Wednesday, June 5, 2013

மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கருதப்பட்டவர் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக தெரிவு! தகவல் தொடர்பு அமைச்சர் விசனம்!

இங்கிலாந்து இளவரசி குடும்பத்தினரின் அரண்மனை இரகசியத்தை வெளியிட்டதாக கருதி, தற்கொலை செய்துகொண்ட தாதியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கருதப்படும் அவுஸ்திரேலிய வானொலியான 2டே எப்.எம். இன் நிகழ்ச்சித் தொகுப்பாளரான மைக்கேல் கிறிஸ்டியன் என்பவர் அந்நாட்டின் சிறந்த நிகழ்சிசி தொகுப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அவுஸ்திரேலிய வானொலியான 2டே எப்.எம்.-இல் பணியாற்றிய போது, இங்கிலாந்து இளவரசியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக இளவரசியின் குடும்பத்தார் போல மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அந்த அழைப்புக்கு பதில் சொன்ன இந்திய வம்சாவழி தாரி ஜெசிந்தா, பின்னர் அது வானொலி நிகழ்ச்சி என்று தெரிந்து கொண்டதால் அரண்மனை இரகசியத்தை வெளியே சொல்லிவிட்டதாக கருதி, சிலதினங்கள் கழித்து தற்கொலை செய்வதற்கும் காரணமாக குறித்த நபரே இருந்தார் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்தற்கொலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்த மைக்கேல் கிறிஸ்டியன் என்பவர் தற்போது மெல்போர்னில் இயங்கிவரும் ஃபாக்ஸ் வானொலி நிறுவனத்தின் காலை நிகழ்ச்சிகளை வழங்கும் முக்கிய தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரை ஆஸ்டிரியோ நிறுவனம சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக தெரிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்டீபன் கோன்ராய் கருத்து தெரிவிக்கையில், சூழ்நிலையினால் கொடுக்கப்பட்டுள்ள இந்த விருது மலிவான இரசனையைக் கொண்டுள்ளது என்றும், இவர் வெளியிட்ட செய்தியினால் ஏற்பட்ட விபரீதம் நடந்த சிறிது காலத்திற்குள்ளாகவே இதற்காக விருது அளிப்பது என்பது மிகவும் இழிவான இரசனையாகும் என்றும்தெரிவித்துள்ளார்.

Read more...

ஈஸ்வர தேவாலயத்தின் பிரதான பூசகர் கத்தியால் குத்திக் கொலை!

செல்லக்கதிர்காமம் ,வல்லகுகாவ , ஈஸ்வர தேவாலயத்தின் பிரதான பூசகரான 70 வயதுடைய ராஜபக்ஷ முதியன்சலாகே பிரேமதாஸ என்பவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு பின்புறமாக வைத்து இவர் கொலை செய்யப்படட்டுள்ளதாகவும், இக்கொலைச் சம்பவம் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

3,500 கோடி ரூபா முதலீட்டிலான சூதாட்ட விடுதிக்கு அரசாங்கம் அனுமதி!

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் (3,500 கோடி) ரூபா முதலீட்டில் 400 அறைகள் கொண்ட லாஸ் வெகாஸ் பாணியிலான பாரிய சூதாட்ட விடுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 400 அறைகளைக் கொண்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியானது, அவுஸ்திரேலியாவின் பிரபல சூதாட்ட முதலாளியான ஜேம்ஸ் பக்கர் என்பவரால் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்துக்கு 10 வருட வரிச் சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன இந்த அறிவிப்பை நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டினால் 2,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் வேறு பல நன்மைகளும் கிடைக்குமெனவும், இதனை ஓர் சிறந்த முதலீடாக கருத வேண்டுமெனவும், இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் எனவும், பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸவிற்கு மரண தண்டனை!

மாவனெல்லை பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸவிற்கு கேகாலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2003 ஆம் 12 ஆம் திகதி ஒப்பந்த அடிப்படையில் வாகன சாரதியான கே.ஜி. பிரியரத்னவை படுகொலைச்செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்கண்டதையடுத்தே பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸக்கு மரணத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளர்.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அவர் பிரதேச சபைத்தலைவராக பதவியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read more...

மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் தலைமறைவு!

தனது மனைவியை பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பிவிட்டு, மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்திய நபர் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கட்டுக்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த 33வயதுடைய பெண் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்பட்ட நிலையில் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும், இதனை அறிந்து கொண்ட இந்த நபர் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கட்டுக்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read more...

வட மாகாண சபை தேர்தல் விவகாரம் பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதாக அனைத்துத் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்துள்ள நிலையில் வட மாகாண சபை தேர்தல் விவகாரம் பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட மாகாண சபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதன் ஊடாக இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி தன்மையினை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த முடியும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில விகாரையில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Read more...

நடைமுறையிலுள்ள கல்வி கொள்கையினை முன்னேற்ற நடவடிக்கை!

பொதுமக்கள், நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து யோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.- ஜயத்திலக்க

நடைமுறையிலுள்ள கல்வி கொள்கையினை மேலும் முன்னேற்றும் வகையில் நாட்டின் தேசிய கல்வி கொள்கை இவ்வருடம் மீளாய்வு செய்யப்படவுள்ளது எனவும், இந்மீளாய்வில் பல புதிய மாற்றங்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ல்கஷ்மன் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் பொது கல்வி, தொழில்சார் கல்வி, பல்கலைக்கழக கல்வி, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர் நியமனங்கள், கல்வி திட்டமிடல், தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான பாடசாலை முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தேசிய கல்விக் கொள்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது எனவும்,இது தொடர்பிலான ஆக்கபூர்வமான சிந்தனைகள் வரவேற்கப்படுவதனால் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அவற்றை ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கிணங்க பொதுக் கல்வி நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய யோசனைகள் திருத்தங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

தங்களது கருத்துக்களை தபால் மூலம் அனுப்ப விரும்புவர்கள் தேசிய கல்வி ஆணைக்குழு , இலக்கம். 126, நாவல வீதி, நுகேகொடை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும். அல்லது 0112 816 177 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 3 பெண்கள் சுங்க பிரிவினரால் கைது!

52 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட 3 பெண்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மும்பாய் நோக்கி புறப்படவிருந்த போது தங்கத்துடன் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

துணி வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் இது போன்ற கடத்தல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சுங்க அத்தியட்சகர் எம்.ஐ.எம்.ரம்பியின் ஆலோசனைக்கமைய இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

Read more...

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்த கும்பல் அதிரடி படையினரால் கைது!

அதிகொள்ளளவு உடைய மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கும்பல் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை தயாரித்து ஹட்டன் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும், அங்கிருந்து 750, 500, 250, சிசி என்ஜின் கொள்ளளவுடைய ட்ரேல் ரக 3 மோட்டாதர் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர்தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த மோசடி வர்த்தகத்தின் பிரதான சந்தேக நபர் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மஸ்கெலிய பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவிக்கின்றனர்.

Read more...

வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாட்டுச் சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா? தீர்ப்பு விரைவில்!

வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாட்டுச் சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என விசாரித்து அதன் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்ககுமென அறிவித்ததுள்ளது.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார். இது தொடர்பான சட்டமூலம் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சத்தியா ஹெட்டிகே, ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் ஆராயப்பட்டது.

சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழும் மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.

Read more...

Tuesday, June 4, 2013

பௌத்த பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டி பெறுமதி வாய்ந்த சந்திர வட்டக்கற்கள் கொள்ளை!

அநுராதபுரம்- கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையில் பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு சந்திரவட்டக்கற்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

இன்று(04.06.2013)அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த கொள்ளைச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹேரத் ஹில்மிலேவ விஹாரைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பௌத்தபிக்கு மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

யாழில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்ய நடவடிக்கை!

யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது. மற்றும் வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைக் கைவிட்டு மற்றுத் தொழிலைச் செய்யுமாறும் அல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது யாழில் முழுமையாக தடை செய்யப்பட்ட மீன்டிபிடி முறையை ஒழிக்குமாறு கடற்றொழில் அமைச்சிடமிருந்து தொடர் கடிதங்கள் வந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

தென்னிலங்கையில் இருந்து யாழ் வரும் பொருட்கள் முடிவுத் திகதி அற்றவை!

யாழ். குடாநாட்டிற்கு தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் பலவும் காலம் கடந்தவையாகவும் உற்பத்தித் திகதி அவற்றின் முடிவடையும் திகதி என்பன குறிக்கப்படாமல் வர்த்கர்களால் எடுத்துவந்து வியாபாரம் செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே உணவு கையாளும் நிலையங்களுக்கு புதிய தர நிர்ணயம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் குறிப்பிட்டுள்ளார்.

உணவு கையாளும் தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட எஸ். பிரணவநாதன், இதற்கென எச் 800 படிவம் சகல உணவு கையாளும் நிலையங்களுக்கு பூரணப்படுத்தப்படும் செயற்பாடுகளை யாழ். மாநகர சபை தனது எல்லைக்குள் முன்னிலைப்படுத்தியுளதடன் உணவு கையாளும் சகல நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ள சான்றிதழ்களை நிலையங்களின் முன்பாக பார்வையிடக்கூடிய வகையில் வைக்க வேண்டும் என்று யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏ தரச் சான்றிதழைப் பெற்ற உணவு கையாளும் நிலையங்கள் தரம் சி யை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் பரிசோதனை செய்வதுடன் சந்தேகமான உணவுப் பொருட்கள் தொடர்பான மாதிரிகளையும் எடுத்துச்சென்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அரச ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அறிக்கைகள் பெற நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பொறுப்பதிகாரி மேற்கொண்டுவருகிறார்.

Read more...

இணைய வசதியில்லாத போதும் பேஸ்புக்கில் சட்டிங்கை மீட்டுப்பார்க்க

தற்காலத்தில் இணையப் பாவனையாளர்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ள பெருமை பேஸ்புக் தளத்தையே சாரும். என்பதுடன் இத்தளத்தினை நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருவதுடன் தமது நண்பர்களுடன் சட்டிங்கிலும் ஈடுபடுகின்றர்.

இவ்வாறு நீண்ட நாட்கள்சட்டிங்கில் ஈடுபட்ட பின்னர் பழைய விடயங்களை மீட்டுப்பார்ப்பதற்கு Facebook Chat History Manager எனும் நீட்சி பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இந்த தொழில்பாட்டை கூகுளின் குரோம் உலாவி மற்றும Firefox உலாவிகளின் உதவியுடன் இணைய இணைப்பு அற்ற நேரங்களிலும் குறித்த விடயங்களை பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்! முருகபூபதி

சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்குள் தமிழகத்தில் திராவிட பாரம்பரிய அரசியலில் வந்தவர்களின் பொதுவாழ்வைப் பார்த்தபோது, “அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எல்லாம் சகஜமப்பா…” என்று ஸ்ரீமான் பொதுஜனன் சொல்லுமளவுக்கு எத்தனையோ வேடிக்கைகள் கோமாளித்தனங்கள் நடந்துவிட்டன. தமிழகத்தின் சுவரொட்டிகளுக்கு வாய் இருந்தால் அந்த சுவாரஸ்யங்களைப் பேசும்.

அண்மைய சிறு உதாரணம்:-

சிறிது காலத்துக்கு முன்னர் ‘அண்ணன் ராமதாஸ்’ என்று புகழாரம் சூட்டி அவரிடமிருந்து மலர்ச்செண்டு பெற்று கூட்டணி அமைத்துக்கொள்ள முயன்ற தமிழக முதல்வர் அம்மா, தற்போது ராமதாஸின் பா.ம.க. வை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுற்பட்டிருக்கிறார். அந்தக் கட்சியின் தொண்டர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதனால் அந்தக்கட்சியை தடைசெய்யவும் தயங்கமாட்டேன் என்று சட்டசபையில் சூளுரைக்கின்றார். ஏற்கனவே தமது சாதி அரசியலுக்காக வன்னியர் சங்கம் உருவாக்கி போராட்டங்களின்போது நடுவீதியில் மரங்களை வெட்டிவீழ்த்தி பொதுமக்களுக்கு இடையூறுசெய்தவரின் இயக்கம்தான் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) யாக மாறியது. மக்களின் சொத்துக்களையும் இயற்கையையும் அழித்த அந்தத் தலைவருடன்தான் காலப்போக்கில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டுமன்றி அகில இந்திய காங்கிரசும் கூட்டணி அமைத்தனர்.

இந்தக் கூத்து அணி அரசியலில் நீடிப்பது சந்தர்ப்பவாதம்.

பதவிகளுக்காக ஆட்சி அதிகாரங்களுக்காக குறுகிய காலத்தில் இப்படி இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் சமரச சந்தர்ப்பவாத அரசியலையும் மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதுகுறித்து தமிழகத்தில் எந்தவொரு இலக்கியப்படைப்பாளியும் ஏடுகளில் வாய் திறப்பதில்லை. தத்தமக்குள் பேசிக்கொள்வதுடன் அமைதியடைந்து விடுகிறார்கள். தமிழகத்திலிருந்துகொண்டு இலங்கையின் எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் பற்றி விவாதிப்பவர்கள் ஒரு தடவையாதல் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்த்தால் தமிழக - இலங்கை இலக்கிய புரிந்துணர்வை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

புலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசுக்கு சாதகமாகிவிடும் என்றுதான் இன்னமும் பல தமிழக இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள மக்களுடன் இணங்கி வாழ விரும்புபவர்களை இலங்கை அரசுடன் இணங்கியிருப்பவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.

மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாத்துரையின் சமாதி அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் தமிழகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் அனுமதி. அவை தமிழும் ஆங்கிலமும். ஹிந்திக்கு இங்கு இடமே இல்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழக திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழியை வெறுத்ததுபோன்று இலங்கையில் போருக்குப்பின்னர் சிங்கள மொழியையும் சிங்கள மக்களையும் வெறித்தனமாக வெறுக்கும் போக்கே அதிகரித்துள்ளது. அதன் எதிரொலிகளை கடந்த காலங்களில் பார்த்தோம்.

