Tuesday, October 12, 2010

யாழில் மீள் குடியேறும் சிங்கள மக்களின் நலன்களை கவனிக்குமாறு டக்ளஸ் பணிப்பு.

யாழ் மாவட்டத்தில் முன்னர் வசித்ததாக கூறும் ஒரு தொகுதி மக்கள் அங்கு மீண்டும் குடியேறிவருவதாக தெரியவருகின்றது. மீள் குடியேற விரும்பும் சிங்கள குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குமாறு அமைச்சர் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசியல்மயப் படுத்த வேண்டாமென அவர் வேண்டுதலும் விடுத்துள்ளார்.

அதேநேரம் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது நிலைகாணப்படுவதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது.

Read more...

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவரின் மனைவி கைது

பெய்ஜிங் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த லியூ ஜியாபோவின் மனைவியை சீனப் போலிசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக மனித உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. திரு லியூ ஜியாபோவின் மனைவி லியூ ஜியா மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை என்றும் ஆனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழுவின் ஆலோசகர் கூறினார்.

தன் கணவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதை சிறையில் இருக்கும் தன் கணவரிடம் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய லியூ ஜியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை விட்டு வெளியில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.

அவரது வீட்டு வாசலில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவரது தொலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழு கூறியது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள திரு லியூ ஜியாபோ தற்போது சிறைச்சாலையில் உள்ளார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனநாயக சீனாவுக்காக குரல் எழுப்பிய ஒரு புத்தகத்தை எழுதிய 8 கதாசிரியர்களில் லியூ ஜியாபோவும் ஒருவர். சிறையில் இருக்கும் லியூ ஜியாபோ, தனக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்திருப்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்டதாக பெய்ஜிங் தகவல் கூறியது.

Read more...

தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை, 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது..!

தாய்லாந்தில் தாய்லாந்து பொலீசாரும், கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர் இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கியுள்ளனர்.

இன்றுகாலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒன்சபோன், சபான்மை, பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள்இ தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலீசார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும், தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது. அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும்இ கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும், கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து ராம்

Read more...

Thursday, October 7, 2010

இந்தியா, பாகிஸ்தான் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிடத் தயார்: பான் கி மூன்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு சமரச முயற்சிகளில் ஐ.நா.ஈடுபடத் தயாராக உள்ளது என்று அதன் பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். ஐ.நா.நாடுகள் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூனிடம், காஷ்மீரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வன்முறை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா.அவை ஏன் தனது செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த பான் கி மூன், “முதலில் அவர்கள் (பாகிஸ்தான், இந்தியா) அண்டை நாடுகள், அப்பகுதியில் முக்கியமான நாடுகள், எனவே அங்கு அமைதியும், பாதுகாப்பும் முக்கியமான அம்சங்களாகும். எங்களுடைய செல்வாக்கை செலுத்துவது தொடர்பாக கூறுவதென்றால், அதில் சம்மந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே ஐ.நா. எந்த முன் முயற்சியும் எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்டுவரும் மனித உயிரிழப்பிற்காக தான் வருந்துவதாகத் தெரிவித்த பான் கி மூன், அப்பிரச்சனையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொ்ண்டுள்ளார்.

காஷ்மீரை இந்தியா ஒருங்கிணைந்த அங்கும் என்று இந்திய அரசு கூறுகிறது. அது இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்ட பகுதி என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், காஷ்மீரில் மக்கள் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களோ, அது காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயப் பிரச்சனை என்றும், இதில் காஷ்மீர் மக்களே முடிவு செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.

Read more...

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஒபாமா மனைவிக்கு முதலிடம்

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஒபாமா மனைவி ‌மி‌‌ச்செ‌ல் முதலிடம் ‌பிடி‌த்து‌ள்ளா‌ர். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமெரிக்க அ‌திப‌ர் ஒபாமாவின் மனைவி மி‌ச்செ‌ல் ஒபாமா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் சக்தி வாய்ந்த பெண்களின் ஒட்டு மொத்த பிரிவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதோடு அரசியல் பிரிவிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார். கிராப்ட் புட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஐரீன் ரோசென்பில்டு 2வது இடத்தில் உள்ளார்.

பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி 6வது இடத்தில் உள்ளார். பெண் தொழில் அதிபர்கள் பிரிவில் அவருக்கு 2வது இடம் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழ் மக்கள் கூடாரங்களில் வாடுகையில் தமிழுக்கு விழா எடுப்பது அவசியமா?

அ.கீதபொன்கலன், J.P
207,புனிதசெபஸ்ரியார்.வீதி,
மன்னார
06.10.2010

அருட்பணி. தமிழ்நேசன்
தலைவர்,
மன்னார் தமிழ்ச் சங்கம்,
மன்னார்

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழ்ச் செம்மொழி விழாவிற்கு நிதி உதவி கோரல் எனும் தலைப்பின் கீழ் மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்டேன். இவ் விழா தொடர்பான எனது கருத்துக்களை தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

மன்னார் மக்களின் கலை இலக்கியத் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, மன்னாரின் கலை இலக்கிய வளத்தை ஒரே மேடையில் கண்டுகளிப்பது, ஆய்வரங்குகள் ஊடாக தமிழ் மொழி, தமிழ் கலைகள், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு போன்ற விடயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போன்ற பல நோக்கங்களை இலக்காகக் கொண்டு இவ் விழாவை ஏற்பாடு செய்கின்றோம் என்றும், ஒக்டோபர் 22ம்
திகதியிலிருந்து 25ம் திகதிவரை காலையும் மாலையும் ஆரம்பவிழா, இசைவிழா, இலக்கியவிழா, நாட்டிய விழா, நாடக விழா, நிறைவு விழா எனத் தொடரச்சியாக பல அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

எமது மாவட்டத்தில் மேற்படி விழா எடுக்கவிருப்பது யாவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருப்பினும் முதலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசரமானதும் அவசியமானதுமான பல தேவைகளில் ஒன்றையாவது நிறைவேற்ற தமிழ்ச்சங்கம் என்ன நடவடிக்கை எடுத்ததென பலர் வினா எழுப்புகின்றனர். அத்துடன், முழு மாவட்டத்தின், பிரதேச செயலாளர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அடங்கலாக, வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் இவ் விழாவிற்குத் தங்களது பங்களிப்பைச் செய்யும்
நிலையில் இருக்கிறார்களா?

எமது மாவட்டத்தின் மாந்தை மேற்கு, மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைச் சார்ந்த அனைத்து மக்களும், அத்துடன் நானாட்டான், முசலி பகுதிகளைச் சார்ந்த ஒரு பகுதி மக்களுமாக, கிட்டத்தட்ட மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள், நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பிடியில் அகப்பட்டவர்கள் என்பதையும், அதிலிருந்து உடனடியாக மீளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதையும், மன்னார் தமிழ் சங்க நிர்வாகம் புரிந்துகொண்டு செயற்படாமல் விட்டது ஏன் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து, உறவுகளைப் பிரிந்து பிரிந்த உறவுகள் எங்கிருக்கின்றார்களோ என்று தெரிந்துகொள்ள முடியாமல் வேதனையுடன் வாழும் மக்கள் ஒருபுறமும், பிரிந்த உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்து விட்டார்களா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருப்போர் மறுபுறமும், ஊனமுற்று விதவைகளாக்கப்பட்டு அனாதைகளாக்கப்பட்ட மக்கள் இன்னொரு
புறத்திலுமாக, வாழ்ந்து கொண்டிருக்கையில் அம் மக்களின் பங்களிப்பு தமிழ் செம்மொழி விழாவிற்கு எப்படிக் கிடைக்கப் போகிறது? மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பங்களிக்காத நிலையில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ச் செம்மொழி விழா ஏற்பாட்டின் நோக்கங்கள் எப்படி முழுமை பெற முடியும்.?

