Monday, July 27, 2009

கனடாவில் வீரமக்கள்தினம்! பல்வேறு கட்சிகள் பங்கேற்பு!

கனடாவில் முதல் தடவையாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வீரமக்கள் தினமும், கறுப்பு யூலையும் 25.07.2009 சனிக்கிழமை நினைவுகூரப்பட்டது. அமரர்கள் அமிர்தலிங்கம் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்த தினமான யூலை13-16 வரையிலான காலப்பகுதி வீரமக்கள் தினமாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டு வருகின்றது.

இந்த 20வது வீரமக்கள்தின நிகழ்வு கனடாவில் நினைவு கூரப்பட்டு, இறந்த அனைத்து தலைவர்கள் மற்றும் போராளிகள் பொதுமக்களுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்திருந்த இவ் நிகழ்ச்சிக்கு இதர தமிழ்கட்சிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் இலங்கையில் இருந்து வந்த செய்திகளும் அங்கு தெரிவிக்கப்பட்டது. கட்சிகளின் சார்பில் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டது.

திரு.செல்வம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்ச்சியில், மறைந்த தலைவர்களது ஒளிப்படத்தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. புளொட் சார்பில் சாரங்கனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) சார்பில் ஜேம்ஸ் அவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரி அவர்களும் உரையாற்றினர்.

ஊடகங்களின் கடந்த தவறுகள் பற்றி அருள்பேர்ட் தனதுரையில் சுட்டிக்காட்டினார். மற்றும் சங்கர், இலங்கை சட்டத்தரணியும் அமரர் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய சகாவுமான தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் கனகமனோகரனும், திருவாளர் அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன், குட்டிமணி, தங்கத்துரை போன்ற தலைவர்கள் மற்றும் ஏனைய போராளிகள் பற்றியும் தமது அனுபவங்களை எடுத்துக் கூறினர்.

திரு அருள்ராஜ் அவர்கள் புளொட் சார்பில் கலந்து கொண்ட நீண்டகால புளொட் உறுப்பினர்களுக்கும் இதரகட்சி உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் கட்சி சார்பில் நண்றியை தெரிவித்துக் கொண்டார்.

Read more...

பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி விடயம் கடுமையாக்கப்படும். கல்வி அமைச்சர்.

பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பது தடை தொடர்பான
சட்டம் மிகவும் கடுமையாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி தடைச்சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தாமை பல துரதிஸ்டவசமான நிகழ்வுகளுக்கு வித்திட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேச பாவித்து அகப்பட்டுக்கொண்ட மாணவி ஒருத்தி தனது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

உள்நாட்டு விமான சேவைக்கான முதலாவது விமானம் இன்று பலாலி சென்றது.

இலங்கை விமானப் படையினரால் நிர்வகிக்கப்படும் உள்ளநாட்டு விமான சேவையின் முதலாவது விமானப் பயணம் 15 பயணிகளுடன் ரத்மலான விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.00 மணிக்கு பலாலி புறப்பட்டது. இவ்விமானம் ஒரு மணித்தியாலயங்களில் பலாலி விமானப்படைத்தளத்தில் தரை இறங்கியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்ட மறுத்தன் ஊடாக புலிகளியக்கம் அழிவதற்கு த.தே.கூ உதவியது. சித்தார்த்தன்

சிறுவர்களை விடுதலை புலிகள் பலவந்தமாக படையில் சேர்க்கும் போது பாரளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதை நியாம்படுத்தியதன் மூலம் அவர்கடைய அழிவுக்கு துனைபோனவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்பதை மக்கள் மறந்து விடமாட்டார்கள் என தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்னால் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்கமில் உள்ள மக்களை பார்ப்பதற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று குறை கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் கூட எழுதவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு அந்த மக்களுக்கு வெளியிலிருந்து கூட ஒரு விதமான உதவியும் செய்யவில்லை எனவும் கூறினார். ஆனால் எமது அமைப்பு நாற்பதாயிரம் சமைத்த உணவு பொட்லங்களை வழங்கியதோடு அம்மைநோயினால் பாதிப்புக்கு உள்ளான பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு பால்கஞ்சியும் பழங்களையும் வழங்கினோம் எனவும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை வவுனியா நகரசபை தேர்தலில் ஏதே ஒருவகையில் வெற்றிபெற்று நியாயபடுத்துவதற்க்காக முயற்சி செய்வதாக தெரிவித்தார். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான சமஸ்டி முறையிலான ஒரு தீர்வை நோக்கி செல்லமாட்டார் எனவும் ஆனால் 13வது திருத்தசட்ட மூலம் அதிகார பகிர்வினை செய்வதற்கு அவரின் கட்சியில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களின் நெருக்குதல் காரணமாக முயற்சி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஆகிய கட்சிகளுடன் தாம் இணக்கபாட்டுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர், வவுனியாவில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஓருவர் கட்சியை விட்டு வெளியேறி அரசு ஆதரவாக செயற்படுகிறார். ஆனால் ஏனைய தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினார்கள எம்முடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்னால் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்