அப்பொழுதும் தமிழக இலக்கியவாதிகளும் இலக்கிய விமர்சகர்களும் வாயே திறவாமல் மௌனம் காத்தனர்.

அவுஸ்திரேலியாவில் நான் முன்னர் வசித்த ஹியூம் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 120 மொழிகள் பேசும் இனத்தவர்கள் வாழ்வதாக அந்தப் பிரதேச மாநகர சபைக்குத் தெரிவான இலங்கை சிங்கள இனத்தவரான சந்திரா பமுனுசிங்க என்னிடம் ஒரு தகவல் சொன்னார். அவர் அந்த அனைத்து மொழிபேசுபவர்களின் பிரதிநிதியாக சமூகப்பணியாற்றுகிறார்.

ஆனால், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடியவரின் இன்றைய வாரிசுகள், சிங்களம் என்றாலே அது தீண்டத்தகாத மொழி என்பதுபோலவும் அந்த இனத்தவர்கள் அனைவருமே வெறியர்கள் என்பதுபோலவும் சிந்திக்கின்றார்கள்.

இலங்கையில் நடந்த போரில் குற்றங்கள் மலிந்திருந்தமையால் அந்தப்போரை வெற்றிகொண்ட அரசின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள், இலங்கையில் இன நல்லிணக்கம் பேசுபவர்கள் மீதும் வெறுப்புக்கொள்கின்றனர். தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் பேசுபவர்கள்தான் தமிழினத்தின் காவலர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதன் எதிரொலிதான் தமிழக படைப்பாளிகளின் விமர்சகர்களின் தற்காலச்சிந்தனை.

“இலங்கை மக்கள் அனைவரும் (சிங்களவர், தமிழர், இஸ்லாமியர்) தத்தம் உரிமைகளுடன் புரிந்துணர்வுடன் இணங்கிவாழ்ந்தால் மட்டுமே இலங்கைக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும். அதனைவிடுத்து இனத்துவேஷத்தை வளர்த்து எதிர்ப்பு அரசியல் நடத்தினால் அது தங்களைத் தாங்களே தகனமாக்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளிவிடும்” என்று சிந்திப்பவர்களை இப்போதும் துரோகிகளாகச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். அப்படிச் சித்தரிப்பவர்களுக்கு ஒரு அறைகூவலைத்தான் எம்மால் விடுக்கமுடியும்.

“ஒரு தடவையாதல் இலங்கை வந்து பார்த்துவிட்டு பேசுங்கள், எழுதுங்கள், விவாதியுங்கள்.”

கிளிநொச்சியை அரச படைகள் கைப்பற்றியபோது விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு பின்வாங்கினார்கள். கள நிலவரம் தெரிந்துகொண்டு அவர்கள் பின்வாங்கினார்கள். அப்பொழுது தமிழக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து என்ன எழுதினார் தெரியுமா?

“கிளி வீழ்ந்தாலும்…புலி வீழாது…”

இப்படி எதுகைமோனையுடன் எழுதிய இந்த புகழ்பெற்ற தமிழக கவிஞர் கனடாவுக்கு எம்மவரின் டொலரில் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கட்டில் சென்று மேடையேறி, “தமிழ் ஈழ மக்கள் எனக்கு அனுமதி தந்தால் தமிழ்ஈழ தேசிய கீதம் இயற்றித் தருவேன்.” என்று பலத்த கரகோஷத்துடன் பேசினார்.

இந்தத் தகவல்கள் இலங்கையில் இணக்க அரசியல் பேசுபவர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து கொண்டு விமர்சிப்பவர்களுக்கு பதச்சோறு.

வைரமுத்துவின் அந்த வைர(?) வரிகளை பார்த்துவிட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வதியும் ஒரு ஈழத்து படைப்பாளி சொன்னார்: “ஏற்கனவே தமிழ் ஈழ தேசிய கீதம் எழுதுவதற்கு அங்கே புலிகளின் இரண்டு ஆஸ்தான கவிஞர்கள் (காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை) போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் வைரமுத்துவும் வருகிறாரா?”

இப்படித்தான் தமிழக படைப்பாளிகள் பலர் இலங்கையின் யதார்த்தம் புரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் உணர்ச்சி…எழுச்சி…என்று தமிழக அரசியல் கொழுந்துகளின் நீரோட்டத்தில் கலந்து கரைந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்.

போரினால் கொல்லப்பட்ட மக்களை நினைத்து கவிதையும் கட்டுரையும் எழுதினால் எதிர்ப்பு அரசியலில் கலந்துவிடலாம். அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.

பல உணர்ச்சிக்கவிஞர்களும் தமிழுணர்ச்சி பேச்சாளர்களும் முள்ளிவாய்க்கால் பக்கமே எட்டியும் பார்க்காமல் தங்கள் கவியரங்கு கவிதைகளிலும் மேடைகளிலும் தவறாமல் குறிப்பிடும் சொல் ‘முள்ளிவாய்க்கால்’.

போர் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு மே மாதத்துடன் நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இந்த நான்காண்டு காலத்துக்குள் இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. போரில் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுபவர்கள் எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதனால் என்ன பலன்? என்ன பயன்?

எதிரி பலமாக இருந்தால், எதிரியுடன் பேசித்தான் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் தேவைகளையும் வென்றெடுக்கமுடியும் என்ற பாலபாட அறிவே அற்றவர்கள்தான் இணக்க அரசியல் குறித்து சிந்தித்து ஆக்கபூர்வமாக செயல்படுபவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது தமிழ்ச்சமூகம் வெளிப்படையான விவாதங்களுக்கு தயாராகாமல் மூடிய சமூகமாகவே வாழப்பழகிவிட்டது என்று ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி பதிவுசெய்துள்ளார்.

பல எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் மாநாடுகளிலும் நான்கு தசாப்தகாலமாக தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ள அனுபவத்தில் பிந்திய நான்காண்டு காலத்தில்தான் எமது படைப்பாளிகள், விமர்சகர்கள், இதழாசிரியர்கள், ஊடகவியலாளர்களிடம் மலிந்துபோயுள்ள பகிரங்க விவாதத்துக்கு தயாரில்லாத மூடிய நபுஞ்சக குணாம்சத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

இலங்கையில் இலக்கிய மாநாடுகள் நடப்பதனால் இலங்கை அரசுக்கு பேராதரவு கிட்டிவிடும். இலங்கை அரசு போர்க்குற்றத்திலிருந்து தப்பிவிடும் என்றும் பேசுபவர்களும் எழுதுபவர்களும், தமிழகத்தில் திரையிடப்படும் அதேவேளையில் ஒரு மசாலாப்படம் இலங்கையிலும் திரையரங்குகளில் காட்சிக்கு வருவதை மறந்துவிடுகிறார்கள்.

