Sunday, June 30, 2013

கற்பனையைத் தாண்டிய உண்மை! நாய் மனிதன்! (படங்கள் இணைப்பு)

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாய்கள் மீது கொண்ட அதிக பாசத்தால் தனது முகத்தை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து நாயாக மாறியுள்ளார். இறந்த நாய் ஒன்றின் மூலமே தனது முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார். அறுவை சிகிச்சை முடிவடைந் துள்ள நிலையில் "நாய் மனிதன்" என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

Read more...

Saturday, June 29, 2013

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதாம். - சுரேஷ்

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைபின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித் துள்ளார்.

அத்துடன் இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர் எனவும், ஆனந்த சங்கரி கலந்துகொள்ளவில்லை எனவும், இருந்தபோதிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்தார் என, சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

Read more...

செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 85 வயதுப் பாட்டி!

85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த 85 வயதுடைய சரஸ்வதியின் கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

தற்போது தனிமையில் வசித்து வரும் சரஸ்வதி பாட்டி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது சாப்பாடே செங்கல் மட்டும் தான், இதனால் இவரை செங்கல் பாட்டி என்றே அழைக்கின்றனர்.

தினமும் 1 முதல் 3 வரையிலான செங்கல்லை சாப்பிடுகிறார். சிறுவயதில் செங்கலை சுவைக்க தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட தொடங்கி, தற்போது கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோரும், திருமணத்திற்கு பிறகு எனது கணவரும் என்னை திட்டினர். பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

Read more...

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் பலி!

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய காலி லபுதுவ பகுதி விகாரை யொன்றைச் சேர்ந்த பிக்குவை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், குறித்த நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமளவுக்கு இலங்கை மிகப்பெரிய நாடு கிடையாது! - பீலிக்ஸ்

இலங்கைக்கு தேவையானது காணி பொலிஸ் அதிகாரங்கள் அல்ல எனவும், பொருளாதார நல்லிணக்கமே இலங்கை தேவை எனவும், இலங்கை காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய நாடு கிடையாது என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை பரவலாக்குவதால் தேவையற்ற சட்டங்கள் மக்கள் மீது சுமத்தப்படும் எனவும், அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒரு வீட்டின் பிள்ளைகளாகவும் ஒரு தேசிய கீதத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

LLRC யை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் வழங்கும்.- கமலேஷ்

கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருமென அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்ஷியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படாமை குறித்து விமர்சிப்பதா அல்லது கூடிய வேறுபாடொன்றை ஏற்படுத்துவதா என்பதே சர்வதேச சமூகத்தின் கேள்வியாக உள்ளதாகவும், பொதுநலவாய அமைப்பானது இவற்றில் பின்னதையே பார்கின்றது எனவும், பொதுநலவாய அமைப்பின் உதவி கிடைக்கப் போகும் விடயங்களை இலங்கை அரசாங்கம் இப்போதும் கூட இனங்கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமைகள், ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் சமூகங்களுக்கிடையே அன்னியோன்னிய கண்ணியம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பொதுநலவாய விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதில் தாங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக ஷர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுநலவாய மென்வலு மற்றும் திரைமறைவுப் பங்களிப்புக்களுக்கு குறுகிய காலத்தில் எதிர்மறை விளைவுகள் அடிக்கடி ஏற்படலாம். ஆயினும் வெற்றியானது உண்மையான முன்னேற்ற வடிவத்தில் நீண்ட காலத் தவணையில் மாறாத தன்மையுடன் சாதகமாகவே ஈட்டப்பட்டு வருகின்றதெனவும், வெளிநடப்புச் செய்வதும் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதும் பொதுநலவாய அமைப்புக்கு நிரந்தர அவமானத்தையே தேடித்தருமென, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

Read more...

பொலிஸாருக்கு கப்பம் கொடுத்து கள்ள மண் அகழும் கள்வன்.

அரச அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றேல் ஜனாதிபதியிடம் முறையிடுவோம். துண்டு பிரசுரம்.

