Thursday, June 20, 2013

பாடசாலை மாணவனைக் காணவில்லை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் சிவசூரியகுமார் சனராச் என்ற மாணவன் கடந்த 13 ஆம் திகதி காலை பாடசாலைக்கெனச் சென்ற இடத்தில் காணாமற் போயுள்ளதாகவும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, மனிதஉரிமைக்குழுவுக்கோ அல்லது 0243248887, 0773369084 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கற்கும் நான்கு சக மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

நுகேகொடையில் இயங்கிவந்த விபசார நிலையம் முற்றுகை! 4 பெண்கள் கைது!

ஆயுர்வேத வைத்திய நிலையமென்ற பெயரில் நுகேகொடையில் இரகசியமாக இயங்கிவந்த விபசார நிலையமொன்றை முற்றுகையிட்டுள்ள மீரிஹான பொலிஸார், அங்கிருந்த முகாமையாளரையும், 4 பெண்களையும், வேறு சிலரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெலவத்த, கொட்டேகொட, முதலக்குலிய, கடுவெல, கபுருகல, யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஞானஸாரர் மதுபானம் அருந்தியதை ஒப்புக் கொள்ளச் செய்த தில்காவுக்கு... கொலை அச்சுறுத்தல்!!

இவ்வார தெரணவின் 360 நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானஸார தேரர் திக்குமுக்காடும் விதமாக வினாதொடுத்த்தைக் காரணம் காட்டி, ஊடகவியலாளர் தில்கா ஸமன்மலீக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அநாமதேய அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன என தில்கா கொழும்புபொலிஸ் குற்றப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளார்.

சிங்கள பௌத்தர்கள் பற்றிக் கருத்துரைக்கும் போது, சூது, மதுபானம் போன்றவற்றுக்கு பௌத்தர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடியவர்கள் என்று ஞானஸார்ர் குறிப்பிடும்போது, தில்கா குறுக்கே, ஞானஸார்ர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகவும், அதனால் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார் என்பதைக் குறிப்பிட்டதுடன், நீதிமன்ற அறிக்கையை முன்வைத்தார்.

தெரண நிறுவனத்தின் உள்ளகச் செய்திகள் குறிப்பிடும்போது, இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு ஞானஸார்ர் விண்ணப்பித்த்தாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் தெரண நிறுவனம் – இந்நிகழ்வில் பங்குகொள்பவரிடத்தில் காரசாரமாக வினாக்கள் தொடுக்கப்படுவதால் இதில் இளம் பௌத்த பிக்குமார் கலந்துகொள்வது சிறந்த்தல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது. என்றாலும், ஞானஸார்ர் மென்மேலும் நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன.

(கேஎப்)

செய்தியுடன் தொடர்புடைய இணைப்பு: http://www.ilankainet.com/2013/06/blog-post_5599.html

Read more...

21 வயதில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்தவர் ரவுக் அல்ப்பதாஸ் 25வயதுடைய இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவிக்கு தற்போது 21 வயது இந்த 7 ஆண்டில் அவரது மனைவி 11 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அவருக்கு 1 ஆவது தடவை 4 குழந்தைகளும் பிறந்தன. இரண்டாவது தடவை 3 குழந்தைகளும் மூன்றாம்இ நான்காம் தடவைகளில் 2 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன இதனால் அவர் 21 வயதிலேயே 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ரவுக் அல்ப்பதாஸ் அரசு ஊழியராக உள்ளார். 11 குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். 11 குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. ஆனாலும் உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் இது போதவில்லை என்று ரவுக் அல்ப்பதாஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட "இனி அவன்" திரைப்படம் பிரென்சு உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான "இனி அவன்" எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாக வுள்ளது.

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில் தனது அறிமுகத்தினை கான்ஸ் திரைப்பட விழாவில்(2012) மேற்கொண்டது.

அத்துடன், ரொறன்ரோ சர்வதேச திரைப்படவிழா, டோக்கியோ சர்வதேச திரைப்படவிழா, எடின்பரோ சர்வதேச திரைப்படவிழா, டுபாய் சர்வதேச திரைப்படவிழா போன்ற உலகப்புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச ரீதியாக பாராட்டுக்களை இந்த திரைப்படம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஊடகவியலாளர் சிவராமைக் கடத்திய நபர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்! - ஆட்டோச் சாரதி.

ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என ஆட்டோச் சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் சிவராம் படுகொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது, அங்கு சாட்சியமளித்த ஆட்டோ சாரதியே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளர் சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தனது வண்டியுடன் நின்றிருந்ததாகவும், சாம்பல் நிற ஜீப்பில் வந்த ஒரு குழுவே சிவராமைக் கடத்தியதாகவும், அவர்களை தான் தெளிவாகப் பார்த்ததாகவும், அவர்களை அடையாளம் காட்ட தன்னால் முடியும் என கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்ற ஆட்டோ சாரதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமின் படுகொலை வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more...

குழந்தைகளுக்கு வலி நிவாரண மாத்திரையை வழங்க வேண்டாம்!

காய்ச்சலுக்குள்ளாகியுள்ள குழந்தைகளுக்கு எந்தவொரு வலி நிவாரண மாத்திரையையும் மருத்துவரின் சிபாரிசின்றி வழங்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், டொக்டர் ரத்ன சிறிஹேவகே இதனை தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுக்குள்ளாகியிலிருந்த சில குழந்தைகளுக்கும், வளர்ந்தவர்களுக்கும் பெரசிட்டமோல் மாத்திரைக்கு மேலதிகமாக ஸ்டேரொய்ட் வகையை சேர்ந்த சில வலி தவிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சில குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்களுக்கு , மருத்துவர்களின் சிபாரிசின்றி வலி தவிர்ப்பு மாத்திரைகளை வழங்க கூடாது. எனினும் பெரசிட்டமோலுக்கு மேலதிகமாக , சில புரூபன் , டிக்ளோபெனெக் சோடியம், ஏஸ்பிரின், போன்ற வலி தவிர்ப்பு மாத்திரைகளை வழங்கியுள்ளதால், சில குழந்தைகளும் வளர்ந்தவர்களும் டெங்கு இரத்த போக்கு நிலைகளுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன், தோலும் அதனுடன் சேர்த்து தசை வலி, தலைவலி , வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின், தாமதிக்காது உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற வேண்டும். தவரும் பட்சத்தில் டெங்கு அதிர்ச்சி நிலைக்கோ, டெங்கு இரத்தபோக்கு நிலைக்கோ உள்ளாகி உயிரிழக்க நேரிடும். அதனால் நோய்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, வைத்தியர்களின் சிபாரிசுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், டொக்டர் ரத்ன சிறிஹேவகே மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

பஸ்ஸிற்குள் வைத்து துஷ்பிரயோக முயற்சி! பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்குத் தண்டம்!

பெண் ஒருவரை பஸ்சிற்க்குள் வைத்து துஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சித்த பஸ் சாரதிக்கும், பஸ் நடத்துனருக்கும் தலா 5000 ரூபா தண்டம் விதிக் கப்பட்டுள்ளது. பொலநறுவை மற்றும் மின்னேரியாவை சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப் பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பொலநறுவை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் பொலநறுவையிலிருந்து கொழும்புக்கு வந்த வேளையில், பஸ் சாரதியும் பஸ் நடத்துனரும் குறித்த பெண்ணுடன் சேஷ்டை விட்டுள்ளதுடன், அவரை பஸ்க்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கும் முயற்சித்துள்ளனர்.

அவ்வேளை குறித்த பெண் அவ்விருவரிடமிருந்தும் தப்பிச்சென்று, சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பஸ்ஸின் சாரதி, மற்றும் நடத்துனரை கைது செய்த பொலிஸார், அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவ்விருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைதையடுத்து அவ்விருவரும் தண்டம் செலுத்த வேண்டுமென நீதவான் உத்தரவிட்டார்.

Read more...

தனது காலங்கடந்த ஒப்படையை ஏற்க மறுத்ததாலேயே சட்டபீட தலைவி மீது கத்திக் குத்து! பொலிஸார்!

