Monday, January 21, 2019

மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா - இதுவரை 370 பேர் பலி.

சுமார் 370 பேர் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, இதுவரை பலியானதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கோ சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்போது 360 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 685 பேரில் 636 பேருக்கு, இந்த நோய் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட 245 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கோ நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் எபாலோ வைரஸ் காய்ச்சலுக்கு 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இரண்டரை மாத பெண் சிசுவொன்று, மட்டக்களப்பு – கிரான் பகுதியில் மீட்பு.

கைவிடப்பட்டிருந்த இரண்டரை மாத பெண் சிசு ஒன்றை மட்டக்களப்பு – கிரான் வீதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சிசுவை சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலீசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, கிரான் முருகன் கோவில் வீதிப்பகுதியில் இருந்து, நேற்றிரவு குறித்த சிசு மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே சிசு, அந்த வீதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


Read more...

நெடுங்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் பலி - இருவர் கவலைக்கிடம்.

நெடுங்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன், நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ராணுவ அதிகாரிகள் இருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, முல்லைத்தீவு - தட்டாமலை நோக்கி பயணமான இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான ஜீப் ரக வாகனம் ஒன்றே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நால்வரில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நட்டஈடு - விவசாய அமைச்சு

கடந்த தினம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை படைப்புழு சூறையாடி சென்றுள்ள நிலையில், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனா என்று அறியப்படும் இந்த படைப்புழுவின் தாக்கம் காரணமாக, சுமார் 48000 ஹெக்டேயர் நிலபரப்பில் பயிரப்பட்டிருந்த சோளப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாய செய்கையானது முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பின், அதை முழுமையாக தீயிட்டு எரிக்குமாறும் விவசாய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக மாவட்ட மாட்டத்தில் விவசாய மத்திய குழு, கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குழு மற்றும் மாவட்ட குழு போன்ற மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கான பூச்சுக்கொல்லியை பல்கலைக்கழக மாணவர் ஒருவர், நேற்றைய தினம் கண்டுபிடித்திருந்தார்.

இந்த பூச்சிக்கொல்லியின் மூலம் சேனா பட்டுப்புழு அழிக்கப்படும் என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பூச்சிக்கொல்லியின் மூலம் சூழலுக்கோ, மனிதர்களுக்கோ, உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என குறித்த பல்கலைக்கழக மாணவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை சமுர்த்தி பணியாளர்களை கொண்டு முன்னெடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முன்னிலை.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இன்றைய தினம் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினராக செயல்பட்ட காலகட்டத்தில், முதலீட்டு நிறுவனம் ஒன்றுடன் நாமல் ராஜபக்ச மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பிலேயே, இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாமல் ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விசாரணைகளின் பொருட்டு வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சஷி வீரவன்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர்கள் இதுவரை தமது திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.

எனினும் இந்த வார இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயம் - காவல்துறையினர்.

வெலிகம - பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந் தெரியாத இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயங்களுக்குள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டனர்.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பாதாள உலக குழுவொன்று, செயல்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொட்டாங்சேனை - ஜிந்துப்பிட்டி பகுதியில் இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், தப்பிச் சென்றுள்ளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பாதாள உலக குழுவின் தலையீடு இருப்பதாக கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

Earth Watchman திட்டம், ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் - ஜனாதிபதி ஊடக பிரிவு.

நாடளாவிய ரீதியாக இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் செயல்திட்டமான Earth Watchman கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலக கிண்ணத்துடன் இணைந்ததாக இந்த திட்டம், ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் வவுனியா விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைத்தாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் முகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலாவதாக மர கன்றை நாட்டியதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, 1500 மரக்கன்றுகளை ஒரே தடவையில் நட்டு வைத்துள்ளனர்.

கிளிநொச்சி நகரை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த Earth Watchman திட்டத்தின் மூலம், வடக்கையும், தெற்கையும் இணைத்துக் கொண்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, றிசாட் பதியுதீன்,வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், Earth Watchman திட்டத்தின் பணிப்பாளர் நளின் ஆட்டிக்கல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more...

முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல், நீடிப்பு - கோட்டை நீதிமன்றம்.

முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய நாட்டவரான, மர்சிலி தோமஸ் ஆகியோர், இன்று கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இவ் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் சுகயீனமடைந்துள்ள நாலக்க டி சில்வாவிற்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை, சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் வழங்க முடியும் என சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

எனினும், மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் பட்சத்தில், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய, திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் - மன்னார் நகர சபையில் தீர்மானம்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க, மன்னார் நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய தினம் மன்னார் நகர சபையின் 11ஆவது அமர்வு மன்னார் நகர சபையின் ‘சபா’ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

சபை அமர்வில், வீதி, கழிவு அகற்றல், வடிகான் புனரமைப்பு, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களினால் முன்வைக்கப்பட்ட மன்னார் மது விற்பனை நிலையம் தொடர்பான முறைபாடுகளும், சபையின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதற்கமைய மன்னார் நகர சபையின் நிபந்தனைகளுக்கு அமைய குறித்த மது விற்பனை நிலைய செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும், அல்லது மது விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Read more...

ராணுவம் வசமிருந்த 1201 ஏக்கர் காணி விடுவிப்பு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு.

இன்றைய தினம், வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில், 1201 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாக, ,ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் 46.11 அரச காணிகளும் 63.77 தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் இன்னும் 14,000 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், சிறிது சிறிதாக தமது வசமுள்ள காணிகளை விடுவித்து வரும் இலங்கை இராணுவம், தேசிய பாதுகாப்பு கருதி சில காணிகளை விடுவிக்காது, தமது பொறுப்பிலேயே வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

தமிழர்களின் எண்ணிக்கை அரசியலில் குறைந்து விட்டது - லிங்கநாதன்.

அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, லிங்கநாதன் இதனை கூறினார். அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள், தமிழர்களே என்பதாகி வரலாறு கூறுகிறது. எனினும் தற்பொழுது விரல் விட்டு எண்ணுமளவிற்கு தமிழர்களின் எண்ணிக்கை அரசியலில் குறைந்து விட்டது.

இந்த நாட்டில் தமிழர்கள் தலை நிமிர வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி கல்வி மட்டுமே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ளடங்காத பிரதேசங்களை ஏதொவொரு மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்த லிங்கநாதன், அதன் மூலம் அந்த பகுதியிலுள்ள மக்கள், அனைத்து வளங்களையும் பெற சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

Read more...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்

எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஆகவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more...

அங்குணுகொலபெலஸ்ஸ கைதிகள் சித்திரவதை அறிக்கை தலதா அத்துகோரலவிடம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணை அறிக்கையை மூவரடங்கிய குழு விசாரணை செய்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் சம்பந்தமான CCTVகாட்சிகள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டிருந்தன

இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள திட்டம் தீட்டிய 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழுவொன்றை சேர்ந்த குறித்த 50 பெரும் பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த திட்டம் தீட்டி உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் புத்தளம், வனாத்து வில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்த திட்டம் தீட்டிய விடயம் அம்பலம் ஆகியுள்ளது. இந்த வன்முறைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த குழுவுடன் சம்மந்தப்பட்ட 7 பேர் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்கு இந்த அடிப்படைவாதக் குழு நாடு முழுவதும் வகுப்புக்களை நடாத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.வனாத்து வில்லில் வெடிபொருட்களை மறைத்து வைத்ததும் இந்த குழுவில் உள்ள இரண்டு பேர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர், பல வாரங்களாக தனது தென்னந்தோட்டத்தில் தங்கி, குண்டு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் காணப்பட்டதாக கைது செய்யப்பட்ட வனாத்து வில்லு தென்னந்தோட்ட உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

வனாத்தவில்லு தென்னந்தோட்ட வெடிபொருட்களுடன் தொடர்புபட்ட இருவர், மாவனல்லை உட்பட பல பிரதேசங்களில் புத்தர் சிலையை உடைப்பதற்கு தூண்டுதல் வழங்கியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் மேலும் இரண்டு பேர் தற்பொழுது புத்தளம் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

முல்லைத்தீவில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிரசேன இன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயமாகிறார். இன்று முதல் எதிர்வரும் 28 அம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பாடசாலைகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்நோக்கம், போதைப் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தௌிவுப்படுத்துவதே என்று ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமன்த கிதலவஆராச்சி குறிப்பிட்டார்.


