Monday, October 5, 2009

வாக்குச் சாவடிகளுக்குள் கமரா, தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை.

வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா, புகைப்பட கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை எடுத்துச் செல்வதும் பாவிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா மற்றும் புகைப்படக்கமரா என்பனவற்றைப் பயன்படுத்தி படம் எடுப்பதற்கும் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதேநேரம் ஆயுதங்களுடன் எவரும் வாக்கு சாவடிகளுக்குள் பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலையொட்டியே தேர்தல் ஆணையாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார்.

இதேநேரம் வாக்காளர்கள், அரசி யல் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள், அபேட்சகர்கள், கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ. வி. அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொலி ஸார், தெரிவத்தாட்சி அதிகாரி களிடம் அனுமதி பெற்றிருப்போர் போன்றோரைத் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...

ஈரோஸ் அணியினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இருவர்பலி.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ஈரோஸ் அமைபிற்கு சொந்தமான வாகனம் சிங்களப் பிரதேசமொன்றில் சென்று கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரர் வண்டி ஒன்றுடன் மோதியதில் அவ்வண்டியில் பயணம்செய்த பொதுமக்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஈரோஸ் இயக்கத்தின் வாகனச்சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதுடன் அவர் பொலிஸ் தடுத்துச் வைக்கப்பட்டுள்ளார். அவ்வாகனத்தில் பயணம் செய்த ஈரோஸ் பிரபாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

சுவிஸில் புலிகளின் இரு தரப்பினரிடையே மோதல்.

ஒரு தரப்பு புளொட் அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.
வன்னியில் புலிகள் இயக்கத்தின் தலைவர் தளபதிகள் உட்பட அனைவரும் கொல்லப்பட்டு அவ்வியக்கம் இலங்கையில் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசத்தில் அவ்வியக்கத்தின் செயற்பாட்டாளர்களிடையே பிளவுகள் பல ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்ற விடயத்தை உத்தியோக பூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்துவதில் புலம்பெயர் புலிகளிடையே ஏற்பட்ட இழுபறி இறுதியில் அவ்வியத்தினுள் உருவாகியுள்ள பிளவை வெளிப்படுத்தியது. கே.பி தரப்பினர், நெடியவன் தரப்பினர் என இரு பிரிவுகளின் கீழ் மேலும் சில உப பிரிவுகளாக அவ்வியக்கம் பிளவுபட்டு நிற்கின்றது.

இப்பிரிவுகளில் கே.பி யுடன் தம்மை படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்ளும் உருத்திரகுமார் போன்றோரும், நெடியவனுடன் புலிகளின் முன்னணி அமைப்பான ரிஆர்ஓ அமைப்பினரும், யாழ் கரையோர வர்க்கத்தினரும் இணைந்து நிற்கின்றனர். இவர்களில் கே.பி தரப்பினர் புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தியை புலிகளின் உத்தியோத கடிதத்தலைப்புடன் அறிவித்திருந்ததுடன், புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பிபிசி போன்ற முன்னணி ஊடகங்களுடாக தனது தலைவர் நயவஞ்சகத்தனமாக கொல்லப்பட்டார் என தெரிவித்திருந்தார்.

கே.பி இச்செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக போர் கொடி தூக்கிய நெடியவன் தரப்பினர் கே.பி யை துரோகி என அறிவித்திருந்துடன் புலிகளின் கடிதத்தலைப்பை பயன்படுத்துவதற்கு கே.பி க்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்திருந்ததுடன், புலிகளின் தலைவர் இறந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தொடர்பாக உத்தியோக பூர்வமாக மக்களுக்கு எதுவும் தெரியப்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தில் உள்ளனர். ஆனால் நெடியவன் தரப்பிற்கு ஆதரவாக உள்ள கரையோர பிரதேசங்களைச் சேர்ந்தோர் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு நெடியவன் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது எனவும் அனால் தமது வர்க்கத் தலைவர் பிரபாகரனது இறப்பு அறிவிக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

