Friday, January 11, 2019

நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியல் அமைப்பு - எச்சரிக்கை செய்கிறார் மஹிந்த

புதிய அரசியலமைப்பு, நாட்டை நிச்சயம் பிளவுப்படுத்துமென்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார் மாதம்பே பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

யுத்தத்தில் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார். புதிய அரசியலமைப்பின் ஊடாக அக்குறிகோளை நிறைவேற்றிக்கொள்ளவே சிலர் முயன்று வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமெனவும் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

Read more...

இனி பாடசாலை சூழலில் இவை நடைபெறாது -ஜனாதிபதி விசேட பணிப்புரை

பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய நாளில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக முன்னெடுத்து, பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு நடத்தப்படும் போதைப்பொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார், இதற்காக அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Read more...

இன்று காலை 10 மணிக்கு பின் நடைபெறப்போவது என்ன?

புதிய அரசியல் அமைப்புச் சபை தொடர்பிலான நிபுணர்குழுவின் அறிக்கை இன்று முற்பகல்10 மணியளவில் கூடவுள்ள அரசியல் சபையில் முன்வைக்கப்படவுள்ளமை, மிக முக்கிய விடயங்களில் ஒன்றாகும். நாட்டின் பிரதமர், புதிய அரசியல் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரம சிங்க இந்த அறிக்கையை முன்னவைக்கவுள்ளார்.

புதிய யாப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க, அரசியல் வழிநடத்தல் குழுவினால் நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. குறித்த நிபுணத்துவ அறிக்கையின்படியே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை தீர்மானிக்க முடியும்.


Read more...

யாழில் கருத்துக்களால் களமாடுவதாயின் எதற்கு வித்தியாதரன்?

கடந்த கால வன்செயல் கலாச்சாரத்திற்கும் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என வெளிக்காட்ட முற்பட்டுள்ளனர் தமிழரசுக் கட்சியினர். அந்த வகையில் புலிகளின் வன்செயல்கள் மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பு தொடர்பில் அக்கட்சியின் புதிய தலைமுறை வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நாளை 12ம் திகதி 'கருத்துக்களால் களமாடுவோம்' எனும் தலைப்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசியல் ஆர்வலர்கள் எனப் பெயர் குறிப்பிடுவோரால் நிகழ்த்தப்படவுள்ள இக்கருத்தரங்கில் தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையினர் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் என்னும் கருப்பொருளில் சிவில் சமூகப் பிரமுகர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன் இறுதியில் மேற்படி வாதப்பிரதிவாதங்களுக்கு பதிலுரைக்கவுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.

மேற்படி கருத்தாடல் சிறப்பானதானாலும், பேச்சாளர்களில் ஒருவராக அரசியல் அநாதையாக அலையும் வித்தியாதரனும் உள்வாங்கப்பட்டுள்ளார். புலிகளின் வன்செயல் கலாச்சாரத்தை ஆதரித்தும், புலிகளின் கொலைகளை நியாயப்படுத்தியும், ஜனநாயக மறுப்பை மேற்கொண்டு புலிகளை தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என எழுதி வந்த வித்தியாதரனால் எவ்வாறு கருத்துக்களால் களமாடவேண்டும் என்ற கருத்துக்கு வலுவூட்ட முடியும்.

எனவே கருத்துக்கள் வலுப்பெறவேண்டுமாக இருந்தால், ஊடகங்களை தமது கையில் வைத்து கருத்துச் சுதந்திரத்திற்கு சாவு மணியடித்த வித்தியாதரன் போன்றோர் அரசியல் , சமூக பரப்பிலிருந்து தூக்கி வீசப்படவேண்டும்.


Read more...

Thursday, January 10, 2019

இலங்கையின் பொருளாதாரத்தின் நிலையை வெளியிட்ட உலக வங்கி

நடப்பாண்டில் இலங்கையின் பொருளாதாரம், 4 வீதமாக வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணிப்பிட்டுள்ளது. 2019 ம் ஆண்டில் உலக பொருளாதார நிலைமை தொடர்பில் உலக வங்கி முன்னெடுத்த கணிப்பின் அடிப்பைடையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, வலுவான உள்ளூர் கேள்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டின் மூலம் ஏற்படும் முதலீடுகள் போன்றன முக்கிய காரணிகள் அமைகின்றன. இதனிடையே உலக பொருளாதாரம் 2019 ஆண்டில் வீழ்ச்சியையே பதிவு செய்யும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

எனினும் தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி 7 . 1 வரை ஏற்படும் என்றபோதும், இந்தியாவின் வளர்ச்சி 7 .3 ஆக அமையும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. அத்துடன் பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அமையும் என்றும் உலக வங்கி கூறுகின்றது.

Read more...

தேர்தல் தொடர்பில் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்து

புதிய முறையுடன் விகிதாசார முறைமையும் உள்ளடக்கி தேர்தலை நடத்த வேண்டும். அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். சிவில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பிலான ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணையவேண்டும். எந்த முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முடிவை விரைவில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றி, ஒரே தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும். ஆகவே, சட்டமூலத்தை நிறைவேற்றி 9 மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்று சம்பிக்க ரணவக்க கூறினார்.

Read more...

ஜேவிபி மீண்டும் வலியுறுத்துகிறது - இந்தச் சட்டத்தை நீக்கியே ஆகவேண்டும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். நாம் மனித உரிமைகளைப் பாதுக்காக்கவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை.

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீடித்து தன் அடக்கு முறைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறது. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவ்வாறு சிறையில் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றங்களை நாடும் வாய்ப்பு இல்லை. பயங்கவரவாதத் தடைச்சட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து 15 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ளனர். இது நியாயமா?

