Tuesday, June 18, 2013

இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய முயற்ச்சி! பறக்கும் மோட்டார் சைக்கிள் அறிமுகம்!

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன.

95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது. அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது.

எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் எந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Read more...

ஜப்பான் விஞ்ஞானி தயாரித்த மனித ரோபோ!

மனிதனை போன்று செயல்படும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஒசாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குனராக உள்ள ஜப்பான் விஞ்ஞானி ஹிரோஷி ஷிகுரோ தயாரித்துள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளதுடன் ஆணாக மாறும்போது அதை தனது உருவம் போன்று உடை அலங்காரம் மற்றும் முகஅமைப்பை உருவாக்குகிறார். அதே ரோபோவை அழகிய பெண் போன்றும் உடை அலங்காரம் மற்றும் முக அமைப்பிலும் மாற்றம் செய்கிறார்.

நியூயார்க்கில் நடந்த சர்வதேச ரோபோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார்.

Read more...

மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக தனக்குத் தானே சத்திரசிகிச்சை செய்துக் கொண்ட வைத்தியர்!

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் லியோனிட் ரோகோசோவ் வைத்தியராக பணியாற்றினார். ஒருநாள் காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ விமான பயணத்துக்கு இடம் தரவில்லை.

அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானதால் "அப்பென்டிஸைட்டிசிஸ்" எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார். மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, அன்றிரவு 10 மணியளவில் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார். அத்துடன் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக கடமையாற்றினார் என்பதுடன் உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இடம்பெயர்ந்தோரின் வாக்கு உரிமையை உறுதிப்படுத்த விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந் தவர்கள் வாக்களிக்க முடியும்!

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக் கப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

குறிப்பாக வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை எனவும் இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டடு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பிரசித்தமான இடமொன்றில் அரைநிர்வாணத்துடன் குளித்த பெண்கள் கைது!

கம்பஹா பிரிவுக்குட்பட்ட பிரசித்தமான இடமொன்றில், மதுபோதையில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 18 வயதான குறித்த பெண்கள், ஆண்கள் மூவருடன் மேலாடை மாத்திரம் அணிந்துக்கொண்டு அரைநிர்வாணத்துடன் கெடவல வெல்ல ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையிலேயே கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்படும்போது மது போதையில் இருந்ததாகவும், பிரசித்தமான இடத்தில் இவ்வாறு அநாகரிகமாக இருக்கமுடியாது என்பதனால் அவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

ஜெனிவாவோ, ஜெயலலிதாவோ, வைகோ.வோ, 13ஆவது திருத்தச் சட்டத்தைப்பற்றி தீர்மானிக்க முடியாது!

நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது ஆயுதங்களை இன்று சம்பந்தனே கையிலேந்தியுள்ளார்.- கெஹெலிய

இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் இறைமையைக் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு அந்நாட்டு மக்களையே சாரும் எனவும், அதற்கிணங்க எமது நாட்டின் இறைமையைக் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு எம்மக்களையே சாரும் எனவும், அதற்கிணங்க அவர்களே 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும், ஜெனிவாவோ, ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ தீர்மானிக்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்கெல்ல தெரிவித்துள்ளார்.

மாத்தளை வாடிவீட்டில் நடைபெற்ற நிகழ்மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த நாடு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவோ அல்லது அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகவோ மாறுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என தொவித்துள்ளார்.

அத்துடன் அதிகாரத்தைப் பகிர்வது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அது எந்த வகையில் அமைய வேண்டுமென்பதை நாமே முடிவு செய்வோம். காலத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களே தேவை எனவும் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது ஆயுதங்களை இன்று சம்பந்தனே கையிலேந்தியுள்ளார் எனவும் இதைக் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது எனவும் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் யாருடன் வேண்டுமானாலும் பேசட்டும் இது அவருக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமை. ஆனால் எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் அதனை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப நாமே மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் அழிக்கப்பட்டதோடு கொலைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதன் பின் நாம் அரசியல் செய்யவில்லை. அபிவிருத்தியே செய்து வருகிறோம். இன்று மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அரச சேவையைப் பலப்படுத்த வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

இரு தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை ஒத்தி வைத்தது குவைத்!

குவைத்தில் இந்தியத் தமிழர்கள் இருவருக்கு இன்று நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, இந்தியாவின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்சும் சித்தாம்பூரைச் சேர்ந்த காளிதாஸும் கடந்த சில ஆண்டுகளாக குவைத்தில் சாரதிகளாக பணியாற்றி வந்தனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சுரேசுக்கும், காளிதாஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி குவைட் நாட்டுப் பொலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷ், காளிதாஸ் இருவரையும் ஜூன் 18ஆம் தேதி தூக்கிலிடுவதாக குவைட் நாடு அறிவித்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று சுரேசின் தாயாரும், கணவரை காப்பாற்ற வேண்டும் என்று காளிதாஸின் மனைவியும் ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசின் துரித நடவடிக்கையினால் குறித்த இருவருக்குமான மரண தண்டனையை நிறுத்திவைத்துள்ளது என குவைட்டிற்கான இந்திய தூதர் சதீஷ் மேத்தா, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதால், வார இறுதி நாளாக இருந்த போதிலும் குவைட் அரசு அதிகாரிகளைத் தாம் தொடர்பு கொண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரினோம். குவைட் சட்ட அமைச்சர் ஆகாஃப் உள்ளிட்டோரின் தலையீட்டின் பேரில் தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குவைத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

Read more...