முழு மன்னார் மாவட்டத்தையும் மையமாகக் கொண்டதாக, மாவட்டம் முழுவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழாவாக, இது அமைய வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கருதுவார்களாகில், மாவட்டத்தின் மூலை முடுக்குகள் அனைத்திற்கும், இதுபற்றிய செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலும், கிராமிய மட்டத்திலும் பல தலைப்புக்களிலான சொற்பொழிவுகள், கட்டுரைகள், கவிதைகள், கலை நிகழ்வுகளுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு, தரமானவை தேர்ந்தெடுக்கப்பட்டு விழா மண்டபத்தில் அரங்கேற்றப்படல் வேண்டும். இதன் மூலம் ஒரு சிறிய வட்டத்தினுள் அடங்குபவர்கள் திறமைசாலிகளாக தெரிவு செய்வது தடைசெய்யப்பட்டு பரந்த அடிப்படையில் திறமைசாலிகள் வெளிப்படுத்தப் படுவார்கள். அதைவிடுத்து கால அவகாசமின்றி ஏற்பாடுகள்
செய்யப்பட்டால், ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் ஒடுங்கிவிடும் என்ற எனது கருத்தை தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

அடுத்தபடியாக இந் நிகழ்வுக்காகத் தாங்கள் தெரிந்துகொண்ட தினங்கள் அடை மழை காலமாகும். தாங்கள் இங்கு விழா எடுத்து, மகிழும் அதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழினம் சிறு சிறு கூடாரங்களிலும், தற்காலிக ஓலைக் குடிசைகளிலும் வாழ்ந்துகொண்டு, குழந்தைகள், வயோதிபர்கள், ஊனமுற்றோர் ஆகியோரை அடைமழையிலிருந்து காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பர்.

தன் மக்களில் பலர் துன்புற்றிருக்க சிலர் மட்டும் பெருந்தொகைப் பணச்செலவில் (ரூபா இரண்டு மில்லியன்) தனக்குப் பெருவிழா எடுப்பதை தமிழ்த்தாய் எப்படி ஏற்றுக் கொள்வாள்.

ஆகவே நம் தமிழ்த்தாய்க்கு முழு மன்னார் மாவட்ட மக்களும் கைகோர்த்து பெருவிழா எடுப்பதற்கான கலன் ஜே. பி காலம் கனியும்வரை, விழாத் தினங்களை பிற்போட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

அ. கீதபொன்

Read more...

இலங்கை ஜனநாய சோசலிச குடியரசும் மகிந்த சிந்தனையும். - தேவன் (கனடா) -

'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' – யாரோ. மூன்று தசாப்தகால இடைவெளிக்கு பின்பு யுத்தம் தின்ற பூமியான இலங்கையின் வட பகுதிக்கு செல்வோருக்கு பல அதிசயங்கள், பல சோகங்கள், பல அனுபவங்கள் கொஞ்சம் பொறாமை என கலந்த உணர்ச்சிக்கலவையாக பல உணர்வுகள் மனதின் ஓரத்தில் வந்து வந்து அழுத்துவதும் நாம் திணறிப்போவதும் தவிர்க்க முடியாது.

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிப்புற்று தேசத்தைவிட்டு வெளியேறியவர்கள் கடந்த வருடம் வைகாசி மாதம் யுத்தம் ஓய்வுக்கு வந்த பின்பு உலகின் பலபாகங்களில் இருந்து தமது தாய் நாட்டை தரிசிப்பதற்காகவும் தமது எஞ்சி இருக்கும் உறவுகளை பார்ப்பதற்காகவும் குடும்பத்துடன் தாயகத்துக்கு வருகிறார்கள்.

யுத்தம் எவ்வளவு கோரமானது கொடுமையானது அரக்கத்தனமானது என்பதை ஏ9 பாதை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு பயணிப்போர் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள். வவுனியா கடந்து ஓமந்தை பரிசோதனையை முடித்துவிட்டு வாகனத்தில் பயணிக்கும்போது கிளிநொச்சி வரைக்கும் காணும் காட்சிகள் மனதில் இனம் புரியாத வலி மனதைத் துழைத்தெடுக்கிறது.

இடிந்து நொருங்கிப்போன கட்டிடங்கள், ஏ9 வீதியின் இருபக்கமும் அகண்ட வெளி எரிக்கப்பட்ட நிலையில் புற் தரைகள், மரங்கள், செடிகள். அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போர் எவ்வாறு கோரத்தை அனலை கக்கி இருக்கிறது என்பதை நிச்சயமாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இத்துயருக்கு யார் காரணம்? யார் பொறுப்பு? என்பதை இலங்கை அரசியலையும் வரலாற்றையும் தெளிவாக புரிந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். அண்மைக்காலமாக உலகில் யுத்தத்திற்கு புது வரைவிலக்கணம், வியாக்கியானம் கொடுக்கப்பட்டுவருகிறது. நடந்து முடிந்த ஈராக் போர் ஈராக் மக்களுக்கு விடுதலையை பெற்றக் கொடுத்ததாக யுத்தத்தை நடத்தியவர்களால் கற்பிக்கப்பட்டது. ஆப்கான் போரும் அதன் பிரகாரமே நடைபெறுகிறது.

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்திற்கும் மக்களை விடுவிப்பதற்கான மனித நேய யுத்தம் என தற்போதைய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. அத்துடன் இவ் மனித நேய யுத்தத்தில் இறுதிக் கணங்களில் ஒரு பொது மனிதர்கூட இறக்கவில்லை என ஊடகங்களுக்கு கூறப்பட்டது.

நான்காம் ஈழப்போர் அதாவது ஈழத்தை அடைவதற்கான இறுதிப்போர் மக்கள் மீது யாரால் திணிக்கப்பட்டது? மகிந்தவை ஆட்சி அரியணைக்குக் கொண்டுவந்து யுத்த நிகழ்சி நிரலை தேர்வு செய்யும்படி அரசுக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்பபடுத்தியதின் விளைவாக ஏதும் அறியாத 3 இலட்சம் மக்கள் யுத்தத்தின் துயரையும் பல ஆயிரம் மக்கள் , படைகள் , போராளிகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டது.

