Wednesday, July 22, 2009

டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை

தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர். மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன. ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.
அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள நீவர்க் நகருக்கு புறப்பட்டு சென்றார். “கான்டினென்டல் ஏர்லைன்ஸ்” என்ற அமெரிக்க தனியார் விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

இந்த விமானத்தில் அவர் ஏற சென்றபோது அந்த விமான நிறுவன ஊழியர்கள் சாதாரண பயணிகளுக்கு நடத்தும் அனைத்து சோதனைகளையும் அவருக்கும் நடத்தி உள்ளனர். விமானம் ஏற வந்தபோது அவரை விமானத்துக்கு செல்லும் நடைபாலம் அருகே வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு ஊழியர்களிடம் அனுப்பி அவரை முழுவதுமாக சோதனை செய்ய சொன்னார்கள். அவர்கள் உடல் முழுவதையும் சோதனை செய்தனர். அவரது ஷூவை கழற்ற சொல்லி அதையும் சோதித்தனர். அதன் பிறகுதான் விமானத்தில் ஏற அனுமதித்தனர். இவ்வளவு சோதனை நடந்த போதும் அப்துல்கலாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது அவர்கள் இது பற்றி புகார் கூறலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு அப்துல்கலாம் இது அந்த விமான நிறுவனத்தின் விதிமுறை என்னிடம் சோதனை நடத்தியதில் தவறு இல்லை என்று கூறிவிட்டாராம்.

இப்போது இந்த விஷயம் எப்படியோ வெளியே வந்துவிட்டது. இதையடுத்து மத்திய அரசு விமான நிலையத்திடம் விளக்கம் கேட்டு உள்ளது.

இது பற்றி அந்த விமான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அபர்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்கள் விமான நிறுவன விதிமுறைப்படி அனைத்து பயணிகளையும் சோதனையிடுவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள் என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் விதிகள் இல்லை. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தில் இப்படித்தான் சோதனை நடத்துகிறோம்.

எனவே தான் அப்துல் கலாமிடமும் சோதனை நடத்தினோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல்பட் டேலிடம் கேட்டபோது, “இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற தவறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்க இருக்கிறோம்” என்றார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது “தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை கொடுத்துள்ளோம். ஆனால் அந்த நிறுவனம் மீறி விட்டது” என்றார்.

இந்திய பிரமுகர்கள் வெளி நாடுகளில் அவமானப்படுத்தப்படுவது ஏற்கனவே பலமுறை நடந்து உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு மாஸ்கோ சென்றபோது அவரிடம் சோதனை நடத்தி அவமதித்தனர்.

ஆனால் இப்போது இந்திய மண்ணிலேயே இந்திய தலைவருக்கு அவமானம் நேர்ந்து இருக்கிறது.

இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்திலும், கிளப்பப்பட்டது. பாரதீய ஜனதா உறுப்பினர்கள் இந்த பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மந்திரி பிரபு பட்டேல் பதில் அளிக்கும்போது, “இப்போதுதான் இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்” என்றார்.

Read more...

இடைத்தங்கல் முகாமில் பெண்ணொருவரை விடுவிக்க முயற்சித்த இராணுவச் சிப்பாய் கைது

இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள யுவதி ஒருவரிடம் 25,000 ரூபா பணத்தைப் பெற்று அவரை விடுவிக்க முயற்சித்த இராணுவச் சிப்பாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், ஆனந்த குமாரசுவாமி இடைத்தங்கல் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இந்த ஊழல் மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரை சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கான முதலாவது பஸ் சேவை இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கான பஸ் சேவை ஏ9 வீதி வழியாக இன்று காலை 10.35 மணிக்கு ஆரம்பமானது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் எதிரில் இருந்து ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்திற்குப் பொறுப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, சமூக சேவைகள், சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஆகியோர் வைபவரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த வைபவத்தில் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர், புதிதாக ஆளுநராகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் உட்படப் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சேவைக்கென யாழ். இலங்கை போக்குவரத்துச் சபைக்குப் புதிதாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5 பஸ்களில் 4 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், 210 பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சிக்குச் செல்லும் இந்த பஸ் தொடரணியில் செல்லும் பயணிகளை அங்கிருந்து அனுராதபுரம் மக்கள் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் கொழும்புக்கு ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் கொழும்பிலிருந்து தொலைக்காட்சி வசதியுடன் கூடிய சொகுசு பஸ் சேவை யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

