Friday, December 28, 2018

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்.

சீரற்ற காலநிலைகாரணமாக வன்னியின் முழு நிலப்பரப்பும் நீரில் மூழ்கியிருந்து. நிலைமை வழமைக்கு திருப்பிக்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
பிரதேசத்தில் காணப்படும் கிணறுகள் அனைத்தையும் வெள்ளநீர் நிரப்பியுள்ளதால் மக்கள் சுத்தமான நீரை பெற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிலிருந்து கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து இப்பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள கிணறுகளை படையினர் சுத்தம் செய்யும் காட்சிகளை இங்கு காண்கின்றீர்கள்.



Read more...

அரியநேந்திரனை மீண்டும் பாராளுமன்று கொண்டு செல்ல சீஐடி முயற்சி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் உலாவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கடந்த இரு தேர்தல்களிலும் மண்கவ்வியுள்ளார் அரியநேந்திரன். அரியநேந்திரனை மக்கள் அவ்வாறு நிராரித்தமைக்கான காரணம் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த குறுகியகாலத்தினுள் பெரும் சொத்து சேர்த்தார் என்பதாகும்.

செல்லாக்காசாகியுள்ள அரியநேந்திரனை விசாரணைக்கு அழைத்து 3 மணி நேரத்தை செலவிட்டதன் ஊடாக, சீஐடி யினர் அவரது இனவாத பிரச்சாராத்திற்கு வழிசமைத்துக்கொடுத்துள்ளனர்.

இவ்விடயத்தினை வைத்து அரியநேந்திரன் தனது வாங்கு வங்கியில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைக்க முற்படலாம் என அம்பிளாந்துறை மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

Read more...

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 320 கொலைச் சம்பவங்கள் பதிவு...

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 320 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இக்கொலைகளில் 200 கொலைகள், பாதாள குழுக்களின் மோதல்களால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காவல்துறை, ஏனைய கொலைகள், குடும்பத்த தகராறு, இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல் முதலான சம்பவங்களால் பதிவானதாக கூறியது.

இந்த மனிதப் படுகொலைகளையும் தாண்டி, பல்வேறு ஆயுதமுனைக் கொள்ளைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 252 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அத்துடன் இக்குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 300 ற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை, இது குறித்த மேலதிக விசாரணைக்காய் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தது.

Read more...

புத்தர் சிலையை உடைத்தவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து பொலிஸாரிடம் பாரமளித்த மக்கள்.

மாவனெல்ல பகுதியில் கடந்த தினம் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது புத்தர் சிலையை உடைத்தவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில், மோட்டார் வாகனத்தில் இருவர் பயணித்ததைக் கண்ட மாவனெல்ல பகுதி மக்கள், அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதன்போது ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றைய இளைஞர் பொது மக்களிடம் பிடிபட்டார்.

பிடிபட்ட இளைஞரை அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்த பின்னர், பிரதேச மக்கள், அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் வaழங்கியுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர், சந்தேக நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக இன வன்முறைகளைத் தூண்டும் வகையில், சில குழுக்களால் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Read more...

நாவலப்பிட்டி நடுத்தெருவில் ரணிலை கிழித்துப்போட்ட இனந்தெரியாத நபர்கள்.

நாவலப்பிட்டி நகரில் பொருத்தப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசின்ஹவின் பெயர்ப்பலகையை, இனந்தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் பிரதமராக ரணில் விக்ரமசின்ஹ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு, நாவலப்பிட்டி நகர சபையின் ஏற்பாட்டில், இந்த பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினம் இரவு, மர்ம நபர்களால் ரணிலின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் சசங்க சம்பத் சஞ்சே,காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்த நாவலப்பிட்டி காவல்துறையினர், CCTV கேமராக்களின் உதவியுடன், வெகு விரைவில் குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களைக் கைது செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.



Read more...

தமிழில் படிவங்கள் வேண்டும். தெஹிவளை காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் மக்கள்.

