Wednesday, September 30, 2009

கினியாவில் 157 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள்: பெண்களையும் கற்பழித்தனர்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சர்வாதிகாரியாக ராணுவ தளபதி மவுநசா டேடில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராகவும், ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் போராட்டம் நடத்தப்பட்டது.

இது கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் சரமாரியாக கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில், 157 பேர் பரிதாபமாக இறந்தனர். 1200 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ராணுவ வீரர்கள் கற்பழித்தனர். இந்த தகவலை அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் முதார் டயல்லோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவினரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கத்தியாலும், துப்பாக்கியில் பொருத்தப்பட்டுள்ள கத்தியாலும் ராணுவ வீரர்கள் குத்தி துன்புறுத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Read more...

விமானத்தை வழிமறித்த பறவைகள்: அவசரமாக தரையிறக்கம்

ஜெர்மனியின் டஸ்ஸல்டெர்ப் விமானநிலையத்தில் இருந்து கொசோவாவுக்கு 155 பயணிகளுடன் போயிங் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த பகுதியில் திடீரென பறந்து வந்த பறவைகளின் கூட்டம் ஒன்று விமானத்தின் பாதையில் குறுக்கிட்டன. பறவைகள் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் அவை விமானத்தின் வலது பக்க என்ஜினில் சிக்கி கொண்டன. இதனால் அந்த என்ஜின் பழுதானது. இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரையிறக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். சுமார் 45 நிமிட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த விமானம் பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விமானத்தின் பாதையில் பறவைகள் குறுக்கிட்ட காட்சி பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் தி பேர்ட்ஸ் படக்காட்சியை போல இருந்ததாக இச்சமபவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

Read more...

உதவி பொலிஸ் பரிசோதகர் தற்கொலை.

திருமலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 26 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவிற்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகரின் அறையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்திற்கான பின்னணி தொடர்பாக திருமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

போர்குற்ற விசாரணைகளுக்காக ஒர் சிப்பாயை தன்னும் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. விமல்.

இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதற்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பல தரப்பினரும் வேண்டிவரும் போது, அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் இலங்கையில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜேவிபி பாராளுமன்றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கையிலே போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க அரசு விசாரணைகளை மேற்கொள்ள முனையுமானால், ஜனாதிபதி ஜே.ஆ ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையிலே நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் குரல் எனப்படும் நிறுவனத்தினால் இலங்கைக்கும் எமது பிராந்தியத்திற்கும் எவ்வாறான அச்சுறுத்தல்கள் உண்டு என்பதை நாம் சிந்திக்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கம்; விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு அரசாங்கம் செய்யாதவிடத்து பாராளுமன்ற அமைச்சர்கள் அதற்கான விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைக்கவேண்டும். அத்துடன் இது தொடர்பாக மிகவும் உன்னிப்பாக அவதானித்து அமெரிக்காவின் மேற்படி நிறுவனத்தை இலங்கையில் இருந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச, இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும், இது தொடர்பாக மக்கள் மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும் எனவும், இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்குற்றங்களுக்காக எமது படையின் எந்த ஓர் அதிகாரியையோ அன்றில் ஓர் சிப்பாயையோ நாட்டிற்கு வெளியே கொண்டுசெல்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிப்பதற்கு மக்கள் திடசங்கர்ப்பம் பூணவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more...

இந்திய விமானி நீர்கொழும்பில் கொலை.

சிறிலங்கன் எயார் லைன் விமானச் சேவையில் கடமை புரியும் இந்திய விமானி ராமன் குமார் றோய், நீர் கொழும்பில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியினால் குத்தப்பட்டு பின்னர் தொங்க விடப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

இவர் தொங்கிக்கொண்டிருப்பதை வீட்டின் யன்னல் ஊடாக அவதானித்த அயல்வீட்டுக்காரர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, இரத்தக் கறைகளும் கத்தியும் நிலத்தில் காணப்பட்டதாகவும் அவரது உடல் தொங்கவிடப்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறியுள்ளார்.