காத்தான்குடி நகர சபை தலைவரையும், நகரசபை உறுப்பினரையும் கைது செய்க! - நீதவான்

காத்தான்குடி நகர சபை தலைவரையும், காத்தான்குடி நகரசபை உறுப்பினரையும், கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை ஒன்றிற்காக மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு இன்று ஆஜராகும்படி காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பருக்கும், பிரதித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்ததாகவும், எனினும் அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியக் காரணத்தினால் மேற்படி காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரையும், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாத்தையும் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமானதென கூறப்படும் மையவாடி காணியில் காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்று அமைப்பதற்காக வேலியிட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கிற்கு ஆஜராகும்படி இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும், 23 வயதுடைய விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு மாணவி, நேற்று காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழக கட்டிடத்தின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பல்கலைக்கழக கட்டிட மாடியிலிருந்து குதித்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

ஐ.தே.கட்சிக்குள் பிளவு உக்கிரம்! கட்சியிலிருந்து 10 உறுப்பினர்களை வெளியேற்ற தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட, 10 உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான தீர்மானமொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியிலிருந்து வெளியேற்றப்படவுள்ளவர்களில், தென் மாகாணசபையின் முக்கிய உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள உட்பூசல்கள் காரணமாக சிறந்த எதிர்கட்சியாக தன்னை அடையாளப்படுத்த தவறி வருவதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பெண்ணுடன் சில்மிசத்தில் ஈடுபட்ட பொலிஸ் ஒருவருக்கு தண்டம்!

கங்காராம கோவிலுக்கு அருகில் மதுபோதையில் பெண்ணொருவருடன் தகாகமுறையில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 5000 ரூபாவை தண்டமாக செலுத்தவேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த நபர் அரச செலவாகவே 5000 ரூபாவை செலுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தகாகமுறையில் நடந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 1500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களை கைது செய்வதற்கு சென்ற பொலிஸாரை இவ்விருவரும் தகாத வார்த்தைகளினால் திட்டியதாகவும், கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Read more...

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கூட்டம் இன்று!

13 ஆவது அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள அவசர திருத்த சட்டமூலம் குறித்து, இன்று அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும், அதுதொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாகாண சபைகளை இணைப்பது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததற்கிணங்க, அது தொடர்பில் சட்டமூலம் உயர்நீதிமன்றில் முன்வைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற வியாக்கினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், துரிதமாக பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படும் வேறு திருத்தங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

Read more...

கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவில்.-எச்.எம்.எம்.ஹரிஸ்

"ஒளிரும் கல்முனை"எனும் தொனிப்பொருளில் கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கல்முனையை துரிதமாக பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்காகவே "ஒளிரும் கல்முனை" என்ற பெயரை இந்த அபிவிருத்தித்திட்டத்திற்கான பெயராக சூட்டியுள்ளோம். இதில் கல்வி, வீதி அமைப்பு, வடிகான் வசதி, கலாசார மேம்பாடு என 51 வகையான வேலைத்திட்டங்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட வேலை எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு இப்பகுதியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள், மேயர் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்பும் எனக்கு கிடைக்கும். அனைவரின் ஆலோசனையின் படியே இத்திட்டத்தை முன்னெடுக்கவும் உள்ளோம்.

கல்முனைப் பகுதி என்பது பல்லின மக்கள் ஒன்றாக வாழும் பகுதியாகும். இதில் எந்த வேறுபாடுகளும் காட்டாமல் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.காரியப்பர், எம்.சீ.அஹமட், ஏ.ஆர்.மனசூர், எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் பேரியல் அஷ்ரப் போன்றவர்கள் சேவையாற்றியுள்ளார்கள். அதன் அடிப்படையில் இச்சேவையும் அமையும் என்பதோடு ஒரேநேரத்தில் இப்படியான பலசேவைகள் எனது காலத்தில் நான் முன்னெடுப்பதையிட்டு நான் பெருமிதமடைகிறேன் என எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

Read more...

அவுஸ்திரேலியவை தோற்கடித்து அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்தது இலங்கையணி!

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் சபையின் செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கையணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றதன் மூலம் செம்பியன்ஸ் கிண்ண போட்டியின் அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கையணி உறுதிசெய்துள்ளது.

லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி லீக் போட்டி இலங்கையணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து, 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்ன 57 ஓட்டங்களையும், டில்ஷான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்செல் ஜோன்சன் 3 விக்கட்டுகளையும், கிலின்ட் மெக்கே , போக்னர் , டொகார்ட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

254 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர், 42.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 233 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அணியின் துடுப்பாட்டத்தில் எடம் வோக்ஸ் 49 ஓட்டங்களையும், கிலென் மெக்ஸ்வெல் 32 ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர். இலங்கையணியின் பந்துவீச்சில் நுவான் குலசேகர 3 விக்கட்டுகளையும், ரங்கன ஹேரத் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை செம்பியன்ஸ் கிண்ணதொடரின் முதலாது அரையிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணியும், 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எல்.ரீ.ரீ.ஈ.யினர் வைத்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டுமென்று யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி.........உச்ச நீதிமன்றம.!

யாழில் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் அதிகாரம் நிலவிய வேளையில் புலி ஆதரவாளர்களால் அதிகாரிகளின் அனுமதி இன்றி பெயர்மாற்றம் செய்யப்பட்ட யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராமத்தை மீண்டும் முன்னர் அழைக்கப்பட்ட பெயருக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலருக்கு உத்தரவிட்டது.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் தமது கிராமத்திற்கு வைத்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டுமென்று யாழ் வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கெண்ட போதே உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

இதற்கிணங்க தற்போது 'சிந்துபுரம் வர்த்தகச் சந்தை' என குறிப்பிடப்படும் பெயர்ப்பலகையை நீக்கி, அதற்கு வட்டுக்கோட்டை வர்த்தக சந்தை எனப் பெயரிடுமாறும் உச்ச நீதிமன்றம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலருக்கு உத்தரவிட்டது. யாழ்பாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் அதிகாரம் நிலவிய வேளையில் புலி ஆதரவாளர்கள் அதிகாரிகளின் அனுமதி இன்றி 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி மாவீரர் தினத்தில் இக்கிராமத்தின் பெயரை சிந்துபுரம் என மாற்றினர்.

யுத்ததி வெற்றிக்குப் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் பலம் சீர்குலைந்த பின்னர் இப்பகுதியிலுள்ள காந்தி ஜீ சமூக சேவை நிலைய உறுப்பினர்கள் சிலர் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்ட புலி உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான மாவீரர் தினம் என்ற பகுதியை அழித்து மீண்டும் சிந்துபுரம் பொது வர்த்தக சந்தை என பெயர்ப்பலகையைத் தயாரித்துள்ளனர் அத்துடன் சில அமைப்புகள் தொடர்ந்தும் சிந்துபுரம் என்றே பாவித்து வந்துள்ளன.

இதனால் கிராம மக்களிடையே பிரச்சினை உருவாகின. சிந்து என்றால் இரத்தம் சிந்துதல், நாசமாகுதல் என்பதால் அங்கு பல குலத்தவர்கள் வாழ்வதாகக் கூறிய மனுதாரர்கள், சிந்துபுரம் என்ற பெயரை இடுவதால் இந்திய குளமான சிந்துநாடார்கள் மட்டும் இருப்பதாகத் தெரியுமெனத் தெரிவித்தனர். அத்துடன் இப் பெயர்மாற்றம் தொடர்பாக பிரதேச சபை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள், தமது கிராமத்தை மீண்டும் பழைய பெயரில் சிவன்கோவிலடி என்று பெயரிட்டு, வர்த்தமானி அறிவித்தலைப் பிறப்பிக்குமாறும், சிந்துபுரம் என்ற பெயரைப் பாவிப்பதை நிறுத்துமாறும் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கேட்டனர்.

Read more...

Monday, June 17, 2013

சிவில் பாதுகாப்பு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்! பிரதி பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்!! (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்திலேயே கூடுதலான குற்றச் செயல்கள் இடம் பெறுவதாக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர கல்முனையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முஸ்லிம், தமிழ் சாய்ந்தமருதுபிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை மாலை கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. ஏ. கபார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர பிரதம அதிதியாகவும் கல்முனை பொலிஸ்அத்தியட்சகர் காமினி தென்னக் கோன், கல்முனை தமிழ் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர்களான கே. லவநாதன், எம்.எம்.நௌபல் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெவ்வை ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவ, பௌத்த சமயத் தலைவர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். குறித்த பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரிகளும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களும் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது:

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் நடை பெறுகின்ற போது சிவில் பாதுகாப்பு குழுவினர் பொலிசாரிடம் முறையிடுகின்றனர், அதேபோன்று அவர்கள் பொலிசாருடன் நட்பும் இரகசிய தொடர்பும் வைத்துள்ளனர். அதே போன்று சிவில் பாதுகாப்பு குழுவினரின் நடவடிக்கைகள் பற்றி பொது மக்களும் பொலிஸாரிடம் முறையிடும் நிலை அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. அவ்வாறு பொது மக்களால் செய்யப்படுகின்ற முறைப்பாட்டை புலனாய்வு செய்கின்ற போது சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பாரிய குற்றங்கள் செய்வதும்,பாரிய குற்றங்களுக்கு துணைபோவதும் தெரிய வருகின்றது.

