Thursday, September 30, 2010

முன்னாள் இராணுவத் தளபதிக்கு 30 மாதகால கடூளிய சிறைத்தண்டனை. ஜனாதிபதி உத்தரவு.

நாட்டுமக்களுக்கு உண்மை முகத்தைகாட்டிய ராஜபக்சவிற்கு நன்றி என்கின்றார் அனோமா.
முன்னாள் இராணுவத் தளபதி இராணுவ கேள்விப்பத்திரக் குழுமத்தில் இருந்தபோது தவறு செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இரண்டாவது இராணுவக் குற்றவியல் நீதிமன்று அவருக்கு 3 வருட சிறைத்தண்டனையை பரிந்துரை செய்திருந்தது. ஐ.நா வின்அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி பரிந்துரையின் பிரகாரம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 30 வருட கடூளிய சிறைத்தண்டனையை நிறைவேற்றுமாறு ஆணையிட்டுள்ளார்:

இத்தண்டனை தொடர்பாக கறுப்பு சேலை அணிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, இலங்கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், இத்தீர்ப்பிற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு போலிமுகத்தினை ஜனாதிபதி காட்டிக்கொண்டிருந்ததாகவும், இத்தீர்ப்பினூடாக மக்களுக்கு தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியமைக்காக நன்றி எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ஆட்கொள்வதாகவும், அரச உயர்மட்ட அதிகாரிகளின் நூல் பொம்மைகளாக இராணுவ அதிகாரிகள் மாறியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இத்தீர்ப்பினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை. உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டு தீர்ப்பு தொடர்பாக கடும் கண்டனத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் மாநாடொன்றில் இவ்விடயம் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதற்கு எதிரான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி
மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரி போகக்கூடும் என சந்தேகங்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடலாம், என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இராணுவச் சட்டத்தில் எந்த இடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லையென ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுக் குறிப்பிட்டார். அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அகற்ற சிவில் நீதிமன்றினால் மாத்திரமே முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காவிடின் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இருந்த போதிலும் பாராளுமன்ற செயலாளர் தங்களுடைய கடிதத்தை ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து தங்களுக்கும் தெரியாதென அவர் கூறியுள்ளார்.

எனினும் இராணுவ சட்டத்தின் 79ஆவது சரத்தின்படி தீர்ப்பை பரிசீலிக்குமாறுக் கோர முடியுமெனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அதன் முடிவினை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் எதிர்பார்ப்பதாகவும் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

Read more...

ஒக்டோபர் 1 சர்வதேச முதியோர் தினம் - புன்னியாமீன்

ஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் ஒக்டோபர் 1 ஆம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.

இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும்.

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம். பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.

முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.

மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி (The Genetic Theory of Aging)
மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.

ஐ.நா.வின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150 இல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம், அவர்களின் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில் இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.

முதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை. அண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம் ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.

நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும், தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது

இயந்திரமான வாழ்க்கை, மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும், ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.

வளரும் வரைதான் பெற்றோர்… சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள்.

இலங்கையைப்பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011 ஆம் ஆண்டளவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாகவும், 2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.

இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.

பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகின்றது? அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.

இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.

புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே நேரத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட, இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.

Read more...

Tuesday, September 28, 2010

முஸ்லிம் தீவிரவாத குழுக்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த 24ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் மௌலவிக்களை அழைத்துப்பேசிய உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் ஆயுதங்கள் யாவும் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பாரமளிக்கப்படவேண்டும் என தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும். இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மலேசியாவில் 3 இலங்கையருக்கு கடூழிய சிறை.

சிறுவன் ஒருவரைக் கடந்த வருடம் கடத்தினர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் அந்நாட்டவர் ஒருவருக்கும், இலங்கையர் மூவருக்கும் இன்று தலா மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த இச்சிறுவனை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை 8.50 மணியளவில் கோலாலம்பூரின் செட்டபக் பிரதேசத்தில் ஜலன் லங்வி பகுதியில் உள்ள டெராடி மெவாக் வீட்டுத்தொகுதிக்கு அருகில் வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது வழக்கு இடம்பெற்றது. இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அந்நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று குறைந்த பட்சத் தண்டனை வழங்கி உள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி தடுக் மெஹமட் ஷபிதீன் மொஹத் டயா இத்தீர்ப்பை வழங்கினார்.

இலங்கையரான எஸ்.செல்வகுமார்(வயது 32), பி.ஜயநாதன்(வயது 26), ஜே.அந்தோனி(வயது 22) மற்றும் மலேசியரான ரி.ராமு (வயது 22), ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர்.

