Wednesday, January 23, 2019

இலங்கை மீண்டும் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ளன - திறைசேரி

இலங்கை, மீண்டும் சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தோன்றியுள்ளதாக, திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை, 1.5 மில்லியன் டொலர் நிதியினை சர்வதேச நாணய நிதியத்திற்குத் திரும்பச் செலுத்திய பின்னரே, இந்தப் புதிய கடனுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இருவர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களின் விஜயம் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் அளிக்கும் பாரிய கடன் தொகை, இந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைக்கும் ஏதுநிலைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

87 பில்லியன் ரூபா பெறுமதியான இந்தக் கடன் தொகையானது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கடன் தொகையானது கடந்த ஆண்டே நாட்டிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப நிலைமை காரணமாக, அது குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இனிவரும் காலங்களில், குடிநீர் போத்தல்களில், மாற்றம் ஏற்படும் - அஜித் மான்னப்பெரும.

தற்போது விற்பனைக்காக சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடிநீர் போத்தல்களின் நிறத்தை எதிர்காலத்தில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச் சூழல் பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும இதனை கூறினார்.

மக்களை ஈர்க்கும் வகையிலேயே குடிநீர் போத்தல்கள் நீல நிறத்தில் தயாரிக்கப்படுவதாக, அவர் கூறினார். அத்துடன் குடிநீர் போத்தல்கள் உக்குவதற்கு நீண்ட காலம் செல்வதால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிப்படைவதாக அஜித் மான்னப்பெரும கூறினார்.

எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் போத்தல்களின் நிறத்தை, மாற்றியமைப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.

Read more...

நொயல் நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்பாணத்தில் வெளியிடடப்படுகின்றன. அனைவரும் வருக! வெளியீட்டுக்குழு.

புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் 'எக்ஸைல்' (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் 'கானல் தேசம்' (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் விமர்சனவுரைகளை ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், கிரிஷாந், யதார்த்தன், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹஸீன் ஆகியோர் ஆற்றுகின்றனர். நூல்களை டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் தலைவர் குகநாதனும் எழுத்தாளர் க. சட்டநாதனும் வெளியிட்டு வைக்கவுள்ளனர். நிகழ்வில் பங்கேற்று உரையாடல்களை நிகழ்த்துமாறு நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கவிஞர்கள், வாசகர்கள் அனைவரையும் மகிழ் வெளியீட்டகத்தினர் கேட்கின்றனர்.





Read more...

அரசியல் விபத்து காரணமாகவே த.தே.கூ அரசுடன் இணைந்தார்களாம். கூறுகிறார் மனோ கணேசன்

தற்போதைய  அரசாங்கத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு  இணைந்து செயல்படுவதற்கான காரணம்,  அண்மையில் நாட்டில் ஏற்பட்ட  அரசியல் விபத்தே என, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் மன்னார் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நாட்டிலே கடந்த 58 நாட்களின் பின்னர் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ஓர் அரசியல் விபத்தாக இருந்தாலும் கூட, விபத்தினால் நல்ல காரியங்களும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி தற்பொழுது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்த அரசியல் விபத்து எனது அமைச்சிற்கும் நல்ல பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் கடந்த காலங்களை விட அதிகமான பொறுப்புக்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. இதனால் மக்களுக்காக நேர்மையான சேவைகளை தங்கு தடையின்றி வழங்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனவே வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து, பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம் என்று, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள், அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மன்னார் சதொச வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள், இன்றைய தினம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை காபன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கிலேயே, இவை புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள், சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஐபக்சவிடம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு பி.232/18 என இலக்கமிடப்பட்டு, குறித்த பொதி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது .

குறித்த மாதிரி எலும்புக்கூடு அடங்கிய பொதி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்ஷவின் பொறுப்பிலே எடுத்துச் செல்லப்படுவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ஒருவரும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகப் பணிப்பாளர் ஒருவருமாக மொத்தம் 4 பேர் அமெரிக்காவின்
புளோரிடாவுக்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனித எலும்புக்கு கூடுகள் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கிடைக்கும் அறிக்கையின் படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனித எலும்புக் கூடுகளில் பல, சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

பெருந்தோட்ட மக்களுக்காக இன்று ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான போராட்டம், சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருமீ சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தற்போது கொழுப்பு கோட்டை நோக்கி பேரணியாகச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் 1000 ரூபாய் இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more...

