Friday, January 18, 2019

சரத் பொன்சேகாவை களமிறக்க முடியும் என்றால் ஏன் சஜித் பிரேமதாசவை தீர்மானிக்க முடியாது? - திலிப் வெதஆராச்சி கேள்வி

சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று, பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவை களமிறக்க முடியும் என்றால், ஏன் கட்சியிலுள்ள பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக தீர்மானிக்க முடியாது என்றும் திலிப் வெதஆராச்சி கேள்வி எழுப்பினார். கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுத்தால், பிரதமரும் அதனை ஏற்றே ஆக வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

லசந்த, கீத் நொயர் கொலையில் ஒற்றுமை - வெளியாகியது புதிய தகவல்

லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் அவரை சித்திரவதைசெய்தமை ஆகிய குற்றங்கள் ஒரே விதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளவையென குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர். கல்கிசை நீதிமன்றத்தின் நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்றும் நடைபெற்றது.

முதலாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதுலாகம, இரண்டாவது சந்தேக நபரான கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால மற்றும் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Read more...

சவேந்திர சில்வாவிற்கு பதவி - நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும் ? ஐ.நா கேள்வி

ஐ.நா.வினால், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்தமை கவலையளிப்பதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமையால், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய ஒருவராக ஐ.நா.வினால் இங்கணபட்ட சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும்? எனவும் எலியட் ஏஞ்சல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more...

மே 21, ஜூலை 16 ல் வானில் தோன்றும் அதிசயம் - யாழ் மற்றும் திருகோணமலையில் மேலும் விசேஷம்

இந்த வருடத்தில் இரண்டு சந்திர கிரகணங்களையும் மூன்று சூரிய கிரகணங்களையும் மக்களை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மே மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும் என, புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6 ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.

இதில் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி உருவாகும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கை மக்கள் காண முடியும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை முழுமையாயாக அவதானிக்க முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


Read more...

ஜனாதிபதி மீது அழுத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றது மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் அண்மைய நாட்களில் தொடர்ந்த அரசியல் நெருக்கடிநிலை காரணமாக, உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுதலுக்காக ஏற்கனவே முடங்கிய நிலையில் உள்ள செயற்பாடுகளை மேலும் முடங்கியுள்ளது என்ற விசனத்தை மனித உரிமை கண்காணிப்பகம் முன்வைத்துள்ளது.

நடப்பாண்டுக்கான மனித உரிமை நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவிக்கியில், ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் காரணமாக சுமார் 30 வருடங்கள் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், தம்முடைய நீதி தொடர்பில் நம்பிக்கை இழந்து வரும் நிலையில்தற்போதையை இலங்கையின் நிலை மக்களின் நீதி விடயத்தில் மேலும் மந்தமான போக்கையே காட்டுகின்றது. இந்த துயர சம்பவமானது, பொறுப்பு கூறல் தொடர்பிலே சிறிசேனவின் அரசாங்கம் விரைவானதும் அர்த்தபூர்வமானதுமான நகர்வுகளை எடுக்க தவறி விட்டத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றது என்று அவர் குற்றம் சுமத்தினார்.

Read more...

மஹிந்த மீது சீற்றம் கொள்கிறார் விஜய கலா

வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த நிகழ்வில் மேலும் கருத்துரைத்த கல்வி ராஜாங்க அமைச்சர், அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சட்டக்கல்வியை மாணவர்கள் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Read more...

கோட்டாவிற்கு எதிரான வழக்கு, தொடர் விசாரணைக்கு

D .A. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பா அபயக்கோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தங்காலை மெதமுலனை D.A. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர உயர்தரப் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியான பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read more...

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஆணைக்குழு நியமனம்

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில், தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த ஆணைக்குழு செயற்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலத்தில் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read more...

9000 கோடியை வழங்கியது மத்திய வாங்கி

அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 9000 கோடி நிதி ரூபா பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்காக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச நிதி உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதன் காரணாமாக 2019 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனங்களுக்காக நிதி, மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி கிடைக்காது போயுள்ளதாகவும், இதனாலேயே கடந்த ஆண்டு இறுதியில் வரவு செலவு திட்டத்தையும் தயாரிக்க முடியாது போனதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறவுள்ள சர்வதேச கடன் உதவிகள் கிடைக்கப் பெற்றவுடன், மத்திய வங்கி இடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இளைஞனுக்கு மரண தண்டனை - காரணம் இதுதான்

கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதான குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது.

62 கிராம் 620 மில்லிகிராம் நிறையுடைய கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டமையால், நீதிபதி கிஹான் குலதுங்க நேற்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டு கொஹூவளை பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர், கொஹூவளை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, January 17, 2019

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்! வீடியோ

வீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்வோரில் பெரும்பாலானோர் இன்னோரன்ன தொல்லைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எஜெமானர்களின் தொல்லைகள் உட்பட்ட பல்வேறு தொல்லைகளையும் தாங்க முடியாது வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்லும் பணிப்பெண்கள் அங்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

இடைத்தங்கல் முகாம்களிலும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. அத்துடன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் தூதுவர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடைத்தங்கள் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள் வெளியாரின் உதவியை நாடுகின்றனர்.