Tuesday, July 21, 2009

மலிந்து கிடக்கும் குற்றச் செயல்கள். (புரட்சிதாசன் அஹமட்)

முப்பத்திரண்டு வருடங்களாக கட்டவிழ்க்கப்பட்ட புலிப்பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்ட இன்றைய இலங்கை தேசம் இதனை விட ஒரு படி மேலாகவும் தற்போது நாடு பூராகவும் குற்றச்செயல்களைப் புரிந்துவரும் நாசகாரர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்ற துர்ப்பாக்கிய நிலையினை எதிர்நோக்கியுள்ளது. இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகளும்இ பாதுகாப்புப்பிரிவில் கடமை புரிபவர்களும் செயற்படுவதால் இதனைக் கட்டுப் படுத்துவதை மிகவும் கடினமான விடயமாகவே நாம் கருதவேண்டியுள்ளது. "வேலியே பயிரை மேயும்" எனும் முதுமொழிக்கு ஒப்ப திரு மேர்வின் சில்வாவின் மேடைப் பேச்சு அமைந்துள்ளது.

எப்போதும் ஒரு நேர்மையான அரசியல்வாதி ஒன்றுக்குமே பயப்படமாட்டான் ஆனால் இன்றைய அரசியலில் உள்ள அனைவரும் கறைபடிந்த கைகளாகத்தான் இருக்கின்றனர். அடாவடித்தனம், அட்டூழியம், கொலைகள் செய்கின்றவர்கள் குற்றச்செயல்கள் புரிபவர்கள் மலிந்து கிடக்கின்றனர். இவ்வாறு இவர்கள் தொடர்வார்களேயானால் எவ்வாறு குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த முடியும்?

நீதிமன்றினால் குற்றவாளியாகக் கருதப்பட்டவருக்கு நீதி அமைச்சர் பதவி (திரு மிலிந்த மொரகொட) வழங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவருக்கு திறை சேரி செயலாளர் (ஜயசுந்தர) பதவி வழங்கப்படவுள்ளது? நாட்டையே குட்டிச்சுவராக்கி சின்னாபின்னமாக்கியவருக்கு மந்திரிப்பதவி (கருணா) இதுபோன்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அண்மையில் கேகாலையில் ஒரு தமிழ் மாணவன் (வருடம் இரண்டு) எந்த ஒரு பாடசாலையிலும் சேர்க்கப்படமாட்டான் என்றும் இயற்கனவே கல்வி கற்ற பாடசாலையிலும் நையப்புடைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ஈற்றில் இம்மாணவனின் தகப்பன் நஞ்சருந்தி தற்கொலை செய்தமையினையும் நாம் மறந்து விடலாகாது.

உண்மையான சமாதானமும், அமைதியான நிலையும், ஒற்றுமையான ஒரு இன ஜக்கியமும் ஏற்பட ஒவ்வொருவரினதும் மனம் தூய்மையானதாகவும், மற்றவர்களும் நம்மைப் போன்றவர், நமக்கு இருக்கும் உரிமை மற்றவருக்கும் உண்டு என்று எண்ணுகின்ற நிலையினையும் கொண்டவர்களாக இருப்பின் நிச்சயம் நமது நாடு புது உத்வீகம் அடையும் அத்துடன் மிகவும் விரைவில் தன்னிறைவும் பெறும் என்பது கண்கூடு.

இன்று அதிகமாக நாடு பூராகவும் குற்றச் செயல்களும், தீய நடவடிக்கைகளும் அதிதரித்த வண்ணமே இருக்கின்றது, இதற்கான காத்திரமான தடுப்பு நடவடிக்கைகளை எவ்வித அரசியல் தலையீடோ அல்லது பாதுகாப்புப் பிரிவினரின் தலையீடோ இன்றி கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாதம் தலைவிரித்தாடிய நிலையில் இருந்ந அமைதி கூட இன்று காணப்படவில்லை. காரணம் சரியான வழியில் திறமையானதும், திடமானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததேயாகும்.

