Sunday, December 30, 2018

செவ்வாய் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை....

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அடையாள அட்டை,கடந்த 17 ஆம் திகதி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பரீட்சாத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் வெற்றியளித்திருப்பதால், இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மக்களுக்கும், ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்த அவர், இதன்மூலம் மக்கள் பயனடைவார்கள் என்றும் கூறினார்.

Read more...

மூன்று ஆளுநர்களுக்கு வரப்போகும் ஆப்பு...

மாகாண ஆளுநர்கள் மூவரின் பதவி பறிபோகும் நிலையில் உள்ளதாக, செய்திகள் கசிந்துள்ளன.

அத்துடன் ஏனைய மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், மேற்படி மாகாண ஆளுநர்களின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மூன்று ஆளுநர்களின் பதவி பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தெரிய வருகிறது. புதியவர்களை நியமிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Read more...

சம்பந்தன் தம்பட்டம் அடிப்பதை கண்டு, குலுங்கிக் குலுங்கி சிரித்தேன்....

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டை படு பாதாளத்திற்குள் தள்ளி விட்டு, இப்போது ஜனநாயகம் தம்மால் காப்பாற்றப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடித்து வருவதை எண்ணி, தான் குலுங்கிக் குலுங்கி சிரித்ததாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்து விட்டனர். அன்று ஆரம்பிக்கப்பட்ட அவலம், தமிழ் மக்களிடையே இன்றுவரை நீடிக்கிறது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கூஜா தூக்கிய சம்பந்தன், இப்போது ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகவும் நகைப்பாக இருப்பதாக ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை, தான் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கவில்லையென்று தெரிவித்த அவர், சுமந்திரன் காலை ஒரு கதையையும், மாலை ஒரு கதையையும் பேசிக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறானவர்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாறுவது, தற்போது சகஜமாகி விட்டதாக வீ. ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

Read more...

சிங்கள பிரதான கட்சிகளில் ஒன்றை எதிர்த்தும் மற்றொன்றை ஆதரித்தும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. சிறிகாந்தா

இரண்டு பிரதான சிங்கள கட்சிகளினதும் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை ரெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா கூறினார்.

யாழ்ப்பாணத்தில் ரெலோவின் இளைஞர் அணி யாழ் மாவட்ட கிளை கூட்டம் நேற்று(29) இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

உக்கிரமான அரசியல் போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு புகுந்து விளையாடுவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனை நடைமுறை சாத்தியமானது அல்ல. அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது மட்டுமன்றி சர்வசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

இரண்டு சிங்கள பேரினவாத கட்சிகளினதும் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. யதார்த்தம் இப்படியிருக்க, பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டதும், மஹிந்த நியமிக்கப்பட்டதும் ஜனநாயக விரோதமானது என்ற அடிப்படையில்தான், மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. அதன்பின்னரும் மஹிந்த பதவியில் தொடர, பெரும்பான்மையை நிரூபிக்கும் ஐ.தே.கவின் முயற்சிகளிற்கு ஒத்துழைத்தது. இந்த அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது.

அரசியல் நெருக்கடியின் போது கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டால் சிங்கள மக்களின் மனங்கள் வெல்லப்பட்டதாக அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், யதார்த்தம் வேறு.

சிங்கள பேரினவாத கட்சிகளின் அரசியல் பாரம்பரியத்தின் வழியில் இனவாத கோசத்தை மஹிந்த ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். பொதுதேர்தலொன்றில் அந்த அணி வெற்றியீட்டும் பிரகாசமான வாய்ப்புக்களே இப்போதும் உள்ளன. அந்த அரசியல் அணியை புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு பற்றி பேசுவது விவேகமானது அல்ல.

இந்த அரசியல் சூழலில், இப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் எதற்கும் இடமிருக்க போவதில்லை என அடித்து கூறலாம்.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்க கைகொடுத்து கொண்டிருக்கும் கூட்டமைப்பின் முன்னால் அரசியல் சவால் இப்பொழுது எழுந்து நிற்கிறது. அரசியல் தீர்வு விடயத்திற்கு அப்பால், அரசை காப்பாற்றி நிற்பதற்கான பிரதிஈடாக தமிழ் மக்களிற்காக கூட்டமைப்பு எதனை பெற்றுக்கொடுக்க முடியும்?

காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றை அரசியல் அழுத்தத்துடன் கையாள வேண்டிய அதேநேரம், 13வது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை இனியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

கூட்டமைப்பின் ஆதரவோடு பதவியிலிருக்கும் அரசு, அடுத்த இரண்டொரு மாதங்களில் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் மக்களின் நியாயமான சில கோரிக்கைகளையாவது நிறைவேற்ற தவறுமானால், தொடர்ந்தும் அரசுக்கு முண்டு கொடுப்பதை கூட்டமைப்பு மறந்தே ஆக வேண்டும்.

இந்த நிலைப்பாட்டின் பின்னால் உள்ள அவசியம், அவசரம் என்பவற்றுடன், கூட்டமைப்பின் சுயமரியாதையும் இதில் கலந்துள்ளது“ என்றார்.

Read more...

வடமாகாணத்தின் முன்னிலைப் பெறுபேறுகள்.... கிளிநொச்சியின் முன்னிலை பெறுபேறுகள் கிராமப்புறம் வசமானது..

இம்முறை இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மூலமான வடக்கு மாகாண பரீட்சாத்திகளில், சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா,கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில், முதலாமிடத்தையும் தேசிய ரீதியில் 28 ஆவது நிலையையும் பெற்றுள்ளார்.

அத்துடன் தமிழ் மொழி மூலம் பௌதீக விஞ்ஞான துறையில் தோற்றிய பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சண்முகநாதன் சஞ்சித், மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.



இதேவேளை கிளிநொச்சி முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி, வணிகப்பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மிதுர்சன் என்ற மாணவர், உயிரியல் பிரிவில் 3 A சித்திகளை பெற்று, கல்லூரியில் முதல் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த பெறுபேறுகள், கிராமப்புறம் வசமானது.

கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி,
கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் மாவட்ட முதல் நிலை பெற்றுள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில், முதல் நிலையை முரசுமோட்டையைச் சேர்ந்த க.அபிசிகா,பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு நாடு முழுவதும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். நேற்று வெளியாகிய பெறுபேறுகள் படி, 1 லட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக,பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

ஹட்டன் பிரதேசத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைக்கும் பணியில் விமானப்படை.

திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, ஹட்டன் - டிக்கோயா - போடைஸ் பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடுகள் பல சேதமடைந்தன.

இந்த அனர்தத்தால் காரணமாக சுமார், 30 ஏக்கர் தோட்டப்பகுதியிலுள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தீப்பரவலால் தமது வீடுகளை இழந்த மக்களுக்காக, தற்காலிக கூடாரங்களை அமைக்கும் பணிகள், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகளை ராணுவத்தினர்,விமானப்படையினர்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். போடைஸ் தோட்ட பொது மைதானத்தில் இந்த கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தற்காலிகமாக கூடாரங்களை அமைப்பதற்கு, தோட்ட நிர்வாகமும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சும் இணைந்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான தகரங்களை வழங்கியுள்ளன.

அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தற்காலிக மலசலகூடங்களும் வழங்கப்பட்டுள்ளன.


Read more...

சிலையால் வந்த நிலை - யானையை பிளிற வைக்கும் மஹிந்த அணி.. தலையை பிய்க்கும் த.தே.கூ..

இனந் தெரியாத நபர்கள் சிலரால் அண்மைக்காலமாக, புத்தர் சிலைகள் அதிகளவில் உடைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த தினம் மாவனெல்ல பகுதியில், இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்று நாடு பூராகவும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. இந்த சம்பவங்களை சந்தர்ப்பங்களாக வைத்து கொண்டு, அரசியல் தலைவர்கள் பலர், தமது அடுத்த அரசியல் காய் நகர்தலுக்காக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதன்மூலம் தத்தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதே, பெரும்பாலானவர்களின் ராஜ தந்திரமாகவுள்ளது.

இந்த விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார். மேற்படி சிலை உடைப்பு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் சக்தியொன்று மறைந்திருப்பதாக அவர் அடித்துக் கூறுகிறார்.
.

இதேவேளை, நாமல் குமார அண்மையில் கூறிய கருத்துக்கு அமைவாக, கண்டி, திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால், ஐக்கிய தேசிய கட்சியின் பங்குபற்றுதல் இருப்பது திட்டவட்டமாக தெரிவதாக, மகிந்த அணியின் திலும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சிலை உடைப்பு விவகாரத்தில், மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம,லொஹான் ரத்வத்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் செயல்பட்டுள்ளதாக, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதேவேளை இந்த சதித்திட்டத்திற்கு பின்னால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியும், சற்று பலமாகவே உள்ளதென மற்றுமொரு சாராரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஆக, நாட்டில் இருக்கும் முதன்மைக் கட்சிகள், ஆளுக்கு ஒருவரை அசால்ட்டாக போட்டுக் கொடுப்பதனால், மக்களுக்கு இந்நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை'.

Read more...

பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை....

பாடசாலை அதிபர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களை பாடசாலை அதிபர்கள் சிலர், விற்பனைக்காக பயன்படுத்துவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த குற்றங்களுடன் தொடர்புரைய பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த விடயம் சம்மந்தமாக கல்வி அமைச்சர், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Read more...

புலிகள் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடை விதித்திருந்தனர். போட்டுடைக்கின்றார் சுமந்திரன்.

தமது கட்சியின் வருகைக்கு முன்னர், தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துடன் அரசியல் சார் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவதற்கு, விடுதலை புலிகள் இயக்கம் தடை விதித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் தனதில்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, 'எம்.ஏ' இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்க காலப்பகுதியில் தாம் கட்சியில் இருந்ததில்லை என்று கூறிய அவர், விடுதலை புலிகளுடன் கூட்டமைப்பு ஏதேனும் ரகசிய உடன்படிக்கை செய்திருக்குமா? என்பது தொடர்பான அறிவு, தமக்கு இல்லை என்றும் சந்தேகமான கருத்துக்களை வெளியிட்டார்.

கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில், ஜனநாயக நகர்வுகளை நோக்கி பயணித்த சில தமிழ் அரசியல் கட்சியினர், விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாக, சுமந்திரன் பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

இப்படுகொலைகள் அரங்கேறிய காலகட்டத்தில், நோர்வே முதலான நாடுகள் விடுதலை புலிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. தமிழ் அரசியல் கட்சிகளுடன் சுமூகமான நிலைப்பாட்டை கொண்டு, ஜனநாயகத்திற்கு தடை விதிக்காமல் இருந்தாலே, சர்வதேச நாடுகள் விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்கும் என, மேற்படி நாடுகள் விடுதலை புலிகளுக்கு ஆலோசனை வழங்கின.

இந்த ஆலோசனைகளின் பிரகாரம், தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜனநாயக தடை சற்று தளர்த்தப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரவேசத்தின் பின்னரே, புலிகளினதும், தமிழ் அரசியல் கட்சிகளினதும் தேவைப்பாடுகள் குறித்த சிந்தனைகள் உதித்தன. இதன் செயல் வடிவமாக, ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதைக்கான அனுமதி விடுதலை புலிகளால் வழங்கப்பட்டதாக, எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.



Read more...

மஹிந்தவை மறந்த சுதந்திரக் கட்சி... குமார வெல்கம, எதிர்கட்சித் தலைவராக வேண்டும் என கடிதம்...

எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்குமாறு, ஸ்ரீ சுதந்திரக்கட்சியின் பாதுகாப்பு இயக்கம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது.

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து, பெரும் போட்டியும், குழப்பகரமான சூழலும் உருவாகியுள்ள நிலையில், மேற்படி கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவம் பெற்றமை, குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திலங்க வீரகோன் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சில அரசியல் பிணக்குகள் காரணமாக மஹிந்த ராஜபக்ஸ, சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி, பொதுஜன பெரமுனாவுடன் இணைத்து கொண்டதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின.

