Sunday, October 14, 2018

கொழும்பில் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய டேவிட் நோர்த்தின் விரிவுரையை கேட்க பெருமளவானோர் கூடினர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய விரிவுரையை கேட்க, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் புதிய நகர மண்டபத்துக்கு முன்னூறு வலுவான பார்வையாளர்கள் கூடினர். இந்த விரிவுரை, "வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்திற்கான இன்றைய போராட்டமும்" என்ற தலைப்பில் இடம்பெற்றது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவரான நோர்த், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பின் பேரில் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 3 அன்று, கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இதே தலைப்பில் அவர் ஒரு விரிவுரையை ஆற்றினார். அந்த விரிவுரைக்கும் உற்சாகமான ஆதரவு கிட்டியது.

1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஏற்பாடு செய்து வரும் தொடர் விரிவுரைகளின் ஒரு பகுதியாகவே இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனுடன் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவும் கொண்டாடப்பட்டது.




சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் விளைவாக, கூட்டத்திற்கு அதிகமான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நனவுகொண்ட புத்திஜீவிகளும் தீவின் பல பாகத்தில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், SEP மற்றும் IYSSE உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளடங்கிய ஒரு பெரிய குழுவினர் கொழும்பில் நடந்த நிகழ்வுக்கு தீவின் வடக்குப் பகுதியிலிருந்து சுமார் 250 மைல் தூரம் பயணம் செய்து வந்திருந்தனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ், கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டுவிழா சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்: "ஒருபுறம், பிரதான ஏகாதிபத்திய சக்திகள், அணு ஆயுதங்களால் நடக்க கூடிய மூன்றாம் உலகப் போரை நோக்கி உந்தப்படுகின்றன. அதேவேளை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுகின்றன. மறுபுறம், இந்தப் போர் தயாரிப்புகளுக்கு எதிராக, இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் பரவலாக தொழிலாள வர்க்கம், வர்க்கப் போராட்ட அலைக்குள் நுழைந்துள்ளது," என்று டயஸ் தெரிவித்தார்.

"முழு உலகப் பொருளாதார அமைப்பு முறையும் உடைந்து கொண்டிருக்கிறது. ஒரு மாற்று சமூக அமைப்பு முறையை கட்டியெழுப்ப வேண்டும்,” என பேச்சாளர் வலியுறுத்தினார். "அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னுடன் அணிதிரட்டிக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், சோசலிச குடியரசுகளின் ஒரு உலக ஒன்றியத்தை உருவாக்குவதன் மூலமே இதை நிறைவேற்ற முடியும், என டயஸ் கூறினார்.

விஜே டயஸ்

"சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கைவிட்டதன் விளைவாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகரமான விளைவுகளுக்கு இலங்கை ஒரு பிரதான உதாரணமாகும்" என டயஸ் சுட்டிக்காட்டினார். லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1964ல் பப்லோவாத திருத்தல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் செய்த காட்டிக்கொடுப்பை அவர் சுட்டிக்காட்டினார். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) சர்வதேச சோசலிசத்தின் கொடியை மீண்டும் உயர்த்துவதற்காகவே 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது.

டயஸ் தொடர்ந்தார்: "இந்த வரலாற்றை நாம் நினைவுகூருவதற்கு காரணம், இன்றைய வர்க்கப் போராட்டங்களுக்கு அதன் படிப்பினைகள் அவசியமாகும். சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும், தெற்காசிய சோசலிச குடியரசின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கு இந்த படிப்பினைகள் மிக அடிப்படையானவை ஆகும்."

நோர்த்தை அறிமுகம் செய்த டயஸ், அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் மீது ஒரு ஆளுமை கொண்டவர் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக 1985-86 தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகளுடனான பிளவின் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தீர்க்கமான தலைமையை வழங்கியுள்ளார். 1990களின் நடுப்பகுதியில் அனைத்துலகக் குழுவின் கழகங்கள் கட்சிகளாக மாற்றப்பட்டதையும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வெளியீடாக 1998ல் உலக சோசலிச வலைத் தளம் நிறுவப்பட்டதையும் டயஸ் சுட்டிக்காட்டினார். நோர்த் எழுதிய பல முக்கியமான புத்தகங்களையும் அவர் காட்சிப்படுத்தினார்.


கொழும்பு கூட்டத்தின் பார்வையாளர்களின் ஒரு பகுதியினர்

அவருடைய விரிவுரையின் ஆரம்பத்தில், இன்று சோசலிசத்திற்கான போராட்டத்தில் வரலாறு தொடர்பான படிப்பினைகளின் தீர்க்கமான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: “வரலாற்று அனுபவம் பற்றி தொடர்ச்சியாக, விமர்சன ரீதியான மறுஆய்வு செய்வதன் மூலமே புரட்சிகர இயக்கம் அதன் வேலைத்திட்டத்தையும் செயல்பாட்டையும் அபிவிருத்தி செய்கின்றது. வரலாறு தொடர்பான ஒரு குறிப்பு இல்லாமல், வர்க்கப் போராட்டத்தின் கொந்தளிப்பான அலையின் ஊடாக பயணிப்பது சாத்தியமற்றது. அதற்கும் மேலாக, கடந்த நூற்றாண்டின் மிகப்பாரிய புரட்சிகர நிகழ்வுகளைப் பற்றி கற்றுக் கொள்ளாமல் ஒரு புரட்சிகரக் கட்சி எவ்வாறு அதன் இளம் உறுப்பினர்களையும், முழு தொழிலாள வர்க்கத்தையும் பயிற்றுவிக்க முடியும்?”

"ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் படிப்பினைகளைக் கற்று கிரகித்துக்கொள்ள வேண்டியதன்" அவசியத்தை அனைத்துலகக் குழுவின் தலைவர் விளக்கினார். “அந்த படிப்பினைகள் கடந்த நூற்றாண்டின் அடிப்படை தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டமாகும். மற்றும் தொழிலாளர்களும் நடப்பு உலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சரியான பாதையை அக்கறையுடன் தேடும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தீர்க்கமான அரசியல் மூலோபாயப் பிரச்சினைக்குமான மிக ஆழமான மற்றும் உடனடி முக்கியத்துவம் உடையதாக இந்த படிப்பினை உள்ளது.” நோர்த் நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் அரசியல் மூலங்களின் சுருக்கமான சாராம்சத்தை வழங்கினார்.

ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, உலகத்தை அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளதை நோர்த் சுட்டிக் காட்டினார். “சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவம் மனிதகுலத்துக்கு "சமாதானம், செழுமை மற்றும் அனைவருக்குமான ஜனநாயகத்தை" வழங்கும் என்ற ஆளும் உயரடுக்கின் பிரகடனங்களுக்கு நேர்மாறாகவே இந்தப் போர் தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.”

"பாசிசம் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் அபாயத்தை பற்றி பரவலாகப் பேசப்படுவது" பற்றி நோர்த் சுட்டிக் காட்டினார். அவர் அண்மையில் வெளியான பல புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டினார். வலதுசாரி பாசிச சக்திகளின் இத்தகைய எழுச்சிக்கான உண்மையான மூல காரணத்தை விளக்குவதற்கு இந்த ஆசிரியர்களில் எவராலும் முடியாமல் போயுள்ளதைப் பற்றி குறிப்பிட்ட நோர்த் கூறியதாவது: "பாசிசம் பற்றி மிகச் சிறந்த பகுப்பாய்வை செய்த ட்ரொட்ஸ்கி, இதற்கான அரசியல் மூல காரணம் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளதுடன், பூகோளப் பொருளாதார நெருக்கடி, சர்வதேச புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உள்நாட்டு சமூக மோதலினதும் அழுத்தத்தின் கீழ், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதின் உடைவானது தடுத்துநிறுத்தமுடியாத போக்காகிவிட்டது."

"முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தத்தில் அதனாலேயே முன்வைக்கப்படும் அரசியல் மாற்றீடுகள், ஒன்று பாசிச காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசப் புரட்சியே ஆகும்”, என நோர்த் தொடர்ந்தார். “இதில் ஏதாவதொன்றின் வெற்றியே மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாசிசத்தின் வெற்றியானது மனித நாகரீகத்தின் மரணத்தை குறிக்கும். சோசலிசப் புரட்சியின் வெற்றியானது ஒரு புதிய, ஆச்சரியமூட்டும் அளவில் மனித நாகரீகத்தின் புத்துயிர்ப்புக்கும் மறுமலர்ச்சிக்குமான சாத்தியத்தை திறந்து விடும். எம் முன்னுள்ள தேர்வு இதுவே ஆகும்."


கொழும்பு கூட்டத்தில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

அனைத்துலகக் குழுவின் சார்பிலும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பிலும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 ஆவது ஆண்டுநிறைவிற்கு வாழ்த்து தெரிவித்த நோர்த், இலங்கை கட்சியானது ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக பாரிய கடினமான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் போராடியது, என்று அறிவித்தார்.

விரிவுரையின் முடிவில் பார்வையாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நோர்த் பதிலளித்தார். அவருடைய பதில்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டன. பார்வையாளர்களின் வசதிக்காக, இந்த விரிவுரை ஆங்கிலத்தில் இருந்து சிங்களம் மற்றும் தமிழுக்கு ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வருகை தந்த பலர் கூட்டத்திற்கு முன்பும் பின்பும் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசினர்.


கேஷானி

கொழும்பு பல்கலைக்கழக மாணவரான கேஷானி, முன்னர் சோசலிசம் நடைமுறை சாத்தியமற்றது என்று நினைத்துக்கொண்டு அதை நம்பவில்லை எனக் குறிப்பிட்டார். "ஆனால் பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களுடனான நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இந்த உலக நிலைமையில் சோசலிசத்திற்கு பெருகிவரும் வாய்ப்பைப் பற்றி இப்போது நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச முன்னோக்கு குறிப்பாக சோசலிசத்திற்கான எனது ஆர்வத்தை பலப்படுத்தியது. சோசலிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் வேறு எவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை."

நோர்த்தின் விரிவுரையை பற்றிக் குறிப்பிட்ட கேஷானி, தான் நிறைய கற்றுக் கொண்டாதாகவும், பல கேள்விகளுக்கு விடை கிடைத்ததாகவும் கூறினார். "வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், மற்றும் சர்வதேச முன்னோக்கை நாம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியமும் நன்கு தெளிவுபடுத்தப்பட்டது. நான் ஆர்வமாக இருக்கிறேன். பூகோளமயமாக்கத்தின் கீழ் முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதன் மூலமே பதிலளிக்கமுடியும்."

இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பின் வரலாறு தனக்கு புதிய விடயம், ஆனால் அது ஒரு முக்கியமான படிப்பினையாக இருந்தது என்று கேஷானி கூறினார். "இந்த விஷயங்களைப் பற்றி கலந்துரையாடவும் அதற்கான முன்னெடுப்பை செய்யவும் நான் முயற்சி செய்கிறேன்," என்று அவர் கூறினார்.


பேர்சி

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி-சாரா ஊழியரான பேர்சி, நோர்த்தின் விரிவுரையில் கலந்துரையாடப்பட்ட அனுபவங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானவை என்று கூறினார்: "இந்த படிப்பினை இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது. தொழிலாள வர்க்கத்தின் வலிமையை வலியுறுத்துவதிலேயே சோசலிச சமத்துவக் கட்சி வேறுபடுகிறது. அந்த சக்தி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு இது போன்ற இன்னும் விரிவுரைகள் தேவை என்று நான் நினைக்கிறேன். பல்கலைக்கழகத்தில் ஒரு தொழிலாளி என்ற வகையில், பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டங்களை நான் கண்டிருக்கிறேன். ஒரு சர்வதேச முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் வழங்கப்படாவிட்டால், தொழிலாள வர்க்கம் வெற்றி பெற முடியாது."

உலகின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச சோசலிசம் தேவை என்று தான் நம்பியதாக வடக்கில் பருத்தித்துறையில் இருந்து வந்திருந்த தனேஸ்வரி கூறினார். ஒரு உலகளாவிய உற்பத்தி முறையிலேயே தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர், என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொடூரமான 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரைப் பற்றி பேசிய தனேஸ்வரி, அழிவுகரமான விளைவுகளோடு மக்கள் தேசியவாதத்திற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதை இப்போது புரிந்துகொண்டிருந்தார். "தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் மக்களுக்கு ஆதரவளிக்கவில்லை. யுத்தம் முடிவடைந்த போதிலும், தமிழ் மக்களின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சி தொடர்கிறது." இந்த கூட்டத்திற்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இனப் பிரிவுகளைக் கடந்து வந்து கலந்து கொண்டதை அவர் பாராட்டினார்.

நோர்த்சீ தொழிற்சாலையின் கணக்காளர் ஞானவேல் கூறியதாவது: "இந்த நிகழ்வில் பங்குபற்ற நான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு ஒரு மாற்றம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

"டேவிட் நோர்த் கட்சியின் வரலாற்றைப் பற்றி பேசினார். முதலாளித்துவம் உலகத்தை ஆட்சி செலுத்துகையில், தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியில் சோசலிசத்தை நோக்கி வழிநடத்துவதே நல்லது."