Read more...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூட்டு விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

நேற்று மாலை ஜிந்துப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் நேற்று மாலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கொழும்பு 13 ஐச் ​சேர்ந்த 32 வயதான ஒருவர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்க 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, January 20, 2019

விடைத்தாள்கள் மீள் பரிசீலனையில் திருத்தங்கள் - ஜோசப் ஸ்டாலின்

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்யும் நடைமுறையில் திருத்தங்கள் அவசியம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவியின் விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு அண்மையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் இது புலப்படுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை, உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட தேசிய ரீதியில் நடைபெறும் பரீட்சைகளின் விடைத்தாள்களின் மீள் பரிசீலனை செயற்பாடுகளில் மாற்றங்கள் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி, தமது ஆங்கிலப் பாட பரீட்சை பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே, விடைத்தாள்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நடைமுறை முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித்த ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

Read more...

ஊடகவியலாளர்களுக்கு மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள விஷேட ஏற்பாடு

ஊடகவியலாளர்கள் தமது மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ள வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகளை செய்து தருவதற்கு தயாராகவுள்ளேன் என்று டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தெரிவித்தார். நுஜா ஊடக அமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் சாய்ந்தமருதில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ மஜீட் அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் ஏற்றுக்கொண்டு, அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதோடு ஊடகவியலாளர்களுக்கென்று நாள் ஒன்றையும் விசேடமாக ஒதுக்கித் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துதருவதாக வாக்குறுதி வழங்கினார்.

மேலும், ஊடகத்துறை சகல துறைகளுடனும் பின்னிப்பிணைந்துள்ள துறையாகும். இதனை பிரித்துப் பார்க்க முடியாது. ஊடகவியலாளர்கள் நாட்டின் அபிவிருத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும், தான் சார்ந்த இனத்தின் உரிமைக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

ஜிந்துபிட்டியில் இன்றும் துப்பாக்கி சூடு - ஒருவர் காயம். கை கால் கட்டப்பட்ட நிலையில் கொழும்பில் சடலம் மீட்பு

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு 13 இல் வசிக்கும் 34 வயதுடைய அன்ரன் மைக்கல் குரூஸ் என்பவர் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் அதற்கு இலக்கானவர் தனது மோட்டார் சைக்கிளிலேயே காயத்துடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பொலீஸார் இந்த துப்பாக்கி பிரயோகம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கொழும்பு - கொள்ளுபிட்டியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 11.45 மணியளவில் குறித்த சடலத்தை பொலீஸார் மீட்டுள்ளனர்.

கட்டில் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் அதுருகிரிய, அரங்கல பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சேனக ஶ்ரீலால் ஜயசிங்க என்பவர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more...

8000 மாணவர்களுக்கு வாய்ப்பு

கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என வௌியான தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்த கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, இந்தத் தடவை 8,000 மாணவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 வருடங்களாக, கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அண்மையில் கூறப்பட்ட செய்தியில் உண்மையில் இல்லை, மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.


Read more...

கழுதை தேய்ந்து கட்டெறுப்பான நிலையில் விக்கி! முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டோர் 20 பேர் பதவி 25 பேருக்கு!

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிவழி சென்று புதியதோர் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

தனது புதிய கட்சி ஆரம்பம் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்த விக்கினேஸ்வரன் இன்று 20.01.2019 பிரமாண்டமான ஒன்றுகூடலுடன் கட்சியின் கொள்கை விளக்கத்துடன் நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் தனக்கு வாக்களித்த அத்தனை மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த விக்கினேஸ்வரன் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளக்கூடிய மண்டபம் ஒன்றை தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

குறித்த முதலாவது ஒன்றுகூடலுக்கு சுயமாக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொண்டிருந்த விக்கினேஸ்வரனுக்கு மக்கள் சுயமாக இணைவதற்கு அப்பால் தனது வலதுகரமாக இருந்த ஐங்கரநேசனே வரமாட்டார் என்பது தெரியவந்தது.

விக்கினேஸ்வரனுடன் இணைவதாக தெரிவித்திருந்த அரசியல் கட்சிகள், பிரபலங்கள் எவரும் அற்ற நிலைலையில் வெறும் 20 பேருடன் இன்றைய கூட்டம் இடம்பெற்றுள்ளது. மண்டபங்களை எடுத்து வெறும் ஆசனங்களை காட்டினால் „கழுதை தேய்ந்து கட்டெறுப்பான நிலையில்' தான் நிற்பது தெரிந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட விக்கினேஸ்வரன் தனது வாடகை வீட்டின் வரவேற்பு அறையில், கூட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனைபேருக்கும் பெருமனதுடன் விக்கியர் பதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் கூட்டத்திற்கு சமூகமளிக்காக சுமார் ஐந்து பேருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது.

