Monday, January 7, 2019

ஜனாதிபதியை ஏன் பிரதமர் பாராட்டினார் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள விசேட சுற்று நிரூபத்தை பிரமதர் பாராட்டியதுடன், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் குறித்த சுற்று நிரூபத்திற்கு ஏற்ற வகையில் செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாளில் அலரிமாளிகளையில் அமைச்சர்களை சந்தித்தபோது பிரதமர் மேற்படி தெரிவித்தார்.

ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு தலைவர்களை நியமிப்பதற்கான சுற்றுநிரூபம் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த சுற்றுநிரூபம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதியை பிரதமர் பாராட்டியுள்ளார்.

Read more...

ஏப்ரலில் ஆரம்பம் அறிவித்தார் அர்ஜுன்

மாத்தறை - பெலியத்தைக்கு இடையிலான புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த புகையிரத பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நேற்று வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெற்றது. இதில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி கூறினார். மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புகையிரத பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களாக அமையப்பெற்றுள்ளது.இதன் முதற்கட்டப் பணியாக 26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதை, மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக 278 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன எக்ஸின் வங்கி வழங்கியது.

இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் புகையிரத பாதை அமைக்கப்படவுள்ளது. மாத்தறை – பெலியத்த பாதையே இலங்கையில் மிக நீளமான சுரங்க புகையிரத பாதையாக அமைகின்றது . சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 மீற்றர் நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் மேலும் சில ஏற்பாடுகளாக, பல உப புகையிரத நிலையங்களும் இதில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மாத்தறைக்கும் கெக்னதுறவுக்கும் இடையில் ஒரு கிலோமீற்றர் தூரம் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையின் முக்கிய வேலை ஒன்றை முன்னெடுக்கும் இந்தியக் கப்பல்

நாட்டின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையை இலங்கை இந்தியா இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இலங்கையின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடந்த 20ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தை இந்திய கடற்படைக்குச் சொந்தமான யமுனா கப்பல் வந்தடைந்தது. இதன் தொடர்சியாக கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்பில் அளவீட்டு நடவடிக்கைகளில் சுமார் 15 நாட்களாக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது.

இந்திய கடற்படையின் இந்தக் கப்பலின் சிறப்பு என்னவென்றால், ஆழமான கடற்பரப்புக்களில் வரைபட தயாரிப்பை முன்னெடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பதே. இந்த இந்தியக் கப்பல் நாளை முதல் இரண்டு வார காலப்பகுதியின் தென்பகுதி கடற்பரப்பில் வரைபட தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுர சூரியபண்டார தெரிவித்தார். கடற்படையின் குழுவொன்றில் இந்த நடவடிக்கையில் இணையவுள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் இந்தக் கப்பல் நாட்டிலிருந்து வௌியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, January 6, 2019

நிறைவேற்று ஜனாதிபதியின் ஆளுநர் நியமன அரசியல்...அருண் ஹேமச்சந்திரா-

கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி, நம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் வழமை போன்று விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமைக்குச் சில தினங்களுக்கு முன்னர் தாமாகவே தமது இராஜினாமாக் கடிதங்களை வழங்கிய ஆளுநர்களின் வெற்றிடங்களுக்கே புதிய ஆளுநர்கள் ஐவர்கள் நியமிக்கப்பட்டமையே அச் சம்பவமாகும்.

முதலில் ஆளுநர்கள் என்பவர்கள் யார் ?

ஆளுநர் என்பவர் நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாவர். உலகின் சில நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமரிக்கா, பிலிப்பையின்ஸ் போன்ற நாடுகளில் ஆளுநர்களுக்கான தேர்தல்கள் நிகழ்த்தப்பட்டாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலையொன்றில்லை.

ஆகவே குறித்த ஜனாதிபதியின் கட்சியின் விசுவாசியாகவும், அவரது நிகழ்ச்சி நிரலை நிபந்தனைகள் இன்றி நடைமுறைப்படுத்தும் நபராகவும் இருத்தலே இலங்கையைப் பொறுத்தவரையில் ஆளுநரின் அடிப்படைத் தகைமையாகும். தேர்தல் காலங்களில் அதன் விதிகளை மீறுவதற்கான பினாமிகளாகவும் தொன்று தொட்டு இந்த ஆளுநர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய நியமனங்கள்.

வழமையாக ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தமது சேவைக்காலம் அதாவது குறித்த ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உட்பட்ட காலம் வரையில் சேவையில் இருப்பார். சிவில் சேவை அதிகாரிகள் போலல்லாமல், ஆளுநர்களைப் பொறுத்தவரையில் எவ்வித அடிப்படைத் தகைமைகளும் தேவையில்லை.

ஜனாதிபதியால் தாம் விரும்பும் யாராவது பொருவரை நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் முன்பு பதவியில் இல்லாத ஐந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சரத் ஏக்கநாயக்க, பேஷல ஜயரத்ன, அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.

இக் கட்டுரையில் தனித்தனியாக அனைத்துப் புதிய ஆளுநர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டாலும், கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் பற்றிச் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

1. சட்டத்தரணி மைத்திரி குணரத்ன – முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகான உறுப்பினரும், பின்னர் அக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக இயங்கி, அதனை அடுத்து வாழைப்பழச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, அதன் தலைவர் பதவியை வகிப்பவருமாவார். முன்னாள் கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரான இவரின் பெயரும் அண்மையில் வெளிவந்த 25 பேர்களைக் கொண்ட புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2. சரத் ஏக்கநாயக்க – முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சரான இவர், சிறிலங்காக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். ஜனாதிபதயின் மீதும், சுதந்திரக் கட்சியன் மீதும் விசுவாசத்தைக் கொண்டவரக அறிய முடிகின்றது.

3. பேஷல ஜயரத்ன – வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான இவர், சிறிலங்க சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவார்.

