Wednesday, January 16, 2019

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் - பசில்

மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும் என்று, பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொருட்டு சென்றபோது ஊடகங்களிடம் மேற்படி தெரிவித்தார்.

அனைவரது எதிர்பார்ப்பும் மாகாணசபை தேர்தலே. சில மாகாண சபைகளின் அதிகாரக்காலம் நிறைவடைந்து 1 வருடமும் ஆறு மாதங்களும் ஆகின்றன. இந்தநிலையில் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Read more...

கைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூறிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read more...

மத்தியால், மாகாண சபை அதிகாரங்களை மீளவும் பெறமுடியாது - சுமந்திரன் உறுதி

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மீண்டும் பெறமுடியாதவாறு புதிய அரசியல் அமைப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான M . A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை பருத்தித்துறை நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் M .A சுமந்திரனிற்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுக்கையில், “மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும். மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. எனவேதான் நாம் இந்த விடயங்களை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம். ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட தமிழ் சமூகத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இங்கு ஜனநாயகம் மீறப்படுகின்றபோது அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். ஆனால் நாடு முழுவதும் பாதிக்கும்படி ஜனநாயகம் மீறப்படுகின்றபோது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவரது கடமையாகும் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

அங்குணுகொலபெலஸ்ஸ அதிகாரிகள் கைதிகளை தாக்கும் அதிர்ச்சி காணொளி

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் CCTV காணொளிக் காட்சிகளை சிவில் அமைப்புகள் இன்று ஊடகங்களுக்கு வழங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் CCTV கமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்ததாக, சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. குறித்த காணொளியில் தாக்கப்படும் கைதிகள் விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். தம்மை பார்வையிட வரும் உறவினர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தே குறித்த கைதிகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். என்னால் எதனையும் செய்ய முடியாது, நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களைப் போன்று ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என இதன்போது அவர் கூறியதாக எமக்கு தகவல் கிடைத்தது. சிறைச்சாலை அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்த விடயம் கைதிகளை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கும்படியே என்று சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டார்.

மனிதநேயமற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்துமாறு கைதிகள் கோரியதாகவும் சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் தெரிவித்தார். இந்தநிலையில், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவிற்கு, குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.

இவர்கள் குற்றவாளிகள் என்று அடையாளம் காணும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உரியது. அவ்வாறு இருக்கையில் எப்படி சிறைச்சாலை அதிகாரிகள் இவர்கள் மீது இவ்வாறானா தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்?


Read more...

சங்காவிற்கும் தனக்கு நடைபெற்ற சந்திப்பு இதுதான் - அடித்து கூறுகிறார் அமைச்சர்

தனக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் இல்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலரிமாளிகையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமைச்சர் மறுப்பான கருத்தை தெரிவித்துள்ளார். குமார் சங்கக்காரவுக்கும் தனக்கும் இடையில் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும், அதன்போது சுகாதார வேலைத்திட்டங்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னதாக இருவருக்குமான கலந்துரையாடல் 2 மணி நேரம் நடைபெற்றதாகவும், அதில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் வேர்ப்பாளர்தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வெட்டுப்புள்ளி மே மாத இறுதியில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள், மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம், இன்றுடன் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.

மீள்பரிசீலனை பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கப்படும் என்று மொஹான் சில்வா மேலும் கூறினார்.

Read more...

குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும் - மனுஷ எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கவுள்ளமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கூட்டணி அமைக்குமாக இருந்தால் குறுகிய காலத்தில் சுதந்திரக் கட்சி பாரிய அழிவினையே சந்திக்கும் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைப்பதாகக்கூறும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வீணான சவாலுக்கு உள்ளாக வேண்டி வரும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read more...

நாட்டின் அரச தலைவருக்கு கிடைத்த முதற் சந்தர்ப்பம் ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸிற்கான விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவுக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் சுமார் 58 வருடங்களாக நீடிக்கும் நிலையில், நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இது என்பது சிறப்பாகும். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க, 4 நாட்கள் கொண்ட விஜயத்தை ஜனாதிபதி மேற்கொண்டு நேற்று இரவு பிலிப்பைன்ஸை சென்றடைந்தார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் வரவேற்பளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுமிகு சந்திப்பு அமையவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிரசேன, மணிலாவில் உள்ள, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் சென்று அதன் தலைவர் தகெஹிக்கோ நகாப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாக பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளார்.

