Tuesday, January 15, 2019

வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

வத்தளை ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பும்பா மற்றும் குடு செல்லி ஆகிய இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் இந்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம் வத்தளை ஹேகித்த பகுதியில் காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பாதாள குழு ஒன்றை நோக்கி பிறிதொரு காரில் வந்த பாதாள உலக குழுவினர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் . இந்த தாக்குதலுக்காக, ரீ 56 ரக துப்பாக்கிகள் இரண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த இரு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவத்தில் பலியானவர்கள் கொழும்பு பகுதியைச் 31 மற்றும் 38 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வத்தளை காவத்துறை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மேல்மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கான குற்றவியல் பிரிவு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த விசாரணைக்கு குழுவினர், குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Read more...

புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பான பெயர்ப்பட்டியல் அடுத்தவாரம்

அடுத்த வாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக, தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பான பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய சுமார் 303 தேசிய பாடசாலைகளிற்காக 800 இற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Read more...

நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தமிழ் மக்களின் எதிர்காலம் வளமடைய வேண்டும் - இரா.சம்பந்தன்.

சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக தமிழ் மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் தமது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எமது தைல மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

எமது மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதில் பெருமை கொள்வதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தத்தமது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, January 14, 2019

சுனில் ஹதுன்னெத்தி, ரில்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷீ வீரவங்ச தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சாட்சிகளை முன்வைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம்6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அதிசிறந்த இராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் சாதாரண கடவுச் சீட்டு என்பவற்றை பெற்றுக்கொளவதற்காக போலியான தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


Read more...

பிரியா குடும்பம் நாடுகடத்தப்படுவார்கள் - அவுஸ்திரேலியா உறுதி

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார். அவர்கள் உரிய காலத்தில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நீண்ட காலமாக வசித்து வந்த பிரியா மற்றும் நடேசலிங்கம் தம்பதிகளும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் இந்த வருடம் நாடு கடத்தப்படும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

இந்த இலங்கை குடும்பத்தை நாடுகடத்த வேண்டாம் என்றும், அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன. ஆனாலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று உள் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதிபட அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரிஸ்பனில் உள்ள ஊடகம் ஒன்றிருக்கு கருத்து வெளியிட்ட பீட்டர் டட்டன், குறித்த இலங்கை குடும்பம் பல்வேறு நீதிமன்றங்களை நாடியிருந்த போதிலும் நியாயமான ஏதிலிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று சுட்டி காட்டினார். ஆகவே அவர்கள் உரிய நேரத்தில் நாடுகடத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Read more...

எதிர்கட்சிக்கான சலுகைகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒருபோதும் வழங்க கூடாது - சீறும் உதய கம்மன்பில.

எதிர்க்கட்சிக்கான சலுகைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கவே கூடாது என, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தல் விடுத்துள்ளார். இன்றைய தினம் மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை கூறினார்.

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு எதிராக வாக்களித்தமை என பல்வேறு சாதனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிறைவேற்றியுள்ளார்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, அமைச்சரவையின் முடிவுகளைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்தாலோசித்துதான் அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, சுமந்திரனோ, வடக்கு அபிவிருத்தி அமைச்சை தமது வேண்டுகோளுக்கு இணங்கவே ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டார் என்றுக் கூறி வருகின்றார்.

அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் இந்த அரசின் பங்காளியாகவே கருத வேண்டும். இப்படியானவர்களுக்கு இனியும் எதிர்க்கட்சியில் இருக்க எந்தவித தகுதியும் இல்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறான ஒரு கட்சி இருந்ததில்லை. எனவே, நாடாளுமன்றத்தின்போது எதிர்க்கட்சி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும், எதிர்க்கட்சியாக விவாதத்தில் உரையாற்றவும் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடமளிக்க முடியாது என அவர் கூறினார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்விற்கு முன்னர் இதுதொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன், கலந்துரையாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசின் பங்காளியாக அங்கீகரிக்குமாறு தங்க கேட்டு கொள்ளவுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

Read more...

