Saturday, October 20, 2018

மட்டு. மத்திய கல்வி வலயம் 67வது நிலையில் : கிழக்கு மாகாணம் கல்வி வீழ்ச்சிக்கு அதிகாரிகளே பொறுப்பு- பொ. உதயரூபன்

கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக்கண்டுள்ள நிலைமைக்கான முழுப்பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது விடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச்செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் கடந்த புதன்கிழமை (17.10.2018) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமீபத்தில் நடந்து முடிந்த தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கிழக்கு மாகாணம் மிக மோசமான கல்விப் பின்னடைவைக் கண்டிருக்கிறது. இப்பின்னடைவுக்கான பொறுப்புக்கூறலை கிழக்கு மாகாண கல்வியமைச்சு, அதன் செயலாளர், மாகாணப் பணிப்பாளர் மற்றுமுள்ள அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

பரீட்சை அடைவு மட்டத்தை ஒப்பிடுகையில் மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாணம் 8ம் நிலைக்கு பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. மேலும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் மிகவும் கவலைக்குரிய மோசமான பெறுபேறுகளால் கல்வி நிலைமையில் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் 25 மாவட்டங்களில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றதில் மட்டக்களப்பு மாவட்டம் 23வது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 25வது நிலையையும் அடைந்திருப்பது கவலையளிக்கிறது. வலய மட்டத்தில் நோக்குகையில் குறிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதில் மூதூர், கல்குடா மேற்கு, கிண்ணியா ஆகிய வலயங்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தேசிய ரீதியில் கல்வியில் முன்னிலை வகித்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 67வது நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கிழக்கு மாகாணத்தின் மோசமான கல்வி வீழ்ச்யையும், வினைத்திறனற்ற நிருவாகச் செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டிருக்கிறது.

அத்துடன், மட்டக்களப்பு கல்வி வலயம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மேலதிகமான ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் காணப்படுகின்ற அதே வேளை, அந்த வலயத்தில் ஆரம்பக்கல்வி, கல்வி அபிவிருத்திக்கென கல்வி நிருவாக சேவை உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் நியமிக்கப்படிருந்தும் பெறுபேற்றில் அந்த வலயம் வீழ்ச்சியடைந்துள்ளமை கண்டிக்கத்தக்கது.

கல்வியமைச்சு ஆரம்பக்கல்வி மற்றும் இரண்டாம் நிலைக்கல்விக்கு தேசிய கல்விக்கொள்கைக்கமைவாக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறான ஆய்வறிக்ககைகளும், தேசிய திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தும் கல்வியதிகாரிகளால் சேவைப்பிரமாண குறிப்புகளுக்கமைவான சேவைப்பணிகள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வட கிழக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் செயலணிக்குழுவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர், கல்வியமைச்சின் செயலாளர் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தின் கல்விப்பின்னடைவு தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

யுத்ததில் மிகவும் பாதிப்படைந்த மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்கள் திருகோணமலை, மட்டக்ளப்பு மாவட்டங்களை விட முன்னிலை வகிக்கிறன.

எஸ்.ரி.அக்ஷயா - thehotline

Read more...

ஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது.

அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.

ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது.

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது.

சௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல்.

பிபிசி

Read more...

ஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்! யாழ்பாணத்தில் ஜேவிபி துண்டுப்பிரசுரம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் மக்களை திரட்டும் பொருட்டு இன்று யாழ்பாணத்தில் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டது.

வரிச்சுமை, எரிபொருள் மற்றும் விலைவாசி அதிகரிப்பு , சிங்கப்பூர் எட்கா ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டை தாரைவார்க்கும் ஒப்பந்தங்கள், துறைமுகம் , மத்தல , எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட தேசிய வளங்களை விற்பனை செய்தல் என்பவற்றிக்கு எதிராக மேற்படி பேரணியூடாக ஜேவிபி மக்களை திரட்டுகின்றது.



குறித்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமாகாண செயலாளர் நேசன் மற்றும் பொது மக்கள் , கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









Read more...

Friday, October 19, 2018

19 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கல்லூரி மாணவர் தற்கொலை!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள க்ரிமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் தரப்பில், "கெர்ச் நகரில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் 18 வயதான மாணவர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதில் அவருடன் பயின்ற சக மாணவர்கள் 19 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மாணவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் அந்த மாணவர் கேன்டீனில் குண்டு வீசியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.







Read more...

அரசமைப்பு வெற்றிபெறாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பாராம் சுமந்திரன்!

புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய சர்ச்சையும் அரசமைப்பு முயற்சியைக் குழப்புவதற்கான திட்டமிட்ட சதி வேலைதான். தடைகளுக்கு மத்தியில் ஆமை வேகத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், நிச்சயம் புதிய அரசமைப்பு வெற்றிபெரும். அவ்வாறு வெற்றிபெறத் தவறின் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறியவும் தயாராக உள்ளேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“அரசமைப்பு விவகாரத்தில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம். ஒரு வரைவு நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு 3 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அரசமைப்புப் பேரவைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 11ஆம் திகதி வழிநடத்தல் குழுவில் அந்த வரைவை ஆராய்ந்தபோது அதில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. குறிப்பாக மொழிபெயர்ப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், அந்த மொழிபெயர்ப்பை பெற்றுச் சரிபார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி மீண்டும் அரசமைப்புப் பேரவை கூடும். அதன்போது 3 மொழிகளிலும் அந்த வரைவு கையளிக்கப்படும். இதுதவிர 25 ஆம் திகதி வழிநடத்தல் குழு மீண்டும் கூடிஇறுதியாக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்களை ஆராய்ந்து அனுமதி வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவில் நடைபெறும் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டா என்று எமக்குள் உடன்பாடு ஒன்று இருந்தாலும் கூட, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகைகளுக்கு அங்கு நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டியுள்ளது.

வழிநடத்தல் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்த நாள்களில் இருந்தே எப்படியாக நாட்டை வர்ணிப்பது என்பது தொடர்பில் பேசப்பட்டபோது பிரதமர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொற்பதத்திற்கு ‘ஏக்கிய ராச்சிய’ என்ற தவறான மொழிபெயர்ப்பு 72 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் சொல்லியிருந்தார். ‘ஏக்கிய ராச்சிய’ என்பது ஒரு நாடு என்பதைத்தான் குறிக்கின்றதே தவிர அது ஆட்சி முறையைக் குறிக்கவில்லை என்பதையும் பிரதமர் விளக்கியிருந்தார்.

பிரதமர் கூறிய விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால்தான் ‘ஏக்கிய ராச்சிய’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட முடியும் என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம். ஆனாலும், ஏக்கிய ராட்சிய என்பது நாட்டை மட்டும் குறிப்பது என்றும், அது ஆட்சி முறையை குறிப்பதாக அமையாது என்றும் புதிதாக ஒரு வரைவிலக்கணம் எழுதப்படவேண்டும் என்று கேட்டிருந்தோம்.