தற்போது மஹிந்த ராஜபக்ஸ தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என கூறிக்கொண்டிருக்கின்றார். இந்த சூழ்ச்சிக்கு நாம் ஒருபோது துணைபோக மாட்டோம் என, சுதந்திர கட்சியின் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திலங்க வீரகோன் கூறினார்.

Read more...

யாழ் கடற் பரப்பில் கரையொதிங்கிய மர்மப் பொருள் குறித்து, விசாரணை ஆரம்பம்...

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் மர்மப்பொருள் ஒன்று கரையொதிங்கியதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் நேற்று இரவு கரையொதுங்கியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என,கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த மர்மப் பொருளை பார்வையிடுவதைக்காக, அப்பகுதி மக்கள் அணிதிரண்டு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், சிதைவடைந்த கப்பலின் பாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட கடற்படையினர், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

Read more...

தோழரைக்கொன்ற தோழருடன் தோழோடு தோழ்சேர்ந்தார் தோழர்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கான விசேட சந்திப்பொன்று நேற்று கட்சியின் தலைவர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஈபிடிபியின் நீண்டநாள் உறுப்பினரும், நெடுந்தீவு தவிசாளருமாகவிருந்த ரெக்சி்ன் என்பவரை சுட்டுக்கொன்றார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமல் எனப்படும் கமலேந்திரனும் கலந்து கொண்டுள்ளார்.

பிணையில் விடுதலையாகியுள்ள முன்னாள் யாழ் மாவட்ட ஈபிடிபி பொறுப்பாளரான கமலின் வழக்கு, நிலுவையிலுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்டதென இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியாலேயே கொலை இடம்பெற்றுள்ளது என இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினூடாக ஊர்ஜிதம் ஆகியுள்ளதாக, சீஐடியினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரெக்சியனின் மனைவியுடன் கமலுக்கிருந்த இரகசிய தொடர்பு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவ்வமைப்பினால் விலத்தப்பட்டுள்ளதாக பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கமல் இன்று ஈபிடிபியின் முக்கியஸ்தர்களுடனான கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

அந்தவகையில் கமல் எனப்படும் கமலேந்திரன் ஈபிடிபியின் முக்கியஸ்தர் அல்லது வட மாகாண ஈபிடிபி நிர்வாகிகளில் ஒருவர் என்றே கணக்கெடுக்கப்படுகின்றார்.

அவ்வாறே பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என கட்சியினால் விலத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த, வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ''போல்'' என்று அழைக்கப்படும் சின்னையா சிவராசா என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கட்சிக்கு சொந்தமான கொழும்பிலுள்ள கட்டடம் ஒன்றின் விவகாரத்தில் தலைவருடன் முரண்பட்டு வெளியேறியிருந்த எஸ். தவராசாவும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தவராசாவை மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு டக்ளஸ் தேவானந்தா தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆழுநருக்கு கடிதம் எழுதியபோதும் அது நிறைவேறவில்லை.

இவ்வாறான நிலையில் கட்சியிலிருந்து விலகியிருந்த மற்றும் விலக்கியிருந்த பலரை இன்று டக்ளஸ் தேவானந்தா வருந்தி அழைப்பதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் கட்சியின் மீள்கட்டுமான செயற்பாடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளோரை உள்ளீர்ப்பதால், கட்சிக்கு மேலும் பின்னடைவே ஏற்படும் என அவ்வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றன.









Read more...

Saturday, December 29, 2018

புஷ்வானமாகிப்போன கஜேந்திரனின் நிவாரணப் பொட்டலங்கள்.

தமிழ்த் தேசியத்தின் மொத்த வியாபாரி நான்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் குதிரை கஜேந்திரன், மக்கள் மத்தியில் எப்போதும் அசைக்க முடியாத நகைப்பு உரியவராக இருந்து வருகிறார்.

இவரது, ''தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறேன்'' என்ற நீண்ட கால தொடர் நாடகமும் அவ்வப்போது வரும் அனர்த்தம் அவசர நிலைமைகளில் தன்னை விளம்பரப்படுத்த இவர் எடுக்கும் முயற்சிகளுக்கும் வன்னி மக்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து, தமிழ் மக்கள் வாழ்வின் மீட்சிக்காக குரல் கொடுக்கும் உறவுகளுக்கும் இப்ப நல்லாவே தெரியும்.

ஒரு காலத்தில் மக்களுக்கு அது செய்கிறோம் - இதை மாற்றுகிறோம் என்று கூக்குரல் இட்ட இவரைப் போன்றவர்களை வன்னிச் சனங்கள் இப்ப நல்லா அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவங்கள் என்னடா என்டால் இன்னும் கொஞ்சக்காலம் மக்களை ஏமாற்றி சுகபோக வாழ்க்கையை வாழலாம் எண்ட நப்பாசையில இப்பவும் முன்னுக்கும் பின்னுக்கும் நாலு பொடியளோட, வெள்ளம் வந்து சனங்கள் தவிச்சு திரும்பவும் எல்லாத்தையும் தண்ணீல விட்டுட்டு, ஒருமாதிரி உயிரை மட்டும் கையில பிடிச்சுக் கொண்டு தப்பி இருக்க, தங்கட அடுத்த அரசியல் சுகபோக வாழ்க்கைக்கு அத்திவாரம் போடுறதுக்கு சனங்கள் அப்பாடா எண்டு இருக்கிற நேரமா பாத்து வெறும் 100 பொதியோட போய் சீனப் போட்டால் சனங்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

இப்ப எங்கட வன்னிச் சனங்கள் கொஞ்சம் தெளிஞ்சிட்டுதுகள். 600 குடும்பம் இருந்த கிளிநொச்சி திருநகர் இடைத்தங்கள் முகாமிற்கு உவர்தான் கஜேந்திரன் 100 பொதிகளோடு போய், கிடந்த மரியாதையையும் கெடுத்துட்டு வந்திருக்கிறார்.

