Saturday, June 22, 2013

பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வேண்டும்! நீதிமன்றம்

ஜூலை மாதம் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மாதிவெலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்திற்கான வாடகை கட்டணத்தை செலுத்த தவறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல மேற்குறித்த 19 பேரும் ஜூலை மாதம் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி முதல் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி வரை மாதிவெல உத்தியோகபர்வ வாஸஸ்தலத்தில் தங்கியிருந்து வாடகை செலுத்த தவறியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read more...

பெண் பிள்ளைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டாம்- எம்.சி.எம்.ஜெவ்ரி

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளில் அதிக அக்கறை காட்டுவதுடன், அவர்களின் நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும். பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

கலாசாரத்தினை இறுக்கமாக கடைப்பிடிப்பதில் பேர் போன யாழ். மாவட்டம், தற்போது கலாசார சீரழிவுகளால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது கவலையளிப்பதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி நேற்று(21.06.2013) யாழ் பொலீஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

நான் சிறுவயதில் இருக்கும் போது யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்று வந்தேன். அப்போது யாழ்ப்பாணத்தில் கலாசாரம் இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டிருந்தது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், தற்போது, யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையை மாற்றுவதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளில் மிகவும் அக்கறை காட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் சிறு பிள்ளைகளை வீட்டில் தனியாக இருக்க விடாது, பெரியவர் ஒருவரின் கண்காணிப்பில் தங்க விடவேண்டும். அது மட்டுமல்லாது 18 வயதுக்கு குறைந்த பிள்கைளிடம் கையடக்கத் தொலைபேசி பாவணைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஏன் எனில் அதிக துஷ்பிரயோகங்கள் நடைபெறுவது கையடக்கத் தொலைபேசி பாவணையால் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார்.

Read more...

தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்! -அபிவிருத்தி லொத்தர் சபை பணிப்பாளர்

‘இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்’ - இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் சபையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டியமக்கள்நலனோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும்போது அவர், இப்போதுதான் முதன்முறையாக தமிழ் பேசும் மக்களுக்கு முன்னால் உரையாற்றுகின்றேன். அதுவும் அந்த மக்களின் மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாமை மிகுந்த வேதனை தருகிறது. இதுகுறித்து வெட்கப்படுகின்றேன். பல தியாகங்களுக்கு மத்தியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் இணைக்கப்படடிருக்கிறது. இந்த அமைதியின் மூலம் நாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.

இவ்வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன் அபிவிருத்தி லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட விநியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

புலிகளுக்கு ஆதரவாக நின்று, பிரித்தானிய பொலிஸார் சிங்களவர்களைத் தாக்கி காடைத்தனம் புரிந்துள்ளனர்! - ஹெல உறுமய

இங்கிலாந்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஜாத்திக ஹெலஉறுமய கோரிக்கைவிடுத்துள்ளது.

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டஅமைப்பாக இருந்தபோதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்புப் பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்குமுறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலானஅரையிறுதிப் போட்டியின் முடிவில், புலிகளின்ஆதவாளர்கள் சிங்களவர்களை தாக்கி, அச்சமின்றிவெளிப்படையாகச் செயற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை கண்டித்து ஜாத்திக ஹெல உறுமயவின்ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். கிரிக்கெட்போட்டியின் இறுதியில், சுமார் 200 விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்கள், மிகவும் குழப்பமாக, வன்முறையாக செயற்பட்டு, சிங்கள கிரிக்கெட இரசிகர்கள் மீது இரும்புகம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னர், இலங்கை அவுஸ்திரேலிய இடையிலானபோட்டியின் போது புலிகளின் ஆதரவாளர்கள்சிங்களவர்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டனர். மேலும் சிங்க்க் கொடியை மிதித்து கொண்டுபுலிக் கொடியை ஏந்தியும் இலங்கைக்கு எதிராக பதாகைளைஎடுத்து கொண்டும் மைதானத்தில் நேற்று போட்டிக்குத் தடையேற்படுத்தினர்.

அரையிறுதிப் போட்டியில் விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்தச் செயற்பாட்டில் ஈடுபட தயாராகி வருவதாக ,தூதரகஅலுவலகம் ஊடாக பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்குஅறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்கநடவடிக்கை எடுக்காதது குறித்து பிரித்தானிய அரசு மற்றும்பாதுகாப்பு தரப்பினருக்கு எமது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கிலாந்தில் இருக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த்த் தேவையானநடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசு, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்கதெரிவித்துள்ளார்.

Read more...

சிறைச்சாலைக்குள் இருக்கும் பெண் கைதிக்கு கருத்தடை மாத்திரை எதற்கு? மாத்திரையை கொடுக்க முயன்றவர் கைது!

கருத்தடை மாத்திரைகளை பெண் கைதியொருவருக்கு வழங்க முயன்ற சந்தேக நபரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நபரெருவர் வெலிக்கட சிறைச் சாலையின் மகளிர் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு வழங்குவதற்கென கொண்டுவந்த உணவில் கருத்தடை மாத்திரைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

இதனையடுத்து குறித்த பெண்கைதிக்கு அவர் உணவினைக் கொடுக்க முற்பட்ட வேளையில், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

Friday, June 21, 2013

தொழில் தருவதாய்க்கூறி 23 பெண்களைத் திருமணம் செய்த களுத்துறைக் குற்றவாளி கைது!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்பெற்றுத் தருவதாய்க் கூறி இளம்பெண்களின் பணத்தைக் கரந்து, 23 திருமணங்கள் செய்துகொண்ட சந்தேக நபரொருவரை பத்தேகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

48 வயதுடைய இந்த நபர், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர். சந்தேகநபர், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 23 பேரைத் திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர், இளம் பெண்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளமையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்படும்போது வெவ்வேறு பெயர்களுடன் கூடிய ஆள் அட்டைகள் பலவும், திருமணச் சான்றிதழ்கள் 04 இருந்திருக்கின்றன.

திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு போலி அன்புகாட்டி அவர்களது சொத்துக்களை தனக்குரியதாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின்போது குறித்த சந்தேகநபர், தனக்கு நாட்டிலுள்ள முக்கிய புள்ளிகள் பலரைத் தெரியுமென்றும், அவர்கள் மூலமாக தொழில்பெற்றுத் தருவதாக இளம்பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைக் கரந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(கேஎப்)

Read more...

நான் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.... ஞானஸாரர் காவியுடையைக் களைவாரா? – வாசுவின் சவால்!

எதிர்வரும் தேர்தலில் இரத்தினபுரிக்கு வருகைதந்து, தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கடகொட அத்தே ஞானஸார தேரருக்கு சவால் விடுத்திருக்கின்றார் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

‘நாட்டின் யாப்பில் குறிக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாதுவிடின் நான் அரசியலை விட்டும் ஒதுங்கிவிடுவேன்’ என அமைச்சர் தெளிவுறுத்தினார்.

வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று (20) தனது அமைச்சில் ஊடகவியலாளர்களைக் கூட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர் நாணயக்கார,

‘ஞானஸார தேரர் குறிப்பிடுவது போல எங்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும். தேரரின் சிந்தனையின்படி எங்கள் உயிரையும் நீக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது போலும். தேர்தல் நடைபெறும்போது இரத்தினபுரிக்கு வருகை தருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் இரத்தினபுரிக்கு வரவேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டத்துடன் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு வைப்பதென்பதை நாங்கள் பார்ப்போம் என்று ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள விடயம். நாங்கள் அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தேரர் அவரது காவியுடையை அவர் களைத்துவிடுவாரா? மாகாண சபையை நிலை நிறுத்த முடியாதுவிடின் நான் எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். நானும் எனது காவியுடையைக் களைவேன், பொது பல சேனா இயக்கத்தைக் களைத்துவிடுவேன் என்று அவரும் என்னைப் போல வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

வாய் இருக்கின்றது என்று வாய்க்கு வருவதையெல்லாம் பேசுவது சரியல்லவே! காவியுடையினுள் மறைந்துதானே அவர் கூக்குரலிடுகிறார். நிந்தனை செய்கின்ற வார்த்தைகளைத்தான் அவர் பேசுகின்றார். என்னாலும் அவ்வாறு கதைக்க முடியும். காவியுடைக்கு நாங்கள் மரியாதை செலுத்துவதால் அவ்வாறு பேசுவதில்லை.

பொதுபல சேனாவுக்கு நோர்வே நன்றாகவே உதவுகின்றது என எனக்குத் தோன்றுகின்றது. நோர்வே தூதுவரும் சாதாரணமாக பொதுபல சேனாவின் விகாரை (பன்சலை) யில்தான் இருக்கிறார் என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

நன்றி : ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளம்

(தமிழில் : கலைமகன் பைரூஸ்)

Read more...

ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்த 2 வயதுக் குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்!

ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்த 2 வயதுப் பெண் குழந்தையை வழிப்போக்கர்கள் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சீனாவின் நிங்காய் பகுதியை சேர்ந்த பெண் தனது வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 2 வயதுப் பெண் குழந்தை, கண் விழித்து பார்த்தபோது தாயை காணாமல் அழத் தொடங்கி, ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்துள்ளது.

அவ்வாறு ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்த போது, குழந்தையின் கை நழுவி வெளியே விழுந்துள்ளது. அவ்வாறு விழுந்த குழந்தை ஜன்னல் கம்பியை பிடித்த்து தொங்கியுள்ளது. இவ்வாறு குழந்தை ஜன்னல் கம்பியை பிடித்து தொங்குவதை வீதியால் சென்ற நபர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வீதியில் திரண்ட பொதுமக்கள் 60 அடிக்கும் அதிகமான உயரத்தில் உயிருக்கு போராடிய அந்த குழந்தை சில நொடிகளில் பிடியை நழுவவிட்டு தரையை நோக்கி விழத் தொடங்கியபோது அரண் போல் சூழ்ந்த பொதுமக்கள் கீழே விழுந்த குழந்தையை பிடித்து காப்பாற்றியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக கண்ணின் கீழ்பகுதியில் சிறிய சிராய்ப்பு காயத்துடன் குழந்தை உயிர் பிழைத்தது. காப்பாற்றியவர்களில் ஒருவருக்கு கழுத்து பகுதியிலும், இன்னொருவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞன் பொலிஸாரால் கைது! யாழில் சம்பவம்!

தனது கணவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொய்யாக முறைப்பாடு செய்த மனைவி.

கடந்த 17ஆம் திகதி மாலை யாழ். சண்டிலிப்பாய் சங்குவேலி பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞர் ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைதுசெய்தாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த கந்தையா 28 வயதுடைய ஜேசுதாசன் என்ற நபரை கடந்த 17ஆம் திகதி மாலை சண்டிலிப்பாய் சங்குவேலி பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறி, அவரின் மனைவி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார்.

