Wednesday, September 19, 2018

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றங்களுடனான புதிய வரைபு.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன், ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நீதிபதி தனது உத்தரவை வழங்கி இரண்டு வாரங்களின் பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைப்பதற்கான கால எல்லையை நீட்டிப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது தொடர்பில், நீதிபதி தன்னிச்சையான தீர்மானத்தை எடுக்கமுடியும் என்றும், அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, குறித்த காலப்பகுதிக்குள் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதவிடத்து சந்தேகநபர்கள் பிணையில் செல்வதற்கான அனுமதியும் புதிய சட்டவரைவில் வழங்கப்பட்டுள்ளது.

‘நீதிபதி சந்தேகநபர்களை தனிப்பட்ட ரீதியாகச் சந்திக்கவும், அவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வு மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் சந்தேகநபர்களின் கருத்துக்களை பதிவுசெய்வதற்குமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக’ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு முன்கூட்டிய அறிவித்தல்கள் எதையும் விடுக்காது நீதிபதி செல்ல முடியும் எனவும், அவ்விடங்கள், பதிவேடுகள் மற்றும் தடுப்புக் கட்டளைகள், ஏனைய பதிவேடுகள், ஆவணங்களைப் பார்வையிடவும் அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டமூலம் அமுலுக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் 72 மணித்தியாலங்கள் வரை நீதிபதியின் முன் நிறுத்தப்படாது தடுத்து வைத்திருப்பதற்கு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும்.

அத்துடன் 3மாதங்கள் தொடக்கம் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்படும் காலப்பகுதியை நீட்டிப்பதற்கும், பல ஆண்டுகளானாலும் விசாரணைகள் முடிவுறும் வரை சந்தேகநபர்களைத் தடுத்து வைப்பதற்குமான அதிகாரத்தை தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வழங்குகிறது.

‘சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான கோட்பாடு மற்றும் சட்ட வரையறை’ தொடர்பான சட்டமூலமானது கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டது.

இச்சட்டமூலமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட போதிலும் இதன் முன்னைய பதிப்புக்களில் குறைகள் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

‘த சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திற்கு கிடைக்கப்பெற்ற, தற்போது அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரதி தொடர்பாக இந்த ஊடகத்தால் சில அதிருப்திகள் முன்வைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் முன்னர் வரையப்பட்ட சில சட்டமூலப் பதிப்புக்களில், காவற்துறையினரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது அங்கீகரிக்கப்பட்ட வாக்குமூலத்தில் நீதிபதியிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிபதியிடம் சந்தேகநபரால் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமானது அரசாங்க தடயவியல் மருத்துவ வல்லுநர் ஒருவரால் பரிசீலிக்கப்படும் எனவும் புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது சந்தேகநபரைப் பாதிக்கின்றது.

இவ்வாறான அறிக்கையானது ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான, ஆரம்ப கட்ட விசாரணையின் போது வழக்குத் தொடுக்கும் அதிகாரியால் வழங்கப்பட வேண்டும்.

காவற்துறையினர் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தை அடுத்தே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சட்டமூலத்திற்கு அமைச்சரவையில் தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட சட்டம் தொடர்பாக சட்ட ஆய்வாளர்கள் வேறு பல விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தில் ஈடுபடும் அல்லது சதித்திட்டம் தீட்டும் நபருக்கு அல்லது குற்றத்தில் ஈடுபட முயற்சிக்கும் நபருக்கு வழங்கும் நோக்கில் எந்தவொரு ‘இரகசியத் தகவலையும்’ சேகரிப்பதானது சட்டவிரோதமானதாகும்.

இச்சட்டத்தால் வரையறுக்கப்படும் இரகசியத் தகவல்களுக்குள் ‘காவற்துறையினர் அல்லது இராணுவத்தினருடன் தொடர்புபட்ட தகவல்களும் உள்ளடங்குகின்றன. அதாவது நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட வேண்டிய அல்லது நிறைவேற்றப்படுகின்ற இராணுவ சார் தகவல்கள் அல்லது சட்ட அமுலாக்கமானது இவ் இரகசிய தகவல்களுக்குள் அடங்குகிறது.

இது பரந்த விடயமாகக் காணப்படுவதுடன், பாதுகாப்பு சார் நடவடிக்கைகளைப் பாதிக்கும் விதமாக அமையலாம் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். மக்களின் நலன்கருதி அல்லது தேசிய நலன்கருதி பதிவுசெய்யப்பட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் அல்லது கல்விசார் வெளியீடுகளில் வெளியிடப்படும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன் பிரதி காவற்துறை மா அதிபர்கள், சந்தேகநபர்களைத் தடுத்து வைப்பதற்கான கட்டளைகளை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால் சில சிக்கல்கள் இருப்பதாகவும், இவர்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமது அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்யும் சம்பங்கள் நிகழ்வதாகவும் ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் பரந்த அளவில் மீளாய்வு செய்வதற்கான ஏற்பாடு சட்டத்தில் காணப்படுவதாகவும் ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, தற்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தில் சில நல்லவிடயங்கள் காணப்படுவதால் இது மனித உரிமை சமூகத்தால் பரந்தளவில் வரவேற்கப்படுகிறது.

இச்சட்டமூலமானது நீண்ட குற்றச் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ள போதிலும், குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளப்படுத்துதல், தடுத்துவைத்தல், அச்சம் கொள்ளுதல், கைதுசெய்தல், விசாரணை செய்தல், தண்டனை வழங்குதல் போன்ற முக்கிய செயற்பாடுகளை வலியுறுத்துகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையின் சட்ட நடவடிக்கையின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகநபர் தனக்கு வழங்கப்பட்ட சட்டக் கட்டளையை நிறைவேற்றவோ அல்லது நீதிசார் உத்தரவை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையோ முன்னெடுக்க முடியாது.

புதிய சட்டமூலமானது ‘சந்தேகநபரைக் கைதுசெய்யும் போது, கைதுசெய்யும் அதிகாரி சந்தேகநபரிடம் கைதுசெய்யும் அதிகாரிகளின் அடையாளங்களைக் கூறுவதுடன், சந்தேகநபரால் இழைக்கப்பட்ட குற்றங்களைக் கூறுவதுடன், எழுதப்பட்ட சட்ட விதியின் பிரகாரம் சட்டவாளரிடம் சந்தேகநபர் தொடர்பை ஏற்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். சந்தேகநபரின் தனித்துவத்தைக் கருத்திற் கொண்டே கைதுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனக் கூறுகிறது.

சந்தேகநபரின் இரத்த உறவு அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சந்தேகநபரைக் கைது செய்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை வழங்கப்பட வேண்டும்.

இந்த அறிக்கையில் கைதுசெய்த நேரம், திகதி, இடம், கைதுசெய்ததற்கான காரணம், தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைவிடம், கைது செய்த அதிகாரியின் நிலை போன்ற பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

சந்தேகநபரைத் தடுத்து வைத்திருக்கும் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி 24 மணித்தியாலங்களுக்குள் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் மற்றும் இவரைத் தடுத்து வைப்பதற்கான விபரங்களை சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரியப்படுத்த வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவானது சந்தேகநபரிடம் விரைந்து செல்ல வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.

தற்போது அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், கைதுகள், தடுத்து வைத்தல், சிறையில் அடைத்தல், பிணையில் விடுதல், குற்றத்திலிருந்து விடுவித்தல், தண்டனை வழங்குதல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்றைப் பேணவேண்டும்.

இத்தரவுத் தளத்தில் சந்தேகநபரைக் கைது செய்ததற்கான சட்ட நகர்வுகள், தடுப்பில் வைத்திருப்பதற்கான காரணங்கள், அவரை விடுவிப்பதற்கான சட்ட ஒழுங்குகள் மற்றும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைப்பதற்கான தேவை தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இத்தரவுத் தளத்தில் தகவல்கள் பேணப்படும் அதேவேளையில் இவ்வாறான கைதுகள் தொடர்பாக சிறிலங்காவிற்கான மனித உரிமை ஆணைக்குழுவிடம் காவற்துறை மா அதிபர் பதிவை மேற்கொள்ள வேண்டும்.

குற்றவியல் வழக்குப் பதியப்படாத எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னரும் தடுத்து வைக்கப்பட முடியாது. இவ்வாறான சட்ட நகர்வுகள் ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படாதவிடத்து, நீதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்களை விடுவிக்க முடியும்.

தடுத்து வைத்தலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்வதற்கான நிர்வாக சார் நிவாரணங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான மீளாய்வு சபை ஒன்று உருவாக்கப்படும். தடுத்து வைக்கப்பட வேண்டிய காலப்பகுதி இரண்டு வாரங்களுக்குள் வரையறுக்கப்பட வேண்டும்.

தடுப்பிலிருந்து அல்லது சிறையிலிருந்து சந்தேகநபர்கள் விடுவிக்கப்படும் போது இது தொடர்பாக சிறிலங்காவிற்கான மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரியப்படுத்த வேண்டும்.

சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள், பண வைப்புக்கள், பண மீளெடுப்புக்கள் உட்பட்ட நிதியுடன் தொடர்புபட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு காவற்துறையினர் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவகங்கள், நிதி சாரா வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதேபோன்று சந்தேகநபர்களின் தொடர்பாடல் சார் தகவல்களைப் பெறுவதற்கு தொலைபேசி உரையாடல்கள், தந்திகள், மின்னஞ்சல்கள், இணையம், காணொளி உரையாடல்கள் போன்றவற்றை குறுக்கீடு செய்து செவிமடுப்பதற்கான அனுமதியை காவற்துறையினருக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, குற்றவியல் செயற்பாடுகளை ஐந்து ஆண்டுகள் தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை இடைநிறுத்தவும் ஒத்திவைப்பது தொடர்பாக சட்டமா அதிபர் தன்னிச்சையான தீர்மானத்தை எடுப்பதற்கான அனுமதியை வழங்குகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் தொடர்பாக ஒன்று அல்லது அதிகமான நிபந்தனைகளைச் சுமத்துதல், சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட எழுத்துமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபருக்கு மன்னிப்பு வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல், புனர்வாழ்வு வழங்குதல், சமூக சேவையில் அல்லது வரையறுக்கப்பட்ட சமூகத்துடன் இணைத்தல் போன்ற பல்வேறு விடயங்களை சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றிடம் கையளிக்க முடியும்.

இச்சட்ட மூலமானது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான வழக்குகள், வாரஇறுதி நாட்கள், பொது விடுமுறைகள், நீதிமன்ற விடுமுறைகள் தவிர பிற நாட்களில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

Read more...

சேலையில் புத்தர். பெண் சட்டத்தரணி மீது வழக்கு தாக்கல்..

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸார் தேடினர்.

அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பொலிஸாரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.

எனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருக்கவில்லை.

“இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் எனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்டபட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாள்களின் பின், அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

பொலிஸாரின் இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான், மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரையும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஆலோசனை பெற்றது.

