Thursday, January 24, 2019

ஜனநாயக ரீதியில் போராடுபவர்களுக்கு, இம்சை ரீதியாகவே பதில் வழங்கப்படுகிறது - ஞா.ஸ்ரீநேசன்.

இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக, நாடாளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை இன்றைய தினம் கொண்டு வந்தது. இந்த பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இதனை கூறினார்.

இதன்போது மலையக மக்களின் உரிமைகளையும் மறுத்து மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகார வர்க்கம் தமது பாதுகாப்பிற்காக இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என பேசிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. ஆனால் மலையக மக்கள் இன்னும் அந்நியர்கள் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளில் வாழ்கின்றனர் என சிறிநேசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்காக உழைக்கும் மக்களின் உரிமையை உதாசீனப்படுத்துவதை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென சிறிநேசன் கூறினார்.

கம்பனிகள் மிகையான லாபத்தை உழைப்பதற்காக, உழைப்பின் பெரும் பகுதியை சுரண்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், அந்த மக்களின் சம்பளத்தை அதிகாரிப்பதற்கு காலத்தை இழுத்தடிப்பது, அநியாயமான செயல் எனவும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சட்டம், நீதி என சகல விடயங்களும் சகல மக்களுக்கும் பொதுவானது என்றால், மலையக மக்கள் கோரும் நியாயமான சம்பளத்தை உடன் அதிகரிக்க வேண்டுமென சிறிநேசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read more...

வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத் தளத்தினை, இணையம் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத் தளத்தினை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் பணிகள் விண்ணப்ப படிவங்கள் ஊடாக கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் பதிவு செய்யப்பட்டு வந்தன.

எனினும் தூர இடங்களில் இருந்து வரும் போது அதற்கான கால, நேர, பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்ப படிவங்களை தவிர்த்து, வேலையற்ற பட்டதாரிகள் இணையம் மூலமாக, இலகுவாகவும், துரிதமாகவும் இந்த பதிவினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது - சுங்க திணைக்களம்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 168 பறவைகளும், 42 கூடுகளில் குறித்த பயணி, இவ்வாறு பறவைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி பறவைகளை இலங்கைக்கு கொண்டுவர எந்த விதமான அனுமதியையும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்த சுங்க திணைக்களம், கைப்பற்றப்பட்டுள்ள பறவைகளின் பெறுமதி 8 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிட்டுள்ளது.

Read more...

அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பங்கள், தாயகம் திரும்பவுள்ளனர் - சிவஞானசோதி.

அகதிகளாக தமிழகம் சென்ற சுமார் 39 குடும்பங்கள், அங்கிருந்து மீள தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தின் உதவியுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

34 ஆண்களும், 49 பெண்களுக்குமாக மொத்தமாக 83 பேர் தாயகம் திரும்பவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Read more...

சேனா படைப்புழுவின் ஆரம்பம் அம்பாறையே - நிமல் விக்ரமசிங்க.

கடந்த தினங்களில் நாட்டின் பல மாவட்டங்களின் பயர்நிலங்களை குறிவைத்து தாக்கிய சேனா படைப்புழு, முதன் முதலாக அம்பாறை மாவட்டத்திலேயே அவதானிக்கப்பட்டதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நிமல் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேனா படைப்புழுவின் தாக்கம், கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், டிசம்பர் மாதத்திலேயே அது பரவும் நிலையை அடைந்ததாக கூறினார்.

இந்த சேனா படைப்புழுவால் தற்போது 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பயிர்களை விட சோளப் பயிர் செய்கையே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னயை வருடங்களை விட இம்முறை சோளம் கூடுதலாக பயிரிடப்பட்டிருந்ததாக அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நிமல் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் சேனா படைப்புழுவின் விரும்பிய உணவாக, சோளம் கருதப்படுகின்றது. இதனால் அதன் பரவலும் வேகமாக இடம்பெறுய்வதாக நிமல் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சோளத்தைப் போல ஏனைய பயிர்களையும் படை புழு தாக்கினால் நாட்டு மக்கள் பட்டினியில் வாழ நேரும். - எச்சரிக்கை

படை புழு சோளத்தை மாத்திரம் அன்றி ஏனைய பயிர்களையும் தாக்குகின்ற பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பஞ்சம், பட்டினி ஆகியவற்றுக்கு ஆளாக நேரும் என்று அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். எப். ஏ. சனீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படை புழுவை அடையாளம் கண்டு கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல் தொடர்பான விழிப்பூட்டல் பேரணியும், அறிவூட்டல் கூட்டமும் காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையம், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் காரைதீவு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் போதனாசிரியர் பா. பிரதீப் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை காலை இடம்பெற்றன. இவற்றில் காரைதீவு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சிதம்பரநாதன், நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் ஏ. ஏ. அப்துல் மஜித், பயிர் பாதுகாப்பு பாட விதான உத்தியோகத்தர் ஏ. ஜெய்லாப்தீன், மறு வயல் பயிர் செய்கைக்கான பாட விதான உத்தியோகத்தர் எஸ். எச். ஏ. நிஹார், பாடசாலை அதிபர், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதம விருந்தினர் சனீல் இங்கு பேசியவை வருமாறு,

உண்மையிலேயே அம்பாறை மாவட்டம் மட்டும் அன்றி இலங்கை முழுவதுமே இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையிலே உள்ளது. இந்த நேரத்தில் காரைதீவில் இவ்வாறான நிகழ்வு நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். துக்கமான தருணத்திலும் மகிழ்ச்சி அடைகின்ற நேரமாக இது உள்ளது.