இருப்பினும், கட்சியின் கொள்கைகள் இன்னும் பரந்த வெகுஜனங்களை எட்டியிருக்கவில்லை, அதன் நடவடிக்கைகள் அதிகரிக்கவும் விரிவுபடுத்தவும் வேண்டும் என்று அவர் கூறினார். இத்தகைய கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில், கட்சியின் நிலைப்பாடுகள் விளக்கப்பட வேண்டும்.

இலங்கையின் பிரதான கருத்துச்சித்திரம் வரைபவரான அவந்தா ஆடிகல, உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறியதாவது: "என் பார்வையில், ஒரு தேசிய கட்டமைப்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பேசுவது முற்றிலும் முட்டாள்த்தனமானது. ஜே.வி.பி., முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஏனைய போலி இடது கட்சிகள் இலங்கையில் நிகழ்வுகளுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசுவதில்லை.

"ஸ்ராலினிசம் மற்றும் ஏனைய திருத்தல்வாத போக்குகள் பற்றி விரிவுரையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மிக முக்கியமானவை. பலர் சோசலிசத்தை ஸ்ராலினிசம் அல்லது குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் வடிவங்களாக தவறாக அடையாளம் காண்கின்றனர். எந்தவொரு கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான முன்னோக்கை வழங்காததால், தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியால் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்."

களுத்துறையில் இருந்து வந்த மாணவனான அஞ்சன கூறியதாவது: "முதலாளித்துவவாதிகள் ஒரு உலகப் போரை நோக்கி உந்திச் செல்லப்படுகின்றனர் என்று விரிவுரையில் குறிப்பிடப்பட்டது. ஒரு விஞ்ஞான மாணவன் என்ற முறையில், இதுபோன்ற அணுசக்தி போர் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்துள்ளேன்.

“நோர்த், பாசிசம் மீண்டும் தலைதூக்குவதை பற்றிக் கூறினார். 1930 களில் ஜேர்மனியில் மக்கள் இதே நிலைமையை எதிர்கொண்டனர். ட்ரொட்ஸ்கி ஜேர்மனியில் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு இடையே ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அந்த நேரம் அந்தக் கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக, ஹிட்லர் பதவிக்கு வந்தார், இதனால் பேரழிவுகரமான உலகப் போருக்கு வழிவகுக்கப்பட்டது. 1938ல், ட்ரொட்ஸ்கி முதலாளித்துவத்தின் நெருக்கடியை விளக்கியதும் மற்றும் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்."

ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பிற கட்சிகள் சர்வதேச சோசலிசத்தைப் பற்றி பேசவில்லை என்று அஞ்சன சுட்டிக்காட்டினார்.

டேவிட் நோர்த்தின் விரிவுரையால் ஏற்பட்ட ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பார்வையாளர்கள், கட்சியின் நிதிக்கு 28,800 ரூபாய்களை வழங்கினர். கூட்டத்தில் நடந்த புத்தக விற்பனையில் 13,500 ரூபாய் மதிப்புள்ள மார்க்சிச இலக்கியங்களையும் அவர்கள் வாங்கினர்.

பல தொலைக்காட்சி அலைவரிசைகளும் மற்றும் வானொலி நிறுவனங்கள் கூட்டத்தை பதிவு செய்தன. அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக் காட்சி (ITN), தனியார் நிறுவனமான சியத்த (Siyatha) மற்றும் ஹிரு (Hiru) ஒளிபரப்பாளர்கள் அதில் அடங்கும். IBC, லங்காசிறி மற்றும் மாத்யவேதியா (சிங்களம்) ஆகிய இணையத்தள ஊடகங்களும் வந்திருந்தன.

Read more...

சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற கோஷத்துடன் நடைபயணம்.

கிளிநொச்சியில் நேற்று(13) காலை சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம வரை சென்றடைந்தது. இவ்வூர்வலத்தில் சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், சிறுவர்களே எதிர்கால தூண்கள் என்ற வாசகங்கங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் இடம்பெற்றது.







Read more...

தற்கொலையை கொலை செய்வோம்! அ. குகாந்தன்

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"

இந்தப் பதிவினை ஆன்மீகம் லௌகீகம் கலந்து சில ஒப்பீட்டு அடிப்படையில் தரலாம் என நினைக்கிறேன் ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்துலக மனிதர்களுக்கான பதிவுதான் இது பல வருடங்களில் கண்கள் கண்ட,கேட்ட,படித்த தற்கொலை தானாக தன்னை மாய்த்துக் கொள்ளும் விடயம் சம்பந்தமாக எழுத வேண்டும் விழிபுணர்வு தர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆதங்கம் இன்று இப்பதிவினை எழுத வைத்து விட்டது;

பண்டைய காலத்தில் இறைவனை காணமுடியவில்லையே ... அல்லது அடையமுடியவில்லையே என்ற ரீதியில் இறைவன்பால் கொண்ட தீராக் காதல் என்பனவற்றாலே தன்னை இறை அர்ப்பணம் செய்திடத் துணிந்து உயிரை மாய்த்திட எத்தனிக்கும் வேளை இறைவன் அவர்களின் உன்னத பக்தியினை உலகிற்கு உணர்த்திட திருவிளையாடல் புரிந்த வரலாற்றுக் கதைகள் பலப்பல புராண இதிகாசங்கள் வேதங்கள் திருமறைகள் சமயம் சார்ந்த நூல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன; ஆனால் இன்றைய காலமோ இறைவனை மறந்து மாயையின்பால் ஏற்பட்ட உடல் கவர்ச்சி, மோகம், காமம் இறுதியில் ஏமாற்றம் என குறுகிய வட்டத்தில் சிக்குண்டு அதெல்லாம் பொய்,போலி என உணரும் பட்சத்தில் மன அழுத்தம் அதிகரித்து தன்னிலை மறந்து தன்னை தானாக மாய்க்கும் கலாச்சாரம் பூதாகரமாக உருவெடுத்து போதைப்பொருளினைப் போல தற்கொலை எனும் போதைப் பொருள் இன்று நாடெங்கிலும் பேசு பொருளாகவும் பணமின்றி மனம் மூலம் தன்னிடமே தானே கொள்வனவு செய்யக்கூடிய மலிவான பொருளாகவும் மாற்றமடைந்து பல மனங்களை உடையச் செய்து இன்றைய சமூகத்தோடு பின்னிப் பிணைந்து விட்டதென்றே கொள்ள முடிகிறது.

ஆம்! அன்றே உலகிற்கு ஒளியூட்டிய விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் தன் ஆரம்பக் கல்வி மறுக்கப்பட்டும்; அதே போல அமெரிக்க ஜனாதிபதியாக வலம் வந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் தெரு விளக்கு ஒளியில் படித்தும் அவர்கள் போல இன்றும் பெயர் குறிப்பிட்டு கூறுமளவுக்கு போற்றுமளவுக்கு உள்ளவர்கள் பலப்பலர் இவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்காதா? இவர்களுக்கு ஏன்? தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு மாறாக தன்னை உயர்த்த வேண்டும் என்றும் அதற்காக எத்தனை கடின உழைப்பை செய்துள்ளார்கள்; ஸ்காட்லாண்டில் ராபர்ட் புரூஸ்(1274 AD - 1329 AD) என்ற மன்னன் பல முறை எதிரிகளிடம் தோற்று படைகள், நாடு, கௌரவம் எல்லாவற்றையும் இழந்து மலைக் குகை ஒன்றினுள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மனமுடைந்து போய் விரக்தியுற்று ஒழிந்திருந்த வேளை அவன் மனதிற்கு தெம்பூட்டும் விதமாக சிலந்தி ஒன்று தனது வலையினை அமைக்க ஒரு புறமிருந்து மறுபுறம் பாய்ந்து வலையினை அமைக்க முற்படும் வேளையில் அதன் எச்சிலால் ஆன நூல் அறுவதும் பின்னர் அது விடாமல் முயற்சிப்பதுவுமாக சுமார் 999தடவைகள் தோற்று விட்டது இருந்தும் அதன் 1000மாவது பாய்ச்சலில் சரியாக மறு முனையில் நூல் அறுந்து போகாமல் ஒட்ட வைத்து விட்டது! உடனே அக் குகையிலிருந்து புறப்பட்ட மன்னன் தனது படைகளை மீளவும் மீளவும் திரட்டி வெற்றிவாகை சூடினான் என்பது வரலாறு.

இப்படி ஆயிரமாயிரம் மனதுக்கு வலிமை தரும் உண்மைச் சம்பவங்கள் புராண இதிகாச கதைகள் உள்ளன போது இன்றைய சமூகம் தற் கொலைக் கலாச்சாரத்தை முன்னெடுப்பது மிகுந்த வேதனை கலந்த அவமானம்.

ஆன்மீக ரீதியில் அன்று வாழ்ந்த ஞானிகள் சித்தர்கள் யோகிகள் எத்தனை எத்தனையோ ஞானப் பொக்கிசங்களை எம் தலைமுறைக்காக விட்டுச் சென்றுள்ளனர் ஆனால்..... அதனைப் படித்திட இன்றைய தலை முறை முயற்சி எடுக்கவுமில்லை எடுப்பதற்காக தூண்டப் படவுமில்லை; காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி தகவல் தொடர்புக்கென நல் நோக்கத்துக்காக உருவாக்கம் பெற்ற கணணி, தொலைக்காட்சி, கைப்பேசி தொழில்நுட்ப சாதனைகளால் விளைந்த சாதனங்கள் பல்கிப் பெருகி பலரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கி பல வீடுகளை மயான பூமியாக்கிக் கொண்டு வருகிறது;

"தீர்வினைத் தேடுவார் இல்லை இத் தீவினிலே 'தீ' வினை தேடுவோர் பலர் உள்ளனரே! தேவனைத் தேடியே உளம் நலம் பெற வேண்டியோர் இன்று தூக்கெனும் கயிறினில் தொங்கியே ஆவிகள் சங்கமம் ஆகியே போகிறாரே" இது கட்டுரையாசிரியன் என் மன உணர்வு.

தற்போதைய உலகில் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய ஸ்திரத்தன்மையினை தானாகவே உருவாக்க முற்பட வேண்டும் அதற்காகவே இறை அனுஸ்டானங்கள் ஒவ்வொரு மதங்களிலும் வலியுறுத்தப் படுகிறது ஆக மதங்களின் உருவாக்கம் மனிதனை மதம் பிடிக்கச் செய்திட அல்ல மதம் பிடித்த ஐம் புலன்களை அடக்கியாளும் தன்மையினையே வலியுறுத்துகிறது ஆனால் தவறான கண்ணோட்டம் தவறான புரிதல் தவறான வழிநடாத்தல் இன்றைய மதம் சார்ந்த கலவரங்களுக்கு வித்திட்டு வேடிக்கை காண்பிக்கிறது.

தற்போதைய தலை முறையின் தூர நோக்கு சிந்தனைகள் தடம் புரண்டுள்ளன அல்லது மறைமுகமாக தொழில் நுட்ப சாதனங்கள் பாவனைகள் மூலமாக தடப்புரள்வினை ஏற்படுத்தி வருகின்றன.

இங்கே முதல் அங்கம் வகிக்கிறது பால் கவர்ச்சி இந்த பால் கவர்ச்சி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் என்றில்லை ஆண் பெண் என இன வேற்றுமைகளை கொண்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும் ஆனால் மனிதனுக்கு சற்று அதிகமாகவே இந்த பால் கவர்ச்சி எனும் உணர்ச்சி ரீதியான வெளிப்பாடு காணப்படுகிறது நிதர்சனம்.

அடுத்ததாக மோகம் இந்த மோகிப்புக்கு பெயர்தான் மோகினி அல்லது மன்மதன் என்கிறார்கள் உலகின் தோற்றம் ஆதாம் ஏவாளாக இருக்கட்டும் அல்லது வேறு எதுவானதாகவும் இருக்கட்டும் மோகிப்பு எனும் மகுடிதான் மனிதனை அடுத்தபடியான காமம் எனும் நிலைக்கு கொண்டு செல்கிறது இனி அந்த மாய வலை மிகவும் பாதுகாப்பாக பின்னப்பட்டு அந்த வலையில் அகப்பட்ட ஆணோ பெண்ணோ மீண்டு வருவது மிக மிக இலகுவான காரியமல்ல; ஒரு ஆண் தான் காமுற்ற பெண்ணை அடைய உடல் மன ரீதியாக பல தியாகங்களை செய்கிறான் அதே போல பெண்ணும் செய்கிறாள் ஆனால் காலப் போக்கில் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்பதைப் போன்று வாழ்வில் ஒரு சலிப்புத் தன்மை ஏற்படுகிறது அங்கே காதல் எனும் புனிதம் சோரம் போகிறது பின்னர் பூதாகரமான பூகம்பம் ஏற்படுகிறது இதனால் கண்ட கனவுகள் ஏமாற்றம் எனும் நிலையடையும் போது வெறுப்பு சோர்வு தனிமை வாட்டி வதைக்கிறது ; இங்கேதான் மனிதன் தன் சுயத்தை இழக்கிறான் அல்லது இழக்க வைக்கப் படுகிறான் தோல்வி அது ஆணோ சரி பெண்ணோ சரி மனம் என்பது இருவருக்குமே ஒன்றுதான் உடல் ரீதியான பலம் மனத்தின் உறுதியை தீர்மானிக்கும் கருவி என்பது ஏற்க முடியாத ஒன்று; இனி வாழ்ந்து என்ன பயன் எனும் கேள்விக் கணைகளால் அந்த அஸ்திரங்களால் ஒவ்வொரு நொடியும் வெறுமை நோய் அவர்களது வைராக்கியத்துக்கு தீ மூட்டி காலன் அகால மரணத்திற்கு கயிற்றினை வழங்கி விட்டு காத்திருக்கிறான் ஆம் அந்த மரணத்திற்கு முன்னரான ஐந்து வினாடி இறை பிரார்த்தனையினை செய்ய மறந்தவர்கள் மரண தேவனின் பிடியில்; அந்த இறை பிராத்தனையினை செய்தவர்கள் இன்று உலகின் உச்சாணிக் கொம்பில் வைத்து போற்றப்படும் ஞானவான்களாக மிகப் பிரபலமடைந்தவர்களாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார்கள்! அந்த வகையில் நானும் அந்த இறுதி ஐந்து வினாடி பிரார்த்தனையில் ஈடுபட்டவனாக இனி மேல் தற் கொலை என்ற எண்ணத்தினை எதிர்ப்பவனாக இன்று இப்பதிவினை முன் வைக்கிறேன்.

