Thursday, August 6, 2009

40,000 இலங்கையர்களுக்கு இத்தாலியில் வதிவு அனுமதி

சட்டவிரோதமாக சென்றோருக்கு மனிதாபிமான அணுகுமுறை
சட்ட விரோதமாக இத்தாலி யில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வதிவு அனுமதியை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. “நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலத்தின் ஊடாக இவ் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக சுமார் 4,000 முதல் 40,000 இலங்கையர்கள் நன்மையடையவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்தாலியில் இவ்வாறு தங்கியிருக்கும் இலங்கையர் புதிய சட்ட மூலம் அமுலுக்கு வரும் போது தமக்கு புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதன் காரணமாக சட்ட மூலம் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு 2009 ஓகஸ்ட் 3 ஆம் திகதி இத்தாலிய ஜனாதிபதியினால் கைச்சாத்தும் இடப்பட்டுள்ளது.

உத்தியோக பூர்வமாக சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் 15 நாட்களில் அமுலுக்கு வரும்.

இச் சட்டத்தின் பிரகாரம் இத்தாலியின் வீட்டுப் பணி உதவியாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு வயோதிபர்களு க்கு பராமரிப்பு உதவிகளைச் செய்வோர் போன்றோரை மட்டுமே உள்ளடக்குகிறது. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வதிவு அனுமதியை நீடிப்பதற் கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் இத்தாலிய அரசு தீர்மானித்துள்ளது.

இத்தாலிய வீடுகளில் பெருமளவிலான இலங்கையர்கள், வீட்டுப் பணியாளர்களாகவும், உதவிச் சேவை வழங்கு வோராகவும் உள்ளனர். இத்தாலிய தொழில் வழங்குனர்களின் நம்பிக்கையை யும் பெற்றுள்ள நிலையில் இவர்களை தொடர்ந்தும் தொழிலுக்கு அமர்த்துவதிலும் ஆர்வம் காட்டு கின்றனர். இதனை இச் சட்ட மூலத்தின் ஊடாக இலங்கை யர்கள் நன்மையடைவர்.

இத்தாலியின் உள்நாட்டலுவல் கள் அமைச்சர் றொபேட்டோ மரோணி மற்றும் பொதுநல சேவை அமைச்சர் மொறிசியோ சக்கோணி ஆகியோர் இத்தாலி யில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சகல வெளிநாட்டவர்களும் குற்றவியல் தவறை புரிந்துள்ளார்கள் என “நெருக்கடித் தவிர்ப்பு” சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

சட்ட மூலத்தில் உள்ள சில சரத்துக்கள் ஐரோப்பிய அரசியல் யாப்புக்கு ஒவ்வாதது என்ற கருத்துபட இத்தாலிய வெளிநாட்டமைச்சுக்கு ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் எடுத்துக் கூறியிருந்தது.

இத்தாலிய ஜனாதிபதி ஜியோர்ஜியோ நபோலிரானோவின் இசைவிற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது மேற்படி கருத்துகள் காரணமாக மேல் மற்றும் கீழ் சபைகளின் மீளாய்வுக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

வயது முதிர்ந்தவர்களையும், வலது குறைந்தவர்க ளையும் பராமரிப்புக்க அரசு மாற்று வழிவகைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாகையாலும், இது இத்தாலிய பொருளாதாரத்திற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் சில அரசியல் கட்சிகளிலும் எதிர்ப்புகள் இருந்தன.