4. அசாத் சாலி – கொழும்பு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய இவர், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபையின் உப தலைவராகக் கடமையாற்றியதுடன், சில காலம் மஹிந்த ராஜபக்சவுடனும் அரசியலில் ஈடுபட்டவர். சுயேற்சை அரசியலைப் பின்னர் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் தனக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படாமையை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வட்டாரத்தில் தோல்வியைத் தழுவியவர். கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு மிகவும் நம்பிக்கை நிறைந்தவராவார் என்பது அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்களின் மூலம் தெளிவாகின்றது.

5. எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் – கிழக்கு மாகாண அரசியலில் குறிப்பாக காத்தான்குடியினை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் இவர் கட்சித்தாவல்களுப் பெயர் போனவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர், முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார். பின்னர் சந்திரிக்கா ஜனாதிபதி அவர்களின் காலத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரதி அமைச்சராக இருந்ததுடன், முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பொருட்டு தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அதன் உப தலைவராச் செயற்பட்டார்.

அடுத்த தேர்தலின் மூலம் பாராளுமன்றம் செல்லத் தவறியமையை அடுத்து, சந்திரிக்கா ஜனாதிபதினால் நீர்ப்பாசன சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், தோல்வியைத் தழுவினார்.

அதனை அடுத்து விமான நிலையங்கள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து பல கோடி ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இவரது மனைவி 4 நிறுவனக்களின் தலைமைப் பதவியில் இருந்ததாகவும், அவர் மூலம் பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் பல்வேறு தரவுகளுடன் சான்றுகளுடன் வெளிவந்தன.

இக்கட்டுரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லாதபடியினால் அவற்றை இதனுடன் இணைக்கவில்லை. தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவற்றினை என்னால் வழங்க முடியும்.

அத்துடன் காத்தான்குடியின் ஒருகாலத்தின் பிரதான பேசுபொருளாக கர்பலா பிரச்சனை திகழ்ந்தது. ஏழை முஸ்லிம்கள் பலருக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான கடற்கரை காணியை ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பினாமி பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், 2004 சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடம் எனவும் அந்த மக்களுக்கு எங்கே போயும் காணியை மீட்க முடியவில்லை என்றும் பலர் என்னிடம் நேரில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தேசிய அரசியலில் இருந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து சில காலம் உறுப்புரிமை வகித்த இவர், பின்னர் பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் திடீரென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் இணைந்து, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். குறித்த தேர்தல் காலங்களில் இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பறை சாற்றினாலும், பின்னர் அப்பதவி பிள்ளையாணிற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

அத்தேர்தலின் மூலம் மாகாண சபை சென்ற இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியதுடன், பின்னர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அமைச்சுப் பதவியும் வகித்தார். அடுத்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதி தீவிர மஹிந்தவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட இவர் தோல்வியைத் தழுவினார். அக்காலப்பகுதியில் இவர் தன்னை ஒரு தமிழ் இந்து விரோத இனவாதியாகப் பிரச்சாரம் செய்தமை பலராலும் விமர்சிக்கப்பட்டது.

பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றவுடன் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று ராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித்தார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தழுவினார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், காத்தான்குடியில் இவரது வழி நடத்தலின் கீழ் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றதுடன், ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தியமை குறிப்பிடத்தகதாகும்.

இந்த நியமனங்கள் என்ன சொல்ல வருகின்றன ?

பலர் பல்வேறு கோணங்களில் இந்நியமனங்க்களைக் குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் தொடர்பாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், நாம் இதன் உண்மைப் பின்னணி யாதென்று மக்களுக்குக்கு அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் இந்த ஒவ்வொரு புதிய ஆளுநர்களையும் எடுத்துப் பார்த்தோம் என்றால், எந்த ஒரு வகையில் சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கோ நேரடித் தொடர்புடையவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கத்தில் தனது கட்சி அங்கம் வகிக்காமையைத் தொடர்ந்து மைத்திரி கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமே இந்த ஆளுநர் நியமனங்கள்.

குறிப்பாக நியமித்த திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை எதிர்பார்க்கும் பட்சத்தில் மைத்திரி தனது அன்றாடம் நலிவடைந்துவரும் முகாமைப் பலப்படுத்த நினைக்கின்றார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டும், உள்ளூர் ஆட்சி சபைகளுள் பாரிய வீழ்ச்சிகளையும் கண்ட மைத்திரி, தற்போது எதிர்நோக்கும் பிரச்சனை அவரது கட்சிக்கு அமைச்சுப்பதவிகள் இல்லாமையே. அதனை ஓரளவேண்டும் நிவர்த்தி செய்ய பாவித்துள்ள ஆயுதங்களே இந்த ஆளுநர்கள்.

அதாவது தேர்தல் இலக்கை மையப்படுத்திய ஆளுநர் நியமனங்களே இவை. இலங்கையில் இதற்கான தேவை இதுவரை காலமும் பாரிய அளவில் காணப்படவில்லை. மாகாணங்களில் ஆளுநர் ஆட்சிகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இவர்கள் மூலம் அதி உச்ச பயனைப் பெற நினைக்கின்றார்.

அத்துடன் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர். தற்போதோ அவரிடம் அமைச்சுப் பதவி இல்லை. இவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோவொரு அரசாங்கப் பதவியை வகித்துள்ளார்.

ஆகவே இவரை மைத்திரி தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பாவித்துள்ள ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம். அத்துடன் இவரது வெற்றிடம் மூலம் தனது பிரச்சாரத்தை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக் கூடிய சாந்த பண்டாரவை நியமித்துள்ளார்.

ஆகவே இங்கு நாம் ஒன்றை மாத்திரம் விளக்கமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு இனவாதியாக இருக்கலாம். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

அது போன்று கிழக்கிலங்கையில் இதுவரை ஆட்சியமைத்துப் பதவி வகித்த அனைத்து தமிழ் முஸ்லிம் சிங்களத் தலைமைகளும் அவ்வாறே காணப்பட்டனர்.

இங்கு பிரதான பிரச்சனையாக விளங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்குத் தேவையான யாரையும் பதவியில் அமர்த்தலாம் அல்லது விலக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ள இந்த அதிகாரம் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டைத் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. அதனால் ஏற்படுத்தப்படும் தாக்கம் அடிமட்டத்தில் பல்வேறு இனவாத, அடிப்படைவாத சிந்தனைகளைத் தூண்டுகின்றது.