போருக்குப்பின்னர் இலங்கையில் எத்தனையோ மாற்றங்கள் முன்னேற்றங்கள் நடக்கின்றன. ஆனால் அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் நேரில்வந்து பார்க்கத் தயங்குபவர்கள், தத்தமக்குள் பொசுங்கிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வடக்கிலும் தெற்கிலும் மட்டுமல்ல தமிழகத்திலும் வதியும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் இதழாசிரியர்களும் வன்னி மக்களை இனியாவது சென்று பாருங்கள்.

தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் சாய்மனைக்கதிரை விமர்சனங்களை விடுத்து, எமது தாயகத்தின் தற்போதைய யதார்த்த நிலையை உலகுக்கு எடுத்துரையுங்கள். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடவேண்டாம்.

அரசுகளும் அதிகாரத் தலைமைகளும் மாறலாம். அத்தகைய ஜனநாயக உலகில்தான் நாம் வாழ்கின்றோம். அதனால் ஒரு தேசத்தின் இனங்களுடன் இணங்கி வாழ்வதனால் எந்தத் தவறும் இல்லை.

நன்றி தேனி

Read more...

பொலிவூட் நடிகையான 25 வயது ஜியா கான் சடலமாக மீட்பு!

பொலிவூட் நடிகையான 25 வயதான ஜியா கான் மும்பையிலுள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து பொலிஸார் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

2007 ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் திரைப்படமொன்றில் அறிமுகமான ஜியா கான், பிரபல நடிகர்களான அமீர் கான், அக்ஷேய் குமார் ஆகியயோருடன் அவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜியா கானின் உயிரிழப்பு பொலிவூட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read more...

வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும்!

மீண்டும் உரக்கச் சொல்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு - கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும் என்று நேற்று (03) மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடும்போது,

'தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி உட்பட தமிழ்க் கட்சிகள் பல இந்து லங்கா உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்கியதற்கான நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உடன்பாட்டிலேயே' என்று குறிப்பிட்டிருக்கின்றார். அது இன்றைக்கும் செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மீண்டும் ஒருங்கிணைக்கும்போது, கிழக்கில் மக்களின் விருப்பினைத் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன - இந்தியப் பிரதமர் ஆகியோரிடையே புரிந்துணர்வுடன் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாகாண சபைக்காக இடம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டுக் கடன் பெற்றுக் கொள்வதற்குத் மத்திய அரசிடமிருந்து சுயாதீன அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்றும், மக்கள் பாதுகாப்புத் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!

கடந்த சில காலங்களாக இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்கி பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. இவ்வாறான சமூகவலையமைப்பு ஒரு பிரச்சினை அடங்கி அதன் சூடு தணிவதற்குள் மற்றைய சர்ச்சை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அதுதான் இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகள் சிலர் தமது துப்பாகிகளுடன் உள்ளாடைகள் மட்டும் அணிந்தவாறும், அரைகுறை ஆடையுடனும் படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள் இஸ்ரேல் இராணுவத்தை உள்ளாக்கியுள்ளனர்.

இஸ்ரால் நாட்டு செய்தி இணையத்தளமான "வாலா" இப்படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பெண்கள் இராணுவத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் என்பதுடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள படைத்தளமொன்றைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படங்கள், காணொளிகளை பகிர்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு யுடியூப்பில் இஸ்ரேலிய இராணுவ வீரர் எனக் கூறப்படும் நபரொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள பலஸ்தீன பெண்ணொருவரை சுற்றி நடமாடும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் பலஸ்தீன சிறைக் கைதியொருவருக்கு அருகில் இருந்தவாறு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் போஸ் கொடுக்கும் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்துக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திருந்தார் இஸ்ரேலிய இராணுவ வீரரொருவர். மேலும் அவரே துப்பாக்கியுடன் நிர்வாண படங்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார்.

இத்தகைய விடயங்களைக் கருத்தில் கொண்டு முகாமில் சேவையிலிருக்கும் காலப்பகுதியில் சமூக வலையமைப்புகளை தனது இராணுவ வீர, வீராங்கனைகள் உபயோகிக்க இஸ்ரேல் தடை விதித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் அத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சமூகவலையமைப்புகளில் எவற்றை பகிரவேண்டும் என்பது தொடர்பில் வரைமுறைகள் எதையேனும் இஸ்ரேல் விதித்துள்ளதாக என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனினும் தற்போது வெளியாகியுள்ள படங்கள் நிச்சயமாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பல மோசடிகளில் ஈடுபட்ட பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரி விளக்கமறியலில்!

பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை யூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மேசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குறித்த நபர் கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபாவை பெற்று பலரை ஏமாற்றியுள்ளதாக கோட்டை மற்றும் கொம்பனிவீதி பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் மத்திய வங்கியில் கையிருப்பிலுள்ள தங்கத்தில் 100 கிலோகிராம் தங்கத்தை பெற்றுதருவதாக பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 நபர்களில் குறித்த நபர் முக்கிய சந்தேகநபராக உள்ளார் என்பதுடன், இவருக்கெதிராக 15 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

துந்துவை மகா வித்தியாலயத்திற்கு அஸ்வர் பார்வையாளர் அரங்கு (படங்கள் இணைப்பு)

பெந்தோட்ட துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று (04) 'ஏ.எச்.எம். அஸ்வர் பார்வையாளர் அரங்'கினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர்ஏ.எச்.எம். ஸம்சுத்தீன் மற்றும் தென் மாகாணத் தமிழ்ப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் மதனியா கலீல் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றார்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ்வரங்கிற்காக, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா ஐந்து இலட்சத்தை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு இந்து ஆலயங்கள் நாசமாக்கியமை தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைத்து நாசமாக்கியதை கண்டித்து சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது "மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்து மக்களை மிகவும் மன வேதனை அடையச் செய்துள்ளது" என்றும், இந்த சம்பவமானது, ஒன்றுபட்டு வாழும் பல்வகை மதம் சார்ந்த மக்களை பிளவுபடுத்தும் நோக்கமாகக் கொண்டது என கருதக்கூடியதாக உள்ளது எனவும், கொடிய யுத்தத்தினை அனுபவித்து அதில் இருந்து முற்று முழுதாக மீளாத நிலையில் மீண்டும் கலவரத்தினை தூண்டும் வகையில் இச்சம்பவம் நடத்தப்பட்டிருப்பது மிக வேதனையைத் தருகின்றது என்றும், இந்த துரதிஷ்டமான நிகழ்வு இந்துமக்களை மிகவும் புண்படுத்துவதாக அமைந்துள்ளது' என்றும் அதில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலயங்களில் நடந்து வரும் திருட்டுக்கள் மக்களை மேலும் புண்படுத்துவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தொடராவண்ணம் உடனடியாக தடுத்து நிறுத்துல் வேண்டும் எனவும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் மத வேற்றுமைகளை கழைந்து இந்துக்களின் சுதந்திரமான வழிபாட்டிற்கு வழியமைப்பதோடு அனைத்து மக்களினதும் வழிபாட்டு சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு மாண்புமிகு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து இந்து மதகுருமார்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்' என அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

தெஹிவளை ரயில் குண்டு சூத்திரதாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

1996 ஆம் ஆண்டு தெஹிவளையில் ரயில் வண்டியொன்றில் புலிகளால் குண்டு வைக்கப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டது. இத்தாக்குதலுடன் சம்பத்தப்பட்ட நபர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேக நபர்களுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று கடூழிய சிறை தண்டனையை விதித்தது. 2 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனையும் பெண்னொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 17 ஆண்டுகளாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததனால் சிறை தண்டனை காலம் மட்டுப்படுத்தப்பட்டதாக கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்தது.