ஏக்கிய ராச்சிய என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் என்ன என்று நாங்கள் ஆராய்ந்தபோது ஒற்றையாட்சி என்று சொல்லும்போது, அதில் ஆட்சி முறை குறிப்பிடப்படுவதால் அது பொருத்தமற்ற சொல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் சுபாவத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இது இருக்க வேண்டும். ஆகையால் ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற சொற்பதமோ ஒற்றையாட்சி என்ற சொற்பதமோ உபயோகிக்க முடியாது. ஏக்கிய ராச்சிய என்பது நாட்டின் சுபாவத்தை குறிப்பது போன்று அதற்கேற்ற தமிழ்ச் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தோம்.

இதன்போது நான் அடுத்த கூட்டத்தில் ஒரு முன்மொழிவை செய்திருந்தேன். ஏக்கிய ராச்சியவுக்கு பதிலாக ஒன்றுபட்ட நாடு அல்லது ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தலாம் என்று முன்மொழிவு செய்தேன். இதில் ஒருமித்த நாடு என்பதை பயன்படுத்தலாம் என்று அதிகமானவர்களால் பிரேரிக்கப்பட்டது.

இடைக்கால வரைவின்போது ஏக்கிய ராச்சிய சமன் ஒருமித்த நாடு என்ற சொற்றொடர் 3 மொழிகளிலும் அப்படியே உபயோகிக்கப் வேண்டும் என்றும், அதற்கான வரைவிலக்கணம் அந்த உறுப்புரையிலேயே கொடுக்கப்படவேண்டும் என்றும், அதற்கான விளக்கமாக அந்தச் சொற்பதம் ஆட்சி முறை சம்பந்தப்பட்டதாக இல்லாது, நாட்டின் சுபாவத்தைக் குறிப்பதாக அதாவது பிரிக்கப்படாத – பிரிக்க முடியாத – ஒரு நாடு என்ற வரைவிலக்கணம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இடைக்கால அறிக்கை இறுதி செய்யும்போதுதான் டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு மித்த நாடு’ என்பதற்குப் பதிலாக ‘ஒரு நாடு’ என்ற சொல் பொருத்தமானது என்றார். இவ்விடயம் தொடர்பில் வழிநடத்தல் குழுவில் உள்ளவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவ்வாக்கெடுப்பில் டக்ளஸ் மட்டும் ‘ஒரு நாடு’ என்றார். ஏனையவர்கள் ‘ஒருமித்த நாடு’ என்பதையே ஆதரித்தனர். இதனடிப்படையில் தான் இடைக்கால அறிக்கையில் ‘ஒருமித்த நாடு’ என்று சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் இந்த விடயங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மீண்டும் டக்ளஸ் தேவானந்தா அந்தச் சர்சையை எழுப்பியபோது பிரதமர் மீண்டும் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். அத்துடன் அவருடைய கருத்தை அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகப் பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

‘ஒரு நாடு’ என்ற சொல் உபயோகிப்பதாக இருந்தால் ‘ஏக்கிய ராச்சிய’ என்று சொல்லாமல் நேரடியாக ‘எக்க ரட்ட’ என்ற சொற்பதத்தை உபயோகிக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.

அரசமைப்பில் நாட்டின் சுபாவத்தை வர்ணிக்கும் சொற்பதங்கள் பேச்சுவழங்கில் உள்ள சொற்பதங்களாக இல்லாமல் சற்று உயர்ந்த சொற்பதங்களாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம்.

ஆனால், தற்போது சிறு குளறுபடி ஏற்பட்டதால் முன்னேற்ற நடவடிக்கையில் சற்றுப் பின்னகர்வு ஏற்பட்டுள்ளது. அரசமைப்பை பிற்போடுவதற்காக வெவ்வேறு சர்ச்சைகளை வெவ்வேறு தருணங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அந்தச் சர்ச்சைகளை எவ்வளவு தூரம் ஏற்படுத்துகின்றார்கள் என்று நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம். டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடு அரசமைப்பு நடவடிக்கையைப் பின்னகர்த்துவதற்காகச் செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகவே எமக்குத் தோன்றுகின்றது” – என்றார்.

Read more...

சீஐடி க்கு வாக்குமூலம் வழங்கி விட்டு பத்திரமாக வீடு சென்றார் டிஐஜி நாலக டி சில்வா.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என வெளியான ஒலிப்பதிவுகள் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

நேற்று அவரிடம் 7 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில் இன்று 9 மணிநேர விசாரணையின் பின்னர் வீடு சென்றுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றது சாதாரண குற்றமல்லவெனவும் அவரை கைது செய்தே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பலத்த குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அவர் இன்று கைது செய்யப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார். By Jordan Shilton

சவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்கு ஆதாரம் பெருகி வருவதற்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரியாத்திற்கான அதன் பாரிய ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளைத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

சவூதி பத்திரிகையாளர் காணாமல் ஆக்கப்பட்டு வெளிப்படையாக படுகொலை செய்யப்பட்டமை சவூதி அரசாங்கத்திற்கான அமெரிக்க ஆயுத விற்பனைகளைப் பாதிக்குமா என்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் தெரிவித்தார், “அமெரிக்காவுக்குள் 110 பில்லியன் டாலர் முதலீட்டை நிறுத்தும் கருத்தில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அவர் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும்? அவர்கள் அந்த பணத்தை எடுத்து ரஷ்யா அல்லது சீனா, அல்லது வேறு ஏதாவது இடத்தில் செலவிடுவார்கள்,” என்றார்.

வாஷிங்டன் வினியோகித்த அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் முக்கிய தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை உதவிகளைப் பயன்படுத்தி, யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அண்மித்து இனப்படுகொலைக்கு நிகரான அதன் போரை சவூதி முடியாட்சி அதிகப்படுத்தி வருகின்ற போதும், கடந்த ஆண்டு ரியாத்துடன் அவர் நிர்வாகம் செய்து கொண்ட 110 பில்லியன் டாலர் அமெரிக்க ஆயுத விற்பனை உடன்படிக்கையை ட்ரம்ப் குறிப்பிடுகிறார்.

ஈரானைத் தனிமைப்படுத்தி, நிலைகுலைத்து அதன் மீதான இராணுவத் தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்வதற்காக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒரு பொதுவான முன்னணியைக் கட்டமைப்பதற்கான முயற்சியின் மையப்பகுதியாக, அடுத்தடுத்து வந்த குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினது நிர்வாகங்களால் பேணி காக்கப்பட்ட சவூதி அரேபியா உடனான அமெரிக்க கூட்டணியை ட்ரம்ப் நிர்வாகம் ஆழப்படுத்தி உள்ளது.

வியாழனன்று காலை, “Fox & Friends” உடனான ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறுகையில், கஷோகி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அமெரிக்க புலனாய்வாளர்கள் சவூதி மற்றும் துருக்கிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார், ஆனால் ரியாத் உடனான அமெரிக்க உறவுகள் "சிறப்பாக" இருப்பதைச் சேர்த்துக் கொள்ள அவர் தயங்கவில்லை.

