Monday, August 3, 2009

வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு 3 ஆண்டுகள் தேவை: கண்ணிவெடி அகற்றும் இந்தியக் கம்பனியின் பணிப்பாளர்

வன்னியை குடியிருப்புக்கான பகுதியாகப் பிரகடனப்படுத்த 3 ஆண்டுகள் தேவையென கண்ணிவெடி அகற்றும் இந்தியக் கம்பனியின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே.பூரி தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்ற ஒன்டரை முதல் இரண்டு வருடங்கள் தேவையெனக் கூறிய அவர், இதன் பின்னர், வன்னியை குடியிருப்புக்கான பகுதியாகப் பிரகடனப்படுத்த மேலும் ஒரு வருடம் தேவையெனவும் குறிப்பிட்டார்.

வடபகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 80க்கும் அதிகமான இந்திய முன்னாள் படையினர் குழுவொன்று கொழும்புக்கு புறப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழுவினர் இலங்கையில் ஏற்கனவே கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுடன் இணைந்து செயற்படுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலைச் சந்தேக நபர்களுக்கான வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். நீதிமன்று

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது மனைவி மற்றும் 39 பேரது கொலையின் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகநாதன் சுதாகரன் மற்றும் அனைவருக்கும் எதிரான வழக்கை உயர் நீதிமன்றில் காலதாமதம் இன்றி பதிவு செய்யுமாறு அனுராதபுர மஜிஸ்ரேட் றுசிரா வெலிவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உமர் ஹப்தாப், சுல்தான் மொஹிதீன், ஆப்தீன் முசாதீக், சுல்தான் முகமட் ஜலீல் உட்பட மேலும் சிலர் இக்கொலையின் சந்தேச நபர்களாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Read more...

பௌத்தசாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் மான் இறைச்சி கடத்திய ஐவர் கைது.

வான் ஒன்றில் மான் இறைச்சியை எடுத்துச் சென்ற ஐவரை உடவளவ தேசிய வன பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பௌத்த சாசன அமைச்சின் அலுவலர்கள் எனவும் அவர்களில் ஒருவர் அவ் அமைச்சின் உயர் அதிகாரி என்பதுடன் மேற்படி சட்டவிரோத இறைச்சி கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் அமைச்சினுடையது எனவும் தெரியவந்துள்ளது.

உடவளவ வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் உள்ள தனமல்வில வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி ஐவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின்போது கைப்பற்றப்பட்ட இறைச்சி உடவளவ வன சரணாலயத்தில் உள்ள மான் ஒன்றை கொன்று பெறப்பட்டதாக வெளிவந்துள்ளது.

வனவிலங்குகளை கொல்வது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக உள்ள நிலையில் பொறுப்பு மிக்க அமைச்சொன்றின் அதிகாரிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அமைச்சர் பியசிறி விஜயநாயக்க விற்கு எதிராக கொலைவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்ற மேல்மாகாண சபைத்தேர்தலின் ஜேவிபி யின் பிரதான வேட்பாளரான நந்தன பாலகே கொலை வழக்கு வெயாங்கொட பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் கொலைக் குற்றவாளிகளாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பியசிறி விஜயநாயக்க உட்பட பலர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளவர்களில் கிங்ஸ்லி கஸ்தூரியாராச்சி (மேல்மாகாண சபைத் தேர்தலின் ஐ.ம.சு.மு வேட்பாளர்), நெலும் மல்லவ ( மேல்மாகாண சபை உறுப்பினர்), ஆனந்த அசோக குமார (விமல் வீரவன்சவின் மைத்துனர்), ஆகியோரும் அடங்குகின்றனர்.

Read more...

Sunday, August 2, 2009

வேலை இழக்கின்றவர்களுக்கு காப்புறுதி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவு.

பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையிழந்துள்ள 50000 தொழிலாளர்களுக்கு தொழில் காப்புறுதி திட்டத்தின் ஊடாக மாதாந்த கொடுப்பனவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வரையப்பட்டுள்ள மேற்படி திட்டம் எதிர்வரும் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதுடன் தொழிலாளிகள் மாதாந்தம் 4000 ரூபாவில் இருந்து 12000 ரூபா வரைப் பெற தகுதியடைவர் எனக் கூறப்படுகின்றது.

மாதாந்தம் 20,000ரூ விற்கு குறைவான சம்பளத்துடன் வேலைசெய்து 180 நாட்களுக்கு குறைவான நாட்களில் வேலையை இழந்தவர்கள் மாத்திரம் இவ் உதவியை பெறமுடியும்.

இதற்கான பதிவுத் திகதி அறிவிக்கப்பட்டதும் தொழிலாளர்கள், நாராயன்பிட்டியில் உள்ள தொழிலாளர் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்.

கிளிநொச்சி அரச அதிபர் மீது தொடர்ந்தும் விசாரணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கடந்த வெள்ளிக் கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தரு கையில்:- பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் பல்வேறு

தொடர்புகளை வைத்திருந்தார் என்று தடுப்பு காவலில் உள்ள ஒரு புலி உறுப்பினர் தகவல்களை வழங்கினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பிலிருந்து வவுனியாவுக்குச் சென்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்

Read more...