தமிழ் மக்களுக்கு, காவல்துறை பதிவுகளை மேற்கொள்வதற்கென விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் காணப்படுவதால், தமிழ் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தெஹிவளை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே மேற்படி சிங்கள மொழியிலான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பலமுறை, தமக்கு தமிழ் மொழியிலான விண்ணப்பப் படிவங்களை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்த போதிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து அக்கறை செலுத்தவில்லையென தெஹிவளை பகுதியிலுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தெஹிவளை காவல்துறையினரின் இத்தகைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனக் கூறிய தமிழ் மக்கள், இந்த நிலை தொடருமானால் காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம், இனிவரும் காலங்களில் பதிவுகள் எதுவும் இடம்பெறாது என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தான் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளதாகவும், தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறன நடைமுறைக்கு மக்களை நிர்பந்தித்தால் தனக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறும் அவர் வேண்டியுள்ளார்.

Read more...

தருவோம் என்று ஏமாற்றி விட்டார்கள்! தராவிட்டால் கடும் நடவடிக்கை! அழுகின்றார் ராதாகிருஷணன்.

தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை குறித்து, அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக, முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சு பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று தம்மிடம், வாக்குறுதி அளித்தபோதிலும், அது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்த அவர், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தளம்பியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இதேவேளை இன்னும் ஒரு மாதத்தில், தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றால், அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாலித்த ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.

Read more...

கிடைக்கும் முதலாவது சந்தர்பத்திலேயே அரசை கவிழ்போம். எஸ்பி சூழுரை

சந்தர்பம் ஒன்று கிடைக்குமாயின் அதன் முதற் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசொன்றை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னளாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ அது மேற்கொள்ளப்படுமெனக்கூறும் அவர், விரைவில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு பாராளுமன்றில் முன்மொழிவு ஒன்று செய்யப்பட்டால் தமது கட்சி அதற்கு பூரண ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கின்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து அவ்வாறானதோர் முன்மொழிவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுதல் விடுத்தார்.

குறிக்கப்பட்ட காலத்துக்கு முன்னர் தேர்தல் நடைபெறாவிட்டால் ஏதாவது ஒரு முறையில் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசொன்றை நிறுவுவதென்றால் தமது குழு அதற்கு பூரண ஆதரவை தர தயாராகவிருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...

Thursday, December 27, 2018

ஐ.நா வின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு.

மரண தண்டனையை தள்ளுபடி செய்வதற்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது.

பிரேஸிலினால் முன்மொழியப்பட்ட இந்த பிரேரணையானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது சிறப்பு அமர்வின்போது பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 121 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த நிலையில், 35 நாடுகள் எதிர்த்து வாக்களித்ததுடன், 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், சர்வதேச தரங்களை மதித்து மரண தண்டனையை எதிர்நோக்கியவர்களின் உரிமையை பாதுகாக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவருவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜுலை மாதம் அறிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.இவ்வாறானதொரு நிலையில் மரண தண்டனையை தள்ளுபடி செய்வதற்கு இலங்கை ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஏழுகோடி ஆட்டையைப் போட்ட அரசியல் ஆசாமிக்கு பிணை!

காசோலை மோசடி குற்றச்சாட்டில், குற்றத்தடுப்பு பிரிவின் வணிக குற்ற விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்ட மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் இன்று கல்கிஸை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை 25 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று வீட்டு வளாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, 70 மில்லியன் ரூபாவுக்கான செல்லுபடியற்ற காசோலையை வழங்கினார் என்று வணிகர் ஒருவர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதேநேரம் ஜனநாயக மக்கள் முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக் கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் கட்சியின் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அம் முன்னணி அறிவித்துள்ளது.

மேலும், சகல பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உப தலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more...

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்..

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் விடுமுறை காரணமாக இந்தப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதேவேளை, மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள், காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 283 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், அவற்றுள் 274 எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களில் 21 எச்சங்கள், சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு தொடர்பில் தாய்லாந்திலிருந்து கபீர் ஹசிமை தொடர்பு கொண்ட ஜனாதிபதி.

புத்த சிலைகள் சில மாவனெல்ல பிரதேசத்தில் உடைக்கப்பட்டமையால் அப்பிரதேசத்தில் எற்ப்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைபற்றி விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் கபீர் ஹசீமை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வினாவியுள்ளார்.

அத்தோடு அப்பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்குமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தெரிவித்ததாகவும் இச்சம்பவத்தின் போது அமைச்சர் கபீர் ஹசீம் அவர்கள் முன் நின்று செயற்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தனது பாராட்டை தெரிவித்ததாகவும் அமைச்சரின் பணியாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் சந்தியில் உள்ள பௌத்த சிலைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

அதில் ஒருவர் அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போதிலும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எம்.அஷ்பர் என்ற சந்தேக நபரை தாக்கிய பிரதேச மக்கள் பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த பிரதேசத்தில் இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களுக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பிருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

Read more...

