Tuesday, August 28, 2018

புதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா? அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று,
என்றும் எவரையும் நான் வலியுறுத்தியதில்லை. ஆனால், இன்று இக்கட்டுரையைக் கட்டாயமாகப் படியுங்கள் என, உங்களிடம் வேண்டி நிற்கிறேன். முக்கியமாக எம் இனத்தின் நாளைய தலைவிதியை நிர்ணயிக்கப்போகும், இளைய தலைமுறையினர் இக் கட்டுரையை கட்டாயம் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

அதைவிட முக்கியம் உயர்கல்வி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், இக் கட்டுரையைப் படிப்பது. அதற்கான ஒரு காரணம் உண்டு. அது என்ன என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன்….

✍✍✍

நடந்து முடிந்த முப்பதாண்டு அவலங்களால், எம் இளையோரின் வாழ்வில் பல தேக்கங்கள். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்ந்தாற் போன்ற அனுபவத்திற்கு, ஆளாக்கப்பட்ட துரதிஷ்டசாலிகள் அவர்கள்.

உயிர்ப்பயம், உடைமைப்பயம், உலகத்தொடர்பின்மை, நிமிர முடியா நெருக்கடிகள் என, பல விடயங்கள் அவர்களைப் பாதித்திருந்ததால், தமிழினத்தின் அறிவுலகப் புதிய தலைமுறை, ஓர் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

அதென்ன பாதிப்பு என்கிறீர்களா? ஆளுமையின்மை. இதுவே மேற் கேள்விகளுக்கான ஒரே பதிலாம்.

✍✍✍

தனிமனித எழுச்சிக்கும் ஓர் இனத்தின் எழுச்சிக்கும், ஆளுமை என்பது மிக அவசியமானது. கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை என, பல்துறைப்பட்ட ஆற்றல்கள் தனிமனித, சமூக உயர்ச்சிக்கு அவசியமானவை.

ஆனால், இவற்றால் மட்டும் உயர்வுகள் கிட்டிவிடப்போவதில்லை. ஒரு மரத்தை அதன் கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என, பலவும் அழகு செய்யலாம். அன்றேல் பயன் செய்யலாம். ஆனால், இவையெல்லாவற்றின் உயிரோட்டம் தங்கியிருப்பது அம்மரத்தின் வேரில்தான். மேற்சொன்ன அனைத்தும் வேர் கருகின் கருகிப்போம்.

அதுபோலத்தான், கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை எனும், அனைத்துத் திறமைகளின் பின்னணியில் இருப்பது ஆளுமையே. அது இன்றேல் இவையனைத்தும் இருந்தும் பயன் அன்றாம்.
அந்த உயர்ச்சியின் உயிரனைய ஆளுமையைத்தான், நம் இளையோர் இன்று இழந்து நிற்கின்றனர்.

✍✍✍

இன்றைய எமது இளைஞர்களிடம் மற்றைய திறமைகள், அனைத்தும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால், ஆளுமையின்மையால் இவற்றின் பயனை அடையமுடியாமல். நம் இளைஞர்கள் தத்தளிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.

✍✍✍

ஒரு காலத்தில் நம் இனத்தில் அறிஞர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், ஆளுமைமிக்கவர்களாய் தலைமைப் பண்போடு செயலாற்றினார்கள். அதற்காம் சில உதாரணங்கள் சொல்கிறேன்.

✍✍✍

தமிழினத்தின் அன்றைய அரச அதிபர்கள், இன்றைய மத்திய அமைச்சர்களை விடப் பெரிதும், துணிவும் ஆளுமையும் மிக்கவர்களாய் கம்பீரத்துடன் வாழ்ந்தனர்.

பிரதமர், ஜனாதிபதி போன்றோரின உத்தரவுகளைக் கூட ஆராய்ந்து, உடன்பாடின்றேல் அவற்றை நிராகரிக்கும் ஆற்றல் அவர்களிடமிருந்தது. யாழ். நூலக எரிப்பின்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். இட்ட உத்தரவை, எதிர்த்து நிற்கும் துணிவுடன் அன்றைய யாழ் அரசஅதிபர், இருந்ததாய்ப் பலரும் சொல்வார்கள். இது அன்றைய நிர்வாகிகளின் ஆளுமை.

✍✍✍

அதுபோலவே நம் கல்வியாளர்கள், உலக அரங்கைச் சமன் செய்யும் ஆற்றலோடும் ஆளுமையோடும் அன்று திகழ்ந்தார்கள். யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராய் இருந்த சபாலிங்கம், சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபராய் இருந்த ஆனந்தராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் பூரணம்பிள்ளை ஆகியோரின் ஆளுமையை, இன்றும் யாழ்ப்பாணம் பேசுகிறது.

அதற்குப் பின்னர்கூட ஆளுமைமிக்க கல்வியாளர்கள் நம் மண்ணில் இருந்தார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் அட்டூழியங்கள் செய்து முடித்திருந்த வேளையில், மூடியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்காய், அப்போதைய இலங்கைக்கான இந்திய இராணுவக் கட்டளைத்தளபதி மஞ்சித்சிங், யாழ்பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டியபோது, 'எங்கள் மண்ணில் அழிவுகளைச் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?" என்று, அந்தப் பயச் சூழ்நிலையிலும் பேராசிரியர் டாக்டர் கூல் துணிந்து பேசியதைக் கேட்டு, அந்த இராணுவ அதிகாரியே அதிர்ந்து பணிந்தாராம்.

இச் சம்பவத்தை பிறர் சொல்ல அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இவை அன்றைய கல்வியாளர்களின் ஆளுமை.

✍✍✍

அன்றைய நம் அரசியல்வாதிகளைக் கண்டு, பெரும்பான்மையின அரசியல்வாதிகளும், மற்றை நாட்டுத் தலைவர்களும் கூட, மனதால் மரியாதை செய்யும் நிலை இருந்தது. தந்தை செல்வாவின் இறுதிக்கிரியை முற்றவெளியில் நடந்தபோது, அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்கள், உயர் மேடையில் நின்று உரையாற்றிய தொனியைக் கேட்டு, அந்நிகழ்வுக்கு வந்திருந்த சிங்களத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதர்களும், மெய்சிலிர்த்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன்.

யு.என்.பி. கட்சி தேர்தலில் பெருவெற்றி பெற்று, முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தபோது, நமக்கு எதிரானவர் அவர் எனத்தெரிந்திருந்தும் ஜனநாயகத்திற்கு மாறான செயற்பாடு இதுவென, அமிர்தலிங்கம் உரையாற்றியபோது இலங்கைப் பாராளுமன்று அதிர்ந்தது உண்மை.

அமரர் அமிர்தலிங்கம் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியுடன், பல உலகத்தலைவர்கள் சேர்ந்திருந்த விருந்தில் கலந்து, அவர்களுக்குச் சமமாய் இருந்து உரையாடும் ஆற்றலும் தகுதியும் பெற்றிருந்தார். இது அன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமை.

✍✍✍

இன்று இவை ஏதும் எம் இனத்திடம் இல்லை. நிர்வாகத்திலோ, அறிவுலகிலோ, அரசியலிலோ, இத்தகைய துணிவுமிக்க ஆளுமையாளர்களை காண்பதென்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. அண்மைக்காலத்தில்,
எனக்குத் தெரிந்து சத்தியம் சார்ந்து துணிந்து ஆளுமை செய்பவர்களாய், மேல் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனையும், யாழ் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவையுமே காணமுடிகிறது. அவர்கள் பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள்.

எவர் எதைச் சொன்னாலும் அவர்களது ஆளுமையை ரசிக்கவேண்டித்தான் இருக்கிறது. வேறுவேறு துறைகளில் வெளிப்படாமல் ஒருசிலர் இருக்கக்கூடும். பெரும்பான்மை பற்றிச் சொல்வதானால், நம் இனம் ஆளுமையாளர்களை இழந்து நிற்பதே உண்மையாம்.

✍✍✍

வலியோரை வழிமொழியும் அறிஞர்களே, கல்வியுலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர். மேலதிகாரிகள் காலால் இட்ட கட்டளையை, தலையால் செய்யக் காத்திருக்கும் கோழைகளே, நிர்வாக உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

தம்மக்கள் மத்தியில் வீரவசனம் பேசிவிட்டு, கொழும்பில் பேரின அரசியல்வாதிகளுக்கு கால்தடவிச்சலுகைபெறும், வேடதாரிகளே அரசியல் உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

இந்த மூன்று வர்க்கத்தாரும்தான், இன்றைய நம் இளைஞர்களின் ஆளுமை இலட்சியங்கள். என்னே நம்விதி.

✍✍✍

எப்படி இருந்த இனம் இன்று எப்படி ஆகிவிட்டது? மேற்சொன்ன மும்மூர்த்திகளின் ஆளுமையைப் பின்பற்றி வாழத்தலைப்பட்டால், ஓர் இளையதலைமுறை எப்படி நிமிரும்? தாம் பொய்யர்கள் எனத் தெரிந்துகொண்டு, அப்பொய்மை வெளிப்படாமல் இருப்பதற்காக, இளையோரின் உணர்ச்சிகளை தேசப்பற்றின் பேரால் தூண்டி, தம் மாயவலைக்குள் மடக்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இப்பாரிய மாயவேலியை உடைத்துக் கொண்டு, ஆளுமை மிக்கவர்களாய் நம் இளையோர் மாறுவது எங்ஙனம்? அது பற்றி உங்களுடன் பேசத்தான் இக்கட்டுரை.

✍✍✍

இழந்த ஆளுமையின் மீட்சிக்காய், நம் இளையோர் செய்யவேண்டிய வேலைகள் எவை? அவற்றைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம். அவைபற்றி ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

நம் இளையோரின் ஆளுமையின்மையின் முதற்காரணம், இனத்துள் ஆளுமை முன்னுதாரணங்கள் இல்லாமை என்பது பற்றி முன்னர் பார்த்தோம்.

மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? நாமே நம்மை நிமிர்த்தவேண்டியதுதான்! நம் இளையவர்கள் ஆளுமைக்கான முதற்செயற்பாடாக, பன்மொழித்திறமையை உடனடியாக வளர்க்கவேண்டும். நம்தமிழ் மண்ணைவிட்டு இலங்கை அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், சிங்கள மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. அதுபோலவே உலக அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், ஆங்கில மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. இவ்விரு மொழி பயிற்சியின்மையே, நம் இளையோரின் ஆளுமையின்மையின் இரண்டாம் காரணம் என்பேன்.

✍✍✍

சிங்கள, முஸ்லிம், மலையக இனத்தார் இவ் உண்மையைத் தெரிந்துகொண்டு, மும்மொழிப் பயிற்சி பெற்று இன்று ஆளுமையாற்றல் மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள். மொழியாற்றல் வந்ததுமே, எவருடனும் தம் பிரச்சினையைப் பேசித்தீர்க்கும் ஆற்றல் வர, ஆளுமையின் அரைப்பகுதி சாத்தியமாகிவிடுகிறது.

இன்றைய புதியதலைமுறை அரசியல்வாதிகள், அறிஞர்கள், நிர்வாகிகள் என, பெரும்பான்மையினோர் இப்பன்மொழி ஆற்றலை இழந்திருப்பதால்த்தான், தம் கருத்தை மற்றவர்க்கு உரைக்கும் திறனின்றி, ஆளுமை அற்று அடிமைப்பட்டு கூசிக்குறுகி நிற்கின்றனர். மற்றைய இனங்களின் இளையோர் இம் மொழியாற்றலால் ஆளுமைபெற்று, நிமிர்ந்து நிற்பதைக் கண்டு வியக்கிறேன்.

தென்பகுதிகளில் கல்லூரிகள் முடியும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் வீதிவழியால் செல்ல நேரிடும். அப்போது கல்லூரி முடிந்து வரும் பேரின இளைஞர்களைக் காண்பேன் . அவர்களின் கம்பீரம், இளமைக்கே உரித்தான உற்சாகம், மேன்மையுறும் நடையுடை பாவனை இவற்றையெல்லாம் காண்கையில், எம் இளைஞர்கள் சற்றுப்பின்தங்கி விட்டார்களோ என எண்ணி என் நெஞ்சம் வாடுவதுண்டு.

✍✍✍

பரீட்சைகளில் மற்றை இனத்தாரைவிட, சிறந்த சித்திகளைப் பெற்ற எம்முடைய இளைஞர்கள், பன்மொழிப் புலமையின்மையால் மாணவர்கள் ஒன்றுகூடும் இடங்களில், கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கின்றனர். பல ஆற்றல்கள் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமையால் ஏற்படும் நாணத்தில், நம் இளையோரின் ஆளுமை அப்படியே நசிந்து போகிறது.

✍✍✍

ஆளுமையின்மையின் மூன்றாவது காரணியாய் இருப்பது, நம் கடந்தகால வரலாறு. கடந்த காலங்களில் நமது இயக்கங்களாலும், இடையிடை உள் நுழைந்த பிற இராணுவங்களாலும், நம் மக்களுக்கு உபதேசிக்கப்பட்ட ஒரே மந்திரம், கட்டளையை ஏற்றுப் பணிந்து போ! என்பதுவேயாம்.

இம்மந்திரக்கட்டிலிருந்து இன்றும் நம் இளையோர் விடுபடவேயில்லை. இளையோர் என்ன இளையோர் முதியோரும்தான்! சிறுமைகண்டு பொங்குதல் என்பதை நம் இனத்தார் மறந்து பலகாலம் ஆயிற்று. சிலர் பொங்குவதாய்ப் பொய்மை செய்கிறார்கள். பின்னர் தம் சுயநலத்திற்காய்ப் பணிந்து திரைமறைவில் பாதம் வருடுகிறார்கள்.

அடங்கிப்போதல், நழுவிப்போதல், பிரச்சினைகளைத் தவிர்த்தல், நமக்கேன் என்று இருத்தல், சுயகருத்தின்மை போன்ற, ஆளுமைக்கெதிரான செயற்பாடுகலெல்லாம், நற்பண்புகளாய் நம் மக்கள் மத்தியில் உபதேசிக்கப்படும் அவலம், இன்று நம் இனத்தில் வேரூன்றி இருக்கிறது. பெரியவர்களின் இந்த ஆளுமையற்ற போக்கினையே, இளையோரும் பின்பற்றுதல் இயல்பன்றோ!

அதனால்த்தான் நம் இளையோர் மேற் பண்புகளோடு, நல்ல பிள்ளைகளாய்த் தம்மைக் காட்டி நிற்கின்றனர். இழிவை ஏற்றமாய்ப் பதிவு செய்யும் முயற்சி.

✍✍✍

மொத்தத்தில், முன்னுதாரணமின்மை, மொழிப்பயிற்சியின்மை, சுயசார்பின்மை என்பவையே, பெரும்பாலும் நம் இளையோரின் ஆளுமையின்மையின் காரணங்களாயின.

