Saturday, September 11, 2010

காரில் சண்டை போடுபவரா நீங்கள்.

நெடுஞ்சாலையில் கார் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. தம்பதியர் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று திரும்பி அமர்ந்த கணவன், அவளைப் பார்த்துப் பேசத் துவங்கினான்.

"திருமணமாகி இருபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்."

மனைவி பதில் ஒன்றும் சொல்லவில்லை! சாலையைப் பார்த்து வண்டியைக் கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.

காரின் வேகத்தை அதிகப் படுத்தினாள். இப்போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.

கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான்," இது சம்பந்தமாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை! ஏனென்றால் உன்னுடைய மிகச் சிறந்த தோழியுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவள் உன்னைவிட புத்திசாலி,
அதோடு நேசம் மிக்கவள். காதலில் ஈடுபடத் தெரிந்தவள்.குறிப்பாகச் சொன்னால் உன்னைவிட எல்லா வகையிலும் அவள் சிறந்தவள்"

இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் இருந்தாள். ஆனால் காரின் ஸ்டீரிங் வீலைக் கெட்டியகப் பிடித்துக் கொண்டு வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினாள் இப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது.

அவளுடைய மனநிலையைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன் தொடர்ந்து பேசினான்.

"வீட்டை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன்"

வண்டி 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.

"நீ ஆசையாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பென்ஸ் காரையும் நான் எடுத்துக் கோள்ளப்போகிறேன்'

வண்டி 110 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது.

அவன் மேலும் சொன்னான்,"வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன். நான் வாங்கிக் கொடுத்த கிரிடிட் கார்டு, சொகுசுப் படகு - இவைகளையும் நீ தந்து விட வேண்டும்"

கார் வேகம் பிடித்து எதிரே தெரிந்த ஒரு காங்க்ரீட் பாலத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

நர்வசாகி விட்ட கணவன் மெதுவாகக் கேட்டான்," உனக்கு வேண்டியது ஏதாவது இருக்கிறதா? கேள்!"

இதுவரை பேசாமல் வண்டி ஓட்டிக் கோண்டிருந்த மனைவி, உறுதியான, கட்டுப்படுத்தப்பட்ட குரலில் சொன்னாள்."இல்லை, எனக்குத் தேவையானது எல்லாம் என்னிடம் இருக்கிறது!"

கணவன் குறுகுறுப்புடன் கேட்டான்: "ஓ, உண்மையாகவா? என்ன வைத்திருக்கிறாய் அப்படி?"

130 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை வலது பக்கம் ஒடித்துக் கொண்டு போய்ப் பாலத்தின் காங்க்ரீட் சுவற்றின் மீது பலமாக மோதினாள் அவள். மோதும் முன்பு, அவள் தன் கணவனைப் பார்த்து, புன்னகையுடன் தன்னிடம் என்ன இருக்கிறது
என்பதை இப்படிச் சொன்னாள்:

"ஏர் பேக்" (The airbag)"

(முற்றும்)
-----------------------------------------------------------------------------------
எததனை மோசமான விபத்திலும் ஆளைக் காப்பாற்றக் கூடிய ஏர்பேக் என்னும் கவசம் அணிந்திருப்பதைத்தான் சுருக்கமாக அப்படிச் சொன்னாள்.

Read more...

Friday, September 10, 2010

கனடிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை அதிகாரி இலங்கை விரைகின்றார்.

கனடாவின் பாதுகாப்புத் துறை புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் வார்ட் எல்கொக் இலங்கை வரவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளிலிருந்து கனடாவினுள்ள நுழையும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுப்பதற்கான விடயங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இவர் தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினருடன் பேசுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த நீயுஸ் பேப்பர் எனும் கனடியப் பத்திரிகை , கனடாவினுள் நுழையும் நோக்கில் ஆழ்கடலில் அசைந்து கொண்டிருக்கக்கூடிய படகுகளின் தகவல்களையும் , கடத்தல் காரர்கள் தொடர்பான விபரங்களையும் கனடிய அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தகவல்களின் அடிப்படையில் இவர் தனது விஜயத்தின் போது இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களை கைது செய்து தண்டனை வழங்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Read more...

நாட்டை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பு தேவை.

ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இஸ்லாமிய கலண்டரில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

புனித அல்குர்ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாதகாலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும்.

இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமயங்கள், இனங்களைச் சேர்ந்த சகோதரர்களோடு மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரச்சினையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினது பெறுமதியான பங்களிப்புகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என நான் நம்புகின்றேன்.

நாடெங்கிலும் வாழும் எல்லா முஸ்லிம்களும் இந்த பெருநாளை மிகவும் சந்தோசத்தோடு கொண்டாடும் வகையில் நாட்டில் இன்று அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதப் பிரச்சினைகளால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இது அவர்கள் தங்களது பாரம்பரிய, சமய நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது.

இந்த விசேட சந்தர்ப்பத்தில் ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கரமான எனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Read more...

பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாம். தேர்தல் விபச்சாரமாம். த.தே.கூ.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசின் பக்கம் தாவியுள்ள அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கூட்டம் கூடித் தீர்மானம் எடுத்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பியசேனவும் பங்கேற்றிருந்தார். அத்துடன் அவர் இறுதி நேரம் வரை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். உள்ளூர் வானொலி ஒன்றுக்கும் அவர் இது தொடர்பில் செவ்வி வழங்கினார்.

இந்நிலையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு விளக்கம் கோரி இன்று கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நேற்று பாரளுமன்றில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி கட்சித் தாவல்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் விபச்சாரிகள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், ஒரு கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிவிட்டு, வேறு கட்சிகளுக்கு மாறுபவர்கள் மாறலாம் ஆனால் முன்னர் இருந்த கட்சி மூலம் கிடைக்கப் பெற்ற பாராளுமன்ற ஆசனத்தை அவர்கள் இராஜினாமா செய்யவேண்டும்.

அவ்வாறு கட்சிகள் மாறுபவர்கள் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க வேண்டுமென அரசியல்யாப்பினிலோ தேர்தல் சட்டத்திலேயோ மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டும். இனிவரும் காலங்களிலும் நான் தேர்தல் விபச்சாரத்தை விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

Read more...

மன்னார் பள்ளிவாயலில் நோன்பு பெருநாள் பிரார்த்தனைகள்.

புனித நோன்பு பெருநாளான இன்று மன்னார் மூர் வீதி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் பெருநாள் பிராத்தனைகள் விசேடமாக இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிவாயல் மௌலவி எஸ்.எம் அசீஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரார்தனைகளின் போது நாட்டின் நிலையான அமைதி , சமாதானம் வேண்டப்பட்டது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர். லெம்பேர்ட்





Read more...

Thursday, September 9, 2010

ஜனநாயகத்தை புதைத்து ஏகாதிபத்தியப் ஆட்சியை நோக்கிய பயணம் ஆரம்பம்.

இலங்கை அதிபர் ராஜபக்ச்வை 3 ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க ஏதுவாக அரசியலமைப்பின் 18 ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் ஜனநாயகத்திற்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனநாயகத்தை புதைத்து ஏகாதிபத்திய ஆட்சியொன்றை நோக்கிய பயணத்தை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
18 ஆவது சட்டத்திருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்று கூறியுள்ள அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி, ஆளும் கட்சி ஆதரவு திரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மக்களுடனும் இணைந்து ஜனநாயக விரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக பேசிய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா, ராஜபக்ச 3 ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க ஏதுவாக அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அரசாங்கம் இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பானது மக்களையும் எதிர்க்கட்சியினரையும் மிதிப்பதாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்ன என்பதை உலகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அதாவது தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் மக்கள் புரட்சிக்கும், இராணுவப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றது.

தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்திருக்குமானால் சில வருடங்களில் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஒரு காலத்தில் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதியாக வந்திருக்கலாம். ஆனால் 18 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. ஒருவரே தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய கூட்டணியினர் என்ற வகையில் இன்றைய தினத்தை கவலைமிக்க தினமாகவே பார்க்கின்றோம். மக்களின் இறைமை மற்றும் ஜனநாயகம் என்பன இறந்துபோன தினமாகும். அரசியலமைப்பானது அமைச்சர்களை பலப்படுத்துவதாக இல்லாமல் மக்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

தற்போதைய நிலைமையிலேயே இவர்களுக்கு போதுமான அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இருக்கின்ற அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் எமது ஜனநாயக தேசிய கூட்டணியானது இந்த 18 ஆவது திருத்தங்களை கடுமையாக எதிர்க்கின்றது என்று பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Read more...