Read more...

வயது குறைந்த சிறுமிக்கு வயதை கூட்டி திருமணம் செய்து வைத்த பதிவாளரின் பதவி.......

அநுராதபுரம் நகர்பிரிவின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரும், நுவரகம பிரதேச திருமணப்பதிவாளருமான காமினி பண்டாரநாயக்க என்பவர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்குறிப்பிட்ட திருமணப்பதிவாளர் வயது குறைந்த சிறுமி ஒருவருக்கு வயதை கூட்டி திருமணம் செய்து வைத்தார் எனவும், பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொண்டார் எனவும், குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

இந்நிலையில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவருக்கு எதிராக் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையினால் அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Read more...

மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலின் காலில் விழுந்த தாய்!

தனது காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு கோரி காணாமல்போன யுவதியொருவரின் தாய் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களின் காலில் விழுந்து கண்ணீருடன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமுகமாக யாழிற்கு வருகை தந்த நாமல் எம்.பி வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறும் போதே மேற்படி கோரிக்கையை குறித்த தாய் விடுத்துள்ளார்.

தனது மகள் கிளிநொச்சியிலுள்ள ஒரு வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இவர் காணாமல் போயுள்ளதாகவும் இது குறித்து தாம் கிளி.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் அந்த தாயார் நாமலிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட நாமல் எம்.பி அருகில் இருந்த யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபரை அழைத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.






Read more...

அல்கைதாவை உருவாக்கியவர்கள் நாங்கள்! பணத்தை வாரி இறைத்தவர்கள் நாங்கள்!! - ஹிலாரி கிளின்டன் (காணொளி இணைப்பு)

அல்கைதா இயக்கத்தை உருவாக்கியதும், அதற்குத் தேவையான முதலீட்டு அநுசரணை வழங்கியதும் அமெரிக்காவே என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ள அக்கருத்தைக் கொண்ட காணொளி உலகெங்கிலும் வலம் வருகின்றது.

அவர் அங்கு, சோவியத் தேசத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக, சோவியத்துடன் நல்லிணக்கத்தைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபடுவதற்காக, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அல்கைதா பயங்கரவாத இயக்கத்தைத் தோற்றுவித்தாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரேகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனேயே இது மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அங்கு குறிப்பிடாத ஒரு விடயம் உள்ளது. அதாவது, 30 ஆண்டுகளாக இறைமைமிக்க நாடுகள் நிலையில்லாமல் செய்வதற்காக அல்கைதா இயக்கத்திற்கு தொடர்ந்தேர்ச்சியாக பண உதவி வழங்கிவந்துள்ளது.

(கேஎப்)

Read more...

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றவே தீவைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள், நகைப்பானவை !

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணையறிக்கை, செயற்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட இரசாயன பொருட்களே தீவிபத்து ஏற்பட காரணமென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விரைவாக தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள், ஏனைய பொருட்களுடன் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையால் தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள், கொள்கலன்களில் காணப்படுவதாக அறிவிக்காது, அவற்றை தருவித்த நிறுவனத்திற்கெதிராக உரிய சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென செயற்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தீயினால் 556 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படும் நிலையில் தீவிபத்துக்கு காரணமான இரசாயனப்பொருட்களை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்ட ஈட்டுத்தொகையை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் செயற்திட்ட அமைச்சர், ரோஹித அபேகுணவர்தன நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவிபத்தை தொடர்ந்து கொழும்பு துறைமுக களஞ்சியசாலை தற்காலிகமாக பெஹெலியகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நவீன வசதிகளுடன் கொழும்பு துறைமுக களஞ்சியம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்ப துறைமுக களஞ்சியசாலையை . ஹம்பாந்தோட்டைக்கு மாற்ற வேண்டுமென்பதற்காகவே, களஞ்சியசாலைக்கு தீவைக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள், நகைப்புக்குரிய விடயமெனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தீவிபத்தினால் , பொருட்களை இறக்குமதி செய்து நட்டமடைந்த கம்பனிகளுக்கான நட்டஈட்டுத்தொகை வழங்கப்படுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

என்னைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்....! - ஷிராணி பண்டாரநாயக்க

இலஞ்ச ஆணைக்குழுவுக்கு தனக்கெதிராக மனு வழங்கி செய்வது என்னவென்றால், துரத்தித் துரத்தி பழிவாங்குவதே அன்றி வேறில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா குறிப்பிடுகிறார். சிங்கள வாராந்தரப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆயினும்,அவர்களில் எவர்மீதும் தனக்குக் கோபமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது எனது பிரதம நீதியரசர் பதவியை இல்லாமற் செய்திருக்கிறார்கள். ஓய்வூதியத்தை இல்லாமற் செய்திருக்கிறார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில் நான் நினைப்பது என்னவென்றால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன் என்னை நிறுத்தி என்னை (எதற்காகவோ) பழிவாங்குகிறார்கள். அங்கே கோபமும் குரோதமும்தான் இருக்கின்றது. எல்லாவற்றையும் இழந்துவிடச் செய்த ஒருவரை மீண்டும் மீண்டும் அடித்துத் துன்புறுத்துவதாகவே நான் அதனைக் கருதுகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கையை நான் வழங்கியிருக்கிறேன். தேவையான அனைத்தையும் நிறைவேற்றியிருப்பதைத் தெரிந்துகொண்டும் பழிவாங்கும் நோக்கோடு செயற்படுகிறார்கள். ஆயினும் அவர்களில் எனக்குக் கோபமில்லை.'

'கழிந்துபோன காலகட்டத்தில் என்னைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை எடுத்துநோக்கினால், நான் பெருந்தொகையான சொத்துக்களை நினையாப்பிரகாரம் ஒன்றுதிரட்டியிருப்பதாகவே என்மேலுள்ள புகாராக இருந்ததைக் காணலாம். இந்நாட்டில் அதிக சொத்துக்களுக்கு உரிமைக்காரியாக என்னை வர்ணித்திருந்தார்கள். இந்நாட்டின் அதிக பணம் படைத்தவர்கள் வரிசையில் ஒருபோதும் நான் அடங்குவதில்லை. நானும் பிரதீப் இருவரும் 32 ஆண்டுகளாக தொழில் புரிந்தோம். பிரதீப் 1979 இலிருந்து 2009 வரை அதிக தனியார் நிறுவனங்களைக் கட்டியெழுப்பினார். அந்நிறுவனங்கள் அவருக்கு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கியது. நான் நீதியான முறையில், சட்டரீதியாக உழைத்த பணத்தை சேமிப்பது தவறு என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது தவறு என நான் ஏற்றுக்கொள்வதுமில்லை.'

