Monday, June 24, 2013

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடனான தொலைபேசிகள் மெகசின் சிறைச்சாலைக்கு எவ்வாறு சென்றது?

மெகசின் சிறைச்சாலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கையடக்க தொலை பேசிகளும், 6 சிம் அட்டைகளும், 10 சார்ஜர்களும், கைப்பற்றப்பட்டதோடு, 4 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்த சிறியளவிலான குறிப்பு புத்தகமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்படட தொலைபேசிகளில் ஒரு தொலைபேசி புதிய தொழில்நுட்பத்தை கொண்டதெனவும், சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெறப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் அடிப்படையில் சிறைச்சாலைகளில் உள்ளோர் வெளிநாடுகளிலுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜஜீர தெரிவித்துள்ளார்.

குறித்த பிரிவில் 60 எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வடக்கில் உள்ள போலி வைத்தியர்களின் விவரங்கள் திரட்டல்!

வடமாகாணத்தில் உள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் ஊடாக விவரங்கள் சேகரிக்கப்படுவதுடன் முதல் கட்ட நடவடிக்கையின போது பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கிய 7 போலி வைத்தியர்களுக்கு எதிராகப் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 போலி வைத்தியர்களுக்கு எதிராகப் பருத்தித்துறை நீதிமன்றில் கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்களில் 6 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தியுள்ளதுடன் ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடைபெறுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதே போல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள போலி வைத்தியர்கள் பற்றிய தகவல்கள் பிரதேச ரீதியாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஊடாக திரட்டப்படு வருவதாகவும் பிரதேச ரீதியாக சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் போலி வைத்தியர்கள் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

யாழ். புத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயதுச் சிறுவனை காணவில்லை! தாய் பொலிஸில் முறைப்பாடு!

யாழ். புத்தூர் மேற்குப் பகுதியை சேர்ந்த கவிதாசன் ரிஷாந்தன் என்ற 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என, குறித்த சிறுவனின் தாய் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த கவிதாசன் ரிஷாந்தன் என்ற சிறுவன் கடந்த 19ஆம் திகதி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

2013 ஆம் ஆண்டிற்கான சர்வதேச செம்பியன்ஸ் கிண்ணம் இந்தியாவசம்!

2013 ஆம் ஆண்டிற்கான சர்வதேச செம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 5 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்ததன் மூலம் இந்தியணி 2013 ஆம் ஆண்டிற்கான சர்வதேச செம்பியன்ஸ் கிண்ண கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 43 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 31 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்ததோடு, ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ரவி போப்பாரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

அணியின் துடுப்பாட்டத்தில் இயேன் மோஹன் 33 ஓட்டங்களையும், ரவி போப்பாரா 30 ஓட்டங்களையும் பெற்றக்கொடுத்தனர். இந்தியணின் பந்து வீச்சில் இஷான் சர்மா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜாவும், போட்டித் தொடரின் நாயகனாக ஷிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

மழைக் காரணமாக போட்டி 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Read more...

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்வோரிடமிருந்து முன் விசா பிணையாக 4600 டொலர்களை அறவிட பிரிட்டன் அரசு திட்டம்!

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர் களிடமிருந்து பிரிட்டனுக்கான முன் விசா பிணையாக 4600 டொலர்களை அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனின் சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்ட வும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் பிரிட்டனின் உள்நாட்டு செயலாளர் தெரேசா மே பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதிக்காக காத்திருப்பதாக மேற்படி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார். கடந்த ஆண்டில் பிரிட்டனுக்கு ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கை, பங்களாதேஷில் இருந்து தலா 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர் என மேற்படி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Sunday, June 23, 2013

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பறிற்சியளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள்! - மத்திய அமைச்சர்

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள் எனவும், இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும் எனவும், இதை தடுக்கவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தமிழர்கள் தொடர்பில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அக்கறை உள்ளது எனவும், எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதியை ''மேடம்'' என அழைத்த இலங்கை மின்சார சபைத் தலைவர்!