பொன்சேகாவிற்கு நடந்தது உங்களுக்கும் என ஊடகங்களை மீண்டும் மிரட்டுகின்றார் மேர்வின்.

சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தமையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து அவரது பிரதி அமைச்சுப் பதவி பறிபோனது. நேற்று 18ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர் அவரது பிரதியமைச்சர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டது.

அமைச்சுப்பதவி மீண்டும் கிடைத்ததை அடுத்து களனியப் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களுடன் பால்சோறு பகிர்ந்துண்டு மகிழ்ந்தார் மேர்வின் சில்வா. பின்னர் ஊடகவியலாளர்ளுடன் பேசிய அவர் , சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. பத்திரிகை ஒன்று என்னுடை செய்திகளாலேயே விற்பனையாகின்றது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஊடகவியலாளர்கள் தமது பேனாவை தூக்குமேடைக்கு செல்வதற்கும் மற்றோரை புண்படுத்தவம் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் நேற்று பாரளுமன்றில் பேசிய பொன்சேகா , தான் சிறைக்குச் செல்லலாம் ஆனால் ஏதோ ஒரு வடிவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவித்தார். இது எதை குறிப்பிடுகின்றது. மக்களை கொன்ற , வங்கிகளை கொள்ளையடித்த இளைஞர்களை சுட்டுக்கொன்ற ஜேவிபி யின் கருத்தினை பிரதிபலிக்கின்றது. நான் ஒன்றை பொன்சேகாவிற்கு சொல்கின்றேன் . எனது ஜனாதிபதி இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டார் என்பதை பொன்சேகா மனதில் கொள்ளவேண்டும் என்றார் மேர்வின் சில்லா.

Read more...

துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்.

குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்.

வீரகேசரி செய்திப்பிரிவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தொலைநகல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 1998- 09- 09 அன்று வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் நான்.

இராணுவத்தால் 18 வயதில் கைது செய்யப்பட்டு கடந்த 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றேன். இன்று எனது குடும்பத்தைப் பராமரிக்க முடியாமல் அவர்களையும் துயரத்தில் ஆழ்த்தும் பரிதாப நிலையில் நிற்கின்றேன்.

குடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கு சொல்ல முடியாத ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியற்ற அநாதையாக வாடுகின்றேன். என்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றங்களில் 2008 - 07- 11 அன்று ஒரு வழக்கு தீர்த்து வைக்கபட்டது. இன்னும் மூன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடக்கின்றன.

அடுத்தவரிடம் கையேந்தும் நிலை.

வழக்கு விசாரணைக்கென வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு பண்ணக்கூட என்னிடம் காசு இல்லை. உதவிக்கு யாருமற்ற அநாதையாக தவிக்கின்றேன். எனது சொந்த தேவைக்குகூட ஒரு சோப் கட்டி வாங்கக் கூட அடுத்தவரிடம் கையேந்தும் நிலைமை.

எனது நிலைமை யாருக்கும் வரக்கூடது. ஒரு யாசகனுக்கு கூட இந்த நிலை வந்திருக்காது. துன்பத் தீயில் துவளும் என் கண்ணீரைத் துடைக்க எவராவது உதவிக்கரங்கள் நீட்ட மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்றேன்.

நான் எனது பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வாழ வழிசமைக்க எவரும் முன்வர மாட்டார்களா? என்னைத் தங்கள் உறவாக நினைத்து உதவி புரிய எவரும் இல்லையா? வெளி உலகத்தைப் பார்க்க, எல்லோரையும் போல நானும் வாழ எவரும் உதவக் கூடாதா?

எனது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுமானால் என் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் என்றே நான் நம்புகின்றேன்.

எனக்கு 2 சகோதரிகளும் 1 சகோதரனும் இருக்கின்றார்கள். அண்ணாவும் அக்காவும் திருமணம் முடித்துச் சென்று விட்டார்கள். அப்பா வயதானவர், நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார்.