இந்த நிலையில் பெண் சட்டத்தரணி, புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த விவகாரத்தை நீதிமன்றுக்கு பொலிஸார் கொண்டு வந்துள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Read more...

த.தே.கூ வின் உள்வீட்டு பிரச்சினை வீதிக்கு வந்தது! பூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறார் பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம்ஐயம்பிள்ளை எனத் தெரிவித்து இன்று 19-09-2018 பூநகரியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 14-09-2018 ஆம் திகதி பூநகரி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது கௌரவ உறுப்பினர் யோன்பின்ரன் மேரிடென்சியா நிதிக்குழு அறிக்கை மீது கருத்து கூறும் போது சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடும் இடையூறு செய்தனர். இதனால் யோன்பின்ரன் மேரிடென்சியா தொடர்ந்து கருத்துக் கூற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சபைக்குத் தலைமை தாங்கிய தவிசாளர் ஐயம்பிள்ளை நேரகாலம் குறிப்பிடாமல் சபையினை ஒத்திவைப்பதாக அறிவித்து சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். அவ்வாறு வெளியேறி செல்லும் போது 'வாயை மூடிக்கொண்டு வெளியே போ' என்று உறுப்பினரான யோன்பின்ரன் மேரிடென்சியாவை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் செய்து கட்டளையிட்டார். இது சபையின் ஜனநாயக மரபுக்கும் மக்கள் பிரதிநிதி என்ற உரிமைக்கும் எதிரான செயலாகும். அத்துடன், இது மக்கள் பிரதிநிதியாகிய யோன்பின்ரன் மேரிடென்சியின் கௌவரவத்திற்கும்,சபை நடவடிக்கைக்கும் முரணானது என்பதோடு, புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்களுக்கு சபையில் உரிய பாதுகாப்பு, கௌரவம், நியாயம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் தீயமுயற்சியுமாகும். எனத் தெரிவித்து தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யதனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தவிசாளரே தகைமையை வளர்த்துக்கொள், பூநகரியில் நடப்பது காட்டாட்சியா? மக்களாட்சியா? பெண்களை மதிக்க அரசியல் அநாகரீகத்தை எதிர்ப்போம், மக்கள் உரிமையை காப்போம், பெண்களை அவமதிக்காதே ஜனநாயக உரிமையை மீறாதே, பிரதேச சபையா அல்லது கட்சி அலுவலகமா போன்ற வாசகங்கள எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜயம்பிள்ளை அவர்களிடம் வினவிய போது தான் அவ்வாறு நடந்துகொள்வில்லை என்றும், சபையில் அமைதியின்மை ஏற்படுவதனை தடுக்கவே இரண்டு உறுப்பினர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகவும் தெரிவித்த அவர் கட்சி சார்ந்து சபையினை கொண்டு செல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பிரதேச சபையினை சென்றடைந்து நிறைவுற்றது. இதில் பூநகரி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கரைச்சி கண்டாவளை, பளை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பெண்கள் அமைப்பினர் பலா் கலந்துகொண்டனர்








Read more...

Tuesday, September 18, 2018

மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ள இதோ வழி.

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் பல்வேறு வகையினர் அரசியல் தஞ்சம் கோரினர். அவ்வாறு கோரியவர்களில் பெரும்பாலானோர் சுகபோக வாழ்வு தேடிச் சென்றவர்கள் என்பதும் அவர்கட்கும் நாட்டில் நடைபெற்ற யுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதும் பரவலாக பேசப்படுகின்ற விடயம்.

இன்றும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவே பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு செல்கின்றவர்களில் பெரும்பாலானோர் செல்வந்த வீட்டுப்பிள்ளைகள். உண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் இங்கே ஒருநேர உணவுக்காக கூலித்தொழில் செய்துவருகின்றனர். அவர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக புதியதோர் வழியொன்றை கண்டு பிடித்துள்ளமை அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது ஒன்றின்போது தெரியவந்துள்ளது.

6 மாதங்களாக வாள் வெட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் தேடி வந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடிப்படையாக வைத்து மானிப்பாய் பொலிஸார் வேன் ஒன்றில் சாவகச்சேரி பகுதிக்கு சென்ற போது அங்கு குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக முன்னாயத்தங்களை செய்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வைத்திருந்த தொலைபேசிக்கு வந்த அழைப்பை வைத்து ஏனைய வாள் வெட்டு சந்தேகநபர்களை பிடிப்பதற்காக அவர்களிடம், உங்கள் சகா வாகன விபத்தில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சகாவை வையத்தியசாலையில் பார்க்கச்சென்றவர்களை அங்குவைத்து கைது செய்த பொலிஸார், இதே பாணியில் ஏனைய 7 வாள் வெட்டு குழு சந்தேக நபர்ளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாம்பழம் எனும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து 3 வாள் மற்றும் கைக்கோடாலியும் கைபற்றப்பட்டது.

இதில் கைதான இருவர் உயர்தர பரிட்சையில் இவ்வருடம் தோற்றுபவர்களாவர்.

மேற்படி நபர்களிடம் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மாம்பழம் என்பவருக்கு வெஸ்டன் யூனியன் மூலமாக பெருந்தொகையான பணம் வெளிநாடு ஒன்றிலிருந்து மாதாந்தம் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தில் தமது உறுப்பினர்களுக்கு மாதாந்தும் மது மாதுவுடன் விருந்துபசாரம் வழங்கப்பட்டு வந்தமையும் தெரியவந்துள்ளது. குறிந்த விருந்துபசாரத்தின் நோக்கம் பற்றி வினவப்பட்டபோது இளைஞர்களை தம்முடன் இணைத்துக்கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வகுத்துக்கொடுக்கப்பட்ட வியூகம் எனத் தெரிவித்துள்ளார் மாம்பளம்.

இவ்வாறு இளைஞர்களை இணைந்து வன்செயல் புரிந்து, குடாநாட்டில் ஓர் அச்சநிலை உள்ளதாக உலகிற்கு காட்டுவதே புலம்பெயர் தமிழரின் தேவை என்றும் அதனடிப்படையில் தான் செயற்பட்டுவந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் அரசியல தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தலை எதிர்நோக்கி நிற்கும் நபர்களின் வீடுகளை தாங்கள் உடைத்துள்ளதாகவும், வீட்டிலுள்ளோரை அடித்தது காயப்படுத்துதல், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தல் போன்றவற்றை தாம் செய்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கான அறிவுறுத்தல் தமக்கு குறித்த நாடுகளிலுள்ள தமது இயக்குனர்களிடமிருந்து கிடைத்துவந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் இவ்வாறு செயகின்றபோது அங்குள்ளவர்கள் இலங்கையிலே இராணுவத்தினரின் பாதுகாப்பு கெடுபிடி தங்கள் பிரதேசத்தில் இருப்பதாக காட்டி தமக்கான வெளிநாட்டு தஞ்சக்கோரிக்கையை உறுதிபடுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் குறித்த காடையர்கள் கைது செய்யப்படும்போது, அவர்களை விடுவிக்கவென பொலிஸ்நிலையத்தில் ஆஜராகி பொலிஸாருடன் முரண்படும் இழிசெயலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் செய்துவருகின்றார் என மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

அத்துடன் மக்களால் நன்கு அறியப்பட்ட குறித்த சமூக விரோதிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான சயந்தன் தொடர்ந்தும் அவர்களை விடுதலை வீரர்கள் என காண்பிக்க முற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைது செய்யப்படுகின்ற காடையர்களின் உறவினர்கள் சிலர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது நகைப்புக்குரியதாகும்.


Read more...

முஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு காழ்ப்புணர்ச்சியாம்! கூறுகிறார் முன்னாள் எம். பி பியசேன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மக்கள் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டை காரைதீவில் வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நேற்று இக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம் தலைமையில் இவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காரைதீவில் உள்ள வட்டாரங்களுக்கு அமைப்பாளர்கள் இதன்போது நியமிக்கப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இங்கு விசேட உரை ஆற்றியபோது பொடியப்பு பியசேன மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவருக்கு மிக மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்கிற மகிழ்ச்சியான செய்தி எமக்கு இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்னொரு வகையில் சொல்வதானால் மக்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் வெகுவிரைவில் மீண்டும் மலர்வது நிச்சயம் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது. அதாவது அவரின் கைகளை முறிக்க முடியாது என்பதை உணர்ந்து அவற்றை முத்தமிடுகின்றது. இதே நிலைப்பாட்டுக்குதான் உலக நாடுகள் அனைத்தும் வந்து உள்ளன.

சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். தமிழ் மக்களுக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இது வரையில் கிடைக்கவே இல்லை. தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்று கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களை மாறாத துன்ப சாகரத்துக்குள் தள்ளி இருக்கின்றார்கள். எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் மக்களின் தலைவராக தமிழர்கள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். ஒரு இனத்தின் உண்மையான தலைவன் இன்னொரு இனத்துக்கு எதிரானவனாக இருக்க மாட்டான். காந்திஜி இலங்கை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து இருக்கவில்லை. ஆனால் அவரை நாமும் மகாத்மா என்று கொண்டாடுகின்றோம். அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஸ எத்தனையோ நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றபோது ஏன் நாம் அவரை தமிழ் மக்களின் தலைவராக ஏற்று கொள்ள முடியாது என்று நான் வினவுகின்றேன்.

அரசியலையும், அபிவிருத்தியையும் முஸ்லிம் சகோதர இனத்தவர்களிடம் இருந்து தமிழர்கள் கற்க வேண்டி உள்ளது. இரண்டையும் அவர்கள் ஒன்றாகவே முன்னெடுக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசியலோடு சேர்ந்த அபிவிருத்தியையும், அபிவிருத்தியோடு இணைந்த அரசியலையும் ஒருசேர முன்னெடுப்பதன் மூலமே இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் முஸ்லிம் பிரதேசங்களை போல முன்னேற்றங்களை அடைதல் கை கூடும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பொதுவாக அம்பாறை மாவட்டத்தை குறிப்பாக காரைதீவை சேர்ந்த பாடசாலைகள், கோவில்கள் போன்றவற்றுக்கு பல இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் செய்து கொடுத்திருக்கின்றேன். ஆனால் நல்லாட்சியில் அபிவிருத்தி எதுவும் இடம்பெறுவதாக தெரியவில்லை. நான் மீண்டும் அதிகாரத்துக்கு வருகின்றபோது அபரமித அபிவிருத்தியை எனது மக்களுக்கு பெற்று கொடுப்பேன்..

இதே நேரத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் வேற்றுமையில் ஒற்றுமை அத்தியாவசியமாக உள்ளது. இம்மாவட்டத்தில் பல்லாயிர கணக்கான தமிழ் இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஆயினும் இதற்கு எதிராக தமிழர் தரப்பில் குரல் கொடுக்கப்படுவது இல்லை என்றே கூறலாம். ஆனால் எவரேனும் இந்து ஒருவர் இஸ்லாமியராக மாறி விட்டால் போதும். வரிந்து கட்டி கொண்டு வலிந்து சண்டை போடுகின்றார்கள். இதற்கு முஸ்லிம்கள் மீது இருக்க கூடிய காழ்ப்புணர்ச்சிதான் ஒரேயொரு காரணம் ஆகுமே ஒழிய இந்து சமயம் மீதான அக்கறை அல்ல என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்கின்றேன்.