ஆகவே ஒரு சிலரின் பதவி வெறிக்காக பலர் ஒற்றுமையைக் குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் குறுகிய காரணங்களுக்காக ஆதரவளிப்பதும், சிலர் அக்காரணங்களுக்காக்கவே வெறுப்பதும் இங்கு சர்வ சாதாரணமாயுள்ளது. இது ஒருபோதும் நாடு என்ற ரீதியில் நல்ல விடயமல்ல.

சர்வாதிகாரப் போக்கினைத் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை 1994ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்துவரும் அனைத்து ஜனாதிபதிகளும் அதனை நீக்குவதகான மக்கள் ஆணையைப் பெற்றும், அதன் பின்னர் ஏற்பட்ட பதவி மோகத்தால் இன்றுவரை நீக்காமல் இருக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 2015 ஜனவரி 08 ம் திகதி ஆசனத்தில் மக்கள் அமரவைப்பதற்கான தீர்ப்பை வழங்கினர்.

மைத்திரி அவர்கள் தான் பதவிக்கு வந்தவுடன் இதனை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார். நூறு நாள் வேலைத் திட்டம் என்றார். கொழும்பை விட்டு விலகி பொலன்னறுவையில் இருந்து தமது ஆட்சியைப் புரிவேன் என்றார். மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமார்ந்து இன்னும் இரண்டு நாட்களில் 04 வருடங்கள் நிறைவடைகின்றன. சிக்கல்கள் வலுவடைந்தே செல்கின்றன. இதைக் கடந்த ஒக்டோபர் 26 தொடக்கம் நாடே அனுபவித்தது. இனியும் இதனை ஏன் நீக்கவேண்டும் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நாட்டில் உண்மை ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும். சர்வாதிகாரம் ஒழிய வேண்டும், தேசிய ஒற்றுமை ஒங்க வேண்டும். உலகத் தராதரத்தில் நம் நாட்டையும் ஓர் பொருளாதார ரீதியில் பலமிக்க நாடாக மாற்றவேண்டும், அனைவருக்கும் பாரபட்சமற்ற வேலைவாய்ய்பு வழங்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை உடைய அனைத்து முற்போக்குச் சக்திகளும், இன, மத, மொழி, பால் என்ற பேதங்களைத் துறந்து ஒன்றாக ஸ்தாபனப்படுத்தப்பட வேண்டிய தருணமிது...

-அருண் ஹேமச்சந்திரா-

Read more...

முதலாவது கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவை? - எதிர்பார்ப்பு மிக்க தருணம் இதுவே

இந்த வருடத்தின் முதலாவது அரசியல் அமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அத்துடன் அண்மையில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஈவா வனசுந்தரவின் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றகளுக்ககான நியமனங்கள் தொடர்பில் குழப்பமான நிலையே தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இன்று அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளது. இதனிடையே சுமார் 75 நாட்களாக ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பு பேரவையினால் அனுப்பிவைக்கப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கபட்டவர் யார்?

கிழக்கு மாகாண ஆளுநனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தகுதியானவரை உடனடியாக பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்த கோரிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பாட்டு வந்த எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநனராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தில் இருந்து விலகியநிலையில், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பான கேள்வி எழுந்தது.

இந்த நிலையிலேயே இவரது வெற்றிடத்திற்கு தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது.இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இவரது பதவி விலகலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளரினால் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியானவர் பெயரிடப்பட்டதுடன், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தது.

Read more...

மகனுக்காக களத்தில் இறங்கினார் சாலி மகேந்திரன் - நடப்பது என்ன?

எனது மகனை எவ்வாறு குற்றவாளியாக அடையாளப்படுத்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் தந்தையான சாலி மகேந்திரன் இன்று ''தி ஐலண்ட் '' பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் தேடப்பட்டுவரும் பிரதான குற்றவாளியான அர்ஜுன் மஹேந்திரக்கு, சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில் கைதான அர்ஜுன் அலோசிஜஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கடந்த ஒருவருட காலமாக விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், அண்மையில் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் அர்ஜுன் மகேந்தின் தேடப்படும் குற்றவாளியாக உள்ளநிலையில் அவரது தந்தையாரான சாலி மகேந்திரன் ''தி ஐலண்ட்'' என்ற ஆங்கில பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,எனது மகனை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு இருக்கும் சாட்சியங்கள் என்ன ?அர்ஜூன் மகேந்திரனுக்கு தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளில் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் பிட்டிபன குழு உயர்நீதிமன்றம் மற்றும் கோப் குழுவில், அர்ஜூன் மகேந்திரன் எந்த குற்றத்தையும் செய்ததாக குறிப்பிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறிகள் கெடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆனைக்குழு நியமிக்கப்பட்டது. அர்ஜூன் மகேந்திரன் மீண்டும் நாட்டுக்கு திரும்பினால் அது பாரிய விடயமாக மாறும் என்று தெரிவித்த அவர், சுதந்திர தினத்தன்று அர்ஜூன அலோசியஸை கைது செய்ததன் மூலம் இதன் அரசியல் தேவை வௌிப்பட்டதாக சாலி மகேந்திரன் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அர்ஜூன் மகேந்திரனை நான்கு வருடங்களுக்கு அரசியல் கட்சி ஒன்றுக்கு ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு. அரசியல்வாதிகள் தமது ஊடக நண்பர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் தந்தையான சாலி மகேந்திரன் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய அரசியல் அமைப்பு, விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ராஜித்த கூறுகிறார்.

புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, புதிய அரசியல் அமைப்பை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை புதிய அரசியல் அமைப்புக்கு தாம் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்களின் வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கத்துடனேயே புதிய அரசியல் அமைப்பை, அரசாங்க தரப்பினர் கொண்டு வருவதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு தீமையே வரும் என கூறிய பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பிற்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

Read more...

பால்மா விலை அதிகரிக்கப்படாவிட்டால், இறக்குமதி நிறுத்தப்படும் - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்.

பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், பால்மா இறக்குமதியை நிறுத்துவோம் என, பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சந்தையில் தற்போது பால்மாவின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தற்போது பால்மா விற்பனையின் போது, 30 தொடக்கம் 40 சதவீத நட்டம் ஏற்படுவதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ பால்மாவிற்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதுடன், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பால்மா இறக்குமதியில் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த சங்கம், பால்மா விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாறாக அனுமதி மறுக்கப்பட்டால், தாம் பால்மா இறக்குமதியை நிறுத்தப் போவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

Read more...

மஹிந்தவின் ஆஸ்தான ஜோதிடருக்கு, மிஹின்லங்கா பணத்தில் கார் கொடுக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், மிஹின்லங்கா விமான நிலையத்தின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது ஆஸ்தான ஜோதிடர் சுமணதாஸ அபேகுணவர்தனவிற்கு, மிஹின்லங்கா விமான நிலையத்தின் பணத்திலிருந்து ஒரு காரை கொள்வனவு செய்து பரிசளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிஹின்லங்கா நிறுவனத்திற்கு 8 . 2 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிலையம் மற்றும் மிஹின்லங்கா விமான நிலையம் மூலமாக பண மோசடிகள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகளின் போதே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சி காலத்தில் சுமார் 26 கார்களை கொள்வனவு செய்ததாகவும் அதற்கான நிதியை, மிஹின்லங்கா நிறுவனமே வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

மைத்திரி- மஹிந்த- சந்திரிக்கா கூட்டணியை இணைத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவோம் - தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை இணைத்துக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வ்வாறு கூறினார்.

“நாடாளுமன்றில் இன்று பெரும்பான்மையல்லாத ஒரு அரசாங்கமே இருக்கிறது. இதில் அனைவரும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர்கள் பல்வேறு வழிகளில் செயற்படுகிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஞாபகமில்லாமல் இருக்கிறது.

இதிலிருந்து மீண்டுவர வேண்டுமாக இருந்தால், பொதுத் தேர்தலுக்கு சென்றே ஆக வேண்டும். ஸ்திரமில்லாத அரசாங்கத்தால் இனியும் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது.

இதன் காரணமாக, பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தேர்தலொன்றுக்கு சென்றே ஆக வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறிய அவர், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் இணையப்போவதாக தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த தீர்மானம் குறித்து பல தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்த திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் பொது எதிரணியினர் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்.

கைது செய்யப்பட்டு சிறைப்டுத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் டாக்டர்.கிருஷான் ராமசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் நான் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது, முடியுமானால் எமது ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள். அதிகாரம் மிக்க ஜனாதிபதியான உங்களால் மட்டுமே இதைச் முடியும்.தேரர் அவர்கள் எவ்வித குற்றமும் செய்யவில்லை.

அவர் சிங்களவர்களுக்காக மட்டுமன்றி தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர் ஆவார். யாழ்ப்பாணம், கொடஹென, வெல்லவத்த ஆகிய இடங்களில் இந்து சமயத்தவருக்கு இடர்கள் ஏற்பட்ட போது தேரர் அவர்கள் முன்நின்று செயற்பட்டுள்ளார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான எவ்வித தொடர்பும் கிடையாது. நாட்டிற்காக குரல் கொடுத்தாரே ஒழிய, கொலை குற்றம் எதுவும் செய்துவிடவில்லை.இதற்காக 6 வருட சிறைவாசம் என்பது அநீதியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது உங்களுக்கு மாபெரும் வெற்றியை எமது கட்சி பெற்று கொடுத்துள்ளது. நாம் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.தேரர் அவர்களை முடியுமானால் விடுதலை செய்யுங்கள்.நாட்டிற்காக குரல் கொடுக்க ஒருவர் தேவை.ஞானசார தேரரின் கருத்துக்கள் வீரியமானவை என்றாலும் அவற்றை நாம் பிழை என்று கருத முடியாது.

இந்து மதத்தவர் எவரும் தேரர் அவர்களை ஒரு போதும் குறை கூறுவது இல்லை. ஒரு முறை மட்டக்களப்பில் சிலை ஒன்றினை திறந்துகொள்ள மக்கள் திண்டாடிய வேளையில், ஞானசார தேரர் தலையிட்டு மக்கள் கைவசம் ஒப்படைத்தார்.

எனவே நான் மிக கௌரவத்துடன் தமிழ் கட்சி என்ற வகையில் மாண்புமிகு ஜனாதிபதியிடமும், பொறுப்புள்ள அதிகாரிகளிடமும் எதிர்வரும் சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றேன். ஜனாதிபதியின் நீண்ட ஆயுள் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.' என, அருனலு மக்கள் பெரமுனவின் தலைவர் டாக்டர்.கிருஷான் ராமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் S. அருள்சாமி காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை காலமானார்.

59 வயதான இவர், தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்டவருமாவார். சுகயீனம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தமது தந்தை இயற்கை எய்தியதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமியின் புதல்வர் உறுதிப்படுத்தினார்.

எனினும் அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Read more...

பெருந்தோட்ட மக்களுக்காக, ஒருமீ- சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றியம் பிரதமருக்கு கடிதம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு தரப்புக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் கருத்து வெளியிடும் போது, தம்மால் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளன.

எனினும் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் வேண்டும் என்று, பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து, ஒருமீ - சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலார்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடப்பாடுகள் தற்போதைய அரசாங்கத்துக்கும் உண்டு என, ஒருமீ- சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு பிரதமரிடம் இருந்து தமக்கு உரிய பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, ஒருமீ - சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Read more...

எதிர்கட்சி தலைவர் என்ற வகையில் காரியாலயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேவையை செய்வேன். மஹிந்த

காரியாலயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிர் கட்சி தலைவர் என்ற வகையில் எனது செயற்பாடுகளை முன்னெடுபேன் என முன்னால் ஜனாதிபதியும் எதிர் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர்:

எதிர் வரும் தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சியும் ஸ்ரீ.பெ.பெரமுனவும் ஒன்றிணைந்து ஐ.தே.கட்சிக்கு எதிராக தேர்தல் களத்தில் செயற்படுவோம். எதிர்கட்சி காரியாலயம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் முறைக்கோடன நடவடிக்கைகளை முறியடிக்க எதிர்கட்சி தலைவராக செயற்பட நான் ஒரு போதும் பின் வாங்க போவதில்லை.