அவர்களின் வேண்டுதல்களுக்கு செவிமடுத்து இதனை பகிர்வதன் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்கள் அல்லாதோருக்கு மத்திய கிழக்கு நாடுகள் பாதுகாப்பு அற்றதோர் தேசம் என்றும் அங்கு செல்லுகின்ற இலங்கை முஸ்லிம்களைக்கூட அரபுக்கள் இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் பரவலாக கூறப்படுகின்றது.






Read more...

கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய புலிப்பயங்கரவாதி ஒருவர் ஜேர்மனியில் கைது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில், குறித்த சந்தேக நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்த ஜேர்மன் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.

தென்மேற்கு ஜேர்மனி உள்ள 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் பின்னரே இந்த காது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பிலான விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத ஜேர்மன் அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர் என்றும், கொலை மற்றும் கொலை முயற்சிகளுடனும் இவர் தொடர்பு கொண்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இது குறித்த விசாரணைகள் முடிவடைந்த பின்பே, மேலதிக விபரங்களை வெளியிட முடியும் என ஜேர்மன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more...

மே மாதம் முதல் தடை - உணவு கட்டுப்பாட்டு பிரிவு.

கையுறை அணியாமல் உணவுகளை வெறுங்கைகளால் பிடித்து விற்பனை செய்வதை, தடை செய்யவுள்ளதாக உணவு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, அமுலாகும் என உணவு அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதக் காலப் பகுதிக்குள் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இது தொடர்பில் விழுப்புணர்வை ஏற்படுத்துமாறு, மாகாண,மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு சிறப்பு ஆலோசணை சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஜே.கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் சுத்தமான முறையில் உணவுகளை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி செயல்படும் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஜே கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Read more...

சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்? நக்கீரன்

‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல் கருத்தரங்கு கடந்த சனவரி 12, 2019 இல் (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் சுமந்திரனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார். அதில் தமிழ் அரசுக் கட்சி தனது வரவு செலவுகளை ஏன் காட்டுவதில்லை என்பது ஒன்றாகும். அன்றைய கூட்டத்தின் தொனிப் பொருளுக்கும் இந்தக் கேள்விக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கணக்குக் காட்டுவது அல்லது காட்டாமல் விடுவது அந்தக் கட்சியைப் பொறுத்த விடயம். கணக்கு வழக்குகளை கட்சியின் செயல்குழு, பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் காட்டினால் போதுமானது. பின்னர் ஏன் வித்தியாதரன் இந்தக் கேள்வியை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமற்ற முறையில் கேட்க வேண்டும்?

எந்த வழியிலும் எந்த முறையிலும் எப்பாடு பட்டும் தமிழ் அரசுக் கட்சி மீது சேறு பூச வேண்டும் என்பதே அவரது பேராசையாகும்.

இவ்வளவிற்கும் வித்தியாதரனே கொழும்பு தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது அவர் எனக்குச் சொல்லி நான் தெரிந்து கொண்ட செய்தி.

காலைக்கதிர் நாளேட்டில் இனி இது இரகசியம் இல்லை என்ற ஒரு கிசு சிசு பந்தியை வித்தியாதரன் ஒவ்வொரு நாளும் எழுதிவருகிறார். "நான் பத்திரிகை ஆசிரியன். எதை விரும்பினாலும் எழுதுவேன் எப்படியும் எழுதுவேன், என்னைக் கேட்க யாரும் இல்லை" என்ற தோரணையில் எழுதுகிறார். பெரும்பாலும் தமிழ் அரசுக் கட்சிக்குள் சிண்டு முடியும் திருப்பணியில் வித்தியாதரன் ஈடுபட்டு வருகிறார்.

"சென்ற வாரம் கொழும்பில் நடந்த தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் இந்த "டீல்' பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. சயந்தனின் "டீல்' பேச்சால் கடுப்பாகிப் போன வன்னி மாவட்ட எம்.பியான சாள்ஸ் நிமலநாதனும், யாழ்.மாவட்ட எம்.பியான ஸ்ரீதரனும் அது பற்றிக் காட்டமாக விமர்சித்தனர்.

"ஏன் இந்த "டீல்' பேச்சு? எதற்காக சும்மா விடுதலைப் புலிகளின் பெயரோடு சொறிவான்? இந்தப் பேச்சால் எங்களுக்குத்தான் சிக்கல். போகின்ற இடம் எல்லாம் எங்கள் ஆதரவாளர்கள் இதனைக் குறிப்பிட்டு எங்களை நோண்டி நுங்கு எடுக்கின்றனர். இப்படி எல்லாம் பேசுவதற்கு கட்சி இடமளித்துப் பார்த்திருக்கப் போகின்றதா?'' - என்ற சாரப்பட சீறினர் இருவரும் உடனே சுமந்திரன் குறுக்கிட்டார்.

