Saturday, January 19, 2019

ஆபத்தான நபர்! கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்

கனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார் வீடொன்றில் மேற்கொண்ட தேடுதலில் கொக்கைன் ரக போதைப்பொருள், 10000 கனடிய டொலர்கள் மற்றும் இரு துப்பாக்கிகள் (குண்டுகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில்) என்பவற்றை மீட்டுள்ளனர்.

இதையடுத்து ஜொனார்தன் தங்கராசா என்ற 32 வயது நபருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜொனார்த்தன் CDZJ357 என்ற ஒன்ராரியோ இலக்க தகடு கொண்ட சாம்பல் நிற Lexus RX5 SUV வாகனம் ஒன்றை பயன்படுத்துவதாக அறிவித்துள்ள பொலிஸார், இவர் ஆயுதம் தரித்திருக்கக்கூடிய ஆபத்தான நபர் என்றும் இவரை கண்டாலோ அன்றில் அவரது இருப்பிடம் தெரிந்தாலோ நெருங்கவேண்டாம் என்றும் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களை வேண்டியுள்ளனர்.

ஜொனார்த்தன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்ற விசாரணை அலுவலகத்தின் 21 பிரிவிற்கு (905) 453–2121 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து அதன் ext. 2133 இற்கு தகவல் வழங்கலாம்.

அநாமதேயமாக தகவல் வழங்க விரும்புவோர் பீல் குற்றத்தடுப்பு பிரிவினரை 1-800-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு தகவலை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Anyone with information on the whereabouts of Thangarajah is asked to call investigators at the 21 Division Criminal Investigation Bureau at (905) 453–2121, ext. 2133. Information may also be left anonymously by calling Peel Crime Stoppers at 1-800-222-TIPS (8477), or by visiting www.peelcrimestoppers.ca.


Read more...

மட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை

புலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படையெடுத்தது. இப்படையெடுப்பின்போது வடக்குப்புலிகள் கிழக்குப்புலிகள் மீது அகோர தாக்குதல்களை மேற்கொண்டு மனித உரிமைகளை மீறியுள்ளதாக அத்தருணத்தில் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அந்த கொடிய யுத்தத்தில் ஒரு முன்னணிப் போராளியாக இருந்த பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், தமது தரப்பிலிருந்து வன்னிப்புலிகளிடம் சரணடைந்த தமது போராளிகள் 63 பேரை பொட்டு அம்மானின் உத்தரவின்படி நிற்கவைத்து சுட்டுக்கொன்றதாக „வேட்கை" என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

„இயக்க பிளவின்பின்னர் பிரிந்து சென்று பின்னர் மீண்டும் தம்மிடம் சரணடைந்த பலரை கொன்று குவித்தனர். எஞ்சிய பலரை கைதியாக்கியும் வைத்திருந்தனர். பொட்டம்மான் மட்டக்களப்புக்கு வந்து திரும்பும் போது அவர்களை துரோகிகள் என்று சுட்டுக்கொல்ல கட்டளை இட்டார். அதற்கிணங்க 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார்கள். இவ்வாறு எத்தனையோ பாவங்கள் நடந்தேறின.'

பக்கம் 95 இலிருந்து 98 வரை

எண்ணற்ற கடல் வளம், சுமார் பத்தாயிரம் சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பரப்பை கொண்ட இயற்கை வளங்கள் நிறைந்த பூமி, ஏரிகள். குளங்கள், ஆறுகள் என்று என்ன வளம் இங்கில்லை? ஆனால் ஏன் ஏழ்மை நிறைந்த மாகாணமாக நாம் இருக்கின்றோம்?

எமது உரிமைக்கான போராட்டம் யாருடனானது? எமது எதிரி யார்? என்பதிலெல்லாம் எமக்கு மென்மேலும் தெளிவுகள் தேவை. இவை பற்றிய தெளிவூட்டல்கள் அவசியம். எமது மாகாணத்தின் எதிர்கால பொருளாதார மீட்சிக்கு நாம் என்ன செய்ய போகின்றோம்? எத்தகைய வேலைத்திட்டங்களை நாம் வகுத்து கொண்டு முன்னேற வேண்டும்? என்கின்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.

இதற்காகத்தான் பல்துறை அறிவுகள் அவசியம். குறிப்பாக வரலாறு முக்கியமானதொன்றாகும். இந்த மண்ணில் வரலாற்றை தெரியாதவர்கள் இந்த மக்களோடு மக்களாக வாழாதவர்கள்இ எமது மக்களின் இன்ப துன்பங்களை அறியாதவர்கள் எமது அரசியலை தீர்மானிக்க முடியாது. இந்த மண்ணின் மைந்தர்கள்தான் இந்த மண்ணின் அரசியல் போக்கை தீர்மானிப்பவர்களாக இருக்கமுடியும்இ இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் அரசியல் பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டே எமது அரசியல் கொள்கைகளும் கோட்பாடுகளும்இ திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் என்ன நடந்தது? கடந்த காலங்களில் ஏன் இங்கு சகோதர யுத்தம் மிக கொடியதாக இருந்தது? எமது சொந்த வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அரங்கேற்றிய படுகொலைகள் மன்னிக்க முடியாதன. அதனை எமது சமூகம் மறந்து விடக்கூடாது.

போராட்ட இயக்கங்கள் முப்பதுக்கு மேல் இருந்தன. அதில் சிலவே மக்கள் மத்தியில் முன்னனியில் இருந்தன. அதிலும் எல்.ரி.ரி.ஈ அமைப்பு முன்னனி இயக்கமாகியது. அந்த அமைப்பு எப்படியும் ஈழத்தை பெற்றுத் தந்துவிடும் என நாமும் நம்பியிருந்ததுண்டு. ஆனால் அந்த அமைப்பே கிழக்கு மாகாணத்தை தனது சப்பாத்து கால்களுக்கு கீழ் வைத்திருக்க எண்ணியது.

தமிழ் இனத்தின் பெயரால் உருவாகி அரசியல் செய்து வந்த கட்சிகளுக்கு சுமார் நூறாண்டு கால வரலாறுண்டு. அது தமிழ் காங்கிரஸாக, தமிழரசு கட்சியாக, தமிழர் விடுதலை கூட்டணியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ் மக்கள் பேரவையாக எந்த வடிவம் எடுத்தாலும் தலைமையில் மட்டும் எவ்வித மாற்றமும் வராது. தப்பித்தவறியும் கிழக்கில் இருந்து ஆமாம் சாமிகளைத்தவிர ஒரு தலைவரும் உருவாக முடியாது.