இதற்கிடையே, கடந்த 16ஆம் திகதி அல்வாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 6 இலட்சத்தி 85 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கையடக்கத் தொலைபேசி என்பவற்றினை, தனது வீட்டில் வேலை செய்த நபர் ஒருவர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக, வீட்டு உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் பிரகாரம் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நகைகளை கொள்ளையடித்துச்சென்ற நபரை கைதுசெய்த போது, குறித்த நபர் வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பபடும் இளைஞர் என பொலிஸாருக்கு தெரியவந்தது.

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொய்யாக முறைப்பாடு பதிவு செய்த குறித்த நபரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறும், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Read more...

கெசினோ விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி! புதிதாக கெசினோக்களை ஆரம்பிக்க நான் அனுமதி வழங்கவில்லை!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தின் போது திறக்கப்பட்ட கெசினோ சூதாட்ட நிலையங்களே தற்போது இயங்கிவருகின்றன எனவும், புதிததாக கெசினோ நிலையங்களை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அடிப்படையற்ற கருத்துக்களை சிலர் வெளியிடுவதாகவும், ஆனால் எந்தவொரு நபருக்கும் கெசினோ சூதாட்டத்திற்காக புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில கெசினோ சூதாட்ட நிலையங்கள் பாடசாலைகளுக்கு அருகாமையிலும் இயங்கி வருவதாகவும், இவ்வாறு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாகும் விதத்தில் கெசினோ நிலையங்களை நடாத்த இடமளிக்கப் போவதில்லையென ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி காலத்தின் போது அனுமதி வழங்கப்பட்ட கெசினோ, சூது நிலையங்களை ஒரு வலயத்திற்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு தேவையான சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பதவியேற்றதன் பின்னர் கெசினோ நிலையங்களுக்கு மதுபான சாலைகளுக்கோ அனுமதி வழங்கவில்லையென தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சி காலத்தின் போது 5 இலட்சம் ரூபா முதல் கெசினோ நிலையங்களுக்கான வரி தற்போது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read more...

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரின் நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நாளை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரிய தொடர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஜே.வி.பி. யினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அண்மையில் மின்கட்டணம் அநியாயமான முறையில் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீது தாங்கவொணா சுமையொன்று சுமத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மின் கட்டணஉயர்வு தொடர்பில் பொதுமக்களின் எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் நாளைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஜே.வி. பி. அறிவித்துள்ளது.

நாளை முற்பகல் 10 மணியளவில் கம்பஹா மாவட்டத்தின் பியகமையில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம், கட்டம் கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை ஆறரை மணியளவில் பொலன்னறுவை மெதிரிகிரியவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருமலை மற்றும் வடமாகாணத்தின் எந்தவொரு இடத்திலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 12 பெண்கள் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் முற்றுகையிடப்பட்ட போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் முகாமையாளர் ஒருவரும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி நேற்று இரவு இந்த விபச்சார கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலீசார் தெரிவித்தனர்.

Read more...

மாத்தளை புதைக்குழி ஆராய மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு

மாத்தளை மனித புதைக்குழி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட என மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த குழு மாத்தளை மனித புதைக்குழி தொடர்பாக ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார்கள் என ஜனாதிபதி செயலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read more...

புலிக்கொடிகளுடன் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள்! 5 பேர் கைது!

இங்கிலாந்தின் கார்டிப் நகரில் இடம்பெற்ற செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை இந்திய அணிகள் பங்குபற்றிய அரையிறுதி ஆட்டதின் போது எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் புலிக்கொடி களுடன் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன் போட்டி முடிவடைந்ததும் வீடுகள் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கையர்களை எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இலங்கையர்கள் மீது எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாமென முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வேல்ஸ் பொலிசார் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின் இலட்சினை அடங்கிய ஆடைகளை அணிந்து பதாதைகளை ஏந்தியவர்களால் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வேல்ஸ் பொலிசார் தடுத்து நிறுத்த தவறியமை பாரதூரமான விடயமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின் போதும் எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் சிலர் மைதானத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்திருந்தனர். இது தொடர்பிலும் வேல்ஸ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 149 கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப்பிரிவால் மீட்பு!

டுபாயிலிருந்து UL-532 என்ற விமானத்தில் வந்த ஒருவரினால் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 149 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 184 வாசனைத் திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீர்வை வரி நிவாரணமொன்று வழங்கப்படுவது வழமை என்பதால் அவர்களின் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்பதால் சுங்க அதிகாரிகளை திசை திருப்பும் முகமாக இவ்வாறு டுபாயிலிருந்து பொதி செய்து சார்ஜாவிலிருந்து வரும் பயணி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த 18 ஆம் திகதி சுங்க பிரிவு கைப்பற்றிய வெள்ளி ஆபரணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பரிசோதனை அறிக்கையில் அதன் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாவென உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

25 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தும் எனக்கு நீதி கிடைக்கவில்லை! ஆனால் மூன்றே நாட்களில்.....ரங்கே பண்டார!

