Tuesday, October 16, 2018

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு நாளை முதல் விசேட அதிரடிப்படையினர்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக நாளை (17) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

நேற்றைய தினம் முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட இருந்த போதிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அதனை பிற்போட தீர்மானித்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் வெலிக்கட மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

Read more...

நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!

நமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

முன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.

பொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.

1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீ.ல.சு.கட்சி இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் – சமசமாஜக் கட்சிகளுடன் சேர்ந்து பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபொழுது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது பெரும் அடியாக விழுந்தது. ஏனெனில் அந்த அரசாங்கம் பல முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி மூலம் 1971இல் எதிர்ப்புரட்சி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அதில் தோல்வி கண்டன.

1972இல் சிறீமாவோ தலைமையிலான அரசு இன்னொரு முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கையாக, இலங்கைக்கு பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து இலங்கையைக் குடியரசாக்கியது. புதிய குடியரசு யாப்பில் சிறீமாவோ அரசு தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதைச் சாக்காக வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் இனவாதத் தலைமையை பிரிவினைவாதப் பாதையில் தூண்டிவிட்டன. அது 30 வருடப் போராக வளர்ந்து நாட்டை சகல வழிகளிலும் சீரழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இந்த விடயத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிந்த அரசு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகளின் மிகுந்த பண – ஆயுத பலத்துடன் தமிழ் சமூகத்தில் இருந்த ஜனநாயக, முற்போக்கு மற்றும் மாற்றுக் கருத்துச் சக்திகளை அழித்து, தனிப்பெரும் பாசிச – மாஃபீயா சக்தியாக வளர்ந்து, எவராலும் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனக் கணிக்கப்பட்ட புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிர்மூலமாக்கியது. புலிகளின் பாசிசத் தலைவன் பிரபாகரனைக் காப்பாற்ற ஏகாதிபத்திய சக்திகள் எடுத்த முயற்சியையும் கூட மகிந்த அரசு அனுமதிக்கவில்லை. இது மகிந்த அரசு மீது ஏகாதிபத்திய சக்திகளை சீற்றமடைய வைத்த முக்கியமான விடயமாகும்.

அடுத்ததாக, போர் முடிவுற்றதின் பின்னர் நாட்டைச் சுபிட்சப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு மகிந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போட்டு வந்தன. ஏனெனில் போர் முடிவுற்றுவிட்டதால் நாடு துரிதகதியில் வளர்ச்சி அடையும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படி வளர்ச்சி அடைந்தால் சிறீ.சு.கட்சி தலைமையிலான அரசை அடுத்த 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த முட்டுக்கட்டைகளைப் போட்டன.

ஆனால் அவர்களது இந்த நடவடிக்கை பயனளிப்பதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது. இலங்கை தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எப்பொழுதுமே ஆபத்தான வேளைகளில் உதவிக்கு ஓடிவந்த சீனாவின் உதவியை நாடியது. இது ஏகாதிபத்திய சக்திகளால்சகிக்க முடியாத இன்னொரு முக்கியமான விடயமாகும்.

புலிகளை அழித்தது, சீனாவுடன் நெருங்கிச் சென்றது, இரண்டுமே இலங்கையில் மகிந்த அரசை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுப்பதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதன் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம்.

இதற்கான புறச்சூழலை முதலில் உருவாக்கினார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி மகிந்த அரசு மீது கடுமையான போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நெருக்கடி கொடுத்தார்கள். உள்நாட்டைப் பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகின்றது, வடக்கு கிழக்கில் இராணுவ அட்சி நடைபெறுகின்றது, நாடு சிங்களமயமாக்கப்படுகின்றது, போன்ற பல பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

இருப்பினும், வழமையான தமது நேச சக்தியான ஐ.தே.க. மூலம் மகிந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று கண்ட ஏகாதிபத்திய சக்திகள், இம்முறை புதிய யுக்தியொன்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ச மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர் மூலம் சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக்கினர்.

அவருக்கு ஆதரவாக வழமையான சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளான ஐ.தே.கவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரவாகச் செயல்பட வைத்தனர். அத்துடன் மகிந்த அரசில் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் – மலையகக் கட்சிகளையும் இணைய வைத்தனர். இவர்கள் தவிர, வழமைக்கு மாறான ஒரு ஐந்தாவது அணியாக (Fifth Column) இடதுசாரி இயக்கங்களில் இருந்த சில ஓடுகாலிகளையும், ‘மனித உரிமை’ அமைப்புகளையும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆக்கினர். இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் மகிந்த தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத, தேசபக்த அரசுக்கு முடிவு கட்டினர்.

ஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, ‘நல்லாட்சி’யின் இலட்சணத்தை கடந்த மூன்று வருட காலத்தில் நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். அந்த உணர்வின் வெளிப்பாட்டை கடந்த பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டு எதிரணியை அமோக வெற்றிபெற வைத்ததின் மூலம் காட்டியும் விட்டனர்.

‘நல்லாட்சி’ ஆட்சியாளர்களால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன். ரூபாயின் மோசமான மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதின் மூலம் மக்களை வாழ முடியாத நிலைமைக்கும் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ‘நல்லாட்சி’யில் ஜனாதிபதி – பிரதமர் பதவிகளை வகிப்பவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் தினசரி அடிதடியும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஏடான ‘எக்கோனமிஸ்ற்’ (Economist) சஞ்சிகையும் வெளிப்படுத்தியுள்ளது. இதே சஞ்சிகைதான் 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு “மகிந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது?” என்று தலைப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர். அற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் கொழும்பிலிருந்து ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான எம்.ஏ.சுமந்திரன், அடுத்து வரும் தேர்தலிலும் 2015இல் ஏற்பட்ட அரசியல் கூட்டு தொடர வேண்டும் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

எனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமையாகும்.

“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்.



வானவில் 93

Read more...

வட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம். வை எல் எஸ் ஹமீட் -பாகம் 1

வழக்காளிகள்:
1. N W M ஜயந்த விஜேசேகர, கந்தளாய்
2. A S முஹம்மது புகாரி, சம்மாந்துறை
3. வசந்த பியதிஸ்ஸ, உகனை

பிரதிவாதிகள்:
1. கௌரவ சட்டமா அதிபர்
2. வட கிழக்கு மாகாணசபை ஆளுநர்
3. தேர்தல் ஆணையாளர்

இடையீட்டு வாதிகள் ( Intervenient petitioners)
1. கே தம்பையா, திருகோணமலை
2. வெற்றிவேல் ஜயனாதன், அம்பாறை
3. சிறிதுங்க ஜயசூரிய
4. ந தில்லையம்பலம் , அம்பாறை

நீதிபதிகள்

1. கௌரவ சரத் என் சில்வா, பிரதம நீதியரசர்
2. கௌரவ நிஹால் ஜயசிங்க, நீதியரசர்
3. கௌரவ என் கே உடலாகம, நீதியரசர்
4. கௌரவ ஏ ஆர் என் பெர்நாந்து நீதியரசர்
5. கௌரவ ஆர் ஏ என் ஜி அமரதுங்க, நீதியரசர்

சட்டத்தரணிகள்
ஜனாதிபதி சட்டத்தரணி எச் எல் டி சில்வா
எஸ் எல் குணசேசகர
கோமின் தயாசிறி
மனோலி ஜினதாச ஆகியோர் வாதிகள் சார்பில்

பி ஏ ரத்னாயக்கா, ஜனாதிபதி சட்டத்தரணி, Add. Solicitor General
அனில் குணரத்ன, D S.G ( Deputy Soicitor General)
A. ஞானதாசன் D S G
இந்திக டெமுனி டி சில்வா S.S.C ( senior state counsel)
ஜானக டி சில்வா S.S.C
மிலின்த குணதிலக, S.S.C
நெரின் புள்ளே S.S.C ( இவர்கள் அனைவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள்), பிரதிவாதிகள் சார்பில்

இடையீட்டு வாதிகள் சாரபில்

K. கனக ஈஸ்வரன் PC
M A சுமந்திரன்
L ஜெயக்குமார்
பற்றி வீரக்கோன்
பேர்சி விக்ரமசேகர
லால் விஜேநாயக்க

இந்த வழக்கின் அடிப்படை அரசியலமைப்பின் சரத்து 12(1) வழங்கிய ‘ சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை’ தமக்கு மறுக்கப்பட்டுள்ளது; என்பதாகும்.

சட்டமாஅதிபர் தரப்பின் பலமான ஆட்சேபனை

பிரதிவாதிகளின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவர்களால் முன்வைக்கப்பட்ட இரு பிரதான ஆட்சேபனைகள்:

முதலாவது, இது ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு. இது சரத்து 126 இன் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகிறது. அச்சரத்தின் பிரகாரம் அவ்வாறு அடிப்படை உரிமை மீறப்பட்டால் அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவேண்டும். ஆனால் இவ்வழக்கு காலம் தாழ்த்தி தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் இவ்வழக்கில் அவர்கள் நிவாரணம் கோரமுடியாது; என்பதாகும்.

இரண்டாவதும் அதிமுக்கியமானதுமான ஆட்சேபனை:

Immunity

அரசியலமைப்பின் சரத்து 35 ஜனாதிபதிக்கு immunity ஐ வழங்குகின்றது. அதாவது 19வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்வரை ஜனாதிபதி தனிப்பட்ட முறையிலோ அல்லது தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்தோ செய்கின்ற எந்தவொரு விடயத்தையும் நீதிமன்றில் அவருடைய பதவிக்காலத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.

அதேவேளை, ஜனாதிபதி சில அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருக்கும்போது அவர் அவ்வமைச்சுகளுக்கு அமைச்சர் என்ற வகையில் அவரது செயற்பாடு தொடர்பாக அடிப்படை உரிமை மீறப்பட்டால் அவற்றிற்கெதிராக வழக்குத் தொடர முடியும். ஆனால் ஜனாதிபதிக்குப் பதிலாக அவ்வழக்குகளில் சட்டமாஅதிபரே பிரதிவாதியாக குறிப்பிடப்பட வேண்டும்.

19 திருத்தத்தின் பின், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து செய்கின்ற விடயங்களிலும் ஒருவருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் ஜனாதிபதியின் அச்செயற்பாட்டிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியும்; ஆனாலும் சட்டமாஅதிபரைத்தான் பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும்.

சுருங்கக்கூறின், 19 இற்கு முன்; ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத்தொடர முடியாது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உயர்நீதிமன்ற நீதியசராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நியமனம் செய்யப்பட்டபோது பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது; என்றே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இந்த அடிப்படையில்தான் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாட்டிற்கெதிராக வழக்குத்தொடுக்க முடியாது; இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்; என்று வாதாடினார்.

இது மிகப்பலமான ஆட்சேபனையாகும். ஏற்கனவே உயர்நீதிமன்றின் பெரும்பான்மை நீதிபதிகளால் மேற்கூறிய வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம்.

இவ்வளவு பலமான ஆட்சேபனையை எவ்வாறு நீதிமன்றம் மறுத்து இந்த வழக்கை ஏற்று வட கிழக்கைப் பிரித்தது; என்பது மிகவும் சுவாரசியமானது. அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

( தொடரும் )

குறிப்பு: இது சட்டமாணவர்களுக்கும் பிரயோசனமாக அமையும் என்பதால் சற்று நுணுக்கமான விடயங்களுக்குள்ளும் சென்று இதனை எழுத விழைகின்றேன் இன்ஷாஅல்லாஹ். ஏனையவர்களும் சற்று ஊன்றிவாசித்தால் புரிந்துகொள்ளலாம்

இக்கட்டுரைகளின் தொடரை தொடர் கட்டுரைகள் பகுதியில் காணலம்.

Read more...

இராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன

கடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

நாவிதன்வெளியை சேர்ந்த இளையோர்களை இவரின் அக்கரைப்பற்று அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்து பேசியபோதே பியசேன இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

யுத்தத்தில் எந்த தரப்பும் பூ பறித்து கொண்டு இருப்பதில்லை. ஆகவே இராணுவத்தை தண்டிக்க வேண்டும், முன்னாள் புலிகளை மன்னிக்க வேண்டும் என்று தமிழர்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒருபோதும் விடுதலையை பெற்று தராது என்பதே யதார்த்தமான நிலைவரம் ஆகும்.

ஆகவேதான் இராணுவம் போர் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் வரை சென்று குரல் கொடுக்கின்ற சம நேரத்தில் உள்நாட்டில் முன்னாள் புலிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் கோருவது முற்றிலும் அர்த்தம் அற்ற விடயம் என்று நாம் அழுத்தி கூறுகின்றோம்.

ஏனென்றால் அரச படைகள் தண்டனை பெற்று உள்ளே செல்வதையும், போராளிகள் மன்னிப்பு பெற்று வெளியே வருவதையும் எந்த அரசும் கற்பனையில்கூட அனுமதிக்க மாட்டாது.

நாட்டுக்காக போராடிய இராணுவத்தை கதாநாயகர்களாகவே அரசாங்கமும், பெரும்பான்மை சமூகமும் பார்க்கின்றன. தனிநாட்டுக்காக போராடிய விடுதலை புலிகளை அரசாங்கமும், பெரும்பான்மை சமூகமும் மாத்திரம் அன்றி சர்வதேசமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றன. எனவே தமிழ் அரசியல் கைதிகள் என்கிற மாயாஜால வார்த்தை பிரயோகம் முன்னாள் புலிகளுக்கு எந்த விமோசனத்தையும் பெற்று தராது.

மறப்போம், மன்னிப்போம் என்கிற பரந்து விரிந்த கோட்பாட்டை தமிழர் தரப்பு வரித்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியும். மாறாக பிச்சைக்காரனின் புண்ணை போல பிரச்சினையை நீடிக்க வைத்து கொண்டு அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய தலைமைகளின் வழிமுறை மூலமாக தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை கிடைக்க போவதே இல்லை.

Read more...

Monday, October 15, 2018

அரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர். அவர்கள் நடைபவனியாக அனுராதபுரத்தை அடைந்தபோது, அவ்விடத்திற்கு வாகனத்தில் சென்றிருந்தார் கஜேந்திரன்.

இவர்களை முத்திக்கொண்டு அங்கு சென்றிருந்த த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசு உறுதியளித்துள்ளதாக கூறி கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாநோம்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை கஜேந்திரன் கோஷ்டிக்கு பெரும் ஆப்பாக அமைந்திருந்தது.

மாவையின் செயற்பாட்டால் படம் தோற்றுவிட்டது என்ற ஏமாற்றத்துடன் சிறைச்சாலை வாசலில் மாணவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு விரைந்த சிங்கள இளைஞர்கள் பல்கலைகழக மாணவர்களை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

அவர்கள் அவ்வாறு மிரட்டினார்களா? என்பதையும் என்ன பேசினார்கள் என்பதையும் இங்குள்ள காணொயில் காண முடிகின்றது.

பல்கலைகழக மாணவர்கள் அங்கு குழுமிநின்றபோது, வந்திறங்கிய பெருபாண்மையின இளைஞர்கள் இருவர், இங்கு வந்திருப்பவர்கள் புலிகள் சார்பாக வந்திருக்கின்றீர்களா? அன்றில் அரசியல் கைதிகள் சார்பாக வந்திருக்கின்றீர்களா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவ்வேளையில் எவரும் பதிலளிக்காமல் நிற்கின்றனர். அக்கேள்வி எழுப்பப்பட்டதும், கஜேந்திரன் மாணவர்களினுள் நுழைந்து ஒழிந்து கொள்வதை காணமுடிகின்றது.

எவரும் அக்கேள்விக்கு பதிலளிக்காத நிலையில் உங்களில் யாராவது புலிகள் சார்பாக வந்திருந்தால், புலிகள் சார்பாக நீங்கள் இங்கு வந்திருப்பதில் நியாயம் இருந்தால், உங்கள் நியாயம் தொடர்பில் வாருங்கள் பேசுவோம் என்று மீண்டும் அழைத்தனர். மாணவர்கள் எவரும் முன்வராதது தொடர்பில் அக்கறை கொள்ளத்தேவையில்லை காரணம் அதற்கான தைரியத்தை அவ்விடத்தில் அவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியாமையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் புலிகளின் காவலன்போல் தமிழர் மத்தியில் காட்டிக்கொள்ளும் கஜேந்திரன் ஏன் பதுங்குகின்றார்?

எவரும் முன்செல்லாத நிலையில் உங்களில் அரைவேக்காடுகள் அல்லாத எவரும் இங்கிருந்தால் புலிகள் சார்பாக முன்வாருங்கள் உங்கள் தரப்பு நியாயத்தை பேசுவோம் என்று மீண்டும் காரசாரமாக அழைத்தனர். அப்போதும் யாரும் செல்லவில்லை. அவ்வாறாயின் புலிகள் சார்பாக ஒரு சாதாரண இளைஞனுடன் பேச திராணியற்று நின்ற கஜேந்திரன் உண்மையில் அரைவேக்காடு என்பதை உறுதி செய்துள்ளாரா என தற்போது மக்கள் கேட்கின்றனர்.

யாவற்றிலும் கேவலாமான விடயம் யாதெனில், அரைவேக்காடுகள்போல் துடை நடுங்க கஜேந்திரன் போன்றோர் நிற்கையில், ஊடகவியலாளன் ஒருவன் முன்வந்து, அவ்விளைஞர்களுக்கு இவர்கள் கொண்டுவந்திருக்கும் பதாதைகளை பாருங்கள் அவர்கள் அரசியல் கைதிகள் சார்பாகவே வந்திருக்கின்றனர் என விளக்குகின்றார். ஆனாலும் அவர் என்ன விளக்குகின்றார் என்பதை உணராத கஜேந்திரன் அவ்விடத்தில் ஏதாவது கைகலப்புகள் வந்துவிட்டால் அடிவாங்கநேரிடுமோ என்ற என்ற அச்சத்தில் அந்த ஊடகவியலானை அவர்களுடன் கதைக்க அனுமதிக்காமல் அழைத்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராகும் விதத்தையும் கஜேந்திரனின் தொடைநடுங்கும் விதத்தையும் வீடியோவில் காணலாம்.



இங்கு மேலும் குறிப்பிடவேண்டிய இழிசெயல் யாதெனில், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை வைத்து அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பவே முயன்று வருகின்றனர். அந்த வரிசையில் புலிகள் கிள்ளுகின்றனர் நுள்ளுகின்றனர் என கொழும்பில் தஞ்சமைடந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவும் நடைபவனியில் கலந்து கொண்டிருந்தார்.


டக்ளஸ் கொழும்பில் முறித்து மூலையில் எறிந்திருந்த வீணையின் நரம்புகளை தற்போது முன்னாள் புலிகளை வைத்தே சீர் செய்துள்ளார். புனர்வாழ்விலுருந்து வெளியேறிய பயங்கரவாதிகளை தன்னுடன் அணைத்து வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து பற்றி அவரை விட்டு விலகியோடியுள்ள முன்னாள் ஈபிடிபி யினர் அம்பலப்படுத்துகின்றனர். டக்ளஸ் நடைபவனியில் கலந்து கொண்டதும் அனுராத புரத்திலிருந்து பயங்கவாதிகள் வெளியேறினால் அவர்களில் ஓரிருவரையாவது பிடித்துச்சென்று சிறிதர் தியேட்டரில் அடைக்க முடியும் என்ற நப்பாசையிலே அன்றி வேறேதுமாக இருக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளுக்கு பயந்து தங்களை பாதுபாப்புக்கு வைத்திருந்த டக்ளஸ் தேவானந்தால், தற்போது புலிகளை ஈபிடிபி யில் இணைத்துக்கொள்கின்றபோது அவ்வியக்கத்தில் தங்களால் இயங்கமுடியாது என பலர் வெளியேறியுள்ளமை இங்கு மேலும் சுட்டிக்காட்டவேண்டியதாகும்.



Read more...

‘சொர்க்கத்தில் பேய்கள்’: யாழ்ப்பாணம் முழு அளவிலான சுதந்திரத்துக்குத் தயாரா? ரங்க ஜயசூரிய

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்த ஜூட் ரத்தினத்தின் “சொர்க்கத்தில் பேய்கள்” என்கிற பdemonடத்தை திரையிடாமல் நீக்கியது. அதை நீக்குவது தொடர்பான முடிவு - தமிழ் போர்க்குணத்தின் படிப்படியான ஆனால் கணிக்கக்கூடியதான சீரழிவு அதன் சொந்த குணநலன்களை குலைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒன்று என்று அந்தப்படம் சித்தரிக்கிறது - தெற்கில் ஒரு முடக்கப்பட்ட எதிர்வினையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வடக்கில் நேர்மையான மற்றும் நீண்ட காலமாக திறமையான ஆர்வலர்கள் என்று நிரூபணமான ராஜன் கூல் போன்ற ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் அந்தப்படத்தினை தணிக்கை செய்ததை நியாயப்படுத்த முனைந்தார்கள்.

தெற்கில் உள்ள குடியியல் ஆர்வலர்களின் மௌனம், சில நபர்கள் மற்றும் சமூகங்கள் (மற்றவர்கள் அல்ல) பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு எச்சரிக்கை தூண்டப்பட வேண்டும் என்கிற பிரபலமான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இடதுசாரி மாணவர் ஆர்வலர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நிறுத்தப்படுவதை நியாயப்படுத்தி ஜனரஞ்சக மற்றும் தேசியவாதிகளின் எதிர்ப்புக்குரல் எழுப்புவதை இந்தக்கருத்து மேற்கோள் காட்டுகிறது. இதே கருத்து, ஐரோப்பாவில் இஸ்லாமிய ஆர்வலர்கள் பொது பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து தியாகிகள் முதல் புர்காஸ் வரை கண்காணிக்கப்படுவது போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பான இடத்தைக் கோருவதற்கு வழிகாட்டியுள்ளது.

ஜூட் ரத்தினத்தின் திரைப்படம் எல்.ரீ.ரீ.ஈ யிடம் இருந்த பெற்ற அறிவினை சவாலுக்கு உட்படுத்துவதால் எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்களுக்கும் மற்றும் தமிழ் தேசியவாத தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் முதலில் தமிழ் போர்க்குணத்தை சிங்களத் தலைமையிலான கொழும்பிலுள்ள மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிரான பிரதிபலிப்பாகச் சித்தரித்து அவர்களின் உணர்வுகளை புரியவைக்கிறது. எனினும் போர்க்குணத்தை வெளிப்படுத்துகையில் எல்.ரீ.ரீ.ஈ, ஏனைய குழுக்கள் மீது தனது முக்கியத்தை கட்டவிழ்த்துவிட்டு அதன் உட்பகை மிக்க வன்முறை வெறியாட்டத்தினால் அதன்மீதுள்ள பிரியத்தை புளிப்படையச் செய்துவிடுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசியவாதிகளினால் இந்த கசப்பான யதார்த்தத்தை உட்கொள்ள முடியாது. சமூகம் என்று அறியப்படுகின்ற ஒரு குழுவினரின் அழுத்தம் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்தப் படத்தை திரையிடுவதில் இருந்து நீக்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அது துயரமானது. எனினும் பல வழிகளில் அதை ஓரளவு புரிந்து கொள்ளவும் கூட முடிகிறது. யாழ்ப்பாணம் ஒருபோதும் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருந்தது கிடையாது, போர்க்குணம் எழுச்சி பெறுவதற்கு முன்பு கூட அப்படித்தான் இருந்தது. கொழும்புடன் குறைவான மோதல் அணுகுமுறையை ஊக்குவிப்பதைக்கூட அது மாற்றுக் கருத்துக்களால் அடக்கியது. இப்போதும் அது இல்லை - அரசாங்கத்தின் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பிரத்தியேகமான தமிழ் தேசியவாத சிந்தனைகள் ஆகிய இரண்டினாலும் அது ஒடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வரும் எதிர்காலத்தில் எப்போதும் அது சுதந்திரமாக விடுபடாது. யாழ்பாணம் ஒரு சுதந்திர சமூகமாக எழுச்சி பெறுவதை, சிதைக்கும்; பல்வேறு பரஸ்பர அரசியல் முரண்பாடுள்ள சக்திகள் வலுப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணக் கருத்துப்படி உயரடுக்கினர் படிப்படியாக ஆனால் தவறில்லாமல் தமிழ் போர்க்குணத்தையும் மற்றும் மற்றவரைத் துன்புறுத்தும் எல்.ரீ.ரீ.ஈ இனது பயங்கரவாதத்தையும் மகிமைப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் மீண்டும் உருவாக்கியுள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ பற்றிய ஜூட் ரத்தினத்தின் படைப்பைத் தடுத்த அதே நபர்கள், ஜூலை மாதத்தில் கரும்புலிகள் நினைவையும், நவம்பரில் மாவீரர் வாரத்தையும் மற்றும் மே மாதத்தில் இன அழிப்பு என அழைக்கப்படும் நிகழ்வையும் அனுட்டிக்கிறார்கள். எல்.ரீ.ரீ.ஈ அதே மாதிரியான ஞாபகார்த்தச் சடங்குகள் மூலமாக அதன் தியாகிகள் கலாச்சாரத்தை வளர்த்து சகலதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