குறித்த கைதிகள் தாம் குற்றவாளியா, நிரபராதியா என்று தெரிந்து கொள்ளவும் முடியாதுள்ளனர். அவர்கள் குற்றவாளி என்றால் தண்டனை வழங்குவது நியாயமானது. ஆனால் அவர்கள் தமது நிலைப்பாடு என்னென்னவென்று தெரியாது நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் 10 வருடமாக சிறையில் இருப்பது சாதாரணமானதா?

பலர் 3 மாதம் சிறையில் இருக்க முடியாமல், போராட்டம் நடத்தும் நிலையில், அரசியல் கைதிகளின் நிலையை யோசித்துப் பார்க்கவேண்டும். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டதாக ஐ.நாவிற்கு கூறி, சிறிய மாற்றங்களைச் செய்து அதனை இன்னும் பலப்படுத்தி வேறு ஒரு சரத்தாக கொண்டு வரக்கூடாது என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Read more...

கடமைகளை பொறுப்பேற்றார் தயாசிறி ஜயசேகர

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கட்சி தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் அவருக்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Read more...

முதல் வருடத்தில் 625 ரூபா? - மக்கள் போராட்டத்திற்கான பதில் இதுதானா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, நேற்று நடைபெற்றது. கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அதிகரிப்பு 650.00 ரூபாவும், மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும், 80.00 ரூபா வரவு கொடுப்பனவும், 30.00 ரூபா விலைகொடுப்பனவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட இரண்டாம் கட்ட கலந்துரையாடல், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும்; சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட விடயங்களும், தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன. இதனை பரீசிலித்த மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறப்பட்டது.



Read more...

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க எதிர்ப்புக் காட்டுகின்றார் ஐ.தே.கட்சியின் தயா கமகே

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் நாட்டை விரைவான அபிவிருத்தியினை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என தொழில் தொழில் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவுட்டல் அமைசச்ர் தயா கமகே கூறியுள்ளார்.

தனது தினைக்களத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சிடம் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்பட்டமையை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் அங்கு கூறுகையில், நாட்டின் அரசியல் யாப்பானது 19 முறை திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. திருத்தங்கள் மேற் கொள்ளப்படும் போது மக்களின் நலனை கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Read more...

கனவான்கள் போன்று செயற்பட்டால் மக்களுக்கு பணியாற்ற முடியாது. கிளிநொச்சி அரச ஊழியர்களுக்கு ஆளுனர்.

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதன்போது கேட்டறிந்துகொண்டார். மேலும் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப்பணிகள், மற்றும் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

உயிரிழப்புக்கள் மற்றும் பாரிய அழிவுகளில் இருந்து, அனர்தத்திற்கு முகம் கொடுத்த மக்களை காப்பாற்ற உதவிய அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்தார். கிளிநொச்சிக்கான சவால்கள் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு எல்லாத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இருக்கவேண்டும். ஒருவர் செய்கின்ற பணி இன்னொருவருக்கு தெரியாமற்போகிறது. இது கவலைக்குரியது என்றும் வருத்தம் தெரிவித்தார்.

கனவான்கள் போன்று இருந்தால் மக்களுக்கு பணியாற்ற முடியாது என்றும் இதன்போது குறிப்பிட்டார். மேலும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் ஆராய்ந்தனர்.

Read more...

அமளி துமளிப்பட்ட நாடாளுமன்றம் - ஒரு நாள் விவாதத்தை கோரிய எதிர்க்கட்சி

அரசியல் அமைப்பு சபை நாளை கூடவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் விவாதம் நடைபெற்றிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் அமைப்பு சபை உருவாக்கம் தொடர்பிலான யோசனைகளை நாளை சமர்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விமல் வீரவன்ச, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் பெரும் விவாதம் நடைபெற்றது. இதுதவிர நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிரதமர் விசேட உரை ஒன்றையும் ஆற்றியிருந்தார். இதன்போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஒரு நாள் விவாதத்திற்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர்.

Read more...

இருவரின் சந்திப்பு எதற்கு வழி சமைக்கும்?

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

அத்துடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கும்போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தால் தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கலாம் அன்று அபிப்பிராயம் தெரிவித்தார். மேலும், அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுதல், கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் கூறினார். அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஆளுநரும் ஆளுநரின் நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா சம்பந்தன் மேலும் இதன்போது கேட்டுக்கொண்டார்.

Read more...

5000 ரூபா இலஞ்சம் - கான்ஸ்டபிளுக்கு 4 வருட சிறை

கொகலெல்ல பொலிஸில் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிளுக்கு 5000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக, இன்று நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வினிசுரு விக்ரம ஆரச்சி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 4 வருட சிறைத் தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி இவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கான்ஸ்டபிள், பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு அவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை காரணமாகவே, இவர் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டார். இந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் குற்றம் இழைத்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதிமன்றம்12,000 ரூபா அபராதமும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதியே - அறிவித்தார் நிமால்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா, கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளர் என்ற ஒருமித்த முடிவில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

எப்படி இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவது இல்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை நினைவு கூறத்தக்கது.

Read more...

இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் - அரசாங்கம்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லீட்டருக்கு 2 ரூபாவால் குறைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு, அமைச்சர் மங்கள சமரவீரவின் .தலைமையில் இன்று மாலை கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசனாகி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை நிர்ணயத்தின் கீழ் மாதத்தின் ஒவ்வொரு 10 ஆவது நாளிலும் எரிபொருள் விலைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ஒக்டேன் 95 ரக பெற்றோல், ஒக்டேன் 95, ஓட்டோ டீசல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை முதல் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 123 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 142 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 99 ரூபாயாகவும், சுப்பர் டீசல் விலை 118 ரூபாயாகவும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் விலைகள் குறைக்கப்பட்டாலும், சர்வதேச எண்ணெய் விலைகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

கிழக்கு முஸ்லிம் ஆளுனரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பும். வை எல் எஸ் ஹமீட்

கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.

விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.

இயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்”; என்று மேடைகளில் முழங்குமளவு தமிழ்த் தலைமைகள்மீதான நம்பிக்கை இருந்தது.

நடந்தது என்ன? தம்முடன் போராட இணைந்த முஸ்லிம் வாலிபர்களையே சுட்டுத்தள்ளி நீங்கள் வேறு, நாங்கள் வேறு; என்று நிறுவினார்கள். போதாக்குறைக்கு வடக்கு முஸ்லிம்களை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் வெளியேற்றினார்கள்.

இந்த நாட்டில் யுத்தகாலத்தில் எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் தமிழ் ஆயுதப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட, அகோரமாக கொல்லப்பட்ட ஒரு சமூகமென்றால் அது முஸ்லிம் சமூகம். அந்தளவு வெறுப்பு முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதப்போராட்டத்திற்கு.

யுத்த நிறுத்தகாலம். ஆனாலும் முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அட்டகாசம் குறையவில்லை. ஆயுதப்படைகளும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் அசட்டையாக இருந்தன. பொதுமக்களின் நெருக்குதலினால் UNP யை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி முட்டுக்கொடுத்துப் பாதுகாத்த மு கா தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளின்பேரில் 500 முஸ்லிம் பொலிஸ்காரர்களை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக நியமிக்க அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.

தாங்க முடியவில்லை தமிழ்த்தரப்பிற்கு. தூக்கினார் போர்க்கொடி சம்பந்தன். காற்றில் பறந்துபோனது ரணிலின் வாக்குறுதி. ஆட்சிக்கட்டிலில் ஏற்றி முட்டுக்கொடுத்தும் கையாலாகாத்தனமானவர்களாக விடுதலைப் புலிகளின் கொடுமைகளைக் கண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்தினோம்.

யுத்தம் முடிந்தது. அமைதியும் திரும்பியது. கடந்த காலத்தை மறப்போம். தமிழர்களும் முஸ்லிம்களும் சகோதர சமூகங்களாக வாழுவோம்; என்றுதான் முஸ்லிம்கள் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள்.

அவர்களது விடயத்தில் முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்; விட்டுக்கொடுக்க வேண்டும்; என்று எதிர்பார்ப்பவர்கள் முஸ்லிம்களின் விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்?

கிழக்கில் அம்பாறையும் திருகோணமலையும் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டங்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலாவது பெரிய சமூகம்.

வட கிழக்கு, பெரும்பான்மை சமூக ஆளுகைக்குள் இருந்து விடுபடவேண்டும்; என்பது அவர்களது போராட்டம். தேவையானபோது தமிழ்பேசும் மக்கள் என்று முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மாவட்டங்களான அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் தமிழ்பேசும் அரச அதிபர்களை நியமிக்கக்கோரமாட்டார்கள், அவர் ஒரு முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது; என்பதற்காக. ஆனால் தமிழுக்காக போராடுகிறார்கள்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவ்விரண்டு மாவட்டங்களிலும் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அவர்களின் கைகளில் இருந்தும் சிங்களவர்களையே அரச அதிபர்களாக நியமிக்கவேண்டும்; என்பது எழுதாத விதி.

இந்நிலையில் கல்முனைக் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்கள் கோரிநிற்கிறார்கள். ஆனால் தமிழ்த்தரப்பினர் எதிர்க்கின்றார்கள். ஏன்? முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்பதனால். தமிழர்களா? சிங்களவர்களா? என்றால் அது “ தமிழர்களே”; சிங்களவர்கள் பேரினவாதிகள்; என்பது அவர்களது நிலைப்பாடு. அப்பொழுது ‘ தமிழ்பேசும் சமூகம்’ என்ற பதமும் பாவிக்கப்படும். ஆனால் ஒரு அதிகாரி ‘ முஸ்லிமா? சிங்களவரா? என்றால் அவர்களது பதில் ‘ சிங்களவர்தான்’ என்பதாகும்.

அப்பொழுது சிங்களவர்கள் ‘ ரத்தத்தின் ரத்தம்’. முஸ்லிம்கள் விரோதிகள். 1987ம் ஆண்டுவரை எதுவித பிரச்சினையுமில்லாமல் இருந்த கல்முனை பட்டின சபை எல்லைக்குள் ஒரு மாநகரசபையை நிறுவுவதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள். ஆனால் சமஷ்டிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளர் இருக்கும் பிரதேச செயலகப்பிரிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தனியாக பிரதேச செயலகம் வேண்டும். ஆனால் அதி உச்ச அதிகார பகிர்வுக்கு முஸ்லிம்கள் உடன்பட வேண்டும். முஸ்லிம்களையும் சேர்த்து ஆள்வதற்கு இணைப்பிற்கும் உடன்பட வேண்டும்.

ஆளுநர் நியமனம்

வட கிழக்கிற்கு சிங்களவர்தான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்; என்ற எழுதாத விதி கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. அவ்விதி தகர்க்கப்பட்டு இம்முறை வடக்கிற்கு ஒரு தமிழரும் கிழக்கிற்கு ஒரு முஸ்லிமும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கிற்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தமிழிக்காகப் போராடும் தமிழ்த்தலைமைகள், பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ்பேசும் பிரதேசங்களை விடுவிக்கப்போராடும் தமிழ்த்தலைமைகள் கிழக்கிற்கு ஒரு தமிழ்பேசும் மகன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால் ஒரு இனவாத சிங்களவரை நியமித்தாலும் அல்லது தமிழ்ப்போராளிகளை அழித்த ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி அல்லது கடற்படை அதிகாரியை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் அவர் முஸ்லிமாக இல்லாதவரை.