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கடமை பொறுப்பு என்னவென்று தெரியாமல் செயல்படுவதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது. கல்முனை பிரதேசத்தில் 76 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 76 சிவில் பாதுகாப்பு குழுக்கள் இயங்குகின்றன. இவர்களால் பொலிஸ் நடமாடும் சேவைகள்,சிரமதானங்கள்,இரத்த தானங்கள் போண்ற மக்களுக்கு உதவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்திலேயே குற்றச் செயல்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதாகவும் கூடுதலான குற்றச் செயல்களுக்காக நீதி மன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேக்கர தெரிவித்தார். கடந்த ஜந்து மாதங்களில் 35 பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் 85 பேர் வாகனம் செலுத்தி நீதி மன்றத்தில் தண்டம் செலுத்தியுள்ளனர். அதே போன்று, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் 916 பேர் தண்டம் செலுத்தியுள்ளனர். அதே போன்று பல சிறியளவிலான குற்றங்கள் இடம் பெற்றுள்ளன இவ்வாறு பல குற்றச் செயல்கள் இடம் பெறுமாயின் கல்முனை பிரதேசத்தில் இயங்கும் 76 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடமை என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்களையும் பொலிசார் கண்ணியப்படுத்த வேண்டும் அவர்களுக்கும் பொலிசாருக்குமிடையே நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன். சிவில் பாது காப்புக் குழுக்கள் ஒரு அமைச்சின் கீழோ அல்லது ஒரு அமைச்சசரின் கீழோ இயங்கவில்லை மாறாக நேரடியாக ஜனாதிபதியின் கீழ் இயங்குகின்றது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியினால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இன்னும் ஐந்து மாதங்களின் பின்னர் இங்கு வருகின்றபோது கல்முனையில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்கள் நிறுத்தப்படவேண்டும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகள் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என அவர் அங்கு தெரிவித்தார்.

அங்கு, சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான அடையாள அடடையும் பிரதி பொலிஸ்மா அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.

(நற்பிட்டிமுனை நிருபர்)

Read more...

பொலிஸார் கூலிக்கு ஆட்களைக் கொலைசெய்யக் காரணம், இலங்கையில் பொலிஸ் ஆணைக்குழு இல்லாமையினாலேயே! –ரணில்

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவொன்று இலங்கையில் நிறுவப்படாமையின் பிரதிபலிப் பாக அண்மைக் காலத்தில் பொலிஸ் சேவையில் உள்ள உயர் அதிகாரிகளும் கூலிக்கு ஆட்களைக் கொலைசெய்யக் காரணமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புப் பற்றித் தெளிவுறுத்துமுகமாக சுதந்திர மேடை அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆணைகள் பிறப்பித்து பொலிஸாருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒருவருக்கு மாத்திரமன்றி 17 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமற்செய்து, சுயாதீனமாக இயங்கக் கூடிய பொலிஸ் ஆணைக்குழுவை இல்லாமற் செய்த அரசுக்கும் கூடவே எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஒன்று இல்லாமையின் பிரதிபலிப்பே அவ்வாறு நடப்பதற்குக் காரணம் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

நீதிமன்றத்திற்கு சுயாதீனத் தன்மை இல்லாமலிருப்பது போலவே, பிரதம நீதியரசர்களின் விருப்பப்படி இல்லாமற் செய்வதாகவும் இலஞ்சம் வாங்கும் நிலை அதிகரித்துள்ள நாட்டில் பிரச்சினைகள் பூதகரமாக மாறியுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள அங்கு சுட்டிக் காட்டினார்.

இதனால் வடக்கின் தேர்தல் பற்றி கருத்து வெளியிடுவதற்கு முன்னர் 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் மக்களின் இருப்புக்கு 17 ஆவது திருத்தச் சட்டம் மிக முக்கியம் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

சுதந்திர ஆட்சி, சுதந்திர நிருவாகம் இல்லாதிருப்பதால் நாடு இன்னும் அதள பாதாளத்தை நோக்கிச் செல்லும் எனவும், ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் பாரியதொரு குழப்பநிலை உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஹெல உறுமய கொண்டுவந்த பிரேரணையினால் அமைச்சரவையினுள் ‘அடித்துக் கொண்டார்கள், அடிக்கப் போனார்’ என்று தனக்கு அறியவந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பிளவுகள் ஏற்படக் காரணம் குறிக்கோளின்றி அதிகாரத்தையே நோக்காக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியாளர்களினாலேயெ எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

(கேஎப்)

Read more...

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட கிளி வைத்தியர் விடுதலை!!

