Monday, June 17, 2013

யாழ் விவசாயத்திணைக்களத்தினரின் அசமந்தப்போக்கால் நஷ்டத்தில் யாழ் வெங்காய விவசாயிகள்!! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இம்முறை வெங்காயப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருவாரியான நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.

கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிவந்த சீரற்ற காலநிலை ஒருபுறமிருக்க இப்போது பயிர்களில் ஒருவிதமான கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் அறுவடைசெய்யவேண்டிய காலம் நெருங்குவதற்கு முன்னரே பெரும்பாலான பயிர்கள் கருகியும் அழுகியும் விற்பனைக்கு உதவாதவைகளாக காணப்படுகின்றன. இதனால் பல விவசாயிகள்பெருவாரியான பண நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.

இங்குள்ள விவசாயிகளில் அனேகமானவர்கள் வங்கிகளில் கடன் பெற்றும் அயலவர்களிடம் கடன்வாங்கியுமே இந்த பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இப்போது இவ்வாறான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இப்பிரச்சனைகள் தொடர்பாக விவசாயி ஒருவரிடம் வினவியபோது, இதற்கு காரணம் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் எமக்கு சரியான உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளை வழங்கவில்லை என்றும் மண்பரிசோதனைகளை அவர்கள் எமது பகுதியில் மேற்கொள்வவேயில்லை என்று தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் இயற்கை உரங்களை பாவித்து பயிர் செய்வதால் மண்ணின் தரம் கெடாமல் இருந்தது இப்போது பாவிக்கப்படுகின்ற செயற்கை உரங்களினால் மண்ணானது நாளுக்குநாள் உயிர்த்தன்மையை இழந்து வருகின்றது. எனவே, இது கிருமிகள் பயிர்களில் எளிதில் தொற்றுவதற்கு வழிவகுத்து விடுகிறது. ஆகவே, ஒவ்வொரு முறையும் மண்பரிசீலனை செய்தால் தான் இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும், ஆனால் இங்குள்ள விவசாயத் திணைக்களத்தினர் மண்பரிசேதனை செய்வதற்கு முன்வருவதே இல்லை. நாங்கள் இது தொடர்பாக அவர்களிடம் முறையிட்டாலும் அவர்கள் அது தொடர்பில் அக்கறை இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பகுதியில் இம்முறை விதைக்கப்பட்ட வெங்காயத்தில் மூன்றில் இரண்டு பகுதி வெங்காயங்கள் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டு வெட்டி வீசப்பட்டுள்ள இந்த நிலையில் சந்தையில் இப்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது!! ஆனால் யாழ்ப்பாணத்தில் விளையும் வெங்காயங்கள் யாவும் தோட்டங்களிலேயே அழிவைச் சந்திக்காமல் சந்தைக்குவருமானால் ஒரு கிலோ வெங்காயம் 90ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகவுள்ளது.

எனவே, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தாம் எடுக்கின்ற மாதச் சம்பளத்திற்கு தகுந்த முறையில் விவசாயிகள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடமையுணர்வில்லாத அதிகாரிகளினால் விவசாயிகள் நாளுக்கு நாள் இடர்படுவது முடிவுறாத கதையாகி வருவதாலும், மக்களுக்கு விவசாயத் திணைக்களத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுவதாலும், அதனை நீக்கும்பொருட்டு குறித்த திணைக்களம் இதுபற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும்!


Read more...

வல்லுறவுக்குட்படுத்திய தந்தையின் தலையை வெட்டிக் கொன்ற மகள்!

தன்னை வல்லுறவுக்குட்படுத்திய தந்தையின் தலையை மகள் வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று பபுவா நியூ கினியாவில் இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய குறித்த தந்தை, வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனது 18 வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய போதே தந்தையின் தலையை மகள் வெட்டிக் கொன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இரவு குறித்த நபரது மனைவியும் ஏனைய இரண்டு பிள்ளைகளும் வெளியே சென்றிருந்த வேளையில், வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மற்றைய மகளை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் காலையில் தன்னை தந்தை வல்லுறவுக்குபடுத்த முயன்ற போது ஆத்திரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் தனது தந்தையின் கழுத்தை வெட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொலைச்சம்பவம் தொடர்பில் குறித்த மகள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் தேவையில்லை என அப்பிரதேச வாசிகள், சமூகத்தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கமே முதலில் மீறியது! விமல் வீரவன்ச

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இலங்கை தலையீடுகளை மேற்கொள்வதில்லை. இலங்கை மீது இந்தியாவோ, வேறு எந்த நாடுகளோ அழுத்தங்களை முன்வைப்பதற்கு உரிமையில்லை!

இலங்கையின் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடுகளோ அழுத்தங்களை முன்வைப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இலங்கை தலையீடுகளை மேற்கொள்வதில்லை எனவும், எமது நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு மாத்திரமே காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை பயன்படுத்தி இந்தியா, இலங்கையின் உள் விவகாரங்களில் செயற்பட முயற்சிக்கின்றது எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும், இந்திய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அதனை வெளிப்படையாக காட்டுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கோள் காட்டியுள்ளார்.

இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கமே முதலில் மீறியதாகவும், இலங்கை தரப்பினர் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் பாதுகாப்து வருவதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கிழங்கை உட்கொண்ட சீனப் பிரஜை மரணம்!

நாவுல பகுதியில் வைத்து ஒருவகை கிழங்கை உட் கொண்ட சீனப் பிரஜைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்த சீன பிரஜைகள் இருவரும், காட்டுப் பகுதியில் உள்ள ஒருவகை கிழங்கை எடுத்து வந்து அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் வைத்து அவித்து உண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

மத்திய வடமேல் மாகாணசபைகள் இவ்வாரம் கலைக்கப்படும்! கெஹெலிய

மத்திய மற்றும் வடமாகாண சபை தேர்தல்களை ஒரேதினத்தில் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது தீர்மானம் பெறப்பட்டுள்ளது எனவும், மத்திய வடமேல் மாகாணசபைகள் இவ்வாரம் கலைக்கப்படுமென தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கான சீட்டுக்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அரச அச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார் எனவும் தேர்தல் செப்டெம்பர் மாதம் 7 ம் திகதி அல்லது, 21 ம் திகதி நடைபெறலாமென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

கதிரை மாற தயாராகின்றார் மாவை. எதிர்வரும் நாட்களில் இராஜனாமா!