பிரபாகரனால் வடமராட்சி கிழக்கில் விட்டுச் செல்லப்பட்ட பொக்கிசங்கள் அழிக்கப்பட்டது.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் வடகிழக்கு ஆபாய பூமியாக மாறியது. இராணுவத்தை நேர் நின்று எதிர்கொள்ள முடியாத பிரபாகரன் படை மிதிவெடிகளை விதைத்திருந்தது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறு புலிகளால் விதைக்கப்பட்ட வெடிபொருட்கள் இன்றுவரை மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்தவரிசையில் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மற்றும் அமுக்க குண்டுகள் நேற்று(22) செயலிழக்கம் செய்யப்பட்டன.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20)அன்று நீர் பெறுவதற்க்கு பெக்கோ கனரக இயந்திரம் மூலம் கிணறு வெட்டியபோது இனங்காணப்பட்ட மேற்படி மோட்டார் குண்டுகளில் 81மிமி மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டிருந்தன்.

பின்னர் மீட்கப்பட்ட இக் குண்டுகள் பல வருடங்கள் பழமை வாய்ந்ததாக காணப்பட்டதுடன் அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.



Read more...

அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக, ஏன் டக்ளஸ் மௌனம் காத்தார்? – தலதா அத்துகோரள.

தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1994 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பாது மௌனம் காத்தார் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைக்கு என்ன நடந்தது என? கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய போதே, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது, கடந்த வருடம் குறிப்பாக, இலங்கையில் அரசியல் நெருக்கடி இடம்பெற்ற தருணத்தில் தான் இடம்பெற்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்றே இருக்கவில்லை.

இது தொடர்பில் எமக்கு தெரிய வந்தவுடன் இரண்டு ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துள்ளோம். தற்போது ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை எமது கைகளுக்குக் கிடைத்துள்ளது. அத்துடன் அடுத்த அறிக்கையும் வந்தவுடன் நாம் தெரியப்படுத்துவோம்.

ஆனால், டக்ளஸ் தேவானந்தா கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் அதற்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அப்போதே இந்த விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.

Read more...

அதிகாரப் பரவலாக்கல் சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை.

தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் தற்போது இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு தாம் மத்திய நிலைக்கு தற்போது வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற ´வாதபிட்டிய´ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆட்சி முறையில் அதிகாரப் பரவலாக்கல் தமக்கு வேண்டும். அது சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது அரசியலமைப்பு சம்பந்தமான அறிக்கையே சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டின் பெயர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று இருப்பதாகவும், ஜனநாயகம், சோசலிசம், குடியரசு என்று இல்லாமல் இலங்கை என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இலங்கைக் குடியரசு என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் நிலவுவதாக அவர் கூறினார்.

இவை இரண்டில் ஒன்றுதான் இறுதியில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிறைவேற்றப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

தாம் தனி நாடு கோரி 30 ஆண்டுகாலம் போரிட்டதாகவும், இப்போது அங்கிருந்து மத்திய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

கிழக்கில், வாரம் ஒருமுறை 18 தமிழர்கள் இனமாற்றப்படுகின்றனர் - வியாழேந்திரன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களில் 18 பே,ர் வாரந்தோறும் இன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த தினம் தமிழ் தேசியக் கூட்மைப்பிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, இந்த விடயத்தைக் கூறினார்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை தடுக்காது, தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர், இப்போது அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நல்லிணக்கம் பேசிக் கொண்டு காலத்தை கடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள், ஏனைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தடுக்காது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வருகின்ற போதிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் வியாளேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது இவ்வாறான மதமாற்றத்தை தடுக்க முடிந்தா என்றும் அவ்வாறு செய்யவில்லையாயின் அதற்கான காணரம் யாது என்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது.

அத்துடன் மதச் சுதந்திரம் உள்ள ஒருநாட்டில் ஒருவர் விரும்பி மதம் மாறுகின்றபோது அதை எவ்வாறு தடுக்க முடியும் என்ற கேள்வியும் இங்கே முன்வைக்கப்படுகின்றது.

Read more...