Read more...

ஜனாதிபதி வேட்பாளராக தன்னுடைய பெயரும் பேசப்படுகின்றதாம். வாசு.

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில், பொதுஜன பெரமுன தீர்மானமொன்றை மேற்கொள்ள​வெண்டுமென குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது பெயரும் முன்மொழியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியினர் பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு தாம் உடன்படுவதாகவும், வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ​போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என, குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

Read more...

ரணில் தொடர்பான அஸ்ரபின் நிலைப்பாடு நிலையானதா?

ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் பயணிக்கமாட்டேன் என்று அஸ்ரப் அப்போது சொன்னது உண்மைதான். அவர் உயிருடன் இருந்திருந்தால் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருந்திருப்பார் என்று சொல்ல முடியாது.

அரசியலில் எப்போது என்ன மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்போது ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படும்.

அவர் உயிருடன் இருந்திருந்தால் மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள் காரணமாக அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறி இருக்கக்கூடும்.

அஸ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தார். பின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி ரணசிங்க பிரேமதாசாவை ஜனாதியாக்குவதற்கு ஆதரவு வழங்கினார். பின்பு சந்திரிகாவை ஜனாதியாக்குவதற்கு ஆதரவு வழங்கி அவர் தலைமையிலான சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்தார். மரணிக்கும் வரை அதிலேயே இருந்தார்.

இதைப் பதவிக்கான கட்சி தாவல்கள் என்று சொல்ல முடியாது. அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப அவரும் மாறினார் என்றே சொல்ல வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள் காரணமாக அவர் ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் நிலைப்பாட்டை எடுத்திருக்கக்கூடும்.

ஆனால், ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் பயணிக்கமாட்டேன் என்று அஸ்ரப் அப்போது சொன்னதை வைத்துக்கொண்டு அதுதான் அவரது இறுதி முடிவு என்று சொல்ல முடியாது.

அப்போது அவர் இதைக் கூறும்போது ரணிலின் சில நிலைப்பாடுகள் அஸ்ரப் க்கு பிடிக்காமல் இருந்திருக்கும். கால ஓட்டத்தில் அந்தக் கொள்கைகளை அவர் நீக்கி இருந்தால் அஸ்ரப் அவரது நிலைப்பாட்டை மாற்றி இருக்கக் கூடும்.

தங்களின் கட்சியின் நலனுக்கு அல்லது தங்களின் சமூகத்தின் நலனுக்கு ஏற்றால்போல் பெரும்பான்மை இனக் கட்சிகள் நிலைப்பாட்டை எடுத்தால் அந்தக் கட்சிகளுடன் இணைவதுதானே சிறுபான்மை இனக் கட்சிகளின் நிலைப்பாடு.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது இலங்கையின் அரசியலை பார்த்துக்க்கொண்டிருக்கின்ற அத்தனை பேருக்கும் தெரியும்.

Read more...

Monday, September 17, 2018

ஆளுனருக்கும் அனந்தி சதிதரனுக்குமிடையேயுள்ள நெருக்கம் என்ன?

வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து, சாதாரண மாகாணசபை உறுப்பினராகவே விண்ணப்பித்து அனுமதியை பெற்றிருக்கிறார்

வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரை சட்டவிரோதமாக விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்ததையடுத்து விடயம் நீதிமன்று சென்றது. விக்கினேஸ்வரன் பதவி நீக்கம் செய்தது தவறானது என நீதிமன்று தீர்ப்பளித்து. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விக்னேஸ்வரன் உதாசீனம் செய்ததால் முழு அமைச்சரவையும் செயலற்றுக்கிடக்கின்றது.

இந்நிலையில் வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், இந்திய பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பது அனந்தியின் திட்டம். இதற்கு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்திய பயணத்திற்கு அனுமதி கோரி, ஆளுனருக்கு அனந்தி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அமைச்சர் என குறிப்பிட்டு அனந்தி கையொப்பமிட்டிருந்தார்.

அமைச்சரவை ஒன்று இயங்காத நிலையில் அமைச்சர் என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டிருந்தால் அது செல்லுபடியற்றதாகும். எனவே ஆளுனரால் அக்கடிதத்தை நிராகரித்திருக்க முடியும். மேலும் தாங்கள் தற்போது அமைச்சர் அல்ல என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவும் முடியும். ஆனால் ஆளுனர் அமைச்சர் அன்றில்லாமல் உறுப்பினர் என்று புதிய கடிதம் தாருங்கள் அனுமதி தருகின்றேன் என மாற்றுவழியைக் காட்டி அனுமதியும் வழங்கியுள்ளார்.

அவ்வாறாயின் அனந்திக்கும் றெஜினோல்ட கூரேக்குமிடையிலான உறவு யாது?

அரசியல்வாதிகள் தங்களது பிரச்சினைகள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இவ்வாறு மிகுந்த விட்டுக்கொடுப்புடன் நிறைவேற்றிக்கொள்ளுகின்ற அதே நேரத்தில் மக்களை கூறுபோடுவதற்காக இனவாதத்தை கக்குகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

TID பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கடந்த 12 ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், இதுதொடர்பான ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை வேறு பக்கம் திருப்பிவிடலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்திருந்தார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் உட்பட மேலும் சில பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவும் நாலக சில்வா திட்டம் தீட்டுவது சம்பந்தமான ஒலிப்பதிவுகளும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டிருந்தது

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த ஒலிப்பதிவுகள் மற்றும் நாலக சில்வா மீது விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டிருந்த நிலையிலே அவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Read more...

அஸ்மினின் ஊடக இணைப்பாளர் மிரட்டியதாக பெண் செய்தியாளர் பொலிஸில் முறைப்பாடு.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் என்.எம் அப்துல்லாஹ் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து குடாநாட்டு பத்திரிகை ஒன்றின் அலுவலகச் செய்தியாளரான செல்வி சோபிகா பொன்ராஜா யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள். அடுத்த மாதம் 30ஆம் திகதி பெரிய கலவரம் இருக்கு. அப்ப தெரியும் உங்களுக்கு என்று அப்துல்லா தன்னை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என இன்று(17) முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அச்சுறுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் அப்துல்லாவை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

வலம்புரிப் பத்திரிகையின் செய்தியால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அத்துடன், அந்த முறைப்பாடு கிடைப்பில் போடப்பட்ட நிலையில் அந்தப் பத்திரிகையின் பெண் செய்தியாளர் இன்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

மேலும் நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் மீது குறித்த பத்திரிகை ஆசிரியரும் முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாறுக் ஷிஹான்

Read more...

Sunday, September 16, 2018

இராணுவம் வேண்டுமா? வேண்டாமா? கரவெட்டடி தவிசாளரின் துணிகர முடிவால் மக்கள் பணம் ஒன்றரைக்கோடி சேமிப்பானது!

சைக்கிளுக்கு காற்றுப்போனது!

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில் கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள காணியினை செப்பனிடும் பணிகளுக்கான செலவுகள் தொடர்பான கணக்கெடுப்பில் ஒன்றைகோடி செலவாகும் என்பது தெரியவந்துள்ளது.

மக்களுக்கான குறித்த அவசர வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இராணுவ உதவியை பெற்றுக்கொண்டு, காணி செப்பனிடும் பணியை இராணுவச் சிப்பாய்களைகொண்டு செய்வதனால், இராணுவ வாகனங்கள் மற்றும் யந்திரங்களுக்கான எரிபொருள் செலவுடன் கருமத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவ்வாறு செய்யும்போது சுமார் ஒன்றரைக்கோடி ருபா மக்களின் பணத்தை சேமித்துக்கொள்ளவும் முடியும் என்றும் சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவை எதிர்த்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் தாம் தேசியக் கொள்கையில் உள்ளவர்கள் என்றும் இராணுவத்தினரை குறித்த செயற்பாட்டினுள் உள்வாங்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சபையில் பெரும் வாத-பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

எதிர்ப்பை மறுத்துப்பேசிய கரவெட்டி சபைத்தவிசாளர் த.ஐங்கரன், ஒரு ஒருவார கால எல்லைக்குள் காணி தொடர்பான விடயங்களை உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் காலத்தை தாமதிப்போமானால் பருவமழை காலத்தினுள் சிக்கி எமது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதுடன் அடுத்த வருடமே வேலைகளை ஆரம்பிக்ககூடிய நிலையும் ஏற்படலாம். 23 கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டத்தை நாம் நேரகாலத்தை கணக்கிலெடுத்து ஆரம்பிக்கத்தவறுவோமாக இருந்தால் மக்களின் அபிவிருத்திக்கென கிடைக்கப்பெற்ற பணம் திரும்பிச் செல்வதற்கான துர்ப்பாக்கிய நிலைகூட ஏற்படும்.

எனவே நாம் எமது மக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியை கவனத்திலெடுத்து ராணுவத்தினரின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அவ்வாறு அவர்களின் உதவியை பெறுகின்றபோது வெறுமனே எரிபொருள் செலவு உட்பட பத்தோ அல்லது பதினைந்து லட்சங்களை செலவிட்டு விடயத்தை காலக்கிரமத்தில் செய்துவதுடன் மக்களின் பணத்தில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா வீண்விரயமாவதையும் தடுக்க முடியும்.

இங்கு மேற்கொள்ளப்படவிருக்கின்ற எந்த கருமத்தையும் நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள மாட்டேன். ஆனால் எமக்கென வந்திருக்கின்ற பணம் திரும்பிச் செல்வதற்கு ஏற்றவகையில் செயற்படுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது. ஆனால் குறித்த பணிக்கு இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுவதை எதிர்கின்ற தரப்பினர் அதற்கான மாற்றுவழியை இச்சபையில் காலதாமதம் இன்றி முன்வைப்பார்களேயானால் அது மக்களுக்கு பயன்தரவல்லதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு தயங்கவும் மாட்டேன் என சவால் விடுத்தார்.

மேலும் விடயத்தை ஆதரித்து வாதிட்ட தவிசாளர் ஐங்கரன், நான் மாவீரர் குடும்பத்தை சார்ந்தவன். ஆனால் இங்கு இதை எதிர்கின்ற பலர் மறைமுகமாக இராணுவத்தினரிடம் சொந்த உதவிகளை பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால் நாம் இன்று மக்களின் அபிவிருத்தி பணிக்காகவே இராணுவ உதவியை பெற முனைகின்றோம். இதற்காக என்மீது சேறடிக்கப்படலாம், ஆனாலும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அச்சேறடிப்புக்களை தாங்கிக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதை எதிர்த்துப்பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் புஸ்பவசந்தன், தாம் தேசிய கொள்கைகள் உடையவர்கள். இராணுவத்தின் உதவியை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

அவ்வாறே தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பேசுகையில் , இன அழிப்பு செய்த ராணுவத்தினருக்கு தாம் ஆதரவளிக்க முடியாதென்றும் காணியை அபகரிப்பவர்களுக்கே இப்படியான ஊடுருவல்களுக்கு தாம் அனுமதிக்க கூடாதென்றும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆதரித்துப்பேசிய உறுப்பினர்கள், இச்சபையானது, அபிவிருத்திக்குரிய சபையே என்றும் மக்களின் அபிவிருத்தியே இங்கு பிரதானமானது என்றும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சபை அதிகளவிலான பணத்தை செலவழிப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தாலும் எதிர்ப்பவர்களிடம் மாற்றுவழி இல்லாத காரணத்தாலும் ராணுவத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறினர்.

