Monday, June 10, 2013

வடமாகாணத்தின் முதலாவது குறும் படவிழா! 34 குறும்படங்கள் கலந்துகொண்டன! (படங்கள்)

வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டு ஆலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் முதலாவது குறும் படவிழா நேற்று இடம்பெற்றது. யாழ் நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்துகொண்டார்.

வடமாகாணத்தில் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியில் 34 குறும்படங்கள் கலந்துகொண்டிருந்தன இதில் 10 படங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன இதில் மூன்று படங்கள் தெரிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் திரையிடப்பட்டது.

இதன்போது இக்குறும்படங்களின் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம செயலாளர் திருமதி விஜலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இ. இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்திருவிழா நேற்று ஆரம்பம். (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான கொடியேற்றம் சரியாக நண்பகல் 12 மணியளவில் சுபமுகூர்த்தவேளையில் இடம்பெற்றது.

நேற்று முதலாம் நாள் கொடியேற்றத்திருவிழாவில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 21ம் திகதி சப்பரத்திருவிழாவும், 22ம்திகதி தேர்த்திருவிழாவும், 23ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலையை வழங்கிய இந்தோனேசியா!

இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.

எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

குற்றவாளிகளை கைதுசெய்யாமல் ஏன் பிச்சைக்காரர்களை கைது செய்துகின்றீர்கள்? - நீதவான்

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரியும் போது, அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் பிச்சைக்காரர்களை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்வது ஏன் என மாளிகாகந்த நீதவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளொன்றுக்கு 15,000 ரூபா வருமானத்தை பிச்சையெடுப்பதன் மூலம் பெறும் பிச்சைக்காரர் ஒருவரை பொறளைப் பொலிஸார் கைதுசெய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போதே நீதவான் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

பொறளை சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்ததாக பொறளை பொலிஸார் பிச்சைக்காரர் ஒருவரை கைது செய்ததாகவும் காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பிச்சை எடுத்ததில் இந்நபர் 1500 ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாகவும் பொறளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Read more...

த.தே.கூட்டமைப்பின் அரசியல் வால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! - முஸம்மில்.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளான போதும், அதனை மறந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வால் போன்று செயற்பட்டுவருகின்றது என, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மறைந்த தலைவர் அஷ்ரப் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் வரதராஜ பெருமாள் ஈழப் பிரகடனத்தை விடுத்ததும் அதனை எதிர்த்தவர். ஆனால் தற்போது அவரின் பாதையிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரிவினைவாதத்தை நோக்கி அதன் தற்போதைய தலைமைத்துவம் இழுத்துச் செல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். அப்போது அதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை பார்க்கும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வால் போன்று செயற்பட்டுவருகின்றது.

Read more...

வானிலை குறித்து பொதுமக்களுக்கு விடுத்த அறிக்கையை உடனடியாக என்னிடம் சமர்பிக்க! - ஜனாதிபதி

சீரற்ற வானிலை குறித்து பொதுமக்களுக்கும், மீனவ சமூகத்திற்கும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, குறித்த அறிக்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சமர்பிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 30க்கு மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சகோதரத்துவத்தை சிதைத்து சகோதரியை கர்ப்பிணியாக்கிய சகோதரன்!

தனது சொந்த சகோதரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சகோதன் ஒருவரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியரிடம் சென்றுள்ளார்.

அப்போது, வைத்தியர் சிறுமியின் சிறுநீரை பரிசோதனை செய்து களுபோவில வைத்தியசாலைக்கு மருத்துவ அறிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதில் தமது சகோதரனால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதைனையடுத்து குறித்த இளைஞர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த நபரை ஜூன் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Read more...

அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படவும்!

அரசாங்கம் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளும் இத்தருணத்தில், அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சியில் ஒருசில குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருசிலர் தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more...

திருக்கோயில் பகுதி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு

அம்பாறை மாவட்ட திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதேசத்தின் பிரதான வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றின் பின் பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை திருக்கோவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருக்கோயில் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹிம் தலைமையிலான குழவினர் இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் இந்த ஆயுதங்கள் குறித்த மேலதிக விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.

Read more...

பரீட்சையின் போது பெண்கள் “பிரா” அணிய சீனாவில் தடை

சீனாவின், தேசிய கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்வு, கடந்த வாரம் நடந்தது. நாடு முழுவதும், 90 லட்சம் மாணவர்கள், இந்த தேர்வை எழுதியபோதும் இந்த தேர்வில கலந்து கொண்ட பெண்கள், உலோகத்தினாலான கொக்கியை கொண்ட, "பிரா' அணிய,தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த முறை நடைபெற்ற தேர்வுகளின் போது, பெண்கள் தங்கள் பிராவில் இய போன்களை வைத்து கொண்டு, மொபைல் போன் மூலம் விடைகளை கேட்டு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது அதே போல் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்வில், ஒரு பெண், தன்னுடைய பிராவில் கேமராவை வைத்துகொண்டு, கேள்வி தாளை படம் பிடித்து, வெளியில் காத்திருந்த மாணவர்களுக்கு உதவினார்.

இது போன்ற தில்லு முல்லுகள் தொடர்ந்து நடைபெறுவதை அறிந்த பரீட்சை நிர்வாகம் தனை தவிர்க்க, பெண்கள் இம்முறை உலோக கொக்கி கொண்ட பிராவை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு சில பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, June 9, 2013

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 மீனவர்கள் பலி, 36 மீனவர்களை காணவில்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளதுடன் காலி,கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற 37 படகுகளும் காணாமற் போயுள்ளன.

கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன் இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். அது மட்டுமல்லாது இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கை வர அனுமதிக்க வேண்டும்- அமெரிக்கா

கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பிரான்க் லா ரூ இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் டொஹனா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின். இலங்கை விஜயத்திற்கான திகதிகளை நிர்ணயம் செய்து அவரின் விஜயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியதுடன் இலங்கையில் தொடர்ச்சியாக கருத்துச்சுதந்திர மீறல்கள் நடைபெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read more...