ஜனாதிபதியை இலங்கை மின்சார சபைத் தலைவர் "மேடம்" என அழைத்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அங்கு ஊடகத்துறை சார்ந்த ஒருவரால் ஜனாதிபதியிடம் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. 'ஜனாதிபதி அவர்களே! இலங்கை மின்சார சபை தொடர்பான செய்திகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளதே' என ஊடகத்துறையைச் சார்ந்த ஒருவரால் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,"கணேகலவே, ஊடகவியலாளர்கள் பிரச்சினை ஒன்றைக் கிளப்பியுள்ளார்கள். இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எனவே உடனடியாக அலரிமாளிக்கைக்கு வாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த இலங்கை மின்சார சபையின் தலைவரான டபிள்யு. பி கணேகல, "சரி மேடம். நான் வருகிறேன்" என பதிலளித்துள்ளார். அவர் தன்னை அழைத்த விதம் குறித்து அதிர்ந்து போன ஜனாதிபதி, "ஐயையோ இன்னும் மேடம்தானா?" மேடத்தைச் சந்திக்கவல்ல இப்போது வந்து என்னைச் சந்திக்கவும்' என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இதன் போது பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.

பின்னர் தேநீர் பறிமாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, கணேகலவிடம் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்."என்னுடன் நீங்கள் பேசுவதற்கு முன்னர் மேடமுடன் பேசியிருந்தால் அந்த நினைவில் என்னையும் நீங்கள் மேடம் என நினைத்துப் பேசியிருக்கலாம்" என ஒரு போடு போட்டுள்ளார்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும்!- ரவூப் ஹக்கீம்.

13 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும் அது ஒரு போதும் நடக்கப்போகும் காரியம் இல்லை - ரவூப் ஹக்கீம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும், திருத்தங்களை கொண்டு வர முற்பட்டாலும், அந்த சட்டமூலம் முதலில் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும், அதன்பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் இருக்கிறன எனவும், இது நடக்கப்போகும் காரியம் இல்லை எனவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் ஏற்பாட்டில், "திதுலன கல்முனை" (ஒளிரும் கல்முனை) எனும் அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றபோது, அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது மு.கா. அரசாங்கத்தை விட்டு விலகி விடும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்காலத்தை உணர்ந்தே, இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கின்றது. அன்று தமிழ் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை தூற்றியது. பல இழப்புகளுடன் அரசுடன் இருக்கும் இந்த சூழலில் அமைச்சரவையிலும், அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிகிறது. தற்போது தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் அதை பாராட்டுகிறார்கள் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் விடயத்தில் விழிப்பாகவே இருக்கும். முதலில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். அரசில் உள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவாளிக்கலாம். இன்னும் சிலர் மௌனமாக இருக்கலாம். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் இயல்பான அரசியலையே செய்யும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

அத்துடன், கல்முனையில் ஹரீஸ் செய்கின்ற அபிவிருத்தி வேலைகள், மற்றையவர்கள் செய்கின்ற காட்டிக் கொடுப்புக்கு கிடைக்கின்ற பரிசாக அமைவது போன்றதல்ல. கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி கடுகிற்கும் கிடையாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆங்காங்கே கொஞ்சப்பேர் ஏதோ கொண்டு செல்கின்றனர். முஸ்லிம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக் கூடாது. நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

மேலும், 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை புறக்கணித்துவிட்டு ஒரு தெரிவுக் குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான ஒரு விடயமாகும். அது இலங்கையின் 18 ஆவது திருத்தச் சட்டத்தில் மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நாங்கள் கொடுத்த ஆதரவுக்கு செய்த பரோபகாரமாக இப்படியானதொரு விடயத்தை ஜனாதிபதி செய்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு உள்ள நம்பகத்தன்மையை குறைந்தபட்சம் முஸ்லிம் காங்கிரசை இணைத்தாவது பெற்றிருக்கலாம். அல்லது இனியாவது இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த தெரிவுக் குழுவின் யோசனைகளை குப்பையில்தான் போட வேண்டிய நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

Read more...

தனது சிறுநீரை தானே அருந்தும் அமைச்சர் மேர்வின் சில்வா!

பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மைய நாட்களில் தனது சிறுநீரை தானே அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. பல சித்தர்களின் கருத்திற்கிணங்கவும், இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்கவும், அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாக தெரிவித்துள்ளார். இவர் நாளாந்தம் பல தடவைகள் சிறுநீர் அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேர்வின் சில்வா, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீர் அருந்தியதனை நினைவூட்டியதுடன், அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும், அதன் மூலம் சாதகமான தன்மைகளும் ஆரோக்கியமும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும், அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more...

பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்ட 17 பொலிஸாருக்கு தற்காலிக இடமாற்றம்!

நேற்றிரவு திக்வெல்ல பகுதியில் பெரஹரா நிகழ்ச்சிக்கான ஒத்திகையை நடத்திக்கொண்டிருந்த திக்வெல்ல பகுதி மக்களுடன், மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தறகாலிகமாக இட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திகையால் தாம் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும், இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வடக்கு வெற்றிபெற்றால் வடக்கிலிருந்து இராணுவத்தை விரட்டுவேன் - TNA சுமந்திரன் சொல்கிறாராம்....