வட-மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் பெரும் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது எனலாம். எது எவ்வாறாயினும் இப்போரின் மத்தியில் மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற முடிவை சம்பந்தன் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இம்முடிவின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் மாவை பாராளுமன்ற பதவியை இராஜனாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவையின் இராஜனாமாவால் உருவாகப்போகும் பராளுமன்ற கதிரைக்கு வர இருப்பவரை விழுத்தி அக்கதிரையில் குந்துவதற்கு அவருக்கு பின்னால் நிற்பவர் ஒடித்திரிவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

மத்தியில் மச்சான் மாநிலத்தில் நான் என சம்பந்தனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த வித்தியாதரன் , கட்சியை பதிவு செய்! எங்களுக்கும் சம அந்தஸ்த்து தா! தமிழரசுக் கட்சியின் எடுபிடிகளாக எங்களை வைத்திராதே! என்று கேட்டுக்கொண்டிருந்த மண்டையன்குழுத் தலைவர் சுரேஸ் , படித்த நல்ல மனிதனை நிறுத்துங்கள் கள்ளர் காடையர்களை விரட்டுங்கள் என்ற முன்மொழிவை குசுகுசுத்துக்கொண்டிருந்த சில படித்த மனிதர்கள் என யாவரும் கையை பிசைவதாக அறியக்கிடைக்கின்றது.

வித்தியாதரன் தான் சுயேட்சையாக குதிக்கப்போகின்றேன் என மிரட்டியதாகவும் முடிந்தால் புடுங்கி காட்டுங்கள் என கட்சியின் பிரமுகர் ஒருவரிடமிருந்து பதில் வந்தாகவும் அறியக்கிடைக்கின்றது.

மேலதிக உள்வீட்டு சமாச்சாரங்கள் எதிர்வரும் நாட்களில்...

Read more...

சம உரிமை வேண்டுமா? வாருங்கள் இராணுவ முகாமுக்கு தரலாம்! நோர்வேயில் வருகிறது புதிய சட்டம்.

உலகில் பெரியளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம் „பெண்களுக்க சம உரிமை' , இந்த சம உரிமையை முழுமையாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது நோர்வே அரசாங்கம். அதன் பொருட்டு நோர்வேயில் கட்டாய இராணுவ சேவையை பெண்களும் மேற்கொள்ளவேண்டும் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகின்றது.

உலகில் பல்வேறு நாடுகளில் இராணுவ சேவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரஜைகளான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் இராணுவப் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதுடன் நாட்டில் இராணுவ தேவை ஏற்படுகின்றபோது, அவர்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்பது நியதி.

இதில் நோயாளிகளாக இருந்தால் விதிவிலக்குண்டு. சில நாடுகளில் விருப்பமில்லாதவர்கள் சமூக சேவைகள் செய்யவேண்டும். அது இராணுவ சேவையிலும் பன்மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நோர்வே பெண்களுக்கு இராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிப்படையாக கருத்துரைத்துள்ளது அந்நாட்டின் அரசு. உள்நாட்டு பத்திரிகை செய்திகளின் பிரகாரம் எதிர்வரும் 2015 ம் ஆண்டிலிருந்து பெண்கள் இராணுவச் சேவைக்கு போவது கட்டாயமாகின்றது. இதற்கான சட்டத்தினை வரையுமாறு பாராளுமன்று சட்டவாக்குனர்களை கேட்டுள்ளது.

இது விடயத்தில் கருத்துரைத்துள்ள அந்நாட்;டின் வெளிவிவகார அமைச்சர் : „இராணுவ சமாச்சாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியுள்ள முதலாவது நாடு நாம் என பெருமை அடைகின்றோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, June 16, 2013

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்காதாம்!

13ஆவது அரசியல் அதிகாரத்தினை பாதுகாப்பதிலிருந்து தவறியதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள பங்கு கணிசமானது. - த.ம.வி.புகட்சி.

13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்தவிதமான முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவு வழங்காது என அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பொதுக் குழுக்கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள கருத்துக்கள் எங்கள் கட்சி ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் குறித்து இனவாத நோக்குடன் தென் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இம்முயற்சியானது, இயல்பு நிலையின் ஊடாக நிலையான சமாதானத்தை அடையும் உன்னத நோக்கத்தை சீர்குலைத்துவிடும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த காலம் தொட்டு மாகாண சபையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் அடிப்படை அலகாக ஏற்றுக்கொண்டு அதனூடாக முன்நோக்கி பொருத்தமான அரசியல் தீர்வினை அடைய வேண்டும் என்ற கோட்பாட்டில் செயற்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2008ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையில் அமையப்பெற்ற கிழக்கு மாகாண சபை நிகழ்ச்சி நிரலில் 13ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாகப் பெறுவதனை முன்னிலைப் படுத்தி செயலாற்றி வந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 13ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாக பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிரதானமான தமிழ் கட்சிகள் அதரவினை நல்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். 13ஆவது அரசியல் அதிகாரத்தினை பாதுகாப்பதிலிருந்து தவறியதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள பங்கு கணிசமானது.

2008ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கப் பெற்றிருந்தால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப் பகுதியிலேயே அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் வெற்றி கண்டிருக்க முடியும். எமது சமூகத்தின் துரதிஸ்ட வரலாற்றுப் பக்கங்கள் போன்று பொருத்தமான தருணத்தில் ஒன்றிணைந்து செயற்படாமல் இழந்து விட்ட பிறகு இணைந்து பெற்றிருக்கலாம் என்று வருத்தப்படுகின்ற தருணம் மாகாண சபை முறைமைகளுக்கோ 13ஆவது அரசியல் அதிகாரங்களுக்கோ ஏற்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் கடினமாகப் பெற்றுக்கொண்ட நாட்டின் சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்கு இடமளிக்காது என்பதனை உறுதியாக நம்புகின்றோம். அந்த வகையில் 13ஆவது அரசியல் அதிகாரம் தொடர்பில் பங்காளி கட்சி என்ற வகையில் எமது கருத்துக்களுக்கும் அரசாங்கம் உரிய மதிப்பளித்து தெற்கு இனவாதிகளையும் வடக்கு குறுந்தேசிய அரசியல் தலைமைகளையும் தோற்கடிக்கும் என திடமாக நம்புகின்றோம்' என அத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மட்டக்களப்பில் இந்து ஆலய நிர்வாகிகளுக்கும், மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும் இடையில் மோதல்!

