Tuesday, September 7, 2010

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே பதவி வகிக்கமுடியும் என இலங்கை அரசியல் யாப்பின் 18ம் திருத்தச்சட்டத்திலுள்ள வரையறையை நீக்கும் பொருட்டு அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுடனான உத்தேச அரசியல் யாப்பு .சீர்திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் சற்று முன்னர் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் டி,எம்.ஜயரட்னவினால் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் முன்னிலையில் யாப்பு சிர்திருத்தச் சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் மீதான விவாதம் இடம்பெற்று நாளை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சட்ட மூலம் சபையில் சமர்பிக்கப்பட்ட போது எதிர்கட்சிகள் தமது பலத்த எதிர்ப்பை காட்டி , அக்கோவை சபாநாயகருக்கு கையளிக்க முடியாதவாறு பல இடையூறுகளை விளைவித்தபோது , யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கும், நீதிமன்ற தீர்ப்புக்கும் உட்பட்டமையால் அதில் பிரச்சினை எதுவும் கிடையாதென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Read more...

தனுன குறித்து சர்வதேச பொலிஸார் அபாய அறிக்கை.

ஹய்கோப் நிதி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபரான தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள பிடியாணை குறித்து சர்வதேச பொலிஸாருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிஸார் நீதிபதியூடாக இதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயற்படும் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச பொலிஸாரினால் அபாய அறிக்கை விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

Read more...

Monday, September 6, 2010

படைவீரர்களுக்கான 27 வீடுகளை ஜனாதிபதி கையளித்தார்.

நமக்காக நாம் திட்டத்தினூடாக கட்டப்பட்ட மேலும் 27 வீடுகளை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்வீரர் குடும்பங்களுக்கு கையளித்தார். குருநாகல் மாவட்டத்திலுள்ள தொரயய எனுமிடத்தில் கட்டப்பட்ட இவ்வீடுகள் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் விதவைகள் , காயமடைந்து அங்கவீனர்களானோர் , மற்றும் வீடுகளற்ற படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தின் முதலாவது திறப்பு 2007ம் ஆண்டு புலிகளுடனான சண்டையின்போது உயிரிழந்த கடற்படை அதிகாரி ரிஎம்ஆர்கே . தென்னக்கோணின் மனைவிக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

நமக்காக நாம் திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட 25 வீடுகள் கடந்த ஜூலை மாதம் 11ம் திகதி கண்டியில் செனரத்கம எனுமிடத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியின் பெரும்பகுதி வெளிநாடுகளில் வாழும் பெரும்பாண்மையின மக்களினால் நன்கொடையாக வழங்கப்படுகின்றது. இப்பணத்தினை கொண்டு பொருட்கள் வாங்கப்படுவதுடன் , இராணுவத்தினரே கட்டிட வேலைகளை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தினூடாக 50000 வீடுகள் கட்டப்படவுள்ளது.










Read more...

யாழில் துண்டுப்பிரசுரங்ளை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் இருவர் கைது.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு யாழில் துண்டுபிரசுரங்களை ஒட்டிகொண்டிருந்த இருவரை நேற்று காலை 5.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது தொடர்பாக ஜனநாயக விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் அவர்கள் இலங்கைநெற் கூறுகையில், நேற்று முழுநாட்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது கட்சி உறுப்பினர்களான லலித் வீரராஜூ , குமார் ஆகியோர் வீடுகளை உடைத்து கொள்ளையிட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்று பிற்பகல் யாழ் நீதிபதியின் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டபோது , நீதிபதி 50000 ரூபா சரீரப் பிணையில் அவர்களை விடுவித்துள்ளார்.

இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை விடுவிக்கப்படலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Read more...

அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான கொழும்பு பல்கலைக்கழக கருத்தரங்கு ரத்து.