எனது தங்கை திருமணம் முடிக்கவில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். குடும்ப கஷ்டம் காரணமாக கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வந்த நான், இன்று இப்படியொரு அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

முகம் தெரியாத வெளிநாட்டு உறவுகளே எனக்கு வழி காட்ட வேண்டும்.

இதுவரை யாரிடமும், எந்த உதவியும் நான் கேட்டதில்லை. இன்று உங்களை நம்பி, என் உறவாக எண்ணி, என் துன்பத்தில் பங்கு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் எனது மனச்சுமையினை இறக்கி வைத்துள்ளேன்.

எவராவது எனக்கு உதவ முன்வந்தால் அந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டேன் என்று கூறி உங்களை நம்பி எனது கண்ணீர் மடலை முடிக்கின்றேன்."

இவ்வாறு அந்த மடலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இக்கடிதத்தினை வாசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் , லீவு நாட்களில் பியர் அடித்தபின் இச்சோக கதையினை உங்களுக்கு பைட்டுக்கு எடுத்துக்கொண்டு ஏதோ தமிழ் மக்கள்படும் துயரத்தில் சோகப்படுவதாக பிதட்டிக்கொள்ளாமல், முடிந்தால் ஒருவர் இருவர் சேர்ந்தாவது இலங்கையிலுள்ள வக்கீல் ஒருவருடாக குறிப்பிட்ட இளைஞனுக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இலங்கைநெற் ஆசிரியர்குழு


Read more...

லாரி புகுந்து வெடித்தது பஸ்

தமிழ்நாட்டில் வேகமாகச் சென்று கொண்டு இருந்த ஒரு பஸ்சுடன் லாரி மோதி பஸ் வெடித்ததில் ஒன்பது பேர் தீயில் வெந்து மாண்டனர். பஸ்ஸில் இருந்த எஞ்சிய 31 பேரும் காயம் அடைந்து மருத்துவ மனையில் கிடக்கிறார்கள். இந்தச் சம்பவம், திருவண்ணாமலை அருகே நேற்றுக்காலை நேரத்தில் நிகழ்ந்தது.

வேலூரில் இருந்து கடலூருக்கு சென்றுகொண்டு இருந்த அரசு பஸ் எரிந்து எலும்புக்கூடாகிவிட்டது. அந்தப் பஸ், மல்லவாடி என்ற பேரூருக்கு அருகே திடீர்க்குப்பம் கிராமத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிரே அரிசி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீர் என்று லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. லாரி பஸ்ஸின் முன் பக்கத்தை பிளந்துகொண்டு உள்ளே புகுந்தது.

மோதிய வேகத்தில் பஸ்ஸின் டீசல் தொட்டி வெடித்தது. இதன் விளைவாகத் தீ பஸ்சுக்குள் மளமள வென்று பரவியது. பஸ்ஸில் முன் பக்கம் அமர்ந்து இருந்த பஸ் ஓட்டுநர் நடத்துநர் உள்ளிட்ட 9 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பஸ் பின்பக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்து ஜன்னல் வழியாக பயணிகளை வெளியே இழுத்துக் காப்பாற்றினர். 31 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு திரு வண்ணாமலை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து பஸ்-லாரி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசம் ஆகியது. பஸ்சுக்குள் 9 பேர் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் இருந்தது.

சாலை விபத்துகளில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் சாலை விபத்து நிகழாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more...

யாழ்பாணத்தில் புதிய சிறைச்சாலை.

யாழ்பாணத்தில் புதியதோர் சிறைச்சாலை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அனுதியை சிறைச்சாலைகள் மற்றும் புனருத்தாபன அமைச்சர் டியு குணசேகர வேண்டியிருந்தார். சிறைச்சாலையை அமைப்பதற்கு 272 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தற்போதுள்ள சிறைச்சாலை நான்கு வாடகை வீடுகளிலேயே இயங்கிவருகின்றது. புதிய சிறைச்சாலை , சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பண்ணைப் பிரதேசத்திலுள்ள காணியொன்றில் அமைக்கப்படவுள்ளது. இச்சிறைச்சாலை 1000 கைதிகளை தடுத்து வைக்கக்கூடியதாகவும் , புனருத்தாபன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாகவும் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இலங்கையில் த.தே.கூ தடைசெய்யப்பட வேண்டும் என்கிறார் த.தேகூ பா.உ பியசேன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாலேயே தான் அரசுடன் .இணைந்துள்ளதாக கூறுகின்றார்.