மேற்குறிப்பிட்ட முப்பதுக்கு மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புக்களில் ஒன்று கூட கிழக்கில் இருந்து உருவாகவில்லை. அதாவது கிழக்கு தலைமைகளை கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் பெயரால் உருவான எல்லாவித கட்சிகளும் இயக்கங்களும் வடக்கிலே முளைவிட்டு கிளை பரப்பியவைதான். அனைத்துமே வடக்கு மேட்டுக்குடிகளின் கல்வி, மொழி பிரச்சனைகளில் இருந்து உருவானவைதான்.

ஆனால் 2004ஆம் ஆண்டு உருவாகிய புலிகள் இயக்கத்தின் பிளவுதான் அந்த வரலாற்றையும் எழுதாத விதியையும் மாற்றியமைத்தது.

புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவரது அழைப்பை ஏற்று வட பகுதி சென்று கிழக்கு மாகாண இளைஞர்கள் ஏராளமானோர் வீர மரணம் அடைந்தார்கள். 7000க்கு மேல் எவ்வளவோ இளைஞர்களையும் யுவதிகளையும் ஈன்று அனுப்பி விட்ட மண் எமது மண்.

வடபகுதி இளைஞர் யுவதிகள் லட்ஷ லட்ஷமாக நாட்டை விட்டு ஓடிச்செல்ல அந்த மண்ணை காத்தது கிழக்கு மாகாணத்து வீரர்கள் சிந்திய இரத்தமே ஆகும்.

இந்த நிலையில் இப்படையெடுப்பு சரியானதா?

எத்தகைய வரலாற்று தவறிது?

கிழக்கை உதாசீனம் செய்து விட்டு ஈழம் அல்லது அரசியல் தீர்வு சாத்தியமா என்பது பற்றி ஏன் பிரபாகரனால் சிந்திக்க முடியாது போனது? ஒரு முறைதானும் கிழக்கு மண்ணில் காலடி பட்டறியாத பல தளபதிகளை அனுப்பி எம்மீது கொலைகளை கட்டவிழ்த்து விடும் துணிச்சல் எப்படி வந்தது? எம்மை கேவலப்படுத்தி வெருகல் ஆற்றினை இரத்தத்தில் சிவக்க செய்த பாவச் செயலை எப்படி இந்த மண் மன்னிக்க முடியும்?

பிரபாகரனின் ஊடகங்களும் அரசியல் பிரிவும் துரோகிகள் என்றும் உள்வீட்டு விடயம் என்றும் கொலைகளுக்கு நியாயம் கற்பித்தார்கள். நோர்வே தலைமையிலான சமாதான செயலகம் பெட்டி படுக்கைகளுடன் கிழக்கிலிருந்து வெளியேறி விட்டதாக அறிக்கை விட்டிருந்தது. இந்த அநியாயத்தை பார்த்த அப்பாவி வாகரை மக்களும் இறந்த போராளிகளின் குடும்பங்களும் காயப்பட்ட போராளிகளும் வேறு வழியேதுமின்றி கூனிக்குறுகி இராணுவத்தினரிடம் சென்று நாங்கள் வீட்டுக்கு போக உதவுங்கள் என கெஞ்சினார்கள்.

அது இழிநிலையென்றால் அந்த இழிநிலைக்கு எம்மை தள்ளியது யார்? இதை என்னவென்று நியாயப்படுத்துவது?

மன்னிப்பது கடினமானது, மறப்பதோ முடியாதது.

இயக்க பிளவின்பின்னர் பிரிந்து சென்று பின்னர் மீண்டும் தம்மிடம் சரணடைந்த பலரை கொன்று குவித்தனர். எஞ்சிய பலரை கைதியாக்கியும் வைத்திருந்தனர். பொட்டம்மான் மட்டக்களப்புக்கு வந்து திரும்பும் போது அவர்களை துரோகிகள் என்று சுட்டுக்கொல்ல கட்டளை இட்டார். அதற்கிணங்க 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார்கள். இவ்வாறு எத்தனையோ பாவங்கள் நடந்தேறின.

அவர் வன்னி செல்லும் போது இங்கிருந்த போராளிகளிடம் கருணா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. மக்களையும் போராளிகளையும் எம்மீது விசுவாசம் காட்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இங்குள்ளவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

இதற்கு முன்னர் இந்த மட்டக்களப்பானுக்கு இப்படி உரைக்க வேண்டிய தேவை யாருக்கும் இருக்கவில்லை. கிழக்கு போராளிகளை இழந்த பின்னர் இவர்களெல்லாம் எப்படி வெற்று கோம்பைகளாக இருந்தார்கள் என்பதை நாமறிவோம்.

"ஓர் கூர் வாளின் நிழலில்" என்ற புத்தகத்தினை எழுதிய தமிழினி இறுதி போரின் கடைசி நாட்களில் பொட்டு அம்மானிடம் இருந்த கொஞ்ச மரியாதையையும் இழந்துவிட்ட சந்தர்ப்பத்தை அழகாக விபரித்திருந்தார்.

முக்கிய தளபதிகளுக்கான இறுதி கூட்டத்தில் "இனி எதுவும் அதிசயம் நடந்தாலே தவிர எனது கையில் ஒன்றுமில்லை" என்று கைவிரித்தாராம்.

அதே வேளை தமிழினி இறுதியில் எல்லாம் இழந்து ஆமியிடம் சரணடைந்த போது, "2004ஆம் ஆண்டில் துரோகிகளாக்கப்பட்டு இராணுவத்திடம் சரணடைந்த மட்டக்களப்பு போராளிகள் மனநிலை எப்படி இருந்திருக்குமோ அப்படியே எமக்கும் இருந்தது "என்று சொல்லியிருந்தார்.(ஓர் கூர் வாளின் நிழலில் பக்கம்-124,125)

ஆனால் ஒரு வித்தியாசம் சண்டையில் தோல்வி கண்டு வேறு வழியின்றி பொது எதிரியிடம் சரணடைந்தவர்கள் அல்ல நாம். எமது தலைவர்ககளால் அமைப்பால் துரத்தியடிக்கப்பட்டு பொது எதிரியிடம் சரணடைய வைக்கப்பட்டவர்கள் நாங்கள்.

Read more...

பெப் 4 க்குள் ஞானசார தேரர் விடுதலை - துமிந்த

கலகொட அத்தே ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்ல, அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுவிப்பதில்,  எவ்வித தவறும் இல்லை. அவர் நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்தவர். ஆகவே சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரரை விடுவிக்கும்படி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாரிய இன மோதல்களுக்கு பின்னணிக் காரணியாக செயற்பட்டவர் யார் என்பதை இந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, புத்தி சுவாதீனமுள்ள அனைவரும் அறிந்து வைத்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

Read more...