"சயந்தன் கூறியதில் என்ன தவறு? புலிகள் எங்கள் அரசியல் வாதிகளைக் கொல்லவில்லையா?'' என்று கேள்வி எழுப்பினார் அவர்.

“அதனால் விடயம் விவகார மாகியது. சூடு பறந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

"இடையில் குறுக்கிட்டராம் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா "ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களைப் புலிகள் கொன்றார்கள்தானே. புலிகள் தமது இயக்கத்திலேயே மாத்தையா உட்பட இருநூறு பேரைக் கொல்லவில்லையா?'' என்று கேள்வி கேட்டார் அவர்.

"அப்படி என்றால் ஒன்றாகப் போய்த் தலைவர் பிரபரகரனுடன் அமர்ந்து சாப்பிட்ட போது இந்தக் கொலைகளைப் பற்றி நீங்கள் அவரிடமே கேட்டறிந்திருக்கலாமே? அவர் உங்களிடம் சொன்னாரா இவற்றை எல்லாம் தாங்கள்தான் செய்தார்கள் என்று?'' என உணர்ச்சியுடன் பதில் வினாத் தொடுத்தார் ஸ்ரீதரன் எம்.பி.

"புலிகள் அமைப்பு இருந்த காலம்வரை அவர்களுக்குச் சற்றேனும் அதிருப்தி வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பேசி - நடந்து கொண்ட மாவையர் - அவரது தானைத் தலைவர் அமிர்தலிங்கம் தமது கண் முன் சுட்டுக் கொல்லப்பட்டமையை அவதானித்த பின்னர், புலிகளை எந்தச் சமயத்திலும் பகிரங்கமாக வையாமல் சகிப்புடன் தந்திரோபாயப் பொறுமையை வெளிப் படுத்திய மாவையர் - தேர்தல் மேடைகளில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டிய மாவையர் - இப்போது அப்படி புலிகளைக் காட்டமாக விமர்சித்திருப்பாராயின் - அது பச்சை சந்தர்ப்பவாதக் கருத்துரைப்பே தவிர வேறில்லை" என வித்தியாதரன் எழுதுகிறார்.

சந்தர்ப்பவாதம் பற்றி, அதிலும் பச்சை சந்தர்ப்பவாதம் பற்றி மற்றவர்கள் சொல்லலாம், எழுதலாம், ஆனால் வித்தியாதரனுக்கு அந்தத் தகைமை அறவே கிடையாது! பஞ்ச பாண்டவர்கள் ஐந்து நாடு கேட்டு அது மறுக்கப்பட்ட போது ஐந்து ஊர்கள் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட போது ஐந்து வீடுகள் கேட்டார்கள். அதுவும் மறுக்கப்பட்ட து போல வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியிடம் முதலமைச்சர் பதவியை முதலில் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டார். அது மறுக்கப்பட்ட போது 2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் போராளிகள் சார்பில் 9 இடங்களைக் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது சனநாயகப் போராளிகள் என்ற அமைப்பைப் தோற்றுவித்து தானே அதன் முதன்மை வேட்பாளராக வித்தியாதரன் களம் இறங்கினார்.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகக் களம் இறங்கிய சனநாயகப் போராளிகள் மொத்தம் 1979 வாக்குகளை மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்தனர்.

சென்ற ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நடந்த போது யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவி கேட்டார். அதுவும் மறுக்கப்பட்டது.

"தேர்தல் மேடைகளில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டிய மாவையர்" என்கிறார் வித்தியாதரன். எப்போது, எந்த மேடையில் புலிகளைப் புளுகியே வாக்குத் திரட்டினார்? 2010 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி...புலிகளுக்கு மிக நெருக்கமாக இருந்த கஜேந்திரகுமாரின் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் போட்டியிட்டு கட்டுக்காசையே இழந்தது. பின்னர் 2015 ஆம் நடந்த நடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட ஐந்து தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு நான்கு தேர்தல் மாவட்டங்களில் கட்டுக்காசை இழந்தது. யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 15,022 (5 விழுக்காடு) பெற்று சொற்ப வாக்குகளால் கட்டுக்காசைக் காப்பாற்றியது.

2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரன் 112,077 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தார். அடுத்து பத்மினி சிதம்பரநாதன் 68,240 வாக்குகளையும் கஜேந்திரகுமார் 60,770 பெற்றிருந்தார்கள். ஆனால் 2010 இல் நடந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு 6,362 வாக்குகளே கிடைத்தன. விருப்பு வாக்குள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும். அப்படியென்றால் மிச்ச வாக்குகளுக்கு என்ன நடந்தது? திருநீலகண்ட நாயனாரின் திருவோடு மறைந்தது போல் 177,725 வாக்குகள் மறைந்துவிட்டன!