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு வெல்லாவெளி பொலிசார் துணை போவதாக போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்தல் என்ற தலைப்புடன் போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் என்ற உரிமை கோரலுடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டு வெளியாகி இருக்கும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

எங்கள் பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. ஆற்று மணல் ஏற்றுதல், சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் ஏற்றுதல் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆற்றுமணல் ஏற்றுவதற்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படுகின்ற அனுமதிபத்திரம் தொடர்ச்சியாக கணேசபுரத்தைச் சேர்ந்த இளஞ்செளியன்(குயில்) என்பவர் EP RC 6440 இந்த இலக்க உழவு இயந்திரத்திற்கே கொடுக்கப்படுகின்றது. இவர் 03 லோட் மணல் ஏற்றுவதற்கு அனுமதியினைப்பெற்று பொலிசாருக்கு பணத்தைக் கொடுத்து இரவு பகலாக தொடர்ச்சியாக நான்கு ஐந்து நாட்களுக்கு மணல் ஏற்றுகின்றார்

இவருக்கு இவ்வாறான சட்டவிரோத செயலை செய்வதற்கு பொலிஸார் காவல் கொடுக்கினறனர். இதே போலத்தான் மரமும் வெட்டுகின்றார். இவரால் மணல் ஏற்றுவது மக்கள் பிரயாணம் செய்யும் இடங்களில் வேளாண்மை செய்யும் வயல்களில் இதை தட்டி கேட்டால் பொது மக்களுக்கு தகாத மிக கேவலமான வாத்தை பிரயேகத்தால் ஏசுகிறார் இவருக்கு வெல்லாவெளி பொலிஸார் பக்கபலமாக இருப்பதால்தான் இத்தனை சட்டவிரோத செயல்களையும் தைரியமாக செய்கின்றார் என அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

இது தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு பல முறை அறிவித்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவரும் இவ்வாறு நடவடிக்கை எடுக்காது இருப்பது பொது மக்களாகிய எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது இவரும் இவனிடமிருந்து பணம் பெறுகின்றார் போல. இதனால்தான் பிரதேசசெயலாளர் இச் சட்டவிரோத செயலை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் எனவும் மேலும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரனை செய்து இந்த இலக்கத்தையுடைய உழவு இயந்திரத்திற்கு அனுமதி வழங்குவதை நிறுத்த ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இதற்கு சரியான நியாயம் தங்களால் கிடைக்காத பட்சத்தில் எமது மக்களின் விடியலுக்காக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதைத்தவிர எமது மக்களுக்கு வேறு வழி இல்லை எனவே இந்த கடிதத்தை உதாசீனம் செய்யாது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொள்கினறோம் என மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு போரைதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

யு.எம்.இஸ்ஹாக்


Read more...

சாட்டி கடற்கரை பள்ளிவாசல் தாரைவார்க்கப்படுகின்றதென மக்கள் விசனம்! (படங்கள் இணைப்பு)

நிர்வாகத்தின் தன்னிச்சையான சில முடிவினால் வேலணை பிரதேச சபைக்கு பள்ளிவாசல் சூழல் ,வருமானம் ஆகியன தாரைவார்க்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். மாவட்டத்தில் வேலணை பிரதேசத்திற்குட்பட்ட பிரிவில் முஸ்லிம்கள் அதிகமாகசெல்லும் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை பள்ளிவாசல் இவ்வாறான நிலைமையினை எதிர்கொண்டுள்ளது.

யாழ் முஸ்லிம்கள் முதல் வெளிமாவட்ட முஸ்லிம்கள் தங்களது பொழுது போக்குக்கிற்கு தினசரி இப்பள்ளிவாசல் சார்ந்த கடற்கரை பிரதேசத்திற்கு வந்துசெல்வர்.

இன்று சுதந்திரமாக வெள்ளைக் கடற்கரை பிரதேசத்தில் முஸ்லிம்கள் நடமாட முடியாத வகையில் பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகள் தடையாக உள்ளன.

பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என தங்களை கூறிக்கொள்வோர் சிலர் வெளியூர்களில் இருந்தவிட்டு இவ்வாறான தேவையற்ற செயலில் ஈடுபட முயல்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் இல்லாத சில கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அங்கு வந்த முஸ்லிம் மக்கள் பலர் கருத்து தெரிவிக்கையில்:

‘பரம்பரை பரம்பரையாக பள்ளிவாசல் முன் உள்ள கடற்கரையிலே நீராடி வருகிறோம். இது எங்களுக்கு பாதுகாப்பான இடமாகும். இதில் வலைகளை வைத்துவிட்டு பள்ளிவாசல் புனிதம் பேணப்படவில்லை என நொண்டிச் சாட்டுகளை முன்வைத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தேவையற்ற விடயமாகும். எனவே இது சம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாக சபை மக்களுடன் கலந்துரையாடி சிறந்த முடிவுகளை எடுக்கவேண்டும்’ என்றனர்.

இது குறித்து பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் தெரிவிக்கையில்:

‘கட்டுப்பாடு கொண்டு வரக் காரணம் தற்போது பள்ளிவாசல் கடற்கரையை அண்டிய பகுதியில் போதையில் சிலர் நடமாடுகின்றனர். இவர்களால் எமது பள்ளிவாசலின் புனிதத்தன்மை இழக்கப்படுகிறது. மேலும் இங்கு முஸ்லிம் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அந்த இடங்களில் நீராடுவதில்லை. இது தவிர ஒதுக்கப்பட்ட இடங்களில் நீராடாமல் தடைசெய்யப்பட்ட இடங்களில் நீராடுகின்றனர். இதனால் சீர்கேடுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. கடலில் மீனவர்களால் வைக்கப்பட்டுள்ள வலைகள் நீராடுபவர்களால் சேதமாக்கப்படுகின்றன. இதனால் தான் இந்நடவடிக்ககை எம்மால் எடுக்கப்பட்டது’ என்றார்.

இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற இவர்கள் மக்களின் நலனில் கவனமெடுத்து பின்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் அபிப்பிராயமாகும். இதுவிடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனமெடுத்து ஆவன செய்வதுடன், மும்மொழிகளிலும் அதனை மேற்கொள்வது அவசியமாகும் என்பதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(பாறூக் சிகான்)


Read more...

நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை சுற்றி ஆர்ப்பாட்டம்!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண் டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை அண் மித்த பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான தொழிற்சங்க மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிசக் கட்சி உறுப்பினர்கள், மற்றும் மாணவர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விற்க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நெல்சன் மண்டேலாவை பார்வையிட வரக்கூடும் என்ற நோக்கில் இந்த ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை கொள்கையானது, சுயநலமானதும் ஒடுக்குமுறைகள் நிறைந்ததாக உள்ளதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயமானது , ஏமாற்றமளித்துள்ளதெனவும் தமது தலைவர் மண்டேலாவிற்கும் பராக் ஒபாமாவின் விஜயமானது ஏமாற்றத்தையே அளிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி, நெல்சன் மண்டேலாவை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவரை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுப்பதற்கும் இது தருணமில்லை எனவும் அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம்!

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி யொன்றின் மீது கண்டி, தலாத்துஓயா பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவுநேர ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தே கத்தின் பேரில் லொறியொன்றை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளளனர். எனினும் குறித்த லொறியின் சாரதி லொறியை நிறுத்தாமல் சென்றதாகவும், அதனையடுத்து பொலிஸார் லொறிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து லொறியை நிறுத்திவிட்டு சாரதி தப்பியோடியுள்ளதாகவும், லொறியிலிருந்த இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த லொறியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் செல்லப்பட்ட 24 மாடுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

சுவிஸ் வங்கி ஒன்றில் உள்ள புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் சொத்துக்களை பெற அரசு நடவடிக்கை!

புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவர் ஒருவர் தெரிவித்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுவிஸ் வங்கியொன்றில் புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பினர் சேகரித்த நிதி மற்றும் சொத்துக்களே இந்த சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் குறித்த இந்த வங்கியின் பெயரையும் இலங்கை அரசாங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் புலனாய்வு அமைப்பின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிப்பதுடன் கொழும்பில் புலிகளுக்கு சொந்தமாக இருந்த 90 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் இரண்டு ஏற்கனவே முடக்கப்பட்டடை குறிப்பிடத்தக்கது.

Read more...

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய கத்தரின் கியு பெக்கரருக்கு ஆயுள் தண்டனை!

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கத்தரின் கியு பெக்கர் என்ற 50 வயதான பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கத்தரின் கியுவின் கணவனான 60 வயதுடைய டொபு கத்தரினைவிவாகரத்து செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆத்திரத்தில் கத்தரின் கணவனுக்கு தூக்க உணவில் தூக்க மாத்திரையை கொடுத்து அவரது ஆணுறுப்பை 10 இன்ச் அளவான கத்தியால் வெட்டி குப்பையில் வீசியுள்ளார்.

பின்னர் கத்தரினே குற்றத்தை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கத்தரின் மீது பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பினை நேற்று (28) வழங்கிய நீதிமன்றம் கத்தரினுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதன்போது கத்தரின் சட்டத்தரணி கத்தரினுக்கு சிறுவயதிலிருந்தே மனநிலை பாதிப்புள்ளதாகவும் அவரது கணவனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் வாதாடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

அசாத் சாலியின் ஓட்டமாவடி வருகைக்கு கடும் எதிர்ப்பு! விடுதியில் கழிவு எண்ணெய் தாக்குதல்!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, ஓட்டமாவடிக்கு இன்று வருகைதரவிருந்த நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலி தலைமையில் இன்றுமாலை கூட்டம் நடத்தவிருந்த விடுதி மற்றும் விடுதி உரிமையாளரின் வீடு ஆகியவற்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் ஊற்றி யுள்ளனர்.

அசாத் சாலி தலைமையில் குறித்த விடுதியில் இன்று மாலை 4.00 மணிக்கு கூட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி மீறாவோடை வீதியிலுள்ள மன்னுஸ்ஸல்வா எனும் தங்கு விடுதி யின் மீதே இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Read more...

8000 இலங்கை பணியாளர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை! - சவூதி

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மேலும் 8000 இலங்கை பணியாளர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதற்காக சவூதி அரசாங்கம் பொது மன்னிப்புக்காலம் ஜுலை 3 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அதனை நீடிப்பது குறித்து சவூதி அதிகாரிகளுடன் பேச உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பணியாளர்களுக்கு நாடு திரும்புவதற்காக விஸா பெற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாகவும் அதுவரை அவர்கள் தாம் தங்கியுள்ள இடங்களிலே தங்கியிருக்குமாறு அறிவித்துள்ளதாகவும் சில பணியாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை சவூதி அரேபியாவில் இருந்த சுமார் 2200 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Read more...

பிரிட்டன் பிரஜையின் கொலை வழக்கில் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சாட்சி யார்? – நீதிமன்றம்

பிரிட்டன் பிரஜையைக் கொலை செய்தமை, மற்றும் அவரின் ரஷ்ய நாட்டுக் காதலிக்கு உடல் ரீதியான இம்சைகளை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தங்காலை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள், சட்ட மாஅதிபரின் அதிகாரங்களுக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்கமைய நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அஜரான சந்தேகநபர்களை மீண்டும் நவம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், தங்கல்ல பிரதேச சபை தலைவர் உட்பட எட்டு சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டில், அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் சாட்சியாளர்கள் யாரெனக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம மாஜிஸ்ரேட் கிஹான் பிலபிட்டிய இரகசியப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

Read more...

புலிகளின் கடற்படை தளபதி சூசையின் வீடு(படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கடல் படை தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு இல்லம் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடாக இருப்பதுடன் இந்த வீட்டில் நிலக் கீழ் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வீட்டில் தான் சூசை தனது குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் தனது தேவைக்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளுவதற்கான பெரிய தோட்டமும் காணப்படுகிறது.

