Tuesday, September 21, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையை கிழித்தெறிந்தார் ரணில்.

அரசியல் யாப்பின் 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிக்க முடியாது என பகிரங்கமாக அறிவித்ததன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களில் முக்கிய இடத்தை பிடிக்கவிருக்கின்ற மேற்படி பேரவைக்கு எதிர்கட்சிகள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்க இந்நியமனம் தொடர்பாக தெரியப்படுத்திய சில மணிநேரங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என அறிவித்தது.

பாராளுமன்ற மற்றும் நாட்டு அரசியல் நியமனங்கள் உட்பட பல முக்கிய விடயங்களை கையாளவுள்ள இப்பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ள மறுப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மிக முக்கியமான விடயங்களிலிருந்து சறுக்கிச் சென்று வெற்றுக்கோஷமிடவே தகுதியானவர்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. நியாயபூர்வமான விடயங்களை நேருக்கு நேர் நின்று பொறுப்புணர்சியுடன் விவாதிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரில்லை என்பதையும் , தமிழ் மக்களுக்கு வீராவேஷ வார்த்தைகளை பேசி அவலங்களின் மீது நின்று அரசியல்புரியவே விரும்புகின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல் தன்மையை உணர்ந்த ரணில் பாரளுமன்ற பேரவைக்கு த.தே.கூட்டமைப்பின் சுபத்திரனை நியமித்தபோது , அதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தன் ஊடாக இவர்களின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்பார்வைக்கு அரசினை எதிர்கின்றனரே தவிர உளப்பூர்வமாக அவர்கள் அதை செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

Read more...

பொன்சேகா விடயம் தொடர்பாக ஐ.நா வில் முறையிட ரிரான் அலக்ஸ் ஜெனிவா செல்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்காக ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஜெனீவா செல்லவுள்ளார். சரத் பொன்சேக்காவின் உரிமைகளை மீறி அநீதியான வகையில் வழக்குத் தீர்ப்புகளை வழங்கி அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக டிரான் அலஸ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வார் என ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேக்கா சார்பில் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த மாதம் இரண்டாம் தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே டிரான் அலஸ் ஜெனீவா செல்லவிருப்பதாக கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேக்காவுக்கெதிராக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்திற்கெதிரானதென ஐ.தே.க சபாநாயகரிடம் அறிவிக்க தீர்மானம்!
இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்திற்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் எதிரானது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தமது எதிர்ப்பை எழுத்துமூலம் சபாநாயகருக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பானது சட்டத்திற்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது என தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த சில தினங்களில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளார். அதேவேளை இது குறித்த சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திலும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதுடன் இதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது. தனது மருமகனுக்கும் ஹைகோப் நிறுவனத்திற்கும் இருந்த தொடர்புகளை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேக்காவுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் ஹைகோப் நிறுவனத்திடமிருந்து தொலைநோக்கிக் கருவிகள் 10 வோல்ட் திறன்கொண்ட 50 மின்கலங்கள், 5 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 50 மின் உற்பத்தி இயந்திரங்கள், மூன்று ஜி.எஸ்.பி கருவிகள் ஆகியன கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. எனினும், சரத் பொன்சேக்கா மோசடி செய்தார் என குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேக்கா இராணுவ டென்டர் சபையின் தலைவராக இருந்தபோது, ஹைகோப் நிறுவனத்திற்கும், தனது மருமகனுக்கும் இடையிலிருந்த தொடர்புகளை வெளியிடவில்லை எனக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது சிறையில் அடைக்கக் கூடிய வகையில் பாரிய தவறா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Read more...

மேஜர் ஜென்ரல் சாவேந்திர சில்வா ஐ.நா விற்கான பிரதிநிதியாக பதவியேற்றார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளில் தலைமையகத்தில் அவர் உத்தியோபூவர்மாக தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டார்.

புலிகளுக்கு எதிரான போரில் 58 வது இராணுவ படையணிக்கு பொறுப்பாக செயற்பட்ட சவேந்திர போரில் பல முக்கிய பங்காற்றியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸதானிகராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்தார்.