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கிலுள்ள இராணுவத்தை விரட்டி விட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகவும், செப்டம்பரில் நடைபெறவிருந்த வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட பிரிவினைவாத அதிகாரங்களை இல்லாமற் செய்யும்நடவடிக்கைக்காக எல்லோரும் முன்வருமாறும் தேசத்தின்பால் அன்புசெலுத்தும் அனைவருக்கும் அழைப்புவிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், வீடமைப்பு நிர்மாண பொறியியல்சேவைகள், மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திருகோணமலையில் இடம்பெற்ற ‘புதிய தமிழீழ செயற்பாடும் வடக்கின் தேர்தலும்’ எனும் தொனிப்பொருளில் விசேட உரையாற்றும்போதே விமல் வீரவன்ச இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டிருப்பதாவது:

‘எமது நாட்டிற்கு எதிராக சவால்கள் முளைகொண்டபோதெல்லாம் நாங்கள் இவ்வாறு ஒன்றிணைந்து அந்தச் சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றிப் பேசவேண்டிய தேவையுள்ளது. நாங்கள் அவ்வாறு ஒன்றிணைந்து நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்கள் பற்றிப் பேசி வெற்றி கொண்ட வரலாறு இருக்கின்றது. இன்றும் நாங்கள் வெற்றிகொள்ள வேண்டிய சவால் ஒன்று உள்ளது. அதனை நாங்கள் சரியாக இனங்கண்டு அனை தோற்கடிக்காதுவிடின் இந்நாடு அதளபாதாளத்தினுள் விழுந்துவிடுவதை யாராலும் தவிர்க்க முடியாது.

என்ன இது புதுச் சவால்? எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணத்தில் தேர்தல் நடாத்த ஜனாதிபதி அறிக்கை விடுத்துள்ளதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனைய மாகாணங்களில் தேர்தல் நடாத்த முடியுமாயின் ஏன் வடக்கில் தேர்தல் நடாத்த முடியாது? அதில் என்ன குற்றம் இருக்கிறது? எனச் சிலர் கேட்கிறார்கள். அதுபற்றிய விவாதம் இல்லை. என்றாலும் ஏனைய மாகாணங்களில் வைக்கப்பட்ட தேர்தலுக்கும் வட மாகாணத்தில் நடாத்தப்பட இருக்கின்ற தேர்தலுக்கும் இடையே வித்தியாசமொன்றுள்ளது.


புலிகள் இயக்கம் நாடெங்கிலும் தங்களது பயங்கரவாதச் செயல்கள் மூலம் தங்களது பலத்தைக் காட்டிக்கொண்டிருந்தபோது, அதன் அரசியல் மற்றும் இராசதந்திர செயற்பாடுகளுக்கு கரங்கொண்டுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் தமது இனவாத, பிரிவினைவாத செயற்பாடுகளிலிருந்து விலகவில்லை. புலிகள் இயக்கம் செயற்பட்ட காலகட்டத்தில் இருந்த மனப்பாங்குடனேயே அவர்கள் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றனர். இந்த இனவாத, பிரிவினைவாத எண்ணங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்குத் தேவையுள்ளபோதும், மேற்கத்தேய தூதுவராலயங்களும் இந்திய தூதுவராலயப் பிரிவுகளும் அதற்கு இடமளிப்பதில்லை. அவற்றின் ஒட்சிசன் உயிர் பெறுகின்ற இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு நன்கு தெரிந்த இனவாத பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இப்போது பாருங்கள். யுத்தம் முடிவடைந்து 04 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வடக்கில் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அரசியலாக பழைய அரசியல் முறையே காணப்படுகின்றது. ஒரு பக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுபக்கம் அன்றிலிருந்து இன்றுவரை புலிகள் இயக்கத்திற்கு எதிரான ஈ.பி.டீ.பிக் கட்சி. ஆயினும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த 04 ஆண்டுகளிலும் வடக்கில் தோற்றம் பெறவில்லை.