✍✍✍

இவற்றை யார் நீக்குவது? எங்ஙனம் நீக்குவது? இளையோரை ஆளுமைமிக்கவர்களாய் எங்ஙனம் ஆக்குவது? இவைதான் இன்று நம் இனத்தின் முன் இருக்கும் பெரிய கேள்விகள்.

✍✍✍

குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. பட்டிமண்டபம் பேசிப்பேசி கம்பன்கழகத்தார்க்கு, பிழைபிடிப்பதில் வித்தகம் வந்துவிட்டது. பிழைபிடித்து என்ன பயன்? சரியைச் செய்யவேண்டாமா? எல்லோரது பிழைகளையும் எடுத்துக் காட்டும் கம்பன்கழகம், மேற்படி பிழைகளை நீக்கவும் மாற்றவும் ஏதேனும் முயற்சி செய்யுமா? உங்கள் மனக்கேள்விகள் எங்கள் செவிகளில் பதிவாகின்றன.

✍✍✍

உங்கள் கேள்விகள் நியாயமானவைதான். செய்யவேண்டும் என நாங்களும் விரும்பத்தான் செய்கிறோம். உங்களின் உதவியின்றி நாங்கள் தனித்து எதனைச் செய்யமுடியும்? தாய் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் இனத்தார், தீமைகளை நடக்கவிட்டு பின் அதற்கான பிராயச்சித்தங்களைச் செய்வதையே, தொண்டு என நினைக்கின்றனர்.

அத் தொண்டுகளுக்கே அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர். 'கருணையைக் காட்டுவதற்கு முன் நிபந்தனையே, மற்றவர்கள் கஷ்டப்படவேண்டும் என்பதுதானே" என்று முன்பு ஓருமுறை எங்கள் கவியரங்கில், கவிஞர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பாடியது நினைவிருக்கிறது. தீமைகள் வருவதை முன் உணர்ந்து தடுக்கும் முயற்சிகளை, நம்மவர்கள் தொண்டாய்க் கருதுவதில்லை. அத்தொண்டுகளுக்கு உதவிபுரிய விரும்புவதுமில்லை.

காரணம், முன்னைய செயற்பாட்டில் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். பின்னயதில் அது கிடையாது என்பதேயாம். பிழைகளும் அதற்கான பிராயச்சித்தங்களும் நடந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்பிழைகள் வாராமல் தடுத்து சரிகளைச் செயற்படுத்தும் முயற்சிகள் தேவையற்றவை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர்களின் சித்தாந்தமாம்.

✍✍✍

கடந்த நாற்பதாண்டுகாலமாக கடுமையான போர்க் காலத்திலும், மக்கள் மனதை ஆறுதல்படுத்தி, வாழ்வு மீண்டும் மலரும் என நம்பிக்கையூட்டி, மொழிப்பற்றும் இனப்பற்றும் மதப்பற்றும் உருவாக்கி, ஆளுமையும் அறமும் புகட்டி நாம் செய்த தொண்டுகளுக்கு, நம் இனத்தாரிடமிருந்து இன்றுவரை போதிய ஆதரவு கிட்டவில்லை என்றே சொல்வேன். 'நமக்கென்ன? எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்," என்றும் ஏனோ நம்மால் இருக்கமுடியவில்லை. அதுதான் எங்கள் குறைபாடு.

✍✍✍

அதனால் எம் இளையோரின் வீழ்ச்சியின் அடிப்படையாயிருக்கும் ஆளுமையின்மை எனும் பெரும் குறையை நீக்கி நிறைவுண்டாக்க, கம்பன் கழகத்தால் புதிய முயற்சி ஒன்றை எடுக்க விரும்புகிறோம். அதற்கான ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறோம். அதென்ன புதிய முயற்சி என்கிறீர்களா? அதுபற்றி விரிவாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

இளையோரிடம் ஆளுமை வளரவேண்டும். அவர்களால் நம் இனம் உயரவேண்டும். அதற்கான ஒரு சிறிய கதவை நாம் திறந்தால் என்ன? எனும் எண்ணம் தோன்றியது. அவ் எண்ணம் என்ன? என்பதை சிறிது விபரிக்கிறேன்.

✍✍✍

உயர்தரப் பரீட்சை முடிவுகள் வருவதற்கும், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கும் இடையில், கிட்டத்தட்ட ஆறுமாதங்களை நம் இளைஞர்கள் வீணே கழிக்கவேண்டியிருக்கிறது. இந்த ஆறுமாதங்களைப் பயன்படுத்தி நம் இளையோர்க்கு, ஆளுமை மற்றும் பன்மொழிப் பயிற்சிகளை வழங்கினால் என்ன? என்று தோன்றுகிறது. அப்பயிற்சிக்கான வழிமுறைகளைப் பின்வருமாறு அமைக்கலாம் என கருதுகிறோம்.

✍✍✍

முதல் நிலையில், பரீட்சை முடிவுகளை வைத்தும் அவர்களது இயல்பாற்றலைப் பரிசோதித்தும், இருபது அல்லது முப்பது மாணவர்களை தேர்ந்தெடுப்பது. பல்கலைக்கழகம் புகும் முழு மாணவர்களுக்கும், மேற்பயிற்சிகளை நடத்தும் பலம் இப்போதைக்குக் கம்பன்கழகத்திடம் இல்லை.

அதனாலேயே தேர்ந்தெடுக்கும் மாணவர் தொகையை எல்லைப்படுத்த நினைக்கிறோம். தேரந்தெடுக்கப்படும் மாணவர்களில் ஆண், பெண் என இருசாராரும் இணைத்துக் கொள்ளப்படுவர். இப்பணிக்கு பொருளாதார ரீதியாகப் பலரும் துணை செய்ய முன்வந்தால், தேர்ந்தெடுக்கப்படும் மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும்.

✍✍✍

மேற்பயிற்சி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கொண்டதாய் அமையும். இவ் ஆறுமாதப் பயிற்சியிலும் மாணவர்கள் முழுமையாய்ப் பங்குபற்றவேண்டும். மாணவர்களுக்கு தங்குமிடவசதியும், உணவு முதலியவைகளும் வழங்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் மாணவர்களிடம் அடிப்படை கட்டணம் பெறப்படும்.

கொழும்பு, மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு எனும் தமிழ் பிரதேகசங்களிலும், எவையாவது இரண்டு சிங்கள பிரதேசங்களிலும், மாதந்தோறும் இம்மாணவர்கள் இடம் மாற்றித் தங்கவைக்கப்படுவர். ஆண்களுக்குத் தனியிடமும் பெண்களுக்குத் தனியிடமும், அவர்களுக்கான ஆண், பெண் பராமரிப்பாளர்களும் ஒழுங்கு செய்யப்படுவர்.

✍✍✍
மேற்கு நாடுகளிலிருந்து அழைக்கப்படும் ஆங்கிலேய விரிவுரையாளர்களே, ஆங்கில மொழிப்பயிற்சியினை நடாத்துவர். அதுபோலவே சிங்கள மொழிப்பயிற்சிக்கு சிங்கள ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். தகுதிபெற்ற தமிழ் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் அறிவும் வழங்கப்படும்.

அதுபோலவே பன்மத அறிவும், அவ்வவ் மத அறிஞர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படும். இவைதவிர கணினிப்பயிற்சி, ஆளுமைப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி போன்றவைகளும், தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இவை எமது தற்போதைய அடிப்படை எண்ணங்கள்.

✍✍✍

கலாசார, இனபகிர்வுக்காக, பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவ்விரண்டு வாரங்கள், சிங்கள, முஸ்லிம், மலையக, பறங்கி இனங்களைச் சார்ந்த இல்லங்களில், தங்கவைக்கப்படுவர். மற்றைய இனங்களுடனான உறவு வளர்ச்சிக்காக, இம் முயற்சி செயற்படுத்தப்படும்.

✍✍✍

பயிற்சியின் இறுதி மாதத்தில் இம்மாணவர்களுக்கு, மிகப்பெரிய நிறுவனங்களில் ஓரிரு நாட்கள் நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும். உயர் அதிகாரிகளைச் சந்திக்கும் முறை, வங்கி முதலிய நிறுவனங்களைக் கையாளும் முறை, உயர் ஆளுமையாளர்களைச் சந்திக்கும் முறை, நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்ணும் முறை போன்றவை அனுபவபூர்வமாக மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

வசதிப்பட்டால் உயர் அரசியல்வாதிகளையும், பெரு நிறுவனத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து, உரையாடும் வாய்ப்புக்கள் உண்டாக்கிக் கொடுக்கப்படும்.

✍✍✍

இவைதவிர, தினம் ஒரு ஆளுமையாளரைச் சந்திக்கும் வாய்ப்பு, ஆளுமையாளர்கள் பற்றிய உரை, நவீன செயன்முறை ஊடான ஆளுமைப் பயிற்சி, தனித்த சுய ஆற்றலுக்கான வெளிப்பாட்டுப் பயிற்சி, ஊடகச் செயற்பாடுகள் பற்றிய பயிற்சி, சட்ட, மருத்துவ, இராணுவ நெறிமுறைகள் பற்றிய அறிவு, பல்லின கலை, (இசை, நாடகம்) இலக்கிய அடிப்படை அறிமுகம், விளையாட்டுத்துறைப் பயிற்சி, பல நாட்டு உணவுவகை அறிமுகம், குறித்த சில நிகழ்வுகளில் பங்கேற்கும் முறை, மற்றும் உடையலங்காரம், அதிர்வுகள் தரும் விடயங்களை எதிர்கொள்ளும் முறை, சமூகத்திற்கு உதவும் மனப்பாங்கு என்பனவான விடயங்களும், இம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

✍✍✍

மேற்படி பயிற்சிகள், இராணுவ கட்டுப்பாட்டிற்கு நிகரான கட்டுப்பாட்டோடுதான், மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகள் முடிந்து வெளிவரும் மாணவர்கள், சமூகத்தில் தனித்து இனங்காணப்படத் தக்கவர்களாய்த் திகழ்வார்கள்.

✍✍✍

இது ஒரு பெரிய கனவு. கம்பன்கழகத்தின் இன்றைய பலத்தால் மட்டும், இக்கனவை நனவாக்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில் எமது இந்த நோக்கத்தின் அவசியத்தை தக்கவர்கள் உணரவேண்டும். பின் அதற்குத் துணைபுரிய முன்வரவேண்டும். பாரதியார் சொன்னால் போல,

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

என அனைவரையும் இத்திட்டத்திற்குத் துணைபுரிய வரவேற்று நிற்கிறோம். இவ்விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும், நம் அரசியல்வாதிகளின் ஆதரவையும், நம் நாட்டின் தாழ்விலாச் செல்வர்களின் ஆதரவையும் நாம் நாடி நிற்கிறோம். இவ் எண்ணம் பற்றிய புதிய சிந்தனைகளை, அறிவுலகத்தாரும் ஆளுமையாளர்களும் மாணவர்களும் கூட எமக்கு வழங்கலாம்.

✍✍✍

அண்மையில் 'வேலைக்காரன்" என்ற தமிழ்ச்சினிமாவில், அதன் கதாநாயகன் அடிக்கடி ஒரு தொடரைச் சொல்வான். அத்தொடர் இன்று எம் இனத்திற்குத் தேவையானது. அதைப் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சொற்களிலேயே சிறந்த சொல் 'செயல்" என்பதே, உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்குமாய்க் காத்திருக்கிறோம்.

Read more...

Monday, August 27, 2018

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! ஸ்ரேன்லி ராஜன்

அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் ஜனனதினம் இன்றாகும். அரசியல் தவறுகளுக்கப்பால் ஈழ மக்களின் சுதந்திர வேட்கையில் மிக ஈடுபாடு கொண்டிருந்த தலைவன் அவர். ஆனால் இன்று தமிழ் சமூகம் அவரை மறந்திருக்கின்றது. ஆனாலும் இந்தியத் தமிழன் ஒருவன் அவரை மறக்கவில்லை. அவரது உள்ளக்குமுறல்:

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று. பன்மொழி ஆற்றல் மிக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்.

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, "நாவலரே வருக.." என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர். நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்.

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான். இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்.

அமிர்தலிங்கத்தின் அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்.

1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா. அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது.

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது. ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று.

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார். இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை. அது மகா உண்மையும் கூட‌.

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர். அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்.

அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள். போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள். (ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்) புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்.

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம் :

"தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.
இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."


துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌. ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை. அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்"

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி. இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்.

"அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை" என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள். அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள். கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா? புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்.

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான். அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான். கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்.

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை. எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான். அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்.

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர். புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி.

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம். புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார், பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார். பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார். எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்.

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள். அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்.

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று. ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம். இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்.

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும். பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ். அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்.

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம். அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்.

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது. இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌.

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்.

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள். ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர். நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது. எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது.

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது. இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Read more...

Friday, August 24, 2018

மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்!

பதவிக்காலம் முடிவடைந்த சில மாகாண சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இதே நேரத்தில் வட மாகாண சபை உட்பட வேறும் சில மாகாண சபைகளின் பதவிக் காலமும் இவ்வருட இறுதியில் முடிவடைய இருக்கின்றது. அவற்றின் தேர்தல்களும் உரிய காலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூசமாகச் சொல்லியும் விட்டார். சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர், மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பனவற்றுக்கு முன்னதாக நடத்தப்படும் எனச் சொன்னார். அடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி பார்த்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மாகாண சபைத் தேர்தல் இல்லை என்பது புலனாகும்.

சில வேளைளில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் கூட உரிய காலத்தில் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் முக்கியமானது பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடத்துவது என்பது. புதிய முறையில் நடத்தினால் அது சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில தமிழ் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஜே.வி.பி. ஒரு குட்டி முதலாளித்துவ சிங்கள தேசியவாதக் கட்சி என்ற போதிலும் அதுவும் கூட புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆக, எதிர்க்கட்சிப் பதவியை வைத்துக்கொண்டு, அதனால் வரும் சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழரசுக் கட்சி ஒரு தேசிய சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும், ஐ.தே.க. அரசாங்கத்துடன் உள்ள வர்க்க – அரசியல் ஐக்கியம் காரணமாக புதிய தேர்தல் முறைக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதை எதிர்க்காமல் மௌன அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடித்து வருவதற்கு தேர்தலை பழைய முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்ற நடைமுறைப் பிரச்சினைகளை விட, அரசியல் ரீதியான காரணமே பிரதானமானது. அதாவது தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் படுமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்பதே காரணமாகும். இது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும்.

நாம் முன்னரே சில தடவைகள் சுட்டிக் காட்டியது போன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது. (அதற்குப் பல காரணங்கள், அதை அலசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம்) அது அரசாங்கத்துக்கும் தெரிந்த காரணத்தால்தான், தமக்கு மக்கள் மத்தியில் என்ன நிலை இருக்கிறது என்று அறிவதற்கு தென்னிலங்கையில் சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்திப் பார்த்தார்கள். அப்படி நடத்திய தேர்தல்கள் எல்லாவற்றிலுமே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் படுதோல்வியடைந்தன.