படை புழு வெளிநாட்டில் இருந்து வந்து இப்போது இலங்கையின் சோள பயிர் செய்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தி ஏனைய பயிர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய தீவிர தன்மையை காட்டுகின்றது. வேறு படை புழுக்கள் இலங்கையில் காணப்பட்டன. நெல்லில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற படை புழு, தக்காளியை தாக்குகின்ற படை புழு போன்றவற்றை உதாரணத்துக்கு சொல்லலாம். ஆனால் இவை குறிப்பிட்ட தாவிர வர்க்கத்துக்கே தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இருந்தன. ஆனால் தற்போதைய படை புழு சோளத்துக்கு பிரதானமாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள போதிலும் ஏனைய பயிர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சாத்திய கூறு இருக்கின்றது. கிட்டத்தட்ட 100 பயிர்களுக்கு இதன் தாக்கம் ஏற்படலாம் என்பதை ஏற்கனவே அறிய தந்திருக்கின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் அளவில் தேசிய விவசாய விழிப்புணர்வு வாரத்தில் விழிப்பூட்டல் பிரசாரங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. அப்போது இந்த படை புழு இலங்கையில் இருந்ததாக தகவல் இல்லை. ஆயினும் அப்போது இதன் தாக்கம் இந்தியாவில் இருப்பதாக அறிந்திருந்த விவசாய திணைக்களம் உடனடியாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து இருந்தது.அம்பாறை மாவட்டத்தில் தீவிரமாக இப்பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டு இருந்தன என்று நான் நம்புகின்றேன். ஏனென்றால் முதலில் மகாஓயாவிலும் அடுத்த நாள் தமணவிலும்தான் இந்த படை புழுவின் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது இலங்கையில் அம்பாறையில்தான் இந்த படை புழு கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்வதை காட்டிலும் இந்த படை புழுவை கண்டு பிடிப்பதற்கான ஏற்பாடுகள் இம்மாவட்டத்தில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக இம்மாவட்டத்தின் விவசாயிகளும், விவசாய திணைக்களமும் அதீத அக்கறையுடனும், விழிப்புடனும் செயற்பட்டதால் இந்த படை புழு இங்கு அடையாளம் காணப்பட்டது என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. விசேடமாக சோள பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுனாமி இன, மத , மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்நாட்டு மக்கள் அனைவரையும் தாக்கியது போல படை புழு எல்லாருடைய பயிர்களையுமே தாக்குகின்றது. இது பயங்கரமானது. அம்பாறை மாவட்டத்தில் தமண, மகா ஓய, பதியத்தலாவ ஆகிய பிரதேசங்களில்தான் கூடுதலாக சோளங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 2500 ஏக்கருக்கு மேல் உள்ளன.இங்கு நாம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டபோது இங்குள்ள விவசாயிகள் முஸ்பாத்தியாகவும், நேர விரயமாகவுமே முதலில் எடுத்து கொண்டனர். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குள் 75 வீதத்துக்கும் அதிகமான அளவில் விளைச்சலை பெற்று கொள்ள முடியாத அளவு படை புழுவின் தாக்கம் இடம்பெற்று உள்ளது. எனவே விவசாய திணைக்களம் தனித்து செயற்பட்டு செய்ய கூடிய வேலையாக இந்த படை புழு அழிப்பு நடவடிக்கையை கூற முடியாது உள்ளது.

சுனாமி வந்தபோது எல்லா திணைக்களங்களும், எல்லா மக்களும் சேர்ந்து செயற்பட்டு ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலமே சுனாமியின் தாக்கத்தில் இருந்து விடுபட முடிந்தது. ஆனால் இந்த படை புழுவின் தாக்கம் சுனாமியின் தக்கத்தை விட பயங்கரமானதும் பாரதூரமானதும் ஆகும். இதை ஒழுங்காக கட்டுப்படுத்த தவறினால் எத்தனையோ சுனாமிகள் வருவதை காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். ஆபிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மிகவும் செழிப்பானவையாக இருந்தன. ஆனால் பிற்பாடு பஞ்சத்துக்கு பெயர் பெற்றன. வரட்சி, இவ்வாறான படை புழுக்களின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாகவே அங்கு பஞ்சம், பட்டினி சூழ்ந்து கொண்டது. அங்கு எலும்பும் தோலுமாக பிள்ளைகள் பிறக்கின்றன. இதே போன்ற ஒரு கட்டம் இந்த படை புழுவின் தாக்கம் காரணமாக இலங்கைக்கு நேரலாம் என்று அஞ்ச வேண்டி உள்ளது. சோளத்தை பிரதானமாக தாக்குகின்ற இந்த படை புழு ஏனைய சில பயிர்களைகளையும் தாக்குவதாக சில தகவல்கள் வந்து உள்ள போதிலும் நம்பகரமான தகவல்கள் ஒழுங்காக இன்னும் வரவில்லை. அவ்வாறான தகவல்கள் வராதிருக்க இறைவனை நாம் பிரார்த்திப்போம். சோளத்துடனேயே இந்த படை புழு போய் விட்டால் நம் எல்லோருக்கும் நல்லதுதான். ஏனென்றால் நூறு பயிர்களையும் இது தாக்குமாக இருந்தால் மிஞ்சுவதற்கு எந்த பயிரும் இல்லாமல் போய் இலங்கையர் அனைவரும் பஞ்சம், பட்டினியில்தான் வாழ நேரும்.