Read more...

வேண்டாம் என்பதற்காக அல்ல, வேணும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடுவோம் - எஸ்.எம். சந்திரசேன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மாகாண சபைத் தேர்தலை நடத்த கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வட மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தல் வேண்டாம் என்பதற்கு நீதிமன்றம் செல்லவில்லையெனவும், தேர்தலை நடாத்துமாறு கோரியே நீதிமன்றத்தை நாடுவதாகவும் கூறினார்.


Read more...

வடகிழக்கில் பாரிய துரித அபிவிருத்தி திட்டங்கள் 2000 மில்லியன் செலவில்

வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த இரண்டு மாகாணங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கு 2000 மில்லியன் ரூபாயை அரசாங்கம் செலவிடவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு, சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகவே 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, இவை தொடர்பிலான வேலை திட்டங்கள் மேற்கொள்ள்ளப்படும்.

Read more...

அடுத்த தேர்தலில் மைத்திரிக்கே, இடம் வழங்கப்படும் – மஹிந்த ராஜபக்ச தீர்மானம்!

அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த, தமது தரப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன முன்னணியின் கட்சித் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் முழு ஆதரவு இருந்தால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை தாம் ஆதரிக்க தயாராக உள்ளதாக, ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும், ஸ்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 4.2 மில்லியன் வாக்குகளும், பொதுஜன முன்னணியின் 1.5 மில்லியன் வாக்குகளும் இணைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி நிச்சயம் என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்து ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலே முதலில் நடைபெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பொது மக்களை ஏமாற்றிவரும் சிலர், மின்சார நாற்காலியில் அமரப் பார்க்கின்றனர் - கபீர் ஹாசிம்.

பொது மக்களை ஏமாற்றி மின்சார நாற்காலியில் அமர்வதற்கான முயற்சிகளை சில மோசடிக்காரர்கள் மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம் கொண்ட இந்த மோசடிக்காரர்கள் குறித்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவனெல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார்.

எனினும் ஆட்சிக்கு வருவதற்காக, பல சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளதாக கூறிய அவர், மோசடி மற்றும் பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு, இந்த அரசாங்கம் ஒருபோதும் நியமனங்களை வழங்க அனுமதிக்காது என அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

அத்துடன் மின்சார நாற்காலியில் அமர்வதற்காக கடந்த காலத்தில் ஒரு தனிநபர், தமக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை அறிவுறுத்தியதாக தெரிவித்த கபீர் ஹாசிம்,
ஆனால் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும் அதே தனி நபர் தற்போது, மோசடி செய்தவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் ஆதரவாக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்.

எனவே இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து, மக்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் அடுத்த தேர்தலை மக்கள் சரியாக கையாள வேண்டும் என, அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வட மாகாணத்தை மீண்டும் கல்வியில், சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் - சுரேன் ராகவன்.

வட மாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் மாகாணமாக தாம் உருவாக்குவதாகாக, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணம் கல்வியில் அதியுச்ச பெறுபேறுகளை வழங்கக் கூடிய மாகாணம் என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் அந்த பெறுபேறுகளில் தற்போது சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே வட மாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்க தாம் தயாராக உள்ளதாக, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், வட மாகாணத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு, தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தாம் தயாராகி வருவதாக கூறிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், விரைவில் வட மாகாணத்தின் கல்வியில் பாரிய முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

Tuesday, January 15, 2019

சீனாவிடம் 300 மில்லியன் கடன் பெறும் இலங்கை - Reuters வெளியிட்டது செய்தி

சர்வதேச கடன் தரப்படுத்தலில் தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள இலங்கை, சீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு தயாராவதாக 'ரொய்ட்டர் ' இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சீனாவிடம் கடன் பெறுவது தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தமது உறுதிப்பாட்டை வழங்கினார். எனினும், சீன வங்கியொன்றில் இருந்து 300 மில்லியன் கடனை பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதுடன், குறித்த கடன் தொகையை 1000 மில்லியன் டொலராக அதிகரிக்கும் இயலுமை உள்ளதாகவும் ''ரொய்ட்டர் '' வெளியிட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி கூறினார். இதனிடையே, இலங்கை இந்த வருடத்தில் பாரிய தொகை வௌிநாட்டுக் கடனை செலுத்த வேண்டியுள்ள நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னர் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டிய இறுக்கமான சூழ்நிலையில், மீண்டும் சீனாவிடம் கடன் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இலங்கையின் பொருளாதார மந்த நிலையை எளிதாக கணிக்க கூடியதாக அமைகின்றது.