நிறுத்துங்கள்! உங்கள் குழந்தைகளை ஆபத்து நெருங்குகிறது

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுகிறார், அவர் ஒரு சங்கிலிப் புகைப்பாளர், அவருக்கு வாயிலிருந்து பொய் வராத நேரங்களில் எல்லாம் புகை வரும் என்பதாகப் பல்வேறு கதைகளை விளையாட்டாய் நம்மத்தியில் புகைப்பிடிப்பவர்களைப் பார்த்துச் சொல்லிக்கொள்கிறோம். புகைப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு விளையாட்டாய் எடுத்துக்கொள்ளக்கூடிய விஷய மல்ல.

புகைப்பிடித்தல் என்பது பிடிக்கின்றவர்களை மட்டுமே பாதிக்கின்ற விஷயமும் அல்ல. அது காற்றாலும் பரவி நம்மைத் தாக்குகிற நஞ்சு. தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகள் எந்த சப்தமும் இல்லாமல் அப்படியே செத்துப்போகின்றன. இறந்த குழந்தைகளை பரிசோதித்துப் பார்த்தபோது அவை இறந்ததற்கான காரணத்தை யாராலுமே கண்டறிய முடியவில்லை. அக்குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தன.

2006 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ கழகம் ஒரு ஆய்வறிக்கையை இதுகுறித்து வெளியிட்டது. இப்படிப்பட்ட திடீர் மரணங்களை SIDS என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அதாவது Sudden Infant Death Syndrome. இந்த சிட்ஸால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துபோகிறார்கள் என்று கண்டது.

நம்முடைய புகைப்பிடிக்கும் பழக்கம் Passive Smoking-ன் பின்விளைவுகளில் ஒன்றுதான் இந்த SIDS. இதனால் குழந்தைகளையும் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் புகை பிடிப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது அஸ்மா மற்றும் நுரையீரல் தொடர்பான சுவாசக்கோளாறுகள், நுரையீரலில் தொற்று நோய். ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் யாரோ புகைபிடிப்பதால் சுவாசக்கோளாறுகளுக்கு உள் ளாகின்றனர். தங்களுடைய வாழ்நாள் முழுக்க நிம்மதியாக மூச்சு கூட விடமுடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வாமை நோயாலும், மூளை வளர்ச்சியின்மை, கற்றல் குறைபாடு, கேட்கும் திறனில் குறைபாடு என இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா? நான் ஒருவன் புகைபிடிப்ப தாலே இப்படியெல்லாம் நடந்துவிடுமா? நான் ஒருவன் புகை பிடிப்பதை விட்டுவிட்டால் எல்லாமே மாறிவிடுமா? என்கிற கேள் விகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையான எல்லாருக்குமே எழலாம்! (இதுவும் கூட நாம் கேட்கிற நம்முடைய மூளை உருவாக்கும் கேள்வி அல்லவாம்... நம்முடைய உணர்வு கேட்கிற கேள்வி என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

மாற்றம் ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இலட்சம் பேர் புகைபிடிப்பதால் ஒரே ஒரு குழந்தை பாதிக் கப்பட்டாலும், ஒரே ஒரு குழந்தைக்கு நுரையீரல் பழுதடைந்தாலும் கூட பாதிப்புதானே! அந்தக் குழந்தை நமது குழந்தையாகவும் இருக்கலாம். அது சிட்ஸ் பாதிப்பினால் துர் மரணம் அடைய நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு?

கர்ப்பிணிப் பெண்கள் இந்த எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. கருவில் இருக்கிற குழந்தை எடை குறைவான, உடல் குறைபாட்டோடு, சுவாசக் கோளாறுகளோடு பிறக்க நேரிடும் என்கிறது அந்த ஆய்வு. பிறக்காத குழந்தையின் உடலிலும் நஞ்சைக் கலக்கவல்லது இந்த புகைப்பழக்கம். நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும். உங்களுடைய உடல்நிலையைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டேயாக வேண்டும். அடுத்த முறை புகைக்கும் போது தயவுசெய்து உங்கள் குழந்தைகளை ஒருமுறை நினைவில் கொண்டாலே போதுமானது.

Read more...

லக்ஷபான வான்கதவு திறப்பு: களனி கங்கையின் தாழ் நில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கெனியோன் நீர்த்தேக்கங்களுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையின் தாழ் பிரதேசங்களின் நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் நிலவுவதால் இந்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி நுவரெலியா மாவட்ட செயலாளர் டப்ளியு.பி.ஜி.குமாரசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

புலிகளுடைய 86 மில்லியன் ரூபா பணம் அரசுடமை- திவயின

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின செய்திவெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மாத்திரம் 56 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது எனவும் திவயின தெரிவித்துள்ளது.

புலிகள் அமைப்புக்கு இந்த பணத்தை வைப்புச் செய்த ரெஜி என்ற விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் தற்போது பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் எனவும் அவரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினரால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் புலிகளின் வங்கி கணக்கில் இருந்த பணம் அரசுடமையக்கப்பட்டுள்ளது என திவயின செய்திவெளியிட்டுள்து.

Read more...

கடற்புலிகளின் கப்பல்தளத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்த கடற்புலிகளின் கப்பல் கட்டுமிடத்தை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வளங்கியுள்ளனர்.

முள்ளி வாய்க்கால் பகுதியில் மிக நீண்ட காலமாக புலிகளின் பயன்பாட்டில் இருந்ததுடன் கடற்புலிகளின் படகுகள், உற்பத்தி செய்து வந்த இந்த கப்பல் கட்டுமிடம் யுத்தத்திற்குப் பின்னர் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில் தற்போது இந்த இடத்தை மக்கள் பார்வையிட படையினர் அனுமதி வளங்கியுள்ளனர்.

படகுகள், உற்பத்தி செய்யும் மாதிரிகள் மற்றும் படகுகளின் இயந்திரங்கள் என்பன காணப்படும் இந்த இடத்தை மக்கள் பார்வையிட அனுமதித்ததால் பெரும்திரளான மக்கள் இந்த கப்பல் கட்டும் இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்

Read more...