இரண்டாவதாக உள்ள ஒரு உறுப்பு இந்த துணை தேசியவாத கலாச்சாரம் ஏன் நிலவவேண்டும் என்பதை விளக்குகிறது: ஏனென்றால் அது மற்றைய அனைத்துப் போட்டியாளர்கள் மற்றும் நல்லறிவான சித்தாந்தங்களையும் அடக்கியாள்கிறது. இவை அனைத்துக்கும் பின்பும் எப்படி யாழ்ப்பாணம் அதன் தற்போதைய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கான ஒரு சமகால உதாரணம் எங்களது அரச பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அரசியல். இரண்டு எதிர்க் கிளாச்சி செயற்பாடுகளினால் கொடூரமாக ஒடுக்கப்பட்டதின்; பின்பும் ஜேவிபி மற்றும் அதன் பிளவுபட்ட குழுவினர், தமது போலி இடதுசாரி வர்ணம் பூசப்பட்ட கருத்தியல் தத்துவ சித்தாந்தம் மூலமாக பல்கலைக்கழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தம்மை மீள நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில் நிலவும் அனுகூலமான சூழ்நிலை பயன்படுத்தியதுடன் மற்றும் செயலற்ற பல்கலைகழக நிருவாகிகள் வன்முறை நிறைந்த இந்த அணுகுமுறையை பாராமுகமாக விட்டதினாலுமே அவர்களால் இந்தச் சாதனையை அடைய முடிந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக உள்ளார்கள் என்பதினால் அது எங்கள் பல்கலைக்கழகங்களில் வெற்றி பெறவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு இல்லாத விசேடமான சில மனக்குறைகள் அவர்களுக்கு உள்ளது. மாறாக இந்த மயான சித்தாந்தத்தின் மாணவ ஆர்வலர்கள் அவர்களின் மாயையான மனக்குறைகள் எல்லாம் மிதக்கின்ற மற்றொரு சமாந்தரமான பிரபஞ்சத்தை மீள உருவாக்கி அதற்குள் அப்பாவிகளாகவும் மற்றும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உள்ள பெரும்பான்மையினரை அதில் சிக்க வைக்கின்றனர். எல்.ரீ.ரீ.ஈ இனை நேசிக்கும் ஈழ ஆதரவாளர்களும் யாழ்ப்பாணத்தில் இதையேதான் செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் கருத்தை ஒடுக்கி அந்த வெற்றிடத்தை கசப்புணர்வுகளால் நிரப்புகிறார்கள்.

மூன்றாவதாக, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டிலுமுள்ள அரசியல்வாதிகள் எப்போதுமே கடினமான நிலையை எதிர்கொள்வதை விட அதை சாந்தப்படுத்துவதே எளிதானது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களை எதிர்த்துப் போராட எல்.ரீ.ரீ.ஈ இனது புத்துயிர்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயர் அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்செயல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் (அவர் குறிப்பிட்டபடி) பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் உடனடியாக மத்திய அரசை குற்றம் சாட்டுவதற்கான பாசாங்குத்தனமான நோக்கம் கொண்டவை

நான்காவதாக, அந்த சக்திகளின் இயக்கம் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை தூண்டுவதுடன் அதன் மூலம் சில குடியியல் சுதந்திரங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் பிடியை இறுக்குவதை நோக்கமாகக் கொண்டது. (விஜயகலா மகேஸ்வரன் தனது பேச்சுக்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்). அரசாங்கத்தின் பதிலானது, பிரிவினைவாத உணர்வுகளுக்கு ஒரு தடுப்பு போடவேண்டியது அவசியம் என நியாயப்படுத்திய போதிலும் வட பகுதி தமிழ் மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுவது போன்ற உணர்வை அது எற்படுத்துகிறது. இந்த குறைகள் தேசியவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதுடன் தீவிரவாத தமிழ் தேசியவாதிகளின் கைகளில் விளையாடவும் செய்கிறது.

மறுபுறத்தில் சுதந்திரமான நோக்கம் கொண்ட செயற்பாடுகளை அனுமதித்தால், அதற்கு உத்தரவாதம் இல்லை, அதன் சீரழிவு தெற்கில் மற்றொரு பேருந்து குண்டுத் தாக்குதலுடன் முடிவடையும் - அல்லது கற்றலோனாவில் நடைபெற்ற பாணியிலான பயங்கரமாக இருக்கும், மற்றும் பின்னர் ஒரு ஆயுதப்போராட்டமாக வெடிக்கும்.

ஐந்தாவதாக, யாழ்ப்பாண சமூகம் அனைத்து விதமான கருத்துக்களுக்கும் தன்னைத் திறந்துவிடுகிறது மற்றும் அனைத்து விடயங்களுக்கும் நாகரிகமான விவாதங்களுக்கும் தயாராக உள்ளது என்று கருதினால், அது ஒரு தந்திரமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். “சொர்க்கத்தில் பேய்கள்” திரையிடப்படாமல் அகற்றப்பட்டது பேச்சு சுதந்திரத்திற்கு விழுந்த அடி என்று எதிர்ப்பவர்கள் சனல் 4 இனது “ஸ்ரீலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படத்தில் விஷயங்கள் எப்படி இட்டுக்கட்டப் பட்டிருந்தாலும் பரவாயில்லை அதனைத் திரையிடப்படுவதை அனுமதிக்கத் தயாராக இருக்கவேண்டும். அது எப்படியானாலும் அரசாங்கத்துக்கு கடினமான தெரிவையே வழங்குகிறது. அத்தகைய திரையிடல் நல்லதல்ல என்று தெற்கிலுள்ள தேசியவாதிகள் பொங்கி எழுவார்கள். ஆகவே பல்வேறு பரவலான அபிப்ராயங்களுக்கு இடமளிக்காமல் யாழ்ப்பாணத்தை திறமையாக மூடிவிடலாம், துணை தேசியவாதிகள் அதை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எளிதாக செய்து தந்துள்ளார்கள் குறைந்த பட்சம் ஒரு குறுகிய காலத்துக்காவது நிலமையைச் சமாளிக்க உதவி செய்துள்ளார்கள்.

எவ்வாறாயினும் இத்தகைய நிலமைகள் நீண்ட காலத்துக்கு நாட்டுக்கு உதவாது. இது கடைசிக் காட்சியை கொண்டுவருகிறது. குடியியல் உரிமைகள் உட்பட போருக்குப் பிந்தைய மாற்றம், ஒரு மேம்பட்ட முறையில் நிருவகிக்கப்பட வேண்டும். அதன் கருத்து, அதிக சுதந்திரம் மற்றும் இடைவெளி என்பனவற்றைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம்; மெதுவாகத் தட்டிக்கொடுத்து அதிகம் சமரசபாதைக்கு இழுத்து வர வேண்டும். அதே நேரம் பிரசங்கத்துக்கான சிவப்புக் கோடுகள் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். அதைக் கடப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது வெள்ளை வான் வடிவத்தில் இல்லாமல் அரசாங்கத்தின் சட்டபூர்வமான கரங்களைக்கொண்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

அந்த நேரம் வரும்வரை “சொர்க்கத்தில் பேய்கள்” படத்தை தடுப்பது யாழ்ப்பாணத்தின் சொந்த விவகாரம்.

Read more...

பல்கேரியாவை உலுக்கிய பத்திரிகையாளர் கொலை!

பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ரூஸ் நகரின் டிவிஎன் எனும் செய்தித் தொலைக்காட்சியின் இயக்குநராகப் பணிபுரிந்த விக்டோரியா, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகச் செய்திகள் வெளியிட்டுவந்தவர்.

“மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையாளர் குரல் ஒடுக்கப்படும்போது, அந்த நாடே வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது” என்ற குரல் ஒலிக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த கவலை வெளிப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தேரஸும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Read more...

அரசாங்கத்திற்கு பெரும்பாண்மை அற்றுப்போனால் த.தே.கூ அரசிற்கு ஆதரவாம்.

நல்லாட்சி அரசு ஆட்டம் காணும் நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு திரைமறைவில் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

இவ்வாறான நிலை ஒன்று உருவாகின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவு வழங்கும் என்றும் அதற்கான ஆலோசனையை மேற்குலக நாடுகள் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளதாக சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இவ்விடயம் தொடர்பில் முரண்பாடுகள் உருவாகி வருகின்றது. நல்லாட்சி அரசினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட எவ்வித உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படாத நிலையில், அரசிற்கு ஆதரவளித்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிரணியினரான விக்னேஸ்வரன் தரப்பிற்கு அது சாதகமாக அமையும் என்றும் அச்செய்தி குறிப்பிடுகின்றது.

Read more...

அப்துல் கலாமின் பிறந்தநாள். அவரை கொச்சைப்படுத்தாதீர்! ஸ்ரான்லி ராஜன்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம்

இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள்.

அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம்

கலாம் ஒன்றுமே செய்யவில்லை அழும் பதர்களே, அவர் யாருக்குத்தான் செய்தார்?

நீங்கள் செய்யும் கொடுமைகளை என்ன சொல்லி அழுவது என்றே தெரியவில்லை. இத்தேசத்தில் படித்து இந்த தேசத்திற்கே உழைத்து மறைந்த உத்தமர் அவர்

ராக்கெட் உலகில் இந்தியா கால்பதித்து தள்ளாடிய பொழுதுதான் அவர் பணிக்கு வந்தார். எஸ்எல்வி ராக்கெட்டுகளை அவர் தோல்விக்கு பின் வெற்றியாக்கி நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சதிஷ் தவானின் சீடர் அவர்

இந்திராவின் கனவான ஏவுகனை பணிகளில் அவர் தன்னை அர்பணிக்க பிரித்வி, அக்னி, நாக், திரிசூல் என சூப்பர்ஹிட் ஏவுகனைகளாக வந்து குவிய குவிய அவர் பிரபலமானார், உச்சமாக காளி எனும் லேசர் கதிரில் எதிரி விமானங்களை சிதறடிக்கும் நுட்பத்தில் இந்தியா ஓரளவு வெற்றிபெற்றபொழுது உலக விஞ்ஞானிகளின் வரிசையில் மகா பிரபலமானார்.

(அணுசக்திக்கும் அவருக்கும் தொடர்பில்லை, ஆனால் ஏவுகனை பாதுகாப்பும் அணுநுட்பமும் கலந்தவை. அதனால் அணுசக்தி கழக தலைவர் அவரும் தமிழர்தான், ஆர்.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றினார்.)

இந்த வெற்றியில் அவருக்கு காலம் ஓடிப்போனது, திருமணம் இல்லை, பெரும் சொத்து இல்லை, சுருக்கமாக சொன்னால் ஒன்றுமே இல்லை. வயது கிட்டதட்ட 70 ஆனது. யாருமில்லா தனிகட்டை என்ன செய்ய?