தொடர்ந்து இராணுத்தினரின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், ஈ.பி.டி.பியினர் , ஐக்கிய தேசிய கட்சியினர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 பேர் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் 7 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருவருமாக ஒன்பது பேர் வாக்களித்தனர்.

இரண்டு உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இருபதுக்கு ஒன்பது என்ற ரீதியில் தீர்மானம் வெற்றியளித்தது.

இச்செயற்பாட்டினூடாக கரவெட்டி சபை மக்கள் விடயத்தில் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளது என மக்கள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகின்றது.










Read more...

Friday, September 14, 2018

தேர்தல் வேதாளம் மீண்டும் முருங்கையில்! தீர்வின்றேல் மீண்டும் போராம்! சம்பந்தன்.

தேர்தல்கள் வரும்போது அரசியல்வாதிகள் மூட்டை மூட்டையாக உறுதிமொழிகளை அள்ளி வீசுவர். அது தெற்கில். ஆனால் நமது அரசியல்வாதிகள் இனவாதத்தையும் அரசியல் பிரச்சினையையும் கையிலெடுப்பர். அதற்கும் மேலாக சென்று அரசியல் தீர்வு கிடையாவிட்டால் ஆயுதத்தீர்வே வழி என்பர். அதற்கு தங்களுடன் சர்வதேசம் ஒத்து நிற்கும் என்பர். இவ்வாறான வார்த்தைகளை நாம் கேட்காத தேர்தல் ஒன்றை இதுவரை சந்தித்ததே இல்லை.

எதிர்வரும் மாதங்கள் தேர்தல் மாதங்களாக அறிவிக்கப்படவுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் இரா.சம்பந்தனும் இடம்பெற்றிருந்தார். கடந்த திங்கட்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்தியப் பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில் வினவியபோது,

“இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் பல விடயங்கள் குறித்துப் பேசினோம். அதில் அரசியல் தீர்வு தொடர்பில் நான் அதிகம் பேசினேன்.

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினைக்கு இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. இனப் பிரச்சினை இனிமேலும் தொடரக் கூடாது. 70 ஆண்டுகளில் சுமார் 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இனப் பிரச்சினையால்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன்போது மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், பேச்சுகள் மூலம் மட்டுமே காலத்தை இழுத்தடித்தன. இதனால் அரசியல் தீர்வு எட்டாக்கனியாகவே இருந்தது.

30ஆண்டு கால ஆயுதப் போரால், எமது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன. தமிழர் தாயகம் அரச படைகளின் தாக்குதல்களினால் பேரழிவைச் சந்தித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. அபிவிருத்தி மாத்திரம் ஓரளவு இடம்பெற்று வருகின்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்திய அரசு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைக் கூறுகின்றோம்.

அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்றாலும் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபடுகின்றது என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். எனினும், வேகம் போதாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். எனினும், இனவாதிகள் இதனைக் குழப்பியடிக்க முயற்சிக்கின்றனர்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைகளை முன்வைப்பதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நாமும் இடம்பெற்றுள்ளோம். தீர்வுக்கான தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது. வழிநடத்தல் குழுவானது இடைக்கால அறிக்கையை அரசமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பித்துள்ளது.

இதன் பின்னர் வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது சமர்ப்பித்துள்ள அரசமைப்புக்கான நகல் வரைவு, திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கு இறுதியாக நடைபெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது. எனினும், இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது. புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அந்தத் தீர்வு அமையவேண்டும். அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும்.

புதிய அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் நாங்கள் உங்களை தொல்லைப்படுத்துகின்றோம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் பிரதமராகப் பதவியேற்றவுடன் எனது தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு இங்கு வந்து உங்களை நேரில் சந்தித்தபோதும், அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலேயே அதிகம் பேசினோம். அதன்பின்னர் நீங்கள் இலங்கைக்கு இரு தடவைகள் வந்தபோதும், அரசியல் தீர்வு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சொன்னேன்.

இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர், இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. நான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இரு தடவைகள் இலங்கைக்கு வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் இதனை எடுத்துக் கூறியிருந்தேன். எனவே, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இலங்கை உடன் காணவேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக – சமாதானமாக வாழவேண்டும். அதற்கான வழியை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கூறினார்” – என்றார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

Read more...

தகவலறியும் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமை யாதென உங்களுக்கு தெரியுமா? ( RTI )

உங்களது மாகாண, பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அது எவ்வாறு செலவிடப்பட்டது? யார்யாருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? போன்ற அனைத்து தகவல்களையும், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிவீர்களா? இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு!

தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை.

அரச நிறுவனம் ஒன்றிலிருந்து தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி இனி கவனம் செலுத்துவோம்.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரஜை தோதான தகவல் அலுவலருக்கு, தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும்.

தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும்.

கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு அறிவிக்க வேண்டும்.

தகவலை வழங்க முடிவு செய்தால், அத்தகைய முடிபு எடுக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களினுள் குறித்த தகவல் பிரஜைக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரஜையின் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றவிடத்து, அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் செய்யப்படுதல் வேண்டும்.

பிரஜை ஒருவர் கோரும் தகவலானது மூன்றாம் நபருடன் தொடர்புடையதாக இருப்பின், தகவலை வழங்குவதா? வேண்டாமா? என்பது பற்றி 7 நாட்களுக்குள் அறிவிக்கும் படி, தகவல் அலுவலர் மூன்றாம் நபரை கோருதல் வேண்டும். மூன்றாம் நபர் தகவலை வழங்க சம்மதியாதுவிடின் தகவலை வழங்கக்கூடாது. மாறாக மூன்றாம் நபர் சம்மதித்தாலோ அல்லது பதில் தராவிட்டாலோ அத்தகவலை வழங்க வேண்டும்.

மேன்முறையீடுகள்.

தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரஜையொருவர், தகவல் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம்.

அதே போல் ஆணைக்குழுவின் முடிவினால் பாதிக்கப்பட்ட பிரஜையொருவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதன் முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரயோகம்

கட்டுரையின் கீழ் வரும் இப்பகுதி இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரசுரம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

எவ்வாறான சந்தர்ப்பங்களில் தகவலறியும் சட்டத்தினை பிரஜை ஒருவர் பிரயோகிக்க முடியும் என்பது பற்றி உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

உதாரணம் – 01

பிரஜை ஒருவரின் முச்சக்கர வண்டி பாதையில் உள்ள குழிகளில் விழுந்து உடைந்து பழுதடையும் போது, அவரது நகரத்தில் உள்ள பாதைகளை செப்பனிட்டு திருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்புவதறகான உரிமை அவருக்கு இருக்கின்றது.

பாதை திருத்தப் பணிகளுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?

இந்த திருத்தப் பணிகளுக்காக வெளிநாட்டு உதவியாக பணம் வழங்கப்பட்டிருந்தால் அதில் இருந்து எவ்வளவு தொகை செலவிடப்பட்டது?

பாதையை செப்பனிடுவதற்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது?

திருத்த வேலைகளுக்கான மூலப் பொருட்களுக்கான செலவினம் என்ன?

போன்ற கேள்விகளை எல்லாம் கேட்கும் உரிமை பிரஜைக்கு உண்டு. அப்போதே பாதை திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் சரியான முறையில் செலவிடப்பட்டதா அல்லது ஒப்பந்தக்காரர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றதா என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும்.

உதாரணம் – 02

பிரதேசம் ஒன்றில், பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட வரவு செலவுத் திட்டதில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும், இன்னமும் வேலைகள் நடைபெறவில்லை எனின் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பிரதேச சபையிடம் கேள்வி எழுப்பும் உரிமை இருக்கின்றது.

பாலத்தை நிர்மாணிப்பதற்கு தொழிலாளர்களுக்காகவும் நிர்மாண வேலைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குமாக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது?

நிர்மாண வேலைகளை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர் யார்?

ஏன் பாலத்தின் நிர்மாணம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை?

போன்ற வினாக்களை பிரதேச சபையிடம் வினவ முடியும்.



Read more...

சிங்களப்பிள்ளையின் தாயும் தமிழ் பிள்ளையின் தாயும் தாய்மாரே! காணாமல் போனோரை தேட உரிமை உண்டு! டிலான்-எஸ்பி.

தனது மகன் காணாமல் போனால், ஒரு சிங்கள தாயாருக்கு இருக்கும் வலியே தமிழ் தாயாருக்கும் இருக்கும். தமிழ் தாயாருக்கு தனியான வலிகள் எதுவுமில்லை. ஒரு பிள்ளை காணாமல் போனால், அந்த பிள்ளை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை பெற்றோருக்கு உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த விடயம் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவர்கள் இதனை கூறியுள்ளனர்.

டிலான் பெரேரா,

காணாமல் போனோர் சம்பந்தமான எடுக்கப்படும் விடயங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வந்த போது நாங்களே கைகளை தூக்கி அதனை நிறைவேற்றினோம்.

அது மட்டுமல்ல, அதில் இருந்த ஆபத்தான பந்திகளை ஜனாதிபதியிடம் கூறி மாற்றினோம். காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை எதிர்க்கும் தரப்பினர் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கலாம்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் என்ற வகையில் சிங்கள பிள்ளையின் தாயும், தமிழ் பிள்ளையின் தாயும் இரண்டு பேரும் தாய்மார்கள் அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறோம்.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பல நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு வேறு ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு வேறு.

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் தமது பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பான நிலைமையை அறிந்துக்கொள்ளும் உரிமை தமிழ் தாய்மாருக்கு இருக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு.

எஸ்.பி. திஸாநாயக்க.

உலகில் இப்படியான சம்பவங்கள் நடந்தால், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்களை தெரியப்படுத்தி அவர்களை தேற்ற வேண்டுமே தவிர துரத்தி, துரத்தி அடிக்க கூடாது.

தேவை ஏற்பட்டிருந்தால் தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டோலாவுக்கு வெள்ளையர்கள் அனைவரையும் கொலை செய்திருக்க முடியும். அவர் அப்படி செய்யவில்லை. விடயங்களை தேடி அறிந்து பாதிக்கப்பட்டவர்களின் மனதை தேற்றி, அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

டிலான் பெரேரா.

இலங்கையிலும் தென் ஆபிரிக்காவில் நடந்தது போல், அனைத்தும் முடிவடைந்த பின்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தென் ஆபிரிக்காவின் ஆயர் டுட்டு தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் அமர்ந்து நடந்த உண்மை சம்பவங்களை விசாரித்தனர்.