ஜனநாயக தேசிய முன்னணி இரண்டே வாரங்களுக்குள் அமைக்கப்படும் - பிரதமர்.

ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டே வாரங்களுக்குள் அமைக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் இடம்பெற்ற சியபத் செவன வீடமைப்பு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகங்கள் மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

Read more...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் நோக்கி பயணம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்போரில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்கும் நோக்கிலேயே ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துவதற்காகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Read more...

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி பாரிய கவனயீர்ப்பு ஊர்வலம்.

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, இன்றைய தினம் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள், பாரிய கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ரம்சீன் தலைமையில் இந்த ஊர்வலம் இடம்பெற்றது.

நாடு முழுவதும் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது தொடர்பான, விசேட விழிப்புணர்வு கருத்துரைகளைத் தொடர்ந்து முஸ்லீம் மகாவித்தியாலய முன்றலிலிருந்து. குருமண்காடு சந்திவரை சென்ற இந்த மாணவர் ஊர்வலம், மீண்டும் அங்கிருந்து பாடசாலையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘போதை நாட்டுக்கு கேடு’, ‘அதை ஒழிக்க ஒன்றிணைவோம்’, ‘எதிர்கால சந்ததியை வளர்க்க போதையை தடை செய்’, ‘போதை, அது சாவின் பாதை’ போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியதுடன், ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்கள், சத்தமாக கோஷங்களையும் எழுப்பியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் மாணவர்களுடன் இணைந்து நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, எம். லிரீப், கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

...............................

Read more...

கொழும்பில் போக்குவரத்தில் ஈடுபடுவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சுமார் 6 நாட்களுக்கு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர் .

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னெடுக்கப்படும் ஒத்திகைகளுக்காக, இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் காலை 6:30 முதல் பிற்பகல் 1:30 வரையில் இடம்பெறவுள்ளதால், எதிர்வரும் 26, 27 மற்றும் 31 ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையிலும் இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Read more...

சரத் என். சில்வாவை விளக்கமளிக்குமாறு உத்தரவு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை எதிர்வரும் 07ம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று சரத் என். சில்வாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிரில் மற்றும் மூத்த பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 03ம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்ட து. அத்துடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதியும் அவர் இதுபோன்று நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வௌியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன் காரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் இந்த கருத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு மனுதாரர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதாக நீதிபதிகள் குழாம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில், வழக்கை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்று சரத் என். சில்வாவை நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் கட்டளை பிறப்பித்தது.


Read more...

ஊழலை ஒழிக்க இரண்டு நாடுகள் இணக்கம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, வெளிநாடுகளின் உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த பயிற்சிகளை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்க ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஒஸ்ட்ரியால் நடைபெற்றுவரும் இலஞ்ச மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின்போது இலங்கை சார்பில் கலந்து கொண்டிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, ஹொங்கொங் அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன், மலேஷியாவின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரையும் சரத் ஜயமான்ன சந்தித்தார். இந்த சந்திப்பின் வெற்றியாக இலங்கையின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு மலேஷியா அதிகாரி இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த கலந்துரையாடலின் விளைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்குள், ஹொங்கொங் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு மாவட்டத்தின் தலைவராக திலங்க சுமதிபால,கம்பஹா மாவட்டத்திற்கான தலைவராக லசந்த அழகியவண்ண, களுத்தறை மாவட்டத்திற்கான தலைவராக மஹிந்த சமரசிங்க, காலி மாவட்டத்திற்கான தலைவராக ஷான் விஜேலால் டி சில்வா, கண்டி மாவட்டத்திற்கான தலைவராக எஸ்.பி. திஸாநாயக்க, கேகாலை மாவட்டத்திற்கான தலைவராக ரஞ்சித் நியமிக்கப்பட்டனர்.

மேலும், விஜய தஹநாயக்க மாத்தறை மாவட்டத்திற்கான தலைவராகவும், மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தலைவராகவும், தயாசிறி ஜயசேகர குருநாகலுக்கான தலைவராகவும், பதுளை மாவட்டத்திற்கு நிமல் சிறிபால டி சில்வாவும், அனுராதபுரம் மாவட்டத்திற்கான தலைவராகவும் துமிந்த திசாநாயக்கவும், அம்பாறை மாவட்டத்திற்கு ஶ்ரீயானி விஜேவிக்ரமவும், யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் இராமநாதனும், மாத்தளைக்கு லக்ஸ்மன் வசந்த பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான தலைவர்கள் இதன்போது நியமிக்கப்படவில்லை.