பாலும் நீரும் கலந்து வைத்தால் அன்னப்பட்சி பாலினை வேறாக்கி அருந்தி நீரினை மீதமாக வைக்கும் என்று கூறுகிறார்கள் அந்த அன்னப்பட்சி யாது? என்றால் ஒரு பறவை என்கிறார்கள் சரி அது புராணம் சார்ந்தது என்று விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் பாலோடு நீரைக் கலந்து அரிசிச் சோற்றினை அதனுள் சிறிது நேரம் போட்டுப் பாருங்கள் பாலினை மட்டும் உறுஞ்சி விட்டு நீர் மீதியாக பாத்திரத்தினுள் இருக்கும் இப்படி நம் முன்னோர்கள் பல மர்ம முடிச்சுக்களை நமது தேடலுக்காக விட்டுச் சென்றுள்ளனர் தேடாமல் "கண்டதே காட்சி கொண்டதே கோலம்"என்று காலச் சக்கரத்தினை அடுத்த பிரளயத்தினை நோக்கி நகர்த்துகிறோம் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.

சரி தற்கொலை என்றால் காதல் சார்ந்ததுதானா? என்று நீங்கள் கேட்பது என் காதிலும் ஒலிக்கிறது ஆம்! இங்கே முதன்மைக் காரணியைத்தான் கூறினேன் ஏனெனில் அதன் தாக்கமே 100க்கு99% உலகெங்கிலும் அதிலும் இலங்கை இந்தியா அதிலும் பாருங்கள் தமிழ் சமூகத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது; ஒருவர் பணத்தின் மேல் மோகம் கொள்கிறார் அதனைக் காதலிக்கிறார் இறுதியில் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார் உடலியல் ரீதியாக இங்கே பாதிப்புகள் நிகழவில்லை உள ரீதியாகத்தான் நிகழ்கிறது அதுதான் ஆரம்பத்தில் கூறியது போல ஆசை,மோகம்,காமம், இறுதியில் ஏமாற்றம் அதனடிப்படையில் விரக்தி அதனால் தற்கொலை இந்த அடிப்படை எதிர்வு கூறல்களே அனைத்து விதமான தற்கொலைகளுக்கும் அடிப்படைக் காரணிகள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பவற்றால் ஏற்படும் தற்கொலைகளுக்கும் காரணிகளாக அமைகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிதர்சனமாகிறது.

இனி ஒரு முடிவுக்கு வரவேண்டுமல்லவா! ஒன்று கல்விக்கூடங்களில் பாலியல் சம்பந்தமான முழுமையான விழிப்புணர்வு பாடங்களை கல்வி அமைச்சின் ஊடாக செயற்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பத்திரிகைகள் இணையத் தளங்கள் இவ்வாறான மரணப் பதிவுகளை விடுத்து அதனை தடுப்பதற்கான உள நலப் பதிவுகளை அடுக்கடுக்காக நாளாந்தம் அல்லது வாரம் ஒரு முறையேனும் பதிவிடல் வேண்டும்; அடுத்து வீட்டில் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த பேச்சு வார்த்தைகளை அதாவது ஒழிவு மறைவற்றவைகளாக இரகசியப் படுத்தாமல் வெளிப்படைத் தன்மையோடு இருக்கவேண்டும் ;உதாரணத்திற்கு தற்போது ஒருவரின் கைப்பேசிதான் அவரது லட்சண அவலட்சணங்களை காண்பிக்கிறது ஆயிரம் குப்பை மேடுகள் கைப்பேசியில் சேகரிக்கப்படுகிறது அதனால் பாதுகாப்பு இலக்கங்களால் மூடி வைக்கிறார்கள் தேவையற்றதை இல்லாதொழித்து தேவையானதை சேமித்து வையுங்கள் "மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம் வரும்" நாம் ஒரு விடயத்தை ஒழித்து வைத்து பாதுகாக்க முற்படும் போது...

குடும்ப அங்கத்துவருக்கான அவசரத் தேவைக்கு நமது பயன்பாடு உதவாமல் போகிறது அதனால் அவரும் தன் குப்பைகளை சேகரித்திட மற்றொரு கைப்பேசியை நாடுகிறார் திறந்த வெளியில் சுகமான பிராண வாயுவை சுவாசிக்கலாம் அடைக்கப்பட்ட அறையில் மூச்சுத் திணறல்தான் ஏற்படும் அவ்வாறே இந்த தொழில் நுட்ப உலகு இலத்திரனியல் படைப்புக்களை எம் மீது திணித்து பரந்த வெளியில் சுதந்திரமாக சஞ்சரிக்க விடாமல் சிறியதொரு அறையில் கூண்டுக் கிளியாக்கி வேடிக்கை பார்க்கிறது ஆகவே திறந்த வெளிச் சமூகமாக எமது வீட்டினுள்ளே உருவாகுவோம்.

அடுத்ததாக இறை வழிபாடு... காலை மாலை என இரு நேரங்களை கண்டிப்பாக ஒதுக்கி நேரமில்லாமல் திண்டாடும் நாம் வாழ்வின் நேரத்தை முக்கியத்துவப்படுத்தும் இந்த இறை வழிபாட்டுக்கென காலையில் 15 நிமிடம் மாலையில் 15 நிமிடம் ஒரு நாள் எனும் 24மணித்தியாலத்தில் 1/2மணித்தியாலத்தினை ஒதுக்கி குடும்பத்தோடு அமர்ந்திருந்து உங்கள் மத வழக்கப்படி வணங்கி விட்டு அப்படியே அமர்ந்திருந்து ஒரு மூன்றுதரம் "நான் ஆனந்தமாக இருக்கிறேன்" அடுத்து இன்னொரு மூன்றுதரம் "என் குடும்பம் என் சுற்றம் சூழல் உற்றார் உறவினர்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும் நின்மதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்கள்" இப்படி ஒரு மூன்று தரமும் "நான் எனது ஊர்மக்கள் எனது தேசத்து மக்கள் உலக மக்கள் என எல்லோரும் சாந்தி நிறைந்த சமாதானமான ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழ்கிறார்கள்" எனவும் தொடர்ந்து தனக்கான, தன் உறவுகளுக்கான, தன் சமூகம், ஊர், தேசம், நாடு, உலகம் என நேரான நல்லெண்ணம் கொண்ட பிரார்த்தனைகளை முன் வையுங்கள் பின்னர் ஒருசில நிமிடங்கள் அமைதியாக இருந்து நீங்கள் வெளி விடும் சுவாசத்தினையும் உள்ளீர்க்கும் சுவாசத்தினையும் கவனியுங்கள் பிரார்த்தனைகளின் போது எதிர்மறையான எண்ணங்கள் எழுந்தாலும் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் நேரானவற்றை மட்டும் நினைத்திடுங்கள் உதாரணத்திற்கு எனக்கு நோய் இல்லை, நான் கடும் சிக்கலாக இருக்கிறேன் இப்படியான நோய்,சிக்கல்,மரணம் போன்ற சொற்கள் எண்ணத்திலோ பிரார்த்தனைகளிலோ வருவதை தடை செய்ய வேண்டும் இவற்றை நான் கூறவில்லை மகா யோகி ஆன்மீகக்குரு திரு. எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளால் கூறப்பட்ட இலகுவாக மனதினை நம் வசப்படுத்திட அவர் அருளிய ஞான உபதேசங்களின் ஒரு பாகம்.

அடுத்து என்ன? ஒன்றுமே இல்லாத! அப்படியென்றால்? மன ரீதியாக அழுத்தங்கள் வரும் போது எதிர் கொள்ளும் ஆற்றலை வரவழைத்துக் கொள்ள ஆலயங்கள் மத தலங்களின் குரு மார்கள் முன் வந்து நல் வாழ்வுக்காக ஆன்மீக சார்ந்து; (பழைய புராணங்களை பாடலாக கூறிச் செல்லாமல் நொந்து வரும் மக்களை இன்னுமின்னும் நோகடிக்காமல்) இன்றைய சமூகம் ஏற்கும் படியான பல உதாரணங்களை முன்னிலைப் படுத்தி சொற்பொழிவுகளை மேற் கொண்டு தெளிவூட்டல்களைச் செய்ய வேண்டும்; இவற்றினை சரியாக கடைப் பிடித்து வந்தால் பல தூக்குக் கயிறுகள் தொட்டில் கயிறாகவோ அல்லது ஊஞ்சல் கயிறாகவோ மாறும் என்பது உறுதி இல்லையேல் தூக்கில் தொங்கி அரை குறை ஆசைகளோடு ஆவி உலகத்துக்கும் போக முடியாமல் பிதிர் உலகத்துக்கும் போக முடியாமல் ஆசை நிரம்பிய ஆத்மாவாக பல யுகக்கணக்கில் பரிணாம வளர்ச்சி பெறாமல் தானும் நிம்மதியாக வாழாமல் பலரின் நிம்தியினைக் கெடுத்து அலைந்து திரியும் துர் ஆத்மாவாக இருப்பதா? அல்லது நல்லவற்றை எண்ணி நல்லதை செய்து நிறைவான ஆத்மாவாகி அகால மரணத்தை தவிர்த்து கால மரணத்தை தழுவி புண்ணியப் பேற்றினை பெறுவதா? தீர்மானிப்பு எனும் ஆறாவது அறிவினை இன்று முதல் பயன்படுத்துவோம்.

Read more...

Friday, October 12, 2018

சிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்

தமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குரல்வளையை அது நசுக்குகின்றது. அவ்வாறு குரல்வளை நசுக்கப்படுபவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன்.

சிவசக்தி ஆனந்தனின் குரல்வளை கடந்த பத்து மாதங்களாக நசுக்கப்பட்டு , பாராளுமன்றில் அவரது பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான காரணம் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியாதது அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிவசக்தி ஆனந்தனின் பேச்சுருமையை மறுத்ததற்கு அவர் ஏதோ தேசத்துரோகக் குற்றம் இழைத்து விட்டதாக வியாக்கியானம் தெரிவிக்கின்றனர்.

சிவசக்தி ஆனந்தனுக்கும் த.தே.கூ வினருக்கும் இங்குதான் முரண்பாடு வலுக்கின்றது. கடந்த வருடம் ஜயம்பதி மற்றும் சுமந்திரன் கொண்ட குழுவினரால் வரையப்பட்ட இடைகால அறிக்கையினை ஆதரிக்க வைக்க வேண்டும். அதன் உள்ளடக்கம் என்ன? என்ற தொனிபொருளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சட்டவல்லுனர்கள் இருவரை அழைத்து கொழும்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று இடம்பெற்றிருந்தது. இப்பட்டறையில் சிவசக்தியானந்தன் தவிர அனைத்தது உறுபினர்களும் பங்குபற்றி இருந்தனர்.

குறித்த இடைகால அறிக்கை ஒற்றை ஆட்சியையே முதன்மைப்படுத்தி நிற்கிறது என்ற கருதுதலில் ஈபிஆர்எல்எப் வரைபிற்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற முடிவை எட்டியிருந்தமையே, சிவசக்தியானந்தன் குறித்த பயிற்சிப்பட்டறையில் பங்கெடுக்காமைக்கு காரணமாகும்.

அத்துடன் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஜயம்பதி விக்ரமரட்ண: „திட்டவரைபு தொடர்பில் சிங்கள மக்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அது சிங்கள பௌத்த கோட்ப்பாடுகளை பாதுகாக்கும் வகையிலேயே வரையப்பட்டுள்ளது' என்ற கருத்துப்பட ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இவாறான ஓர் இடைகால அறிக்கையினை ஆதரிப்பதற்காக வகுபெடுக்கப்பட்ட பட்டறைக்கு ஆனந்தன் செல்லவில்லை என்ற ஒரே காரணத்திகாகவே சிவசக்தி ஆனந்தனின் பேச்சு சுதந்திரம் கடந்த பத்து மாதங்களாக பறிக்கப்பட்டு வருகின்றது.