அந்த ஆணைக்குழுவின் முன் வெள்ளையின படையினரும் நெல்சன் மண்டேலாவின் கறுப்பின போராளிகளும் செய்தவற்றையும் நடந்தவற்றையும் கூறினர். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் அவர்கள் உண்மைகளை கூற ஆரம்பித்தனர்.

எங்களால் இவை நிகழ்த்தப்பட்டன என்று உண்மையை கூறினர். அப்போது மனதில் இருந்த சுமை குறைந்தது. இறுதயில் ஆணைக்குழு இரண்டு தரப்பிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சி பத்திரங்களை வழங்கு, இழப்பீடுகளை வழங்குமாறு பரிந்துரைத்து, இரண்டு தரப்பினருக்கு மன்னிப்பு வழங்கியது.

நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி எனக் கூறி சிறையில் அடைத்த ஜனாதிபதி டி கிளர்க். மண்டேலா ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது அவருக்கு கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தார். இலங்கையில் இப்படியான ஒன்றை எண்ணி பார்க்க முடியுமா?.

மகிந்த ராஜபக்ச அல்லது மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியாக இருக்கும் போது சாதாரண தமிழர் ஒருவரை உப ஜனாதிபதியாக நியமிக்குமாறு நான் பரிந்துரைத்தேன் என்று வைத்துக்கொள்வோம்.

கலகொட அத்தே ஞானசார தேரர் இதற்கு எதிராக 10 தடவைகள் இலங்கை முழுவதும் செல்வார். எனினும் எமது நாடு அந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அனைத்து இனத்தவரும் சமமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி. திஸாநாயக்க,

நீங்களும் நாமும் அறிந்திருந்திருந்தும் வெளியில் கூறாத சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டவர்களில் சிலரும் இருக்கின்றனர். இது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

டிலான் பெரேரா.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் கொண்டு வரப்பட்ட போது, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாங்களும் அதற்கு உதவினோம்.

எஸ்.பி. திஸாநாயக்க.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை நாங்கள் முழுமையாக எதிர்ப்பவர்கள். நாங்கள் இருவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள்.

எனினும் போரின் இறுதிக்கட்டங்களில் பிரபாகரன் மிகவும் மனிதாபிமானமற்றவராக செயற்பட்டுள்ளார். பிரபாகரன் அவர்களின் ஆட்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். அவர் ரமேஷை கொண்டு சென்று சிறை வைத்திருந்தார்.

கருணா அம்மான் விலகிய பின்னர், பிரபாகரன் ரமேஷை கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தார். ரமேஷை சுட்டுக்கொன்றிருப்பார். இறுதியில் ரமேஷ் படையினரிடம் சரணடைந்தார். அவரை கொன்றனர். இப்படியான விடயங்கள் இருக்கின்றன.

டிலான் பெரேரா.

பிரபாகரன் கொலை செய்த அரசியல் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அவர் அதிகளவில் தமிழ் அரசியல் தலைவர்களையே கொலை செய்துள்ளார்.

Read more...

கம்பன்பிலவின் இருபதிற்கு எதிரான மனு 17ம் திகதிக்கு ஒத்திவைப்பு.

மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் 20வது அரசியல் திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது மாற்றுக் கொள்கைகளுக்கான மத்தியநிலையம் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக இந்நாட்டு மக்கள் பல தடவைகள் தமது விருப்பத்தை தெரிவித்திருப்பதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக மக்கள் வரம் பெற்றதாகவும், நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பதன் ஊடாக மக்களின் இறைமை மீறல் இடம்பெறுவதில்லை என்றும் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

இதன்பின்னர் மனு மீதான மேலதிக விசாரணைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜேவிபி யினரால் தனிநபர் பில் ஆக கொண்டுவரப்பட்டுள்ள குறித்த முன்மொழிவிற்கு ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எதிர்பை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தேசிய கல்விமான்கள் பிக்கு ஒன்றியத்தின் கூட்டத்தில் அவர் பேசும்போது , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்ற வெற்று சத்தத்திற்கு மத்தியில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி பிரிவினைவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்க அரசியலமைப்புத் திருத்தங்களை செய்ய முடியாது என்பதால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்ற போலியான கோஷத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதியை பொது வாக்கெடுப்பில் தெரிவு செய்வதற்கு பதிலாக அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருக்கும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவிருக்கும் சகல வழிகளையும் அடைக்க வேண்டும்.

இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக அறிக்கையிட்டு வெளியில் இறங்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு சவால் விடுக்கின்றேன். அப்படி வெளியேறும் மக்கள் பிரதிநிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்க மக்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ரவியின் அமைச்சர் கனவுக்கு ஆப்பு! சீஐடி வழக்கு தாக்கல்!

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்குமாறு ஐ.தே.கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொடர்ந்தும் பிரதமரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்ததையடுத்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன், ரவி கருணாநாயக்க எந்த விதத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பது தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி அண்மையில் பிரதமர் செயலகத்திடம் சட்டமா அதிபரால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் வியட்நாமிலிருந்து வந்த பின்பு இதை அடிப்படையாக கொண்டு ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அமைச்சுப் பதவி கிடைக்கும் என காத்திருந்த ரவிக்கு இன்று குற்றவிசாரணைப் பிரிவினரால் பேரதிர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று -14- குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் பொய்யான ஆதாரங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வடக்கை வதைக்கின்றது ஆவா , கிழக்கை சிதைக்கின்றது மாவா. கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிபாஸ்

யாழ்ப்பாண மாவட்டத்தை ஆவா ஆட்டி படைப்பது போல அம்பாறை மாவட்டத்தை மாவா வாட்டி வதைக்கின்றது என்று தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. எல். எம். ரிபாஸ் தெரிவித்தார்.

மருதமுனையில் உள்ள இவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

மாவா என்கிற போதை கலந்த பாக்கு பாவனை அண்மைய வருடங்களில் அம்பாறை மாவட்டத்தை வெகுவாக ஆக்கிரமித்து உள்ளது. தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த கணிசமான இளையோர்கள் மாவா பாக்கு பாவனைக்கு ஆட்பட்டு வருகின்றனர். கல்முனை நீதிமன்றத்துக்கு சாதாரணமாக மாதாந்தம் மாவா பாக்கு பாவனையுடன் தொடர்புபட்டு 50 வழக்குகள் வரை வருகின்றன என்பதை சட்டத்தரணி என்கிற வகையில் நான் அறிவேன்.

ஆவா குழு காரணமாக வட மாகாணம் முழுவதும் பய பீதியில் உறைந்து கிடப்பது போல மாவா பாக்கு பாவனை காரணமாக கிழக்கு மாகாணம் முழுவதும் குலைந்து கிடக்கின்றது. கேரளா கஞ்சாவை போலவே மாவா பாக்கும் பேராபத்தானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாடு முழுவதையுமே மாவா பாக்கு பாவனை மெல்ல மெல்ல தின்று வருகின்றபோதிலும் குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த இளையோர்களையே திட்டமிடப்பட்ட வகையில் இலக்கு வைத்திருக்கின்றது என்ப்து எமது வலுவான சந்தேகம் ஆகும்.

இளையோர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு மாத்திரம் அன்றி அரசாங்க உயர் மட்டத்தினருக்கும் மாவா பாக்கு குறித்து விழிப்பூட்டப்பட வேண்டும். ஏனென்றால் இது ஒரு நுகர்வு பொருள் என்றேதான் பலரும் எண்ணுகின்றனர். ஆனால் போதை கலக்கப்பட்டு இருப்பதால் இது ஒரு போதை பொருளே ஆகும். இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இது இறக்குமதி செய்யப்படுகின்றது. பாரிய மாபியா கும்பல்கள் இதன் இறக்குமதி, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு உள்ளன. ஆனால் இதை உண்பவர்களே பெரும்பாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். வியாபாரிகளும், விநியோகஸ்தர்களும் பெரும்பாலும் கைதாகாமல் தப்பி விடுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் மாவா பாக்கு மீது முழுமையான தடையை வெளிப்படையாக விதித்தல் வேண்டும். இதன் இறக்குமதியை முற்றாக தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்கு தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் பாரிய அழுத்த குழுவாக மாறி உரத்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் இது விடயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் எமது இனத்தில் இருப்பே மெல்ல மெல்ல எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்பட்டு விடும்.

- மல்லிகைத்தீவு நிருபர்

Read more...

Thursday, September 13, 2018

வரலாற்றில் மட்டக்களப்பை குருதி தோய்த்த நாட்களில் இன்றும் ஒன்று!

மட்டக்களப்பில் இற்றைக்கு 31 நாட்களுக்கு முன்னர் அந்த மண் இரத்தந்தால் தோய்கப்பட்டநாள். அந்த மண் வஞ்சத்தால் இரத்தம் குளித்த நாள். 1987.09.13 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற்துறைச் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பாவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் உயிர் நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட நாள்.

இந்த நாளில்தான் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராகவிருந்த பொட்டு, அன்றைய மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாவிருந்த கருணா, புலிகளின் துணை அரசியல் துறைப்பொறுப்பாளராவிருந்த கரிகாலன், சித்தா உள்ளிட்ட சிலர், புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தவென அவர்களின் காரியாலயத்திற்கு சென்றனர். சென்றவர்களுக்கு வாசுதேவாவின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. ஒரு மேசையில் இருந்து காலை உணவை உண்டு மகிழ்ந்து அரசியல் பேசினர். செல்கையில் உங்களிடம் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம். எங்களது காரியாலயம் வந்து மதியச் சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று அன்புடன் அழைத்தனர். புலிகளின் நன்றியுணர்வை அன்பையும் கண்ட புளொட்டுக்கள் மெய் மறந்தனர். நிச்சயமாக வருகின்றோம் என்றனர்.

அன்றைய சகல கருமங்களையும் விட்டுவிட்டு பாசிக்குடாவிலிருந்து புலிகளின் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். வழியில் கிரான் சந்தியில் வழிமறிக்கப்பட்ட அவர்கள் மீது குண்டு மழை பொழியப்பட்டது. அங்கே குற்றுயுராக கிடந்த ஓரிருவர் தண்ணீர் கேட்டனர். துண்ணீர் கொடுக்க முன்வந்த மக்களை இடுப்பில் பிஸ்டலுடன் இறுமாப்புடன் நின்ற கருணா தடுத்து நிறுத்தினான். இதுவும் எம்வரலாற்றில் நடைபெற்றதொன்று.

ஆனால் இன்று முகநூலில் இருக்கின்ற சிலர் இவர்களை நினைவுகூரலாம். அவ்வமைப்பினர் உத்தியோகபூர்வமாக அதனை செய்யமுடியாக கயவர்களாக மாறியுள்ளனர் என்பது வேதனையான விடயம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்று இதே குடும்பத்தினர் புலிகளின் காரியாலயத்தினுள் நுழைந்து புலிக்கொடியை கிழே இறக்கிபோட்டு காலால் மிதித்தனர். அது புலிகளின் வரலாற்றில் மட்டக்களப்பில் விழுந்த முதலாவது அடி என்பதும் வரலாறு.