தற்போது, நாளாந்தம் ஊடகங்களில் 90 வீதமாக குற்றச்செயல்கள் பற்றிய செய்திகளே பிரசுரிக்கப்படுகின்றமை துர் அதிர்ஷ்ட்டவசமாகும். கிழக்கு மாகாணத்தில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமான குற்றச் செயல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்குக் கொடுக்கப்பட்ட மன்னிப்புக்காலமும் காலாவதியாகிய இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக்கலாச்சாரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சட்ட விரோத ஆயுதங்கள் தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இரவு நேரங்களில் இவ்வாயுதங்களைப் பாவித்து கொள்ளைகள், வல்லுறவுகள் போன்றவற்றைத் தினமும் செய்து வருகின்றனர். இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இரவு நேரங்களில் காவல் படையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தி சந்தேகத்திற்கிடமானவர்ளை இனங்கண்டு அவர்களுக்குரிய தகுந்த தண்டனைகளை வழங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் நிந்தவூரிலுள்ள, வௌவாலோடை, முஸ்தபா புரம் எனும் பிரிவுகளில் இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் இரண்டு இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்து அங்குள்ள ஆண்கள் உதவியற்ற வீடுகளுக்குச்சென்று பாலியல் சேட்டைகளையும் வல்லுறவு கொள்ளவும் முற்படுகின்றதாகத் தினமும் நாங்கள் செய்திகளைப் பெற்ற வண்ணம் உள்ளோம். இது விடயமாக இயற்கனவே இப்பிரதேச சபைத் தவிசாளருக்குக் கூட பல கடிதங்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. கடைசியாகக் கிடைத்த தகவலின் பிரகாரம் தொடர்ந்து தொடர் தொல்லைகள் கொடுப்பதாகவும், தாங்கள் காவல் நிலையத்தில் தொழில் புரிபவர்கள் என்றும் வெளியில் அம்பலப் படுத்தினால் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் பயமுறுத்திச் சென்றுள்ளனர்.

இவர்களது அடாவடித்தனம் தொடர் கதையாக மாறியுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திக்கு முக்காடுகின்றனர். இது போன்று எமது சமூகத்தில் எத்தனை பேர்கள் திரை மறைவில் பாதிப்புக்குட்பட்டுள்ளனர் என்பதனை எம்மால் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறான செயல் நடைபெறுவதற்குக் காரணம் சீரற்ற நிர்வாகக்கேடேயாகும்.

எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக நான் சில கோரிக்கைகளை முன் வைக்கின்றேன். இரவு பத்து மணிக்குப் பின்னர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுகின்ற இந்தப் போலிக்கும்பல்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த தண்டனைகளை பெற்றுக் கொடுக்க சம்மாந்துறைக் காவல் நிலையத்தினர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

ஒரு நாடு சிறந்த நாகரீகமான முறையில் விளங்க மனித நேயம், தனிமனித உரிமை, சுதந்திரம், ஊடகச்சுதந்திரம், வாழும் உரிமை எல்லாம் பாதுகாக்கப்படல் வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சியடைந்த ஒரு நாடாகக் கருதப்படும் என்பது கண்கூடு.

செய்திகள், தகவல்கள், தெளிவாக வெளியிடப்படும் போது அவற்றிக்கான நம்பகத்தன்மையுடன் அவை வெளியிடப்படுகின்றதா என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமானதாக விளங்கும் என்பது எனது கருத்தாகும்.

எனவே, எமது புண்பட்ட இந்த புனிதமான இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையுடனும், நல் மனதுடனும், குற்ற உணர்வின்றியும், துன்புறுத்தலின்றியும், ஐக்கியத்தோடும் வாழ ஐக்கியப்படுவோமாக.

Read more...

வவுனியா திருமலை வீதி முற்றாக திறக்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களாக மக்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வவுனியா-திருமலை வீதி மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Read more...

அம்பாறை மாவட்டத்தில் தற்கொலை அதிகம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் லங்காதிலக ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்த 635 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இச்சிகிச்சைகளின் நிமித்தம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 20 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள கல்வியறிவு குறைபாடு, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், இளைஞர்களுக்கு பல காரணங்களாலும் ஓய்வில்லாமை போன்றனவே தற்கொலை முயற்சிக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

இலங்கை விமானப்படை உள்ளுர் விமானச் சேவையை ஆரம்பிக்கின்றது. விமானப்படைப் பேச்சாளர்.

இலங்கை விமானப்படையினர் உள்ளுர் விமானச் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக்க நாணயக்கார இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உள்ளுர் விமானச் சேவையின் பொருட்டு 4, 6, 8, 12 மற்றும் அதற்கு மேலான ஆசனங்களைக் கொண்ட விமானங்களை பயன்படுத்த உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் எந்தப் பாகத்திற்கும் செல்வதற்கு எமது விமானங்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நாம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓர் புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்காக திறந்து வைத்துள்ளளோம் என்றார்.

