Friday, September 18, 2009

புதைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய ஆவணங்கள் மீட்பு.

மட்டக்களப்பு நாறக்கமுல்ல பிரதேசத்தில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த அவ்வியக்கத்தின் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில், புலிகளின் நிதிபரிமாற்றம், வங்கி கணக்குகள், உறுப்பினர்களின் விபரங்கள், புலிகளின் கட்டமைப்பின் வலைப்பின்னல் தொடர்பான தகவல்கள், மாவீரர் குடும்ப விபரங்கள் என்பன அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

~உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலைமை சிறப்பானது'

ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. பிரதிநிதி பெஸ்கோ தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பானதாக உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்றுசந்தித்தார்.

இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்ட காலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் ரோஹித்த போகொல்லாகம, மிலிந்த மொரகொட, பேரி யல் அஷ்ரஃப், மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நன்றி தினகரன்

Read more...

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபடும் உலக வாழ் இந்துக்களின் புனித நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது.

இந் நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும். இன்று நவராத்திரியின் ஆரம்ப நாள் என்பதால் ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாவது மூன்று நாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மி தேவிக்கும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். 10வது தினமான 28ம் திகதி விஜயதசமி தினம். அன்றைய தினம் ஆலயங்களில் வித்யாரம். நிகழ்வுகளும் நடைபெறும்.

குறிப்பாக அம்மன் ஆலயங்களில் தேவியின் மஹிமையை உணர்த்தும் நவராத்திரி உற்சவம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

Read more...

ஐ.ம.சு முன்னணி காலி மாவட்ட வேட்பாளருக்கு பிடிவிறாந்து.

நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்கின்றார் அனர்க்கலி.
தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக காலி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னால் தென்மாகாண சபை முதல் அமைச்சர் நிசாந்த முத்துகெட்டிகம விற்கு காலி நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

தென்மாகாண சபைக்காக அதே மாவட்டத்தில் போட்டியிடும் சக வேட்பாளரான அனர்க்கலி அவர்களுக்கு, மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அனர்க்கலி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து நீதிவான் தாமர தென்னக்கோண் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிசாந்த முத்துகெட்டிகம நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அங்கு அனர்கலி பிரசன்னமாகியிருந்தார்.

அங்கு ஊடகவியலாளர்களுடன் பேசிய அனர்கலி, தன்னை எவரும் அச்சுறுத்த முடியாது எனவும் எவரது அச்சுறுத்தல்களுக்கும் தான் அடிபணியப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனர்கலி சில முக்கியஸ்தர்களின் உதவியுடன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைவதாக தெரிவித்துள்ள நிசாந்த முத்துகெட்டிகம, அரசில் அனுபவமும் திறமையும் இல்லாதவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வேட்பாளர் தெரிவுக்குழுவினரும் தெரிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more...

5 வள்ளங்களில் 21 இந்திய மீனவர்கள் கைது. கடற்படை பேச்சாளர்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை 5 வள்ளங்களுடன் கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படைப்பேச்சாளர் டி.பி.கே தசநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸார் அவர்களை வழமையான நடைமுறைகளின் ஊடாக நீதிமன்றில் ஆஜர் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவர்களை தாக்கியதாக சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றன: இக்கருக்தை கடற்படைப் பேச்சாளர் முற்றாக மறுத்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக்கோரி இந்தியாவில் பகிஸ்கரிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

இலங்கைத் தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவி: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

""இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை அளிப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன'' என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் நிலை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ஆகியன குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதினார் முதல்வர் கருணாநிதி.

இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

""போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் நலனில் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, கவலையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இதுகுறித்து, இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது உள்ளிட்ட விஷயங்களை விரைந்து செய்திட வேண்டியதன் அவசியத்தை அந்த நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இலங்கையில் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ரூ. 500 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனுப்பியுள்ள நிவாரணப் பொருள்கள் அந்த நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Thursday, September 17, 2009

படையினர் தன்னை விடுதலை செய்வதாக கூறியபோது அதிர்ச்சி அடைந்தாரம் தமிழ்வாணி.