அது மட்டும்லாது இந்தவீட்டிலும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பதுக்கு குழியில் இருந்து தான் பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் ஏனைய தளபதிகளுடன் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் பார்வையிட சுற்றுலாப்பயணிகள் பார்வையிட தற்போது அனுமதிக்கப்படுகிறது.

Read more...

புலி விமானங்களின் பாதுகாப்பு பதுங்கு குழிகள்(படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இரணைமடு விமான ஓடுபாதைக்கு அருகில் எவ்வாறு தமது விமானங்களை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுங்கு கழிகளுள் பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற உண்மைகள் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிளின் விமானங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான மறைவிடம் கொங்கிறீற் சுவர்களால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழியும் பாதுகாப்பு குழுக்கு மேல் எதுவும் இல்லாதது போல் மரங்களையும் நட்டிருப்பதுடன் குழிகளுக்க உருக்கினால் ஆக்கப்பட்ட பாரமான கதவுகளையும் கொண்டிருந்தன.

தற்போது இந்த விமானத்ளம், ஓடுபாதை இலங்கை விமானப் படையால் பின்பு மேம்படுத்தப்பட்டது. உள்ளூர் விமான நிலையங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு காட்டப்படுகின்ற புகைப்படங்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எடுக்கப்பட்டவை.

Read more...

பழைமையான மூன்று மம்மிக்கள் கண்டுபிடிப்பு

லுல்லைலிகோ மலையில் இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மம்மிகளை அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகாமலும் இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

Read more...

வடிவேலுவின் ரசிகர்களைப்போல் செயற்படும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும்போது, ஐயா வெளிக்கிடுறார்... ஐயா வெளிக்கிடுறார் என்று தண்டோராப் போடாத குறையாக என்னமோ பெருஞ்சாதனை நிகழவிருப்பதாக எழுதித்தள்ளும் தமிழ் ஊடகங்கள், அவர்கள் திரும்பிவரும்போது, போய் என்ன சாதித்துவிட்டு வருகிறார்கள் என்பது பற்றி மூச்சு விடுவதில்லை.

இலங்கை அரசை ஒருகை பார்க்கப்போவதாக மன்மோகன்சிங் உறுதியளித்தார் என்றோ ஒபாமா கையிலடித்துச் சத்தியம் செய்தார் என்றோ ஒரு பொத்தாம் பொதுவான அறிவிப்பை விட்டால் முடிந்துவிடுகிறது அலுவல்.

இந்தியப் பிரதமரோ அமெரிக்க ஜனாதிபதியோ இந்த அறிவிப்புகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் அதனால் இஷ்டத்திற்கு எதையாவது விளாசி மக்களைப் புல்லரிக்கவைத்துப் பிழைப்புப் போகிறது தலைவர்களுக்கு! அவர்களும் பெரியமனிதத் தோரணையோடு என்ன கதைத்தது என்பதை வெளியிடாமல்... இவர்களும் தேள்கடி வாங்கிய திருடர்கள்போல் பம்மியபடி திரும்பிவருகிறார்கள் என்றால், ஏதோ முறையாக டோஸ் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பழைய அனுபவங்களை வைத்து நாமாக ஊகித்துக் கொண்டுவிட வேண்டியதுதான்.

இத்தனை காலமாக இவர்களது திருட்டுத்தனங்களைப் பார்த்து வருகிறவர்களுக்கு, இவர்கள் வீரவசனங்களைச் சற்று நிறுத்திக் கமுக்கமாயிருக்கிறார்கள் என்றால் போன இடத்தில் ஏதோ கசப்பு மருந்தை விழுங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்தானே! கூட்டமைப்பினருக்குக் கசப்பு மருந்து எதுவென்றால், யதார்த்தச் சூழலுக்கேற்பப் பேசுங்கள் என்ற அறிவுரைதான்.

