும் வரையில், தொடர்ந்தும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

இன்றும் கொழும்பு போக்குவரத்தில் தடைகள் - மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளினால், கொழும்பு – காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இந்த ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன. இன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு பகுதி, லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தி ஆகியன குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.

இதனால், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள், லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை வீதி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பார் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதியூடாக கொழும்பு புறக்கோட்டையை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு , புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read more...

அபிவிருத்தியை ஏற்படுத்த அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை - மஹிந்த ரஜபக்ச

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் என்று நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது நாட்டை துண்டுகளாக உடைத்து காட்டிக் கொடுப்பதற்கு முற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் அதற்கு எதிராக இருப்பதாக அவர் மேலும் கூறினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையே தற்போதைய சூழலில் அரசியலமைப்பை தாக்கல் செய்ய முடியாமைக்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லையென கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஜப்பான் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் எதிர்கட்சி தலைவர் பதிலளித்துள்ளார்.

நாட்டின் சொத்துக்களை வைத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வது எப்படிப் போனாலும், மக்களின் பசியைப் போக்குவதற்கே முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Read more...

கட்டுநாயக்காவில் விநியோகிக்கப்படும் யுத்த தளபாடங்களை சோதனையிடுவதற்கு இலங்கைக்கு முற்றாகத் தடை

இந்து சமுத்திரத்திலுள்ள அமெரிக்க யுத்தக் கப்பல்களுக்கு யுத்த உபகரணங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி யுத்த தளபாடங்களை ஏற்றிவந்த அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இவ்வாறு அமெரிக்க விமானத்தில் இருந்து வரும் யுத்த தளபாடங்களை சோதனையிடுவதற்கு இலங்கை சுங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ, பொலிஸுக்கோ அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் உபகரணங்கள் இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஜோன் ஸ்டென்னிஸ் எனும் பெயரிலான அணுசக்தியில் செயற்படும் பாரிய விமானங்கள் கொண்டு செல்லும் கப்பலுக்கு மாற்றப்படுகின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்க விமானங்களுக்கு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவுக்கு வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை நாளை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த வில்லையெனவும் இன்று வெளியாகிய சகோதார மொழி தேசிய வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி விரைவில் - மீண்டும் அழைக்க தேவையில்லை

நாமல் குமார வழங்கிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட குரல் மாதிரி தொடர்பான அறிக்கை, தயாரிக்கப்படுவதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கறியுள்ளது.

இந்த அறிக்கை தயாரான பின்னர் அதனை நீதிமன்றத்திற்கு சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுக்காப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தொடர்பிலான கொலை சதித்திட்டம் சம்பந்தமாக நாமல் குமார வழங்கிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்கு அமைவாக, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கடந்த 14ம் திகதி குரல் மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டது.

பெறப்பட்ட குரல் மாதிரி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் பொலிஸ் மா அதிபரை மீண்டும் அழைத்து குரல் மாதிரியை பெறும் அவசியம் இல்லை என்றும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


Read more...

யாழ் நோக்கி புறப்பட்டது உத்தரதேவி

உத்தரதேவி தொடரூந்து சேவையின் வெள்ளோட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு, கோட்டையில் இருந்து – காங்கேசன்துறை வரையான தொடரூந்து பாதையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் இன்று காலை புதிய தொடரூந்தில் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்.

சுமார் 724 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் தொடரூந்து பேட்டி வசதியை கொண்ட இந்த தொடரூந்தில் வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் பொருத்தப்பட்டுள்ளமை சிறப்பாகும். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு வடக்கும் தெற்குக்கும் நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய தொடரூந்து வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது முக்கிய செயற்பாடாகும்.