Read more...

கையடக்கத் தொலைபேசி வடிவில் துப்பாக்கி! பாதுகாப்புத் தரப்புக்கு எச்சரிக்கை!!

கையடக்கத் தொலைபேசி வடிவத்தில் புதிய ரகத் துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் இலங்கைக்கும் கொண்டுவரப்படலாம். எனவே பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி 0.22 மில்லிமீற்றர் வகை துப்பாக்கி ரவைகளைக் கொண்டுள்ளது. இதற்கு நான்கு ரவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொலைபேசியில் உள்ள ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் துப்பாக்கி இயக்கப்படுகிறது. ரவைகள் துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வகை துப்பாக்கிகள் பிரித்தானியாவின் சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

துப்பாக்கியின் இயக்கம் மற்றும் வடிவமைப்பு வீடியோ காட்சிக்கு இங்கு அழுத்தவும்.




Read more...

இலங்கையில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம். -அமைச்சின் செயளாளர்-

1972ம் ஆண்டிலிருந்து பாவனையில் இருக்கும் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இவ்வாண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இது தொடர்பாக உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன கருத்து தெரிவிக்கையில், புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்வதற்கான கேள்விதாரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இவ்வாண்டு டிசம்பரில் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை பாவனைக்குவரும் என தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இத்திட்டம் உலகவங்கியின் நிதிஉதவியுடன் மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதத்தினால் தற்போது இலங்கை அரசே அதற்கான முழு செலவாகிய 480 கோடி ரூபாவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இலத்திரனியல் அடையாள அட்டையானது முற்றுமுழுதாக கணணி மயப்படத்தப்பட்டு உறுதிப்படுத்தல் அத்தாட்சிக்காக மத்திய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த அடையாள அட்டையில் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்கள் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடபட்டிருப்பதுடன் குறிப்பிட்ட நபரின் கைரேகை பிரதியும், புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் தொகை இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என தெரிவித்த செயளாலர் இந்த இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம்படுத்தம்பட்டதன் பின்னர் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டை 2015 ம் ஆண்டு பாவனையில் இருந்து முற்றாக அகற்றப்படும் என தெரிவித்தார்.

Read more...

Sunday, July 26, 2009

இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் கைது.

இங்கையில் இருந்து வெளியேறி ஐக்கிய நாடுகளை சபையின் அகதிகளுக்கான உயரித்தானிகம், லம்போக் இல் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் 19 சட்டவிரோத குடியேற்ற விதிகளுக்கமைய இந்தோனேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானிகத்தில் இருந்து தப்பி ஓட முற்பட்டதாக கூறப்படுகின்றது.

இக்கைது கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பென்குளு நகர பொலிஸ் பிரதம அதிகாரி Jhony Tri Satria மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆறுமுகம் சுசிகரன், மகேந்திரன் வர்ணன், சுப்ரமணியம், சோமசுந்தரம் விஜயராஜ், வேதநாயகம் ரெனோல்ட், தைகைவடிவேல் பகிரதன், குலசேகரம் சிறிஸ்வரன் ஆகிய எழுவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை-இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சர்களின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் மகாநாடடில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன்னர் இடம்பெற்ற பிராந்திய மாநாடுகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பாக ஆராயப்பட்டாலும் உள்நாட்டுயுத்தம் காரணமாக அச்சேவைக்கு இணக்கம்காணப்படவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்த நிலையில் கொழும்பிலிருந்து கொச்சினுக்கு பயணிகள்கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பதற்கு இந்தியா பூரண இணக்கம் தெரிவித்ததுடன் இப்பயணிகள் போக்குவரத்து சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த மாணவி மரணம்.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த கவந்தியா ஜெயவர்த்தன எனும் 9ம் வகுப்பு மாணவி நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.