கூட்டமைப்பினரின் நிலையை யோசித்துப் பாருங்கள். 13ஆவது திருத்தம் கால்தூசுக்கும் பெறுமதி இல்லை என்றே மக்களுக்கு அடித்துச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இப்போ, அதிலிருந்தே பேச்சை ஆரம்பியுங்கள் என்று சொன்னால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? தமிழ்மக்களை ஆவேசப்படுத்தத் தக்கதாய் அரசு ஏதாவது செய்யாதா என்று கமுக்கமாய்க் காத்திருக்கத்தானே வேணும்?

பதின்மூன்றாவது திருத்தத்தை இலங்கை அரசு வலுக்குறைப்புச் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று அழுதுகொண்டே சென்றவர்களிடம் இந்தியாவேறென்ன சொல்லியிருக்கப் போகிறது? அங்கே அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களே கணிசமானோர் உறுதியாக நின்று வலுக்குறைப்பை நிறுத்தியிருக்கிறார்கள். போங்கள், தெரிவுக்குழுவிற்குப் போய் அவர்களுடன் இணைந்து பேசுங்கள். பேச்சை ஆரம்பியுங்கள். பதின்முன்றாவது திருத்தத்தை வலுவாக்கிக் கொள்ளலாம், போங்கள் என்று வழக்கம்போல இதமாகச் சொல்லியனுப்பியிருப்பார்கள்.

இவர்களும் வழக்கம்போல மீசை மண்ணைத் தடவி விட்டுக் கொண்டே, வலுக்குறைப்பைத் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் உறுதி என்ற வெற்றி அறிவிப்பை அங்கிருந்தபடியே தங்கள் கட்சிப்பத்திரிகைக்குத் தெரிவித்துவிட்டு வந்திறங்கியிருக்கிறார்கள். இனி, வரும் செப்டெம்பர் தேர்தலுக்கு மேடைகளில், ஒற்று மையாக உங்கள் வாக்குப்பலத்தை நமக்கே தந்து காட்டினீர்கள் என்றால், தேர்தல் முடிந்த மறுநாள் மன்மோகன்சிங் வந்திறங்குவார். மகிந்தவின் காதை முறுக்கிக் காரியம் முடித்துத் தருவார்... ஒற்றுமை, அதுதான் முக்கியம். ஒற்றுமையை நீங்கள் காட்டாவிட்டால் தமிழினமே தொலைந்தது... என்று பயங்காட்டித் தமிழ்மக்களைப் பதைபதைக்க வைப்பார்கள்.

போன வருசம் கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்தவுடன் வந்திறங்கப் போவதாகச் சொன்ன சர்வதேசம் இன்னும்தான் வரக்காணோமே என்று நமது மக்கள் யாரும் கேட்கப் போவதில்லை. அப்படியே கேட்டாலும், அது போன வருசம்... இது இந்த வருசம் என்பதை அவர்கள் சொல்லாமலே மக்கள் தாமாக புரிந்துகொண்டுவிடுவார்கள். வைகைப்புயல் வடிவேலுவின் ரசிகர்கள்தானே நாமெல்லோருமே!

Read more...

விநாயகபுரத்தில் நடைபெற்ற "பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" நிகழ்வு (படங்கள் இணைப்பு)

"பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப் பொருளில் ஒகஸ்பாம் நிறுவனத்தினரின் நிதியுத வியின் கீழ் சுவாட் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் சமுதயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (27 ) மாலை 2.00 மணியளவில்விநாயகபுரம் சுப்பர் ஸ்டார் மைதான அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிகள், AWF நிறுவன அதிகாரிகள், உட்பட சொண்ட் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு கலை நிகழ்சிகளும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

Read more...

யாழ் ஒஸ்மானியாப் பாடசாலை நிர்வாகத்திற் கெதிராக துண்டுப்பிரசுரம்-பாறூக் சிகான்

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நிலவும் நீண்ட கால நிர்வாகப்பிரச்சினையை வலியுறுத்தி நேற்று (28.06.2013) அநீதிக்கான மக்கள் முன்னணி எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது. நேற்று ஜும்மா தொழுகையின் பின்னர் இப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதனை காணமுடிந்தது.