கிளிநொச்சி கொக்காவில் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்க்குள் அத்துமீறி நுழைந்தார் எனும் குற்றச்சாட்டில் இராணுவத்தினரால் கடந்தவருடம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று திங்கட்கிழமை விடுதலைசெய்யப்பட்டுள்ளார். மேற்படி குற்றச்சாட்டில் கடந்தவருடம் மார்கழி மாதம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட குறித்த வைத்தியர் மாங்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு நீதவானின் உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு முல்லைத்தீவு நிதிமன்றில் இன்று விசாரனைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டது இதன்போது வைத்தியர்மீது குற்றம் நிருபிக்கப்படாததால் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்தவைத்தியர் நீதவான் என்.கணேசராசாவினால் இன்று விடுதலைசெய்யப்பட்டார்...

Read more...

வெள்ளைவேனில் வந்தவர்களால் இளைஞன் கடத்தல்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை வெள்ளை வானில் வந்த இனம்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் சண்டிலிப்பாய்ப் பகுதியில் உள்ள சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இன்ற மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற இந்த கடத்தல் சம்பவத்தில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா ஜெயசுதன் (28)எனும் இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்..

Read more...

பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று ஆரம்பிக்கப்பட்டது!

இலங்கையில் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் http://www.chogm2013.lk/ இன்று(17.06.2013) திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக ஒழுக்கநெறி' எனும் தொனிப்பொருளிலேயே இம்முறை இந்த மாநாடு நடத்தப்படவிருப்பதுடன் இந்த மாட்டில் உலகளாவிய ரீதியிலிருந்து 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி!

இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது.

கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்த ஆலயங்களை பராமரிக்கும் பொறுப்பு இந்திய சந்நியாசிகளிடம் அரசனால் ஒப்படைக்கப்பட்டது. சில காலத்தின் பின்பு வள்ளியம்மன் ஆலயத்தின் பரிபாலனம் மட்டும் சந்நியாசிகலால் கப்புறாளைகளிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்பு கம்புராளைகள் கந்தசுவாமி கோயில், பத்தினியம்மன் கோயில் ஆகியவற்றையும் பஸ்நாயக்க நிலமேயின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

கதிர்காம முருகன் ஆலய வருடாந்த திருவிழாவானது முருகன்வள்ளி திருமண வைபவத்தை சம்பிரதாய பூர்வமாக கூறும் நிகழ்வாகவே அமைகிறது. வைகாசி மாத பௌர்ணமி தினத்தன்று முருகனுக்கு வள்ளியம்மனை திருமணம் செய்து கொடுக்க முதலாதவதாக திருமணப் பேச்சு ஆரம்பமாவதாகவும் அதன்பின்பு 45 நாட்களில் திருமணம் பற்றிய ஏற்பாடுகள், பேச்சுகள், முடிவுகள் என்பன நடைபெற்று 45ஆவது நாள் திருமண வைபவம் ஆரம்பமாகி 15 நாட்களில் கோலாகலமாக நிறைவுறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் திருமணம் பற்றி பேசிய முதல் நாளன்று வள்ளியம்மன் கோயிலிலிருந்து பூஜை செய்யப்பட்ட மரமொன்றைக் கொண்டு வந்து முருகன் கோயிலில் வைப்பதே கன்னிக்கால் நாட்டும் வைபவமாகும்.

இலங்கையில் பல முருகன் கோயில்களில் ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் திருவிழாக்கள் நடைபெறும். மிக முக்கியமாக கதிர்காமம் முருகன் கோயிலில் ஆடிமாதத்திலேயே திருவிழா நடைபெறும். கதிர்காமம் முருகன் ஆலயத்தின் திருவிழா நாட்களை ஒட்டியே பல முக்கியமான முருகனாலயங்களிலும் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.

சாதாரணமாக எமது ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகும் தினத்தை நாள், நட்சத்திரம், திதி போன்றவற்றின் அடிப்படையிலேயே கணித்து முடிவு செய்வர். ஆனால், கதிர்காம ஆலய நிர்வாகத்தினர் பௌர்ணமி தினத்தை அடிப்படையாக வைப்பதே திருவிழா ஆரம்பமாகும் திகதியை முடிவு செய்வர். இதற்கு ஓர் முறையும் கையாளப்படுகிறது. அம்முறையானது வைகாசி மாத பௌர்ணமி தினத்திற்கு அடுத்தநாள் கன்னிக்கால் நாட்டி 45ஆவது நாள் திருவிழா ஆரம்பமாகும்.

பின் 15ஆவது நாளில் இறுதி வீதிவலமும், அடுத்தநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று திருவிழா முடிவடையும். அதாவது, ஆடிமாத பௌர்ணமி தினத்தில் திருவிழா முடிவடையும்.

ஆனால், இந்த வருடம் ஆனிமாத பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் கன்னிக்கால் நாட்டப்பட்டு அதிலிருந்து 45ஆவது நாளான ஆகஸ்ட் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 21ஆம் திகதி தீர்த்தோற்சவமுணம் நடைபெற இருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இம்முறை திருவிழா ஆவணி மாதம் நடைபெறவுள்ளது. அதாவது, வழமைக்கு மாறாக திருவிழா ஒரு மாதம் தாமதமாகியுள்ளது. இதற்கான காரணம் வைகாசி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டுவதற்கு உகந்த நேரம் அமையவில்லை என ஆலயத்தின் பிரதம கப்புறாளை கூறியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கதிர்காமத்தைப் போலவே ஆடிமாதம் திருவிழாவை நடத்தும் ஏனைய முருகனாலய நிர்வாகத்தினரும் கடும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

Read more...

வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழங்காலில் நிறுத்தப்பட்ட ஆசிரியைக்கு நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதி!

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவால், ஆசிரியை ஒருவர் முழங்காலில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையுடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், குறித்த ஆசிரியை எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பில் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இதேவேளை, ஆசிரியை முழங்காலில் வைத்த உறுப்பினருக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதையடுத்து நவகத்தேகம நவோதய பாடசாலை நேரகாலத்துடன் மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரவை, இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போதிலும் பொலிஸார் அதற்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டனர். சம்பவத்தை நேரில் கண்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த ஒருவர் அந்த வாக்குமூலத்தை வாபஸ் பெறறுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த வாக்குமூலம் வாபஸ் பெறப்பட்டமை ஏதேனும் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்றிருக்கலாம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய அழுத்தங்கள் தொடர்பில் சாட்சியாளர் கட்டளை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் இதுவரை தமது வாக்குமூலங்களை வாபஸ் பெறவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு சம்பவத்தை எதிர்நோக்கியாக கூறப்படும் ஆசிரியையின் வீட்டுக்கு அருகில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். இதனை அம்மாணவி தன் தந்தையான வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கனிமொழியின் சொத்துக்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்கானது எப்படி?

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழகத்தின் திமுக எம்.பி. கனிமொழி வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து விவரங்களை அளித்தார். இதன்போது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 8.56 ரூபா கோடியில் இருந்த தனது சொத்துக்கள் 26.67 ரூபா கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதில் 16.67 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் 10 கோடி அசையா சொத்துக்கள் என்று மொத்தம் ரூ.26.67 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது 6 ஆண்டுகளுக்கு முன்பு 360 கிராம் தங்க நகைகள் இருந்தது எனவும் தற்போது 700 கிராம் தங்க நகைகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது 2007ம் ஆண்டைப் போலவே தற்போதும் 10 காரட் வைரம் நகைகள் தான் உள்ளதுடன் கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பங்குகள் உள்ளதாகவும் வேட்பு மனு தாக்கலின் போது குறிப்பிட்டார்.

Read more...

கொழும்பு பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்த 1 ஆம் வருட மாணவி

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மாடிக்கட்டடம் ஒன்றிலிருந்து கீழே குதித்ததாக கூறப்படும் லுணுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவி கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவி என தெரிவிக்கப்படுவதுடன் இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

புதிதாக பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸார் யாழிற்கு நியமனம்!

பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள் ளப்பட்ட பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புதிதாக பொலிஸ் திணைக்களத்திற்கு இணைத் துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சி பெற்ற பெற்றுவந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இலங்கையில் தடை!

ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தடை தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது 250க்கும் மேற்பட்ட அல் கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய பட்டியலில் ஒன்யையும் வெளியிட்டுள்ளது இதே வேளை 2012 ஆம் ஆண்டு அல்கய்தா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

facebook தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.... –கோத்தபாய

சிற்சில கொள்கை கோட்பாடுகளுடன் வேலைசெய்யக் கூடியவர்கள் சிற்சில சிந்தனைகளையும் கருத்தாடல்களையும் இணையத்தினூடாக முன்வைத்து, இலங்கையினுள்ளே பிளவுகளை ஏற்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுதுகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். இதற்கு அவர்களுக்குத் தேவைப்படுவது நட்பு வட்டத்தினரே. எனவே அவர்கள் அவ்வாறு செய்வது அரச கருமங்களுக்கு இடையூறாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்விக் கல்லூரியில் ‘தேசிய பாதுகாப்பின் இலக்கு’ எனும் தொனிப்பொருளில் உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெளிவுறுத்தியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஏனைய சில சமூக வலைத்தளங்களிலும் தொழிநுட்ப முன்னேற்றங்களின் வருகையோடு அவை ரியூனீசியா, லிபியா, எகிப்து போன்ற நாடுகளையே ஆட்டிப்படைக்க்க் கூடியதாய் அமைந்தது. இவ்வாறு தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் பலம்மிக்கதாய் மாறிவருவதை நாங்கள் கண்கூடாக்க் காண்கிறோம் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டைச் சேர்ந்த அதிக இளைஞர், யுவதிகள் சமூக வலைத்தளங்கள் பற்றிய பூரண அறிவுடன் இருக்கிறார்கள். தேவையான தகவல்களைச் சேகரிப்பதற்கும், அவற்றைத் தங்கள் கருத்துக்களுடன் ஒன்றிணைத்து வெளியிடுவதற்கும் ஓர் கூரிய ஆயுதமாய் அவர்கள் அதனைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் செயலாளர் தெளிவுறுத்தியுள்ளார்.