புதிய அரசியலமைப்புக்கு, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு காணப்படுகிறது - உண்மைகள் மறைக்கப்படுகின்றது தவராசா

புதிய அரசியல் அமைப்பு குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு காணப்படுவதாக, முன்னாள் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே, சி.தவராசா இதனை கூறினார். புதிய அரசியலமைப்பு
உருவாக்கச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் காணப்படுகின்றன. எனினும் அதனை பற்றி ஐக்கிய தேசிய கட்சியினர் கருத்து வெளியிடாது மூடி மறைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள், நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. அதிலும் அரசியல் தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக சி.தவராசா கூறினார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர்களின் அறிக்கைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி இருப்பதாகா அவர் கூறினார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய வரைபாக இல்லாவிட்டாலும், அதில் இன்னும் எமக்குத் தேவையான சில சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன.

இந்த விடயம் குறித்து எமது மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளதாக கூறிய தவராசா, அந்த உண்மையைச் சொல்வதற்கு புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் தயங்கி வருவதாக கூறினார்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு குறித்து அதிக கரிசனை கொண்டிருப்பது மக்களை ஏமாற்றவே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

TNAயை முழுமையாக ஆளும் தரப்பு ஆசனத்தில் அமர வைப்போம் - உதய கம்மன்பில

தமிழ் தேசிய கூட்டமைப்பை அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமரச்செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றது. இவ்வாறு தமிழ் தேசிய கூட்மைப்பிப்பு நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு எட்டப்படவேண்டும். அதற்கு நாம் சபாநாயகருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பு உறுப்பினர்களை முழுமையாக அரசாங்கத்தின் ஆசனத்தில் அமர செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று உதய கம்மன்பில கூறினார்.


Read more...

யாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.

குற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர்  இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் நாளை காலை 11 மணிக்கு விசாரணைகளுக்காக, குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரசன்னமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினரால் தமக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக , யாழ்ப்பாண மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக தெரிவித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர், சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அநாமதேயமான முறையில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்ததாக கூறினார்.

இந்த சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் பணிகளை தாங்கள் முன்னெடுத்த போது, சம்பவ இடத்திற்கு வந்த ஒரு குழு தாங்கள் ஒரு நிறுவனமென்றும், தாங்கள் சட்டவிரோதமாக இவற்றை அமைக்கவில்லை என்றும் கூறியதாக மேயர்  தெரிவித்தார்.

ஆனாலும் சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேபிள் கம்பங்களை அமைப்பதற்கு சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென்று நாங்கள் தெரிவித்திருந்தோம். எனினும் குறித்த குழுவினர், நாங்கள் செய்வது தவறு என்றும், தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் கூறியதாக யாழ்ப்பாண மாநகர மேயர் கூறினார்.

இந்த விசாரணைகளின் பிரகாரம் இமானுவேல் ஆர்னோல்ட் நாளைய தினம் முற்பகல் 11 மணிக்கு காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரசன்னமாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி தொடர்பில் காவல் துறைமா அதிபருக்கும் தொடர்புள்ளதா?

குரல் பதிவு ஒன்றை வழங்குவதற்காக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று அரச பகுவாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சி தொடர்பான குரல் பதிவுகளை பரிசீலிப்பதற்கு இன்று காவல்துறை மா அதிபரின் குரல் மாதிரி பெறப்பட்டது.

இன்று காலை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த காவல்துறைமா அதிபர் சுமார் 45 நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். குரல் பதிவொன்றை வழங்குவதற்கு காவல்துறைமா அதிபர் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதனிடையே குரல் பதிவை வழங்கிய பின்னர் குறித்த திணைக்களத்தை விட்டு வெளியேறிய அவரிடம் ஊடகவியலார்கள் கேள்விகளாய் எழுப்பி இருந்த போதும் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை.

Read more...

தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பு குறித்து, பொறுப்பு கூற வேண்டிய தேவையில்லை - தயாசிறி ஜயசேகர.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில், தனிப்பிட்டவர்களின் கருத்துக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பொறுப்புக் கூறமுடியாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் காணப்படுகின்றது.

எனினும் இதனைக் காரணமாக வைத்து அனைவரையும் வேட்பாளராக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்து ஆலோசித்த பின்னர், இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அவர் கூறினார்.

அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலனுக்காக தமது கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பின் அங்கத்தவர் அமோக வெற்றி பெறுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதே, எமது பிரதான இலக்கு - வாசுதேவ நாணயக்கார சூளுரை.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதே, தமது பிரதான நோக்கம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் .

அதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வாசுதேவ நாணயக்கார இதனை கூறினார்.

தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ தயாராக உள்ளத்தாக்காக கூறிய அவர், எதிர்வரும் தேர்தலில் ரணிலை தோற்கடிப்பது உறுதி என கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு, அடுத்த தேர்தலில் தாம் களமிறங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.

Read more...

பௌத்தர்களின் புனித நூலான திரீபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி

பௌத்தர்களால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகமானது கடந்த 5ம் திகதி தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம் பெற்றது. இதனையடுத்து உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 5ம் திகதி இடம் பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி அவர்கள் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் பிரேரணை அமைச்சரவை முன்னிலையில் முவைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி இன்றைய தினம் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதோடு எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது இப் பிரேரணை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவது தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் உதய.ஆர்.செனவரத்ன தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

Read more...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் தொகை குறைந்து செல்கிறது - பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது என்று கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியம் - காரைதீவின் வெள்ளி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

ஒன்றிய தலைவர் என். நிராஜ் தலைமையில் இதன் உறுப்பினர்கள் மற்றும் கடந்த கால தலைவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம், சிறப்பு விருந்தினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன், கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் ஏ. பகிரதன் போன்றோர் கலந்து கொண்டனர்.

விழாவின் விசேட அம்சங்களாக ஒன்றிய மாணவர்களின் கலை நிகழ்வுகள், பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவான மாணவர்கள் மற்றும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த் மாணவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்புகள், அதிதிகளுக்கான கௌரவிப்புகள், வெள்ளி விழா மலர் வெளியீடு, ஒன்றியத்தின் ரி சேர்ட் அறிமுகம் ஆகியன இடம்பெற்றன.

பேராசிரியர் சுதர்சன் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது. எல்லோராலும் வைத்திய கலாநிதிகளாக, பொறியியலாளர்களாக வர முடியாது. ஆகவே வர்த்தக, கலை துறைகளுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ் மாணவர்கள் அதிக அளவில் கூடுதல் சிறப்பு புள்ளிகள் மற்றும் அடைவுகளை பெறவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் வெளிநாட்டு புலமை பரிசில்களுக்கு தமிழ் மாணவர்கள் பொதுவாக விண்ணப்பிப்பதில்லை. இவற்றுக்கு விண்ணப்பிக்குமாறும் இவர்களை ஊக்குவிக்க வேண்டி உள்ளது. வெகுவிரைவில் இந்திய புலமை பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.

பல்கலைக்கழக உயர் கல்வி மூலமாக சமுதாயம் மாத்திரம் அன்றி இம்மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளும் சிறப்பு பெறுகின்றன. இங்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவது பெருமகிழ்ச்சி தருகின்றது, பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியம் - காரைதீவு கடந்த 25 வருடங்களாக கல்வி துறைக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் மகத்தானவை. இதுவும், இது போன்ற அமைப்புகளும் எமது மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு அதிக அளவில் தெரிவாவதை காத்திரமான வகைகளில் ஊக்குவிக்க வேண்டும்.

நான் இந்த இடத்தில் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன். தரம் 05 மாணவர்களை வாழ விடுங்கள். அவர்களை புலமை பரிசில் பரீட்சையின் பெயரால் கொன்று விடாதீர்கள். தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெற்றோர்களின் கௌரவத்தை நிலை நாட்டுகின்ற போட்டியாக மாறி உள்ளது.

பிரதம விருந்தினரின் உரை

பிரதம விருந்தினர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் பேசியபோது பிள்ளைகளுக்கு நாம் வழங்குகின்ற கல்வி அறிவுக்கு இணையாக எதுவும் இருக்க முடியாது. பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற எமது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது. கஷ்டத்தை கருத்தில் கொள்ளாது கற்றலையும், கற்பித்தலையும் நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். இங்கு பரிசில்கள் பெற்ற மாணவர்களும் சரி, அடுத்து வருகின்ற மாணவர்களும் சரி அவர்கள் முன்னேறுவதற்கான வழி வகைகளை தேடி கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது என்பது இலகுவான காரியம் அல்ல. ஏனென்றால் சில மன்றங்களும், சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு வருடங்களிலேயே நின்று போய் இருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களுடன் சம்பந்தப்பட்டு, சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் மகத்தான கல்வி பணிகளை ஆற்றி வருகின்ற இந்த ஒன்றியம் மென்மேலும் முன்னேறி சென்று பொன் விழா, நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.