வன்னியில் புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வந்தாகக் கூறப்படும் பிரித்தானியா வாழ் தமிழ் யுவதி ஒருவர், இறுதியாக புதுமாத்தளன் பிரதேசத்தை படையினர் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தபோது படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாதமளவில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து விடுதலை பெற்று லண்டன் சென்றடைந்துள்ள தமிழ்வாணி ஞானகுமார் ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய பேட்டிகளை வழங்கி தமிழ் மக்களையும் சர்வதேச சமுகத்தையும் குழப்பி பிரபல்யம் அடைய முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அதிகாரிகள் என்னிடம் நீர் விடுதலை செய்யப்படுவீர் எனக் கூறினார்கள். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறுகின்றார். நிரபராதி ஒருவர் விடுதலை செய்யப்படுகின்றார் என்ற செய்தி கேட்கும்போது சந்தோசப்படுவதுண்டு. ஆனால் குறிப்பிட்ட நபர் அதிர்ச்சி அடைந்தாக கூறுகின்றார். அதற்கான காரணம் இவர் வன்னியில் இருந்த காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார் என்பதையும், அதற்காக தனக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கின்றார் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

அல்லது புலிகள் இலங்கை இராணுவத்திரை மோசமானவர்கள் என மேற்கொண்டிருந்த பிரச்சாரத்தை நம்பியிருந்த இவரை, இலங்கைப் படையினர் எவ்வித தயக்கமும் இல்லாமல் விடுதலை செய்கின்றோம் என்றபோது, புலிகள் இத்தனை காலமும் செய்தது பொய்பிரச்சாரம் என உணர்ந்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும்.

அத்துடன் இலங்கை இராணுவத்தினர் 5 தடவைகளுக்கு மேல் விசாரணைகள் மேற்கொண்டதாகவும், இவரிடம் நீ எங்கிருந்து வந்தாய்? உனது பெற்றறோர் எங்குள்ளனர்? ஏன் வன்னிப்பிரதேசத்தில் தங்கியிருந்தாய்? என்ற கேள்விகளை கேட்டதாக கூறுகின்றார். ஆனால் இக்கேள்விகள் மிகவும் சாதாரணமனதும் அவசியமானதுமே. மாறாக நீ வன்னியில் எத்தனை பேருடன் உடலுறவு கொண்டிருந்தாய்? என அவர்கள் கேட்டிருப்பார்கள் ஆயின் அது விமர்சிக்கப்படவேண்டியதாகும்.

அடிப்படையில் குறிப்பிட்ட பெண் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறியுள்ளார். இவர் புதுமாத்தளனில் இருந்து இடைத்தங்கல் முகாம் வரும்வரைக்கும் சட்டத்தை மதிக்கவில்லை. இவர் வன்னியில் தங்கியிருந்த காலங்களில் பிரிட்டிஸ் பிரஜையான அவர் அங்குள்ள சர்வதேச ஸ்தாபனங்கள் ஊடாக தான் அங்கிருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செய்யாது பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுடன் இணைந்திருந்ததாக இவருடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடாக அறிய முடிகின்றது.

இவர் வன்னியில் இருந்த காலத்தில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் முழுநேரமும் இணைந்து செயற்பட்டதாகவே வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவர் அங்கிருக்கும் போது புலிகளின் காயமடையும் உறுப்பினர்களுக்கே சிகிச்சை அளித்தாக வன்னிமக்கள் தெரிவிப்பதுடன், புலிகளின் முன்னணி செயற்பாட்டாளரான இவரை இலங்கை அரசு விடுவித்துள்ளதையிட்டு மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துமுள்ளனர்.

புலிகளினால் தமது வாழ்நாட்கள் சிதைக்கப்படுவதற்கு ஒத்தாசை புரிந்த மேற்படி யுவதி இலங்கையில் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டியவர் என்பது வன்னி மக்களின் கருத்தாக உள்ளது.