நேற்றுமுன்தினம் (10.10.2018) பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக விவாதிக்க சிவசக்தியானந்தன் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மூன்று நிமிடம் வழங்கப்பட்டிருந்தபோது, சபாநாயகரிடம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சிறப்புரிமை தொடர்பாக விவாதிக்க ஆனந்தனுக்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது என விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆனாலும் தமிழரசுக் கட்சியினரின் கருத்துச் சுதந்திர அடக்கு முறைக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறுப்புரிமையை தன்னால் மறுக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை முடக்க பாராளுமன்றிலேயே முற்பட்டு மூக்குடைந்த வரலாற்று பதிவொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்ட 3 நிமிடங்களுக்கு மேலதிகமாக பொது எதிரணி தரப்பினரால் வழங்கப்பட்ட மேலதிக நிமிடங்களுடன் 20 நிமிடங்கள் சிவசக்தி ஆனந்தன் சபையில் பேசினார். அதன்போது தனது பேச்சு சுதந்திரம் தமிழரசுக் கட்சியினரால் மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வேளையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றிற்கு நுழைந்துவிட்டு, சுயாதீனமாக இயங்குகின்ற ஒருவருக்கு தங்கள் கட்சிக்கான நேரத்தை ஒதுக்க முடியாது எனவும், அவருக்கான நேரத்தை சபாநாயகரே வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரனின் கருத்தினை எதிர்துரைத்த பா.உ தினேஸ் குணவர்த்தன , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை இந்த உயரிய சபையிலே அனுமதிக்க முடியாது என்றும் இது உச்சகட்ட அடக்குமுறை என்றும் தெரிவித்ததுடன் முன்னைய காலங்களில் கூட பலருக்கு இவ்வாறு சுயாதீனமாக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு கருத்துரிமை வழங்கப்பட்டிருந்தது என்றும் அவ்வாறே சிவசக்தி ஆனந்தனுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும் வாதிட்டார்.

மேலும் பொது எதிரணியின் பலர் சிவசக்தி ஆனந்தனுக்காக குரல்கொடுத்திருந்த அதே சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தவிர சுயாதீனமாக இயங்கும் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தைமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தனது சிறப்புரிமை மீறப்படுகின்ற விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு பா.உ சிவசக்தி ஆனந்தன் அவர்களால் நான்கு முறை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சபாநாயகரால் நீதியை நிலை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதற்கான காரணம் நல்லாட்சி அரசிற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்க திராணியற்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது என்பதாகும்.

இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில், தமிழரசுக் கட்சியினரின் இத்தகைய அடக்கு முறைக்கு ரெலோ மற்றும் புளொட் துணைபோவதாகும். சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது, அரசியல் பேதங்களை மறந்து, பாராளுமன்ற சிறப்புரிமைக்காக சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தபோது, சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்கின்றனர். அவர்களுடைய முழு இலக்கும் அடுத்த தேர்தலில் சீட்டை பெற்றுக்கொள்வதே அன்றி நியாயத்தை இந்நாட்டில் நிலைநாட்டுவது அல்ல.

பாராளுமன்ற சிறப்புரிமைக்காக கட்சி பேதங்களுக்கப்பால் பெரும்பாண்மையின உறுப்பினர்கள் , சிவசக்தி ஆனந்தனுக்காக குரல்கொடுக்கின்றபோது, தமிழ் ஊடகங்கள் தமிழரசுக் கட்சியின் அராஜகத்தை மறைப்பதற்காக தன்மீது மஹிந்த சாயம் பூச முற்படுவதாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகின்றார்.

கருத்துச் சுதந்திரத்திற்காக போராடும் ஊடகங்கள், மக்கள் பிரதிநிதி ஒருவனின் குரல்வளை நசுக்கப்படுகின்றபோது, அது அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் குரலே நசுக்கப்படுவதாக கருதி அடக்குமுறையாளர்களை அப்பலப்படுத்துவதையிட்டு அவர்களை நியாப்படுத்துவது எந்தவகையில் ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ?

Read more...

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து. நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய நாங்கள் உங்களை மெச்சுகின்றோம்.

இதன் மூலம் நீங்கள் இலங்கையை மாத்திரம் பாதுகாக்கவில்லை இந்தியாவையும் பாதுகாத்துள்ளீர்கள்.

இனங்கிற்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை உங்கள் அரசாங்கமே மேற்கொள்ளவேண்டும்.

வடகிழக்கில் உள்ள இலங்கையர்கள் முதலில் தங்களை இலங்கையர்களாக கருதவேண்டும், அதன் பின்னரே தமிழர்களாக கருதவேண்டும். சிங்களவர்களும் அவ்வாறே தங்களை கருதவேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் அதன் பயனை இழந்துவிட்டது.

சிங்கள எதிர்ப்பு தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டன பலமிழந்துவிட்டன.மகிந்த ராஜபக்ச சமீபத்தி;ல் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறாதமை இதற்கு சிறந்த உதாரணம்.

மகிந்த ராஜபக்சவிற்கும் இந்திய பிரதமரிற்கும் இடையில் ஆக்கபூர்வமான சுமூகமான சந்திப்பு இடம்பெற்றது.அவர்கள் இருவருக்கு இடையில் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதால் என்ன பேசினார்கள் என்பது தெரியாது.

Read more...

அரசியல் கைதிகள் விடயத்தில் விக்கிக்கு குளுக்கோஸ் வேண்டுமாம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன் களைத்துப்போயிருக்கின்றாராம் என்று தெரிவித்துள்ளார் வடக்கின் முதலைமைச்சர் விக்னேஸ்வரன்.

தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (11) விக்கினேஸ்வரனை சந்தித்து, நீர் இதுவரை குறித்த விடயம் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என வினவியபோது, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்தது இவ்வாறான விடயங்களை அவர் சட்ட ரீதியாக அணுகுவார் என்ற எதிர்பார்பிலேயே. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் மடல் மன்னன் ஆனந்தசங்கரி அவர்களை மக்கள் முதலமைச்சராக தெரிவு செய்திருப்பர்.

மேலும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய விக்கினேஸ்வரன், நீதி அமைச்சரின் கருத்து மிக தவறானது என்றும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது என்று தெரிவித்துள்ளர். அவ்வாறாயின் இங்கு நாம் எழுப்பும் கேள்வி யாதெனில் விக்கினேஸ்வரன் தான் உச்ச நீதிமன்றில் இருந்தபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எத்தனை வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

எது எவ்வாறாயினும் விக்கினேஸ்வரன் வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்டபோது, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் விவகாரம் தொடர்பாக ஒர் வாக்குறுதி வழங்கயிருந்தார். அந்த வாக்குறுதி யாதெனில், இன்று நீதிபதிகளாக இருக்கின்ற பலர் தனது யூனியர்களாக கடமையாற்றியவர்கள் என்றும் அவர்களிடம் பேசி குறித்த நபர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பேன் என்பதுவும் ஆகும்.

வாக்குக்காக நீதித்துறையையே நிந்தித்த விக்கினேஸ்வரனின் மேற்படி வாக்குறுதிளை கேள்விக்குட்படுத்தாக மக்கள் விக்னேஸ்வரனை கண்மூடித்தனமாக தேர்ந்தெடுத்தனர். முடிவில் அவர் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில் அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தயாராகி வருகின்றார்.

Read more...

ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவரை கொலை செய்த 10 பேருக்கும் மரண தண்டனை.

தங்கல்லை பிரதேசத்தில் 1998 ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரை வெட்டி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்;டிருந்த 10 பேருக்கும் நேற்று தங்காலை நீதிமன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குடும்ப அங்கத்தவர்களிடையே ஏற்பட்ட கணிப்பிணக்கு ஒன்று காரணமாகவே மேற்படி கொலை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Thursday, October 11, 2018

புதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு! அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை! அதிகாரவர்க்கம் பின்னணியில்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித்திரவதைக்கப்படுவதை உணர்ந்த அயலவர்கள் சிறுவர் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிறுவர் குற்றப் தடுப்பு பொலிஸார் சிறுவனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 33 இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வளர்ப்பு தாயாரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, சிறுவனுக்கு தக்காளிப்பழம் ஒவ்வாமையால் தடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இக்கொடுஞ்செயலுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர்கள் துணைபோவதாகவும், அவர்கள் சிறுவனது உடலிலுள்ள காயங்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை வழங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிஸ் திணைக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் உறவினர்கள் மட்டக்களப்பில் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ளனர் என்றும் தெரியவருகின்றது. மேலும் அப்பெண் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணேஷராஜாவின் உறவினர் என்றும் இவ்வாறான பின்னணியில் சிறுவனுக்கு நீதி கிடைப்பது கடினமான விடயம் என்றும் ஊரவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிலே அரசியல் கூட்டு அமைப்பதற்கு சில வக்கீல்கள் முனைந்து வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் சமூக அக்கறையாம். அவ்வாறாயின் எமது சமூகத்தை சேர்ந்த இச்சிறுவனுக்கான நீதியை குறித்த வக்கீல்கள் உறுதி செய்வார்களா?



Read more...

வன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி!

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாராட்டும்பொருட்டு உலக இலங்கையர் பேரவையினர் ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு அழைத்திருந்தனர்.

பேரவையினரின் அழைப்பை ஏற்று மூன்று நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு சென்ற ரட்ணபிரிய பந்துவிற்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய ராஜ்சியத்திலுள்ள இலங்கையைச் சேர்ந்த பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அம்மக்கள் மத்தியில் பேசிய அவர், வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் வன்னி மக்களுக்கு எவ்வித ஆறுதல்களுகம் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்த்திய அவர், அங்குள்ள மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக காணப்படுகன்றனர் என்றும் அதற்கான பிரதான காரணம் தொழில் பற்றாக்குறையே என்றும் எடுத்தியம்பியுள்ளதுடன் வன்னியில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க ஜாதி மத பேதமின்றி அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கேணல் ரத்னபிரிய பந்து:

நான் சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாளராக கடமையேற்றுச் சென்றபோது என்மீது பாரிய பொறுப்பு ஒன்று சுமத்தப்பட்டிருந்தது. அப்பொறுப்பானது சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்த்துக்கொள்வது. அக்காரியத்தை நான் கஸ்ரோ பேஸ் இலிருந்து ஆரம்பித்தேன். கஸ்ரோ பேஸ் என்பது உயிரிழந்து புலிகளின் தளபதி ஒருவரின் பெயரிடப்பட்ட தளம். அங்கே தற்காலிக குடிசைகளை அமைத்து பணியை தொடர்ந்தோம்.

அன்றுவரை ஒருவரைக்கூட சேர்த்துக்கொள்ள முடியாதிருந்த வன்னிப்பிரதேசத்தில் 5 நாட்களில் 20 பேரை நான் இணைத்துக்கொண்டேன். அவர்களில் சிலர் புலிகளின் முன்னணி தளபதிகளாகவும் இருந்தனர். அவர்களில் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்பான பிரிவில் செயற்பட்டவர்கள், சார்ல்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்தவர்கள், புலிகளின் காவற்படையை சேர்ந்தவர் என்போரும் அடங்கினர். இவர்கள் அனைவரும் என்னுடன் இணையும்போது மிகுந்த சந்தேகத்துடனேயே இணைந்தனர். நான் அங்கு என்ன செய்யப்போகின்றேன் என்பது அவர்களுக்கு தெரியாது. அத்தருணத்தில் சமூகத்தில் பரப்பப்பட்டிருந்த வதந்திகள் பாரதூரமானவை. இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தொடர்பில் எனக்கும் என் தொடர்பில் அவர்களுக்கும் நியாயமான சந்தேகங்கள் இருக்கவே செய்தது.

இந்நிலையில் எனக்கு எமது தரப்பிலிருந்தும் சவால்கள் விடுக்கப்பட்டது. முடிந்தால் 100 பேரை இணைத்துக்காட்டுமாறு அந்த சவால்கள் அமைந்திருந்தது. ஆனால் நான் அவர்களுக்கு சவால் விடுக்க செல்லவில்லை. எனது இலக்கை நோக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். இன்றுவரை 4000 பேரை இணைத்து அவர்களுக்கு தொழில்வாய்பினை ஏற்படுத்திக்கொடுத்தேன். 15000 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்கள் மூன்று முறை தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளனர். வடமாகாணத்திலே அதிக தொழில் வாய்பினை வழங்கிய அரச நிறுவனமாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் விளங்குகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்ன செய்துள்ளது என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். நாம் அதிகமாக விவசாய நடடிவக்கையில் இறங்கினோம். அதற்காக நாம் அரச காணிகளையே தேர்ந்தெடுத்தோம். அவ்வாறன சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். நாங்கள் ஏதாவது ஒரு காணியை எடுக்கின்றபோது, ஏதோ ஒரு தரப்பின் தூண்டுதலின் பேரில் எதிர்ப்பார்ப்பாட்டம் வரும் அல்லது எவரோ ஒருவர் வருவார் இது எனது காணி எனக்கூறிக்கொண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் அவர்களுடன் இது அரச காணி என முரண்படச் செல்லவில்லை. உடனடியாக இதோ வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் வேறு இடம்செல்லுகின்றோம் என வேறு இடங்களுக்குச சென்றோம். அதுவே எங்கள் வளர்சிக்கு காரணமாக இருந்தது நாம் அன்று அவர்களுடன் முரண்பட்டுகொண்டிருந்தால் அந்த முரண்பாடு இன்றுவரை நீடித்திருக்கும். ஆனால் இறுதியாக அந்த மக்கள் உணர்ந்து கொண்டார்கள் எனது நோக்கம் யாது என்பதை.