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் சுங்கான் கேணி எனும் இடத்தில் இந்து ஆலய நிர்வாகிகளுக்கும், மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சுங்கான் கேணியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக காலை பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்பிரதேசத்திலுள்ள மெத்தடிஸ்ட் திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திருச்சபையில் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவது தமது பூசைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்று,ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்வாகிகள் கூறியதையடுத்து வாய்தகராறுகள் முற்றி கைக்கலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அப்பகுதி மக்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

காதலனை காப்பாற்ற சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்பிய கல்லூரி மாணவி கைது!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழங்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்குமார்(வயது 22)லண்டனில் எம்பிஏ படித்து வரும் காதலனை காப்பாற்ற சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர் பத்தனம்திட்டா அருகே கோன்னியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த புனலூரைச் சேர்ந்த மாணவி நிமிதாவுக்கும் காதல் ஏற்பட்டதுடன் கடந்த வருடம் சுஜித்குமார் எம்பிஏ படிப்பதற்கு லண்டன் சென்றார். நிமிதா எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மாரம்பிள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாரம்பிள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று அங்குள்ள லாட்ஜில் நிமிதாவும், 4 மாணவிகளும் தங்கி இருந்தனர். நிமிதா தனது லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு வெளியே சென்ற சமயம் அங்கிருந்த மற்ற மாணவிகள் லேப்டாப்பில் தமது கல்லூரியில் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகள் இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்நது மாணவிகள் கல்லூரி முதல்வரிடமும் பெரும்பாவூர் பொலிசிலும் புகார் செய்ததை யடுத்து பொலிசார் நிமிதாவிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

இந்த சம்பவம் குறித்து பெரும்பாவூர் பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, லண்டனில் படித்து வரும் காதலன் சுஜித்குமாரும், நிமிதாவும் போன் மற்றும் இணையத்தில் அடிக்கடி பேசி வந்ததுடன் சமீபத்தில் சுஜித்குமார், நிமிதாவிடம் தன்னை லண்டனில் ஒரு ரவுடி கும்பல் பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய பெண்களின் நிர்வாண படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் எனவே பணமோ, படங்களோ அனுப்பி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய நிமிதா, நிர்வாண படங்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்ததுடன் இதற்கு சுஜித்குமார் தனது வீட்டில் இருந்து வீடியோ கமெராவை எடுத்துக் கொள்ளுமாறு கூறியதை தொடர்ந்து காதலனின் கையடக்க கமெராவை எடுத்து வந்து விடுதியில் தங்கி தன்னுடன் படிக்கும் மாணவிகளின் நிர்வாண படங்களை எடுத்து இணையத்தின் மூலம் காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இதையடுத்து நிமிதாவை கைது செய்த பொலிசார் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டதுடன் காதலன் சுஜித்குமார் தன்னை ரவுடி கும்பல் பிடித்து வைத்துள்ளனர் என்று கூறியது பொய்யான தகலாக இருக்கலாம் என பொலிசார் கருதுவதால் லண்டனில் உள்ள சுஜித்குமாரை இந்தியா வரவழைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read more...

காசல் ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வு! பொதுமக்ள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

பொகவந்தலாவை, நோர்வூட், டிக்கோயா, சாஞ்சிமலை போன்ற பகுதிகளில் தற்போது பெய்து கொண்டிருக்கும் அடைமழையைத் தொடர்ந்து காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தற்போதும் தொடர்ந்து பெய்து கொண்டிரு மழையால் இந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிறைந்துள்ளது!

Read more...

18 ஆயிரம் பேஸ்புக் வாடிக்கையாளர் விவரங்களை கேட்கிறது அமெரிக்கா

உலக அளவில் பேஸ்புக், கூகுள், யாகூ, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தமது இணைய பயன்பாட்டாளர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம்,நேரடியாக தகவல்களை கையாளுவதற்கு அனுமதி அளித்தது வந்ததை கடந்த வாரம் கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைகள் வெளியிட்டன.

பேஸ்புக் நிறுவனம் தற்போது உலக அளவில் 1.1 பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. அதில் கடந்த 2012 ஆண்டின் பிற்பகுதியில் மட்டும் 18 ஆயிரம் பயன்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை கேட்டு, தேசிய பாதுகாப்பு நிறுவனம் விண்ணப்பங்களை அனுப்பியதாக பேஸ்புக் கூறியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 31 ஆயிரம் வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்களை கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் கண்காணிப்பின் நோக்கம் மற்றும் எண்ணிக்கை விபரங்களை பகிரங்கமாக வெளியிட அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more...

D.I.G வாஸ் குணவர்தன பணியிலிருந்து இடைநிறுத்தம்? படுகொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 பொலிஸார் பணிநிறுத்தம்!

பிரதிப் பொலிஸ்மாஅதிபர் வாஸ் குணவர்தனவின் இடத்திற்கு பதில் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சப்இன்ஸ்பெக்டரும் மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்தும் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக சிறிவர்தன தெரிவித்தார். வாஸ் குணவர்தனவின் கீழ் சேவையாற்றிய நன்கு பொலிஸாரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மாஅதிபர் வாஸ் குணவர்தனவின் இடத்திற்கு பதில் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எஸ். ஏ. டி. எஸ். குணவர்தன கொழும்பு வடக்குப் பொறுப்பான பதில் பொறுப்பாளராக மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

துருக்கி, சிரியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனம். Bill Van Auken

ஈராக்கில் 2003ம் ஆண்டு புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்புப் போரை தொடக்கியதில் இருந்து, ஒரு தசாப்தத்திற்குபின் ஒபாமா நிர்வாகம் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான ஒரு போரை ஆதரிப்பது வரை, வாஷிங்டன் மத்திய கிழக்கில் அதன் கொள்ளைமுறைக் கொள்கைகளை “மனித உரிமைகள்”, “ஜனநாயகம்” என்னும் மறைப்புக்களில் தொடர்ந்து நடத்திவருகிறது.

முதலில் இக்கூற்றுக்கள், அமெரிக்க இராணுவ வாதம் இப்பிராந்தியத்தில் கொண்டுவந்துள்ள மகத்தான மனிதக் கஷ்டங்கள், அடக்குமுறை ஆகியவற்றால் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன. ஈராக்கை அமெரிக்கா “விடுதலை செய்ததற்கு” ஒரு மில்லியன் உயிர்கள் பலியாயின என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பல மில்லியன் மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டனர். நாட்டின் உள்கட்டுமானமும் சமூக நிறுவனங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் தோற்றுவித்துள்ள குறுங்குழுவாத உள்நாட்டுப் போர் 80,000 மக்களுக்கும் மேலானவர்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான அகதிகளை தோற்றுவித்து ஒரு சமூகம் முழுவதையுமே சேதப்படுத்தியுள்ளது.