தமிழ்மக்களின் பெரும்பான்மை ஆதரவு புலிகளுக்கு இருந்தது உண்மையே. இல்லையேல் அந்தப் போரை அத்தனை ஆண்டுகள் நடத்தியிருக்க முடியாது.

அதே நேரம் புலிகளிடம் ஜனநாயக விழுமியங்களைப் பேண வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அவர்களது ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாடு சனநாயகக் கோட்பாட்டுக்கு மாறானது. விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இருக்கவில்லை. புலிகள் அடிப்படை தனிமனித உரிமை பேணப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்படவில்லை. புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரங்களுக்கு உறுதி தரவில்லை.

திருவாளர்கள் தங்கத்துரை, சிவபாலன், சரோசினி யோகேஸ்வரன், அ. அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றோர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். நீலன் திருச்செல்வம் 29 யூலை, 1999 இல் படு கொலை செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் பிராந்தியங்களின் கூட்டரசு என்ற அரசியல் யாப்பை ஜிஎல் பீரீஸ் அவர்களோடு சேர்ந்து 1995 இல் எழுதியதுதான். ஆனால் பிற்காலத்தில் வி.புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் என்ன சொன்னார்? எல்லாத் தீர்வுத் திட்டங்களிலும் பார்க்க அந்தத் திட்டந்தான் அதிக பட்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்டதாக இருந்தது!

நீலன் திருச்செல்வத்தின் கொலைக்குப் பின்னரே அனைத்துலக மட்டத்தில் வி.புலிகளப்பற்றிய பார்வை இறுக்கம் அடைந்தது. அமெரிக்கா 1957 இல் வி.புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் போட்டு விட்டது. 9/11 அன்று 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 2997 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பத்து பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து இழப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகள் என்ற பாகுபாடு இல்லாமல் போய்விட்டது.

இராசீவ் காந்தி படுகொலைக்குப் (மே 1991) பின்னரே இந்தியா வி.புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் போட்டது. மொத்தம் 32 நாடுகள் வி.புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்துவிட்டன. இதனை வி.புலிகள் கவனத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆளால் எடுக்கவில்லை. அதற்கான விலையைப் பின்னர் கொடுக்க வேண்டியதாயிற்று.

களத்தில் வி.புலிகள் வெற்றிமேல் வெற்றியீட்டினார்கள். அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்ற எண்ணம் தமிழ்மக்களிடம் மட்டுமல்ல தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும் இருந்தது. குறிப்பாக இரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல் தலைவர்களிடம் இருந்தது.

இவை காரணமாக வி.புலிகளின் சனநாயக மீறல்களை விமர்ச்சிக்கக் கூடாது என்ற எண்ணம் தமிழ்மக்களிடம் இருந்தது. மாவை சேனாதிராசா, இரா சம்பந்தன் போன்ற தலைவர்களிடமும் இருந்தது.

2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் வி.புலிகள் இரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று இரா சம்பந்தன் வன்னி சென்று வாதாடிப் பார்த்தார். வி.புலிகள் சம்பந்தனின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டார்கள். புறக்கணித்தது மட்டுமல்ல சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்ததால் மகிந்த இராசபக்சா 180,786 வாக்குகளால் வென்றிருந்தார். வி.புலிகள் தேர்தலைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இரணில் விக்கிரமசிங்க வென்றிருப்பார். இலங்கையின் வரலாறு வேது விதமாக இருந்திருக்கும்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 701,938 இலட்சம் வாக்காளர்களில் 7,868 பேரே வாக்களித்திருந்தார்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருந்தார்! பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 89,454!

ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்பிடம் சனநாயக விழுமியங்களை எதிர்பார்ப்பதும் நியாயமில்லை. சுமந்திரன் சொல்வது போல வரலாற்றை அந்தந்தக் காலப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த அடிப்படையிலேயே சேனாதிராசா போன்றோர் இடம் பொருள், காலம் கருதி நடந்து கொண்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னரே அரசியல் படுகொலைகளை வி.புலிகள் தவிர்த்துக் கொண்டார்கள். இதனையே சயந்தன் தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.

எனவே சேனாதிராசா பச்சை சந்தர்ப்பவாதி என்பது பொருந்தாது... அப்படி எழுதிய வித்தியாதரனுக்குத்தான் அது கச்சிதமாகப் பொருந்தும்!