Read more...

நாடு தழுவிய 'ஆயிரம் இயக்கம்’ எனும் மாபெரும் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

'ஒருமீ' சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

குறித்த போராட்டங்கள், கேகாலை, பதுளை, ஹப்புத்தளை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, ஹட்டன், மத்துகம, மட்டக்களப்பு, தலவாக்கலை, ராகல,நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி முதலான இடங்களில் நடைபெறவுள்ளன. இதேவேளை ருகுணு, ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு, சப்ரகமுவ, கிழக்கு ரஜரட, களனி, வடமேல் மற்றும் பேராதனைப் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ‘ஆயிரம் இயக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்ட அமைப்புக்களை தாண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக வேறு ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு தங்கள் பொறுப்பளிக்க மாட்டோம் என, ஆயிரம் இயக்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் ஐந்துலாம்பு சந்தியில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதனத்தை வலியுறுத்தி மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி, சகல பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன், இன்று பிற்பகல் 3 .00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே, தமிழ் சமூகத்தை முன்னேற்ற முடியும் - எம்.உதயகுமார்

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளானவர்கள். மேலும் சமூக ஒற்றுமையின்மை, குறுகிய நோக்கங்கள் போன்ற காரணங்களால், இன்னும் தமிழ் சமூகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே எம்.உதயகுமார் இதனை குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் சமூகத்தினை பொறுப்பேற்கும் காலம் வருகின்றபோதுதான் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

எனவே தமிழ் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப, கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளானவர்கள். மேலும் சமூக ஒற்றுமையின்மை, குறுகிய நோக்கங்கள் போன்ற காரணங்களால், இன்னும் தமிழ் சமூகம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.

எனவே தமிழ் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப, கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் ஒரு சமூகம் வாழ வேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் முறைகள், அந்த இனத்தின் மொழி, அதன் வாழ்விடம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Tuesday, January 22, 2019

மனித உரிமைகளுக்கான முதலாளிகள் விரும்புவது மனித உரிமைகளை அல்ல டொலர்களையும் யூரோக்களையும். ஜனாதிபதி

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்றது. இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்குரிய காரியங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, அவர்களின் மனங்களை குழப்பி அதனூடாக டொலர்களை தேடிக்கொள்ளும் செயற்பாடுகளையே மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்போர் மேற்கொள்கின்றனர் எனச் சாடியுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இந்நாட்டிலே செயற்படுகின்ற பாதாள உலகத்தினரையும் போதைப்பொருள் வியாபாரிகளையும் மனித உரிமை முதலாளிகள் கூறுவது போல் கையாளமுடியாது, அவர்களை அவர்களின் வழியில் கையாள்வது தொடர்பில் என்னிடம் எந்த எதிர்ப்பும் கிடையாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தை பட்டம் வழங்கும் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுடன், அதற்கான தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்கள் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கும் அதன் சேவைகளை உயர் தரத்தில் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயற்பாடுகள் கடந்த காலத்தில் தவறவிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். தான் பொலிஸ் திணைக்களத்திணை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான குறுகிய காலத்திற்குள் அதனை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, தனது ஆலோசனைகளுக்கமைய புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

குற்றங்களை தடுத்தல் மற்றும் பாரதூரமான குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மனித உரிமைகள் என்ற பெயரில் சிலர் அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பாதாள உலகத்தினரை இல்லாதொழித்தல், குற்றங்களை தடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை ஒழித்தல், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக அவர்கள் தமது குரலை எழுப்புவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் சாதகமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லையெனவும் வலியுறுத்தினார்.

உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உயர் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்களை, பொலிஸ் திணைக்களம், பொலிஸ் ஆணைக்குழு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு ஆகியவை இணைந்து கலந்தாலோசித்து துரிதமாக செயற்படுத்த வேண்டுமெனவும் அவற்றை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன். ஒரு முறை எம்.ஜி.ஆர். நாட்டை பிடிக்க வருவதாக கூறி எம்.ஜி.ஆரின். திரைப்படம் பொலன்னறுவை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் அங்கு சென்று தகராறு செய்தோம். அவரது திரைப்படங்கள் இங்கு ஓட கூடாது என்று சண்டை பிடித்தோம்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் மீது சிலர் கல்லெறிந்தனர். அச்சம்பவத்தில் அங்கு நானும் இருந்தேன். கல்லெறிந்தவர்கள் ஓட நான் சிக்கிக்கொண்டேன். இதனால் பொலிஸார் என்னை அந்த வேளையில் முதன் முறை கன்னத்தில் அரைந்து மூன்று மாதங்களுக்கு சிறையிலடைத்தனர்.

பின்னர் மீண்டுமொரு முறை 1980 சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த வேளையில் நான் பொலன்னறுவை வீதியில் இறங்கி போராடினேன். இதன்போது ஒரு நாள் முழுவதும் வீதியை மறித்து வீதியிலேயே படுத்து கிடந்தோம். இதன்போது பொலிஸார் என்னை அடித்து இழுத்துச் சென்றனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே நான் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவன் பொலிஸ் நிலையத்தை தாக்கத் திட்டம் தீட்டியுள்ளேன் என கூறி கைதுசெய்து கொலை செய்ய முயற்சித்து பின்னர் என்னை நீதிமன்றம் முன் நிறுத்தி ஒன்றரை வருடங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார்கள்.

பொலிஸாரிடமிருந்து நான் இறந்து பிறந்தே இன்று ஜனாதிபதியாகியுள்ளேன். என்றாலும் எனக்கு ஒருபோதும் பொலிஸாரின் மீது வன்மம் எழவில்லை. ஏனென்றால் அவர்களில் நல்லவர்கள் தீயவர்கள் என இருத்தரப்பினரும் உள்ளனர்.

அதேபோல், அவர்களே நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்னின்று உழைக்கின்றனர். இதனால் இவர்கள் உயிர்த் தியாம் கூட செய்ய நேருகின்றது. இவ்வாறான உண்மைத் தியாகிகள் மீது வன்மம் வளர்த்து என்ன பயன் என தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை மென்புன்னகையுடன் கூறி முடித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

'உறுதிப்பாட்டின் ஊடாக தொழில் நிபுணத்துவம்' எனும் தொனிப்பொருளில் இயங்கிவரும் தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் முதலாவது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றதோடு, பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 264 உறுப்பினர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்களும் உயர் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)


Read more...

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை, ரணிலும் சுமந்திரனும் இணைந்து ஏமாற்றுகின்றார்கள். மஹிந்தர்.

புதிய அரசியல் யாப்பு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரனும் இணைந்து நாட்டின் மூவின மக்களையும் ஏமாற்ற முயல்வதாக எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (22) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை. ஆனால் எந்த மாதிரியான அரசியலமைப்பு தேவையென்பதிலேயே பிரச்சனையுள்ளது. தற்போதைய அரசியலமைப்பில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் கொண்டுவரப்படவுள்ளது அரசியலமைப்பு இல்லையென்கிறார் பிரதமர். மற்றவர்கள் சொல்கிறார்கள் இது வரைபு அல்ல என்கிறார்கள். அப்படியானால் இது என்ன? மறுபக்கம், பௌத்தம் அதன் அந்தஸ்த்தை இழந்து விடும் என்று எச்சரிக்கிறார்கள்.

இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சுமந்திரனிற்கும் இடையிலான உடன்படிக்கை. இவர்கள் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு அரசியலமைப்பு அவசியம்தான். ஆனால் அது எந்தவிதமானது என்பதிலேயே பிரச்சனை உள்ளது' என்றார் எதிர்கட்சி த் தலைவர்.

Read more...