Read more...

வாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது. By Keith Jones

வியாழனன்று ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “2+2” மூலோபாய பேச்சுவார்த்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றுகின்ற நோக்கமுடைய இன்னுமொரு “அடித்தளமான” இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் புதுடெல்லி கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது.

வாஷிங்டன், அதன் பிரதானமான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அதன் இராணுவ-மூலோபாய உறவுகளை நிர்வகிப்பதற்கு பயன்படுத்துகின்ற முக்கியமான பொறிமுறைகளில் ஒன்றின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற “2+2” பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடையிலான வரிசையான பல சந்திப்புகளின் முடிவில் வியாழனன்று அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையானது, இந்திய-அமெரிக்க இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை விஸ்தரிப்பதற்கான ஏராளமான முயற்சிகளை கோடிட்டுக் காட்டியது.

இவற்றில் மிகவும் பின்விளைவுகள் கொண்டதாக இருப்பது, வாஷிங்டன் அதன் முக்கியமான நேட்டோ மற்றும் ஒப்பந்த நேசநாடுகளுடன் கொண்டிருக்கும் உடன்பாடுகளை மாதிரியாகக் கொண்ட தகவல்தொடர்பு நிர்ணயஇணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Communications Compatibility and Security Agreement — COMCASA) இந்தியா, பத்து வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஏற்றுக் கொண்டிருப்பதாகும். இது இந்திய இராணுவம் அதன் ஆயுத அமைப்புமுறைகளுக்கு முன்னேறிய அமெரிக்க தகவல்தொடர்பு சாதனங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் என்பதுடன், அமெரிக்கா, அதன் நேசநாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் இராணுவங்கள் இடையே மறையாக்க தகவல்தொடர்பு (encrypted communication) மற்றும் “பரஸ்பர-இயக்கக்கூடிய தன்மை” ஆகியவற்றை மேம்படுத்தும்.

இந்த ஒப்பந்தமானது அமெரிக்க ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்வதில் —நீர்மூழ்கி-எதிர்ப்பு போர்களுக்கான, ஆயுதமேந்திய கடற்பகுதி ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதுடன் இது அநேகமாய் ஆரம்பமாகும்— ஒரு முக்கிய பெரும் ஊக்குவிப்புக்கு பாதை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையதொரு ஒப்பந்தம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வேவுபார்க்க வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இந்திய இராணுவம் நீண்டகாலமாய் இதற்கு தயங்கி வந்திருந்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கமானது வாஷிங்டனின் சீன-விரோத தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைப்பதை ஒரேயடியாக விஸ்தரித்திருக்கிறது, இந்தியப் பெருங்கடலில் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளது நடமாட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புதலளிப்பது மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒப்பிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

எந்தவொரு உண்மையான இராணுவ-மூலோபாய கூட்டிற்கும், அமெரிக்காவின் “முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி” என்ற அந்தஸ்தை சமீபத்தில் இந்தியாவிற்கு அது வழங்கியிருப்பதன் முழுமையான பயன்களை —பென்டகன் அதன் கூட்டாளிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிற மிக முன்னேறிய ஆயுத அமைப்புகளுக்கான அணுகல் மூலமாக— இந்தியா பெறுவதற்கும் “அடித்தளமானவை”யாக வாஷிங்டன் வலியுறுத்துகின்ற மூன்று இருதரப்பு ஒப்பந்தங்களில் COMCASA இரண்டாவதாகும்.

2016 இல் கையொப்பமிடப்பட்டு, சென்ற ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த, தடவாளப் பரிவர்த்தனை உடன்பாட்டு ஒப்பந்தத்தின் (Logistics Exchange Memorandum Agreement) கீழ், அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எரிபொருள்நிரப்பலுக்கும் சரக்குநிரப்பலுக்கும் வழமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்தியா அதன் வான் தளங்கள் மற்றும் கடல் துறைமுகங்களை திறந்து விட்டிருக்கிறது.

COMCASA ஒப்பந்தத்தில் புது டெல்லி கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, “அடித்தளமான” ஒப்பந்தங்களில் மூன்றாவதும் இறுதியானதுமான, புவி-வான் ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement for Geo-spatial Cooperation — BECA) மீதான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்தின் முப்படைகளும் பங்குகொள்ளும் முதன்முதல் கூட்டுப் பயிற்சியை அடுத்த ஆண்டில் நடத்தவிருப்பதாகவும் அத்துடன் “வளர்ந்து வரும் அபிவிருத்திகள் குறித்து தொடர்ச்சியான உயர்-மட்ட தகவல்தொடர்பை பராமரிக்க உதவுவதற்காக” இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் “நேரடி தொலைஇணைப்புகள்" (hotlines) அமைக்கப்படவிருப்பதாகவும் புதுடெல்லியும் வாஷிங்டனும் அறிவித்துள்ளன.

”2+2” கூட்டு அறிக்கையானது, இருதரப்பு, முத்தரப்பு, மற்றும் நான்கு-தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்புக்கும் புதுடெல்லியையும் வாஷிங்டனையும் கடமைப்படுத்துகிறது. அறிக்கையில் அந்நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, இறுதியாக சீனாவுக்கு எதிராய் நேட்டோ பாணியிலான அமெரிக்க-தலைமையிலான ஒரு கூட்டணியை உருவாக்கும் ஒரு நோக்கத்துடன், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்குள் இந்தியாவைக் கொண்டுவருவது தான் அமெரிக்காவின் ஒரு நீண்டகால இலக்காக இருந்து வந்திருக்கிறது.

மோடியின் கீழ் புதுடெல்லி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இருநாடுகளுடனான முத்தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது, வருடாந்திர மலபார் கடல்பிராந்திய பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்த்து ஜப்பானையும் ஒரு நிரந்தரக் கூட்டாளியாக ஆக்கியதும் இதில் அடங்கும். சென்ற நவம்பரில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஒரு நாற்தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்தியதன் மூலம், ஒரு தசாப்தத்திற்கு முன்பாக சீனாவிடம் இருந்தான உரத்த குரலிலான எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தனர்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் “சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கினை”யும் “சுதந்திரமான கடற்போக்குவரத்”தையும் —அதாவது, சீனாவின் கரைகளில் ஒரு போர்க்கப்பல் வரிசையைப் பராமரிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு கடிவாளமற்ற உரிமை உள்ளிட்ட அமெரிக்க மேலாதிக்கத்தை— நிலைநாட்டுவதற்கு சமீபத்திய இந்திய-அமெரிக்க அறிக்கைகளில் அளிக்கப்பட்டிருந்த உறுதிப்பாடுகளை இந்த அறிக்கை மறுவலியுறுத்தம் செய்தது. முக்கியத்துவத்தில் சளைக்காத விதத்தில், வடகொரியா எனும் சின்னஞ்சிறிய வறுமைப்பட்ட நாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வந்துகொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், இரண்டு நாடுகளும் “வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு இணைந்து வேலைசெய்யும்” என்றும் அது சூளுரைத்தது.

புதுடெல்லிக்கு வரும் வழியில், பொம்பியோ இஸ்லாமாபாத்தில் சற்றுநேரம் தங்கி, பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் கண்டிப்பு காட்டிவிட்டு வந்திருந்தார், ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியை தணிக்க வாஷிங்டனுக்கு உதவுவதில் அது இன்னும் கூடுதல் செயல்பாட்டைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொம்பியோவின் மிரட்டல்கள் முதல்பார்வையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தை நோக்கியே செலுத்தப்பட்டதாய் தெரிந்தது. ஆயினும், அவை புதுடெல்லியை —மோடியின் தலைமையின் கீழ் இது எல்லைகடந்த இராணுவத் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான போர் மிரட்டல்கள் உள்ளிட, அதன் முன்பிருந்தவர்களை விடவும் பாகிஸ்தானுக்கு எதிராய் ஒரு கூடுதல் மோதல்நிலை போக்கைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது— பார்த்தும் கூறப்பட்டிருந்தன என்பது தெளிவு.

”2+2” அறிக்கையானது “ஆப்கானிஸ்தானின் அபிவிருத்தி மற்றும் ஸ்திரப்படுத்தலில் இந்தியாவின் மேம்பட்ட பாத்திரத்தை” வரவேற்ற வேளையில், பாகிஸ்தான் “அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிராந்தியம் மற்ற நாடுகளிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காய் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு” அழைப்புவிடுத்தது.

”2+2” கூட்டங்களின் நிறைவில், பாதுகாப்புச் செயலரான மாட்டிஸ் கூறுகையில், “எங்களது நெருக்கமான கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் ஒரு மட்டத்திற்கு எங்களது உறவை உயர்த்துவதற்கு” வாஷிங்டன் இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து வேலைசெய்யவிருப்பதாக தெரிவித்தார். இந்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்னும் பரவசம் காட்டினார். “எங்களது பாதுகாப்பு கூட்டிலான உந்துவேகமானது ஒரு மிகப்பெரும் சாத்திய ஆற்றலை நிரப்பியிருக்கிறது, அது இந்திய-அமெரிக்க உறவுகளை முன்கண்டிராத மட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

அவரது சகாவான வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “ஆப்கானிஸ்தானில் ட்ரம்ப்பின் கொள்கையை” —அதாவது ஆப்கானிஸ்தானில் இரத்தக்களரியை தீவிரப்படுத்துவதற்கும் இந்தியாவின் பரம-வைரியான பாகிஸ்தான் மீது பிடியை இறுக்குவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களை— இந்தியா வரவேற்பதாக கூறினார்.

இந்தியாவை அமெரிக்காவின் மூலோபாய சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதும் அதனை சீனாவுக்கான ஒரு இராணுவ-மூலோபாய பிரதிஎடையாக அபிவிருத்தி செய்வதுமே, கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் கீழ் ஒரேவிதத்தில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு மையமான இலக்காக இருந்து வந்திருக்கிறது. இதனை நோக்கிய விதத்தில், இந்தியாவுக்கு மூலோபாய “அனுகூலங்களை” வாஷிங்டன் அள்ளிக்கொடுத்து வந்திருக்கிறது, உற்பத்திக்கான அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்கின்ற —அதன்மூலம் அதன் அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான சொந்தநாட்டு அணு வேலைத்திட்ட்டத்தின் மீது அது கவனம்குவிக்க வழிவகுக்கும் விதத்தில்— 2008 அணுசக்தி ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

சீனாவை மூலோபாயரீதியாக சுற்றிவளைப்பதற்கும் கீழ்ப்படுத்துவதற்குமான வாஷிங்டனின் திட்டங்களில் இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும் வகிக்கக் கூடிய இன்றியமையாத பாத்திரம், அமெரிக்க கடற்படையின் பசிபிக் கட்டளையகம் (US Navy’s Pacific Command) எனும் பெயரை இந்திய-பசிபிக் கட்டளையகம் (Indo-Pacific Command) என்று பெயர்மாற்றுவதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் பிரதிபலிக்கிறது.