‘அரபு வசந்தம்’ போன்ற பார்வைகள் இலங்கையில் இல்லாமைக்குக் காரணம் இலங்கையில் தேர்தலில் மக்கள் அதிகம் பேர் பங்குகொள்வதும், புகழ்பெற்ற அரசியலாளர்கள் உள்ள ஜனநாயக நாடு என்பதனாலுமாகும். என்று குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர், அவ்வாறு நிலைமை இருந்தபோதும் அவை பற்றி தொடர்ந்து ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற பலம்மிக்க நாடுகளுடன் இருக்கின்ற நட்புறவை மேலும் கட்டிக்காப்பது தேவையாக உள்ளது எனவும், அந்த இருநாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்ஸிலில் நிரந்தர ஆசனங்கள் உள்ளதனால், ஏனைய நாடுகளைவிட கவனத்திற்கொள்ளக்கூடியதாய் இலங்கை தொடர்பில் மேலெழக்கூடிய தலையீடுகளுக்கு ஏதேனும் ஒருமுறையில் சர்வதேச ரீதியில் உதவலாம் என்றும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

5 மாதத்தில் மாத்திரம் தண்டப்பணமாக 16 இலட்சம் ரூபாவை ஈட்டியது ரயில்வே திணைக்களம்!

ரயில்வே திணைக்களம் இவ்வருடம் முதல் 5 மாதத்தில் பயணிகளிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை அபராதமாக அறவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிழையான வகுப்புக்களிலும் அனுமதி சீட்டு இன்றி பயணம் செய்த பயணிகளிடமிருந்து இவ்வாறு அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அனுமதி சீட்டு இன்றி பயணம் செய்த 187 பயணிகளை ரயில்வே அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 615 ரூபா அபாராதமாக வசூலிக்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் 430 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 3 இலட்சத்து 55 ஆயிரத்து 24 ரூபா அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதேவேளை ஏப்ரல் மாதம் 45 பேர் இவ்வாறு பிடிப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 95 ஆயிரத்து 753 ரூபா தண்டப்பணமாக வசூலிக்கப்பட்டதுடன், மே மாதத்தில் 140 பேர் அனுமதி சீட்டு இன்றி பயணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 3 இலட்சத்து 6 ஆயிரத்து 806 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அபாராத தொகை தொள்ளாயிரம் ரூபாவிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வருமானம் அதிகரித்துள்ளமைக்கு காரணம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுமதி சீட்டு இன்றி பயணம் செய்யும் பயணிகள் அதிகரிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 ரூபாவையும் அத்துடன் ரயில் கட்டணத்தில் இருமடங்கையும் அபராதமாக செலுத்த வேண்டுமென ரயில்வே வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Read more...

பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்கா மாபெரும் தவறு இழைக்கின்றது!- ரஷ்யா

அமெரிக்காவின் செயல்பாடுகளால் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தல்!

பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா உதவுவதை தமது நாடு கடுமையாக எதிர்ப்பதாகவும், சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் அமெரிக்கா மாபெரும் தவறு இழைக் கின்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடி மீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

சிரிய கிளர்ச்சிப் படைகள் ரஷ்யப் படை வீரர்களை கொலை செய்து அவர்களின் உடல் உறுப்புக்களை உண்ணுவதை அவதானித்ததன் பின்னர் தான் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், அமெரிக்காவின் செயல்பாடுகளால் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

Read more...

கட்சி விட்டுக் கட்சி தாவினர் பிபிலை மெதகம சேனாபதிய பிரதேச ஆதரவாளர்கள்!

ஐக்கிய தேசிய கட்சி தீவிர ஆதரவாளர்கள் சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய செயற்பாடுகளால் அதிர்ச்சியடைந்துள்ள பிபிலை மெதகம சேனாபதிய பிரதேச ஆதரவாளர்கள், அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸாவிடமிருந்து ஸ்ரீ சுதந்திர கட்சி அங்கத்துவ அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிபிலை சேனாபதிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்துவங்களை பெற்றுக் கொண்ட குறித்த ஐ.தே.க ஆதரவாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தம்மை திருப்திப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி எவ்வித இலக்குகளோ, சரியான தலைமைத்துவமோ இன்றி செயற்படுவதாக இவர்கள் மேலும் குற்றஞ்சாட்டினர்.

Read more...

திமித்ரி அமெரிக்க புலனாய்வு பிரிவினால் உளவு பார்க்கப்பட்டார்! சி.ஐ.ஏ உத்தியோகத்தர் பரபரப்பு தகவல்!

2009 ஆம் ஆண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இலண்டனுக்கு விஜயம்மேற்கொண்ட முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ், அமெரிக்க புலனாய்வு பிரிவினால் உளவு பார்க்கப்பட்டார் என சி.ஐ.ஏ முன்னாள் உத்தியோகத்தர் எட்வட் ஸ்னோவுடன், கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இலண்டனுக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் மெத்வதேவ் சென்ற இடங்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்கள் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு சேவையினால் உளவு பார்க்கப்பட்டதாக ஸ்னோவுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அந்நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக ஸ்னோவுடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Read more...

சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலுள்ள குடும்ப கட்டுப்பாட்டு முறை காரணமாகவே இலங்கையில் ............. கெஹெலிய .

"பௌத்த சமயத்துக்காக ஒரு பிள்ளையை வழங்க சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இன்று முடியாதுள்ளது"

இலங்கையில் 20,000 தொடக்கம் 25,000 வரையிலான பௌத்த பிக்குமார்களே உள்ளனர் எனவும் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற குடும்ப கட்டுப்பாட்டு முறை காரணமாக பிக்குமார்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவடைந்துள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்கெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி, கொனகலகல விஹாரையில் நடைபெற்ற சமய நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரம்ப காலத்தில் சிங்கள குடும்பம் ஒன்றில் ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தனர். ஆனால் தற்போது அது இரண்டு குழந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும், சிறிய குடும்பம் பொன்னானது என்ற மந்திரத்தை கூறிக் கொண்டிருந்ததன் விளைவே இது உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பௌத்த சமயத்துக்காக ஒரு பிள்ளையை வழங்க சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இன்று முடியாதுள்ளது எனவும், நாட்டையும் பௌத்த மதத்தையும் அன்று முதல் பாதுகாத்தவர்கள் பௌத்த தேரர்களே எனவும், பௌத்த தேரர்களின் தொகை குறைவடைந்துள்ளது நாட்டுக்கு பாரிய நட்டமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

யாழ் விவசாயத்திணைக்களத்தினரின் அசமந்தப்போக்கால் நஷ்டத்தில் யாழ் வெங்காய விவசாயிகள்!! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இம்முறை வெங்காயப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருவாரியான நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.

கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிவந்த சீரற்ற காலநிலை ஒருபுறமிருக்க இப்போது பயிர்களில் ஒருவிதமான கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் அறுவடைசெய்யவேண்டிய காலம் நெருங்குவதற்கு முன்னரே பெரும்பாலான பயிர்கள் கருகியும் அழுகியும் விற்பனைக்கு உதவாதவைகளாக காணப்படுகின்றன. இதனால் பல விவசாயிகள்பெருவாரியான பண நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.

இங்குள்ள விவசாயிகளில் அனேகமானவர்கள் வங்கிகளில் கடன் பெற்றும் அயலவர்களிடம் கடன்வாங்கியுமே இந்த பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இப்போது இவ்வாறான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இப்பிரச்சனைகள் தொடர்பாக விவசாயி ஒருவரிடம் வினவியபோது, இதற்கு காரணம் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் எமக்கு சரியான உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளை வழங்கவில்லை என்றும் மண்பரிசோதனைகளை அவர்கள் எமது பகுதியில் மேற்கொள்வவேயில்லை என்று தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் இயற்கை உரங்களை பாவித்து பயிர் செய்வதால் மண்ணின் தரம் கெடாமல் இருந்தது இப்போது பாவிக்கப்படுகின்ற செயற்கை உரங்களினால் மண்ணானது நாளுக்குநாள் உயிர்த்தன்மையை இழந்து வருகின்றது. எனவே, இது கிருமிகள் பயிர்களில் எளிதில் தொற்றுவதற்கு வழிவகுத்து விடுகிறது. ஆகவே, ஒவ்வொரு முறையும் மண்பரிசீலனை செய்தால் தான் இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும், ஆனால் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் மண்பரிசேதனை செய்வதற்கு முன்வருவதே இல்லை. நாங்கள் இது தொடர்பாக அவர்களிடம் முறையிட்டாலும் அவர்கள் அது தொடர்பில் அக்கறை இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பகுதியில் இம்முறை விதைக்கப்பட்ட வெங்காயத்தில் மூன்றில் இரண்டு பகுதி வெங்காயங்கள் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டு வெட்டி வீசப்பட்டுள்ள இந்த நிலையில் சந்தையில் இப்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது!! ஆனால் யாழ்ப்பாணத்தில் விளையும் வெங்காயங்கள் யாவும் தோட்டங்களிலேயே அழிவைச் சந்திக்காமல் சந்தைக்குவருமானால் ஒரு கிலோ வெங்காயம் 90ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகவுள்ளது.

எனவே, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தாம் எடுக்கின்ற மாதச் சம்பளத்திற்கு தகுந்த முறையில் விவசாயிகள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடமையுணர்வில்லாத அதிகாரிகளினால் விவசாயிகள் நாளுக்கு நாள் இடர்படுவது முடிவுறாத கதையாகி வருவதாலும், மக்களுக்கு விவசாயத் திணைக்களத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுவதாலும், அதனை நீக்கும்பொருட்டு குறித்த திணைக்களம் இதுபற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும்!


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com