வெளிநாட்டில இருக்கிற தமிழ் அமைப்புக்களும் புலம்பெயர் மக்களும் வன்னிச் சனத்துக்கு வெள்ளம் மழை எண்டு அறிய, துடிச்சு பதறி கணக்கே பாக்காம அள்ளி அனுப்பின காசினதும் அது மட்டுமா? இலங்கையில வெள்ளம் எண்டு மக்களிடம் சேகரித்த பணத்தினதும் மொத்த பெறுமதி யாருக்குத் தெரியும்........சிவ சிவா............!!!

ஆனால் இவர் கஜேந்திரன் என்ன செய்திருக்கிறார்? தன்னுடைய சில ஆக்களை கூட்டிக்கொண்டு கிளிநொச்சிக்கு போய் வெறும் 100 பொதியை மட்டும் கொடுத்து மிச்சம் 400 குடும்பங்களை கொதிச்செழ வைச்சிருக்கிறார்.

அடக் குடுத்தீங்கதான் அதையாவது ஒழுங்கா முழுமையா செய்தீங்களா.........?

இது அந்த முகாமில இருந்த சனம் முகம் சுளிச்சு சொன்ன கதை. அந்த விளம்பர வெள்ள நிவாரணப் பொதில இருந்த பொருள்களில் மொத்தப் பெறுமதி ஆகக்கூடியது வெறும் 900 ரூபா மட்டும்தான்.

3 கிலோ குத்தரிசி, 2 கிலோ கோதுமை மாவு, உப்பு பக்கற் 1, ப்பிரஸ் 1, குளோக்காட் 1, 1 பனடோல் காட், 1 பேபி சோப், கொஞ்சம் தூள், அரிசி மா பக்கற் 1 இது எல்லாத்தையும் விட ஒரே ஒரு ஷம்போ பக்கற்...........இதுதான் இவரின் வெள்ள நிவாரணப் பங்களிப்பு.




என்ன சேர் இங்கதானே 600 குடும்பங்கள் தங்கியிருக்கிறர்கள். நீங்கள் வெறும் 100 பொதிகள்தான் கொண்டு வந்திருக்கிறீங்கள் எண்டு தைரியமாக ஒருவர் விசாரித்திருக்கிறார்.

அதுக்கு இவர், தம்பி எனக்கு எத்தினை குடும்பங்கள் இருக்கிறார்கள் எண்டு தெரியாது..........என்ற பொறுப்பற்ற பதில். ஒரு அரசியல் பிரதிநிதி மக்கள் விடயங்களில் அக்கறை உள்ள ஒருவர் இப்படி பதில் கொடுப்பது முகம் சுளிக்கத்தானே வைக்கும்?

இது ஒரு புறம் இருக்க, இவர் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும் என்று உதவிகேக்க, பதறி அடிச்சுக் கொண்டு வன்னிச் சனங்கள் யுத்தத்தில எல்லாத்தையும் இழந்து திரும்பி வந்து இருக்க மழை, வெள்ளம், காத்து எண்டு மறுபடியும் கஸ்ரமா துன்பமா எண்டு பதறித் தவித்து உதவி செய்தவர்களுக்கு கஜேந்திரன் எப்படி கணக்கு சொல்லப் போறார்????????????

ஆனால் ஒண்டு மட்டும் நிஜம். 100 ரூபா கொடுத்தால் 10
ரூபா கூட முழுமையா போய் சேராது என்பது. இந்த மக்களுக்கு உதவுகிறோம் கதையின் சாராம்சமே இதுதானே..........!

இப்ப வந்த இந்த வெள்ளத்துக்கு உண்மைiயில் நிறைய தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், கொழும்பு ஊடங்கள் சிலதும், வர்தகர்கள், புலம்பெயர் உறவுகள் எண்டு எல்லாரும் கணக்கே பாக்காமல் உதவி செய்ய, இவர் வெறும் 900 ரூபா பெறுமதியில் 100 பேருக்கு நிவாரணம். மற்றச் சனங்கள் வயித்தெரிச்சலை கொட்ட ..........இது தேவைதானா?

பாக்கப்போனால் இவர் கொடுத்த பொதிகளின் மொத்தச் செலவு பச்..............90,000 மட்டும்தான். 1 லட்சத்தைக்கூட தொடமுடியாத சுருக்கமான நிவாரண முன்னெடுப்பு.

இந்த நிவாரண வழங்கலை இவர் செய்யாமலே ஒதுங்கி இருந்தாலே பராவாயில்லை எண்டு எண்ணத் தோணுது.

ஆனாலும் அரசியல் விளம்பரம் தேவைபடும், சில மக்களை
ஏமாற்றும் விளம்பரப் பிரதிநிதிகளுக்கு இது சர்வசாதாரணம்.

நம்மட கவலை என்னவென்றால் இந்த விளம்பரத்திற்கு எத்தனை லட்சத்தை குளிருக்குள் உழைக்கும் சனம் அள்ளிகொடுத்திருக்கும் என்பதுதான்..

விரும்பம் என்றால் அவங்கள் ஒரு ரெலிபோண்போட்டு என்ன 90000 ரூபாவுக்குத்தான் சாமான் கொடுத்திருக்கிறாய், வையடா மிச்சப்பணத்தை என்று கேட்கலாம், வேண்டாட்டி விடலாம். ஆனால் ஒன்று விட்டயளாளென்றால் கண்டயளோ அவர் தொடர்ந்தும் உங்கள தலையிலை மிளகாய் அரைப்பார்.


Read more...

அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது...

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், சுமார் 35 அரச அதிகாரிகள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், பிரியந்த சந்திரஸ்ரீ கூறினார்.

இந்த வருடத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ், சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், அவர்களுள் 35 பேர், அரச நிறுவனங்களின் அதிகாரிகள் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர்களில் 9 பேர், காவல்துறையில் பல்வேறுபட்ட தரங்களை உடையவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

காவல்துறைக்கும் மேலதிகமாக, தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர், ஏற்றுமதி,இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்டாளர், ஆயுர்வேத திணைக்களத்தின் உயர் அதிகாரி, மாஹாவெலி அபிவிருத்தி சபை அதிகாரி, போக்குவரத்து அதிகாரசபையின் உயர் அதிகாரி உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர்.