அரசியல் யாப்பின் 18ம் திருத்தச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கவென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உயர்மட்டத்தினராலேயே இத்தடை விதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இக்கருத்தரங்கில் பிரதான பேச்சாளராக ஜனநாகயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளவிருந்துள்ளார். இக்கருத்தரங்குக்காக பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபம் பல நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் மண்டபம் தரமுடியாது என பல்கலைக்கழக உயர் மட்டம் கையை விரித்துள்ளது.

Read more...

காஷ்மீர் எல்லையில் சீனத்துருப்புக்கள் குவிக்கப்படுவதாக இந்தியா பரபரப்பு.

ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய நாடுகளான சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடைப்பட்ட உறவில் மேலும் ஒரு பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. இந்திய வசமுள்ள காஷ்மீரில் வன்செயல்கள் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரிக்கும் நிலையில், அருகே பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் சீனத் துருப்புகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் சீனா தலையிடாது என்று பெய்ஜிங் அறிவித்ததற்கு ஓரிரு நாட்கள் கழித்து இந்தத் துருப்புச் செய்து பிரச்சினையாகியிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சீனா படைகளைக் குவித்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்தியா கவலையையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

இந்தியாவின் கவலையையும் ஆட்சேபத்தையும் சீனாவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஷாங்கிடம் தெரிவித்தார். இது சீனா-இந்தியா இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் திட்டத்தில் வெளியிடப்படுபவை என சீனா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

கில்ஜித் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப் பட்டுள்ளதாக வெளியான செய்திகள் ஆதாரமில்லாதவை. கற்பனை கலந்து இத்தகைய செய்திகளை பரப்பும் விஷம சக்திகளின் நோக்கம் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான உறவை சீர்குலைப்பதாகும். ஆனால் இந்த திட்டம் பலிக்காது என்றும் அந்நாடு ஏற்கெனவே உறுதியாக கூறியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சீனாவின் மனிதாபிமானக் குழுவினரே உதவி வருகின்றனர் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

சுமார் 11 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது எனவும் அவர்களை சாலை அமைக்கவும் ரயில் பாதை பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 28 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

Read more...

கிளிநொச்சியில் TriStar ஆடைத் தொழிற்சாலையை நிர்மானிக்கின்றது.

இலங்கையில் ஆடைஉற்பத்தி துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான ட்றைஸ்ரார் அப்பறல்ஸ் தனது தொழிற்சாலை ஒன்றை கிளிநொச்சியில் நிர்மானிக்கின்றது. பிரதேசத்தில் உள்ள யுவதிகளுக்கு வேலைவாய்பினை ஏற்படுத்திகொடுக்கும் நோக்கத்திலேயே அரசின் அனுமதியுடன் இத்தொழிற்சாலை திறக்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

Read more...

இந்நிலை தொடர்ந்தால் மீண்டுமோர் ஆயுதக்குழு உருவாகும் நாள் வெகு தொலைவிலில்லை.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ள உத்தேசமாகியுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் லால் அவர்கள் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத போக்கினை நாட்டு மக்களும் இளம் சமூதத்தினரும் உணர்ந்துவருவதாகவும், இவ் ஜனநாயக விரோத போக்கு தொடருமானால் அது மீண்டுமோர் ஆயுத யுகத்திற்கு இந்நாட்டில் வழிசமைத்துவிடும் என எச்சரித்துள்ளார்.