Read more...

"உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு" : மனித அபிவிருத்தித் தாபனம் விரிவான ஏற்பாடு.

'உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு' எனும் மகுடத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 2500க்கு மேற்பட்ட மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்களும் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறையும் இப் பாராட்டுவிழாவை மலையகத்தில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் நடாத்த மனித அபிவிருத்தித் தாபனம் விரிவான ஏற்பாடு செய்தவருவதாக தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.


சிறு வயதில் ஊக்கமளிப்பதன் மூலம் பெருந்தோட்டத்தின் கல்வி அபிவிருத்தியில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான பாராட்டு விழாக்களை தாபனம் நடாத்தி வருகின்றது.

மனித அபிவிருத்தி தாபனம் இலங்கையின் பல பாகங்களில் சமூக அபிவிருத்திக்காக பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றது. கல்விஇ பொருளாதாரமஇ; சம உரிமைஇ சமாதானம் பால்நிலை சமத்துவம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை இலக்குப் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துகின்றது.

கல்வியின் சார் பல வேலைத்திட்டங்கள் பெருந்தோட்ட துறைகளில் கடந்த இரு தசாப்த காலங்களாக அமுல்படுத்தி வருகின்றது. மலையகக் கல்வியின் அபிவிருத்திக்காக குரல்கொடுத்து வருகின்ற நிறுவனம் 5ம் தர புலமைப்பரிசில் பரீ;ட்சை எழுதும் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்ச்சிகளை கடந்த மூன்று வருட காலமாக பெருந்தோட்ட துறையை மையமாகக் கொண்டு நடாத்தி வந்துள்ளது.

இத் தாபனம் பெருந்தோட்ட துறையை மையமாக வைத்து தாபிக்கப்பட்டிருந்தாலும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின் கரையோர பிரதேசங்களில் தனது மனிதாபிமான பணிகளை ஆரம்பித்தது.

இதில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து நடாத்தி வருகின்றது. அம்பாரை மாவட்டத்தில் ஆரம்ப நிவாரணம் தொடக்கம் நிரந்தர வீடுகள் வரை படிப்படியாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தது.

உடனடி நிவாரணம் மருத்துவ முகாம் தற்காலிக கொட்டில்கள் உளநல பாதுகாப்பு பாலர்களின் கல்வி பாடசாலைகளின் அபிவிருத்தி பெண்களின் வாழ்வாதாரம் நிரந்தர வீடுகள் என தனது சேவைகளை அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய நிறுவனமாகும். தற்போது கல்வியின் பால் அதிக அக்கறை காட்டி 5ம்தர கா.பொ.த சாதாரண தர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மேலதிக மாலைநேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. அந்த துறையில் அதற்கான பெறுபேறுகளும் அதிகரித்து கிடைத்தமைக்கு சான்றிதழ்கள் உள்ளன.

கல்வியின் பால் அக்கறை செலுத்தி வருகின்ற இந் நிறுவனத்தின் மலையகத்தில் 'உங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டு' விழாவை அம்பாரை மாவட்டத்திலும் நடாத்தப்பட வேண்டும் என மக்களும் கல்வி சார்ந்த அதிகாரிகளும் சமூக நல உறுப்பினர்களும் வேண்டியுள்ளனர்.

இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் இவ் விழா முதற்தடவையாக அம்பாரை மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களில் தோற்றிய மாணவர்களுக்கு நடாத்த திட்டமிட்டுள்ளது. 100புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்க முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்ற விளம்பரத்தினை வாசித்து உடனடியாக இதற்கு விண்ணப்பிக்கும் படி மாணவர்களை கேட்டுக்கொள்கின்றனர். விண்ணப்பதாரிகள் பாடசாலை ரீதியாக விண்ணப்பிப்பதே உகந்தது என தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று அம்பாரை மாவட்டத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் தமிழ் மொழி மூலம் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினையும் தாபனம் வெளியிடவுள்ளது.

Read more...

Monday, September 27, 2010

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு அமெரிக்க விரிவுரையாளர் விசேட கருத்தரங்கு.