அத்துடன் உள்ளுரில் உள்ளவர்களும் தமது தேவைகளுக்காக இவ்விமானங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.

For further information contact “Helitours” on (+94 60) 214 42 44 or
E-mail :helitours@slaf.gov.lk.

Read more...

வவுனியா உள்ளுராட்சி மன்றைக் கைப்பற்றுவோம். மக்கள் மனங்களில் பெருமாற்றம். சித்தார்த்தன்.

எதிர்வரும் வவுனியா உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்று மன்றைக் கைப்பற்றும் என உறுதியாக நம்புவதாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இடம்பெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் ஆர்வம் தொடர்பாக அவரிடம் வினவியபோது, இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் உறவுகள் வன்னயில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா இடைத்ததங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். எனவே வவுனியா மக்கள் தமது உறவுகளுக்கு தேவையான உதவிகளைச் செய்வதிலும் அவர்கள் வெளியே கொண்டுவருவதிலும் தமது முழுநேரத்தையும் செலவிட்டு மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதைக் காண முடிகின்றது. இருந்தபோதிலும் மக்கள் தேர்தலில் ஆர்வமாக உள்ளார்கள் என்றே கூறுவேன். மக்கள் தாமாகவே வந்து எமக்கு தமது ஆதரவைச் தெரிவித்துச் செல்கின்றனர் என்றார்.

வவுனியா மக்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகின்றது எனக் கேட்டபோது, நான் புலிகளின் தலைமை முற்றாக ஒழிக்கப்பட முன்பும் அடிக்கடி இங்கு வந்துசெல்வதுண்டு. அனால் மே 17ம் திகதிக்கு முன்னர் மக்களின் மனநிலையிலும் தற்போதும் காணப்படும் மாற்றம் யாதெனில், மக்கள் இப்போது மாற்றுக் கட்சிகள் சகலவற்றுடனும் உரிமையுடன் பழக வேண்டும் எனும் தமது ஆர்வத்தை காட்டுகின்றார்கள். முன்பு மாற்றுக் கட்சிகளுடன் பழகுவதற்கு மக்களுக்கு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பழக ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

Read more...

Monday, July 20, 2009

அனைத்து பாதாளக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடையவேண்டும். -கோத்தபாய-

இலங்கையில் செயற்படுகின்ற அனைத்து பாதாள உலக குழுக்களையும் சேர்ந்தவர்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்களது ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் பாதாளக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்துள்ள அரசியல்வாதிகள் அக்குழுக்களுடனான தொடர்புகளை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் வியாபாரிகளிடமும், செல்வந்தர்களிடமும் கப்பம் பெறும் பாதாளக்குழுக்களுடன் சில பொலிஸ் உயரதிகாரிகள் தொடர்புகளை பேணி அவர்களுக்கான தகல்வளை வழங்கி உதவி வருவது தெரியவந்துள்ளது என தெரித்துள்ள பாதுகாப்புச் செயலர், அவ்வாறான பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தமான தகவல் தெரிந்த மக்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அத்தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பலத்த அழுத்தத்திற்கு உட்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Read more...

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

அமைச்சர் முரளிதரன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சுவிற்சலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி நிற்கும் நிலையில் இலங்கை அரசு அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளபோதும் கருணா தனது சொந்தப் பணத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளரான சாந்தி விருட்சி பெரேரா, அவரது மகன், கருணாவின் சகோதரி மற்றும் அவரது 3 சகாக்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கான சுவிஸ் வீசா இதுவரை வினியோகிக்கப்படவில்லை என கருணாவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை என அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. அச்சம்பளப் பணத்ததை இருமாதங்களாக வழங்காத அமைச்சர் அப்பணத்தில் இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதையிட்டு அங்குள்ள உறுபினர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

உறுப்பினர்களது சம்பளப்பணம் வழங்கப்படாமையால் அவ்வுறுப்பினர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் இவ்விடயத்தை அரச தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இன்று இலங்கை நிலவரங்களினால் பல விதமான அச்சமும், பதட்டமும் புலம்பெயர்தேசத்தில் நிலவுகின்ற நிலையில் கருணா அங்கு விஜயம் செய்யும் போது மக்கள் மிகவும் கொதிப்படைந்து வன்செயலுக்கு அது வித்திடலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் இச்சுற்றுலாவிற்கு இலங்கை அரசினால் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவரும்நிலையில் இக்குழுவிற்கான பிரயாணப்பணம் இலங்கையில் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் நலனிற்கு பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுவதுடன் வன்னி மக்களின் நிவாரணதேவைகளுக்காக சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த சம்பளத்தை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more...