மட்டக்களப்பில் மீனவரிடம் மாட்டிய அதிசய மீன்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலிலிருந்து அதிசய மீன்னொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஜ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.

இதே வேளை தற்போது ஓட்டமாவடி சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த 6 கிலோ 500 கிராம் நிறையுடைய வால்கள் அற்ற அதிசய மீனை பரிசோதனைக்காக கடற்றொலில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீரக வளங்கள் ஆராய்ச்சி அதிகார சபையிடம் நாளை ஒப்படைக்க உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி அதிகார சபையின் சமுத்திரவியல் ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பான அதிகாரியான கலாநிதி அருளானந்தின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த அதிசய மீன் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது எனக்குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி அறிக்கையின் பின்னரே இந்த அதிசய மீன் பற்றிய பூரண தகவலை அறியக் கூடியதாக இருக்கும் என்றும் உதவிப் பணிப்பாளர் டொமின்கோ தெரிவித்துள்ளார்

Read more...

நகரங்களிலுள்ள மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான திட்டம் நாளை ஆரம்பம்

நாட்டின் பிரதான நகரங்களில் ஒளிரும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான வேலைத்திட்டம் நாளைய தினம் நுகேகொடை வாராந்த சந்தைக்கு அருகில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக சுற்றாடல் மற்றும் மீள் உற்பத்தி வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய சுற்றாடல் வாரத்திற்கு அமைவாக இலங்கை நிலையான சக்திவள அதிகார சபையின் ஏற்ப்பாட்டில் சகல நகரங்களிலும் காணப்படும் மின் விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர வைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read more...

எங்களது பலம்மிக்க உறவில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிப்பு ஏற்படாது! - மாகாய்

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் பலம்மிக்க உறவில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிப்பு ஏற்படாது என்றும் இலங்கையின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன் சீனாவின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படும் சகல சந்தர்ப்பங்களின் போதும் இலங்கை தமக்கு ஆதரவு வழங்கியதாகவும் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையில் கலாசார ரீதியாக சிறந்த நட்புறவு காணப்படுகின்றது எனவும் சீன உப பிரதமர் மாகாய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறந்த கொள்கைகளின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இலங்கை, சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவிப்பதாக சீன உப பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read more...

நாச்சியாதீவு பர்வீனின் ‘மனவெளியின் பிரதி’ நூல் வெளியீடு (அழைப்பிதழ் இணைப்பு)

எழுத்தாளரும் கவிஞருமான நாச்சியாதீவு பர்வீன் எழுதியுள்ள ‘மனவெளியின் பிரதி’ நூல் வெளியீடும், மும்மொழிப் பாண்டித்தியம் மிக்கவும் பன்னூலாசிரியரும் பிரபல கவிஞரும் நாவலாசிரியருமான அமரர் எம்.எச்.எம். ஷம்ஸ் நினைவுரையும் எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்புத் தமிழ்ச் சங்கவிநோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பன்னூலாசிரியரும் திக்குவல்லைக் கமால் தலைமைதாங்கவுள்ள இந்நிகழ்வில், ‘சம்ஸ் எனும் ஆளுமை ‘ எனும் தலைப்பில் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் உரை நிகழ்த்தவுள்ளார்.

எழுத்தாளர் எம்.சி. றஸ்மின் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதைப்போக்கு’ எனும் தலைப்பிலும், இலங்கை மன்றக் கல்லூரியின் விரிவுரையாளர் விஜிதா சிவபாலன் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதையில் உள்ள சமூகப் பார்வை’ எனும் தலைப்பிலும், வதிரி சி. ரவீந்திரன் ‘நாச்சியாதீவு பர்வீனின் கவிதைகள் எனது பார்வையில்’ எனும் தலைப்பிலும் கருத்துரைக்கவுள்ளனர். மேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.ஏ. கபூர் பிரதம அதிதியாகவும். உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்.எம். சஹீத் சிறப்பதியாகவும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர் மேம்மன் கவி நூலறிமுகம் செய்யவுள்ளார்.

‘மனவெளியின் பிரதி’ யின் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ள இந்நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பையும் வரவேற்றுபுரையையும் எம்.சி நஜிமுதீன் செய்யவுள்ளார்.


(கலைமகன் பைரூஸ்)

Read more...

ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை கைது!

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு நடிகை சானான் ரிச்சர்ட்சனை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 5 குழந்தைகளுக்கு தாயான குறித்த நடிகை தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் சானாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியதில், அவர் தனது கண்வர் விஷம் தடவிய கடிதத்தை ஒபாமாவிற்கு அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தொடர்ந்து சானானிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க சட்டத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

கணவர் மாரடைப்பினால் இறந்ததாக மனைவி தெரிவிக்கும் அதேவேளை, தமது சகோதரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக......

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்து ஒருசில நாட்களில் தமது சகோதரர் இறந்தது தொடர்பில் மரணமானவரின் சகோதரிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சடலத்தினை தோண்டி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த ஆறுமுகம் சத்தியசீலன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாடு சென்று கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். எனினும் அவர் வெளிநாடு சென்றுவந்து ஒருசில நாட்களில் வீட்டில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக குறித்த நபரின் மனைவியினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமது சகோதரர் மாரடைப்பினால் உயிரிழக்கவில்லை எனவும், அவர் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மரணமானவரின் சகோதரிகளால் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த சடலத்தினை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

ரிசானாவை போலி ஆவணங்களை தயாரித்து சவுதிக்கு அனுப்பிய முகவர் நிலையம் மீண்டும் செயற்பட முயற்சி!

சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப் பெண்ணான ரிசானா நபீக்கிற்கு போலி ஆவணங்களை தயாரித்து சவுதிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரிசானா நபீக்கை சவூதிக்கு அனுப்பிய குறித்த முகவர் நிறுவனம் இரு வேறுபெயர்களில் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாகவும இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் டிலான் பெரேரா உறுதியளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

Read more...