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒழுக்கம் தொடர்பான முன்மாதிரியை வழங்க முடியாமல் சென்ற போதிலும், தற்போதைய அரசாங்கம் ஆசிரியை முழங்காலில் வைத்த அரசியல்வாதிக்கு தண்டனை வழங்கி, ஒழுக்கநெறி தொடர்பாக முன் உதாரணம் காட்டியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 14 ஆம்திகதி நவகத்தேகம பகுதியில் ஒரு ஆசிரியை தாக்கப்படட சம்பவம் தொடர்பில் 17 ஆம் திகதிக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி, குறித்த மாகாண சபை உறுப்பினரை பதவி விலக கோரியதுடன், மீண்டும் வேட்பு மனு வழங்குவதில்லையென கூறி, குறித்த மாகாண சபை உறுப்பினரை மன்னிப்பு கோர செய்தது இவ் அரசாங்கம். அத்துடன் அவரை நீதிமன்றத்திலும் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய குழுவிற்கு நன்றி தெரிவிகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி சிலர் குண்டர்களால் தாக்கப்பட்டேன். 2010 மே மாதம் 5 ஆம் திகதி நான் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினேன். 25 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். நான் வைத்தியசாலையில் 25 நாட்கள் சிகிச்சைபெற்று விட்டு வரும் வரையிலும் என்னை தாக்கிய குண்டரான உறுப்பினரிடம் எனது கட்சி விளக்கம் கோரவில்லை.

நான் வெளியே வந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சில முயற்சிகளை மேற்கொண்டேன். எனினும் எமது கட்சி அக்குண்டருக்கு சிலாபம் பகுதி அமைப்பாளர் பதவியை வழங்கியது. இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும், நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்காக நான் இதனை கூறுகின்றேன் என ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டமைப்பு 3 நாட்களுக்குள் அரசாங்கம் ஆசிரியை முழங்காலில் வைத்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டதுடன், குறித்த மாகாணசபை உறுப்பினர் மீண்டும் வேட்பு மனு வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்தது. ஆனாலும் எமது கட்சியோ அதற்கு மாறாக செயல்பட்டது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே தெரிவித்துள்ளார்

Read more...

ராக்கட்டுக்களிலிருந்து புவியை பாதுகாக்க புதிய லேசர் கதிர்!

பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.

சுயமாக இயக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள Area Defense Anti-Munitions எனப்படும் முறைமையினால் ஆன இந்த லேசர் கதிரானது ராக்கட்டுக்களை மட்டுமன்றி ஏனைய விமானங்களையும் இவ்வாறு புவிக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடியவாறு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பலசேனாக்களுக்கு உபதேசிக்கிறார் எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன்!

இலங்கையில் பௌத்தர்கள் குறைந்து வருகிறார்கள்,பௌத்தம் அழிந்து வருகிறது என்பதுதான் பொதுபலசேனாவின் கவலையாக இருக்கிறது என்று அது சொல்லிக் கொள்கிறது. இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே அவ்வமைப்பு போராடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக எல்லாச் சிறுபான்மை இனத்தோரையும் பௌத்தம் அல்லாத மதத்தோரையும் கொலை வெறியுடன் எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

பல் இனம் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் வளர்ச்சி கண்டு வருகிறது என்றால் அதற்குக் காரணம் அச்சமூகங்கள் பின்பற்றும் மதங்களின் வெற்றி மட்டுமல்ல, பெரும்பான்மையோர் பின் பற்றும மதத்தி்ன் காவலர்களது இயலாமையும் ஆகும். சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளை விட பெரும்பான்மை மதத்துக்கும் அதைப் பின்பற்றுவோருக்கும் இருக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும்.

அகிம்சையை, அமைதியைப் போதித்த புத்தபெருமானின் வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் ஞர்னத்தின் வழியில் தங்களது கவலைக்குப் பொருள் தேடாமல் வழி காணாமல் புத்த பெருமானின் கொள்கைகளுக்கு மாற்றமாகச் சிறுபான்மைகள் மீது கொலை வெறி கொள்வதும் அதற்காக வன்முறை வழிகளைத் தேர்வதும் சுட பௌத்தத்தின் தோல்வியாகும். இந்த விடயத்தில் பல பௌத்த பிக்குகள் மிகத் தெளிவாக இருந்த போதும் பொதுபலசேனா, சிஹல ராவய போன்ற அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் சார்ந்த பிக்குகளுக்குப் புரியாமல் இருப்பதும் பௌத்தம் செல்லும் வரலாற்று வழியில் கருப்புக் கோடுகளாகவே அமைந்து விடப் போகின்றன.

இவ்விடயம் சம்பந்தமாக புரிந்து கொள்ளும் பௌத்த பிக்குகளும் கூட மாற்று வழிகள் பற்றி எதுவும் பேசாமல் இவ்வமைப்புகள் தடம் புரண்டு செல்கின்றன என்ற விமர்சனத்தோடு மாத்திரம் நின்று கொள்கிறார்கள்.

பெரும்பான்மை அரசியல்வாதிகளில் பலர் நிலைமை புரிந்திருந்தும் கூட தமது இன வாக்குகள்

பற்றிய கணக்கெடுப்புத் தளர்ந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்களே தவிர நாட்டுக்கும்

தமது மதத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்ற விடயத்தைக் கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர்.

பல்லினம் வாழும் ஒரு தேசத்தில் வாழும் சிறுபான்மையினர் வர்த்தகம், கல்வி, தொழில்துறையென்று எல்லாவற்றிலுமே பெரும்பான்மையினரோடு, அதன் அரசோடு முட்டி மோதி, போராடி, சிரம்ங்களை எதிர்நோக்கியே வாழ்ந்து எதிர் நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் - தனது வாழ்க்கைக்காக ஒரு பெரும்பான்மை இனத்தான் சிந்தும் வியர்வையை விட சிறுபான்மை இனத்தான் சிந்தும் வியர்வை அதிகமாகும்.