விக்கினேஸ்வரன் இன்றைய கூட்டத்தை தனது இல்லத்தில் நிகழ்த்தியதில் பார்க்கவும், தனது குருசாமியான காமச்சுவாமி பிறேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் கட்டிவைத்திருக்கும் ஆலயத்தில் நிகழ்த்தியிருந்தால் சிலநேரம் 20 மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கினேஸ்வரன் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை சரிவர நிறைவேற்றாது, வெறும் இனவாதத்தை கக்குவதன் ஊடாக மாத்திரம் அரசியலில் நிலைத்துக்கொள்ள முடியும் என்ற கணக்கில் செயற்பட்டார். அதற்கான பெறுபேறினை அவர் தற்போது பெற ஆரம்பித்துள்ளார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

விக்கினேஸ்வரனின் தமிழ் தேசியக் கூட்டணி என்ற புதிய கட்சியின் புதிய பதவிகளை பெற்றுக்கொண்டோரின் விபரம்.

கட்சியின் செயலாளர்- க.வி.விக்னேஸ்வரன்

பொருளாளரும், உபசெயலாளரும், பொருளாதார விவகாரங்களும்- பேராசிரியர் வி.சிவநாதன்

உப செயலாளர், கொள்கை பரப்பு- க.அருந்தவபாலன்

இணை உபசெயலாளர், நிர்வாகம்- எஸ்.சோமசுந்திரம் (மட்டக்களப்பு)

இணை உபசெயலாளர், நிர்வாகம்- ஆ.ஆலாலசுந்தரம் (கிளிநொச்சி)

உபசெயலாளர் மகளிர் அணி- திருமதி இளவேந்தி நிர்மலராஜன்

உப செயலாளர், இளைஞர் விவகாரங்கள் (8 மாவட்டங்கள்)- கலாநிதி என்.கார்த்திகேயன்

உபசெயலாளர், ஊடகமும், செயற்றிட்ட ஆக்கமும்- தவச்செல்வன் சிற்பரன் (தீவகம்)

உபசெயலாளர், சமூக பாதுகாப்பு- பொறியியலாளர் கெங்காதரன் (முல்லைத்தீவு)

உபசெயலாளர், கலைகலாச்சாரமும் பாரம்பரியமும் தம்பு சிவசுப்ரமணியம்

உபசெயலாளர், சட்டவிவகாரங்கள்-

மத்தியகுழுவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

தொகுதி அமைப்பாளர், பட்டிருப்பு- ஜி.கிருஸ்ணபிள்ளை

இளைஞர் அணி வட,கிழக்கு மாகாண பொறுப்பாளர்- கிருஸ்ணமேனன் (வடமராட்சி)

இளைஞர் அணி தொகுதி பொறுப்பாளர், அம்பாறை- வி.அமல்

தொகுதி அமைப்பாளர், வவுனியா- செல்லத்தம்பி சிறிதரன்

இளைஞர் அணி தொகுதி பொறுப்பாளர், மட்டக்களப்பு- புவனராஜ்

தொகுதி அமைப்பாளர், கிளிநொச்சி- அந்தோனி கபிரியேல்

தொகுதி அமைப்பாளர், மட்டக்களப்பு- எம்.உதயராஜ்

தொகுதி அமைப்பாளர், ஊர்காவற்றுறை- அன்னலிங்கம் அன்னராசா

தொகுதி அமைப்பாளர், திருகோணமலை- சிவசுப்ரமணியம் நந்தகுமார்

தொகுதி அமைப்பாளர், வடமராட்சி- இரா.மயுரதன்

தொகுதி அமைப்பாளர், மன்னார்- அன்புராஜ்

புஸ்பராசா சுமிதா

தொகுதி அமைப்பாளர், நல்லூர்- ராஜா துரைசிங்கம்

தொகுதி அமைப்பாளர், மானிப்பாய் – வி.ஞானமூர்த்தி



Read more...

சிறுபான்மை மக்களின் வாக்குகளே முக்கியம் - அசாத் சாலி

சிறுபான்மை மக்களின் வாக்குகளே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் என, ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இன்று கண்டிக்கு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். தற்போதைய சூழ்நிலையில் கட்சி ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வேற்பாளரை அறிவிக்காது, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் மாத்திரமே வெற்றிபெற முடியும்.

கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும், சோபித்த தேரரின் பெயரும் முன்னிலையில் இருந்தது. அப்போது ரணில், சோபித்த தேரரிடம் போட்டியிடக் கூடாது நான்தான் வேட்பாளர் என்றார். ஆனால் இரண்டாவது நாளில் அவர் வேட்பாளராக இல்லை. சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரை அழைத்துவந்து பொது வேட்பாளராக்கினார்கள். அதே நிலைமைதான் இப்பொழுதும் ஏற்படும்.

எதிர்த் தரப்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பமே நிலவுகின்றது. ஒருமுறை கோட்டபாய ராஜபக்ச என்கிறார்கள். பின்னர் பசில் ராஜபக்ச என்றனர், இந்த சமயத்தில் சமல் ராஜபக்ச தானே ஜனாதிபதி வேட்பாளர் என்கிறார். இவ்வாறான குழப்பங்களில் மஹிந்த ராஜபக்ச தான் யாரையும் பெயரிடவில்லை என்று கூறுகிறார். இது இவ்வாறு இருக்க குமார வெல்கம கூறுகிறார், தான் மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்று. இது அவர்களுடைய தனிப்பட்ட விடயம். ஆனால் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொது வேட்பாளர் ஒருவரே நிறுத்தப்பட வேண்டும்.

நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் மாத்திரமே, பெற்றிபெற முடியும். அத்துடன் நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் அதிகாரத்தில் சிறுபான்மையின மக்களின் வாக்குள் மிக முக்கியமானது என்றும் அசாத் சாலி கூறினார்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராட்டிய லக்ஷ்மன் கிரியெல்ல

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்ற கட்சி என்றும் அவர்கள் ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்ல என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான வழியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது எனவும், உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பினை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணி தமிழ் தேசியக் கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை இருப்பதாக கட்டுக்கதை கூறி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

Read more...

நாளை முதல் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடை!

நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உத்தியோகபூர்வ சீருடை அணிந்து, தமது சேவைகளை முன்னெடுப்பார்கள் என்று தேசிய வீதி பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் நிலமையுடன், சில முச்சக்கரவண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, சுமார் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், இந்த நடவடிக்கைக்கு சில முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை அதிகரிப்பு

இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் 1500 ரூபா உதவித் தொகையை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள சுமார் 6000 மாணவர்கள் இந்த உதவித் தொகையை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

சம்பள முரண்பாடு காரணமாக இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர்கள் இம்மாதம் 24 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடப் போவதாக இலங்கை சேமிப்பு வங்கி ஊழியர் சங்க செயலாளர் தர்ஷன பிரேமலால் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று வருடத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம், அதிகரிக்கப்படாமையை அடிப்படையாக வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

பெண் தலைமைத்துவத்தை பெண்களே ஆதரிப்பதில்லையே!-மதினி நெல்சன்

தான் அரசிலுக்குள் பிரவேசித்த நேரம் மிக இக்கட்டானதொரு காலப்பகுதி எனக் கூறும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் உப தவிசாளரும் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான மதினி நெல்சன், அது ஆண்களே அரசியலுக்குள் நுழைய அச்சப்பட்ட காலம் என்கிறார். தினகரன் வார மஞ்சரிக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு.

கேள்வி - உங்களைப் பற்றியும் உங்கள் அரசியல் பிரவேசம் குறித்தும் கூறுவீர்களா?

பதில் - நான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் இருந்தேன். அதன் பின்னர் முகாம்களுக்குச் சென்று மீள்குடியேற்றமாக யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறினேன். இக் காலப் பகுதியில் பெண்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தேன்.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட பெண்கள் மீதான அடக்குமுறைகள் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காலப் பகுதியில் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாத தேவையாக இருந்தது.

அதன் பிரகாரம் பெண்களின்உணர்வுகள் பெண்களின் குரலாலேயே சொல்லப்பட வேண்டுமென்பதற்காக பெண் தலைமைத்துவத்தை வலியுறுத்தி பல போராட்டங்கள் எங்களால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு பெண்களுக்காகவும் சமூகத்திற்காகவும் செயற்பட்டு வந்த நிலையில் அரசியலில் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகச் செயற்பட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து இம் முறையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன்.

கேள்வி - அரசியல் பிரவேசத்தின் போதும் அரசியலுக்குள் நுழைந்த பின்னரும் பெண் உறுப்பினராக நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்நோக்கியிருந்தீர்கள்?

பதில் - நான் அரசியலுக்குள் பிரவேசித்த நேரம் மிக இக்கட்டானதொரு காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் அரசியலக்கு வருவதற்கு ஆண்களே அச்சம் கொண்டிருந்தனர்.