புலிகள் மீதான யுத்தத்தை அரசு செய்யும்போது உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்புடன் போரிடுவதாகவும் இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல எனவும் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்தது. இவ்வகையான கற்பிதம் புலிகளின் 30 வருட வரலாற்றை தெரிந்தவர்களுக்கு உண்மையாகப்பட்டது.
மேலும் பயங்கரவாதம் என்றால் என்ன? அதன் உருவாக்கம் யாது? அதனை உருவாக்குபவர்கள் யார்? நிச்சயமாக அடித்துக்கூறலாம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களுமே. தீவிரவாத பயங்கரவாத, மத அடிப்படைவாத அமைப்புகள் தோற்றம் பெறுவதற்கு மூலகாரணியாக இருக்கிறார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை பெரும்பான்மை இனத்தவர்களே தேசத்தை ஆழுபவர்களாகவும் சமூக பொருளாதார தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் தேச வளங்களை அனுபவிப்பவர்களாகவும் சுரண்டுபவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக இலங்கையை இதுவரை ஆட்சி செய்த அரசுகள் ஆழும் அதிகாரவார்க்கத்தினர் அரசியல் அதிகாரங்களை அமைப்பதிலும், அதிக அதிகாரங்களை தக்க வைப்பதிலும் பணம், புகழ், பொருள் சேர்ப்பதிலுமே ஈடுபட்டவர்களே ஒளிய இலங்கையை ஒரு பல சமூகங்கள் வாழும் தேசம் என கருதி யாரும் ஆட்சி செய்ய முன்வராதது இலங்கைத் தீவின் சாபக்கேடு.

இதுவரை காலமும் இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் வறுமையை போக்குவதிலோ வேலை வாய்ப்புக்களை பெருக்குவதிலோ நல்லாட்சியை, நல்ல நிர்வாகத்தை நடத்துவதிலோ ஈடுபாடு காட்டவில்லை. அதற்குப்பதிலாக பிரச்சினையை உருவாக்குவதிலும், அதிக ஊழல்களில் ஈடுபடுவதிலும் சிறுபான்மை இனங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது உதாசீனப்படுத்துவதிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடகளை தோற்றுவிப்பதிலும் இனவாதங்களை கக்குவதிலுமே ஆட்சி அதிகாரங்ளைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

உதாரணமாக இலங்கையை அன்றிலிருந்து இன்றுவரை பேரினவாதிகளும், கடும்போக்குவாதிகளும் இனவாதிகளும் குடும்ப ஆட்சியார்களுமே தேசத்தை இனவாத அடிப்படையில் கூறுபோட்டு வந்ததின் விளைவாகவே பயங்கரவாதம் உருவாகியது என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

77ம் ஆண்டு வரையில் இலங்கைத் தீவில் பல குறைபாடுகள் பின்னடைவுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் இருந்தது. பாராளுமன்ற அரசியலுக்கு ஒரு மதிப்பு இருந்தது. அப்போது கண்ணியவான்கள், நேர்மையானவர்கள், தொலைநோக்கு பார்வையுள்ள இடதுசாரி தலைவர்கள் என மதிக்கப்ட்டக்கூடிய ஒரு ஆரோக்கியமான பாரம்பரியம் அனைத்து சமூகங்களிலும் காணப்பட்டது.

என்று ஜே. ஆர் அரசியல் அதிகாரத்துக்கு வந்தாரோ அன்றிலருந்து இன்றுவரை தனிநபர் அதிகாரமும் இனவாதமும் அழிவுகளும் அதனால் ஏற்பட்ட இனப்பூசல்களால் பல இலட்சம் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டதும் இவைகளுக்கிடையிலான பிளவுகளுமே ஏகபோக ஜனாதிபதி தனிநபர் அதிகாரத்துக்கு கிடைத்த பரிசாக இருக்கின்றன.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் பெரும்பாலும் துன்பத்தையே கொடுத்து வந்துள்ளன. இலங்கையை பொறுத்தமட்டில் மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரசும் அரசியல்வாதிகளும் மன்னிப்புக்கூட கோருவதில்லை.

ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு அடையாளம் ஒரு பாரம்பரியம் இருக்கும். அதனடிப்படையிலேயே மதிக்கவும் செய்வார்கள். உதராணமாக இலங்கையை எடுத்துக்கொண்டால் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் புத்தமத வழித்தோன்றல்கள். மதபோதனைப்படி வாழ்ந்துவருபவர்கள் என பிறமதத்தவர்கள் நினைத்துக்கொள்வார்கள் அதில் தவறு இல்லை. பெரும்பாலான சிங்கள மக்கள் பிற மதத்தவர்களுடன் இணக்கப்பாட்டுடன் மென்மையான முறையில் வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து ஆட்சிக்கு வருபவர்கள் அரசியல் அதிகாரம் செய்பவர்கள் ஏன்? புத்தமத்தை இயந்திரத்தனமாக பாவிக்கிறார்கள்? ஏன் புத்தமதத்தின் போதனைகைள ஆட்சியாளர்கள் பின்பற்றுவதில்லை? அப்படி பின்பற்றி இருந்தால் இலங்கைத் தீவில் மூன்று இரத்த ஆறு ஓட்டங்களை தவிர்த்து இருக்கலாமே என்ற கேள்வி பலரிடம் உண்டு.

அதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் எப்படி பதில் கூறப்போகிறார்கள்? இன்றைய இலங்கையில் நடைபெறும் ஆட்சிக்குப் பெயர் என்ன? இது ஒரு ஜனநாயக சோசலிச குரடியரசா? மன்னராச்சியா? மக்களாட்சியா? முதலாளித்துவ ஆட்சியா? அல்லது மகிந்த சிந்தனை தனிநபர் ஆட்சியா? அப்படியாயின் அது எல்லா காலத்துக்கும் பொருத்தமானதா?
தற்போது தேசத்தை நிர்வகிக்கும் பிரதான கட்சியினது பெயரில் 'சுதந்திர' என்னும் சொற்றொடரைக் கொண்டுள்ளது. இங்கு பல கேள்விகள் உருவாகின்றன. அதாவது மகிந்த சிந்தனையில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாம் சுதந்திரக் கட்சிக்கு மட்டும் தானா? ஏனையோருக்கு அது மறுக்கப்பட்டுள்ளதா? எதனால் பல பத்திரிகையாளர்கள் காணமல் போயுள்ளார்கள்? பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். சண்டே லீடர் ஆசிரியர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஏன்? எதற்காக?

தற்போதைய ஆட்சியில் ஆட்சியாளர்களைப் புகழ்பவர்களுக்கே செங்கம்பள வரவேற்பு. குறைநிலைகளை விமர்சிப்போருக்கு தேசத் துரோகப்பட்டம். ஏன் இந்த அரக்கத்தனம்? சந்திரிகா காலத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்த பத்திரிகை உலகம் மகிந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கிறது என சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.

உலக சரித்திரத்தில் அதிகாரத்தை தவறாக கையாண்டோருக்கு என்ன நடந்தது என்பதை வரலாற்று குறிப்புகள் துல்லியமாக பதிவு செய்துள்ளன. ''அதிகாரம் கூரிய வாள் போன்றது'// ஏனெனில் இருபக்கமும் அழிவை ஏற்படுத்தவல்லது.