அதன் காரணமாக உள்ள+ராட்சித் தேர்தல்களை நடத்தப் பயந்து, இரண்டரை வருடங்களாக இழுத்தடித்து, பின்னர் தவிர்க்க இயலாத சூழலில் தேர்தலை நடத்தினார்கள். அத்தேர்தலில் முன்னரிலும் பார்க்கப் படுமோசமாகத் தோல்வியைத் தழுவினார்கள். அதன் காரணமாகவே இப்பொழுது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் பயந்து இழுத்தடித்து வருகின்றனர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எப்பொழுது தேர்தல் நடத்தினாலும் அரசாங்க கட்சிகள் இரண்டும் படுதோல்வியடையும் என்பதும், வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர இதர ஏழு மாகாணங்களிலும் கூட்டு எதிரணி அமோக வெற்றி பெறும் என்பதும் நிதர்சனமான உண்மை.

இது ஒருபுறமிருக்க, மாகாண சபைத் தேர்தல்களை – குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதில் தமிழ் அரசியல் தலைமைக்கும் இரகசியமான முறையில் விருப்பம் உண்டு. வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாணத்தின் ஆயுள்காலத்தை நீடிக்கும்படி கோரி அரசாங்கத்தை இரகசியமாக அணுகியதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது. இதுவும் தேர்தல் பயத்தின் காரணமாகத்தான். விக்னேஸ்வரனுடன் முரண்பாடு இருந்தாலும், தமது முரண்பாடு அம்பலத்துக்கு வருவதைத் தவிர்ப்பதற்கும், சில வேளைகளில் தேர்தலில் பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், சம்பந்தன் குழுவினருக்கும் இதில் உடன்பாடு உண்டு.

தற்போதைய சூழலில் வட மாகாண சபைத் தேர்தல் நடந்தால் (மேற்கத்தைய, இந்தியத் தரப்புகள் தலையிடாமல் இருந்தால்) சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அணியாகவும், விக்னேஸ்வரன் தலைமையிலான இன்னொரு அணி தனியாகவும் களமிறங்கக்கூடிய சூழல் உண்டு. இதில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெற்றாலும் கூட, பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகள் பலவீனமடையும் என்பது நிச்சயம். அதனால், பிரிந்து நிற்பது தமிழ் தேசிய நலன்களுக்கு பாதகம் என்று சொல்லி (தமிழ் தேசிய நலன்கள் என்பது தமிழ் மக்களின் நலன்கள் அல்ல, மாறாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அற்ப தொகையான பிற்போக்கு இனவாத மேட்டுக் குழாமினரின் நலன்கள் என்று அர்த்தம் கொள்க), உள் – வெளி சக்திகள் இவர்களை ஒன்றிணைந்து போட்டியிட வைக்கவே முயற்சிகள் நிகழும் என்பதும் உண்மை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, அங்கு தமிழ் மக்களை விட, முஸ்லீம் – சிங்கள மக்களின் கூட்டு எண்ணிக்கை அதிகம் என்பதால், அங்கு தமிழ் பிரிதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது ஒருபுறமிருக்க, இது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் இருக்கின்றது.

ஏனெனில், கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசம் என்ற யதார்த்தம் அங்கு உள்ளது. இந்த நிலைமையில் தேசியக் கட்சிகள் மூவின மக்களையும் உள்வாங்கி அரசியல் செய்கையில், இன (தமிழ் – முஸ்லிம்) அடிப்படையிலான கட்சிகள் தனித்து அரசியல் செய்வது சரியா, பயன் தருமா என்ற கேள்வி எழுகின்றது. இங்கும் கூட மக்களை ஏமாற்றவே இன அடிப்படையிலான கோசம் முன் வைக்கப்படுகின்றது.

ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமைபோல தமிழ் தேசியவாதம் பேசி கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்ற பின்னர் என்ன செய்கிறது? தமிழ் தேசியத்தைக் கைவிட்டுவிட்டு, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் இலங்கையில் நிறுவப்பட்ட வலதுசாரி அரசாங்கத்தைப் பாதுகாக்க எவ்வித நிபந்தனையுமின்றி அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றது.

முஸ்லிம் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இஸ்லாமிய தேசியவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும், பின்னர் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவற்றுடன் இணைந்துவிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

எனவே உண்மை என்னவென்றால், தமிழ் – முஸ்லிம் தலைமைகள் தத்தமது தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தாலும், அவர்கள் அந்த இனங்களில் உள்ள ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை. அந்த இனங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட வரக்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முழு மக்களினதும் பிரதிநிதிகள் போல் நடித்துவிட்டு, பின்னர் சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து விடுவர். இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. மக்கள் இதை விளங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர்.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் மக்கள் இந்த விடயத்தில் வடிகட்டின முட்டாள்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஏனெனில், தென்னிலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை “சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே”தான் நின்று உழல்கின்றனர்.

முன்பு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் என்ற ஒரே வர்க்க, ஒரே அரசியலின் இரண்டு பிரிவுகளுடனும் ‘கன்னை’ பிரிந்து நின்றனர். இப்பொழுது சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்ற அதே விதமான இரண்டு அணிகளுக்கிடையிலும் கன்னை பிரிந்து நிற்கின்றனர். இங்கேதான் தமிழ் மக்கள் மீண்டும் தவறு விடுகின்றனர்.

அதாவது, சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்பது அரசியல் ரீதியாக வெவ்வேறானவை அல்ல. இரண்டினதும் அரசியல் அடிப்படை ஒன்றுதான். அதாவது, இரண்டுமே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டினதும் சமூக அடிப்படை யாழ்.மையவாத, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, உயர்சாதி மேட்டுக்குழாமினர்தான். இவர்கள் இருவருமே ஏகாதிபத்திய விசுவாசிகள். இப்பொழுது இவர்களுக்கிடையில் உள்ள முரண்பாடு சம்பந்தன் குழு அரசாங்கத்தை ஆதரிக்கின்து, விக்னேஸ்வரன் குழு எதிர்க்கின்றது என்பதுதான்.

இது தற்காலிகமானது. நாளைக்கே தேர்தல் நடந்து கூட்டு எதிரணி ஆட்சிக்கு வந்தால் (பெரும்பாலும் அதற்கான வாய்ப்புகள்தான் உண்டு), சமபந்தன் அணி அரச எதிர்ப்பாளர்களாக மாறும். அப்பொழுது சம்பந்தன் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் இடையில் இப்பொழுது நிலவுகின்ற ஒரேயொரு முரண்பாடும் அகன்றுவிடும். விக்னேஸ்வரன் இப்பொழுது சம்பந்தன் அணியை எதிர்ப்பது, தமிழ் அரசியல் அதிகார பீடத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி, தமிழ் மக்களினதோ, தமிழ் தேசியத்தினதோ நலன்களுக்காக அல்ல. ஆனால் அதற்காக தமிழ் தேசியவாதம் பற்றி உரக்கக்கூவி மக்களை ஏமாற்றுகிறார்.

இந்த நிலைமையில், தமிழ் மக்களின் அரசியல் போக்கில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. இதை வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்கான ஒரு நல்ல சூழல் தோன்றியுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக சம்பந்தன் – விக்னேஸ்வரன் குழுவினரிடையே தோன்றியுள்ள முரண்பாடு அதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான மாற்று சக்திகளின் கடமையாகும்.

இதற்கு முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று விக்னேஸ்வரன் அணிதான் என்ற மாயையை மக்கள் மத்தியில் உடைத்தெறிய வேண்டும். அவர்கள் இருவரும் ஒருவரேதான். உண்மையான மாற்று, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிப்பதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். (இதற்கு ஒரு உதாரணம் – சிங்கள மக்களிடையே ஐ.தே.கவின் பாரம்பரிய எதிரி சிறீ.ல.சு.க. தான் என்ற நிலை இருந்தது. ஆனால் சிங்கள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் சரியான முறையில் வேலை செய்ததின் மூலம், ஐ.தே.கவுக்கு மாற்று சிறீலங்கா பொதுஜன பெரமுன தான் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்)

அதற்கான முதல் பணியாக, கடந்த காலத்தில் ஏற்பட்ட வேண்டத்தகாத, கசப்பான சிறுசிறு முரண்பாடுகளை ஒருபக்கம் தூக்கி வீசிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் (கட்சிகள்) ஒன்றிணைந்து ஒரு பரந்துபட்ட முனினணியைத் தோற்றுவிக்க வேண்டும். இதை வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் உலகம் மாறினாலும், தமிழ் மக்களின் பிற்போக்குத் தலைமை ஒருபோதும் மாறாது என்ற சூத்திரத்தைப் பொய்யாக்க வேண்டும்.

இது சாதிக்க முடியாதது அல்ல. எல்லா ஜனநாயக – முற்போக்கு சக்திகளும் மனது வைத்தால் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும். இதற்கான பொன்னான வாய்ப்பு – குறிப்பாக வட மாகாணத்தில் இப்பொழுது உருவாகியுள்ளது. அதைப் பற்றிப் பிடிப்பது நம் எல்லோரினதும் கடமை.

வானவில் இதழ் 92

Read more...

யாழ்ப்பாணத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்த வேலை திட்டமும் மேற்கொள்ளப்படவே மாட்டாதாம்! நாக விகாரையின் விகாராதிபதி

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார். இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாக விகாரையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டத்திலும் நாம் ஈடுபடவில்லை. மாறாக யாழ்ப்பாண மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவு பாலமாகவே நாம் செயற்படுகின்றோம்.

சமய அடிப்படையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது விருப்பமாக உள்ளது. குறிப்பாக பௌத்த சமயத்தோடு இணக்கப்பாடான சூழல் யாழ். மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்றே விரும்புகின்றோம். மாறாக விகாரைகளை கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை.

பௌத்த காங்கிரஸுக்கு சொந்தமான காணிகள் யாழ். மாவட்டத்தில் பல இடங்களிலும் உள்ளன. அவற்றில் அறிந்தோ, அறியாமலோ மக்கள் குடியிருப்புகளும் இடம்பெற்று உள்ளன. இருப்பினும் இங்கு குடியிருக்கின்ற மக்களை வெளியேற்றுகின்ற எந்தவொரு எண்ணமும் எமக்கு கிடையாது. அதே விதத்தில் பொது தேவைகளுக்காக சில கட்டிட நிர்மாணங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றையும் நாம் இடிக்க விரும்பவில்லை. எமது மேற்பார்வையில் அவற்றின் வழக்கமான செயற்பாடுகளோடு நல்லிணக்க மையங்களாக அவை இயங்க முடியும். இதே நேரத்தில் பௌத்த காங்கிரஸிக்கு சொந்தமான இடங்களில் பௌத்த அடையாளங்கள் சிலவற்றை பேணுவது உசிதமானதாக இருக்கும் என்பது எமது விசுவாசம் ஆகும்.

Read more...

Thursday, August 23, 2018

ஐ.தே.க எம்பி யிடம் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் புலி கைது.

நடராஜா குகராஜா என்பவன் கடற்புலிகள் பிரிவில் இயங்கியவன். இலங்கை அரசிடம் சரணடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசின் எடுபிடிகளாக மாறிய பல நூற்றுக்கணக்கான புலிகளில் இவனும் ஒருவன். அக்காலகட்டதில் யாழ் கட்டளைத் தளபதியாகவிருந்த ஹத்துருசிங்கவினால் வழிநடத்தப்பட்ட இவன் டண் ரிவி யின் புகைப்படப்பிடிப்பாளராக இணைக்கப்பட்டான்.

ஊடவியலாளன் என்ற முகமூடி அணிந்திருந்த இவன் தொடர்பில் பல்வேறு சர்சைகள் காலம்காலமாக எழுந்திருந்தாலும், அவ்வப்போது தப்பித்துவந்துள்ளான்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவினூடாக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குகன் என அழைக்கப்படுகின்ற குகராஜ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளான். இவனுடன் விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக்கப்பம் பெறுதல் தொடர்பில் விஜயகலாவிற்கு தொடர்புகள் உண்டா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடக்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்குறித்த இருவரும் இணைந்து பாதிக்கப்பட்ட நபருக்கு அரச திணைக்களமொன்றில் வேலை பெற்றுத்தருவதாக பெண் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு ஐந்து லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது.

மேலும் குகன் எனப்படுகின்ற குகராஜ் என்பவன் இதற்கு முன்னர் இளைஞர் ஒருவரை மேற்குலக நாடொன்றிற்கு அனுப்பி வைப்பதாக ஆறு இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டபோது, காவல்துறை உயர்மட்ட தொடர்புகளை பயன்படுத்தி அவன் கைதிலிருந்து தப்பித்துக்கொண்டதாக இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Wednesday, August 22, 2018

விக்னேஸ்வரனை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள மாட்டாராம் மாவை! பிரித்தானிய தூதரக அதிகாரியிடம் முறைப்பாடு!

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிரித்­தா­னிய உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அர­சியல் தலைமை அதி­காரி நீல் கவானாக் சந்தித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனா­தி­ராஜா, வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டுகள் ஆகின்­றன. எனினும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்ட பல விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பு மாகாண சபையில் ஆளுங்­கட்­சி­யாக உள்­ள­போதும் அது செய­லற்­ற­தா­கத்தான் காணப்­ப­டு­கின்­றது. தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றுகின்றதோர் கூடமாகவே வடமாகாண சபை காணப்படுகின்றது. மக்­க­ளுக்­கான சேவை­யினை செய்­ய­வில்லை. அர­சியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு அடிப்­ப­டைத்­தே­வை­களை அடை­யாளம் காணுதல், வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல், வாழ்­வா­தார உதவித் திட்­டங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்­களில் மாகாண சபை முறை­யாக செயற்­ப­ட­வில்லை என முறையிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தூதரக அதிகாரி வினவியபோது, தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை என்றும் அதன் காரணமாக தாம் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் தம்மை விமர்சிப்பவர்கள் தங்களுக்கு மாற்றுவழி ஏது என்பதை தெளி­வாகக் குறிப்­பி­டா­த­வர்­க­ளாக உள்­ளார்கள் என சிறுபிள்ளைத்தனமாக கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாற்றுவழி தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதற்கு அரியாசனம் என்ற கேள்வியை நிட்சயமாக தூதரக அதிகாரி கேட்டிருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.

மாகாண சபை­யினால் எதிர்­பார்க்கப்­பட்ட விட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதி ராஜா, அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் அழிந்த தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும். மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்­டி­யி­டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் இருந்­தாலும் ஒரு சில விட­யங்கள் நடை­பெற்­றுள்­ளன. குறிப்­பாக அரசினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீட்டுத் திட்­டங்கள் போன்­றவற்றை இம்முறை எமது அரசியல் மூலதனமாக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவிதுள்ளதாக அறியமுடிகின்றது.



Read more...