இந்த 70 வயதில்தான் மாணவர்களை வளமாக உருவாக்கும் திட்டம் என ஒன்றை உருவாக்கி நாடு முழுக்க ஓடினார், அழைத்த கல்லூரிகளுக்கு எல்லாம் சென்று வருங்கால தொழில்நுட்பம் முதல் பொருளாதார வாய்ப்புகள் வரை போதித்தார்.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் பிஜேபி அரசின் பெரும் நல்லதிட்டங்களில் ஒன்று அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கியது, நிச்சயமாக பெரும் நன்றிகடன்.
அதனை விட உச்சமாக மோடி செய்தார், அதாவது இந்தியராணுவத்தின் அடுத்தகட்ட ஏவுகனைகளுக்கெல்லாம் பெயர் கலாம் சீரியல்.

பெரும் சர்ச்சைகள் இருந்தாலும் பிஜேபி இதில் ஜொலிக்கின்றது, கைதட்டி வாழ்த்தலாம். பிராமணசம், ஆரியாசிசம், வர்ணாமசிரமம் பேசுபவர்கள் கவனிக்கலாம், கலாம் அலுவலகத்தில் எத்தனையோ பிராமாணர்கள் உண்டு, ஆனால் திறமையும், தியாகமும் அங்கீகரிக்கபட்டது நிச்சயம் வாழ்த்தவேண்டியது.

இன்று கலாமை போட்டு தாக்குகின்றார்கள். அவர் ஆரிய அடிவருடி, திராவிட எதிரி, தமிழ்வழிகல்விக்கு ஒன்றும் செய்யவில்லை, ஈழதமிழர் படுகொலையை கண்டிக்கவில்லை என கடுமையாக தாக்குகின்றார்கள்.
தாக்குங்கள் கொஞ்சம் அவர் வாழ்வினை நோக்கிவிட்டு தாக்குங்கள்.

அவர் பிறந்தது பிரிட்டிஷ் இந்தியா, அவர் வெள்ளையனை எதிர்த்துபோராடவில்லை. அதன்பின் நடந்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. நீங்கள் சொல்லும் குஜராத், ஈழத்தை விட ஆயிரம் மடங்கு ரத்த சரித்திரம், அங்கும் கலாம் போராடவில்லை.

1948 காஷ்மீர் பிரச்சினையில் துப்பாக்கி தூக்கிகொண்டு இந்தியா ஓழிக என கோஷமிடவில்லை
அதனை கண்டித்தும் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அடுத்து நடந்த மொழிவாரி மாநிலபிரிவினையில் அவர் என்ன சொன்னார்? ஒன்றுமில்லை.

அடுத்து வந்த அண்ணா நடத்திய போரான மொழிப்போரில் அவர் பங்கு என்ன? அல்லது 1965ல் கதற கதற மலையக மக்களை யாழ்பாணத்தார் அனுப்பும்பொழுது அவர் என்ன சொன்னார்?

அவர் அப்பொழுதெல்லாம் வறுமையோடு போராடி படித்து முடித்து, வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார். இப்பொழுது இருப்பது போல விஞ்ஞான இணையமில்லை, ஆய்வு என்பது அதுவும் ராக்கெட் ஆய்வு என்பது தற்கொலைக்கு சமம்.
அவர் அவர்போக்கில் ஆய்வு செய்தார், அதாவது தனக்கு என்ன தெரியுமோ அதனை நாட்டிற்கு கொடுக்க எண்ணினார்.

சீன யுத்தம் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது, 1972 வங்கபோர் வலிமையான ராணுவமில்லாமல் இந்தியா சாதியமில்லை என காட்டிற்று.

ஏழை மீணவ குடும்பமாணவனாக படித்து வந்த கலாமிடம் இந்திய ஏவுகனைகள் திட்டம் கொடுக்கபட்டது, அவர் அதில்தான் கவனமாக‌ இருந்தார்.

எமர்ஜென்சி கொடுமைகள்,இந்திரா படுகொலை, கொழும்பு கலவரம், சீக்கிய கலவரம்,ராஜிவ் படுகொலை இதை எல்லாம் பற்றி கண்ணீர் சிந்தினாரே அன்றி அவர் என்ன செய்யமுடியும்?

அலுவலகம் தவிர்த்த அவரது வாழ்க்கை 2000களில் ஆரம்பமாயிற்று, குஜராத் படுகொலைகளை அவர் கண்டிக்கவில்லை என சர்ச்சை வேறு. அவர் இஸ்லாமியன் தீவிரமாக குரான் படிக்கும் இஸ்லாமியன், ஆனால் பாபர் மசூதி பிரச்சினையில் ஒரு வார்த்தை பேசியிருப்பார்?

ஈழம் எரிந்ததாம், இவர் ஒன்றும் சொல்லவில்லையாம். அவர் என்ன சொல்லமுடியும்? 1983ல் தலையிட்ட இந்தியா 1989ல் அவமானத்தோடு வெளியேறிற்று. அதன்பின் புலிகளின் தலைவருக்கு 19 ஆண்டுகள் காலம் உச்சத்தில் இருந்தது. என்ன செய்தார்? இந்தியா துரோகி சரி, நார்வே குழு பேசியதல்லவா? அவர்கள் ஏன் திரும்பி பார்க்காமல் ஓடினார்கள்?.

19 ஆண்டுகால மாவீரர் உரைவாசித்தார் அந்த தலைவர், ஒரு அறிக்கையில் ஒரே ஒரு அறிக்கையில் ஸ்ரீபெரும்புதூர் பற்றி அதாவது செய்தோம் அல்லது செய்யவில்லை என ஒரு வார்த்தை பேசியிருப்பார்?, முள்ளிவாய்க்காலில் சொந்த மக்களை காக்கும் பொறுப்பு அவருக்கு இல்லையாம், அப்துல் கலாமிற்கும் மட்டும் உண்டாம்.

அவர் என்ன செய்திருக்கவேண்டும்? எனது ராக்கெட்டுகள் எல்லாம் இனி இந்திய ராணுவத்திற்கு அல்ல என போராடவேண்டுமா? அல்லது வன்னிகாட்டிற்கு சென்று ராக்கெட் தயாரித்திருக்கவேண்டுமா?

அவர் என்ன கலாமா? இல்லை ரூபாய்க்கு 2 என அணுகுண்டுகளை விற்ற பாகிஸ்தானின் கானா?

கலாம் தமிழ்மொழி கல்விக்கு உதவவில்லையாம். அட சிந்திக்க திராணியற்றவர்களே, தமிழ்மொழி கல்வியில்தான் அவர் கல்லூரிவரை கற்றார். விமானத்தை ராஜராஜசோழனின் படைதலைவன் கண்டுபிடித்து புத்தகம் எழுதியிருந்தால் அவர் ஏன் ஆங்கிலம் படிக்கபோகின்றார்.

ஜனாதிபதி உரையிலும் திருகுறளை காட்டிய தமிழனை உங்களுக்கு தெரியவில்லையா?. ஐரோப்பா பாராளுமன்ற கூட்டத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என பேசிவிட்டு, மொத்த மேதை கூட்டமும் கேட்டதே, கலாம் அவர்களே இந்த வரிகளை சொன்ன கணியன் பூங்குன்றனார் யார்? வணங்க வேண்டிய மனிதன் என்று. அந்த கலாம் தெரியவில்லையா?

தமிழ்நாட்டின் குக்கிராம மூலையில் நின்றுகொண்டு என் பாட்டன், முப்பாடன் என முழங்கினால் தமிழனின் பெருமை தரணியில் உயருமா?

உலகம் மிக பெரியது, அந்த உலகத்தில் பாரதமும் பெரிது. எல்லோரும் எல்லாவற்றையும் கவனித்துகொண்டேதான் இருப்பார்கள், அதனால்தான் 2009ல் உலகம் அப்படி அமைதியாக இருந்தது.

விஞ்ஞானிகள் வித்தியாசமானவர்கள், அமெரிக்க உள்நாட்டுபோரை பற்றி சிந்தித்திருந்தால் எடிசன் கிடைத்திருக்கமாட்டார், நாசிசத்தை கண்டித்து அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருந்தால் ஐன்ஸ்டீன் கிடைத்திருக்கமாட்டார். யூதர்களை ஒழிப்பேன் என ஹிட்லரோடு கத்திதூக்கி அலைந்திருந்தால் வார்ன் பிரவுன் கிடைத்திருக்கமாட்டார்.

வார்ண் பிரவுண் ஏவுகனை உலகின் தந்தை, பிதாமகன்,கடவுள் எல்லாம். அவரை சந்தித்துவிட்டு அப்துல்கலாம் சொன்னார், "இவரை போல மேதைகள் இந்தியாவில் உருவாக்கபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம்", சற்று யோசித்து பாருங்கள், ஒரு இளம்வயது சராசரி இந்திய விமானபொறியாளார், பிரவுண் போன்ற மேதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கேட்பார்கள்?

"அய்யா...நாசாவில் நேர்முகதேர்வுகள் எப்படி இருக்கும், பணி கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்? ஹிஹிஹிஹிஹீஹ்", இங்குதான் கலாம் தனித்து நின்றார்.

அவருக்கு அரசியல் தெரியாது, தெரிந்திருந்தால் 2000களில் தமிழகத்தில் கட்சிதொடங்கி இருப்பார் (அப்படி வந்துவிட கூடாது என தமிழகத்தில் நடந்த குள்ளநரி திட்டம் ஏராளம்), அவருக்கு மதம்,இனம்,மொழி தெரியாது. பாவம் படித்துவிட்டு அரசு வேலை பார்த்த இந்தியன் அவர்.
தனக்கு தெரிந்த ராக்கெட் நுட்பத்தை மேலும் வலுபடுத்தி இந்தியாவின் பாதுகாப்பை வலுபடுத்தினார்.

நாளை ஏதும் ஆபத்தென்றால் அது பாயும், காப்பாற்றும். அதற்கு திராவிடன், ஆரியன்,சாதி,மொழி இனம் எல்லாம் தெரியாது. இந்தியனை காப்பாற்றும்.

இந்திய ஒவ்வொரு ஏவுகனையின் வெற்றிக்கு பின்னும் அவர் இருப்பார். எல்லையில் சாகின்றார்கள் அல்லவா வீரர்கள். அவர்கள் சீக்கியனாக, மலையாளியாக, வங்காளியாக சாவதில்லை, அல்லது அந்த இனங்களுக்காக சாகவில்லை. நாட்டிற்காக செத்தார்கள்.

நீங்கள் குதிக்கும் ஈழத்திலும் அமைதிபடை காலத்தில் 1350 சீக்கியர்கள் செத்தார்களே, அது என்ன தலைவிதியா?

அப்துல்கலாம் திராவிடத்திற்கோ, தமிழருக்கோ ஒன்றும் கிழிக்கவில்லை என நீங்கள் நினைத்தால் கொஞ்சம் சீக்கிய சகோதரர்களை நினையுங்கள். பிரிவினையிலும் இன்னும் ஏராளமான அவமானங்களிலும் சிக்கி தவித்த இனம் அது.

இன்றும் ராணுவத்தில் பாதி அவர்கள்தான், பொற்கோயில் ஆப்ரேசனுக்காகவோ அல்லது தற்போதைய பென்சன் பிரச்சினைக்கோ பொங்கி எழுந்தால் என்ன ஆகும்? ராணுவம் இருக்குமா? நாடு என்ன ஆகும்?

ஈழத்தில் ஏன் சாகிறோம் என தெரியாமல் செத்து அம்மண பிணமாக (அப்படித்தான் புலிகள் ஒப்படைத்தார்கள்) வந்த சீக்கியனின் மகனும் ராணுவத்திற்கு சென்றானே. அந்த ராணுவ வீரர்களில் ஒருவனாக, விஞ்ஞான ராணுவவீரனாக, அறிவுநிறை தமிழ்வீரனாக பாருங்கள். வாமண அவதாரம் விஸ்வரூபம் எடுத்ததுபோல அவர் பெரிதாய் தெரிவார்.

இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள், அவருக்கு சந்ததிதான் இல்லை, புகழாவது எஞ்சியிருக்கட்டும்.

அவர் சொந்த மண்ணிற்கு ஒன்றும் செய்யவில்லை என ஊரிலும் சலசலப்பு, அவர் இஸ்லாமிய சமூகத்தவருக்கு என்ன செய்தார் என ஒருவித சலசலப்பு, அவர் திராவிடனுக்கு என்ன கிழித்தார் என இங்கும் குற்றசாட்டு, தமிழனுக்கு என்ன செய்துவிட்டார் இந்த ஆரிய் அடிமை என இங்கும் வசைமாறி.

கொஞ்சம் நிதானித்து சிந்தியுங்கள்? அவர் அவருக்கே என்ன செய்துவிட்டார்? காரணம் அவர் நேசித்தது இந்தபாரத திருநாட்டையும் இம்மண்ணின் மாணவர்களையுமே. கொச்சைபடுத்துகின்றீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது பேரபிளைகளுக்கோ யாரை முன்மாதிரியாக சொல்வீர்கள்?

திராவிடம் பேசி , சகலத்தையும் நாசமாக்கிவிட்டு பாபநாசம் படத்தின் கிளைமேக்ஸ் போல‌ "நான் சொயநலம் பிடிச்சவன், என் குடும்பத்துக்கு எது தேவையோ அதத்தான் செஞ்சேன்" என சொல்லாமல் சொல்லும் தலைவர்களையா?

அல்லது ஈழம்பேசியே அங்கும் சுடுகாடாக்கிவிட்டு அடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற எண்ணும் அவர்களையா?

படிப்பு ஒரு மனிதனை உச்சம் கொண்டு செல்லும் என நீங்கள் உதாரணமாக காட்ட அம்பேத்தாருக்கு பின் யாரை மாணவர்களுக்கு காட்ட முடியும்?

சிந்தித்து பாருங்கள் அமைதியாவீர்கள், இதற்கு மேலும் நீங்கள் சொல்லிகொண்டே இருந்தால் அப்துல் கலாமுக்காக மட்டுமல்ல உங்களுக்காகவும் அழுது தொலைக்கவேண்டியதுதான்.

அய்யா கலாமே, நீர் கோடிகணக்கான இந்தியர்களை பாதித்தீர், அதில் லட்சகணக்கான மாணவர்கள் உண்டு.

ஆயிரகணக்கில் உம்மை தீவிரமாக பின்பற்றும் இளைஞர்கள் உண்டு.

அதில் சில நூறுபேர் ராக்கெட் விஞ்ஞானி ஆவார்கள், ஏவுகனை விடுவார்கள் உங்களை போல‌.

அதில் நீர் மறுபடியும் எங்களோடு வந்து இந்நாட்டிற்கு சேவையாற்றலாம். நிச்சயம் வருவீர்.

அந்த நம்பிக்கைய்யோடு காத்திருக்கின்றோம் கலாம். நீங்கள் நிச்சயம் ஆயிரம் கலாம்களாக திரும்பி வருவீர்கள்.

இத்தேசம் அதில் அமைதியாகவும், பாதுகாப்போடும் வாழும்.

அன்று எம்மை அடித்துவிட்ட சீனா, இன்று அமைதியாக ஒதுங்கிபோகும் பொழுதெல்லாம் உம்மை கண்ணீரோடு நினைக்கின்றோம்

இன்னொரு முறை வந்து பிறந்துவிடும் அய்ய்யா, ஏங்குகின்றோம்

அந்த நம்பிக்கையோடு உங்கள் பிறந்த நாளில் அக்னி அஞ்சலி செலுத்துகின்றோம்

வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்

Read more...

உள்ளுர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துகின்றது அரசு. ரில்வின்

நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொத்மலை மேத்தகம பகுதியில் (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் அமெரிக்க டொலரின் ஊடாக செய்யப்படும் செலவீனத்தை குறைக்க வேண்டுமென தெரிவிக்கும் நாட்டு தலைவர்கள் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் கூடவே அழைத்து செல்வதற்கு ரூபாவின் செலவைவிட டொலரின் செலவினத்தையே மேற்கொள்கின்றனர்.

அண்மையில் நியூயோர்க்கில் சர்வதேச தலைவர்களின் மாநாட்டுக்கு நாட்டின் ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் தலைவர்கள் என்ற வகையில் இவர் அங்கு சென்றதில் தவறில்லை. ஆனால் கூடவே குடும்பத்தாரையும், நண்பர்களையும் அதிகாரிகளையுமாக 62 பேரை அழைத்து சென்றதை நாம் குறை கூறுகின்றோம்.

காரணம் நம் நாட்டுக்கு பொதுமக்களின் வரி மற்றும் தண்டப்பணங்களை உயர்த்தி அதன் மூலமான பணம் இந்த பயணத்திற்கு செலவு செய்யப்படுகின்றது.

நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை உல்லாச பயணங்களாக மேற்கொள்கின்றனர். இதற்கு மக்களின் பணமே வீண்விரயோகம் செய்யப்படுகின்றது.

நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பணத்தை விரையம் செய்யும் தலைவர்கள் ஆட்சியை பிடித்த உடன் மக்களின் சொத்துக்களை சுரண்டி விற்பணை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

தேர்தல் காலம் ஒன்றில் இவர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் அடுத்து ஒருவரை சிறந்த தீர்மானமின்றி ஆட்சியில் அமர்ந்துகின்றனர். இவர்களும் மக்களை வருத்தி நாட்டின் சொத்துக்களையும் விற்று சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறாகவே இலங்கையின் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்க அதிகாரிகளை ஆட்சியாளர்கள் நியமிப்பார்கள் அவர்களும் சில வேளைகளில் ஊழல்வாதிகளாக மாறிவிடுகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நிலமை அபிவிருத்தியடையவில்லை. உள்ளூர் உற்பத்திக்கு ஊக்குவிப்பில்லை. மசகு எண்ணெயின் விலையில் நாளுக்கு நாள் உயர்வு ஏற்படுகின்றது. மானியம் வழங்குவது தொடர்பில் மக்கள் நிலை குறித்து ஆராயப்படுவதில்லை.

பாராளுமன்றத்திலும் நாடகம் ஆடுகின்றனர். காலையில் சட்டமாகி பகல் வரை நாடகத்தில் பங்கு கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பார்வையாக இரண்டு மணிநேரம் செயற்பட்டு விட்டு பின் சிற்றுண்டிசாலையில் உணவு சாப்பிட்டு மாலையில் வாக்கெடுப்புகளில் பங்குபெறாமல் நழுவி செல்லும் நிலையும் உள்ளது.

இந் நிலையில் நாட்டை நாட்டின் வளங்களை மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய ஆட்சி மாற்றம் மக்களுக்கு தேவைப்பாடாக உள்ளது.

மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை மாற்றி புதிய ஆட்சியாளர்களுக்கு இடங்கொடுக்க வேண்டும் என்பதில் மக்கள் நிலை மாற்றம் பெற்று வருகின்றது. நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருகின்றது.

இதற்கு மக்கள் ஆணை பலமாக அமைய வேண்டும். அதற்கு முன் நாட்டின் இன்றைய நிலை மக்களுக்கு தெளிவுப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Read more...

மகன் முன் தாயை அடித்துக்கொன்ற காடையர்களில் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் 58 வயதுடைய தாயொருவர் தனது மகன் முன்னிலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் ஐவருக்கு வலைவிரித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மகனைத் தாக்க வந்த காடையர்களை தடுக்க முற்பட்ட தாயே இவ்வாறு பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலைசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டினுள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். அவரது மகன் காயமடைந்தார்.

'நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக் கொண்டனர். அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர்.

கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகள் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் அவர்கள் தாக்கினார். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்.

வந்தவர்கள் அம்மா இறந்ததை அறிந்ததும் தப்பினர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தனர். கொலைகாரர்களை எனக்கு நன்கு தெரியும்.' என்று மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read more...

மக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.

நான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என நாட்டு மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவி விலகுமாறு பலதரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சேவையில் 33 வருடங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இது எனக்கு போதுமானது என்று நினைக்கின்றேன். நான் யாரிடமும் இருந்து ஒரு அற்ப தொகையை கூட வாங்கியது இல்லை.

இது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். நான் மக்களின் நல்லெண்ணத்தையும் சுயமரியாதையையும் பெற்றுள்ளேன். தற்போது என்னிடம் அன்பு மாத்திரமே உள்ளது. எனது தாயையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மாத்திரமே மிகுதியாக உள்ளது.

எனது அம்மாவை கேவலப்படுத்தும் வகையில் இரக்கமற்ற சிலர் முகநூல் வாயிலாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை என்னால் தாங்கிகொள்ள முடியும். ஆனால் எனது அம்மாவை அவமானப்படுத்துவதை என்னால் தாங்கிகொள்ள முடியாது.

எனக்கு சொந்தமாக வீடு இல்லை. இதை யாரும் நம்பமாட்டார்கள். நான் பதவி விலகினால் எனது குடும்பம் தங்குதவற்கு வாடகை வீடு ஒன்றை பெற வேண்டும்.

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கோரவில்லை. ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நான் பதவியில் இருப்பது விருப்பம் இல்லை போன்று உணர்கின்றேன். என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த பதவியில் தொடர்ந்து இருப்பது பயனற்றதாகும் என்றார்.

Read more...

ஆபத்தில் சிக்கியிருக்கும் உண்மை! லண்டன் கார்டியன்

பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதுடன் அந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானோர் தண்டிக்கப்படாமல் தப்பிச்செல்லக்கூடிய கவலைக்குரிய சூழ்நிலை தோன்றியதையும் அடுத்து 21 வருடங்களுக்கு முன்னர் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து யூனெஸ்கோ தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

பத்திரிகையாளர்களின் கொலைகள் தனிமனிதர்களின் வாழ்வை இடைநடுவில் முடிப்பது மாத்திரமல்ல, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் இருக்கிறது என்றும் அதன் விளைவாக சமுதாயத்துக்கு பரந்தளவிலான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த தீர்மானத்தில் யூனெஸ்கோ கவலையுடன் சுட்டிக்காட்டியது.

அந்த கவலை இன்று மிகவும் பாரதூரமானதாகவும் முனனென்றும் இல்லாத அளவுக்கு பரந்ததாகவும் உணரப்படுகிறது. 2006 -- 2017 காலகட்டத்தில் யூனெஸ்கோவினால் கண்டிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகையாளர் கொலைகளில் பத்தில் ஒன்பது தொடர்பில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

நிலைமை அவ்வாறே தொடருகிறது. கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் வெளிநாட்டு நிருபர்களின் எண்ணிக்கையையும் விட உள்நாட்டு பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையே மிக அதிகம். சிலர் குற்றவாளிகளும் ஆயுதக் குழுக்களினாலும் பயங்கரவாதிகளினாலும் கொல்லப்பட்ட அதேவேளை மற்றையவர்கள் அரசியல்வாதிகளினால் அல்லது அரசியல்வாதிகளின் சார்பில் அடியாட்களினால் அல்லது அரசின் ஏஜென்சிகளினால் கொலைசெய்யப்பட்டார்கள்.

