Saturday, July 11, 2009

வவுனியா நகரசபை தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல்..

வவுனியா நகரசபை தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் 11-07-09 சனிக்கிழமை மாலை 3மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் வவுனியா நகரசபைக்கான தலைமை வேட்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னால் முதல்வருமான லிங்கநாதன் ரி.பி.சி.பணிப்பாளர் வீரய்யா இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் 00 44 208 930 5313

Read more...

Friday, July 10, 2009

துறைநீலாவணைக் கிராமமும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கும். -துறைநீலாவணையான் -

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு திசையின் எல்லைக்கிராமாக துறைநீலாவணைக் கிராமம் காணப்படுகிறது. இங்கு 3500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இக்கிராம மக்கள் பல அடிப்படை வசதிகளை இழந்தவர்களாக உள்ளபோதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்களின் நலனிற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராமையையிட்டு மக்கள் வேதனை கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இருந்து இக்கிராமத்திற்குச் செல்வதற்கு ஒரு பிரதான வீதியும், கிராமத்தில் பல சிறு வீதிகளும் காணப்படுகின்றன. ஆனால் 1977ம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இவ்வீதிகள் இன்று வரைக்கும் புனரமைக்கப்படவில்லை. மக்கள் பாவிக்கமுடியாத வகையில் குன்றும் குழியுமாக கிழக்கு, மேற்கு வீதிகள் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பாக கிழக்குமாகாண ஆளுனர், மண்முனை தெற்கு எருவில் பிரதேச செயலாளர், மண்முனை தெற்கு எருவில் பிரதேச சபை தவிசாளர் போன்றோருக்கு எழுத்து மூலம் பிரதேச மக்கள் தெரியப்படுத்தியபோதும் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மேலும் களப்புக்களாலும், குளங்களாலும் சூழப்பட்ட இக்கிராமம் மட்டக்களப்பில் தனியானதோர் நிலஅமைப்பைக் கொண்டுள்ளமையால் அம்மக்கள் தனித்தே வாழ்கின்றபோதும், தங்களது கலாசார நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஒரு பொது மண்டபம் அற்றவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையில் தொடர் நிலங்களாக காணப்படுகின்ற பெரும்பாலான கிராமங்கள் தமக்கென பொது நிகழ்வு மண்டபங்களை கொண்டுள்ளபோதும் தனித்து வாழும் இம்மக்கள் அப்பாக்கியத்தை பெற்றுக்கொள்ளாதது பெரும் துன்பகரமானதாகும்.

அத்துடன் சிறார்களின் வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் உடலாரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாததும், சிறார்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவும் கருதப்படுகின்ற சிறுவர் மைதானம் அல்லது சிறிய பூங்கா இக்கிராமத்துச் சிறுவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

காலாகாலமாக இடம்பெற்று வரும் தேர்தல்களில் வாக்கு கேட்டுவரும் அரசியல்வாதிகள் மேற்படி விடயங்களை நிவர்த்தி செய்யப்போவதாகவே இக்கிராம மக்களிடம் வாக்குக் கேட்பர். இவர்களின் பொய்பிரச்சாரங்களுக்கு நம்பி வாக்களித்த மக்களால் குறிப்பிட்ட அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலின்போதே காணமுடிகின்றது.

இவ்வாறு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்வரும் தேர்தல்காலங்களில் தமது கிராமத்தினுள் எந்த ஓர் அரசியல்வாதியினதும் வாகனங்கள் உட்புகாதவாறு வீதித்தடை அமைக்கவுள்ளதாக அங்குள்ள இளைஞர் வட்டத்தில் இருந்து தெரியவருகின்றது.

குறிப்பாக கொழும்பில் இருந்து அரசியல் செய்து கொண்டு, 2 மாதங்களுக்கு ஒருதடவை மட்டக்களப்பு பிரதேசத்திற்கு வந்து இங்குள்ள மக்களின் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தயவு செய்து இவ்விடயத்தை கருத்தில் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

அத்துடன் இக்கிராமத்தில் இருந்த பலர் சிறந்த கல்விமான்களாக இக்கிராமத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். தம்மை வளர்த்துவிட்ட அல்லது தாம் வளர்ந்த கிராம நலனில் அக்கறைகொண்டு தாம் சார்ந்திருக்கும் துறைகள் அல்லது வளங்களை கிராம முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முன்வரவேண்டும்.