Tuesday, August 21, 2018

அல்கொய்தாவின் ரமஸி யூசுப் போன்ற கொலை வெறியனே ஒற்றைக்கண் சிவராசன். ஸ்ரேன்லி ராஜன்.

அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப். முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க தனி தீவில் அடைத்திருக்கின்றது, மகா ஆபத்தானவன் அவன்.

அவனை போலவே புலிகளில் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சிவராசன், ஒற்றைகண் சிவராசன், அவன் இயற்பெயர் பாக்கியநாதன், புலிகளுக்கு யாரையாவது கொல்லவேண்டும் என்ற கொள்கைதான் மாறாதே தவிர பெயர் மாறிகொண்டே இருக்கும்.

ஈழத்தில் புலிகளுக்க்காக பல கொலைகளை செய்தவனை பத்மநாபா கொலைக்காக தமிழகம் அனுப்பினார் பிரபாகரன்.

இங்கு வந்தவன் தன் சக புலியினை மாணவனாய் நடிக்க வைத்து பத்மநாபாவிடம் உதவி கோர செய்து அப்படியே அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்னை சூளமேட்டில் பத்மநாபா மற்றும் 13 பேரை கொடூரமாக கொன்றான். அன்றிரவு அவனை தமிழக போலிஸ் பிடித்தது, ஆயினும் மேலிட உத்தரவுபடி விடுவிக்கபட்டான். மேலிடம் என்றால் அன்று திமுக ஆட்சி, 1989ல் கலைஞர் வந்து அமைதிபடை எல்லாம் திரும்பெற்று அந்த படையினை கூட வரவேற்கமாட்டேன் என தேசதுரோகம் செய்த காலங்கள்.

ஆம் ஒரு முதல்வராக இருந்து கலைஞர் அப்படி செய்தது நிச்சயம் தேசதுரோகம் சந்தேகமில்லை, ஆயினும் விபிசிங் அரசு கலைஞரை டிஸ்மிஸ் செய்யவில்லை. முதல்வரே தங்களுக்கு சாதகம் எனும் நிலையில் புலிகள் பேயாட்டம் ஆடினர், சிவராசன் பத்மப்நாபா கொலைக்கு பின்னும் இங்கு சில கொலைகளை செய்தான், தமிழக காவல்துறையினரையே தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌. எல்லாம் அன்று வைகோ கலைஞருடன் இருந்த தைரியம், முரசொலிமாறன் புலிகளுக்கு காட்டிய அனுதாபம். இந்த தைரியத்தில் தமிழகத்தை ஈழமாகவே நினைத்து சுற்றிவந்தான் சிவராசன், அவனுக்கு இங்கு எந்த தடையுமில்லை.

இந்நிலையில்தான் ராஜிவினை கொல்லும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கபட்டது, தீக்குழந்தை என பெயரிடபட்ட தனுவும் மற்றவர்களும் இங்கு வந்தனர். வழக்கபடி படகில் வேதாரண்யம் வந்த சிவராசன் கடத்தல் தங்கத்தை காசாக்கி சதி வேலையினை தொடங்கினான். இங்கு அவனின் கும்பலில்தான் முருகன் இருந்தான், பேரரிவாளன் இருந்தான் , ஹரிபாபு இருந்தான், ஸ்டூடியோ சபாரத்தினம் இருந்தார். இன்னும் பலர் இருந்தனர்.

சிவராசனின் திட்டம் முதலில் நளினிக்கு தெரியவில்லை, ஆனால் பேரரிவாளன் போன்றவருக்கு தெரிந்தது. காரணம் பேரரிவாளன் இலங்கை சென்று புலிகளை சந்தித்தவர். காரியம் முடிந்ததும் இலங்கைக்கு செல்ல வேண்டியவர் பட்டியலில் பேரரிவாளன் ஹரிபாபு பெயர் எல்லாம் இருந்தது.

பத்மநாபா போல் அல்லாமல் ராஜிவ் கொலை மிக சிரமாக இருந்தது, கூடவே கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட நேரம் என்பதால் எங்காவது பேசினால் ஈழதமிழ் காட்டிகொடுத்துவிடும் என்பதாலும் நளினி , பேரரிவாளன் போன்றவர்களை பயன்படுத்திகொண்டான் சிவராசன்.

இது போக தமிழக காங்கிரஸிலும் அவன் கரங்கள் ஊடுருவின, ராஜிவினை புலிகள் கொல்வார்கள் என கொஞ்சமும் நம்பாத காங்கிரசாரில் சிலர் அவன் புலிகளால் பாதிகபட்ட தமிழன் என்றே நம்பினர். அவனும் அப்படியே நடித்து பலரை ஏமாற்றினான். அப்படியே விபி சிங் நடத்திய கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்து கொண்டான்.

பின் ராஜிவ் கொலையினை மிக நுட்பமாக திட்டமிட்டு அதை நடத்தியும் முடித்தான். அதுவும் சென்னையில் ராஜிவ் தப்பினால் கிருஷ்ணகிரி அங்கும் தப்பினால் டெல்லியில் கொல்ல இன்னொரு பெண் ஆதிரை என ஏற்பாடு செய்திருந்தான். ராஜிவ் திருப்பெரும் புதூரிலே சிக்கினார்.

கென்னடி கொலைபோல மர்மமான கொலை என்றாலும் சிவராசன் எதில் சிக்கினான் என்றால் இரு விஷயங்கள். முதலில் பத்மநாபா கொலை போல அல்லாமல் இங்கு ராஜிவ் கொலைக்கு உள்ளூர் ஆட்களை பயன்படுத்தியது. இரண்டாவது அந்த ஹரிபாபுவின் கேமரா.

இரண்டாவது விஷயம்தான் மகா கொடுமை, முதலில் குண்டு வைக்கும் இடம் தொடர்பாக சில போட்டோங்களை அனுப்ப அவன் ஹரிபாபுவினை கூட்டிகொண்டு அலைந்தான், ஆனால் கடைசி நொடியிலும் ஏன் என்றால் அங்குதான் புலிகளின் கோழைத்தனம் தெரிந்தது.

பிரபாகரனுக்கு விசித்திரமான மனநோய் இருந்தது, தன் எதிர்களின் கடைசி நொடியினை அவர் பார்த்து திருப்தி அடைவது அவரின் ஸ்டைல் அப்படித்தான் இந்த படங்களும் எடுக்கபட்டன‌.

குண்டுவெடிப்பின் வீரியம் சிவராசனுக்கு தெரிந்தும் அவனை அனுமதித்தான் , ஆனால் ஆர்வ கோளாறில் உட்சென்று உயிர்விட்டான் ஹரிபாபு. அந்த கலவரத்தில் கேமரா பற்றி மறந்துவிட்டான் சிவராசன்.

நீதி அந்த கேமரா வடிவில் துப்பு துலக்க உதவியது. அதுவரை புலிகள் கண்ணீர் வடித்தனர், கிட்டுவோ லண்டனில் இருந்து முடிந்தால் கொலைகாரர்களை இந்தியா கண்டுபிடிக்கட்டும் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்.

இந்தியா தீவிரமாக துப்பு துலக்கியது, பேரரிவாளன் நளியின் அண்ணன் அச்சகத்தில் இருந்த புலிகளின் குகையில் எனும் வீடியோக்கள் எல்லாம் சிக்கின‌. அதில் சிவராசனின் வீடியோ, வைகோ ஈழம் சென்ற வீடியோ எல்லாம் இருந்தது, விஷயம் உறுதிபடுத்தபட்டபின் அவனை இந்திய விசாரணை குழு தீவிரமாக தேடியது.

புலிகளின் பெயர் அடிபட ஆரம்பித்தவுடன் அவனை காப்பாற்றும் முயற்சியினை பிரபாகரன் கைவிட்டார். இந்திய குழு இலங்கைக்கு செல்லும் வயர்லெஸ் தொடர்புகளை ஒட்டுகேட்டபொழுது சிவராசனின் படுபயங்கர திட்டம் வெளிதெரிந்தது.

ஆம், பூந்தமல்லியில் இருந்த ராஜிவ் கொலை விசாரணை அலுவலகத்தை தாக்கி கார்த்திகேயனை கொல்ல அவன் திட்டமிட்டது எல்லாம் தெரிந்தது. எவ்வளவு தைரியம்? யார் கொடுத்த தைரியம் என்றால் சாட்சாத் திமுகவும், திகவும் கொடுத்த தைரியம். தமிழகத்தில் புலிவேட்டை தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட புலிகள் சயனைடு குடித்தனர், திமுக உறுப்பினர் எல்லாம் கைதாயினர், திமுக கனத்த அமைதி.

இனி தமிழகம் தன்னை காப்பாற்றாது என உணர்ந்த சிவராசன் பெங்களூர் தப்பினான், அதுவும் டாங்கர் லாரியில் அவனும் சுபாவும் தப்பினர். இங்கு பேரரிவாளன், நளினி உட்பட பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமான சிவராசன் அங்கும் ஒரு குடும்பத்தை கெடுத்தான். அவன் பெயர் ரங்கநாத். ரங்கநாத் ஐரோப்பாவில் வசித்தபொழுது எப்படியோ புலிகளிடம் சிக்கிகொண்டார், அந்த தொடர்பில் அவரை பிடித்த சிவராசன் வலுகட்டாயமாக பயன்படுத்தினான்.

இந்தியா முழுக்க அவனை காவல்துறை தேடிகொண்டிருக்க அவனோ பெங்களூர் அருகே புறநகரில் பதுங்கி இருந்தான், துப்பு கிடைத்த காவல்துறை வளைத்தது. கமாண்டோபடை வரும் வரை ரகசிய காவல் இருந்தார்கள், இந்திய வழக்கபடி கமாண்டோ படை தாமதமாகவே வந்தது. முதலில் அவனுக்கு சந்தேகம் வராதவாறுதான் வளைத்தார்கள் ஆனால் அங்கு வந்த டெம்போ ஒன்று பழுதானவுடன் சந்தேகபட்டு முதலில் தாக்கியது சிவராசன் குழு. சண்டை வெடித்தது, கமாண்டோ களமிறக்க சில தாமதாமாக ஆவணங்களை எல்லாம் எரித்துவிட்டு தற்கொலை செய்தான் சிவராசன்.

ஆம் இதே ஆகஸ்டு 20, அன்று ராஜிவ் காந்தியின் பிறந்த நாள். ராஜிவ் கொல்லபட்டு 3 மாதத்திற்குள் மிக சரியாக ராஜிவ் பிறந்தநாள் அன்று சிவராசனின் கதை முடிக்கபட்டது.

ஈழபுலிகளில் மிக மிக கொடூரமானவன் சிவராசன், யாரும் செய்ய துணியாத கொடூரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்தவன். புலிகளின் பயிற்சி அப்படி இருந்திருக்கின்றது. அவனை கொண்டாடிய புலி இயக்கம் அவனாலே அழிந்தது, அவனை ஆதரித்த பாவத்திற்காக நளினி குடும்பம் அழிந்தது. பேரரிவாளனின் தாயார் இன்றுவரை கண்ணீர் விடுகின்றார். தமிழகத்தில் புலி இயக்கமே அவனின் செய்ய கூடாத செயலால் கருவருக்கபட்டது. பெங்களூர் ரங்கநாத் குடும்பம் அவனால் பிரிந்தது.

புலிகளுக்கு கொல்ல , அழிக்கவே தெரியும் யாரையும் வாழவைக்க தெரியாது என்பதற்கு சிவராசன் பிரபாகரனை விட பெரும் உதாரணம். இவ்வளவு நடந்தும் பேரரிவாளன் தாயாரோ, நளியோ யாராவது சிவராசனை கண்டித்தோ அவனை அனுப்பிய பிரபாகரனை கண்டித்தோ ஒருவார்த்தை பேசியிருப்பார்களா?

ஏன் பேசவில்லை? ஒன்று அவர்களிடமிருந்து பெற வேண்டியதை பெற்று பேசாமல் இருக்க வேண்டும் அல்லது நாங்கள் செய்தது சரி சட்டத்தின் ஓட்டையில் எங்களை விடுங்கள் என மறைமுகமாக சொல்லவேண்டும்.

அவர்கள் இந்த இரண்டையுமே செய்திருக்கின்றார்கள் பின் எப்படி அவர்களை விடுவிப்பார்கள்.

சிவராசன் சந்தித்த திமுகவினர் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் வைகோ . அவரை போல இன்னும் நிறையபேர் உண்டு. சிவராசனின் கூட்டாளியாக கருதபட்ட, யார் மூலம் சிவராசன் தப்பி செல்ல முயன்றானோ அந்த சந்திராசாமியினை யாரும் தொடவில்லை. சந்திரசாமி பெரும் ஆயுத வியாபாரி, அந்த பெல்ட் வெடிகுண்டு இப்படி வந்திருக்கலாம் என்பது யூகம்.

சுப்பிரமணியன் சாமி என்பவரும் சிக்கவில்லை, ராஜிவிற்கு கருப்பு பூனை படையினை வாபஸ் வாங்கியதே அவர்தான். இந்த புலி, வைகோ, சு.சாமி, சந்திரசாமி எல்லோருக்கும் இடையேயான ஒற்றுமை அந்நிய நாட்டு கைகூலிகள். இதில் சிவராசன் செத்தான் மற்றவர்களை ஏதோ ஒரு சக்தி காப்பாற்றிற்று. அவர்களை எல்லாம் வழக்கிலிருந்து ஒரு சக்தி காப்பாறிற்று, அதே வைகோ பின் மன்மோகன் அரசில் எல்லாம் இருந்தார். யாருக்கும் வெட்கமில்லை என்பது இதுதான், அரசியல்வாதிகள் அப்படித்தான்.

சிவராசனின் சாகசம் பற்றி அங்கிள் சைமனுக்கு இன்னும் தெரியாது போல, இல்லாவிட்டால் சிவராசனுக்கு கண்ணாடி வாங்கி கொடுத்ததே நான் என கிளம்பிவிடுவார். இங்கு நடமாடவிட்ட பாவத்திற்காக பலரை கொன்ற , பல குடுமபங்களை சீரழித்த அந்த சிவராசனை போன்ற ஈழ ஈனதமிழர்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

கொடுமதியாளர்களாலும் கொலைகாரர்களாலும் நிரம்பிய புலிப்படை, அதில் அரக்கனான சிவராசனை வளர்த்துவிட்டு அவனாலே அழிந்தும் போனது. 2009 சம்பவங்களுக்காக கலைஞரை திட்டமுடியாது. ஆனால் 1990 சம்பவங்களுக்காக அவரை திட்டாமல் இருக்கவும் முடியாது. ஆம் பத்மநாபா கொலைவழக்கிலே சிவராசனை பிடித்து சாத்தி இருந்தால், தா கிருட்டினன் கொலைவழக்கில் காட்டிய வேகத்தை பத்மநாபா கொலைவழக்கிலே காட்டி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது. அந்த பழியில் இருந்து தப்பிய கலைஞர், செய்த பாவத்திற்கு தப்பிய கலைஞர் 2009ல் செய்யாத பாவத்திற்கு மாட்டிகொண்டார்.