புலம்பெயர் தேசத்து மக்களிடம் போராட்டத்தின் பெயரால் சேகரித்த பணத்தை, புலம்பெயர் புலிகள் பதுக்கி வைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், புலிகளுடன் போரில் ஈடுபட்ட ஒருவர் வன்னி மக்களுக்காக உதவி கோரியுள்ளார். இது புலம்பெயர் புலிகளின் தலையில் விழுந்துள்ள பெரு இடியாகும்.

வடமாகாண சபை மாகாணத்தை அபிவிருத்தி செய்து தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை மீண்டும் திறைசேரிக்கு அனுப்பி மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளியுள்ள நிலையில் கேணல் ரத்னபிரயபந்து, வன்னி மக்களின் மேம்பாட்டுக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தமிழ் மக்களின் வாக்கில் சீவியம் நடாத்தும் அரசியல்வாதிகளுக்கு அவமானமாகும்-










Read more...

அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணமாம், இழப்பீடும் கொடுக்கட்டாம். ஜே.வி.பி

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த கால எல்லைக்குள் முழுமையாக இழப்பீடு வழங்கப்படும். வடக்கு கிழக்கில் மக்களுக்கு மிகவும் இலகுவாக இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் கோரிக்கை விடுத்தது.

அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணம், ஆகவே அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஜே.வி.பி சபையில் சுட்டிக்காட்டியது.

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.

வடக்கில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழர்கள் பாதுகாத்து அனுப்பிய சம்பவங்களும் பல உள்ளது. தெற்கிலும் அவ்வாறே பல சம்பவங்களும் உள்ளது. இந்த இனவாதத்தை சட்டத்தின் மூலமாக தீர்க்க முடியாது.

நீதிமன்றம் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் நடப்பவை குறித்து சிங்கள பத்திரிகை இனவாதத்தை தூண்டுவதும் சிங்கள செய்திகளை தமிழ் பத்திரிகைகளில் இனவாதமாக சித்தரிப்பதும் மிகவும் கேவலமான ஊடக கலாசாரமாகும்.

தீர்வுகளை குழப்பும் முதல் காரணி இங்கேயே உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கூறியதை நன் கேட்டுள்ளேன்.

மீண்டும் இதனை உறுதிபடுத்துங்கள். வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை மீண்டு சம்பந்தன் கூற வேண்டும். அதுவே சிங்கள இனவாதிகளின் முகங்களில் சேறு பூசும் வகைகள் அமையும் எனக் குறிப்பிட்டார்.

Read more...

நாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.

வெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்யத்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெளியிடப்பட்ட தொலைபேசி சம்பாசனைகளில் பேசியிருப்பது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தானா என்பதை அராயுமாறு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

குறித்த இருவரதும் குரல் மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்த அரச பகுப்பாய்வுத்திணைக்களம், வெளியிடப்பட்ட குரல் டிஐஜி மற்றும் நாமல் குமாரவினுடையதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினரின் அறிக்கையை சீஐடி யினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

இதேநேரம் இன்று மேலும் சில ஒலிப்பதிவுகளை வெளியிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல்குமார தன்னிடமுள்ள மேலும் பல பதிவுகளை சீஐடி யினருக்கு வழங்கவுள்ளதாகவும் அவற்றில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர் தேசத்திலுள்ள சிலரது விடயங்களும் அடங்குமெனவும் அவர் கூறியுள்ளது.


அத்துடன் குறித்த சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையுடன் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவிற்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய நாமல் குமார என்ற நபருடன் தொடர்பு பேணிய இந்தியர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விமல் வீரவன்சவின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி ஷசி வீரவன்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விமல் வீரவன்சவை சந்திக்கும் நோக்கில் அவரது மனைவியை தாம் சந்தித்ததாக குறித்த இந்தியர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்து என பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் இது குறித்து பேசும் நோக்கில் தாம் விமல் வீரவன்சவை சந்திக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நபரின் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை எனவும், இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள ஷசி வீரவன்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் இந்த இந்தியர் முன்னதாக கூறியிருந்தார்.

குறித்த இந்தியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இந்தாலி சாந்த கைது !

நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஐந்து கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தை ஏப்பம் விட்டுள்ள மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸாருக்க கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டி, மாத்தறை, ரம்புக்கனை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணத்திற்கு மேலதிகமாக வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக் கொண்டு அந்த வாகனத்தை திரும்பி வழங்காமல் மோசடி செய்துள்ளதாக சந்தேக நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு மோசடி செய்த 4 மோட்டார் வாகனங்கள் மற்றும் ஜீப் வண்டி ஒன்று சந்தேக நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, பினவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான முதலிகே தோன் சமந்த அல்லது இத்தாலி சமன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.


Read more...

துமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்று மரண தண்டனை வழங்கியிருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்று தீர்ப்பு சரியானது என மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் குழுவால் அறிவிக்கப்பட்டது.


Read more...

Wednesday, October 10, 2018

ட்ரம்ப்பின் செல்வக்குவிப்பின் மீதான நியூ யோர்க் டைம்ஸின் அம்பலப்படுத்தல்..

வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யம்- By Barry Grey

”ஒவ்வொரு பெரும் செல்வத்தின் பின்னாலும் ஒரு பெரும் குற்றம் இருக்கிறது” - Honoré de Balzac


நியூ யோர்க் டைம்ஸ், புதனன்று வெளியான அதன் அச்சுப்பதிப்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பலபில்லியன் டாலர் செல்வத்திற்கு வழிவகை தந்த நிதி நடைமுறைகள் பற்றிய 14,000 வார்த்தைகளுடனான ஒரு புலனாய்வு அறிக்கைக்கு எட்டு முழுப் பக்கங்களை அர்ப்பணித்திருந்தது.

ட்ரம்ப்பின் நில-மனை அதிபதி தந்தை ஃபிரெட் சி.ட்ரம்ப்பின் முன்னாள் ஊழியர்களுடனான நேர்காணல்கள், அத்துடன் கிட்டத்தட்ட 100,000 நிதி ஆவணப் பக்கங்கள் மீதான திறனாய்வுகள் உள்ளிட 18 மாத கால புலனாய்வின் ஒரு விளைபொருளாக இந்த கட்டுரை இருந்தது. ட்ரம்ப்பும் அவரது உறவினர்களும் குறைந்தபட்சம் அரை பில்லியன் டாலர்கள் அளவிற்கான வரி ஏய்ப்பில் இருந்து எவ்வாறு ஆதாயமடைந்தனர் என்ற ஒரு விரிவான, உண்மையான தரவுகளின் அடிப்படையிலான ஒரு விவரிப்பை அது வழங்கியிருந்தது.

ஓட்டைகள் கொண்ட வாரிசுகளுக்கு சொத்து மாற்றச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாகக் கூட, நூறுமில்லியன் டாலர் கணக்கில் வரி செலுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்ட வரி ஏய்ப்பு தந்திரங்கள் அநேக சட்டவிரோதமானவையாய் இருந்தன. சட்டப்பிரச்சினைகள் என்னவாக இருந்தபோதிலும், டைம்ஸின் செய்திக்கட்டுரையில் இருந்து எழக் கூடிய குற்றவியல் தன்மை மற்றும் ஊழலின் சித்திரமானது வெறுமனே ட்ரம்ப் குடும்பத்தின் குணாம்சமல்ல, மாறாக ஒட்டுமொத்த பெருநிறுவன-நிதிய ஒருசிலவராட்சியை குணாம்சப்படுத்துவதாக இருக்கிறது.

ஃபிரெட் மற்றும் மேரி ட்ரம்ப் 1 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துகளை மொத்தமாய் 52.2 மில்லியன் டாலர் கூட்டரசாங்க வரி செலுத்தி தமது பிள்ளைகளுக்கு மாற்றியிருக்கின்றனர், அவர்கள் கட்டிய வரி வகிதம் சுமார் 5 சதவீதம் மட்டுமே வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் நிலம் மற்றும் பரிசுப்பொருள் வரியானது 55 சதவீதமாக இருந்தது, அதாவது ட்ரம்ப் குடும்பத்தினர் அவர்கள் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டியிருந்த 550 மில்லியன் டாலர் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செலுத்தியிருந்தனர்.

இந்த பாரிய வரி ஏய்ப்பு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான பெயரளவிலான (ஷெல்) நிறுவனங்களை அமைப்பதன் மூலமாகவும் ஃபிரெட் ட்ரம்ப்பின் மனை-நில சாம்ராஜ்யத்தின் சொத்துக்களை திட்டமிட்டு மதிப்பைக் குறைத்துக் காட்டியதன் மூலமாகவும் —1999 இல் ஃபிரட் ட்ரம்ப்பின் மரணத்திற்கு முன்னதாக சொத்துக்கள் பிள்ளைகளுக்கு மாற்றப்பட்ட போது வாரிசுகளுக்கு சொத்துமாற்ற வரிகளில் இது ஒரு பெரும் குறைப்பை உருவாக்கி கொடுத்தது— செய்யப்பட்டிருந்தது.

ஃபிரட் ட்ரம்ப் வரிகளை குறைத்து செலுத்தி வந்ததாக 1950கள் மற்றும் 1960களில் உள்நாட்டு வருவாய் சேவை (IRS) தொடர்ந்து கூறி வந்திருந்தது. 1995 இல், அவரது பரிசுப் பொருட்கள் வரித் தாக்கலை தணிக்கை செய்தபோது, அவர் தனது பிள்ளைகளுக்கு மாற்றிய சொத்துக்களை 38 சதவீதம் வரை மதிப்பைக் குறைத்துக் காட்டியிருந்ததாக முடிவுக்கு வந்தது. இருந்தும், அமெரிக்காவின் நிதிப் பிரபுத்துவத்திற்கு பாதுகாப்பளிப்பதும் அதன் குற்றங்களுக்கு வழிவகை செய்துதருவதும் தான் இதன் பாத்திரமாகவும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் பாத்திரமாகவும் இருந்து வருவதற்கான உதாரணவிளக்கம் போல, அது அந்த நடைமுறையை நிறுத்துவதற்கு எதுவொன்றும் செய்யவில்லை.

1992 இல் ட்ரம்ப்பின் குடும்பம் All County Building Supply & Maintenance என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியது. ஃபிரெட் ட்ரம்ப்பின் கட்டிடங்களுக்கு கொள்முதல் முகமையாக கொதிகலன்கள் மற்றும் பிற சாதனங்கள் முதல் சுத்தப்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தையும் வாங்குவதற்காக வேலை செய்வதுதான் அது உருவாக்கப்பட்ட நோக்கமாக கூறப்பட்டது.

உண்மையில் All County ஒரு போலி நிறுவனம். ஃபிரெட் ட்ரம்ப்புக்கு பிடித்தமான ஒரு உறவினரான ஜோன் வால்டரின் மன்ஹஸட் வீட்டின் முகவரி தான் அதன் பட்டியலிடப்பட்ட முகவரியாக இருந்தது. டொனால்ட் ட்ரம்ப் அவரது சகோதரிகளான மரியான் மற்றும் எலிசபெத் மற்றும் சகோதரர் ராபர்ட் ஆகியோருடன் சேர்ந்து வால்டரும் All Countyயின் சட்டரீதியான உரிமையாளராக இருந்தார். இந்த நிறுவனம் உண்மையில் ஃபிரெட் ட்ரம்ப்பின் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு பொருட்கள் வாங்குவதை ஒழுங்கமைக்கவில்லை. பதிலாக, அது மத்தியஸ்த நிறுவனமாக, கொள்முதல்களின் உண்மையான செலவில் சிலசமயங்களில் 20 சதவீதம் வரை, இன்னும் சில சமயங்களில் 50 அல்லது அதற்கும் கூடுதலான சதவீதம் வரை உயர்த்தி ஃபிரெட் ட்ரம்ப்பிடம் வசூலித்தது.

தந்தையுடனான ஏற்பாட்டின் படி, ட்ரம்ப்பின் பிள்ளைகள் அரசாங்கத்திற்கு பரிசுப் பொருள் வரிகளை செலுத்தாமல் ஃபிரெட் ட்ரம்ப் மனை-நில சாம்ராஜ்யத்தில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை தமது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாகனமாக All County நிறுவனத்தைப் பயன்படுத்தினர்.

அதன்பின் ஃபிரெட் ட்ரம்ப், செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த தனது குடியிருப்பு கட்டிடங்களின் இலாபமீட்டு நிலையில் ஏற்பட்ட பாதிப்பைப் பயன்படுத்தி, தனது வாடகை-கட்டுப்பாட்டு சொத்துகளில் குடியிருப்போருக்கு வாடகைகளை உயர்த்துவதற்கு அரசிடம் இருந்து அனுமதிக்கு விண்ணப்பித்துப் பெற்றார். “எத்தனை அதிகமாக இந்த அளவு செல்லுமோ, அத்தனை அதிகமாக வாடகை உயர்த்தப்படும்” என்று ரோபர்ட் ட்ரம்ப் ஒரு வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருந்ததை டைம்ஸ் மேற்கோளிட்டது.