இனவாதம் எங்கே இருக்கின்றது; என்று பாருங்கள். இந்த யதார்த்தத்திற்கு மத்தியில்தான் நம்மவர்களின் நிலை என்னவென்று சொல்லாமல் புதிய யாப்பில் தமிழர்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாம்; என்று நம் தலைவர்கள் என்பவர்கள் பேசுகின்றார்கள்.

புதிய யாப்பும் அதிகாரப்பகிர்வும்

அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? என்பதிலேயே பலருக்கு குழப்பம். இதில் குழம்ப என்ன இருக்கிறது?

அதிகாரப்பகிர்வு எதற்கு? பதில்: ஆட்சி செய்வதற்கு.

யார் ஆட்சி செய்வதற்கு? பதில்: அந்தப் பிரதேசத்தில் யார் அல்லது எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அவர்கள் ஆட்சி செய்வதற்கு.

யாரை ஆள்வதற்கு? பதில்: தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மையை ஆள்வதற்கும்.

தமிழர்கள் எதற்காக அதிகாரம் கேட்கிறார்கள்? பதில்: வட கிழக்கில் தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மைகளை ஆள்வதற்கும்.

வடக்கில் மட்டும்தானே தமிழர்கள் பெரும்பான்மை? பதில்: ஆம். கிழக்கில் அவர்கள் சிறுபான்மை. தமிழர் அல்லாதவர் பெரும்பான்மை. ஆனால் தமிழர் கிழக்கிலும் ஆளப்படும் சமூகமாக இருக்கக்கூடாது. எனவே இணைப்பைக் கோருகிறார்கள். அதாவது கிழக்கின் தமிழரல்லாத பெரும்பான்மையினர் இணைப்பின் மூலம் சிறுபான்மையாக மாறி ஆளப்பட வேண்டுமென்கிறார்கள்.

கிழக்கிற்கு வெளியேயுள்ள எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களின் நிலை என்ன?

பதில்: எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் தெளிவான சிறுபான்மை. ஆளப்படப்போகின்ற சமூகம். சமூகம் ஆளப்படுவதற்காக அதிகப்பட்ச ஆதகாரப்பகிர்வைக் கோரிநிற்கின்ற பெரும் தலைவர்களைக்கொண்ட சமூகம்.

ஒரு அரசாங்கத்தின்கீழ் இருந்துகொண்டே எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை. எமது இன்னோரன்ன உரிமைக்ளுக்குப் பாதுகாப்பில்லை; என்று அழுது புலம்பி ஒரு ஆட்சியை மாற்றி வந்த ஆட்சியும் பாதுகாப்புத்தராமல் திகனயில் உயிர், பொருள் இழந்த சமூகம்.

அந்த சமூகம் எட்டு அரசாங்கங்களால், அதுவும் அதிகப்பட்ச அதிகாரம்கொண்ட அரசாங்கங்களால், அதிலும் மத்திய அரசாங்கம் என்னவென்றும் கேட்கமுடியாத சமஷ்டித்தன்மைகொண்ட அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக பொலிஸ் அதிகாரமும் சேர்த்து வழங்கப்படுகின்ற அரசாங்கங்களால் மறுபுறம் நாம் அடியோடு பிரதிநிதித்துவப் படுத்தாத ( ஊவா, சப்ரகமுவ, தெற்கு) அல்லது சொல்லும்படியான பிரதிநிதித்துவம் இல்லாத ( வடக்கு, வடமத்தி) மற்றும் ஓரளவு பிரதிதித்துவத்தை மாத்திரம்கொண்ட ( மேற்கு, மத்தி, வடமேற்கு) அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியான அதிகாரம் கொண்ட ஆளுநரின் பல்லுப் பிடுங்கப்பட்ட, அந்த ஆளுநரைக்கொண்டு மத்திய அரசு தலையிட முடியாத அரசாங்கங்களால் நாங்கள் ஆளப்படுவதற்கு அதிகாரப்பகிர்வு கேட்கும் முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். இதுதான் எட்டு மாகாணங்களில் நமதுநிலை.

கிழக்கில் நாம் சிறுபான்மை இல்லையே! கிழக்கில் அதிகாரப்பகிர்வு நமக்கு சாதகமில்லையா? நமது காணிகளும் பறிபோகின்றனவே! காணி அதிகாரம் கிடைத்தால் பாதுகாக்க முடியாதா?

பதில்: நாம் சிறுபான்மை இல்லைதான். ஆனால் நாம் தனிப்பெரும்பான்மையும் இல்லையே! ஆளுவதாக இருந்தால் கூட்டாட்சி. கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களை ஆக்கிரமிக்கும் சக்தி பேரினவாதமென்றால் கிழக்கில் சிற்றினவாதம்.

முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமென்று போராடினோம். கூட்டாட்சியில் பெற்றோம். என்ன செய்யமுடிந்தது. ஒரு சாதாரண வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாத முஸ்லிம் முதலமைச்சர் பதவி. ஏன் முடியவில்லை? தமிழ்த்தரப்பினர் விரும்பவில்லை.

இதன்பொருள் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றாலும் அவர் கூட்டாட்சியில் பொம்மை முதலமைச்சர். தமிழ்தரப்பு எதிர்க்காத விடயங்களை மாத்திரம்தான் செய்யலாம். கிழக்கில் எங்கள் பிரச்சினைகளில் பாதிக்குமேல் தமிழர்களுடன் பின்னிப்பிணைந்தவை. தீர்க்க விடுவார்களா? கடற்கரைப்பள்ளி வீதி பெயர்மாற்ற விவகாரம் மத்திய அரசாங்கத்திடம் அதிகாரம் இருந்திருந்தால் சிலவேளை எப்போதோ செய்திருக்கலாம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.