இவ்வருடம் முழுதும் தேர்தல் இடம் பெறும் வருடமாகவே உள்ளது. இதனால் கட்சியின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டியுள்ளது. 50 நாட்களுள் அரசாங்கத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற வேளையில் சார்பான எதிரான வாதங்கள் வெளிவந்தன. இதேவேளை நாட்டின் விமான நிலையம் துறைமுகம் வங்கி ஆகியவற்றை விற்கின்றனர். இன்னும் விற்க ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன. இதுமட்டுமல்லாமல் பெடரல் அரசாங்க முறைமையை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ.சு.கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்திருந்தமையினாலேயே இவர்களுக்கு இலகுவாக பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால் இன்று ஸ்ரீ..சு.கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளமையான எமக்கு மாபெரும் வெற்றியாகும்.

இன்று பிரதமர் நாம் அரசாங்கத்தை ஏற்ற 50 நாட்களுக்குள் 8 பில்லியன் ரூபா செலவளித்துள்ளதாக கூறுகிறார். மக்கள் மத்தியில் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கின்றோம்' என அவர் கூறியிருந்தார்.

Read more...

பிரபுக்கள் பாதுபாப்பு ஆபத்தான கட்டத்தில்.

பிரபுக்கள் பாதுகாப்புக்குரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்ளாத பாதுகாப்பு உத்தியோகித்தர்கள் பலர் தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு சேவையில் உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபுக்களே இவ்வாறானவர்களை தெரிந்தெடுப்பதாகவும் இதனால் பொலிஸ் தலைமையகம் சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் மாதம் ஒருமுறை சிறந்த உடற்பயிற்சி மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி என்பவற்றிற்கு செல்லவேண்டிய நிபந்தனை உள்ள நிலையில், அமைச்சர்களால் தமது விருப்பு ஏற்றவாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்கள் இவ்வாறான பயிற்சிகளுக்கு செல்வதில்லை என்றும் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

அத்துடன் தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் ஆபத்துக்களின்போது தங்களையே தப்பவைத்துக் கொள்ள முடியாத குண்டர்களாக காணப்படுவதுடன் பலரது வயது 50 ஐயும் தாண்டி விட்டதாக அறியமுடிகின்றது.

Read more...

மஹிந்தவை பிரதமராக்கும் நடவடிக்கையை நான் கைவிடவில்லை. மைத்திரிபால சிறிசேன.

இந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்கும் தனது நோக்கத்தை இன்னும் கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களை சந்தித்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் பொருட்டு சக்தி மிக்க கூட்டணி ஒன்றை அமைத்து அந்த இலக்கை அடைவதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் ஒரு சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் இணை முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு அக்கருமத்தை மேற்கொள்ள இடமளியேன் என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதற்கு பதிலாக தாம் சக்தி மிக்க கூட்டணியை அமைத்து அரசமைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயமானது தனக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்ற காரியாலயமாக கடந்த காலங்களில் செயற்பட்டதாகவும் அவ்வாறு செயற்பட்ட ஒரு சிலர் மைத்திரிபால சிறிசேன என்ற நபர்தான் இக்கட்சியில் தலைவர் என்பதை மறந்திருந்தார்கள் என்றும் கர்ச்சித்துள்ளார்.

Read more...

Saturday, January 5, 2019

359 ரூபாவால் அதிகரிக்கப்படுமா? - வருட ஆரம்பத்தில் நுகர்வோர் எதிர்நோக்கி இருக்கும் சிக்கல்

சமையல் எரிவாயுவின் விலையை 359 ரூபாவால் அதிகரிப்பதற்கான வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோரிக்கை, சமையல் எரிவாயு நிறுவனங்களினால் நுகர்வோர் அதிகார சபையிடம் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 359.00 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை சமையல் எரிவாயு தொடர்பிலான விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

2500 முறைப்பாடுகள் இவை தொடர்பில் பதிவு - அவதானம் மக்களே

கடந்த வருடம் சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான சுமார் 2500 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் முகநூல் தொடர்பிலேயே அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சமூகவலைத்தளங்கள் மூலம் பண மோசடி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பிரச்ச்சினைகளை பலரும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Read more...

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் காரசாரமான பதில் வழங்கினார் மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதி அபேட்சகர் பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தாம் வழங்கப்போவதில்லை என்று
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் பொருட்டே அவர் இவ்வாறு கூறினார். மேலும் சந்திரிக்காவின் பின்னால் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாரும் இல்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு சிலரை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மைய நாட்களில் கூறப்படும் தகவல்கள் தொடர்பில் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read more...

போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பி செல்ல உதவி சந்தேக நபர் கைது

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த என்பவரை சிறைச்சாலைக்குள் இருந்து தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்த நபர், லுணுகம்வெஹர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறினார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சிப்பாய் ஒருவர், சிறைச்சாலைக் கட்டுப்பாட்டாளர் என்ற போர்வையில் சிறைச்சாலைக்கு சென்று, சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்திருந்தார். இந்த நிலையில் குறித்த 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் லுனுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து கைதாகியுள்ளார்.

சுனில் சாந்த என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், வழக்கு ஒன்றிற்காக களுத்துறை சிறையில் இருந்து கேகாலை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு களுத்துறை சிறைச்சாலை பேரூந்திற்கு மாற்றப்பட்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்தவர்களால் சுனில் சாந்த தப்பிச் சென்றார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி தப்பிச்சென்றிருந்தார்.

