Saturday, September 5, 2009

எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் பூண்டுள்ளதாக கூறும் புலிகள்.

இலங்கையில் சமாதான செயற்பாடுகளில் அனுசரணையாளராகவும் பிரதான மத்தியஸ்தராகவும் பன்னெடுங்காலங்கள் செயற்பட்டுவந்த நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேம் இரட்டைவேடம் பூண்டு செயற்பட்டு வந்தமை வெளிவருவதாக புலிகளின் ஊதுகுழல்களில் ஒன்றான இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் லண்டன் சனல் 4 தொலைக்காட்சியினால் ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்த வீடியோ பொய்யானது என அவர் கருத்துக் கூறியதையடுத்தே அவர் மீது புலிகள் சேறு பூசும் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட வீடியோக் காட்சி வெளியானபோது அக்காட்சிகள் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்த அமைச்சர் எரிக் இது தொடர்பாக ஐ.நா உடனடி விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என ஐ.நா வின் செயலாளர் நாயகத்தை கேட்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வீடியோ தொடர்பாக பல தரப்பாலும் பேசப்பட்டதுடன் குறிப்பிட்ட வீடியோ பொய்யானது என பல நிபுணர்களும் தெரிவித்துள்ளதை அடுத்து அது பொய்யென கருதிய அவர், தனது கருத்தை ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தனி மனிதனின் கருத்துச் சுதந்திரத்தை என்றுமே ஏற்றுக்கொள்ளாத புலிகள் இன்று அவரை உலகமட்டத்தில் உள்ள ஓர் துரோகி என அறிவிக்கும் பொருட்டு செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளனர்.

எரிக்சொல்ஹேம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிட்ட இணையத்தளம் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கில் ஊடக தர்மத்திற்கு அப்பாற் சென்று பல சர்சைக்குரிய தகவல்களை மக்களுக்கு வழங்கிவருவது கண்டனத்துக்குரியதாகும். அத்துடன் இவ்வாறன பொறுப்புணர்வற்ற செய்திகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை உலக அரங்கில் அனாதைகளாக்கும் செயல் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Read more...

Friday, September 4, 2009

நோர்வே புலிகளின் புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒருவர் கொழும்பில்.

நோர்வே நாட்டில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக நோர்வேத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயில் புலிகளின் புலனாய்வு வேலைகளின் நிமிர்தம் நிறுவப்பட்டுள்ள ரிப்டொப் எனும் கடையில் காசாளராக செயற்பட்டுவரும் இவர் நோர்வே நாட்டில் உள்ள புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.

யாழ்பாணம் பாசையூர் பிரதேசத்தை சேர்ந்த இவர் நோர்வேயில் புலிகள் சார்பாக இடம்பெற்ற பல ஆர்பாட்டங்களின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டு வந்துள்ளதுடன் அவ் ஆர்பாட்டங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கியமைக்காக பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குறிப்பிட்ட விசாரணைகளின் போது அவர் சில ஊடகவியலாளர்களை புலிகள் சார்பாக விசாரித்தது உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

நோர்வே பிரஜாஉரிமையை பெற்றுக்கொண்டுள்ள ரொபின் என பலராலும் அறியப்படும் இவர் புலிகளின் இறுதிக்காலம் வரை புலிகளின் பிரதி புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டுவந்ததாக நோர்வே புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

புலிகளின் ஊடுருவல்களுக்கு இலக்காகியுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை இவர் பேணிவந்ததாக நம்பப்படுகின்றது. அத்துடன் ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் அமைப்புக்களில் நெருங்கிய உறவினர்களை கொண்டுள்ள இவர் அவர்களின் உதவியுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

Read more...

கடத்தல்காரர்களை பிரதேசவாசிகளும் மாணவர்களும் சுற்றிவளைத்தனர்.

மாலம்பே தகவல் தொழில் நுட்பக்கல்லூரி மணவன் ஒருவனை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேசவாசிகளாலும் கல்லூரி மாணவர்களாலும் முறியடிக்கப்பட்டுள்ளது. மாலம்ப தகவல் தொழில்நுட்பக் கல்லூரி பிரதான நுழைவாயில் அருகிற்கு நேற்று முன்தினம் சென்ற குழுவொன்று மாணவன் ஒருவனை இழுத்துச் சென்று தாம் வந்திருந்த ஜீப் வண்டியில் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகளும் மாணவர்களும் ஜீப் வண்டியை சுற்றிவளைத்து கடத்தல்காரர்களை தடுத்துள்ளனர்.