அன்று புலிகள் இயக்கத்தினர் தங்களது ஆயுதச் செல்வாக்கின் மூலம் வடக்கில் இருந்த முழுத் தமிழ்ச் சமுதாயத்தினுள்ளும் இனவாதத்தை, பிரிவினைவாதத்தை விதைத்தது. அன்று தமிழ் மக்கள் புலிகளின் தேவைக்கேற்பவே சிந்தித்தார்கள். புலிகளின் தேவைக்கேற்பவே செயற்பட்டார்கள். அன்றுபோல் புலிகளின் ஆயுதபலம் இன்று இல்லாதிருக்கின்றபோதும், புலிகள் விதைத்த இனவாத, பிரிவினைவாதச் சிந்தனைகள் தமிழ் மக்களிடத்தில் இருக்கின்றது. தமிழ்ச் சமூகம் அதிலிருந்து விடுபட இடமளிக்கப்படவில்லை. அதனாற்றான் வித்தியாசமாகச் சிந்திக்கக்கூடிய அரசியலமைப்பு அங்கு தோற்றம்பெறாதிருக்கின்றது.

உதயன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் அதிகமானவை யுத்தக் காலப்பிரிவில் இருந்த இனவாத, பிரிவினைவாதச் சிந்தனையுடனேயே இன்றும் செயற்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஊடக ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றார். ‘புலிகள் செய்த போராட்டம் நியாயமானது. அவர்களது போராட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இராசதந்திரக் குறைபாடுகளே அதன் தோல்விக்குக் காரணம். அன்று அந்தப் போராட்டத்தில் நாங்கள் நின்றதுபோல இன்றும் அதற்கு ஏற்றாற்போல நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். தமிழ், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள பரம்பரைக் காணிகளை சிங்கள இராணுவம் சீனாவின் உதவியுடன் சூறையாடுகின்றது. அதற்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்த சக்தி தலைதூக்க வேண்டும்’ என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியிருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரம் மற்றொரு செய்திப்பத்திரிகைக்கு ‘வடக்கில் தேர்தல் வெற்றிபெற்றதன் பின்னர் நாங்கள் வடக்கிலிருக்கின்ற இராணுவ நிருவாகத்தை நீக்கிவிடுவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். வடக்கில் இராணுவத்தினரின் நிருவாகத்தை நீக்கிவிடுவோம் என்று குறிப்பிடுவது வடக்கிலுள்ள இராணுவ அரண்களை இல்லாமற் செய்வது. ஏனைய மாகாண சபைத் தேர்தலின் போது, தேர்தலுக்கு முன்னரேயே வேட்பாளர்கள் இராணுவத்தை அகற்றுவதாகக் குறிப்பிடுவார்களா? ‘சீனாவின் உதவியுடன் உதவியுடன் வடக்கிலுள்ள காணிகளைக் கொள்ளையடிக்கிறார்கள்’ என்று குறிப்பிடுவதன் காரணம் இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காக. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திக்கவுள்ளனர். வேறொரு மாகாண சபைத் தேர்தலின் முன்னர் வேட்பாளர்கள் இந்தியா செல்வதில்லையே. எனவேதான் நாங்கள், வேறு மாகாண சபைத் தேர்தல்களை விடவும் வட மாகாண சபைத் தேர்தல்களை விடவும் வித்தியாசமானது எனக் குறிப்பிடுகிறோம்.

அன்று அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள், இலண்டனில் இருந்துகொண்டு பரப்பிய எண்ணக்கருக்களுக்கு உருவமாக அமைந்த வெடிச்சத்தம் மாத்திரமே இன்று இல்லாதிருக்கின்றது. அவர்களது சிந்தனைகள் இன்னும் இருக்கின்றன. தமிழ்ப் பத்தரிகைகளைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். தினந்தோறும் இந்நாட்டிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் தலைகளினுள்ளே அந்த இனவாத, பிரிவினைவாத சிந்தனைகளையே மட்டுமே நிரப்புகின்றனர். அன்று ஆயுத பலத்தின் மூலம் வெற்றிகொள்ள முனைந்து முடியாமற்போக, மீண்டும் இன்று வேறு வடிவில் கைப்பற்றுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. நாங்கள் அதனை ‘புதிய தமிழீழ செயற்பாடு’ என்று குறிப்பிடுகிறோம்.

வட மாகாண சபையைத் தாம் கைப்பற்றியதும் இந்தப் புதிய தமிழீழ செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளனர். அன்று புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்திலிருந்த சட்ட விரோத நிருவாக அதிகாரத்தை தேவைகளை வெற்றிகொள்ளும் ஊடகமாகப் பயன்படுத்தியது போன்று, இந்த பிரிவினைவாத சக்தியை, வட மாகாண சபையின் முதலில் தம் கையிலெடுத்து, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கியுள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக் கொண்ட மாகாண சபையாக மாற்றிவிடுவார்கள்.