பின்னர் அவர் கண்டி மீமுரே பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்துவந்த நிலையில்,கடந்த டிசம்பர் மாதம் 11 ம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் எதற்கு? அரசியல் பக்கம் நான் வரப்போவதில்லை - முத்தையா முரளிதரன்

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலுக்கு நான் எந்த சந்தர்ப்பத்திலும் வர மாட்டேன் என்று, முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஹட்டனில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

அங்கு இடம்பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். இந்த சந்திப்பில் முன்னாள் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு அரசியலில் அனுபவமும் இல்லை. ஆனால் எனது அமைப்பின் ஊடாக கஸ்ரங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலை தொடர்பாக நான் விமர்சிக்க விரும்பவில்லை. முக்கியமாக தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 1000 ரூபாவுக்கு மேல் வழங்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இவர்களது ஊதிய உயர்வு விடயம் தொடர்பில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போன்றோர் அவர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையை ஏற்று, உரிய ஊதியத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்களும் ஆதரவு வழங்குவோம். அத்துடன், தொழிலாளர்களை பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஹர்த்தாலில் ஈடுப்படுத்த வேண்டாம். அவர்கள் தமது பணிகளை தடை இல்லாமல் முன்னெடுக்க வேண்டும். அவர்கள் பணிகளை சரிவர முன்னெடுத்தால்தான் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மேலும், சம்பள பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்பவர்களால் அவர்களின் நாள் சம்பளத்தை கொடுக்க முடியுமா ? இவ்வாறு சொல்லுபவர்களால் அது முடியாது. இதனால் இறுதியில் பாதிப்படைவது தொழிலாளர்கள்தான். எனவே இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, 20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இதைப்பிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தை மாத்திரம் குறை கூற முடியாது. அணியின் வீரர்களும் பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணியை பொறுத்த வரை பண தட்டுப்பாடு என்பது இல்லை. எனவே கிரிக்கெட் வீரர்களின் ஆளுமை மற்றும் திறன்களை விருத்தி செய்து 20 வருட வெற்றி பயணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அ\னைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.

Read more...

கொடிகாம விபத்தை புகைப்படம் எடுத்தவரை கைது செய்தனர் பொலிசார்

கொடிகாமம் சந்திப்பகுதியில் இன்று இரவு, மோட்டார் வண்டி ஒன்றும் ரிப்பர் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் A9 வீதியின் ஊடாக கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், திடீரென கொடிகாமம் கச்சாய் வீதி திருப்பத்தில் குறிக்கிட்ட போது கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த ரிப்பர் ரக வாகனத்துடன் மோதி, விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மோட்டார் வாகனம் உட்பட மேலும் ஒரு வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை செலுத்தி சென்றவர் சமயோசிதனமாக செயற்பட்டமையால், அவர் சிறிய அளவிலான காயங்களுக்கு மாத்திரமே இலக்கானார். இந்த நிலையில் விபத்து சம்பவித்தபொழுது அங்கு நின்ற ஒருவர் தனது ஸ்மார்ட் தொலைபேசியால் புகைப்படம் எடுத்திருந்தார். இதனை கண்டித்த பொலிசார், அவரிடமிருந்த கைதொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.

புகைப்படம் எடுத்தவர் பொலிசாரிடம் கைதொலைபேசியை பெற்றுக்கொள்ள முயன்ற போது, பொலிசார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் என்று விபத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.


Read more...

நாலக்கவின் கைது உறுதியான சாட்சியங்களின் பின்னரே இடம்பெற்றது - குற்றப்புலனாய்வு பிரிவு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான உறுதியான சாட்சியங்கள் கிடைத்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதே, குற்றப்புலனாய் பிரிவினர் இவ்வாறு குறிப்பிட்டனர். கொலை சதித்திட்டம் தொடர்பான ஆவணங்கள், சீல் வைக்கப்பட்ட உரையொன்றுக்குள் வைக்கப்பட்டு, நாமல் குமாரவிற்கு வழங்கப்பட்டதாக, நாலக டி சில்வாவினால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலின் குரல் மாதிரி வெளியானதை அடுத்தே, நாலக்க சில்வாவை தாம் கைது செய்தததாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்கு ஹெட்டிகே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குரல் மாத்திரைகளின் மூலம் 427 உரையாடல்கள், 26 காணொளிகள்,4321 புகைப்படங்கள் என்பன மீள பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொலைபேசியில் உள்ள குரல் மாதிரிகளை பற்றிய மேலதிக ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் குடும்ப சொத்தல்ல- கூட்டமைப்பை வறுத்தெடுக்கும் செஹான் சேமசிங்க.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தை பலவந்தமாக வைத்துக்கொள்ள, அது ஒன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குடும்ப சொத்தல்ல என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிடித்த தலைவர் மஹிந்த ராஜபக்சவே என்று கூறிய செஹான் சேமசிங்க, அவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் நீண்ட காலமாக அரசியலில் இருந்த இரா.சம்மந்தன் முறையாக எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயல்படுவார் என்று அறிவித்த பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு முரணான செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் தமது தரப்புக்கே பலத்த வெற்றி கிடைக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

நீர்கொழும்பில் கூண்டுடன் நாய் ஒன்று, எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது.

நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் இருந்த நாய், கூண்டுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இந்த கொலை சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர் ஒரு கூலித் தொழிலாளி என்றும் குறிப்பிட்டனர்.

கடந்த 31 ஆம் திகதி லெப்ரடோ என்ற இனத்தைச் சேர்ந்த நாய், மண்ணெண்ணெய் ஊற்றி கூண்டுடன் எரியூட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நாய், மறுநாள் இரவு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸ் குழுவொன்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றும், விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இதேநேரம் மேற்படி சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடன் விரைந்து தமக்கு அறிவிக்குமாறு நீர்கொழும்பு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல்களை, 071 859 16 30 அல்லது 071 859 16 26 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என, நீர்கொழும்பு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

சம்மந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - வாசுதேவ நாணயக்கார கூறுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்த போதிலும், இரா.சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது குறித்து, சபாநாயகர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

சபாநாயகர் கடந்த ஆண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நடந்து கொண்டமை அதிர்ப்தியளித்ததாக தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை ஆராய்ந்து சபாநாயகர் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

Read more...