Read more...

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சில் மீண்டும் சிறீ ரெலோ தேசிய அமைப்பாளர் அபூயூசூப்

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் 11.07.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - சிறீ ரெலோவின் தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் அரசியல் உரையாட அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ் ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரி ஆர் ரி தமிழ் அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் செய்மதியூடாக ஒலிபரப்பாகும் இந்த வானொலியை http://www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.


தகவல் : சிறீ ரெலோ ஊடகப் பிரிவு.

Read more...

புலிகளின் மதி உரைஞர் குழு நோர்வே யில் ம(த)ந்திர ஆலோசனை.


நோர்வேயில் இன்று பிற்பகல் 5 மணிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவினரின் மத்திய குழுக் கூட்டம், புலிகளின் நோர்வே தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழீழ மக்கள் பேரவை என்ற பெயரில் பற்றிமாகரன் என்பவரை தலைமையாக கொண்டு இயங்கிவரும் புலிகளின் முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கே.பி க்கு எதிரான நெடியவன், ரி.ஆர்.ஓ ரெஜி ஆகியோரது பிரிவினர் இங்கு பங்கு கொண்டுள்ளதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவையின் கீழ் இயங்குவதென முடிவெடுத்துள்ளனர்.

அதே நேரம் நேற்றயதினம் கே.பி குழு வினரின் செயற் குழு கூட்டம் நோர்வேயில் இடம்பெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தின் போது நோர்வேயில் இயங்குகின்ற அன்னை பூபதி பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை கே.பி குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளாக தெரியவருகின்றது. இப்பாடசாலை நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு இப்பாடசாலையின் பொறுப்பாளராக இருந்துவந்த யோகராஜா பாலசிங்கம் என்பவர் கடந்த சில நாட்களாக நோர்வேக்கு வெளியே சென்றுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. அவர் கே.பி குழுவின் அச்சுறுத்துலக்கு அஞ்சி அல்லது எதிர்காலத்தில் கே.பி குழுவுடன் இணையும் நோக்கில் நெடியவன் தரப்பினருக்கு கம்பி நீட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

Read more...

துவாரகாவின் உடலைத் தேடிச் செல்லும் படையினர்.

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளில் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனது மகள் துவாகராவின் உடலை தோண்டி எடுக்க படையினர் விரைவதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. துவாரகா சோதியா படையணியில் லெ.கேணல் தரத்தில் இருந்ததாகவும் கடந்த மே மாதம் 12ம் இடம்பெற்ற தாக்குதலில் ஆட்லறி செல்வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்ததாகவும், அவரது உடல் புதுமாத்தளனில் உள்ள பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரையும் படையினர் துவாரகாவின் சடலத்தின் எச்சங்கள் எவற்றையாவது கைப்ற்றின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி பிரபாகரனது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

யாழ் கொழும்பு பஸ் சேவை மிக விரைவில். போக்குவரத்து அமைச்சர்.

யாழ் கொழும்பு சொகுசு பஸ் சேவை ஏ9 வீதியூடாக மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு ஓர் திட்டமிடலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் 3வது நவீன வசதிகளுடைய தரமான பஸ் நிலையத்தை யாழ்பாணத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, July 9, 2009

புலிகளின் அனைத்துலகச் செயலகமும்.. அடம் பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்.. - சாத்திரியார்

புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான். இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படி புலிகளின் தலைமையை கைப்பற்றி மக்களின் காதில் பூசுத்த நினைக்கும் கே.பி பத்மநாதனின் அறிக்கை வெளியானது..

அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.

இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்கள் என கேபி தரப்பினர் புலம்புகின்றனர். .

புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.

புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்.. மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.