7 கடைகள் தீக்கிரை - காரணம் ?

இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் பொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில், 7 கடைகள் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வெளிநாடுகளில் 10 இலங்கை மீனவர்கள் கைது

வௌிநாடுகளில் இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கம் தெரிவித்துள்ளது. கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக சேதமடைந்த இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெருமளவான இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீள நாட்டிற்கு வரவழைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்தார்.

Read more...

ஒன்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு சாத்தியம் - பிரதமர்

ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என்று கூறியதை போன்றே நானும் ஒன்றையாட்சி என்றே கூறுகிறேன். ஆகவே ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யக்கலமுல்ல – கராகொட பூர்வாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் மேற்படி தெரிவித்தார். அரசியலமைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த ஒரு அரசியலமைப்பினையும் தயாரிக்கவில்லை. அரசியலமைப்பு வரைபையே தயாரித்துள்ளோம்.

ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என்று கூறியதை போன்றே நானும் ஒற்றையாட்சி என்றே கூறுகின்றேன் என்று கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு செல்ல எம்மால் முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தை அடுத்து கிடைக்கவுள்ள மற்றுமொரு நன்மை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயத்தை அடுத்து, நாட்டின் அபிவிருத்திக்கான முக்கிய ஒப்பந்தங்கள் பல கைச்சாத்தானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்குவதக்கு நாட்டுக்கு குழுவொன்றை அனுப்ப பிலிப்பைன்ஸ் உடன்பட்டுள்ளது.

விஜயத்தின் இறுதி நாளான இன்று ஜனாதிபதி அந்நாட்டின் பொலிஸ் தலைமையக்கத்திற்கும், போதை பொருள் ஒழிப்பு பிரிவிற்கும் சென்று அங்குள்ள செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தினார். அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இதன்போது பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கான சிறந்த யுத்தம் ஒன்றை தனது தலைமையில் இலங்கையில் முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.

பூகோள முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைய பெற்றமையால் போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு இலங்கை சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நட்பு நாடுகளின் உதவியை போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அழைப்பு விடுத்தார்.

சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்டிக்கோ டுடேர்டெவை பாராட்டிய ஜனாதிபதி, அவரது இந்த சேவையை பாராட்டும் முகமாகவே தான் பிலிப்பைன்ஸ் வந்ததாக தெரிவித்தார்.

உலக நாடுகள் போதை பொருள் கடத்தல் தொடர்பில் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில், அரசியல்வாதிகளை இதில் சம்மந்தம்பட்டிருப்பதனால் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது போதை பொருள் நடவடிக்கையை ஒழிப்பதில் உள்ள பாரிய பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளால் எடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கை காரணமாக பொலீசாரும், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் உயிரிழந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார்.

சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தில் வெற்றி கொள்வதற்கான முக்கிய பணியில்தான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இந்த வருடமும் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டவிரோத போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளும் பொலீசாரையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினர். இதன்போது ஜனாதிபதியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெவத்தவும் பங்கேற்றார்.


Read more...

மனைவியை குத்திவிட்டு தன்னை தானே தீ மூட்டிக்கொண்ட இராணுவச் சிப்பாய்.

மாத்தறை கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் குத்திவிட்டு தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் ஓய்வு பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர்.

42 வயதான குறித்த இராணுவச் சிப்பாய் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 37 வயதுடைய மனைவி ஆபத்தான நிலையில் கம்புறுப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய காதல் விவகாரம் ஒன்று தொடர்பான நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று பகல் 1 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபரின் குடியிருப்பின் 2ம் மாடி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த மாத்தறை நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

கம்புறப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

உத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா ? மு.காங்கிரசின் நீண்டகால போராட்டத்துக்கு என்ன நடந்தது ?

யார் நல்லது செய்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் பாராட்டுகிறோம் என்ற போர்வையில் சந்தர்ப்பம் பார்த்து தங்கள் அரசியல் எதிரிகளை வஞ்சகம் தீர்ப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்குமாகான ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றதன் பின்பு தனது ஆளுநர் பதவி மூலமாக கிழக்கு மாகாணத்தில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பு செய்வதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டுமென்று நான் கட்டுரை எழுதியிருந்தேன்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட மூவாயிரம் ஏக்கரில் இராணுவத்தினரிடமிருந்து 39 ஏக்கர் நிலங்கள் மட்டுமே 18.01.2019 தினத்தில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநராக பதவியேற்று இரண்டு வாரங்களும் பூர்த்தியாகாத நிலையில் இது எவ்வாறு சாத்தியமானது ?

இந்த காணி பிரச்சினையானது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல. இது தலைவர் அஸ்ரப் காலம் தொடக்கம் இருந்துவருகின்றது.

அன்றைய தலைவர் தொடக்கம் இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் வரைக்கும் முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பு விடயத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளும், கோரிக்கைகளும், அழுத்தங்களும் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது.

ரவுப் ஹக்கீமினால் குறித்த பிரச்சினைக்குரிய பிரதேசங்களுக்கு காணி அதிகாரிகளை அழைத்துச் சென்று காண்பித்த விடயங்களையும் நாம் தொலைகாட்சி வாயிலாக பல தடவைகள் கண்டிருக்கின்றோம்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இராணுவத்தினரை சாட்டிவிட்டு காலம் கடத்தி வந்தார்களே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான முன்வரவில்லை. இது ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.

கிழக்கு மாகான முஸ்லிம்கள் காலாதிகாலமாக இரண்டு சிங்கள பெருந் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு வழங்கி வந்தார்கள். முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்தின் பின்பு அந்த ஆதரவு தளம் முற்றாக வீழ்ச்சியடைந்தது.

முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்துவிட்டு மீண்டும் தங்களது ஆதரவு தளத்தினை கிழக்கில் எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்றே இரு தேசிய கட்சிகளும் சிந்திக்கின்றன.

இதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேரினவாத தலைவர்கள் விரும்புவதில்லை.,

இன்று சுதந்திர கட்சியின் தலைவர் பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கின்ற நிலையில், அக்கட்சியின் கிழக்கு மாகான முகவரான ஹிஸ்புல்லாஹ் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரத்தைக்கொண்டு இந்த காணிகள் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் வழமைபோன்று மு.கா தலைவர் செய்யாததனை ஹிஸ்புல்லாஹ் செய்துள்ளார் என்று போலியாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த விவகாரத்தில் மு.கா தலைவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது மு.கா தலைவர் பல வருடகாலமாக இந்த காணி விடுவிப்புக்கான போராட்டங்களும், அழுத்தங்களும் வழங்காது இருந்திருந்தால் இந்த வெறும் பன்னிரண்டு நாட்களுக்குள் இது சாத்தியப்பட்டிருக்குமா ?