அதாவது இந்தப் பிரிவினைவாத சக்தியின் கீழ் தனியாக பொலிஸ் ஒன்று உருவாகும். காணி அதிகாரம் தொடர்பில் புதிய நியதிச் சட்டங்கள் உருவாகும். சூழலியல் சட்டங்கள் தோன்றும். வெவ்வேறான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திலிருந்து கழன்று கொள்வதற்காக திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 13 ஆவது திட்டத்திற்கு ஏற்ப, மாகாண சபையை நோக்கிவருகின்ற எந்தத் திட்டமும் மாகாண சபைகளின் ஆதரவுடனேயே செயற்படுத்தப்படும். ஆயினும் மாகாண சபைகள் கொண்டுவருகின்ற திட்டங்கள் பாராளுமன்றத்தின் அநுமதிக்காக அனுப்பப்படுவதில்லை. மத்திய அரசாங்கம் கொண்டுவரும் சட்ட திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றிக்குச் செல்ல சாதாரண ஒரு குடிமகனால் முடியும். அது அரசாங்கத்தின் யாப்புக்கு அமைவாக இருந்தால். ஆயினும், மாகாண சபையொன்று கொண்டுவரும் சட்டதிட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடிய அதிகாரம் தனிநபருக்கு வழங்கப்படவில்லை. அங்கு மேலிருந்து கீழே காண்பிக்கப்படுகின்றது. என்றாலும் கீழிருந்து மேலே காண்பிக்கப்படுவதில்லை.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேர்க்கும் மாணவர்களின் உளநலத்தை பரிசோதிக்க வேண்டுமாம்!

"பல்வேறு உளநல பிரச்சினைகள் காணப்படுகின்ற மாணவர்களே பெரும்பாலும் பகிடிவதை செயற்பாடு களுடன் தொடர்புபடுகின்றனர்" - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்.

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேர்க்கும் மாணவர்களின் உளநலத்தை பரிசோதிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது எனவும், அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவரும் பல்வேறு செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்திய புத்திஜீவிகள் இவ்வாறான யோசனையை முன்வைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு உளநல பிரச்சினைகள் காணப்படுகின்ற மாணவர்களே பெரும்பாலும் பகிடிவதை செயற்பாடுகளுடன் தொடர்புபடுகின்றனர் எனவும், நடைமுறையில் உள்ள பரீட்சை முறைமையாலும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read more...

இரண்டு சிறுவர்களின் உயிரைப்பறித்த பஸ் சாரதி! தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

கேகாலை ரம்புக்கனை, தலுக்கல பகுதியில் தனியார் பஸ்ஸொன்றுடன் மோதுண்டு இரு சிறுவர்கள் உயிரிழந் துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 வயதுடைய சிறுவனொருவனும், 2 வயது குழந்தையொன்றுமே உயரிழந்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளானவர்கள் ரம்புக்கனை தேவாதிவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவு மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல்!

இன்று பிற்பகல் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் யாழ்பாண பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும், முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் ஆறு பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இந்தியாவின் வடபகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி! அரசாங்கம் முன்னெச்சரிக்கை வழங்கவில்லை மக்கள் விசனம்!

இந்தியாவின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர் வடையும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் உத்தரகாண்ட மாநிலத்தில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் 40 ஆயிரம் பேர் மலைப்பகுதிகளில் தங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 60 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தங்களை குறித்த பருவப்பெரய்ச்சி மழை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் வடபகுதியிலுள்ள புனித தளங்கள் பல முற்றாக சேதமடைந்துள்ளன. வரலாற்று சிறப்புவாய்ந்த பகுதிகளும் வெள்ளத்தில் அழிவடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சீரற்ற காலநிலை தொடர்பில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை வழங்க தவறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அவுஸ்திரேலியா மாத்திரம் ஏன் எல்.ரி.ரி.ஈ அமைப்பைத் தடைசெய்ய தயக்கம் காட்டுகிறது?....பீரிஸ்

"அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்ல அவர்கள் அனைவரும் தங்களின் பொருளாதாரத்துக்காக இலங்கையிலிருந்து தப்பி யோடுபவர்கள்" - பீரிஸ்

தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் பொருளாதார வளம் கிடைக்குமென ஏமாற்றப்பட்டு அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கிறார்கள் எனவும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்ல எனவும், அவர்கள் அனைவரும் தங்கள் பொருளாதாரத்துக்காக இலங்கையிலிருந்து தப்பியோடுபவர்கள் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தால் புலிகள் தோற் கடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள சில எல்.ரி.ரி.ஈ யினர் இலங்கைத் தமிழர்களை படகுகளில் ஏற்றி அவுஸ்திரேலியாவுக்குச் சட்ட விரோதமாகக் ஆட்கடத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கும், எல்.ரி.ரி.ஈக்கும் இடையிலான யுத்தம் முடிவுபெற்றுள்ள போதிலும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்போதும் கூட வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி பணத்தை அபகரிப்பதுடன், வேறுபல குற்றச்செயல் களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளும், வடஅமெரிக்க நாடுகளும் எல்.ரி.ரி.ஈயின் செயற்பாடு களைத் தடைசெய்துள்ள இவ்வேளையில் ஏன் அவுஸ்திரேலியா மாத்திரம் எல்.ரி.ரி.ஈ அமைப்பைத் தடைசெய்ய தயக்கம் காட்டுகிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆட்களைச் சட்டவிரோதமாகக் கடத்தும் தொழில் மூலம் எல்.ரி.ரி.ஈயினர் கடந்த காலத்தில் பெருமளவு வருமானத்தை பெற்றார்கள் என்றும், ஆட்களைக் கடத்துவதை நாம் தனித்து வைத்துப் பார்க்காமல் அதனுடன் வேறுபல குற்றச் செயல்களும் இடம்பெறு வதைக் கூர்ந்து அவதானித்தல் அவசியம். பலவந்தப்படுத்தி பணத்தை அபகரித்தல் மற்றும் போதைவஸ்துக்களின் விற்பனை யிலும் இவர்கள் ஈடுபடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எல்.ரி.ரி.ஈயினர் அன்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், மக்களை ஏமாற்றியும் சூறையாடிய பெரும்பாலான பணம் இன்னும் அவர்கள் வசம் இருக்கிறதென்றும், இப்போது அவர்கள் அதனை வைத்து பல சரக்குக் கப்பல்களை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எல்.ரி.ரி.ஈயுடன் தொடர்புடைய பல குழுக்கள் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Read more...

ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது! மற்றொருவர் தப்பியோட்டம்! - வாழைச்சேனையில் சம்பவம்.

வாழைச்சேனை காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவருடன் வந்த சீலன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று அதிகாலை ஓட்டமாவடி பாலத்திற்கருகில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார், காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து கைதுசெய்து சோதனையிட்ட போது, அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை அவர்கள் கொண்டு வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

பாகிஸ்தானின் பிரபல நடிகைக்கு அசிட் வீச்சு! முன்னால் காதலனா இந்த கொடூர செயலை புரிந்தார்?

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நடிகையான புஷ்ரா என்பவர் மீது அசிட் வீச்சுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் நவ்ஷேரா நகரில் வசித்து வரும் இவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருநதபோது, அவரின் மதில் சுவரை தாண்டி குதித்து வந்த மர்ம நபர், படுக்கை யறையில் தூங்கிக் கொண்டிருந்த நடிகையின் முகத்தில் அசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடி விட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகையின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் 33 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகை புஷ்ராவின் முன்னாள் காதலன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலீசார், அவரை தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Read more...

ஒரு நாள் நிரம்பிய சிசுவின் சடலம் சம்மாந்துறை பகுதியில் மீட்பு! தாய் கைது!

சம்மாந்துறை, வலதாப்பிட்டியில் உள்ள காட்டுப் பகுதி யொன்றில் இருந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

29 வயதுடைய குறித்த பெண் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சிசுவின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

காணி ஆக்கிரமிப்பும் விற்பனையும் சட்ட விரோதமாகும் - இஸட். ஏ. எச். ரஹ்மான்

தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மருதமுனை நவியான் குளப்பகுதி காணியை மீட்டெடுப்பதற்கு கல்முனை மாநகர சபை, காணிப் பதிவாளர் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக கல்முனை மாநகர சபையின் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட். ஏ. எச். ரஹ்மான் மாநகர சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கவன ஈர்ப்புப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

அங்கு இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் செயலாளரினால் கல்முனை மாவட்ட காணிப் பதிவாளருக்கு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற குறித்த காணிகளுக்கான பதிவை இடைநிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் அம்பாறை மாவட்ட செயலாளர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இசட். ஏ. எச். ரஹ்மான் கவன ஈர்ப்புப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது:

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்குப் பின்னால் அமைந்துள்ள நவியான் குளப்பகுதி காணி அரசுக்கு சொந்தமான தரிசு நிலமாகும். மழை, வெள்ளப் பெருக்கு காலங்களில் மருதமுனைப் பிரதேசம் வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்கப்படுவது இக்குளப் பகுதியின் மூலமே.