அதேவேளை அரபு உலகில் தன் மூலோபாய, இலாப நலன்களை தொடர்வதற்கு வாஷிங்டன் நம்பியுள்ள நட்புக் கூட்டுக்களின் விவரங்களையும் தெரிவிக்கின்றன. அவை, பெரியளவில் தங்கள் நாட்டிற்குள்ளேயே எத்தகைய எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் பிற்போக்குத்தன முடியரசுகள்: சௌதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஜோர்டான். ஜனநாயகத்தை காக்க புறப்பட்ட இந்த அமெரிக்க நட்பு நாடுகள், சிரச்சேதம், சித்திரவதை, ஒருதலைப்பட்ச சிறைவாசம், மத பிற்போக்குத்தனம் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவற்றை தங்கள் ஒட்டுண்ணித்தன ஆளும் மரபை நிலைநிறுத்த பயன்படுத்துகின்றன.

விவாதிக்கக்கூடிய வகையில் இப்பொழுது பிராந்தியத்திலேயே வாஷிங்டனின் மிகமுக்கியமான நட்பு நாட்டில் நடக்கும் சமூக எழுச்சிகள் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் பாசாங்குத்தனத்தையும் போலித்தனம் மிக்க ஜனநாயகக் கருத்துக்களையும் சிதைத்து அம்பலப்படுத்தியுள்ளன.

ஒபாமா நிர்வாகம், நூறாயிரக்கணக்கான இளைஞர்கள், தொழில் நேர்த்தியாளர்கள் மற்றும் பல துருக்கிய குடிமக்கள் என இஸ்தான்பூல், அங்காரா, இன்னும் துருக்கி முழுவதும் உள்ள பல நகரங்களிலும் தெருவிற்கு வந்துவிட்டவர்கள் மீது பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகன் கட்டவிழ்த்து விட்டுள்ள மிருகத்தன அடக்குமுறைக்கு அதன் மறைமுக ஆதரவை கொடுத்துள்ளது. இத்தாக்குதல் குறைந்தபட்சம் ஐந்து பேரைக் கொன்றுவிட்டது, 5,000 பேரை மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளது, இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் கைதுக்கும் காரணமாக உள்ளது.

வெள்ளை மாளிகையும் வெளியுறவுச் செயலகமும் ஜூன் 11 அன்று தக்சிம் சதுக்கத்தில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தன தாக்குதலுக்குப் பின் நிதானமான மௌனத்தைக் கொண்டுள்ளன. கனமாக ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் போலீஸ் பிரிவினர் கண்ணீர்ப்புகை குண்டு, நீர் பீய்ச்சுதல், எறிகுண்டுக்கள் இவற்றை நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகையில், ஒபாமா நிர்வாகத்தில் எவரும் மனித உரிமைகள் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ ஒரு சொல் கூடக் கதைக்கவில்லை.

ஒரு வாரம் முன்பு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே ஒரு வெற்றுத்தன அறிக்கையை வெளியிட்டு, வாஷிங்டனுடைய உயர்நேச உறுதிப்பாட்டை “வெளியீட்டு சுதந்திரம், கூடும் சுதந்திரம் “ ஆகியவற்றிற்கு அளித்து, அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக “வன்முறையைத் தூண்டுதலையும்” எச்சரித்தார்.

எர்டோகன் பற்றி ஒபாமா பேசமாட்டார், அறிக்கை விட மாட்டார் என்பதைத் தெளிவுபடுத்தியபின், செய்தித்தொடர்பாளர் முடிவுரையாகத் தெரிவித்தார்: “துருக்கி ஒரு முக்கியமான நட்பு நாடாகும். பாருங்கள், அனைத்து ஜனநாயகங்களிலும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளன.... பல பிரச்சினைகளிலும் நாம் துருக்கியுடன் தொடர்ந்து உழைப்போம்—ஒரு நேட்டோ நட்பு நாடு என்ற முறையிலும், பிராந்தியத்தில் முக்கிய நாடு என்ற முறையிலும்—அதைச் செய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”

துருக்கியை “பிராந்தியத்தில் முக்கிய நட்பு நாடு” என்று கூறுகையில் கார்னே அது பாதுகாப்பான புகலிட பங்கைக் கொண்டிருப்பதையும், வாஷிங்டன் சிரியா மீது கட்டவிழ்த்துள்ள இஸ்லாமியவாத போராளிகளுக்கு முன்னேற்றத் தளம் என்பதையும்தான் வெளிப்படையாக குறிப்பிடுகிறார். சேச்சென்யா, பால்கன்கள் மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற தொலைவிடங்களில் இருந்து வெளிநாட்டுப் போராளிகள் துருக்கிய எல்லை மூலம் அனுப்பப்படுகின்றனர்; துருக்கி CIA நிலையம் ஒன்றிற்கும் ஆதரவளிக்கிறது; அது பில்லியன் கணக்கான பணம், மற்றும் ஆயுதங்கள் என சௌதி அரேபியா, கட்டார், இவை அளிப்பதை எல்லைக்கு அப்பால் நடத்தப்படும் படுகொலைக்கு எரியூட்ட ஒருங்கிணைக்கிறது.

இவ்வகையில் வாஷிங்டன், சிரிய ஆட்சி மாற்றத்திற்கான அதன் போரை, இஸ்லாமியவாத எதிர்ப்புக் குழுக்களை அடக்குவதில் அசாத் காட்டும் கொடூரத்தால் உந்துதல் பெறுவதாக பாசாங்குத்தனமாக கூறுகிறது. ஆனால் எர்டோகன் சமாதான எதிர்ப்புக்களை அடக்குவதை ஆதரிக்கிறது; ஏனெனில் அவை அமெரிக்க போர்த் திட்டங்களில் தலையிடக்கூடும் என்பதால்.

இவை எதுவுமே, போலி இடது அமைப்புக்களின் தொகுப்பை –சர்வதேச சோசலிச அமைப்பு அமெரிக்காவில் இருப்பதில் இருந்து பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி வரை— சிரியாவில் நடக்கும் ஏகாதிபத்திய போருக்கு தங்கள் ஆதரவை கொடுப்பதையும், அதை “புரட்சி” எனக்கூறுவதையும் தடைசெய்யவில்லை.