நேற்று நண்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பிரிவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவ மொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காயங்களுக்குள்ளாகி சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சட்டபீடத்தில் கற்கும் மாணவரான சிவஞான சுந்தரம் சுரேந்திர ஜித் என்பவரே சட்டபீடத் தலைவியைக் கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குட்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, சம்பந்தப்பட்ட மாணவர் குறித்த நாளில் தமக்கான ஒப்படை அறிக் கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளார். காலங்கடந்த தமது ஒப்படை அறிக் கையை பொறுப்பேற்குமாறு சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத் தம்பியிடம் பலவந்தப்படுத்தியதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றைய தினம் நண்பகல் 12.20 மணியளவில் மேற்படி தர்க்கத் தையடுத்து சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத்தம்பி சட்டபீடத்தின் வரவேற்புப் பிரிவிற்கருகில் நடந்து செல்கையில் சம்பந்தப்பட்ட மாணவர் அவரைத் தம்மிடமிருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சட்டபீடத் தலைவியின் கழுத்துப் பகுதியிலும் வலது கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது

கத்திக்குத்துக்கு இலக்கான சட்டபீடத் தலைவியின் உடலில் பல காயங்கள் காணப்படுவதுடன் அவர் அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமானதாக இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்திய மாணவன் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்றுவதுடன் சட்ட பீடத்தில் பட்டப்படிப்பு மாணவராகவும் உள்ளார். தமது ஒப்படை அறிக்கையை சட்டபீடத் தலைவி நிராகரித்ததாலேயே அவரைக் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர் தமது புத்தகப் பொதிக்குள் மறைத்துகத்தியை எடுத்து வந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சட்டபீடத் தலைவியை கத்தியால் குத்திய மாணவன் அவ்விடத்தில் வைத்தே ஏதோ ஒரு மருந்தொன்றை உட்கொண்டுள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

Wednesday, June 19, 2013

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர் உயிர் இருந்தும் நடமாட முடியாத நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால், புகலிடம் கோருவோர் உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.

2012.08.13ஆம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில், ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கர்ப்பப்பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிக்கின்றதாம்!

கர்ப்பப்பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிப்பதாக தற்போது விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து படிக்க செய்தனர். அவர்கள் அக்கதையை சத்தம் போட்டு படித்தனர். அந்த நேரம் வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது, வயிற்றில் வளரும் குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து இருந்தது. மேலும் அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது. அதன் மூலம் தாயின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கர்ப்ப பையில் வளரும் குழந்தை கவனிப்பது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மகாபாரத கதையில் அர்ஜூனன் தனது கர்ப்பிணி மனைவியிடம் போரின் ஒரு பகுதியான "சக்கரவியூகம்" குறித்து தெரிவித்த தகவலை அவளது வயிற்றில் வளரும் குழந்தை அபிமன்யு கேட்டு தெரிந்து கொண்டதாக புராணம் கூறியமை தற்போது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டுள்ளது

Read more...

பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளிக்க பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை அழைக்குமாறு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னலிகொட, சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோ பிரான்சுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை சந்தித்ததாக பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டமையினால், அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அவரை சாட்சியமளிக்குமாறு இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஊடகவியலாளர் காணாமல் போனமை தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் மேலும் சிலரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோவை இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருந்து தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் எனவும், அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் உளவுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டுமென அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சட்ட பீட பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதி!

நாவல திறந்த பல்கலைக்கழக சட்ட பீட பெண் விரிவுரையாளரை தாக்கியதாகக் கூறப்படும் மாணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மாணவன் பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பெண் விரிவுரையாளர் மீது கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு, ஒருவித வில்லையை உட்கொண்ட காரணத்தினால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த விரிவுரையாளர் கையில் வெட்டுக்காயங்களுடன் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யசோதரா கதிர்காமத்தம்பி என்ற விரிவுரையாளரே குறித்த மாணவனின் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்!

எமது நாட்டில் நிலவிய அசாதாரண பிரச்சினைகளால் இலங்கையின் அரசியல் யாப்பில் 1978 ஆம் ஆண்டு முதல் இது வரைக்கும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தையும் ஒரே பார்வையில்.

Read more...

கண்டி - போகம்பறை சிறைச்சாலை அரசாங்கத்திடம் ஒப்படைக் நடவடிக்கை!

கண்டி - போகம்பறை சிறைச்சாலையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள் ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதன் முதற்கட்டமாக இந்த சிறைச்சாலையிலிருந்த 400 விளக்கமறியல் சந்தேகநபர்கள் பல்லேகலே சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

இவை போன்று ஏனைய கைதிகளும் பல்லேகலே மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.எஸ்.விதானகே கூறினார்.