கடந்தவாரம் ஊழல் மோசடிகள் தொடர்பாக செய்திகளை அறிவித்துக்கொண்டிருந்த பல்கேரிய பத்திரிகையாளர் விக்ரோறியா மரினோவா கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு வருட காலத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொலையுண்ட மூன்றாவது புலனாய்வுப் பத்திரிகையாளராவார். அதற்கு முன்னதாக சிலோவாக்கிய பத்திரிகையாளர் ஜான் குசியாக்கும் ( அவருடன் சேர்த்து அவர் மணம்முடிக்கவிருந்த பெண்மணியும்) மால்டா பத்திரிகையாளர் டஃனி காருவானா காலிசியாவும் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, கடந்தவாரம் சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள தனது நாட்டின் துணைத் தூதரகத்துக்குச் சென்ற பிறகு காணாமல்போயிருக்கிறார் ; அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். குறைந்தபட்சம் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்பது தெளிவானது. மேலும் பல பத்திரிகையாளர்கள் ( ஏப்ரலில் கொல்லப்பட்ட 10 ஆப்கான் பத்திரிகையாளர்கள் உட்பட) இவ்வருடம் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் எல்லாம் ஊடகத்துறையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற பரந்தளவிலான அழுத்தங்களின் மிகவும் கூர்மையானதும் அச்சந்தருகின்றதுமான வெளிப்பாடுகளாகும். கஷொக்கி விவகாரத்தில் சவூதி அரசாங்கத்தின் பிரதானமாக நெருக்குதலைக் கொடுக்கும் சக்தியாக துருக்கிய அரசாங்கமே விளங்குகிறது. அவ்வாறிருந்தாலும், உலகில் பெரும் எண்ணிக்கையில் பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைத்திருக்கும் நாடாக துருக்கியே இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. றிசேப் தயிப் எர்டோகான் ஜனாதிபதியாக வந்த பிறகு 100 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மியன்மாரில் அரச இரகசியங்களை அறிந்துகொண்டதான குற்றச்சாட்டில் வா லோன், யாவ் சூ ஊ என்ற இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஒன்று 7 வருடச் சிறைத்தண்டனை விதித்தது. உண்மையில் அவர்கள் இருவரும் அரச பாதுகாப்பு படைகளினால் றொஹிங்கியா கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவே விசாரணை செய்து தகவல் திரட்டிக்கொண்டிருந்தார்கள். பிலிப்பைன்ஸில் சுயாதீனமான இணையத்தள செய்திச் சேவை ' றப்ளரின்' அனுமதிப்பத்திரத்தை அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது. என்றாலும் அது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் தாபகர் மரியா றேசா கடந் மூன்று தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய காலகட்டமே பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

சவூதி அரேபியாவுடனான டொனால்ட் ட்ரம்பின் ' காதலும் ' உலகின் ஏனைய பகுதிகளில் மனித உரிமை மீறர்கள் தொடர்பில் அவரின் அப்பட்டமான அலட்சியப்போக்கும் கஷொக்கி எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு உதவிசெய்தன.' ஆனால்,' போலிச் செய்திகள் ' மீதான ட்ரம்பின் தாக்குதல்களும் ஊடகங்களை ' மக்களின் எதிரிகள் ' என்ற அவரின் வர்ணனையும் பலம்பொருந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகப் போய்விட்டன. இது ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் அண்மையில் எச்சரிக்கை செய்ததைப்போன்று ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும்்ஆபத்தை அதிகரித்திருக்கிறது.

எதேச்சாதிகாரத் தலைவர்களும் மற்றையவர்களும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நசுக்கி அவர்களை மௌனப்படுத்துவதற்கு ஊடகங்களு ஊடாகப் பேசுபவர்களையும் எதிர்காலத்தில் பேசுவதற்கு முன்வரக்கூடியவர்களையும் மௌனப்படுத்தவேண்டும் என்பதை அறிவார்கள்.துணிச்சலான பத்திரிகையாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சக்கிகளுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் அதிகாரத்தின் மீது சி தடுப்புக்களைப் போடுவார்கள்.பொலிசாரிடமிருந்தும் நீதிமன்றங்களிடமிருந்தும் அரசியல் நிறுவனங்களிடமிருந்தும் தங்களுக்கு நீதி கிடைக்காதபோது பிரஜைகள் ஊடகவியலாளர்களையே நாடுகிறார்கள். உண்மையில் நடப்பது என்ன என்பதை பிரஜைகளுக்கு அறியத்தருகின்றவர்களாக ஊடகவியலாளர்களே இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றவர்கள் தண்டனையில் இருந்து தப்பிங்செல்லக்கூடியதாக இருக்கும்வரை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். இது 1997 யூனெஸ்கோ தீர்மானத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றவர்கள், கொலை செய்பவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவேண்டும் என்று யூனெஸ்கோ வலியுறுத்தியது. என்றாலும் கூட உருப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை. அல்லது குற்றஞ்சுமத்தப்படுபவர்கள் கொலை செய்வதற்கான உத்தரவை வேறு ஒருவரிடமிருந்து பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். காலிசியாவின் கொலையில் இதுவே நிலைமை. அவரின் குடும்பத்தவர்கள் பகிரங்கமான விசாரணையைக் கோரி நிற்கிறார்கள்.

மரினோவாவின் கொலை குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை நடத்தி கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி மற்றும் நாடுகள் பல்கேரியாவை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றன. ஆனால், சுயாதீனமான அல்லது கூட்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை உட்பட இடையறாத நெருக்குதல் கொடுக்கப்படாவிட்டால் பத்திரிகையாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடும் நிலைமையே தொடரும். மேலும் பல பத்திரிகையாளர்கள் சாவார்கள்.

(லண்டன் கார்டியன் ஆசிரிய தலையங்கம் 9 அக்டோபர் 2018) - தமிழில். வீரகேசரி.

Read more...

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி. -பாறுக் ஷிஹான்-

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இக் கண்காட்சி கடந்த வெள்ளிகிழமை(12) ஆரம்பமானது.

குறித்த கண்காட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன்(14) நிறைவடைய உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் , பலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து நாட்களுக்கு நீடித்து உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கண்காட்சியில் விநாயக புராணம், தோம்பு, மாந்திரீகம், சித்த மருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் தபுராணங்கள் என 100 க்கும் அதிகமான சுவடிக் கட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறை மற்றும் எண்ணிமப்படுத்தும் முறையும் காண்பிக்கப்படுகின்றன.

EAP-1056 திட்டத்திற்கமைவாக 60,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 25,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுவருகின்றன.

பிரித்தானிய நூலகத்தின் சர்வதேச நியமங்களப் பின்பற்றி முன்னேடுக்கப்படும் இச்செயற்றிட்டம் மூலம் ஆவணப்படுத்த வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நூற்றாண்டிலும் சாதாரண மக்களிடையே ஏட்டுச் சுவடிகள் பிரபல்யமாக இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக ஏடுகளில் எழுதி வாசிக்கப்படும் சாத்திரமுறைமையைச் சொல்லலாம். ஏடுகளென்றதும் முதலில் திருவள்ளுவரே எமது நினைவுக்கு வருகிறார். ஒரு கையில் ஏடுகளுடனும், மறு கையில் எழுத்தாணியுடனும் படங்களாகவும், சிலைகளாகவும் பல இடங்களில் அப்பெருந்தகை காட்சிதருகிறார். வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், கணிதம், வானியல், சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, சிற்ப சாத்திரம், இசை, கட்டடக் கலை, வரலாறு, நுண்கலைகள், இலக்கணம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஏட்டுச் சுவடிகளிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.

பனை ஒலைச் சார்விலே தயாரிக்கப்படும் ஏடுகள் ஆகக் கூடிய காலம் 200 வருடங்கள் மாத்திரமே நிலைத்து நிற்கக் கூடியவை . மன்னர் ஆட்சிக் காலங்களில் அங்ஙனம் பழமை வாய்ந்ததாகக் காணப்பட்ட ஏடுகள் எல்லாம் மீண்டும் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அக்காலத்தில் ஓலைச் சார்வுகளை வெட்டி எடுத்து இயற்கையான வேதிப்பொருட்கள் கொண்டு பரிகரித்து ஏடுகளாக்க ஒரு சாராரும், எழுதுபவர்கள் படி யெடுப்பவர் என இன்னொரு சாராரும், மரங்களினால் செய்யப் பட்ட சட்டங்களுக்கிடையே அவை பாதுகாப்பாகக் கட்டுவதற்கென இன்னொரு பிரிவினரும் எனப் பலர் இவ்வகையான ஏட்டுச்ட சுவடிப் பதிப்புப் பணிகளிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மன்னர்கள் இத்தகைய பணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினாலேயே அரிய பல பொக்கிஷங்கள் இன்றும் எமது பார்வைக்குக் கிட்டியிருக்கின்றன.

ஆங்கிலேயர் இந்திய மண்ணை ஆட்சி செய்த போது ஏடுகள் பற்றியும், அதனில் பதிக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். எனவே இத்தகைய சுவடிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வதில் பெரும் ஈடுபாடு காட்டிய ஆங்கிலேய அதிகாரிகளான, கொலின் மெக்கன்ஸி (Colin Mackenzie), லேய்டொன் (Leydon) ஆகியவர்கள் சுவடிகளைச் சேகரிக்கத் தொடங்கினர். 1869 ஆம் ஆண்டு சுவடிகளைப் பாதுகாப்பதற் கென ஒரு பாதுகாப்பகம் நிறுவப்பட்டது. அதன்வழி இன்று ஓலைச்சுவடிகளை அறிவியல் பூர்வமாகப் பேணுகின்ற இடங்களில் ஒன்றாக , சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Government Oriental Manuscripts Library and Research Centre, Chennai) விளங்குகிறது.அங்கு 50,180 ஓலைச்சுவடிகளும், 22,134 காகித ஆவணங்களும், 26,556 புத்தகங்களும் உள்ளன. சிவலிங்க வடிவில் அமைந்துள்ள திருவாசக ஓலைச்சுவடி, உருத்திராட்ச வடிவில் அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை ஓலைச்சுவடி எனப் பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
அது போன்று சுவடிகள் சார்ந்த செயற்பாடு ஒன்று தற்போது இலங்கையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் அரிய செயற்பாட்டை நூலக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவருகிறார்கள். தொடக்க காலத்தில் இந்த நூலக நிறுவனமானது எண்ணிம நூலகம் (Noolaham Digital Library – www.noolaham.org) சார்ந்த செயற்பாட்டிலேயே முதன்மையாக ஈடுபட்டு வந்தது. இப்பொழுது ஆவணப் படுத்தல், ஆவணகப்படுத்தல் துறைகளிலும் தனது பணியை விரிவாக்கியுள்ளது. ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல், அறிவைப் பரப்புதல் சார்ந்தும் தமது நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான தில்லைநாதன் கோபிநாத் எம்மிடம் தெரிவித்தார். இதுவரை இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுடைய 55,000 க்கும் அதிகமான பல்வேறுபட்ட வடிவங்களில் வெளிவந்த நூல்களையும் அறிவுசார் வளங்களையும் உள்ளடக்கி இருக்கிறது நூலக நிறுவனம். 2005 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்திலன்று இந் நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தில்லைநாதன் கோபிநாத் மற்றும் முரளிதரன் மயூரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்.

சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் செயற்பாடுகளைப்போல நூலக நிறுவனத்திலும் ஏடுகளைச் சேகரித்துப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிந்து, மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நூலக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான தில்லை நாதன் கோபிநாத் அவர்களைத் தொலேபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம்.

பிரித்தானிய நூலகத்தின் நிதி உதவியுடன் EAP – 1056 என்ற இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏட்டுச் சுவடிகளைச் சர்வதேச நியமங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தினால் மட்டுமே அவற்றைப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்த முடியும். இத்தகைய ஆவணப்படுத்தல் மிகுந்த பொருட்செலவு மிக்கது. அவ்வகையில் பிரித்தானிய நூலகத்தின் (British Library) அழிவாபத்தில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் (Endangered Archives Programme) ஆதரவு கிடைத்தமை இந்த ஏட்டுச் சுவடி ஆவணகத் திட்டத்தினைச் சாத்தியமாக்கியுள்ளது- என்கிறார் கோபிநாத்.

இது பற்றி மேலதிக விபரங்களைப் பெறுவதற்காக 185 ஆடியபாதம் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள நூலகம் நிறுவனத்தை தொலை பேசி இலக்கம் 076 203 8032 இனூடாகத் தொடர்பு கொண்டு அங்கு சென்றோம்.அச் செயற்திட்டத்திற்குப் பொறுப்பாளராக இருக்கின்ற ஆர்த்திகா எம்மை வரவேற்றார். தாங்கள் எடுத்திருக்கின்ற ஓலைச் சுவடிகள் சார்ந்த இவ்வரிய பணிபற்றி அறிய ஆவலாக இருக்கிறோம் – என்றோம்.