ஆனால் துருக்கி, சிரியா ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகள் நெருக்கமாகத் தொடர்பு உடையவை. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போரில் எர்டோகன் பங்கு கொண்டிருப்பது துருக்கிய மக்களிடையே செல்வாக்கற்றுள்ளது. கருத்துக் கணிப்புக்கள் துருக்கிய குடிமக்களில் 70 முதல் 80% வரை இத்தலையீட்டை எதிர்க்கின்றனர் எனக் காட்டுகிறது.

எர்டோகன், சிரியாவில் ஊக்குவிக்கும் போர் துருக்கியையே சூழ்ந்து கொள்ளும் என்னும் பரந்த கவலை உள்ளது. இரட்டை கார்க் குண்டுகள் துருக்கிய எல்லையில் உள்ள ரேஹன்லி சிறுநகரத்தை தாக்கி 50 பேரைக் கடந்த மாதம் கொன்றதை தொடர்ந்து இதே பகுதியில் அல்குவேடாவுடன் இணைந்த அல்நுஸ்ரா முன்னணியின் 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்; ஆரம்ப அறிக்கைகள் இவர்களிடம் பயங்கரமான சரின் வாயு இருந்தது எனத் தெரிவிக்கின்றன.

துருக்கிய அரசாகத்தின் போர்க் கொள்கை, குறிப்பாக அலாவிக்கள் போன்ற துருக்கியின் பிரதான மத, இன சிறுபான்மையினரிடையே செல்வாக்கற்றுள்ளது. சிரியாவிலுள்ள அல்குவேடா தொடர்புடைய சுன்னி இஸ்லாமிய வெறியர்களுக்கு எர்டோகனின் ஆதரவு, துருக்கியில் இஸ்லாமியவாத சமூகக் கொள்கைகளை சுமத்தும் தனது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கம் ஆகும். ஒரு புதிய பாலத்திற்கு போல்போரஸ் ஜலசந்தியில் பல்லாயிரக்கணக்கான அலாவிகளைப் படுகொலை செய்த ஒரு 16ம் நூற்றாண்டு ஒட்டோமன் சுல்தான் பெயரைச் சூட்டுவது என்னும் அவருடைய முடிவு இக்கவலைகளை பெருக்கியுள்ளது.

ஒரு அடிப்படை அர்த்தத்தில், துருக்கிய வளர்ச்சிகளான, இராணுவாதம் மற்றும் வெளிநாடுகளில் தலையீடு உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் மற்றும் பொலிஸ் அரச நடவடிக்கைகள் என்பது அமெரிக்காவிற்குள்ளேயே பிரதிபலிக்கின்றன. இரு நாடுகளிலும் வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுடைய இழப்பில், ஆளும் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகளின் நலனுக்களுக்காக தொடரப்படுகின்றன.

ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் போலி இடது சொத்துக்கள் “மனித உரிமைகள்”, “ஜனநாயகம்” ஆகியவை பற்றி சிரியாவில் நடத்தும் அறம் பற்றிய கேலிக்கூத்துக்களும், துருக்கியை போலவே முற்றிலும் பாசாங்குத்தனம் என்பதை தெளிவாக்குகின்றன. இவை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த வாஷிங்டனின் அதிகரித்த இராணுவ ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் குற்றம் சார்ந்த தன்மை பற்றி, பொதுமக்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டவை. இப்பிரச்சாரம் துருக்கிய மக்களையும், முழுப் பிராந்தியத்தையும் ஒரு குருதி கொட்டும் போரில் இழுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டது.

சிரியா, துருக்கி மற்றும் உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்பு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் நடத்தப்பட முடியும்.

Read more...

மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று! மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்!- வளிமண்டலவியல் திணைக்களம்!

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பரப்புக்களில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும், புத்தளத்திலிருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழ்கடல் பகுதிகளிலும் இடையிடையே மழை பெய்வதுடன் இடி மின்னல் தாக்கம் காணப்படுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில் மீனவர்களை கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Read more...

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இக்காலகட்டத்தில் மாகாண சபைகளுக்கு தேவையற்றதாம் என்கிறார் டி.எம்!

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டு, மேற்குல அழுத்தங்களால் இலங்கையில் மீண்டும் அரசியல் ஸ்தீரமற்ற நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கும் இக்காலகட்டத்தில், 13 ஆவது அரசியல மைப்பு திருத்தத்தில் அடங்கியுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு தேவையற்றதென பிரதமர் டீ.எம். ஜயரட்ண தெரிவித்துள்ளார். அத்துடன், பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்குவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் எனவும், இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இவை வீண் மோதல்களை ஏற்படுத்த வழிவகுக்கலாமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாடு அமைதியா சூழ்நிலையில் சிறந்த பொருளாதார வளர்ச்சியில் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் 13 ஆவது திருத்தத்தில் உள்ளக்கடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு அவசியமற்றவை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே !! என்னுடைய வழியில் நீங்களும் வாங்கோ.. மஹிந்தருக்கு பின்னால் போவோம் என்கிறார் கீதாஞ்சலி.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே மக்களின் வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் அரசுடன் இணைந்து செயற்படுங்கள் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கிளிநொச்சியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஏ9 வீதி திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய கீதாஞ்சலி் ,

எம் தலைவருடைய தூரநோக்கு ஒரு குறுகிய அரசியலாய் இல்லாமல், எமக்கு மாத்திரமல்ல எமது பரம்பரையையே பலப்படுத்தும் அளவிற்கு அபிவிருத்தியுடனிணைந்த தூரநோக்குடைய ஒரு தலைமைத்துவமாகும். இப்படியொரு தலைமை முன்னர் இருந்ததுமில்லை இனி இருக்கப்போவதும் இல்லை !! உண்மையிலேய ஒரு மனிதநேயமுள்ள இன மத பேதமற்ற ஒரு தலைவரே எமது ஜனாதிபதி அவர்கள், ஆனால் இன்று குறுகியநோக்கடன் அரசியல் லாபங்களைத்தேடி அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்ற பலர் இந்த அபிவிருத்திகளையெல்லாம் ஏளனம் செய்பவர்களாகவும் வறுமையை போக்க வற்றவர்களாகவும் இன்று வெறும் வாய்ப்பேச்சினால் அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று வடமாகாணத்தை பொறுத்தவரையிலே 70ஆயிரம் பெண் தலைமைத்துவங்களும் அதிக ஏழ்மை, வேலையில்லாப்பிரச்சனை போன்ற பலவற்றிற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற எமது சமுதாயத்திலே இன்று பல அரசியல் கட்சிகள் மக்கள் நலன் கருதி அரசியலில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் பிரிந்து நின்று அரசியலில் பல பிளவுகளை ஏற்படுத்தி இன்று ஒரு தூசதனமான அரசியலை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று கிராமம் நகரம் பிரதேசம் என்று நாளுக்கு நாள் எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டு இருக்கின்றது . எமது தலைவர் பலநாடுகளின் கடனுதவிகளுடனும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் எமது தேசத்தை அபிவித்தி செய்து வருகின்றார், மஹிந்த சிந்தனயினூடாக இன்று வீட்டுத்திட்டங்கள் எமக்கு கிடைக்கின்றன. அது மாத்திரமல்ல அனைத்து மக்களுக்கும் மின்சாரம், அனைத்து மக்களுக்கும் கல்வி , காணி வாழ்வாதாரம் தரம் உயர்வு போன்ற நற்சிந்தனைகள் நிறைந்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்,