அதே வேளை இந்த திட்டமானது நகரங்களிலிருந்து சிறைச்சாலைகளை அகற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான இடமாக இருக்கக் கூடாது-கோதபாய

நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற் கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என்பதுடன் வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தவிர்ந்த ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டி அவர் பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இயற்கைத்துறை முகத்தைக் காண படையெடுக்கும் மக்கள்!

நாட்டில் நிலவும் சமாதான சூழலையடுத்து நாலாபாகங் களிலுமிருந்தும் திருகோணமலை இயற்கைத்துறை முகத்தைக் காண மக்கள் படையெடுத்து வருகின்றனர் துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது 03 கப்பல்களே நங்கூரமிட்டு தரித்துள்ளதுடன் இந்தியன் ஓசியன் எனும் கப்பலில் மக்கள் ஏறிப்பார்க்கக்கூடிய வசதிகளை அங்குள்ள பாதுகாப்புதர அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கப்பலில் பயணிக்கும் போது பிரயாணிகள் அணிய வேண்டிய பாதுகாப்பு கவசத்தின் முக்கியத்துவம் பற்றி துறைமுக உத்தியோகத்தர்கள் மக்களுக்கு விளங்கப்படுத்துவதுடன் காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு செல்லும் மக்கள் மேல்தளம், கீழ்த்தளம் என சகல பகுதிகளையும் பார்வையிட்டு கப்பலிலுள்ள ஆசனங்களில் அமர்ந்து சந்தோசமாக பயணத்தைக் களிக்கின்றனர்.

Read more...

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட பெண் விரிவுரையாளர் மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்கு!

நாவல திறந்த பல்கலைகழகத்தின் சட்டபீட பெண் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த விரிவுரையாளர் கையில் வெட்டுக்காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவல திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பி என்ற விரிவுரையாளரே குறித்த மாணவனின் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அறையொன்றில் வைத்தே குறித்த விரிவுரையாளரை மாணவன் கத்தியால் வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நாவல திறந்த பல்கலைகழகத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு நிலவிய பதட்ட நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

ஊடகவியலாளர் தில்கா சமன்மலீயிடம் மாட்டிக் கொண்டார் ஞானஸார தேரர்! தான் மதுவருந்தி வாகனம் ஓட்டியதையும் தண்டப்பணம் செலுத்தியுள்ளதையும் ஒப்புக்கொண்டார்.....!!!!

வார வாரம் தெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் தெரண 360 நிகழ்ச்சியில் இவ்வாரம் கலந்துகொண்டவர் , பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸாரதேரர். அவரை அரசியல்சார் விடயங்களுடன் தொடர்புபடுத்தி பேட்டி கண்டவர் ஊடகவியலாளர் தில்கா சமன்மலீ.

ஞானஸார தேர்ர், சிங்கள பௌத்தர்கள் பற்றிக் குறிப்பிடும்போது சூது மற்றும் மதுபானம் தொடர்பில் சிங்களவர்கள் தங்களது பரம எதிர்ப்பை வெளிக்காட்டக்கூடியவர்கள் எனக்குறிப்பிட்டார்.

அப்போது தில்கா இடையில் குறுக்கிட்டார்.

நீதிமன்றம் குற்றத்தை முன்வைத்தது. குற்றவாளி ஞானஸார தேரர். 9 வழக்குத் தாக்கல்கள். அனுமதிப் பத்திரமின்றி அதிக போதையுடன் வாகனம் ஓட்டியமை அதில் முக்கியமானது. அவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் தில்கா மிகவும் காரசாரமான முறையில் கேள்விகளை முன்வைத்தார். கேள்விக்கு பதிலளிக்கவியலாமல் ஞானஸார்ர் திக்குமுக்காடி கதையை மாற்றியமைக்க முனைந்தபோதும் தில்கா விட்டபாடில்லை. மருத்துவ அறிக்கைகள் மூலம் அது உறுதிப்பட்டதே என தில்கா குறிப்பிடும்போது, தேரர், மற்றைய கேள்விக்குப் போவோமா? எனக் கேட்டார்.