ஈழப்போராடம் என புலிகளால் கூறப்பட்ட வன்முறைக் காலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் வழங்கப்பட்ட உதவிகளில் சுவிற்சர்லாந்து நாட்டிலேயே வாழுகின்ற மக்களாலேயே பாரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளமை கணிப்புகளில் இருந்து வெளிவந்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி புலிகள் நீதி கேட்டபோது, லட்சக்கணக்கான சுவிஸ் பிறாங் வங்கிக்கடன்களை சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் புலிகளுக்கு எடுத்து வழங்கியுள்ளனர். இவ்வங்கிக்கடன்கள் யாவும் குறிப்பிட்ட மக்களுக்கு வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி புலிகளால் வழங்கப்பட்டிருந்ததுடன் சிலரது கடன்கள் புலிளினாலேயே செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் புலிகளியக்கம் வன்னியில் அஸ்த்தமித்துடன் இங்கு புலிகளால் செலுத்தப்பட்ட வங்கிக்கடன்கள் யாவும் செலுத்தப்படாதுபோக அக்கடன்களை எடுத்துக் கொடுத்திருந்த தனிநபர்கள் அக்கடன்களை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இவ்வாறான பாரிய நிதிநெருச்சலுக்கு உள்ளான மக்கள் சுவிற்சர்லாந்து, சூரிச் மாநிலத்தில் ஜோசப் வீதி எனப்படும் இடத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான காரியாலயத்திற்கு சென்று கலகம் மேற்கொள்ள ஆரம்பித்துடன் அவர்கள் அந்நாட்டு பொலிஸாரின் உதவியையும் நாட முற்பட்டுள்ளனர். நிலைமைகள் மோசமடைவதை அவதானித்த சுவிஸ் புலிகள் அக்காரியாலயத்தை மூடுவதென்ற ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தனர்.

அவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்காரியாலத்தை அகற்றும் வேலைத் திட்டத்தில் அவ்வியக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இறங்கியிருந்தனர். அங்கேயும் பிரதானமான இரு பிரிவுகளான கே.பி, நெடியவன் தரப்பினர் காணப்பட்டனர். புலிகளின் சுவிஸ் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த குலம் தலைமையிலான குழுவொன்று கே.பி தரப்பினரை ஆதரிப்பவர்களாகவும், நிதிப்பொறுப்பாளாரான அப்துல்லா தலைமையிலான குழுவொன்று நெடியவன் தரப்பினரை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். இருதரப்பினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை எவ்வாறு ஏமாற்றுவது என்ற கலந்தாலோசனையில் ஈடுபட்டபோது அவர்களிடையே இணக்கப்பாடொன்றினை காண முடியாத நிலைதோன்ற அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன்போது அப்துல்லா தரப்பினரின் கைஓங்கி குலம் தரப்பினர் நையப்புடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அங்கு பொறுப்பாளர் குலத்தின் மேலாடைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டு மிகவும் கேவலமான நிலையில் அவர் காணப்பட்டதாக இணையத்தளங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் சுவிஸ் புலிகளின் ஒருதரப்பினர் புளொட் அமைபினரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக இலங்கைநெற் இற்கு தகவல் தந்த புளொட் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவர், புலிகளின் ஓர் பிரிவினர் தமது உதவியை நாடியதை ஊர்ஜிதப்படுத்தியதுடன், தாம் புலிகளின் உள்வீட்டு விவகாரங்களில் எந்தத் தரப்பிற்கும் உதவி புரியப்போவதில்லை என தெரிவித்தாகவும், அத்துடன் பெருந்தொகைப் பணத்தை வாங்கி நடுத்தெருவில் விட்டிருக்கும் தமிழ் மக்களின் கடன் தொல்லைகளை புலிகளின் ரிஆர்ஒ அமைப்பு போன்ற அமைப்புக்களின் வைப்பில் இருக்கும் பணத்தில் நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தியாதாகவும் தெரிவித்தார்.

Read more...

ஐக்கிய தேசிக் கட்சி எம்பி ரங்க பண்டாரவின் வீட்டிற்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டாரவின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரது குறிப்பிட்டவீடு அவரது வசிப்பிடமாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகமாகவும் இருந்து வந்துள்ளது.

வீட்டிற்கு தீ மூட்டப்பட்டபோது அவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரியவருகின்றது. தென்மாகாணத்திற்குச் சென்றுள்ள பா.உ ரங்கபாண்டார இடம்பெற இருக்கும் தென்மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடு தீப்பற்றி எரிவதை கண்டுகொண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அங்கு விரைந்த பொலிஸார் மக்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருந்தபோதிலும் வீட்டின் பாதிப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பா.உ ரங்க பண்டார, வீடு தனது வசிப்பிடம் மட்டும் அல்லாது கட்சி அலுவலாகமாகவும் இருந்து வந்தது. கணனிகள், போட்டோ பிரதி இயந்திரம், பிற பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் விலைமதிப்பற்ற ஆவனங்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...