Read more...

புதையல் கொள்ளையடித்த ஏஎஸ்பி உட்பட 7 பொலிஸார் கைது.

பொலன்னறுவை ஸ்ரீபுர சூரியதேவ விகாரையில் புரதான புதையல்களை கொள்ளையிட்ட வாகரைப் பிரதேச பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 8 பொலிஸ் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இக்கொள்ளையில் ஈடுபட்டதனை நேரில் பார்த்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் கொள்ளையர்கள் புதையல் பொருட்களுடன் தப்பிச் செல்லும்போது மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் மேலும் இரு சிவிலியன்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் இன்று பொலன்னறுவை மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்திற்கு 140 மில்லியன் செலவு.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார். ஜனாதிபதி தன்னுடன் தனது பரிவாரங்களில் 130 பேரை அழைத்துச் சென்றுள்ளார். இப்பெரிய பரிவாரங்களுக்காக தங்குமிட உணவு போக்குவரத்துச் செலவுகளுக்காக 140 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பணம் இலங்கை மக்களின் வரிப்பணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் ஐ.நா அமர்வுகளில் பங்குகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா , ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள அதே விடுதியில் தங்கியுள்ளதாகவும், ஒபாமா தனது அதிகாரிகளுடன் 1 மாடியில் தங்கியுள்ளபோது , மகிந்த ராஜபக்ச தனது அதிகாரிகளுடன் 4 மாடியில் தங்கியுள்ளதாக ஜேவிபி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் ஐ.நா வின் அமர்வுகளில் இலங்கை சார்பாக 4 அல்லது 5 பேரே கலந்து கொள்வதாகவும் ஏனையோர் அமெரிக்காவில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கு மிகவும் ஆடம்பர கார் கம்பனி ஒன்றிலிருந்து பலகோடி ரூபாய்களுக்கு கார்கள் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

பிரிட்டிஷ் படையினர் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றனர்,

காபூல் ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாநிலத்தில் உள்ள சாங்கின் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் படையினர் அந்தப் பொறுப்பை அமெரிக்கப் படையினரிடம் ஒப்படைத்துளளனர். இதனால் பிரிட்டிஷ் வீரர்கள் அங்கிருந்து வெளியேறவுள்ளனர்.

பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானிஸ் தானுக்கு அனுப்பப்பட்டது முதல் பெரிய அளவில் இழப்பை சந்தித்திருக்கின்றனர். 2001-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் இதுவரை பிரிட்டிஷ் வீரர்கள் 337 பேர் கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் வீரர்க்ள இதுவரை ஆப்கானிஸ் தானில் ஆற்றியுள்ள அரும் பணிகள் பாராட்டுதலுக்கு உரியவை என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சாங்கின் பகுதி அடிக்கடி தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடிய இடம்.

பிரிட்டிஷ் வீரர்கள் 2006-ம் ஆண்டு முதல் அங்கு பாது காப்புப் பணியில் ஈடு பட்டிருந்தனர். இங்கு மட்டும் பிரிட்டிஷ் வீரர்கள் 106 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் கூறியது.

Read more...

கோதுமை மாவிற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்படும். தே.சு.முன்னணி

அரச வைத்தியசாலைகளிலும், சிறைச்சாலைகளிலும், இராணுவத்தினருக்கும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் பாண்களை வழங்காது அரிசிமாவினால் தயாரிக்கும் உணவுகளை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கையில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டம் நெருங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த தீவிரவாத வரிசையில் கோதுமை மா இறக்குமதி முன்னிலை வகிப்பதாகவும், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற கோதுமை மா தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவுக்கு எதிரான போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணி ஆரம்பிக்கும் எனவும், இதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் சவாலை அரசாங்கம் ஏற்கும் எனவும் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.

Read more...

