Friday, August 21, 2009

மேற்குலகம் புலிகளையும் சொத்துக்களையும் எம்மிடம் ஒப்படைக்கவேண்டும்.

புலிகளில் மூத்த உறுப்பினர்களில் ஓருவரும் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவருமான கே.பி யின் கைது இடம்பெற்று ஒரு வாரகாலத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச புதியதோர் சவாலை சர்வதேச சமூகத்திற்கு விடுத்திருக்கின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மேற்குலகத்திடம் நேர்மையும் ஆர்வமும் உண்டானால், உலகிலே மிகப்பயங்கரமான பயங்கரவாத இயக்கமாக விளங்கிய புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள சில புலிகளையும் அவர்களது சொத்துக்களையும், அந்நாடுகள் எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என லண்டன் பிபிசி க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் சர்வதேச வியாபாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், புலிகள் பலசரக்கு கடைகள் முதல் வீடு காணி விற்பனைகளிலும், பெற்றோல் நிலையங்கள் முதல் ஆலயங்கள் வரைக்கும், சர்வதேச கப்பல் கம்பனிகள் முதல் சினிமா படங்கள் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். கே.பி யின் தகவல்களின் அடிப்படையில் அவற்றின் பெறுமதி 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்பிடப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இந்தியாவால் ஆபத்து இல்லை. பாக், மக்கள் கருத்து

இஸ்லாமாபாத் : இந்தியாவைவிட, அமெரிக்காவால் தான் தங்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் என, பாகிஸ்தான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அல் ஜசீரா தொலைக்காட்சிக்காக, கேல்அப் பாகிஸ்தான் எனும் நிறுவனம் சமீபத்தில் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் சில கருத்துக் கணிப்புகளை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில்," பாகிஸ்தானுக்கு, அமெரிக்காவால்தான் பெரும் ஆபத்து' என 59 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். "இந்தியாவால் ஆபத்து' என்று 18 சதவீதம் பேரும், 11 சதவீதம் பேர் ," தலிபான்களால் ஆபத்து' என்றும் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பில், அமெரிக்கா தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளதாக அல் ஜசீரா கூறியுள்ளது. தலிபான்களை அடக்குவதற்கு ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராணுவ நடவடிக்கைகளுக்கு 24 சதவீதம் பேர் எதிர்ப்பும், 22 சதவீதம் பேர் நடுநிலையை தெரிவித்துள்ளனர். மற்றொரு கருத்துக் கணிப்பில், தலிபான்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கையே சரி என்று 41 சதவீதம் பேரும், பேச்சு வார்த்தை தீர்வே சரி என 43 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

Read more...

Thursday, August 20, 2009

கே.பி யின் கைதும் பரப்பப்படும் வதந்திகளும். கிழக்குப் புலிகள் துரோகிகளாம். -விருகோதரன்-

புலிகளியக்கத்தின் தற்போதைய தலைவர் என தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்ட கே.பி என அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கைது தொடர்பாக பல தரப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் மிக தேர்ச்சி பெற்ற இராணுவ புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்ற உண்மையைத் தவிர எவ்விதமான தகவல்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் வெளிவிடப்படவில்லை.

இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையின் தேர்ச்சி பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது கே.பி பல தகவல்களை தெரிவித்துள்ளார் என்பது அரச உயர் மட்டத்தினரால் ஊடகங்களுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தியாகும். இது தவிர இக்கைது எவ்வாறு இடம்பெற்றது? எங்கு இடம்பெற்றது? யார் இவரை கைது செய்தார்கள்? கைதுக்கு உதவிய காரணிகள் யாது? என்ற வினாக்களுக்கு விடைகாண்பதற்கு பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் கூட முட்டிமோதிக்கொள்கின்ற நிலையில் கற்பனைச் செய்திகள் பல கோணங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கே.பி தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தியை அந்நாட்டு பிரதமர் நிராகரித்ததுடன் மலேசியாவில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கே.பி கைது செய்யப்பட்டதாக கூறப்படும் விடுதி அதிகாரிகள் தமது விடுதியில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என உறுதிபடக் கூறியுள்ள நிலையில் இவ்வாறான கற்பனைகள் அடங்கிய பல செய்திகள் புலம்பெயர் புலித்தொழிலாளர்களாலேயே பரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புலிகள் கேபி கைது தொடர்பாக முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதற்கு காரணங்கள் பலவுள்ளது.