இந்த தொடரூந்து வண்டியில் யாழ். பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சோள பயிர்ச்செய்கை மேற்கொள்ளவேண்டாம் - விவசாயத் திணைக்களம்

பிரித்தானியாவிலிருந்து படைப்புழுவை ஒழிப்பதற்காகான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான பரிசோதனை மேற்கொண்டபோது அது வெற்றியளித்துள்ளதாக திணைக்களத்தின் விவசாயப் பணிப்பாளர் நாயகம் W.M.W வீரகோன் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் வேகமாக பரவி விவசாய நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படைப்புழுவின் பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறு இருப்பினும் மறு அறிவித்தல் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு விவாசாயிகளிடம் விவசாயத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சோளப்பயிர் தவிர்த்த, பிற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, January 26, 2019

புதிய அரசியல் யாப்பு இத்தருணத்தில் தேவையற்றது. உலக இலங்கையர் பேரவையினரிடம் மகாநாயக்கர்கள்.

இன்று காலை மாகா சங்கத்தினரைச் சந்தித்துள்ள உலக இலங்கையர் பேரவையினரிடம் இத்தருணத்தில் புதிய அரசியல் யாப்பொன்று இலங்கைக்கு அவசியமற்றது என மாகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் பிரதம பீடாதிபதி வறக்காகொட ஸ்ரீ ஞானரட்ண தேரர் மற்றும் மெதகம தம்மானந்த தேரர் ஆகியோரை சந்தித்து நாட்டின் நிலைமைகள் தொடர்பில் பேசியுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த தேரர்கள், நாட்டில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான அவசரம் ஒன்று தற்போது இல்லை. செய்யவேண்டியுள்ளது யாதெனின் வேலைகளாகும். இந்நாட்டின் சில பகுதிகளில் நாம் எமது விகாரைகளைக்கூட புனரமைக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். ஆனால் அவர்கள் அந்தப் பகுதியில் எதுவேண்டுமோ அதைச் செய்து கொள்கின்றார்கள்.

இன்னுமொரு தரப்பினர் சில நாட்களுக்கு முன்னர் புத்தரின் சிலைகளை உடைத்து மிதவாத நோக்குடன் எம்மை ஆத்திரமூட்டினார்கள். இவர்கள் இந்த நாட்டில் ரத்த களரி ஒன்றை உருவாக்க நினைக்கின்றார்கள்.

அண்மையில் வடக்கிற்கு நியமனமாகியிருந்த ஆளுனர் கூட விகாரைகளை புனருத்தாருனம் செய்ய முடியாது என்று கூறியிருக்கின்றார். இந்நாட்டிலே சங்கைக்குரிய தேரர்களால் தங்களது வழிபாட்டு ஸ்தலங்களை புனருத்தாருனம் செய்யமுடியாது என்றால், சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக எம்மால் திருப்தியடைய முடியாது என்று தெரிவித்துள்ளனர் அஸ்கிரிய பிடத்தினர்.

மேலும் புதிய அரசியல் யாப்பு ஒன்றை பற்றி பேசுகின்றார்கள், அதை அவர்களால் செய்ய முடியுமாக இருந்தால் நல்லது. ஆனால் அவர்கள் அதை பக்கசார்பாக செய்கின்றார்கள் என்பது பிரச்சினையாகும் என மல்வத்து பீடத்தின் திம்புல்கும்புரே விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.




Read more...

அங்குணுகொலபெலஸ்ஸ விவகாரம் - இரண்டாவது அறிக்கையில் தாமதம் - காரணம் இதுதான்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது விசாரணைக்குழுவின் அறிக்கை, இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாவது குழுவின் அறிக்கை நேற்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியது.விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் வாரத்தில் அறிக்கையை தயாரித்து சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்தக்குழு அறிவித்துள்ளது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றமிழைத்துள்ளார்கள் - மோதல் தொடர்பான அறிக்கை பிபிசி க்கு கசிந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட தொடர்பில் 59 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை குழு நாடாளுமன்றத்தில் பொருத்தப்பட்ட காணொளிகள் மூலம் கிடைத்த செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை அவதானித்து தமது அறிக்கையை கையளித்துள்ளது. இதற்கமைய, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் சரத்துக்களுக்கு எதிராக நடந்துகொண்டமை விசாரணை அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதில் 54 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார்கள். இவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவின் பெயர், அதிகத் தடவைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