பாடசாலையில் கையடக்க தொலைபேசியை பாவித்த நான்கு மாணவிகளை மாணவ தலைவி அதிபர் முன்நிறுத்தியபோது, அதிபரிடம் சிறு இடைவெளியை பெற்றுக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்று தனது ரையினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார்.

Read more...

பேருவல பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு முஸ்லிம் மதக்குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலின் பின்னணியில் உருவாகியுள்ள பதட்ட நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமுகமாக பேருவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பிதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாகொட, பேருவல-மரதான, மற்றும் ஹெட்டிமுல்லைப் பிரதேசங்களிலேயே அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

ஊவா மாகாணத்தில் ஜே.வி.பி.க்கு பலத்த அடி


ஊவா மாகாண தேர்தலுக்கான வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள இனவாத கட்சியான ஜே.வி.பி.யினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.
ஜே.வி.பியின் தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்படுவது, தாக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தல் விடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜே.வி.பி.யின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆர்.எம். ஜயவரத்னவிடம், சிங்கள நாளிதழான ராவய தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறான 28 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார்.

இதுதொடர்பாக மொணராகல மாவட்டத்தில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தகவலளித்தது.


Read more...

Saturday, July 25, 2009

புலிகளின் மூத்த ஊறுப்பினர் ஒருவர் காடுகளில் மறைந்திருந்து சரண்.

கடந்த மே மாதம் 16ம் திகதிவரை வெள்ளாமுள்ளி வாய்காலில் இருந்து சண்டையிட்டு ஓருவாறு தப்பி காடுகளினுள் நுழைந்து கொண்ட புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் கடந்த புதன் கிழமை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

அ0024 எனும் தகட்டு இலக்கம் கொண்ட மேற்படி உறுப்பினர் கங்கா எனும் பெயர் கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகும். 1983ம் ஆண்டில் இருந்து 26 வருடங்கள் புலிகளியக்கத்தில் இருந்துள்ள அவர் அவ்வியக்தத்தில் பல பிரதான பொறுப்புக்களில் இருந்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கிழக்கிலங்கையில் இருந்து புலிகள் படையினரால் விரட்டியக்கப்படும்போது கீர்த்தி குழுவினருடன் வன்னி செல்லும்வரை, அவர் மட்டக்களப்பு வழங்கல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததாக படையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

வன்னியில் ஜெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவராக செயற்பட்டுள்ள இவர் தனது குழு ஒன்றுடன் மட்டக்களப்பு செல்ல முற்றப்பட்டபோது, இடைவெளியில் எதிர்கொண்ட படையினருடன் ஏற்பட்ட மோதலில் அக்குழுவில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், தான் காடுகளில் ஒழிந்து கொண்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

விசுவமடு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு வெள்ளை நிறம்போன்று துணித்துண்டொன்றை உயத்தியவாறு சென்று சரணடைந்துள்ள மேற்படி நபர், கடந்த சுமார் 50 நாட்களாக சமைத்த உணவேதும் கண்ணால் கூட கண்டிராத நிலையில் ஆங்காங்கே கிடைத்த வாழைக்காய், வத்தாளைக்கிழங்கு மற்றும் கிடைக்கப்பெற்ற காய்வகைகளை உண்டு காலத்தை கழித்துள்ளதாக தெரியவருகின்றது.

புலிகளியக்கத்தில் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினராக இவர் கருதப்படுகின்றார். அதேநேரம் இவ்வாறு காடுகளில் எஞ்சியுள்ள ஒருசிலரும் இவ்வாறு சரணடைந்துவருகின்றனர் என அவ் அதிகாரி மேலும் கூறினார்.

Read more...

இன ஒற்றுமையும் இடம் பெயர்ந்தோர்களின் குடியேற்றமும். (புரட்சிதாசன் அஹமட்)

போரியலுக்கு பிரியாவிடை கொடுத்து சமூக, இன ஒற்றுமைக்கு கை கொடுக்கும் இந்த வரலாற்று நினைவு தினத்தில் நாம் எவ்வாறு எமக்குள் இன ஒற்றுமையை வலுப்படுத்தப் போகிறோம் என்பதுதான் அடுத்த பிரதான கேள்விக்கணையாக எம் அனைவரின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரும் பாரிய ஒரு பெரு மூச்சாக இருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த விடை காண வேண்டியது எமது நாட்டில் வாழ்கின்ற அனைத்துச் சமூகத்தினரதும் பிரதான கடமையாகும்.