அது சரி. கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சயந்தனின் பேச்சைப் வித்தியாதரன் படித்தாரா? அல்லது கேட்டாரா? அப்படித் தெரியவில்லை. படித்திருந்தால் அல்லது கேட்டிருந்தால் இந்தத் தோரணையில் அவர் எழுதியிருக்க மாட்டார். அங்கு சயந்தன் பின்வருமாறு பேசியிருந்தார்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை பார்த்தால், ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவதை பார்க்கின்றீர்கள். அந்த வகையில் கடைசியாக தனது உயிரை இழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள். அதற்கு முன்னர் திருகோணமலையில் பா.உ தங்கத்துரை அவர்கள். எமது பிரதேசத்தை சேர்ந்த ரவிராஜ் அவர்கள் குறிவைக்கப்பட்டிருந்தார். மேயர்களான சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்சியாக மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு டீலுக்கு போகவேண்டியிருந்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனச் சொல்லிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஏனைய அமைப்புக்களை பிடித்து இணைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே எனப்புகுத்தி தம்மை உலக நாடுகளில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.

அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பூடாக புலிகள் தங்களுக்கான உலக அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்கள் எமது தலைவர்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள். இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான டீல். (http://www.ilankainet.com/2018/12/blog-post_157.html).

.இதில் என்ன தவறு இருக்கிறது? சயந்தன் வரலாற்றைத் திரித்தாரா? இல்லையே! வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அவ்வளவுதான். அதற்காக வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?.

Read more...

குளவி கொட்டுக்கு இலக்கான 70 மாணவர்கள், வைத்தியசாலைகளில் அனுமதி.

குளவி கொட்டுக்கு இலக்கான 70 பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

பண்டாரவளை - எல்ல - பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களே, இன்று முற்பகல்
இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள மரத்திலிருந்த குளவி கூடொன்று கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆளுங்கட்சியாக அங்கீகரிப்பீர்! கம்பன்பில சபாநாயகருக்கு கடிதம்.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை பிவிதுரு ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே ஆதரவளித்து வருவதாகவும், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சி போல் அக்கட்சி செயல்படவில்லை என்றும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில, தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆளும் கட்சியாக, அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இனிவரும் காலங்களில் நாடாளுமன்றில் ஆசன இட ஒதுக்கீட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தாது ஆளுங்கட்சி வரிசையில் அமர்த்துமாறும், உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்து சபாநாயகரின் நிலைப்பாட்டை அறிய அரசியல் வட்டாரங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கு, அவசர எச்சரிக்கை.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாக தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு அந்த பிரிவு போது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதம் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பல இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 13,060 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர கண்டி, மாத்தறை களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர், டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் டெங்கு நோய் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

கூட்டு ஒப்பந்தம் குறித்த விசேட மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

கூட்டு ஒப்பந்தத்தை நீக்கவோ அல்லது கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது என்று குறிப்பிட்டு, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம்,. உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே, அதனை முடிவுறுத்த முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், உடன் ரத்துச் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.

இந்த கூட்டு ஒப்பந்தம் தொழிற்சட்டங்களுக்கு முரணானது என்பதாலும், அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதாலும் இதனை ரத்துச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே தமக்கான வேதனம், 1000 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால், தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பெருந்தோட்ட மக்கள் பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டில் அண்மைக் காலமாக நிலவிய அரசியல் குழப்ப நிலையினால், கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் சற்று தளம்பிய நிலையில், தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எனது தனிப்பட்ட விடயங்களில் தலையிட வேண்டிய தேவை, எவருக்கும் கிடையாது - கோட்டாபய ராஜபக்ஸ.

நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக் கொள்வதும், நீக்கிக் கொள்வதும், தனது தனிப்பட்ட விடயம் என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரஜாவுரிமை குறித்து பல தரப்பினர் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, தமது தனிப்பட்ட விடயங்களில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

தமது பிரஜாவுரிமை குறித்து கருத்து வெளியிட்டவர்கள் மீது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இன்று முற்பகல் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றதில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

இதனை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஸவிடம், ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய போதே, அவர் இவாறு கூறினார்.

”பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனை கட்டிவைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை கட்டிவைக்க மாட்டார்கள்'' என கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இது சம்மந்தமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். ஆனால், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது என்பது இலங்கை அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாவும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்தால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறி வரும் நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இதனிடையே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்க, இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர் என்ற காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஊடகங்களை தவறாக விமர்சிப்பவர் சுமந்திரன் - தவநாதன் காட்டம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஊடகங்களை தவறாக விமர்சித்து வருவதாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வை.தவநாதன் இதனை கூறினார்.

தமிழரசு கட்சி யுத்த காலத்தினைப் போன்றே தற்போதும் செயற்பட்டு வருகின்றது. தமக்கு சாதகமான கருத்துக்களை வெளியிடும் போது மௌனம் காப்பவர்கள், எதிர்மறையான கருத்துக்களை ஊடகங்கள் வெளிக்காட்டும் போது, அந்த ஊடகங்களுக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருவதாக வை.தவநாதன் குறிப்பிட்டார்.