அத்தோடு, பஞ்ஞரத்ன தேரர் பற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, அவ்வாறான பிக்கு ஒருவர் பற்றித் தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். இரண்டு விநாடிகள் செல்லவில்லை. பின்னர் முன்பின் முரணாக பஞ்சரத்ன தேரர் பற்றித் தனக்குத் தெரியுமென்றும், ஆயினும் அவர் தங்கள் இயக்கத்தின் விமர்சனப் பிரிவில் கடமைபுரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆயினும், 2012 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, ஞானஸார தேரர், பஞ்சரத்ன தேரர் விசேட விமர்சனப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். அது பற்றிய இறுதியாகவுள்ள காணொளியில் காணலாம்.

எதுஎவ்வாறாயினும், கீழே நீதிமன்றம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தெரண 360 செவ்வியில் தில்கா ஞானஸார தேர்ரிடம் வினாக்கள் இடைமறித்து, வினாக்கள் தொடுத்த முக்கிய பகுதிகள் கொண்ட காணொளி என்பன கீழுள்ளது.

ஞானஸார தேர்ருடன் தில்கா கண்ட செவ்வியின் முழுமையான தமிழ் வடிவம் வெகுவிரைவில் பதிவேற்றப்படும்.......

(கலைமகன் பைரூஸ்)



Read more...

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பம்!

கைதிகள் இந்திய கடற்பரப்பிலா? அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர்? என்ற பிரச்சினைக்கு பதில் சொல்லும் ஜீ. பி. எஸ். தொழில்நுட்பம்

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லையை நிர்ணயித்து, சாட்சியை உறுதி செய்யும் பொருட்டு, இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய மூன்று குற்றச் சாட்டுக்களின் பேரில் ஐந்து இந்திய பிரஜைகளுக்கும், மூன்று இலங்கை பிரஜைகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கடல் எல்லையை நிர்ணயித்து அடையாளம் காண்பதற்காக இவ்வாறு முதன்முறையாக ஜீ. பி. எஸ். தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

குற்றம் சுமத்தப்பட்டோர் கைது செய்யப்படும் போது அவர்கள் கடலில் இருந்த இடத்தைச் சரியாக அடையாளம் காண ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தை பாவிக்க அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன அனுமதி வழங்கினார்.

இந்திய றோலர் படகிலிருந்தவர்கள் சிங்கி படகிலிருந்த இலங்கையர்களுக்கு 955.04 கிராம் நிறையுடனான ஹெரோயின் பார்சல்களை கைமாற்றும் போது கடற்படையினரால் கைதாகினர். அவ்வேளை ஜீ.பி.எஸ். தொழில் நுட்ப உபகரணங்களும் கைப்பற்றபட்டன. இவர்கள் கைதாகும் போது இந்திய கடற்பரப்பிலா? அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர்? என்ற பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் அரச சிரேஷ்ட வழக்குரைஞர் தென்னக் கோன் ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப முறையின் ஊடாகப் பெற்ற செய்திப் புகைப்படங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

நீதிமன்றத்தில் வீடியோ புரஜக்டரும் திரை ஒன்றும் பொருத்தப்படும். இதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். உள்ளூர் நீர்ப்பரப்பில் இவர்கள் கைதானதாகக் கடற்படை லெப்டினன்ட் சரித்த குணவர்தனவும், மாலுமி சமித் சானக்கவும் தெரிவித்தனர்.

இந்திய நீர்ப்பரப்பில் கைதாகி இலங்கை நீர்ப்பரப்புக்கு கொண்டு வரப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர சட்டத்தரணிகள் யோசனை தெரிவித்தனர். கைதான போது படகுகளில் பயன்படுத்தப்பட்ட ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப உபகரணங்களில் பதியப்பட்டுள்ள புகைப் படங்களை சமர்ப்பிக்க விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டதால் சாட்சியை உறுதிப்படுத்த இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more...

மீனவர்களை பாதுகாக்க புதிய திட்டம்! மீன்பிடி படகுகளுக்கு செய்மதி தொழில்நுட்பத்தை பொருத்த தீர்மானம்!

அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் மீனவர்கள் பலியாகியதையடுத்து, மீனவர்களுக்கு ஏற்படும் அனர்த் தங்களை மட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான செயற்த்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்முதற்கட்டமாக, 3 ஆயிரம் மீன்பிடி படகுகளுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய செய்மதி தொடர்பு கருவிகளை பொருத்தப்படவுள்ளது எனவும், இதன்மூலம் படகு ஓட்டுனர்களுக்கு இலகுவாக காலநிலை தொடர்பான தகவல்களை உரிய காலத்திற்குள் வழங்க முடிவதுடன், சட்டவிரோத செயற்பாடுகளையும் தடுக்க முடியும் என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியாது, எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் 51 மீனவர்கள் பலியாகியதுடன், 6 பேர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Read more...

2012ம் ஆண்டில் மாத்திரம் 7.6 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்வு! - ஐ.நா.சபை

4 விநாடிகளுக்கு ஒரு தடவை ஒருவர் அகதியாக இடம்பெயருகின்றார்!

2012ம் ஆண்டில் மாத்திரம் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், 4 விநாடி களுக்கு ஒரு தடவை ஒருவர் வீதம் அகதியாக இடம்பெயர்வதாகவும், 1994ம் ஆண்டுக்கு பின்னர் அகதிகளின் எண்ணிக்கையில் கடந்த வருடமே பாரிய அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக சிரியாவில் இடம்பெறும் மோதல்களே எனவும் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 55 சதவீதமானோர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் உலக அகதிகளில் 81 சதவீதமானோர் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அகதிகள் இடம்பெயரும் நாடுகளில் காணப்படும் மோதல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்துவதற்கான தேவை அதிகளவில் உணரப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரலாயம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையை உளவு பார்ப்பதற்காகவே அமெரிக்கா திருகோணமலையில் நிலையமொன்றை அமைத்துள்ளது!

"த.தே. கூட்டமைப்பினருக்கு அதிகாரங்களை வழங்கும் நிலையொன்று ஏற்பட்டால், கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கை இணைக்கும்படி கேட்பார்கள் அவ்வாறு இணைக்கப்பட்டால் கிழக்கு, வடக்கிற்கு அடிமையாக வேண்டிய ஒரு நிலை உருவாகும" - விமல்

இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே அமெரிக்கா திருகோணமலை நகரசபையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கையில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருகோணமலை நூலகத்தில் அமெரிக்க நிலையமொன்றை அமைத்துள்ளது எனவும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது தேசத்துரோகமான ஒரு விடயம் எனவும், புகழ்பெற்ற திருகோணமலை துறைமுகத்திற்கு இது ஒரு ஆபத்தான விடயம் என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் அரசியல் நிலைபற்றி விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நகரசபை கூட்டமைப்பின் கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனவும், இது தேசத்துரோகமான செயல் மாத்திரமல்ல, புகழ்பெற்ற துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைக்கும் ஆபத்தான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டமைப்பினர் அவசரமாக அழைத்துள்ளது இந்தியா இலங்கையில் உள்ள உள்விவகாரங்களை பயன்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை இலங்கை மீது செலுத்துவதற்கு முயற்சிக்கின்றது. கூட்டமைப்பினரை அழைத்திருப்பதன் உள்நோக்கமும் அதுதான். இந்தியாவுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம். சம்பந்தனைப் பயன்படுத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நீங்கள் நினைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறெந்த நாடோ இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனவும், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இல்லாதொழித்த பின்னரே வடக்கு மாகாண தேர்தல் நடாத்த வேண்டும் எனவும், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டும் பழைய நிலையொன்று உருவாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு வழங்க நாம் தயாராக இல்லை எனவும், அவ்வாறு வழங்கும் நிலையொன்று ஏற்பட்டால் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கை இணைக்கும்படி கேட்பார்கள் அவ்வாறு இணைக்கப்பட்டால் கிழக்கு, வடக்கிற்கு அடிமையாக வேண்டிய ஒரு நிலை உருவாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

விசேட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை மக்களின் இறைமையை பாதுகாக்கும் முதற்படி! கபே கண்காணிப்பு குழு.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக் கப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டமைக்கு பெப்ரல் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் விசேட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை மக்களின் இறைமையை பாதுகாக்கும் முதற்படியாகுமென தெரிவித்துள்ள கபே கண்காணிப்பு குழு, சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம வாக்குரிமையை இழந்த மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் வரப்பிரசாதத்தை பெற்றுக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை தேர்தல் கண்காணிப்பு குழு என்ற அடிப்படையில் வரவேற்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

Read more...