இச்செயற்றிட்டத்தின் ஆய்வாளராக தில்லைநாதன் கோபிநாத் மற்றும் இணை ஆய்வாளராக லெட்சுமிகாந்தன் நற்கீரன் ஆகியோருடன் களப்பணியில் என்னுடன் திலக்சன், டெல்சான், விதுசன், ஐதீபன் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர். இதுவரை 20,000 க்கும் அதிகமான சுவடிப் பக்கங்களை அடையாளங் கண்டுள்ளோம்.. அவை படிப்படியாக எண்ணிமப்படுத்தப்பட்டும் வருகின்றன. தற்போது வடக்கு மாகாணத்திலேயே இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். அரிய சுவடிகளை அவை இருக்கும் இடத்துக்கே சென்று எண்ணிமப் படுத்துகிறோம். அவ்வகையில் சுவடிகள் அவற்றின் உரிமையாளரிடமே இருக்கும். எண்ணிமப்படுத்தலின் பிரதியொன்றைச் சுவடியின் உரிமையாளர்களுக்கும் வழங்குகிறோம் – என்று இரத்தினச் சுருக்கமாகத் தங்கள் பணி பற்றி விபரித்தார் ஆர்த்திகா.

தொடர்ந்து களப்பணியாளராகக் கடமையாற்றுகின்ற திலக்சன், ஐதீபன் ஆகியோருடனும் கலந்துரையாடி அவர்கள் பணிபற்றியும் கேட்டோம். இதில் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். இந்தப் பணிகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அந்த இளைஞர்களின் ஆர்வம் எம்மை மிகவும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதற்கூடாகப் பெறப்படும் பயனிலும் துல்லியமாக விடயங்களை அவர்கள் பேணியிருப்பார்கள் என்ற நம்பிக்கையும் வலுப்பெறுகிறது.

இத்திட்டம் ஆரம்பிக்க முன்னரே நூலக நிறுவனத்தினர் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற ஓலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்த வேண்டும் என்று தன்னிச்சையானதொரு முயற்சியாகத் தெல்லிப்பழை துர்க்கா ஆலயத்தில் காணப்பட்ட கந்தபுராண ஓலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்த முயன்றனர். அந்த நிகழ்வே ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்து எண்ணிமப்படுத்துகின்ற முயற்சியின் ஆரம்பம் எனலாம். அது மட்டுமல்ல இவ்வரிய முயற்சிக்கு உந்து கோலாகவும் அமைந்ததுவும் அதுவே. இந்த EAP – 1056 என்ற இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவென சென்ற வருடம் மார்கழி மாதத்தில் அதற்கானதொரு குழு ஆரம்பிக்கப்பட்டது. இதற்காகப் பல பட்டதாரிகள் நேர்முகம் காணப்பட்டனர். முடிவில் ஐந்து பேர் இப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் முதலில் களஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். ஓலைச் சுவடிகளைத் தேடி, அது பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் பணியிலேயே அவர்கள் முதலில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்விலே ஏறத்தாழப் பல ஆயிரம் ஒலைச்சுவடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றை ஆவணமாக்க வேண்டிய செயற்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய பணியை ஆரம்பித்தோம் என்றவாறு தொடர்ந்தார் திலக்சன்.

அடையாளங் காணப்பட்ட ஓலைச் சுவடிகளில் இதுவரை 16500ஒலைச் சுவடிகளை எண்ணிமப்படுத்தியுள்ளோம். கண்டறியப்பட்ட ஓலைச்சுவடிகளெல்லாம் ஏதோ ஒருவகையில் அழுக்குப் படிந்தவைகளாகவும், தூய்மைப்படுத்த வேண்டியவைகளாகவுமே காணப்பட்டன. எனவே அவற்றை முறைப்படி தூய்மைப்படுத்தி எண்ணிமப்படுத்த நீண்டகாலம் தேவைப்படுகிறது. அதனாலேயே எமது பணிகள் தாமதமடைகின்றன. 200 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த ஓலைச்சுவடிகளை ஒடிவுகள் ஏற்படாத முறையில் கையாளவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுகிறோம். பல சமயங்களில் சுவடிகள் ஒன்றோடொன்று ஒட்டுப்பட்டு பிரிக்க முடியாதவாறு காணப்படும். எனவே மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பல தொழில் நுட்பங்களைக் கையாண்டு அவற்றைப் பக்கம் மாறாது தனித்தனியாக எடுத்து ஆவணப்படுத்துகிறோம். நேரம் காலம் என்றதைப் பாராது மிகவும் பொறுப்புடன் இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டுமல்ல ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியிருக்கிறோம். ஏனெனில் பலர் தாம் இதுவரை பாதுகாத்த விடயம் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்ற விடயத்தில் கவனமாக இருந்தனர். அவர்களுடன் எமது முயற்சி பற்றிக் கலந்துரையாடி, எமது அறிவையும் அனுபவத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். “வாருங்கள் யாவரும் ஊர் கூடி ஆவணப்படுத்துவோம்.” என்று எமது இலவசப் பணி பற்றிச் சொன்னோம். இது ஒரு தொண்டு அடிப்படையிலே முன்னெடுக்கப்படுகின்ற பணி என்ற விடயத்தையும் எடுத்துரைத் தோம். இதுவரை பாடசாலை, சித்த வைத்தியர்கள், பொது நிறுவனங்கள் என்று மூன்று பிரிவுகளாக இப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றிருக்கிறது. இவற்றினூடாகப் பெறப்பட்ட தொடர்புகளுக்கூடாகவும் எமக்கு ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தகைய முயற்சியினூடாகப் பெறப்பட்ட வெற்றிகளின் அடிப்படையில் எமது செயற்திட்டங்களைக் கிராமந்தோறும் விஸ்தரிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நடவடிக்கைகளைப்பற்றி விழிப்புணர்வு மக்களைச் சென்றடைய எல்லாவிதமான ஊடகங்களையும் பயன்படுத்துகிறோம் – என்றவரிடம் சுவடிகளை துப்பரவாக்குகின்ற பணி பற்றியும் கேட்டோம்.
ஓலைச் சுவடிகளை துப்பரவாக்குவதற்கு என்ன விதமான பொருட்களை, அதாவது வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் போன்று , இந்திய மண்ணிலுள்ள ஓலைச்சுவடிகள் காப்பகங்களோடு உங்களுக்குத் தொடர்புகள் உண்டா? அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுகிறீர்களா?

ஆம், அவர்களுடன் எமக்குத் தொடர்புகள் உண்டு. சுவடிகளிலுள்ள அழுக்குகளை நீக்கப் புல் எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்ற அறிவும், ஒலைச் சுவடிகளில் எழுதப்பட்டுத் தெளிவற்றுக் காணப்படும் எழுத்துக்களை இனங்காண முருக்கம் இலைகளைப் பயன்படுத்தலாம் , விபூதி பூசிப் பார்க்கலாம் என்ற விடயங்களும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதே. . தற்போது வடக்கு மாகாணத்திலேயே இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். இதுவரை எமது முயற்சி பற்றி அறிந்தவர்கள் அறியாதாருக்குச் சொல்லலாம். ஓலைச் சுவடிகள் வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்களை எமக்குத் தெரிவித்தால் நாம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடத்தே சென்று சுவடிகளை எண்ணிமைப்படுத்த வேண்டிய முயற்சியை மேற்கொள்ளுவோம் – என்றார் திலக்சன்.
இத்தகைய ஓலைச் சுவடிகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் கலந்கொண்டு இற்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்திலிருந்த தொரு ஓலைச் சுவடிகள் காப்பகம் பற்றி உரையாற்றிய முனைவர் ஜெ.அரங்கராஜிடம் அது பற்றிக் கேட்டோம்.

சோழப்பேரரசின் வீழ்சிக்குப் பின்னர் ஆரியச் சக்கரவர்த்திகள் இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆட்சி செய்யத் துவங்கினார்கள். அக்காலத்தில் பாண்டியப் பேரரசு மிகவும் வலுப்பெற்றிருந்தது.அப் பாண்டியப் பேரரசின் கட்டுப்பாட்டிலேயே யாழ்ப்பாணக் குடாநாடும் இருந்தது.அதற்குச் சான்றாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட சேது நாணயங்களில் ஒரு பக்கம் நந்தியும் மறுபக்கத்தில் பாண்டிய மன்னர்களுடைய மீன் சின்னமும் காணப்பட்டது.மீன் சின்னத்தோடு மழு மற்றும் மங்கலப் பொருட்களும் இருந்தன. பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தொடர்ந்து ஆரியப்பேரரசு இருந்து வந்தது.

அச்சமயத்தில் தமிழகத்தில் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சி ஏற்பட்டது. அதில் தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரில் சரஸ்வதி பண்டாரம் எனும் நூல்நிலையத்தைக் கட்டமைத்தனர்.தஞ்சை நாயக்க மன்னர்கள் கட்டமைத்த அந்த நூல் நிலையத்தில் பிற்காலத்தில் சரபோஜி மன்னர்களும், மராட்டியர்களான சரபோஜி மன்னர்களும் பேணி மேம்படுத்தினர். தஞ்சை நாயக்கர்கள் ஏற்ப்படுத்திய சரஸ்வதி பண்டாரம் போலவே அவர்களுடன் இணக்கமாக இருந்த ஆரியச் சக்கரவர்த்திகளும் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பண்டாரம் என்னும் நூல்நிலையத்தை ஏற்ப்படுத்தினார்கள். அந்த நூல் நிலையத்திலே அரிய பல ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்குச் சான்றாக , அந்த மன்னர்களே வைத்தியத்திலும் விற்பன்னர்களாக இருந்தமையினால் பரராஜசேகரம், செகராஜசேகரம் என்ற மருத்துவ மற்றும் வான சாஸ்திர ஓலைச்சுவடிகள் வெளிவந்தன. சங்கிலிய மன்னனின் வீழ்சிக்குப் பிறகு போத்துக்கேயர் அந்த நூல்நிலையத்தை அழித்துவிட்டதாகவும் பின்னர் அதிலிருந்த ஓலைச் சுவடிகள் கோவாவுக்கும், லிஸ்பனுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்புகள் சொல்லுகின்றன. அதற்குச் சான்றாக கோவாவிலும், லிஸ்பனிலும் நிறையத் தமிழ் ஓலைச் சுவடிகள் இன்றும் காணப்படுகின்றன. ஆனால் அவை முழுமையாகப் பட்டியலிடப் படவில்லை.

அதன் பின்பு ஆங்கிலேயர் காலத்திலே சங்க இலக்கியப் பதிவுகளும் , தமிழ் இலக்கியப் பதிவுகளும் வந்தபோது உ.வே.சாமிநாத ஐயர் தன்னுடைய சிலப்பதிகாரப் பதிப்பாகட்டும் மற்றும் பிற பதிப்பாகட்டும் அவற்றிற்கு தமிழகத்திலுமிருந்து சுவடிகளை எடுத்திருப்பார். அந்த வரிசையில் நிட்சயம் ஈழத்திலிருந்தும் ஒரு ஏட்டை எடுத்திருந்தார்.கொங்குநாட்டுச் சுவடிகள், பாண்டிநாட்டுச் சுவடிகள், சோழநாட்டுச் சுவடிகள், தொண்டைநாட்டுச் சுவடிகள், ஈழத்துச் சுவடிகள் என்று எல்லாவற்றையும் ஒப்பு நோக்கியே தமது பதிப்புகளைச் செய்தார்கள்.இதே முறையினை உ.வே.சாமிநாதருக்கு முன்னர் சி.வை.தாமோதரம் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்கள் போன்றோரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் அக்காலத்தில் ஈழத்தில் தமிழ்சுவடிகளின் புழக்கம் இருந்திருக்கிறது.ஈழத்துச் சுவடிகளுக்கும் தமிழ்நாட்டுச் சுவடிகளுக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.தமிழ் நாட்டுச் சுவடிகளைக் காட்டிலும் ஈழத்துச் சுவடிகள் வடிவில் பெரியவை.சில கூந்தல் பனை ஓலைகளால் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பண்டைய காலத்தில் இருந்த பதிப்பாளர்கள் எல்லோரும் தமது பதிப்புகளில் தமக்கு ஏடுகள் கிடைக்கப்பெற்ற விபரதத்தைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.அந்த வகையில் ஈழத்திலிருந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்து பல ஏட்டுச் சுவடிகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே சுவடிகளைப் பேணுவதற்குக் கோவை இலைகளைப் பயன்படுத்தி னார்கள். ஈழத்திலே முருங்கை இலைகளைப் பயன்படுத்தினார்கள்.இப்படிச் சிறு சிறு வித்தியாசங்களோடு சுவடிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.