(கலைமகன் பைரூஸ்)

Read more...

புகைபிடிப்பதனால் ஒருவர் இறக்க நேர்ந்தால், நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரலாம்........!

புகைப்பிடித்தலின் மூலம் ஆண்டொன்றுக்கு இறக்க நேரிடுகின்ற இலங்கையர் தொகை 21600 ஆகும். 1988 இல் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினம் ஆரம்பிக்கப்படுகையில் உலகம் முழுதும் சிகரட் புகைத்தலினால் இறந்தவர்களின் தொகை 20 இலட்சமாகும்.

2012 ஆகும்போது,60 இலட்சமாக அது அதிகரித்துள்ளது.

சிகரட் மனித உயிர்களைக் காவு கொள்வதை மாத்திரமே செய்கின்றது. அதனை இல்லாதொழிப்பதே 'சுவர்ணஹங்ஸ' அமைப்பின் நோக்கம் என புண்ணியவர்தன குறிப்பிடுகிறார்.

ஆசியாவின் முதலாவது சிகரட்டுக்கான நட்டஈடு மாநாட்டின்போது, சட்டத்தரணி கனிஷ்க விதாரன குறிப்பிடும்போது, 'சிகரட் புகைப்பதன் மூலம் யாரேனும் இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பம் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியும்' என்று குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

Monday, June 3, 2013

பயங்கரவாதத்தின்மீதான போரும் அமெரிக்க ஜனநாயகத்தின் தலைவிதியும். Joseph Kishore

கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிகழ்த்திய உரை, ஒபாமா நிர்வாகத்திற்குள் உள்ள நெருக்கடியையும், அரச உயரடுக்குகளில் கடுமையான மோதல்கள் பெருகுவதையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இன்னும் ஆழ்ந்த முறையில் வர்க்க ஆட்சியின் வரலாற்று நெருக்கடியையும் புலப்படுத்தியது.

ஒபாமாவின் உரை அசாதாரண அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க ஜனநாயகம், இரண்டாம் உலகப் போருக்குப்பின் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் “ஒரு இராணுவ-தொழில்துறை பிணைப்பினால்” அச்சறுத்தப்படுகிறது என்று ஐசனோவர் எச்சரித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஒபாமா கிட்டத்தட்ட அமெரிக்க ஜனநாயகம் ஒரு உடையும் நிலையை அணுகுகிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கி ஒரு தசாப்தத்திற்குப்பின், “அமெரிக்கா எதிரெதிர் திசைகளை நோக்கி நிற்கிறது” என்று ஒபாமா எச்சரித்தார். “இப்போராட்டத்தின் தன்மை மற்றும் பரப்பை நாம் வரையறுக்க வேண்டும் அல்லது அது நம்மை வரையறுத்துவிடும். ஜேம்ஸ் மாடிசனின் எச்சரிக்கையான, எந்த ஒரு நாடும் தொடர்ச்சியான போரை நடத்துவதின் மத்தியில் அதன் சுதந்திரத்தை காப்பாற்ற முடியாது என்னும் கூற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்து செப்டம்பர் 11 முதல் தற்போதைய நிர்வாகம் உட்பட அமெரிக்க ஆளும் வர்க்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கூறப்படும் போலிக்காரணமான “பயங்கரவாதிகளிடம்” இருந்து வரவில்லை, மாறாக அரசுக்குள்ளேயே இருந்துதான் வருகிறது.

ஒபாமாவின் உரை, எக்கட்சிக்காக அவர் வாதிடுகிறார் என்பதைக் குறிக்கும் விவாதத்தில் ஈடுபடாமல் அரச அமைப்புகளுக்குள் இருக்கும் கடுமையான மோதல்களில் இருந்து வெளிவந்துள்ளது என்பது தெளிவு. சில நேரங்களில் அவர் விடையிறுப்பை எதிர்பார்ப்பது போல் பேச்சை நிறுத்திக் கொள்ளுவார். தன்னுடைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து, ஏதோ சம்பவங்கள் வெளிப்புறத்தில், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் சக்திகளால் இயக்கப்படுவது என்பதைப் போல் கிட்டத்தட்ட ஏதும் இயலாத மனப்பாங்குடன் உரையாற்றினார்.

இது ஒரு நம்பிக்கை மிகுந்த தலைமைப் பிரதிநிதியின் உரை அல்ல. உள் முரண்பாடுகளால் சிதைந்து கொண்டு வரும் முற்றுகையில் இருக்கும் ஒரு நிர்வாகத்தின் பிரதிநிதியுடைய உரை, இதில் அரசாங்கத்தின் மீது அவருடைய கட்டுப்பாடு முற்றிலும் கேள்விக்குரியதாக இருக்கிறது.
ஜனாதிபதி பலமுறையும் சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்டார். அமெரிக்க அரசாங்கம் “எமது அடிப்படை மதிப்புக்களை சமரசத்திற்கு உட்படுத்திவிட்டது—நம் விரோதிகளை விசாரிக்கையில், தனிநபர்களை சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமாக காவலில் வைத்து சித்திரவதையை பயன்படுத்தியது” என்று ஒப்புக் கொண்டார்.

“சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக” என அவற்றை குறிப்பிட்டதின் மூலம், இவருடைய நிர்வாகத்திலும் தொடரும் அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, குற்றத்தன்மை உடையவை, அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதை ஒபாமா நடைமுறையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளை ஒபாமா பாதுகாக்கையில்; தான் அரசியலமைப்பை மீறியதில் நேரடிப் பொறுப்பு கொண்டிருப்பதாகவும், அதற்கு அவர் பொறுப்பு கூறவைக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டிய வகையில் வெளிப்படையாக அவருடைய பதட்டத்தையும் புலப்படுத்தியுள்ளார்.

ஒபாமா, இந்த முடிவுகளை எடுப்பதில் பலரும் தொடர்புபட்டுள்ளனர் என மீண்டும் மீண்டும் தன் பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார். “பலத்தை பயன்படுத்த காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்துள்ளது மட்டுமின்றி, அமெரிக்கா நடத்தும் ஒவ்வொரு தாக்குதல் குறித்தும் அதனிடம் கூறப்படுகிறது, ஒவ்வொரு தாக்குதல் குறித்தும்” என அவர் வலியுறுத்தினார். “இவற்றில் நாம் ஒரு அமெரிக்க குடிமகனை இலக்கு கொண்டதும் அடங்கும்.”
அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வகைகளில் இருந்து ஒரு வெளிப்படையான உடைவிற்கு தயாரிப்புக்கள் முன்னேறி உள்ளன. “பயங்கரவாதத்தின் மீதான” போர் என்னும் வடிவமைப்பில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஜனநாயகத்தை முடிவு நிலைக்கு அருகே கொண்டுவந்து விட்டது. முதலில் புஷ், பின்னர் ஒபாமாவின் கீழ், நிர்வாகத்துறை போர் நடத்த, அமெரிக்க மக்களின் மீது ஒற்றுவேலை பார்க்க, சித்திரவதை செய்ய, காலவரையற்று குற்றச்சாட்டு இல்லாமல் கைதிகளை காவலில் வைக்க, அவர்களை இராணுவக் குழுக்கள் மூலம் விசாரிக்க, அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரையும் எங்கேயும் கொல்ல, முறையான வழிவகைகள் இன்றி நடைபெறுகின்றன.