அரசியல் கட்சிகளினதும், தூதரகங்களினதும் எதிர்புகளினாலும் முதியோருக்கான தாக்கம் என்பதையும் கருத்தில் கொண்டும், இத்தாலி அரசு ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து வந்து தொழில் புரியும் பல்லாயிரக்கணக்கான வீட்டுப் பணியாளர்கள், சேவை புரிவோர் தொடர்ந்தும் தங்குவதற்காக சட்ட ரீதியாக இத்தாலியில் தங்கும் விதத்தில் விசேட வதிவு அனுமதி வழங்கும் விதத்தில் முன்னைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குள் இத்தாலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வீட்டுப் பணியாளர் அல்லது பராமரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர் ஒரு குடும்பம் என்ற வகையில் ஒரு வதிவு அனுமதி பத்திரம் அல்லது தனி நபர் என்ற வகையில் இரண்டு வதிவு அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிப்பவர் 2009 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக சேவையில் அமர்த்தப்பட்டுள்ள மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையர்களின் நன்மை கருதி இத்தாலி ரோமிலுள்ள இலங்கைத் தூதரகத்தை இரவு 10 மணி வரை திறந்து வைக்குமாறும் வெளிநாட்டமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
நன்றி தினகரன்

Read more...

கே.பி பாங்கொக்கில் கைது?

புலிகளியக்கத்தின் தற்போதைய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் அல்லது கேபி என அழைக்கப்படும் சண்முகம் குமரன் தர்மலிங்கம் வயது(49) தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

கல்வி நிவாரண செயற்றிட்டம். - புன்னியாமீன் -

இலங்கையில் யுத்த நிலமை காரணமாக இடம் பெயர்ந்து தற்போது வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக இலங்கையில் சிந்தனை வட்டம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் விடுத்;திருந்த பத்திரிகை அறிக்கை வருமாறு

வடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த சிந்தனைவட்டம் திட்டமிட்ட செயற்றிட்டங்களை வகுத்து விளம்பர நோக்கமின்றி உணர்வுபூர்வமாக செயற்படுத்தி வருகின்றது.

தற்போது செயற்படுத்தப்பட்டு முடிவுறும் கட்டத்திலுள்ள முதற்கட்ட செயற்றிட்டத்துக்கு லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்தினதும், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தினதும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவிகள் பெறப்பட்டு சுமார் இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்: நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி வருகின்றது. தொடர்ந்து க.பொ.த (சாதாரண தரம்) மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டிய திட்டமொன்றையும் வகுத்து வருகின்றது.

இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'பூஜ்ய கல்வி அலகை” எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இன்று அகதிகளாக நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக்கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதிமுகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பாராளுமன்றத்தில் வாய்மூலக் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர் எனத் தெரிவித்தார். 60ஆயிரம் மாணவர் எனும்போது நாளைய சமூகத்தை கட்டியெழுப்பக் கூடிய சக்திகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரிநிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இடம் பெயர்ந்துள்ள மாணவர்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளுள் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த மாணவர்களை அவதானிக்குமிடத்து, அவர்களில் அதிகளவிலான மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடருத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. எனவே மாணவர்களின் உள நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்புபடுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ளக்கூடிய சூழலொன்று இல்லாதிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம், இங்குள்ள பாடசாலைகளில் பெரும்பாலானவை முழுநேரப் பாடசாலைகளாக அன்றி பகுதிநேரப் பாடசாலைகளாகவே இயங்குகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய ஒரு அவசியப்பாடு அனைவருக்கும் காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் இலவசப் பாடநூல்கள், சீருடைகள் போன்றனவும் சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களின் நலனைப் பேணும்முகமாக பல்வேறுபட்ட தொண்டர் நிறுவனங்களும் உதவிகளைச் செய்து வருகின்றன. ஆனால், இம்மாணவர்களின் கல்வி நிலையை பேணக்கூடிய வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளை நலன்புரி அமைப்புகள் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மாணவர்களின் தேவை குறித்த உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதுடன் தமது பணியினை அவை வரையறுத்துக் கொள்கின்றன.

மேற்குறிப்பிட்ட நிலைகளைக் கருத்திற்கொண்டு ஒரு செயற்றிட்டத்திற்கமைய சிந்தனைவட்டம் முதற் கட்டமாக தரம் 05 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டி திட்டமிட்ட செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அரசாங்க பரீட்சையொன்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்ற எண்ணத்திற்கமையவே முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை சிந்தனைவட்டம் தேர்ந்தெடுத்தது.

இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதேநேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையுமாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் 5000 ரூபாய் பெறுமதிமிக்க புலமைப்பரிசில் பணம் வழங்கும். அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிட்டுகின்றது.

தரம் 5ஐச் சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற அடிப்படையிலும் இப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் முதற் கட்டமாக தரம் 05ஐ எமது செயற்றிட்டத்துக்காக தேர்ந்தெடுத்தோம்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும். இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் மிகவும் திறன்பட வழிநடத்துகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான அடிப்படை நிதியுதவியினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற்” இணையத்தளத்தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் “அகிலன் பவுண்டேஷன்” மற்றும் “லிட்டில் எய்ட்” நிறுவனம் ஆகியவற்றுடன் சில பரோபகாரிகளும் வழங்கினர்.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செயற்றிட்டத்துக்கு 7 இலட்சம் ரூபாய்களை “மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்” வழங்கியது. மீதித் தொகையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்தின் முயற்சியின் பிரகாரம் தேசம்நெற் இரண்டு லட்சம் ரூபாய்களையும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மூவாயிரம் பவுண்களையும், லண்டன் லிட்டில் எய்ட் நிறுவனம் ஆயிரம் பவுண்களையும் பொறுப்பேற்றன. லண்டனைச் சேர்ந்த வேறும் சில பரோபகாரிகள் மீதமான ஆயிரம் பவுண்களையும் தர முன்வந்துள்ளனர். எனவே, மிகவும் ஒரு குறுகிய வட்;டத்திற்குள்ளே நிதியுதவி பெறப்பட்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தரம் 05 பாடத்திட்டத்திற்கு அமைய மாதிரி வினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக விநியோகித்தல் போன்ற சகல கருமங்களையும் சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றது.

சிந்தனைவட்டத்தின் இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.இதன் காரணமாக எம்மால் அனுப்பப்படும் மாதிரிவினாத்தாள்களும் வழிகாட்டிப் புத்தகங்களும் நேரடியாக கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாணவர்களை சென்றடைகின்றன. இவை வலயம் 0, வலயம் 1, வலயம் 2, வலயம் 3, வலயம் 4,வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம், தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்படுகின்றன. எம்மால் வழங்கப்படும் மாதிரிவினாத்தாள்களை நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் கூடிய கரிசனை செலுத்தி மாணவர்களுக்கு வழங்கி வழிநடத்தி வருகின்றனர். சில பாடசாலைகளில் மாதிரிவினாத்தாள்கள் பரீட்சையாக நடத்தப்பட்டு புள்ளிகள் பதியப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிந்தனைவட்டம் ஆரம்ப கட்டமாக 1057 மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டி நூல்களையும் வழங்கியது. ஏப்ரல் மாதம் மத்தியில் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தையடுத்து நலன் புரிநிலையங்களுக்கு இடம்பெயர்ந்த மேலதிக 3800 மாணவர்களுக்கும் அடுத்த கட்டமாக இச்செயற்றிட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக 4872 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தரம் 05 மாணவர்களின் பரீட்சை இம்மாதம் 23ஆந் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சை முடிவடைந்த பின்பு க.பொ.த. (சா/தர) மாணவர்களுக்கான துரித மீட்டல் திட்டமொன்றினை செப்டம்பர் ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருகின்றது.