ஆனாலும் அந்தக் காலப்பகுதியில் அரசியலுக்கு வந்த நான் பல அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

இப்பொழுதுபோல தேர்தல் களங்களில் பிரசாரங்கள் செய்கின்ற நிலைமை அப்பொழுது இருக்கவில்லை. சாதாரணமானதொரு பொக்கற் கலண்டரைக் கூட யாரும் வாங்கி வைத்திருக்க கூடிய நிலைமையும் இல்லை.

அந்தக் காலப் பகுதியிலும் மக்கள் தங்கள் வாக்குகளை மானசீகமாக வழங்கியிருந்தார்கள். ஆனால் எந்தவொரு எழுச்சியும் அத் தேர்தல் காலப் பகுதியில் இல்லை. அதே நேரம் தேர்தலில் போட்டியிடும் எங்களுக்கு பாரிய அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் இருந்தன. அதே நேரம் கூட்டமைப்பில் போட்டியிடுவதென்பது கூட அந்த நேரத்தில் பெரிய சவாலானதொரு விடயம் தான்.

கேள்வி -இத்தனை சவால்களையும் தாண்டி எவ்வாறு தொடர்ந்தும் அரசியலில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளீர்கள்?

பதில் – நாங்கள் அரசியலுக்கு வந்ததே அருவருப்பாக இந்தச் சமூகம் பார்த்தது. ஆனால் இப்பொழுது சமூகத்தின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. எங்களுக்கு பக்க பலமாக இந்த சமூகம் இருப்பதை உணர்கிறேன்.

ஆனாலும் அரசியலில் அந்தந்த இடங்களில் பெண்களை கொண்டு வந்து விட்டாலும் பெண்களின் கைகளில் அரசியல் அதிகாரங்கள் செல்லுமானால் சில நேரம் அது தங்களுக்கு எதிர்மறையாக செயல்படலாம் என்ற பயமும், அரசியலில் தொடர்ந்தும் தங்களைத் தக்க வைக்க நினைப்பவர்களின் சிந்தனைகளிலும் உள்ளது.

ஆனாலும் அவ்வாறான மனநிலை ஆண்களிடத்தே இருக்கலாம் என்பது பெண்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதனை நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக அல்லாமல் எல்லாப் பெண்களின் கருத்தாகவே நினைக்கிறேன். பெண்களிடம் அதிகாரங்களை வழங்கி அவர்களைத் தக்க வைப்பதால் தங்களின் வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம் அல்லது மறைக்கப்பட்டு தங்களின் திட்டங்கள் எதிர்காலத்தில நிறைவேற்றப்படாமல் போகலாம் என்ற எண்ணம் ஆண்களிடம் இருக்கலாம்.

மேலும் கட்சிகளின் எல்லைக்குள் பெண்களின் வகிபாகம் குறைவாகவே உள்ளது. தீரமானம் எடுக்கும் இடங்களில் பெண்கள் இல்லை.

கேள்வி - இவ்வாறான நிலைமகள் இருக்கின்ற போது எதிர்காலத்தில் பெண்களை அரசயிலுக்குள் கொண்டு வருவதற்கு விரும்புகிறீர்களா?

பதில் – கட்சிகளை விட பல தனியார் நிறுவனங்கள் பெண்களை வளப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன. அவர்கள் சக்தி மிக்கவர்களாகவும், தகுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதில் அரசசார்பற்ற நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.

அவ்வாறு பயிற்றப்பட்ட பல பெண்கள் வெளியில் வந்துள்ளனர். அவர்கள் தற்போது அரசியலில் இல்லாவிட்டாலும் கூட எதிர்காலத்தில் அரசிலுக்கு வரத் தயாராக இருக்கின்றனர். அப்படி எங்களுடைய அனுபவங்கள், அவமானங்கள், இழப்புக்கள் ஊடாக எப்படி நாங்கள் வளர்ந்து வருகின்றோம் என்பதை அவர்களிடத்தே பகிர்ந்து வருகின்றோம்.

அரசியலுக்கு பெண்கள் வருவது இப்போது சவாலான விஷயம் இல்லை. என்றே கூறகூடியதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் அந்தளவிற்கு தயார் நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் கட்சிகள் அவர்களை உள்வாங்குவதில்லைதான் ஆனாலும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் கட்டாயம் அரசியலில் பெண்களின் வகிபாகம் முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக தொடர்ந்து நாங்கள் உழைக்கின்றோம்.