வன்னிமக்களின் இக்கருத்துக்களை உறுதிப்படுத்துமுகமான கருத்தொன்றினையும் தமிழ்வாணி ஞானக்குமார் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் வன்னியில் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவித்துள்ளார்களே என்று கேட்டபோது, அவ்வாறான அனுபவங்கள் எவற்றையும் தான் கண்டிருக்கவில்லை என சர்வசாதாரணமாக கூறுகின்றார்.

புலிகள் மக்களை மனித கேடங்களாக பயன்படுத்தினார்கள் என்பது உலகில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புக்கள,; மற்றும் சர்வதேச ராஜதந்திரிகளால் வெளிப்படையாக கூறப்பட்ட விடயம் என்பதுடன் அது ஆதாரங்கள் தடயங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் உலகத்தை ஏமாற்ற முனைவது இவரது இக்கருத்தினூடாக வெளிப்படையாக தெரிகின்றது.

இன்று இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் அனைவருமே தாம் புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தமது விருப்பிற்கு மாறாக புலிகள் அவர்களை தடுத்து வைத்திருந்தாகவும், தம்மை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தியதாகவும், தமது சிறார்களை பலவந்தமாக படையில் இணைத்துக்கொண்டதாவும் தெரிவிக்கின்ற நிலையில் குறிப்பிட்ட யுவதி உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முனைவது வேதனைக்குரியதாகும்.

இவர் வன்னியில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியிருக்கின்றார் என்ற நியாயமான சந்தேகம் நிவர்த்தி செய்யப்படாத நிலையிலும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ்வாணி, மிகவும் அநாகரிகமான முறையில் நடைமுறைகளுக்கு மாறாக ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கி தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ள முனைவதானது தமிழ் மக்களின் நற்பெயருக்கு மிகவும் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்பதுடன், இடைத்தங்கல் முகாம்களிலும் தடுப்புக்காவலிலும் உள்ள மேலும் சில வெளிநாட்டுப் பிரஜைகளின் விடுதலையை தாமதப்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை.

Read more...

ஐ.நா.விசேட பிரதிநிதி பெஸ்கோ வவுனியா, யாழ்., மன்னார் விஜயம்'

மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா. உதவுமென உறுதி ஜனாதிபதி, அரசியல் கட்சிகளுடன் இன்று சந்திப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்து ள்ளவர்களை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண உதவிகளை வழங்குமென ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் ஐ. நா. அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் லின் பெஸ்கோ நேற்றுத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு, இலங்கை வந்த லின் பெஸ்கோ நேற்றுக் காலை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் வேலைத் திட்டங்களையும் கண்டறிந்தார்.

வடக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெஸ்கோ நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவை அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார்.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் லின் பெஸ்கோ உரையாற்றினார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிவாரணக்கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் மூலம் மோதல்களுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதென லின் பெஸ்கோ சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை நேரில் சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள். தற்போது என்ன செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகள் அம்மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

நிவாரணக் கிராமங்களில் பணிபுரியும் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உதவி அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்காக முன்னெடுத்துவரும் உதவிகளையும் வசதிகளையும் நன்கு அறிந்துகொண்டேன் எனவும் லின் பெஸ்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகின் பல நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். நான் பார்த்தவற்றிலேயே மெனிக் பாம் நிவாரணக் கிராமம் மிகவும் விசாலமானது. நிவாரணக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எத்தனை வசதிகளை செய்துகொடுத்தாலும் தமது சொந்த வீடுகளில் வாழ்வது போன்ற உணர்வு இருக்காது. இவர்கள் கூடுமான விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.

அதற்கேற்ற வகையில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்மக்களை கூடிய விரைவில் வெளியேற்ற ஐ.நா. பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் பெஸ்கோ கூறினார்.