(எஸ்.அஷ்ரப்கான்)








Read more...

வடகிழக்கில் 10 ,000 வீடுகள் பொங்கலோடு நிர்மாணம்

வட கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டங்களின் முதற்கட்ட பணிகளை எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம். புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட பணியின்போது 4 ஆயிரத்து 750 வீட்டுக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான நிதி மாவட்ட செயலகங்களுக்கு இடைக்கால ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 1500 வீடுகள், கிளிசிநொச்சியில் 670 வீடுகள், முல்லைத்தீவில் 630 வீடுகள், வவுனியா 450 வீடுகள், மன்னாரில் 350 வீடுகள், மட்டக்களப்பில், 625 வீடுகள், திருகோண மலையில் 400 வீடுகள், அம்பாறையில் 125 வீடுகள் அமையப்பெறும்

குறித்த வீடுகள் மக்களின் பாரம்பரிய வீடுகள் என்று வகைப்படுத்தப்படும் கல்வீடுகளாக அமையும் அதேநேரம், யுத்தத்தினால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் தங்கி இருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். பயனாளிகள் தெரிவின் போது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் போனோரை கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்பைடையில் இந்த வீடுகள் வழங்கப்படும்.

இந்த வீடுகள் அனைத்தும் 550 சதுர அடி பரப்பில் கட்டப்படும். இதற்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும். இதற்கு அமைய வீடு ஒன்றிற்கு 10 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சுதந்திர கட்சி, பெரமுன தலைவர்கள் எதிர்வரும் தேர்தலில் எம்முடன் இணைகிறார்கள் - அக்கிலவிராஜ் திருப்பம் மிகு கருத்து

நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றின்போது யாரும் எதிர்பாராத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

யாப்பகுவ தொகுதியின் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் அடுத்துவரும் தேசிய தேர்தல் ஒன்றின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், பொதுஜன பெரமுனவிலிருந்தும் மக்கள் எதிர்பாராத தலைவர்கள் எம்முடன் வந்து இணைவார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர். ஆகவே தேசிய மட்ட தேர்தல் ஒன்று வரும்போது அவர்கள் எம்முடன் வந்து அமர்ந்து கொள்வார்கள் என்று அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஐ நாவில், மார் 20 ல் இலங்கை தொடர்பிலான விவாதம்

இலங்கை குறித்த பாரிய விவாதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ம் திகதி இடம்பெறவுள்ளதென ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ நாவின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ம் திகதி வரையான சுமார் 25 நாட்கள் நடைபெறவுள்ளன. ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானங்களை மார்ச் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி வழங்கி இருந்தது.

இதன்படி 40 வது ஜெனிவா மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கின்றது. இந்த மாநாட்டில் இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் தொடர்பிலான முக்கியத்துவம் மிகு விவாதம் மார் 20 ல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஒரு கோடியில் ஒரு சதமும் எடுக்கமாட்டோம் - ரில்வின் சில்வா

அண்மையில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விமல் வீரவன்சவினால் ஒப்படைக்கப்படவுள்ள ஒருகோடி ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை, மக்கள் பணிக்காகச் செலவிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜேவிபியின் புலமைச் சொத்துக்களைக் கையாடி புத்தகமொன்றை வெளியிட்ட குற்றத்திற்காக, வர்த்தக மேல் நீதிமன்றம் மனுதாரருக்கு விமல் வீரவன்ச ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு அறிவித்திருந்தது. இந்த தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த தீர்ப்புக் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் வினவிய போதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

விமல் வீரவன்சவினால் வழங்கப்படும் நஷ்டஈட்டுத் பணத்தில் தாம் ஒரு சதத்தைக் கூட எடுக்கப்போவதில்லையெனவும் முழுப்பணத்தையும் மக்கள் பணிக்காகவே செலவிட போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நானோ எனது செயலகமோ பொறுப்பு அல்ல - ஜனாதிபதி

சில விடயங்களுக்கு அமைச்சுக்களே வகை கூற வேண்டும் எனவும், ஜனாதிபதியோ ஜனாதிபதி செயலகமோ அவற்றுக்கு உரிய தீர்வு தர முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனதிபதி அமைச்கள் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைத்தார்.