சிவராசன் என்பவன் ராஜிவ் கொலையில் சம்பந்தபடாமல் இருந்தாலோ இல்லை கொல்லபடாமல் தப்பி இருந்தாலோ தமிழகம் அவனால் நாசக்காடு ஆகியிருக்கும். அப்படி ஒரு வெறிபிடித்த மிருகம் அவன்.

தமிழகம் சிந்தவேண்டிய‌ முழு இரத்தபழியினையும் தாங்கி, தன்னை கொடுத்து தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கின்றார் ராஜிவ் காந்தி

இவ்வாக்கமானது ஸ்ரேன்லி ராஜன் என்பவரின் முகநூலிலிருந்து பெறப்பட்டது.

Read more...

தொழில் தருவதாகக் கூறி வேலையில்லா பட்டதாரிகளை ஏமாற்றும் திட்டம்! – வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

தற்போதைய அரசாங்கம் ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரிக்களுக்கு பொய் கூறி அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது இன்று நடைபெற்ற தொழில் வழங்கும் நிகழ்வின் மூலம் தெரிய வருகின்றதென ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் குறிப்பிடுகிறார்.

வேலையில்லா பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் இன்று 4100 பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் வழங்கி கண்காட்சி நடத்துகிறார்கள்.
2012 மார்ச் 31ம் திகதியின் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் தற்போதைய மைத்திரி – ரணில் ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் என்ற வகையில் பட்டதாரிகளுக்கு 6 வருடங்கள் தொழில் இல்லாமலிருக்க நேர்ந்த்து.

ஆகவே 58000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இல்லாமல் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் என்ற வகையில் 2013 வருடம் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வு கேட்டு போராடத் துவங்கியது. தொழில் வழங்குவதற்கான வருடாந்த வேலைத்திட்டமொன்று அவசியமெனவும், சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குமாறும் கேட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தென்னே ஞானானந்த தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

Sunday, August 19, 2018

முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

இவரது கூற்று இன்று அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதுடன் இதனை சாதாரணமான ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது. சிங்கள இனவாதிகள் தொடக்கம் மதத் தலைவர்கள் வரைக்கும் அரசியலில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக பாவிக்கின்ற ஒரு துரும்புதான் முஸ்லிம் மக்களாகும்.

அதுபோலவே அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தடம்பதிக்க முற்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டு அதன்மூலம் பிரபலம் அடையவும், அரசியல் இலாபம் பெறுவதற்குமான முயற்சியா ? அல்லது இதற்குப்பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று சிந்திக்க தோன்றுகின்றது.

இலங்கையின் அரச புலனாய்வு துறையினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விடுதலை புலிகள் பலமாக இருந்த காலங்களில் யாராலும் பிரவேசிக்க முடியாத அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணியினர்களை அனுப்பி புலிகளின் விமானப்படை தளபதி சங்கர் உட்பட பல முன்னணி தளபதிகளை கொலை செய்தார்கள்.

அத்தோடு துல்லியமான புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை விமானத்தாக்குதல் மூலம் அழித்தார்கள்.

சர்வதேச பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு புனைப்பெயர்களில் நடமாடிய புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி அவர்களை மலேசியாவில் அதிரடியாக கைது செய்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள்.

இவ்வாறு எத்தனையோ சாதனைகளை இலங்கை புலனாய்வு துறையினர்கள் செய்ததுடன், இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கத்திடம் இப்படியான திறமையான புலனாய்வு துறையினர்கள் இருக்கும்போது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பது மட்டும் அவர்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு ?

2004 இன் இறுதியில் கருணா அணியினர்கள் ஆயுதங்களை களைந்துவிட்டு தப்பி சென்றார்கள். அதுபோல் 2009 இல் இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை களையவில்லை என்றும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறுவது நியாயமென்றால், கடந்த 2005 தொடக்கம் 2014 இறுதி வரைக்கும் மகிந்த ராஜபக்ஸவே இந்த நாட்டை ஆட்சி செய்தார். ஏன் மகிந்தவினால் முஸ்லிம்களின் ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை ? அல்லது களைய முடியவில்லை ?

புலனாய்வு துறையினர்கள் உட்பட அரச படையினர்களை மிகவும் திறமையாக வழி நடாத்திய அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இது தெரியாமல் போனது எவ்வாறு ?

குறித்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை சிங்களவர்கள் தாக்கி அவர்களது பொருளாதாரத்தை அழித்தபோது இந்த ஆயுதங்களை அவர்கள் ஏன் பாவிக்கவில்லை ?

எனவே புனர்வாழ்வு பெற்ற ,முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்த அறிவிப்பானது பின்னணி அரசியல் நோக்கம் கொண்டதே தவிர எந்தவித உண்மையுமில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Read more...

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

கடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்துகொண்டிருக்கின்றது. இன்றைய (19/08/2018) Sunday Times இலும் பேராசிரியர் G L பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தொடர்பாக சற்று கண்ணோட்டம் விடுவோம்.

இங்கு வியாக்கியானத்திற்குட்படுத்தப்படுகின்ற பிரதான சரத்து 19 வது திருத்தத்தினூடாக மீள அறிமுகப்படுத்தப்பட்ட சரத்து 31(2) ஆகும். இது ஏற்கனவே இருந்தது. 18 வது திருத்தத்தினூடாக நீக்கப்பட்டது. அது மீண்டும் 19 வது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இந்த சரத்து பின்வருமாறு கூறுகின்றது;

“ No person who has been twice elected to the office of President by the People, shall be qualified thereafter to be elected to such office by the people.”

அதாவது, “ இரு தடவைகள் மக்களால் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை”. என்பதாகும்.

இங்கு பேராசிரியர் G L பீரிஸ் முன்வைக்கின்ற வாதம் ‘ இந்த சட்டம் ‘prospective’ வே தவிர ‘ retrospective’ அல்ல என்பதாகும். இச்சொற்களுக்குரிய நேரடித் தமிழ்ப்பதம் தெரியாது. இவற்றின் பொருள்; ‘prospective’ என்பது ஒரு சட்டம் அமுலுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற விடயங்களுக்கே அச்சட்டம் செல்லுபடியாகும். அதற்குமுன் நடைபெற்ற விடயங்களுக்கல்ல; என்பதாகும்.

‘ Retrospective’ என்பது சட்டம் பின்னர் இயற்றப்பட்டாலும் அதற்கு முன் நடந்த விடயங்களுக்கும் அது செல்லுபடியாகும்; என்பதாகும்.

உதாரணமாக முஸ்லிம்களுக்கு பலதார மணம்புரிதல் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நாளை ‘ ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முஸ்லிம்களுக்கும் செல்லுபடியாகாது’ என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அது prospective என்றால் சட்டம் அமுலுக்கு வரமுன் முடித்த பலதார திருமணங்கள் பாதிக்கப்படாது. புதிதாக முடிக்க முடியாது. ‘retrospective’ என்றால் சட்டம் கொண்டுவரமுன் முடித்த ஒன்று மேற்பட்ட திருமணங்களும் செல்லுபடியற்றதாகிவிடும்.

பொதுவாக சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்றால் ‘ எந்தவொரு சட்டமும் retrospective effect இருக்கின்றது என்று அதில் வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டால் அது ‘prospective’ யே ஆகும்.

(இதன்பின் இலகு புரிதலுக்காக prospective ஐ முன்னோக்கிய செயற்படுதன்மை என்றும் retrospective ஐ பின்னோக்கிய செயற்படுதன்மை என்றும் குறிப்பிடப்படும்.)

அதேநேரம் கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக ஆக்கப்படும் சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வெளிப்படையாகவும் வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்திருக்கின்றது.

ஏனைய சட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் விரும்பினால் பின்னோக்கிய செயற்படுதன்மையை அதற்கு வெளிப்படையாக வழங்கலாம். அவ்வாறு குறிப்பிடாவிட்டால் அதற்கு ‘பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை என்றும் முன்னோக்கிய செயற்படுதன்மை’ மாத்திரமே இருக்கின்றது; என்பதும் பொருளாகும்.

மேற்குறித்த அரசியலமைப்பு சரத்தில் பின்னோக்கிய செயற்படுதன்மை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மாத்திரமல்ல வியாயக்கியான விதிகளின்படி சாதாரண சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வழங்குவதுபோன்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு வழங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் எப்போதும் முன்னோக்கிய செயற்படுதன்மையையே கொண்டிருக்கின்றது; என்ற நிலைப்பாடு இருக்கின்றது.

இந்தப்பின்னணியில்தான் மேற்படி சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை; முன்னோக்கிய செயற்படுதன்மையே இருக்கின்றது. எனவே, மஹிந்த ராஜபக்ச இருமுறை ஜனாதிபதியாக இருந்தது 19வது திருத்தம் கொண்டுவரப்பட முன்னராகும். 19 வது திருத்தத்தின்பின் அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படவில்லை. எனவே, அவருக்கு மீண்டும் போட்டியிடத் தடையில்லை. மைத்திரி தொடக்கம் எதிர்காலாத்தில் ஜனாதிபதியாகின்றவர்கள்தான் இருமுறைக்குமேல் தெரிவுசெய்யப்பட முடியாது; என்ற வாதத்தை பேராசிரியர் G L பீரிஸ் முன்வைக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அவர்கள் மேற்படி வாதத்தை ஏற்றுக்கொண்டவராக, “ இரண்டு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட முடியாது; என்றதடை ஏற்கனவே (1978ம் ஆண்டிலிருந்து) இருந்தாலும் அது 18வது திருத்தத்தின்மூலம் நீக்கப்பட்டுவிட்டது. என்வே 19வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட சரத்து ( பழையதாக இருந்தாலும்) புதியதாகவே கருதப்பட வேண்டும். எனவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது; என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

இவர்களின் கருத்தினதும் நிலைப்பாட்டினதும் ஏற்புடைத்தன்மை

மேற்குறித்த சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை; என்ற இருவரது கருத்துக்களும் முழுக்க முழுக்க ஏற்புடையதே. மறுதலிக்க முடியாது. அதேபோன்று, குறித்த சரத்து புதியதே என்ற முன்னாள் பிரதம நீதியரசரின் கருத்திற்கும் மறுப்பேதும் கூறமுடியாது. அதுவும் சரியான கருத்தே.

முரண்பாடு, “ எனவே மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவதை இச்சரத்து கட்டுப்படுத்தவில்லை” என்ற அவர்களது நிலைப்பாட்டில்தான். அதாவது இச்சரத்திற்குரிய பொருள்கோடலில்தான் முரண்பாடு இருக்கின்றது. அப்பொருள் கோடலுக்கு இப்போது வருவோம்.

குறித்த சரத்தை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ( two clauses).

“ No person ..... shall be qualified thereafter to be elected to such office by the People “ ( main clause).

அதாவது, “ எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை” ( பிரதான பகுதி)

“........who has been twice elected to the office of President by the People.....”. ( subordinate clause)

அதாவது, “........யார் மக்களால் இருமுறை ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றாரோ அவர்.......”. ( அதன் உப பகுதி)

இங்கு கவனிக்க வேண்டியது, ஒரு குறிப்பிட்ட வகையானவர்கள் இச்சரத்து அமுலுக்குவந்த கணத்திலிருந்து மீண்டும் போட்டியடத் தகுதியற்றவர்களாகின்றனர்.

மையக்கேள்வி

இந்த முழுப்பிரச்சினைக்குமான மையக்கேள்வி, “ இந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவராக ஒருவர் இந்த சரத்து அமுலுக்கு வந்தபின் வரவேண்டுமா? அல்லது ஏற்கனவே அந்த வகையில் அடங்குகின்ற ஒருவரை இச்சட்டம் குறிப்பிடுகின்றதா? என்பதாகும்.

இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற உப பகுதி ( subordinate clause) என்ன காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த உப பகுதியின் தொழில் அந்த பிரதான பகுதியில் பாவிக்கப்பட்டிருக்கின்ற ‘ அவர்’ யார் என்பதை விவரிப்பதாகும்.

“.........who has been elected twice......”

இங்கு பாருங்கள் ‘ present perfect tense ‘ இல் இந்த clause பாவிக்கப்படுகின்றது. இந்தக் காலம் ஒரு சம்பவம் நிகழ்காலத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டும். அதாவது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நிகழ்காலமென்பது ‘ இப்பொழுதான்’ என்பதாகவும் இருக்கலாம். அல்லது முன்பு நடந்து தற்பொழுது என்கின்ற உணர்வை வழங்குவதாக இருக்கலாம். ( அதாவது there must be a sense in the present tense, but the action must be complete).

உதாரணமாக ‘I have had my lunch ‘ இது சற்றுமுன்னர் நடந்ததைக் குறிக்கும். நேற்று நடந்ததைக் குறிக்காது.

[மூன்று மாதங்களுக்குமுன் ஒரு கார் வாங்கினோம்.? இப்பொழுதும் சொல்லலாம் ‘ I have bought a car’ ‘ நான் ஒரு கார் வாங்கியிருக்கின்றேன்’ என்று. ( ஆனால் I have bought a car three months ago என்று கூறமுடியாது , இது இலக்கணத்தோடு தொடர்புபட்டது, இங்கு அவசியமில்லை).]

இங்கு அவதானத்திற்குரியது, அந்த சம்பவம் நிறைவுபெற்றிருப்பது.

எனவே, யாருக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படுவது தடையென்றால் ‘ 19 வது திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் தெரிவுசெய்யப்படுகின்ற சமயத்தில் அவர் ஏற்கனவே இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.

மாறாக, இவர்கள் கூறுவது போன்று ‘ அவர் அவராக வருவதும் 19வது திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின்புதான் என்றால் ஆகக்குறைந்தது இச்சரத்து யதார்த்தத்தில் அமுலுக்கு வருவதற்கு பத்து வருடங்கள் எடுக்கும். அது பாராளுமன்றத்தின் எண்ணமாகவும் இருந்திருக்க முடியாது. வியாக்கியான விதிகளையும் கேலிக்கூத்தாக்கும்.

மட்டுமல்ல, கீதா குமாரசிங்கவின் வழக்கில் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட பிரதான கேள்வி தேர்தல் தினத்தன்று அவர் இரட்டைப் பிரஜாஉரிமை உடையவரா? என்பதே தவிர அவர் 19 திருத்தத்திற்குமுன் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றாரா? பின்னர் பெற்றாரா? என்பதல்ல.

எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும்போது ஒருவர் ஏற்கனவே இருமுறை தெரிவுசெய்யப்பட்டிருந்தால் போட்டியிடமுடியாது.

இவை இவர்களுக்குத் தெரியாததுமல்ல. இவையெல்லாம் ஒருவகை அரசியல் உத்திகளும் பிரச்சாரமுமாகும். . இதேபோன்றுதான் பழையமுறையில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த சட்டத்தில் இடமுண்டு என்றார்கள்.

Read more...