உண்மையில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு அமைச்சுக்களை பொறுப்பேற்காது, அமைச்சுக்களை அடக்கி ஆளும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த எம்.ஏ. சுமந்திரன், சில தொலைக்காட்சி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வை.தவநாதன் இந்த கருத்தை முன்வைத்தார்.

Read more...

21 ம் திகதி மேலுமொரு பெருந்தொகை காணி விடுவிக்கப்படுகின்றது.

வடக்கில் பாதுகாப்புப்படையினர் வசம் உள்ள மேலும் பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 1,201 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காணிகள் விடுவிப்பு நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் காணியும் யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணியும் வன்னியில் 63 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிககளை, இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தினர் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு ஈடுபடுத்தியிருந்துள்ளனர்.

மேலும், இந்தக் காணி விடுப்பின் தொடர்ச்சியாக இராணுவப் பண்ணைகள் காணப்பட்ட நாச்சிக்குடா, வெல்லன்குளம், உடையார்கட்டுகுளம் ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more...

சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 88 ஆயிரம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வளமாக மாட்டினார் ஒருவர்

கடுவெல, கொத்தலாவல பகுதியில் நேற்று இரவு 8.50 அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 5 கிலோ 24 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹெரோயினின் பெறுமதி சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 88 ஆயிரம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

கைதிகள் சிலரைத்தாக்கிய CCTV காணொளி - ஆராய விசேட குழு

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் சிலரைத்தாக்கிய CCTV காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்ப்பனான அனைத்து காட்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிடவுள்ளதாக, விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த காணொளியை முழுமையாக பார்வையிட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி கோரியிருந்தார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள், சிறைச்சாலை அதிகாரிகளால் கைதிகளை நிலத்தில் முழந்தாழிடச் செய்து சித்திரவதைக்குள்ளாக்கிய CCTV காணொளி வௌியாகியுள்ளதை அடுத்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

நாளை முதல் புதிய இடத்தில் இயங்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நாளை முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்தில் செயல்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது, நாளை ஜனவரி 18 ம் திகதி முதல் புதிய முகவரியில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரியில் ஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் செயல்படும். விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித்தரும் நியக்கத்தில் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இடமாற்றத்தினால் நாளை 2019.01.18ஆம் திகதி சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் 2019.01.21ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமைபோல் ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும். நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய வழமைபோன்று 011-2331245, 011-2431610, 011-2382316 என்ற இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Read more...

கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலை

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப்பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு, கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர எச்சரிக்கை

அரசாங்கம், முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும், அதன் பின்னரே ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்காகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு, மாகாணசபை தேர்தலை புதிய முறையில் நடத்துவது சாத்திமில்லையென்றால், பழைய தேர்தல் முறையில் நடத்தவேண்டும்.

அதன்படி பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமது அமைப்பு சார்பான வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

Read more...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வலியுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 11ஆம் திகதி அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கோரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான 4 வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த மாற்று யோசனைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்றம் செயற்படவேண்டிய அவசியம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாகாணசபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையில் நடாத்துதல், கலப்பு முறையில் நடாத்துதல் என்பன தொடர்பான கொள்கைகளை வகுப்பது குறித்து, நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் இவர்களோடு கட்சிகளின் தலைவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது நீடிக்கும் குழப்ப நிலையில் மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவதே சிறந்தது என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Read more...

யாப்புக்கு வந்தது ஆப்பு

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டுமாயின், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாத யாப்பை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சாசனத்திற்கான பணிக்குழுச்சபை இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

பௌத்த சாசனத்திற்கான பணிக்குழு சபையின் தலைவர் திவியாகஹ யஸஸ்ஸி தேரர் உள்ளிட்ட முக்கிய தேரர்கள் பலர், இந்த அறிவித்தலில் கையொப்பம் இட்டுள்ளனர். மேலும், மகா சங்கத்தினரின் பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பு சபையொன்றிடம் அந்தப் பணியை ஒப்படைக்குமாறும் அச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Read more...

இன்று, தரம் ஒன்றிக்கு புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு

அரசங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகின்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வ நிகழ்வு கிரியுள்ள, கணேகொட ஆரம்பப் பிரிவு பாடசாலையில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமமாகியுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 194 பாடசாலைகளில் இந்த நிகழ்வு இன்று ஏக காலத்தில் நடைபெறுகின்றது. 2018 ம் ஆண்டிற்கான தரம் 01 இற்கு, 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, January 16, 2019

போராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் போராட்டத்திற்கு என மக்கள் பணம் வழங்கியுள்ளனர். உலகிலே பல சமூகங்கள் ஒடுக்கப்பட்டு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைக்காக புலம்பெயர் தேசங்களில் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் போல் எந்த நாட்டு மக்களும் மேற்கொள்ளவில்லை என்ற பெருமைக்குரியவர்களாகவே எம் மக்கள் உள்ளனர். மக்களுடைய மேற்படி அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை புலிகளின் தலைமை விழலுக்கிறைத்த நீராக்கியமை யாவரும் அறித்தது.