அது மாத்திரமின்றி ஏனைய காலங்களில் அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திடலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் இக்குளப்பகுதி காணியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதுடன் அதனை துண்டு துண்டாக விற்பனை செய்தும் வருகின்றார். இக்காணித் துண்டுகள் மலிவாகக் கிடைப்பதால் மக்களும் போதிய விளக்கமின்றியும் அதன் பாரதூரம் தெரியாமலும் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இந்தக் காணி ஆக்கிரமிப்பும் விற்பனையும் சட்ட விரோதமாகும் என்பதை கல்முனை மாநகர சபையினதும் பொது மக்களினதும் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

ஆகையினால் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு கல்முனை மாநகர சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

இதற்காக காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் பொலிஸ் என்பவற்றின் உதவியை நாடுவதுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றேன்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

Read more...

Saturday, June 22, 2013

யாழில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது!

யாழ் வல்வெட்டித்துறையில் 15 வயதுச் சிறுமியொருவரை காதலிப்பதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 27 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் கடந்த வாரம் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர் இதற்கமைய பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இவ் வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி இச் சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Read more...

ரஸ்ய நாட்டு உளவாளி இலங்கையில் கைது!

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக தங்கியிருந்து வெளிநாடுகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கிய ரஸ்ய நாட்டு உளவாளி ஒருவர் கேகாலை மாவனல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது தான் வெளிநாடுகளுக்கு இலங்கை பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி தன்னுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டதாக விசாரணகைளின் போது கைது செய்யப்பட்ட சிக்கோச்சி சர்ஜே தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் மடிகணனியை அரச புலானய்வுப் பிரிவிடம் ஒப்படைத்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததுடன் குறித்த நபர் இலங்கையில் கடந்த ஜந்து வருடமாக தங்கியிருந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

Read more...

காதலிப்பதாக கூறியே யாழில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்!

யாழ். குடாநாட்டில் 2013 ஆண்டின் முதல் 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதுடன் இந்த சிறுமிகள் அனைவரையும் இளைஞர்கள் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று(21.06.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த வருடத்தின் முதல் 6 மாத காலத்திற்குள் 16 வயதிற்குட்பட்ட 11 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான புள்ளிவிபரத்தகவல்கள் ஆகும். ஆனால் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்பாக எம்மிடம் முறையிடப்படாமலும் உள்ளன என குறிப்பிட்டார்.

எமது நாட்டின் சட்டத்திற்கமைய 16 வயதிற்குட்பட்டவர்கள் திருமணம் செய்ய முடியாது. அவ்வாறு திருமணம் செய்கின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர் காதலித்தவர்களை திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே செல்கின்ற சிறுமிகளே இவ்வாறான சம்பவங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டார்.

Read more...

யாழ்.நெடுந்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் பாதச்சுவடு அனுமான் உடையதா?

யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்ததுடன் இது பாறைகள் சிதைவடைந்து கூட இந்த சுவடு உருவாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும், இராமாயணப் போர் நடைபெற்ற போது அனுமான் மலையைத் தூக்கிக் கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் தற்போது இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது!

பிரதீவ் தேவ நதுன் தர்மவிக்ரம என்னும் 42 வயதான கொஸ்கொட நதுன் என்ற இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலியின் மிலான் வெனித்தியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேரின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக குறித்த நபர் கருதப்படுவதுடன் குறித்த சந்தேக நபருக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த உயர் அதிகாரி கைது!

"பெப்சி உங்கள் சாய்ஸ்" தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பெப்சி உமா, தற்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியென்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய சரவணராஜன், பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்துவந்ததுடன், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள் அதிகமானதால் இதுபற்றி பெப்சி உமா மகளிர் பொலிசில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து தொலைக் காட்சி தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜனை நேற்றிரவு கைது செய்த பொலீசார், அவர் மீது "வன் கொடுமை" சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்ததியதாகவும், அதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கைதான சரவணராஜன் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறைச்சாலைக்குள் இருக்கும் பெண் கைதிக்கு கருத்தடை மாத்திரை எதற்கு? மாத்திரையை கொடுக்க முயன்றவர் கைது!