புதனன்று, செனட் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியதாக கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகள் மீது தடையாணைகள் விதிக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க நிர்வாக பிரிவுக்கு 120 நாட்கள் அவகாசமளிக்கும் 2016 மாக்னெட்ஸ்கி சட்டத்தைப் (Magnitsky Act) பிரயோகித்து, சவூதி அரசாங்கம் மீது தடையாணைகள் விதிக்குமாறு ட்ரம்பை வலியுறுத்த இருகட்சியினது சார்பாக ஒரு கடிதம் அனுப்பினர்.

உயர்மட்டத்தில் தொடர்புகள் வைத்திருந்த வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளரும் முன்னாள் சவூதி ஆட்சியுடன் உள்ளிணைந்து இருந்தவருமான கஷோகியின் வெளிப்படையான படுகொலை, அந்த கொடுங்கோல் ஆட்சி மீதான ட்ரம்பின் மிதமிஞ்சிய புகழுரைகள் சம்பந்தமாகவும் மற்றும் யேமனில் அப்பாவி மக்கள் பாரியளவில் கொல்லப்படுவதிலும் மற்றும் அந்நாட்டின் மீது சுமத்தப்பட்டு வருகின்ற மனிதாபிமான சீரழிவிலும் அமெரிக்காவின் பாத்திரம் சம்பந்தமாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தினுள் தந்திரோபாயரீதியிலான கருத்து வேறுபாடுகள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், ஸ்தாபக ஊடகங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் இருகட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளோ சவூதி ஆட்சியிடமிருந்து தங்களைத் தொலைவில் நிறுத்திக் கொள்ளவும் மற்றும் அதனுடனான நீண்டகால உறவுகளை மூடிமறைக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

துருக்கியில் அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணைச் சந்திக்க செல்வதற்கு முன்பாக அவரது விவாகரத்து ஆவணங்களைப் பெறுவதற்காக சென்றிருந்த கஷோகி அந்த தூதரகத்திற்கு உள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் காணொளி மற்றும் ஒலிப்பதிவுகளைத் துருக்கிய அதிகாரிகள் வைத்திருப்பதாக வெள்ளியன்று CNN அறிவித்தது. கஷோகி காணாமல் ஆக்கப்பட்டதன் மீதான துருக்கிய விசாரணைகளுடன் பரிச்சயமான ஓர் ஆதாரநபர் கூறுகையில், அங்கே உள்ளே ஒரு தாக்குதலும் போராட்டமும் நடந்ததை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றார். அந்த ஆதாரத்தின் தன்மை "அதிர்ச்சியூட்டுவதாகவும் அருவருப்பூட்டுவதாகவும்" இருப்பதாக அவர்கள் விவரித்தனர்.

“அவரின் குரலையும், அரபிய மொழி பேசுபவர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது,” என்று ஓர் ஆதார நபர் வாஷிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தார். “அவர் எவ்வாறு விசாரிக்கப்பட்டார், சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார் என்பதை கேட்க முடிகிறது.”

வெள்ளிக்கிழமையும், துருக்கி மற்றும் சவூதி அரேபியா கூட்டாக சேர்ந்து ஒரு விசாரணை நடத்தவிருப்பதாக அவை அறிவித்தன. கஷோகியின் மரணத்திற்கு ரியாத் தான் பொறுப்பு என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பலமாக அறிவித்துள்ளார் என்றாலும், அவர் பகிரங்கமாக சவூதி அரேபியாவைக் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

கஷோகி காணாமல் போன அந்நாளில் 15 சவூதி உளவுத்துறை அதிகாரிகளின் ஒரு அதிரடிப்படை இஸ்தான்புல் வந்திருந்ததாகவும், பின்னர் உடனடியாக திரும்பி சென்றதாகவும் முன்னதாக செய்திகள் குறிப்பிட்டிருந்தன. அவர்களில் ஒரு பிரேத பரிசோதனை நிபுணர் எலும்பு-அறுவை கருவியுடன் வந்திருந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது. கஷோகியின் பிரேதம் அத்தூதரகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக துண்டுதுண்டாக வெட்டப்பட்டதாக சில செய்திகள் குறிப்பிட்டன.

ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், கஷோகியின் படுகொலையானது சர்வதேச சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதன் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது. அது சவூதி ஆட்சியின் ஈரவிரக்கமற்ற தன்மையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக அதன் பிரதான பின்புல ஆதரவாளரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதையும் வெளிப்படுத்துகிறது, இது மத்திய கிழக்கில் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அதன் முனைவில் ரியாத்தை ஒரு முக்கிய பிராந்திய கூட்டாளியாக ஆயத்தப்படுத்தி உள்ளது.

வாஷிங்டன் இஸ்ரேலை முன்னோடியாக கொண்டு டிரோன் படுகொலைகளுக்கான கொள்கையை ஏற்றுள்ளதுடன், அதை முன்னொருபோதும் இல்லாதளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லிபியா, சோமாலியா மற்றும் பிற நாடுகளிலும் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தி உள்ளது. அது, காசா-இஸ்ரேல் எல்லையில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற நிராயுதபாணியான பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சுட்டுக் கொல்லும் விடையிறுப்புக்கு அதன் ஒப்புதல் முத்திரை வழங்கி உள்ளது, இதன் விளைவாக கடந்த ஆறு மாதங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக் கணக்கானவர்கள் அங்கே கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைமையில் அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் பில்லியன் கணக்கான டாலர்களில் இராணுவ தளவாடங்களையும் உதவிகளையும் ரியாத்திற்கு வழங்கி உள்ளன, அது வாஷிங்டனின் ஆயுத ஏற்றுமதிகளுக்கான முக்கிய வாடிக்கையாளர்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆயுதங்களில் பல யேமனில் இரத்த ஆறை ஓடச் செய்வதற்கும் மற்றும் அந்த சர்வாதிபத்திய ஆட்சிக்கு எதிராக சவூதி அரேபியாவிற்குள் எழும் எந்தவொரு சமூக எதிர்ப்பின் அறிகுறியையும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் சவூதி ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்-சம்பள நிறுவனங்களில் ஒன்று கிளிண்டன்களுடன் பிணைந்துள்ளது. அந்த அரச குடும்பத்திடமிருந்து மாதம் 150,000 டாலர் பெறுகின்ற Glover Park குழுமம் முன்னாள் கிளிண்டன் நிர்வாக அதிகாரிகளால் தொடங்கப்பட்டதாகும்.

சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் இப்போது பாசாங்குத்தனமாக தங்களை ரியாத்திடமிருந்து தொலைவில் நிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றன என்பதுடன், ஒரு கடுமையான போக்கிற்கு அழைப்பு விடுத்தும் வருகின்றன. பல வணிக பிரமுகர்களும், நியூ யோர்க் டைம்ஸ், சிஎன்என், புளூம்பேர்க் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் உட்பட ஊடக நிறுவனங்களும், மகுடம் சூட்டவிருக்கின்ற இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் இம்மாத இறுதியில் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர் மாநாட்டிலிருந்து பின்வாங்குவதென்ற அவற்றின் விருப்பத்தை அறிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்ஸ்டோன் குழுமம் மற்றும் ஜேபிமோர்கன் சேஸ் ஆகியவற்றின் தலைமை செயலதிகாரிகளும், மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசினும், “பாலைவனத்தின் டாவோஸ்" என்று கூறி, அக்கூட்டத்தில் கலந்து கொள்வதென்ற அவர்களின் திட்டங்களை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கஷோகி விவகாரத்தில் ஆணவத்துடன் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியமை மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் “மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" என்ற அக்கறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களின் ஏகாதிபத்திய நோக்கங்களை மூடிமறைப்பதற்கான அவர்களின் முயற்சிகளைப் பாதிக்குமே என்பதற்குத் தான் இந்த வட்டாரங்கள் பிரதானமாக பயப்படுகின்றன. கஷோகி படுகொலையும் ஏனைய பிற மூர்க்கமான நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவிற்கு உள்ளேயும் மற்றும் சர்வதேச அளவிலும், சவூதி அரச குடும்பம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்றும் அவர்கள் கவலைக் கொண்டுள்ளனர்.