எமது திரு நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன சமூகங்களும் தங்களது மதங்களையும், வரட்டு சுபாவத்தையும் மறந்து நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் ஒரு நாட்டுப்பிள்ளைகள் எனும் இந்த உயரிய சிந்தனையில் ஒன்றுபட வேண்டும். இதற்கென பல தியாகங்கள் செய்வதற்குத் துணிவுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான போரியல் வெற்றியை நாம் சுவாசிக்க முடியும். இதுவே யதார்த்தமுமாகும்.

1956 ம் ஆண்டிற்குப் பின்னர்தான் இலங்கையில் இனவாதம் பிறந்தது என்று கூறலாம். திரு. எஸ்.டபிள். யூ பண்ணடாரநாயக்கா தனது சுய நலத்திற்க்காகவும், தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அந்த குறுகிய நோக்கத்திற்காகவும் முழு நாட்டையும் இரத்தக் களரியாக்கிவிட்டு கேவலம் ஈற்றில் தன்னினத்தால் தான் சுட்டுக் கொல்லப்படடார். என்பது யாவரும் அறிந்த வரலாறு ஆகும்.

இவ்வாறான தூர நோக்கற்ற அரசியல் வாதிகளின் சுய நல அரசியல் நாடகங்களால் தொடர்ந்து இனவாதம் வளர்க்கப்பட்டு வந்ததன் காரணமாகவே நமது திருநாட்டில் இந்தப் பயங்கரவாதம் பூதாகரமாக உருவெடுத்து பெரும்பான்மைச் சமூகத்தில் பல சமத்துவவாதப் பிரதிநிதிகள் இவ்வாறான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தொடர்கூட்ங்களையும், கருத்தரங்குகளையும், விழிப்புணர்வுக் கூட்டங்களையும், அறிக்கைகளையும், விடுத்தும் கூட ஈற்றில் இவர்களது போராட்டம் வெற்றி பெற்ற வரலாறு முயற்கொம்பாகவே இருந்தது என்பதனை இவ்வையகமே அறியும்.

சமூகச்சீர்திருத்தவாதிகளின் நற்சிந்தனாசக்தி பாழடைந்த நிலையில் தோற்றமடைந்தமைக்குப் பிரதான காரணங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் இனவாதக்கட்சியின் தோற்றமேயாகும். இரண்டு மொழிகள் பேசப்படுகின்ற இந்த திருநாட்டில் இனத்துவேசமும், பிரிவினைவாதமுமே மேலோங்கித் தாண்டவமாடி நிற்பதற்கு இந்த இனத்துவேசக் குழுக்களின் செயற்பாடே காரணமாகும்.

ஒரு நாடு பிற்போக்கான நினைக்குத் தள்ளப்படுவதற்கு பிரதான காரணம் பிரிவினை வாதமும், இனவாதமும்தான் முன்னிலை வகிக்கிறது எனலாம். அந்த வகையில் உலகில் இலங்கை 22 இடத்தினைப் பிடித்துள்ளது. இதனை அறியாதவர்கள் மிகவும் அரிது.

தற்போது யுத்தத்தின் ஓய்வு எல்லோரையும் ஒரு கனம் சிந்திக்க வைக்கின்றது. இச்சிந்தனையை நாம் முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து இருந்தால் எவ்வளவு விபரீதங்களையும், நட்டங்களையும், உயிரழிவையும், பொருளாதார பின்னடைவுகளையும், அபிவிருத்தியின்மைகளையும் தடுத்திருக்க முடியும் என்பதனை நாம் அனைவரும் நமக்குள் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலையும் பெற்றுக் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்தும் அழிந்து விடும், அன்பு ம்டடும் உயிர் வாழும் எனும் உயரிய தத்துவத்திற்கேற்ப நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எமது இழய சந்ததியினருக்காவது ஒரு விடிவினையும், நல் வழியினையும் காட்டியவர்களாக மரணிக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, நிற, குல பேதங்களை மறந்து ஒரு தாய் பெற்ற சகோதரர்கள் போல கைகோர்த்து ஒற்றுமையுடன் வாழப் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது இன ஐக்கியத்தைக் கூறுபோடுவதற்கு முனைகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாவு மணி அடிக்க முற்படல் வேண்டும். அப்போதுதான் நமது ஒற்றுமை எனும் அந்த பசுமை புத்தெழுச்சி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பௌத்த தர்மம் கூறுகின்ற அந்த மனிதாபிமான காருண்யம் காத்திரமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும். இனிமேல் எந்தச் சந்சர்ப்பத்திலும் அடாவடித்தனம், அட்டூழியம், இனவாதம், பிரிவினைவாதம். மொழிவாதம் போன்றவைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்படுத்த அனுமதியளிக்கப்படக்கூடாது. இதற்குச் சிறந்த உதாரணமாக விட்டுக்கொடுக்கும் தன்மையினையும். புரிந்துணர்வுத் தன்மையினையும் நாம் உதாரனமாகக் கூறலாம்.