Saturday, June 8, 2013

ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு தெற்கு பசிபிக்கில் கூடுதல் இராணுவத் தலையீடுகளுக்கு தயாரிக்கிறது. By Patrick O’Connor—SEP candidate for the Senate in Victoria .

இம்மாதம் பாதுகாப்புத்துறை வெள்ளைத் தாளில் வெளிப்பட்டுள்ள தொழிற் கட்சி அரசாங்கத்தின் திட்டங்களான தென் பசிபிக் பிராந்தியத்தில் இராணுவமயமாக்கலை முடுக்கி விடுவதை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது, மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிராந்தியத்திலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒரு புதிய சுற்றுக் கொள்ளையிடும் தலையீடுகள் தயாரிக்கப்படுகின்றன என்றும் எச்சரிக்கிறது.
கான்பெர்ராவின் தற்போதைய மூலோபாய மற்றும் இராணுவ செயற்பட்டியலை கோடிட்டுக் காட்டும் கொள்கை ஆவணமான வெள்ளைத் தாள், எந்த அளவிற்கு ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் வாஷிங்டனின் கிழக்கு ஆசியா, பசிபிக்கில் “முன்னிலை” என்பதற்கு உறுதியளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா நிர்வாகம் ஆத்திரமூட்டும் வகையில் சீனாவைச் சுற்றி நிலை கொண்டு அதற்கு எதிரான போருக்கும் தயாரிப்பை கொண்டுள்ளது; இது முழுப்பிராந்தியத்தின் மீதும் வாஷிங்டன் மூலோபாய மேலாதிக்கத்தை தக்க வைப்பதற்கான முயற்சி ஆகும்.

புதிய வெள்ளைத் தாளின் ஒரு சிறு குறிப்பிடத்தக்க பகுதி, தெற்கு பசிபிக்கில் ஆஸ்திரேலிய இராணுவச் செயற்பாடுகள் முடுக்கி விடப்படுவது குறித்த தயாரிப்பில் அது காட்டும் குவிப்பு ஆகும்.

பெய்ஜிங்குடனான அமெரிக்க-ஆஸ்திரேலிய மோதல் பிரச்சாரத்தில் இப்பிராந்தியம் ஒரு முக்கிய அரங்காக வெளிப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இருந்ததைப்போல், முழு பசிபிக் பெருங்கடலும் ஒரு “அமெரிக்க ஏரியாக” இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ளது. வாஷிங்டனுடைய இளைய நட்பு நாடுகளான ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும், போட்டிச் சக்திகள் மேலனிசியா மற்றும் போலினிசியா நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் முற்றிலும் அமெரிக்காவைத்தான் தன் சொந்த பிராந்தியக் கொள்ளைச் செயல்களுக்கு நம்பியுள்ளது. அதையொட்டி அமெரிக்கத் தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பு உலகெங்கும் நடைபெறுவதற்கு ஆதரவையும் கொடுத்துள்ளது.

2013 வெள்ளைத்தாள் கான்பெர்ராவின் மிக முக்கிய மூலோபாய நலனை வரையறுக்கிறது, ஆஸ்திரேலியாவின் இராணுவப் பாதுகாப்பை தக்க வைத்தபின், “பாதுகாப்பான” தென் பசிபிக் மற்றும் கிழக்கு தீமோர் நிறுவப்பட வேண்டும் என்பதே அது. “ஆஸ்திரேலியா, நம் அருகில் உள்ளவர்களால் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலில்லாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதோடு, நம் உடனடி அண்டைப்பகுதியில் எந்த பிரதான சக்தியும் விரோத நோக்கத்துடன் தளங்களை நிறுவதலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் நாம் அதையொட்டி சக்தியை காட்டுவதில் ஈடுபட நேரிடும்” என்று ஆவணம் அறிவிக்கிறது.

இந்த சாத்தியமான “பிரதான சக்தி” எது என்பது ஆவணத்தில் எந்த இடத்திலும் அடையாளம் காட்டப்படவில்லை; ஆனால் சீனாதான் முக்கிய இலக்காகும்.

இலத்தின் அமெரிக்கா, ஆபிரிக்கா இன்னும் பிற பகுதிகளில் செய்துள்ளதைப் போலவே, பெய்ஜிங் தீவிரமாக தென் பசிபிக்கிலும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை வளர்த்துள்ளது. சில சிறிய பசிபிக் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் சீன ஆதரவுத் தன்மையை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த மேலாதிக்க செல்வாக்கை மாற்ற முயல்கின்றன. உதாரணமாக பிஜிய இராணுவ அரசாங்கம், கான்பெர்ராவின் ஆணைகளையும் இராஜதந்திர வகை பொருளாதாரத் தடைகளையும் ஐந்து ஆண்டுகளாக மீறியுள்ளது, சீனக் கடன்கள், பொருளாதார முதலீடு மற்றும் இராணுவ உறவுகளை, தன் ஆட்சியை முட்டுக்கொடுத்து நிறுத்தப் பயன்படுத்தியுள்ளது. வாஷிங்டனிலும் கான்பெர்ராவிலும் இந்தப் போக்குகள், ஒரு சீன இராணுவ நிலைப்பாடு தென் பசிபிக்கில் அதன் “நீல வண்ண” கடற்படை வளர்ச்சியின் பகுதி எனக் காணப்படுகிறது.

இதைத்தவிர இன்னும் உடனடியான பொருளாதாரக் கணக்கீடுகளும் உள்ளன. இவை அப்பட்டமாக 2011ல் அப்பொழுது அமெரிக்க வெளிவிவகார செயலராக இருந்த கிளின்டனால் கூறப்பட்டன; அவர் பாப்புவா நியூ கினியில் (PNG) அமெரிக்க நலன்கள் பற்றிக் காங்கிரஸ் குழுவிடம் தெரிவித்தார்: “அறநெறி, மனிதாபிமான, நல்லது செய்தல் என நாம் நினைப்பவற்றை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, உண்மையான அரசியல் பற்றிப் பேசுவோம். நாம் சீனாவுடன் போட்டியில் உள்ளோம்.... Exxon Mobil என்பது 19 பில்லியன் எரிவாயுத் திட்டத்திற்கு PNG யில் உற்பத்தி செய்கிறது. சீனா அங்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நமக்குப்பின், நமக்குக் கீழே வருவது என்பதைத்தான் சிந்திக்கிறது.”