Read more...

நாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.

கடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசாந்த உட்பட சில மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தது. இக்குழுவினர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்தித்து நாட்டின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக எடுத்தியம்பினர்.

குறித்த நிகழ்வுக்கு சென்றிருந்த மேற்படி குழுவினரை புலம்பெயர் தமிழர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றுள்ளனர். பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் நாமல் குழுவினரை புலம்பெயர் தமிழர் வெற்றிலை கொடுத்து வரவேற்ற நிகழ்வானது மக்கள் மனங்களில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதற்கான குறியீடாக பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் பேசிய பா.உ நாமல் ராஜபக்ச:

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் எம் நாட்டின் மக்கள் 62 லட்சம் பேர் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர் அதிமேதகு ரணில் விக்கரமசிங்க அவர்களுடன் இணைத்து அரசொன்றை நிறுவினார். அவ்வரசுக்கு அவர்கள் இட்ட பெயர் நல்லாட்சி. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையிலிருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் கள்வர்கள் என்று பெயர் சூட்டினர். ஆனால் அந்த அமைச்சர்கள் மூன்று மாதங்களின் பின்னர் மைத்திரிபால அவர்களின் அரசில் இணைந்தவுடன் அவர்கள் சுத்தமானவர்கள் ஆனார்கள். அவ்வாறு அரசுடன் இணையாதவர்கள் இன்றும் கள்வர்களாகவே இருக்கின்றனர்.

இந்த அரசாங்கம், சுயாதீன நீதிமன்று தொடர்பில் பேசியது, சுயாதீனமான பொலிஸ் திணைக்களம் ஒன்று தொடர்பில் பேசியது. ஆனால் அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்கள் செல்வதற்குள் மத்திய வங்கியில் வரலாற்றில் இடம்பெறாத மாபெரும் கொள்ளை ஒன்று நடைபெற்றது. இவ்வாறன ஒரு கொள்ளை இடம்பெற்றுள்ளது என இந்நாட்டின் ஜனாதிபதியே பகிரங்க மேடைகளில் பேசுகின்ற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

பிரத மந்திரி வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என குறிப்பிடுகின்றார் என்றால் நிலைமை தொடர்பில் நான் உங்களுக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. இன்று நாட்டு மக்கள் மீது தாங்கமுடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வாழுகின்ற உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு நாட்டின் வரி விதிகள் தொடர்பில் நன்கு தெரியும். ஆனால் இன்று அரசிடம் ஒழுக்கமான வரிக்கொள்கை இல்லை. மக்கள் மீது சுமத்தப்படுகின்ற வரியானது, நியாமனதாகவும் அவர்கள் செலுத்துகின்ற வரிப்பணம் நாட்டின் மூதலீடுமாகுமாக இருந்தால் மக்கள் விருப்புடன் அதைச் செலுத்துவார்கள்.

மஹிந்த ராஜபக்ச அரசு சீனாவிடம் பெரும் கடனை பெற்றுள்ளதாக கூறினார்கள். அக்கடனை செலுத்த முடியாது என்றார்கள். கடனை செலுத்துவதற்காக மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்யவுள்ளதாக கூறினார்கள். ஆனால் அண்மையில் வியட்னாமில் நடைபெற்ற உலக பொளாதார பேரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகையில் „இலங்கை சீனாவிற்கு கடனாளிகள் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் அவர்கள் இத்தனை காலமும் கூறியது யாது?

அண்மையில் ஐ.நா விற்கு சென்றிருந்த ஜனாதிபதி „உள்நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நாங்கள் ஒரு உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவோம், வெளியார் தலையிடமுடியாது" என்று தெரிவித்திருந்தார். மறுபுறத்தில் கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அனுசரனை வழங்கியுள்ளனர். இது பரஸ்பர முரண்பாடான நிலைமையாகும். இவர்களிடம் தெளிவான வெளிநாட்டுக்கொள்கையொன்று இல்லை என்பதே இதனூடாக புலனாகின்றது.

இந்தநாட்டிலே ஜனாதிபதியை கொலைசெய்கின்ற சூழ்ச்சி ஒன்று பிரதமரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குறித்த டிஐஜி நாட்டை விட்டு ஓடலாம் என்று சிஐடி யினர் அவரது கடவுச்சீட்டை தடுக்குமாறு நீதிமன்றை கோருகின்றனர். ஆனால் ஓய்வு பெற்றிருந்த டிஐஜி அனுர சேனநாயக அவர்களை கைது செய்து சிறையிலடைத்தே விசாரணைகளை மேற்கொண்டனர். அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்களையும் சிறையிலடைத்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் குறித்த டிஐஜி யை கைது செய்யவில்லை என்றால் இந்நாட்டில் யாவருக்கும் சட்டம் பொதுவானது என்பது பொய்யாகியுள்ளது.

நான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஒரு வேண்டுதலை விடுக்கின்றேன். எனது லம்போகினி , தங்கத்தாலான குதிரை மற்றும் எனது 18 பில்லின் டொலர்களுக்குரிய வங்கிக்கணக்கு என்பவற்றை தேடித்தாருங்கள். அவ்வாறு எனது 18 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருவீர்களானால் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அந்த 18 பில்லியன் டொலர்களும் நாட்டிலிருந்தால் 1 டொலரின் பெறுமதி 100 ரூபாவாக மாறும்.

பொய்களுக்கு மேல் பொய்களை கூறி, ஒரு பொய்யை மறைப்பதற்கு நூறு பொய்களை கூறி வருகின்றனர். பிணை முறி வழக்கின் நிலைமைகளை மாற்றுவதற்கு தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக நீதிபதி திணைக்களத்தின் பிரதானி ஒருவர் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசி ஒன்றை வழங்கியுள்ளதாக நிலைமைகள் உள்ளது.

இன்று நாட்டிலே ஜனநாயகம் மரணித்து விட்டது. பாராளுன்றில் உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்படுகின்றது. ஆனால் அன்று இலங்கையிலே கருத்துச் சுந்திரம் ஊடக சுதந்திரம் என ஓலமிட்ட மேற்குலக நாடுகள் மௌனிகளாக நிற்கின்றனர்.

இந்நிலையிலே நாட்டுக்கு வெளியே வாழுகின்ற இலங்கையர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் மேன்மைக்காக உழைக்க முன்வரவேண்டும். உங்களிடையே வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை துறந்து நாட்டை இன்றுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீட்க முன்வரவேண்டும். அதற்கான காரணம் மைத்திரி-ரணில் அரசாங்கம் ராஜபக்சர்கள் மீண்டும் அரசை கைப்பற்றக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக செயற்படுகின்றார்களே தவிர அவர்களிடம் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் கரிசனை கிடையாது. ஆனால் எமக்கிருக்கின்ற பிரச்சினை இந்நாட்டின் முன்னேற்றமாகும். எங்களுக்கு தெரியும் நீங்கள் அனைவரும் இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் உங்களுடைய ஆண்மா தாய்நாட்டிலேயே இருக்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நலனை காப்போம் என்று கூறி எனது உரையை முடிக்கின்றேன் என்றார்.





Read more...

Sunday, October 14, 2018

மக்கள் நீதி மன்றம் உருவானது. சந்தா கட்டாத தொழிலாளி! பந்தா காட்டாத அரசியல்வாதி !

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான 'மக்கள் நீதி மன்றம்' தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் இன்று (14) நடத்தியது.

மன்றத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஆர் சிவராஜா தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கே. உதயகுமார், பொருளாளராக செல்வராஜ், உபசெயலாளராக டி .தேவநாதன் தேசிய அமைப்பாளராக எஸ்.விமலனேசன், உபதலைவராக ஏ .பிசிவபெருமாள் ஊடக செயலாளராக மணி ஸ்ரீகாந்த் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அங்கு உரையாற்றிய சிவராஜா பேசுகையில் :
இன்று ஆரம்பிக்கப்படும் இந்த அரசியல் பேரியக்கம் மக்களுக்கானது. எந்த கட்சிக்கு ஆதரவுக்காகவோ அல்லது யாரின் ஊதுகுழல்களாகவோ நாங்கள் இருக்கப்போவதில்லை. காலப்போக்கில் எங்கள் செயற்பாடுகளை பார்த்து மக்கள் அதனை தெரிந்துகொள்வார்கள். புதிய புரட்சியொன்றை நாங்கள் ஏற்படுத்துவோம்.

இன்று , வடக்கு கிழக்கு மலையகம் ,நான் பெரியவன் நீ சிறியவன் , நீ பணக்காரன் நான் ஏழை , மேல்ஜாதி கீழ் ஜாதி , படித்தவன் படிக்காதவன் என்ற நிலைமை உள்ளது . அந்த நிலைமை தமிழ் பேசும் சமூகத்தில் மாறவேண்டும். செய்யவேண்டிய விடயங்கள் எவ்வளவோ உள்ளன.

அரசியல்வாதிகளை அரசியல் கட்சிகளை குறைசொல்லிக் கொண்டிராது தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விழித்தெழ வேண்டும். அரசியலால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதற்கப்பால் மக்கள் சக்தி என்ற ஒன்று உள்ளது..

இன்று எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் அரசிடம் மண்டியிட்டுக் கிடந்தாலும் அவர்கள் என்ன சாதித்து கிழித்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி நாம் நேரத்தை வீணடிக்காமல் புதிய அத்தியாயம் நோக்கி செல்ல வேண்டும்..

தமிழருக்கு நீதியான ஓரு அரசியல் தீர்வு , சமவுரிமை , அரச தொழில்வாய்ப்புக்களில் இன விகிதாசாரம் , சுயதொழில் வாய்ப்புக்கள் அதற்கான பயிற்சிகள் , பெண்களுக்கான உரிமைகள் , தோட்டத் தொழிலாளர்கள் நலன் , மாணவர்களின் எதிர்காலம் குறிப்பாக சந்தா கட்டாத தொழிலாளி பந்தா காட்டாத அரசியல்வாதி என்ற நிலையை ஏற்படுத்த நாங்கள் பாடுபடுவோம்.

இவை தவிர இதர பல சமூக விடயங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளன.

களுத்துறை மாவட்டம் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதி. எங்களுக்கென தேசிய பாடசாலை இல்லை. இருக்கும் பாடசாலைகளின் நிலைமை கூட திருப்தியானதாக இல்லை. தமிழ் வாக்குகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். அப்படி புறக்கணிக்கப்பட்டமையும் நன்று. அதனால் தான் இன்று நாங்கள் சொந்தக் காலில் நிற்கிறோம்..

எங்களின் இந்த ஆரம்பத்தை பலர் மாற்றுக் கண் கொண்டு பார்ப்பார்கள், சேறை பூசுவார்கள், கல்லெறிவார்கள், அவற்றை எல்லாம் துடைத்தெறிந்து நாங்கள் முன்னேற வேண்டும். குரைக்கும் நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்து கொண்டிருந்தால் நாங்கள் இலக்கை தவற விட்டுவிடுவோம்..

எனவே இந்த பயணத்தில் இணைந்து கொள்ள அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும்.. களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த இயக்கம் ஏனைய பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் பரவும் .







Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com