கே.பி எவ்வாறு மாட்டினார் என்பதை விவாதிப்பதற்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன, கேபி கைது செய்யப்பட்டவுடன் புலிகளினால் பரப்பப்பட்ட செய்திகளிலேயே பல சந்தேசங்கள் உள்ளன. பொலிஸ் நடேசனின் மகன் மற்றும் சகோதரனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே கே.பி கைது செய்யப்பட்டதாக புலிகளின் வானொலிகள் முதலில் செய்தியை வெளியிட்டு பின்னர் அவற்றை அவ்வாறே மூடி மறைத்துக்கொண்டனர்.

புலிகளின் ஒட்டுமொத்த அழிவிற்கும் கே.பி யே வேட்டுவைத்தார் என நெடியவன் தலைமையிலான புலிகள் பகிரங்கமாக தெரிவித்திருந்தமையையும் பொட்டு தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளார் என்று உலாவும் செய்திகளையும் வைத்து பார்க்கின்றபோது கே.பி புலிகளின் தலைமையை காட்டிக்கொடுத்ததற்காக நெடியவன் தரப்பின் அல்லது பொட்டுவின் சதியினால் கே.பி மாட்டியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றது.

கே.பி யே புலிகளின் அழிவிற்கு காரணமாக இருந்தார் என்ற செய்தியில் உண்மை இருந்தால், அது நிச்சயமாக பொட்டுவிற்கு தெரியாமல் இருந்திராது. பொட்டு இலங்கை இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி உண்மையாக இருந்தால், கே.பி யை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் பொட்டுவை விட்டு அகலாது.

அதன்பொருட்டு நடேசனிடம் அணுகி உங்கள் தந்தை உயிரிழப்பதற்கும் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதற்கும் கே.பி யே காரணமாக இருந்தார். எனவே அவரை எவ்வாறாவது மாட்டவேண்டும் என அதற்கான திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து பொட்டு செய்திருக்கமுடியும்.

அத்திட்டத்திற்கு இணங்க நடேசனின் மகன் மற்றும் சகோதரன் குறிப்பிட்டவிடுதிக்கு சென்று கே.பி யை கைது செய்ய உதவியிருக்க முடியும். அவ்வாறு கே.பி கைது செய்யப்படும்போது தாம் அவ் விடுதியில் இருந்ததாக தெரிவித்திருக்கும் நடேசனின் மகன் மற்றும் சகோதரன் ஆகியோர் ஏன் கே.பி க்கு ஓர் அழைப்பு வந்தே அவர் வெளியே சென்றார் என்ற செய்தியை அவசர அவசரமாக வெளியிடவேண்டும். அதாவது இவர்களின் சந்திப்பை மூன்றாம் நபர் ஒருவர் அல்லது தரப்பு ஒன்று அறிந்து வைத்திருக்கவேண்டும் எனவே அக்கைதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்கா தொலைபேசிக் கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கவும் முடியும்.

அவ்வாறு நடசேனின் மகன் சகோதரன் ஆகியோர் குறிப்பிட்ட விடுதியில் இருக்கும் போது கே.பி கைது செய்யப்பட்டதாகவும் அவருடைய மூக்குக் காண்ணாடி தாம் தங்கியிருந்த அறையிலேயே காணப்படுவதாகவும் கூறியிருந்தனர், அவ்வாறாயின் அவர்கள் கே.பி கைதுடன் தொடர்பு பட்டிருக்கவிலையாயின் விடுதி அதிகாரிகள் கே.பி குறிப்பிட்ட விடுதியில் வைத்து கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கும் மறுப்பை நடேசனின் மகன் மற்றும் புலம்பெயர் புலிகள் மறுதலிக்க மறுக்கும் மர்மம் என்ன?

அத்துடன் புலிகள் அமைபினுள் பிளவு இல்லையாயின் இக்கைது புலித்தலைமையின் அனுசரணையுடன் இடம்பெறவில்லையாயின் கைது இடம்பெறும் போது கூடவே இருந்ததாக கூறும் மேற்படி புலிகளின் முக்கியஸ்தர்கள் மலேசிய அரசிற்கு குறிப்பிட்ட விடயத்தை முறையீடு செய்யாததன் காரணம் அல்லது இக்கைதின்பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க முயலாததன் மர்மம் என்ன என்ற விடயங்களுக்கான விடையை மக்களே தேடிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு புலம் பெயர் புலித் தொழிலாளர்கள் தொடர்ந்தும் மக்களின் பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக பல தரப்பட்ட பொய்கைளை மக்களுக்கு கூறி அவர்களை தொடர்ந்து ஏமாற்ற முற்பட்டு வருகின்றமையே இவ்வாறான முன்னுக்கு பின் முரணான செய்திகளுக்கு பிரதான காரணமாகும்.