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிபர் மற்றும் ஆசிரியர் இருவருக்கிடையில் நிலவும் இப்பிரச்சினை தொடர்பில் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மாணவர்களின் கல்வியை பாதுகாப்போம் எனும் தலைப்பில், யுத்தத்தின் பின்னர் மீளக்குடியேறி கல்வியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் எமது மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை இனிமேலும் பொறுத்திருந்து பார்க்க முடியாது. ஏனெனில் இப்பிரச்சினை கடந்த மூன்றரை வருடங்களாக இவ்விருவருக்கிடையே இடம்பெறுகின்றது.

இப்பிரச்சினையை அறிய ஆர்வப்படும் மக்கள், ஊடகவியலாளர்களை இவ்விருவரும் தங்களது இஸ்லாமிய போதனையால் வசப்படுத்தியுள்ளனர் .

மேலும் இதனை ஆராய வலயக்கல்வி, கல்வித்திணைக்களம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அப்பாவி மாணவர்கள் இருவராலும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது இதில் கூறப்பட்டுள்ளது. தங்களது பகையை வைத்துக்கொண்டு தங்களுக்கென சில மாணவர்களை உள்வாங்கி மாறி மாறி ஒருவரை ஒருவர் தூற்றுவதாகவும் அதிபர் தனது அதிகாரத்தை பல முறை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலையின் நிர்வாகப் போக்கு தொடர்பில் இவ்வாறு உள்ளது. பாடசாலையில் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதை இடைநிறுத்தி நூலகத்தில் பத்திரிகை பார்ப்பதும் ,சிலர் மணிக்கணக்கில் கைத்தொலைபேசியில் உரையாடுவதையும் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை பெற்றோர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் ஆகியன அதிபர் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிற்றூண்டி உணவு ஊழல் மறைத்தமை, தரமற்ற ஈச்சம்பழம் மாணவர்களுக்கு கிடைத்ததை மறைத்தமை, பாடசாலை பௌதிக வளப்பற்றாக்குறையை மறைத்தமை தொடர்பாக அப்பாடசாலை அதிபர் முபாறக் மீது பாடசாலை பெற்றோர் சங்கம், பழைய மாணவர் சங்கம ஆதாரத்துடன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களாகும்.

இப்பிரச்சினையை தீர்க்க கொழும்பில் இருந்து குற்றப்புலனாய்வு துறையை எதிர்பார்க்கின்றதா? எனக் கேட்டுள்ளதுடன் எதிர்வரும் நோன்பு காலத்திற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை பெற முயற்சிக்க வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இல்லாவிட்டால் மாணவர் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என மேற்கோள் காட்டி துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மக்கள் சிலர் அவ்விடத்தில் கருத்து தெரிவிக்ககையில் நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்த பாடசாலையில் நிலவி வருகிறது.இடையில் அப்பாவி மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் .இல்லையெனில் பொதுமக்களாகிய நாங்கள் இதில் தலையிடும் தேவை ஏற்படும் என்றனர்.

Read more...

Friday, June 28, 2013

Google, Airtel இணைந்து வழங்கும் இலவச இணையம்!

கையடக்கத் தொலைபேசி மூலமாக இணையதளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளன.

இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகுள் (Google), ஜிமெயில் (gmail), கூகுள்+ (Google+) ஆகிய சேவைகளை எந்தவித டேட்டா கட்டணமும் இன்றி பெற முடியும். இணையதளங்களின் முதல் பக்கத்தை இலவசமாக பார்க்க முடியும். எனினும் இச்சேவையில் தரவிறக்கம் (Downloads) உள்ளிட்ட கூடுதல் வசதிகளை பெற கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஃப்ரீ ஃஜோன் (Free zone) என்ற பெயர் கொண்ட இச்சேவை மூலம் செல்போன் இணையதளத்தின் வசதியை பல கோடி மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தகவல் தேடுதல், இமெயில் வசதி, சமூக தளங்கள் பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக பெறலாம் என்றும், பார்த்தி ஏர்டெல் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில், தங்களின் சேவை இணையதள பயன்பாட்டை இன்னும் ஊக்குவிக்கும் என கூகுள் இந்தியா துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com