எமது அரசால் எமக்குத்தீர்வுகள் நிச்சயம் கிடைக்குமென்று நம்மிக்கையை அவர் எமது ஆழ்மனதில் ஊற்றியவராகவே அவரது ஒவ்வொரு அமைவும் உள்ளது, எமது தலைமைத்துவத்தினால் மாத்திரமே தழிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியும், வறட்டு கௌரவத்தையும் பிடிவாதத்தையும் மக்களுக்காக விட்டுக்கொடுத்து தமது அகந்தையை சற்றுக்குறைத்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டும்!!

மக்களை நேசிக்கிரவரே இங்கு தலைவனாய் ஆகியிருக்கிறார். ஆகவே மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவும் வேண்டுமானால் அரசுடன் இணைந்தால்தான் அது சாத்தியமாகும்!!

இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சர் ரிசாட்பதியுதீன் ஆகியோரின் செயற்பாடுகள் கூட அரசுடன் இணைந்ததால்தான் மக்களிற்கு நன்மையழிப்பவையாக இருக்கின்றது.

ஆகவே மக்களின் நன்மையின் உண்மையான அக்கறையிருந்தால்!! தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணக்கப்பாட்டுடனான பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

Read more...

1,200 பொலிஸாருக்கு எதிராக தீவிர விசாரணைகள்!

கப்பம், கொலை, கொள்ளை, பேன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள 1,200 பொலிஸாருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு என பல்வேறு மட்டங்களில் தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் அலுவலக மற்றும் தனிப்பட்ட தரவுகளையும் சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டுவதற்கான துரித நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more...

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயற்திறன் அற்றவர்! !- கிழக்கு மாகாண அமைச்சர்கள் விசனம்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் செயற்திறன் அற்றவர் எனவும், அவரின் செயற்பாடுகள் திருப்தியற்றவையாகக் காணப்படுகின்றது எனவும், அதனால் கிழக்கு மாகாணசபை செயலிழந்து வருகின்றது என, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் ஏனைய அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமைச்சரவை தீர்மானங்கள் எதுவும் கிழக்கு மாகாண சபையில் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும், கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளை பயமுறுத்தி வருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சர்களை மதித்து செயற்படுவதில்லை எனவும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு இணைப்பு இல்லாமல் இருக்கின்றது எனவும், கிழக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற போதே, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர், இவ்வாறு முதலமைச்சர் மீதும் ஆளுநர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்து, இவ்விடயங்களை கேட்டறிந்துகொண்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் இதை தெரிவித்து விரைவில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் முறண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த உயர்மட்ட கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளாத போதிலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எம்.மன்சூர், எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அகமட், உட்பட கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களான சுசில் பிறேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more...

வேலியே பயிரை மேயலாமா? D.I.G வாஸ் குணவர்தன தொடர்பில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு!

படுகொலைச் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைதுசெய் யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பில் பவ்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலி சந்தேக நபர்களை D.I.G வாஸ் குணவர்தன விசாரணைக்குட்படுத்தியபோது, அவர்களிடமிருந்து பல தமிழ் வர்த்தகர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கதைத்த அவர், புலிகள் இயக்கத்துடன் உங்களுக்கு தொடர்பு இருக்கின்றமை எமக்கு தெரியும் என்றும், அதுபற்றிய தகவல்கள் எங்களிடம் இருக்கின்றன எனவே நீங்கள் கைதாகாமலிருக்க வேண்டுமென்றால் கப்பம் வழங்க வேண்டுமென்று அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் அரசியல்வாதியொருவருடைய செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தி 72 மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றமை தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுடன், குறித்த தொலைபேசி அழைப்பை பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸாரில் ஒருவரே மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்படப்படுகிறது.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தமிழ் வர்த்தகர்கள் அடங்கலாக பலரை அச்சுறுத்தி இலட்சக்கணக்கில் கப்பம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகரான மொஹம்மட் சியாம் படுகொலை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குவர்தனவை விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார் எனவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கலொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கடத்திச்சென்று தாக்கியமை தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமா அதிபர் ஏன் தவறினார் என நியாயம் கேட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Read more...

கட்டையாக சட்டை போட்ட மாணவியை ஆசிரியை எச்சரித்ததால் தந்தை சீற்றம்! ஆசிரியயை முழங்காலில் நிறுத்தி அட்டகாசம்!

வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமார நவகத்தேகம, இசுறு பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்தி அவமானப்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை கட்டையாக இருந்தனால் அம்மாணவியை எச்சரித்துள்ளார். இதனை அம்மாணவி தன் தந்தையான வடமேல் மாகாண சபை உறுப்பினர் சரத்குமாரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்குச் சென்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியயை ஏசி, எச்சரித்து பின்னர் முழங்காலில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த ஆசிரியை இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த ஆசிரியை பாசடாலை ஒழுக்காற்று குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, June 15, 2013

சீறிப்பாய்ந்த கருநாகத்தை 2 துண்டுகளாக்கிய சிங்க ஜோடி

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் டாட்டா வனவிலங்கு காப்பகப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் விஷத்தன்மை வாய்ந்த கருநாகம் ஒன்று சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்தது. இதைக் கண்ட சிங்கம் சீறிப் பாய்ந்து கருநாகத்தின் கழுத்தில் காலால் மிதிக்க பெண் சிங்கம் அதன் வாலை கடித்து இழுத்து 2 துண்டுகளாக்கி கீழே போட்டது.