ஆஸ்திரேலியாவின் 2013 வெள்ளைத்தாள் அப்பட்டமாக “ஆஸ்திரேலியாவின் தேசிய நலன்கள் நம் புவியில் எல்லைகளுக்கு அப்பால் விரிவாகியுள்ளன”, “இதில் ஆஸ்திரேலிய வணிகம் வெளிநாடுகளில் என்பதும் அடங்கும்” என்று விளக்குகிறது. இந்த வணிக நலன்கள், பசிபிக் பகுதியில் கணிசமான சுரங்க, எரிசக்தி செயற்பாடுகளையும் அடக்கியுள்ளன, குறிப்பாக முன்னாள் ஆஸ்திரேலிய குடியேற்றமான PNG யில்.

தற்பொழுது ஆஸ்திரேலிய துருப்புக்கள் சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு திமோரில் தலையிடும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கல் ஏதும் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. மாறாக, இராணுவம் இப்பொழுது இன்னும் அதிகமாக கருவிகள் அளிக்கப்பட்டு திறமையுடன் 1999 மற்றும் 2006ல் அமெரிக்க ஆதரவுடன் திமோரிலும், 2003ல் சாலமன் தீவுகளில் நடத்திய செயற்பாடுகளைச் செய்ய இயலும். “நம் அண்டைப்பகுதி அருகே ADF [ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை] அதன் பிராந்திய நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்க வேண்டும், நம் பிராந்தியப் பாதுகாப்புச் சூழலுக்கு உதவ வேண்டும்” என்று ஆவணம் விளக்குகிறது.

2009ல் வெளியிடப்பட்ட முந்தைய வெள்ளைத்தாள், இரகசியப் பிரிவுகளைக் கொண்டிருந்தது; அது குறித்த விவரம் பல ஆண்டுகளுக்குப் பின்தான் செய்தி ஊடகத்திற்கு கசியவிடப்பட்டது. இப்பிரிவுகள் ஆஸ்திரேலிய தலைமையிலான படையெடுப்புக்கள் பிஜி மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவற்றின் மீது நடத்தப்படுவதற்கான விரிவான திட்டங்களை கோடிட்டுக் காட்டின. சமீபத்திய கொள்கை ஆவணம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த இரகசிய நடவடிக்கைத் திட்டங்களை செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்; மற்ற இலக்குத் திறன்களை பற்றியும் கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்.
பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் தொழிற் கட்சி அரசாங்கம் சமீபத்தில் புதிய இராணுவத் திறன்களை வெளிப்படுத்தியது: இவை பிராந்தியத்தில் வருங்கால செயற்பாடுகளுக்கு ஏற்றம் அளிக்கும். ADF புதிய நவீன கருவிகளைப் பெற்றுள்ளது; இவற்றுள் இரண்டு Landing Helicopter Dock கப்பல்கள், ஆஸ்திரேலிய இராணுவத்தால் கையாளப்படும் மிகப் பெரியவை அடங்கும். இக்கருவிகள் கணிசமாக, கான்பெர்ரா, அமெரிக்க அளிப்புக்கள் மற்றும் நிலைப்பாட்டு ஆதரவை நம்பியிருப்பதைக் குறைக்கும்; அவைதான் இதன் முந்தைய தலையீடுகளுக்கு முக்கியமாக இருந்தன; அதில் 1999ம் ஆண்டு கிழக்கு திமோர் நிலைப்பாடும் அடங்கும்.

இப்பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் இராணுவக் கட்டமைப்பு இன்னும் அடிக்கடி நடத்தப்படும் அண்டை அரசாங்கங்களுடனான விவாதங்கள், பசிபிக்கில் இராணுவப் பயிற்சிகள் இவற்றுடன் தொடர்கின்றது. இந்த வாரம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந் ஆகியவை பிராந்தியத்தில் ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை நடத்தின; இது “மனிதாபிமான இடர் உற்றிருக்கும்” ஒரு கற்பனை பசிபிக் நாட்டில் எப்படித் தலையிடுவது என்பது குறித்து இருந்தது.

ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் நீண்ட காலமாக தன்னை தென்பசிபிக்கில் “மனிதாபிமானம்” என்னும் கோஷத்தின் கீழ் மறைத்து வந்துள்ளது. இதில் அது வாஷிங்டனைப் பின்பற்றியுள்ளது; அது தொடர்ச்சியான சட்டவிரோத நவ-காலனித்துவ வகைப் போர்களை உலகம் முழுவதும் கடந்த இரு தசாப்தங்களில் நடத்தியுள்ளது. மிகச் சமீபத்தியது குடிமக்கள் இறப்பு தடுக்கப்படல் மற்றும் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு உதவுதல் என்ற போலிக் காரணங்களை கூறிக் கொண்டு லிபியாவில் தலையிட்டதாகும்.