அப்போது அங்கு விரைந்த பொலிஸார் கடத்தல்காரர்கள் மீது பொதுமக்கள் மேற்கொள்ள முயன்றதாக்குதலைத் தடுத்து நிறுத்தி அவர்களை குறிப்பிட்ட வண்டியுடன் மாலம்ப பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட ஜீப்வண்டி பொலிஸ் நிலையத்தினுள் காணப்பட்டதாக அங்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மாலம்ப பொலிஸ் அதிகாரிகளிடம் வினவியபோது, எவ்வித தகவல்களும் ஊடகங்களுக்கு வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பொலிஸார், தகவல்களை பொலிஸ் ஊடகப்பிரிவில் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்ததாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதி ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற தமிழ் அகதி ஒருவரை தனுஸ்கோடி கரையோரப்பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ் மாவட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய சிவகுமார் எனப்படும் மேற்படி நபர் இந்தியா செல்வதற்காக பெரி ஓட்டுனர் ஒருவருக்கு 40000 ரூபாய்க்களைக் கொடுத்துள்ளார். பெரி ஓட்டுனர் அவரை தனுஸ்கோடி கடற்கரை அருகே இறக்கி விட்டுச்சென்றதை அவதானித்த இந்திய மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த 16 தமிழ் இளைஞர் யுவதிகளை புலிகள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசேட முகாம் ஒன்றில் வைத்து விசாரணை செய்துவந்த இந்தியப் பொலிஸார் அவர்கள் பொது மக்கள் என்பதை உறுதி செய்து அவர்களை மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Read more...

முன்னாள் புலிகளின் புனர்வாழ்விற்கு பிரித்தானியா உதவி.

படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கு உதவ பிரித்தானியா அரசு முன்வந்துள்ளது. இவ்வேலைத்தி ட்டங்களுக்காக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்களை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளதுடன் அதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் திரு.பீற்றர் ஹேய்ஸ் மற்றும் குடியேறுதலுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் திரு. மொகமட் அப்டிகர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

Read more...

Thursday, September 3, 2009

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மலேஷியாவில் தொழில்வாய்ப்பு.

எல். ரி. ரி. ஈ. இயக்கத்தில் சிறுவர் படைப் பிரிவில் இருந்து சரணடைந்தவர்களில் ஏழு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மலேசியாவில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கு மலேசியா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்களும் விசாக்களும் நேற்று பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

எல். ரி. ரி. ஈ. அமைப்பில் சேர்ந்து செயலாற்றி அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 147 இளைஞர்கள் இதற்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் புனர்வாழ்வளிப்பதற்காக இன்னும் எல். ரி. ரி. ஈ. உறுப்பினர்கள் 10,000 பேர் வரையில் இருப்பதாக புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

Read more...

பதவி உயர்வுகோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நீதிமன்றில்.

பொலிஸ் திணைக்களத்தில் அண்மையில் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளில் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நான்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நீதிமன்று சென்றுள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோரில் சிலர் தம்மிலும் இளநிலை அதிகாரிகள் என தெரிவித்துள்ள அவர்கள், தமக்கான பதவி உயர்வுகளுக்கு நீதிமன்று பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடவேண்டும் என கோரியுள்ளனர்.

குறிப்பிட்ட மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுப்பது என முடிவு செய்துள்ளது. அத்துடன் மனுதாரர்களான நான்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்குவதில் பொலிஸ் மா அதிபருக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டாயின் அவற்றை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் மற்றிற்கு அறியத்தருமாறு பிரதம நீதியரசர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியுமா என்பது தொடர்பான விசாரணை ஒன்றினை நாடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தையும் வேண்டியுள்ளார்.

Read more...

100 மில்லியன் ரூபா நஸ்டஈடுகோரி ஐரி மாணவன் வழக்கு தாக்கல்.

அண்மையில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தான் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

அவ்வழக்கில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ்குணவர்த்தன, அவருடைய மனைவி சியாமலி பிரியதர்சினி பெரேரா, மகன் ரவிந்து குணவர்த்தன, 12 பொலிஸ் காரர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பிரதிவாகிகளாக குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 100 மில்லின் ரூபா நஸ்ட ஈடு கோரியுள்ளார்

Read more...

Wednesday, September 2, 2009

அம்பாறைத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தில் விசப்பரீட்சை நாடாத்த முனையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். விருகோதரன்

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் புதிய கிளை.

எமது காரியாலயத்திற்கு தமிழர்கள் வரவேண்டும் என நான் எதிர்பார்க்க வில்லை. இக்காரியாலயம் அமைக்கப்பட்டதன் நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு சேவை புரியவே என்கின்றாராம் முதலமைச்சர் பிள்ளையான்.


அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது காரியாலயம் ஒன்றை கடந்தவாரம் நிறுவியுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துடன் இணைந்தவாறு இக்காரியாலயம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரவேசம் அங்குள்ள மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை கிளப்பியுள்ளது என்பதை நடந்து முடிந்துள்ள நிகழ்வுகள் நிறுவியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்டத்தினுள் புதிதாக பிரவேசிப்பதை எதிர்த்து அங்குள்ள தமிழ் மக்கள் தமது பூரண எதிர்பை காட்டுமுகமாக ஆர்ப்பாட்டங்களை நாடாத்தி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளனர். குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் த.ம.வி புலிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு 2000 மேற்பட்டோர் கையொப்பம் இட்ட மகஜர் ஒன்று நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த புத்திஜீவிகள், குழுக்கள் குழுக்களாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் சென்று அம்பாறைத் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்களை எடுத்துக்கூறுவதுடன், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பிரவேசமானது அங்குள்ள தமிழ் மக்களை எவ்வாறு அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி அவர்களை அனாதைகளாக்கும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரவேசம் நிச்சயமாக அங்கு கிடைக்கக்கூடிய தமிழ் பாரளுமன்ற பிரவேசத்தை பூச்சியமாக்கும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் தமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக முதல்வரைச் சந்தித்த புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் தான் தமது கட்சியின் கிளை ஒன்றை அக்கரைப்பற்று முஸ்லிம் கிராம எல்லையில் நிறுவியுள்ளதன் பிரதான நோக்கம் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு உதவி புரிவதற்காக எனவும், தமிழ் மக்கள் தமது அலுவலகத்திற்கு வரவேண்டும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தாகவும் முதல்வரைச் சந்தித்தி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்றில் திறக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிளையில் கணிசமான அளவு முஸ்லிம்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது. தமிழர் தாயகப் பிரதேசம் என குறிப்பிடப்படும் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களில், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியலில் முஸ்லிம்களால் பலவகைப்பட்ட குறிக்கீடுகளும் வஞ்சகங்களும் இடம்பெற்றிருக்கின்றதென்பது வரலாறு.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது முதலமைச்சர் பதவி என்பது தமிழர் ஒருவர் கைக்குச் செல்லக்கூடாது என பகிரங்கமாக இனவாதத்தை கிளப்பி முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். முஸ்லிம்களின் பிரச்சாரங்களில் காணப்பட்ட தமிழர் விரோத கொள்கைளை தோற்கடிக்கும் பொருட்டே அம்பாறைத் தமிழ் மக்கள் தமிழர் சார்பாக தேர்தலில் குதித்திருந்த தமிழர் மூவரையும் வெற்றியடையச் செய்திருந்தனர். அவ்வெற்றிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அக்கட்சியின் அன்றைய அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டிருந்த இனியபாரதியின் பங்களிப்பு மிகவும் அமைந்திருந்து.

அம்பாறை தமிழ் மக்கள் உணர்வுடன் செயற்பட்டதனாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியடைய முடிந்திருந்தது. அவ்வாறு தமிழ் மக்கள் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியீட்ட செய்திருந்த போதும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லா விற்கே வழங்கப்படவேண்டும் என முரண்பட்டு நின்றிருந்தனர். ஆனால் ஜனாதிபதி கொள்கை ரீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கருதியிருந்ததாலும், அம்பாறை தமிழ் மக்கள் மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்து அவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணிக்கு காட்டியிருந்த ஆதரவிற்கு பிரதியுபகாரமாகவுமே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் அரசியலில் தமிழ் மக்களுக்கு உள்ள படுகுழிகளை உணராத பிள்ளையான் தொடர்ந்தும் முஸ்லிம்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக செயற்படுவது துரதிஸ்டமாகவே உள்ளது. இறுதியாக இடம்பெற்று முடிந்துள்ள யாழ், வவுனியா தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் மக்களின் மனநிலையையும் எதிர்வரும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமோக செல்வாக்கு அம்பாறை மாவட்டத்தில் இல்லை என்று கூறினாலும், ஒரு குறிப்பிடத்தக்களவு விழுக்காடு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. 70000 தமிழ் வாக்காளர்கள் உள்ள அம்பாறை மாவட்டத்தில் ஆகக்குறைந்தது 20 தொடக்கம் 30 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தல்களில் பங்குகொள்ளமாட்டார்கள் என்பது திண்ணம். எனவே 50000 தொடக்கம் 55000 வாக்காளர்கள் வாக்களிப்பர். அதில் ஆகக்குறைந்தது 35 விழுக்காடு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செல்ல பிறகட்சிகள் அனைத்திற்கும் 5000 வாக்குகள் செல்லும். எஞ்சும் சுமார் 25000 - 30000 வாக்குகள் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் செல்லும். ஆனால் மேற்படி 30000 தமிழ் விருப்பு வாக்குகளும் சிதறடிக்கப்படும் போது தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் செல்லப்போவது யார் என்பதையும், அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் பிள்ளையான் அம்பாறையில் அதாவுல்லா குழுவினருக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தமிழ் மக்களின் நலனிற்காக அரசியலில் ஈடுபடுகின்றோம் என்போர் தமது கட்சி நலனில் நின்று சிந்திக்காமல் தமிழ் மக்கள் நலனில் நின்று சிந்திக்கவேண்டும். எனவே அம்பாறை மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சேவை எமக்கு வேண்டாம் எனக் கூறுவார்களாயின் அவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கின்றபோது அது குறிப்பிட்ட கட்சியின் வழர்ச்சிக்கு உந்து சக்கியாக அமையும் என எதிர்வு கூறலாம்.