உயிருக்கு போராடிய கருநாகம் சிங்கங்களை ஆக்ரோஷத்துடன் கொத்தியதால் ஜம்போ என்ற அந்த ஆண் சிங்கமும், சலியா என்ற பெண் சிங்கமும் மயங்கி விழுந்தது. இதைக்கண்ட வன விலங்கு காப்பக ஊழியர்கள் உடனடியாக வைத்தியருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து உடனடியாக செயல்ப்பட்ட வைத்தியர் இரண்டு சிங்கத்திற்கும் விஷமுறிவு ஊசி போட்டதை தொடர்ந்து தற்போது சிங்கங்கள் தேறி வருகின்றன.

Read more...

இரணைமடு விமான ஓடுதளத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

கிளிநொச்சி, இரணைமடுவில் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட் புலிகளின் விமான ஓடுதளத்தை இன்று (15.06.2013)சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படது.

1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கும் இந்த ஓடுதளத்தை இலங்கை விமானப்படையின் திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தி இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சவூதி சென்ற மகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோரிக்கை!

வீட்டு பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு, வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற எமது மகளை மீட்டுத் தருமாறுகோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர முதல்வருமான அலிஸாஹிர் மௌலானாவிடம் முறையிட்டுள்ளனர்.

அம்முறைப்பாட்டில், ‘சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் வாகரையிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி நோக்கிப் புறப்பட்ட தமது மகள் அடி, உதை, கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதுடன் அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை. கடைசியாக இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் கொதி நீரால் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாகவும் தன்னை எப்படியாவது இந்த வீட்டின் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றுமாறும் கூறினார்.

அதன் பின்னர் அவருடனான தொடர்புகளும் அறுந்து போய்விட்டன. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் இதுவரை நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் அவர்கள் தராததால் இந்த விடையத்தை உடனடியாக ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா வின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து உடனடியாகவே இந்த விடையத்தை சவூதி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஏறாவூர் நகர முதல்வர் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.

Read more...

மணிவண்ணன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய சீமான்

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்த போது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகி இருந்த மணிவண்ணன் இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த போது, அவரை ஆதரித்து பேசி வந்ததுடன் பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர்.

இதனால் தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், “நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.

என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக் கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என்பதுடன் என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை,” என்று கூறினார்.

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

Read more...

அன்று இரவுக்குழியில் வீழ்ந்ததைப்போல இன்று பகல் குழியிலும் விழுந்துவிடாதீர்கள்-ஜனாதிபதி

முன்னொருமுறை தீயசக்திகளிற்கு கட்டுப்பட்டு இரவுநேரத்திலே குழியிலே விழுந்ததைபோல இப்போது மீண்டும் பகல் குழியில் விழுந்து விடாதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றையதினம் கிளிநொச்சிக்கு வருகைதந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டுள்ள ஏ9 வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் :

வடக்கு மக்களின் தேவைகள், பிரச்சினைகளை நான் நன்கு அறிந்து வைத்துள்வேன். அன்று இருந்ததை விட இந்தப்பகுதியில் இப்போது பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டிருப்பதைக்கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாளுக்குநாள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய சுபீட்சமான எல்லாவற்றையும் நாம் மிக சந்தோசமாக செய்து வருகின்றோம். இந்தப்பகுதியில் இவ்வாறான அபிவிருத்திகள் மிகவிரைவில் ஏற்படும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை, தென்னிலங்கை மக்களுக்கு இந்தப்பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது கூட முன்பு ஒரு கனவகத்தான் இருந்தது.

ஆனால் அவை இன்று நனவாகியுள்ளது!! , இன்று வடக்கும் தெற்கும் மிக நெருக்கமாக இருக்கக்கூடியதொரு காலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த நாட்டுலுள்ள மூவின மக்களும் ஒன்றாக கைகோர்த்து வாழவேண்டுமென்ற வடக்கிலுள்ள உங்களின் ஆசையைப்போன்று தென்பகுதி மக்களின் ஆசையாகவும் இருக்கின்றது, பயங்கரவாதத்தால் பல கஸ்ரங்களையும் நஸ்ரங்களையும் அனுபவித்தவர்கள்தான் நீங்கள், அன்று துப்பாக்கிக்கும் அடக்குமுறைகளுக்கும் அடிபணிந்திரந்தீர்கள்.

ஆனால் இன்று அந்த நிலைகளெல்லாம் மாறிவிட்டது இருந்தபோதும் உங்களின் எல்லாப்பிரச்சனைகளையும் ஒரேயடியாக தீர்த்து விட எம்மால் முடியாது , 3 லட்சம் பேருக்கு ஒரே நாளில் வீடு கட்டிக்கொடுக்கவும் முடியாது!!! எல்லாவற்றையும் படிப்படியாகத்தான் நிறைவேற்றமுடியும் எனவே நீங்கள் தான் அறிந்துகொள்ளவேண்டும், அரசிடமிருந்தோ மாகாண சபைகளிடமிருந்தோ பிரதேச செயலகங்களிடமிருந்தோ எவ்வாறு உங்களுக்குத்தேவையானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ..

ஆகவே நீங்கள்தான் சரியான பக்கத்தை தெரிவுசெய்யவேண்டும் முன்னைய காலங்களில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருந்த நீங்கள் இன்று பல எதிர்பார்ப்புகளுடன் வாழத்தொடங்கியுள்ளீர்கள்.

ஆகவே நீங்கள் உங்களுடைய எதிர்காலசந்ததியினரை நல்ல வழியில் கொண்டு செல்லவதற்காக செயற்படவேண்டும் அதைதான் நானும் விரும்புகின்றேன். தென்பகுதி மக்களுக்கு எவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அதே வசதிகளும் அபிவிருத்திகளும் உங்களுக்கும் நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

உங்கள் வாழ்க்கையை அன்று இருளுக்குத்தள்ளிய சிலர் இன்று வெளிநாடுகளில் இருந்துகொண்டு மீண்டும் உங்களை பள்ளத்தில் விழவைக்க முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எங்கோதூரத்திலுள்ள சொந்தக்காரரைவிட அருகிலிருக்கும் அயலவர்தான் எமக்கு முக்கியமானவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். முன்னொருமுறை இரவுநேரத்திலே குழியிலே விழுந்ததைபோல இப்போது பகலிலும் குழியில் விழுந்து விடாதீர்கள்.