இந்நாடு ஜனநாயக விரோத முறையில் ஆளப்படுகின்றபோது, யாரால் சுதந்திரமாக பேச முடியும்? ஊடகங்கள் சுதந்திரமாக எழுத முடியுமா? அவர்கள் அவ்வாறு எழுதினால் மறுநாள் என்ன நடக்கும்? இன்று பிரகீத் எக்நெலியகொடவைப் பற்றி யார் பேசுகின்றார்கள்? நாடு ஆளப்படும் நிலையில் இந்நிலைமைகள் குறித்து நாம் யார் மீதும் குற்றஞ்சுமத்த முடியாது. இது மிகவும் பயங்கரமான நிலைமை. எனவே எதிர்வரும் அரசியல் யாப்பு மாற்றத்தினை நாம் அனைவரும் எதிர்க்கவேண்டும். ஆட்சியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது என்ன நடக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. அதை நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றீர்கள். தேர்தலின்போது அரச சொத்துக்கள் யாவும் ஆட்சியிலுள்ளவரின் தேர்தல் பிரச்சாராத்திற்காக பயன்படுத்தப்படும், அதிகாரிகள் விரும்பியோ விரும்பாமலோ அவரை ஆதரிக்கவேண்டும், அரச ஊடகங்கள் அரசாங்கம் சார்பாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும், தேர்தல் திணைக்களம் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதி - இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு.

ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவத் தளபதி வி.கே சிங், இன்று அலறி மாளிகையில் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வை சந்தித்துள்ளார். நேற்று இந்திய தளபதி வந்தடைந்தபோது இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா அவர்களால் வரவேற்கப்பட்டு பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் ஆரப்பிக்கவென தனது மனைவியுடன் வந்துள்ள அவருக்கு இன்று இராணுவத் தலைமையகத்தில் பாரிய இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கை இந்திய இராணுவகூட்டுவிவகாரங்கள் தொடர்பாக அவர் இலங்கையில் தங்கியிருக்கும் 5 நாட்களுள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து பேசுவார் என தெரியவருகின்றது.

வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய ஹஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, ஹயுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார். மேற்படி போரில் உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், வி.கே.சிங் இன்று மலரஞ்சலி செலுத்துகிறார். அந்த நினைவிடம் எழுப்பப்பட்ட பிறகு, அங்கு செல்லும் முதலாவது இந்திய ராணுவ தளபதி இவரே. அத்துடன் இவர் வவுனியா பிரதேசத்தில் பல இடங்களுக்கும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

ராணுவ தளபதி வி.கே.சிங்கை தொடர்ந்து, இந்திய விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை வரவுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய இராணுவத் தளபதியின் இலங்கை வருகை இந்தியாவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் இலங்கையில் அமைக்க சீனா முயன்று வருவதாகவும் அதற்கான விடயங்கைள இலங்கை அரசு சீனாவிடம் பேசிச்கொண்டு இந்தியாவுடனும் தனது நட்பை பேணுவதாக இந்திய பத்திரிகை ஒன்று குற்றஞ்சுமத்துகின்றது.

Read more...

ஒபாமா 10 ஆசியத் தலைவர்களை சந்திக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடர் இடம்பெறும்போது தென்கிழக்காசிய நாட்டுத் தலைவர்கள் 10 பேரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசவுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா கூட்டத்தொடரில் நம்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் 24ம் தேதி இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் நோக்கம் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பரந்த ஒத்துழைப்பை நாடுவது என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்காசிய வட்டாரத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குழுவினர் புறக்கணித்ததாகக் கூறும் திரு ஒபாமா, இவ்வட்டாரம் குறித்த அமெரிக்கக் கொள்கையைப் புதுப்பிக்க எடுக்கும் புதிய முயற்சி இது எனத் தெரிவித்துள்ளார் .

சென்ற ஆண்டு, பத்து ஆசியான் நாட்டுத் தலைவர்களுடன் சிங்கப்பூரில் திரு ஒபாமா நடத்திய முதல் கூட்டத்தைத் தொடர்ந்து, நியூயார்க் கூட்டம் நடைபெறுகிறது. சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தின்போது, 'வர்த்தகம் முதலீடு, வட்டாரப் பாதுகாப்பு, பேரிடர் நிர்வாகம், உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்க அதிபரும் ஆசியான் தலைவர்களும் உறுதி எடுத்தனர்' என்று வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.

இவ்விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆசியான் தலைவர்களுடன் அதிபர் ஒபாமா கலந்து பேசுவார் என்றும், அமெரிக்கா-ஆசியான் உறவை வலுப்படுத்தக்கூடிய வருங்காலத் திட்டங்களை அடையாளம் காண்பார் என்றும் அறிக்கை தெரிவித்தது. - ஏஎப்பி

Read more...