பிக்குகள் உழைப்பதில்லை. அவர்களுக்குப் பொதுமகன் படும் சிரமங்கள் எதுவும் கிடையாது. பௌத்தம் என்ற ஒன்றுக்காக அவர்கள் வாழ்கிறார்கள் என்றால் அம்மதம் பின்னடைவு காண்கிறது என்றால் அதற்குத் தாமும் முக்கிய காரணகர்த்தாக்கள் என்பது புரியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வெட்கக் கேடு.

எனவே இந்த அமைப்புகள் சார்ந்த பிக்குகள் நாட்டு முன்னேற்றம் கருதியும், தங்களது மத முன்னேற்றம் கருதியும் சிறுபான்மை இனங்களின் மேல் பாய்வதைத் தவிர்த்து விட்டுச் சில நல்ல காரியங்களைச் செய்ய முடியும்.

01. பன்றிகள் கொல்லப்படும் இடங்களில் கொல்லப்படும் பன்றிகள் நோயற்றவை என்பதை உறுதிப்படுத்துதல்.

02. பல்பொருள் அங்காடிகளில் அரை நிர்வாணமாக வரும் யுவதிகளுக்கு அறிவு புகட்டல்.

03. கசினோ போன்ற சூதாட்டக் கழகங்களுக்கும் சாராயக் கடைகளுக்கும் வருகை தரும் பெரும்பான்மை இன மக்களுக்குப் போதனை புரிதல்.

04. தங்களது பிரதேச பன்சலைகளை மையப்படுத்தி இளைஞர், யுவதிகளைத் திரட்டி பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பிரதேச பாதைகள் போன்றவற்றில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தல்.

05. முடியுமானால் அரச நிறுவனங்களில் கூட (உ-ம்) தபாலகளில் தபால்தலை வி்ற்றல்) போன்ற தொழில்களில் ஈடுபடல்.

06. சட்ட விரோத கசிப்பு, போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகச் செயற்படல்.

07. போதைப் பொருள் பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வளிப்பதிலும் அவர்களுக்குப் போதனை செய்வதிலும் ஈடுபடல்.

08. பிரதேசங்களில் சிறு சிறு சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல்.

09. வைத்தியசாலைகளில் நோய்களால் பாதிப்புற்றவர்களைச் சந்தித்து ஆறுதல் தருதல். முடியுமானால் நிறுவன ரீதியாகச் செயற்பட்டு அவர்களுக்கு உதவுதல்.

10. சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குப் போதனை செய்தல்.

Read more...

புலிவாலை பிடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தர முடியாது -லக்ஸ்மன் யாப்பா

புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கத்தினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தனித்து தீர்வு காண முடியாது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயக வழிமுறைக்கு வந்தால், அந்த வழியிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதை விடுத்து புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், சிறிலங்கா அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிட்ட அவர் தற்போது உள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு தேசிய பிரச்சினை தீர்க்கப்படுவதில் விருப்பமில்லை என குறிப்பிட்டார்.

மேலும் தற்போது உள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக உறுப்பினர்களை நியமிக்குமாறு அண்மையில், இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி கேட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதியின் அந்த அழைப்பை இரா.சம்பந்தன் அநிராகரித்து விட்டார் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.

Read more...

தமது கடற்பரப்பை விசாலமாக்குவதற்கு முயற்சிக்கிறது இந்தியா!

தங்கள் கடற்பரப்பை விசாலமாக்குவதற்காக இந்தியா மற்றும் இலங்கையினிடையே உருவாகியுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டு சர்வதேச அமைப்பொன்றிற்குச் செல்வதற்கு உள்ளதாக தூதுவராலய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக இந்தியா தனது கடற்பரப்பை விசாலாமாக்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது என்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் தமது கடற்பரப்பை விசாலமாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

மனித உரிமையுடன் தொடர்புடைய இருபெண்களை சிறைப்படுத்துகிறது ஸவுதி அரசு!

ஸவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த கனடாவைச் சேர்ந்த பெண்ணையும் அப்பெண்ணின் மூன்று பிள்ளைகளும் நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக உதவி செய்தமை குறித்து, ஸவுதி அரேபிய மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த இரு பெண்களுக்கு எதிராக நீதிமன்றம் 10 மாத சிறைத் தண்டனை மற்றும் இரு வருடங்களுக்கு நாட்டை விட்டும் வெளியேற முடியாது என்று தடை .உத்தரவும் பிறப்பித்துள்ளது.

2011 ஜூன் மாதம் 06 ஆம் திகதி தனது கணவன் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எவ்வித உணவு பானங்களும் தராமல் வீட்டினுள் அடைத்து வைத்திருந்ததாக குறிப்பிட்ட நெத்தலி மொரின் எனும் பெண்ணுக்கு உதவி செய்யும் பொருட்டு சென்ற வஜ்ஹா அல் ஹுவைதர் மற்றும் பௌஸியா அல் ஒயூனி எனும் இரு பெண்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருத்தி கணவனுக்கு எதிராகச் செயற்படுவதற்கு உதவி புரிந்ததைமை குற்றம் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ள ஹுவைதர் மற்றும் ஒயூனி குறிப்பிடுகையில் இது பெண்களின் உரிமைகள் பற்றித் தாம் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கான அரசாங்கம் கொடுத்துள்ள தண்டனை என்கின்றனர்.

பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான அல் ஹுவைதர் ஸவுதியில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பின் நிருவினருமாவார். மேலும் ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ அமைப்பின் மத்திய கிழக்கிற்கான ஆலோசனைக்குழு உறுப்பினருமாவார்.

(கேஎப்)

Read more...

பிரபாகரனைப் போல் தமிழ் மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறிக்கும் ஆயர்!

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்று மக்களின் வாக்களிக்கும் உரிமையை மன்னார் ஆயர் வேறு வடிவத்தில் இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார் என்றால் அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் வடக்குத் தேர்தலை நடத்தினால் அதில் மக்கள் பங்கெடுக்கக்கூடாது என்று மன்னார் ஆயர் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? வென்றும் செய்தியாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மக்களின் வாக்களிக்கும் உரிமையை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று எவ்வாறு பறித்தாரோ அதே செயற்பாட்டை சமய தலைவர் ஒருவர் வேறு வடிவத்தில் செய்ய முனைகின்றார் என்றால் அது தொடர்பில் கவலையடைய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது -கோதபாய ராஜபக்ஷ!

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்பதனை இந்தியாவிற்கு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலேயே இது தொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதனால் இவ்வாறு காவல்துறை அதிகாரங்களை பகிரமுடியாது என தெளிவுபடுத்தப்பட்டது என அவர் இதன் கோது சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காத்திரமான தீர்வுத் திட்டம் ஒன்றையே ஜனாதிபதி 13 பிளஸ் என கருதியதாகவும், அதனை காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக கருத முடியாது எனவு குறிப்பிட்ட இவர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்திய உயர் ராஜதந்திரிகளுக்கு தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குழப்ப நிலைமைகள் ஏற்படக் கூடுமென அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Read more...

கிறிஸ்தவ மத போதகரின் வயிற்றுப் பகுதியை பலமாகத் தாக்கினாராம் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர்!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்தேஞானசார தேரர் தான் தேவாலயத்தினுள் வீழ்ந்து கிடந்த போது, அங்கு வந்து ஏதோ அசாதாரண வார்த்தைகளால் திட்டிவிட்டிக் கொண்டே தனது வயிற்றுப் பகுதியை தாக்கினார் என தேவாலயம் ஒன்று தாக்கப்பட்ட வழக்கின் பிரதான சாட்சியான கிறிஸ்தவ மதபோதகரான சிட்னி ரோஷான் நீதிமன்றில் நேற்று சாட்சியமளித்தார்.

மாலபே, தலாஹேன பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி பௌத்த மத தேரரர்கள் உள்ளடங்கிய குழுவினரால் தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அரச தரப்பு சாட்சியான போதகர் சிட்னி ரோஷான் என்டீஷன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச தரப்பால் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கின் முதல் நாளான நேற்று சாட்சியின் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கையும் சாட்சி மீதான குறுக்கு விசாரணையும் இடம்பெற்றது. அரச தரப்பு பிரதான சாட்சியான போதகர் சிட்னி ரோஷான் என்டீஷன், குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார் அன்றைய தினம் குறித்த தேவாலயத்துக்கு முன்னால் கூடியவர்கள் தேவாலயத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும் அங்கு பல பௌத்த தேரர்கள் திரண்டிருந்ததாகவும் பிரதான சாட்சியான போதகர் விபரித்தார்.

அத்துடன் தேவாலயத்தில் ஆராதனைகளுக்காக கூடிய மக்கள் சம்பவத்தின் போது அச்சமடைந்த நிலையில் தேவாலயத்தினுள் முடங்கியிருந்ததாகவும், பொலிஸாரின் தலையீட்டுடன் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் தானும் தனது சகோதரன் உள்ளிட்ட சிலரும் தேவாலயத்தில் இருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மூடப்பட்டிருந்த தேவாலயக் கதவினை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் தன்னை தாக்கியதாகவும், இதனால் தனது முகம், தலை பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக தான் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் பிரதான சாட்சியான போதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதிவாதி ஞானசாரதேரர் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நிஹால் குணசிங்க சாட்சியை குறுக்கு விசாரணை செய்ததுடன் தமது கட்சிக்காரரான ஞானசார தேரர் அவ்விடத்துக்கு சமாதானத்தை ஏற்படுத்தவே சென்றதாக வாதிட்டார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பிரதான சாட்சி பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்கு மூலத்தில் தனது வயிற்றுப்பகுதியில் தாக்கப்பட்டமை தொடர்பிலோ அல்லது ஞானசாரதேரர் தொடர்பிலோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த அவர் தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என வாதிட்டார்.

பிரதிவாதிகள் தரப்பில் சட்டத்தரணி நிஹால் குணசிங்க, ரொஷான் புத்திககமகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அரச தரப்பு சாட்சிகளுக்காக ஹரிஸ் சமரநாயக்க தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகளுக்கு எதிராக கலகம் விளைவித்தமை, தாக்குதல் நடத்தியமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் அரச தரப்பால் 15 சாட்சியங்களின் பெயர்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கருத்திற்கொண்டே நீதவான் இவ்வழக்கினை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Read more...

நயினாதீவு நாகபூசணி அம்மனுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டு வருவதாகவும் எனினும் நாளை நடைபெற உள்ள தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புகள் பல் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆல தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருவதனால் களவு போன்ற சில அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது எனவே இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே விசேட பொலிஸ் பாதுகாப்பு 19ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 24ஆம் திகதிவரை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

விபத்துக்கள், அனர்த்தங்களை தவிர்க்க தனியார் பஸ்களில் ஜீபிஎஸ் கருவிகள்!

தனியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அன்றாடம் இடம்பெறுகின்ற பஸ் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகைய மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜீபி.எஸ் எனும் நவீன கருவி மூலம் வாகனங்களின் வேகம் ஆணைக்குழுவினால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் தற்போத சுமார் மூவாயிரத்து 200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், 678 பஸ்களில் மாத்திரம் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக் காட்டினார்.

எனவே அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ஆயிரம் பஸ்களில் மேற்படி கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதால் வருங்காலத்தில் விபத்துக்கள் ஏற்படுவதையும், மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதும் இந்த கருவிகள் அனைத்து தனியார் பஸ்களிலும் பொருத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொஷான் குணவர்தன சுட்டிக் காட்டியுள்ளார்.

Read more...

2015இல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்!

இலங்கையில் 2015 ஆம் ஆண்டளவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதால் இதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறியுள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வடிவமைத்தல் மற்றும் தரவு களஞ்சியப்படுத்தல் ஆகியவற்றிற்காக விலை மனு கோரப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஆணையாளர் அதன்பிரகாரம் அடுத்த 6 மாதங்களுக்குள் விலை மனுக்கள் ஊடாக தெரிவு செய்யபட்ட நிறுவனமொன்றுடன் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் தரவுகள் திரட்டப்பட்ட பின்னர் புதிய தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உறுதியான பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கவும் எண்ணியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Read more...

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு ஊடகவியலாளர் இங்கிலாந்தில் உள்ளார்! - அருந்திக

காணாமல் போனதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டிய ஊடகவியலாளர் சதருவன் இங்கிலாந்தில் இருந்து கொண்டு தனது பணியை நாடாத்தி வருவதாக புத்தளம் மாவட்ட ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் காணாமல் போனதாக குற்றஞ்சாட்டப்படும் சகல ஊடகவியலாளர்களும் வெளிநாடுகளில் சொகுசாக இருப்பதாகவும், ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டில் தஞ்சமடைய எதுவித காரணமும் இருக்கவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருக்க முடியாததால் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக சுனந்த தேசப்பிரிய கூறியுள்ளார். ஆனால் அவரின் தம்பி தேர்தல் ஆணையாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பதவியில் சுனந்தவின் தம்பியை ஜனாதிபதி அமர்த்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னலி கொடவுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் எதுவித பிரச்சினையும் இருக்கவில்லை எனவும், அவர் கார்டூன் வரைபவர் ஐ.தே.க. ஆட்சியில் போன்று எமது ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படவில்லை எனவும், இந்த ஊடகவியலாளர்கள் இராணுவத்திற்கு எதிராக வெளிநாடுகளில் தவறான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர் என புத்தளம் மாவட்ட ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டிய சதருவன் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, June 20, 2013

13வது சீர்த்திருத்தம் தொடர்பாக நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் அம்சங்களை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்!

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் திறந்த மனதுடன் இருப்பதாகவும், விரிவான பேச்சுவார்த்தைகள் மூலம், சீர்த்திருத்தங்களை மேற்கொள் வதும், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் அம்சங்களை நீக்குவதுமே, அரசாங்கத்தின் நோக்கமாகு மென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித் துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் 13வது திருத்த சட்டமூலம் தொடர்பாக, பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தோம் ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை நிராகரித்தது. ஆனாலும், நாங்கள் இந்த தெரிவுக்குழுவை கூட்ட எதிர்பார்த்திருந்தோம்.

தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க, எதிர்க்கட்சி சிறிது கால அவகாசம் கோரியிருக்கிறது. நாங்கள் சகல சந்தர்ப்பங்களிலும், எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, இந்த விடயங்கள் தொடர்பில், பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தி, பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம்.

அவ்வாறு பகிரங்க விவாதத்தினூடாக வெளியிடப்படும் கருத்துகளையே, நாங்கள் 13வது திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த சகல விடயங்கள் தொடர்பிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திறந்த மனதுடன் செயற்படுகிறது. நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை அகற்றுவதே, எமது முதலாவது நோக்கம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read more...

அவுஸ்திரேலியா பூரண ஆதரவை வழங்கப்போவதாக உறுதி!

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு பூரண ஆதரவை வழங்கப்போவதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது. அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை தூதுக்குழுவிடம் அவுஸ்திரேலிய பிரதமர், இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் மத்தியில் உரையாற்றிய போதே, அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டுக்கு தனது நாடு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டு அனுபவங்களை இலங்கைக்கு வழங்குவதற்காகவே, இந்த இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read more...

கற்களே உடைந்து போகும் வண்ணம் பொய்யைச் சொல்லாதீர்கள்! – ஞானஸாரவுக்கு மஹமித்த தேரர் பதிலடி!!

தனது அறைக்குள் நுழைந்து கைப்பற்றிய பொருட்களை தமக்குத் திருப்பி ஒப்படைக்குமாறும், தேசிய சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்ற பௌத்த மதகுருமாருக்கு (பிக்குமாருக்கு) உபத்திரவம் செய்ய வேண்டாம் எனவும் கூறி, பொது பல சேனா இயக்கத்தின் முன்னாள் விமர்சனப் பிரிவின் மேலாளர் மஹமித்தவ பஞ்சரதன தேரர் அவ்வியக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரரிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

ஞானஸார தேர்ருக்குஅனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2013.06.17 ஆம் திகதி இடம்பெற்ற தெரண 360 நிகழ்ச்சி தொடர்பாக

அன்றைய தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த தாங்கள் என்னைப் பற்றி குறிப்பிட்ட விடயம் பற்றி நான் கவலையையும், அதிருப்தியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கு தாங்கள், உங்கள் இயக்கத்தில் மஹமிதவ தேரர் என்றொருவர் இருக்கவில்லை எனவும், அவ்வாறான ஒருவர் பற்றித் தனக்குத் தெரியாதெனவும் குறிப்பிட்டிருந்தீர்.