பனம்பழத்தில் காகம் குந்த, பழம் விழுந்ததுபோன்று தெரியவில்லையா ?

எப்போதாவது முஸ்லிம் காங்கிரசிடம் காணி அதிகாரம் இருந்ததா ? ஆளுநர் பதவி மு.கா வசம் இருந்ததா ? அல்லது மு.கா தலைவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தாரா ?

இந்த நாட்டில் யார் எந்த பதவிகளை வகித்தாலும் உரிமையில்லாத சமூகமாகிய நாங்கள் சிங்கள அதிகாரிகளின் மனம் விருப்பமின்றி எதுவும் செய்ய முடியாது.

அதனால் ஹிஸ்புல்லாஹ் கட்டளையிட்டார் காணிகள் உடனே விடுவிக்கப்பட்டது என்பது அறிவுக்கு அப்பால்பட்ட விடயமாகும்.

எனவே அம்பாறை மாவட்டத்தின் மூவாயிரம் ஏக்கர் காணிகளில் 39 ஏக்கரை விடுவிக்க துணைபுரிந்த ஆளுநரை பாராட்டுவதோடு, மிகுதி 2961 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற பாரிய உதவியாகும்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது


Read more...

எனக்கும் லஞ்சம் கொடுக்க எத்தனித்தனர், எனினும் அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை - ஹரின் பெர்னாண்டோ .

தனக்கும் இலஞ்சம் கொடுத்து, இலங்கை கிரிக்கெட் அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறினார்.

இலங்கை அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கு இலஞ்சம் தருவதாக என்னை அணுகியிருந்தார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலுக்கு அறிவித்தேன். அவர் உடனே தலையில் கையை வைத்துக் கொண்டார்.

இவ்வாறு என்னிடம் கேட்ட போது நானும் தலையில் கை வைத்தேன். அப்போது தான் என்னையும் இந்த சதியில் சிக்கவைப்பதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என நினைத்தேன். அதன் பிறகுதான் எண்ணினேன் இதற்கு முன்னரும் இவ்வாறு தான் நடந்திருக்கும்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கே இலஞ்சம் வழங்க முற்பட்டமை ஊடாக, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் எந்தளவிற்கு ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணர முடிகின்றது.

இதேநேரம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் பல தகவல்களை ஐ.சி.சி இன் அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதேபோன்று, எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் இவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுகின்ற வீரர்களுக்கு தண்டணை வழங்குவதற்கான புதிய சட்டமூலமொன்றை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.

அத்துடன், கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரத்தில் கிரிக்கெட் யாப்பை மாற்றுவதற்கான குழுவொன்றையும் நியமித்து அதையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளேன்.

இதேவேளை, இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், உண்மையில் ரொஷான் மஹானாம தலைமையில் இடைக்கால நிர்வாக சபையை நியமிக்கவே எண்ணியிருந்தேன்.

எனினும் ஐ.சி.சி இதற்கு அனுமதி வழங்காத காரணத்தால் அந்த எண்ணத்தை கைவிட்டதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

Read more...

புதிய அரசியல் அமைப்பு குறித்து, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு - வெளிக்கொண்டுவந்த மனோ.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள அரசியல் அமைப்புக்கு எதிராக மஹிந்த அணி மாத்திரமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பல முரண்பாடுகள் வலுபெற்றுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்து இன்றைய தினம் கருத்து வெளியிட்ட போதே, அமைச்சார் மனோ கணேசன் இதனை கூறினார்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியை ஆரம்பித்த போது ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய மூன்று பிரதான இலக்குகளை தீர்மானித்த போதும், காலப் போக்கில், அரசியல் தீர்வை தள்ளி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச அணியில் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும், எதிர்ப்பு வலுப்பதாகவும் தெரிவித்த அவர், இப்போது புதிய அரசியலமைப்பு வரும் சாத்தியம் அருகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னரே, புதிய அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்று தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே உரிமைகளுக்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதற்கு நாம் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.

இதை உணர்ந்து செயற்படத் தயாராகும் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தமிழ் முற்போக்குக் கூட்டணி இப்போதே தயார் நிலையில் உள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கொலை சதித்திட்ட சம்பவம் குறித்த குரல் பதிவு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் - அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெறப்பட்ட குரல் பதிவு தொடர்பான அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக, அரச ரசாயன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அடுத்த மூன்றுவார காலத்துக்குள் பெறப்பட்ட குரல் பதிவை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குரல் பதிவின் பகுப்பாய்வு தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அரச ரசாயன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவினால் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் சில கடந்த தினங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த குரல் பதிவுகளில் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் குரல் பதிவும் உள்ளதா? என்பது குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக அவர் அண்மையில் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, அவரிடம் பெறப்பட்ட குரல்பதிவு தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கைகளை, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையில் விமான நோயாளர் காவுகை வாகன சேவையை ஆரம்பிக்க, தீர்மானம் - ராஜித்த சேனாரத்ன.

இலங்கையில் நோயாளர் காவுகை வாகன சேவையை விரைவில் முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை கூறினார்.
இலங்கையில் விமான நோயாளர் காவுகை வாகன சேவையொன்றை, ஆரமிப்பதன் மூலம் மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாட்டின் பெருமளவான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், நோயாளர்களுக்கு துரித கதியில் சேவைகளை வழங்கும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்

இந்த திட்டத்தின் பிரகாரம், அதி நவீன வசதிகளுடன் கூடிய 140 விமான நோயாளர் காவுகை வாகனங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்

இந்த சேவையின் மூலம் மக்களுக்கான சிறந்த சேவைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்க முடியாது, சம்பிக்க ரணவக்க திட்டவட்டம்.