ஆகவே எங்களுடைய இந்த சிறிய அழகியநாட்டை அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்ப அணிதிரள வேண்டுமென நான் உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கிளிநொச்சியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கியின் புதிய கட்டடம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் வட்டக்கட்சிப்பகுதியில் பாடசாலைமாணவர்களுக்கான சத்துணவுத்திட்டத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

மேலும் கிளிநொச்சியைச்சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான டக்ளஸ் தேவாநந்தா, நிர்மலகொத்தலாவம, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் , சில்வேஸ்திரி அலன்ரீன் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிமாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Read more...

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை துண்டாடுவதற்கான போராட்டம் உச்சக்கட்டத்தில்!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரி மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

இதற்கிணங்க "சலோ அசெம்பிளி" என்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தெலுங்கான கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று அறிவித்திருந்தது. எனினும் ஆந்திராவை ஆளும் கிரண் குமார்ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இப்போராட்டத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, சுமார் 10,000 பொலிஸாரும் 2,000 மத்திய துணைப் படையினர் பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களில் பெரும் பாலானோர் சட்டமன்றப் பகுதியைச் சுற்றியே காவல் பணியில் ஈடுபட்டதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அனைத்து தடைகளையும் மீறி ஹைதராபாத் நகரின் பல இடங்களில் திரண்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தெலுங்கானா மாநிலத்தை உடனடியாக அமைக்கவேண்டும் எனக் கூறி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் திங்கட்கிழமை வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

பணமோசடியில் ஈடுபட்ட யாழ் வங்கி ஊழியர் ! குறித்த நபரை தேடி பொலிஸார் வலைவிரிப்பு

கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து 46 இலட்சம் ரூபாவை பணமோசடி செய்த யாழ் வங்கியென்றின் ஊழியரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக, யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். தலைமறைவாகி யுள்ள குறித்த நபரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபர் வங்கியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இரு இராணுவ உயரதிகாரிகள் பலி!

புத்தளம், தாபோவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இராணுவ உயரதிகாரிகள் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ கேர்ணல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்தில் காயமடைந்த மேஜர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

பா.அ.செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்த வழக்கு எதிர்வரும் ஜுன் 27!

நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை எல்.ரி.ரி.ஈ. யின் தற்கொலைப்படையினர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜுன் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போதே பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ய வழக்கை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சட்டமா அதிபருக்கு பொலிஸார் அனுப்பிய புலன்விசாரணை அறிக்கை குறித்து, வழக்குத் தொடுநருக்கு சட்டமா அதிபர் இதுவரை அறிவித்தல் வழங்காத காரணத்தினால் இவ்வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கில் தர்மலிங்கம் தர்மதரன், சிவலிங்கம் ஆருரன், லத்திப் மொகமட் ஆரிப் மற்றும் பொன்னுசாமி கார்த்திகேசு ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டி, பித்தளை சந்தியில் வைத்து 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் 1 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியில் குண்டுகளை பொருத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குறித்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் உட்பட பதினொரு வாகனங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பயங்கரவாதக் குழுக்களுடன் முஸ்லிம்களுக்குத் தொடர்புள்ளது என்பது வெறும் கட்டுக்கதையே! பொதுபல சேனாவின் கருத்தைத் தகர்க்கிறார் இஸட்.ஏ.எச். றஹ்மான்

அரபு மத்ரஸாக்களை மூடிவிடுமாறு பொது பலசேனா கூறியிருப்பதானது அவர்களின் அறியாமையை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டப் போதுமானதாகவுள்ளதென கல்முனை மாநகர சபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர் இஸட்.ஏ.எச். றஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

முஸ்லிம்களை சீண்டிப் பார்ப்பதையே நிலையான கொள்கையாகக்கொண்டு பொதுபலசேனா செயற்படுகின்றது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்றவை மட்டுமன்றி எழுந்தமான கற்பனைகளாகும்.

தலிபான் அல்குவைதா அமைப்புக்களுடன் இலங்கை முஸ்லிம்களைத் தொடர்புபடுத்துவது வெறும் கற்பனையே. அதனையும் தாண்டி புனித குர்ஆன் "தீன் மற்றும் இஸ்லாமிய வரலாற்றைப் போதிக்கும் அரபு மத்ரஸாக்களில் தலிபான் அல்கைதா கொள்கைகள் பரப்பப்படுவதென்று கூறுவது எந்த விதத்திலும் அடிப்படையற்றதாகும்.

நல்லொழுக்கம் சாந்தி சமாதானமான வாழ்க்கை முதலியவற்றை அடிப்படையாக வைத்தே அரபு மத்ராக்கள் மாணவர்களை பயிற்றுவிக்கின்றன. அதைவிடுத்து அங்கு தீவிரவாதம் போதிக்கப்படுவதில்லை என்பதை பொதுபலசேனா செயலாளர் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் ஸவுதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள உலாமாக்களுக்கான பல்கலைக்கழகத்தையும் தடை செய்ய வேண்டுமென்று பொதுபலசேனா கூறுகின்றது.

அந்தப் பல்கலைக்கழகம் மூலம் 1500 உலாமாக்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அது பௌத்த மதத்தைவிட மேலோங்கச்செய்யும் நடவடிக்கை என்றும் பொதுபலசேனா குற்றம் சாட்டுகின்றது.

அங்கு உருவாக்கப்படும் 1500 உலாமாக்கள் என்பது சிங்கள மக்களிலிருந்து உருவாக்கப்படுவதில்லை என்பதை ஞானசார தேரர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்களிலிருந்தே அவர்கள் உருவாக்கப்படுவர். உலாமாக்கள் என்போர் இஸ்லாத்தைப்போதிக்கும் அறிஞர்கள். மூடத்தனமாக அறிவிலித்தனமாக பொதுபல சேனா கருத்துக்கொள்ள முற்படக்கூடாது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. முஸ்லிம்கள் மத்தியில் நல் மதிப்பைப் பெற்ற திட்டமும் அவவாறான திட்டமொன்றை முன்னெடுத்தமைக்காக அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, பொதுபலசேனா எதிர்வரும் காலங்களில் தமது அறிவிலித்தனத்திலிருந்து விடுபட்டு இஸ்லாத்தைப் பற்றிய உண்மையை அறிய முற்படவேண்டும். அரசும் இது விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி இவ்வாறான இனவாத அமைப்புக்களை தடைசெய்ய முயற்சிக்கவேண்டும்.

பொதுபலசேனாவின் கூட்டத்தை எவ்வாறு சிங்கள மக்கள் புறக்கணித்தார்களோ அதுபோன்று ஏனைய பகுதிகளிலுள்ள மக்களும் இந்தச் சேனாவை புறக்கணிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com