Tuesday, August 14, 2018

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்! 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர் ஒபரோய் தேவன் அல்லது பறுவா என்று அழைக்கப்பட்ட குலசேகரம் தேவசேகரம்.

கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவர் தனது சுகபோக வாழ்வை துறந்து தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய பணிகள் காத்திரமானவை. இவ்வாறு அவரது களப்பணி மக்கள் மற்றும் போராளிகள் மத்தியில் வீச்சுப்பெற்றுச் சென்றபோது, தங்களை விட எவரும் வழரலாகாது என்ற நோக்கம் கொண்ட புலிகள் அவரை சுட்டுக்கொன்று இன்றுடன் 38 வருடங்கள்.

கடந்த 1983ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி நீராவியடியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 25 வயது வாலிபனான ஒபரோய் தேவன் அவர்கள் இறக்க முன்னர் „என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும்' என்று தெரிவித்திருக்கின்றார் என்பதும் அது நிதர்சனமாகியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



Read more...

அமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக? சீறுகின்றார் தேரர்.

இலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் பெங்கமுவ நாலக்க தேரர், இலங்கையில் தற்போது யுத்தம் நடைபெறவில்லை என்றும் யுத்தமற்ற நாடொன்றுக்கு இராணுவ உதவி அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த தேரர், அழிவின் விளிம்பிலிருந்து நாட்டை காக்கவேண்டுமானல் இன்றைய அரசை கவிழ்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Read more...

ஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இடமாற்றம்பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் நேற்றைய தினம் அலுவலக ஊழியர்களுடனான சந்திப்பில் தன்னை கள்வன் எனப்பெயர்சூட்டி வெளியேற்றியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் பிரதேச செயலரின் இடமாற்றத்தில் மகிழ்சியை தெரிவிக்கும் மக்கள், ஜெகதீசன் தனது சேவைக்காலத்தில் பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக சுற்றுக்சூழலுக்கு பாதிப்பதை ஏற்படுத்துகின்ற மணல் ஏற்றுவதற்கான அனுபதிப்பத்திர விடயங்களில் கையூட்டல்கள் பெற்றுக்கொண்டாகவும், அரச காணிகள் விவகாரத்தில் பல்வேறுமோசடிகளை செய்துள்ளதாகவும், ஊழியர்களிடமிருந்து சேகரித்து மேற்கொள்ளப்பட்ட ஆலய புனர்நிர்மானப்பணிகளுக்கான கணக்கறிக்கையை வெளிப்படுத்தவில்லை என்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிச்செல்கின்றனர்.

மேலும் ஜெகதீசனின் இடம்மாற்றத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முயற்சிகளை மேற்கொண்ட சமூக அக்கறை கொண்ட இளைஞர்களுக்கு சிவில் சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் ஜெகதீசனின் மேற்படி குற்றச்செயல்கட்கு துணை நின்ற ஏனைய உத்;தியோகித்தர்களுக்கும் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி நிற்கின்றனர்.

ஜெகதீசன் இதற்கு முன்னர் பணிபுரிந்த பல்வேறு பிரதேச செயலகங்களிலிமிருந்தும் மக்களினால் நிராகரிக்கப்பட்டு இடமாற்றம் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

Wednesday, August 1, 2018

எரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்

அந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய தகவலை சொல்ல வேண்டும் என்ற வேகத்தில், அவ்வூர் கிராம சேவகர் , ஹேமபாலவை சந்திக்க விரைந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு சொல்லப்பட்ட அவசர தகவலை சொல்ல போய்க் கொண்டிருந்த கிராம சேவகர், அதை எப்படி ஆரம்பிப்பது என பலவாறாக யோசித்தவாறே போய்க் கொண்டிருந்தார். அங்கு வாழும் கிராமத்தவர்கள் , கிராம சேவகரை விதானையார்(ராலஹாமி) என்றே அழைப்பது வழக்கம்.

ஹேமபாலவின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த கிராம சேவகர் , ஹேமபாலவின் வீட்டை நோக்கி திரும்பிய போது, தூரத்தே உள்ள வெற்றிலை தோட்டத்தில் ஹேமபால , வேலல் செய்து கொண்டு இருப்பது தெரிந்தது. கிராம சேவகர் , ஹேமபால இருக்கும் திசையை நோக்கி நடந்தார்.

தூரத்தே ஒருவர் , வேகமாக தனது தோட்ட பக்கம் நடந்து வருவதையும், அவர் அந்த ஊர் கிராம சேவககர் என்பதையும் ஹேமபால அடையாளம் கண்டார்.

வெத்திலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஹேமபாலவை தேடி, கிராம சேவகர் வருவது எதற்கு என்று ஹேமபால தெரியாமல் , வெற்றிலை தோட்டத்திலிருந்து முன்னால் நடந்தார். கிராம சேவகரின் முகத்தை பார்த்ததும் , ஏதோ நல்ல விடயமாக அவர் வரவில்லை எனும் உணர்வு, ஹேமபாலவை ஆட்படுத்திக் கொண்டது.

ஹேமபாலவின் முகத்திலிருந்து வடியும் வியர்வையை அவரது பனியனால் துடைத்தபடி "விதானை ஐயா , என்ன இது விடிய காலையிலேயே?" என்றபடி அவரை நோக்கி வணங்கி நின்றார்.

"ஹேமபாலவுக்கு ஒரு விசயம் சொல்ல வேண்டியிருக்கு. குழப்பப்பட வேண்டாம்." என்றவாறு கிராம சேவகர் தனது கண்ணாடியை கழட்டி கையில் எடுத்தார்.

" போலீசில் உள்ள ஒரு கான்ஸ்டபிள்தான், இந்த தகவலை உங்களிடம் சொல்லச் சொன்னார்." கிராம சேவகர் பேச்சை சற்று நிறுத்தினார்.

"போலீசில் உள்ள ஒரு கான்ஸ்டபிள் ஒரு தகவல் சொன்னாரா?" ஹேமபால, தமக்கும் போலீசுக்கும் எந்த தொடர்பும் இல்லையே என்பது போல தலையை சொறிந்தார்.

"ஓம், யாழ்பாணத்திலிருந்து தகவல் ஒன்று போலீசுக்கு வந்திருக்கிறது" கிராம சேவகர் சொல்லி நிறுத்தினார்.

ஹேமபாலவின் மனதில் ஏதோ ஒன்று தாக்கிய உணர்வு. மூத்த மகன் யாழ்பாணத்துக்கு மாற்றலாகி இரண்டே மாதங்கள்தான் கடந்து போயிருந்தன. அவனுக்கு ஏதாவது பிரச்சனையோ என நினைத்து , "மகனுக்கு ஏதாவது பிரச்சனையா?" என்ற வினவும் போதே, ஹேமபாலவின் முகம் சோர்ந்து போனது.

" விதானையாரே! என்ன தகவல் என்று சொல்லுங்க?" ஹேமபால சற்று பதற்றமானார்.

"ஹேமபாலவுக்கு எப்படி சொல்றதென்று தெரியவில்லை. உங்கள் மகன் நேற்றைய நிலக் கண்ணி வெடி ஒன்றுக்கு அகப்பட்டு இறந்துள்ளார். அந்த தகவலை சொல்லச் சொல்லி போலீசார் என்னிடம் சொன்னார்கள்."
அதைக் கேட்டதும் ஹேமபாலவுக்கு இடி விழுந்தது போலிருந்தது. உடல் சோர்ந்து போய் நிலத்தில் உட்கார்ந்து கொண்டார். "எனது மூத்த மகன் இறந்துட்டானா?" அவர் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டார்.

"இதை நம்ப முடியாது. இது பிழையான தகவல் விதானையார். போன கிழமை பெரியவனிடம் இருந்து ஒரு கடிதம் கூட வந்ததே" அவரது வாய் வீரியமற்று அதை மறுக்க முணுமுணுத்தது.

அந்தக் கடிதத்தில் சிறு சிறு பிரச்சனைகள் நடப்பதாகவும் , இப்போது இராணுவம் அப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் , அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது அனுராதபுரத்திலுள்ள வணக்க தலங்களுக்கு எல்லோருமாக சேர்ந்து போக தயாராகும் படியும் எழுதியிருந்தான். அந்த மகிழ்ச்சியில் குடும்பமே அவன் வரும் நாளை எதிர்பார்த்து காத்து இருந்தது. ஆனால் இப்போது?இதென்ன இடி விழும் செய்தி. முகத்தை பொத்திக் கொண்டார்.

" எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது ஹேமபால , புலிகள் தாக்கியதில் நேற்று 13 பேர் இறந்துள்ளார்கள் என கேள்விபடுறன். மரண சடங்குகளை அரச மரியாதையோடு கொழும்பு மாயானத்தில் செய்ய உள்ளார்களாம். குடும்ப உறவுகளுக்கு கொழும்புக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்" கிராம சேவகர் , சோகம் ததும்பிய குரலில் விபரத்தை மறைக்காது நேரடியாகவே சொல்லி முடித்தார்.

ஹேமபால கீழே விழுந்து உட்கார்ந்த இடத்திலேயே சிலையாகிப் போயிருந்தார்.

"ஐயோ, பெரியவன் செத்துட்டானா? இதைக் கேட்டால் தாய்க்காரி மண்ணை தின்பாளே? ஐயோ என் மகனுக்கா இப்படி ஆனது? புதை குழிக்குள்ள இறக்க முதல்ல கடைசியா ஒரு தரமாவது என்னுடைய பெரியவனின் முகத்தை பார்க்க முடியுமோ?" எனக் கதறத் தொடங்கினார்.

ஆயிரமாயிரம் சோகமான எண்ண ஓட்டங்கள் , அவரது மன அலைகளை ஊடுறுத்து சென்று வலியெடுக்க வைத்தது.

" ஹேமபால , உடனே வீட்டுக்கு போவோம். மகனின் இராணுவ முகாமில் உள்ளவர்கள் சில வேளை வரக் கூடும். கொழும்புக்கு போக வேண்டிய பயணத்துக்கு தயாராக வேணும்?" உட்கார்ந்திருந்த கிராம சேவையாளர் , ஹேமபாலவை தாங்கலாக தூக்கி அரவணைத்து பிடித்துக் கொண்டு நடந்தார்.

********
தவராணி , ராஜேசுக்கு தேனீர் தயாரித்து கொடுப்பதற்கு இலெக்ரிக் கேத்தலை கையிலெடுத்தாள். காரின் பொணட்டை திறந்து என்ஜினை நோண்டியதால் , ராஜேசின் கை நிறைய ஒயில் பட்டுக் கறுப்பாகி இருந்தது. அதைப் பார்த்த தவராணி, தேனீர் கோப்பையை கொடுப்பதற்கு முன்னர் கைகளை கழுவச் சொல்ல வேண்டும் என மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

மகன் சதீபனும் , மகள் சுதர்சனியும் இன்னும் சில மணி நேரங்களில் பாடசாலை விட்டு, வீட்டுக்கு வந்து விடுவார்கள். சதீபன் , வரும் போதே சோறு சாப்பிடும் எண்ணத்தோடேயேதான் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பான். சாப்பிட்டதும் , கிரிகெட் மட்டையை எடுத்துக் கொண்டு அயலில் வசிக்கும் நண்பர்களோடு விளையாட என போனால், இருண்ட பிறகே வீடு திரும்புவான்.

சுதர்சனி ,வந்ததும் நேரடியாக அவளது அறைக்கு போய் உடை மாற்றிக் கொள்வதற்கு முன் , உடம்புக்கு ஒரு குளியல் போட்டு விடுவாள். அதன் பின் ஒரு புத்தகத்தை கையிலெடுத்தாள் என்றால் , அவளுக்கு நேரம் போவதே தெரியாது. அவள் அதிகமாக ஜேம்ஸ் ஹாட்லிசேஷின் புத்தகங்களைத்தான் விரும்பி வாசிப்பாள். சாப்பிட வா என்றால் , ஐந்து நிமிடம் பொறுங்கள் என்பாள். அந்த ஐந்து நிமிடங்கள் அடிக்கடி மணித் துளிகளாக நீளும். அப்படியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இழுத்தடித்து, நீண்ட நேரத்துக்கு பின் வேண்டா வெறுப்போடுதான் சாப்பிட வருவாள். அவள் ஒரு புத்தக பூச்சி.

இப்போது வீட்டு தொலைபேசி ஒலித்தது. ராஜேஷ் ரிசீவரை கையில் எடுக்கும் போது ,கைகளில் பட்டுள்ள ஒயில், ரிசீவரில் படாது, விரல்களால் பட்டும் படாமலும் தொலைபேசி ரசீவரை தூக்கி காதோடு வைத்துக் கொண்டார்.

அந்நேரம் பார்த்து டிரைவர் சில்வா , வெளியே நின்ற வானை கராஜில் போடுவதற்காக கேட்டை திறக்கும் சத்தம் கேட்டது. டிரைவர் சில்வா கடையை விட்டு நேரத்தோடு ஏன் வந்தாரோ தெரியாது என, தவராணி தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள் . வானை கராஜினுள் பார்க் பண்ணிய சில்வா , ராஜேஷ் வெளியில் வரும் வரை, வீட்டு கதவோரம் நின்று கொண்டிருந்தார்.

சில்வாவின் வாய், எப்போதும் போல வெற்றிலையை சப்பிக் கொண்டிருந்தது. சில்வா வெற்றிலை சாப்பிடுவது தவராணிக்கு பிடிக்காத ஒன்று. தவராணியோடு எங்காவது போகும் போது சில்வா வெற்றிலை போட மாட்டார். ஆனால் ராஜேஷ் கூட போகும் போது சில்வா வெற்றிலை போடுவதோடு நிற்காமல் , கதவுக்கு வெளியே துப்பவும் செய்வார். அதையெல்லாம் ராஜேஷ் பெரிதுபடுத்துவதே இல்லை. சில்வாவின் வயதுக்கான மரியாதையாக அது தெரியும்.

" யார் கோள் பண்ணினாங்க?" தவராணி , ராஜேஷிடம் கேட்டாள். தவராணியின் கேள்விக்கு , ராஜேஷ் ஒருவித பதிலும் சொல்லாமல் கதவு வரை நடந்து திரும்பினார்.

"உங்களால காரில் போய், பிள்ளைகளை உடனே கூட்டி வர முடியுமா ? நான் சில்வாவோடு , அவசரமாக கடை வரை போய் வர வேணும்." ராஜேஷின் பேச்சில் ஏதோ ஒருவித பதட்டம் தெரிந்தது.

" ஏன் ? பாடசாலை விட இன்னும் எவ்வளவோ நேரமிருக்கு? என்ன அவசரம்?" தவராணியின் பதில் கேள்வியாக வந்தது.

"பரவாயில்லை, பிள்ளைகளை போய் கூட்டிக் கொண்டு வாங்க. யாழ்பாணத்தில் பிரச்சனையாம். இங்கயும் ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. அவசரமாக ஏதாவது என்றால் கடைக்கு ஒரு கோள் எடுங்க. நான் போக முன்ன மிஸிஸ் தேவராசாவிடம், உங்களை ஒருக்கால் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிட்டு போறன்." பேசிக் கொண்டே வேக வேகமாக ராஜேஷ் கைகளை கழுவிக் கொண்டார்.