முறிந்தது அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி . . . கட்சி கூட்டத்தில் ராமதாஸ் அறிவிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., நேற்று திடீரென வெளியேறியது. கூட்டணி அமைத்த ஐந்து மாதங்களுக்குள் திருப்பம் ஏற்பட்டு, உறவு முறிந்தது. பா.ம.க.,வின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர் தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது.

போட்டியிட்ட ஏழு இடங்களிலும் பா.ம.க., தோற்றது. அ.தி.மு.க., கூட்டணியால், 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.தேர்தல் முடிவில் இருந்தே பா.ம.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசிய ஜெயலலிதா, பா.ம.க.,வை மட்டும் சற்று ஒதுக்கியே வைத்திருந்தார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறவு பட்டும்படாமல் இருந்தது.

இந்நிலையில், பா.ம.க., தலைமை நிர்வாக குழு கூட்டம், ராமதாஸ் முன்னிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பா.ம.க., வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தலின் போது ஏற்பட்ட ஒரு மோதல் குறித்து ராமதாஸ், அன்புமணி, மருமகன் பரசுராமன், தம்பி சீனிவாசன், மருத்துவக் கல்லூரியில் பயிலும் பேரன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்து, கொலை வழக்கில் சேர்க்கப் பட்டனர்.போலீஸ் விசாரணைக்குப் பின் ராமதாஸ், அவரது குடும்ப உறுப்பினர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண் முகம் இதை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டை விசாரணை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அவர் இப்போது ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து ராமதாஸ், அவரது குடும்ப உறுப்பினர்களை சேர்க்க கோரியுள்ளார். இப்பிரச்னை குறித்து ஜெயலலிதாவை ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் சந்தித்து விளக்கிக் கூறினர். அதற்குப் பின்பும் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தனர். இதன்பிறகும் அ.தி.மு.க.,வுடன் தோழமை உறவு என சொல்வதற்கு எதுவும் இல்லை. அக்கட்சியுடன் இனி உறவு தேவையில்லை.

ஒரு நிமிடம் கூட அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கக் கூடாது என ஏகோபித்த குரலில் வலியுறுத்தினர். இந்த உணர்வை மதித்து, "அ.தி.மு.க.,வுடன் உள்ள கூட்டணி உறவை பா.ம.க., முறித்துக் கொள்கிறது' என, நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு பா.ம.க., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததில் இருந்தே பா.ம.க., வை அ.தி.மு.க., சற்று ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம், தேர்தல் முடிவுகள் தான் என அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்டு தோற்ற பல தொகுதிகள் வடமாவட்டங்களில் வந்துள்ளன. வடமாவட்டங்களில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இந்த விவரங்களை அக்கட்சித் தலைமை உன்னிப்பாக ஆராய்ந்துள்ளது.

பா.ம.க.,வுக்கு எதிரான மக்களின் மனப் போக்குக்கு எதிராக கூட்டணி வைத்தது தவறு என அக்கட்சி உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே, பா.ம.க.,வை அ.தி.மு.க., மேலிடம் உதாசீனப்படுத்தியது. ஜெயலலிதாவை ஜி.கே.மணி சந்திக்கச் சென்றபோது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்திக்க விரும்புவதை தெரிவித்துள்ளார். அதற்கு போயஸ் தோட்டத்தில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. சி.வி.சண்முகம் வழக்கு தொடரவும் ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டியுள்ளார். இவை அனைத்தும் தான் பா.ம.க., - அ.தி.மு.க., உறவு முறிய காரணமாக அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

Read more...

திருக்கோவிலில் சுகாதார கல்விக் கண்காட்சி.

பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார அறிவை மேம்படுத்தும் நோக்குடன் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் திருக்கோவில் கோட்ட பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சுகாதார கல்விக் கண்காட்சியானது இன்று 05.10.2009 காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய மாகாவித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் பிரதம அதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு இனிய பாரதி அவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. யு,ஊ,யு அசீஸ் அவர்களும் , திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி திரு. ராஜேந்திரா மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர் வ.கணேசமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உலக தரிசனம் நிறுவனத்தினால் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரா அவர்களிடம் வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.





Read more...