தமிழீழம் பெற்றுத் தருவாதாக உசுப்பேற்றியவர்களால் ஒரு தபால் நிலையத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை. கிருஷ்ணமூர்த்தி

நாடு கேட்டு போராட இளையோர்களை தூண்டிய தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வீடுகளைக்கூட பெற்று கொடுக்க முடியாத நிலையிலும் தமிழீழம் பெற்று தருவதாக உசுப்பேற்றியவர்கள் ஒரு தபால் அலுவலகத்தைக்கூட பெற்று தர முடியாத நிலையிலுமே உள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

காரைதீவிலுள்ள தனது இல்லத்தில் நேற்று 21.02.2018 ம் திகதி ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

எந்த பெருந்தேசிய கட்சியாக இருந்தாலும் சரி அந்த பெருந்தேசிய கட்சியை ஆட்சியில் ஏற்றவும், வீழ்த்தவும் கூடிய சக்தியாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது, நினைத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கு முழங்குகின்றார்கள். சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறுபான்மை மக்களின் கட்சிகளுக்கும் இவ்வாறான வாய்ப்பு கிடைப்பது என்பது மிக மிக அரிதான வரப்பிரசாதம் ஆகும். இதைத்தான் பேரம் பேசும் சக்தி என்றும் சொல்ல முடியும் . இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் ஆகியோர் இந்த பேரம் பேசும் சக்தியை வைத்து கொண்டுதான் அவர்களின் மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் பெருந்தேசிய கட்சிகளிடம் இருந்து பெற்று கொடுத்தார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டபோது அதில் சௌமியமூர்த்தி தொண்டமான் பங்கேற்று பேசிய வார்த்தைகளை நான் இங்கு சொல்லி காட்ட விரும்புகின்றேன். இந்த தொண்டமான் நடத்துவது கொச்சிக்காய் அரசியல், பெண்கள் எந்த கறி சமைப்பதாக இருந்தாலும் கொச்சிக்காய் இல்லாமல் எதுவும் சமைக்கவே முடியாது, அதே போல தென்னிலங்கை அரசாங்கம் எதுவாக இருந்தாலும் இந்த தொண்டமான் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினார். இவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் 21 வருடங்கள் ஆட்சியை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக இருந்து, அதன் மூலமாக மலையக மக்களுக்கு பெற்று கொடுக்க கூடியவற்றை எல்லாம் பெற்று கொடுத்தார். அதே போல பெரியசாமி சந்திரசேகரனின் ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தின் உதவியுடன்தான் 2001 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க முடிந்தது. இதன் மூலம் கிடைத்த பேரம் பேசும் சக்தியை சந்திரசேகரன் அவருடைய சமுதாயத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் பெருந்தலைவராக அஷ்ரப் முஸ்லிம் மக்களின் மனங்களில் இடம் பிடிக்க முடிந்ததும் இப்பேரம் பேசும் சக்தியை அவருடைய மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தியதாலேயே ஆகும். மலையக தமிழ் சமூகமும், முஸ்லிம் சகோதர இன சமூகமும் இவர்களுடைய தலைவர்களின் பேரம் பேசும் சக்தியின் மூலமாகவே அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் சமூகத்தை விட முன்னோக்கி சென்று உள்ளன. வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் உரிமை விடயத்தில் மாத்திரம் அன்றி அபிவிருத்தியிலும் பின்னடைந்தவர்களாகவே என்றும் இருந்து வருகின்றோம். ஆனால் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று சொல்லி சொல்லியே தமிழ் தலைவர்கள் காலத்தை ஓட்டி மக்களை ஏமாற்றிய கதைதான் தொடர்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் கிடைத்த மகத்தான சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பே தவற விட்டது. அரசியல் தீர்வு முயற்சியை பொறுத்த வரை இலங்கை - இந்திய ஒப்பந்தம் பொன்னான வாய்ப்பு ஆகும், மாகாண சபைகள் முறைமையை சரியாக பாதுகாத்து முன்னெடுக்க தமிழ் தலைமைகள் தவறி விட்டன. அதே போல தென்னிலங்கை அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்களுக்குள் சந்திரிகாவின் தீர்வு பொதியே தமிழ் மக்களுக்கான தீர்வை அதிக பட்சம் கொண்டிருந்தது. ஆனால் அந்த தீர்வு பொதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து சம்பந்தன் கம்பனி பாராளுன்றத்தில் எரித்தது. இந்த தீர்வு பொதி தமிழ் சட்ட வல்லுனர்களின் நேரடியான பங்களிப்புடனும், பங்கேற்புடனும் உருவாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள்ளேயே சிறை பிடித்து வைத்திருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அமைப்புத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது பிதற்றுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்காகவே வெளிப்படையாக செயற்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு மிண்டு கொடுக்கின்றது. ஆனால் இதன் மூலமாக தமிழ் மக்களுக்கு என்று எதுவுமே கிடைப்பதாக இல்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் மீட்சி, தமிழ் இளையோர்களுக்கான வேலை வாய்ப்பு, தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தி ஆகியவற்றில் ஒன்றைகூட தென்னிலங்கை அரசாங்கத்தின் தலை விதியை நிர்மாணிக்கின்ற சக்தியாக உள்ளது என்று இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் செய்து தர முடியாமல் உள்ளது என்பதே யதார்த்தமான வெட்கக்கேடு ஆகும்.