அக்ராசனத்தின் மீது நீர் ஊற்றியமை, பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை மற்றும் பொலிஸார் மீது ஒருவித திரவத்தை விசிறியமை உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் பிரசன்ன ரணவீரவின் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் தவிர, இந்திக்க அனுருத்தவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவை, சபாநாயர் மீது நீர் விசிறியமை, குப்பை வாளியை வீசியமை மற்றும் புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் ஆகும். திலும் அமுணுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். சபாநாயகர் மீது தண்ணீர் போத்தலை வீசியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

பாலித தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக கத்தியைப் போன்ற ஏதேனுமொன்றை கையில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சபாநாயகரின் மேசை மீதிருந்த ஒலிவாங்கியை சேதப்படுத்தியமை, பொலிஸ் அதிகாரிகளிருந்த திசை நோக்கி கதிரையை வீசியமை, புத்தகத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிஷாந்த முத்துஹெட்டிகமவும் ரஞ்சித் சொய்சாவும் செங்கோல் வைக்கப்படும் மேசையைக் கவிழ்த்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பத்ம உதயஷாந்த மீது தமது பாதணியில் ஏதேவொன்றைக் கொண்டுவந்து தண்ணீர் பாத்திரத்தில் கலந்தமை, காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருந்த திசை நோக்கி திரவத்தை வீசியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சுமார் மூன்று நாட்கள் நீடித்த குழப்ப நிலை காரணமாக சொத்து சேதம், வரி நீங்கலாக மூன்று இலட்சத்து 25ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு சபாநாயகருக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சபாநாயகருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Read more...

மனித எச்ச மாதிரிகள் பீட்டாவிடம் ஒப்படைப்பு

மன்னாரில் மீட்கப்பட்ட மனிதப் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் கார்பன் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்களில் மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மட்டுமே மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன. அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த 6 மாதிரிகளும் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை கண்டறியும் ஆராய்வு எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவை தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகள் ஆகும். இந்த நிலையில் கார்பன் பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த 6 மாதிரிகளை கொண்டு மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகளான வி.நிரஞ்சன், ரனித்தா மயூரன் ஆகியோரும் அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ் திடீர் தீக்கீரை

கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்று இன்று பிற்பகல் திடீரென தீப்பிடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில் கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் தீப்பரவலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீப்பரவல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Read more...

தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!

(புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான 'தொழிலாளி' பத்திரிகையில் 50 வருடங்களுக்கு முன் வெளியான இக்கட்டுரையானது, தமிழரசுக் கட்சியின் இன்றைய அரசியல் நிலைக்கும் பொருத்தமாக இருக்கின்றது என வானவில் மீள்பிரசுரம் செய்திருக்கின்றது. அதனை நாமும்.)

தனது முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவரத்தினம் கூறிய அறிவுரையை ஏற்று தமிழரசுக் கட்சி எவ்வளவு விரைவாக தற்கொலை செய்து கொள்கிறதோ, அவ்வளவு தமிழ் மக்களுக்கும் முழு இலங்கை மக்களுக்கும் நல்லதாகும். தமிழரசுக் கட்சி நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளது. பாராளுமன்ற அரசியல் விளையாட்டில், அது விளையாட எடுத்த முயற்சியின் வங்கலோட்டுத்தனமும் நன்கு அம்பலமாகிவிட்டது.

கடந்த 1956 ம் வருடத்திற்குப் பிறகு இன்றுவரை தமிழரசுக் கட்சி மூன்று தடவைகள் சிங்கள முதலாளித்துவ கட்சிகளால் ஏமாற்றப்பட்டுள்ளது. முதலில், அது நம்பிக்கை வைத்திருந்த சிங்கள மத்தியிலுள்ள பிற்போக்கு, வகுப்புவாத, குறுகிய தேசியவாத சக்திகளின் நெருக்குதலினால், காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

இரண்டாவதாக, மாவட்ட சபைகள் ஏற்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து சிம்மாசனப் பிரசங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காப்பாற்றவில்லை.