அரசியலமைப்பு வரைவை இனவாதத்திற்கே மஹிந்த ராஜபக்ச பயன்படுத்துகிறார்- அஜித் பி. பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, அரசியலமைப்பு வரைவை இனவாதத்திற்கே பயன்படுத்தி வருவதாக, ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பி, அதன் மூலம் அரசியை தொடர பல அரசியல் வாதிகள் முயற்சி எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அரசியல்வாதிகள், மக்கள் மத்தியில் பிழையான எண்ணக்கருக்களை உருவாக்குவதாகவும், ராஜாங்க அமைச்சர் அஜித். பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்பதற்காகவே, அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க எத்தனிக்கிறது. எனினும் இந்த அரசியலமைப்பை கொண்டு இனவாதத்தை தூண்டி, அதன் மூலம் அரசியலை கொண்டு செல்ல மஹிந்த ராஜபக்ச மும்முரமாக செயல்பட்டு வருவதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஆளுநனரும் அதிகாரங்களும் - வை எல் எஸ் ஹமீட்

ஆளுநர் நியமனம்

சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது . சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்கலாம். 154B(2)

அதேநேரம் 2/3 பெரும்பான்மை மூலம் குறித்த காரணங்களுக்காக ஆளுநரை நீக்கும்படி மாகாணசபை கோரலாம். 154B(4)

அதிகாரம்

ஜனாதிபதியைப்போன்று ஆளுநருக்கும் மாகாணசபையைக் கூட்டுகின்ற, ஒத்திப்போடுகின்ற ( to prorogue), கலைக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. 154B(8) ஆனால் முதலமைச்சருக்கு பெரும்பான்மை இருக்கின்றபோது அவரது சம்மதமின்றி கலைக்க முடியாது. 154B(8). முதலமைச்சரின் சம்மதமின்றி கலைத்து நீதிமன்றத்தினூடாக மீண்டும் கூட்டப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.

நிறைவேற்றதிகாரம்

நிறைவேற்றதிகாரம் ஆளுநருக்குரியது. அவற்றை நேரடியாகவோ அல்லது அமைச்சர்களுக்கூடாகவோ அல்லது அதிகாரிகளுக்கூடாகவோ ஆளுநர் பாவிக்கலாம். 154C. ஆனால் அவ்வதிகாரங்களை அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம்தான் பாவிக்கலாம். 154F(1) ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

இங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அதிகாரமளிக்கின்ற பிரதான சரத்துக்கள் இவை இரண்டுமே. இங்கு ‘ஆலோசனை’ என்று பாவிக்கப்படும் சொல் அறிவுறுத்தலே. அதன்பிரகாரம்தான் ஆளுநர் நடக்க வேண்டும். (உண்மையில் இது ஒரு Westminster மொடலாகும்.) 1972ம் ஆண்டு யாப்பில் நிறைவேற்றதிகாரம் இல்லாத ஜனாதிபதிக்கும் இதேபோன்ற வசனமே பாவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பாவிக்கப்பட்டால் அந்த விடயங்களில் அவர் நிஜத்தில் நிறைவேற்றுதிகாரம் அற்றவரே. நிறைவேற்றதிகாரம் அந்த ஆலோசனை வழங்குபவருக்கு யதார்த்தத்தில் போய்விடும். இந்திய ஆளுநனரின் அதிகாரமும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. [இந்திய யாப்பு- சரத்து163]

ஆனாலும் இலங்கை ஆளுநர் விதிவிலக்கான விடயங்களில் மாத்திரமல்ல, மேற்கூறிய சரத்துக்களின்படி நிறைவேற்றதிகாரமல்லாத, வெறும் றப்பர் ஸ்டாம்பாக இருக்கவேண்டிய விடயங்களில்கூட அவர் மிகவும் அதிகாரம் பொருந்தியவராகவே இருக்கின்றார். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்று: சரத்து 154F(2) ஆகும். அதாவது 154F(1) இன்படி நிறைவேற்றதிகாரவிடயத்தில் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய இயங்க வேண்டும் ஆனால் அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட சில தற்துணிவு அதிகாரங்களில் அமைச்சரவையின் ஆலோசனையின்படி இயங்கத்தேவையில்லை; என்ற விதிவிலக்கு இருக்கின்றது. மேற்படி உப சரத்து இரண்டில் ஏதாவது ஒரு விடயத்தில் ஆளுநர் தனது தற்துணிவு அதிகாரத்தை பாவித்திருக்க வேண்டும்; என்றோ பாவித்திருக்கக் கூடாது; என்றோ அந்த அடிப்படையிலும் நீதிமன்றில் கேள்வி எழுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதே சரத்து இந்திய யாப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரத்து 163(2). ஆனால் தற்துணிவு அதிகாரத்தைப் பாவித்திரிக்க வேண்டுமா? இல்லையா? என்றுதான் கேள்வி எழுப்பமுடியாதே தவிர, இது தற்துணிவு அதிகாரமா? இல்லையா? என்று கேள்வி எழுப்புவதில் தடையில்லை.

இந்தியாவில் ஆளுநனர்கள் பொதுவாக மாநில நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஆனால் இலங்கையில் ஆளுநனரின் தலையீடு அதிகம். இதற்குக் காரணம் 154F(2) இல் இந்திய யாப்பில் இருப்பதற்கு மேலதிகமாக ஒரு வசனம் இருக்கின்றது. அந்த வசனம் “ இங்கு ஆளுநரின் தற்துணிவு அதிகாரமென்பது ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்திலிருந்து வருவதாகும் ;” என்பதாகும்.

19வது திருத்தம் வரும்வரை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடுக்கும் நிலை இருக்கவில்லை. எனவே, ஆளுநர் தற்துணிவு அதிகாரம் என்று எதையாவது செய்தால் அதனைக் கேள்விக்குட்படுத்த, கட்டுப்படுத்த வழி இருக்கவில்லை. எனவே, மாகாணசபையின் வேண்டிய விடயங்களில் ஆளுநனருக்கு தலையிட முடிந்தது. இதனால்தான் கடந்த காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ‘ ஆளுநர் செய்ய விடுகின்றார் இல்லை; எல்லாவற்றிலும் தலையிடுகின்றார்’ என்ற முறைப்பாடு அதிகமாக இருந்தது.