ஆஸ்திரேலியா அரசாங்கம் 1999ல் கிழக்கு திமோரில் தலையிட்டது பகிரங்காமாக குடிமக்களுடைய உயிர்களை காப்பாற்ற என்று ஆதரவு கொடுக்கப்பட்டது. உண்மையில் இது கூலிப்படைத்தன கணக்கீடுகளுக்கு மோசமான மறைப்பாகும், கான்பெர்ரா அதன் சட்டவிரோத பிடியை திமோர் கடலில் இருக்கும் ஆதாயம் தரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் மீது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாடுதான் உண்மையானதாகும். சாலமன் தீவுகளில் “மனிதாபிமானம்” என்பது ஆஸ்திரேய தலைமையிலான ஆக்கிரமிப்பு நாட்டின் அரச எந்திரத்தை கைப்பற்றுவதற்கு போலிக்காரணத்தை கொடுத்தது. சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு திமோரில் கான்பெர்ரா அதன் ஆதிக்கத்தை கணக்கிலடங்கா ஆத்திரமூட்டல்கள் மூலமும் இழிந்த தந்திரோபாயங்கள் மூலமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது; இவற்றுள் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் என்று இரு நாடுகளிலும் 2006ல் நடத்தப்பட்ட செயற்பாடுகளும் அடங்கும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள முழு அரசியல் நடைமுறையும் இதில் உடந்தையாக உள்ளது. தென் பசிபிக்கை பொறுத்தவரை தொழிற் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் ஏதும் இல்லை. தங்கள் பங்கிற்கு பசுமைவாதிகள் இப்பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆர்வத்துடன் ஆதரவு கொடுக்கிறார்கள்; அரசாங்கத்தின் போலித்தன மனிதாபிமான வனப்புரைக்கு ஆதரவு கொடுப்பதுடன், பிராந்தியம் முழுவதும் பரந்த தலையீடுகள் தேவை எனவும் வலியுறுத்துகின்றனர்.

பலவித மத்தியதர போலி இடது அமைப்புக்களும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. Socialist Alternative இல் இருக்கும் தற்போதைய சக்திகள் 1999ல் திமோர் தலையீட்டிற்கு முக்கிய பங்களிப்பை கொடுக்கும் வகையில் ஆளும் உயரடுக்கிற்கு ஆதரவாக துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்நிகழ்வு ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறித்தது; இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய இராணுவத்தில் கணிசமான விரிவாக்கம் ஏற்பட்டது. Socialist Alternative உட்பட, முழுப் போலி இடதும், வெளிப்படையாக ஏகாதிபத்திய அரசியலுக்கு உறுதியளித்துள்ளன. திமோர், சாலமன்ஸ் இன்னும் பிற வறிய நாடுகள் என பிராந்தியத்தில் இருப்பவற்றின் மீது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இவை உடந்தையாக உள்ளன, அதே நேரத்தில் அமெரிக்க ஆதரவை கொண்ட குற்றம் சார்ந்த ஆட்சிமாற்ற செயல்கள் லிபியா, சிரியாவில் நடப்பதற்கும் பகிரங்க ஆதரவைக் கொடுக்கின்றன.

ஆஸ்திரேலிய செய்தி ஊடகத்தை பொறுத்தவரை, பசிபிக் கொள்கையில் அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு இணங்க நடத்தல் என்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதில்லை. குறிப்பாக ABC நீண்ட காலமாக பிராந்திய தலையீடுகள் தேவை எனக்கூறுதில் தீவிர பங்கைக் கொண்டுள்ளது, அமெரிக்க-ஆஸ்திரேலிய விருப்பத்திற்கு ஏற்ப இணங்கி நடக்காத அரசாங்கங்களை அகற்றுவதில் கான்பெர்ரா காட்டும் ஆத்திரமூட்டல் நிகழ்வுகளுக்கும் ஆதரவை கொடுக்கிறது. இம்மாதம் ABC யின் மூத்த நிருபர் மைக்கேல் பிரிஸ்ஸென்டென், சீனாவின் பெருகும் செல்வாக்கு குறித்து டோங்காவில் இருந்து எச்சரிக்கை தரும் தகவல்களை அளித்துள்ளார். “நல்ல ஆதாரம் என இருக்கும் ஆஸ்திரேலிய அதிகாரியின் கருத்துப்படி, ‘அமெரிக்கர்கள்’ சீனாவின் பெருகும் தென் பசிபிக் பொருளாதார நிலைப்பாடு குறித்து ‘கவலைப்படுகின்றனர்’ -- இப்பிராந்தியம் பெரும்பாலும் சமீபகாலம் வரை அமெரிக்க செல்வாக்குடையது எனக் கூறியதில்தான் இருந்தது, உறுதியாக ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள்தான் இருந்தது” என அவர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு இன்னும் பரந்த இராணுவத் தலையீட்டை தென் பசிபிக்கில் உள்ள வறிய நாடுகள் மீது சுமத்த இருப்பதற்கான தயாரிப்புக்களை எதிர்க்கும் அரசியல் பொறுப்பை தொழிலாள வர்க்கம் கொண்டுள்ளது. இச்செயற்பாடுகள், அமெரிக்க, ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு நடத்துவது என்னும் பரந்த உந்துதலில் ஒரு பகுதி ஆகும். இது பிராந்தியம் முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இரண்டாம் உலகப் போரின் பெரும் குருதி கொட்டிய நில மற்றும் கடல் போர்கள் பசிபிக்கில்தான் நடைபெற்றன. கிட்டத்தட்ட தவிர்க்க முடியாமல் அணுவாயுத பயன்பாடு தொடர்புடைய சீனாவுடனான ஒரு மோதல் என்பது இன்னும் பேரழிவைத் தரும்.

போர் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய மூலோபாய அடிப்படையில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் தலையிடுகிறது. அத்தகைய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கம் தென் பசிபிக்கில் இருக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இப்பிராந்தியத்தில், ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக போரிடும் தேவை உள்ளது என உடன்படுவோரை, சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும், நம் சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் வலியுறுத்துகிறோம்.

Read more...

பனையுடன் மோதிய பஸ் 6 பேர் படுகாயம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் யாழ் மிருசுவில் பகுதியில் பஸ் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமைந்துள்ளதுடன் பலர் சிறுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் யாழ். அரியாலை பகுதியைச் சேர்ந்த குணசேகரப்பிள்ளை அருளினி (வயது 39) கணேஸ்வரன் வயது (வயது 45) பிரதீபா (வயது 30) அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் அஞ்குஜன் (வயது 22) இராசேந்திரம் றுசாந், ஜீவரத்தினம் (வயது 22) ஆர்னோல்ட் பிரசாத் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து ஏற்பட பஸ் சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டதாக பஸ் வண்டியில் பயணம் மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர் இதே வேளை இவ்விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வட மாகாணசபைத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்-தேர்தல் ஆணையாளர்!