இலங்கைத் தமிழன் கல்வியால் தலைநிமிர்ந்தவன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டே கல்வித்துறையில் இவர்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. கல்வித் துறையில் தமிழ் சமூகத்தினர் பெற்ற வெற்றிகள் சர்வதேச ரீதியில் தமிழினத்தின் ஒரு தனித்துவத்திற்கு சான்று பகன்று நிற்கின்றது என்பதை யாராலும் மறுப்பதற்கியலாது. அண்மைக்கால யுத்த சூழ்நிலை வட புலத்தைச் சேர்ந்த தமிழர்களின் கல்வியில் பாரிய பின்னடைவொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அறிக்கையொன்றில் “வட தமிழர்களின் கல்வி பதினைந்தாண்டுகளுக்கு பின்தள்ளப்பட்டு விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே, தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக போராடும் அதேநேரத்தில் தற்போதைய சமூகத்தின் கல்வி வீழ்ந்துவிடாமல் காக்க வேண்டியதும் கடமையாகவே உள்ளது. வடபுலத்து அகதிமுகாம்களில் கல்வி பயிலும் மாணவர்களைப் பொருத்தமட்டில் அவர்களின் கல்வி அபிவிருத்தி என்பதைவிட கற்றவற்றை மறந்துவிடாது சாதாரண நிலையில் பரீட்சைகளை எதிர்கொள்ளக்கூடிய வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது படித்த ஒவ்வொரு தமிழனின் கடமை என்று துணிந்து கூறலாம். அரசியல் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டபோதிலும்கூட, வட புலத்து மாணவர்களின் கல்வியில் கட்சி, இயக்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒருமைப்பாடு காணப்பட வேண்டும். ஏனெனில், கல்வித்திட்டம் பொதுவானது. இதற்கான முயற்சிகள் செயல்திட்டங்கள் என்பன புத்திஜீவிகளின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சு கல்வித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து போலித்தனமாக அன்றி உணர்வுபூர்வமான முறையில் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்..

Read more...

ஆசிரியையை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கூட்டமைப்பு பா.உ கிசோர்.

தனது மகள் கல்வி பயிலும் றம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியை ஒருவரை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அவர்கள் வீதிவலமாக அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும் கிசோரது மகள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாகவும், அவ்வாறு அவர் காணாமல் போனதற்கு குறிப்பிட்ட ஆசிரியையும் உடந்தையாக இருந்ததாக ஆத்திரமடைந்த பா.உ, மகள் பாடசாலைக்கு வரும்போது அணிந்து வந்திருந்த பாடசாலைச் சீருடையை மறைத்துவைத்துச் சென்றுள்ள இடத்தை காண்பிக்குமாறு ஆசிரியையை ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

குற்றம் ஒன்று இழைக்கின்றவர்களுக்கு தண்டனை அளிக்க நீதிமன்றம் இருக்கின்றபோது சட்டத்தை பலவந்தமாக தமது கைகளில் எடுத்திருந்த புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கிசோர் அவர்கள், புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை தனது கையில் எடுத்துள்ளதாக இவ்விடயம் தொடர்பாக இலங்கைநெற் இற்கு கருத்து தெரிவித்த வவுனியா பிரதேசவாசி ஒருவர் கூறினார்.


Read more...

புளொட்டுக்கு ஆதரவாக சுயேட்சைக் குழு3 தேர்தலில் இருந்து வாபஸ்

வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாளை மறுதினம் 08.08.2009ம் திகதி இடம்பெற உள்ள தேர்தலில் புளொட் அமைப்பினரை ஆதரிக்கும் முகமாக சுயேட்சைக் குழு3 தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக, அக்குழுவின் தலைவர் எஸ். இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

24,626 வாக்காளர்களைக் கொண்ட உள்ளுராட்சி சபையின் 11 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக 6 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளன.

Read more...

நியூசிலாந்து செல்ல முற்பட்ட படகுடன் 32 பேர் கைது.

நீர்கொழும்பு, கம்மல்தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய படகொன்றில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட தமிழர்கள் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடிவரவு-குடியகல்வு சட்டத்தின் கீழ் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஐ.ம.சு.மு குற்றவியல் பதிவுகள் உள்ள எவரையும் தமது வேட்பாளர்களாக நிறுத்தாதாம்.