மகிந்த சிந்தனையின் முக்கியத்துவம் கடந்த வருடம் வைகாசி மாதம் உணரப்பட்டது. கடந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாக சில தரப்புகள் சில விமர்சனங்களை முன்வைத்தாலும் பெரும்பாலானவர்கள் சுதந்திரக் கட்சியைப் பாராட்டினார்கள். ஆனால் கடந்த வைகாசி மாதத்திற்கு பின்னர் மகிந்த ஆட்சியையும் மகிந்த சிந்தனையையும் அவதானிப்பவர்களுக்கு அது ஒரு பிரபாகர சிந்தனைபோலவே செயற்படுகிறது எனவும் மகிந்த ஒரு சிங்கள பிரபாகரன் போன்று நடந்துகொள்கிறார் என விமர்சனங்கள் முன்வைக்க்பட்டுவருகின்றன. அதில் நிறையவே உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

சந்திரிகா ஒரு நேர்காணலில் மகிந்தவை ஒரு சண்டியர் என வர்ணித்தார். அதை ஒப்புக்கொள்ளும் வகையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இந்திய ருடே சீனியர் எடிட்டர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணலில் 'பிரபாகரன் காட்டுக்குள் இருந்தவர் நான் காட்டுக்குள் வளர்ந்தவன்' என தெரிவித்தார்.

கால் நூற்றாண்டுக்கு மேலாக பிரபாகரன் தன்னைப் புகழ்ந்தவர்களை தவிர தன்னை விமாச்சித்த அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் அழித்தே வந்துள்ளார். இதற்காக கையாண்ட பொறிமுறை தமிழ் தேசியம், புனிதம், தமிழ் சமூகத்தின் பாதுகாவலன், வீரம் போன்ற கருவிகள் ஆகும்.

இதேபோலவே மகிந்தவும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு ஒரு சிறு மாறுதலாக பாராளுமன்ற ஜனநாயத்தை பாவிக்கிறார். இன்றைய இலங்கை பாராளுமன்றத்துக்கு கூவம் நதிக்கும் பெரியளவு வித்தியசம் கிடையாது. ஏனெனில் வெள்ளை ஆடை அணிந்த அழுக்கர்கள்தான் இன்று இலங்கை மக்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நமது தேசத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளாக வறுமை, வேலையின்மை, ஊழல், குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அதிகார துஸ்பிரயோகம், ஏற்றத்தாழ்வு, சமூக இடைவெளிகள், இராணுவ மயப்படுத்தல், சிவில் நிர்வாகம் செயலிழப்பு போன்ற காரணிகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வலுவான எதிர்ககட்சி, பிராந்தியக் கட்சிகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
இத்தகைய ஒரு கையறு நிலையை மகிந்த சிநத்தனையே உருவாக்கி வைத்துள்ளது. மகிந்தவுக்கு புத்த போதனையில் பிடித்த கொள்ளை 3வது நிலை. அதாவது தன்மீது நெருக்கடிகளை திணிக்கும் போது நெருக்கடிகளை உடைத்து தன்னையும் பாதுகாத்து தேசத்தையும் பாதுகாப்பது. இந் நிலைப்பாடானது கடந்த மே மாதத்திற்கு முன்பு ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

புலிகளை வெற்றி கொண்டபின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறினார்கள். இனப்பிரச்சினைக்கு புலிகள்தான் தடையாக இருப்பதாக கூறினார்கள். ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இந்த அரசு அரசியல் தீர்வைப்பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை.

மகிந்த ஊடக நேர்காணலில் மட்டும் வீராப்பாக அலங்காரமாக பேசுகிறார். இலங்கையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிரச்சினை இல்லை நாம் அனைவரும் ஒரே குடும்பம். இனவாதம் இல்லை. வேறுபாடுகள் இல்லை என விபரித்துக்கொண்டே செல்கிறார்.
ஆனால் நடைமுறை யதார்த்தம் என்னவெனில் 30 வருடத்துக்கு முன்பு இருந்த தேச ஐக்கியம், சமூக ஒற்றுமை குறைந்து யுத்தத்தின் முடிவில் சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. மகிந்த சிந்தனையால் தேசத்தின் பரப்பளவைத்தான் இணைக்க முடிந்தது. தேசத்தின் மனங்களை அவரால் வெல்ல முடியவில்லை என்பதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

30 வருட போரால் சீரழிந்த தேசம் இயல்பான நிலைக்கு வரமுன்பே பல தேர்தல்கள், ஆட்சிகள், அதிகாரங்கள் 18வது அரசியமைப்பு திருத்தம், அதிகார வெளி, பதவி ஆசை, ஏதேச்சதிகாரம், ஜனநாய மறுப்பு இதுவா மகிந்த சிந்தனை. நீண்ட போரால் களைத்துப்போயுள்ள மக்களுக்கு மகிந்த சிந்தனை இன்று தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

சிங்கள சமூக அரசியல் பாரம்பரியம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. முற்போக்கானதும் கூட. 30 வருட பிரபாகர சிநத்தனையை தமிழ் சமூகம் வேடிக்கை பார்த்தது போல மகிந்த சிந்தனையை Justice is blind ஆன அரச யந்திரத்திற்கு நிச்சயம் மாற்றம் தேடுவார்கள். இன்றைய இலங்கைத் தீவில் குண்டுச் சத்தம், செல்லடி, வான் தாக்குதல்கள், ஊரடங்கு, போர்க்கெடுபிடி இல்லையே ஒழிய அதற்குப் பதிலாக இமாலய அளவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராடவேண்டிய தமிழ் கட்சிகள் வெறும் றப்பர் ஸ்டாம் ஆகவும், அறிக்கைகள் விடுவதிலும் தம் இருப்பை தக்க வைப்பதிலுமே பத்தோடு பதினொன்றாக ஈழக் குறியீட்டில் அடையாள அரசியலை நடத்திவருகின்றன.

மனித உரிமைவாதி மல்லிகா பெர்ணாண்டோ கூறியதுபோன்று மகிந்த என்றுமே இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரமாட்டார். தற்போது நடைபெற்ற 65வது ஐ.நா கூட்டத்தொடரிலும் இனப்பிரச்சினை பற்றி பேசும்போது சர்வதேசத்தின் அழுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இலங்கைக்குள்ளே இருந்து தீர்வு வரவேண:டும் என்று கூறுகிறார்.
ஆக தமிழ் தரப்பு என்ற தம்மை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்நிலைமைகளை கவனத்தில் எடுத்து தேசிய மட்டத்தில் உபாயங்களை வகுப்பதற்கும், போராடுவதற்கும் தம்மை தயார்ப்படுத்துவதோடு மகிந்த சிந்தனைக்கு மாற்றீடாக வேறொரு சிந்தனைக்கு உழைப்பதன் மூலமே நாளை நம் இருப்பை தக்கவைக்க முடியும் என நம்புவோம்.

மாற்றீடான சிந்தனை எனும்போது புலிச்சிந்தனையாக அது அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

Read more...

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவை விடுவிப்பது ஜனாதிபதியின்.

இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதியினால் சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு என வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கண்டி தலதாமாளிகையில் இன்று இடம்பெற்ற அதிஷ்டானப் பூஜையில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுக்க உதவிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பதன் மூலம் ஜனாதிபதிக்கு தற்போதுள்ள கீர்த்தி மேன்மையடையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது. இது குறித்து பாராளுமன்றத் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றியை அனுப்பியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் செல்லுபடி அற்றதென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் சீர்திருத்தத்தின் படி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளதென பாராளுமன்றச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றிலும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. சரத் பொன்சேகா தொடர்பில் பாராளுமன்றச் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் செல்லுபடியற்றதென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபையில் இன்று தெரிவித்தபோது: பதிலளித்த பதில் சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன பாராளுமன்றச் செயலாளரின் கடிதம் அரசியல் யாப்புக்கு உட்பட்டதென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தவறானதென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எமக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத், இந்தத் தீர்மானம் குறித்து தமது சட்டத்தரணிகளூடாக பாராளுமன்ற செயலாளருக்கும், தேர்தல்கள் செயலகத்திற்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் அதற்கு ஜனநாயகக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் நிப்புனாராச்சி நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றில் உறுப்பினர் ஒருவருடைய பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியிலிருந்து அவர் போட்டியிட்ட மாவட்டத்தில் அடுத்த நிலை விருப்பு வாக்குப் பெற்றவரைக் கொண்டு அந்த வெற்றிடம் நிரப்பப்படும்.

இதன்படி சரத் பொன்சேகா போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சரத் பொன்சேகா மற்றும் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் பாராளுமன்றிற்குத் தெரிவாகினர்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக லக்ஷ்மன் நிப்புனாராச்சி 32 ஆயிரத்து 852 வாக்குகளைப் பெற்றுள்ளார். தேர்தல் சட்டத்தின் படி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற வெற்றிடத்தை, அவரைக் கொண்டே நிரப்ப முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

Read more...

Tuesday, October 5, 2010

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் ஜென்ஸ் சாட்சியம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திட்டமிட்டவகையில் புனையப்பட்டதாக கூறப்படும் வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி சர்ச்சைக்குரிய விடயத்தினை வெளியிட்ட ஊடகவியலாளரான பிரெட்றிக்கா ஜென்ஸ் நேற்று மூவர் கொண்ட சட்டத்தரணிகள் குழுமம் முன் சாட்சியமளித்துள்ளார்.

அவரது சாட்சியம் அரசதரப்பு சட்டத்தரணியினால் நெறிப்படுத்தப்பட்டது. அதன் முழுவிபரம் வருமாறு.

அரச சட்டத்தரணி : உங்களுடைய தொழில்

முதலாவது சாட்சி : ஊடகம்

அரச சட்டத்தரணி : தொழிலை எங்கு ஆரம்பித்தீர்கள்?

முதலாவது சாட்சி : சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் 1992 ஆம் ஆண்டு சுயாதீன நிருபராக ஊடகத்துறைக்குள் நுழைந்தேன் 1995 ஆம் ஆண்டு வரை அறிக்கையிட்டேன், நேர்காணலும் செய்தேன்.

அரச சட்டத்தரணி : சண்டே லீடருக்கு எவ்வாறு சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்த விக்ரமதுங்க (முன்னாள் சண்டே லீடர் பிரதம ஆசியர்) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார். அவர் எனது நண்பரும் கூட.

அரச சட்டத்தரணி : சண்டே லீடர் பத்திரிகையில் நுழைந்த பின்னர்?

முதலாவது சாட்சி : முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அன்டன் பாலசிங்கத்தை நேர்காணல் செய்வதற்கு (புலிகளின் மதியுரைஞர்)

அரச சட்டத்தரணி : ஏன்? அவரை நேர்காணல் செய்தீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்தவிற்கு அது தேவையாக இருந்தது. அவருடைய நேர்காணலுடன் எனது ஊடகப்பணியும் ஆரம்பமானது.

அரச சட்டத்தரணி; எத்தனை வருடங்கள் கடமையாற்றினீர்கள்?

முதலாவது சாட்சி : இரண்டு வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் முழுநேர ஊடகவியலாளராக இணைந்து கொண்டேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட லசந்த முழு நேர பத்திரிகையாளராக இணைந்து கொள்ளுமாறு ( சண்டே லீடரில்) கேட்டுக் கொண்டார். நானும் இணைந்து கொண்டேன்.

அரச சட்டத்தரணி : லசந்த என்றால் யார்?

முதலாவது சாட்சி : சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசியர் லசந்த விக்ரமதுங்க( அமரர்) .

அரச சட்டத்தரணி : 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பத்திரிகையில் நீங்கள் என்ன பதவியை வகித்தீர்கள்? உங்களுடைய பொறுப்பு உங்களுக்கு முன்னர் அந்த பதவியை வகித்தவர் யார்?

முதலாவது சாட்சி : பிரதம ஆசியராக. ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை வெளிக்கொணரவேண்டியது எனது பொறுப்பாகும். எனக்கு முன்னர் அந்தப் பதவியை லசந்த விக்கிரமதுங்க வகித்தார்.

அரச சட்டத்தரணி: எதிரியை (சரத் பொன்சேகாவை) முதன் முதலில் எங்கு சந்தித்தீர்கள்? இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு பிரதானியாக அவர் பதவி வகித்தமை உங்களுக்குத் தெரியுமா?

முதலாவது சாட்சி : யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையில் கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்தார். அப்போதே அவரை முதன் முதலில் சந்தித்தேன். ஒரு பத்திரிகையாளராகவே அவரை நான் சந்தித்தேன். அவர் அந்த பதவிகளை வகித்தமை எனக்குத் தெரியும்.

அரச சட்டத்தரணி : நீங்கள் பிரதம ஆசிரியாக இருந்த போது தானே 2009 டிசம்பர் 13 ஆம் திகதி பத்திரிகை வெளியானது. அன்றைய தலைப்பு செய்தியின் கீழ் இருக்கும் செய்தியையும் நீங்கள் தானே எழுதினீர்கள்?

முதலாவது சாட்சி :ஆம்

அரச சட்டத்தரணி : அந்த பிரதான செய்தியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயம் வேறு தரப்பினரால் முன்னரே தெரிவிக்கப்பட்ட ஒன்றா?

முதலாவது சாட்சி : சில விடயங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டும் இருக்கின்றன.
உதாரணமாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

அரச சட்டத்தரணி : எந்தவொரு நபராவது உங்களுக்கு நேர்காணலில் வழங்கிய விடயமா? செய்தியின் தலைப்பில் இருக்கின்றது? அதில் கோட்டா என்று குறிப்பிட்டிருப்பது யாரை?

முதலாவது சாட்சி : ஆம் , முன்னாள் இராணுவ தளபதியான சரத்பொன்சேகாவினால் வழங்கப்பட்ட நேர்காணலின் பிரகாரமே தலைப்பு செய்தி தயாரிக்கப்பட்டது. கோட்டா என்பது பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரான கோட்டபாய ராஜபக்ஷவாகும்.

அரச சட்டத்தரணி : சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக இருந்தமையை நீங்கள் அறிவீர்களா? 2010 ஜனவரி 03 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான அவளுடைய கதை எனும் தலைப்பிலான கட்டுரையை நீங்களா எழுதினீர்கள்?

முதலாவது சாட்சி : ஆம், வேட்பாளர் என்பதை நான் அறிவேன்? அந்த கட்டுரையையும் நானே எழுதினேன்.