சோள செய்கையை பொறுத்த வரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள 31,000 ஏக்கருக்கும் நஷ்டம் தலா 75000 ரூபாய் என்று சொன்னாலும் மொத்தம் 230 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று கூறலாம். இதே நிலை நெல்லுக்கு ஏற்பட்டால் தாக்கம் எப்படி இருக்கும் தெரியுமா? அந்த நஷ்டத்தை இலக்கத்தில் சொல்ல என்னால் சொல்ல முடியாது.

மாணவர்கள் சாதுரியமும், புத்தி கூர்மையும் நிறைந்தவர்கள். ஆகவேதான் முக்கியமாக விழிப்பூட்டப்படுகின்றார்கள். மாணவர்கள் அனைவரும் சுனாமியின்போது பெற்ற அதே அனுபவத்தை இந்த படை புழு தொடர்பாகவும் பெறுதல் வேண்டும். இந்த புழுவை பயிர்களில் எங்காவது கண்டால் உடனே அழிக்க வேண்டும். விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களுக்காகவோ, பெற்றோர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ காத்திருக்க கூடாது.

உண்மையிலேயே விவசாயம் உயிர் நாடி ஆகும். எல்லா உணவுகளே விவசாயத்தின் விளைச்சல்களாகத்தான் இருக்கின்றன. விவசாயி சேற்றில் கால் வைக்கா விட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. எனவே விவசாயத்துக்கும், விவசாயிக்கும் ஏற்படுகின்ற தாக்கம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஏற்படுகின்ற தாக்கமே ஆகும். அதே நேரம் காரைதீவு சோள பயிர் செய்கையில் பெரிதாக ஈடுபடவில்லை என்பதால் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்பூட்டுங்கள் என்றும் கேட்டு கொள்கின்றேன்.

(எஸ்.அஷ்ரப்கான்).







Read more...

தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு நியாயமானதே - அனுர குமார திஸநாயக்க

தமக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என, பெருந்தோட்ட மக்கள் முன்வைத்து வரும் கோரிக்கை நியாயமானதே என்று, ஜேவிபியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை மீதான பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்தை மட்டுமே சாரும். தோட்டப்புறங்களில் குறை நிறை கொண்ட குழந்தைகளின் பிறப்பு 25 சதவீதத்தை தாண்டுகிறது. தோட்டப்புற மாணவர்களின் வருடாந்த பல்கலைக்கழ நுழைவு, 120க்கும் 150 க்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது.

இதனால் தோட்டப் புற மக்கள் கல்வியிலும், சுகாதாரத்திலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே, மலையகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என, ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

அவரின் உரையில் ஒரு பகுதி வருமாறு:-

“பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நீதியானதாகும். அதைக் கோரி அவர்களாலும், அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களும் நியாயமானவையாகும். எனவே, தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கையை இலகுவில் நிராகரித்துவிடமுடியாது. அதைப் புறந்தள்ளிவிட்டு அரசியல்வாதிகளாலும் பயணிக்கமுடியாது.

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? இன்று நேற்று அல்ல 200 வருடகால வரலாற்று முழுவதிலும் மலையக மக்களுக்கு இங்கு துரோகங்களே இழைக்கப்பட்டன. பிரஜாவுரிமை பறிப்பு, நாடு கடத்தல், கல்வியில் புறக்கணிப்பு எனப் பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்துவந்து சுமார் 100 தொழிலாளர்கள் இலங்கையிலுள்ள துறைமுகத்தில் இறங்கினால், பெருந்தோட்டங்களுக்கு நடைபயணமாகச் செல்லும்போது மலேரியா உட்பட ஏனைய நோய்த் தாக்கங்களுக்குள்ளாகி 50 பேர் உயிரிழக்க நேரிடும்.

தோட்டப் பகுதிகளுக்குச் சென்று உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்போது 25 பேர் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழக்க நேரிடும். 25 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சுவார்கள் எனப் பத்திரிகையொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வலிகளை சுமந்துவந்த மக்கள் இங்கு வஞ்சிக்கப்படுகின்றனர்.

மலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது. தனிநபர் வருமானமும் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

நான்கு பேர்கொண்ட குடும்பமொன்று அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு வாழ்வதற்கு 54 ஆயிரத்து 990 ரூபா அவசியம் என அரச புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், தோட்ட மக்களுக்கு இத்தொகையில் இரண்டிலொரு பங்கே கிடைக்கின்றது.

இதை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி வாழ்வது? மொத்த வருமானத்தில் ஏனைய மக்கள் 35 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் நிலையில், மலையக மக்கள் 51 சதவீதத்தை அதற்காக செலவிடுகின்றனர். அம்மக்களுக்காக ஏனைய சலுகைகள் எதுவும் இல்லை.

மந்தபோசனையுடன் குழந்தைகள் பிறக்கின்றனர். கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.

தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்களில் 47 வீதமானோர் சாதாரண தரப் பரீட்சை எழுதவில்லை. 12.8 வீதமானோரே உயர்தரம் பயின்றுள்ளனர். 2 வீதமானோரே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.

வருடாந்தம் சுமார் 28 ஆயிரத்து 700 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அப்படியானால் தோட்டப் பகுதிகளிலிருந்து 120 மற்றும் 150 மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர். சனத்தொகை விகிதத்துடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவான சதவிகிதமாகும்.