தற்போது யுத்தத்தின் தோல்வியில் துவண்டு கிடக்கும் தமிழ் பயங்கரவாதிகளும், அப்பாவித் தமிழ் மக்களும் இனிமேலும் தங்கள் பிரிவினைவாதப் போக்கினைக் கடைப்பிடிக்காத வகையில் அவர்களை நாம் வழிநடாத்த முற்படல் வேண்டும். தற்போது இவர்கள் துன்பித்தும், குற்ற உணர்வாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இரு அன்புக் கரங்களையும் நீட்டி அவர்களுக்கு உதவி செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது பகைமைத் தன்மையினையும் குற்ற உணர்வினையும் தன்னகத்திருந்து விலக்களிப்பார்கள் என்பது திண்ணம்.

ஒரு இனம் துன்பப்படும் போது மற்ற இனம் குதூகலமாக இருப்பது பெளத்த தர்மத்திற்கே பொருந்தாத ஈனச் செயலாகும் என்று பௌத்த தர்மம் எச்சரிக்கை செய்கின்றமையினை பெரும் பான்மைச் சமூகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடம் வாழ்கின்ற இந்த வையகத்தில் மக்கள் வாழ வழிவகை சமைக்க முற்படக் கூடாது.

இன்று ஒரு வேளைச் சோற்றுக்கே நீண்ட வரிசையில் வயது வித்தியாசமின்றி பாத்திரமேந்தி கொட்டும் வெயிலில் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் கொடுமையினை நாம் நாளாந்தம் நேரிலும், ஊடகங்களிலும் பார்த்த வண்ணமிருக்கிறோம். இந்தக் கதியில் வாழ்கின்ற இந்த மககளுக்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களது பசியினை எவ்வாறு போக்கலாம்? அவர்களை எப்படி பழைய நிலைக்குக் கொண்டு போகலாம்? என்ற சிந்தனையில் நாம் வாழ வேண்டும். இனிமேலாவது நாம் ஒற்றுமை எனும் அந்தக் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடிக்க முற்படுவோம், ககோதரர்கள் போல் வாழப் பழகிக் கொள்வோம்.

இன்று சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் மிகவும் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைகளில் சிதறி வாழ்கின்றனர். இவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீளவும் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வடக்கின் வசந்தம் எனும் அந்த ஆறு மாத காலத்திற்குள் குறிப்பிட்டவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழ்வதற்குரிய வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்புக் காட்ட வேண்டும். நொந்து போன உள்ளங்களுக்கும் ஊனமுற்ற உடல்களுக்கும் சிறந்த மருந்தினை நாம் வழங்க வேண்டும்.

இன்று இலங்கையில் சேவை புரிகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களின் உதவிகளை நாம் பெற்றுக் கொள்ள முற்படல் வேண்டும். அதிகாரத் திணிப்பினை அகற்றி அன்பு வலையினை வீசி அவசரமாக அவர்களுக்கு இருப்பிடங்களையும் நிரந்தரமாக நிம்மதியுடன் வாழ்வதற்குரிய தொழில்படிப்பினையும் பெற்றுக்கொடுக்க முற்பட வேண்டும்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற இறுமாப்பினைத் தவிர்த்து இருண்டு போன அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு நல்ல வழியினையும், உபதேசத்தினையும் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் மக்களைப் பற்றி விமர்சனம் செய்வதினைத் தவிர்த்து எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? அவர்களுக்குரிய அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறதா? அதனை எவ்வாறு சரி செய்வது? போன்ற விடயங்களில் அரசு மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.