கேள்வி – பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில் - வாக்காளர் விகிதம் என்று பார்க்கின்ற போது 52வீதமான வாக்காளர்களாக பெண்களாகவே இருக்கின்றனர். ஆகையினால் நாங்கள் முதலாவதாக விடுகின்ற பிழை என்னவெனில் ஒரு பெண்னுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை வெல்ல வைப்பதற்கு தவறுகின்றோம். ஆகவே அவர்களை வெல்ல வைப்பதே முக்கியமானது.

இப்ப பெண்களுக்கு ஒதுக்கீடு என்று உள்ளது. ஆனால் அந்த ஒதுக்கீட்டை நாங்கள் விரும்பவில்லை. நாங்களும் சரி சமனாக எல்லாத் தகுதிகளுடனும் தான் இந்த நாட்டில் இருக்கிறோம். ஆகையினால் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த ஒதுக்கிடு என்றதொரு கேள்வி எழுகிறது.

ஆனால் பெண்கள் இங்கு பிழை விடுகின்றனர். அவர்கள் சிந்தனையில் பதிந்துள்ளது. அரசியல் என்பது ஆண்களுக்கானது என்று தான். எனவே பெண்கள் அரசியலுக்கு வந்தால் எமது சமூகம் வேறு விதமாகப் பார்க்கும் என்று பெண்கள் கருதி, ஒதுங்கிக் கொள்ள முயல்கிறார்கள். அவ்வாறு தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு கொடுத்த வாய்ப்பை அவர்களும் சரியாகப் பயன்படுத்தவில்லை. பெண்கள் விடத்தில் கட்சிகளும் சரியானதொரு முடிவை எடுக்கவில்லை. அதே நேரம் வேட்பாளராக நிறுத்தப்படும் பெண்களுக்கு பெண்களே ஆதரவு தரவும் இல்லை. அது கட்சிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகப் போய்விட்டது.

அதாவது நிறுத்தப்பட்ட பெண்களுக்கு பெண்களே ஆதரவு தராத நிலையில் நிறுத்துங்கள் என்று எப்படிக் கட்சிகளிடம் கேட்பது?

நாங்கள் விடுகின்ற முதலாவது பிழை தலைமைத்துவத்தை வளர்த்துவிடுவதில் அக்கறையின்றி இருப்பதுதான். இறக்கும் வரைக்கும் நாங்கள் தலைலைவர்களாக இருக்க விரும்புகின்றோமே தவிர அடுத்த தலைமையை வளர்த்துவிடுவதில்லை. அதனால் தொடர்ந்து ஒருவரே இருப்பதை விட ஏனையோருக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இதனை பெண்களாவது கொண்டு வர வேண்டும். அந்தப் பதவிகளில் தொடர்ந்து இருப்பதை விட வேறு வேறு ஆட்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும

கேள்வி – பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்கள் செயற்பட்டு வருவதாக அறிகிறோம்.....

பதில் - எமது நாட்டில் பாலியல் வன்முறைகள் வயது வேறுபாடற்ற செயற்பாடாக இருக்கிறது. கற்றலுக்கு மட்டும் தான் வயசில்லை என்று ஒரு காலத்தில் கூறினார்கள். இருந்தாலும் இந்தக் காலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் தான் வயசில்லை என்ற நிலைமை காணப்படுகிறது. அது சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.

இங்குள்ள அமைப்புக்கள் மற்றும் தெற்கிலுள்ளவர்களுடன் இணைந்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்தாக இல்லை.

பெண்கள் அமைப்புக்களினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படுத்தி வருகின்றோம்.

கேள்வி–உங்களது சபையின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது. எத்தகைய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்?

பதில் - அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட எமது சபை அனைவரையும் இணைத்துப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயற்படுத்த தயாராக உள்ளோம்.

கேள்வி – சபையின் கழிவகற்றல் செயற்பாடு எவ்வாறு உள்ளது.

பதில் - மிக குறுகிய எல்லைப் பகுதியே எமது நகர சபைக்கு உள்ளன?. அதனால் கழிவகற்றலை மேற்கொள்வதில் பாரிய சவால்கள் உள்ளன. இன்றைக்கு எமக்கிருக்கின்ற நாளாந்த பிரச்சினை என்றால் கழிவகற்றல் தான். நகரை அண்டிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். அத்தகைய சவால்களைத் தாண்டியே செயற்பட்டு வருகின்றோம்.

Read more...