இப்படி கல்வி, சுகாதாரம், தாய்மொழி, போஷாக்கு என அனைத்து வழிகளிலும் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எதற்காக இந்தப் பாகுபாடு?

எனவே, மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அம்மக்களை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது.

ஏனைய மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும்.

கொழும்பில் ஹோட்டலில் வேலை செய்வதற்கும், மலசலகூடம் கழுவுவதற்கும், வீட்டு வேலைசெய்வதற்கும் மட்டும் மலையக இளைஞர்களைத் தேடாமல், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறைந்தபட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.

அரச நிர்ணயங்களுக்கு அமைய அவர்களுக்கு சுமார் 1,291 ரூபா வழங்கப்படவேண்டும்” – என்றார்.

ஏனைய தொழிற்துறையில் உள்ளவர்களின் சம்பளத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பேசி, தொழிலாளர்களின் கோரிக்கையை நியாயப்படுத்திய அநுரகுமார திஸாநாயக்க, பல புள்ளிவிபரங்களையும் வெளியிட்டார்.

கம்பனிகளுக்கு அடிபணியாது, அனைத்து மலையக எம்.பிக்களும் தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Read more...

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க, நடவடிக்கை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல .

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய பாராளுமன்ற அமர்வின் போதே,க்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்

சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தாம் சிறந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உறுதியளித்தார்.

Read more...

பாரபட்சமாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து சட்ட நடவடிக்கை தேவை - வடமாகாண ஆளுநருக்கு மகஜர்.

தமது கிராமங்களில் அபிவிருத்தி பணிகள் பாரபட்சமாகவே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து, மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மடு பிரதேசச் செயலகத்திற்கு முன்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு பின்னர், குறித்த மகஜரும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின் பல்வேறுப்பட்ட வாக்குறுதிகளோடு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தற்போதுவரை, துன்பியல் வாழ்விவிற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என மடு மக்கள் தமது மகஜர் மூலம் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் வீதி அபிவிருத்தி, வீதி மின்விளக்குகள் பொருத்துதல், குடிநீர் வசதிகள், போக்குவரத்து சேவைகள், மருத்துவச் சேவைகள், பாடசாலை அபிவிருத்தி, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கை, குளங்கள் புனரமைப்பு, வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், மயானங்களை புனரமைத்தல், நீர்வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி இந்த மகஜர், கலாநிதி சுரேன் ராகவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த மகஜரின் பிரதிகள், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கும் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கைவினைஞர்களுக்கான காப்புறுதித் திட்டம் மார்ச்சில் அறிமுகம் - அமைச்சர் ரிசாட்,

கைவினைஞர்களுக்கு நன்மை பயக்கும் வகையில், புதிய காப்புறுதி திட்டம் ஒன்று இந்த வருடத்தின் மார்ச் மாதமளவில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களை ஊக்கப்படும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில், தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர், இத்திட்டத்தின் மூலம் நன்மையடைவர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

சுதேச கைவினைத் துறையினை இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கலாம் என அவர் கூறியுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழாவில் கலந்து கொண்ட ரிசாட் பதியுதீன் இதனை கூறினார்.

கைவினைத்தொழில் இந்நாட்டிலே சுயதொழில் வாய்ப்புக்கான பாரிய துறையாக காணப்படுகின்றது. சுமார் ஒரு இலட்சம் பேர் இத்துறையில் ஈடுபடுகின்றர். மார்ச் மாதத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்த காப்புறுதித் திட்டத்தில் சுமார் 5000 கைவினைஞர்கள் முதற்கட்டமாக நன்மையடைவர். இது விஸ்தரிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டளவில் பதிவு செய்யப்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.

தேசிய அருங்கலைகள் பேரவையின் செயற்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தி இத்துறையை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நாம் கைவினைஞர்களுக்கான பயிற்சிகளை சிறப்பாக விரிவுபடுத்தியுள்ளோம்.

அருங்கலைகள் பேரவையானது கைவினைப்பயிற்சி நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைத்து பல்வேறுப்பட்ட பயிற்சி நெறிகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன் ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் மகத்தான கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் என்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தமது நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த, சிங்கப்பூர் இணக்கம்.

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு, சிங்கப்பூர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டத்தை, இலங்கையிலும் அறிமுகப்படுத்தி முன்கொண்டு செல்ல, சிங்கப்பூர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் அமைச்சர் டெஸ்மன் லீயுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.

இந்த கலந்துரையாடல், சிங்கப்பூரின் மெண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது. இதன் போது, இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவுமாறு ஜனாதிபதியினால் குறித்த அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு, சிங்கப்பூர் தரப்பிலிருந்தும் இணக்கம் வெளியிடப்பட்டது. அதன்படி போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு, சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக, அந்த நாட்டின் விசேட பிரதிநிதிகள் சிலர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் பின்பற்றுகின்ற அதி முக்கிய நடைமுறைகள் குறித்தும், சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக, அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் குறித்தும், ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக அந்த நாட்டின் அமைச்சுக்கள் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம், போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதன்போது ஜனாதிபதி சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து ஜனாதிமதி மைத்ரிபாலா சிறிசேனவின் போதைப்பொருள் ஒழிப்பிற்கான வேலைத்திட்டங்களுக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இடம்பெற்றவுள்ள முக்கிய கண்காட்சி ஒன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி, சிங்கப்பூரின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

Read more...