புதிய அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ளது. ஆனால் அந்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள், நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்படாதது குறித்து சில தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி விரல் நீட்டுகிறார்கள்.

இவ்வாறு நடந்து கொள்வது முற்றிலும் தவறான கருத்து என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமைக்கு குறித்த அமைச்சுக்களே வகைகூற வேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும். எவ்வாறானபோதும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர்கள் சபையை நியமிக்கின்றபோது அதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாகவே அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Read more...

தேர்தல் ஆணைக்குழு மஹிந்தவை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் - குமார வெல்கம

மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக பரிந்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசியல் அமைப்பின் சமஷ்டி பண்புகள் முன்னிலைப்பெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Read more...

Sunday, January 13, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் - ஜனாதிபதி அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். தேர்தலை உடன் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது 6 மாகாண சபைகளின் நடவடிக்கை ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதகமானது என கூறினார். எனவே அடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபை தேர்தலையே நடத்த வேண்டும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த மாகாண சபை தேர்தலில் மக்கள் தனக்கு தடையின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் மாகாண சபை தேர்தல் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த மாகாண சபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Read more...

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்தவர்கள், ஜனநாயகத்தையே சீர்குலைத்து விட்டனர் - கொந்தளித்தார் நாமல்.

நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள் என போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியள்ளார்.

கடந்த தினங்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பன்னங்கண்டிப் பிரதேசத்திற்கு, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பு செய்து, மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச, இந்த பணிகளுக்காக இளைஞர் அமைப்பொன்றும் தம்முடன் இணைந்துக் கொண்டதாக கூறினார்.

கிளிநொச்சிக்கு இன்று வந்துள்ளோம். இந்தப் பணியை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இந்தப் பகுதி மட்டுமன்றி, ஏனைய பகுதிகளுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைத்திருந்தால், வடக்கில் பல்வேறு முன்னேற்றகரமான அபிவிருத்தி பணிகளை மேகொண்டிருக்க முடியும். எனினும் அவர் மக்களை நன்கு ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறினார்.

வடக்கு மக்கள் மட்டுமன்றி, தெற்கில் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருட்படுத்தவில்லையென கூறிய நாமல் ராஜபக்ச, விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை மக்கள் அரசாங்கத்திடம் வலியுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

நல்லாட்சி என்று கூறிக் கொண்டு வந்தவர்கள், இப்போது நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து விட்டனர். இனியொருமுறை இந்த தவறு இடம்பெற கூடாது என்றால், முதலில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சி மக்களிடம் கேட்டு கொண்டார்.

Read more...

அரசாங்கத்திற்கு நிபந்தனைகளற்று ஆதரவு வழங்கக்கூடாது . . ரிஎன்ஏ க்கு சுரேஸ் அறிவுரை.

எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை மட்டுமே அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஷ் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்து, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதன் பின்னரே அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். விசேடமாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சனைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் முதன்மையான பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

அதனை விடுத்து இந்தமுறையும் கூட்டமைப்பு பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவற விடுவார்களாயின், எக்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஏமாற்றமே கிடைக்கும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடுகள் சரியாக இல்லாவிடின், எதிர்காலத்தில் தமிழர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே உண்மையான நிலைப்பாடாகும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

Read more...

ராஜதந்திரங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது - திலக் மாரப்பன.

வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிகாரிகள், ராஜதந்திரங்களை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமானது என, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிலுள்ள இலங்கையின் தூதுவர்களுக்கு விடுத்த அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது இராஜதந்திர நடவடிக்கைகளை பயன்மிக்கதாகவும், வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் உலக நாடுகளுக்கு இலங்கையை அறிமுகம் செய்யும் புதிய திட்டங்களையும் முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பௌத்த மதம், தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்கள், மாணிக்கக்கல் என்பவற்றுக்கு புகழ்பெற்ற இடம் எமது இலங்கை என்பதை, முழு உலகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் திலக் மாரப்பன, தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த பணிகளை முன்னெடுக்கும் போது, அதி நவீன தொடர்பாடல் முறைகளையும், சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கியதான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என, வெளிநாட்டிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தமது அறிக்கையின் மூலம் அறிவுறுத்தல் வழங்கினார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தமது அமைச்சினால் சகல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

Read more...

அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கம் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது - கேலி செய்த தவராசா.

அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கம் பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக, வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே, சி.தவராசா இந்த விடயத்தை கூறினார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் என்பது, உண்மையில் சாத்தியமற்ற விடயமென அவர் கூறினார்.

அரசியல் அமைப்பு சபையில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசியல் அமைப்பிற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாகி இருந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, பொது எதிரணியினர் இதற்கு அதரவு வழங்க மாட்டார்கள் என்பது நன்றாக தெரிந்திருந்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைந்திருப்பதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என்ற, ஓர் நம்பிக்கை தரும் கருத்தும் நிலவுகின்றது.

இந்த அரசியல் அமைப்பு, முழுமையான தமிழ் மக்களின் அபிலாசைகளான சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைபாக இல்லாவிட்டாலும், சமஸ்டிக் குணாம்சங்கள் அடங்கிய, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வினை உள்ளடங்கிய வரைபாக இருக்கின்றது.

எனினும் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி இவ்வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருதவேண்டியுள்ளது என சி.தவராசா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு

தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகை தமிழர் பிரதேசங்கள் எங்கும் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தை பொங்கலுக்கு முதல் நாளான நாளை தினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக வடக்கு மற்றும் ஊவா மாகாணத்திற்கு, இதே நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் உள்ள அனைத்து அரச தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

கல்முனையில் Smart City - பாரிய வேலைத்திட்டம் மிக விரைவில்

கல்முனை மாநகர பிரதேசத்தை ஸ்மார்ட் சிட்டியாக (Smart City) அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் நடைபெற்றது. இதில், இரண்டாம் நிலை நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற கல்முனை மாநகர பிரதேசத்தில் 16 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தில் 5 தளங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபைக் கட்டடம், கல்முனை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய சொப்பிங் கொம்லக்ஸ் உள்ளிட்ட புதிய பஸ்தரிப்பு நிலையம், சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் பல தேவைகளை பூர்த்தி செய்யும் பல்தேவைக்கூடம் போன்றன அமைக்கப்படவுள்ளன.

மேலும், கல்முனை நகர மண்டபத்தை மீள் நிர்மாணம் செய்தல், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பகுதியளவான காணியில் பல்தேவைக் கட்டம், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் பழவகை மற்றும் மரக்கறி விற்பனைத் தொகுதி, சேனைக் குடியிருப்பில் கலாசார மண்டபம், நற்பிட்டிமுனையில் கடைத்தொகுதி, நற்பிட்டிமுனை மயானத்தின் சுற்றுமதில் அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்டம், பாண்டிருப்பு விளையாட்டு மைதான அபிவிருத்தி, மருதமுனை மக்கள் மண்டப அமைவிடத்தில் கடைத்தொகுதியுடன் கூடிய கேட்போர்கூடம், பாண்டிருப்பில் சனசமூக நிலையம், பெரியநீலவணையில் கலாசார மண்டபம், பாண்டிருப்பு மயான சுற்றுமதில் மற்றும் இறுதிக் கிரியை மேற்கொள்வதற்கான மண்டபம், பெரியநீலாவணையில் பூங்கா, கல்முனை குறுந்தையடி மைதான அபிவிருத்தி மற்றும் வீட்டுத்திட்ட வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டடத்தை புனரமைத்தல், கல்முனை வாடி வீட்டு பிரசேத்தில் கடற்கரை பூங்கா அமைத்தல் போன்ற விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக குறித்த பிரதேசங்களுக்கு இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான குறித்த குழுவினர் கள விஜயம் மேற்கொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் மூலம், கல்முனை மாநகரம் 30 வருடங்கள் முன்னோக்கிய அபிவிருத்தியினை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் பௌதீக அபிவிருத்தியுடன் கூடிய தொழில்நுட்ப விருத்தியும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







Read more...

நாட்டு மக்கள் தயார் என்றால் நான் தயார் - கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டு மக்கள் தயார் என்றால், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக அவரது ஊடகச் செயலாளர் மிலிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவு, பயோடெக்நொலஜி மாநாட்டில் உரையாற்றும் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார் என்று மிலிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடம் நாட்டுக்கு மிகவும் தீர்மானம் மிக்க ஆண்டு எனவும் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாகவும் மிலிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.



Read more...