அதைக் கேட்ட தவராணியின் மனம் வெதுவெதுத்தது. இது என்ன பிரச்சனை என , அவள் கலங்கத் தொடங்கினாள். மனம், நிலை கொள்ள மறுத்தது. படபடத்தபடி இரு பிள்ளைகளையும் அழைத்து வரத் தயாரானாள்.

"பார்வதிக்கு கதவை பூட்டிக் கொண்டு இருக்கும் படி சொல்லுங்கோ. யாரும் வந்தால் கதவை திறக்க வேண்டாம் என்றும் சொல்லுங்கோ." ராஜேஷின் வார்த்தைகள் சற்று கடுமையாக மாறியிருந்தது.

வெளியில் நின்று கொண்டிருந்த சில்வாவிடம், வானை கராஜிலிருந்து வெளியே எடுக்கச் சொன்னார் ராஜேஷ். சில்வா உடனடியாக செயல்பட்டார். வானை வெளியில் எடுத்ததும் கேட்டை மூடிய ராஜேஷ் , பக்கத்து வீட்டு மிஸிஸ் தேவராசாவின் வீட்டை நோக்கி நடந்து சென்று அழைப்பு மணியை அழுத்தினார். அந்த இடைவெளியில் சில்வா சேட் பக்கட்டில் இருந்த வெற்றிலை பொட்டலத்திலிருந்து ஒரு புகையிலையை வாயில் போட்டுக் கொண்டார்.

******
ஹேமபால , கொழும்பு மயானத்தை அடையும் போது மாலையாகி இருந்தது. குமுறி அழும் மனைவியையும் , கடைக் குட்டி மகளையும் பார்க்கும் போதெல்லாம் ஹேமபாலவின் கண்கள் குளமாயின. ஆனாலும் மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, விக்ரமரத்ன ராலகாமியோடு (கான்ஸ்டபிள்) பொரளை மாயானத்தின் பிரதான வாசலை தாண்டி ஹேமபால உள்ளே நடந்தார். ஓய்வு பெற்ற போலீஸ்காரரான விக்ரமரத்ன ராலகாமி உதவியாக வந்தது அவருக்கு பெரியதொரு உறுதுணையாக இருந்தது. உடைந்த மனதோடு இருந்த ஹேமபால பெரும்பாலும் மௌனியாகவே இருக்க முயன்றார்.

மாயானத்தில் பெரும் தொகையில் மக்கள் குழுமி இருந்தனர். இறந்து போன படையினரின் உறவினர்களது கதறல் சத்தம் ஹேமபாலவையும் உலுப்பி எடுத்தது. அடக்க முடியாத கண்ணீர் , ஊற்றாக வழிந்தோடிக் கொண்டிருந்தது. கையிலிருந்த கைக் குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டு ஹேமபால நிலத்தில் உட்கார்ந்தார்.

" ஹேமபால , இன்னும் உடல்களை கொண்டு வரவில்லையாம்." விக்ரமரத்ன ராலகாமி ஹேமபாலவிடம் சொன்னார்.

இறந்து போன இராணுவ வீரர்களின் உடல்களை இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யவென, குழிகள் தோண்டப்பட்டு இருந்தாலும் , இன்னும் ஒரு உடலைக் கூட கொண்டு வராத நிலை காணப்பட்டது.

இராணுவ உடை தரித்த இராணுவத்தினர் உடல்களுக்கு மரியாதை செய்ய தயாராக நின்று கொண்டு இருந்தனர். சூழ்ந்து நின்ற போலீசார் மக்களை ஒழுங்கு படுத்தும் காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். பைல் கவரோடு வந்து கெண்டிருந்த ஒரு இராணுவ அதிகாரி , இறந்து போன இராணுவத்தினரின் உறவினர்களை தேடித் தேடி , விண்ணப்ப படிவம் ஒன்றை கொடுத்துக் கொண்டிருந்தார். அச் சமயத்தில் வோக்கி டோக்கியோடு நின்றிருந்த ஒரு போலீஸ் அதிகாரியை நெருங்கிய விக்ரமரத்ன ராலகாமி , என்ன நடக்கிறது எனும் விபரங்களை அறியும் முனைப்பில் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

உடல்களை கொண்டு வர தாமதமாவதை கண்ட மக்களின் அமைதி , இழந்து கொண்டு வருவதை உணர முடிந்தது. அதே நேரம் தேசிய உடையில் இருந்த ஒருவர் , அமைச்சர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கே வர எண்ணியிருந்தாலும் , அவர்களது பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இங்கு வருவதில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளதாக உரத்த குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் யாரோ சத்தமாக கத்தி, அவரை திட்டுவது கேட்டது.

" ஹேமபால , உடல்களை இங்கு கொண்டு வருவதில் மாற்றம் செய்துள்ளார்களாம். எங்களை ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு வரச் சொல்கிறார்கள். அங்கே வைத்து மகனின் உடலை ஊருக்கு கொண்டு போக தருவார்கள் என்கிறார்கள். இங்கு பிரச்சனைகள் உருவாகலாம் என திட்டத்தை மாற்றியுள்ளார்கள். நாங்கள் ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு போவோம்" விக்ரமரத்ன ராலகாமி சொன்னார்.

மக்களின் சல சலப்புக்குள் யாரோ ஒருவர் ஏதோ கத்துவது கேட்டது. அதிக சத்தத்தில் அதை காதில் வாங்க முடியாத நிலை அங்கே தெரிந்தது. மக்கள் ஆவேசமாகியிருப்பதை மட்டும் உணர முடிந்தது.

" பற நாய்கள் , இவனுகள் சிங்கள பொடியன்களை புலிகளுக்கு இரையாக்கி விட்டு , இப்ப உடலைக் கூட காட்ட மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு பிரச்சனையில்லை. பொடியன்களின் உடலை சிதைத்து இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் பிள்ளைகளின் ஒரு விரலையாவது நாங்கள் பார்க்க வேணும்" யாரோ சொல்வது கேட்டது.

அந்த வார்த்தைகள் ஹேமபாலவின் உயிரை அசைத்தெடுத்தது.

" என்ன? மகனின் உடலை கூட சிதைத்து போட்டார்களா?" ஹேமபாலாவால் வழியும் கண்ணீரை மட்டுப்படுத்த முடியாது தவித்தார். கடைசியாக தங்க மகனின் முகத்தை ஒரு தரமாவது பார்க்க முடியாமல் பண்ணிடுவார்களோ இந்த பாவிகள் என எண்ணி வருந்தினார்.

ஹேமபாலவின் கையை பிடித்துக் கொண்டு விக்ரமரத்ண ராலகாமி , சனத்தை விலத்திக் கொண்டு மாயானத்திலிருந்து பாதையை நோக்கி வெளியே வர முயன்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து ஹேமபாலவின் மனைவியும் , மகளும் கனவுலகில் சஞ்சரிப்பது போல தொடர்ந்து இழுபட்டு வந்து கொண்டிருந்தார்கள்.

மலைபோன்ற உருவத்தையுடைய ஒரு போலீஸ் அதிகாரி, மக்களை கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்த, கடுமையான வார்த்தை பிரயோகங்களை பாவித்துக் கொண்டிருந்தார்.

"டேய், முதல்ல இவனை குழிக்குள் போட்டு மூடுங்கடா." என பின் பக்கத்திலிருந்து ஒரு சிலர் கத்தினார்கள். அதோடு கற்கள் வந்து விழத் தொடங்கின.

அதே கணம் கை துப்பாக்கியொன்றோடு காட்சியளித்த பௌத்த பிக்கு ஒருவர் முன்னால் வந்து , மக்களை தலைமையேற்பவர் போல ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

" நீங்கள் சிங்க இரத்தம் கொண்ட , சிங்க இதயம் கொண்ட சிங்களவர்கள். எங்களுடைய பையன்கள் 13 பேரை யாழ்பாணத்தில் கொன்று குவித்துள்ளார்கள். அவர்களின் கண்களை கூட தோண்டி எடுத்துள்ளார்கள்.

இனியும் அடிமைகளை போல என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீங்கள். அரசால் புலிகளை அடக்க முடியாவிட்டால் , நாங்களாவது தமிழ் புலிகளை அழிப்போம்" என்று கர்ஜித்தார்.

அதோடு கனத்தை மாயானத்தை சுற்றி பெரும் சலசப்பும் , குழப்பமும் உருவாகத் தொடங்கியது.

விக்ரமரத்ண ராலகாமி , ஹேமபால குடும்பத்தோடு , ரேமண்ட்ஸ் மலர் சாலைக்கு வந்தடைந்தார்.

******
இரவு 8 மணி தாண்டியும் கடைக்கு போன ராஜேஷ் வீடு திரும்பாததால் தவராணி கலவரமடைந்து காணப்பட்டாள். தொலைபேசி அலறும் போதெல்லாம், ரிசீவரை ஓடிச் சென்று அவள் எடுத்தது, ராஜேஷின் குரல் கேட்கும் என நினைத்துதான். ஆனால் அது வெவ்வெறு அழைப்புகளாக இருந்தது. இறுதியாக தொலைபேசியில் பேசியது ஜெயபிரகாஷ்.

ஜெயபிரகாஷ் பேசும் போது கொழும்பு முழுவதும் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் , தமிழர்களை , சிங்களவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் , வேகமாக பாதுகாப்பான ஒரு இடத்துக்கு போயிருக்க பாருங்க எனச் சொல்லும் போது ஜெயபிரகாஷ் குரலில் ஒருவித நடுக்கத்தை தவராணியால் உணர முடிந்தது.

நிலமையை கேட்டு அச்சமடைந்த பிள்ளைகள், படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்கள். வேலைக்கார பெண் கூட அச்சமைடைந்து கதவோரத்தில் உட்கார்ந்து புலம்பத் தொடங்கினாள்.

தவராணி கடையில் உள்ள தொலைபேசிக்கு , பல முறை டயல் செய்து கொண்டேயிருந்தாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. அந்நேரம் பார்த்து யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.

வீட்டில் யாருமில்லை என உணர வைப்பதற்காக மின் விளக்குகளை அணைத்து விட்டு , குப்பி விளக்கொன்றை மட்டும் தவராணி ஏற்றி வைத்திருந்தாள்.

தொடர்ந்து கதவு தட்டப்படத் தொடங்கியதும், குழந்தைகள் நடுக்கத்தோடு கட்டில் மூலையில் பதுங்கிக் கொண்டனர். வேலைக்கார பெண் கதறி , புலம்பத் தொடங்கினாள். அவளது செயல் தவராணிக்கு மேலும் கோபத்தையும் , பயந்தையும் அதிகமாக்கியது.

"பார்வதி, கொஞ்சம் வாயை மூடு." தவராணி கடுமையாக அடி தொனியில் கட்டளையிட்டாள்.

ஆனால் கதவு தட்டப்படும் ஓசை மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
" தவராணி ! தவராணி!! நான் மிஸிஸ் தேவராசா." வெளியே இருந்து மிஸிஸ் தேவராசாவின் குரல் கேட்டது. மிஸிஸ் தேவராசாவின் குரலைக் கேட்ட பின் தவராணியின் அச்சம் சற்று தணிந்தது. தவராணி முன் பகுதியின் மின் விளக்கை போட்டு விட்டு கதவை திறந்தாள்.

" கொழும்பில் கலவரம் என்று கேள்விப்பட்டீரா? இங்கு இருக்க வேண்டாம். இங்கிருப்பது ஆபத்தானது. எங்கள் வீட்டுக்கு போவோம்." மிஸிஸ் தேவராசா , தவராணியிடம் பதட்டத்தோடு சொன்னாள்.

"ஐயோ, மிஸிஸ் தேவராசாவின் நான் எப்படி வீட்டை போட்டு விட்டு வருவது. இன்னும் ராஜேஷ் வரவில்லை." எனும் போதே தவராணியின் கண்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீரை சொரிந்தன.

"ராஜேஷ் எப்படியும் வந்திடுவார். இன்று இரவு இங்கு நீங்கள் இருப்பது பாதுகாப்பாக இருக்காது. காடையர்கள் , வீடுகளை கொள்ளை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வாங்க எங்கள் வீட்டுக்கு போவோம். உங்களுக்கு தேவையானதை எல்லாம் கெதியா எடுத்துக் கொள்ளுங்க. முக்கியமான ஏதாவது இருந்தால் அவைகளையும் எடுத்துக்கோங்கோ."

வீட்டில் இருந்த நகைகளையும் , பத்திரங்களையும் , பணம் மற்றும் உடுப்புகளையும் வேக வேகமாக ஒரு பெரிய சூட்கேசில் தவராணி அடுக்கினாள்.

"பார்வதி, பிள்ளைகளின் உடுப்புகளை ஒரு பெட்டியில் போட்டு எடு." தவராணி பார்வதியை அவசரப்படுத்தினாள். நடுக்கத்தோடு இருந்த குழந்தைகள் தவராணியை அணைத்துக் கொண்டார்கள்.

" இரவைக்கு சாப்பிட்டும் இருக்க மாட்டீர்கள். பரவாயில்லை, வீட்டுக்கு போய் ஏதாவது செய்து சாப்பிடலாம். யன்னல் மற்றும் கதவுகளை நன்றாக மூடுங்க. கெதியா போவோம். " மிஸிஸ் தேவராசாவும் அவர்களோடு சேர்ந்து யன்னல்களையும் , கதவுகளையும் மூட உதவினாள்.

******
கடையில் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை , பேலியகொடையில் உள்ள , சிங்கள நண்பனின் கராஜில் கொண்டு சென்று, டிரைவர் சில்வாவின் துணையோடு ராஜேஷ் இறக்கி வைத்தார். பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்து முடிய இரவு 8 மணியை தாண்டி இருந்தது. வெளியில் உள்ள நிலமையில் இரவு நேரத்தில் பயணிக்காது , தங்கி காலையில் போகுமாறு சிங்கள நண்பன் , ராஜேஷிடம் வற்புறுத்திய போதும் , குழந்தைகளும் , மனைவி தவராணியும் தனியாக இருப்பார்கள் என சொல்லி பிடிவாதமாக ராஜேஷ் புறப்பட தயாரானார்.

தன்னோடு உதவிக்கு டிரைவர் சில்வா இருப்பது பயமில்லை என ராஜேஷ் நினைத்தார். ராஜேஷ் வாகனத்தில் எறி , சில்வாவுக்கு போகலாம் என்றார். வாகனம் புறப்பட்டு மருதானை வரை எதுவித பிரச்சனையுமில்லாமல் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே போலீசார் நின்று கொண்டிருந்தாலும் , எவரும் வாகனத்தை நிறுத்தவில்லை.