கருத்தடை மாத்திரைகளை பெண் கைதியொருவருக்கு வழங்க முயன்ற சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நபரெருவர் வெலிக்கட சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொரு வருக்கு வழங்குவதற்கென கொண்டுவந்த உணவில் கருத்தடை மாத்திரைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

இதனையடுத்து குறித்த பெண்கைதிக்கு அவர் உணவினைக் கொடுக்க முற்பட்ட வேளையில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

தற்கொலை செய்ததாக கூறப்பட்ட மாணவியின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வீட்டில் வைத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக் கூறப்படும் உடதும்புர பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப் பட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய, உடதும்பர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு சட்டவைத்திய நிபுணரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வீட்டில் வைத்து இந்த மாணவி தனது உடலுக்கு தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்ததாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த மரணம் தொடர்பில் சாட்சியாளர்கள் வழங்கிய வாக்குமூலங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் பகிரங்க தீர்ப்பு வழங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

பாடசாலை மாணவியை இடைமறித்து விஷம் ஊட்டிய கும்பல்! மட்டக்களப்பு கரடியனாற்றில் சம்பவம்!

மட்டக்களப்பு கரடியனாறு வேப்பவட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வியாழக் கிழமை இனந்தெரியாத நபர்களினால் வழிமறிக்கப்பட்டு விஷமூட்டப்பட்ட நிலையில், கரடியனாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை க்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி தன்னாமுனையிலுள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடுத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் இவ்வாறு தனது மகளை வழிமறித்து விஷத்தை ஊட்டியுள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மயங்கிய நிலையில் வீதியருகே வீழ்ந்துகிடந்த தனது மகளை வீதியால் சென்ற லொறிச் சாரதி கண்டு முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிசென்று உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும், பின்னர் உறவினர்கள் தனது மகளை உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஷமூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தேறிவருவதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

Read more...

காதலியின் தந்தையின் மர்ம உறுப்பை அறுத்துச் சாப்பிட்டான் காதலன்!!!

பிலிமந்தலாவை இம்புல்கம பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைந்துள்ள இளைஞன் ஒருவன், அங்கிருந்த வயோதிபரின் மர்ம உறுப்பை அறுத்துச் சாப்பிட்ட சம்பவம் கடுகண்ணாவ பொலிஸார் பதிவுசெய்துள்ளனர்.

காயத்திற்குள்ளாகியிருப்பவர் 82 வயதையுடைய ஒருவர்.அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் குற்றவாளியைத் தேடும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சந்தேக நபர், காயத்திற்குள்ளாகியிருக்கின்ற நபரின் மகளுடன் காதல் தொடர்பு கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

வீட்டுக்கு கள்ளத்தனமாக உள்நுழைந்தமை கையும்மெய்யுமாக அகப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஏற்பட்ட தகராறின்போது, சந்தேக நபர் இவ்வாறு மர்ம உறுப்பை அறுத்து அதனைச் சாப்பிட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிரி குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

புலிகளுக்கு உதவிய இராணுவ கேணலின் வழக்கு ஒத்திவைப்பு!

கொழும்பில் 2009ல் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு எல்.ரி.ரி.யினருக்கு உதவியளித்த இராணுவத்தின் கேணல் அதிகாரி ஒருவரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கேணல் ரஞ்சித் சந்திரசிறி பெரேராவுக்கு எதிரான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது, சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சாலிய பீரிஸ், சற்று முன்னரே தனக்கு வழக்கு தொடுநர் பக்க சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரதிகள் தரப்பட்டன எனவும், இதனால் தனக்கு அவற்றைப் படிக்க முடியவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிணங்க சாட்சிகளின் வாக்கு மூலத்தை படிப்பதற்காக எதிர்த்தரப்பு வழக்குரைஞருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியதுடன், இவ்வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Read more...

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி அவர்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற கும்பல்!

பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயினர். அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகையை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் பொலிஸாரிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.

முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

13 ஆவது திருத்தம் ஒரு வெள்ளை யானையாக இருந்தாலும் அதனை கொன்றுவிட முடியாது! திருத்தம் தொடர்பில் முடி......

அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முன்வரவேண்டு மெனவும், 13 ஆவது சட்ட திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கும் பொறுப்பை பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் வழங்கியுள்ளதாகவும், 13 ஆவது சட்ட திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவே இறுதி முடிவு எடுக்குமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் 13 ஆவது திருத்த சட்டம் ஒரு வெள்ளை யானையாக இருந்தால் கூட அதனை கொன்று விட முடியாது எனவும் அதை வைத்து வேலைவாங்க பழக்கிக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இலத்திரனியல் ஊடகங்களில் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com