எதிர்க்கட்சி தலைவர் மாறி மாறி பேசுகிறார் - அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறும் கருத்துக்களும், விகாரையில் கூறும் கருத்துக்களும் முற்றிலும் மாறுபட்டவை என்று தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்றைய நாளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாக கூறியிருந்தார். இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறினார்.

அதற்கு பிரதமர் உடன்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று, அவர் மத நிகழ்வுகளில் ஈடுபடும்போதும் நடந்துகொண்டால் நாட்டுக்கு மேலும் பலன் கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

Read more...

சங்காவிற்கும் ராஜிதவிற்குமான சந்திப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலானதா ? சந்தேகம் கொள்ளும் அரசியல் அவதானிகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பு, தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்பட்டதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் பெரிதாக தகவல்கள் வெளியாகாத நிலையில், இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி சுமார் 2 மணித்தியாலங்கள் அளவில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கை தொடர்பிலேயே இருவரின் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சில் இருந்தவர்களிடம் அமைச்சர் ராஜித தெரிவித்ததாகவும் அந்தச் சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் இந்த சந்திப்பு தொடர்பில் அரசியல் அவதானிகள் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே இருவருக்குமான சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Read more...

புதிய அரசியல் அமைப்பு இப்போதைக்கு தேவை இல்லை - அநுநாயக்க தேரர்

அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து, தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடடில் ஈடுபட்டார்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கலந்துரையாடலில் அநுநாயக்க தேரர், தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அரசியலமைப்பு அத்தியாவசியமற்றது என்பதை அஸ்கிரிய பீடம் என்ற வகையில், நாங்கள் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம். நாம் மாத்திரமின்றி மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியல் அமைப்பு பேரவை தேவையற்றது என்றே கூறி வருகின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் மகாநாயக்க தேரர்களைக் கண்டுகொள்வதில்லை. இது யாருடைய தேவைக்கேற்ப வந்தது என்பது பிரச்சினைக்குரியது. பாராளுமன்றத்தில் பொது நிலைப்பாடு ஒன்றை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. மாகாண சபைகளை கலைப்பதை தவிர தேர்தலுக்கு எந்தவித தேவைப்படும் இல்லை. பொது மக்களுக்கு தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பத்தை தேர்தல் ஊடாக வழங்க வேண்டும். முக்கியமாக, அரசியலமைப்பில் எத்தகைய பிளவுகள் இருந்தாலும் முடிந்தளவு மாகாண சபைத் தேர்தலையேனும் நடத்தி, மக்கள் விருப்பத்தை தெரிந்துகொள்ள முடியும் என்றால் அதுவே சிறந்தது என அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

Read more...

அடுத்தவராம் தனியான காரியாலயத்தில் சந்திரிக்கா

புதிதாக கட்சிக் காரியாலயம் ஒன்றை அமைக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதாக அதன் ஒருங்கமைப்பாளர் பண்டார அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த புதிய கட்சிக் காரியாலயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பண்டாரநாயக்க கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றது. இந்தக் கட்சி காரியாலயம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உறுப்பினர்களின் பங்களிப்புடன் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சந்திரிகா கூறியுள்ளார்.

இந்த புதிய கட்சிக் காரியாலயத்துக்காக ராஜகிரிய பிரதேசத்தில் கட்டிடமொன்று கட்சி உறுப்பினர்களினால் பெறப்பட்டுள்ளதாகவும் சகல வசதிகளுடன் உள்ள இக்கட்சிக் காரியாலயம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முக்கிய கேந்திர நிலையமாக செயற்படவுள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி, D .A. ராஜபக்ஷவை முதன்மைப்படுத்திய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருவதால், S .W . பண்டார நாயக்கவின் சின்னங்கள் அழிக்கப்படுவதாகவும், மழுக்கடிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அண்மைய நாட்களில் குற்றம்ச்சாட்டுக்களை கூறி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read more...

தொடர்மாடி குடியிருப்புக்களை, மக்களிடம் கையளிப்பதில் சிக்கல் - சஜித்.

தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பதில், சில பிரச்சினைகள் நிலவுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, கலாசார மற்றும் கட்டுமாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தொடர்மாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமைகளை, குடியிருப்பாளர்களுக்கு வழங்க முடியும்.

எனினும் தொடர்மாடி தொகுதிகள் அமைந்துள்ள காணிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் உள்ளமையால் குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரித்துள்ளார்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைவாகவே, தொடர்மாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, கட்டுமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com