(மன்னார் நிருபர் -லெம்பேட்)ஊடகவியலாளர்கள் வினைத்திறன் கொண்டவர்களாகவும் பதட்டமடையாது எந்த சூழலிலும் சாதுரியமாக தமது தொழில்ரீதியிலான கடமையினை செய்யக்கூடிய ஆளுமை வளர்த்துக்கொள்ளவேண்டும் என ஊடகவிலாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த விரிவுரையாளர் நியூமன்ஹேலானா தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட யுத்த கால சூழலில் கடமையாற்றிய 30 ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் பயிற்சி நெறி சனி. ஞாயிறு தினங்களில் அனுராதபுரம் உல்லாசபயண விடுதியில் நடைபெற்றது. இதழியல் கல்லுர்ரி, இலங்கை பத்திரிகை தாபனம்,செய்தியாளர்களுக்கான சர்வதேச பாதுகாப்பு நிலையமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ஊடகவியலாளர்களும் மனவடுக்களும் என்ற தொனியில் பயிற்சி நடைபெற்றது.
மனவடு அல்லது மனதாக்கம் பல வழிகளிலும் எதிர்நோக்கலாம் யுத்தம், பாரிய இயற்கை அனர்த்தம் விபத்துக்கள் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களை ஊடகவியலாளர்கள் அணுகும்போது அவர்கள் எவ்வாறான நடைமுறைகளை கைக்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவுரையாளர் தெளிவாக குறிப்பிட்டார்.

மனகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு மேலும் மனக்காயங்கள் ஏற்பாடாத வகையில் நேர்காணல்கள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இழப்புக்கள் தாங்கமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தும் அதனை குணப்படுத்தலாம் ஆலயங்களுக்கு செல்வது சிறந்த வழி என இந்த நிகழ்வில் உரையாற்றிய மனநல வைத்தியர் டாக்டர் எஸ் சிவதாசன் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் மனவடுக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து சதவீதத்தினரே உள்ளனர் என குறிப்பிட்ட இவர் குடும்பத்தில் சந்தோஷம் அவசியம் எனவும் சொன்னார். சிந்தனை தொடர்பாடல் ஊடகத்துறையினருக்கு முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.

பயிற்சி நெறியில் கலந்து கொண்ட யழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.











Read more...

Friday, September 24, 2010

முன்னாள் புலிகளிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக விசாரணை.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் புலிகள் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்களிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகின்றது.

புலிகளியக்கத்திலிருந்து பிரிந்து வந்த கருணா அவ்வியக்கத்தின் மட்டு அம்பாறை கட்டமைப்பைக் கலைத்து உறுப்பினர்களை தமது வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறு புலிகளியக்கத்தை விட்டு வெளியேறிய பலர் வெளிநாடுகளிக்கு தப்பிச் சென்றிருந்தனர். தற்போது நாட்டில் சமாதானம் தோன்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் , நாடு திரும்பும் முன்னாள் புலிகள் விசாரணைகளுக்கு உட்படுத்ப்படுவதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த கிரான் பிரதேசத்தை சேர்ந்த பகிரதன் எனும் இயக்கப்பெயரையுடைய இளைஞன் ஒருவன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விசாரணைகளின்போது கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பகிரதன் புலிகளியக்கத்திலிருந்தபோது கருணாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரியவருகின்றது.


கருணா அரசுடன் இணைந்திருந்தாலும் அவரிடம் ரகசிய ஆயுதக்கிடங்குகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது பல கோணங்களில் நோக்கப்படுகின்றது.

Read more...

அரசாங்கத்தை கவிழ்க்க முற்பட்ட இராணுவ உயரதிகாரிகள் விடுதலை.

முன்னாள் இராணுவத் தளபதியுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கவிழ்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல்கள் , பிரிகேடியர் , ஊடகவியலாளர் ஒருவர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமது கைது சட்டவிரோதமானது என அவர்கள் தனித்தனியே செய்த அடிப்படை மீறல் வழக்குகள் விசாரணைக்கு வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்குதாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் பிரிகேடியர் துமிந்த கப்பெட்டிவலன, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான சுனில் அமரசேன டி சில்வா, உபாலி உதயங்கன மற்றும் ஊடகவியலாளர் றுவான் வீரகோன் ஆவர்.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிரான முதலாவது இராணுவக் குற்றவியல் நீதிமன்று அவரை குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. அவ்வழக்கில் மேற்படி ஊடகவியலாளரின் தொலைபேசியில் சேவையிலிருந்தவண்ணம் அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணினார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இதே இவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் , ஜெனரல் பொன்சேகா தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பேராதனை பல்கலைகழக மாணவர் ஆர்ப்பாட்டம்.