உலக இலங்கையர் பேரவையினரும் வன்னி மக்களுக்கு உதவி.

வன்னியில் சீரற்ற காலநிலைகாரணமாக நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு தென்பகுதியிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்துச் செல்கின்றனர். அந்த வரிசையில் உலக இலங்கையர் பேரவையினர் 100000 ரூபாவினை முதற்கட்ட அவசர நிதியாக வழங்கி தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வமைப்பானது இலங்கையில் இனங்களிடையேயான நல்லிணத்தினூடாகவே நிலையானதோர் சமாதானத்தை அடையமுடியும் என நம்புகின்றது. அதற்கான பெரு முயற்சியையும் அவ்வமைப்பு எடுத்து வரும் அதேநேரத்தில் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எதிர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த அமைப்பினர் இவ்வுதவியை மனுசத் தெரணவூடாக மேற்கொண்டுள்ளனர். இன்று காலை மனுசத் தெரண குழுவினர் சேகரித்த பொருட்களுடன் வடக்கு நோக்கி பயணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது





Read more...

துர்நாற்றம் வீசிய இடத்திலிருந்து உடலம் மீட்பு...

பம்பலப்பிட்டி பொது குடியிருப்புப் தொகுதியில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குடியிருப்புத் தொகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார்கள். தகவலறிந்த காவல்துறையினர் குறித்த குடியிருப்புத்
தொகுதிக்கு விரைந்து, விசேட சுற்றி வளைப்பை மேற்கொண்ட நிலையில், உடலம் மீட்கப்பட்டது.

அத்துடன், இது குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, ஹொரணை - மொரகஹஹேன - கனன்வில பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்த அப்பகுதி காவல்துறையினர், இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இன்று தலவாக்கலை புகையிரத நிலையம் முன்பாகவும் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது இலகுவான காரியம் அல்ல! ஐதேக பிரமுகர்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட கட்சியின் தலைவர்கள் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ளதாகவும் இக்கூற்றானது அக்கட்சியினுள் குழப்ப நிலையை எடுத்துக்கூறுகின்றது என்றும் விமல் விரவன்ச தெரித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தற்போதைய அரசாங்கம் இணைந்திருந்தாலும் பாராளுமன்றத்தில் 113 சாதாரண பெரும்பான்மை கூட இல்லை என்பதனை 21ம் திகதி பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டம் முன் வைக்கப்பட்ட போது நிரூபனமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள விமல் வீரவங்ச, இவ்வாறான நிலையில் புதிய ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதென்றால் பாராளுமன்றை கலைத்து தேர்தலுக்கு செல்லுதலே பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முதலாவது இடைக்கால வரவு செலவு திட்டம் கொண்டு வரப்பட்டபோதே அரச தரப்பு உறுப்பினர்கள் 14 பேர் வாக்களிக்காமல் இருந்த போதே அரசாங்கத்தினுள் உள் பூசல்கள் இருப்பது தெளிவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சாதாரண தர விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக ஆசிரியர்கள் ஏற்பாடு!

சாதாரண தர பரீட்சைத் தாள் மதிப்பிடல் பணிகளிலிருந்து விலகுவதற்கு ஆசிரியர்கள் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவிக்கிறார்.

2017 க.பொ.த சா தரம் கணிதப்பாட விடைத்தாள மதிப்பிடுவதற்காக ஓரு விடைத்தாளுக்கு 140 ரூபாய் செலுத்துவதுடன் அது இம்முறை (2018) 120 ரூபாவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதேபோன்று ஒரு விடைத்தாளை மதிப்பிடுவதற்கு வழங்கிய 38 ரூபாய் 29 ரூபாவாக இம்முறை குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கிறது.

அதனால் விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தை அதிகரிக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தொடர்ச்சியாக கோரிய போதிலும் இந்த கோரிக்கை இதுநாள்வரையில் நிறைவேற்றப்பட வில்லை.

அவ்வாறு இருக்கும்போது 2017 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட கட்டணத்தை இவ்விதமாக குறைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அதை அனுமதிக்க முடியாதெனவும் அந்தக் கட்டணங்களை முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு வரப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மதிப்பிடல் நடவடிக்கைகயை தொடர்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படுமென அச்சங்கம் வலியுறுத்திக் கூறுகிறது.