மூன்றாவதாக, இப்பொழுது கனவான் டட்லி சேனநாயக்கா, 'தேசிய' அரசாங்கம் ஏற்படுவதற்கு அடிப்படையாயிருந்த தமிழரசுக் கட்சிக்குத் தான் கொடுத்த ரகசிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டார்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பெருமிதமான வாக்குறுதிகள், எழுதப்பட்ட தாளின் பெறுமதிகூட இல்லை என்பதை, தமிழரசுக் கட்சி தனது செல்வாக்கை இழந்து கற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலைமைக்கு வேறு யாரையுமல்ல, தமிழரசுக் கட்சி தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் ஒரு தனி அரசியல் கட்சியும் கூடுதலான பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடியாமல் இருந்த நிலையில், காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொலைக்குப் பின் வளர்ந்து வந்த அரசியல் நிலைமையை தமிழரசுக் கட்சி பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற அரசியல் விளையாட்டை விளையாட முயன்றது. மந்திரிசபையை உருவாக்கும் சூத்திரதாரியாக வர எண்ணியது. 1960 மார்ச்சில் திரு.டட்லி சேனநாயக்காவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சியுடன் ஒத்துழைத்தது. 1964 டிசம்பரில் கூட்டரசாங்கத்தை வீழ்த்த அது யு.என்.பியுடன் சேர்ந்தது. 1965 மார்ச்சில் பூரணமான பெரும்பான்மை கிடைக்காத யு.என்.பியுடன் தனது வர்க்க நலனின் அடிப்படையில் ஒன்றுசேர்ந்து, யு.என்.பி. தலைமைப்பீடத்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அரசாங்கம் அமைக்கவும் உதவி புரிந்தது.

இம்மட்டல்ல, எல்லா வேளைகளிலும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்காளர்களிடமும், புரட்சிகரப் பகுதிகளிடமும் – முக்கியமாக தொழிலாளி – விவசாயி மக்களில் நம்பிக்கை வைக்கவோ, அல்லது உதவி கோரவோ தமிழரசுக் கட்சி உறுதியாக மறுத்து வந்துள்ளது. உண்மையில் அதன் கொள்கைகளும், நடவடிக்கைகளும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்குப் பகுதியைச் சினமூட்டவே செய்தன.

திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலமும், அவரது தமிழ் காங்கிரசும் விட்ட இடத்திலிருந்து, தமிழரசுக் கட்சி பலகாலமாக தீவிரமான, இரத்தம் உறையும் சிங்கள எதிர்ப்பு வகுப்புவாதத்தில் (இனவாதத்தில்) முக்குளித்தது. இப்படித்தான் அவர்கள் சமஸ்டியைக் கோரினார்கள் - சாதாரண சந்தர்ப்பங்களில் இக் கோரிக்கை தீங்கானதல்ல – இது சிங்கள மக்களுக்கு வெறுப்பான ஒன்று. பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்கா அரசாங்கங்களால் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு முற்போக்கு மசோதாவையும் – நெற்காணி மசோதா, பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றல், அந்நிய எண்ணெய் கம்பனிகளைத் தேசியமயமாக்கல், இன்சூரன்ஸ் கம்பனிகளைத் தேசியமயமாக்கல் ஆகியவற்றையெல்லாம் – எதிர்த்தனர். திருகோணமலைத் தளத்திலிருந்த பிரிட்டிசாரை வெளியேறும்படி காலஞ்சென்ற எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா கேட்ட போது, தமிழரசுக் கட்சி அதற்கெதிராக இராணிக்கு மனு அனுப்பியது. 'சுதந்திர' தினத்தில் அக்கட்சியினர் சீற்றத்துடன் கறுப்புக் கொடியைப் பறக்க விட்டார்கள்.