இங்குள்ள துரதிஷ்டம் யாதெனில் எந்த மக்களின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மக்கள் பணத்தை வாரி இறைத்தார்களோ அந்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு தலைமை அழிந்துபோக, புலிப்பினாமிகள் மக்களின் சொத்துக்களை முற்றாக கையகப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு சுருட்டப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கு அந்தந்த நாட்டிலுள்ள எமது மக்கள் முன்வரவேண்டும். போராட்டம் வழிதவறிப்போனபோது தட்டிக்கேட்பதற்கு மக்களாகிய நாம் அஞ்சி நின்றதன் விளைவே இன்று எமது போராட்டம் தோற்றதற்கு பிரதான காரணமாகும். அவ்வாறு நாம் தொடர்ந்தும் மௌனம் காப்போமாக இருந்தால் குறித்த பேர்வழிகளால் பதுக்கப்பட்டுள்ள எந்த சொத்தும் மக்களை சென்றடையப்போவதில்லை.

எனவே இன்று தாயகத்தில் துயரப்படும் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணப்படவேண்டுமாயின் இங்கு போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் யாவும் அந்த மக்களை சென்றடைய வேண்டும். எனவே அந்த சொத்துக்களை மீட்க தமிழ் மக்கள் வியூகங்களை வகுத்து செயலில் இறங்கவேண்டும்.

இதற்காக அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் என்போர் கூட்டாக இணைந்து, இச்சொத்துக்கள் மக்கள் சொத்து என்பதற்கான ஆதாரங்களை திரட்டி அவற்றை பறிமுதல் செய்து அவை தாயகத்து மக்களை சென்றடைய ஆவன செய்யவேண்டும்.

அந்த வரிசையில் கனடாவில் மக்களின் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள குழுவொன்ற மக்களின் சொத்துக்களையும் அதனை பதுக்கி வைத்துள்ளவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அவ்விபரங்களை மக்களின் பார்வைக்காக கீழே இணைப்பதுடன் சகல நாடுகளிலுமுள்ள மக்களின் சொத்துவிபரங்களையும் அதனை பதுக்கியுள்ளோரது விபரங்களையும் அந்தந்த நாட்டிலுள்ள மக்கள் இணைந்து வெளியே கொண்டுவரவேண்டும் என நட்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் தங்களிடம் இருக்கக்கூடிய மேற்படி விடயம் சம்பந்தமான விபரங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றேன்.
தொலைபேசி இலக்கம் 00447817063682
அல்லது மின்னஞ்சல் vramaraj@hotmail.com


இறுதிகட்ட நிதி சேகரிப்பும் இருட்டடிக்கப்பட்ட உண்மைகளும் - விழிப்புக்குழுவின் வெளிச்ச அறிக்கை - கனடா

2008 நடுப்பகுதிவரை 14 ஆயுதக்கப்பல்கள் காட்டிக்கொடுப்பின் ஊடாக கடலில் அழிக்கப்படுகிறது

2008 October KP மீண்டும் காலச்சூழ்நிலை காரணமாக புலம்பெயர் கட்டமைப்புக்களுக்குள் உள்வாங்கப்படுகின்றார்

அதேகாலப்பகுதியில் தாயகத்தில் இனவழிப்பின் உச்சம் நடைபெறுகின்றது

குழப்பத்தின் உச்சத்தில் புலம்பெயர் தேசத்தில் தொண்டர்களும் மக்களும்

January 6,2009 KP யிடம் இருந்து 56 மில்லியனுக்கான அவசர தேவைக்கு உத்தரவு வருகின்றது ( 4 கப்பல் 2 Helicopter)

புலம்பெயர் தேசத்தில் நிதி சேகரிப்பதில் நெருக்கடி ஏற்படுகிறது

தொண்டர்கள் கடனடிப்படையில் மக்களிடமும் தங்களது பணமும் வழங்குகிறார்கள்

துரதிஸ்டம் சேகரிக்கப்பட்ட பணம் 10% வீதத்தை தாண்டவில்லை

மாற்றுவழி ஆராயப்படுகிறது

முடிவு தேசியத்தின் சொத்துக்கள் விற்று அல்லது கடனடிப்படையில் நிதிக்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது

சொத்து நிர்வாகம் அரசியல்துறை , உளவுத்துறை , கடற்துறை , அனைத்துலகம் ஆகிய 4 துறைகள் மூலம் நிர்வகிக்கபட்டது

இங்குதான் தேசியத்திற்கும் , புலம்பெயர் மக்களுக்கும் , தொண்டர்களுக்கும் ரெஜி அண்ணாவின் மேற்பார்வையில் KP யின் ஆதரவோடு சதிவலைகள் ஆரம்பமாகின்றது