அவர் தனது கட்சித் தாவலின் பின்னர் ஊடகமொன்றுக்கு கூறுகையில் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு கட்சி என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பே எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கே தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் 40 வருடங்களுக்கு முன் மலையகத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருட்படுத்ததாமல் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவருக்கு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

Read more...

மின்னல் சிறிறங்கா அலறிமாளிகையில் பால்சோறு உண்டு மகிழ்கின்றார்.

ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே ஆட்சி செய்யலாம் என்ற வரையறையை மாற்றியமைப்பதற்கு ஆதரவளித்த பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அலறிமாளிகையில் அமோக வரவேற்பும் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவாறு அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நேரடியாக அலறிமாளிகை சென்று சிறிறங்கா பால்சோறு உண்டு மகிழ்வதை படத்தில் காண்கின்றீர்கள்.

அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர் சிறிறங்காக. இவ்விமர்சிப்பினூடாகவே இவரால் மலையகத்து மக்களின் காதுகளில் பூ சுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது டக்ளசின் யூனியராக மாறியுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

Read more...

சண் சீ கப்பலில் புலிகள் சார்பாக வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொண்டு பிரதிநிதியும்.

கனடாவைச் சென்றடைந்துள்ள எம்.வி.சன்.சீ கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்ட நபர் ஒருவரும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இது தொடர்பில் அவர் கருத்து கூறவில்லை. இருந்தும் பின்னர் அவர் அதனை ஒப்புக் கொண்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினருடன் கடந்த காலங்களில் 12 நாடுகளுக்கு பயணித்து இருந்த இவர் ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுனாமி நிவாரண நிதி கோரி வெளிநாடுகளுக்கு பயணித்து இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஆறு பேருடன் இவரும் கூடவே சென்றிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் சுதந்திர ஊடகவியலாளராகவே அப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் அதற்காக அவர் புலிகளின் உயர் மட்டக் குழுவைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க கனடா தீர்மானித்துள்ளது.

Read more...

அடுத்த தேர்தல் பழைய முறையிலேயே இடம்பெறும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பழைய தேர்தல் முறையின் கீழ் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

Read more...

விமானி தூங்கியதாலேயே, விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர் உயிரிழக்க நேரிட்டது.

158 பேரை பலிகொண்ட மங்களூர் விமான விபத்துக்கு விமானி தூங்கியதே காரணம் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதம் 28-ந் தேதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 152 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான பணியாளர்களும் பலியானார்கள்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிவான தகவல்கள் பற்றிய முதல் கட்ட அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி, விபத்து நடப்பதற்கு முன்பு 1 மணி 50 நிமிடம் தூங்கினார் என்ற தகவல் கருப்பு பெட்டியில் பதிவான உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். சிலாட்கோ குலுகியா (55) என்ற விமானி ஓட்டி வந்தார்.

2 ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்ற இவர் விமானம் பறக்கும் போதே இருக்கையில் இருந்து சுமார் 2 மணி நேரம் தூங்கி இருக்கிறார். கட்டுப்பாட்டு அறை உரையாடலின் போது 110 நிமிடங்கள் இவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது.

விபத்து நடப்பதற்கு முன்பு விமானம் வழக்கமாக பறக்கும் 2 ஆயிரம் அடி உயரத்துக்கும் பதிலாக 4 ஆயிரத்து 400 அடி உயரத்தில் பறந்துள்ளது. மேலும் மங்களூர், விமான நிலையத்தில் குறிப்பிட்ட தூரத்தில் இறங்காமல் குறுகிய தூரத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விமானி திடீர் என்று கண் விழித்து, மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கியதால் தூக்க கலக்கத்தில் சரியான தூரத்தை கணிக்க தவறி விட்டார். இதனால் விமானம் நீண்ட தூரம் ஓடி நிற்க முடியாமல் வேகமாக சென்று காம்பவுண்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானி விழிப்பாக இருந்து சரியாக செயல் பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான விபத்து பற்றிய முழு விவரம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com