சம்பந்தர் கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கல்முனை தமிழ் மக்கள் முன்னிலைக்கு நேரில் வந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்று பகிரங்க வாக்குறுதி கொடுத்து விட்டு சென்றார். ஆயினும் கேவலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர இன்று வரை அவரால் முடியாமல்தான் உள்ளது. நாடு கேட்டு போராட இளையோர்களை தூண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களுக்கு வீடுகளைக்கூட பெற்று கொடுக்க முடியாத நிலைதான் தொடர்கின்றது. தமிழீழம் பெற்று தருவதாக உசுப்பேற்றியவர்களால் ஒரு தபால் அலுவலகத்தைக்கூட பெற்று தர முடியாமல் உள்ளது என்பதே உண்மை ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தபால் அலுவலகம் இல்லாத ஒரேயொரு பிரதேசமாக மாங்காடு கண் கண்ட சாட்சியாக உள்ளதை இந்த இடத்தில் சொல்லி வைக்கின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தால் ஒழிய அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க வாக்குறுதி வழங்கி உள்ளார்கள். இவ்வாறான வாக்குறுதிகளை எல்லாம் வாக்கு வங்கிகளுக்காகவே இவர்கள் வழங்குகின்றார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமே அன்றி மாற்றமாக எதுவும் நடக்க போவதே இல்லை.

Read more...

90 கிலோ கிராம் ஹெரோயினுடன் 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 ஆப்கானிஸ்தர் கைது!

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆடம்பர வீடொன்றில் வைத்து 1080 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுடன் ஒருவர் ஆப்கானிஸ்தர் ஆகும். ஏனைய இருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த இலங்கையர்கள் என தெரியவருகின்றது.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி மீட்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் ஒவ்வொன்றும் 1 கிலோ எடையுள்ள 90 பக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இரு அமெரிக்கர்களும் 29 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும ஆப்கானிஸ்தர் 41 வயதுடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேநேரம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரு ஜேர்மனிய யுவதிகள் ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிலாவிற்காக இலங்கை வந்துள்ள இவர்கள், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, மாட்டிக்கொண்டுள்ளனர்.




Read more...

துப்பாக்கிகளைக் கைபற்றுவோருக்கு சன்மானம்! பொலிஸ் தலைமையகத்தின் விஷேட அறிவிப்பு.

சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைபற்றுவோருக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக சன்மானம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை, மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை தொடரவுள்ளது.

இதற்கமைய, T-56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்போரைக் கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தனியார் உளவாளிக்கு 20 ஆயிரம் ரூபாவும், சந்தேக நபர் இன்றி T-56 ரக துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாவும் தனியார் உளவாளிக்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்க, பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் நன்கொடை நிதியத்திலிருந்து சன்மானத்தை வழங்குவதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Read more...

மஹா பொல புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கவனத்திற்கு!

மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகள் ஊடாக மஹாபொல புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்ரம பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கான பணத் தொகைகளை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதன் பின் குறுந்தகவலூடாக அதனை தெரியப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், மஹாபொல புலமைப்பரிசில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி வேட்பாளர் ? - ஆச்சரியத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடும் எண்ணத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக செயற்படுவதற்கான அனைத்து அனுபவங்களும் தனக்கு இருப்பதாகவும், இதனால் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை தான் மனப்பூர்வமாக ஏற்கத்தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஆனபோதிலும், மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவு வழங்கிய ஒருவராக அறியப்படும் திஸ்ஸ அத்தநாயக்க, எப்படி தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் வெற்றி பெறுவார் என்ற கேள்வி நிலவுகின்றது? மஹிந்த கட்சியினர் பலர் தாமே ஜனாதிபதி வேட்பாளர் அன்று அடிக்கடி அறிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு அல்லாமல் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி வாக்காளர் அதிகாரத்தை வழங்க மாட்டாது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோன்று, ஐ.தே.கட்சியிலும் ஜனாதிபதி வேட்பாளர் பலர் எதிர்பார்த்துள்ளனர். மறுபக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போதைய ஜனாதிபதிக்குத் தவிர, வேறு யாருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படமாட்டாது என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதியாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது அவாவை வெளிப்படுத்தியமை ஆச்சரியம் நிறைந்த விடயமே!