முதலீட்டில் உள்ள பில்லியன் கணக்கிலான டாலர்கள் பணயத்தில் உள்ளன. சவூதி அரேபிய பொது முதலீட்டு அமைப்பின் தகவல்படி, அந்த அரசாட்சியில் மொத்த அமெரிக்க முதலீடுகள் சுமார் 55 பில்லியன் டாலருக்கு நிகராக உள்ளது. 2017 இல் மட்டும், இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் அவரது நவீனமயப்படுத்தல் முனைவு என்றழைக்கப்படுவதைத் தொடங்கிய நிலையில், 16 புதிய அமெரிக்க நிறுவனங்கள் அண்ணளவாக 100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுடன் சவூதி சந்தைக்குள் நுழைந்தன.

அமெரிக்கா ரியாத்தின் பிரதான ஆதாரவாளர் என்றாலும், ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டனின் வெளிவேடமான கூட்டாளிகளும் இந்த சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுப்பதில் ஆழமாக உடந்தையாய் உள்ளனர். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை அனைத்தும் பில்லியன் டாலர்கள் கணக்கில் ஆயுத தளவாடங்களை சவூதி அரேபியாவுக்கு விற்பனை செய்துள்ளன என்பதுடன், இந்த விற்பனைகள் மூன்றரை ஆண்டுகால யேமன் போரின் போதுதான் அதிகரிக்கப்பட்டன.

கட்டாருக்கு எதிரான அதன் விவகாரத்தின் மீது ரியாத்துடனான இராஜாங்க பூசலை சமீபத்தில் சீர்படுத்தி உள்ள ஜேர்மன் அரசாங்கம், கஷோகி விவகாரத்தில் கவலை வெளியிடும் அடையாள அறிக்கைகளுக்குக் கூடுதலாக எதுவுமின்றி, ஒப்பீட்டளவில் வாய்மூடி உள்ளது. கஷோகி காணாமல் போவதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொது சபையின் பக்கவாட்டில் அவரது சவூதி சமதரப்புடன் ஒன்றாக சேர்ந்து தோன்றிய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், "அப்பிராந்தியத்திலும் உலகெங்கிலும் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டிற்காக முக்கிய பாத்திரம் வகித்து வரும்" ஒரு நாடாக சவூதி அரேபியாவைப் பாராட்டினார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை ஒத்துக்கொள்கின்றார் பின்வரிசை பாராளுமன்ற உறுபபினர் எஸ்.எம்.மரிக்கார்.

ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றது. குறிப்பாக அது நாட்டின் அபிவிருத்திக்காக எவ்வித வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காத காரணத்தினால், அரசாங்கம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்த அபிவிருத்தி தொடர்பான விடயங்களை சந்தைப்படுத்தாத காரணத்தினால், தற்போது திருடர்கள் வீரர்களாக மாறியுள்ளதுடன் வீரர்கள் திருடர்களாக மாறியுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த ஆரம்ப காலத்தில் விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் உட்பட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பத்தில் இது குறித்து சுட்டிக்காட்டிய போதும், அவை செயற்படுத்தாத காரணமாக அரசாங்கம் கேட்டு வாங்கி கட்டிக்கொண்டுள்ளது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மாணவன் மயங்கிவிழும் வரை பந்தாடிய ஆசிரியர்.

12ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மயங்கிவிழும் வரை வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் அடித்த சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வகுப்பறையினுள் நுழைந்த குறித்த ஆசிரியர், மாணவனை ஆசியரியை ஒருவர் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் பின்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தமைக்கான உள்நோக்கம் சம்பவத்தை மூடி மறைப்பது என சந்தேகம் வெளியிடும் குடும்பத்தினர், அவரை குளியாப்பிட்டி அரசினர் போதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆசிரியரின் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லாமையே தான் இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதற்கான காரணம் என பாதிக்கப்பட்டுள்ள மாணவன் தெரிவித்துள்ளான்.

கல்வித் திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

மைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா?

இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மைத்திரிபால சிறிசேனா இராணுத்தினருக்கு மேற்கொண்டுவரும் மேலதிக சலுகைகள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இராணுவத்தினருக்காக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 800 வீடுகளை பூரணமாக்கி வழங்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காக 279 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில்கள், குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத இராணுவத்தினருக்கு 84 பகுதியளவு காணித் துண்டுகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்படும் 100 வீடுகளை நிர்மாணிக்க 'நமக்காக நாம்' நிதியத்தின் நிதியுதவியின் கீழ் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் தொழிற் பங்களிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளடங்களாக இந்த செயற்திட்டத்தின் மொத்த பெறுமதி 30 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.

சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 500 இராணுவத்தினருக்கு அவர்களது வீட்டு நிர்மாணப் பணிகளை நிறைவடையச் செய்வதற்கு 'நமக்காக நாம்' நிதியத்தின் ஊடாக 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற 300 இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நிறைவு செய்ய தேசிய பாதுகாப்பு நிதியினூடாக 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 279 இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில்களுக்காக தேசிய பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக 69 இலட்சத்திற்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது.

அரச காணிகள் வழங்கும் செயற்திட்டத்தினூடாக கல்னேவ, ரஸ்நாயக்கபுர மற்றும் கொட்டவெஹெர பிரதேச செயலகங்களில் குடியிருப்பு வசதிகளற்ற இராணுவத்தினருக்காக 84 காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Read more...

கைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.

16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எதிர்வரும் கார்த்திகை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பெரியநீலாவணை யைச் சேர்ந்த யாதவன் என்ற பெயருடைய குறித்த நபர் மேற்படி குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் சார்பாக கல்முனையைச் சேர்ந்த ரமீஸ் என்ற பிரபல சட்டத்தரணி சார்பில் சட்டதரணி ஒருவர் ஆஜராகியுள்ளார்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக தொழில்புரிந்து வந்த யாதவன், அப்பாடசாலையில் தரம் 11 ல் கல்வி பயின்று வரும் மாணவியை நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் உழைத்து வருகின்றார். இந்நிலையில் தனது அம்மம்மாவுடன் வசித்துவரும் சிறுமியை 32 வயதான, திருமணமாகி ஒரு குழந்தையுள்ள மேற்படி ஆசிரியன், தொடர்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்ததாக சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆசிரியன் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read more...