சிலவேளை முஸ்லிம்கள் இல்லாமல் பேரினவாதமும் சிற்றினவாதமும் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்தால் ( அதிகப்பட்ச அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்குகின்றபோது) நிலைமையைச் சிந்தித்துப்பாருங்கள்.

காணி அதிகாரம் கிடைத்தால் எமது காணிகளைப் பாதுகாக்கலாமா?

எமது காணிப்பிரச்சினை இருபுறமும் இருக்கின்றது. உதாரணம் சம்மாந்துறை கரங்கா காணி. இவை உறுதிக்காணிகள். இவற்றிற்கும் காணி அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு. இராணுவம் கையகப்படுத்திய காணி. அரசாங்கம் ஒரு உத்தரவிட்டால் நாளையே வெளியேற்றலாம்.

யுத்தம் நடந்த பூமியான வடக்கிலேயே ராணுவம் காணிகளை விடுவிக்கும்போது நாம் கையாலாகதவர்களாக இருக்கின்றோம். காணி அதிகாரம் எங்கே பயன்படும் என்றால் அரசகாணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயத்தில். அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்கு. உறுதிக்காணிக்கும் அதற்கும் என்ன தொடர்பு.

அஷ்ரப் நகர். ராணுவ ஆக்கிரமிப்பு. அங்கு இப்பொழுது யுத்தமா நடக்கிறது ராணுவம் நிலைகொள்ள. மாகாணசபைக்கு காணி அதிகாரம் வழங்கினால் ராணுவத்தை வெளியேற உத்தரவிடமுடியுமா? ஒன்பது மாகாணமும் அவ்வாறு உத்தரவிட்டால் ராணுவத்தை வெளிநாட்டிலா கொண்டுபோய் வைப்பது? எனவே, ராணுவ விவகாரங்களில் மாகாணசபை தலையிடமுடியாது. ஆனால் நம்பவர்களின் நாக்கில் பலம் இருந்தால் மத்திய அரசின் ஒரு உத்தரவின் மூலம் வெளியேற்றலாம்.

வட்டமடு காணி: யாருடன் இணைந்த பிரச்சினை - தமிழர்களுடன் இணைந்த பிரச்சினை. கூட்டாட்சியில் தீர்வுகாண விடுவார்களா? மட்டக்களப்பில் 15000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி- விடுதலைப்புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு இன்னும் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. தீர்வுகாண விடுவார்களா? இதுவரை தீர்த்திருக்க வேண்டியவை. நமது மேடைப்பேச்சு வீரர்களின் இயலாமை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1/4 பங்கு முஸ்லிம். 1/20 பங்கு நிலம்கூட அவர்களுக்கு இல்லை. காணிகள் எல்லாம் தமிழ் பிரதேசங்களில். காணி அதிகாரம் வழங்கப்பட்டால் குடியேற அனுமதிப்பார்களா? இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவினால் கட்டப்படும் பல்கலைக் கழகம். கல்வியில் மாத்திரமல்ல மட்டக்களப்பு முஸ்லிம்களின் குடியேற்றப்பரம்பலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. மாகாணசபையிடம் காணி அதிகாரம் இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்களா?

எனவே, கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தால் இவற்றையெல்லாம் சாதிக்கலாம் என யாராவது பட்டியலிடமுடியுமா?

மாகாண அதிகாரம் மத்திய அரசிடம்

அதிகாரப்பகிர்வு இல்லாமல் மத்திய அரசிடம் அதிகாரம் இருக்குமானால் முஸ்லிம் பிரதேசங்களில் நடைமுறை அதிகாரம் முஸ்லிம் பா உறுப்பினர்களிடம், அமைச்சர்களிடம்தான் இருக்கப்போகின்றது. கிழக்கு உள்ளக நிர்வாகத்தைப் பொறுத்தவரை பேரின அரசு பெரிதாக அக்கறை செலுத்தப்போவதில்லை. எனவே, நமது பிரதிநிதிகள்தான் அங்கு யதார்த்த ஆட்சியாளர்கள். இதுதான் 90இற்கு முதல் இருந்தது.

எனவே, அதிகாரப்பகிர்வினால் கிழக்கில் பாரிய நன்மைகளை நாம் அடையப்போவதில்லை. ஆனால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகின்றோம்.

எனவே, ஆளமுடியாத நாம் எதற்காக அதிகாரம் கேட்கின்றோம். சிலர் தனியலகு என்கின்றனர். அது நல்ல விடயம். மறுக்கவில்லை. நம்மை நாம் ஆளும் கோட்பாடு. ஆனால் நடைமுறைச் சாத்தியமா? சாத்தியம் என்பவர்கள் விளக்குங்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன்.

மறைந்த தலைவர் தனிஅலகு கேட்டார். அதுதான் தீர்வு என்பதனாலா கேட்டார். அன்று, என்றுமே பிரிக்க முடியாது; என்ற தோற்றத்தில் வட கிழக்கு இருந்தபோது மாற்றுவழியின்றி கேட்டார். Something is better than nothing என்பதுபோல்.

எரிகின்ற வீட்டில் பிடிங்கியவரை லாபம்தான். அதற்காக யாராவது வீட்டை எரித்து எதையாவது பிடுங்குவோம் என்பார்களா? இது புரியாமல் பிரிந்திருக்கும் வட கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள்; என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அந்த இடத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? அல்லது எதிர்காலத்தில் அங்கு குடியேற்றம்தான் சாத்தியப்படுமா?

எனவே, வெறுமனே மொட்டையாக அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு வழிசொல்லுங்கள். கிழக்கில் எந்தவகையில் அது முஸ்லிம்களுக்கு பிரயோசனம் என விரிவாக விளக்குங்கள்.