ஜனவரி 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வௌிநாட்டவர்கள் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 3600 மில்லியன் ரூபாவை நீக்கிக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் கணிப்பின்படி, வௌிநாட்டு முதலீட்டாளர்களின் 753 மில்லியன் ரூபா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்து 4353 மில்லியன் ரூபா நிதி வௌியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடத்தில் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 160 பில்லியன் ரூபா நீக்கிக்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றே. இவற்றை கொண்டு நோக்குமிடத்து, 2018 டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது நாட்டில் காணப்பட்ட வௌிநாட்டு இருப்பு 6936 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.

Read more...

சதொச நிறுவனத்தின் போலி முகாமையாளர் பிணையில் விடுதலை

போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் சேவையாற்றி வந்த விற்பனைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கோட்டை மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் எதிர்வரும் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதன்போது நீதவான் அறிவுறுத்தியுள்ளார். சந்தேக நபரான இவர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் சேவையாற்றி வந்த நிலையில், கொழும்பு இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தாம் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவித்து குறித்த பதவியை வகித்து வந்துள்ளார். இந்த வேலையை பெறுவதற்கு போலி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே போலி சான்றிதழ்களை பலர் சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் பலர், பதவி நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சதொச நிறுவனத்தில் சிரேஷ்ட முகாமையளர்களாகவும் பிரதி பொது முகாமையாளர்களாகவும் செயற்பட்டவர்களே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு பதவி நீக்கப்பட்டவர்கள் தாம் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்றதாக போலி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Read more...

வாயால் வடை சுட்டு விற்கின்ற ஏமாற்று வித்தையை முஸ்லிம் காங்கிரஸ் பாடையில் போடுதல் வேண்டும்! சீறுகின்றார் ரிபாஸ்

வாயால் வடை சுட்டு விற்பனை செய்கின்ற ஏமாற்று வித்தையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருவது அவர்களின் இயலாமையையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது என்று தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்பு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எல். ரிபாஸ் தெரிவித்தார்.

இவரின் மருதமுனை இல்லத்தில் நேற்று (14) திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கல்முனை மாநகரத்தின் நிலை தொடர்பாக குறிப்பிடும் போது மேலும் பேசியவை பின்வருமாறு,

கல்முனை மாநகரம் அழகும், பசுமையும் நிறைந்த மாநகரமாக செழுமை பெற வேண்டிய தேவைப்பாடு பல தசாப்த காலங்களாக பேசப்பட்டு கொண்டே வருகின்றது. ஆயினும் அது பழைய நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். இருமினால் இடிந்து விழுகின்ற நிலையில்தான் கல்முனை மாநகர சபை கட்டிடம் உள்ளது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.

கல்முனை மாநகர சபை முதல்வராக இருந்தவர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ். இக்கட்டிடத்தை எமது தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்தபோது புதுப்பித்து தர பகீரத முயற்சிகள் எடுத்தார். ஆயினும் குறுகிய சுய இலாப அரசியலுக்காக ஹரீஸ் போன்றோர் தலையிட்டு எமது தலைவருக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். இப்போது ஹரீஸ் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக உள்ள நிலையில் அதற்கான பிராயச்சித்தமாக நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை உருவாக்கி தந்து அவரின் ஆளுமையை நிரூபிக்க வேண்டும். கல்முனை பஸ் தரிப்பிடத்தை நவீன முறையில் மேம்படுத்தி தர வேண்டும். ஏ. ஆர். எம். மன்சூர் பொது நூலகத்தை இந்த நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தி தர வேண்டும். கல்முனை சந்தை ஒல்லாந்தர் கால கட்டிடம் போல காட்சி தருகின்றது. ஆனால் ஊமையின் கையில் கிடைத்த ஒலிவாங்கி போலதான் ஹரீஸுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு கிடைத்து உள்ளது என்பது எனது அபிப்பிராயம் ஆகும்.