அரச சட்டத்தரணி : சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதற்கு உங்கள் நிர்வாகம் தீர்மானம் எடுத்தது உண்மையா? எப்போது அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது?

முதலாவது சாட்சி : நிர்வாகம் தீர்மானம் எடுத்தமை எனக்குத் தெரியும்? எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில் 2009 நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்திலாகும்.

அரச சட்டத்தரணி : எதிரி ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது அவருடன் நேரடியாக கதைத்து நேர்காணலுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொண்டீர்களா? இன்றேல் எவ்வாறு?

முதலாவது சாட்சி : அவரின் தனிப்பட்ட உதவியாருடன் பேசி நேரத்தை ஒதுக்கி கொண்டேன். கொழும்பிலுள்ள அவருடைய தேர்தல் காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டனர். நேர்காணல் வழங்குவதற்கு 9 ஆம் திகதியே நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. எனினும் லால் விக்ரமதுங்கவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் முதல் நாளான 8 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார் .

அரச சட்டத்தரணி : 9 ஆம் திகதி நேர்காணலை கோரியிருந்தீர்கள். ஆனால் 8 ஆம் திகதி வருகை தருமாறு அழைத்தனர். அப்படியாயின் நீங்கள் முதல்நாளே ஏன் சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : எமது பத்திரிகை நிர்வாகம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே நான், துசித்த குமார, ரத்பீஸ் விஜயவர்தன லால் விக்ரமதுங்க ஆகிய நால்வரும் சென் றிருந்தோம். சரத்பொன்சேகாவை தனியாக சந்தித்து பேசுவதற்கே லால் விக்ரமதுங்க வருகை தந்திருந்தார்.

அரச சட்டத்தரணி : எவ்வாறான நேர்காணலை செய்வதற்குச் சென்றீர்கள்? எத்தனை பேர் சென்றீர்கள்? துசித்த மற்றும் ரத்பீஸ் என்போர் யார்? எதிரியின் காரழயாலயத்திற்கு எத்தனை மணிக்கு சென்றீர்கள் ?

முதலாவது சாட்சி : வாழ்க்கை தகவல்கள், அரசியல் பிரவேசம் ஆகியவற்றை கேள்வி பதிலாக எதிர்ப்பார்த்து சென்றேன். நான்கு பேர் சென்றிருந்தோம். அன்று மாலை 5.20 மணிக்கு எதிரியின் காரியாலயத்தில் இருந்தோம். துசித்த என்னுடன் கடமையாற்றும் மற்றுமொரு ஊடகவியலாளர் ரத்பீஸ் புகைப்பட பிடிப்பாளர்.

அரச சட்டத்தரணி : பின்னர் என்ன? நடந்தது

முதலாவது சாட்சி : ஒரு மணிநேரம் காத்திருந்தோம். அவர் பிரசார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அன்று மாலை 6.30 மணிக்கு நேர்காணலை ஆரம்பித்தேன். வாழ்க்கை, 40 வருட இராணுவ சேவை. தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் அரசியல் பிரவேசம் ஆகியவை தொடர்பில் கேள்விகளை கேட்டதுடன் இறுதியாக இறுதி யுத்தத்தில் என்ன நடந் தது என்பது தொடர்பிலும் வினவினேன்?

அரச சட்டத்தரணி : இறுதி யுத்தம் தொடர்பில் (எதியிடம்) கேட்க வேண்டும் என்று முன்னதாக தீர்மானித்து கொண்டுதான் சென்றீர்களா?

முதலாவது சாட்சி :தீர்மானித்து கொண் டே தான் சென்றேன்? எங்களுடன் வருகை தந்த லால் விக்ரமதுங்க லசந்தவை கொலை செய்தது யார்? என்பது தொடர்பில் அவர டம் கேட்டுக்கொண்டிருந்தார் நேர்காணலின் இடையில் என்னிடம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். பின்னரும் நேர்காணல் தொடர்ந்தது.

அரச சட்டத்தரணி :அங்கிருந்தீர்கள் எனினும் அந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை .
நேர்காணலுக்காக என்ன? என்ன? எடுத்து சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை, பேனை மற்றும் பதிவு புத்தகத்தை எடுத்து சென்றேன்.

அரச சட்டத்தரணி : இறுதி கேள்வி என்ன? அவர் என்ன பதிலளித்தார்.

முதலாவது சாட்சி : விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்ததாகவும் ஆனால் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் என்ன நடந்தது? அதற்கு எதிரி பதிலளிக்கையில், சரணடைய வருகின்ற புலிகளை சரணடைய விடவேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ 58 ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு தொலைபேசியின் மூலமாகத் தெரிவித்ததாக யுத்தம் முடிவ டைந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் தெரிந்து கொண்டதாக பதிலளித்தார்.

குறிக்கிட்ட சரத்பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி நலீன் லது ஹெட்டிகே எதியின் பதில் தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என கூறியமர்ந்தார்.

அரச சட்டத்தரணி : வேறு எதாவது கூறினாரா?

முதலாவது சாட்சி :ஆம், நோர்வே மற்றும் வேறு வெளிநாட்டு குழுவினர் பசில் ராஜபக்ஷவுடன் (அமைச்சர் பஷில் ராஜபக்ஷ) தொடர்பு கொண்டு புலிகளின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், நடேசன், சுதா மாஸ்டர் ஆகியோர் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக கூறியதுடன் இதுதொடர்பில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தொலைபேசியில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பதிலளித்தார்.

அரச சட்டத்தரணி : குழப்பநிலையான செய்தியென்று நீங்கள் அக்கணத்தில் சிந்தித்தீர்களா?

முதலாவது சாட்சி : நிச்சயமாக, யுத்த குற்றத்திற்கு கட்டளையிட்டுள்ளார். இது சட்ட விரோதமானது. அடுத்த வாரத்திற்கான பிரதான தலைப்பு செய்தி, என தீர்மானித்தது டன் நேர்காணலை தனியாகவும், இந்த செய்தியை தனியாகவும் எழுதுவதற்கு நான் அந்த பொழுதிலேயே தீர்மானித்தேன்.

அரச சட்டத்தரணி : உங்கள் தலைப்பையும் தீர்மானத்தையும் அந்தபொழுதிலேயே எதிரிக்கு அறிவித்தீர்களா? எப்போது தெரிவித்தீர்கள்? வேறு யாருக்காவது தெரிவித்தீர்களா?

முதலாவது சாட்சி : இல்லை, டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் முழுச் செய்தியையும் வாசித்துக் காட்டினேன். செய்தியில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவே நான் தொலைபேசியில் தெரிவித்தேன். மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, பசில் ராஜபக்ஷ மற்றும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோருக்கு தொலைபேசியில் தெரிவித்தேன்.

அரச சட்டத்தரணி : எதிரியின் நிலைப்பாடு என்ன?

அரச சட்டத்தரணி : எதிரியின் அறையில் இருக்கும் போது யாருடனாவது தொடர்பு கொண்டீர்களா? ஏன்?

முதலாவது சாட்சி :மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் தொடர்பு கொண்டேன். உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கே அவ்வாறு செய்தேன்.