பேராதனை பல்கலைகழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் இன்று பகல் 12 மணி தொடக்கம் 1 மணிவரை பேராதனை பூங்கா முன்னுள்ள கலகா சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க பேராதனை பல்கலைகழக சட்டதுறைக்கான கட்டிடத்தினை திறந்து வைக்க வருகை தந்த பொழுது மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சவப்பெட்டியை தூக்கி சென்றது தொடர்பான வழக்கில் மாணவர்கள் 4 பேருக்கு கண்டி நீதிமன்றத்தில் 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டமைக்கு எதிராகவே இன்று இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். பேராதனை பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மற்றும் கலைபீட மாணவர் சங்க தலைவரும் இவ்வழக்கில் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி கொழும்பு பிரதான வீதியை தடை செய்து ஆர்ப்பாட்டம் செய்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டு பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் பங்குபற்றினர்.

Read more...

புலிச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்.

கடந்த காலங்களில் கொழும்பு நகரில் குற்றச்செயல்களில் ஈடுபட வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் 17 பேர் எதிர்வரும் மாதம் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பல இடங்களில் வைத்து இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களில் பலர் மன்னார் தொடக்கம் சிலாபம் வரையான கடற்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Read more...

அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு 41 வயதுப் பெண்ணுக்கு மரண தண்டனை.

அமெரிக்காவில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும்.

கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

கணவர் மற்றும் வளர்ப்பு மகனைக் கொன்றதாக கைதாகி தற்போது மரண தண்டனைக்குள்ளான தெரசாவுக்கு உடந்தையாக இருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் கடந்த 2006ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுநருக்குப் பறந்தன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சரத்பொன்சேகாவே லசந்தவை கொன்றார் என்கின்றார் மேர்வின்.

அத்தியடிப் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு இருப்பதாக பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இப்படுகொகைக்கு பின்னால் முன்னாள் இராணுவத் தளபதி உள்ளார் என்பதற்கு தன்னிடம் வலுவான சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கும் மேர்வின் சில்வா லசந்த படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் தெரிவித்த அவர்
பிரபல ஊடகவியலாளர்களான கீத் நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியிலும் சரத் பொன்சேகா செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

படுகொலையாளிகளை பாதுகாக்க வேண்டாம் என மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

Read more...

தமிழர்களின் வழமான வாழ்விற்கு இலங்கையே சிறந்த நாடு. பிரிவினைக்கு துணை போகாதீர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றுகையில் தமிழர்களின் வளமான வாழ்வுக்கு இலங்கையை தவிர வேறு நாடு சிறந்ததாக அமையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரித்துள்ளார். அத்துடன் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அது பொறுப்புத் தன்மையுடனான கொள்கைக்கு முற்றிலும் உட்பட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய போது கூறினார். ஐ. நா. பொதுசபை கூட்டத் தோடரில் உரையாற்றிய ஜனாதிபதி,

எனது இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது. 2005 ஆம் ஆண்டு நான் முதலில் தெரிவு செய்யப்பட்ட போது எனது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதாக வாக்குறுதி வழங்கினேன். அதை நிறைவேற்றியுள்ளேன். சில காலத்துக்கு முன் அங்கு கனவாக மட்டுமே இருந்த சமாதானம் இப்போது அங்கு நனவாகியுள்ளது.

எனது இரண்டாவது பதவிக் காலத்தில் சமாதானம் மற்றும் சபீட்சத்தை ஸ்திரப்படுத்துவதுடன் பயங்கரவாதம் மீண்டும் ஒருமுறை தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை எனது மக்களுக்கு வழங்குகிறேன். விரைவிலேயே மறந்துபோன உண்மை என்னவென்றால் மிகவும் கொடூரமான, நன்கு திட்டமிட்டு செயற்பட்ட சிறந்த நிதி உதவியை பெற்று, நன்றாக இயங்கிய ஒரு பயங்கரவாத இயக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதாகும். இது ஏனைய நாடுகளிலும் தனது வலையை விரிக்கக் கூடியதாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

மேற்கு நாடுகள் அண்மைக் காலத்தில் அனுபவித்துவரும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை இலங்கை மக்கள் சுமார் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதில் உயிரிழந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இலங்கை ஜனாதிபதி ஒருவரும் முன்னோக்க தரிசனத்துடன் கூடிய ஒரு இந்தியத் தலைவரும் நூற்றுக்கணக்காக புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

வழி தவறிப்போன சிலருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள். அதற்கு மாறாக எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திய வண்ணம் புதிய பரிமாணங்களை நாம் எட்ட முடியும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்றால் அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும். அதற்கு மாறான எமது உள்நாட்டு நடைமுறையானது எமது மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத் தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

சமாதானத்தின் பெறுபேறாக எமது பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது. கடந்த காலாண்டு காலத்தில் எமது வளர்ச்சி நிலையாகவும் ஸ்திரமாகவும் உள்ளதுடன், 8 சத வீதத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி வீதத்தை காட்டி நிற்கிறது. பண வீக்கம் குறைந்த நிலையிலும் வட்டி வீதங்களும் குறைந்து காணப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் எமது தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனை மேலும் முன்னேற்றச்செய்து 2016 ஆம் ஆண்டளவில் அதனை தற்போது இருப்பதிலும் இரட்டிப்பாக்குவது எமது குறிக்கோளாகும்.