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என பரவலாககக் கருதப்படும் நிலையில் வட மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அது மடடுமல்லாது அநேகமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும், உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டதுடன் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படாதவிடத்து தற்போதைய வாக்காளர் பதிவியின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Read more...

கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை காப்பாற்ற ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ள விமானப்படை

சீரற்ற வானிலையினால் பலப்பிட்டி, களுத்துறை, பேருவளை மற்றும் தெஹிவளை அகிய பிரதேசங்களில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இவர்களை காப்பாற்றுவதற்காக விசேட விமானம் மற்றும் ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது தெஹிவளை கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள மீனவர்களை காப்பாற்றுவதற்காக பெல் - 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், பலப்பிட்டி மற்றும் களுத்துறை கடற் பிரதேசங்களை கண்காணிப்பதற்காக வை - 12 ரக விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் – கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் அதிக காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடுமையான காற்றின் காரணமாக ஹிக்கடுவை தொடரூந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், கடலோர தொடரூந்து சேவை முற்றாக பாதித்திருப்பதுடன் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதே வேளை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடலிலிருந்து சுமார் 100 கடல்மைல் தூரத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்கள் 12 பேரையும் காப்பாற்றுவதற்கு கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ரஷ்ய ஜனாதிபதி புடீன் விவாகரத்துப் பெறுகிறார்...

ரஷ்ய ஜனாதிபதி ஏலெடமீர் புடீன் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக முடிவுசெய்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் அறிவிக்கின்றன.

இதுதொடர்பில் ரஷ்ய ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதியும், அவரது மனைவி லியுத்மிலாவும்,

'நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து எடுத் முடிவு இதுவாகும்' என்றுகுறிப்பிட்டுள்ளனர்.

புடீனும் தாமும் தொடர்ந்து நட்புடன் இருக்கவுள்ளதாகவும், தன்னைச் சிறப்பாக கவனித்துவந்ததற்காகவும் தனது கணவனுக்கு தான் நன்றிபாராட்டுவதாகவும் லியுத்மிலா குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டு இவ்விருவரும் திருமண பந்தத்தில் இணைந்து தற்போதைக்கு 30 ஆண்டுகள் கடந்துள்ளன.

(கேஎப்)

Read more...

இந்தியா காமுகர்கள் போல் நின்று, இலங்கையின் பத்தினித் தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கிறது....

இந்தியா பெண்களை வல்லுறவுக்குட்படுத்தும் காமுகன் போல் நின்று தங்களது பலத்தைப் பயன்படுத்தி சின்னஞ் சிறு நாடுகளின் சுயாதீனத்தன்மையை கெடுக்கிறது என மேல் மாகாண சபையின் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகிறார்.

மேல் மாகாண விவசாய சேவை அதிகார சபையினால்இருபத்திரண்டு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய ஒழுங்கமைப்பு நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும்,

'எங்கள் நாட்டு அமைச்சரவையைச் சந்தித்தவேளை வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்தனர். அந்தப் பத்திரத்தில் முக்கிய இரு விடயங்கள் இருந்தன. ஒன்று, எங்கள் மதத் தலைவர்கள் (தேரர்கள்) வீதியில் இறங்கி.. உயிரைப் பணயம்வைத்து 66 ஆயிரம் இளைஞர்கள் உயிர்நீத்த 'இந்து - லங்கா' உடன்படிக்கையிலுள்ள பிரதான இரு விடயங்கள், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான இரு விடயங்கள் எங்களுக்கு மாற்றிவிடுமாப்போல அமைச்சரவை கருத்து வெளியிட்டிருந்தது. இதனால், இந்து - இலங்கை உடன்படிக்கையின் மூலம் தமிழினத்தின் பூர்வீக நிலம் வடக்கு - கிழக்கு என்ற எண்ணக்கருவாக மாற்றமடைந்து வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களை ஒன்றிணைக்கவுள்ள நிலைமையினை முழுமையாக இல்லாமற் செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தற்போதைய சூழ்நிலைக்கேற்ப 'திவிநெகும' வின் மூலம் தெரிந்துகொள்ள முடிவதென்னவென்றால், நாய் வாலை ஆட்டுவதற்குப் பதிலாக வால் நாயினால் ஆட்டப்படக்கூடிய செயல்.

தனியொரு மாகாண சபையினால் முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியும். அதனால் உறுப்பினர் ஒருவர் தீர்மானமொன்றை இயற்றுவதற்காக கருத்தொன்றை முன்வைககின்றபோதும், அது ஒன்பது மாகாணங்களினாலும் இது பொருந்துமா என கேட்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மாகாண சபையேனும் ஆதரவு நல்காதவிடத்து அதனை நிறைவேற்ற முடியாமற் போகும். வட மாகாண சபை கொண்டுவரும் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்தத் தீர்மானமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டால் வெற்றி பெற முடியாது போகும். அதாவது, வட மாகாணத்தினால் முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கக்கூடியதொரு நிலை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. அவ்வாறானதொரு அபாக்கிய நிலை ஏற்படக்கூடாதென்பதற்காகத்தான் இவ்வாறானதொரு பத்திரம் இன்று அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டுள்ளது.

'இந்தியா எங்களுடன் கோபப்படுமா?' என சிலர் எங்களிடம் கேட்கிறார்கள். இந்தியா கோபப்பட்டால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுமே என்று. நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டபோது சர்வதேசம் எங்களுக்கு எதிராகவே நின்றது. என்றாலும் நாங்கள் பின்னடையவில்லை. நாங்கள் யுத்தத்தை இடைநிறுத்தவும் இல்லை. சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு நாங்கள் யுத்தத்தை நிறுத்தியிருந்தால் 15000 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை நாங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும். யுத்த்தை முடிவுக்குக் கொண்ட வரமுடியும் என்ற திடவுறுதி எங்களிடம் இருந்ததனாலேயே எங்களால் யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றி சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், இலங்கையரசு கைப்பொம்மை அல்ல என்பதையும், அரசாங்கம் மக்களது அரசாங்கமே தவிர சர்வதேசத்தின் அரசாங்கம் அல்ல என்பதை தெளிவாகக் காட்டி, சிறந்ததொரு முடிவினை அரசாங்கம் எடுத்தது.