Monday, September 20, 2010

200 லக்சர் இ தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் பதுங்கல்: அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானின் லக்சர் இ தொய்பா அமைப்பின் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள எச்சரிக்கை தகவலில் லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் பயிற்சி பெற்றதாக கூறப்பட்ட அந்த அமைப்பின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ஏற்கனவே இங்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு ஒன்றும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்திருந்ததை மேற்கோள்காட்டியுள்ளார்.

இவ்வாறான எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

அமெரிக்காவில் 7ல் ஒருவர், வறுமையில் வாடும் அவலம்!

உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

Read more...

சென்னையில் போலி கடனட்டை கும்பல் கைது. இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

சென்னையில் ஐந்தாண்டு காலமாக போலி கடன் அட்டைகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த 13 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. தப்பியோட முயன்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அனைத்துலக அளவில் செயல் பட்டு வந்த இந்தக் கும்பலின் தலைமை அலுவலகம் மலேசியாவில் அக்பர் என்கிற அப்துல் என்பவரின் தலைமையில் செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

கடன் அட்டை தயாரிக்கும் எந்திரங்களை சீனாவில் வாங்கி மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் அப்துல்லா சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். 80 விழுக்காடு போலி கடன் அட்டைகளை புதுக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும் இலங் கையைச் சேர்ந்த உமேஸ் என்ப வருமே தயாரித்து வந்துள்ளனர்.

இந்தக் கும்பல் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் பெரிய அளவில் போலி கடன் அட்டைகள் மூலம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள்.

இந்தக் கும்பலில் இலங் கையைச் சேர்ந்த ஜாட்டி என்கிற உமேஷ், மனோஜ் குமார் ஆகியோர் மட்டுமே அதிக அளவில் போலிக் கடன் அட்டைகளைத் தயாரித்து விநியோகித்து வந்ததாகக் கூறப் படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த உமேஷ் என்பவரும் அவரது கூட்டாளிகள் வினோத்குமார், நிமல்ராஜ், அருண் குமார், எழிலரசன், அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மனோஜ் என்பவர் மட்டும் காவல் துறையிடம் சிக்காமல் இருந்தார். அவரைக் கைது செய்வதற்காக தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறை நேற்று முன்தினம் பள்ளிக்கரணை நாராயண நகர் என்னுமிடத்தில் கைது செய்தது.

அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், கணினிகள், நவீன அச்சு இயந்திரங்கள் போன்ற அனைத்து வசதிகளுடனும் கடன் அட்டை தயாரிக்கும் ஒரு தொழிற் சாலையைப் போல காட்சி தந்ததாகக் கூறுகின்றனர் காவல் துறையினர். அந்த எந்திரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டன. மனோஜ்குமார் புதுக் கோட்டையை சேர்ந்தவர். பி.பி.ஏ. பட்டதாரி. கணினி பட்டயக் கல்விச் சான்றிதழ் பெற்றவர்.

மும்பையில் சில காலம் வாழ்ந்துள்ளார். அப்போதுதான் போலி கடன் அட்டை தயாரிக்கும் கும்பலோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Read more...

உப்புவெலியில் மண்டையோடு மீட்பு

திருகோணமலை - உப்புவெலி - அம்பிலிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உப்புவெலி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த மனித மண்டையோட்டுத் துண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித மண்டையோட்டுத் துண்டுகள் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித மண்டையோட்டுத் துண்டுகள் அநுராதபுரத்திற்கு பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை உப்புவெலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

ஆட்கடத்தலுக்கு உதவிய இளைஞனுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு ஆஸி நீதிமன்றம் 5 வருடத்திற்கு மேற்ப்பட்ட சிறைத் தண்டனை வழங்க உள்ளது.

சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன்(வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை இன்று சிட்னிஸ் டவ்னிங் நிலைய மாவட்ட நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

இவர் நீதிபதி ரொபின் டொப் மென் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆஸி வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.

இவர் இலங்கை அகதிகளின் உறவினர்களிடம் இருந்து ஆஸியில் வைத்து 40000 அமெரிக்க டொலர் வரை இலஞ்சமாகப் பெற்றிருந்தமையை முதல் தடவையாக நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

Read more...