ஊரவன் பெற்ற பிள்ளைக்கு அவருடைய பெயரை சூட்டி மகிழ்கின்ற செயலை ஹரீஸ் கைவிட்டு சொந்த முயற்சியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஏனென்றால் மக்களின் வரி பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட திண்ம கழிவகற்றல் இயந்திரத்தை அவருடைய அமைச்சு வழங்கியதாக சொல்லி பொய்யான பெருமை அடைகின்ற அளவில்தான் அவரின் கையாலாகாத்தனம் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டு கொடுக்கின்ற முஸ்லிம் காங்கிரஸால் கல்முனை மக்களுக்கு எந்த உருப்படியான நன்மைகளும் கிடைத்ததாக இல்லை என்பதே கடந்த கால அனுபவங்கள் கற்று தந்த கசப்பான பாடங்கள் ஆகும்.

Read more...

ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் தேர்தலுக்கு அஞ்சாது - அமைச்சர் சந்திராணி பண்டார

ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் தேர்தலுக்கு அஞ்சாது என்று அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். அனுராதாபுரத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது என்று தெரிவித்த அவர், அனைவரது யோசனையையும் உள்வாங்கியே புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் சந்திராணி பண்டார இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு கொண்டுவரப்பட்டாலும் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணா நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, ஏனைய மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபோது அவர் மேற்படி தெரிவித்தார்.

Read more...

ஆய்வுகளுக்காக பல்கலைக் கழகங்களை பாராட்டுகின்றார் ரவுப் ஹக்கீம்

அனர்த்த அபாயங்களை குறைப்பதற்கான கல்விசார் ஆய்வுகளில் பல்கலைகழகங்கள் ஈடுபடுவது போற்றத்தக்க செயல் என்று உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டியுள்ளார். கொழும்பில் இன்று சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது உயர்கல்வி அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

ஐ நாவின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை கையாள்வதற்கு அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பிலான கல்விசார் ஆய்வுகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்க செயல் ஆகும். அத்துடன், பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைத்து செயல்படுத்தும் அர்த்த முகாமைத்துவ ஆளுமை விருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான சர்வதேச மாநாடு மிகவும் பயன் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Read more...

நாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை? போடுங்கள் குப்பை மாலை!

நாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பது யாவரும் அறித்த விடயம்.

இந்த அடிப்படையில் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதானமான ஆணை என்பது நகரை சுத்தமாக வைத்திருத்தல். சுத்தமான தமிழில் சொல்வதானால் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை யாதெனில் கழிவு அகற்றல், துப்பரவை பேணுதல்.

உலகின் கவனத்தை ஈர்த்த நகரங்களை எடுத்துக்கொண்டால் அவை அதன் துப்பரவினால் அந்த இலக்கை அடைந்துள்ளது. அத்துடன் அந்த நகரில் வாழுகின்ற மக்களும் ஒர் ஒழுக்கமுள்ள சமூகமாக , ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படுகின்ற சமூகமாக, நாட்டுப்பற்றுள்ள சமூகமாக, சமூதாய உணர்வுள்ள சமூகமாக வளர்கின்றது.

மேற்படி கடமையை செய்வதற்காகவே (குப்பபை அள்ளுவதற்காக) கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு குழுவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அக்குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை தமிழரசுக் கட்சி இமானுவல் ஆனோல்ட் என்பவருக்கு வழங்கியிருக்கின்றது.

அதாவது யாழ் மாநகர சபையின் எல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் நகர சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு குப்பை அள்ளும் பணிக்காக மக்கள் என்ற தொழில் வழங்குநர்களால் புதிய நியமனம் பெற்றார் இமானுவல் ஆனோல்ட்.

கடந்த மார்ச் மாத இறுதியில் பதவியேற்ற ஆனோல்ட் இதுவரை தனக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை அள்ளும் பணியை விட்டுவிட்டு , நாடு நாடாக பறந்து அலைவதை அவதானித்தோம். அவ்வாறு அவர் பறந்து நகரங்களின் சுத்தம் , சுகாதாரம் , அழகு , வடிவமைப்பு, ஒழுங்கு , நீதி தொடர்பில் மக்களுடன் கலந்தாலோசித்தாரா என்று தேடினால், இல்லை அவர் பேசியது முழுக்க இலங்கையில் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்கள்..

ஐசே ஆனோல்ட் உம்மை நியமித்தது குப்பை அள்ள, வடிகால்களை துப்புரவு செய்ய, கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த, பராமரிப்பற்ற கால்நடைகளை பராமரிக்க என ஒரு வேலைத்திட்டத்திற்காக. ஆனால் அது உமது கண்ணுக்கு தெரியவில்லையாயின் இங்கே சில படங்களை பாரும்.