இனிமேலாவது இந்நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாகவும் முஸ்லிம்கள் மூன்றாம் தர மக்களாகவும் கிறிஸ்தவர்கள் நான்காம் தர மக்களாகவும் நடத்தப்படக்கூடாது. எல்லோரும் முதலாம் தர மக்களே எனும் அந்த உயரிய அந்தஸ்தால் மதிக்கப்பட வேண்டும். இதனை அரசியலமைப்புச் சட்டத்தால் மாற்றம் செய்ய வேண்டும். இலங்கைத் திருநாட்டில் பிறந்த எல்ரோரும் முதலாம் தரப் பிரஜையே என்ற அந்த கோட்பாடு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

இடம் பெயர்ந்து அல்லலுறும் இந்த அநாதை ஜீவன்கள் மேலும் துன்பத்தாலும், இடரினாலும் சிக்கித் தவிக்காமல் அவர்களைத் தங்களது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த அரசு துரித நடவடிக்கையினை மேற்கொள்வதுமே காலத்தின் தேவையாக இருக்கிறது.

1977 முற்பகுதியில் இருந்த அந்த தொலைந்து போன ஒற்றுமை 2009 திலிருந்து புதிய பரிணாமப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் நாம் இழந்து போன அந்த ஒற்றுமையினையும், ஐக்கியத்தினையும் மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

வட கிழக்கு மாகாணத்தில் புலிப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாடடின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சகல பிரதேசங்களும் தற்போது அரசாங்கத்தின் கட்டமைப்புக்குள் வந்துள்ளது. இவைகள் தற்போது பாழடைந்த, பசுமையற்ற, பாலை வனங்களாகவே காட்சி தருகிறது. இச் சோபனையிழந்த பிரதேசத்தை மீழவும் புணரமைத்து இதிலிருந்து இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தி பசுமைப் புரட்சியினை ஏற்படுத்த அரசாங்கம் தன்னால் முடியுமான சகல வழங்களையும் பாவிக்க வேண்டும்.

மீள் குடியேற்றம் இடம் பெறுகின்ற இப்பிரதேசம் ஒரு ஊழலற்ற பொது நலம் பேணக்கூடிய குறிப்பிட்டவர்களின் நிர்வாகத்தில் நடை முறைப்படுத்தப் படுமாயின் வீண் விரயத்தையும், ஊழல் மோசடிகளையும் கட்டுப்படுத்த முடியும். எல்லோரும் இப்போது விரும்புவது அமைதியான வாழ்க்கையில் சமாதானமான சுவாசக்காற்றைச் சுவாசித்து நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதையுமேயாகும்.

Read more...

கிழக்கின் பட்டதாரிகளை பிரிவினைவாதம் ஒன்றை நோக்கி தள்ளாமல் வேலையில்லாப் பிரச்சினையைத் தீருங்கள்- ஜேவிபி

கடந்த 22 நாட்களாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்துவரும் 1700 வேலையில்லாப் பட்டதாரிகளது விடயம் தொடர்பாக கடந்த 23ம் திகதி பாராளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசிய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, கிழக்குமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளது பிரச்சினையை தீர்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உடனடியாக ஆணையிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவருடைய அறிக்கையில், கிழக்கு மாணவர்கள் வேலைவாய்ப்பையே கேட்கின்றனர். அவர்கள் தனி ஈழம் கேட்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இவற்றுக்கு எதிராக ஹர்த்தால், சத்தியாகிரகம் என செய்துவந்த அவர்கள், அரசு அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். அம்மாணவர்கள் ஏனைய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் போல் வேலைவாய்பை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

20 லட்சம் நஸ்டஈடு கோரும் இடைத்தங்கல் முகாம் மக்கள்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் செயல் எனக்கூறி இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிலங்குளத்தில் உள்ள வீரபுரம் எனப்படும் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றின் உறவினர்களே மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவில் குளம் இந்துக்கல்லூரி இடைத்தங்கல் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு யுத்தத்தில் தற்காலிமாக இடம்பெயர்ந்தோர், அவர்களது விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்து வைக்கப்படுதல் உரிமை மீறல் செயலாகும் எனவும் அவர்கள் தாம் விரும்பிய இடம் ஒன்றில் வாழும் பொருட்டு அவர்களை விடுதலை செய்ய நீதிமன்று உத்தரவிட வேண்டும் எனவும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உரிமைகள் மீறப்பட்டமைக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு 20 லட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் என மன்று ஆணையிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com