தேர்தல் பிரசாரமாகியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் முகாம்களிலுள்ள உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் உறுதியளித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முகாம்களிலிருக்கும் மக்களை விரைவில் விடுவிப்பது தொடர்பாக விண்ணப்பப்படிவமொன்றும் விநியோகிக்கப்படுவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. முகாம்களிலுள்ளவர்களின் பெயர் விபரங்கள், எந்த முகாமில் உள்ளார்கள், முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுபவரைப் பொறுப்பேற்கும் நபர்களின் விபரங்கள் உள்ளிட்ட விடயங்கள் அந்த விண்ணப்பப்படிவத்தில் கோரப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாநகரசபைத் தேர்தல் வேட்பாளர் ராஜதுரை ரட்ணேஸ்வரன் என்பவரே இவ்வாறான விண்ணப்பப் படிவங்களை விநியோகிப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Read more...

ஐ.தே.கட்சியின் முக்கிய புள்ளி ஒன்று கட்சி தாவியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 26 வருடகால செயற்பாட்டாளரும், முன்னாள் தென் மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவரும், அக்கட்சியின் மாத்தறை அமைப்பாளருமான ஜெஸ்ரின் கலப்பதி இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தாவியுள்ளார். தனது கட்சிப் பதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்கவிடம் பாரமளித்து கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள ஜெஸ்ரின், எதிர்வரும் தேர்தலில் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read more...

பணம்கொடுத்து முகாம்களிலிருந்து 50,000 பேர் வெளியேற்றம்

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட
தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்துத் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுசென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களிடம் 100,000 ரூபா முதல் 10,000 ரூபாவரை அறவிட்டுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு முகவர்கள் செயற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதில் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் தொடர்புபட்டிருப்பதாக கடந்த வாரம் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், எவ்வளவு பேர் இவ்வாறு பணம் கொடுத்து நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறினார்கள் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை உறுதியாகத் தெரியவில்லையென வவுனியாப் பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் லியூகே கூறினார்.

இவ்வாறு வெளியேறியவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

புதிய விடியலை உறுதி செய்வோம்.

எதிர்கொள்ளப் போகும் தேர்தல்களின் ஊடாக 'புதிய விடியலை உறுதி செய்வோம்' எனும் தலைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கனடாக் கிளையினர் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப் பிரசுரத்தின் முழுவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.


படங்களின் மேல் clik பண்ணவும்


Read more...

இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்கா செயற்படும் - இப்ராகிம்

இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து தென்னாபிரிக்கா செயற்படும் என தென்னாபிரிக்கா அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு உதவி வெளிநாட்டு அமைச்சர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதி சிறந்த அரசியல் தீர்வை முன்வைப்பது தொடர்பாக அவருக்கு ஆலோசனைகளை தென்னாபிரிக்கா அரசு கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம்.

கனகராயன்குளம் பிரதேசத்தில் புதியதோர் பொலிஸ் நிலையமும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் நேற்று (01.08.2009) பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது வன்னி விடுவிக்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்ட ஆறாவது பொலிஸ் நிலையமாகும்.

Read more...

இந்திய வைத்தியசாலைகள் மேலும் இரு மாதங்கள் இயங்கும்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு இலங்கையில் கள வைத்தியசாலைகளை அமைத்துள்ள இந்திய இராணுவத்தினர் மேலும் இருமாதங்களுக்கு தமது சேவைகளை வழங்குவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுதலின் பேரில் இருமாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய அரசு மேற்படி வைத்திய சேவையின் ஊடாக இடம்பெயர்ந்துள்ள 21000 மக்களுக்கு சேவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் வைத்திய பரிகாரங்களின் போது துப்பாக்கி சூட்டுக்காயங்கள், எலும்பு முறிவு என்பனவற்றிற்கான வைத்தியம் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள 60 பேர் கொண்ட வைத்தியக்குழுவில் சத்திரசிகிச்சை நிபுணர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களும் அடங்குகின்றனர்.

Read more...

யாழ் கொழும்பு பஸ் இன்று காலை புறப்பட்டது.

யாழ் கொழும்பு சேவையில் ஈடு படும் நான்கு பஸ் வண்டிகள் இன்று காலை யாழ் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 175 பயணிகளுடன் புறப்பட்ட இவ் வண்டிகள் மதவாச்சி வரை செல்லும் எனவும் பயணிகள் மதவாச்சியில் இருந்து தமக்கு தேவையான இடங்களுக்கான பயணங்களை தொடர்வர் என தெரியவருகின்றது.

Read more...

Saturday, August 1, 2009

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. - ஜனாதிபதி

மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனப்பத்திரங்களை வழங்கும் விழா நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது. அங்கு கருத்துதெரிவித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் ஆசிரியர்களும் பாடசாலைகளில் கையடக்க தெலைபேசி பாவிப்பதை தடைசெய்வது தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குள் கையடக்க தெலைபேசிபாவிப்பதற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடதக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com