இந்த கைதுகளில், கந்தளாய் சீனித் தொழிற்சாலையை இந்திய நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக 540 மில்லியன் ரூபாவை லஞ்சமாகப் பெற முனைந்த ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


Read more...

இலங்கை குறித்த மற்றுமொரு பிரேரணையும் ஐநாவில்...

ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது கூட்டத்தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது, பிரிட்டன் அல்லது நோர்வே நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், இலங்கை குறித்த பிரேரணையை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை மீதான பிரேரணையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த பிரேரணை கடந்த 2017 ஆம் ஆண்டுடன் முடிவடைந்திருந்தாலும், மேலும் 2 ஆண்டுகள் பிரேரணைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்து கூடவுள்ள 40 வது கூட்டத்தொடரின் போது, இலங்கை குறித்த முழுமையான ஆய்வு விபரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் அரசியல் நிலவரம் சூடு பிடிக்கக் கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரின் போது இலங்கை வழங்கிய வாக்குறுதிகள், தற்போது எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது? என்பது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.


Read more...

வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் தனது போக்கிரித்தனத்தை வெளிக்காட்டிய காமச் சாமியின் சீடன்.

வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு பல்வேறுபட்ட தரப்புக்கள் உதவிகளை புரிந்தன. அந்த வரிசையில் தெருத்தேங்கையை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடிக்கும் பாணியில் புலம்பெயர் தமிழர்களிடமும் , உள்ளுர் தனவந்தர்களிடமும் வசூலித பணத்தில் விக்கினேஸ்வரனும் மக்களுக்கு சில பொருட்களை வழங்கியிருந்ததார்.

ஆனால் அவர் அப்பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என பொதுவாக வழங்காது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடுப்பங்களுக்கு பிரத்தியேகமாக வழங்கியதாக மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். வன்னியில் பெருக்கெடுத்த தண்ணீர் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பம் எங்கே இருக்கின்றது என தேடிப்பாய்ந்ததா எனவும் அம்மக்கள் காமச்சுவாமியின் சீடன் விக்கினேஸ்வரனை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்கவெனச் சென்ற விக்கினேஸ்வரன், முகாம்களை அரசியல் மேடையாக்கியுள்ளார். அங்கு பேசிய அவர், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்டது போன்று, யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரனின் மேற்படி கருத்தானது அவர் அரசியல் கோமாளி என்பதுடன், மக்களை மந்தைகள் என கருதுகின்றார் என்பதை தெளிவுறச் செய்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் எனக் கூறிவந்த விக்கினேஸ்வரன் தற்போது இலங்கை நீதித்துறையிடம் நீதி கேட்கின்றார்.

அவ்வாறாயின் விக்கினேஸ்வரனிடம் இலங்கைநெட் தொடுக்கும் கேள்வியாதெனில், அரசியல்யாப்பு மீறப்பட்டபோது சம்பந்தன்-சுமந்திரன் உட்பட அரசியல் தலைவர்கள் வழக்கு தாக்கல் செய்ததுபோன்று, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக விக்கினேஸ்வரனால் இலங்கை நீதிமன்றில் இதுவரை ஏதாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

மேலும் வடக்கில் அனர்தங்களுக்கு முகம் கொடுத்த மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகளை செய்துவரும் இராணுவத்தினர் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காமச் சுவாமியின் சீடன், படையினர் மக்களுக்கு உதவியளித்து வருவதானது, ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை பாதுகாப்பதற்கான முயற்சி என்றும் குற்றம் சுமத்தினார்.

முன்னாள் நீதியரசரான விக்கினேஸ்வரனிடம் இலங்கைநெட் மேலுமொரு கேள்வியை தொடுக்கின்றது. அக்கேள்வி யாதெனில், குற்றங்களை புரிந்த இராணுவம் அனர்த்த முகாமைத்துவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினால், அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையில் ஏதாவது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? அன்றில் இது தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் உண்டா ? அவ்வாறாயின் எந்தெந்த நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டு


Read more...

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளில், இருவர் பலி...

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளால், இருவர் பரிதாபமாகப் பலியாகினர்.

ரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர், தமது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். நீண்ட காலமாக இவர்களுக்கிடையில் இருந்த கருத்து முரண்பாடுகள், கைகலப்பாக மாறியதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் 40 வயதானவர் என்று, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், ஹிங்குராங்கொட பகுதியில் சகோதரர்கள் இருவர் இணைந்து தாக்கியதில், அவர்களின் தந்தை பலியானார். ஹிங்குராங்கொட பகுதியின் கடுவுல்ல - கொலனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதானவரே, சம்பவத்தில் பலியானார்.

இந்த கொலை இடம்பெற்றதற்கான, காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த ஹிங்குராங்கொட காவல்துறையினர், சந்தேக நபர்களான சகோதரர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Read more...

கல்வித் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள், இன்று நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்...

கல்வித் பொதுத்தாரதார உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், இன்று  நள்ளிரவுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, கடந்த வாரமே பரீட்சை பெறுபேறுகள் வெளியாகுமென கூறப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் சில ஊடகங்களில் நாளைய தினமே பெறுபேறுகள் வெளியிடப்படும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளமை, உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையில், 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கை துறைமுக அதிகார சபை, 16 கோடி ரூபாவிற்கு பதிலளிக்க வேண்டும்..

இலங்கை துறைமுக அதிகார சபை, 18 கனரக வாகன கொள்கலன்களை விடுவித்தமை சட்டவிரோதமானது என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கூறுகிறார்.

தடைசெய்யப்பட்ட கிளைபோசெட் களைநாசினியை உள்ளடக்கிய, 18 கனரக வாகனங்களை இலங்கை துறைமுக அதிகார சபை விடுத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இந்த களைநாசினியின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாய்கள் என்று கூறிய அவர், இது குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தாம் எதிர்வரும் தினமொன்றில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும், அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

Read more...

முக்கிய மூன்று கட்சிகளின் சம்மதத்துடன், புதிய அரசியலமைப்பு வரைவு நிச்சயம்...

புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சியில், தமிழ் அரசியல்வாதிகள் பலர் பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வரும் முயற்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு அதிகமாகவே உள்ளது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்துரைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலான கட்சிகள் இணங்கும் வகையிலான அரசியலமைப்பு வரைவொன்று,கொண்டுவரப்படும் என அவர் கூறினார்.

இந்த வரைவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் வரும் என தாம் எதிர்பார்ப்பதாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


Read more...

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம், மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில், 38 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 258 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 424 பேர், சுமார் 32 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைகப்பட்டுள்ளதாக, மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக இதுவரை 472 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4522 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக தெரிவித்த அந்த நிலையம், அனர்த்தத்தின் போது இருவர் பலியானதாகவும் குறிப்பிட்டது.

இதேநேரம் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

Read more...

பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார் மைத்திரிபால சிறிசேன

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியே வைத்திருப்பார் என பரவலாக பேசப்பட்டதுடன், இதுதொடர்பாக ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கிடையே ஓர் முறுகல் நிலையும் உருவாகியிருந்தது. சட்டம் ஒழுங்கு அமைச்சு தன்னிடம் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் திணைக்களத்தை பாதுபாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ள ஜனாதிபதி அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இவ்வறிவித்தலுடன் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற அமைச்சு தற்போது இல்லாமல் போயுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊடகத்துறை சார்ந்த 21 நிறுவனங்கள் ஜனாதிபதியின கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குகின்றது.

ஜனாதிபதியின் கீழ் செயற்படும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கும் 21 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நிர்வகிக்கப்படுகின்ற தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கு 24 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

முஸ்லிம் தனித்துவ அரசியலின் கொள்கைப் பாதை.. (பாகம்-1) வை எல் எஸ் ஹமீட்

எந்தவொரு ஸ்தாபனமும் உருவாக்கப்படும்போது அதற்கான கொள்கை, பாதை முதலில் வடிவமைக்கப்படுகிறது. அந்தப் பாதை வழியாகவே அது தன் இலக்கை அடைய முயற்சிக்கின்றது? ( முயற்சிக்க வேண்டும்)

அந்தவகையில் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் கொள்கைகள், அதன் பாதை வரையறுக்கப்பட்டிருக்கின்றனவா? அவை அப்பாதையில் செல்கின்றனவா? அவற்றிற்கும் அவை இன்று செல்கின்ற பாதைக்கும் இடையேயுள்ள இடைவெளி என்ன?

ஒரு கட்சியின் கொள்கையை/ பாதையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணி எது? இந்தக் கேள்விக்கான விடை “ அதன் இலக்கு என்பதாகும்.

உதாரணமாக த தே கூ பொறுத்தவரை அவர்களின் தெளிவான இலக்கு ‘ தங்களைத் தாங்களே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ஓர் சுயாட்சியாகும். இந்த இலக்கை வைத்தே அவர்களின் கொள்கை மற்றும் பாதையைத் தீர்மானிக்கின்றார்கள். ஆட்சியில் நேரடிப் பங்காளியானால் அந்த இலக்கை அடைவதில் தடங்கல் ஏற்படும்; என்பதனால்தான் தாங்கள் இலக்கை அடையும்வரை ஆட்சியில் ஒருபோதும் பங்கெடுப்பதில்லை; என்பதை ஓர் கொள்கைத் தீர்மானமாக எடுத்திருக்கிறார்கள்.

காலங்காலமாக இந்தக் கொள்கை தமிழ் மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டிருக்கின்றது. இதன்காரணமாக சமகாலத்தில் த தே கூட்டமைப்பில் உள்ளவர்கள் சிலரிடம் ஆட்சியதிகாரக் கவர்ச்சியால் சில சலனங்கள் ஏற்பட்டாலும் அந்தக் கொள்கைப் பாதையில் இருந்து விலகமுடியாதவர்களாக இருக்கின்றார்கள். விலகினால் மக்களால் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள்; என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் மிகக்கவனமாக இருக்கின்றார்கள்.

நமக்கு மத்தியில் அவ்வாறான கொள்கைத் தெளிவுகளை முஸ்லிம் கட்சிகள் முன்வைத்திருக்கின்றனவா? என்ன இலக்கை அடைவதற்காக அந்த கொள்கைகள் வரையப்பட்டிருக்கின்றன; என்று அடையாளப் படுத்தியிருக்கின்றார்களா? இவை தொடர்பாக, நமது இலக்கு, அதை அடைவதற்கான கொள்கைப் பாதை இவை தொடர்பாக வாக்களிக்கும் நம்மிடம் தெளிவுகள் இருக்கின்றனவா?

அந்தப் பாதையில் அவர்களிடம் பிறழ்வுகள் கண்டு நாம் அதற்காக அவர்களை ஒதுக்கியிருக்கின்றோமா? அல்லது தாம் அவ்வாறான பிறழ்வான பாதையில் சென்றால் ஒதுக்கப்படுவோம்; என்ற அச்சம்தான் அவர்களுக்கு இருக்கின்றதா?

மறைந்த தலைவர் நமக்கு அவ்வாறான இலக்கையும் கொள்கைப் பாதையையும் அடையாளம் காட்டினாரா? நாம் அவற்றை அடையாளம் கண்டோமா? அவ்வாறாயின் இன்றைய பிறள்வை ஏன் அடையாளம் காணமுடியாமல் இருக்கின்றோம்.

அவற்றை அடையாளம் கண்ட தலைமுறை இன்று பின்னோக்கிச்செல்ல, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சமகால தலைமுறைக்கு மறைந்த தலைவர் அடையாளம் காட்டிய அந்த இலக்கு, கொள்கைப்பாதை போன்றவற்றில் தெளிவூட்டல் நடைபெறவில்லையா?