வாகனம் பெரளை சந்தியை அண்மித்து திருப்பிய போது, வீதி முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட சில்வா வாகனத்தின் வேகத்தை குறைத்தார். வீதியின் இரு மருங்கிலும், தீயில் எரியும் வாகனங்களை அவர்களால் காண முடிந்தது. குடி போதையில் , கத்தி ,வாள் மற்றும் பொல்லுகளோடு கத்திக் கொண்டு சிலர் வாகனத்தை நெருங்கினார்கள்.

சில்வா , வாகனத்தை திருப்ப கடும் முயற்சி எடுத்த போதிலும் , வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்றினால் சில்வாவால் உடனடியாக செயல்பட முடியவில்லை. அதற்குள் காடையர்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள்.

"யார் நீங்க? தமிழா? சிங்களமா?" காடையர் குழுவுக்கு தலைமை தாங்குபவன் போல இருந்தவன் கேட்டான். கேட்டு விட்டு கையிலிருந்து வெளிநாட்டு மதுவை கட கடவென அன்னாந்து குடித்தான்.

இரும்பு பொல்லுகளோடும் , வாள்கள் - கத்திகளோடும் நின்றவர்கள் , வாகனத்தை சுற்றி சுற்றி உள்ளே ஏதாவது இருக்கிறதா என நோட்டம் விட்டார்கள்.

"நாங்கள் சிங்களவர். ஐயாவை வீட்டில் விட போய்க் கொண்டிருக்கிறேன்." சில்வாவின் வாயிலிருந்து தடுமாற்றத்தோடு பதில் வந்தது.

"ஆ... இவரா ஐயா? நீ சிங்களம். ஐயா சிங்களமா?" ஒரு காடையன் கேட்டான்.

ராஜேஷ் பதிலேதும் பேசாமல் கீழே பார்த்தார்.

" நீ சிங்களமா இருந்தால் , புத்த காத்தா (மந்திரம்) ஒன்றை சொல்லும் பார்க்கலாம்?"

ராஜேஷ் நெற்றியிலிருந்து வியர்வை , முகத்தில் வடியத் தொடங்கியது. வியர்வையை கையால் துடைக்கத் தொடங்கிய ராஜேஷின் உடல், இப்போது நடுங்கத் தொடங்கியது.

சில்வா நடுங்கியவாறு பேசத் தொடங்கினான். " இந்த ஐயா சிங்களவர். எங்களை தயவு செஞ்சு போக விடுங்க."

அந்த பேச்சில் கோபமடைந்த காடையன் "அடேய் கிழவா, நீ தமிழருக்கு ....... கொடுக்கிறாயா? இவனைப் பார்த்தாலே தெரியுது, இவன் தமிழன் என்று." எனச் சொல்லிக் கொண்டே , தனது கையிலிருந்த இரும்பு பொல்லால் வாகனத்தின் முன் கண்ணாடி மேல் அடித்தான். அவனது அடியோடு உடைந்த கண்ணாடி துண்டுகள், ராஜேஷ் மற்றும் சில்வாவின் உடல் முழுவதும் சிதறியது.

"டேய், ஐயா இறங்கடா. இல்லாவிட்டால் வாகனத்துக்குள்ளேயே போட்டு உன்னையும் , வாகனத்தையும் எரிப்போம்." என்றவன் , ஒரு கணம் கூட தாமதிக்காமல் வாகன கதவை திறந்து ராஜேசை வெளியே இழுத்து விதியில் தள்ளி விட்டான்.

"ஐயோ ! எங்கட ஐயாவுக்கு அடிக்காதேங்கோ!" சில்வா கையெடுத்து கும்பிட்டு மன்றாடினான்.

"கிழவா, நீயும் சாகாமல் இறங்கடா" என்றவாறு இன்னொருவன் சில்வாவின் கழுத்தை பிடித்து இழுத்து கீழே இழுத்து போட்டு , நாய்க்கு அடிப்பது போல , சில்வாவின் அடி வயிற்றில் கால்களால் உதைக்கத் தொடங்கினான்.

இதற்குள் ஏனையவர்கள் ராஜேசை சூழ்ந்து கொண்டு பொல்லுகளால் தாக்கத் தொடங்கினார்கள். தலையிலிருந்து உடைந்து வழிந்த இரத்தத்தால், ராஜேசின் முகம் முழுவதும் இரத்தம் வடிந்தது. முகத்தில் தொடர்ந்து விழும் தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள , இரு கைகளாலும் ராஜேஷ் முகத்தை மூடிக் கொள்ள முயன்றார். அடிபட்டு வீழ்ந்து கிடந்த சில்வா மெதுவாக ராஜேஷ் இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றார். ஆட்கள் குழுமியிருந்தமையால் சில்வாவால், ராஜேஷின் நிலமையைக் கூட பார்க்க முடியவில்லை. பெரிய பொல்லுகள் மேலெழுந்து தாழ்வதை மட்டுமே சில்வாவால் அவதானிக்க முடிந்தது. அவை கீழ் நோக்கி செல்லும் போது ராஜேஷின் ஓலம் மட்டும், சில்வாவுக்கு கேட்டது.

"ஐயோ, என்ட ஐயா! அவர் என்ட ஐயா!!" என சில்வா தார் வீதியில் தலையை முட்டிக் கொண்டான்.

******
மறுதினம் பகல் பொழுது வரை, ராஜேஷ் குறித்த எவ்வித தகவலும் தெரியாது தவராணி அழுது கொண்டே இருந்தாள். குழந்தைகளும் , தாயோடு சேர்ந்து இடையிடையே அப்பாவை கேட்டு அழுது கொண்டிருந்தனர்.

" அவர் எங்காவது பத்திரமாக இருப்பார். கவலைப்பட வேண்டாம்." என்று தனது மனதில் எழும் சந்தேகங்களை மறைத்தவாறே மிஸிஸ் தேவராசா, தவராணியை ஆறுதல்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

"நோனா, நோனா, இந்த பக்கம் யாரோ கொஞ்சம் பேர் வாறாங்கள்." என்று பார்வதி கத்தினாள்.

மிஸிஸ் தேவராசா , தவராணியையும் , குழந்தைகளையும் , படுக்கை அறைக்கு போகுமாறு சொல்லி விட்டு கதவை தாழிட்டவாறு , கதவு துளையால் வெளியே அவதானித்தாள்.
நூறு பேருக்கு மேல் அவளது வீட்டை நோக்கி வந்து, முற்றத்தில் குழுமுவதைக் கண்டாள். அங்கே நின்ற நடு வயதையொத்த ஒருவன் , கூட்டத்தை விட்டு , கதவை நோக்கி வருவதை கண்டாள். வந்தவன் வேகமாக கதவை தட்டினான். எது வந்தாலும் முகம் கொடுக்கும் உந்துதலோடு, வேகமாக மூச்சை இழுத்து விட்ட மிஸிஸ் தேவராசா, அச்சத்தை வெளிக் காட்டாமல் கதவை திறந்தாள்.

கதவை திறந்த மிஸிஸ் தேவராசா, அவன் பேச முன்னரே " இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்றாள்.

"நோனா ,நீங்க வீட்டுக்குள் ஒழித்து வைத்திருக்கும் தமிழங்களை வெளியில் விடுங்க." கதவருகே நின்றவன் கடும் தொனியில் சொன்னான். அவன் கையில் ஒரு வாள் மின்னியது. அவன் முகத்தில் தெரிந்த வெட்டுக் காயம், அவனை பயங்கரமானவன் என்பதை உணர்த்தியது.

"இங்க ஒரு தமிழரும் இல்லை. தயவு செய்து போங்க. இல்லாவிட்டால் நான் பொலீசுக்கு போவேன்."மிஸிஸ் தேவராசா அதட்டலாக சொன்னாள்.

" நோனா, நீங்க எங்க வேண்டுமானாலும் போங்க. ஆனால் வீட்டுக்குள்ள ஒழித்து வைத்துக் கொண்டுள்ள தமிழங்களை வெளியில் விடாது போனால் , முழு வீட்டுக்கும் நெருப்பு வைப்போம்" அவன் சொல்லிக் கொண்டே இன்னொருவன் கையிலிருந்த பெட்ரல் கானை கையில் வாங்கினான்.

சுற்றி நின்றோர் சந்தோச கோசமிட்டனர். பக்கத்து வீடுகளிலிருந்தோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், ஒரு வார்த்தை கூட பேசாது நின்று கொண்டிருந்தனர்.

அந்நேரம் பார்த்து எங்கோ இருந்து ஒரு வயதான பௌத்த பிக்கு , அங்கு நின்றோரை தள்ளிக் கொண்டு முன்னே வந்தார். பிக்குவானவரை பார்த்ததும், மிஸிஸ் தேவராசாவுக்கு ஒரு புறம் புதுமையாகவும் , மறுபுறம் ஆறுதலான நம்பிக்கையொன்றும் ஏற்பட்டது.

அவர் சந்தியில் உள்ள விகாரையில், உடல் நலமில்லாமல் இருந்த ஜீலாங்கார பௌத்த பிக்குவானவர். இங்கே எப்படி வந்தார் என வியந்தாள்.

"நீங்கள் என்ன மிருகங்களா? என்ன செய்யப் போறீங்க? புலிகள் இருப்பது யாழ்பாணத்தில். இங்க இருக்கிற அப்பாவிகளை கொல்லுறதில நீங்க என்ன லாபம் அடையப் போறீங்க?" என அவர்களை நோக்கி கடும் தொனியில் சத்தமிட்டார்.

"இங்க இருக்கிற தமிழங்கதான் , புலிகளுக்கு காசு அனுப்புறாங்க." கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் பிக்குவை நோக்கி சொன்னான்.

பௌத்த பிக்கு அவனை சுட்டெரிப்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

" காசு அனுப்புறதை நீ பார்த்தியா? ம் .... பார்த்தால் கொழுத்து." பௌத்த பிக்கு அவனுக்கு இடம் விட்டு நகர்ந்து நின்றார். எவரும் பேசவில்லை.

" புண்ணை நோண்டி காணும் சுகத்துக்காக நீங்கெல்லாம் அலையுறீங்க. இதுகளுக்கெல்லாம் எதிர் காலத்தில் நீங்கள் அனுபவிக்க வேணும் என்பதை மறக்க வேணாம். உங்களுக்கும் , உங்களுடைய பிள்ளைகளுக்கும் இந்த பழி பாவம் சும்மா விடாது , சும்மா கிடக்கும் எங்களுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும். இந்த வினை ஒருத்தனையும் சும்மா விடாது" பௌத்த பிக்கு வேதனை தோய்ந்த குரலில் சத்தமாக சபிக்கத் தொடங்கினார்.

அதன் பின் அவர்களால் அங்கு நிற்கும் தைரியம் இல்லை. மெதுவாக கலையத் தொடங்கினார்கள்.

*******
தனது மகனது துவச நிகழ்வுக்கு பிறகு ஹேமபால , தனது மகனின் சம்பள பணம் மற்றும் மீதிக் கொடுப்பனவுகள் குறித்து அறிந்து கொள்ள கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கு போனார்.

முழு கொழும்பு நகரையும் பார்த்த போது , பேயாட்டம் போட்டது போல நகரே காட்சியளித்தது. இடையிடையே கடைகளும் , வீடுகளும் எரியுண்டு காணப்பட்டன. முழு நகரே வெறிச்சோடிப் போய் இருந்தது.

தாக்குதலுக்கு உள்ளான சில்வா வைத்தியசாலையை விட்டு வெளியேறி , தனது முதலாளியின் வீட்டை நோக்கி, முதலாளியின் குடும்ப நிலையை அறிய போனார். கதவுகளும் , யன்னல்களும் மூடப்பட்டு வீடு பாழடைந்தது போல தெரிந்தது. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்ற சில்வா, முதலாளியின் குடும்பம் குறித்து விசாரித்து பார்த்தார்.

அவர்கள் மிஸிஸ் தேவராசா வீட்டுக்கு போய் கேட்கும்படி சொல்ல, மிஸிஸ் தேவராசா வீட்டை நோக்கி சில்வா நடந்தார்.

தலையில் கட்டு போட்டிருந்த சில்வாவை பார்த்தும் "சில்வா என்ன ஆச்சு?" மிஸிஸ் தேவராசா கேட்டார்.

"நோனா , ஒரு பெரிய கொடுமை நடந்தது. என் கண் முன்னாலேயே ராஜேஷ் ஐயாவை அடித்துக் கொன்றார்கள். எனக்கும் அடித்தார்கள். நான் இழுகி இழுகி மருதானை பக்கம் போக முயன்ற போது , போலீஸ் ஜீப் ஒன்றில் வந்த போலீசார் என்னை வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்ந்தாங்கள். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து இன்றைக்குதான் டிக்கட் வெட்டினாங்கள். இப்ப தவராணி நோனாவும் , பிள்ளைகளும் எங்க?" என்ற சில்வா, பதிலுக்காக காத்திருந்தார்.

மிஸிஸ் தேவராசா ஒரு பெருமூச்சை விட்டார். "ராஜேஷ் ஐயாவின் சாவை போலீசார் வந்து சொன்ன பிறகுதான் தவராணிக்கு தெரிய வந்தது. காடையர்கள் வாகனத்தையும் கொழுத்தி போட்டாங்கள். ரெண்டு நாளைக்கு முன்னதான் தவராணியும் , பிள்ளைகளும் யாழ்பாணத்துக்கு புறப்பட்டாங்கள். அடுத்த மாசம் கனடா போக போறாங்கள். இனி இலங்கையில் இருக்க மாட்டாங்க."

வயதான சில்வா கண்களை இறுக மூடிக் கொண்டார். அவர் இதயத்திலிருந்து ஒரு பெருமூச்சு வெளி வந்தது.

"நடந்தது பெரியதொரு அநியாயம். அழகான ஒரு குடும்பத்தை, இந்த மிருகங்கள் அழித்து போட்டாங்கள். இதையெல்லாம் பார்க்க நாங்களும் உயிரோடு இருக்கிறோமே" என்ற போது சில்வாவின் கன்னம் கண்ணீரால் நனைந்தது.

"நான் ஊருக்காவது போறேன். இருளுவதற்கு முன்னம் போக வேணும் நோனா"

விரக்தியின் விளிம்போடு, பதிக்கு கூட காத்திராத சில்வா தெருவுக்கு இறங்கி நடக்கத் தொடங்கினார்.

சில்வா போகும் திசையை கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் மிஸிஸ் தேவராசா நின்று கொண்டிருந்தாள். சில்வா நடந்து போகும் திசையில் , எரிந்து போன வீடுகளும் , கடைகளும் , அவள் கண்களுக்கு எரி மலையொன்று வெடித்து சிதறியுள்ளதை போல தெரிந்தது. அந்த வேதனையில் , அவள் இதயம் விம்மி ஓய்ந்தது போல ஒரு பெருமூச்சை வெளியே தள்ளியது. அந்த மூச்சுக் காற்றும், எரியுண்ட நகர் போலவே, தீயின் சூட்டோடு வெளியானது.

எழுத்தாக்கம்: மருத்துவர் ருவன் எம். ஜயதுங்க
தமிழாக்கம் : அஜீவன்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com