Thursday, September 23, 2010

பொன்சேகாவின் விடுதலைவேண்டி உலகம் பூராகவும் கண்டனப்பேரணிகள்.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைவேண்டி உலகம்புராகவும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். இவ்வார்ப்பாட்டங்களில் பொன்சேகாவின் மகள் அப்சராவும் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இப்போராட்டங்களில் ஜனநாயக தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிரான் அலெக்ஸ் , அர்ஜூனா ரணதுங்க ஆகியோர் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளும்பொருட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன் நாளை பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மிலான் நகர் நோக்கி புறப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் 26ம் திகதி மிலான் நகரிலும் , 2 ஒக்டோபர் பாரீஸ் நகரிலும் , 3 ஒக்டோபர் ரோம் நகரிலும் கண்டனப்பேரணிகள் இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று புதன் கிழமை திருமதி . பொன்சேகா அவர்கள் ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பா.உ விஜித கேரத் சகிதம் மல்வத்து பீடத்து மகாநாயக்கர்களைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியதையடுத்து மல்வத்து பிடத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திபெட்டுவாவே சிறி சுமங்கல தேரர் அனைத்து பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிபதிகளுடன் பேசி முன்னாள் இராணுவத் தளபதிக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியை கோரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பொன்சேகா விடயத்தினை சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு (International Parliamentarians Union) எடுத்துச்செல்ல ஜனநாயக தேசிய முன்னணியினர் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பா.உ விஜித கேரத் , பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சங்கத்திற்கு (Commonwealth Parliamentary Association) பா.உ அனுரகுமார திஸாநாயக்க தெரியப்படுத்துவார் எனவும் கூறியுள்ளார்.

Read more...

எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. இராணுவப் பேச்சாளர்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இனநல்லிணக்கு குழு முன் சாட்சியமளித்த எழிலனின் மனைவி, தனது கணவன் உள்ளிட்ட புலிகளின் ஏழு தலைவர்களை இராணுவத்தினர் இரகசிய இடமொன்றில் தடுத்துவைத்திருப்பதாக வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல, எழிலனின் மனைவியின் கூற்றினை நிராகரித்துள்ளதுடன் இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் சகல தலைவர்களும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தினர் எவ்விதமான இரகசிய சிறைகளையும் வைத்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சி அரசினை பெயரளவிலேயே எதிர்கின்றது.

இலங்கையின் ஜனநாயகம் மீறப்படும் நிலையில் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் போதுமானதாக காணப்படவில்லை என ஜேவிபி குற்றஞ்சுமத்துகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றினுள் மாத்திரம் உத்தியோகபூர்வமான எதிர்கட்சியாக காணப்படுகின்றது. ஆனால் அது மக்கள் மத்தியில் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது எனவும் ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதிர்கட்சிகளை சிதைப்பதற்கு தனது முழுப்பலத்தையும் பிரயோகிப்பதாக தெரிவிக்கும் ரில்வின் சில்வா அவர்கள், எதிர்கட்சியிலுள்ள பலவீனமானவர்களை பணம் , பதவிகளை கொடுத்து கொள்வனவு செய்யும் அரசாங்கம் ஏனையோர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை நீதிமன்றுக்கு தள்ளும் , சிறைகளில் அடக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஜெனரல் பொன்சேகாவை மாத்திரம் சிறையில் அடைக்க முற்படவில்லை எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவ்வாறு செய்ய முயற்சித்துள்ளது எனக் கூறும் அவர் , எதிர்கட்சிகளின் ஐக்கியம் பலம் என்பவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன் எதிர்கட்சிகள் யாவும் ஒன்றுபடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

பாடசாலையினுள் நுழைந்த துப்பாக்கிதாரி ஆசிரியை சுட்டுகொன்று தானும் தற்கொலை.

அம்பாறை மாவட்டம் சியம்பலாஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரி ஒருவர் பாடசாலையின் ஆசிரியையை சுட்டுக்கொன்றுவிட்டு தனக்கு தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவருமே 25 வயதினை அண்மித்திருந்தவர்கள் என தெரிவிக்கும் பொலிஸார் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Wednesday, September 22, 2010

அடைக்கலநாதன் மிகவிரைவில் அரசுடன் இணையலாம்.