50 வயதுடைய குறிப்பிட்ட விமானியின் குடும்பத்தினர் கனடாவில் வசித்து வருவதுடன் அவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் குறிப்பிட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 23ம் திகதி வேலைக்கு தோன்றிய அவர் சில நாட்களுக்கு விடுமுறை அனுமதி கோரியிருந்தாகவும், இச்செய்தி வெளிவரும் வரை அவரிடம் இருந்து எவ்வித செய்திகளும் இடைக்கப்பெற்றிருக்க வில்லை எனவும் சிறிலங்கன் எயார் லைன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஈராக்கில் இருந்து 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வெளியேறுகிறார்கள்.

ஈராக்கில் இருந்து 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்த மாத இறுதியில் வெளியேறுகிறார்கள். ஈராக்கில் இப்போது ஒரு லட்சத்து 24 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரமாக குறையும் என்று அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ராய் ஒடீர்னோ தெரிவித்தார். அடுத்த ஆண்டு அதாவது 2010 செப்டம்பர் மாதம் அனைத்து அமெரிக்க வீரர்களும் ஈராக்கில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

பொலிஸாரை தாக்கிய பிரதி அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்.

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ. பீ. எக்கநாயக்கவின் மகனான பிரதேச சபைத் உறுப்பினர் ரசிக்க எக்கநாயக்கவை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுரம் மஜிஸ்திரேட் தர்சிக்கா விமலசிறி உத்தரவிட்டார். ரசிக்க எக்கநாயக்க அனுராதபுரம் பிரதேசத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கி, துப்பாக்கி பிரயோகம் செய்திருந்ததை தொடர்ந்து அவரை கைது செய்து செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுதுத்துமாறு அனுராதபுரம் நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தது.

இன்று காலை ரசிக்க எக்கநாயக்க சட்டத்தரணிகளுடன் மன்றில் ஆஜராகியபோது அவரை விளக்க மறியில் வைக்க மன்று உத்தரவிட்டது.

Read more...

Tuesday, September 29, 2009

விசாகப்பட்டினம் அருகே இலங்கை மீனவர்கள் 21 பேர் கைது

ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் 4 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை கப்பல் அவர்களை சுற்றி வளைத்தது. அந்த படகுகளில் இருந்த 21 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாகப்பட்டினம் துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Read more...

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் ஜெனீவாவில் பேச்சு

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (29) அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் எந்தோனியோ கெட்டஸ¤டன் பேச்சு நடத்தினார்.

இதன் போதே மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்க இணக்கம் காணப்பட்டது. ஜெனீ வாவில் நடைபெறும் அகதிகளுக் கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் நிறை வேற் றுக்குழுக் கூட்டத்தில் இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொண்டு ள்ளார்.

Read more...

முரளிதரன் ஜேர்மன் சுற்றுலா.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நியமன எம்பி யும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஜேர்மன் நாட்டிற்கு சுற்றுலாச் சென்றுள்ளார். இருவாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சாந்தினி அவர்களையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முரளிதரனுக்கான ஜேர்மன் நாட்டு சுற்றுலா வீசா ஜேர்மன் நாட்டவர் ஒருவரின் உத்தராவாதத்தின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட ஜேர்மன் நாட்டவர், சுனாமி அனர்த்தங்களின் போது ஆனாதைகளான சிறார்களை இலங்கையில் பராமரித்துவருபவராகும். கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் சர்வதேச மட்டத்திலான தராதரங்களுடன் பாடசாலை ஒன்றையும், விடுதி ஒன்றையும் அமைத்து சுனாமியின் போது நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அங்கு பராமரிக்கப்படுகின்றனர். இந் நல்லெண்ண திட்டத்தின் கீழ் கிழக்குமாகாணத்தில் இருந்தும் சுமார் 15 மாணவர்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆனால் இவ்வாறான தனவந்தர்களிடம் பிரதேச மக்களின் அபிவிருத்தி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உதவிகளைப் பெறுவதற்கு பதிலாக அமைச்சர் முரளிதரன் தனது சுற்றுலா ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளமை அவருடன் இணைந்து செயற்பட்டு வருவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் முரளிதரனது ஜேர்மன் சுற்றுலா விடயம் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன், இவருடன் இணைந்து வேலை செய்து வருபவர்களுக்கு, முரளிதரன் தென்மாகாணசபை தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read more...

இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக பான் கீ மூன் எச்சரிக்கை.

அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் ஐ.நா சபையின் 64 வது மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையிலான குழுவினரை இன்று சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இடைத்தங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக இலங்கை அரசு அளித்த வாக்குறதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் பிரதமருடனிருந்த குழுவில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோகித்த போகல்லாக ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Read more...

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி டெல்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து, டெல்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று விமானம் மூலம் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்றார். டெல்லியில் இன்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Read more...

Monday, September 28, 2009

மாகாண நிர்வாகத்தில் கருணா தலையிட்டால் சிறையில் அடைப்பேன். பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துவரும் தருணத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினரிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வருவதுடன், அவை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்வில் அச்சத்தை தோற்றுவித்து பலத்த சந்தேகங்களையும் உண்டுபண்ணி வருகின்றது.

கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்த்தில் உள்ள பிரதேச செயலர் அலுவலகங்கள் போன்ற மக்களுடன் மிகவும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன், அங்குள்ள அதிகாரிகளுக்கு மிகவும் அதிகார தோரணையிலான கட்டளைகளை வழங்கிவருவதாகவும், அக்கட்டளைகள் தனது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்தாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் அங்குள்ள அதிகாரிகள், மக்களுடன் பேசும்போது, நியமன எம்பி முரளிதரன் மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தலையிடுவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும் இங்குள்ள அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் அவர்களின் எவ்வித ஆலோசனைகளுக்கோ அன்றில் கட்டளைகளுக்கோ செவி மடுக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவ்வாறு அவர்களின் செயற்திட்டங்களுக்கு கீழ்படிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கருணா, பாரதி ஆகியோர் கிழக்கு மாகாண நிர்வாகத்தினுள் தங்கள் மூக்கை நுழைப்பார்களேயானால் அவர்களை சிறையில் அடைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகங்களுள் நுழையும்போது அங்கு கடமைகள் நிமித்தம் சென்றிருக்கக்கூடிய மக்கள் வெளியேறுவதற்கோ, புதிகாக காரியாலய வளாகத்தினுள் எவரும் உள்நுழைவதற்கோ முடியாதவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும்போது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

Read more...

மட். புனித மிக்கேல் கல்லூரியின் 136வது கல்லூரி தினம்


வே. தவராஜாஆசிரியர்: மட்/புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மட்டக்களப்பு.
மட்டக்களப்பு நகரின் மத்தியிலே வானளாவ உயர்ந்து வனப்புற்று விளங்கும் மிகப் பிரபல்யமான கல்லூரி புனித மிக்கேல் கல்லூரி. 135 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து 136வது ஆண்டில் கால்பதிக்கிறது. வருடம்தோறும் கல்லூரிச் சமூகம் கல்லூரியின் ஆரம்ப நாளான புரட்டாதித் திங்கள் 29ம் நாளை நினைத்து மகிழ்வுறும் நாள்தான் கல்லூரி தினமாகும்.

1873ம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 29ம் நாளன்று 50 மாணவர்களோடும் 2 ஆசிரியர்களோடும் ஓலைகளால் வேயப்பட்ட சிறியதொரு மண்டபத்தில் தோற்றம் பெற்றதுதான் இந்தக் கல்லூரி.

முதலாவது தமிழ் கிறிஸ்தவ பாதிரியாரான அருட்பணி எவ். சேவியர் அடிகளால் உருவான கல்லூரி என்பதில் இதற்கொரு தனித்துவமுண்டு.

1895ம் ஆண்டளவில் பிரதேசங்களிலிருந்து கல்விப் பணிபுரியவென வருகை தந்த யேசு சபைத் துறவிகளால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படுகின்றது. இக்காலப்பகுதிகளில் கல்லூரி துரித வளர்ச்சி காண்கிறது.

1912ம் ஆண்டில் புதிய காணியில் புதியதொரு கட்டிடத் தொகுதிக்கான கல்நாட்டும் வைபவம் நடைபெறுகிறது. யேசுசபைத் துறவிகளிலொருவரான வண பிதா பேர்டினண்ட் பொணல் அடிகளின் கைவண்ணத்தில் புதிய கட்டிடத் தொகுதி உருவாகிறது.