அரச சட்டத்தரணி : 58 ஆவது படையின் கட்டளையிடும் தளபதி என்ன கூறினார்.

முதலாவது சாட்சி : ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஜெனரல் சரத்பொன்சேகா வேறு என்ன கூறினார் எனக்கேட்டார். சரத்பொன்சேகா கூறிய சகல விடயங்களையும் அவருக்கு தெரிவித்தேன். இராணுவத்தின் அனுமதி கிடைக்கும் வரை அறிக்கையிட வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டார். இராணுவ பேச்சாளரான உதயநாணயக்காரவிடம் தொடர்பு கொண்டு மேற்படி விடயம் தொடர்பில் சவீந்திர சில்வாவுடன் பேசியதாக தெரிவித்த நான் இராணுவத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் கேட்டேன்.

இராணுவ தளபதியுடனும் சவீந்திர சில்வாவுடனும் கதைத்துவிட்டு கூறுவதாக பதிலளித்தார். எனினும் பின்னர் கருத்து தெரிவிப்பதிலிருந்து விலகி நின்றார்.

அரச சட்டத்தரணி : பின்னர் என்ன நடந்தது?

முதலாவது சாட்சி; : பசில் ராஜபக்ஷவி டம் பேசினேன். புலிகளின் முக்கிய தலைவர்கள் என்போர் சரணடைவதற்கு தயாராக இருந்ததாகவும் அதற்கு நோர்வே முயற்சித்ததாகவும் கூறப்பட்டமை தொடர்பில் கேட் டேன். ஆம் என பதிலளித்த அவர் வேறு எதனையும் கூறவில்லை.

அரச சட்டத்தரணி : பதிவு புத்தகம் எதற்காக பயன்படுத்துகின்றீர்கள் எதனை பதிவீர்கள்?

முதலாவது சாட்சி : எங்களுடைய பதிவிற்காகவும் மீள திரும்பி பார்ப்பதற்குமே பதிவு புத்தகத்தை பயன்படுத்துகின்றேன். முழுமையாக பதிவு செய்யமாட்டேன். முக்கியம் என நான் நினைத்தால் பதிவு செய்து கொள்வேன்.

அரச சட்டத்தரணி : சரத்பொன்சேகா கூறிய முழுவதையும் பதிவுசெய்து கொண்டீர்களா?

முதலாவது சாட்சி : நேர்காணலின் ஆரம்பத்தை துசித்த பதிவு செய்து கொண்டார் இறுதிக் கேள்வியை நான் கேட்கும் போது அவர் அங்கிருக்கவில்லை. அதனால் இறுதிகேள்விக்கான பதிலை நானே பதிந்து கொண்டேன்.

அரச சட்டத்தரணி : பதிவு புத்தகத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் கேட்டனரா?
அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தீர்களா?
வாக்குமூலம் கொடுத்தீர்களா?

முதலாவது சாட்சி : ஆம், பதிவு புத்தகத்தை பிரதி எடுத்துக் கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கையளித்தேன். வாக்குமூலம் கொடுத்தேன் என்றார்.

விசாரணை நிறைவில் அரச தரப்பு சட்டத்தரணி முதலாவது சாட்சியின் அம்மாவிற்கு நாளை (இன்று) சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருப்பதனால் வழக்கை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மேற்படி வழக்கு விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முதலாவது சாட்சியை மன்றில் ஆஜராகுமாறும் பணித்தது.

Read more...

Monday, October 4, 2010

பொன்சேகா சிறையில் விசமூட்டி கொல்லப்படலாம். கரு ஜெயசூரியா

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைச்சாலை சென்று பார்வையிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஜெனரல் பொன்சேகா சிறைச்சாலையில் விசமூட்டிக் கொலை செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள இராணுவத் தளபதியை பார்iவிட்டதன் பின்னர் வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவசரவசரமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலை பயிற்சிப் பெற்றவர்கள் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சில வேளைகளில் உணவில் விஷம் வைத்து சரத் பொன்சேகாவை கொலை செய்ய சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Read more...

மகிந்தவிற்கு உலகத்தமிழர் நன்றி.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவை அடைத்தமைக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி ஜனாதிபதி மகிந்தவிற்கு உரித்தாகட்டும் என இத்தாலி நகர்கள் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.




Read more...

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சிகளை கைவிடக்கோருகின்றது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு இலங்கை அகதிகள் எத்தனிப்பதாகவும், இவ்வாறான முனைப்புக்களை கைவிடுமாறும் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகாம்களிலிருந்து தப்பித்து சட்டவிரோதமான முறையில் மேற்குலக நாடுகளுக்குச் செல்ல தமிழ் அகதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகதிகள் தொடர்பான தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரி கலைவண்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அகதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றாலும் இந்திய அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விசேட கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

பிரபாகரனின் நப்பாசை தமிழ் மக்களின் அழிவுக்கு வித்திட்டது! தயா மாஸ்ரர்.

புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரும் முக்கிய புள்ளியுமாகிய தயா மாஸ்ரர் பிரபாகரனின் தமிழீழம் எனும் நப்பாசை தமிழ் மக்களின் அழிவுக்கு வித்திட்டதாகவும் : அவ்வியக்கத்தினர் தமிழ் மக்களை அடக்கி ஆண்டதாகவும் தெரிவிக்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்கள் புலிகள் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஏதுவான தந்திரோபாய பொய்பிரச்சராங்களுக்கு பொறுப்பாகவிருந்து : பிரபாகரனை முருகனுக்கு நிகரானோன் என வர்ணித்த புலிகளின் தலைவர்களில் ஒருவர் தற்போது பிரபாகரன் தொடர்பாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்துக்களின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வன்முறையையோ, யுத்தத்தையோ ஒருபோதும் விரும்பி இருக்கவில்லை. புலிகள் இயக்கம்தான் யுத்தத்தை தமிழர்கள் மீது நிர்ப்பந்தித்தது. இளைஞர்களை மூளைச் சலவை செய்து சிங்களவர்களுக்கு எதிராக திருப்பி விட்டது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழீழக் கனவு நிறைவேறும் என்றே இறுதி வரை நம்பினார். அவரின் கனவுக்காக இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர்.

பல்லாயிரக் கண்க்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அவரது தமிழீழக் கனவுக்காக மக்கள் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விட்டார். தமிழீழத்தை அடைகின்றமைக்காக புலிகள் வடக்கையும், கிழக்கையும் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஆனால் இத்தமிழீழக் கனவு ஒரு போதும் நிறைவேற முடியாதது என்பது வேறு விடயம். புலிகள் ஒருபோதும் மனித உரிமைகளை மதித்து நடந்தமையே கிடையாது. அவர்கள் எப்படி எல்லாம் மக்களைக் கொடுமைப்படுத்தினர் என்பதை நான் நன்றாகவே நேரில் அறிவேன்.

அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் போட்டுத் தள்ளினார்கள்.புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலின் கீழ்தான் தமிழர்கள் வாழ்ந்தார்கள். புலிகள் இயக்கம் மக்களை துன்புறுத்தியது. சித்திரவதை செய்தது. மனிதாபிமானம் அற்ற விதத்தில் கொடுமைப்படுத்தியது. இதனால் நான் அந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தை உள்ளூர வெறுத்தேன்.ஆனால் நான் மௌனியாகவே இருந்து விட்டேன். புலிகள் இயக்கத்துக்கு எதிராக என்னால் எதையுமே செய்ய முடியவில்லை.