இந்து கலாச்சார அமைச்சராக ஒரு சிங்களவரை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உள்ளவர்கள் ஒரு பிரதி அமைச்சர் முஸ்லிம் என்பதனால் ஓரத்தில் இந்து கலாச்சாரம் என்றொருசொல் ஒட்டிக்கொண்டதை பொறுக்கமுடிதவர்கள் ஆளுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள்; என்பதற்காக, ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லை என்பதற்காக ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கு நாம் சம்மதம் என்றால் எம்மை என்னவென்பது? எம்மைவிட சிந்திக்க முடியாத சமூகம் இருக்கமுடியுமா?

அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அழிய வேண்டுமா? அவர்கள் ஆளவேண்டும் என்பதற்காக, நாம் அரசியல் அடிமைச் சமுகமாக மாறவேண்டுமா? பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலைவைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா? எனவே சிந்தியுங்கள்.

Read more...

புதிய விசாரணை குழு நியமனம் - வடமாகாண ஆளுநர்

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆராய, புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இரணைமடு குளம் குறித்து பல்வேறு தரப்பினர், குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், வட மாகாண ஆளுநர் இந்த குழுவை நியமித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் .ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரணைமடுக் குளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டதாகவும், அதனை முன்னாள் ஆளுநர் நீக்கியமையால், அந்த விசாரணை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையிலேயே தாம் இந்த விசாரணை குழுவை நியமித்ததாக வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இக்குழுவினரிடம், இரணைமடு விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளதாக கூறிய ஆளுநர், நாட்டில் மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

கிளிநாச்சி மாவட்டத்தில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இதுதொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான முன் எச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரி கூறினார்.

இக்கலந்துரையாடலை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசம் மற்றும் இரணைமடுக் குளம் ஆகியவற்றை வட. மாகாண ஆளுநர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

மண்டைதீவு கிணற்றில் எலும்புக்கூடு- விசாரணை எடுக்கப்படுமா?

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கிணறுகள் இரண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்தால், காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிதரன் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மேற்கண்டவாறு பதில் வழங்கினார்.

தமது அமைச்சின் கீழ் செயற்படும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு உரிய தகவல் வழங்கப்படுமாக இருந்தால் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் மனோகணேசன் கூறினார். இதற்கு பதில் வழங்கிய சிறிதரன், குறித்த விபரங்களை அமைச்சுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

Read more...

நாளை அறிக்கை முன்வைக்கப்படும்

புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளன.

குறித்த வழிநடத்தில் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போதே நாளைய தினம் குறித்த ஆலோசனை அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகள் முன்வைக்கப்படும். அரசியல் அமைப்பின் வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிப்பார். இதேநேரம் அரசியல் அமைப்புசபையும் நாளை கூடவுள்ளது.

Read more...

சிலிண்டர் வெடித்ததில் ஆண் ஒருவர் பலி

நுவரெலியா – ராகலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளார். பெலியத்த – கெடமான்ன பகுதியில் உள்ள அதிவேக மார்க்கத்தில் கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

எரிவாயு சிலிண்டரை வெட்ட முயற்சித்த பொது குறித்த சிலிண்டர் வெடித்துள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். படுகாயம் அடைந்த அவரை தங்காலை – தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Read more...

Wednesday, January 9, 2019

திருகோணமலை நகரசபை.. குப்பை அகற்றுதலும், வடிகால் துப்பரவாக்கலும்.. ஹேமச்சந்திர குமாரசுவாமி ஐயர்.

மேற்படி இரு விடையங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடையங்கள்.. எனவே இவற்றை பற்றி ஒன்றாகவே ஆராய வேண்டும்..

குப்பை அகற்றுதல்.. இதில் பல விதமான குப்பைகள் உள்ளது..

1.வீட்டு குப்பை..
2.தொழிற்சாலையில் இருந்த வெளியேறும் குப்பைகள்..
3.இயற்கையாக தினந்தோறும் ஏற்படும் கழிவுகள்.. மரங்களில் இருந்து விழும் குப்பை.. சந்தையில் இருந்து வெளியேறும் கழிவு..
4. இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் குப்பை என பல வகை உண்டு..

கழிவுப் பொருள் முகாமைத்துவத்தில் நீண்ட காலமாக கவனம் செலுத்தாமல் உதாசீனமாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை இது! திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தியும், உக்குகின்ற கழிவுகளை சேதனப் பசளையாக்கியும் ஆரம்பத்திலிருந்தே பழக்கப்பட்டிருப்போமானால் இத்தனை நெருக்கடி இப்போது உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சேதனப் பசளைகள் மண்வளத்தை அதிகரிப்பவையாகும். மண்ணுடன் நீண்ட காலம் நிலைத்திருந்து பயிர்களுக்கு பசளையாகப் பயன்படக் கூடியவை. யூரியா போன்ற செயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்தி வியாதிகளை வலிந்து வாங்கிக் கொள்ளும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.

ஜப்பான், மலேசியா, பிரிட்டன் போன்ற நாடுகள் குப்பைகளை இவ்வாறுதான் முகாமைத்துவம் செய்கின்றன. அங்கெல்லாம் குப்பைகள் விவகாரம் சிக்கலுக்குரியதல்ல.

நாம் இப்போதுதான் பொலித்தீன், பிளாஸ்டிக், கடதாசி, உணவுக்கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஆனால் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்ட இக்கழிவுகளை என்ன செய்வதென்பதையிட்டு இன்னுமே திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. உள்ளூராட்சி நிறுவனங்கள் தடுமாறி நிற்கின்றன.

காலம் தாழ்த்தியே மீள்சுழற்சியைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோம். ஆனால் இனியும் அலட்சியமாக இருப்பது உகந்ததல்ல. அவ்வாறிருப்பின் எமது நகரங்களே எதிர்காலத்தில் குப்பை மலைகளாகி விடலாம்.