அச் சங்கத்தின் செயலாளர் கையொப்பமிட்ட கடிதமொன்றை பரீட்சை ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதி பொய் கூறுகின்றார்! மஹாநாயக்க தேர்களின் காலடியில் ஐ.தே.க அமைச்சர்

ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக கொலை சூழ்ச்சி இடம் பெற்றது என கூறியமை முற்றிலும் பொய் என பொது நிர்வாக மற்றும் அனார்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்.சித் மத்தும பண்டாரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர்களை வணங்கிவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்கண்ட விடயத்தை தான் சங்கைக்குரிய தேரர்களுக்கு எடுத்துரைத்ததாக கூறினார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை தனக்கு வழங்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி வைத்துக் கொண்டமைக்கான காரணம் கொலை சூழ்ச்சி தொடர்பான விசாரணைகள் எவ்வித தடையுமின்றி நடைப்பெறுவதற்காகவே என கூறப்படுகிறது.


Read more...

சிறிதரனுக்காக மக்கள் பிரதிநிதியை சிறையிலடைத்த பிரதேச செயலர். துணைபோகின்றது கிளிநொச்சி பொலிஸ்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் நீரினால் மூழ்கி மக்கள் இன்னல்படுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவந்த கண்டாவளை பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதி ஒருவரை இன்று கிளிநொச்சி பொலிஸ் சிறையிலடைத்துள்ளது.


கண்டாவளை பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதியாக கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசோக்குமார். பிரித்தானியாவிலிருந்து நாடு திருப்பியுள்ள அசோக்குமார் கண்டாவளை பிரதேசத்தில் இயங்கும் கமக்காரர் அமைப்பிற்கு தலைவராக உள்ளதுடன் இவர் அம்மக்களுடன் இதயபூர்வமாக நெருங்கிப்பழகியதன் விளைவாக அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் நின்றபோது, சிறிதரனின் எதிர்ப்பிரச்சாரங்களை மீறி பிரதேச மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது, அம்மக்களை பாதுகாப்பான இடமொன்றுக்கு கொண்டு சென்று அவர்களை பராமரிக்கும் பாரிய பொறுப்பினை கமக்காரர் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து முன்னெடுத்தார் அசோக்குமார். அத்துடன் பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்தும் உதவிகளை பெற்றுக்கொண்டார். அவரது மேற்படி ஒருங்கிணைப்பு மற்றும் சமூகப்பணி சிறிதரனின் வயிற்றில் புளியை கரைத்து ஊற்றியது.

ஏற்கனவே இலங்கைநெட் குறிப்பிட்டதுபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோர் தன்னூடாகவே அதை செய்யவேண்டும் என்றதோர் காட்டுச்சட்டத்தை உருவாக்கி கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் வித்தையை மேற்கொள்கின்றார் சிறிதரன். ஆனால் சிறிதரனின் இந்த ஏமாற்று வித்தை அசோக்குமாரிடம் வேலை செய்வதில்லை. அவர் அங்கு சுயாதீனமாக இயங்கி வந்தார். அசோக்குமார் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ததும், புலம்பெயர் மக்கள் அசோக்குமாரிடம் நேரடியாக உதவிகளை அள்ளி வழங்கியதும் சிறிதரனுக்கு பேரிடியாக அமைந்தது.

கண்டாவளை பிரதேச செயலாளரை ஏவி விட்டார் சிறிதரன். தெருச்சண்டியன் பாணியில் அசோக்குமாரினால் நிர்வகிக்கப்பட்ட முகாமிற்குள் நுழைந்த பிரதேச செயலர் அநாகரிகமாக நடந்து கொண்டார். அவர் அவ்வாறு நடந்ததற்கான காரணம், அசோக்குமாரை கள்ளனாக்கவேண்டும் என சிறிதன் போட்டுக்கொடுத்த திட்டம்.

நிரபராதியான அசோக்குமார் நிலைமைகளை எடுத்துரைத்தார், ஆனாலும் அசோக்குமாரை சிக்கலில் மாட்டவேண்டும் என்ற சிறிதரனின் நிகழ்சி நிரலில் செயற்பட்ட கண்டாவளை பிரதேச செயலர் பிருந்தாகரன், தனது கடமைக்கு இடையூறு செய்ததாக பொலிஸில் முறையிட்டார்.