Read more...

சந்திரிக்கா காலாவதியான “புட்டிங்” - கம்மன்பில கிண்டல்

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான “புட்டிங்” (Pudding ) என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில கிண்டல் செய்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இப்படி கூறினார்.

சுவை நிறைந்த உணவுப் பொருளாக இருக்கும் ''புட்டிங்'' காலாவதியானதன் பின்னர் கூட சுப்பர் மார்க்கட்டில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டாலும் அதற்கு பெறுமதி இருப்பதுதில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிலையும் இதே போன்றே தற்போது உள்ளது. எனவே, நாட்டைத் தாரைவார்க்கும் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இவரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Read more...

குற்றமிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? - இன்று அறிக்கை

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர், குறித்த அறிக்கையை சபாநாயகர், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.

இந்த அறிக்கை மீது கவனம் செலுத்தும் சட்டமா அதிபர், குற்றம் இழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்குவார். விசாரணை குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Read more...

பிரியங்க பெர்னான்டோவிற்கு பகிரங்க பிடியாணை

லண்டன் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வு, லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலும் கொண்டாடப்பட்டது. இதன்போது அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து லண்டன் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னான்டோ மீது 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்த போது, பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளி எனத் தெரிவித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்றைய நாளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவோ அல்லது உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்தோ எவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.இதன்காரணமாகவே பிணையற்ற பிடியாணை வழங்கி லண்டன் வெஸ்ஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

Read more...

கடும் நிபந்தனைகளுடன் 11 இந்தியர்கள் விடுதலை

வட மாகாணத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சி போன்ற கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே கடந்த 13ம் திகதி கடற்படையினரால் கைது கைதாகியிருந்தனர். குறித்த பதினொருபேரையும் கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்றைய நாளில் கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த 11 பேரையும் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும் விசைபடகின் உரிமையாளர் எதிர்வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

Read more...

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு வந்தது சோதனை - 9 MM துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

9 Millimeter ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஹேமசிறி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் 4700 பதிவு செய்யப்பட்ட கைத் துப்பாக்கிகள் உள்ள நிலையில், இவை தொடர்பிலான தகவல்கள் முறையாக காணப்படாதுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். குறித்த துப்பாக்கிகள் என்ன நோக்கத்துக்காக பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் காணப்படாதுள்ளதாகவும் அவர் கூறினார். ஒருவரின் பெயரில் 14 அல்லது 15 துப்பாக்கிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், 9 MM ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாவதாகவும், குறித்த வகை துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக புதிய அனுமதிப்பத்திரம் நாளை 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்து தமது துப்பாக்கிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read more...

சமூக வலைத்தளமான Whatsapp எடுத்த அதிரடி நடவடிக்கை

Whatsapp நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. செய்தி ஒன்றை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டின் மூலம் போலியான செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் போலியான செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறியும் நோக்கில் ஒரு தகவல் எங்கிருந்து வருகிறது? யார் அனுப்புகிறார்கள்? யாரால் பரப்பப்படுகின்றது என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் Whatsapp நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனால், சமூக வலை தளமான Whatsapp மூலம் பகிரப்படும் செய்திகள் பொய்யாக பிழையாக இருந்தால் அவற்றுக்கு உரிய நடவடிக்கையை நிறுவனம் மேற்கொள்ளும்.

Read more...

Monday, January 21, 2019

ஹெரோயினை விற்பனை செய்த பெண் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இரண்டு கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்து விற்பனை செய்தமை காரணமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், பொரளை – பேஸ்லைன் வீதியில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். குறித்த பெண் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால், இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும், வெவ்வேறாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த 54 வயதான பெண் குற்றவாளி, 4 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com