இவ்வாறு யாழ் நகரம் இருக்கின்றபோது, ஆனோல்ட்க்கு மலர்மாலை வேறு போட்டு வரவேற்கின்றது தமிழ் சமூகம்.. உள்ளுராட்சி சபையை நிர்வகிப்பதற்கு ஆணையை வழங்கிவிட்டு அந்த கடமையை நிறைவேற்றாதாபோது குப்பையை சேகரித்து மாலைகட்டி சம்பந்தப்பட்டடவர்களின் கழுத்தில் மாலையாக சூடுவதை விடுத்து மலர்மாலை போடுமாக இருந்தால், தமிழ் சமூகத்திற்கு தந்தை செல்வா சொன்னதைத் தான் மீண்டும் சொல்லவேண்டும்.. 'கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.'

Read more...

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை !

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காபன் வரி அறவிடும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே இந்த எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

காபன் பரிசோதனை வரியை எரிபொருள் சூத்திரம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்தபோதே சேர்த்திருக்க வேண்டும். இந்த அரசாங்கம் இதுவரையில் அறிமுகம் செய்த புதிய விடயங்களில் பலதும் பாரிய பிரச்சினையுள்ளன. இதேபோன்ற ஒரு அம்சமாகவே இந்த காபன் வரி காணப்படுகின்றது.

எனவே தனியாக காபன் வரி என்ற ஒன்று அவசியமற்றதாகும். மேலும், நாம் பயணங்களுக்கு பயன்படுத்தாது இருக்கும் வாகனங்களுக்கும் இந்த வரியை அறவிடுவது நியாயமான ஒன்றா? என்பதை, இவ்வரி தொடர்பில் ஆலோசனை வழங்கியவர்கள் கருத்தில் கொள்ளாதது ஏன்? எனவும் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more...

போர் வீரர்களை எந்த நீதிமன்றுக்கும் அனுமதிக்க மாட்டோம். ஐ.தே.க

இந்நாட்டினை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய எமது போர் வீரர்களை எந்த நீதிமன்றுக்கு கொண்டு செல்லவும் நாம் அனுமதிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

ரத்தினபுர கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் மக்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், எமது படைவீரர்களை நீதிமன்றுகளுக்கு கொண்டு செல்ல ஐக்கிய தேசியக் கட்சி அனுமதித்துவிடும் என்று பல்வேறு பட்ட கட்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்றார்கள். ஆனால் நான் இன்று ஐக்கி தேசியக் கட்சியின் அமைச்சராக இவ்விடத்தில் நின்று கூறுகின்றேன், எமது வீரர்களை நாம் எந்த நீதிமன்றுக்கும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

படை வீரர்களுக்கு எதிரான விசாரணைகள் சர்வ தேச நீதிபதிகள் மத்தியில் இடம்பெறவேண்டும் என வேண்டுதல் விடுக்கப்படும் இத்தருணத்தில்தான், அமைச்சர் மிகத் தெளிவாக மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்தின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகள் அல்ல உள் நாட்டு நீதிபதிகள் முன்னிலையில் கூட படை வீரர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் என்பதாகும்.

Read more...

தைத்திருநாளில் உழவர் பெருமக்களை தமிழில் வாழ்துகின்றார் எதிர்கட்சித் தலைவர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்திட அயாராது உழைக்கும் உழவர் பெருமக்களின் நலனை பேணுவதில் நான் என்றும் பின்னின்றவன் இல்லை என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் எம்நாட்டில் நல்லிணக்கம் மற்றும் செல்வச் செழிப்பு உருவாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





Read more...

டக்கிளஸை நம்பவா? சுமந்திரனை நம்பவா? குழப்பத்தில் சிங்கள மக்கள்.

உத்தேச அரசியல் யாப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள „ஒருமித்தநாடு" என்ற சொற்பதம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருமித்த நாடு என்பதன் பொருள் ஒற்றையாட்சிதான் என சுமந்திரன் சிங்கள மக்களுக்கு தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்த முனைகின்றபோது, இல்லவே இல்லை ஒருமித்தநாடு என்பதன் பொருள் சிங்களத்தில் „எக்சத்ரட்ட" அதாவவது „இணைக்கப்பட்ட நாடுகள்" எனத் தெரிவிக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா.