மஹிந்த சிந்தனை, எதிர்கால நோக்கு என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியான உட்கட்டமைப்பை கொண்டிருக்கும் எனது எதிர்கால தரிசனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தேசிய, மாகாண மற்றும் கிராம மட்டங்களில் இடம்பெறும் இந்த தரிசனம் எமது முழுமையான சமூகத்தின் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்கும்.

அதேவேளை எனது நாட்டின் பொருளாதார தந்திரோபாயம் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றக்கூடிய நிலையில் இருப்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகளின் காலக்கெடுவுக்கு முன்னரே அதனை இலங்கை நிறைவேற்றும் என்று நம்பலாம்.

Read more...

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கு உரிய ஏற்பாடு அவசியம். பிரதமர் ஜயரட்ன

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :-

பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நாட்டின் பாதுகாப்பு நிலமை உயர் நிலைமையில் இருப்பதை சர்வதேச மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது. எமக்கு கிடைக்கப் பெற்று வருகின்ற பாராட்டுக்களை நாம் தொடர்ந்தும் பேணிக் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இத்திட்டங்களை இன, மத, பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் பயனாக அண்மைக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை அடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உலகில் மக்கள் திருப்தியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடத்தில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களது செயற்பாடுகளை நோக்கும் போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடி பொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தனால் பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் உறுதியான பாதுகாப்பு வேலை திட்டத்தை கடைப்பிடிப்பதற்கு கடற்படையைப் புனரமைப்பது மிகவும் அவசியமான காரணமாகும். யுத்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பிரதான பாதுகாப்பு துறையே கடற்படையாகும்.

ஏனெனில் இது கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அதனால் நாட்டைப் பாதுகாக்கும் வேலியே கடற்படையேயாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், வெடிபொருட்களும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்து சேருவதை கடற்படையினரால் தான் கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதையும், வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதையும் தவிர்ப்பதற்கும், கடல் வலயங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பதற்கும் உல்லாச பயணத் துறைக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும். கரையோரங்களைப் பாதுகாப்பதற்கும் கடற் படையை வலுப்படுத்துவது அவசியம்.

அதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் முழு நாட்டினதும் கரையோரங்களைப் பாதுகாப்பதற்காக கடற்படையினரின் முகாம்கள் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது எதிர்கால பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பாராட்டத்தக்க வேலைத் திட்டமாகும்.

இதேவேளை சரணடைந்துள்ள மற்றும் இனம் காணப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை புலன் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்பட்டு சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் ஏற்கனவே மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இராத போதிலும் அவை இப்போது மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளில் தெரியவருகின்றது. அதனால் தொடர்ந்தும் விழிப்பாக இருப்பது அவசியம்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வந்த பயங்கரவாத சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதனோடு சேர்த்து அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. இதனூடாக அப்பகுதி மக்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

Read more...

Thursday, September 23, 2010

வளர்ந்த நாடுகளின் உதவியை வளரும் நாடுகள் எதிர்பார்க்கக்கூடாது: ஒபாமா

வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் உதவியையே முற்றிலும் நம்பியிருக்காமல், தங்களுக்குள்ளேயே உதவிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். ஐ.நா. சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனைக் கூறிய அவர், மேலும் பேசியதாவது:

வளரும் நாடுகள் வளர்ச்சி பெறவும், வெற்றியடையவும் நாங்கள் விரும்புகிறோம். அதில் உங்களது நலனும் உள்ளது; எங்களது நலனும் உள்ளது. உங்களது (வளரும் நாடுகளின்) கனவை நனவாக்க நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால் உங்களுக்கு தலைமையேற்க உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

நீங்களும், உங்களது மக்களால் மட்டுமே அந்த கடினமான முடிவை தீர்மானிக்க முடியும்.உங்களது மக்களின் நலன்கள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நீடித்த முதலீடுகளை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒபாமா மேலும் கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com