Sunday, September 19, 2010

தமிழ்த் தேசியத்தின் தோல்வி – மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி : சபா நாவலன்

இலங்கைத் தீவின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்பது வெளிப்படையான, அரசியல் சர்ச்சைகளுக்கு உட்படாத கூற்று. தேசிய இனப் பிரச்சனைக்கான சமூக அடித்தளம் என்பதே அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பிற்கான பிரதான காரணமாகவும் அமைக்கிறது.

ஆனல் முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யப்பட்டு அது தனது இயல்பான வளர்ச்சியைக் கண்டிராத இலங்கை போன்ற நாடுகளின் தேசிய இனங்கள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வளர்ச்சியடைந்த தேசிய இனங்களுடன் ஒப்பிட முடியாத வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது.

ஐரோப்பிய தேசிய இனங்கள் உறுதியான தேசிய முதலாத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது. வளர்ச்சி நிலையிலிருந்த போல்கன் நாடுகளின் தேசிய இனங்கள் மத்தியில் கூட தமது தேசியப் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்ட தேசிய முதலாளித்துவ வர்க்கம் உறுதியானதாகக் காணப்பட்டது.

ஐரோப்பியத் தேசிய இனங்களதும் தேசங்களினதும் வளர்ச்சிப் போக்குக் குறித்த ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் எம் முன்னால் பரந்து கிடக்கின்றது. லெனின், ஸ்டாலின், கெல்னர் போன்ற பல அறிஞர்களின் முதலாளித்துவப் பொருளாதார காலத்திற்குரிய குறிப்பான மக்கள் கூட்டமான தேசிய இனங்கள் குறித்த ஆய்வுகள் நீண்ட கற்கைகளை எம் முன்னால் விட்டுச் சென்றுள்ளனர். பெனடிக்ட் அன்டர்சன் போன்ற ஆய்வாளர்கள் தேசிய இனங்களின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிப் போக்குக் குறித்தும் அதற்கான புறநிலை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

ஐரோப்பிய மூலதனம் விரிவடைந்தது ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த காலத்தில் ஐரோப்பிய தேசங்களும் அவற்றின் தேசிய இனங்களும் தமது தேசியப் பண்பை இழந்து போயின. மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டு அவற்றால் தமது நலன்களுக்காகப் பாதுகாக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்களும் குறைநிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்களாகவே காணப்பட்டன.

இவ்வளர்ச்சியற்ற தன்மையின் மிகப்பிரதான சமூகக் கூறாக தரகு முதலாளித்துவ வர்க்கம் காணப்பட்டது. முரண்பட்ட இரண்டு பிரதான வர்க்கங்களாக உற்பத்தியின் அடிநிலையிலிருக்கும் வறிய விவசாய வர்க்கமும் இதனோடு கூட சிறு தொகையான தொழிலாளர்களும் மறு புறத்தில் தரகு முதலாளிய வர்க்கமும் என்ற வகையில் சமூகம் பிளவுண்டிருந்தது.

இதன் பிரதியாக்கம் ஒவ்வொரு தேசங்களிலும் வளர்ச்சி நிலையிலிருந்த தேசிய இனங்களிலும் காணப்பட்டன. இதன் இடையே மத்திய தரவர்க்கத்தின் கீழணிகள், மத்தியதர வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் என்று ஒரு வகையான புதிய கலவையாக சமூகம் மாற்றமடைந்தது. மூன்றாமுலக நாடுகள் பல வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்களின் கூட்டமைப்பாகின.

வளர்ச்சி இடை நிறுத்தப்பட்ட தேசங்களாக நாடுகளுள் புதைந்திருந்த தேசங்கள் உருவாகின. இத்தேசங்கள் இரண்டு வகையான ஒடுக்கு முறைகளை எதிர் நோக்கின. ஒரு புறத்தில் ஏகாதிபத்திய பொருளாதார ஆக்கிரமிப்ப்பும் மறு புறத்தில் பெருந்தேசிய அரசுகளின் ஒடுக்கு முறையும் என்ற இருவழித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்கள் எதிர்கொண்டன.