Read more...

சிறைகளை கண்காணிக்க புலனாய்வு பாதுகாப்புப் பிரிவு

செப், 1 முதல் நடவடிக்கை ஆரம்பம். 45 சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பாடு. விசேட பிரிவுக்கு பூரண அதிகாரம்.

சிறைச்சாலைகளுக்குள் இடம் பெறுவதாக கூற ப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப் படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

45 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டு இந்தப் புலனாய்வு பாதுகாப்பு பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை வெகு விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்பு ஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்ட விரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படுவதாகவும் குற்றஞ் சாட்டப்படுவதையடுத்தே இதனைக்கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவிக்கையில், சிறைச்சாலையில் ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக எதிர்காலத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அண்மையில் கூட சிறைச்சாலைகளிலிருந்து 18 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தோம். நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர முன்னெடுப்பார்களென்ற நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா நாட்டில் தற்போது 30 ஆயிரம் சிறைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களுள் 50 சதவீதமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஏனையோரில் 251 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்தார்.

நாட்டில் 03 பிரதான சிறைச்சாலைகளும் 19 விளக்கமறியல்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நன்றி தினகரன்

Read more...

லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைது.

மாத்தறை தெனியாய பிரதேசத்திற்கு செய்தி சேகரிக்கச்சென்ற லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சாலிக விமலசேன, ரவீந்திர புஸ்பகுமார, தயா தென்னக்கோண் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக் கைது தொடர்பாக, பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ் தோட்டம் ஒன்றினுள் நுழைந்த ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

இரு யுவதிகளின் மர்மக்கொலை தொடர்பாக இரண்டாவது சந்தேக நபர் கைது.

கொழும்பில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இரு யுவதிகளின் மரணம் தொடர்பாக இரண்டாவது சந்தேக நபரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். ஹற்றன் பிரதேசத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு வயது குறைந்த யுவதிகளையும் கொழும்புக்கு அழைத்துவந்து குறிப்பிட்ட வீட்டில் வேலைக்கு அமர்த்திய நபரே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றினுள் கடந்த மாதம் சடலமாக மீட்கப்பட்டிருந்த இவ்விரு யுவதிகளையும் வீட்டில் வேலைக்கு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களம் நேற்று முதலமைச்சர் சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகம் நேற்று அம்பாறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, து.நவரெட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கெகாண்ணடனர்.

Read more...

குண்டு வெடிப்பில் சிறுவன் ஒருவன் மரணம், இருவர் காயம்.

நேற்றுமாலை அச்சுவேலிப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில், ஒரு சிறுவன் மரணமடைந்தும், மற்றய இருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 9 வயதுச் சிறுமியும், 7 வயதுச் சிறுவனும் சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி கருத்துத் தெருவித்த பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிமால் மெதிவெக்க, இக்குண்டு வெடிப்பில் மரணமடைந்த சிறுவன் நிவாகரன் (11 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வெடித்த குண்டின் தன்மையை பொலிஸார் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Read more...

வாஸின் மனைவிக்கு விசேட சலுகைகள் இல்லை. சிறைச்சாலைப் பேச்சாளர்.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மாணவன் நிபுண ராமநாயக தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு சிறச்சாலை வாட்டாரத்தினரால் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நேற்று கடுவல நீதிமன்றில் குற்றவாளிகள் 14 பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 15 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்ற சிறைக்காவலர்கள் வாஸின் மனைவிக்கு விலங்கிடாமல் அழைத்துச்செல்வதை படம் பிடித்துள்ளனர்.

இதைபிரதான குற்றச்சாட்டாக கொண்டு இணையத்தளம் ஒன்று சிறைச்சாலைப் பேச்சாளர் கென்னத் பெர்ணான்டோ அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, சந்தேக நபர் ஒருவருக்கு கைவிலங்கு இடுவது தொடர்பாக முடிவு செய்வதற்கான பூரண அதிகாரம் அவரை அழைத்துச் செல்கின்ற அல்லது பாதுகாப்பு வழங்குகின்ற அதிகாரிக்கு உண்டு எனவும் இது சந்தேச நபர் தப்பியோடுவதற்கு முயற்சிப்பார் என உருவாகும் சந்தேகத்தில் தங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com