அத்துடன் நெடியவன் புலிகளின் ஆயதக்கொள்வனவு விவகாரங்களுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.பி க்கும் கஸ்ரோவிற்கும் இடையில் உருவான முரண்பாடுகள் ஆயுதக் கடத்தல் விடயத்தை முற்றாக பாதித்ததாகவும் அவற்றின் பலாபலனாகவே புலிகளின் பல ஆயுதக்கப்பல்கள் நடுக்கடலில் வெடித்துச் சிதறியதாகவும் புலி ஆதரவாளர்கள் மேற்படி நபர்கள் மீது குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன், கேபி யினால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு புலித்தொழிலாளர்களும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவுகொண்டுள்ளபோதும் எவ்வாறு மக்கள் முன்செல்வதென்றும் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்கு தம்மிடையே பிளவு இல்லை என வெளிக்காட்டவேண்டம் என்ற பொதுக்கொள்ளையில் உடன்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்க முடியாதென்பதே..இவரது வாதமாகும்..

இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை கூறிவிட்டு, மக்களை வேறு விதமாக கையாள தகுந்த தந்திரோபாயங்கள் தெரியாதவர் என எதிர்தரப்புப் புலிகள் கூறிவருகின்றனர்.

தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்) சிறிரவி..சிவம்..ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த யுத்தத்தின் வடுக்களால் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..

ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.

அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..

எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களில் புலிகள் எனும் நாமம் தாங்கிவரும் நபர்கள் தொடர்பாக சுயமான முடிவெடுங்கள் நன்றி.. VIII

Read more...

அவுஸ்ரேலியாவில் இரு 07 மாத பச்சிளம் குழந்தைகள் மர்மமானமுறையில் மரணம்.

அவுஸ்ரேலியாவில் இரு 07 மாத பச்சிளம் குழந்தைகள் மர்மமானமுறையில் மரணமானதை தொடர்ந்து அவுஸ்ரேலிய பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

இலங்கையை சேர்ந்த அரியரட்ணம் என்பவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியும் அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர். அரியரட்ணம் பொறியிறல் ஆலோசனை கம்பனியென்றில் முகாமையாளராக கடமையாற்றிவருகின்றார்.

சம்பவம் இடம்பெற்றதினமான திங்கட்கிழமை அரியரட்ணம் தனது கடமையை முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தபோது தனது இரு குழந்தைகளான லாச்லன் மற்றும் சவ்பி ஆகியோர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று உடனடியாக அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தைகளை பிரின்ஸ்செஸ் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்போது குழந்தைகள் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

குழந்தைகளின் தாயாரான றீட்டா பிரசவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தக்குறைவு நோயினால் பலநாட்களாக நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் இருந்தவராவார். சம்பவம் இடம்பெற்ற அன்றயதினம் மருந்து உட்கொண்டதன் விளைவாக மயக்கநிலையில் இருந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார் வீட்டை சல்லடை போட்டு தேடியபோது வீட்டிலிருந்து பெருமளவிலான மருந்து பொருட்களை கண்டெடுத்துள்ளனர். இம்மருந்துபொருட்கள் திருமதி அரியரட்ணத்திற்கு அவரது நோய்க்காக வைத்தியர்களால் வழங்கம்பட்டவை என தெரிவித்த பொலிசார் சம்பவம் இடம்பெற்ற தினம் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் திருமதி அரியரட்ணம் மயக்கமடைந்திருக்கலாம் தெரிவித்தனர்.

அரியரட்ணம் தம்பதியினர் எந்தவிதமனான பிரச்சனைகளும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்தவர்கள் என்றும் நீண்டகாலமாக குழந்தைகள் இல்லாமல் ஏங்கி கொண்டிருந்தவர்களுக்கு அண்மையில்தான் ஆண் குழந்தையான லாச்லனையும் பெண் குழந்தையான சவ்பியும் கிடைத்தனர் என அயல்வீட்டு பெண்ணொருவர் அரியரட்ணம் அவர்களின் மனைவிய குழந்தைகளில் மிகவும் ஆhவமாக காணப்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாயார் தொடர்ந்தும் கோமா நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

பாராளுமன்ற வீதிப் பாவனைத் தடை நீக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற ஒன்று கூடல்கள் இடம்பெறுகின்றபோது பாராளுமன்றிற்கு செல்லுகின்ற வீதிகள் யாவும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, பாதுகாப்பு நிலமைகள் சீராகி வருகின்றமையை வெளிப்படுத்து முகமாக பாராளுமன்றவீதியை எந்த நேரமும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் வாகனநெரிசல் நெருக்கடிகள் குறையும் என நம்பப்படுகின்றது.