சிறுபாண்மையினர் கோட்டாவை ஏன் வெறுக்கவேண்டுமாம்?

இலங்கையிலுள்ள சிறுபாண்மை மக்கள் தன்னை வெறுப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அவர்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்காகவே தாங்கள் புலிகளுடன் போரிட்டதாகவும், அவ்வாறு போரிட்டு அவர்களை மீட்டெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இன்று விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர், நீதிமன்ற வாசலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக குதிக்கவுள்ளதாக பேசப்படுகின்றது, ஆனாலும் உங்களுக்கு சிறுபாண்மை மக்களின் விருப்பு உள்ளதாக தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் :

ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்றும் சிலர் பேசுகின்றனர். இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கே இராணுவம் தியாகங்களை செய்துள்ளது. மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை காப்பதே அதன் கடமை. யாரும் வேறுவழிகளில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றபோது, இராணுவமே அங்கு தலையிட்டு ஜனநாயகத்தை காக்கின்றது. அவ்வாறானதோர் இராணுவத்தில் 20 வருடங்கள் கடமையாற்றியவன் என்ற வகையிலும், பாதுகாப்பு விடயங்களை கையாளுகின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவன் என்ற வகையிலும் அக்கடமையை என்னால் செய்யமுடியும்.

மேலும் காலம் கனிந்துவரும்போது, தான் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது. அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்

எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இன்று புதன் கிழமை அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

எங்களுடைய சமூகம் குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டுகொண்டிருக்கின்றன. பிள்ளைகள் தற்கொலைக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விடுப்பட்டு சென்றுக்கொண்டிருக்கிறது. திருநீறு பூசிய முகங்களை காண்பது அரிதாக இருக்கிறது. நவீன உலகில் பெற்றோர்கள் சதா பிசியாக இருக்கின்றார்கள் இதனால் பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது போகிறது எனத் தெரிவித்த அருட்தந்தை அவர்கள்

இந்த நிலைமைகள் கவலையளிக்கிறது இதுவொரு ஆபத்தான நிலைமை சத்தமில்லாமல் தமிழ் சமூகத்தை அழிக்கின்ற யுத்தம் இவ்வாறே இடம்பெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.



Read more...

Thursday, October 18, 2018

பத்திரிகையாளர் ஜமால் சவுதி அரேபிய தூதரகதினுள்ளேயே கொலை செய்யப்பட்டார். அடித்துக்கூறுகின்றது துருக்கி.

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி அரேபியா ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் துருக்கி அரசு பத்திரிக்கையான யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘எங்களுக்கு கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள்படி, சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால்கள் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். 7 நிமிடங்கள் வரை இந்த சித்ரவதை நீண்டுள்ளது. பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரங்கள் சவுதி அரேபியா தூதர் முன்னிலையில் நடந்துள்ளது.

தூதரகத்தினுள் கொலை நடந்தால் தானும் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய அவர் அதனை வெளியே சென்று செய்யுமாறு கூறுகிறார். மற்றொரு நபர் அவரை மிரட்டுகிறார். நாங்கள் கைப்பற்றியுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளன’’ என தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்எச்சரித்தார். சவுதியை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகளும் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது.

ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேலும், சவுதி மன்னரை சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ட்ரம்ப் அனுப்பி வைத்தார். இதனால் சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. கோபத்தை தணிக்கும் முயற்சியாக பாம்பியோ சவுதி அரேபியா சென்று பேச்சுவார்த்தை நடததினார்.

அதேசமயத்தில் அமெரிக்காவின் கோபத்தை தணிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு சுமார் 1630 கோடி ரூபாயை சவுதி அரேபியா உதவி நிதியாக அளித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாம்பியோ ரியாத் வந்த நாளில், சவுதி அரேபியாவால், அமெரிக்காவுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பத்திரிகையாளர் ஜமால் படுகொலையில் ட்ரம்ப் உறுதியாக இல்லாமல், சவுதி அரேபியாவிடம் பணம் பெறும் நேரம் இதுதானா? என அந்த பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. சவுதி பணம் அனுப்பியதற்கும், பாம்பியோ அங்கு சென்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Read more...

பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழக்குகின்ற நாடாகவும் மாறியுள்ளது என குற்றஞ்சுமத்துகின்றார் பா. உ விமல் வீரவன்ச.

ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

இதில் வியப்பு யாதெனில் தனது தந்தையை கொன்றவர்களுக்கு நஷ்டஈடு வழங்கு என பாராளுமன்றில் கை உயர்த்தியுள்ளார் சஜித் பிறேமதாஸ. அதையேதான் நவின் திஸாநாயகவும் செய்துள்ளார்.

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. அச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் மனித உரிமைகள் சங்கங்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறாயின் குறித்த சட்டமானது பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்பது எனது கருத்து.

Read more...

முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.

இன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலிருந்து சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.

காதரின் வீட்டிலிருந்து அனுமதிப்பத்திரமற்ற மூன்று துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் எம்பி 5 ரக துப்பாக்கி ஒன்று, ரி 56 ரக துக்பாக்கி ஒன்று , றிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று என்பனவே கைது கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களாகும்.

தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் புலிகளின் ஆயுதங்கள் உண்டு என முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடு இலங்கையில் பெருகிவருகின்றது என்றும் அவர்கள் இங்கே ஆயுதங்களை குவிக்கின்றனர் என்றும் பெரும்பாண்மையினத்தை சேர்ந்த அமைப்புக்கள் பல கோஷமிட்டு வந்த நிலையில் இவ்வாயுத மீட்பும் கைதும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக எம்பி 5 ஆயுதங்கள் பிரபுக்கள் பாதுகாப்புக்காக இறக்குமதி செய்யப்படுகின்றவை. அவை யுத்தத்திற்கு பயன்படுத்தப்படாக ஆயுதங்கள் அந்தவகையில் அவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு தப்பியோடிய இராணுவத்தினரிடமிருந்து கொள்வனவு செய்து கொண்டதாக கருத முடியாது. மறுபுறத்தில் குறித்த ரக ஆயுதங்களை புலிகளியக்கத்தினர் பயன்படுத்தவில்லை என்றும் நம்பப்படுகின்றது. அவ்வாறாயின் இவ்வாயுதம் எங்கிருந்து யாரால் எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கான பதில் சில பல முடிச்சுக்களை அவிழ்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.




Read more...