தமிழ் மக்களிடம் போலி உணர்சி பேசுகின்ற சிறிதரனுக்கும் இலங்கை பாதுபாப்பு படையினருக்கும் உள்ள உறவு யாவரும் அறிந்தது. அந்த அடிப்படையில் அசோக்குமாரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸ் நீதிமன்று விடுமுறையிலுள்ளபோது நீதிபதியின் வாசஸ்தலத்தில் அசோக்குமாரை ஆஜர்படுத்தி விளக்க மறியலுக்கு அனுப்பியுள்ளனர்.

இவ்விடயத்தில் அரசியல்வாதியின் ஏவலாளியாக செயற்பட்டுள்ள கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், தனது அதிகாரத்தையும் உண்மைக்கும் நேர்மைக்கும் மாறாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். இவ்விடயத்தில் பிரதேச செயலரின் முறைப்பாட்டை நடுநிலைமையுடன் விசாரணை செய்யாது, சாட்சியங்களுக்கு செவிமடுக்காது பொலிஸாரும் செயற்பட்டுள்ளனர்.

பிரதேச செயலரின் இச்செயற்பாடு தொடர்பான பூரண விசாரணை ஒன்றுக்கு மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் முறையிட்டு இவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்படுவதற்கு உழைக்கவேண்டும். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஊழியர்கள் அதிகார மமதையில், நாட்டிலுள்ள சட்டங்களை தங்களுக்கு தேவையானவாறு துஷ்பிரயோகம் செய்து மக்களை சிக்கலில் தள்ளுகின்றனர். இக்கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால் இவ்விடத்திலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.

சிறிதரனுக்கும் அசோக்குமாருக்குமிடையேயான பிணக்கு தொடர்பாக கூறுவதானால், கண்டாவளை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டபோது, அசோக் குமார் தொடர்பாக விசமப்பிரச்சாரங்களை மேற்கொண்டார் சிறிதரன்.

இப்பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில்,

'நான் போராட்டம் என்று சென்று கிளுவை மரத்தில் துப்பாக்கியை தொங்கவிட்டு ஓடிவந்தவன் அல்ல'

'நான் எனது மனைவி மீது சந்தேகப்பட்டு என்னை எனது மைத்துனன் தீபன் துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டவில்லை'


என சிறிதரனின் வண்டவாளங்களை கண்டாவளை எங்கும் பிரசுரம் ஒட்டியவர் அசோக்குமார். சிறிதரனின் நெருங்கிய உறவினரான அசோக்குமாருக்கு சிறிதரனின் உள்வீட்டு விவகாரங்கள் அத்தனையும் அத்துப்படி.

இதுதான் சிறிதரனுக்கும் அசோக்குமாருக்குமிடையேயுள்ள பிணக்கு. இதை உணராத பிருந்தாகரன் தவறாக செயற்பட்டுள்ளார். எனவே தனது தவறை உணர்ந்து முறைப்பாட்டை வாபஸ் பெற்று யாவருக்கும் பொதுவான அரச உத்தியோகித்தராக செயற்படவேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.

அசோக்குமாரின் செயற்பாடு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.








Read more...

கட்சியின் தலைமையகத்தை அடித்துமூட மைத்திரி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை தான் நாடு திரும்பும் வரை திறக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சி வட்டாரங்களில் கருத்துப்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்பூசல் காரணமாகவே கட்சியின் தலைவர் என்ற வகையில் இத்தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

தனது சொந்த தேவையின் காரணமாக தனிப்பட்ட விடுமுறையில் தாய்லாந்து செல்ல முன்னர் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Read more...

Wednesday, December 26, 2018

சிஐடி ஜனாதிபதி கொலைச்சூழ்சியை மூடி மறைக்க முற்படுகின்றது. மேலும் விடயங்களை அம்பலப்படுத்துவேன். மிரட்டுகின்றார் நாமல்.

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முயற்சிப்பதாக தெரிவித்த நாமல் குமார, விரைவில் இது குறித்து சகல விடயங்களையும் வெளியிடுவதாக மீண்டுமொரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கொலை சூழ்ச்சி தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு துறையினர் மந்த கதியில் முன்னெடுப்பதாக குற்றம் சுமத்திய நாமல் குமார, விசாரணையுடன் தொடர்புடைய தகவல்களை இனந் தெரியாத நபர் ஒருவர், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, நாமல் குமார இந்த அதிர்ச்சித் தகவலைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் தனது பாதுகாப்பினையும் விசேட அதிரடிப்படை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாமல்குமாரவின் மேற்படி கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர, நாமல் குமாரவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

Read more...