புலிகளின் தலைமை எவ்வாறு அதன் விசுவாசிகளாலும் சர்வதேசவலைமைப்பாலும் காட்டிக்கொடுக்கப்பட்டதோ அதேபோன்று கேபியின் கைதும் அவ்வியக்கத்தின் தலைமையை கைப்பற்றுவதற்கும், போராட்டத்தின் பெயரால் அறவிடப்பட்ட பணத்தை பங்கிட்டுக்கொள்ளவும் துடிக்கும் பல புலிதொழிலாளர்களின் ஒருமித்த நடவடிக்கை என்பதை மக்களுக்கு மூடி மறைப்பதற்காக பல தரப்பட்ட பொய் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பமடையச் செய்யும் தமது கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர்.

புலம்பெயர் புலித்தொழிலாளர்களின் இவ்வாறான பொய்பிரச்சாரங்களுக்கு கிழக்குப் புலிகள் இன்று பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது. புலிகளின் தலமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசினால் பலமுறை சரணடையுமாறு அறிவுறுத்தல்கள் விடப்பட்டிருக்கின்ற நிலையிலும் தொடர்ந்தும் காடுகளில் வாழ்ந்து வரும் ராம் தலமையிலான புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்தனர் என்ற தோரணையில் புலித் தொழிலாளிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் புலித்தொழிலாளர்களால் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இடம்பெறும் குத்துவெட்டுக்களே இவ்வாறான பின்னடைவுகளுக்கு காரணம் என்பதை மக்கள் ஊகித்துக்கொள்ளும் நிலையில், கிழக்கு மாகாண புலிகள் மீது பழியைபோட்டு தம்மை மக்களிடம் உத்தமர்களாக காட்டிக்கொள்ள முற்படும் புலித்தொழிலாளர்களது வக்கிரகுணத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

ஐ.பி.சி வானொலியினுள் கே.பி யின் விசுவாசியான றஞ்சித் என்பவரால் உட்புகுத்தப்பட்ட ஈஸ்வரதாசன் என்பவரால் நிர்வகிக்கப்படும் அதிர்வு இணையம் இவ்வாறான செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்புவதை காணமுடிகின்றது. பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு சமூக அந்தஸ்தை இழந்துள்ள மேற்படி நபர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி புலிகள் விட்டுச் சென்றுள்ள மிச்ச சொச்சங்களை சுருட்டிக்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு தவறான செய்திகளை வழங்கி வருவது தெளிவாக தெரிகின்றது.

புலிகளின் தலைமைக்காக போட்டி போடும் வல்வெட்டித்துறை, யாழ் கரையோரப்பகுதியை சேர்ந்தோருக்கு கிழக்கு மாகாண மக்கள் என்றால் காட்டிக்கொடுக்கும் பரம்பரையில் வந்தவர்கள் என்று இலகுவாக கூறமுடிந்துள்ளதை நோக்க முடிந்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணப் புலிகள் போடுதடிகள் என்பது புலித்தொழிலாளிகளின் கருதுகோள்.

கருணாவிற்கும் புலிகளின் தலைமைப் பீடத்திற்கும் முறுகல் ஏற்பட்டது தமிழீழ இராணுவத் தளபதி எனும் பதவியில் ஏற்பட்ட போட்டியே என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பதவி போட்டியினால் அவ்வியக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது கருணா மற்றும் புலிகள் தரப்பால் மூட்டப்பட்ட பிரதேசவாதத் தீ இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பது துரதிஸ்டமே. ஆனால் அவை அனைத்துக்கும் அப்பால் புலிகளியக்கத்திற்கு விசுவாசமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வன்னியில் பிரபாகரனுடன் இருந்தே மடிந்துள்ள நிலையில், புலம்பெயர் புலித்தொழலாளர்கள் கிழக்கு புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்ததாக தெரிவிக்க முனைந்து வருவதானது புலிகளின் தலைமை கடந்த காலங்களில் தமது உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனிநபர்கள் மீது எவ்வாறு பொய்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள் என்பதற்கு சிறிய உதாரணமே.