ஒடுக்கப்படும் தேசங்கள் தனியரசு அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் தேவையானதும் முற்போக்கனதுமாகும். எது எவ்வாறாயினும் தேசியத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படாவிட்டால் அது தேசிய அரசை அமைப்பதற்கான போராட்டமாக அமைய முடியாது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்ற வகையில் தரகு

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகவும், தேசிய அரசுகளின் உள்ளமைந்த தரகு முதலாளியச் சிந்தனைக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும்.

மத்தியதர வர்க்கம் எப்போதும் பலமடைந்த தரகு முதலாளிகளை ஆதரிக்கும் அல்லது அவர்களை நோக்கி நகரும் சிந்தனைப் போக்கினையே கொண்டிருக்கும் என்பது வெளிப்படையான ஒன்று. ஆக மத்தியதர வர்க்கமும் அதன் மேலணிகளையும் தளமாமக முன்வைத்து தேசிய விடுதலைக்கானதும் தேசங்களின் விடுதலைக்கானதுமான போராட்டங்கள் உருவாக முடியாது. அவ்வாறு உருவாகுமானால் அதன் வளர்ச்சி என்பது தேசங்களின் தன்னாட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய முழக்கங்களூடாகத் தலைமை போரட்டமாகவே மாற்றாமடையும்.
இந்த அடிப்படையில் தோல்வியில் முடிவடைந்த போராத்திற்கான முன்னுதாரணத்தை முள்ளிவாய்க்காலில் புலிகள் விட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள், இந்திய அரசு, அவற்றின் லொபிகள் அனைத்துமே வீரம் செறிந்த மக்களின் உணர்வுகளைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கியுள்ளன.

இதே சிந்தனை முறையின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. தவிர, தேசிய விடுதலைக்கான சமூக இயங்கு தளத்தின் முன்னணி சக்திகளாக இலங்கையில் தம்மைக் கட்டமைத்துக் கொள்ள முனைகின்றவர்கள் கூட இந்த யதார்த்ததைப் புரிந்துகொண்டு மாற்று அரசியலை முன்வைக்கத் தயாரற்ற நிலையிலேயே தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.

நமது தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கின்ற பாடத்தின் முதல் அத்தியாயம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படலாம். தன்னுரிமைக்கான போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் மூலோபாயத்தின் முக்கிய பகுதி இந்த வர்க்கமுரணைப் புரிந்துகொள்வதிலிருந்து தான் ஆரம்பிக்கப்பட முடியும்.

Read more...

Saturday, September 18, 2010

கணவர் எங்கே ? - எழிலன் மனைவி

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் இன்று சனிக்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களுக்குச் செல்வதோடு, இறுதி கட்ட யுத்தம் அரங்கேறிய நந்திக்கடல் பகுதிக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு செல்லவிருக்கின்றனர்.

இந்தக் குழுவின் விசாரணைகள் பல பொதுமக்கள் முன்னிலையில் நடக்கின்றன என்றாலும், குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் வந்து செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

Thanks BBC

Read more...

போப்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய 5 பேர் லண்டனில் கைது.

போப்பாண்டவரைக் கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த ஐந்து பேரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். லண்டன் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். போப்பாண்டவர் நான்கு நாள் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரைத் தாக்கி கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர்.

மத்திய லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் வடக்கு, கிழக்கு லண்டனில் உள்ள சில வீடுகளை போலீஸார் ரெய்டுநடத்தியபோது இந்த ஐந்து பேரும் சிக்கினர். அவர்கள் யார், என்ன மாதிரியான திட்டத்துடன் இருந்தனர் என்பது தெரியவில்லை.

இவர்களுக்கு 26 முதல் 50 வயது வரைக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போப்பாண்டவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அவை திருப்திகரமாக இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு லண்டனில் ஒரு பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களை தீவிரவாதிகள் தாக்கினர். நான்கு இங்கிலாந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com