மேற்படி இரு நபர்களது கூற்றுக்களாலும், குளம்பிப்போயுள்ள சிங்கள மக்கள் இவர்களில் தமிழ் பண்டிதர் யார் என்றும் எவரை எங்களால் நம்ப முடியும் என்ற கேள்வியையும் கேட்கின்றனர்.

அதே நேரம் „ஒருமித்தநாடு" என்றால் சிங்களத்தில் „எக்சத்ரட்ட - இணைக்கப்பட்ட நாடுகள் அல்லது பிராந்தியங்கள்" எனவே அது இந்நாட்டில் பெடரலுக்கு வழிவிடுகின்றது. ஆகவே நான் குறித்த உத்தேச வரைபை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தா அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுக்கூட்டங்களின்போது, „ஒற்றையாட்சி" என்றே குறிப்பிடுங்கள் என பலமுறை கோரியபோதும், அதற்கு சுமந்திரன் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததையிட்டு டக்கிளஸ் மனமுடைந்துள்ளதாக அவ்விணையம் மேலும் தெரிவிக்கின்றது.

Read more...

புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக, உண்ணாவிரதத்தில் குதித்த பௌத்த பிக்கு.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள அரசியல் அமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை அரச மரத்தடியில் இன்றைய தினம் குறித்த உண்ணாவிரதை போராட்டம் பௌத்த பிக்குவால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த தேரரே, இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக அமத்த தம்ம தேரர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் கடற்படைத்தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா, நிறுத்த வேண்டும்’ என எழுதப்பட்ட பதாதைகளும், இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும், அவர் அமர்ந்துள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தனி நபரின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியலமைப்பை கொண்டுவர முடியாது - ரவி

தனி நபரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியல் அமைப்பை கொண்டு வர முடியாது என, மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு பம்பலப்பட்டி, வஜிர பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் நாட்டில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே எமக்கான வெற்றியாகும் என் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தவொரு தேர்தலுக்கும் இதுவரை அஞ்சியதே இல்லை என அவர் தெரிவித்தார். அதே போன்று அடுத்து வரப்போகும் தேர்தலிலும் தமது தரப்பே அமோக வெற்றியடையும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கட்சிக்குள் சில முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான விடயமே. அதனை பெரிதாக பேசி, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சில சூழ்ச்சிக்காரர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு கட்சி என்ற ரீதியில் பலமான நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி இருப்பதாக அவர் கூறினார். முதலில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுதான் இடம்பெற வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் கூட நாம் அதற்கும் நாம் தயாராகவே உள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் எமது வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும், புதிய அரசமைப்பு தொடர்பில் பல்வேறு இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

ஆனால், நாம் அனைத்து இன மக்களுக்காகவே புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவோம். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியல் அமைப்பை கொண்டு வர முடியாது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் எமக்கு எதிராக சில சூழ்ச்சிகள் இடம்பெற்ற போதிலும், அவை அனைத்தையும் நாம்
முறியடித்துள்ளோம். பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கவும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவையனைத்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.. அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே நாளில் நிவர்த்தி செய்துவிட முடியாது. மக்களின் நலனுக்காக சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்திலேயே, பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Read more...

மொழி பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக, விசேட குழுவொன்று நியமனம் - ஆளுநர் சுரேன் ராகவன்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் மொழி பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரடங்கிய குறித்த விசேட குழுவுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை, அண்மையில் வட மாகாண ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட சுரேன் ராகவன் நியமித்துள்ளார். அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவானால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, இந்த குழு தமது பணிகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குழுவின் உறுப்பினர்களாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் முன்னாள் அதிபர் எஸ்.பத்மநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீஸன், யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் திரு மொஹைதீன் ஹனி சேகு ராயீத், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுதர்ஷி பெர்னாண்டோ ஹப்புகொட்டுவ ஆகியோர் நியமிக்கப்பட்டுன்னர்.

Read more...

நாடாளுமன்ற மோதல் குறித்த அறிக்கையை, சட்டமா அதிபருக்கு அனுப்ப தயார் - பிரதி சபாநாயகர்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் போது கூடிய நாடாளுமன்ற அமர்வில் பெரும் மோதல் ஏற்பட்டதை அடுத்து அது குறித்து ஆராய்வதற்காக, ஏழு பேர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.