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணக் காப்பகம் இராணுவத்தினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாதுகாக்கப்பட்டுவந்த மிகவும் முக்கியமான அரிய ஆவணங்கள் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 6 நாட்களாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின் போது மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அவையும் விடுதலைப் புலிகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களத்தின் உயரதிகாரியான அநுரா சேனநாயக்க, சிங்கள நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மற்றும் இராணுவ ஆராய்ச்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனைத் தவிர, இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் எளிமையான தமிழிலில் அச்சிடப்பட்ட ஆவணங்களும் இவற்றில் இருப்பதாக அறியப்படுகின்றது.

இவை மட்டுமன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, மின்கலன்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, மின்கலன்களையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு சிற்றுண்டிப் பெட்டியில் (டிபன்பொக்ஸ்), டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் இந்த ஆவணங்களில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவற்றைக் கொண்டு, எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தமை தொடர்பாகவும் இந்த ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளமுள்ளிவாய்க்காலில் 3 பெரிய பிளாஸ்டிக் கொல்கலன்களில் ஏராளமான ஆவணங்களை விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்தி வைத்துள்ளதாகவும், இவற்றை தற்போது இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மண்ணில் விடுதலைப் புலிகளினால் புதைத்திருந்த ஆயுதங்களையும் இதர தளவாடங்களையும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் தற்போது கண்டெடுத்துவருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த ஆவணங்களுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அடங்குகின்றனர். வெளிநாடுகளில் கொள்வனவு செய்த ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை கொள்வனவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழப்பகுதிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்ட ஆவணங்களும் இதில் அடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறன், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அவை தனி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளமை இதன்மூலம் தெரியவந்துள்ளது. இவற்றின் சில பாகங்களும் குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவருடன் பெருமிதத்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இந்த ஆவணங்களுடன் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட ஒரு உறுப்பினரின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் அடங்குகின்றன.

இந்த கொள்கலன்களிலிருந்து கடந்த 30 வருடப் போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியை அளித்துள்ளதாக இதன்மூலம் தெரியவருவதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

Read more...

Sunday, July 19, 2009

புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற 30 வருட புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இப்புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதல்வர் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தப்படவேண்டும் இதற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மதப்பாகுபாடின்மை, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவை சீராக அமைவதன் ஊடாகவே எமது நாட்டின் சகல பாகங்களிலும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்பு அமையும். இதுபோன்ற மத நிகழ்வுகளில் இனமத பேதமின்றி அனைவருமே பங்கு கொள்கின்ற வேளையில் அனைவருமே ஒருமித்த சிந்தனை உடையவர்களாக எமது நாட்டிற்கான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பவர்களாக மாறிவிடலாம். பல நெடுங் காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட குரோதங்கள் மறக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுத்துவதற்கு இலங்கையில் வாழ்கின்ற அனைத்தின மக்களும் ஒருமித்த கருத்துக்களோடு ஒரே குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதில் மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா சமூகங்களுக்கடையிலான ஒற்றுமை பற்றியும் புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
...............................

Read more...

வவுனியாவில் புளொட் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

வவுனியா காத்தான்கோட்டம் நெலுங்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு புளொட் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்றிரவு மூச்சக்கர வண்டியொன்றில் சென்ற நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவரது மனைவி மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

மகேஸ்வரன் என அறியப்பட்ட இவர் மீது தாக்குதல் நாடாத்தியோர், எதிர்காலத்தில் அவரை புளொட் இயக்கத்தின் காரியாலயத்திற்கு செல்லக்கூடாது எனவும் புளொட் இயத்கத்தினருக்கான பிரச்சார வேலைகளில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க விசாரணைகளை முடிக்கி விட்டுள்ள பொலிஸார் இது அரசியல் குரோதம் காரணமாக அங்கு செயற்படும் பிறிதொரு தமிழ் அரசியல் கட்சியின் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அத்துடன் தாக்குதல்தாரிகள் இவர் தொடர்பாக அவதூறு பிரச்சாரங்களை அவிட்டுவிட முயற்சிப்பதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

நஸ்டஈடு கோரிச் சென்ற இராணுவ வீரனின் மனைவி பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்.