இன்று கே.பி யின் கைதுடன் புலிகளின் ஒரு தரப்பினர் தமது கை ஓங்கி உள்ளதாகவும் தாமே எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஏகத்தலைமை என தெரிவித்து வருவதை உணர முடிகின்றது. யார் இந்த தலைமை? அவர்களுக்கு கே.பி யை தலைமையாக ஏற்றிருந்த தரப்பினர் எவ்வாறான வேட்டு வைக்கப்பபோகின்றார்கள் என்பது வெளிவரும்போது, புலிகளின் சுயரூபம் விளங்காத புலம்பெயர் பாமரத் தமிழ் மக்களில் பலருக்கு புரியும் என நம்பமுடியும். VIII

Read more...

13+ நடைமுறைப் படுத்தப்படுமென இந்தியாவிற்கு ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளார். -பைலா-

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி நாட்டின் ஜனாதிபதி இந்தியா அரசிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் குசைன் பைலா தெரிவித்துள்ளார்.

நேற்று 20ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது, கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இலங்கை அரசு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உடன் செய்து கொண்ட ஒப்பமந்தம் யாது? என ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பதிலளித்த, பிரதி வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா, மேற்கண்ட உறுதி மொழியை ஜனாதிபதி இந்திய அரசிற்கு வழங்கியுள்ளதுடன், 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால்சென்று (13+) பொருத்தமான தீர்வொன்றை வழங்குவதாகவும் உறிதியளித்துள்ளார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Read more...

துஸ்பியோகம் ஒன்றை விசாரணை செய்யச் சென்ற பொலிஸார் பாலியல்துஸ்பிரயோகம்.

11 வயது சிறுமி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோகம் ஒன்று தொடர்பான விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பொல்பிட்டிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்வத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்படி பிரதேசத்தில் உள்ள சிறுமி ஒருவர் 53 வயதுடைய நபர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக இம்மாதம் 10ம் திகதி பொல்பிட்டிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 12ம் திகதி இரு பொலிஸ் அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இரு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பெற்றோரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களது வாய்முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது 11 வயது சிறுமியை விசாரணைசெய்த அடுத்த பொலிஸ்காரர் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆட்கள் இல்லாத குறிப்பிட்ட வீட்டை காட்டுமாறு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற பொலிஸ் காரரும் சிறுமியும் குறிப்பிடத்தக்களவு நேரமாகியும் திருப்பி வராததையடுத்து அங்கு விரைந்த பெற்றோர் பொலிஸ்காரர் தமது 11 மகளை கட்டியணைத்து சில்மிசம் புரிவதை கண்டுள்ளனர். சம்பவத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் இரு பொலிஸாரையும் தாறுமாறாக பேசிக்கலைத்துள்ளனர்.

மறுநாள் பொலிஸாரின் இச்செயல் தொடர்பாக மஹவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹப்புஅராச்சியிடம் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த பொலிஸாகாரர் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

Read more...

எஸ்.எஸ்.பி வாஸின் மனைவி கைது.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி கைது செய்யப்பட்டு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து குடையப்படுவதாக பொலிஸ் பேச்சாளார் தெரிவித்துள்ளதுடன் அவர் இன்று பிற்பகலுக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட நிபுண ராமநாயக்கவை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வைத்து பொலிஸ் அதிகாரியின் மகன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் தாக்கியதாகவும், ஒரு தாயிடம் இருந்து கேட்கக்கூடாத வார்த்தைப் பிரயோகங்களை தான் பொலிஸ் அதிகாரியின் மனைவியிடம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Wednesday, August 19, 2009

எண்ணெய் திடீர் விலையேற்றம்.

மசகு எண்ணெய் விலை திடீரென்று பீப்பா 70 டொலரிலிருந்து 72.67 அமெரிக்க டொலருக்குப் பாய்ந்துள்ளது. அமெரிக்கப் பெற்ரோல் நிறுவனத்தின் சேமிப்பு 8.4 மில்லியன் பீப்பாக்களால் குறைந்துவிட்டது என்ற செய்தி வந்ததுதான் தாமதம் இவ்விலையேற்றம் நடைபெற்றுள்ளது. இத்திடீர் விலைமாற்றம் உலகபெருளாதாரத்தில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கட்டாமாம்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

மலேசியா அருகே நடுக்கடலில் கப்பல்கள் மோதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள அபுதாபியில் இருந்து 58 ஆயிரம் டன் நாப்தா ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று மலேசியா அருகே வந்த போது இன்னொரு சரக்கு கப்பல் மீது மோதியது. இதை தொடர்ந்து அந்த கப்பலில் தீ பிடித்து கொண்டது. இருந்தபோதிலும் கடலில் நாப்தா கலக்கவில்லை. அந்த கடல் வழியில் கப்பல்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த கப்பலில் 25 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 9 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

Read more...