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம். வை எல் எஸ் ஹமீட்

இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?

குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மா க பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன.
ஒன்று: மாகாண படசாலைகளைப் பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர். தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி.

இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான் செயற்படுத்த வேண்டும். சில நேரங்களில் தற்காலிக இடமாற்றங்களைச் செய்யலாம். பின்னர் இசுறுபாயவின் அனுமதியைப்பெற வேண்டும்.

மனித உரிமை ஆணைகுழுவினால் ஏற்கனவே செய்யப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ரத்துச்செய்து பழைய பாடசாலைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அமுல்படுத்தாமல் இசுறுபாயவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள பணிப்பாளர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு கடிதம் எழுதுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் இசுறுபாயவின் பிரதிநிதி என்றமுறையில் இசுறுபாயவின் தீர்மானத்தையே அவர் அமுல்படுத்த வேண்டும். அவர் வெறுமனே மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவைக் குறிப்பிட்டு அதன்பிரதியுடன் இசுறுப்பாயவின் மேலதிக அறிவுறுத்தலைக் கோரியிருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு அப்பாலும் அதன் உள்ளடக்கம் இருந்ததால் அவ்வுள்ளடக்கத்தின் பொருத்தத் தன்மை கேள்விக்குறியாகவும் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.

அது வெறுமனே பொருத்தமற்ற உள்ளடக்கம் என்பதற்காக அல்ல. மாறாக அதன் உள்ளடக்கமே பிரச்சினையின் திருப்புமுனையாக மாறியிருக்கின்றது; என்ற கருத்தே இன்றைய பாரிய விமர்சனங்களின் பிரதான அம்சமாக இருக்கின்றது. அதாவது, இசுறுபாயவின் உத்தரவின் பேரிலேயே இடமாற்றம் இடம்பெற்றபோதும் அவ்வகையான உத்தரவுக்கு அக்கடிதத்தின் உள்ளடக்கமே பிரதான காரணம் என்பதே இவ்விமர்சனங்களின் மையப்புள்ளியாகும். அதன் உள்ளடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவையே நலிவுற்றதாக்கிவிட்டது; என்பதும் விமர்கள் வெளியிடும் கவலையாகும். இவற்றிற்கு பின்னர் வருகின்றேன்.

இப்பிரச்சினையின் ஆழ அகலம் என்ன?

இங்கு பல கேள்விகள் எழுகின்றன.

(1) குறித்த ஆடைகளை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையா?

(2) அந்த ஆடைகள் அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் ஏதும் தடைகள் உள்ளனவா?

(3) இல்லையெனில், பாடசாலை மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் அவ்வாடைக்கு பாடசாலை தடைவிதிக்க முடியுமா?

(4) ஆசிரியைகளுக்கு சீருடை உண்டா? ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலைக்கு உண்டா?

( 5) இல்லையெனில், அவர்களை கல்வியமைச்சு ஏன் வேறுபாடசாலைகளுக்கு ஆரம்பத்திலேயே தற்காலிக இணைப்பிற்கு உத்தரவிட்டது?

(6) மனித உரிமை ஆணைக்குழு வழங்கிய இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் இசுறுபாயவுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் பொருத்தமானதா?

(7) அதன் உள்ளடக்கம்தான் தற்போது இந்தப் பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கு காரணம் என்ற கூற்றில் நியாயம் இருக்கின்றதா?

(8) குறித்த ஆடை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையானால் அதனை நிலை நிறுத்துவதில் உரிமைகளுக்காக போராடவென்று மக்கள் வாக்குகள்பெற்ற அரசியல் அதிகாரவர்க்கம் இத்தனை மாதங்களாக வாழாவிருந்ததேன்?

(9) கல்விப்பணிப்பாளர் அண்மையில் வியூகம் தொலைக்காட்சியில் செய்த சில நியாயப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா?

(10) அபாயா முஸ்லிம்களின் கலாச்சார ஆடையா? இதற்காக போராட வேண்டுமா? என்ற வாதங்கள் இந்த இடத்திற்குப் பொருந்துமா?

(11) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் இங்கு விட்டுக்கொடுப்புச் செய்யமுடியுமா?

(12) அவ்விட்டுக்கொடுப்புகள் எதிர்காலத்தில் வட கிழக்கில் மாத்திரமல்லாமல் அதற்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டா?

(13) நாம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை; என்கின்ற கிழக்கிலேயே, ஒரு கௌரவமான ஆடை அணிகின்ற சிறிய உரிமையைக்கூட பல மாதங்களாக போராடியும் இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதேன்?

(14) கல்விப் பணிப்பாளர் அல்லது உயர் பதவியிலுள்ள முஸ்லிம்கள், சமூகத்திற்கு சாதகமாக நடக்கவேண்டுமா? நடுநிலையாக நடக்க வேண்டுமா?

(15) குறித்த பணிப்பாளரினுடைய இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகள், பேச்சுக்கள், முஸ்லிம்களுக்கு சாதகமானவையா? நடுநிலையானவையா? பாதகமானவையா?

(16) பாதகமானவே எனில் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?

(17) ஆளுநர், அரச அதிபர் உட்பட நியாமாக முஸ்லிம்கள் நியமிக்கப்படாதபோது அவற்றிற்கெதிராக குரலெழுப்புகின்றோமே! ஏன்?