Sunday, October 4, 2009

ஐக்கிய தேசியக் கட்சி எம்பி க்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

தெனியாய பிரதேசத்தில் அரச நிறுவனங்களின் அனுசரணையுடன் அமைக்கப்படுவதாக கூறப்படும் மாளிகை ஒன்றினை பார்வையிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தலைமையில் சென்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தெனியாய வெவெரெலிய எனும் கிராமத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்போரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்த 5 ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பேரணியாக குறிப்பிட்ட இடத்தினை பார்வையிடுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனங்களில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சென்ற வாகனம் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன் வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் துசித்து ரணவக்க ஆகியோர் துபமிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ் சாட்டியுள்ளதுடன் அத்தாக்குதலை நாடத்தியவர்களால் தமது ஆதரவாளர்கள் சென்ற நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க வின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் டிலான் பெரேரா தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வாகனங்களை விடுவிப்பதற்கு தான் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, October 3, 2009

தீர்வில் இணக்கம் இல்லாமல் ஒற்றுமைப் படுவதால் பலன் இல்லை. சுரேஷ் நாகேந்திரா

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக முன்வைக்கப் படுகின்றது. இக் கோரிக்கையை வேறு கட்சிகளும் முன்வைக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூடுதலாக வலியுறுத்துகின்றார்கள்.

புலிகள் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்குத் தடையாக இருந்தார்கள் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். அதனாலேயே புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால், என்ன அடிப்படையில் அந்த ஒற்றுமை இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடிப்படைக் கொள்கை உடன்பாடு இல்லாமல் இடம்பெறும் ஒற்றுமை சந்தர்ப்பவாத அணிசேர்க்கையாக இருக்குமேயொழிய ஆக்கபூர்வமான ஐக்கியமாக அமையாது.

அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு எல்லா விடயங்களிலும் உடன்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் உடன்பாடு காண முடியாததாலேயே தனித்தனிக் கட்சிகளாகச் செயற்படுகின்றன. பிரதானமானதாகக் கருதப்படும் ஏதேனுமொரு விடயத்தில் காணப்படும் உடன்பாட்டின் அடிப்படையிலேயே கட்சிகளுக்கிடையே ஐக்கியமான செயற்பாடு இடம்பெற முடியும்.

அப்படியான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது வெகுஜன விருப்புவாதக் கோஷமாக (populist slogan) அமையுமேயொழிய கருத்தீடுபாட்டு அணுகுமுறையாக இருக்காது.

கடந்த காலங்களில் பெரிதாகப் பேசப்பட்ட இரண்டு கூட்டுகளைக் கண்டிருக்கிறோம். ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்விரு கூட்டுகளும் அடிப்படைக் கொள்கையில் இணக்கப்பாட்டுடன் ஆரம்பிக்கப்படவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பின்னரே இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அதன் கொள்கையைத் தீர்மானிக்கும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. தனிநாடு தான் தீர்வு என்ற முடிவை மேற்கொண்டதும் தொண்டமான் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான கொள்கைத் தெளிவும் இல்லாமல் இடம்பெற்ற கூட்டு. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதில் மாத்திரம் இவர்களுக்கிடையே உடன்பாடு இருந்தது.

அதுவும் எல்லாக் கட்சிகளும் ஆரம்பத்திலிருந்து இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி கடைசி நேரத்திலேயே அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது. அவசரமாகக் கூட்டுச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இணக்கப்பாடு இருக்கவில்லை.

தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகப் பேசினார்கள். இக்கூட்டமைப்பின் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டைத் தவிர வேறு தீர்வு இல்லை என்று பகிரங்கமாகக் கூறினார்கள். இந்த முரண்பாடு இறுதி நேரம் வரை நீடித்தது.

மேலே குறிப்பிட்ட இரண்டு கூட்டுகளும் அவற்றின் தலைவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்வதை இலகுபடுத்தினவேயொழிய அவற்றினால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. துன்பங்களே ஏற்பட்டன.

இதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம். அடிப்படையான பிரச்சினையின் தீர்வில் இணக்கம் இல்லாமல் கூட்டுச் சேர்ந்தது ஒரு காரணம். யதார்த்தத்துக்கு முரணானதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான தீர்வை முன்வைத்தது மற்றைய காரணம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுத் தீர்மானம் இத்தகையது.

இன்றைய நிலையில் இனப்பிரச்சினை தான் தமிழ் மக்களுக்கு அடிப்படையானதும் பிரதானமானதுமான பிரச்சினை. இப்பிரச்சினையின் தீர்வு பற்றிய உடன்பாடு இல்லாமல் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாக வலியுறுத்துகின்ற போதிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் கொள்கை இதுவரையில் இக் கட்சியிடம் இல்லை. தீர்வுக்கான கொள்கை தயாரிக்கப்படுகின்றது என்று சொல்கின்றார்களேயொழிய அதை இன்னும் வெளிப்படுத்தவில்லை.