எதிர்வரும் தென்மாகாண சபைத் தேர்தலில் நீதிமன்றினால் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்ட, குற்றவியல் பதிவுகள் உள்ள எவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வேட்பாளர்களாக நிறுத்தமாட்டாது என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசிய அமைச்சர் சுசில பிறேம ஜெயந்த, நபர்களின் பிரபல்யத்தை நிராகரித்து இம் முடிவு கட்சியினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழரின் தார்மீகம்...பொதுநலம்...கலாச்சாரம்.. காக்கப்படவேண்டுமாயின்....வாரீர்..வாரீர் உதயசூரியனின் பொதுநலத்துள் வாரீர்..

தாய்மண்ணை நேசிக்கும் எம்மக்கள்
தமிழை சுவாசிக்கும் எம்மக்கள்
தன்னலமில்லா எம்மக்கள்
தனித்துவமான எம்மக்கள்

சுமைகளை சுமந்த எம்மக்கள்
சுயநலமறியாத எம்மக்கள்
சுகமான சுமைகளை தாங்கும் எம்மக்கள்
சுவடுகளை தடவிதழும்பு பார்த்த எம்மக்கள்

துயர்களை தீபத்தினுள் ஏற்றிய எம்மக்கள்
துஷ்டரை தூரவோ கலைத்த எம்மக்கள்
துயரப்பட்ட மக்களுக்காகவே எம்மக்கள்
தூயநீரை குடிக்க மறுத்த நம்மக்கள்

புகழை துறந்து நடை தளர்ந்த நம்மக்கள்
புவியின் ஈர்ப்பு சக்தியை அறிந்த நம்மக்கள்
புன்னகை தனை வீசிஏறிந்த எம்மக்கள்
புகழாரம் வேண்டாத நம் மக்கள்

மக்களை மதிப்பவர் யாரென்று அறிந்த எம்மக்கள்
மறவர்களை தமிழருக்காய் கொடுத்த எம்மக்கள்
மண்புமிகு மகுடம் சுமந்த எம்மக்கள்
மக்களை திசைமாற்றி கால் நடைகளாய்
மண்ணில் நடைபயில வைத்தவர் யாரென்று அறிந்த எம்மக்கள்...

அன்பான மக்களே .....
தமிழரின் காலச்சாரம்.... தார்மீகம்...
பொதுநலம் காக்கப்படவேண்டுமாயின்....வாரீர் வாரீர்
உதயசூரியனின் பொதுநலத்துள்..வாரீர்

உதயசூரியன் வந்துவிட்டால்
உதயமாகும் கண்களில் வெளிச்சம்
உழைக்கும் கரங்கள் ஒன்றுசேர்ந்து
உவமயமாயகும் மக்களின் எழிர்ச்சி
உரக்கசொல்வோம் உதயசூரியனை
உச்சரிப்போம் உச்சரிப்போம்
உறவுகளாகிய நாம்
உறுதிéண்டு உச்சரிப்போம்
உண்மைகள் வாழும் வரை....வாரீர்
உதயசூரியனை ஆதரிப்பீர்... ஆதரிப்பீர்...

அன்று தொடக்கம் இன்றுவரை ஆதரித்த உதயசூரியனை நாம் என்றும் ஆதரிப்போம்
வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் மக்கள்

கிளி-முல்லை மக்களின் அன்பான வேண்டுகோள்

Read more...

ஜனாதிபதிக்கு எதிரான பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது.

பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் ஒன்றியத்தைச் சேர்த்த இரு மாணவர்கள் நேற்று இரவு கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான பிரச்சாரங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள றுகுனு பல்கலைக்கழக மாணவ தலைவன் சஞ்ஜீவ மகேஸ் குமார, மாணவர்களுக்கு எதிரான இவ் நடவடிக்கையை அரசு பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டுள்தாகவும், தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை எதிர்த்து அனைத்து பல்கலைகழகங்களும் இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை நாடாத்த ஏற்பாடாகியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ஆனால் முறைகேடுகளுக்கு எதிரா குரல் கொடுக்க முனையும் போது அதை அரசு அரசுக்கு எதிரான புரட்சி என முத்திரை குத்த முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

Read more...