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புதிய தொழுகை அறை இல்லையாம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாயல் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மறுப்புத் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளிவாசல் அமைப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை செய்வதற்கு பிரத்தியேக அறை ஒன்று ஏலவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எல்லா மதத்தவர்களும் தமது சமய அனுஷ்டானங்களை முன்னெடுக்க பொதுவான அறை ஒன்று ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. வைத்தியசாலை வளாகத்துக்குள் ஆரம்பம் முதலே இந்து மற்றும் கிருஸ்தவ ஆலயங்கள் உள்ளன. அவை தவிர்ந்த எந்தவொரு மத ஸ்தலமும் அமைப்பதற்கு வைத்தியசாலை கட்டட அமைவிடவரைவில் இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே உண்மைக்கு மாறான மற்றும் இன மதங்களை வேறுபடுத்தல் தொடர்பில் வெளியாகும் தகவல்களை முற்றாக நிராகரிக்கின்றேன். வைத்தியசாலையில் பிரத்தியேகமாக அறை ஒன்று ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளிவாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், வைத்தியசாலை வளாகத்துக்குள் பள்ளி வாசல் ஒன்றை புதிதாக அமைப்பதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்ள்ளதாகவும் இதுதொடர்பில் சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் பைசல் ஹாசிம் வைத்தியசாலைப் பணிப்பாளராகிய என்னிடம் பேசியிருந்தார் என்றும் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையலல என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அங்குள்ள வைததியசாலை ஊழியர்கள் பள்ளி வாசல் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்படுமாகவிருந்தால் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு ஆலயத்தை அகற்றுவதற்காக கல்முனை நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை கல்முனை மாநகர சபை முதல்வர் தாக்கல் செய்துள்ளமை குறித்தும் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

எனினும் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட்ட சட்டவிரோதமான கட்டடம் என குறிப்பிட்டே இந்த சிறு ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் இந்து கோவில், இடிக்க உத்தரவிட கோரி மாநகர முதல்வர் றஹீப் வழக்கு

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் கட்டப்படுகின்ற இந்து ஆலயத்தை இடிக்க உத்தரவிட கோரி கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றஹீப் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

இவரின் சமர்ப்பணம் கல்முனை மேலதிக நீதிவான் பயாஸ் ரஸாக் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை செவிமடுக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டிடம் இது என்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கையளித்து உள்ள அதிகாரத்தின்படி இக்கட்டிடத்தை இடிக்க கோருகின்ற உரிமை அவருக்கு உள்ளது என்றும் முதல்வர் றஹீப் சார்பாக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சட்டவிரோத கட்டிடத்தின் நிர்மாணத்தை ஆட்சேபித்து இவரால் அனுப்பப்பட்ட இரு கடிதங்களுக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் பதில் விளக்கம் தரப்படாத நிலையிலேயே நீதிமன்றத்தை நாடி வந்து உள்ளார் என்றும் சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவரின் சமர்ப்பணத்தில் கூறப்பட்ட விடயங்களில் திருப்தி கண்டு உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. குறிப்பாக இவருக்கு உள்ள சில அதிகாரங்களின்படி இவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் உதசீனம் செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் வந்து உள்ளார் என்று கண்டு கொண்டது.

இருப்பினும் இக்கட்டிடம் ஏன் இடிக்கப்பட கூடாது? என்று ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க தமிழ் பிரிவு பிரதேச செயலாளருக்கு இரு வார கால அவகாசம் வழங்குவதாக அறிவித்து இதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ் பிரதேச செயலாளர் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பித்தது.

கல்முனை மாநகர முதல்வரை ஆதரித்து சட்டத்தரணிகளான ரொஷான் அத்தார், முஹைமீன் காலித் , அன்ஸார் மௌலானா ஆகியோரும் ஆஜரானார்கள்.

ஆனால் கல்முனை பிரதேச செயலகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தொடர்பாகவோ அன்றில் குறித்த கட்டிடமானது இந்துக்களின் ஆலயமாகவுள்ளதால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் என வாதிடுவதற்காக இதுவரை எந்த தமிழ் சட்டத்தரணிகளோ, அன்றில் அரசியல் கட்சிகளோ தமது சட்டத்தரணிகளை முன்நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, October 17, 2018

கிளிநொச்சியில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் , மக்கள் அவலம் !

மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மை நாட்களாக கிளிநாச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்புக்கள் இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்சார சபையினால் முறையாக காலத்திற்கு காலம் மின் வாசிப்பு பட்டியல் வழங்கப்படாதவர்கள் இவ்வாறான செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் வாசிப்பு மாதத்தின் குறித்த காலப்பகுதிக்குள் வாசிக்கப்பட்டு மின்பாவணைக்கான கட்டண விபரம் மக்கள் மத்தியில் கொடுக்கப்படாது, வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்படுவதால் மக்கள் சாதாரணமாக செலுத்த வேண்டிய தொகைக்கு மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறான மிக நெருக்கடியான சூழலி்குள் இலங்கை மின்சார சபையின் மக்களை இழுத்து சென்றுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக மின் வாசிப்பாளர்கள் இல்லாமையினால் மின் பாவணை சிட்டை வழங்க முடியவில்லை என தெரிவித்த மின்சார சபையினர், எவ்வித முன்னறிவித்தல் துண்டு (ரெட் நோட்டிஸ்) விநியோகிக்காது அவசர அவசரமாக குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டமை மக்களை மேலுமொரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சில வறிய குடும்பங்களிற்கு பத்தாயிரத்திற்கு அதிக தொகை கட்டணமாக கிடைத்துள்ள நிலையில் அவற்றை செலுத்த முடியாது மீண்டும் கடன் சுமைக்குள் மக்களை இலங்கை மின்சார சபையினர் தள்ளியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை புதிய மின்பாவணைக்கான இணைப்புக்கள் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். தமக்கான புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியுள்ள போதிலும் இதுவரை இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மின் துண்டிப்பு செய்வதில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர், புதிய இணைப்புக்களை வழங்குவதற்கு பின்னடிப்பது தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல குடும்பங்கள் புதிய மின் இணைப்புக்களிற்காக பணத்தை செலுத்தி காத்திருக்கும் அதேவேளை, அவ்வாறான இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு அளவீடு செய்து கட்டணம் தொடர்பில் அறிவித்தலை பெற்றுக்கொள்வதற்காக பல விண்ணப்பதாரிகள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவ்வாறான இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு கடந்த காலங்களில் ஏழை மக்களிடமிருந்து தலா 1000 ரூபா பெறப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சியில் உள்ள பிரதான மின்பொறியியலாளரிடம் முறையீடு செய்தபோது அவ்வாறு பணம் வாங்கிய சந்தர்ப்பங்கள் இருந்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், நாங்கள் அவ்வாறு பணம் எதுவும் பெறுவதில்லை எனவும் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிடம் விண்ணப்ப படிவம் கையளித்து 2 வாரத்தில் அளவீடு செய்யப்பட்டு கட்டண தொகை தொடர்பில் விண்ணப்பதாரிக்கு வழங்கப்படும் எனவும், அவர் பணம் செலுத்தி 2 வாரங்களிலேயே அவர்களிற்கான புதிய இணைப்புக்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். எது எவ்வாறாயினும் புதிய இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குடிமகன் 1 மாதம் காத்திருக்க வேண்டிய நிலையை இலங்கை மின்சார சபையின் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் கவலை அடைவதாகவும், இணைப்புக்களை துண்டிப்பதற்கு இவ்வாறான கால அவகாசங்களை வழங்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இவ்வாறான இடையூறுகளை செய்வதுபோன்று தாம் சந்தேகிக்க வேண்டி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி பொது சந்தையில் நான்கு கடைகளிற்கு ஓரு இணைப்பு என வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தனித்தனியே வழங்காது இணைத்து வழங்கியமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு கடைகளும் வெவ்வேறு மின் பாவணையை மேற்கொள்வதனால் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான இணைப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொது சந்தையிலும் பெருந்தொகை பாவணை கட்டணம் குறிக்கப்பட்டு எவ்வித பாவணை சிட்டை வழங்கப்படு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சார சபையினரின் பொறுப்பற்ற இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர் என்பதுடன், முறைப்பாடு செய்யும் மக்களிற்கு பொருத்தமான பதில்கள் வழங்கப்படுவதில்லை என்பது தொடர்பிலும் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் மாகாணத்திற்கு பொறுப்பாக உள்ள மின்சார சபை பொறுப்பதிகாரி ஆராய்ந்து முறையான சேவையை மக்கள் உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளவும், மாதாந்த மின்வாசிப்பு முறையாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குாரிக்கை விடுக்கின்றனர்.