மற்றைய தமிழ்க் கட்சிகள் தங்கள் கொள்கையைப் பகிரங்கப் படுத்தியிருக்கின்றன. மேலும், இக் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே முக்கியமான ஒரு வேறுபாடும் உண்டு. பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து முழுமையான தீர்வை அடைவதற்கு முயற்சிப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் ஆக்கபூர்வமானதும் என்ற நிலைப்பாட்டை இக் கட்சிகள் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கின்றது.

தீர்வுக்கான அணுகுமுறையைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளுக்குமிடையே உடன்பாடு இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்காக விடுக்கும் அழைப்பு அர்த்தமற்றது. இனப் பிரச்சினைக்கு இறுதியான அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படும் நிலையிலேயே ஒற்றுமை பலனளிப்பதாக அமையும்.

இல்லாவிட்டால் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றன என வெளியுலகுக்குக் காட்டுவதற்கான கூட்டாக இருக்குமேயொழிய அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. இந்தக் கூட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை விடயத்தில் உடன்பாடு காண்பதற்கு முயற்சிக்காமல் ஒற்றுமைக் கோரிக்கையை முன்வைப்பது வெளித்தோற்ற ஒற்றுமையையே அது விரும்புகின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய கொள்கை எதிர்மறையானது. பிரச்சினையின் தீர்வுக்கேற்ற கொள்கையை அது பின்பற்றவில்லை. புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே கூட்டமைப்பு செயற்பட்டது. தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கிடை கூறிய போதிலும் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபடவோ அல்லது அம் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கவோ அவர்கள் முன்வரவில்லை. புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மெளன ஆதரவு அளிப்பவர்களாகவே செயற்பட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு உடன்பாடு இல்லாதவர்களும் இருந்தார்கள். இலங்கை அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காணும் நோக்கம் இரு பிரிவினருக்கும் இருக்கவில்லை. வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் அழுத்தத்துக்கூடாகத் தீர்வை அடையலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள்.

இதனாலேயே இலங்கை அரசாங்கத்தின் அழைப்புகளையெல்லாம் நிராகரித்து வெளிநாடுகளின் தூதுவர்களையும் வெளிநாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்கள். வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் இராணுவ நடவடிக்கையைத் தளர்த்தும் பட்சத்தில் புலிகள் ஆயுத பலத்தின் மூலம் தனிநாடு அமைப்பார்கள் என்ற நம்பிக்கை பிரிவினைவாதிகளுக்கு இருந்தது.

வெளிநாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து அரசாங்கம் நியாயமான அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த முன்வரும் என்று பிரிவினைக்கு உடன்பாடு இல்லாதவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் வெளிநாடுகளின் பங்களிப்பும் முக்கியமானதெனினும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையே பிரதானமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கடந்தகால நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டதாக இன்னும் அறிவிக்கவில்லை. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை கூட்டமைப்புக்கு இருக்குமேயானால் அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தனிநாட்டுக் கொள்கையைக் கைவிடுவதாகத் தெரிவிக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றை வெளியிட வேண்டும். இவற்றுள் எதையும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை. இந்த நிலையில் ஒற்றுமைக் கோரிக்கையை முன்வைப்பது பழைய பாணியில் வெளிநாடுகளில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதற்காகவா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுவது நியாயமானதே.

அடிப்படை உடன்பாடு இல்லாத ஒற்றுமையின் மூலம் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப் பட்டுவிட்டன என்று வெளியுலகுக்குக் காட்டலாமேயொழிய அதனால் எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவென்றால், அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் உடன்பாடு காண்பதே முதலில் செய்ய வேண்டியதாகும். அத்தகைய உடன்பாடு இல்லாத ஒற்றுமை இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் புறம்பாக வேறேதோ நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்க முடியும்.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அழைப்பு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான இலக்காகக் கொண்டுள்ளதென்றால், அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் உடன்பாடு காண்பதற்கான கருத்துப் பரிமாறலை முதலில் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

நன்றி தினகரன்

Read more...

சின்னஞ் சிறு அனாதைகளும் சில கேள்விகளும் - இனியவன் இஸாறுதீன் -

ஆதியில்
ஆதாம்ஏவாள் இணைந்த
இல்லறத்தோட்டம் நம்
இலங்கைத் தோட்டமாம்
ஆனால்
அது ஏனின்று
பிணக்காடானது பிரபாகரன் மாமா?