(18) இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

(19) அத்தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர்கள் யார்?

(20) அத்தீர்வு என்பது அவ்வாசிரியைகளுக்குரிய தீர்வா? அல்லது சமூகத்திற்கு தீர்வா? இரண்டாவதெனில் எவ்வாறு?

இப்பிரச்சினையை சரியாக அடையாளம் கண்டு தீர்வுக்காண இக்கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும்.

அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் விடைகளைத் தேடுவோம்.

Read more...

தம்முடன் இணைந்து போராடுமாறு, தொண்டாவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றார் திகாம்பரம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக, 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என, பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், அரசாங்கத்திலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு தாம் தயார் என அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம், தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே திகாம்பரம் இதனை கூறினார்.

இலங்கையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தான் குறைந்த அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. இன்று வெள்ளவத்தையிலிருந்து புறக்கோட்டைக்கு முச்சக்கர வண்டியில் வருவதாக இருந்தால் கூட 500 ரூபாவுக்கு அதிக தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே, அடிப்படை சம்பளமாக 500 ரூபாவை பெறும் எம் தொழிலாளர்கள் எவ்வாறு வாழ்வது? காலத்துக்கு காலம் மட்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்து பேசாமல், அந்த பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்பட வேண்டும் என திகாம்பரம் வலியுறுத்தினார்.

அத்துடன் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது உரையின்போது தெரிவித்த சில கருத்துகளை ஏற்க முடியும் என்றாலும் சில கருத்துக்களை ஏற்க முடியாது என அவர் கூறினார். .

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது தனி வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கான உரிமைகளும் மக்களிடம் தற்போது கையளிக்கப்பட்ட வருகின்றன. இவையெல்லாம் இந்த அரசின் கீழ் தான் இடம்பெற்று வருகின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமொன்று, தொழிலாளர்களிடம் ஒரு முகத்தையும், முதலாளிமார் சம்மேளனத்திடம், மற்றுமொரு முகத்தையும் காட்டுகின்றது.

எனது தாயும் மலையில் கொழுந்து பறித்தவள். தொழிலாளர்களின் வலி, வேதனை என்னவென்பது எனக்கு தெரியும். எனவே, அவர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டேன்.

பெருந்தோட்டங்கள் மக்களுக்கு கட்டாயமாக 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அப்படி வழங்கப்படாவிடின், இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டங்களில் வேலை செய்ய, ஒருவர் கூட இருக்க மாட்டார். நாட்டின் பொருளாதாரமே வீழிச்சி கண்டு விடும் என திகாம்பரம் எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை கூட்டு ஒப்பந்த பேச்சில் தொண்டமானே தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதால், என்ன நடக்கின்றது என்பது ஏனைய தொழிற்சங்கங்களுக்கு தெரிவதில்லை என திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கூட்டு ஒப்பந்த பேச்சிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், நானும் அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராட தயாராகவே இருக்கின்றேன். எமக்கு பதவிகள் முக்கியமில்லை. எனவே எம்மோடு இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆறுமுகன் தொண்டமானும், போராட முன்வர வேண்டும் என, அமைச்சர் திகாம்பரம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

Read more...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானத்தில் ஏறு நிலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக, அதன் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் கடைசி ஒன்பது மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அடைவுமட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு கணிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் பயணங்களை மேற்கொண்ட பயணிகள் மூலம் ஈட்டிய வருவாய் மற்றும் பண்டப்போக்குவரத்து வருமானமும் , சந்தை வருமானமும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்காலப்பகுதியில் விமானச்சேவை செயற்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய நிகர போக்குவரத்து வருமானம், 75 மில்லியன் டொலராகும் என்றும் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இம்முறை மாற்றம் - அமைச்சர் வஜிர அபேவர்தன

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம், இந்த வருடம் தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆம் உறுப்புரைக்கமையவே இம்முறை சுதந்திர தின நிகழ்வை தேசிய தினமாக கொண்டாடவுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினர்.

அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆவது உறுப்புரையில், தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Read more...

7 ஆயிரத்து 420 லீற்றர், எதனோல் போதைப்பொருள் யாழில் மீட்பு

சட்டவிரோத எதனோல் போதைப்பொருள்களை பாரவூர்தியில் கடத்திச்சென்ற இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து, எதனோல் போதைப்பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, குறித்த பெருந்தொகையான எதனோல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொத்தமாக 372 எதனோல் கான்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒவ்வாரு கான்களிலும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்ட எதனோல் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ள சுன்னாகம் பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

50 வகையான பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கு கடனுதவி

அரசாங்கம் மாணவர்களின் நன்மை கருதி உயர்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டி இல்லாக் கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வட்டி வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர்ந்தபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சின் மாணவ கடன் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சந்திமா ஜானகி தெரிவித்துள்ளார்.

வட்டியில்லா கடன்களை மாணவர்களுக்கு வழங்கி சந்தையில் கேள்வியுடைய பட்டதாரிகளை உருவாக்குவது இதன் இலக்காகும். இதன்படி அரசாங்கத்தினால் சுமார் ஐந்து துறைகளில் 50 வகை பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கான கடனுதவி வழங்கப்படவிருக்கிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களை மாணவர்கள் தமது கற்றலை மேற்கொள்ளும் காலப்பகுதியில் செலுத்தவேண்டிய நிலை இல்லாத விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்தக் கடன்களை பெற்று பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மாணவர்கள் ஒருவருடகாலத்திற்குள் தொழிலை பெற்று, தொழில் கிடைத்தவுடன் பெற்றுக்கொண்ட கடனை தவணைக் கொடுப்பனவு முறையில் திருப்பிச் செலுத்த முடியும்.