அரச அதிபர்களுக்கான மாநாடொன்று வடக்கில்.

அரச அதிபர்களுக்கான மாநாடு ஒன்று இன்றும் நாளையும் யாழ்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இம்மாநாட்டிற்கு அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமை தாங்குவார் எனவும் பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொள்வர் எனவும் தெரியவருகின்றது.

Read more...

Sunday, September 5, 2010

மகிந்தவின் ஆட்சி தொடர்பாக பேசினால் என்னை தேடியும் வெள்ளைவேன் வரும்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மட்டுமல்ல முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க இன்றைய ஆட்சி தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதற்கு அப்பால் பேசினால் எனக்கும் வெள்ளை வேன் அனுப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் எனக்கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற வரையறை நீக்கப்படும் நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது, தான் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என சந்திரிகா பதிலளித்துள்ளார்.

Read more...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழினத் துரோகி. வை.கோ.

புலிகள் தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்துவருகின்றனர் என்றபோது, இல்லை புலிகள் தமிழ் மக்களுக்காவே போராடுகின்றனர் என மக்களை மடையர்களாக்குவதில் முன்னணியின் நின்றுவந்த வை.கோபாலசாமி புலிகளியக்க தலைவர் ஓர் தமிழினத் துரோகி என அறிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் ஒப்புதலுடன் கே.பி அவ்வியக்கத்தின் தவைர் என தன்னை அறிமுகம் செய்திருந்தமை யாவரும் அறிந்தது.

இந்நிலையில் கே.பி தமிழ் மக்களின் துரோகி என புலிகளின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவரான வைகோ அறிவித்துள்ளார். பிரபாகரன் முதல் அவ்வியக்கத்தின் தலைவர்கள் யாவருமே தமிழினத் துரோகிகள்தான் என்பது பலவடிங்களில் வலியுறுத்தப்பட்டபோதும் அதை ஏற்க மறுத்த மக்கள் தற்போது புலிகளின் முன்னணித் தலைவர்களின் சுயரூபத்தை சற்று அனுபவித்து வருகின்ற நிலையில் கே.பி தமிழினத் துரோகி என வை.கோ கூறியுள்ளார்.

''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

இது புலிகளின் இயற்கை குணமாகும் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக காலங்கள் வரும்போது புலிகள் கடந்தகாலங்களில் செய்த அராஜகங்களை வெளியிடுவர். வெளியிடுவோர் அவ்வராஜகங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பர், அத்துடன் தற்போதே தாம் இவ்விடயங்கைளை உணர்ந்து கொண்டுள்ளளோம், இதுவரை காலமும் எமது வாய்களில் சூப்பி இருந்தது , அச்சூப்பி தற்போது தவறி விழுந்துவிட்டபோதே எமக்கு அறிவு வந்ததென்பர், இதுவெல்லாம் நாம் வரலாற்றில் படித்த பாடங்கள்.

இந்த நிலையில்,கேபியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு வைகோ அளித்துள்ள பேட்டியில் :

தமிழீழம் என்பது அழிந்துபோன இலட்சியம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாரே கே.பி எனக் கேட்க்கப்பட்டபோது, இதைச் சொல்ல, துரோகி கே.பி-க்கு அதிகாரம் கொடுத்தது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள வைகோ , இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதில் இன்றைய அத்தியாயம் கே.பி. ராஜபக்சே அரசின் கைக் கூலியாகத் தமிழினத்துக்கு துரோகம் செய்வதையே இன்றைய தொழிலாகக்கொண்டு மாறிவிட்ட கே.பி-யிடம் இந்த வார்த்தைகளைத்தானே எதிர்பார்க்க முடியும்?