அனைத்துலகத்தின் கனடா சொத்து விபரங்கள் முதலில் பார்ப்போம்

1. உலகத்தமிழர் கட்டிடம் - 1.5 மில்லியன் , உரிமை-உதயன்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

2. சுரபி கட்டிடம் மற்றும் காணி -8 மில்லியன் , வியாபாரம் மற்றும் கையிருப்பு 3.27000 , உரிமை - ஆதி கணபதி , இராஐரட்ணம்,நையினை ரஞ்ஐன் என்று அழைக்கப்படும் சுரபி ரஞ்ஐன்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

3. தொடர் pizza நிறுவனம் 6 கடை 1.2 மில்லியன் , தொடர்கடைக்கான மாத உரிமைபணம் 6 தரம் 600
உரிமை - தேசியத்தால் நீக்கப்பட்ட ரெஜி மற்றும் நண்பர்கள்

இறுதி நேரம் வழங்கிய நிதி ஆயிரத்து ஐம்பது மட்டும்

4. Fm Radio 14 மில்லியன் உரிமை - அன்ரனி குடும்பம்

இறுதி நேரம் வழங்கிய நிதி 20.000 மட்டும்

5. Coin laundry தொடர் (3 கடை)

6.27500 உரிமை - தேனிக்காம்ப் PLOT கண்ணன் என்று அழைக்கப்படும் மாதகல் கண்ணன்
இறுதி நேரம் வழங்கிய நிதி 2000 அதுவும் கடன்

6. மிசிசாகா printing அச்சகம் 7.5 மில்லியன் , உரிமை - ராஜா , சுரேன் முன்னால் TGTE

இறுதி நேரம் வழங்கிய நிதி 50.000 மட்டும்

7. கோயில் வீடு , ஈழமுரசு அலுவலகம் , மற்றும் New Market வீடு (4+22.000+6) 10,22000
உரிமை - ஈழமுரசு தவம்

இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

8.யா மெற்றல் 4 மில்லியன் , உரிமை - மென்ரல் லிங்கம் என்று அழைக்கப்படும் சொர்னா லிங்கம்
இறுதி நேரம் வழங்கிய நிதி 10.000 மட்டும்

9. Keel & finch கட்டிடம் 9 இலட்சம்
உரிமை- தவா இளையதம்பி , ரெஜி , தட்சனாமூர்த்தி , ரெஜியின் மனைவியின் உறவினரான சிங்களவர்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

இவைகள் அனைத்தும் இன்று அண்ணன் வந்தால் கொடுப்போம் என்று கொள்ளையடிக்கப்பட்ட விபரங்கள் மட்டும் தொடரும்...

இறுதிக்கட்ட நிதியை KP யின் உத்தரவின் பேரில் கையழிக்கப்பட்ட 5 பேரில் ஒருவரான " மணியோடர் " என்று அழைக்கப்படும் ராஐகுருவின் வாக்குமூல அடிப்படையில் இத்தரவுகள் பெறப்பட்டன .

இதற்கான audio ஆதாரம் எம்மிடம் உள்ளது. மற்றைய 4 வரின் பெயர் , சொத்துவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன் .

விழிப்புக்குழு - கனடா
11-1-2019

Read more...

5 உடன்படிக்கைகள் பிலிப்பைன்ஸுடன் கைச்சாத்து

பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இன்று கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின்போதே இரு அரச தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

முதலாவதாக இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கைச்சாத்திட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையினை மேம்படுத்துதல் பற்றிய உடன்படிக்கை கைச்சாத்தானது. அடுத்ததாக இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாயத் துறையின் ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சராக மைத்ரிபால சிறிசேன 2008ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அப்போதைய விவசாயத் துறை செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இன்று ஜனாதிபதியாக அவரது முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை விசேட அம்சமாகும். அதன் பின்னர் கல்வித் துறையை மேம்படுத்துதல் பற்றிய புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா இதில் கைச்சாத்திட்டார்.

இலங்கையின் விவசாய ஆராய்ச்சி கொள்கைகள் சபைக்கும் பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான விவசாய தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. தேசிய விவசாய ஆராய்ச்சி கட்டமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பட்டப்பின் படிப்பு பாடநெறிக்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இலங்கை அரசாங்கம் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா இந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார்.

Read more...

புதிய அரசியலமைப்பு நாட்டை ஐக்கியப்படுத்தும் - தயா கமகே

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திடவில்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்தரப்பினர் திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்தரப்பினர் கூறுவதைப்போன்று நாட்டிற்கோ, மக்களுக்கோ தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் அரசாங்ககம் கையெழுத்திடவில்லை. புதிய அரசியலமைப்பானது நாட்டை ஐக்கியபடுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது. ஆனால் இது நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் அவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக தெரிவித்த அமைச்சர் தயா கமகே, சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். அத்தகைய குழுக்கள், பெரும்பான்மை மக்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com