சீனாவுடனான உறவுகளில் இந்தியாவின் “மறுஅமைவு” மற்றும் அதன் வரம்புகள்
கடந்த அரையாண்டு காலத்தில், சீன-இந்திய உறவுகளில் “மறுஅமைவு” (reset) குறித்து நிறைய பேசப்பட்டு வந்திருக்கிறது. பெய்ஜிங் உடனான பதட்டங்களை —2017 கோடையில் இமாலயத்தின் ஒரு விளிம்பு மூலையின் (டோக்லாம்) மீதான கட்டுப்பாடு குறித்த ஆயுதபாணியான மோதுநிலை, கட்டுப்பாட்டை மீற அச்சுறுத்தியது— குறைப்பதற்கு புதுடெல்லி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது நிச்சயம் உண்மையே. ட்ரம்ப்பின் மூர்க்கமான “அமெரிக்கா முதலில்” கொள்கையும் பலசமயங்களிலான தவறான வெளியுறவுக் கொள்கையும் —குறிப்பாக அவரது வர்த்தக யுத்த நடவடிக்கைகள்— சீனாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான கடைசி விசைக்கு மோடி திடீரென முன்னுரிமை கொடுத்ததில் ஒரு காரணியாக இருந்தன.

“சீனா மறுஅமைவு” இருந்தாலும் கூட, இந்திய-அமெரிக்க கூட்டணி தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக தொடர்ந்தும் இருக்கிறது என்பதை இந்திய-அமெரிக்க “மூலோபாய பேச்சுவார்த்தை” தெளிவாக்குகிறது. முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விலைபோகும் இந்திய முதலாளித்துவமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி எத்தனை பொறுப்பற்றதாக எத்தனை வெளிப்பட்டதாக ஆகின்றபோதும் கூட, வாஷிங்டனின் பின்னால் தன்னை நிறுத்திக் கொள்வதைத் தவிர்த்து அதன் வல்லரசு அபிலாசைகளைப் பின்தொடர்ந்து செல்வதற்கு வேறெந்த வழியையும் காணவியலாது இருக்கிறது.

எல்லாம் இருப்பினும் கூட, வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, எதிரிகளிடம் இருந்தும் கூட்டாளிகளிடம் இருந்தும் ஒரேபோல “அதிகமாக” எதிர்பார்க்கின்ற, வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் கணிசமான பதட்டங்களும் இருக்கின்றன.

அலுமினியம் மற்றும் உருக்கு மீதான தண்டவரி விதிப்புகள் உள்ளிட்ட ட்ரம்ப்பின் பாதுகாப்புவாத நடவடிக்கைகள், இந்தியா அமெரிக்காவுடன் அதன் வர்த்தக உபரியைக் குறைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைகள், இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், திறன்பெற்ற தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் கொண்டுசெல்ல ஏதுவாக இருந்து வந்திருக்கும் எச்1பி விசா திட்டத்தின் (H1B Visa program) மீதான அவரது கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்தியா நிச்சயமாக திகைப்படைந்திருக்கிறது.

மூலோபாயப் பிரச்சினைகள் குறித்த பதட்டங்களும் தலைக்கு மேல் நிற்கின்றன. 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தின் கீழான தனது கடமைப்பாடுகளை தெஹ்ரான் பூர்த்தி செய்து வந்திருக்கிறது என்றபோதும் கூட, தடைகளை மறுஅறிமுகம் செய்து, போருக்கு நிகரான ஒரு பொருளாதார முற்றுகையை நடத்துவதன் மூலமாக ஈரானியப் பொருளாதாரத்தை சிதைப்பதற்கான தனது முனைப்பின் பின்னால் அணிவகுப்பதற்கு வாஷிங்டன் இந்தியாவிடம் கேட்டு வருகிறது.

இந்தியா ஈரானிய எண்ணெயின் மிகப்பெரும் இறக்குமதி நாடு என்பது மட்டுமல்ல, மூலோபாய செல்வாக்கிற்கும் அந்தப் பிராந்தியத்தின் பாரிய எரிசக்தி கையிருப்புகளிலான ஒரு பங்கிற்குமாய் போட்டிபோடுகின்ற விதத்தில் மத்திய ஆசியாவிற்கான ஒரு போக்குவரத்து பாதையை திறப்பதற்காக ஈரானின் சபார் துறைமுகத்தை இந்தியா அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் மீதான தடைகள் நவம்பர் 4 அன்று முழு வீச்சில் அமலுக்கு வந்தபின், ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை சார்ந்திருக்கக் கூடிய நாடுகளுக்கு, ஒபாமாவைப் போல, எந்த “விலக்கு”ம் அளிக்கப் போவதில்லை என்பதில், வியாழக்கிழமை கூட்டத்திற்கு முன்பாக, ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதம் காட்டி வந்திருந்தது. புதுடெல்லியை விட்டு கிளம்பும்போது, பொம்பியோ சற்று விட்டுக்கொடுப்பாகப் பேசினார், இந்தியாவுக்கு ஒரு விலக்கு வழங்கப்படக் கூடும் என்றும் ஆனால் அது ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே என்றுமாய் அவர் சூசகப்படுத்தினார். “பொருத்தமான இடங்களில் விலக்குகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலர், “ஆயினும் ஈரானிடம் இருந்தான கச்சா எண்ணெய் கொள்முதல் பூச்சியத்தை எட்ட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு, இல்லையேல் தடைகள் விதிக்கப்படும்.”

முடிவெடுக்கும் கட்டாயம் வரும்போது புதுடெல்லி, அமெரிக்காவுடனான “கூட்டினை” சங்கடப்படுத்தக் கூடாது என்பதற்காக, புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் சமயத்தில் அது செய்ததைப் போலவே, வாஷிங்டனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செல்லும்.

ரஷ்யா விடயத்தில் விடயங்கள் இன்னும் அதிக சச்சரவுமிக்கதாய் இருக்கின்றன. பல தசாப்தங்களாக மாஸ்கோ புது டெல்லியின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாளியாக இருந்து வந்திருப்பதோடு இந்தியாவுக்கு அது இன்றியமையாத போர் சாதனங்களைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது, அதன் அணுசக்தி திட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் நிகழ்முறையில் இந்தியா இருப்பது குறித்து வாஷிங்டன் கோபமடைந்திருக்கிறது, தடைகள் மூலமாக அமெரிக்க எதிரிகளை எதிர்கொள்ளும் சட்டத்தின் (CAATSA) கீழ் இது தடைகளுக்கு இட்டுச்செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய பிரச்சினையில் பிளவுபட்டு நிற்கிறது, இதற்காக இந்திய-அமெரிக்க கூட்டை சங்கடத்திற்குள்ளாக்குவது ஒரு பிழையாகி விடும் என்று மாட்டிஸ் பகிரங்கமாக வாதிடுகிறார். எஸ்-400 விடயத்தில் இந்தியாவுக்கு விலக்கு வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தாலுமே கூட, இந்தியாவுக்கான நீண்டகாலத்திற்கான தாக்கம் தெளிவாய் இருக்கிறது: ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டை சீர்குலைப்பதும் இறுதியாக உடைப்பதுமே அமெரிக்காவின் நோக்கமாகும்.

Read more...

தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்கால உத்தரவு.

வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி பிரதேச சபை உறுப்பினரான ஜி.பிரகாஷ் நடந்து கொண்டிருந்தார் என்றும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என்றும் அதை தொடர்ந்து அவரிடம் கட்சியினால் கோரப்பட்ட விளக்கத்திற்கு போதிய பதில் அளிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியினர் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது என வலி தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜி.பிரகாஷை யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கினை இன்று விசாரணை செய்த யாழ் நீதிமன்று அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தவறானது என்று இடைக்கால தடை விதித்துள்ளதுடன் வரும் 25ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.பிரகாஷ் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையானார்.

அவ்வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Read more...

இன நல்லிணக்க மையங்களாக பள்ளிவாசல்கள் மாற்றம் பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதி அமைச்சர் டாக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் இவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில் பரீட்டின் தந்தை சேர்மன் மீரா லெப்பை அவுலியா மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

பஷீர் சேகு தாவூத் இங்கு பேசியவை வருமாறு:-

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் அடங்கலான இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஏனைய இன மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து உலக அளவில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற சூழலில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் ஆகியவற்றுக்கு உள்ளே நடப்பது என்ன? என்று தெரியாமல் இவர்கள் அங்கலாய்க்கின்றார்கள். இவற்றுக்குள் இருந்துதான் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாக்கப்படுவதாக சந்தேகிக்கின்றனர்.

ஏனென்றால் இவற்றுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள் ஏனைய இன மக்களுக்கு மூடிய அறைக்குள் இடம்பெறுகின்ற மர்மங்களாகவே தோன்றுகின்றன. எனவே இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாட்டில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட வேண்டும். இதனோடு சேர்ந்ததாக இஸ்லாமிய நிறுவனங்கள் இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும்.

புதிதாக பள்ளிவாசல்கள் போன்றவை கட்டப்படுவது நல்ல விடயம்தான். ஆனால் இருக்கின்றவை பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் போன்றவை திருத்தி அமைக்கப்படுகின்றபோது அவற்றின் வரலாற்று தொன்மையும் அழிந்து விடாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் வரலாற்று தொன்மையை அழிந்து விடாமல் உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியவாறே அவர்களுடைய கட்டிட நிர்மாணங்களை திருத்தி அமைக்கின்றனர் என்கிற விடயம் முன்னுதாரணம் ஆகும்.

இதே நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாத பெருந்தேசிய சக்திகள் இன அழிப்பு அரசியலை பல வடிவங்களிலும் கச்சிதமாக செய்து வருகின்றன. இதற்காக வரலாற்று எச்சங்களை கையகப்படுத்தியும், கைப்பற்றியும், அழித்தும் வருகின்றன. இதற்கு மிக நல்ல அண்மைய உதாரணம் சிவனொளிபாத மலை ஆகும். இது மூவின மக்களுக்கும் சொந்தமாக உள்ளது. முஸ்லிம்கள் பாவா ஆதம் மலை என்றும் தமிழர்கள் சிவனொளிபாத மலை என்றும் சிங்களவர்கள் ஸ்ரீபாத மலை என்றும் அழைத்து வருகின்ற நிலையில் இதை தனியொரு இனத்துக்கு உரித்தானதாக பிரகடனப்படுத்துவது அநியாயம் ஆகும்.

முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் அல்லர், இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்கிற செய்தியை ஏனைய இன மக்களுக்கு உறுதியாக எடுத்து காட்டுகின்ற ஆதாரங்களாக அல்லாஹ்வின் நேசர்களான அவுலியாக்களின் அடக்க ஸ்தலங்கள் காட்சி தருகின்றன. இந்நாட்டின் பல இடங்களிலும் பல பல நூற்றாண்டுகள் பழைமையான ஷியாரங்கள் உள்ளன. இவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவையும் நல்லிணக்க மையங்களாக முகிழ்க்க வேண்டும். சேர்மன் மீரா லெப்பை அவுலியா மையத்துக்கு தமிழ் சகோதரர்கள் தரிசனம் மேற்கொள்வதை நாம் எல்லோரும் மிக நன்றாகவே அறிவோம்.