எல்லா நடவடிக்கைகளிலும் தமிழ் மக்களின் நலன்களை – வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, அல்லது தோட்டப் பகுதிகளிலும் சரி – தமிழரசுக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சமூக ரீதியாகப் பழமை வாய்ந்ததும், மிகவும் பிற்போக்கானதுமான யாழ்ப்பாணத் தமிழ் மக்களது நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ பகுதியின் நலன்களையே அது பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆதனால்தான் சிங்கள மக்களின் வயற்றில் அடித்தது போல தமிழ் மக்களின் வயற்றிலும் அடித்த கூப்பன் அரிசியைப் பாதியாக வெட்டிய ஆட்சியின் நடவடிக்கையை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. ரூபாவின் மதிப்பு குறைக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து சமாளிக்க முடியாத அளவுக்கு வானாளாவ உயர்ந்துள்ள விலைவாசி உயர்வையும் பற்றி ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை. வட பகுதியில் தீண்டாமைக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாக ஒரு சின்னி விரலைத்தானும் உயர்த்தவில்லை. சிறுபான்மை இன மக்களுக்கு, குறிப்பாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நாடற்ற பிரஜைகளான தொழிலாளர்களுக்குச் சொல்ல முடியாத இன்னல்களை விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட அடையாள அட்டை மசோதாவுக்கு வெளிப்படையாக தமிழரசார் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் தமது நாடற்ற தன்மையை மெய்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள். தமிழரசார் பங்காளிகளாக இருக்கின்ற இதே அரசாங்கம்தான் வட பகுதி மக்களைத் தொல்லைக்குள்ளாக்கும் – அவர்கள் அனைவரும் கள்ளக்கடத்தல்காரர்கள் என்று அவமானப்படுத்தும் பொருட் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

தெளிவாக, தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை கொல்லைப்புறத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. அது தமிழ் மக்களுக்குச் செய்தது ஒன்றே ஒன்றுதான். சிங்கள மக்களிடையே உள்ள வகுப்புவாதிகளுக்கும், குறுகிய தேசியவாதிகளுக்கும் தீனி போட்டு அவர்களின் பெரும் பகுதியினரின் எதிர்ப்பைத் தேடிக் கொடுத்ததுதான் அது. சிங்கள வகுப்புவாதமும், தமிழ் வகுப்புவாதமும் ஒன்றிலிருந்து ஒன்று வளர்கிறது என்பது நன்கு தெரிந்த விசயமாகும்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடமும், அதன் கொள்கைகளின் வங்குரோட்டுத்தனமும் இன்று நாடு முழுவதும் அம்பலமாகிவிட்டது. எனவே, தமிழரசுக் கட்சித் தலைமைப்பீடத்தின் வங்கலோட்டுத்தனத்தையும், அதன் பிற்போக்கு, வகுப்புவாதக் கொள்கைகளையும் உதறித் தள்ளிவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புரட்சிகர பகுதியினருடன் ஒத்துழைப்பதிலும், நட்புறவு கொள்வதிலும் நம்பிக்கை வைக்கும் காலம் தமிழ் மக்களுக்கு வந்துவிட்டது. இவ்விரு பகுதியினரின் வர்க்க நலனும் ஒன்றே. எதிரியும் ஒன்றுதான் – வெளிநாட்டு ஏகாதிபத்தியமும் அதன் வேட்டை நாய்களுமே. தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலுள்ள புரட்சிகர அரசாங்கத்தின் கீழ் மட்டுமேயல்லாது, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் தமது உண்மையான உரிமைகளை வென்றெடுக்க முடியாதென்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிய வேண்டும். சகலருக்கும் பொருளாதார உத்தரவாதமுள்ள சோசலிச அரசின் கீழ் மட்டுமே சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் தலைமையை உதறித்தள்ளுவதற்கு, சிங்கள மக்களின் மத்தியிலுள்ள முற்போக்கு உணர்வும், புரட்சிகர உணர்வும் வாய்ந்த பகுதிகளுக்குச் சமமான பொறுப்பு உண்டு. எல்லாத் தமிழ் மக்களும் தமிழரசுக்காரரல்ல என்பதைச் சிங்கள மக்கள் உணர வேண்டும். தமிழரசுக் கட்சியின் பிற்போக்கு, வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்க்கும் தமிழ் மக்கள் கணிசமாக உள்ளனர். ஆனால், பொறுப்பற்ற, சந்தர்ப்பவாத, குறுகிய தேசியவாத சிங்கள அரசியல்வாதிகளால் உரத்துப் போடப்படும் வகுப்புவாதக் கூச்சல்களால் அவர்கள் தமது கருத்துக்களை உரத்துக்கூற முடியாதுள்ளனர்.