மறைந்த தலைவருக்குப்பின் பொதுத் தளங்களில்/ அரசியல் மேடைகளில் கொள்கை அரசியல் பேசப்படுகின்றதா? அல்லது மாமூல் அரசியல் பேசப்படுகின்றதா? கொள்கை அரசியல் பேசப்படாத நிலையில் இளைய தலைமுறையை நாம் குறைகூறமுடியுமா? கொள்கை அரசியல் பேசப்பட்டிருந்தால், இலக்கு பற்றி சிலாகிக்கப்பட்டிருந்தால் ‘ ரணில் எந்தப் பக்கம் நின்றாலும் நான் அந்தப் பக்கம், மஹிந்த எந்தப் பக்கம் நின்றாலும் நான் அந்தப்பக்கம்’ என்கின்ற நிலைப்பாடுகள் எடுக்கப்படுவதுமில்லாமல் அதற்கு “ கொள்கையில் உறுதி” என்றொரு அணிகலனும் அணிவிக்கப்பட முடியுமா? அதை அங்கீகரிக்க, அதைப் பெருமையாகப்பேச சமுதாயாத்தில் ஒரு கூட்டமும் இருக்கமுடியுமா?

மறைந்த தலைவர் நமது இலக்கின் உச்சாணிக் கொப்பாய் “ முஸ்லிம் அரசியல் விடுதலை” என்றொரு பதத்தை தனது தாரகமந்திரமாக முழங்கினாரே அதன் தாற்பரியத்தை இன்றைய இளைய தலைமுறை அறிந்துள்ளதா? தலைவர்கள் என்பவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கின்றனரா?

கொள்கை “இலக்கின்” அடிப்படையில் வரையப் படுகின்றது. இலக்கு எந்த அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றது?

இலக்கு தேவையின் அல்லது எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரையறுக்கப் படுகின்றது. அந்தத் தேவைகளை நாம்/ நமது கட்சிகள் அடையாளம் கண்டிருக்கின்றோமா? அவ்வாறு அடையாளம் கண்டிருந்தால் அத்திசையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றோம்?

இந்தத் தேவை, இலக்கு, கொள்கை என்பவற்றிற்கும் “ முஸ்லிம் அரசியல் விடுதலை, போராளி” என்ற சொற்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளைப்பற்றி சிந்தித்திருக்கின்றோமா? மறைந்த தலைவர் காரணமில்லாமலா நம்மை ‘ போராளிகள்’ என்று அழைத்தார். இன்றைய அரசியலில் அந்த ‘ போராளி’ என்ற பதம் பொருந்துமா?

இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா? “ என்று கேட்கின்றான். இஸ்லாம் அரசியல் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல். நாம் சிந்திக்கின்ற சமூகமாக இல்லாமல் வெறுமனே வாக்களிக்கின்ற எந்திரங்களாக வாழ்ந்தால் இரண்டு தேர்தலுக்கிடைப்பட்ட காலத்தில் அழுவதும் புலம்புவதும் தேர்தல் வந்ததும் மீண்டும் அதே சுழற்சியில் வாக்களிப்பதும் மீண்டும் விரக்தி தொடர்வதும் இவ்வாறு சென்றால் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்ற பொறுமை அடுத்த தலைமுறைக்கு இருக்குமென்று கூறமுடியாது. அவர்கள் விபரீத முடிவுகளை நோக்கி செல்வதில் இருந்து தடுப்பது சமகால தலைமுறையின் கடைமையாகும்.

எனவே, சிந்தியுங்கள். இந்தக் கேள்விகளுக்குரிய விடை தொடர்பாக சிந்தியுங்கள். தவறுகள் இருக்கின்றனவா? என்று சிந்தியுங்கள். அத்தவறுகளுக்கு யார் காரணம் என சிந்தியுங்கள். அவற்றிற்கான தீர்வுகளைப்பற்றி சிந்தியுங்கள். சிந்தித்தால் மட்டும் போதாது. சிந்தனையில் தெளிவுவேண்டும். எனவே, தெளிவுகாணுங்கள்.

இன்ஷாஅல்லாஹ், சமகால அரசியலின் பல பரிமாணங்கள் இத்தொடரில் ஆராயப்படும். நாம் தெளிவுபெற்று மறைந்த தலைவர் கூறிய ‘ அந்த விடுதலைப் பயணத்தில் நாம் பயணிக்காதவரை நம் எதிர்காலம் கேள்விக்குறியே! இங்கு எழுப்பப்பட்டுள்ள பலவகைக் கேள்விகள் தொடர்பாகவும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடர்களில் ஆராய்வோம்.

Read more...

பாதாள குழுக்களின் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சி செயல்படுகிறது..

நாட்டின் அனைத்து பாகங்களிலும் தற்போது அராஜகம் புகுந்துவிட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, இவற்றின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். நாட்டில் இடம்பெற்று வரும் பாதாள உலகக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவியளிப்பதாலேயே, அரசாங்கம் ஸ்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக, செஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

பாதாள உலகக் குழுக்களின் வருகை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் அதிகமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதாள குழுக்களின் நடமாட்டம் இவ்வாறு இருந்ததில்லையென்று தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இந்த அவல நிலை தோன்றியதாக கூறினார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பாதாளக்குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக, செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இன்று மக்களுக்கு பகலில் கூட வெளியில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பதிலை கட்டாயம் வழங்க வேண்டும். அத்தோடு, மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் ஆட்சியை அமைத்தவர்களுக்கு உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என அனைத்துத் தரப்பினருக்கும் இன்று உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அதனை மறுதலித்து வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி,   ஆட்சியைத் தக்க வைத்தக்கொள்வதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.

இந்த வருடத்தில் மட்டும் 50 கொலைகளும், சந்தேகத்திற்கு இடமான முறையில் சம்பவித்த ஆறு மரணங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, செஹான் சேமசிங்க கூறினார்.


Read more...

எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படும் சபாநாயகர்..

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே நியமிக்கப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, ஐக்கிய தேசிய கட்சியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,. இந்த நியமனம் குறித்து மீளாய்வு செய்வதற்கு, பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென கூறினார்.

அத்தோடு சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுவார் என, எழுத்து மூலம் கூறிய போதும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சபாயகர் இதுவரை எந்தவித பதிலையும் வழங்கவில்லையென, மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் நாம் அனைவரும் கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றித்து செயல்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நாம் அனைவரும் அடுத்துவரும் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். தற்காலத்தில் இனவாதத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம்,சர்வதேச ரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில், மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மஹிந்த அமரவீர கூறுகிறார். .