நான் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வாய் திறந்திருந்தால் கூட எனது கதி அதோ கதிதான்.புலிகள் இயக்கத்தில் இருந்தபோது நான் இராணுவச் செயற்பாடுகளில் ஒரு போதும் ஈடுபட்டு இருக்கவே இல்லை. மக்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சந்தர்ப்பங்களும் உண்டு. கடுமையான வரிகளை புலிகள் விதித்தபோதெல்லாம் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் புலிகள் கொன்றொழித்து விட்டார்கள்.எனவே இம்மக்கள் கிளர்ச்சிகள் மௌனித்து விட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புலிப் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பார் என்று கங்கணம் கட்டினார்.

எனவே புலிகள் இயக்கத்தின் முடிவு எப்போது அமையப் போகின்றது என்பதை என்னால் அப்போதே ஊகிக்க முடிந்தது.புலிகளிடம் இருந்து அவர்களை அரசு மீட்கும் என்கிற நம்பிக்கையில் மக்கள் இருந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் இராணுவத்தின் வருகைக்காகக் காத்து இருந்தனர். அரச கட்டுப்பட்டுப் பகுதிக்குத் தப்பி ஓடவும் தயாராக இருந்தார்கள். ஆனால் உயிரைக் காக்க ஓடிய மக்கள் புலிகளால் சுடப்பட்டனர். யுத்ததின் இறுதி நாட்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

மோதல் தவிர்ப்புப் பிரதேசமான புதுமாத்தளனின் கனரக ஆயுதங்களை நிறுவி அங்கிருந்து அவர்கள் இராணுவத்தைத் தாக்கினர்.புதுமாத்தளன் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசம். இராணுவம் திருப்பித் தாக்க வேண்டும் என்பதுதான் புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இராணுவம் திருப்பித் தாக்கவே இல்லை.மாறாக புலிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றியது. இராணுவத்தின் மனிதாபிமான யுத்த நடவடிக்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்.

இராணுவத்தின் மனிதாபிமான யுத்த நடவடிக்கை காரணமாகவே நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பொதுமக்கள் வரை புலிகள் இயக்கத்திடம் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டார்கள். விடுதலை பெற்றார்கள். நான் ஒரு இருதய நோயாளி. இதனால் புலிகள் இயக்கம் என்னை ஓரம் கட்டியும் இருந்தது. சரண் அடைந்த என்னை அரச படையினர் மனிதாபிமானத்தோடு நடத்தினர். நன்றாக பராமரித்தனர். நான் தற்போது எனது குடும்பத்துடன் யாழ்.வடமராட்சியில் பருத்தித்துறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றேன்.

கடந்த கால அரசுகள் இராணுவ மூலோபாயத்தில் தவறுகளை இழைத்திருந்தன. அதனால்தான் புலிகளை வெற்றி கொள்ள அவற்றால் முடியவில்லை. ஆனால் தற்போதைய அரசு மிகவும் தந்திரோபாயமாகச் செயற்பட்டது. படையினரால் தொடர்ச்சியாக மேற்கொளளப்பட்ட தாக்குதல்களே புலிகளுக்கு இறுதி முடிவை ஏற்படுத்தியது. கடந்த 30 வருட காப யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையுமே கிடைக்கவில்லை. தமிழர்கள் இப்போதுதான் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாகவும், நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்றனர். சமாதானம் மலர்ந்துள்ளது.

பல தசாப்த காலங்களுக்குப் பின் வட பகுதியில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதைக் காண முடிகின்றது. அரசு தமிழ் மக்களின் நலனுக்காக மிகவும் சிறந்த முறையில் சேவை ஆற்றுகின்றது. மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குச் செல்ல தமிழர்கள் எவரும் விரும்பவே இல்லை. புலம்பெயர் தமிழர்கள் நாம் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்கவில்லை.அவர்கள் புலிகள் இயக்கத்துக்காக விரும்பியோ விரும்பாமலோ நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். நாங்கள் இங்கு அவஸ்தைப்பட்டோம்.

எனவே இன்றைய சூழலில் புலம்பெயர் சமூகத்துக்கு நிறையவே பொறுப்புக்கள் இருக்கின்றன. வட பகுதி மக்கள் சொந்தக் காலில் நிற்கின்றமைக்கு உதவ வேண்டிய உன்னதமான பொறுப்பு அவர்களுக்குண்டு.எமது தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் அவர்கள் பெற்றுத் தர வேண்டும்.

புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கின்றமையும், புலிக் கொள்கைகளை பரப்புகின்றமையும் பிரயோசனமற்ற காரியங்கள் என்பதை புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் விரைவில் புரிந்து கொள்ளும். புலிகள் சார்பு சக்திகளுக்கு இனி சர்வதேச அரங்கில் இடம் கிடையாது.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் புலிச் சார்புச் சிந்தனையில் இருந்து விடுபட்டுத் தமிழ் மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.

Read more...

பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேற இணங்கின் மன்னிப்பு வழங்கப்படும்.

குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதியினால் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேற சம்மதிப்பாரேயாயின் அவரை விடுவிக்க ஜனாதிபதி தயாரென தெரிவித்துள்ளதாக சிங்கள செய்தியொன்று தெரிவிக்கின்றது. அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு ஜெனரல் பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேற சம்மதிப்பின் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுமென அமெரிக்காவிலுள்ள ஜெனரல் பொன்சேகாவின் உறவினர் ஒருவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவல் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரால் ஜெனரல் பொன்சேகாவின் உறவினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அச்செய்தி மேலும் கூறுகின்றது.

ஜெனரல் பொன்சேகா மன்னிப்பு கோரின் அவரை விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளதுடன் : குற்றம் செய்யாமல் எதற்கு மன்னிப்புகோர வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, September 30, 2010

புலிகளை வீழ்த்திய பிறகு தாக்குதல் நடக்கவில்லை.

புலிப்பயங்கரவாதத்தை வீழ்த்திய பின்னர் இதுவரை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவில்லை. பயங்கரவாத சம்பவத்தால் யாரும் பலியாகவில்லை என்று வன்னிப் பிராந்திய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழு‌ம்‌பி‌ல் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌‌ம் இதனை தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், புலிகள் ஆதிக்கத்தால் வன்னிப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அச்சம் பீடித்திருந்தது. புலிகள் இருந்த போது வன்னிப் பகுதி மக்கள் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதியில் வசித்த மக்களும் பயத்துடனையே வாழ்ந்தனர்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது அமைதியான சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலால் வன்னிப் பகுதி மக்களின் மனம் அமைதி அடைந்துள்ளதுடன், நம்பிக்கையையும் பெற்றுள்ளனர்.

இலங்கையில் இதுபோன்ற சூழல் பெரிய அளவிலான தியாகத்துக்கு பிறகே நிலவுகிறது. இதைக் கட்டிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை, பொறுப்பு என்று கமல் குணரத்னே கூ‌றினா‌ர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com