ஒரு மாதத்திற்கு சற்று கூடுதலான காலத்தில், போஸ்டன் நெடுந்தூர ஓட்டத்தின்போது விளக்கப்படாத குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து நகரம் முழுவதும் கிட்டத்தட்ட இராணுவ ஆட்சியின்கீழ் பூட்டிவைக்கப்பட்டது போல் இருந்தது. அப்பொழுது WSWS குறிப்பிட்டது: “போஸ்டன் நிகழ்வுகள், அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சி வழிவகைகள் நிறுவப்படுவதற்கான முறைகள் அப்பட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.” மீண்டும் செப்டம்பர் 11 தாக்குதல் போல், இது “பயங்கரவாதத்தின் மீதான போரை தோற்றுவித்துள்ளது. குண்டு வைத்தவர்கள் அரச எந்திரத்தின் ஒரு பிரிவினரால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டன, நிகழ்வுகள் புதிய, முன்னோடியில்லாத வகையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நடத்த பற்றி எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜனநாயகத்தின் நிலைமுறிவு என்பது இராணுவம், உளவுத்துறைக் அமைப்பின் வலிமை பாரியளவில் பெருகியிருப்பதுடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட தாமே சட்டங்கள்போல் செயல்படுகின்றன.

குடிமக்கள்-இராணுவ உறவுகள் பிரச்சினைகள் ஆழ்ந்த முறையில் ஆளும் வர்க்கத்தால் விவாதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திய வகையில் நியூயோர் டைம்ஸில் திங்களன்று ஒரு கட்டுரை முன்னாள் ஆப்கானிஸ்தானிய இராணுவப் படைகளின் தலைவரும் ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினென்ட் ஜெனரலுமான கார்ல் ஐகென்பெர்ரி, மற்றும் வரலாற்றாளர் டேவிட் கென்னடி ஆகியோரால் எழுதப்பட்டது வெளியிடப்பட்டது. “அமெரிக்கர்களும் அவர்களுடைய இராணுவத்தினரும் பிரிகின்றனர்” என்ற தலைப்பில், இரு ஆசிரியர்களும் இராணுவத்தின் விரிவாக்கம் “குறைந்தப்பட்ச குடிமக்கள் ஈடுபாடு, புரிந்துகொள்ளுதல்” என்னும் நிலைமையின்கீழ் நடக்கிறது என்று கவலை கொண்டுள்ளனர்.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் ஒருவகையில் கட்டாய இராணுவ சேவை தேவை என அழைப்பு விடுகின்றனர்; “ஆயுதப் படைகள் வருங்காலத்திற்கு கருவியாக இருக்கையில், குடிமக்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. இராணுவ அதிகாரத்தைப் பற்றி ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், “ஒரு புத்திசாலித்தனமான, நிதானமான மக்கள் அதன்மீது எப்பொழுதும் கவனமான, விழிப்புணர்வுகொண்ட பார்வையை கொண்டிருப்பர்.” என்று முடித்துள்ளனர்.

முடிவில்லாத போர் சூழ்நிலையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் முன்னேறிய நிலை, ஆளும் வர்க்கத்தின் பல பிரிவுகளிடையே ஆழ்ந்த மோதல்களை தோற்றுவித்துள்ளது. இராணுவம், CIA, FBI இவற்றிற்கு இடையேயும், உள்ளேயும், தொடர்ந்த கன்னை மோதல்கள் உள்ளன, ஆளும் வர்க்கத்தின் மோதல்கள் அமெரிக்க மக்களின் முதுகுக்கு பின்னே நடாத்துப்படுகின்றன.

ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஒரு வெளிப்படையான இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கையில், முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் சட்ட நெறி இவற்றுடனான முறிவு பெரும் ஆபத்துக்களை கொண்டுள்ளன. அமெரிக்க அரசியல் அமைப்பு முறையின் சட்டபூர்வமான தன்மை அரசியலமைப்பின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும் வர்க்கம் அதன் ஆட்சி அடித்தளமாகக் கொண்டிருக்கும் அரசியல் அஸ்திவாரங்களையே அழித்துக் கொண்டிருக்கிறது. அவர்களே பெரும் சட்டத்தை உடைப்பவர்களாக இருக்கையில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசுக்கு வரும் சவால்களை சந்திக்கையில் அவர்கள் சட்ட நெறியை ஆதரவிற்கு எதிர்பார்க்க முடியாது. அரசியலமைப்பு சட்டபூர்வத்தன்மையை அவை அதிகம் அகற்றும் நிலையில், அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்கு இன்னும் சட்டபூர்வமற்றதாகத்தான் மக்கள்முன் காட்சியளிக்கும்.

ஆயினும், இக்கவலைகள் இருந்தபோதிலும், ஒபாமாவோ ஆளும் வர்க்கத்தின் எப்பிரிவுகளுமோ எதையும் வழங்கத் தயாராகவில்லை. இது ஒபாமாவின் உரையில் இருக்கும் விந்தையான முரண்பாட்டுத் தன்மையை விளக்குகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை பற்றிக் தனது கவலையை தெரிவிக்கையில், ஒபாமாவின் கருத்துக்களின் மத்திய நோக்கத்தில் ஒன்று அமெரிக்கக் குடிமக்களை ஒழுங்கான வழக்குவிசாரணையற்று படுகொலை செய்தல் என்ற இதுவரை எடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை மோசமான முறையில் மீறப்பட்டுள்ளதை பாதுகாத்தலாகும். நிர்வாகத்தின் முடிவினை அங்கீகரிக்கும் ஏதோ ஒருவகை வழமைக்குமாறான நீதிவிசாரணை முறைகள் மூலமான ஒரு போலியான சட்டபூர்வ மூடிமறைப்புடன் இச்செயற்பாடுகள் தொடரும் என அவர் கூறினார்,

இராணுவ வாதத்தை பொறுத்தவரை, “பயங்கரவாதத்தின் மீதான முடிவிலா போரை”முடிக்க வேண்டும் என வலியுறுத்திய ஒபாமா, உலகம் முழுவதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார். சிரியாவில் “எழுச்சியாளர்களுக்கு” ஆயுதம் வழங்குவது முடுக்கிவிடப் பட வேண்டும் என்று அவர் கூறினார். அவர்களுள் பலரும் அல்குவேடாவுடன் பிணைந்துள்ளவர்கள்; இது ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஆசியாவை நோக்கி நகர்வதற்கு, சீனாவுடன் இன்னும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கு மத்திய கிழக்கில் இருக்கும் தங்கள் படைகளில் சிலவற்றைப் பிரித்தெடுக்க விரும்புகின்றன.