வவுனியா கூமாங்குளத்திலிருந்து 366 கிலோ வெடிமருந்துகள் மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 366 கிலோ எடையுள்ள சி – 4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகளை விசேட பொலிஸ் குழு கைப்பற்றியுள்ளது.

நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பெருந்தொகையான வெடிமருந்துகள் மீட் டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மேற்படி நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்து வவுனியா நிவாரணக் கிராமத்தின் நான்காவது பிரிவிலிருந்து 35 வயதுடைய விஜயன் என்று அழைக்கப்படும் கந்தைய்யா விஜயகுமார் என்பவரை கைது செய்த பொலிஸார் கடுமையான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது அவர் வழங்கிய தகவலின் படி கூமாங்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட் டிருந்த 366 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த நபர் வழங்கிய தகவல்களின் படி பூந்தோட்டம் பிரதேசத்திலிருந்து 24 வயதுடைய கரன் என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சிவகரன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தினகரன்

Read more...

Wednesday, August 5, 2009

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

05-08-2009

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,

இலங்கை ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு


மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே!

சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஒரு சிறு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் அரச கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பாக ஜனநாயக கோட்பாடுகள் மிகவெட்கப்படக் கூடிய முறையில் மீறப்படுவதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். மந்திரி சபை உறுப்பினர்கள் பலர் வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து தம்மை மிக மலிவாக்கிக் கொண்டனர். நீங்கள் நாட்டின் தலைவராக இருக்கும் இவ்வேளையில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது மிக்க வேதனைக்குரியதாகும். இத்தகைய செயல்கள் ஒருபோதும் மக்களால் பாராட்டப்படமாட்டாது. மொத்தத்தில் பெருமைமிக்க கடந்த காலத்தை கொண்ட ஓர் அரசுக்கு அபகீர்த்தியையே கொண்டு வரும். மிகப் பலம் கொண்ட அரசின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு தோற்பதால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை. நாடுதான் என்னை இழக்கப் போகிறது.


ஏறக்குறைய தடுப்புக் காவலில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில குடும்பங்களை பல மாதங்களாக அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட அற்ற நிலையில் வைத்திருந்துவிட்டு வடபகுதி அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரிலேயே விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்னை குழப்புகிறது. நீங்கள் ஏனையவர்களையும் ஒரே நேரத்தில் விடுவிக்க தவறுவீர்களேயானால் உங்களின் நடவடிக்கை எதிர்பார்ப்பதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தேர்தல் சம்பந்தமாக நான் உங்களிடம் ஒரேயொரு விடயத்தை மட்டுமே கேட்கிறேன். ஒரு சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துமாறு கட்டளையிடுங்கள். ஏனெனில் வாக்களிப்பு அட்டைகளை முறையற்ற வகையிலும் பணத்துக்காகவும் பெருமளவில் வாங்கப்படுகிறது. இது ஆள்மாறாட்டத்துக்கான செயலாகும். அதில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் களத்தில் உள்ளார்.

எனக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் உங்கள் நற்பெயரை காப்பாற்ற வேண்டுமென்பதே


நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

Read more...

வட மாகாண வாக்காளர்கள் தேர்தலிலும் பார்க்க இடைத்தங்கல் முகாம் மக்கள் மீதே அதிக அக்கறை கொண்டுள்ளனர். பெப்ரல்


யாழ் மற்றும் வவுனியா வில் உள்ள வாக்காளர்கள் இடம்பெற இருக்கும் தேர்தலிலும் பார்க்க வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமது உறவினர்கள் மீதே மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக பெப்ரல் எனப்படும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. றொஸான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்ததாக குறிப்பிட்ட அவர், வவுனியா, யாழ் தேர்தல்களுக்கான தேர்தல் வன்முறைகள் மிக குறைவாகவே பதிவாகியுள்ளது. அதேநேரம் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வன்முறைகள் மிக அதிகமாக காணப்படுகின்றது. அங்கு ஓர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் 85 வன்செயல்கள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரச உடமைகள் ஆளும் தரப்பினரால் மிதமிஞ்சி பாவிக்கப்பட்டமை, சட்டவிரோத பிரச்சார முறைகள் என்பன அதிகமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Read more...