வாஸின் மகன் சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார். 13ம் சந்தேக நபரும் கைது.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எஸ்.பி யின் மகன் ரவிந்து குணவர்த்தன களுபோவில வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்.

அதே நேரம் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு பொலிஸ் காண்டபிள் இன்று கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இச்சமப்பவத்தின் சந்தேக நபர்கள் பட்டியலில் எஸ்.எஸ்.பி வாஸ் குணவர்த்தனவின் பெயர் இணைக்கப்படாதது குறித்து நீதிவான் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த பொலிஸார், வாஸ் குணவர்த்தன இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதற்கான எவ்வித சான்றுகளும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

Read more...

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

நாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரசிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

Tuesday, August 18, 2009

சட்டம், ஒழுங்குக்கு அப்பால் செயற்பட எவருக்கும் இடமளிக்க முடியாது

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

இந்நாட்டில் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் செயற்பட எவருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களைப் பாதுகாக்கவும் நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தோற்கடிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் மீண்டும் அணி சேர்கின்றார்களா என்பதை மிகுந்த அவதானத்துடன் நோக்கி வருகின்றோம். இதேவேளை வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதனால் இலங்கையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை முறியடிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை சப்ரகமுவ மாகாண சர்வமதத் தலைவர்களும், மாகாண மக்களும் இணைந்து பாராட்டு சாசன பத்திரம் மற்றும் பேரானந்தி விருது வழங்கி கெளரவித்த வைபவம் இரத்தினபுரி சமன் தேவாலய வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் யுத்தத்தில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் தம்முயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் ஊனமுற்றிருக்கிறார்கள்.

மாவிலாற்றை விடுவிக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 16 ஆம் திகதியுடன் 3 வருடங்கள் நிறைவுற்றன. மூன்று வருட காலப்பகுதியில் பயங்கரவாதிகளையும் அவர்களது தலைவர்களையும் தோற்கடித்துள்ளோம். இப்பணி நிறைவுற்று மூன்று மாதங்களாகின்றன. இவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இப்பாரிய பணியை எம்மால் செய்யமுடியும் என்பதை உலகில் எவரும் நம்பவில்லை.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையைக் கண்டு பயங்கரவாதிகள் ஆச்சரியமடைந்தார்கள். நாம் அவர்களை மட்டுமல்லாமல் முழு உலகையுமே ஆச்சரியப்படச் செய்தோம். அதனால் உலகம் இன்று எம்மை வலுவான புதுமை மிக்க நாட்டினராகப் பார்க்கின்றனர். அப்படியிருந்தும் நாம் இந்த வெற்றியைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்ததோடு எம்பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தலைவர்களையும், அவர்களது தற்கொலையாளர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பு பூரணத்துவம் அடையாது. அதன் காரணத்தினால் இதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை அற்ப அரசியல் லாபம் பெறும் நோக்கில் முன்னெடு த்திருந்தால் இப்பாரிய வெற்றியை எம்மால் பெற்றிருக்கவே முடியாது.

மாறாக நாம் பாரிய நோக்கத்தை முன்நிறுத்தியே இந்நடவடிக்கையை முன்னெடுத்தோம். அதுவே தேசிய பாதுகாப்பு ஆகும். நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றதுடன் மக்கள் பாரிய சந்தோஷத்திற்கு உள்ளாகினர். இருந்தும் நாம் நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றில் செலுத்தி வருகின்ற கவனத்தில் சிறிதளவேனும் குறைவை ஏற்படுத்தவில்லை.

உலக வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாம் நாட்டை விடுவித்திருக்கிறோம். அது எமக்கு மிகவும் பெறுமதியானது.

நாம் பொருளாதார ரீதியாக வலுவான தேசமாக மாறவேண்டும். நாட்டை விடுவிக்கவென மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த நாம் இப்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோம்.