தமிழ் தேசியக் கூத்தமைப்பின் அங்கத்தினரான ரொலோ அமைப்பைச் சேர்ந்தோர் அரசுடன் மிகவிரைவில் இணைந்து கொள்வர் என நம்பப்படுகின்றது. வடக்கு பிரதேசங்களில் அரசினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் தமிழ் தேசியக் கூத்தமைப்பும் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவ்வமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ரெலோ அமைப்பைச் சேர்ந்த அடைக்கலநாதன் , விநோதராதலிங்கம் போன்றோர் தற்போது மன்னார் மாவட்டத்திலுள்ள இராணுவ அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக பழகிவருவதாகவும், பிரதேச மக்களை சந்திப்பதற்கு செல்லும்போதுகூட இராணுவ அதிகாரிகளை தம்முடனே அழைத்துச் செல்வதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன். மன்னார் பிரதேச மக்களுடன் அடைக்கலநாதன் உரையாடுவதையும் அருகில் படை அதிகாரிகள் அமர்ந்திருப்பதையும் படத்தில் காண்கின்றீர்கள்.

இக்கலந்துரையாடலில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.







Read more...

சர்வதேச பொலிஸாரிடம் உதவி.

இணையத்தளத்தினுடாக சர்வதேச வங்கிகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் சிலரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய இரகசிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக இரகசிய பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை சந்தேகநபர்கள் மூவர் கடுமையான எச்சரிக்கைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

புலம்பெயர்ந்தோர் இலங்கை அரசை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹெரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதன பேச்சுவார்த்தைகளின்போது நோர்வேயின் விசேட தூதுவராக செயற்பட்ட ஹெரிக் சொல்ஹேம் நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள பாராளுமன்றத்தினூடாக ஜனநாயக வழியில் செல்வது குறித்துக் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வக்குக் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்கு நோர்வே அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அரச தலைவர்களுடன் இன்று அதிகாலை சந்திப்புக்களை நடத்தினார். ஈரான் இஸ்லாமிய இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் அஹமது நிஜாத் மற்றும் நோர்வே பிரதமர் பெனஸ் ஸ்டோல் டென்பர்க் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read more...

பொலிஸார் நீதிவிரோத படுகொலைகளைச் செய்கின்றனர். நீதிமன்றில் சட்டத்தரணி.

எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கீனா என அழைக்கப்படும் அஜித் பிரசன்னவின் (வயது 32) கொலை தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சத்திய வெல்லப்பிலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இருகொலைகளுக்கான சந்தேசத்தின் பேரில் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தன்னிடமுள்ள ஆயுதங்களை காட்டுவதாக அழைத்துச் செல்கையில் பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது ஆஜராகிய சட்டத்தரணி , சந்தேக நபரின் இருகைகளுக்கும் முதுகுக்குப் பின்புறமாக விலங்கிட்டு அவரின் வீட்டுக்கு அழைக்துச் சென்ற பொலிஸார் மரணமானவரின் தாயாரிடம் இதுவே நீ உமது மகனை பார்வையிடும் இறுதி தடவையாக அமையப்போகின்றது, விரும்பினால் அவருக்கு ஏதாவது உணவளிக்கமுடியும் என தெரிவித்ததாகவும் , அத்துடன் அவரின் 3 வயது மகனிடம் இதுவே நீ உனது தந்தையுடன் பேசும் இறுதி தடவையாக அமையப்போகின்றது என தெரிவித்ததாகவும் மன்றில் தெரிவித்துள்ளதுடன் நாட்டில் இவ்வாறான சட்டவிரோத கொலைகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் நினைவு கூரப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முஸ்லிம் ஆயுதக்குழுவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட 17 அப்பாவி தமிழ் மக்கள் நேற்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டனர். மதவாத முஸ்லிம் ஆயுதக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்ட இப்பொது மக்களின் நினைவாக புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் நினைவுதூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் நினைவுதூபி அருகில் ஒன்றுகூடிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்நிகழ்வை முன்னிட்டு பிரதான வீதிகளிலும் உள்வீதிகளிலும் வெள்ளை,கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நினைவுதின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தை நினைவுகூறும் நிகழ்வை எந்தவொரு இனமும் தங்களுக்கு எதிரான நிகழ்வாகவோ, செயலாகவோ கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதியுடன் ரங்காவும் அமெரிக்கா சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ளச் அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியுடன் மின்னல் ரங்காவும் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் புலிப்பாசிசத்தினால் தவறான பாதைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது , புலிகளின் ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கு அழிவினையே தேடித்தரும் என்ற விடயத்தினை உறுதியாக எடுத்துரைத்து ஆழும் அரசாங்கத்துடன் இணக்க அரசியலுக்கு சென்றிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்களை , அரசின் எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போனவர்கள் என சக்தியின் மின்னல் நிகழ்சியூடாக விமர்சித்து வந்த சிறி ரங்கா தற்போது அதே எலும்புத் துண்டுகளுக்காக மிகுந்த சிரமப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Read more...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் மாணவி முதலிடம்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று திருக்கோவில் தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். அதேநேரம் இரண்டாம் மூன்றாம் இடங்களை கண்டி , வவுனியா மாணவர்கள் அடைந்துள்ளனர். 192 புள்ளிகளை பெற்று கண்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மத்திய கல்லூரி மாணவன் சுக்ரி முஹமட் ஷபீர் இரண்டாம் இடத்தையும், 190 புள்ளிகளை பெற்று வவுனியா விபுலானந்த வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் வெளியாகியுள்ள முடிவுகளின்படி196 புள்ளிகளை பெற்ற பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்யான் எதிரிசிங்க நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இதேவேளை சிங்களப் பிரிவில் 194 புள்ளிகளைப் பெற்று 2 ஆம் இடத்தை 3 மாணவர்கள் பிடித்துக் கொண்டுள்ளனர்.