Read more...

வட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2 -வை எல் எஸ் ஹமீட்-

இந்த வழக்கின் சட்டப்பின்னணி

1987ம் ஆண்டைய 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 37(1) கீழ் ஜனாதிபதி அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைப்பதற்காக பிரகடனம் வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கு இணைவதற்கான பிரகடனத்தை அன்றைய ஜனாதிபதி விடுத்திருந்தார்.

மேற்படி சட்டத்தின் 37(1)(b) இன் பிரகாரம் , வட கிழக்கைப் பொறுத்தவரை ஆயுதங்கள் களையப்பட்டு யுத்த நிறுத்தம் ஏற்பட்டாலேயொழிய அம்மாகாணங்களின் இணைப்புக்கான பிரகடனத்தை ஜனாதிபதி வெளியிடக்கூடாது.

இந்த ஆயுதக்களைவு நிபந்தனை பூர்த்தி செய்யப்படாததால் ஜனாதிபதியின் இணைப்புக்கான பிரகடனம் பிழையானது. அதேநேரம் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த ஆயுதக்களைவு இடம்பெற்றிருக்க வேண்டும்; என்ற 37(1)(b) இல் தெரிவிக்கப்பட்ட நிபந்தனை அவசரகால சட்டத்தின் கீழ் ‘ ஆயதக்களைவு தொடங்கியிருந்தால் எனத் திருத்தப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகாது .

பிரிவு 37(1)(a) இன் கீழ் எந்த மாகாணங்கள் இணைக்கப்படுவதற்காக ஜனாதிபதியால் பிரகடனம் வெளியிடப்படுகின்றதோ அம்மாகாணங்களில் 31.12.1988 இற்குமுன் அம்மாகாணங்கள் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்; என 37(2)(a) கூறுகின்றது.

அதேநேரம், 37(2)(b) காலத்திற்கு காலம் இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப்போடுகின்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. இந்த அதிகாரத்தைப் பாவித்தே ஜனாதிபதிகள் சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திப்போட்டு வந்தனர்.

ஆயதக்களைவு நடைபெறாமல் இணைத்தது பிழை. ஆயுதக்களை நடைபெற்றால் என்பது தொடங்கினால் என்று வர்த்தமானி மூலம் திருத்தியது செல்லுபடியாகாது; எனவே சட்டப்படி வட கிழக்கு இணைக்கப்படவில்லை. இணைக்கப்படாத வட கிழக்கிற்கு “இணைப்புத் தொடர்ந்திருக்க வேண்டுமா?” என அறிவதற்காக ஒரு சர்வஜனவாக்கெடுப்பு பிற்போடப்படுவதும் அதைக் காரணமாகவைத்து கிழக்கில் தேர்தல் நடாத்தாமல் இருப்பதும் வழக்காளிகளுக்கும் அவர்களைப்போன்றவர்களுக்கும் சட்டரீதியாக 13 வது திருத்தம் சரத்து 154A(2) இற்கமைய கிழக்குமாகாணத்தில் தமக்கென கூட்டப்பட்ட ஒரு மாகாணசபையைக் கொண்டிருக்கின்ற உரிமையை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது; என்ற வாதம் வழக்காளிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி H L de Silva வினால் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை மீண்டும் இலகுபடுத்தி சுருக்கமாக தருகின்றேன்.

ஜனாதிபதி இணைப்புக்காக விடுத்த பிரகடனம் பிழையானது. ஏனெனில் ஆயுதக்களைவு இடம்பெறவில்லை.

இணைப்பதற்கு ஆயுதக்களைவு இடம்பெறவேண்டும் என்ற சட்டத்தை வர்த்தமானி மூலம் ஆயுதக்களவு ஆரம்பித்தால் ( போதும்) என்று திருத்தியது செல்லுபடியாகாது . ( ஏன் செல்லுபடியாகாது என்பது பின்னர் வரும்)
எனவே, வட கிழக்கு ஒருபோதும் இணைக்கப்படவில்லை.

இணைக்கப்படாத மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருக்கவேண்டுமா? என்பதை அறிவதற்கான சர்வஜனவாக்கெடுப்பே ஒத்திப்போடப்பட்டது.

இணைக்கப்பட்ட மாகாணங்களுக்கான சர்வஜனவாக்கெடுப்பை ஒத்திப்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் இணையாத மாகாணங்களுக்கு எவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது அல்லது ஒத்திவைப்பது.

எனவே, கிழக்கு மாகாணசபை ஒருபோதும் வடமாகாணசபையுடன் இணைக்கப்படவுமில்லை. கிழக்கு மாகாணசபைக்கு ஒருபோதும் தேர்தல் நடாத்தப்படவுமில்லை. அது கூட்டப்படவுமில்லை.

இதனால் வழக்காளிகளினதும் இதேபோன்ற ஏனையவர்களினதும் உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

தொடரும்

இக்கட்டுரைகளின் தொடரை தொடர் கட்டுரைகள் பகுதியில் காணலம்.

Read more...

Tuesday, October 16, 2018

சர்வம் டாலர்மயம்' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல் மு. நியாஸ் அகமது

கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான்.

குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர். இவர்களை விசாரித்ததில், மெக்சிகோ புறநகர் பகுதியில் உடல் உறுப்புக்காக இருபது பேரை இவர்கள் கொலை செய்தார்கள் என தெரியவந்தது. உடல் உறுப்புகளை யாருக்கு விற்றார்கள், இதன் பின் உள்ள வலைப்பின்னல் என்ன? என்ற நோக்கில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இது ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவமென சுலபமாக கடந்து சென்று விட முடியாது. ஆம், உலகெங்கும் இது நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. அவ்வாறான சம்பவங்கள், அதற்கு பின்னால் இருப்பவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என விரிவாக விவரிக்கிறது பத்திரிகையாளர் ஸ்காட் கார்னி எழுதியுள்ள 'சிவப்புச் சந்தை' புத்தகம்.

'சர்வம் டாலர்மயம்'

புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்காட் கார்னி பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். பிபிசி உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் இவரது கட்டுரை வெளியாகி இருக்கிறது. இவர் உலகெங்கும் விரவி இருக்கும் உடல் சந்தை குறித்து ஆராய்ந்து, தன் புலனாய்வில் திடுக்கிட வைத்த விஷயங்களை புத்தகமாக தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த புத்தகம் உடல் சந்தை குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகிறது.