சபாநாயகர் கருஜயசூர்யாவால் இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமை தாங்குவதுடன், இந்த குழுவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் மோதல் குறித்த அறிக்கையினைச் சட்ட மா அதிபருக்கு அனுப்ப தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, பிரதி சபாநாயகர் இதனை கூறினார்.

இறுதியாக கூடிய இந்த குழுக் கூட்டத்தில் மோதல் குறித்த அனைத்து அறிக்கைகளையும் தயாரித்து வைத்துள்ளதாக தெரிவித்த அவர், சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடு திரும்பியவுடன் சட்டமா அதிபருக்கு இந்த அறிக்கையை அனுப்புதற்கான துரித நடவடிக்கைகள் இடம்பெறும் என கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கியமை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் மோதல்கள் குறித்து நாடாளுமன்ற காணொளிகள், வாக்குமூலங்கள் மற்றும் சொத்து சேத விபரங்களை மதிப்பீடு செய்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய நாடு திரும்பிய பின்னர், இந்த குழு தமது அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய தினம் காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளைய தினம் இரவிலிருந்து வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காற்று அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காற்று அதிகமாக வீசும் போது, பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .அத்துடன்
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமென்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.

அதிக காற்றும் மழையும் பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்தொழிலாளர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வழிமன்றலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Read more...

அடுத்த மாதம் முதல் இ-ஹெல்த்கார்ட்கள் அறிமுகம்

இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்களுக்கு இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் நடவடிக்கை அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் களுத்துறை வைத்தியசாலை மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் ஏழுமாதங்களில் சகல மக்களுக்கும் இ-ஹெல்த்கார்ட்களை வழங்குவது இலக்காகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 71ஆ வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும்
ஏப்ரல் மாதம் இடம்பெற்றவுள்ளது. இந்த நிகழ்வின்போது, இ-ஹெல்த்கார்ட்கள் இலங்கையர்களுக்கு அறிமுகம் செய்யும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இ-ஹெல்த்கார்ட்டில் நோயாளர்களின் முழுமையான மருத்துவ அறிக்கை உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன்படி, நோயாளர்களுக்கு நாட்டின் எந்தப் பிரதேச வைத்தியர்களிடமும் விரைவாக சிகிச்சையை பெற்றுக்கொள்ள ஏதுவாக குறித்த இ-ஹெல்த்கார்ட் அமையும்.

இந்த நிலையில், நவீன தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Read more...

நாட்டை விட்டு புறப்பட்டார் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்சிற்கு பயணமாகியுள்ளார். இன்று வியாஜம் மேற்கொண்ட ஜனாதிபதி ஐந்து நாட்கள் பிலிப்பைன்சில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே உத்தியோபூர்வமாக வரவேற்கவுள்ளார்.

இதன்பேது இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் மாற்றம்

சர்வதேச நாணயநிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதி நிதிகளுக்கும் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உத்தியோக பூர்வ twitter தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் அமைந்துள்ள அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தற்போது பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால், இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Read more...

நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டுகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தைப்பொங்கல் பண்டியை முன்னிட்டு பல கொண்டாட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் கொழும்பில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் இன்றைய பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கலை பொங்கி மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடியுள்ளனர்.

அத்துடன் மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றமை இங்கு சிறப்பம்சமாகும்.

அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் இணைந்து மிகவும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கிளிநொச்சியில், முறிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் பொங்கல் நிகழ்வும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. தைத்திருநாளான இன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பொங்கலும் பகிரப்பட்டது.

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் வீடுகள், வர்த்த நிலையங்கள் என பல பகுதிகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விசேட நிகழ்வில் படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை மலையகத்தின் ஹட்டன், நுவரெலியா , கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. குறிப்பாக கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, ஹட்டனில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் நிகழ்வு நடைபெற்றதோடு, இதில் சர்வமத தலைவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இதுதவிர நாட்டின் அனைத்து பாகங்களிலும் பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து நேயர்களுக்கு இலங்கை நெட் குழுமம் தமது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

Read more...

இந்த வருடத்திற்கான ஹஜ் கோட்டாவில் அதிகரிப்பு

கடந்த வருத்திலும் பார்க்க இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டாவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீமுக்கும் சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் பயனாக இம்முறை இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். இதற்கு முன்னைய வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாவின் தொகை 3000 க்கு அண்மித்த தொகையாகக் காணப்பட்டநிலையில், இந்த வருடம் இந்த அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com