கனவுகள்...
ஆமாம்
எமது கனவுகளைத்தான்
கொலை செய்தீர்கள்
கொலை என்றால்
உங்களுக்கு
கோடி இன்பமா?

கோடி மக்கள்
குருதியில்தான்
கொள்ளை ஆசையா?

எங்கு நோக்கினும்
அப்பாவி மக்களின்
இரத்தச்சுவடுகள்
உங்கள் ஆயுதங்கள்
அமைதிப்புறா பற்றி
அறிந்ததேயில்லையா?

நந்திக்கடல் வான் பார்த்தால்
அதன் முகம் நீலம்தான்
ஆனால்
அது
சிவப்பானதெப்படி
செப்புங்கள் மாமா?

இழப்பின் சோகம்
விழிகளில் எரிய
எதைத் தேடிப் பார்க்கின்றீர்
எம் கண்களில்?

விழிகளில் வழிவது
நீரென்று நினைக்காதீர்
அது
உங்கள்
அராஜகம் தந்த
அனாதைகள் முகவரி...

பல்லாண்டு காலமாய்
பகிர்ந்துண்ட மக்களின் குருதியை
பாலாபிஷேகம் செய்தீர்களே
உங்களுக்கு
'இரத்த ஒருமைப்பாட்டாளர்' என்ற
விருது தந்து
அஞ்சலி செய்கிறோம் ...

புரட்சி என்ற பாற்கடல்
உங்கள் அக்கிரமத்தால்
ஆலகாலமானது.
வருங்காலத் தலைமுறையினர்
அமைதி பாழானது.

விடியல் என்பது
விடிவதில் இல்லை
நாம்
விழிப்பதில் இருக்கிறது..
விடுதலை என்பது
வன்மத்தில் இல்லை
நம்
தர்மத்தில் இருக்கிறது..

நீங்கள்
திரித்து எழுதிய வரலாற்றை
இனி
திருத்தி எழுதப்போவது
யார் மாமா?

கனவுகள் சுமந்து
பூமிக்கு வந்தோம்
சமாதான ஒலி கேட்க
இலங்கையில் பிறந்தோம்..

ஆனால்
உங்கள் ஆயுதங்களின் பண்டிகையில்
அவலம் பார்த்துச் சிரிக்கவா
நாம் பிறந்தோம்?

உங்கள் ஈழத்துப் போரை
இனவாதத்தை
இனப்படுகொலையை
ஈமக்கிரியையில்லாமல்
சிதறிய உடல்களை
பெற்ற தாய்க்கும்.. பிறந்த தாய்நாட்டுக்கும்
செய்த கொடூரத்தை
நாம் எப்படிச் சகிப்போம்?

ஜனங்களைக் கொல்வதற்கு
நீங்கள் இட்ட பெயர்
ஜனநாயகம்..
(மனித)வேட்டை மிருகங்களுக்கு
ஜனங்கள் இட்ட பெயர்
புலிஅகம் ..

அதாவது
மனிதத்திற் கெதிரான
மிரு(அ)கம்
மனித வெடிகுண்டுகளால்
தாயகத்தையும்
தாய்நாட்டவர்ளையும் அல்லவா
அழித்தீர்கள்..

பயங்கரவாதிகளை
தேசியவீரர்கள் என்றுதான்
அழைத்தீர்கள்
ஓன்று தெரியுமா உங்களுக்கு?

பறவை ஒன்று
தன் சிறகு கொண்டு
தானே சிக்கெடுப்பது மாதிரி
நமக்கு நாமே தீர்வு காணும்
சித்தம் வேண்டும்..

தானியங்கிக் கடிகாரம்போல்
மனித வாழ்வு
சீராக இயங்கவேண்டும்..

வல்வெட்டித்துறையில்
கடத்தத் தொடங்கி
வன்முறையில்தானே
முடித்தீர்கள் வாழ்க்யை..

தமிழர் குருதியென்றால்
தனி ருசிதான்
தமிழீழத்தில் தீர்ந்ததா
உங்கள் தாகம்?

கோடித்தமிழர் கொள்ளைப்பணத்தில்
கொலையாயுதங்கள்தானே
கொணர்ந்தீர்கள்
அதில்
எங்களுக்கு
கல்விக்கூடமா திறந்தீர்கள்?