சம்பந்தனால் கடமைகளை முன்னெடுக்க முடியாதுள்ளாராம் மஹிந்தர்.

முன்னாள் எதிர் கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் அவர்கள் இன்று வரை எதிர் கட்சி காரியாலத்தை தற்போதைய எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு கையளிக்காமையால் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு தனது கடமைகளை செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளார் என பொதுஜன பெருமுன வட்டாரங்கள் விசனம் வெளியிட்டுள்ளது.

இச்செயற்பாட்டினால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கடமைகளை ஏற்கும் நாள் பிற்போடப்பட்டுள்ளது. சம்பந்தன் அவர்கள் இவ்வாறு எதிர்கட்சி ஆசனத்தில் தொங்கி கொண்டிருக்கின்றமைக்கான காரணம் மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் வழங்கப்படக்கூடிய எதிர்கட்சிகளுக்கான தலைமைத்துவ செயற்பாடுகளை முடக்குவதாகும் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபுறம் எதிர்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்கிவிட்டு சம்பந்தனை வைத்து காரியாலயத்தை முடக்கியுள்ளதாகவும், சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியின் கொந்தராத்தினை நிறைவேற்றுவதாகவும் அவர்கள் மேலும் குறை கூறுகின்றனர்.

Read more...

அனத்துவகைத் தேர்தலுக்கும் தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு...

மலரும் புத்தாண்டில் அனைத்துவகைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்தார். நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்துக் கொண்டு, எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பேராசியர் ரோஹண லக்ஸமன் பியதாஸ தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஸமன் பியதாச இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.

புது வருடத்தில் புதிய சிந்தனைகளுடன் கட்சியினை மீளக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன், கட்சியை மேலும் வலுப்படுத்த, ஜனாதிபதி கட்சி ஒருங்கிணைப்பாளர்களை புதிதாக நியமிக்க உள்ளதாக தெரிவித்த பொதுச் செயலாளர், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும் வகையில் செயற்பாடுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

Read more...

சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு ஹட்டனிலும் நினைவஞ்சலி.....

சுமாத்ரா தீவில் நிலைகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு, இன்றுடன் 14 ஆண்டுகள் உருண்டோடியுள்ள நிலையில், இலங்கையின் பல பாகங்களிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

சுனாமியால் மரணித்த உறவுகளுக்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பேரணி, சுனாமி நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.25 தொடக்கம் 9.27 வரையான இரண்டு நிமிடங்களில், ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த, அனர்த்த முகாமைத்துவ மையம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.

அத்துடன் அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி, காலை 8.30 அளவில் ஆரம்பமாகி, காலி மாவட்ட செயலாளர் விதானப்பத்திரனவின் தலைமையில் இடம்பெற்றது.

இதனிடையே சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஹட்டன் நகரில் உள்ள விகாரை ஒன்றில், விஷேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது டிக்கோயா மாநகர சபையின் தலைவர் சடேன் பாலச்சந்திரன், ஹட்டன் நகர காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டவர்களுக்குக்கு அஞ்சலி செலுத்தினர்.


Read more...

காதலனுடன் ஹோட்டலிலிருந்த பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இருவர் கைது....

பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரண்டு இளைஞர்கள், ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காசல்ட்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையிலுள்ள விடுதியில், குறித்த பிரித்தானிய பெண்ணும், அவரது காதலரும் தங்கியிருந்தபோது மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றதாக ஹட்டன் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஜோடி தங்கியிருந்த அறைக்கு அருகேயுள்ள அறையொன்றில் தங்கியிருந்த இளைஞர்கள் இருவர் இணைந்தே மேற்படி முயற்சியினை மேற்கொண்டுள்ளனர். அறையின் கதவை தட்டி வெளியே அழைத்து மிகவும் துணிகரமாக துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவேளையில், காதலன் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து விடுதி முகாமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், எதிர்வரும் வியாழக்கிழமை நீதவான் முன்னணியில் பிசன்னப்படுத்தப்படவுள்ளதாக, ஹட்டன் காவத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசராணைகளை முன்னெடுத்து வருவதாக, ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com