எவரிடமும் கையேந்தாமல் வாழக் கூடிய நாட்டைத் துரிதகதியில் கட்டியெழுப்புவது அவசியம். பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியது போல் நாட்டையும், கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதனை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேநேரம் எம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும். எம்மிடம் காணப்படுகின்ற ஒழுக்கம் காரணமாக உலக நாடுகளின் கெளரவத்தைக் கடந்த காலங்களில் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

என்றாலும் இந்த ஒழுக்க நிலை தொடர்ந்தும் காணப்பட வேண்டும். ஒரு சிலரின் தவறான செயற்பாடுகள் முழு நாட்டிலுமே அபகீர்த்தியை தேடித்தர முடியும். தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத எவரும் முப்படையிலோ, பொலிஸ் துறையிலோ கடமையாற்ற முடியாது. இந்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் யாரும் செல்லவும் முடியாது.

இந்த புனித பூமியில் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அளிக்கப்படும் கெளரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சப்ரகமுவ மாகாண அஸ்கிரிய பீட சங்க நாயக்க வேஎல்ல அத்த தஸ்ஸிதேரர் பாராட்டு சாசனப் பத்திரத்தையும், அமைச்சர் டி. டப்ளியூ. ஜே. செனவிரட்னவும், முதலமைச்சர் மஹீபால ஹேரத்தும் பேரானந்த விருதையும் வழங்கி கெளரவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கூட்டுப்படைத் தளபதி, முன்னாள் இராணுவ தளபதி, முன்னாள் கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவு தளபதி ஆகியோருக்கும் பாராட்டு சாசனப் பத்திரங்களும், பேரானந்த விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான பவித்ராதேவி வன்னியாரச்சி, பிரேமலால் ஜயசேகர, ஜயதிஸ்ஸ ரணவீர, மஹிந்த ரத்னதிலக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி தினகரன்

Read more...

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடந்த 3 மாதங்களாக இலங்கை கடற்படையினர் மீனவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், வலையில் உள்ள மீன்களை கொள்ளையடிப்பதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இதனால் மீனவர்கள் பெரும் தொழில் நஷ்டம் ஏற்பட்டதுடன், மீன்பிடிக்க செல்லவும் அச்சப்பட்டனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மீனவர்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனை கண்டித்தும், இந்திய_இலங்கை மீனவர்கள் இருநாட்டு எல்லையிலும் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையை பெற்று தந்து சுமூகமாக இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க மத்திய_மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆகஸ்ட் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது.

மேலும் இப்போராட்டத்தில் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஆதரவு கோரி அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது என தீர்மானித்துள்ளனர். இப்போராட்டத்தினால் சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட உள்ளது. எனவே மத்திய_மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தினபூமி

Read more...

எஸ்.எஸ்.பி மகன் விளக்கமறியல்: மனைவி கைது செய்யப்படுவார். பொலிஸ் பேச்சாளர்.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பொருட்டு பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழியில் விடுக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையின் சாராம்சம் கீழே.

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று 17ம் திகதி கடுவல மாவட்ட நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறுபட்ட செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை விளக்கும் பொருட்டு இவ் அறிக்கை வெளியிடப்படுகின்றது.

விசேட பொலிஸ் அணி ஒன்றினால் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளில், சில முக்கியமான சாட்சிகள் நகரப்பகுதியில் இருந்து வெளியே காணப்படுகின்றமையால் சாட்சிகளை பதிவு செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸ் குழுவினர் 12 சந்தேக நபர்களை கைது செய்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 உதவி பொலிஸ் பரிட்சகர்கள், 7 பொலிஸ் கொஸ்தாபல்கள் மற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் அடங்குவதுடன் அவர்கள் நேற்று 17ம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

பிரதான சந்தேக நபர் களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பி அறிக்கை ஊடாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டபோது நோயாளியின் நிலமையை நேரடியாக சென்று பார்வையிடுமாறு கடுவல நீதிமன்று கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றிற்கு அறிவுறித்தியது.

அவ் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நேற்று இரவு களுபோவில வைத்தியாசாலைக்குச் சென்ற கங்கொடவில நீதிவான் சந்தேக நபரின் நிலமைகளை பார்வையிட்டதுடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அவ் அறிவுறுத்தலை தொடர்ந்து அங்கு விரைந்த சிறைக்காவலர்கள் முதலாம் சந்தேக நபரான ரவிந்து குணவர்த்தனவை தமது காவலுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், தடுப்புக்காவலில் சந்தேக நபர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மனைவியை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்பொருட்டு பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read more...

கிழக்கில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் குழு ஒன்றை குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். ஏழுபேர் கொண்ட இந்திய வியாபாரிகள் குழு கிழக்கு பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே பிடிபட்டதாக குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com