ட்ரம்ப்பின் செல்வம் தொடர்பாக தனது செய்திக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை விசாரிப்பதில் நியூயோர்க் நகர நிர்வாகமும் நியூயோர்க் மாநில அரசுடன் இணைந்து கொண்டிருப்பதாக டைம்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஃபிரெட் ட்ரம்ப் தனது கட்டிடங்களின் இலாபநிலையை குறைத்துக் காட்டியதன் மூலமாக, பகுதியாக உரிமையாளர்களால் தெரிவிக்கப்படும் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்படுகின்ற நகர சொத்து வரிகளை ஃபிரெட் ட்ரம்ப் மோசடியாக குறைத்துக் கட்டியிருக்கலாம் என்று முதலாவது பிரதிநிதி மேயர் Dean Fuleihan சுட்டிக்காட்டியதை இந்த செய்தித்தாள் மேற்கோளிட்டது.

All County உருவாக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1994 ஜனவரியில், ட்ரம்ப் குடும்பத்தார் Apartment Management Associates Inc என்ற ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கினர். இதுவும் ஜோன் வால்டரின் வீட்டு முகவரியை அஞ்சல் முகவரியாகக் கொண்டிருந்த ஒரு போலி நிறுவனம் என டைம்ஸ் குறிப்பிடுகிறது. டொனால்ட் ட்ரம்ப், அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினரான வால்டர் ஆகியோருக்கு சொந்தமான இந்த Apartment Management Associates நிறுவனம், உருவாக்கப்பட்ட இரண்டு மாதங்களில், ஃபிரெட் ட்ரம்ப்பின் கட்டிடங்களை நிர்வகிப்பதற்கான கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியது, முன்னதாக இக்கட்டணங்கள் ட்ரம்ப் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் இருந்த தந்தையின் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.

All County போலவே Apartment Management Associates உம் பரிசுப்பொருள் அல்லது நில வரிகள் செலுத்தாமல் ஃபிரெட் ட்ரம்ப்பிடம் இருந்து அவரது வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றுவதற்கான ஒரு பொறிமுறையாக இருந்தது. டைம்ஸ் எழுதியது: “1998 காலத்தில், All County மற்றும் Apartment Management நிறுவனங்கள் ட்ரம்ப்பின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு இன்றைய மதிப்பில் 2.2 மில்லியன் டாலருக்கு நிகரான வருவாயை உருவாக்கிக் கொண்டிருந்தன என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. இந்தப் பணத்திற்கு அவர்கள் கட்ட வேண்டியிருந்த வருமான வரியானது, ஃபிரெட் ட்ரம்ப் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 2.2 மில்லியன் டாலரை எடுத்து சாதாரணமாக கொடுத்திருந்தால் அவர்கள் செலுத்த வேண்டியதாயிருந்திருக்கக் கூடிய 55 சதவீத வரியில் இருந்து கணிசமாகக் குறைவானதாகும்.”

ஃபிரெட்டின் செல்லப் பிள்ளையும் அவரது வணிக செயல்பாடுகளில் அதிகமாய் பங்குபெற்றவருமான டொனால்ட் ட்ரம்ப் இந்த மற்றும் மற்ற நிழல் நடவடிக்கைகளில் ஒரு செயலூக்கமான பாத்திரம் வகித்ததாக இந்த செய்தித்தாள் கூறுகிறது.

மாற்றப்படும் சொத்துக்களின் மதிப்பை மிகப்பெருமளவில் குறைத்துக் காட்டி அதன் மூலமாக சட்டரீதியாக செலுத்த வேண்டிய பரிசுப்பொருள் வரியில் ஒரு சிறு பங்கை மட்டும் செலுத்தும் வகையில், GRAT (grantor-retained annuity trust) என்ற பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்புக்குப் பரவலாக பயன்படுத்திய ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் குடும்பத்தார் தந்தையிடம் இருந்து பிள்ளைகளுக்கு எவ்வாறு சொத்துக்களை மாற்றினர் என்பதை டைம்ஸ் கட்டுரை விரிவாக விவரிக்கிறது. இந்த விதத்தில், ட்ரம்ப் குடும்பத்தினர் நூறு மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருந்தனர்.

தந்தையின் சொத்து மதிப்பு 41.4 மில்லியன் டாலர் என ட்ரம்ப்புகள் கூறியிருந்தனர். ஆனால் அதே கட்டிடங்கள் அடுத்த பத்தாண்டு காலத்தில் அந்தத் தொகைக்கு 16 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டன.

“இறுதியில்” கட்டுரை ஆசிரியர்கள் எழுதினர், “ட்ரம்ப் சாம்ராஜ்யத்தின் சொத்துமாற்றம் ஃபிரெட் மற்றும் மேரி ட்ரம்ப்புக்கு பரிசுப் பொருள் வரிகளில் 20.5 மில்லியன் டாலர்களையும் அவர்களது பிள்ளைகளுக்கு 21 மில்லியன் டாலர்களுக்கு வருடாந்திர செலுத்தங்களிலுமாய் செலவு வைத்தது. இது டைம்ஸ் கண்டவாறாக, சாம்ராஜ்யத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தியிருக்க வேண்டிய தொகையை விடவும் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் குறைவாகும்.”

இந்த கட்டுரையின் பெரும்பகுதி ஃபிரெட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மாற்றிய பெரும் சொத்துவிவரத்தை விவரிக்கிறது, இன்றைய மதிப்பின் படி அது 413 மில்லியன் டாலர்களாய் இருக்கும் என டைம்ஸ் மதிப்பிடுகிறது. 1 மில்லியன் டாலர் தனது தந்தையிடம் இருந்து கடனுதவியாக பெற்றுக் கொண்டு அதனை ஒரு பல பில்லியன் டாலர் சாம்ராஜ்யமாக கட்டியெழுப்பிய “சுயமாக உருவான பில்லியனர்” என்பதான டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்களது மோசடியை இந்த செய்தித்தாள் பெருமளவில் அம்பலப்படுத்துகிறது.

பெருநிறுவன-நிதிய ஒருசிலவராட்சியினரால் குவிக்கப்பட்டிருக்கும் செல்வத்தில் வாரிசாகப் பெற்ற செல்வத்தின் மிகப்பெரும் பாத்திரத்தை சுட்டிக்காட்டும் மட்டத்திற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆயினும் டைம்ஸ் அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்கும் அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக பெருநிறுவன-நிதிய ஆளும் உயரடுக்கில் வியாபித்திருக்கும் குற்றவியல்தனம், அது சமூகத்தை சூறையாடுவது மற்றும் அது கட்டுப்படுத்துகின்ற ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் இதில் உடந்தையாக இருப்பது என்ற மிக அடிப்படையான பிரச்சினையில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்குமான முறையில் ட்ரம்ப்பின் சுய-விளம்பர விவரிப்பின் மோசடியின் மீது கவனத்தைக் குவிக்கிறது.

டைம்ஸ் மிக நிச்சயமான வர்க்க காரணங்களுக்காக ட்ரம்ப்பை இயல்பில் இருந்தான ஒரு விலகலாக சித்தரிக்க முனைகிறது. அதுவும் அது கூட்டு கொள்கின்ற ஜனநாயகக் கட்சியும், முதலாளித்துவ அமைப்புமுறையையும் அதனை ஆட்சி செய்கின்ற ஒருசிலராட்சியையும் பாதுகாப்பனவாக உள்ளன. சொல்லப் போனால், அது தன்னையே அம்பலப்படுத்திக் கொள்வது, ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களின் —நீதிமன்றங்கள், கட்டுப்படுத்தும் முகமைகள், நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்— வழக்கமான, அன்றாட நடைமுறையின் ஒரு காட்சிக்கீற்றை வழங்குகிறது.

இரண்டு கட்சிகளின் தலைமைகளின் கீழும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சமூக எதிர்ப்புரட்சியுடன் கைகோர்த்த விதத்தில், இந்த வியாபித்துச் செல்லும் ஊழலும் குற்றவியல்தனமும் சமீப தசாப்தங்களில் அதிகரிக்க மட்டுமே செய்துள்ளன. பல தசாப்த கால தொழிற்துறைமய அகற்றத்தின் மற்றும் தொழிற் பெருநகரங்கள் மற்றும் நகரங்களது அழிப்பின் ஏககாலத்தில் நாட்டின் மற்றும், சொல்லப் போனால், உலகத்தின் பொருளாதார வாழ்வில் நிதி ஊகம் மற்றும் கைப்புரட்டின் பங்கு முன்னெப்போதினும் மேலோங்கிய நிலையை எட்டுவதும் நடந்து வந்திருக்கிறது.

உச்சத்திற்கு எழுந்த சீரழிந்த மற்றும் குண்டர் கும்பல் போன்றதொரு சமூக சக்திகளது உருவடிவமாய் ட்ரம்ப் நிற்கிறார். அவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவின் விளைபொருளும் வெளிப்பாடும் ஆவார். அவர் விதிவிலக்கானவர் அல்ல.

செல்வந்தர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு சாதகமான விதத்தில் வரி அமைப்புமுறையை திட்டமிட்டு வளைப்பது நிதிய ஒருசிலவராட்சியினரின் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் வலுப்பெறலில் ஒரு முக்கியமான பொறிமுறையாக இருந்து வந்திருக்கிறது.

2009க்குள்ளாக, வேலை மற்றும் சேமிப்புகள் மூலமான வருவாய்க்கு சராசரி கூட்டரசாங்க வரி விகிதம் 18 சதவீதமாகி இருந்தது. வாரிசாகப் பெறும் வருவாய்க்கான 4 சதவீத வரிவிகிதத்துடன் இது ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும்.

பெரும் செல்வந்தர்களின் ஏகபோகமாக இருக்கும் செல்வம் மற்றும் வருவாயின் பங்கு ஒரேயடியாக அதிகரித்திருக்கும் நிலையிலும், கூட்டரசாங்க வருவாயில் நில மற்றும் பரிசுப்பொருள் வரிகளின் பங்களிப்பு 1972 இல் 2.6 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 1 சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. பெருநிறுவன வரிகளையும் செல்வந்தர்களுக்கான வரி விதிப்புகளையும் ஒரேயடியாக வெட்டிய, வரி “சீர்திருத்த”த்தில் டிசம்பரில் ட்ரம்ப் கையெழுத்திட்டதின் பின்னர் இந்த நிகழ்ச்சிபோக்கு மிகப்பரந்த அளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் செல்வந்தர்கள் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வது எந்த விதத்திலும் அமெரிக்காவில் மட்டுமான ஒரு நிகழ்வுப்போக்கு அல்ல. ஆகஸ்டில் வெளியான Gabriel Zucman தலைமையிலான பொருளாதார அறிஞர்களின் ஒரு குழு ஆவணப்படுத்தியுள்ளவாறாக, உலகெங்கிலும் உள்ள பெரும் பணக்காரர்களில் மேலிருக்கும் 0.01 சதவீதத்தினரின் வீட்டினர் மட்டும், கடல்கடந்த வரிப் புகலிட நாடுகளில் சொத்துக்களை குவிப்பதன் மூலமாக, அவர்களது வரிகளில் சுமார் 25 சதவீதத்தை ஏய்ப்பு செய்கின்றனர்.

ட்ரம்ப்பின் செல்வம் குறித்த தனது விரிவான அம்பலப்படுத்தல் மூலமாக, டைம்ஸ், ஒரு ஒட்டுண்ணித்தனமான ஒருசிலவராட்சியினரின் தொடர்ந்த இருப்பானது, பரந்த மக்களின் மிகப் பெரும்பான்மையினரது மிக அடிப்படையான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு இணக்கமற்றதாக இருக்கிறது என்ற சோசலிஸ்டுகளின் வலியுறுத்தலை, தன்னையும் அறியாமல், ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

ஒருசிலவராட்சியினரின் பெரும் செல்வத்தைப் பறிமுதல் செய்து அதன் டிரில்லியன் கணக்கான பணத்தை அனைத்து மக்களுக்கும் நல்ல ஊதியமளிக்கும் வேலைகள், கண்ணியமான பள்ளிகள் மற்றும் வீட்டுவசதி, சுத்தமான காற்று மற்றும் நீர், ஒரு பாதுகாப்பான ஓய்வுக்காலம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத்தரத்துக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குவதற்காய் பயன்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அவசியம் கொண்டிருப்பதையே ட்ரம்ப் குடும்பத்தின் முகச்சுளிப்பூட்டும் காவியம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கும் சமூக சமத்துவத்தையும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பொது உடைமைகளாகவும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிலும் இருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதும் அவசியம் என்பதே இதன் அர்த்தமாகும்.

Read more...

முதலீடு செய்யவரும் புலம்பெயர் தமிழரின் புலிகளுடனான தொடர்பினை மத்திய வங்கி விசாரணை செய்யும் - சம்பிக்க

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் , விடுதலைப் புலிகளுக்கு வாகனங்கள், தொலைப்பேசிகளை கடந்த காலங்களில் விற்றவர்கள், அவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பணம் வழங்கியவர்கள் எல்லாம் கொழும்பில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள் எனச் சாடினார்.