இறுதியாக, ஒபாமாவின் பகிரங்கப் பேச்சில் சொந்த சந்தேக வெளிப்பாடுகள் எப்படி இருந்தபோதிலும், எதையும் மாற்ற அவருக்குத் திறனோ விருப்பமோ கிடையாது. ஜனநாயகக் கட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முயற்சி, நியூ யோர்க் டைம்ஸ், நேஷன் உட்பட, ஒபாமாவின் உரையை மாறுதல் கொடுக்கும் இணைந்த நிகழ்வு, இதில் சுயதிருப்தி, ஏமாற்றுத்தனம், நம்பிக்கை ஆகியவை உள்ளன என அளிக்க முற்பட்டுள்ளன. இந்த உண்மையை உறுதிப்படுத்துவதுபோல், ஒபாமா நேற்று நினைவு தினத்தன்று நாடு “இன்னமும் போரில்தான் உள்ளது.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதலாளித்துவம் மற்றும் இராணுவம்/உளவுத்துறையின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகள் ஒபாமா உலக மேலாதிக்கத்திட்டத்தை கைவிட பரிசீலிக்கிறார் என ஒரு கணம் கருதினால், அவருடைய நிர்வாகம் ஒரு மிருகத்தனமான மற்றும் விரைவான முடிவிற்கு வந்துவிடும்.
முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி என்பது, எதிர்வரவிருக்கும் எழுச்சியின் தவிர்க்க முடியாத முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக பழையமுறையில் வாழமுடியாத நிலையில் மட்டுமல்லாது அத்துடன் ஆளும் வர்க்கங்களும் பழைய முறையிலேயே ஆட்சி நடத்த முடியாதாலும் புரட்சிகள் எழுகின்றன என்பதே பொதுவான அரசியல் விதி என்பதை வரலாறு ஆதாரம் காட்டுகிறது.

வர்க்க ஆட்சியின் நெருக்கடி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் சரிவு ஆகியவை ஒரு புறம் வெளிநாடுகளில் முடிவில்லாப் போரிலும், மறுபுறம் கட்டுப்படுத்தமுடியாத, வரலாற்றளவில் முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மையிலும் வேர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்திற்கு தீவிர ஆபத்துக்களை முன்வைக்கின்றன. அமெரிக்காவில் சர்வாதிகாரம் வெளிப்படுவது இயலாததல்ல என்பது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

ஜனநாயக உரிமைகளைக் பாதுகாத்தல் என்பது ஒரு வர்க்கப் பிரச்சினையைவிடக் கூடுதலானது ஆகும். முதலாளித்துவ, ஏகாதிபத்திய இராணுவ வாத அடிப்படையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றது. அதன் நலன்களை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரச எந்திரத்தின் எந்தப் பிரிவையோ அல்லது அதன் துணை அமைப்புக்களையோ நம்ப முடியாது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு, மிக உயர்ந்த அவசர தேவையாக உள்ளது. இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவ கட்சியை கட்டமைப்பது ஆகும்.

Read more...

கோப்பாயில் நடமாடும் ஆட்பதிவுத்திணைக்களம்.

பப்ரல் அமைப்பின் அனுசரனையுடன் இலங்கை தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இதுவரை தேசிய அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் அவற்றை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் வகையில் நடமாடும் சேவை ஒன்று யாழ் பிரதேச செயலகங்களுக்கிடையே நடைபெற்றுவருகின்றது.

இன்றைய தினம் கோப்பாய் பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலர் பிரதீபன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும்சேவையின் 1ம் நாள் நிறைவில் 500ற்கும் மேற்பட்ட மக்கள் புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து பிதேசங்களிலும் இது நடைபெறவுள்ளது.

2011ம் ஆண்டின் ஆட்பதிவுத்திணைக்களத்தின் பதிவுகளின்படி வடமாகாணத்தில் 1லட்சத்தி 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களாக உள்ளனர். ஏனவே இவற்றைக்கருத்திற்கொண்டு இந்த நடமாடும் சேவையானது வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.









Read more...

பிரிட்டிஷ் தமிழ் தம்பதியர் கடத்தல் சம்பவத்தில் 9 பேர் கைது

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழ் வர்த்தகரையும் அவரது மனைவியையும் சென்னை விமான நிலையத்திலிருந்து கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட வர்த்தகப் பிரமுகர் தவராஜாவும் அவரது மனைவி சலஜாவும் சென்னை போலீசாரால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

தவராஜாவும் அவர் மனைவியும் கடந்த மே 29ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தபோது, அவர்கள் தங்கவிருந்த நட்சத்திர ஓட்டலிலிருந்து வருவதாகக் கூறி இருவர் அவர்களை சந்தித்து காரில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
செல்லும்வழியில் வேறிருவர் வாகனத்தில் ஏறிக்கொண்டபோது, தம்பதியருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அப்போது அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஓட்டல் நிர்வாகத்தினர் தொடர்புகொண்டு ஏன் அவர்கள் அனுப்பிய காரைப் பயன்படுத்தவில்லை எனக்கேட்ட போதுதான், தாங்கள் கடத்தப்படுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. அவர்கள் புதுச்சேரி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.
அதே நேரம் இலண்டனில் உள்ள அவர்களது மகளிடம் யாரோ ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 5 லட்சம் பவுண்ட் அனுப்பிவைக்காவிட்டால் அவரது பெற்றோர் கொல்லப்படுவர் என மிரட்டியிருக்கிறார்.

தொடர்ந்து கடத்தல்காரர்கள் அப்பெண்ணிடம் பேச, எங்கிருந்து அவ்வழைப்பு வருகிறது என்பதைக் கண்காணித்த பிரிட்டிஷ் போலீசார் மந்தாரக்குப்பம் வீட்டைக் கண்டறிந்ததாகவும், ஆனால் பெரிதாக மோதல் எதுவுமில்லாமல் தவராஜா தம்பதியினர் நேற்று ஞாயிற்றுக்கிமை மீட்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கள் செய்தியாளர்களைச் சந்தித்த தவராஜாவும் அவரது மனைவியும் தாங்கள் துன்புறுத்தப்படவில்லையென்றும் ஆனால் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

நன்றி பிபிசி

Read more...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் கொடியேற்றம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(03.06.2013) திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதனைத் தொடர்ந்து தினமும் நவநாள் திருவழிபாடுகள் நடைபெறுவதோடு, 12ஆம் திகதி புதன்கிழமை மாலை 'வெஸ்பர்ஸ்" நற்கருணை ஆராதனை வழிபாடுகள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெறும்.

எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருவிழா திருப்பலி இடம்பெற்று திருச்சொரூப பவனி நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

Read more...

15 வயதுச் சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது

புத்தளம் பகுதியில் பாட்டியின் துணையுடன் வசித்து வந்த 15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இந்த இளைஞன் சிறுமியை பாட்டிக்கு தெரியாது கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து பலமுறை சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ள நிலையில் குறித்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com