அண்மையில் நான் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாகாணத்திற்கு போகும்போது சில விடையங்களை என்னால் அவதானிக்க முடிந்தது.. இந்த மாகாணம், இந்தியாவின் சிறப்பது நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட இடமாகையினால், அது ஏனைய இந்திய பிரதேசங்களை போலில்லாமல் மிகவும் துப்பரவான இடமாகும்..

இந்த மாகாணத்தின் தலை நகரான"லே"என்னுமிடத்தில் அதன் உள்ளூர் சபையானது எவ்வளவு நேர்த்தியாக செயல்படுகின்றது என்பதை பார்க்கும் போது எனக்கு, ஏன் இப்படி எல்லாம் எங்களால் செய்ய முடியாமல் போனது என்று விளங்கவில்லை..

அங்கு நிர்வாகம் மக்களை தேடி போகின்றதது.. ஒலிபெருக்கியில் தங்கள் வருகையை தெரிவித்து, மக்களை தங்கள் குப்பை கூளங்களை கொண்டுவந்து வாகனத்திற்கு தருமாறு ஊக்குவிக்க படுகின்றனர்.. இந்தியாவில் இப்படி ஒரு இடமா என அதிசயிக்க வைக்க பட வைத்த ஒரு ஆச்சரியமான விஷயம் இது..

இதே போன்று எங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என்று நான் கனவு கண்டது உண்டு.. அது நிஜமா நடந்து வரும் சாத்திய கூறுகளை என்னால் உணர முடிகின்றது..

வாழ்த்துகள்.. நகரசபைக்கு..

இரண்டாவது முக்கிய விடயம்.. வடிகால் வசதி..

அநேகமான நாட்களில் வடிகால்கள், மிகவும் அசுத்தமாகவும், துர் நாற்றம் வீசுபவையாகவும் உள்ளன..

இவற்றுக்கு விசேடமாக வடிமைத்த தாங்கிகளில், கடல் நீரை கொண்டுவந்து, வடிகால்களை கிராமமாக களுவுவதன் மூலம் அசுத்தங்களை தேங்க விடாது தடுக்கலாம்.. அத்துடன் உப்பு தண்ணீராகையினால் நுளம்பு பெருக்கமும் இல்லாது போகும்.. இதை ஒரு பரிசோதனை முறையாக நாங்கள் முயன்று பார்க்கலாம்..

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னால் தலைவர் ஒருவர் எமக்கு நகரசபை தலைவராக கிடைத்தது ஒரு பெரும் நன்மை.. அவர் தொடர்ந்தும் நகரத்தின் முன்னேற்றத்திக்கு ஓயாது உழைப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Read more...

இலங்கையே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது - மஹிந்த ராஜபக்ச.

கடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, நாடு மிகப்பெரும் ஆபத்துக்கள் மூன்றை எதிர்நோக்கியுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் முதலாவது ஆபத்து என அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக கடமையேற்ற மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதலாவது உரையில் இதனை கூறினார்.

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. பொருளாதாரம் எவ்வேளையிலும் வீழ்த்தப்படும் என்பதே முதல் ஆபத்து, கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன் 19வது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.

19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.

இதேவேளை புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.

புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.

எனவே இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வெற்றிடங்களுக்கு புதிய நீதியரசர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடக பிரிவு.

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர், உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியான கே.பீ. பெர்ணாந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவிய வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களுக்கு, அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியதை அடுத்து இந்த நியமங்கள் இடம்பெற்றுள்ளன.

Read more...

நாங்க ரெடி, நீங்க ரெடியா? - லக்ஸ்மன் கிரியெல்ல

அடுத்து வரப்போகும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு, பிரதி சபாநாயகர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், 27-2 இன்கீழான கேள்வி உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து தினேஸ் குணவர்தன கருத்து வெளியிட்டார்.

அப்போது தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றதா? என நாடளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ,சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபைமுதல்வர், “மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரமுறைப்படி நடத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழையமுறைப்படி தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.

Read more...

இலங்கை ராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக சவேந்திர டி சில்வா நியமனம்.

இலங்கை ராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் புதிய ராணுவ தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 ஆவது தாதியாக நியமனம் பெற்றுள்ளார். இவர் இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக, முக்கிய பங்காற்றியவராவார்.

இதனிடையே இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்புகள் இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என்ற ரீதியிலும் இவருக்கான பதவி உயர்வுகள் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இறுதி போரில் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? - ருவான் விஜேவர்தன

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை, பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது ராணுவம், இரசாயன தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தரப்பு மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவித்தார்.

இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த கால யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டியது. இந்த குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக கூறிய ருவான் விஜேவர்தன, இது குறித்த ஆதாரங்கள் எவையும் இல்லையென கூறினார்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது. முப்படையினர் மனிதாபிமான அடிப்படையிலேயே செயல்பட்டமையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். எனினும் அந்த மனிதாபிமான பணியை பற்றி கருத்து தெரிவிக்காத பலர், இப்போது ராணுவதை பற்றி குறை கூறி வருவதாகவும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.

Read more...

தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் மனநிலை, மஹிந்தவிடம் இல்லை - பந்துல

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் மனநிலையில் இல்லையென ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். .

நிறைவேற்று அதிகாரம், நிலையான ஆட்சி, மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்தையும் தன்  பக்கம் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏன், தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முடியவில்லையென அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

யுத்தத்தின் பின்னர், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. யுத்தத்தின் பின்னர் நாடு, நாட்டு மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்து செயற்படக் கூடிய பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

யுத்தம் யாரால் ஒழிக்கப்பட்டது என்பதை புறம்தள்ளி, யுத்தத்திற்கு பின் தேசியம் என்ற ரீதியில் எவ்வாறு சவால்களுக்கு முகம் கொடுப்பது என்று அனைவரும் சிந்திருக்க வேண்டும்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணவும், அதற்கான அடித்தளத்தை இடவும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. இதனை நிறைவேற்ற தெற்கில் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் நிலையாக இருந்தது, மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அவர்களின் கைகளிலேயே இருந்தன.