ஏறாவூர் மண்ணின் மைந்தர் டாக்டர் பரீட் மீரா லெப்பை தலை சிறந்த புத்திஜீவியாக, உயர்ந்த கல்விமானாக, நிறைவான வாசகராக, வாதங்களை முன்வைப்பதில் வல்லுனராக, இன நல்லுறவுக்கான இணைப்பு பாலமாக, மகத்தான மக்கள் சேவையாளனாக விளங்கினார். இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்க கூடிய ஆளுமையாக மிளிர்ந்தார். எமது இளையோர் சமூகத்தில் இருந்து ஏராளமான பரீட் மீரா லெப்பைகள் வருங்காலத்தில் உருவாகுதல் வேண்டும்.

இதே எமது மண்ணுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிய பெரியார்களை நாம் மறந்து விடவே கூடாது. அவர்களின் நினைவுகளை சுமந்தவர்களாக வாழுதல் வேண்டும். பரீட் மீரா லெப்பையின் வாழ்க்கை வரலாற்று நூல் நிச்சயம் எழுதப்பட வேண்டும். இவர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்நாளில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

- மல்லிகைத்தீவு நிருபர் -

Read more...

Wednesday, September 12, 2018

தமிழ் மக்களை நாய்கள் என அழைத்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.

கடந்த மாதம் ஒரு கூட்ட உரையில் கலாநிதி வரை படித்த கல்வி அமைச்சர் தமிழ்ச் சொற்களின் அர்த்தம் தெரியாமல் மக்கள் மத்தியில் - மேடைகளில் - இனவாத அடிப்படையில் தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் விதண்டாவாதம் பேசியது - கவலைக்கும், வேதனைக்கும், வேடிக்கைக்கும், சோதனைக்கும், நகைப்புக்கும், பகிடிக்கும், பரிகாசத்திற்கும் உரிய விடயமாகும்.

தமிழ் அரசியல் தலைமைகள், வட பகுதி மக்களை அரசியல் பற்றி சுயமாக சிந்திக்க விடாமல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர் காலத்தில் ஒரு சமூகத்தின் இருப்பைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் இலங்கை தேசியம் பற்றி எண்ணாது தமிழ்த் தேசியம் பற்றி கதைத்தவர்கள். இப்போது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கதைப்பது சிறிது தமிழ் மக்களுக்கு மன சாந்தியைக் கொடுத்தாலும், வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில் கல்வி அமைச்சர் உரிமைக்கான போராட்டம் பொருளாதாரத்திற்கான போராட்டம் இரண்டிலும் சமாந்தரமாக வடக்கு மக்கள் பாண் துண்டுகளைச் சிங்கள இனவாதம் வீசியதாகவும் அங்கு தமிழ் மக்கள் அதை பொறுக்கி எடுப்பதற்கு முண்டியடித்ததாகவும் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களை மறைமுகமாக செயற்பாடுகளின் மூலம் நாய்கள் என குறிப்பிட்டு, சாதாரண தமிழ் மக்கள் என்றும் தமிழ் அரசியல் எஜமானிகளுக்கு அடிமைகள் என்பதையும் நாசூக்காக விகடம் பேசியுள்ளார், கல்வி அமைச்சர். இப்போதைய வட மாகாண கல்வி அமைச்சர் தமிழ் மக்கள் கம்பி வேலிக்குள் இருக்கும் போது எங்கேயிருந்தார்?;.

தமிழ் மக்களைக் கம்பி வேலிக்குள் சிங்கள இனவாதம் கொடுமைப்படுத்தும் போது அதற்கு தமிழ் இனவாதமும் துணை புரிந்துவிட்டு, இப்போது தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்த் தேசியம் கதைப்பது எந்த வகையில் நியாயமானது.

சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சலுகை பற்றியே கதைப்பதாகவும் அந்த உரையில் கல்வி அமைச்சர் குறிப்பிட்டது வெறும் பித்தலாட்டமாகவுள்ளது. ஏனெனில் வரவு செலவு திட்டத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதி என சலுகை அடிப்படையில் பணம் பெறவில்லையா?.

பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் சேவைக்காக மக்கள் பிரதிநிதிகளாக சென்று ஆடம்பர வாகனங்களுக்கான சலுகையைப் பெறவில்லையா?.

மூலதன நன்கொடை நிதியை மாகாண சபை உறுப்பினர்கள், மக்களுக்கு எங்கிருந்து வழங்குகின்றார்கள்?.

மக்களிடமிருந்து அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் முதலியவற்றின் மூலம் கிடைக்கும் வரிப்பணத்தின் ஊடாக அல்லவா?.

ஏன் அரசியல்வாதிகள் சலுகை பெறும் போதுளூ சாதாரண தமிழ் மக்கள் பெறமுடியாது.

தமிழ் இனவாத அரசியல் வாதிகள் தமிழ்த் தேசியத்தாலும் சிங்கள இனவாத அரசியல் வாதிகள் சிங்கள தேசியத்தாலும் முஸ்லிம் இனவாத அரசியல் வாதிகள் முஸ்லிம் தேசியத்திலும் ஊறி வகுப்பு வாதம் பேச எல்லா இனத்திலும் சாதாரண மக்களே பலிக்கடாக்கள். –

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன் -

Read more...

நுண்கடன்களை பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் இலங்கையில் எதிர்நோக்கும் சித்திரவதைகள் ஐ.நா வில்

இலங்கையில் நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொண்ட பெண்கள், அதனை மீளச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர் என ஐ.நா நிபுணர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் முடிவில் ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி இதனைத் தெரிவித்தார்.

கடன்களை மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபர்களால், பெண்கள் உளஉடல்ரீதியான வன்முறைகளை சந்திக்க நேர்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 9 நாள்கள் கொழும்பில் தங்கியிருந்து அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தின் நிறைவில் இன்று (11) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.

“நுண்கடன் நிறுவனங்கள், தாம் வழங்கும் கடன்களுக்கு 220 வீத வட்டியை அறவிடுகின்றன. கடன்பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்பதற்கு முயன்ற சம்பவங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன்.

சிலர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வேறு சிலர் ஒப்பந்தத்தை மீறியதற்காக வன்முறைகளை சந்தித்துள்ளனர் அல்லது பெற்ற கடனை மீள திருப்பி செலுத்துவதற்காக பல மணிநேரம் வேலை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணமாகவுள்ளது.

நுண்கடன்களைப் பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுமுள்ளன.

எனினும் இலங்கையில் நுண்கடன்களை வழங்கியவர்களின் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தின் தீவிர தன்மையை கருத்தில்கொள்ளும்போது அரசு இதில் தலையிடவேண்டியது அவசியம்.

இலங்கையின் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலவும் பகுதிகளை நுண்கடன் நிறுவனங்கள் இலக்குவைப்பதை நான் அறிந்துள்ளேன்” என்று ஐ.நா. நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி மேலும் தெரிவித்தார்.

Read more...

ரஜீவ் கொலைவழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பெரும் எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருகின்றன. அந்த பயங்கரவாதிகள், ராஜீவ் மட்டுமின்றி, அப்பாவி மக்களும், போலீசாரும் கொல்லப்பட காரணமானவர்கள். சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்கள்.

இதுவரை அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. போலி தேசியவாதத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள், இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் பயங்கரவாதம் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இத்தகைய செயல்கள் மூலம் பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்றன. எனவே, பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் உண்மையின் கண்ணாடியை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பரந்த இதயம் கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா ஆகியோர் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் நாங்கள் எளிமையான ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை, பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?

அவர்களை விடுவிக்க பா.ஜனதா நியமித்த கவர்னருக்கு பா.ஜனதாவின் கூட்டாளியான அ.தி.மு.க. பரிந்துரை செய்துள்ளது. இதுதான் தற்போது மாநில அரசின் கொள்கையா? அவர்களை விடுவிக்கப்போகிறார்களா? பயங்கரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

Read more...

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை கட்சியே முடிவு செய்யும் என்கின்றார் மஹிந்தர்!

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருப்பின் வேறு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் இருப்பினும் இது இந்தியாவின் உள்ளக விடயம் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தனக்கு எவ்வித கருத்தும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விரிவுரை ஒன்றை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

தன்னுடைய கட்சி 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவது தொடர்பில் 100 சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் நாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான அனைத்துப் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை முன்மொழிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொறிமுறை 2008 - 2009 யுத்த இடம்பெற்ற காலத்தில் இலங்கை அதிகாரிகள் மூவரும் இந்திய அதிகாரிகள் மூவரும் இணைந்து உருவாக்கிய ட்ரைகா பொறிமுறையை ஒத்ததாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரைகா பொறிமுறையை தயாரிப்பதற்காக இலங்கை சார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்தியா சார்ப்பில் இராஜங்க பாதுகாப்பு ஆலோசகர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

சீன வியாபாரத்தை இலங்கைக்கு எடுத்து வந்து இலங்கையை கடனுக்குள்ளாக்கியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் அதனை சிக்கலான நிலமைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்தியாவிற்கும் தனக்கும் இடையில் நிறைய தவறான புரிதல்கள் இருந்ததாகவும் அவற்றை சீர் செய்து கொள்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தான் தலைமைத்துவம் வழங்குவதாகவும் 19 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு போட்டியிட முடியும் எனவும் அதற்காக நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அனைவரும் விரும்பும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது அதற்கு மாற்று தீர்வாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போட்டியிட குறைந்த பட்ச வயதெல்லை 30 முதல் 35 வயதிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தனது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த முடியாது எனவும் இருப்பினும் தனது சகோதரருக்கு ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக வேட்பாளராக நிற்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னுடைய கட்சி மற்றும் மக்கள் ஒன்றிணைந்து தேவையான நபரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது: ட்ரம்ப் குற்றச்சாட்டு.

சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்க அதிபர் பங்கேற்று பேசும்போது, "சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை பிற நாடுகளுக்கு கடத்தும் 21 நாடுகளில் இந்தியா உள்ளது.

போதை பொருட்கள் கடத்தும் ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முக்கிய நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பகாமஸ், பெலிஸ், போல்வியா, கொலம்பியா, கோஸ்டா ரைகா, ஈக்வேடார், எல் சால்வேடார், கவுட்டமாலா, ஹைதி, ஹோண்டுரஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, பனாமா, பெரு, நிகராகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளும் போதை பொருட்களை சட்டவிரோதமாக கடத்து நாடுகளின் பட்டியலில் இடப்பெற்றுள்ளன.

கொலம்பியா, மெக்சிகோ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், மெக்சிகோவிலிருந்து வரும் ஹெராயின் மற்றும் கொலம்பியாவிலிருந்து வரும் கோகைன் மூலமும் அமெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போகின்றன.

அமெரிக்கா தொடர்ந்து சர்வதேச அளவில் போதைப் பொருட் உற்பத்தி மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com