வவுனியா இராணுவ முகாம் ஒன்றில் கடமைபுரியும் இராணுவ வீரனது மனைவியான திருமதி. ஜெயவர்த்தன பொலிஸாரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,

தெற்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அந்நெடுஞ்சாலைக்காக தெரு ஓரங்களில் இருந்த பல வீடுகள் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நஸ்டஈடு வழங்கப்படும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொட வீதி அல்பிட்டி எனுமிடத்தில் மேற்படி இராணுவ வீரனின் வீடு அமைந்திருந்துள்ளது. அவ்வீடு பெருந்தெருக்கள் திணைக்களத்தினால் இடித்து நீர்மூலமாக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவ வீரனின் மனைவி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நஸ்ட ஈடு கோரி அமைச்சிற்கு சென்றுள்ளார்.

பல முறைகள் அவர் அங்கு சென்றபோதும் அவரக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அரசிடம் நிதி இல்லை எனக் கூறப்பட்டதை தொடர்ந்து இராணுவ வீரரின் மனைவி தனது நஸ்ட ஈடு கிடைக்கப்பெறும்வரை அமைச்சின் அலுவலகத்தில் இருந்து வெளியேறப்போதில்லை எனக்கூறி அங்குள்ள ஆசனம் ஒன்றில் அமர்ந்தவாறு அங்கேயே இருந்துள்ளார்.

பொலிஸாருக்கு இவ்விடயத்தை அமைச்சின் அதிகாரிகள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த இரு பெண் பொலிஸார் இராணுவ வீரனின் மனைவியை தாறுமாக தாக்கியதாகவும் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து தலங்கம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

Read more...

போர் முடிவடைந்தாலும், புலிகள் இன்னமும் முற்றாக அழிக்கப்படவில்லை - ரம்புக்வெல்ல

போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் இன்னமும் முழுமையாக அழிக்கப்படவில்லை என அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கிழக்கில் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிர்காலத்தில் துப்பாக்கியை அல்ல எறிபொல்லைக் கூட கையில் எடுக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துரைத்த கெஹெலிய, ' எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. புலிகளுக்கு துப்பாக்கி அல்ல எறிபொல்லைக் கூட கையில் எடுக்க இடமளிக்கப்படமாட்டாது. நாட்டை துப்பாக்கியானால் பிரிக்க முயற்சித்ததைப் போன்றே தற்போது சட்டத்தினால் பிரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விடயமும் பாரிய சிக்கலை ஏற்படுத்தும். இலங்கையில் விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்படவில்லை.

தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். பத்மநாதன், காட்டில் வாழும் திருடனைப் போல எங்கோ இருந்துகொண்டு செயற்படுகின்றார். சூசை ஒருசமயத்தில் குறிப்பிட்டார் உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக. எனினும், அவை அனைத்தையும் தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்தக் குறுமாங்கட்டிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் போனது அவர்களால்.

எனினும், அவர்கள் கொழும்பிற்கு மேலாக பறந்தார்கள். அப்போது நாம் அச்சமடைந்தோம். எமக்கு வெட்கமாகவே இருந்தது. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனினும். அவர்களினால் பாரியவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது போனது. கொழும்பில் வட்டமிட்டுச் சென்றார்கள். இதனை உலகிற்கு காண்பித்தார்க்ள. இந்தப் பின்புலத்திலேயே அவர்கள் செயற்பட்டார்கள். எனினும், நான் தற்போது கூறவில்லை அவர்கள் அனைவரும் ஒழிந்துவிட்டார்கள் என்று. அவர்கள் மீள்வதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே இருக்கின்றது.' எனக் கூறினார்.

போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை எனவும் தற்போது கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது மிக முக்கியமான விடயம் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.

'இலங்கையைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளில் சில செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுகுறித்த மேலதிக தகவல்களை தற்போது என்னால் வெளியிட முடியாது. ஏனென்றால் எமக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இவை பாரதூரமான விடயங்கள். அதனாலேயே கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலமொன்றைக் கொண்டுவந்து கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தினோம். இராணுவத்தைப் பலப்படுத்துவதும் இலங்கையின் அபிவிருத்தியின் ஒருபகுதியாகவே கொள்ளவேண்டும்.' என கெஹலிய மேலும் குறிப்பிட்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com