சிங்கள தமிழ் மக்களிடையே உள்ள பிற்போக்குவாதிகள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒன்று சேர முடியுமானால், இரு பகுதியிலுமுள்ள புரட்சியாளர்களும் ஒன்றுசேர முடியும். இதுதான் இன்று தேவைப்படும் உடனடிக் காரியமாகும் – புரட்சிகரத் தலைமையின் கீழ் சிங்கள, தமிழ் வெகுஜனங்களின் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதாகும்.

தொழிலாளி –1968 யூலை 17

Read more...

கைச்சாத்தாகவுள்ள திருட்டு ஒப்பந்தம் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அநீதி - ஒருமீ சிவில் அமைப்பு.

வழமைபோலவே இந்த முறையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அநீதி இலக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒருமீ சிவில் சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாளை மறுதினம் திருட்டுத்தனமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளதா தெரிவித்த ஒருமீ அமைப்பு, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தது.

தமக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், அதில் எந்தவித பயனும் ஏற்படவில்லை. இப்போது அடிப்படை வேதனமாக வெறுமனே 700 ரூபாயை வழங்க முதலாளிமார் சாமெளனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த இணக்கத்தை ஏற்றுக்கொண்ட, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

இந்த செயல்பாடு ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும். இந்த செயல்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஒருமீ சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

Read more...

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் - பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை.

வவுனியாவில் தற்போது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை பலத்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேக நபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும், வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தமையால் அவர்களிடம் இருந்து பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டு விட்டு அவ்வீட்டின் கிணற்றில் நீராடி சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனால், வவுனியா முழுவதிலும் பாதுகாப்பு படையினர் தற்போது, தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் வவுனியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தகவல், சமூகவிரோதிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாமென அப்பகுதி மக்கள் சிலர், சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

சில பங்காளிக் கட்சிகள், பங்கு கேட்க தொடங்கியதால் தற்போது இனவாத விஷம் பரவியுள்ளது. பைசர் முஸ்தபா.

சிறுபான்மை கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே நாட்டில் தற்போது இனவாதம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல்களின் போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால், இலங்கையர் என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள்? என்பது எம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

பணம், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இதனாலேயே, நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றே, நாம் 2017ஆம் ஆண்டு தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அதற்கிணங்கவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடம்பெற்றது.

இலங்கை வாழ் மக்கள், தமது இன, மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கே வாக்களித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்பில் எந்தவொர ஆய்வையும் மேற்கொள்ளாமல் வாக்களிக்கிறார்கள்.

இந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். இலங்கை முன்னேற்றகரமான பாதையில் செல்ல வேண்டுமென்றால் சரியான பிரதிநிதிக்கு நாம் வாக்களிக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

சில சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், பெரிய கட்சிகளின் பங்காளியாக மாறி, தற்போது தமது பங்கை கேட்டு வருகிறார்கள்.

இதனாலேயே, தேவையில்லாத இனவாதம் என்ற விஷம் பரவுகிறது. தொகுதி வாரி முறைமையின் ஊடாக தொகுதிக்கு பொறுப்புக்கூறும் பிரதிநிதியைக் கொண்டுவர வேண்டும் என்று நாம் முயற்சித்தோம்.

அத்தோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் நாம் பலப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தோம். இதன் பிரதிபலனாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக நாம் அதிகரித்தோம்.