வாழ ஆசைப்பட்டவர்களை
சாவில் துயில வைத்தீர்கள்
குடிசைச்சிறுவர்கள்
கல்விமானாகிவிடக் கூடாது என்றுதானே
கல்லறைக்குள் நுழைத்துவிட்டீர்கள்

கந்தக சுவாசம்....
கானக வாசம்....
கந்தல் உடை....
பசியின் வலி....
பிரிவுத் துயர்...
கொலைகளின் கொடூரம்....

இவைகளைத்தானே
எங்களுக்கு
வாழ்க்கையாக்கினீர்கள்
வானத்தைச் சூழ்ந்த
வெடிகுண்டுப் புகைபோல
எங்கள் இதயத்தைச் சூழ்ந்தது
உங்கள் வன்மத்தின் சோகம்!

புத்தகம் படிக்காமல்
துப்பாக்கி பிடித்த
உங்கள்
அறிவிலி 'மிருகம்'
அறியுமா மனிதம்?

இழப்பின் சோகம்
விழிகளில் எரிய
எதைத் தேடிப் பார்க்கின்றீர்
எம் கண்களில்?

விழிகளில் வழிவது
நீரென்று நினைக்காதீர்
அது
உங்கள்
அராஜகம் தந்த
அனாதைகள் முகவரி ..

விடுதலை எனும் பெயரில்
கெடுதலை செய்தீர்கள்
அதனால்தான்
உங்கள் அறிவிலி
அணு(கு)முறை
உங்களுக்கே
அணுகுண்டானது ..

அறியுங்கள்
தர்மம்தான் வென்றது
உங்கள் அதர்மம் கூட
உங்களைத்தான் கொன்றது
எங்கள் சமாதானம்
ஒரு சமாதியானது
உங்கள் இனவெறி
இராணுவமானது
ஒவ்வொரு நாளும்
உங்கள் கொலையாயுதம்
கொடூரத்தோடுதான் குரைத்தது
அமைதிப்புறாவின் அழகை
எங்கே ரசித்தது?

உங்கள் இனவாதம்
உயிர்களைக் கொய்ததால்
எரிமலையானோம்
எரிமலையானோம்.

இனஉரிமை இழந்தோம்
மொழியுரிமை இழந்தோம்
மானுடம் இழந்தோம்
மண்ணகம் இழந்தோம்
முகங்களை இழந்தோம்
முகவரி இழந்தோம்

முப்பது ஆண்டுகளில்
மூத்தகுடி இழந்தோம்
தாயை இழந்தோம்
தந்தையை இழந்தோம்.

ஆனால் எங்கள்
சமத்துவத்தை
சகோதரத்துவத்தை
ஒருபோதும்
இழக்கவேமாட்டோம்...

மனிதத்துவத்தின்
புனிதத்துவ வடிவங்கள் நாங்கள்
எங்களை
மதவெறிகொண்டு
மறுதலிக்காதீர்கள் ..

நாங்கள்
பூக்களோடு பேசவேண்டும்
புறாக்களோடு பறக்கவேண்டும்
புலர்வானம் பார்க்க வேண்டும்
சர்வ ஜனங்களுக்கு
சாதிபேதமில்லா சமாதானத்தை
சாதித்துக் காட்டுவோம்
எங்களை
வாழ விடுங்கள் ...

ஒடுக்கப்பட்டவர்களே!
ஒன்று சொல்கிறோம்
கேளுங்கள்
உங்கள் வரலாற்றை
இலங்கை மக்களின்
இதயங்களில் எழுதுங்கள்!!!

Read more...

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இலங்கைப் பெண் மாலைதீவில் கைது.

17 வயதுடைய யுவதி ஒருவரை ஏமாற்றி மாலைதீவுக்கு கொண்டு சென்று அங்கு சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவரை மாலைதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜரத்னம் குகப்பிரியா எனப்படும் 24 வயதுடைய பெண் 17 வயதுடைய சிறுமி ஒருவரை மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, அங்கு அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முனைந்துள்ளார்.

மாலைதீவு ஹென்வெறு பிரதேசத்தில், ஆடம்பர மாளிகை ஒன்றில் சகா ஒருவருடன் தங்கியிருக்கும் குகப்பிரியா, சிறுமியை அழைத்து சென்ற நாளில் இருந்து அவளை, வீட்டின் அறை ஒன்றினுள் பூட்டி வைத்திருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுமி மாலைதீவு அவசர பொலிஸாருக்கு அழைத்தபோது விடயம் வெளியாகியுள்ளது.