அரசியலமைப்பை மாற்றியமைப்பதின் முலமாக மக்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்க முடியாது என்ற உண்மையை, முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதனை கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைப்பதைப் போன்று அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் தேவைகளை அறிந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு, மக்களுக்காக சேவையாற்றுவதே சிறந்த விடயமாக இருக்கும் என, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மீண்டும் வலுக்கும் 1000 ரூபாய்க்கான போராட்டம் - தலைநகரில் பதற்றம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழுப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இளைஞர்கள் உள்ளிட்டவர்களின் பங்குபற்றுதலுடன், இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒரு வார பணிப்புறக்கணிப்பு, 1.25 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தும்! - அரசே குறுக்கிடு’, ‘தோட்ட கம்பனிகளே, தொழிற்சங்கங்களே, அரசாங்கமே 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை உறுதிசெய்!’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்திலும், நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் பொது மக்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகள் பலரால், பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்பதும், அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

எனினும் இந்த பிரச்னை குறித்து மலையக மக்களின் பிரதிநிதிகள்,தொழற்சங்கங்கள் என்பன எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மக்களின் எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும் - வேதம் ஓதும் சாத்தானாக உதயகுமார்.

மக்களுக்கு தேவையான நிதிகளையும், சலுகைகளையும் வழங்குவதோடு மட்டும் நின்று விடாது, அவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, கருத்து வெளியிட்ட போதே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார், இதனை கூறினார்.

மக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு - கிழக்கில் உள்ள பல பகுதிகளில் கல்வி, பொருளாதாரம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்,சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதேவேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வறுமை நிலையை நீக்குவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அரசாங்க அதிபர், எனினும் இந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வருவார்களாயின் அதுவே பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.

உதயகுமார் இவ்வாறு பகிரங்க மேடைகளில் பேசுகின்றபோதும், இத்தனை குறைபாடுகளுக்குமான பிரதான காரணிகளில் அரச ஊழியர்களின் அசமந்த போக்கும் அடங்குகின்றது என்பதை மறந்து விட்டார். மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அரச ஊழியர்கள் தங்களது கடமைகளை செவ்வனே பாராபட்சமின்றி செய்வார்களாயில் நாட்டிலுள்ள பிரச்சினைகளில் 90 வீதம் நிவர்த்தியாகும்.

மட்டக்களப்பு மாவட்த்தை எடுத்துக்கொண்டால் அரச நிர்வாகத்திற்கும் மக்களுக்குமிடையே பல்வேறு பிணக்குகள் உண்டு. இதற்கான நிவாரணம் தேடி உதயகுமாரிடம் மக்கள் செல்கின்றபோது, அவர் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது மக்களின் அனுபவங்களினூடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பல்வேறு ஆவனங்களை இலங்கைநெட் மிகவிரைவில் வெளியிடும் என்பதை நேயர்களுக்கு அறியத்தருகின்றோம்.


Read more...

தேர்தலை வைத்துக் கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்தும் எண்ணம், என்னிடம் இல்லை- தவராசா சூளுரை.

அடுத்து நாட்டில் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலிலோ, அல்லது மாகாண சபை தேர்தலிலோ போட்டியிட்டு அரசியல் செய்ய தமக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை என, முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து\ வெளியிட்ட போதே, தவராசா இதனை கூறினார்.

தேர்தலில் ஈடுபட்டால் உண்மைகளை மூடிக்கொண்டே அரசியல் செய்ய வேண்டுமென குறிப்பிட்ட தவராசா, அதனால் தேர்தலில் களமிறங்கி பிழைப்பு நடத்துவது தொடர்பான எண்ணமே தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் தங்களுடன் நட்புறவாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி கிடைத்த மறுநாளே தவராசா அவருடன் இணைந்து விட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே தவராசா இந்த கருத்தை முன்வைத்தார்.

அத்துடன் தாம் ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் எனவும், தேர்தலை இலக்காக வைத்து, எந்த செயற்பாட்டையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக,  தவராசா கூறினார்.

டக்ளஸ் தேவானந்தாவுடன் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் தொடர்புகளை பேணி வருவதாக கூறிய அவர். அனைவருடனும் ஒன்றாக பழகி வருவதாக தெரிவித்தார்

ஈ.பி.டி.பியில் இருந்து தான் 
விலகவும்  இல்லை, என்னை விலக்கவும் இல்லை. எவரையும் பகைமை நோக்குடன் அணுகவும் இல்லை தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, பிலிப்பைன்ஸுக்கு புகழாரம் சூட்டிய மைத்திரியை, மனித உரிமை அமைப்புக்கள் கண்டிக்கின்றது.

உத்தியாகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் நோக்கி விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, சுற்றுலா,கல்வி,பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சில ஒப்பந்தங்கள் கைச்சாத்தானதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.

இந்த விஜயத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்திருந்தமைக்கு மனித உரிமை அமைப்புக்கள் பல, பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழாராம் சூட்டியிருந்தார்.

அதேவேளை, போதைப்பொருள் அபாயத்தை கட்டுப்படுத்த, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளை, பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ஜனாதிபதியின் மேற்படி கருத்தை கடுமையாக எதிர்த்த நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்ஸ் ஆராய்ச்சியாளர், பிலிப்பைன்ஸின் நடைமுறையை உலகில் எந்த நாடும் பின்பற்றவே கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பிலிப்பைன்ஸின் செயன்முறையை பின்பற்றுவது தொடர்பாக ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 
தவறான கொள்கைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார்.

Read more...

ஜனாதிபதியாக வேண்டும் என்றால், தமிழ் மொழியில் தேர்ச்சி தேவை - குமார வெல்கம.

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், நாட்டில் தற்போது நிலவுகின்ற பல பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் கூடியிருந்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை கூறினார்.

சிறுபான்மை இனத்தவர்கள் பேசுகின்ற தமிழ் மொழி தொடர்பில், தெளிவுபெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.அப்போது தான், தீர்வில்லாமல் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

அத்துடன் நாட்டின் தற்போதைய சூழலைப் பார்க்கும் போது, உடன் நடத்த வேண்டியது ஜனாதிபதி தேர்தலே என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை சட்டவிரோதமானதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கூறினார்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபை தேர்தலே அடுத்து இடம்பெறும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதியும் செல்லலாம் - நீதிமன்றம்.

மன்னார் சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு, ஆய்விற்காக கொண்டு செல்லும் குழுவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றையதினம் இதற்கான அனுமதியை மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியது. மன்னார் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு கார்பன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மனித எச்சங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை ஆய்வுக் குழுவினர், அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, January 18, 2019

எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தை பொறுப்பெடுத்த மஹிந்தர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சம்பந்தருக்கு விட்டுக்கொடுத்தார்.