2012.11,19 ஆம் திகதி தாங்களும் நானும் கலந்துகொண்ட ஹலால் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நான், இயக்கத்தில் என்ன பதவி வகிக்கின்றேன் என்று நீங்களல்தானே குறிப்பிட்டீர்கள்

அத்துடன், தங்களின் இயக்கத்தில் சேர வேண்டிய தேவையினாலேயே அங்கு வந்ததாகவும் தாங்கள் குறிப்பிட்டீர்கள். அதுகூட இட்டுக்கட்டப்பட்ட கதை. நான் தங்களின் அழைப்பின் பேரிலேயே அங்கே சமுகம் தந்தேன். நானாக உடன்பட்டு தங்கள் இயக்கத்தில் சேரவில்லை.

அவ்வாறே, தங்கள் இயக்கத்தின் பெயரை விற்று நான் பணம் திரட்டியதாகக் குறிப்பிடுவதும் ‘பச்சைப்’ பொய். நான் இயக்கத்தின் பெயரைக்காட்டி எந்தவொரு நபரிடமும் பணம் வசூலிக்கவில்லை. இந்தப் பிரச்சினையை உருவாக்கியதே நீங்கள்தான். அதற்குரிய காரணமும் தாங்கள்தான் அறிவீர்கள்! அன்று அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் தகவல் பிரிவில் கடமையாற்றிய நான், அந்தத் தொழிலையும் விட்டுவிட்டு உங்களுக்குச் சேவை செய்தேன். அதற்கு முன்னர் பௌத்தர்களுக்காக நான் செய்த சேவை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்!

மேலும், இந்தப் பிரச்சினையின் சுயவடிவைத் தெரிந்தவர்கள் நீங்களும் நானுமே! கடைசியாக சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகிறேன். அதாவது, 2013.01.08 ஆம் திகதி எனது அறைக்கு பலாத்காரமான முறையில் உள்நுழைந்து கைப்பற்றிய எனது பொருட்களைத் திருப்பி என்னிடம் ஒப்படைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடைசியாக நான் கேட்டுக் கொள்வது யாதெனில், தேசிய சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தேரர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல், தங்கள் இயக்கத்தின் பணிகளை நடாத்திச் செல்ல வேண்டுமென்பதே.

எங்களுக்குள் இவ்வாறானதொரு பிளவு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த ஹலால் தொடர்பாக நழுவிச் செல்லக்கூடிய பிரச்சாரத்தைக் கொஞ்சம் பிற்போட்டு, உங்கள் இயக்கம் குறிப்பிட்டது போல, பௌத்தர்களுக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கடைசியாக, சோக்கிரடீஸ் எனும் சிந்தனையாளர் தனது இறுதிநேரத்தில் குறிப்பிட்ட தொரு விடயத்தை நீங்கள் உள்ளிட்ட உங்கள் இயக்கத்தினரின் முன்வைக்கின்றேன்.

‘நான் சாவதற்கும் நீங்கள் வாழ்வதற்குமான காலம் நெருங்கிவிட்டது. ஆயினும், எங்கள் இருவருக்குமிடையே கூடுதல் நன்மை யாருக்குக் கிடைக்கும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான்’

இவ்வண்ணம்,

மஹமிதவ பஞ்சரதன தேரர், முன்னாள் விமர்சன மேலாளர், பொதுபல சேனா இணையம்


(கலைமகன் பைரூஸ்)


Read more...

மாணவர்கள் பயணித்த பஸ் 200 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்து! நுவரெலியாவில் சம்பவம்!

காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து விசேட சிகிச்சைகளையும் செய்ய ஜனாதிபதி பணிப்பு!

நுவரெலியா சீத்தாஎலிய பொல்காவம்புவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டியொன்று , 200 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து நேற்று மாலை விபத்துக்குள்ளானது, சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா சீத்தாஎலிய பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பஸ்விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு உரிய விசேட சிகிச்சைகளையும் தேவைப்படுமிடத்து போக்குவரத்து வசதிகளையும் உடனடியாக செய்துகொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்புகொண்டு பணித்ததாகவும், ஜனாதிபதியின் பணிப்புக்கிணங்க மேலதிக சிகிச்சை தேவைப்படும் மாணவர்களை பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டுவருவதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை, பசரை, நமுனுகுல, தென்னக்கும்பர தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கல்விச்சுற்றுலாவுக்காக நுவரெலியாவுக்கு வருகைதந்த நிலையிலேயே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானபோது, பஸ்சில் 76 மாணவர்களும், 7 ஆசிரியர்களும், 5 பெற்றோரும் பயணித்துள்ளனர்.

Read more...

பாடசாலை மாணவனைக் காணவில்லை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் சிவசூரியகுமார் சனராச் என்ற மாணவன் கடந்த 13 ஆம் திகதி காலை பாடசாலைக்கெனச் சென்ற இடத்தில் காணாமற் போயுள்ளதாகவும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, மனிதஉரிமைக்குழுவுக்கோ அல்லது 0243248887, 0773369084 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கற்கும் நான்கு சக மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com