சிறுமியை பாரமெடுத்த இலங்கைத் தூதரக அதிகாரிகள் அவரை தூதரக மேற்பார்வையில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Read more...

ஆழும்கட்சி வேட்பாளர் பொலிஸாரினால் கைது.

தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான சரத் வீரவன்ச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஜே.வி.வி ஆரவாளர்கள் மீது தாக்குதல் நாடாத்திவிட்டு தப்பி ஓடும்போது பிற்றபட்டற பொலிஸாரினால் சரத் வீரவன்ச, அவரது ஆதரவாளர்கள் குழுவொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் வீரவன்ச, ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்று மக்கள் சுதந்திர முன்னணி எனும் அமைப்பொன்றை நிறுவியுள்ள விமல் வீரவன்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பாக மொறவக்க பொலிஸில் ஜேவிபி யினர் முறையிட்டுள்ளனர்.

Read more...

Benita Ferrero-Waldner உடன் பசில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நேச நாடுகளுடனான வெளிவிவகார தொடர்பகத்தின் ஆணையாளர் Benita Ferrero-Waldner அவர்களை பாரளுமன்ற உறுப்பனர் பசில் ராஜபக்ச அவர்கள் புருஸெல் இல் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது இலங்கையின் வடக்கே வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் துரித கதியில் மீள் குடியமர்த்தப்படவேண்டும் என வலியுறுத்திய Benita Ferrero-Waldner அவர்கள், இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு இலங்கை அரசிற்கு தேவையான ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

காந்தியின் கொள்கைகளை பின்பற்ற ஒபாமா அழைப்பு

காந்திஜியின் சிந்தனைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, காந்திஜியை நேசிப்பவர்; அவரது கொள்கைகளை மதிப்பவர். தன்னுடைய செனட் அலுவலகத்தில் காந்திஜி படத்தை வைத்திருந்தவர். கடந்த 2007ம் ஆண்டு முதல் காந்தியடிகளின் பிறந்த நாளை, சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா., அனுசரித்து வருகிறது.

இதையொட்டி ஒபாமா கூறியதாவது: காந்தியடிகள் அகிம்சை போராட்டத்தின் மூலமே இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர். இவர் வழிமுறையை பின்பற்றியவர் மார்ட்டின் லூதர் கிங். காந்திஜியின் சித்தாந்தத்தை பின்பற்றி அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தின் மூலம் நமது சமூகத்தை மாற்றியமைத்தவர் மார்ட்டின் லூதர் கிங். இதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்துக்கு இந்தியா வழிகாட்டியாக அமைந்துள்ளது. காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ நாம் உறுதி கொள்ள வேண்டும்; அனைவரையும் மதித்து போற்ற வேண்டும். காந்தியடிகள் போதித்த அகிம்சை முறை, இன்று உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப் படுகிறது. பொறுமை, அகிம் சையை பின்பற்றி நீதியை போதித்த அவரை இந்த நன்னாளில் நினைவு கூர்வோம். இவ்வாறு ஒபாமா கூறினார்.

Read more...

குருநாகல் குண்டுவெடிப்புக்கு பொறுப்பான இராணுவ சார்ஜன்ட் கைது.

குருநாகல் பிரதேசத்தில் நேற்றுக்காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் ஒன்றினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பொறுப்பான இராணுவச் சார்ஜன்ட் ஒருவர் குருநாகல் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பில் 12 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவில் கடமை புரியும் குறிப்பிட்ட இராணுவச் சார்ஜன்ட் குண்டு வெடித்த இடத்திற்கு அண்மையில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து அவ்விடத்திற்கு சென்று குண்டினை பொருத்தி விட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. அத்துடன் அக்குண்டினை தானே பொருத்தியதாக சார்ஜன்ட் ஏற்றுக்கொண்டுள்ளாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

இராணுவச் சமையல்காரன் சுட்டதில் இரு சிப்பாய்கள் மரணம். ஓருவர் படுகாயம்.

மன்னார் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு குறிப்பிட்ட இராணுவ முகாமில் சமைக்கப்பட்டிருந்த உணவு திருப்தி அளிப்பதாக இல்லை என சிப்பாய்கள் சமையல்காரரை திட்டி உள்ளனர். அப்போது ஆதிரமடைந்த சமையல்காரன் தன்னருகில் இருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து தாறுமாறாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு முகாமில் இருந்து தப்பியோடியுள்ளார். நேற்று இரவு 10.30 மணியில் இருந்து அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து இராணுவத்தினர் சல்லடை போட்டு தேடிவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com