எதிர்கட்சித் தலைவராக இன்று காலை மஹிந்த ராஜபக்ச அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

எதிர் கட்சி தலைவர் பதவி அதன் காரியாலயம் போன்றவற்றில் நிலவி வந்த பிணக்கு இன்றுடன் முடிவடைந்துள்ளது. எதிர்கட்சி தலைவருக்கான காரியாலயத்தை பெற்றுக்கொண்டபோதும், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் பேசும்போது, சம்பந்தன் இந்நாட்டின் மூத்த அரசியல்வாதி மாத்திரம் அல்ல வயதிலும் மூத்தவராவார். அவர் இதற்கு முன்னர் இருந்த வீட்டில் படிகளில் ஏறுவது உட்பட பல சிரமங்களை அனுபவித்து வந்த நிலையிலேயே குறித்த வாசஸ்தலத்திற்கு நுழைந்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் அதை என்னால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. அவர் அந்த வீட்டில் இருக்கட்டும் என்றும் அது தொடர்பாக கேள்விகளை எழுப்பி சம்பந்தனை நோகடிக்க வேண்டாம் என்றும் தனது சகாக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவ்வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.


Read more...

ரணிலும் மைத்திரியும் வேண்டும்! சுமந்திரன் வேண்டாம்! யாழில் குதிரைப்படை அட்டகாசம்.

கம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கான ஆலோசனைகளையும் சிபார்சுகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசு பெற்றுக்கொள்கின்றது.

அதன் அடிப்படையில் யாழ்பாணத்தில் நீதிமன்ற வீதி மற்றும் கொட்டடி பிள்ளையார் ஆலய கேணி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இவை பா.உ சுமந்திரனின் சிபார்சின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது.

புனரமைப்பு செய்யப்பட்ட பாதைகள் திறந்து வைக்கப்பட்டபோது அதன் பெயர்ப்பலகையில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுமந்திரனின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

குறித்த பெயர் பலகை நேற்று இரவு வண்ணம் பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தியவர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரியை விட்டு சுமந்திரனையே சேதப்படுத்தியுள்ளனர். அதன் பொருள் மைத்திரியும் ரணிலும் யாழ்பாணச் சந்தியில் குந்தியிருக்கலாம், ஆனால் சுமந்திரன் குந்த முடியாது என்பதாகும்.

இவ்விடயத்தை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் தங்களது வழமையான பாணியில் இனம்தெரியாத நபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அது ஒன்றும் இனம் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் நேரடியாக மோத திராணியற்ற குதிரை கொம்பனியை சேர்ந்தவர்கள் என்று இலங்கைநெட் நம்பகமாக அறிகின்றது.

யாழ்பாணத்தில் சுமந்திரனின் இருக்கை குதிரைக் கொம்பனிக்கு மாத்திரமல்ல சிறிதரன் கொம்பனிக்கும் பெரும் சங்கடத்தையே கொடுத்துக்கொண்டிருக்கின்றது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



Read more...

''தமிழர்கள் ஒன்றும், கொண்டைக் கட்டிய சீனர்கள் அல்லர்'' - பொங்கியெழுந்த வேலுகுமார்.

தமிழர்கள் ஒன்றும், கொண்டைக் கட்டிய சீனர்கள் அல்லர் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற அரசியல் சார் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலுக்குமார் இதனை கூறினார்.

உத்தேச அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஒற்றையாட்சிக்குரிய முக்கிய அம்சங்களே அதில் உள்ளன என்று வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிதாக கொண்டு வரப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மஹிந்த அணியினர் விரும்பவில்லையா? என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த மட்டுமல்லாது, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்க வேண்டிய மகாநாயக்க தேரர்களே, புதிய அரசியலமைப்பை இனவாத நோக்கில் பார்ப்பது கவலையளிக்கின்றது. இதனால், நடுநிலை பார்வையை செலுத்தும் மகாநாயக்க தேரர்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாது என நினைக்கும் சிங்கள மேலாதிக்க தன்மை, ஒழியும் வரை நாட்டில் நிலையான சமாதானம் மலரப்போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இலங்கையில் உள்ளக பொறிமுறையானது என்றுமே வெற்றியளிக்காது. என்பதை ஆகவே, சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையே மஹிந்த அணியும், கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புக்களும் உணர்த்தி நிற்கின்றன.

ஐ.நா.வில் தமிழில் உரையாற்றியதாலும், பொங்கல் வாழ்த்துச் செய்தியை தமிழில் வெளியிடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிடலாம் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும் பகல்கனவு காண்கின்றனர்.

அவர்களின் சிற்றின்ப அரசியலைக் கண்டு, பேரின்பம் அடையுமளவுக்கு தமிழர்கள் ஒன்றும் கொண்டைக்கட்டிய சீனர்கள் அல்லர்.

தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருந்தால், அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கோரும் அரசியல் தீர்வை வழங்க எதற்காக தடை ஏற்படுத்த வேண்டும்?

போர் முடிவடைந்த பின்னர் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை, அன்று மஹிந்த அரசாங்கம் முன்னெடுக்காததால் தான் சர்வதேசத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியது.

தமிழ் மக்களின் மனங்களில் மஹிந்த இடம்பெற வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முழு பங்களிப்பையும் வழங்கவேண்டும் வேலுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஞானசார தேரரை விடுவிக்க 400 ஆலயங்கள் சிபார்சு. மண்டையை குடைகின்றார் உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொது பல சேனா அமைப்பின் தலைவர் கல்கொட அத்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என 400 ஆலயங்கள் சார்பாக சிபார்சு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆலயங்களும் தனித்தனியாக எழுத்து மூலம் இந்த சிபார்சினை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஞானசார தேரரை விடுவிக்கும்படி 400 இந்துக்கோயில்கள் கடிதம் அனுப்பியுள்ளமை தொடர்பில் உலமா கட்சியின் தலைவர் மண்டையை குடைகின்றார். ஆலயங்களின் இச்செயற்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மௌலவி முபாறக் பல்வேறு கேள்விகளை தொடுத்துள்ளார். இன்று (18) வெளியிட்டுள்ள குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஞானசாரவின் விடுதலைக்காக இந்து கோயில்கள் சிபாரிசு கடிதம் எழுதியுள்ளமை மூலம் நாட்டின் போக்கில் பல மாற்றம் ஏற்பட்டு வருவதை காட்டுகிறது. இது சமாதானத்தின் எதிரொலியா அச்சத்தின் எதிரொலியா என்று தெரியாத போதும் நாட்டின் எதிர்காலத்துக்கு இவ்வாறு மத தலைவர்கள் மத்தியிலான ஐக்கியம் இன்றியமையாதது. அத்துடன் இந்நடவடிக்கை முஸ்லிம்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஞானசார என்பவர் 2009 வரை தமிழ் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர். புலிகளை கடுமையாக சாடியவர். 2009ம் ஆண்டு உலமா கட்சியும் ஞானசாரவும் சேர்ந்து கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் புலிகளுக்கெதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவே புலிகளுக்கெதிராக கொழும்பில் நடந்த இறுதி ஆர்ப்பாட்டமாகும்.