Read more...

வாய்தர்க்கத்தில் மனைவியை கொலை செய்த கணவன்

கணவனின் தாக்குதலில் மனைவி ஒருவர் பலியாகிய சம்பவம் றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறியதில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல, மெத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், றாகம மருத்துவமனையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நிலையில் கொலைச் சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more...

கைதிகள் மீது தாக்குதல் - தவறிழைத்த அதிகாரிகளுக்கு நிறுவன நடைமுறையின் கீழ் தண்டனை - அதிகாரிகள் பரிந்துரை

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீது அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான அறிக்கை அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களக் குழுவின் அறிக்கையில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 40க்கும் அதிகமான கைதிகளின் வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான CCTV காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பிலும் விசேட விசாரணைகள் பொலீசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் மூவர் வழங்கிய இவ் அறிக்கையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தவறிழைத்த அதிகாரிகளுக்கு நிறுவன நடைமுறையின் கீழ் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது குழுவினர் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டாவது குழுவில் , ஜனாதிபதி செயலகம், அரச நிர்வாக அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

8000 மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை வௌியிடப்படவுள்ளது.

கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 8,000க்கும் அதிகமான தகுதியான மாணவர்களை இணைக்குக்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Read more...

எரிபொருளுக்கு போன்றே பால்மாவுக்கும் விலை சூத்திரம்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்கு விலைச்சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச்சூத்திரம் ஒன்றை கொண்டு வருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பால்மாவின் விலைக்கு அமைவாக, நாட்டிலும் பால்மாவின் விலையில் மாற்றம் ஏற்படும் வகையில் இந்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அண்மையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் சில கோரிக்கை விடுத்திருந்தன. அதன்படி பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து, இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பால்மாவுக்கான விலை சூத்திரம் அறுமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கமே காரணம் - கொந்தளிக்கிறார் விமல்

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கமே திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளதாக, விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பில், வெளிவிவகார அமைச்சு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? என்பது குறித்து எமக்கு இதுவரை தெரியாது.

ஆனால், இலங்கை இராணுவத்தினரை கைது செய்யுமாறு வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் இதற்கு முன்னர் ஒரு தடவையேனும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசாங்கமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல், காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நாடு ஒன்றிலிருந்து இராணுவத்தினருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கும்போது, குறித்த நபரை அந்நாட்டுக்கு ஒப்படைப்பதற்கான வழிவகைகளும் திறந்து தான் காணப்படுகின்றன.

ஆனால் அரசாங்கமோ, சர்வதேசத்திடம் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளால், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாம் முன்பே வலியுறுத்தி இருந்தோம். அப்போது அனைவரும் எங்களை ஏளனம் செய்தார்கள். இப்போது, பிரித்தானிய நாடாளுமன்றம் இலங்கை இராணுவத்தினருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இப்படியான ஒரு அரசாங்கத்தை இனியும் ஆட்சி பீடத்தில் நீடித்திருக்க நாம் இடமளிக்கக்கூடாது என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

Read more...

உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு இலங்கையில்

உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் இலங்கையில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. AIESEC இலங்கை அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நான்கு பிரதிநிதிகள், அண்மையில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவை அலரி மாளிகையில் சந்தித்தது கலந்துரையாடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இளைஞர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல், கலாச்சார வேறுப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் பூகோள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

Read more...

விஹாரை மீது ஏறி புகைப்படம் எடுத்த 7 மாணவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை

கிரலாகல புராதன விஹாரை மீது ஏறி புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 7 பல்கலைக்கழக மாணவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

தொல்பொருள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த எழுவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். குறித்த மாணவர்கள் 7 பேரும் தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இறுதியாண்டில் கல்விகற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை பெற்றுக்கொண்டது இலங்கை

உலக வங்கியின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு, இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த நிதியானது தொற்றா நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கையில், இலங்கையின் சார்பில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். ஏச். சமரசிங்கவும் உலக வங்கியின் சார்பில் Idah Pswarayi-Riddihough வும் கைச்சாத்திட்டனர்.

Read more...

கொள்ளுப்பிட்டி ஹெரோயின் கடத்தல் தொடர்பில் திருப்பம்

90 கிலோகிராமுக்கும் அதிக ​ஹெரோயினுடன் அண்மையில் கொள்ளுப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள், இந்தப் போதைப்பொருளை கடத்துவதற்கு டர்க்மேனிஸ்தானின் முக்கிய கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் இந்த புதிய தகவல் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெரோயின் தொகை படகின் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து மிக சூட்சுமமான முறையில் ஹெரோயின் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதை தாம் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் இரண்டு பேர் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இரண்டு முக்கிய விடயங்கள்

இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இந்தச் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா முன்வைக்கவுள்ளார். அத்துடன் இன்றைய நாளுமன்ற அமர்வில், பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி, சுற்றுலா, நிதி மற்றும் வெகுஜன ஊடகம், வௌிவிவகாரம், சுதேச மருத்துவம் உள்ளிட்ட 31 அமைச்சுக்களுக்கான ஆலோசனை தெரிவுக் குழுக்களுக்கான அனுமதி பெறப்படவுள்ளது.