தமிழீழம் வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வநாயகத்தின் மறுவடிவமா இவர்? எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

2002-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நானே தலைவர்' என்றும், 'பிரபாகரன் தன்னை அப்பொறுப்பு வகிக்கச் சொன்னார்' என்றும் முழுப் பொய்யைச் சொல்லி தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர்தான் இந்த கே.பி.! அப்படிப்பட்டவர் பேசும் பேச்சா இது? எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள், சாதாரண மக்கள் மீது வன்முறையைத் தூண்டி துன்பம் விளைவித்ததாக கே.பி. சொல்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித் வைகோ, இது மட்டுமா சொல்கிறார் அவர்? கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர் வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேவின் சகோதரன் கோத்தபாய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கேக்கும் தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக அன்போடு தன்னிடம் பேசியதாகவும், அதன் பின் தான் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கே.பி. கூறியிருக்கிறார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் கூறியிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்துவிட்டதாக கோத்தபாயாவிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். சிங்கள அரசால் சிங்காரித்து பூஜிக்கப்படும் கே.பி., 2009 மே 17-க்கு முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டதாகக் கூறிய கே.பி., விடுதலைப் புலிகளைப் பற்றியும், உயிர் கொடுத்துப் போராடிய போராளிகள் பற்றியும், அதன் தலைவர் பற்றியும் உயர்வாகப் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக கே.பி. சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என்பதை வேறு வார்த்தையில் கேட்டிருக்கிறார் கே.பி. ராஜபக்சேயின் ராஜ்யத்தில் தனது மிச்ச நாட்களைக் கழிக்க வேண்டிய நேரத்தில் கே.பி-யால் இப்படித்தான் பேச முடியும்.

Read more...

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷூ, முட்டை வீச்சு!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது உள்பட தாம் மேற்கொண்ட கொள்கை முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், பல்வேறு நிகழ்வுகளின் நினைவுகளையும் தொகுத்து 'எனது பயணம்' My journey என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் பிளேர்.

இந்த புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் பிளேர். இதன் ஒரு பகுதியாக அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகருக்கு நேற்று சென்றார் பிளேர். அவர் அங்கு வருவதை அறிந்து, ஈராக் போரில் ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிளேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

'கைகளில் ரத்தக் கறையுடன் வரும் பிளேரே திரும்பி போ!' என்று அவர்கள் முழக்கமிட்டுக்கொண்டிருக்கும்போது, பிளேர் காரில் வந்திறங்கினார். அவர் காரிலிருந்து இறங்கியதுமே அங்கு திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வீசினர்.

இருப்பினும் அவை பிளேர் மீது படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே பிபிசிக்கு பேட்டியளித்துள்ள பிளேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புதான், இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளார்.

அத்துடன் பிற்போக்குத்தனமான மற்றும் மூடத்தனமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் உலக பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

Read more...

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்

கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்", எனவும் புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்" என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா" என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்" என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு" என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு "அருளாளர் பட்டம்" அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் - டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸ{க்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்"ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது "சின்னவள் நீ, பக்குவமற்றவள்" என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று, இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்" எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு"வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும், நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சு10ட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை - எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்" என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது, சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

1972-ல், அமைதி விருதான "நேரு" விருது

1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா" விருது

1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்' விருது

1979-ல் நோபல் பரிசு
அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் "இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்" என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், "உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர். அதற்கு அவர், "வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்" என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."

1980-ல், மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா" விருது

1981-ல், ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி ஹொனர்" (Legion d’Honneur) என்ற விருது.

1982-ல், ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்" விருது.

1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்" விருது

1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி" விருது மற்றும் “பாரத சிரோமணி" விருது

1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்" விருது

1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது" மற்றும் “தயாவதி மோடி" அறக்கட்டளை விருது

1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை' விருது.

1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

1997-ல், அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்" வழங்கியது.

2003-ல், அக்டோபர் 19ம்திகதி "அருளாளர் பட்டம்" திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com