நாடாளுமன்றில் தற்போது இருக்கும் பெண் பிரதிநிதிகள், அவர்களது கணவன் உள்ளிட்ட உறவினர்களின் தொடர்ச்சியாகவே இருக்கிறார்கள். சுயாதீனமான பெண்கள் பிரதிநிதித்தவம் குறைவாகவே இருக்கிறது. இவற்றை மாற்றியமைக்க நாம் முயற்சித்தோம். இதற்காக புதிதாக எல்லை நிர்ணயத்தையும் மேற்கொண்டோம்.

எனவே இன, மதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையராக சிந்திக்க வேண்டும். 30 வருடங்களாக நாம் யுத்தத்தால் பிரிந்திருந்தோம். இனியும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

மேலும், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 வீத பிரதிநிதித்துவம் எந்தக் காரணம் கொண்டும் குறைக்கப்படக் கூடாது.

அத்துடன் எந்த முறையில் தேர்தல் நடைபெற்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்குத் தயாராகவே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

Read more...

தமது கடமைகளை சரிவர செய்ய இடையூறு விளைவிக்கப்படுவதாக கூறி, வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள், நேற்றைய தினம் மாலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது கடைமைகளை சரிவரச் செய்வதற்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்துமாறு கோரியே, குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது நகரசபை உத்தியோகத்தர்கள், “எங்கள் கடமைகளை சரியாக செய்ய அனுமதிக்கவும், நகரசபைத் தலைவரை அவமதிக்காதே, அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு அச்சுறுத்தாதீர்கள் போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பதாகைகளை அகற்றும் பணிகள் நகரசபைத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்கியவர்களால் இப்பதாதைகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அநாகரிமான முறையிலும் நடந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதனை எதிர்த்து இன்று இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாஸ மற்றும் நகரசபை உறுப்பினர் ஜானக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது, நகரசபைத் தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதுடன், குறித்த செயற்பாட்டிற்கு தமது மன்னிப்பையும் தெரிவித்தனர். இதன்பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

Read more...

இறக்கும் போது கூட சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இறப்பேனே தவிர, ஐ.தே.க வுக்கு சோரம் போக மாட்டேன் - குமார வெல்கம.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டுமாயின், கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று மாயை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஆயத்தமாகி நாம் தோல்வியடைந்துள்ளோம். எனவே, மீண்டும் ஒரு முறை எதற்காக தோல்விக்கு முகம் கொடுக்க வேண்டும்?

பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது. ஆனால், இந்தப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவே முடியாது.

மேலும், தற்போதைய நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவத்திற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சியை பாதுகாத்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அனைவரைவிடவும் கட்சிக்காக செயற்பட்டார். ஆனால், தற்போதுள்ள தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் பெரிதாக சிந்திப்பதில்லை. இதனாலேயே நாம் எமது கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமென, நாம் வலியுறுத்துகிறோம்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி செயற்படுமாக இருந்தால், நிச்சயமாக வெற்றிப் பாதையில் எம்மால் பயணிக்க முடியும்.

இவ்வாறான உண்மையை வெளிப்படையாகப் பேசும் போது, நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சோரம் போய்விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.

இது குறித்து நான் என்றும் கவலையடைந்தது கிடையாது. நான் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன். இறக்கும் போதுகூட சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இறப்பேன்’ என்றார்.

Read more...

யுத்தம் அரங்கேறி, ஒரு தசாப்தம் கடந்தும், இன்னும் நீதியில் தாமதம் - சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி.

யுத்தம் அரங்கேறி, ஒரு தசாப்தம் கடந்தும், இன்னும் நீதியில் தாமதம் நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை, குற்றம் சுமத்தியுள்ளது.

தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடு செய்தல் உள்ளிட்ட பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் நிறைவடைகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம், உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது? என்ற கேள்வி எழுவதாகவும், சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை அரசாணைகள் கூடுதல் கவனம் செலுத்த்தி, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை நிவர்த்திக்க வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com