இரண்டாவது: சரத்து 154B(2) இல் “ ஆளுநர் சரத்து 4(b) பிரகாரமே பதவி வகிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 4(b) தான் ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரத்தை வழங்குகின்றது. எனவே, “ ஜனாதிபதியின் பிரதிதியாகவே ஆளுநர் செயற்படுகின்றார். அவரது நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்திலிருந்தே பெறப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதிக்கு ஆளுநரின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கும் உத்தரவுகளை வழங்குவதற்கும் முடியும். அவ்வாறு உத்தரவுகள் வழங்கினால் அவ்வுத்தரவுகள் மாகாண அமைச்சரவைத் தீர்மானங்களை மேவும்;” என்று 13வது திருத்த வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சுருங்கக்கூறின் மாகாண அமைச்சரவை என்ன முடிவுகளை எடுத்தாலும் ஆளுனர் தனது தற்றுணிவு அதிகாரம் என்ற பெயரிலோ அல்லது ஜனாதிபதியின் உத்தரவு என்ற பெயரிலோ வேண்டிய தலையீடுகளைச் செய்யமுடியும்.

பொதுச்சேவை


இவற்றிற்கு மேலதிகமாக மாகாணசபைகள் சட்டம் இல 42 of 1987 உம் பல அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குகின்றது. இதில் பிரிவு 32 மிகவும் முக்கியமானதாகும். இதன் பிரகாரம் மாகாண பொதுச்சேவைக்கான நியமனம், இடமாற்றம்போன்ற அனைத்து விடயங்களும் ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரங்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, பிரதம செயலாளர், மற்றும் அதிகாரிகளுக்கு delegate பண்ணுப்படலாம்.

மட்டுமல்லாமல் 1989 ம் ஆண்டைய 12ம் இலக்க சட்டத்தின்படி ஏதாவதொரு சட்டத்தில் ‘அமைச்சர்’ என்று குறிப்பிடப்பட்டு அவ்விடயம் தற்போது மாகாணசபையின் கீழ் வந்தால் அந்த ‘ அமைச்சர்’ என்ற சொல் ‘ ஆளுநரை’ அல்லது அம்மாகாணத்தின் உரிய ‘அமைச்சரைக்’ குறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதன்மூலம் அங்கும் ஆளுநரின் தலையீட்டுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ஆளுநர் தலையிட நினைத்தால் மாகாண அமைச்சரவை வெறும் பொம்மை, ஆளுனர் விட்டுக்கொடுத்தால் நிர்வாகம் செய்யலாம். ஆனால் புதிய யாப்பில் ஆளுநரை முதலமைச்சரின் அடிமையாக ஆக்குவதற்கு இடைக்கால அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.

மாகாணசபை கலைகின்றபோது

மாகாணசபையில் அமைச்சரவை இருக்கும்போதே இவ்வளவு அதிகாரமெனில் அவருக்கு அறிவுறுத்தல் வழங்க அமைச்சரவை இல்லாதபோது முழு அதிகாரமும் அவருக்குத்தான் என்பதை சொல்லித்தான் புரியவேண்டுமென்பதில்லை.

Read more...

இலங்கை குறித்து, புதிய பிரேரணையுடன், 3 அறிக்கைகளும், 4 விவாதங்களும் இடம்பெறும்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் போது, புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதுடன் , 3 அறிக்கைகளும், 4 விவாதங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்குகொள்வதற்காக, இலங்கையில் இருந்து அரசாங்க தரப்பின் உயர் மட்ட அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலான சில பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பிரதிநித்துவப்படுத்தும் இவர்கள், ஐக்கிய நாடுகளின் வளாகத்தில் இடம்பெறும் கூட்டங்களிலிலும் பங்கு கொள்வார்கள் என்று அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டத்தொடரின் போது கடந்த 4 வருடங்களில், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நல்லிணக்க செயல்பாடுகள், பொறுப்புக்கூறல், உள்ளிட்ட விடயங்கள் குறித்த அறிக்கையொன்றும்
அரசாங்க தரப்பினரால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தொடரின் போது, சர்வதேச நாடுகள் பல, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என, வலியுறுத்தல் விடுக்கவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மோசடியாக நிவாரணம் சேகரித்த ஆசாமியை மடக்கிப் பிடித்த மக்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பதாக மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தென்மராட்சி - சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரைக் குறிப்பிட்டு பல கிராமங்களில் பணம் வசூலித்த நபர் ஒருவரே இவ்வாறு மாட்டிக்கொண்டுள்ளார்.

இன்று காலை எழுதுமட்டுவாழ் வடக்கு கிராம மக்களிடம் பண வசூலிப்பில் ஈடுபட்ட குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட பிரதேச வாசி ஒருவர் கிராமசேவகருக்கு தகவல் வழங்கியைதை தொடர்ந்தே இவ் முறியடிப்பு இடம்பெற்றுள்ளது.

கிராமசேவகர் பிரதேச இளைஞர்களை இணைந்து நபரை விரட்டிப்பிடித்ததுடன் பொலிஸாரிடம் மோசடிப் பேர்வழியை கையளித்துள்ளார்.

இவ்வாறு, மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது.





Read more...

எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயம் இரா. சம்மந்தனுக்கே - வேதாளம் மீண்டும் முருங்கையில்.

சபாநாயக்கர் கரு ஜெயசூரிய அறிவிக்கும் வரையில், எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்மந்தரே இருப்பார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எந்த காரணத்திற்காகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஸவிற்கு விட்டுக்கொடுக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பாது என்று கூறிய சுமந்திரன், மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானம் சட்ட ரீதியாக இடம்பெற வேண்டும் என்பதே, தமது நோக்கமென எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சபாநாயகரின் அறிவிப்பு வரும் வரையில் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயம் இரா.சம்மந்தனிடமே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யார் எதிர்கட்சி தலைவர் என்ற கேள்விக்கான விடை வெகு விரைவில் கிடைக்கும் என எம்.ஏ. சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருப்பதாக கூறிய சுமந்திரன், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனே எனவும் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com