இவ்வாறு தமிழீழ போராட்டத்துக்கெதிராக களத்தில் நின்ற ஞானசாரவுக்கு ஆதரவாக இந்துக்கோயில்கள் கடிதம் எழுதியுள்ளன என்றால் அதனை மிக இலகுவாக புறந்தள்ள முடியாது. இந்த நிலைக்கு இந்துக்கோயில்களை மாற்றியமைத்த சக்தி எது?

முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களுக்கு ஞானசாரவை 2012ம் ஆண்டுக்கு பின்னரே தெரியும். ஹலால் பிரச்சினையில் அவர் ஹீரோ ஆனார். பல சிங்கள இளைஞர் மத்தியில் இனவாதம் பெருக காரணமானார். இதன் காரணமாக முஸ்லிம்கள் மிக கடுமையாக அவரை வெறுத்தனர் என்பது உண்மை. இன்னமும் கூட முஸ்லிம்கள் ஞானசாரவுடன் நெருங்குவதற்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத நிலையில் வரலாற்றில் நேருக்கு நேர் ஆயுதம் தூக்கி சண்டையிட்ட, பௌத்த குருமாரையும் கொலை செய்த தமிழ் போராளிகளை பிரதிநிதித்துவ படுத்தும் இந்துக்கோயில்கள் ஞானசாரவுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளன என்றால் என்ன காரணம்?

இந்துக்கோயில்களின் இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் பரவலாக எதிர்க்கவுமில்லை.
என்ன காரணம்?

ஞானசார மூலம் தமது உரிமைகளை வெல்லலாம் என தமிழ் மக்கள் நினைக்கின்றார்களா?

அல்லது எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால் ஞானசார முஸ்லிம் விரோதப்போக்குடையவர் என்பதால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என்பதால் அவரை நண்பர் ஆக்கிக்கொண்டனரா?

அல்லது ஞானசாரவுக்கு ஆதரவு தரும்படி புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் வேண்டிக்கொண்டனவா?

இந்தக்கேள்விகளுக்கான விடைகளை தேடுவது இன்றைய அவசிய தேவையாகும்.

இந்துக்கோயில்களின் பிரதிநிதிகளான தமிழ் போராளிகளை எதிர்த்த ஒருவருக்கு இந்துக்கோயில்கள் ஆதரவு தெரிவிப்பது இலேசுப்பட்ட விடயமல்ல. இது பற்றி முஸ்லிம்கள் குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்கள் ஆராய வேண்டும்.

ஒரு தனிநபர் மீது கொண்ட வெறுப்பு ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. நமது நல்ல செயல்களால் ஞானசார போன்றோரையும் வெல்லலாம் என்ற இஸ்லாமிய வழிகாட்டல் பற்றியும் சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்துக்கோயில்களின் ஞானசார ஆதரவு நமக்கு காட்டுகிறது என்றார்.

Read more...

கைதிகள் மீதான தாக்குதலுக்கு, கடும் கண்டனம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

அண்மையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் தாக்கப்பட்டமைக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த தாக்குதலுக்கு இலங்கான கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

எனினும் இது குறித்த எந்தவிதமான முன்னேற்றகர நடவைடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு, அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

இப்போதைய அரசாங்கம், உடையும் தருவாயிலுள்ள பல்லின் நிலையை கொண்டுள்ளது - கம்மன்பில

ஆட்சியில் உள்ள தற்போதைய அரசாங்கம், உடையும் தருவாயிலுள்ள பல்லை போன்று காணப்படுவதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார். பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடியுமாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு வந்த பின்னர், அதனை காண்பிக்க இதுவரை முடியாமல் தான் உள்ளதாக கூறினார். .

நிலைமை இப்படியே நீடித்தால், 2015 ஆம் ஆண்டு வெறுமனே 47 உறுப்பினர்களுடன் இருந்த பிரதமராகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

Read more...

கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க நாம் தயார் - சுசில் பிரேமஜயந்த.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து பயணிக்கத் தமது தரப்பு தயராகவே உள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. இதனைக் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயல்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு, இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த அழைப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட, தமது தரப்பு இப்போதே தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

சாமானிய மக்களின் தேவைக்காகவும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து பயணிக்க தமது தரப்பு தயாராகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையாக செயற்பட்ட ஒரு தலைவர், மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை, தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் தான் வடக்கு மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 1987 ஆம் ஆண்டுமுதல் இருந்தாலும், வடக்கு தேர்தலை நடத்த முடியாத நிலையே காணப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இதன் போது, நினைவூட்டினார்.

Read more...

சிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.

யாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேளையில் அதற்கு சிறிதரன் காட்டிய பிரதேசவாத எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரணைமடுவை வீணாகும் 60 சதவீதனமான நீரை, யாழ்ப்பாணத்தற்கு கொண்டு வருவதற்கான திட்ட முன்மொழிவை தம்மிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, இரணைமடு நீர்தேக்க செயல்திட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர், திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, இரணைமடு நீர்தேக்கத்தையும், இரணைமடு நீர்தேக்கத்தின் செயல்த்திட்ட அலுவலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே, ஆளுநர் இந்த பணிப்புரையை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி இரணைமடு நீர்தேக்கத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட வட மாகாண ஆளுநர், வான்கதவுகளின் திருந்ததைப் பணிகள் உள்ளிட்ட பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்திருந்த நிலையில், இன்று அவற்றை ஆராயும் பொருட்டு ஆளுநர் சுரேன் ராகவன், அங்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது இரணைமடு நீர்தேக்கத்திலுள்ள 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைப்பாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கையளிக்கப்படும் எனவும்,  தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்புகளை மேற்கொள்ள, நீர்த்தேக்கத்தை முன்னெடுத்து செல்லும் தனியார் நிறுவனம், ஆளுநர் சுரேன் ராகவனிடம் உறுதியளித்தது

தற்போதுள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தில் வெறும் 40 சதவீத நீரிலேயே விவசாயம் மேற்கொள்ளப்படுவதுடன், 60 சதவீதமான நீர் சமுத்திரத்திற்கு செல்வதாக, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சுதாகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து வீணாகும் 60 சதவீத நீரை, யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவை, வெகு விரைவில் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளதாகா வட மாகாண ஆளுநரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

வரவை செலவாக காட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர்! கணக்கறிக்கை தோற்கடிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் டிசம்பர் மாத கணக்கறிக்கையை சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேற்று (17) வியாழக்கிழமை நிராகரித்தார்கள்.