Read more...

Wednesday, January 23, 2019

வாகன சாரதிகளுக்கு, திடீர் எச்சரிக்கை - அர்ஜுன ரணதுங்க.

வாகனங்களை செலுத்தும் போது, பாரிய தவறுகள் இடம்பெறுமானால் அதற்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே,
போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு வாகனங்களை செலுத்தும் சாரதிகளின், சாரதி அனுமதி பத்திரமும் பறிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த தீர்மானம் குறித்து விரைவில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி சட்டமாக்குவதற்கான ஏற்பாடுகளை தாம் முன்னெடுத்து வருவதாக அர்ஜுன ரணத்துனாக் கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக வீதியோரங்களில் ஏற்படும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தாம் முன்னெடுக்கவுள்ள இந்த தீர்மானத்தின் மூலம் வாக விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும், போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

சேனா படைப்புழுவை இல்லாதொழிக்க, நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம்.

நாட்டின் சோளப்பயிர்ச்செய்கையைத் தாக்கியுள்ள சேனா பயிற்செய்கையின் முலம், விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த படைப்புழுவின் தாக்கத்தில் இருந்து பயிர்களை காப்பாற்ற தற்போது விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பீடைக்கொல்லி ஒழிப்பு செயல்திட்ட பதிவாளர் சுமித் குறிப்பிட்டுள்ளார்.

சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்காக விவசாய அமைச்சு 5 இரசாயன பொருட்களை பரிந்துரை செய்துள்ளது. அந்த பொருட்களை தற்போது நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

இந்த 5 இரசாயன பொருட்களையும் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக, பீடைக்கொல்லி ஒழிப்பு செயல்திட்ட பதிவாளர் சுமித் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேற்படி ரசாயன பொருட்களை பயன்படுத்தும் விதம் தொடர்பான கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்குவதுடன், அது குறித்து விசேட தெளிவுபடுத்தலும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், சேனா படைப்புழுவால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இரா. சம்பந்தனுக்கும், பிரித்தானியாவின் தெற்காசியாவிற்கான, பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பிரித்தானியாவின் தெற்காசியாவிற்கான பொறுப்பதிகாரியான பர்கஸ் ஓல்ட் சந்தித்துக்க்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இவர்கள் இருவரும் இணைந்து, கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும், அதிகாரப் பரவலாக்கம் நேர்மையானதாகவும், மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையிலும் இருத்தல் அவசியம் எனவும் இரா.சம்பந்தன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.

மக்கள் கைகளில் ஆணை செல்லும் போது ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். இதன் காரணமாக ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் நீடித்த இச் சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கடந்து, எமது போராட்டத்தை முன்னெடுப்போம் - கேப்பாபுலவு மக்கள்.

எமது பூர்வீக காணிகளை பெறுவதற்கான போராட்டங்களில் நாம் எதிர்நோக்கும் துன்பங்களைக் கடந்து கட்டாயமாக வெற்றி பெறுவோம் என கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களில் ஒருவரான சிவப்பிரகாசம் அரியகலா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது போராட்டம் இன்றுடன் 693 நாட்களைக் கடந்துள்ளது. எமது பூர்வீக வாழ்விடங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் வீதியோரங்களில் பல துன்பங்களைச் சந்தித்து இன்று வரை போராடி வருகின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கைக்கும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, நாம் இன்றைய ஊடக சந்திப்பினை ஒழுங்கு செய்துள்ளோம்.

இதுவரை எமக்கு எந்தத் தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எமது விடயம் தொடர்பாக மேலும் அழுத்தங்களை வழங்கி எமது வாழ்விடங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு , நாம் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமது பூர்வீக காணிகளை இழந்த பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சந்தன பிரசாத்தின் விளக்கமறியல் காலம் நீடிப்பு.

11 இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் உள்ளிட்ட மூன்று பேரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

பெருந்தோட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் சதி இடம்பெறுகிறது - பெரியசாமி பிரதீபன்.

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தொடர்பாக இடம்பெறும் போராட்டங்களிலும் பல சதிகள் இடம்பெறுவதாக, நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், மஸ்கெலிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பெரியசாமி பிரதீபன் இதனை கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு விடயத்தில், அரச சார்பற்ற பொது அமைப்புகள் இன்று பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

இந்த போராட்டங்கள் மலையக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் மீது தொழிலாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை விரிசலடைய வைக்கும் ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று கருதும் அளவுக்கு சந்தேகம் எழுவதாக, மஸ்கெலிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பள விடயம் தொடர்பில் மலையக தொழிற்சங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்புக்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஈடுபடுதினார்கள்.

இதனால் தொழிலாளர்கள் சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை வருமானத்தை இழந்தனர். இந்த நட்டத்திற்கு பொறுப்புக் கூற முடியாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரச சார்பற்ற பொது அமைப்புகள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி பணிப் பகிஷ்கரிப்புக்கும், போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களைப் போராட்டத்தில் ஈடுப்படுத்தியும் உள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான உரிய தீர்வு இப்போதே கிடைக்காவிட்டால், ஏற்பட்ட நட்டத்திற்கு யார் பொறுப்பு கூறுவார்கள் என கேள்வி எழுப்பினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com