நம்பகத் தன்மையற்ற அரசியல் கட்சிகள்

ஊவா மாகாண சபைத் தேர் தலிலும் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கின்றன.

ரணிலின் தலைமையிலேயே தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் டீ. எம். சுவாமிநாதன் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலமே தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பேசி வருகின்றார்கள்.

மக்களிடம் வாக்குக் கேட்கும் போது அம் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

இப்போதைய பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலனுக்காக என்ன செய்தன என்பதையும் இப் போது என்ன செய்கின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறி வாக்குக் கேட்பது தான் நியாயமானது.

ஆனால் இவ்விரு கட்சிகளும் அவ்வாறான விளக்கம் எதையும் தேர்தல் மேடைகளில் கூறவில்லை. கூறுவதற்கு எதுவும் இவற்றிடம் இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியே ற்ற பின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தார். இது இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை நடைமுறைப் படுத்துவதற் கான குழுவல்ல.

எல்லா அரசியல் கட்சிகளினதும் ஆலோசனைகளைக் கேட்டறிந்து தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து ஜனாதிபதி யிடம் கையளிப்பதற்கான குழு. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையொன்று நடைபெறும் பட்சத்தில் இத் தீர்வுத் திட்டம் அரசாங்க தரப்பு ஆவணமாக முன்வைக்கப்படலாம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீர்வு க்கான அதன் ஆலோசனையைச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரிவிக்க வேண் டும் என்பதே எதிர்பார்ப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளைச் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வில் உண் மையாகவே இக் கட்சிகளுக்கு அக்கறை உண்டென்றால் ஆலோசனைகளைக் குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அக்கறை இல்லாததால் இவற்றிடம் தீர்வுத் திட்டம் இல்லை. அதனால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஆலோசனைகளை அனுப்பவில்லை.

இரண்டு கட்சிகளிடமும் அரசியல் தீர்வுக்கான திட்டம் எதுவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான தீர்வுத் திட்டமொன்றை இனிமேல் தான் தயாரிக்கப் போகின்றதாம்.

இப்போதைய பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு ஐந்து வருட காலமாக அரசியல் தீர்வில் அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு இப்போது அது பற்றிப் பேசுகின்றார்கள். அரசியல் தீர்வு பற் றிப் பேசுவதற்காக ஜனாதிபதி அழைத்த ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டு, ஜனாதிபதியுடன் பேசப் போவதாக இப்போது சொல்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று வரை இன பிரச்சினைக்கான அதன் தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தீர்வுத் திட்டம் இருந்தால் தானே வெளிப்படுத்துவதற்கு. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினை சிறுபான்மையினரின் வாக்குகளுக்கான துரும்பு. அதற்குத் தீர்வு காணும் அக்கறை இக்கட்சிக்குச் சிறிதளவும் இல்லை.

இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்பதற்கு முன் தமது நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும். அரசியல் வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான திட்ட மெதையும் முன்வைக்காததும் அரசியல் தீர் வுக்கான முயற்சிகளுக்குக் குந்தகமாகச் செய ற்பட்டு அவற்றைச் சீர்குலைத்ததுமான ஐக்கிய தேசியக் கட்சியும், அரசியல் தீர்வுக்காக எந்தக் காலத்திலும் கருத்தீடுபாட்டுடன் செய ற்படாததும் புலிகளுடன் சேர்ந்து தமிழ் மக்க ளுக்குத் தாங்கொணாத் துன்பத்தையும் பேர ழிவையும் ஏற்படுத்தியதுமான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பும் இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை.