Read more...

புலிகளின் வான் தாக்குதலுக்குள்ளான இறைவரித் திணைக்களத்தின் திருத்த வேலைக்கு ரூ. 104 கோடி தேவை.

புலிகளின் வான்தாக்குதலுக்கு உள்ளான சித்தம்பலம் கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள இறைவரித் திணைக்களத்தின் கட்டிடத்தை திருத்தியமைப்பதற்கு ரூ 10,40,12,70,000 தேவைப்படுவதாக அமைச்சர் டினேஸ் குணவர்த்தன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Read more...

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது பணிகளை மட்டுப்படுத்தவுள்ளது.

விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியீட்டிதன் பின்பு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பணிகளை மட்டுப்படுத்தவுள்ளதாக தெற்காசிய நாடகளுக்கான சர்வதேச செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஜக்கஸ் டி மோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுவகையான மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பணிகளை மட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பணிமனை செயற்பாடுகளை இடைநிறுத்தி தனது வெளிநாட்டு பணியாளர்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து அழைக்கவுள்ளது என்று குறிப்பிட்டதுடன் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையுடன் தொடர்ந்து செயற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Read more...

பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோக பூர்வ அறிக்கையை இந்தியா எதிர்பார்கின்றது.

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோக பூர்வ அறிக்கையை இலங்கையிடம் இருந்து இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றத்தில் தொரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என குறிப்பிட்ட எஸ்.எம் கிருஸ்ணா இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்தாக நிலக்கண்னிவெடிகளை அகற்றுவதற்கென நான்கு குழுக்களை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் உட்பட 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Wednesday, July 8, 2009

புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பொய்யான தகவல்களை வழங்கினோம்

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள், புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப் பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.

இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:-

நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது.

சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம்.

நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும், எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.

புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர்.

உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.

எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர்.

நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சண்முகராஜா தெரிவித்தார்.

இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம்.

பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்ட போதும் அது பலனளிக்க வில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம்.

படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.

இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

நன்றி தினகரன்

Read more...

கனடியப் பிரஜைகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் யுத்தம் முடிவுற்றபோது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுள் கனடியப் பிரஜைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் புலிகளியக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு முதலாவது உத்தியோ பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள கனடிய வெளிவிவகார அமைச்சின் செயலர் Mr. Deepak Obhrai, புலிகளியக்க உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் கனடியப் பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனடிய National Post பத்திரிகைக்கு அவர் கூறுகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் யார் என்பதை இலங்கை அரசு எமக்கு தெரியப்படுத்தியுள்ளது. அவரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். புனருத்தாபன முகாம்கள் எனப்படும் முன்னனைநாள் விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரத்தியேக முகாம் ஒன்றில் அவர் உள்ளார் என கூறியுள்ளார்.

ஆனால் இவ்வாறு 4 கனடியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புலிகளை தடுத்து வைத்துள்ள முகாம்களைத் தவிர பொதுமக்கள் தங்கியுள்ள முகாமொன்றில் கனடியப் பிரஜை ஒருவரை தான் சந்தித்துள்ளதாக கூறியுள்ள Deepak Obhrai, அந்நபர் தற்போது கனடிய தூதுவராலயத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்கள் அவரின் விடுதலைக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன் ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை பார்வையிடுதற்கு Mr.Deepak Obhrai க்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நபர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என இலங்கை அரசை தான் வேண்டியபோதிலும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவரது விடுதலை தாமதமாகின் அவரை கனடிய நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு தாம் சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக University of Ottawa எனும் பல்கலைக்கழகத்தின் international law professor Errol Mendes தெரிவித்துள்ளார்.

Read more...

பொதுமக்கள் தாக்கியதில் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸார் வைத்தியசாலையில்.

மடவலப் பிரதேசத்தில் உள்ள வட்டகம எனுமிடத்தில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை அடக்கச் சென்ற பொலிஸார் மீது பிரதேச மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் வட்டகம பொலிஸ் பொறுப்பாதிகாரி சிந்தக்க பண்டார உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

300 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இத்தாக்குதலில் பொலிஸாரின் இரு வண்டிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காமின நவரட்ண, இத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com