அதேநேரம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

'வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான திட்டத்தை அரசாங்கம் எனும் ரீதியில் நாம் வகுத்து வருகிறோம்.

அதற்கிணங்க, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் நாம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். அவர்களும் இதற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். தமிழ் – சிங்கள பேதங்களை மறந்து, நாம் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

மேலும், அவர்கள் இடையூறுகள் இன்றி முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எனும் வகையில், இன்னும் நாம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு, பொருளாதார கொள்கையைப் பொறுத்தவரை கடந்த அரசாங்கம் மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கத்திலும் நிறையக் குறைகள் காணப்படுகின்றன. இவற்றையும் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார

எது எவ்வாறாயினும் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை ஆரம்பித்து சொகுசு வாழ்வு வாழ்கின்றனர் என்பதும் புலம்பெயர் தேசத்தில் சேகரிக்கப்பட்ட கறுப்பு பணம் இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.

அமைச்சர் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் புலித்தொடர்பு தொடர்பில் பேசினாலும் இலங்கையின் பிரபல அரசியல்வாதிகள் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை வைத்துள்ளனர் என்பதும் அவர்களின் வியாபார பங்காளிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

களவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.

விஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஒருவருடன் இணைந்தே மேற்படி கடிததலைப்பினை பயன்படுத்தி வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதுவர் ஒருவரிடம் பணம் பெற்றுள்ளனர். விடயம் குறித்து விசாரணை மேற்கொண்ட மோசடித் தடுப்பு பிரிவினர், இவர்களை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த பெண் மேற்கண்டவாறு பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

விஜயகலாவின் சகாக்கள் பலர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என மக்கள் விசனம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் விஜயகலாவின் நெருங்கிய சகாக்கள் இருவர் யாழ் இளைஞன் ஒருவரிடம் ஏழு லட்சம் பணம் ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு தற்போது பணத்தை எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றில் திருப்பியளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.


Read more...

ஆட்டோவில் பசு மாடு கடத்தியவரை மடக்கிப்பிடித்த மட்டு இளைஞர்கள்.

இறைச்சிக்காக பசு மாடுகளை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லமுற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களுக்கு பிரதேச மாடுகளை கடத்திக்கொடுக்கும் பண்டார வெளியைச் சேர்ந்த நபரையும் இளைஞர்கள் பிடித்துள்ளதுடன், இவர்கள் மூவரையும் பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர்.

குறித்த ஆட்டோ வண்டியும் பசு மாடும் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.

பன்னெடுங்காலமாக இப்பிரதேங்களில் மேற்கொள்ளப்படும் குறித்த களவிற்கெதிராக பொலிஸார் இதுவரை எவ்விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற அதேநேரம், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்பதை சந்தேகத்துடன் நோக்கி வருகின்றனர்.

இக் கள்ள மாட்டு வியாபாரம் நெடு நாட்களாக அப்பகுதியில் இடம்பெற்று வருகின்றது என்பதுடன் இவ்வாறு தங்கள் வளர்பு பசுவினை பறிகொடுக்கும் மக்கள் வாழ்வாதாரத்தினை தொலைத்து வறுமையில் வாடும் சந்தர்ப்பங்கள் பலவுள்ளது.


Read more...

நானல்ல எனது தம்பியே ஜனாதிபதியாக பொருத்தமானவர். கோட்டா

எதிர்வரும் தேர்தலில் ராஜபச்சர்கள் தரப்பிலிருந்து களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து பல்வேறுப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் பொருத்தமானவர் பசில் ராஜபக்சவே எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகளை முடித்து வெளியேறிய கோத்தபாயவிடம், ஊடகவியலாளர்கள், எதிர்வரும் தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், குறித்த கருத்த தனது தனிப்பட்ட கருத்தேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்த தெரிவித்த அவர் :

தற்­போ­துள்ள அரசு மிக மோச­மான நிலை­யில் உள்­ளது. பொரு­ளா­தார, அர­சி­யல் நிலைத்­தன்­மை­யற்று உள்­ளமை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­கின்­றது. இப்­ப­டி­யான அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வதே பொறுத்­த­மா­ன­தா­கும். அதற்கு பொருத்­த­மான எதிர்க்­கட்­சி­யின் வகி­பா­கம் அவ­சி­ய­மா­னது.

எதிர்க்­கட்­சி­கள் இணைந்து இத­னைச் செய்ய வேண்­டும். எவ்­வாறு அதைச் செய்­வார்­கள் என் பது எனக்­குத் தெரி­யாது. அதைச் சரி­யான தரப்­பி­னர் முன்­னெ­டுப்­பர் – என்­றார்.

Read more...

ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.

கிழக்கிலுள்ள ஊர்களில் ஒலுவில் இயற்கை வளங்கள் மிகைத்துக் காணப்படும் ஒரு ஊராகும்.விடுமுறை காலங்களில் ஒலுவிலில் ஓய்வெடுத்துச் செல்ல பல ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் படை எடுக்கும். தற்போது அதன் இயற்கை வளங்கள் கடலால் சுரண்டப்பட்டு அந் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. 1998ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி அப்போது துறைமுக அமைச்சராகயிருந்த அஷ்ரபினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒலுவிலில் துறைமுகமொன்றை நிறுவவுள்ளதான செய்தி மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை முன்னாள் இலங்கை அதிபர்களில் ஒருவரான சந்திரிக்கா அஷ்ரபிற்கு இவ் அமைச்சைக் கொடுத்து நிர்மாணிக்கக் கூறியதாக அஷ்ரப் தனது நாற்பத்தெட்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அஷ்ரபின் ஆளுமையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. பிற்பட்ட காலப்பகுதியில் சந்திரிக்கா அரசு இத் துறைமுகத்தை நிர்மாணிக்க பின்வாங்கியது. இதனை அறிந்த மர்ஹூம் அஷ்ரப் தனது நாற்பத்தெட்டு பக்கக் கடிதத்தில் இத் துறைமுக அபிவிருத்தியை கால தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டுமென பல காரசாரமான வினாக்களை சந்திரிக்காவை நோக்கி விடுத்து வலியுறுத்தியிருந்தார். இது வெளியிடப்பட்டு சிறிது காலத்தினுள் அஷ்ரப் மரணித்ததுடன் இத் திட்டமும் அப்படியே மரணித்துவிட்டது.

இதன் பிற்பாடு சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் 2008ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு நவோதயா திட்டத்தின் கீழ் ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் காலப்பகுதியில் மு.கா கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி மஹிந்த அரசிலிருந்து வெளியேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சந்திரிக்கா செய்ய மறுத்த ஒன்றை மஹிந்த செய்தமையை வைத்து சிறுபான்மையினரின் விடயத்தில் சந்திரிக்காவையும் மஹிந்தவையும் ஒப்பிட்டுக்கொள்ள முடிகிறது. இது மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகமாக 2013-09-01ம் திகதி முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவினால் திறக்கப்பட்டிருந்தது. அஷ்ரபின் உதிரத்தில் உதித்த மு.கா மஹிந்த அரசோடு ஒட்டிக்கொண்டிருந்த காலப்பகுதியில் (2008யிற்கு முன்பு), 2002ம் ஆண்டு இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் மிகப் பெரும் பேசும் பலத்தோடு இருந்த காலப்பகுதியில் அஷ்ரப் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியான இத் திட்டத்தை மேற்கொள்ளக் கூடிய சாதகமான நிலையுமிருந்தது. இவ் விடயத்தில் மு.கா இச் சாதகமாக நிலை எதனையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

இவ்வாறு பெரும் வரலாறுகளோடு அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தின் அமைவிடம் காரணமாக கடலானது கரையோரங்களை விழுங்கிக் கொண்டு ஊரினுள் பிரவேசித்துள்ளது. கடலுக்கும் கரையோரத்திலுள்ள வீடுகளுக்குமிடையில் சுமார் நூறு மீட்டர் தூரமளவே உள்ளது. இதற்கு முன்பு மிக நீண்ட தூரம் பயணித்தே ஒலுவில் கடற் கரையை கண்ணுறக் கூடியதாக இருந்தது.இந் நிலைமை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் ஒலுவிலிலுள்ள பல வீடுகள் கடலுக்குள் உள் வாங்கப்பட்டு விடும்.தேர்தல் காலத்தில் சீசன் வியாபாரிகள் போன்று ஒலுவிலுக்கு வரும் அரசியல்வாதிகள் அப்படி இப்படி என பம்பாத்து காட்டிவிட்டே செல்கின்றனர். இத் துறைமுகத்தின் அமைவிடம் காரணமாக கடலரிப்பு ஏற்படும் போது இது அஷ்ரபினால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்பதால் அது அஷ்ரபின் நாமத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. அஷ்ரபின் நாமம் களங்கப்படும் போது அதனை என்ன விலை கொடுத்தாவது தீர்க்க வேண்டிய கடப்பாடு மு.காவிற்கு உள்ளதல்லவா?

இத் துறைமுகமானது சரியான சாதக அறிக்கைகள் (feasibility report) இன்றி அமைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒரு துறைமுகத்தை சாதாரணமாக சாதக அறிக்கைகள் இன்றி (feasibility report) யாராலும் நிறுவிட முடியாது. அவ்வாறு அமைக்க இது ஒரு ரூபாய் இரண்டு ரூபாயில் அமைக்கப்படும் திட்டமுமல்ல. இத் திட்டம் டென்மார்க் அரசாங்கத்தின் பத்து வருட கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தை அறிவதன் மூலம் இத் துறைமுக நிறுவலின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பில் சாதக அறிக்கைகள் (feasibility report) தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட lanka hydraulics institute,இத் துறைமுகம் நிறுவப்பட்டால் அதனை அண்டிய பிரதேசம் கடலரிப்பிற்குள்ளாகும் எனக் கூறியதை வைத்து சிலர் வேறு பொருள் கொடுக்க விளைகின்றனர். செயற்கையாக ஒரு துறைமுகத்தை அமைக்க வேண்டுமாகயிருந்தால் கடலின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். கடலின் ஆழம் அதிகரிக்கும் போது அதனை அண்டிய கடல் பகுதி அரிப்பிற்குள்ளாகும். அதாவது செயற்கையாக ஒரு துறைமுகம் அமைக்கப்படும் போது அதனை அண்டிய பிரதேசம் கடலரிப்பிற்குள்ளாகும் என்பது பலரும் அறிந்த விடயமே. இவ்வாறு ஒரு பிரதேசம் கலரிப்பிற்குள்ளாவது தீர்வற்ற பிரச்சினையுமல்ல. கடலரிப்பு பிரச்சினை என்பது ஒலுவிலில் உள்ள ஒரு பிரச்சினை மாத்திரமுமல்ல. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் நிந்தவூர், கல்முனை, மருதனை கடற்கரைகள் கூட கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு அணைகளை இடுவதன் மூலம் தடுக்க முடியும். தென் மேல் மாகாணங்களில் கற்கள் கொண்ட அணைகள் பல கிலோ மீட்டர் தூரமளவில் இடப்பட்டு பாதுகாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. அங்கு இவ்வாறான திட்டங்களை நடை முறைப்படுத்த முடியுமாகயிருந்தால், இங்கு அதனை நடை முறைப்படுத்துவதொன்றும் பெரிதான விடயமல்ல (ஒலுவிலில் சில மீட்டர் தூரமே கற்கள் கொண்ட அணைகள் அமைக்கப்பட்டுள்ளது).

நான் ஆய்வுகளோடு முன் மொழியப்பட வேண்டிய தீர்வை எந்த வித ஆய்வுளுமின்றி மிக இலகுவாக கூறிவிட்டேன். இவ்வாறான பிரச்சினைகள் எழும் போது lanka hydraulics institute போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து இதன் தீர்வுக்கான ஆய்வறிக்கைகளை பெற வேண்டும். இதுவே இதன் தீர்விற்கான சிந்தனையின் முதற்படி. இப்படியே காத்தான்குடி கடலரிப்பு விவகாரம் கிழக்கு முதலமைச்சரால் கையாளப்பட்டது. இவ்விடயத்தில் இந் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இவ் விடயத்தில் கடற் தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுக மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்கள் இதன் நிரந்தரத் தீர்விற்கு ஆரம்பகட்ட அறிக்கையை (preliminary report) தயாரிக்கும் நோக்கில் ஒரு இணைந்த குழுவை நியமிக்க ஏற்றுக்கொண்டிருந்தனர்.இதன் பிற்பாடு இவ் விடயத்தில் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை.இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தொடரான அழுத்தங்களை வழங்கும் போதே இது தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வார்கள்.