24 மணித்தியாலத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு தொலைபேசியில் உரையாடிய நபர்! தொலைபேசி கட்டணம் செலுத்த மறுப்பு!

கண்டி, திகனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்த தவறியமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

குறித்த நபருக்கு எதிராக தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் நிறுவனமொன்று வழக்கு தாக்கல் செய்த வழக்கில், குறித்த நபர் தனது சிம் அட்டைக்கு ரோமிங் வசதியை பெற்று 24 மணித்தியாலத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் அதற்குரிய கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 24 மணிநேர காலப்பகுதிக்குள் 501 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் தனது சிம் அட்டையை இத்தாலியிலுள்ள உறவினருக்கு கொடுத்து விட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் சிம் அட்டையை ஒருபோதும் பயன்படுத்தவில்லையெனவும் அவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவர் தனது பெயரில் பெற்றுக்கொண்ட சிம் அட்டையை கைமாற்ற முடியாது என தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read more...

அரசியல் வாதியாக இருந்தால் எதையும் செய்யலாமா???. வடமேல் மாகாண சபை உறுப்பினரின் கற்பனை சுக்குநூறாகியது!

தான் ஒரு அரசியல் வாதியாக உள்ளதால் நினைத்த எதையும் செய்யலாம் என்று எண்ணிய, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மகிந்த ராஜபக்ஸ. ஆசிரியை ஒருவர் முழங்காலில் நிறுத்திய சம்பவத்துடன் குற்றம்சாட்டப்பட்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கிவிடுவதென்றும்,இனிமேல் அவருக்கு கட்சியின் சார்பில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு கொடுக்கப்பட மாட்டாதென்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததன் மூலம் சரத்குமாரவின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தை நேரில் கண்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த ஒருவர் அந்த வாக்குமூலத்தை வாபஸ் பெறறுள்ளார் என தெரிவித்து சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் பொலிஸார் அதற்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டதை தொடர்ந்து, சந்தேக நபருக்கு நீதவான் பிணை வழங்க மறுத்ததுடன், அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த வாக்குமூலம் வாபஸ் பெறப்பட்டமை ஏதேனும் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்றிருக்கலாம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, பாடசாலையின் உபஅதிபர் ஏன் முறைப்பாட்டை வாபஸ் பெற்றார்? அவருக்கு அரசியல் அழுத் தங்கள் வந்தனவா போன்ற விடயங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்றும், அத்தகைய அழுத்தங்கள் தொடர்பில் சாட்சியாளர் கட்டளை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம சட்டம் சகலருக்கும் சமனானது என்பதை நீதிமன்றம் நிருபித்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், குறித்த ஆசிரியை எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். ஆசிரியை எச்சரித்த விடயத்தை தனது அம்மாணவி தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்ததானது தனது தலையில் தானே மண்ணை அள்ளி வைத்ததற்கு ஒப்பானதாகும். (பி.கா)

Read more...

Tuesday, June 18, 2013

பாசிசப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ மோகம் ஆடிய கோர வெறியாட்டத்தின் 23 ம் ஆண்டு நினைவு.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் நிலைகுலைந்தது என்பது யாவரும் அறிந்தது. புலிகள் தமது பாசிசக் கொள்கைகளின் நிமித்தம் ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்டனர் என்பது வரலாற்றுப் பதிவு. இப்பதிவுகளின் வரிசையில் இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் கோழைத்தனமாக கொல்லப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா வை அக்கட்சியின் சுவிஸ் கிளையினர் நினைவு கூருகின்றனர்.

புலிகளின் கோர வெறியாட்டத்தை ஈபிஆர்எல்எப் இன் சுவிஸ் கிளையினர் நினைவு கூருகின்ற அதே சமயத்தில் அமரர் பத்மநாபாவினால் வழிநடத்ததப்பட்ட அரசியல் வியாபாரிகள் சிலர் இன்றும் புலிகளை தம் ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.

மேலும் அண்மைக்காலம் வரை புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை தாறுமாக விமர்சித்து வந்த அவரது வழித்தோன்றல்கள் பலரும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more...

செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்!

செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

1. இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.

2. இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது. முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனரை உபயோகப்படுத்தலாம்.

3. பூக்களில் வைட்டமின் சி அதிகம் அடங்கியுள்ளதால், நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது.

4. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

5. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

6. செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடி வயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்றவை குறையும்.

Read more...

இருகால்களும் செயலிழந்த நிலையில் கடலில் சுழியோடிய பெண்!

இரு கால்களையும் இழந்த பிரிட்டனைச் சேர்ந்தவர், சூ ஆஸ்டின் என்ற பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து, அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார்.

16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால், இவரது இரு கால்களும் செயல் இழந்த நிலையிலும் தனது நம்பிக்கையை கை விடாத அவர் தான் கற்றிருந்த நீச்சல் மீது, அலாதியான காதல் கொண்டிருந்ததனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என, ஆசைப்பட்டார்.

தனது இந்த ஆசையை நிவர்த்தி செய்ய துணிந்த அவர் இதனை செயற்படுத்த தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைது மீண்டும் நீச்சல் பழகி கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவரது சக்கர நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையிலும் 360 டிகிரி கோணத்திலும் சுழலக்கூடியதாக வடிவமைத்துள்ளார்.

Read more...

லண்டனில் அடி வாங்கிக் கட்டிய புலி ஆதரவாளர்கள்!

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ,புலி ஆதரவு காடையர்களுக்கும்,இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று(17.06.2013) லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தை பார்வையிடுவதை இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி புலி ஆதரவு காடையர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில மணிகளில் புலி ஆதரவாளர்களுக்கும் இலங்கை அதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இலங்கை ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்த பிரித்தானியக் காவல்துறையினர் ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தமை குறிப்பிடத்தக்கது

Read more...

ஜனாதிபதிக்காக காத்திருந்து பகலிலே குட்டித்தூக்கம் போட்ட சீன அதிகாரிகள்! (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதியின் பிந்திய வரவால் கிளிநொச்சி நிகழ்வுகழில் பங்குபெற்ற வந்திருந்த சீன அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.....

10 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு ஜனாதிபதியின் பிந்திய வருகையால் 1.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்த சீன அதிகாரிகள் மற்றும் பொது மக்களில் பலர் கதிரைகளில் இருந்தவாறே குட்டித்தூக்கம் போட்டனர்... ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் எனது தாமதமானவருகைக்கு நான் காரணமல்ல உங்கள் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்துவிட்டு வருவதற்கே தாமதமாகிவிட்டது என்று குறிப்பிட்டார்....

அங்கு ஆரம்பத்தில் சிங்களமொழியில் உரையாற்றிய ஜனாதிபதி இறுதியாக சில வரிகள் தமிழில் உரையாற்றினார் அவ்வாறு அவர் உரையாற்றுகையில் மக்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்..

அவர் தமிழில் உரையாற்றுகையில் :

முப்பது வருடமாகா நீங்கள் உங்கள் பிள்ளைகள் உங்கள் உறவினர்கள் பட்ட வேதனை கஸ்ரம் நஸ்ரம் எல்லாம் எனக்கு நன்றாக தெரியும்..

ஆனால் இன்று அந்த நிலை இல்லை எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்!!

முப்பது வருடகாலம் நீங்கள் பட்ட கஸ்ரங்கள் எல்லாவற்றையும் தான் நாம் இப்போதும் செய்துவருகின்றோம்!!!!

என்று அவர் குறிப்பிட்டபொழுது மக்களிடத்தில் ஒருவித அமைதியான நிலை ஏற்பட்டது.... இதை உணர்ந்த ஜனாதிபதி,

மீண்டும் சிங்களத்தில்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதுபோல் யுத்தத்தில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாவற்றையும் நாம் மீண்டும் தருவோம்... என கூறினார்..

Read more...

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண்!

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற 2013 ஆண்டுக்கான திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த அழகு ராணி போட்டியில் இலங்கை நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியான நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய அழகு ராணிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகா அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அநுராதபுரத்தில் தற்காலிகமாக 13 பாடசாலைகளை மூட தீர்மானம்!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு வருகை தரும் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அநுராதபுரம் மாவட்டத்தின் 13 பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு வடமத்திய மாகாண சபை தீர்மானித்துள்ளது.

அநுராதபுரம் மற்றும் கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர்
மூடப்படும் பாடசாலை நாட்களுக்குப் பதிலாக வேறு தினங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் N.W.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மேலும் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com