இக்கணக்கறிக்கையில் இருந்த தவறுகள் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நிதி குழு கூட்டத்தில் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் சுட்டி காட்டப்பட்டு இருந்தன. அதன்படி பிரதேச சபையின் பிக் அப் வாகனத்துக்கு நான்கு ரயர்கள் வாங்கிய 82,800 ரூபாய் செலவு திண்ம கழிவகற்றல் செலவுக்குள் போடப்பட்டு இருந்ததையும், இறைச்சி கடை, அங்காடி ஆகியவற்றின் 230,000 ரூபாய் குத்தகை வருமானம் செலவினத்தில் காட்டப்பட்டு இருந்ததையும் ஆட்சேபித்தனர். அவற்றை திருத்தி சரி செய்வார் என்று தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சமாதானம் சொல்லி இருந்தார்.

இந்நிலையில் சபையின் ஜனவரி மாத கூட்டம் பிற்பகல் ஆரம்பமானபோது கணக்கறிக்கையில் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பதை பெரும்பான்மை உறுப்பினர்கள் கண்டு ஆட்சேபித்தனர். இதனால் இக்கணக்கறிக்கையை நிராகரிப்பதாகவும், தொடர்ந்து இக்கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு சபை அமர்விலும் தவிசாளரால் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகளை தவறாது முன்மொழிந்தும், வழி மொழிந்தும் வருகின்ற உறுப்பினர்களான த. மோகனதாஸ், ஜெயராணி ஆகியோர் மாதாந்த அறிக்கையை ஆதரிக்காமலும், எதிர்க்காமலும் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முத்துலிங்கம் காண்டீபன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபாபதி நேசராசா, காரைதீவு மகா சபையின் ஆறுமுகம் பூபாலரட்ணம், இராசையா மோகன் ஆகியோருடன் பிரதி தவிசாளர் ஜாஹீர் அடங்கலான முஸ்லிம் உறுப்பினர்களும் இதை நிராகரித்து, திருத்தங்களை மேற்கொண்ட பின் கூட்டத்தை பிறிதொரு நாளில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் தவிசாளர் கூட்டத்தை முடிவுறுத்தி வருகின்ற 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Read more...

இனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம்! பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.

புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அவ்வியக்கம் சார்பாக செயல்படுவது யாவும் பயங்கராத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கையாக கணிக்கப்படுவதுடன் பாரிய தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இந்நிலையில் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசிற்கு வாக்களித்து மஹிந்தவின் அரசை கவிழ்க உதவியமைக்காக கடந்த நான்கு வருடங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சற்று பின் நின்றது.

அச்சமயங்களில் புலிகளின் மா வீரர் நாள் என்று கூறப்படுகின்ற நிகழ்வு உட்பட புலிகளின் சில நிகழ்வுகள் கடந்த 4 ஆண்டுகள் வடகிழக்கில் இடம்பெற்றது யாவரும் அறிந்த விடயம்.

இவ்விடயங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வருகின்றது. பொலிஸார் ஓரளவு சுயாதீனமாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் அவர்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம்கொடாது பயங்கரவாத சட்டத்தினை நடைமுறைப்படுத்துவார்கள் என அத்திணைக்களத்தின் உயர் மட்ட வாட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஆந்த வகையில் பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு எதனையும் நடத்தக் கூடாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சிக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசார் (ரிஐடி) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எழுத்துமூலமாக இந்த எச்சரிக்கை தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் என்.இன்பராசா தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான நிகழ்வுகளை இனி நடத்தமாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

'பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இரண்டு நாட்களின் முன்னர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். சாதாரண விசாரணை என்று நினைத்துத்தான் அங்கு சென்றேன். காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 2.30 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது.

யூலை 5ம் திகதி நெல்லியடியில் கரும்புலி நாள் நினைவுகூரப்பட்டதை பற்றி விசாரித்தார்கள். அதை நடத்த அனுமதி தந்தது யார் என விசாரித்தார்கள்.

இப்படியான நிகழ்வுகளை இனி நடத்தமாட்டோம் என கையொப்பமிட்டு தருமாறு கேட்டனர். அவர்கள் கேட்டதை போல, எழுத்துமூலமாக எழுதி கொடுத்துள்ளோம். அதனால், இனிமேல் விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகளை நடத்த முடியாது;' என்றார்.

விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை பலரும் நடத்தி வரும்போது தமக்கு மட்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Read more...

சீரழிந்த இந்த நாட்டை மஹிந்த குடும்பம் கட்டியெழுப்பும். ஜனாதிபதி வேட்பாளரும் எமது குடும்பத்திலிருந்தே! நாமல் ராஜபக்ச.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாடு சீரழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு அன்ஹா பின்னர், சீரழிந்த இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்டாயமாக ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது குடும்பம் ஒருபோதும் நாட்டையும், போர் வீரர்களான இராணுவத்தினரையும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொடுக்கபோவதில்லை.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் நிம்மதியுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கம் என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ராஜபக்ஷ குடும்பத்தை ஊழல் பேர்வழிகள், மோசடியாளர்கள் என்று பொய்யுரைப்பவர்கள் தாங்கள் செய்த ஊழல், மோசடிகளை மறந்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதுபோல் மக்கள் விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார். இவ்வாறான ஒரு நிலையில், நாமல் ராஜபக்ஷவும் தற்போது இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புத்தளத்தில் 100 கிலோ வெடி மருந்து மீட்பு.

வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (17) மாலை குறித்த வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரே மேற்படி வெளிபொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

வெடிபொருட்களுடன் 100 டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டமை இப்பொருட்களுடன் தொடர்புடையதாக சீஐடி யினர் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றப் போகின்றாராம் ராதா கிருஷ்ணன்.

மிக குறுகிய காலத்திலேயே பொது மக்களின் அனைத்து தேவைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என, அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உறுதி அளித்துள்ளார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையென்று குற்றம் சுமத்தி வந்த வேலுசாமி ராதாகிருஷ்ணன், அமைச்சரவை அந்தஸ்தில்லாத, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நியமனம் பெற்றார்.

இந்த நிலையில், அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்டார்.

நாடு முழுவதிலுமுள்ள அபிவிருத்தி தேவைகளை கொண்ட பிரதேசங்களை இனங்கண்டு, அந்த பிரதேச அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com