கண், எலும்பு மஜ்ஜை, நுரையீரல், கிட்னி, விந்து, கருமுட்டை, முடி - இவற்றுக்கெல்லாம் நீங்கள் என்ன பொருள் கொண்டிருப்பீர்கள் என எனக்கு தெரியாது. ஆனால், உடலுறுப்பு திருடர்கள், தரகர்களை பொருத்தவரை இவை அனைத்தும் 'டாலர்கள்'. ஆம், முடி முதல் பாதம் வரை சர்வமும் டாலர்மயம்தான் என விளக்குகிறது அந்த புத்தகம்.

'கிட்னிவாக்கம்'

கிறிஸ்துமஸுக்கு மறுநாள், 2004 ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிலநடுக்கும் ஏற்பட்டு சென்னையை சுனாமி தாக்கியபோது, அனைவரும் பதபதைத்து போனார்கள். சென்னைக்கு சுனாமி புதிது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சுனாமி என்ற வார்த்தையே புதிது. ஆனால், அந்த சுனாமியை லாபம் கொழிக்கும் வாய்ப்பாக உடல் உறுப்பு தரகர்கள் பார்த்தார்கள் என விவரிக்கிறார் ஸ்கார்ட் கார்னி.

அதாவது ஆழிப்பேரலையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் எளிய மக்களின் சூழலை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை அறுவடை செய்தார்கள். வாரத்திற்கு இரண்டு பேர் கிட்னியை விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதியே கிட்னிவாக்கம் என பெயர் பெற்றது என்று தனது 'சிவப்புச் சந்தை' புத்தகத்தில் விவரிக்கும் ஸ்காட், அப்படி விற்பனை செய்தவர்களும் ஏமாற்றப்பட்டார்கள் என்கிறார்.

"மூன்றாம் உலகில் தேவையான உடலுறுப்புகள் பெருமளவில் கிடைப்பதும் முதல் உலகில் கடும் வேதனை தரும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் இருப்பதும் உடலுறுப்புத் தரகில் ஈடுபடுவதை ஆதாரம் தரும் தொழிலாக்கியுள்ளன" என்று புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

'பிணமும் பணம்தான்'

கிட்னி திருட்டு நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டதுதான். அது குறித்து பல திரைப்படங்களும் வந்துள்ளன. ஆனால், பிணம் மூலமும் பணம் ஈட்டுகிறார்கள் என்ற விஷயம் ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.

கொல்கத்தாவில் கல்லறை திருடர்கள் பற்றி இவர் குறிப்பிட்டு இருப்பது, விறுவிறுப்பான ஒரு சினிமாவுக்கான கதை.

வெளிநாடுகளில் ஆராய்ச்சிக்காக, மருத்துவ தேவைக்காக அதிக அளவில் எலும்பு மஜ்ஜைகள் தேவைப்படுகின்றன. ஆனால், மேற்கத்திய நாடுகளில் கடுமையான சட்டத் திட்டங்கள் இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளை தங்களுக்கு தேவையான எலும்புகளை கொள்முதல் செய்யும் சந்தையாக அவை பார்க்கின்றன இங்கிருந்து எப்படி எலும்புகள் கடத்தப்படுகிறது, அதற்கு பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லறை திருடர்கள் எனப்படுவோர் யார் என்பதை உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது இந்த புத்தகம்.

மருத்துவ ஆய்வு சோதனைகளில் எப்படி மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் கை செலவுக்காக இதில் சிக்குகிறார்கள். எப்படி எந்த இரக்கமும் இல்லாமல் கருவுற்ற பெண்கள் மீது அவர்கள் சம்மதமே இல்லாமல் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.

அதில் ஒரு பத்தியை இங்கே பகிர்கிறேன்,

"2004இல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி, பெங்களூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட பயோடெக் உயிர்த் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆய்வு செய்கிறார். அந்நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட இன்சுலின் மருத்துவ ஆய்வு சோதனை நடத்தியது. அந்த நிகழ்வில் எட்டு நோயாளிகள் மரணமடைந்தனர். அந்த நிறுவனங்கள் ஆய்வில் பங்கெடுத்தவர்களின் அறிவார்ந்த சம்மதத்தைக் கூட கேட்டுப் பெறவில்லை" என்று ஸ்கார்ட் கார்னி எழுதுகிறார்.

அதற்கான காரணமாக, "மூன்றாம் உலக உயிர்களின் மதிப்பு ஐரோப்பிய உயிர்களின் மதிப்பைவிட மிகவும் குறைவானது.காலனித்துவம் குறித்த எல்லாமே இதுதான்" என்று விஸ்கான்ஸின் - மேடிசன் பல்கலைக்கழக மருத்துவ வரலாற்று வருகைப் பேராசிரியரான சிறீரூப பிரசாத் கூறியதை மேற்கொள் காட்டுகிறார்.

'விந்து, கருமுட்டை மற்றும் முடி'

விந்து, கருமுட்டை, வாடகை தாய், இந்த வணிகத்தில் கோலூச்சும் சைப்ரஸ் நாடு என பக்கத்திற்கு பக்கம் தரவுகளுடன் மனித உடல் உறுப்பு சந்தை குறித்து விவரிக்கும் இந்த புத்தகம், இந்திய மனித முடியின் உலகளாவிய சந்தை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

திருமலையில் நடக்கும் முடி ஏலம் குறித்த ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. நடு இரவு வரை நடந்த அந்த ஏலத்தில் அதிக உறுதியான இரு கிலோ முடி 193 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

உலகளாவிய உடல் வணிகத்தை, அதன் பொருளாதாரத்தை, பின்னணியில் இருப்பவர்களை, உடல் உறுப்பு தானத்தில் இருக்கும் சட்ட குறைபாடுகளை தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம்.

பிபிசி தமிழ்


Read more...

பெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்!

முசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முசலி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பிரசேத செயலருக்கு எதிரான பல்வேறு பதாதைகளை தாங்கி நின்றதுடன் அவற்றில் „பிரதேச செயலாளரே Don't ask for sexual Bribe" என்ற பதாதையும் காணப்பட்டது.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தில் பிரதேசச் செயலாளர் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியல் வாதிகளின் சொல் படி குறிப்பிட்ட நபர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாகவும், மண் கொள்வனவு செய்வதற்காக அனுமதி பத்திரம் பாகுபாடு காட்டி வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

-மேலும் பிரதேசச் செயலாளர் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு, மக்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாகவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முசலி மக்கள் மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயில் வரை சென்றனர்.

-பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

-மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,,,

ஏற்கனவே குறித்த பிரதேசச் செயலாளர் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முசலி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த குழுவினர் உடனடியாக அங்கு சென்று பிரதேசச் செயலாளாரிடம் விசாரனைகளை மேற்கொள்வார்கள்.

நீங்கள் என்னிடம் சமர்ப்பித்த மகஜர் உடனடியாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com