நவின் ஜசங்க பிரேமரத்ன - மினுவாங்கொட ஹொரகஸ்முல்ல ஆரமப்பிரிவு பாடசாலை
ஜே.கலனி பபஸர - மதுகம மீகதென்ன ஆரம்பபிரிவு பாடசாலை
லசித் நவோத்ய - காலி மஹிந்த வித்தியாலயம்

Read more...

18 ஆவது சட்ட திருத்தத்திற்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் குற்றச்சாட்டு.

இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது சட்ட திருத்தம் ஜனநாயக விரோதமானதென ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையில் குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், அயர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் 18 ஆவது சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதேவேளை, 18 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் ஜனநாயக விரோத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை சட்ட அமைச்சர் மொஹான் பீரிஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது, எட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும், சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் பேரவையில் ஆஜராகியிருந்ததாகத் கூறப்படுகிறது.

Read more...

தாய்லாந்தில் சுற்றிவளைப்பு கர்ப்பணித் தாய், 4 குழந்தைகள் உட்பட 13இலங்கை அகதிகள் கைது..!

தாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில் தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த 13இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அகதிகளுள் நான்கு குழந்தைகளும், ஒரு கர்ப்பணித் தாயும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இன்றுகாலை 11.30அளவில் குறித்த பிரதேசத்தினை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2வது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்றும், அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகவும் தெரிவித்ததுடன், குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.

Read more...

Tuesday, September 21, 2010

உலகின் சக்திவாய்ந்த 3 ஆவது நாடாக இந்தியா வரும்: யு.எஸ்.

உலகின் சக்திவாய்ந்த 3 ஆவது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் (என்ஐசி - NIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் ( EUISS) கூட்டாக வெளியிட்டுள்ள "உலக ஆளுகை 2025" என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியா 3 ஆவது இடம் வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த அறிக்கையின்படி, 2025 ல் கூட்டமைப்பு அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Read more...

மலேசியாவில் வீட்டுப்பணிப் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது.

கோலாலம்பூர் மலேசியாவில் வேலை செய்த இந்தோனீசிய பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதன் தொடர்பில் மலேசியப் போலிசார் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பினாங்கிலுள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 26 வயதான இந்தோனீசிய பணிப்பெண் வின் ஃபெய்டா மீது வெந்நீரை ஊற்றியும் சூடான இஸ்திரிப் பெட்டியால் சூடு போட்டும் அவரின் முதலாளிகள் கொடுமைப்படுத்தியதாக மலேசியப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அந்த பணிப்பெண்ணை அந்த முதலாளி கற்பழித்ததாகவும் கூறப் படுகிறது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, சாலையோரத்தில் விட்டுச் சென்றனர் அந்த முதலாளிகள்.

பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இது குறித்து போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டதையடுத்து மலேசிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

அந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பில் 41 வயதான குத்தகையாளர் ஒருவரையும் அவரின் மனைவியையும் கைது செய்திருப்பதாக பினாங்கு போலிசார் கூறினர்.

பணிப்பெண்ணை சித்ர வதை செய்ததான குற்றச்சாட்டை அவர்கள் எதிர்நோக்குவதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மலேசியப் போலிசார் கூறினர்.

அந்த பணிப் பெண் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறப்பட்டது. பணிப்பெண் தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலிசார் கூறினர்.

மலேசியாவுக்கு பல்வேறு நாடு களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்காக செல்கின்றனர். அவர்கள் அங்கு, வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

அவர்களை முதலாளிகள் மோசமான முறையில் நடத்துவ தாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com