Read more...

நீரிறைக்கும் இயந்திரங்கள் இராணுவத்துக்கு வேண்டாம், எனது சகாக்களிடம் கொடுங்கள். ரணிலிடம் அழுத சிறிதரன்-

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை பார்வையிட நேற்று (28) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்றிருந்தார்.

அங்கு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது. அதன்போது பிரதேசத்திலுள்ள சகல கிணறுகளிலும் வெள்ள நீர் நிரப்பி நிற்பதனால் அது குடிநீருக்கு உகந்ததல்ல என்றும் கிணறுகள் இறைக்கப்பட்டு சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் வேண்டுதல் விடுக்கப்பட்டது.

இவ்விடயத்தை கருத்திலெடுத்த பிரதமர் 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை உடனடியாக இராணுவத்தினருக்கு வழங்குவதாகவும் அவர்கள் மக்களது கிணறுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார். அவ்வேளையில் திடிரென குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இராணுவத்தினரை கொண்டு அரசாங்கம் சகல விடயங்களையும் மேற்கொள்ளாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ள பிரதேச சபையிடம் பணியை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு இணங்கிய ரணில் விக்கிரமசிங்க நீர் இறைக்கும் கருவிகளை பிரதேச சபைகளுக்கு வழங்குவதாகவும் ஆட்கள் பற்றாக்குறை காணப்படின் இராணுவதினரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு நன்றிக்கடனாக சிறிதரனின் வேண்டுதலுக்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கியமை தொடர்பாக மக்கள் பெரும் அதிருப்தியை தெரிவிக்கின்றனர். பிரதேச சபை ஊழியர்கள் அதிகார தோரணையிலேயே மக்களுடன் அணுகுகின்றனர் என்றும் இயந்திரங்கள் பிரதேச சபைக்குச் சென்றால் சேவைகள் உரிய நேரத்தில் கிடையாது என்றும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பிரதேச சபையில ஆளணி பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தால் குப்பை கூழங்களை கூட அள்ள முடியாது என மக்களை சிரமத்தில் போடும் பிரதேச சபையினரால் இப்பெரும் சேவையை வழங்க முடியுமா? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

குறித்த இயந்திகங்கள் பிரதேச சபைகளுக்கு செல்லும் பட்சத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு முதலுரிமை வழங்கப்படும் என்றும் அதற்காக படிவங்கள் நிரப்பி கொடுத்து காத்திருக்க வேண்டிய நிலைமை தோன்றலாம் என்றும் சந்தேகம் வெளியிடும் மக்கள் இராணுவத்திரிடம் அப்பணி கையளிக்கப்பட்டால் அவர்களிடமுள்ள ஆளணியை கொண்டு எவ்வித பாரபட்சமுமின்றி கிராமம் கிராமமாக ஒரே நேரத்தில் வேலையை செய்து முடிப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர்.


சிறிதரன் குறித்த பணியை பிரதேச சபைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் நோக்கம் தனது தனது சகாக்களை கொண்டு கொள்ளையடிப்பதற்கு என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்: இயந்திரங்களை கொள்வனவு செய்யும்போது அவற்றில் கொமிஸன் வைத்துக்கொள்வதுடன் அதற்கான எரிபொருளிலும் பல லட்சம் ரூபாய்களை அவர்கள் ஆட்டையை போடுவாகள் என்பது திண்ணம்.


வெள்ளப்பெருக்குக்கு உள்ளான இரு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சிறிதரனின் சகாக்கள். அவர்களை வைத்தே சிறிதரன் கிளிநொச்சியில் பல்வேறு சட்டவிரோ செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

காரியாலயத்தில் கொண்டம் பக்கட்டுக்களுடன் பிடிபட்ட சிறிதரனின் நெருங்கிய சகாவான கரைச்சி வேழமாலிகிதன் பிரதேச சபை தவிசாளர் என்ற பல்வேறு பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளபோதும், தமிழரசுக் கட்சி இன்றுவரை வேழமாலிகிதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே மோசடிப்பேர்வழிகளின் கைகளில் இவ்வாறான அத்தியாவசிய மற்றும் அவசரப்பணிகளுக்கான நிவாரண வேலைத்திட்டங்கள் செல்லுமாயின் அவற்றை மக்களால் அனுபவிக்க முடியாதுபோகும் என்பதை கருத்தில்கொண்டு குறித்த இயந்திரங்களை வடமாகாண இராணு தலைமையகத்தில் வைத்தால், மாகாணத்தில் இவ்வாறான அழிவுகள் இடம்பெறும்போது அது பயன்படுத்தப்படலாம் என்றும், மாறாக பிரதேச சபைகளுள் அவை முடக்கப்படக்கூடாது என்றும் மக்கள் எதிர்பார்கின்றனர்.




Read more...

Friday, December 28, 2018

நாட்டை சீரழித்த ஜனாதிபதி, இனி கனவிலும் அதை நினைத்துப் பார்க்கக்கூடாது...

நாட்டைப் படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

நாட்டு மக்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தை மைத்திரிபால சிறிசேன கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்றுக் கூறிய சம்பிக்க ரணவக்க, அவ்வாறு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால், இறுதியில் தோல்வியே கிடைக்கும் வேண்டும், என தெரிவிக்கிறார்.

Read more...

கோடீஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பிரதேச மக்கள்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மைத்திரபால சிறிசேனவிடம் வேண்டுதல் விடுத்திருந்தார்.

கோடிஸ்வரனின் வேண்டுதலை ஏற்ற மைத்திரபால சிறிசேனவினால் இன்று 28.12.2018 குறித்த முகாம் அகற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 25ம் திகதி ஒன்று திரண்ட பிரதேச மக்கள் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதைபொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகமாகும் என மக்கள் கூறியதுடன் அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரே தங்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இராணுவதத்தினர் சென்றுவிட்டால் தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமது இவ்விருப்பத்தை மகஜர் ஒன்றின் ஊடாக கோமாரி 242 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரணசிங்க விற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொலைநோக்கு இன்றி மேற்கொள்ளும் விடயங்களுக்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com