இந்தியா கோபப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இந்த இந்து - லங்கா உடன்படிக்கையானது சட்டவிரோதமானது. வடக்கு கிழக்கினை ஒன்றிணைத்தன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன குறிப்பிட்டதாவது:

நான் வடக்கு கிழக்கு ஒன்றிணைப்புக்கு எனது எதிர்ப்பையே தெரிவிக்கிறேன். ஒன்றிணைப்பை நிராகரிப்பதற்குரிய மக்கள் விருப்பினை அறியும் வாக்கெடுப்பின் போது நான் அதற்கு எதிராகவே வாக்களிப்பேன்.' என்றுதான்.

அதாவது, முன்னாள் ஜனாதிபதி அதிருப்தியுடனேயே அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிறார். இதனால் நன்கு விளங்குவது என்னவென்றால், இது இரு பகுதியினரும் விருப்புடன் செய்துகொண்ட உடன்படிக்கையல்ல. மாறாக இந்திய தனது பலத்தைப் பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்தியே இந்த உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கியிருக்கின்றது. யாரேனும் ஒருவர் எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள் என்று கேட்டால், அந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படாது.

வலுக்கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சர்வதேத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதனால் இந்து - லங்கா உடன்படிக்கை பெயரளவிலான ஒரு உடன்படிக்கையாகும். சட்ட ரீதியானதல்ல. அதனால் நாங்கள் அதுபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. தங்கள் பலத்தைப் பயன்படுத்தி சின்னஞ் சிறுநாடுகளை தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொள்ள நினைக்கும் இந்தியா, கோபப்படுவதற்குப் பதிலாக வெட்கப்பட வேண்டும். இந்தியா பெண்களை பாலியல் வல்லுறவு புரியும் காமுகனாக நின்று, சின்னஞ் சிறுநாடுகளில் பத்தினித் தனத்தை இல்லாதொழிக்க முயல்கிறது என்று சொல்லலாம். இலங்கை எக்காரணம் கொண்டும் பயப்படத் தேவையில்லை. இந்தியா வெட்கப்பட வேண்டிய செயல் இது. அதனால், சுயாதீனத் தன்மையைக் காப்பதே எல்லாவற்றிலும் மேலானது எனக்கருதி அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் ஜனாதிபதிக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'

எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வானது மேல் மாகாண சபையின் உறுப்பினர் பிரசந்த ரணதுங்கவின் தலைமையில் நடந்தேறியது.

(கேஎப்)

Read more...

தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருக்கும் எக்னெலிகொடவை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும்.

லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருந்து தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் எனவும், அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் உளவுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டுமென அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இணையத் தளங்களை பயன்படுத்தி எக்னெலியகொடவின் மனைவியும் வேறு பலரும் என் மீதும் அரசின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாக பராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அண்மையில் பிரான்ஸுக்கு சென்றபோது எனது பாடசாலை நண்பரான மஞ்சுளவை என்னை சந்தித்தேன். இதன் போது தலையை மொட்டையடித்து ஒருவரை எனக்கு அவர் காண்பித்து அவர்தான் எக்னெலியகொட எனத் தெரிவித்தார். ஆனால் அந்நபர் என்னோடு பேசவில்லை.

அதேபோன்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைப்பாகை கட்டிக் கொண்டு சுனந்த தேசப்பிரிய காணப்பட்டார். அவர் அருகில் எக்னெலியகொட மொட்டையடித்து காணப்பட்டார்.

எக்னெலியகொடவின் மனைவி சந்தியா, உண்மையில் நாட்டை நேசிப்பவரானால் இந்த கருத்தை வெளியிட்ட என்னிடம் இவ்விடயம் தொடர்பில் வினவியிருக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவது, வெளிநாடுகளுக்கு தகவல்களை தெரிவிப்பது வேதனைக்குரிய தாய் நாட்டுக்கு எதிரான செயலாகும். யுத்த காலத்திற்கு பின்னர் இப்பெண்மணி இலங்கைக்கு எதிராக கருத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிற்கும் தெரிவித்தவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயப் போகின்றாராம் டக்ளஸ்?

மாகாண சபைகள் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ள அதிகாரத்தை இரத்து செய்வதோடு, மாகாண சபைகளுக்கு சம்பந்தமுள்ள விடயங்கள் தொடர்பான திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போது, அனைத்து மாகாண சபைகளின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்ட நிபந்தனையை திருத்தி, மேலதிக வாக்குகளின் அடிப்படையில் அவை நிறைவேற்ற வேண்டும் அரசாங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதற்கிணங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எஸ்.தேவராஜின் தலைமையிலேயே அரசாங்கத்தின் யோசனைகளை பற்றி ஆராயவும், அவைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பற்றி ஆராவும் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Read more...

கே.பீ.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! -தினேஷ்

சட்டத்திற்கு முன்னிலையில் சகலரும் சமனானவர்களே எனவும், கே.பீ.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நீதியையும் சமாதானத்தையும் பலப்படுத்த அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாக ஆளும்கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் பாரிய குற்றவாளிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி மன்னிப்பு வழங்கியுள்ளது எனவும், அதற்கமைய தாய்நாட்டிற்கு எதிராக செயற்ப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியினரை கூட அரசாங்கம் மன்னித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி ஏகாதிபத்திய ஆட்சி அல்ல எனவும், ஜனநாயக ரீதியிலான ஆட்சியே தற்போது இடம்பெறுவதாகவும் நாட்டில் 25 தடவைகள் ஐக்கிய தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டதால் இங்கு ஜனநாயகம் இல்லை என்று ஆகிவிடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில், ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே ஆளும்கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, June 7, 2013

மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகள்!

வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், காரட், கொத்தவரங்காய் மற்றும் கத்தரி பிஞ்சு ஆகிய காய்கறிகளின் மருத்து குணங்களைப் பார்ப்போம்.

வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com