இவை எல்லாவற்றையும் விட, நாடு குறித்து சிந்தித்து பொதுப்படையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் மக்கள் இருந்தார்கள். அப்போதைய தலைவர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக இருந்திருந்தால், மக்களே பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆனால் அரசாங்கம் தமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்கான அரசியலமைப்பினை, குடும்பத்தின் எதிர்க்காலத்திற்காக மாற்றி, கடந்த கால அரசாங்க தரப்பு, 17 ஆம் திருத்தத்தை திருத்தி 18 ஐ கொண்டு வந்தனர்.

எனவே, தற்போதுள்ள தலைவர்களும் அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம், எவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணாமல், மக்கள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்” என பந்துல லால் பண்டாரிகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more...

வெளிநாட்டு தூதுவர்களின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட அநுர

தூதுவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்பதுடன், தூதுவர்களின் பேச்சுக்களை கேட்டு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தூதுவர்களின் பேச்சுக்கு இணங்க, அரசாங்கம் செயற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களில் தேர்தல்கள் அனைத்தும் உரிய காலப்பகுதியில் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன. ஜனநாயகம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் அரசாங்கத் தரப்பினர், தேர்தலை நடத்த முற்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஜனநாயகம் தொடர்பில் அக்கறை இருக்கிறது. அத்தோடு, தற்போது சில நாட்டு தூதுவர்கள் தமது அதிகாரத்துக்கும் மீறிய சில செயற்பாடுகளை மேற்கொள்வதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

நாடாளுமன்றில் குழப்பம் நடந்தபோது, கலரியைப் பார்வையிட வந்த சில தூதுவர்கள் கைத் தட்டுவதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இவர்களை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது? தூதுவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும். தூதுவர்களின் பேச்சுக்களை கேட்டு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

Read more...

சம்பள உயர்வு இல்லை - நவீன், ஒருவாரத்தில் தீர்வு - கமகே

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது என்று நேற்றை நாடாளுமன்ற அமர்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் M திலகராஜ் முன்வைத்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மைய நாட்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்ற வலியுத்தல், விடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் முறையான அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பபடுகின்றன. இந்த நிலையில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க 1000 ரூபா சம்பள விடயத்தில் அதிகரிப்பு இல்லை என்ற நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்ததுடன் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார், ஆனால் ஒரு வாரகாலத்தில் தீர்வு வழங்கப்படும் என்று தொழித்துறை அமைச்சர் தயா கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் 2 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எந்த காலத்திலும் புதுபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். தொழிலார் கொங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் மௌனம் காத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மனித உரிமை மீறல் என்பது சாதாரண விடயம் - சாதாரணமாக கூறினார் அருந்திக்க

யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது சாதாரண ஒரு விடயம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்னான்டோ நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்தார். நாம் அமெரிக்காவிற்கோ சர்வதேசதிற்கோ பயந்து வெளிநாட்டுக் கொள்கைகளை தயாரிக்கவில்லை. நாம் 30 வருடங்கள் யுத்தத்தினால் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி இருந்தோம். இன்று மனித உரிமை தொடர்பில் பேசும் எந்தவொரு நாடும் அன்று எமக்கு உதவவில்லை.

உலகிலேயே பயங்கரமான அமைப்புடன் தான் நாம் போரிட்டோம். இவ்வாறான அமைப்புடன் யுத்தம் செய்யும்போது, மனித உரிமை மீறப்படும். மனித உரிமை மீறப்படாமல், இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்புடன் எம்மால் போரிட முடியாது, இந்த விடயம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மனித உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை எடுக்கும் அரசாங்கம், உலகிலேயே அதிகமாக மனித உரிமை மீறல்கள் நடைபெறும் அமெரிக்காவுடன்தான் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ குற்றம் சுமத்தினார்.

Read more...

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்த நாமல்

பாதாளக் குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தின் போது அவர், பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் தமது அவதானிப்புகளை நேற்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இப்போது செயற்படும் அரசாங்கம் வெளிநாட்டு கொள்கைக்கு மதிப்பளிக்கின்றதா? என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக சந்தேகம் வெளியிட்ட அவர், இப்போது யுத்த குற்றசாட்டுகள் தொடர்பில் பெருமளவில் பேசப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இன்று யுத்த குற்றசாட்டு தொடர்பில் பேசுகின்றவர்கள், கடந்த காலங்களில், அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை இராணுவத்திற்கு எதிராக கூட்டு பிரேணையை நிறைவேற்றியிருந்தார்கள். இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐ.நாவில் கூறினார்கள். இப்போது இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் கூட தனிப்பட்டத் தேவைக்கு இணங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இப்போது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதாளக்குழுவினரின் நடமாட்டமும் சுமார் நான்கு வருடங்களாக அதிகரித்துள்ளது. நாட்டின் தலைவரை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கூட, எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய பாரதூரமான நிலைமையாகும் என நாமல் ராஜபக்ஷ அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தினார்.

Read more...

இலங்கை வரலாற்றில் கடன் செலுத்துவதற்கு பாரிய தொகை

இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 2019ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4,470 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆண்டில் கடன் செலுத்துவதற்கு 2200 பில்லியன் ரூபா, ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் வருடம் ஒன்றுக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் வழங்கப்படவுள்ள மிகப் பெரிய நிதித்தொகை இதுவென்று நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com