யாழ் கடையொன்றுக்குள் புகுந்த கும்பல், மூர்க்கத்தனமாக தாக்குதல் - யாழில் பதற்றம்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றினுள் நுழைந்த 20 பேர் அடங்கிய கும்பலொன்று அங்கு மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் மேற்கொண்ட தரப்பினர் அந்த நகை கடையில், நகை ஒன்றினை செய்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தபடி நகையை செய்தாலும், அதன் நிறை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர், அதற்கு தகுந்தாற் போல் பணம் அறவிட்டுள்ளார்.

இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் நகை கடை உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் வந்த போதிலும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து விரைந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பினர்களின் கார் ஒன்று, அந்த பகுதியில் தரித்து நிற்பதாக  தெரிய  வருகிறது.

இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சகல மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்செய்கையை, படைப்புழுக்கள் ஆக்கிரமித்து விட்டன. - விவசாய திணைக்களம்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்செய்கையை, படைப்புழுக்கள் ஆக்கிரமித்துள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

81 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுக்கள் சூழ்ந்துள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த படைப்புழுக்களிடம் இருந்து சோளப்பயிரை காக்க எம்மோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுர விஜேதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல் தடவையாக அனுராதபுரம் மாவட்டத்திலேயே, இந்த படைப்புழுக்கள் கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதமளவில் ஆக்கிரமித்திருத்ததாக குறிப்பிட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுர விஜேதுங்க, பின்னர் மட்டக்களப்பு,பொலன்னறுவை, மொனராகலை முதலான மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் இந்த படைப்புழுக்களின் தாக்கம் தற்போது நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாக அவர்  கூறியுள்ளார்.

இதேவேளை சொல்பயிர்செய்கையை பாதித்துள்ள இந்த படைப்புழுக்கள், தற்போது குரக்கன், மரக்கறி உள்ளிட்ட 100 பரவிச் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து பயிற்செய்கையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, விவசாய திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Read more...

அறுவரை காவு கொண்டது, கோர விபத்து! - வென்னப்புவ காவல்துறையினர்.

இன்று அதிகாலை 03.15 அளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில், அறுவர் உயிரிழந்துள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வென்னப்புவ – நைனாமடம பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டனர்.

கார் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரில், இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்,  வென்னப்புவ காவல் துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை மத்திய வங்கியின் செய்தி என, மின்னஞ்சல் மூலமாக வரும் தரவுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் -மத்திய வங்கி எச்சரிக்கை

நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து போலியான பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தம்மை இலங்கை மத்திய வங்கி என அடையாளப்படுத்தி, மின்னஞ்சல் மூலமாக இவ்வாறான போலியான பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக, பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த மின்னஞ்சல் தரவுகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மத்திய வங்கி, பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

''நோட்ஸ் ப்ரோம் சென்ட்ரல் பேங்க் ஒப் ஈ.பி.எப்'' என்ற தொனிப்பொருளில், நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து, இந்த போலியான பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு  வந்துள்ளதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி அறிவித்த பின்னரே, நாம் அறிவிப்போம் - மஹிந்த ராஜபக்ச.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பின்  வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை கூறினார்.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களான, சமல் ராஜபக்ஷவும், கோத்தாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தமது நிலைப்பாட்டை அறிவித்துளார்.

நாங்கள் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யாது காத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக் கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் எமது வேட்பாளர் யாரென்பதை அறிவிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நடக்குமா? நடக்காதா? என சாஸ்திரம் பார்ப்பதை கைவிட்டு, புதிய அரசியலமைப்புக்காக, முழு மூச்சாக செயல்படுங்கள் - சுமந்திரன்.

முழு மூச்சாக செயல்பட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதே சாலச் சிறந்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் நிலவுவதாக, அரச கரும மொழிகள், மற்றும் இந்து சமய  விவகார அமைச்சர் மனோ கணேசன் நேற்று கூறியிருந்தமை தொடர்பில், கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

புதிய அரசியலமைப்பிற்கு அங்கே எதிர்ப்பு, இங்கே எதிர்ப்பு, அது நடக்குமா? நடக்காதா? என்று சாஸ்திரம் பார்க்காது, அதனை அடைய முழு மூச்சாக செயற்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருக்கின்ற எதிர்ப்பு என்று அமைச்சர் மனோ கணேசன் கூறுவது, வீணாக அரசியல் அமைப்பை தலையில் சுமந்து கொண்டு தேர்தலில் தோற்று விடுவோமோ? என்ற ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் பயமே என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com