தினகரன் ஆசிரியர் தலையங்கம்

Read more...

வவுனியா தென்கிழக்கு பிராந்திய மக்கள் நல ஒன்றியம் தேர்தலில் புளொட் அமைப்புக்கு ஆதரவு!!

எதிர்வரும் வவுனியா நகரசபை தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரை எமது பிரதேசத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வவுனியா தென்கிழக்கு பிரதேச மக்கள் நல ஒன்றியம் ஆகிய நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்திய இராணுவம் எம்மை விட்டு விலகிய பின்னர் இன்றுவரை எமது பிரதேசம் போரின் வடுக்களை காணாமல் உள்ளது என்றால் அதற்கு பிரதான காரணம் புளொட் அமைப்பினரே.

எமது பகுதியில் இருபது வருடங்களாக சுற்றிவளைப்புகள் இல்லை. இராணுவ கெடுபிடிகள் இல்லை. படுகொலைகள் இல்லை. இறுதியில் முட்கம்பி வேலிகள் அமைத்த மனித தடுப்பு முகாம்களும் இல்லை. இத்தனைக்கும் காரணம் புளொட் அமைப்பினர் எமது மக்களுக்கு வழங்கி வந்த அரசியல் தலைமைத்துவமே. நாங்கள் சகஜ வாழ்க்கையை அனுபவித்தோம். கல்வி நடவடிக்கைகள் சீராக இயங்கின. விவசாயமும் ஏனைய தொழில்களும் தடங்கல் இன்றி தொடர்ந்தன. எமது பகுதியின் அபிவிருத்தியும் தொடர்ந்தது. அதே நேரத்தில் எமது இனத்தின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி நடாத்தபட்ட வெகுஜன ஜனநாயக போராட்டங்களிலும் நாம் எமது பங்களிப்பை செலுத்தி வந்தோம்.

புளொட் அமைப்பினர் என்றுமே தவறுகள் இளைக்காதவர்கள் என்று சொல்ல நாம் முன்வரவில்லை ஆனால் அதையும் தாண்டி அவர்கள் எமக்காக செய்த தியாகங்கள், கொண்டிருந்த அர்ப்பணிப்புகள், நல்கியிருந்த சேவைகள் என்பவைதான் எம் கண் முன்னால் தெரிகின்றன.

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு
என்ற கூற்றுக்கு இணங்க என்றும் எம்முடனேயே கலந்திருக்கும் புளொட் அமைப்பினரை ஆதரிப்பதே காலத்தால் எமக்கு இடப்பட்ட பணி என கருதுகிறோம். எனவே தேர்தல் நாளன்று உங்கள் வாக்குகளை தவறாமல் பயன்படுத்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் விட்ட தவறை மீண்டும் ஏற்படுத்தி, எதிர்கால அபிவிருத்தியில் எமது பிரதேசம் புறக்கணிக்கப்படாமல் இருக்க, தொலைநோக்கோடு செயற்படுவோம்.

இணையத்தளங்களில் வலம்வரும் நீங்களும் எமது பிரதேசத்தவர்களனால் உங்கள் வீட்டார் அயலவர்கள் உறவினர்களுட ன் எமது தீர்மானத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

செயற்குழு -
வவுனியா தென்கிழக்கு பிரதேச நல ஒன்றியம்

Read more...

மடு தேவாலயத் திருவிழா நாளை ஆரம்பமாகின்றது.

மடு தேவாலய திருவிழா நாளை ஆரம்பமாக உள்ளது. கடந்த காலங்களில் இருந்த யுத்த சூழ்நிலையில் தேவாலயத்தின் திருவிழாவில் பல ஆண்டுகள் மக்கள் கலந்து கொள்ளாத நிலையில் இவ்வருடம் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அங்கு செல்வர் என எதிர்பார்க்கபடுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com