1914ம் ஆண்டு வைகாசித் திங்கள் 3ம் நாள், இன்று நாம் கண்டு வியக்கும் அந்தக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்படுகின்றது. மதத் தலைவர்கள், கல்விமான்கள் நல்லுள்ளம் படைத்தவர்கள் ஆகியோரது அயராத உழைப்பினால் கல்லூரி துரித வளர்ச்சியைக் காண்கிறது.

நாலாதிக்கும் கல்லூரியின் புகழ் பரவுகிறது. கல்வித் துறைகளில் மாத்திரமல்லாது, கூடைப்பந்தாட்டம், டெனிஸ் உட்பட சகல விளையாட்டுத் துறைகளிலும் தேசிய ரீதியில் சிறப்பான அடைவுகளை ஈட்டிக்கொண்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல சாரணியத் துறையிலும் கூட ஜனாதிபதி விருதுகளைப் பெறுகின்றார்கள். அந்தளவுக்கு சகல துறைகளிலும் கொடியுயர்த்தி புகழோடு விளங்குகின்றது.

சென்ற ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் பாராட்டத்தக்கது. பொறியியல்துறை, வைத்தியத்துறை உட்பட சகல துறைகளுக்குமாக 65க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதோடு பொறியியல் துறையிலே அகில இலங்கை ரீதியிலான சிறப்பு அடைவுகளையும் ஈட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையிலும் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் சித்திபெற்றுள்ளார்கள்.

அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு நிகழ்வுகளிலே, கூடைப்பந்தாட்டத்தில் 3ம் இடத்தினையும், கபடி விளையாட்டு நிகழ்விலே ஒரு புள்ளி வித்தியாசத்தில் 2ம் இடத்தையும் ஈட்டியுள்ளார்கள்.

இவ்வாறான சாதனைகளின் வெற்றிக்களிப்பிலே 136வது கல்லூரி தினம் கொண்டாடப்படுகிறது. கல்லூரியின் முதல்வராக இலங்கைக் கல்வி நிர்வாக சேவைத் தரத்தினையுடைய செ. மகேந்திரகுமார் அவர்கள் பணிபுரிகின்றார்கள். கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்வி சார், சாரா ஊழியர்களின் உதவியுடனும், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் துணையுடனும் அயராதுழைக்கின்றார்.

அவரது தலைமையில் கல்லூரிதின நிகழ்வுகள் நடைபெறும். கல்லூரி மண்டபத்திலே புதிதாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையவர்கள் திருப்பலியை ஒப்புகொடுப்பார்கள். பின்பு அனைவரும் அருட்பணி பே. பொணல் அடிகளாரது சிலை முன்றலிலே கூடுவார்கள்.

அங்கு கல்லூரிக் கொடியும், பழைய மாணவர் சங்கக் கொடியும் ஒருங்கே ஏற்றி வைக்கப்படும். கல்லூரிக்கு வடிவம் தந்த அருட்பணி பே. போணல் அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து அடிகளாரை கெளரவிப்பார்கள். தொடரும் விருந்துபசார முடிவில் மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வகுப்பறைகளில் விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

Read more...

பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தம் : கிருஷ்ணா கோரிக்கை

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தயாரித்து இருப்பு வைத்து கொண்டு "இனிமேல் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும், என ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் வற்புறுத்தி வருகிறது. ஒன்றிரண்டு அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளையும், அணுசோதனை நடத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோரப்படுகிறது.

இந்நிலையில், ஐ.நா.,பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா பேசியதாவது: அணு ஆயுதம் இல்லாத உலகத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமில்லாத வகையில் இருக்க வேண்டும். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற இந்த ஒப்பந்த செயல்பாட்டில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த நிலை ஏற்படும் போது இந்தியா இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ், "ஒரு காலகட்டத்தில் அனைத்து அணு ஆயுதங்களும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்' என்றார். அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானுடனான பிரச்னைகளை இந்தியா அமைதி பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்க்க விரும்புகிறது. இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதே போல ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் தீவிர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் போல பயங்கரவாத ஒழிப்பு ஒப்பந்தம் ஒன்றை சர்வதேச அளவில் கொண்டு வர வேண்டும். மும்பையில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் மோசமானது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும். நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிருஷ்ணா பேசினார். இந்த கூட்டத்துக்கு வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை, கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com