அமைச்சர் போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில்:-
மோதல்களையடுத்து நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக லின் பெஸ்கோ இலங்கை வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

எமது இருதரப்பு சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவிகள், வசதிகள் மற்றும் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை லின் பெஸ்கோ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

நன்றி தினகரன்

Read more...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு 80க்கும் அதிக பாதுகாப்பு அதிகாரிகள்

“உயிருக்கு அச்சுறுத்தல் என்பது முழு பொய்” அமைச்சர் அநுர யாப்பா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 80 இற்கும் அதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டிருந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய் பேசித்திரிகிறார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மனித உரிமைகள் மீறப்படும் ஒரு பயப்பீதி நிலவுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கேரளாவில் கூறியுள்ளமை, அவருடைய தராதரத்திற்கு பொருத்தமற்ற செயலாகுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் யாப்பா, அதன் விபரங்களையும் வெளியிட்டார். நேற்று நடந்த வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்படி ஒரு பொலிஸ் அத்தியட்சகர், மூன்று பிரதம இன்ஸ்பெக்டர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள், 9 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 பொலிஸ் சார்ஜன்ட்கள், 27 கான்ஸ்ட பிள்கள், ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர், எட்டு பொலிஸ் சாரதிகள் என 70 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஒரு கப்டன், 12 வீரர்கள் எனப் 13 பேரும் 12 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக சந்திரிகா செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ஆட் கடத்திலில் ஈடுபட்ட இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது.

அரசியல் தஞ்சம் கோரும் 80 மேற்பட்டோரை சட்டவிரோதமாக அவுத்திரேலியாவினுள் கொண்டுவர முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு இலங்கையர் மற்றும் இரு இந்தோனேசியர்களை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி அரசியல் தஞ்சம் கோருவோர் 32 பேர் அவுஸ்திரேலியாவினுள் நுழைவதற்கு படகுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிறிஸ்மஸ் தீவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டபோத நேற்று அவுஸ்திரேலிய, பேர்த் விமான நிலையத்தில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more...

வி.முரளிதரன் கிழக்கு மாகாண சபையை அவமதிக்கும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - பிரதீப் மாஸ்ரர்

அண்மையில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள் கிழக்கு மாகாண சபை, அதன் செயற்பாடுகள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தானது, ஜனாதிபதியின் செயலை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எ.சி. கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்ரர்) தெருவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையானது எமது திருநாட்டின் ஜனாதிபதி அவர்களின் உயரிய சிந்தனையின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாவரும் ஜனாதிபதியின் பிரதம செயலகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டார்கள்.

அத்தோடு கிழக்கு மாகாண சபையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுமே முன்னாள் பாரளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சமூகப் பற்றாளர்கள், மக்கள் விடுதலைப் போராளிகளுமாவர்.

அத்தோடு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியமானது, மக்களின் அமோக ஆதரவுடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட கௌரவத்திற்கு உரியவர்களாவர்.

இவர்களை அவமானப்படுத்துவது கௌரவ உறுப்பினர்களின் அடிப்படை மனித உரிமையினையும், சிறப்புரிமையினையும் மீறும் செயலாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் பிறந்து கிழக்கு மக்களின் வீரன் என தன்னைக் கூறிக் கொள்ளும் அமைச்சர் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையைத் தணிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாகாண சபையைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா அவர்கள் பகிரங்கமாகக் கேட்டக் கொள்கின்றார்.

Read more...

ரிஎம்விபி காரியாலயத்தை அகற்றக்கோரி திருக்கோயில் பொதுச்சந்தை முன்பாக உண்ணாவிரதம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அமைக்கப்பட்டதை அடுத்து அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது பூரண எதிர்ப்பை கடந்த சில வாரங்களாக வெளிக்காட்டி வருகின்றனர். மகஜர்கள், ஆர்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என தமது எதிர்ப்பை தெரிவித்துவந்த மக்கள் தற்போது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயம் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருக்கோயில் பொதுச்சந்தை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உண்ணாவிரதத்தில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன், உண்ணாவிரம் இருப்போரது கோரிக்கை நிறைவேற்படும் வரை அவர்களுக்கு ஆதராவாக அம்பாறை மாவட்டத்தின் சகல கிராமங்களில் உள்ள மக்களும் சுழற்சி முறையில் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிகின்றன:

உண்ணாவிரதம் தொடர்பாக எமது திருக்கோயில் நிருபர் அனுப்பியுள்ள செய்தியில்:

இன்று 17.09.2009 அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிள்ளையான் குழுவினரின் உப அலுவலுகம்; திறக்கப்பட்டமையை கண்டித்தும், அதை உடனடியாக அகற்றுமாறும் அம்பாறை மாவட்ட அனைத்து தமிழ்ப் பிரதேசங்களிலும் உண்ணாவிரதமும் , ஹர்த்தாலும் அனுஷ;டிக்கப்படுகின்றது. இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே இரு முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணி ஆகியவை நடத்தப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையே இன்றைய நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்களது ஆட்கடத்தல் மற்றும் கொலை நடவடிக்கைகளை அரங்கேற்றிய பிள்ளையான் குழு, தங்களது நடவடிக்கைகளை அம்பாறையிலும் நடத்துவதற்கான முதல் எத்தனிப்பே இந்த அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15.09.2009 அன்று திருக்கோவில் 2ஐ சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனை கடத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் இக்குழுவினர் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் சட்ட பூர்வமாக அரசியல் காரியாலயங்களை திறந்துகொண்டு அரசியல் என்ற பெயரில் தமிழ் மக்களை மீண்டும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளுவதற்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இவ் உண்ணா விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.

எந் நாளும் தமிழர்கள் கண்களை மூடிக் கொன்டிருப்பார்கள் என்று நினைப்பது பகல்கனவு என்பதை அனைத்து சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனாதைகளாக இவ்வளவு காலம் இருந்த தமிழ் மக்கள் சந்தித்தது என்ன? சமுக அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையும் படித்து விட்டு தொழிலற்ற நிலையும் உருவானதற்கு காரணம் பிள்ளையான் போன்ற அரசியல்வாதிகளே. என்கின்ற கருத்துக்களை உண்ணாவிரத்தில் கலந்துகொண்டோர் தெரிவிப்பதை அவதானிக்க முடிகின்றது.






Read more...

இலங்கையின் செயற்பாடுகளில் ஐ.நா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளில் காணப்படும் மந்தநிலை தொடர்பாக ஐ.நா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக ஐ.நா வின் மனித உரிமைகள் செயலகத்தின் பொதுச் செயலாளர் ஜோன் கோல்மஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உள்ள குறைபாடுகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாகவும் ஐ.நா அக்கறை கொண்டுள்ளதுடன் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது ஊழியர் தொடர்பாவும ஐ.நா கவலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோவைப் பார்வையிட

Read more...

Wednesday, September 16, 2009

பதுக்கி வைக்கப்பட்டிருந்து சிகரட்டுக்கள் விசேட அதிரடிப்படையனரால் கண்டுபிடிப்பு.

பாதாள உலக்குழுவின் முக்கிய புள்ளி ஒருவரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு பகல, இம்புல்கொட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான சிகெரெட்டுக்களை விசேட அதிரடிப் படையினர் கண்டு பிடித்துள்ளனர். பாதாளக் குழுவொன்றின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஆடம்பரமாடி ஒன்றின் நிலக்கீழ் அறைகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள சிகெரெட்டுக்களின் பெறுமதி 80 லட்சம் ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச பொலிஸார் தயக்கம் காட்டிவருகையில் விசேட அதிரடிப்படையினர் இவ்வாறான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

Read more...

சனல் 4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அராய சட்டமா அதிபர் லண்டனில்.

இலங்கை படையினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்ட சர்சைக்குரிய காட்சிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அவர்கள் லண்டன் சென்றுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

லண்டன் செல்லும் சட்டமா அதிபர் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சட்டத்தரணிகளை சந்தித்து அலோசனை நடத்துவார் எனவும் லண்டன் ஊடக முறைப்பாடு ஆணையகத்திற்குச் சென்று அவர்களுடனும் இது தொடர்பாக பேசுவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com