இக் கடலரிப்பு பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் பொடு போக்குத் தனமாக செயற்படுகிறார்கள் என்பதை வேறு சில விடயங்களை வைத்தும் அறிந்து கொள்ளலாம். இத் துறைமுகத்திற்காக 2008ம் ஆண்டளவில் நாற்பத்தெட்டு மக்கள் காணிகள் அரசால் நிர்பந்தமாக சுவிகரிக்கப்பட்டிருந்தது. இது வரை இக் காணிகளுக்கான சரியான நிவாரணம் அரசால் கூறப்பட்ட வகையில் கூட வழங்கப்படவில்லை.இதனைக் கூட பெற்றுக்கொடுக்க இயலாத முஸ்லிம் அரசியல் வாதிகளால் பெருமளவான பணச் செலவுடனும், தொழில் நுட்பங்களுடன் தீர்வை பெற்றுக்கொடுக்கக் சாத்தியமான கடலரிப்பிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென நம்ப இயலுமா? இக் கடலரிப்பு பிரச்சினை எழுவதற்கு முன்பு சுவீகரிக்கப்பட்ட காணிகளின் நிவாரப்பிரச்சினையே ஒலுவில் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தமை இவ்விடத்தில் நினைவூட்டத்தக்கது. இங்கு நான் கூற வரும் விடயம் இது ஒரு தீர்வற்ற பிரச்சினையல்ல. தொழில் நுட்பம் மலிந்து கிடக்கும் இக் காலத்தில் இதற்கு தீர்வில்லை என்பது நகைப்பிற்குரியது. எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஆளுமையற்ற தனத்தின் விளைவாகவே இப் பிரச்சினை இத்தனை நாள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது.

தற்போது ஒலுவில் மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வீதிக்கு இறங்கியுள்ளனர். ஒலுவிலைப் பொறுத்த மட்டில் அது மு.காவின் கோட்டை. மு.காவின் சேவல் அங்கிருந்துதான் கிழக்கு விடியலை நோக்கி கூவியது. அஷ்ரப் ஒலுவில் என்ற சிறிய கிராமத்தில் இத் துறைமுகத்தையும், ஒரு பல்கலைக்கழகத்தையும், தான் தங்குவதற்கான விடுதியையும் (இக் கடலரிப்பால் இவ் விடுதியின் ஆயுளும் இன்று அல்லது நாளை என்றுள்ளது) அமைத்து அதன் மீதுள்ள தன் பற்றை வெளிப்படுத்தியிருந்தார். இந்த மக்கள் தங்களது உரிமைகளுக்காக வீதிக்கு இறங்கியுள்ளமை அஷ்ரபை இழிவுபடுத்துவது போன்று என்றாலும் தவறில்லை. தற்போதும் ஒலுவில் மு.காவின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்று. மக்கள் வாக்களித்துவிட்டு வீதிக்கு இறங்கி தங்களது உரிமைகளை கேட்பதென்றால் இவர்கள் எதற்காக மு.காவிற்கு வாக்களித்தார்கள்.

குறித்த பகுதி வாக்கினூடாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் அப் பகுதியின் பிரச்சினைக்கான தீர்வை அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்க முயல வேண்டும். அதற்கு அரசு மறுத்தால் அவர்கள் தலைமையில் தான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்கள் இவ்வாறான ஆர்பாட்டங்களை அரசுக்கெதிராக முன்னெடுத்துள்ளமை முஸ்லிம் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்ற செய்தியையும் கூறுகிறது. ஒரு புறத்தில் ஒலுவில் மக்களை சாதூரியமானவர்களாகவும் கூறலாம். முஸ்லிம் கட்சிகள் இன்று வரும் நாளை வருமென கூறிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இற்றை வரை கல்முனைக்கு வந்து சேரவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இவ்வாறான விடயங்களைக் கையாள இவர்களை நம்பிச் செயற்படுவதை விட நேரடியாக அரசின் பக்கம் தலைநீட்டுவது பொருத்தமானது. இம் மக்கள் முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்து அரசை நாடிச் செல்கின்றமை பேரினக் கட்சிகள் மீதான ஈர்ப்பிற்கும் சிறிதான வித்திடலைச் செய்வதோடு கிழக்கின் எழுச்சிக் கோசத்திற்கும் வலுச் சேர்க்கும்.

தற்போது இத் துறைமுகத்தை அகற்ற வேண்டுமென்ற கோசம் மிக இலகுவாக எழுந்து வருகிறது. ஒரு இடத்தின் அபிவிருத்தி என்பது பல விடயங்களில் தங்கியிருக்கும். அதில் ஒன்று தான் இவ்வாறான துறைமுகங்களை எமது பிரதேசத்தில் உள் வாங்குவதாகும். உலகில் பிரயாண வழிகளில் (mode of transport) விமான நிலையங்களுக்கு அடுத்து துறைமுகங்களே (harbours) முக்கிய இடத்தை வகிக்கின்றன. தற்போது இத் துறைமுகமானது மீன் பிடித் (fishery harbour) துறைமுகமாகவே இயங்கி வருகிறது. இதன் மூலம் பெரிதான நன்மைகளை எமது சமூகம் சுவைத்திட முடியாது. இது ஆழ் கடல் மீன் பிடியாளர்களுக்கே அதிகம் நன்மை பயக்கும். ஒலுவிலில் பெரும் பாலும் சிறிய ரக மீன் பிடித் தொழிலாளர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக ஒலுவிலில் சிறியரக மீன் பிடியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மீன் பிடியாளர்களுக்கு ஆழ் கடல் மீன் பிடியை நோக்கிய வழி காட்டல்களை காட்டுதல் மற்றும் இதர பல தொழில் வழி காட்டல்களைக் காட்டுவதன் மூலம் தீர்வை வழங்கியிருக்கலாம். இதனையெல்லாம் நாம் தற்போது தெரிவு செய்துள்ள பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அரசு மீன் பிடித் துறைமுக ஒன்றிற்கு இத்தனை பாரிய செலவை செய்திருக்க வேண்டிய அவசியமுமில்லை.

இது வர்த்தகத் துறைமுகமாகவும் மாறும் போது (commercial harbour) இதன் மூலம் இதனை அண்டிய பிரதேசங்கள் துரித அபிவிருத்தியடையும். மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இங்குள்ளவர்கள் கொழும்பு செல்லும் தேவைகள் குறைவடையும். எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அபரிதமான பங்களிப்பை வழங்கும் எனச் சுருக்கமாகச் சொல்லலாம். வர்த்தகத் துறைமுகங்களின் (commercial harbour) அபிவிருத்திக்கு அரசின் பங்களிப்பும் அவசியம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தேவையான ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களை இத் துறைமுகத்தினூடாக கையாளும் போது இத் துறைமுகம் பாரிய அபிவிருத்திப் பாதையில் பயணித்திருக்கும். இத் துறைமுகம் அமைத்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்திற்கு வரவில்லை என்ற நகைப்பு வார்த்தைகள் தான் வந்திருந்தன (தற்போதைய நிலவரத்தை நான் அறிந்த கொள்ள முயன்றும் என்னால் அதனை அறிந்து கொள்ள முடியவில்லை). இப்படி இருந்தால் இத் துறை முகம் எங்கனம் முன்னேறும்? இதன் பலா பலன்களை எவ்வாறு சுவைத்துக் கொள்ள முடியும். நிலத்தை அகழ்ந்தமைத்த ஹம்பாந்தோட்டை துறைமுகம் இன்று அழகிய முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இத் துறைமுகத்தை எவ்வாறு சீராக இயக்குவது என்ற திட்டங்களை அரசை நம்பி இருக்காது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் வகுத்து இவ்விடயத்தில் கரிசனை கொண்டு அரசிற்கு அழுத்தம் வழங்கிருந்தால் இத் துறைமுகத்தின் உண்மைப் பலனை ஒலுவில் மக்கள் சுவைத்திருப்பார்கள். இவ்வாறு செய்திருந்தால் ஒலுவிலைச் சேர்ந்தவர்கள் தேனீர்க் கடை போட்டே பிழைப்பை நடாத்தியிருக்கலாம்.

அஷ்ரப் இத் திட்டத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இது அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களை துண்டாடுவதற்கான சதி போன்ற சில விமர்சங்கள் எழுந்திருந்தன. இவ்வாறான விமர்சனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மு.காவின் ஸ்தாபகத் தவிசாளரான சேகு இஸ்ஸதீனின் பங்கு அபரிதமானது. தற்போது இவ்வாறான கருத்துகளைக் மேல்க் கிழப்பி சேகு இஸ்ஸதீனை அதீத தூர நோக்கு சிந்தனா சக்தி கொண்டவராக சிலர் உருவகம் கொடுக்க முயற்சிக்கின்றனர். தற்போது எழுந்துள்ள பிரச்சினை கடலரிப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் சேகு இஸ்ஸதீன் போன்றோர் முன் வைத்த குற்றச் சாட்டுகளுக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்குமிடையில் எதுவித சம்பந்தமுமில்லை. இவ்வாறான திட்டங்களின் மூலம் பேரின மக்கள் எமது பகுதிகளினுள் நுழைய வாய்ப்புள்ளது. அவர்கள் நுழைந்தாலும் எமது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான சாதகத் தன்மை குறைவு. அவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களினுள் எல்லைப் படுத்தப்பட்டிருப்பார்கள். எமது பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் தொழிலில் ஈடு படக் கூடாது என பேரின மக்கள் சிந்தித்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? முஸ்லிம்கள் இவ்வாறான குறுகிய சிந்தனைகளை விலங்கிட்டு வீசி எறிய வேண்டும்.

இதனை அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத் ஆகியோரது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்ய முடியாது. மத்திய அரசே இதற்கான பூரண நிதியை ஒதுக்க வேண்டும். ஒலுவில் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் கட்சிகளின் ஆளுகைக்குட்பட்டிருப்பதால் இம் மக்களை முஸ்லிம்கள் கட்சிகளை விட்டும் தூரமாக்கி பேரினக் கட்சிகளின் பால் ஈர்க்கும் நோக்கிலும் இப் பிரச்சினையை தீர்க்காது இழுத்தடிப்புச் செய்யலாம். எமது அரசியல் வாதிகள் பேரினக் கட்சிகளை நம்பி பிழைப்பு நடத்துவதால் காரசாரமான எந்த நடவடிக்களையும் அரசுக்கெதிராக மேற்கொள்ள மாட்டார்கள். இது ஒன்றும் ஐ.நா சபை சென்றோ அல்லது அரசியலமைப்பை மாற்றியோ சாதிக்கக் கூடிய ஒன்றல்ல. இது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக மு.கா மிகக் கடுமையான நிலைப்பாட்டிற்கு வர வேண்டிய நேரம். இப் பிரச்சினையைத் தீர்க்கவே இப்படி எமது முஸ்லிம் கட்சிகள் பின்வாங்கினால் அரசியல் யாப்பு மாற்ற விவகாரம் போன்றவற்றை முஸ்லிம்களுக்கு பொருத்தமான வகையில் அமைத்துக்கொள்ள அரசுக்கு அழுத்தம் வழங்குவார்கள் என நம்பலாமா.

குறிப்பு: இக் கட்டுரை இன்று செவ்வாய் கிழமை 02-08-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Read more...

Tuesday, October 9, 2018

இடைக்கால அரசை நிறுவியே தீருவோம் என்கிறார் வாசு! தனியரசு நிறுவுவோம் என்கிறது ஐ.தே.க

மஹிந்த – மைத்திரிக் கிடையேயான சந்திப்பிற்கு தானே மத்தியஸ்தம் வகித்ததாக கூறும் வாசுதேவ நாணயக்கார எதிர்வரும் சில வாரங்களில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று பொரலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி யின் எதிர்ப்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.

அதன் பிரகாரம் இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ உள்ளதாகவும் அதனூடாக பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு தேவையான பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதன்பொருட்டு சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்று தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அணியுடன் கூட்டு சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தமது அதிருப்தியை எம்மிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுதந்திரக்கட்சியுடன் மஹிந்த அணியினர் இணைக்கப்பட்டால் சுமார் 10 தொடக்கம் 15 உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்.

அவர்களையும் இணைத்துக் கொண்டு ஐ.தே.க தனி அரசாங்கம் அமைக்குமென்றும் அவர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே துஷார இந்துனில் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சுதந்திரக் கட்சியினர் வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து தமது பலத்தை நிலைநாட்ட முடியும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்துக்கு உடன்படமாட்டாரென்ற நம்பிக்கையை பின்வரிசை எம்.பிக்கள் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

புலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.

ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு கடந்த அரசு என அழைக்கப்படுகின்ற குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

அக்குழுவில் கலந்து கொண்டிருந்தவர்களில் புலிக்கொடியை தாங்கி நின்றவர்கள் மூவர் லண்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் கொடியை அவர்கள் தாங்கி நின்றமைக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவர் சொக்கலிங்கம் யோகலிங்கம் என தெரியவருகின்றது. இவர் நாடு கடந்த தமிழீழம் என அழைக்கப்படும் குழுவினரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குழுவினர் தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மறைப்பதற்காகவும் தொடர்ந்தும் அவர்களிடம் பணம் அறவிடுவதற்காகவும் இவ்வாறு தெருத்தெருவாக அலைந்து திரிகின்றனர் என்பது பொதுமக்களின் கருத்தாகும். இக்குழுவினுள் தற்போது பிளவு ஏற்பட்டு தங்கள் தலைவனான உருத்திரகுமாரை நீங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இவர்கள் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்ற வடக்கு ஆழுநரின் சந்திப்புக்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இருந்தாலும் பெரும்திரளான தமிழ் மக்கள் ஆழுநரை அங்கு சந்தித்து, இலங்கையில் தங்கள் முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com