Thursday, July 16, 2009

கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 500 பேர் விரைவில் இலங்கை வருவர் - சரத் பொன்சேகா

போர் முடிவடைந்துள்ளதை அடுத்து படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானதொன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும். இதில் எமக்கு உதவ இந்தியப் படையினர் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் 500 பேர் இலங்கை வரவுள்ளனர் என பாதுகாப்புச் சபையின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

புதிய பதவியேற்பு நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தியப் படையைச் சேர்ந்தவர்கள் எப்போது வருவார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்காத சரத் பொன்சேக்கா, கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் பங்களிப்பு அவசியமானவையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்ததைவிட அரச படையினர் பத்து மடங்கு அதிகமாகச் செய்திருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் படையில் உள்ள அனைத்து கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்துதெரிவித்த சரத் பொன்சேகா, 'கண்ணிவெடிகளை அகற்றுவது இலகுவான விடயமல்ல. சேற்று நீர், சதுப்பு நிலங்கள், வயல்வெளி போன்ற இடங்களில் இதற்கான கருவிகளைப் பயன்படுத்த முடியாது. எனவே யார் அவசரப்பட்டாலும், அவர்களின் அவசரத்துக்கு ஏற்ப இதனைச் செய்ய முடியாது. இதற்கு எமக்கு கால அவகாசம் தேவை' எனக் குறிப்பிட்டார்.

'இந்தியப் படையின் 500 பேரைக் கொண்ட கண்ணிவெடிகளை அகற்றும் அணி ஒன்று விரைவில் இங்கு வரும் என எதிர்பார்க்கின்றோம், எப்படி இருந்தாலும் ஓரிரு நாட்களில் இதனைச் செய்துவிட முடியாது. கால வரையறையையும் சொல்ல முடியாது. ஆனால், கூடிய விரைவில் இந்தப் பணிகளைச் செய்துமுடிக்க எதிர்பார்க்கின்றோம்' எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியப் படையினர் இலங்கை வரவுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது முதலே ஜே.வி.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றது.

அத்துடன், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட இலங்கைப் படையினருக்கு ஏன் கண்ணிவெடிகளை அகற்ற முடியாது எனவும், இதற்காக இந்தியப் படையினரின் பிரசன்னம் அவசியமற்றது எனவும் ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.




Read more...

Wednesday, July 15, 2009

கொலைக் குற்றவாளி ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் தவறேதும் இல்லையாம்.

விமல் வீரவன்ச தலைமையினலான தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க அண்மையில் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். நந்தன பாலக எனும் ஜே.வி.பி உறுபினரின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

கடந்த 14 ம் திகதி மகாவலி நிலையத்தின் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டின்போது கொலைக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஓர் நபர் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளாரே, இதற்கு சட்டம் இட்கொடுக்கின்றதா என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணத்திலக, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் ஓருவர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எந்தத் தப்பும் கிடையாது, இது தொடர்பாக ஊடகங்கள் கேள்விகளை கிளப்புவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கூறினார்.

Read more...

யாழ் நூலகத்திற்கு தீயிட்டது காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினர்.

- நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகக் கூறுகிறார் வடமேல் மாகாண முதலமைச்சர்-

யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் எரித்தவர்கள் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினரே எனவும், அதனை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தற்போதைய வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, யாழ்.பொது நூலகத்திற்கு தீ வைத்தவர்களை நான் நன்றாக அறிவேன். யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இங்கு
கொண்டு வரப்பட்ட தமிழ் மொழியிலான புத்தகங்கள் பல இன்னமும் ஹெட்டிப்பொல பிரதேசத்தில் உள்ளன. அவற்றை எந்த நேரத்திலும் என்னால் காட்ட முடியும் என்று கூறினார்.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தவென குருநாகலிலிருந்து புகையிரத மார்க்கமாக ஒரு குழுவினர் சென்றனர். தற்போது அவர்கள் எதுவும் அறியாதவர்கள் போல் உள்ளனர்" என்றார்.

"1983ம் ஆண்டு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தியவர்கள் யார் என இங்கு நினைவுகூரத் தேவையில்லை" என மீண்டும் முதலமைச்சர் கூறியதை அடுத்து சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

அவ்வேளையில் ஆவேசமாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரஸன்ன சமல் செனரத் (ஐ.தே.க.) நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் மீது இவ்வாறு அபாண்டமாகப் பழி சுமத்தப்படுவதைத் தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் முதலமைச்சரின் கூற்று மாகாணசபை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் தெரிவித்ததுடன் முதலமைச்சர் தனது கூற்றை உடன் மீள்பெற வேண்டும் எனவும் கூறினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் 'எனது கூற்றுகள் மாகாணசபை நடைமுறை விதிகளுக்கு முரணானவையல்ல. அவ்வாறு முரண் எனக் கூறப்படுமிடத்து கூற்றை மீளபெற்றுக்கொள்ள முடியும். ஆனால், எனது கூற்றுகளுக்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. எந்தவேளையிலும் அவற்றைச் சமர்ப்பிக்க முடியும்' எனவும் தெரிவித்தார்.
இவ்வேளையில் மீண்டும் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பிரஸன்ன சமல் 'இத்தகைய கருத்துகள், உறுப்பினர் ஒருவர் மீது சேறுபூசி, அகௌரவப்படுத்தும் செயலாகும். தொடர்ந்தும் இவ்வாறான அவதூறுகள் தெரிவிக்க இடமளிக்க முடியாது'எனக் கூறினார்.

1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றினால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புக்களில் ஒரு மிகப்பெரும் வன்முறையாக இது கருதப்படுகின்றது. அத்துடன், இந்தச் சம்பவம் இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. நூலகம் எரிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஐ.நா.வின் அலட்சியமே வன்னியின் பெருமளவான உயிரிழப்பிற்கு காரணம்: - மறுக்கிறார் ஐநா. செயலர் பான் கீ மூன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களுக்குப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படலாம் எனத் தெரிந்திருந்தும் ஐ.நா. அதனை அலட்சியம் செய்தது என்ற குற்றச்சாட்டை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.

நியூயோர்க்கில் ஷவோல் ஸ்ரீட்| நாளிதழின் ஆசிரியர்கள், செய்தியாளருக்கு அளித்த செவ்வியில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானது. நாங்கள் அலட்சியம் செய்யவில்லை, குறைத்து மதிப்பிடவில்லை, என்னை இதில் குற்றம் சாட்டக்கூடாது. இலங்கையில் துரதிஸ்டவசமாகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ள பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:


"இலங்கைக்கு நான் விஜயம் மேற்கொண்ட காலத்தை" அடிப்படையாக வைத்து, அனைத்தும் முடிவடைந்த பின்னரே நான் அங்கு சென்றேன் என நீங்கள் வாதிடலாம். நெருக்கடி ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டேன். அனைத்துச் சந்தர்ப்பத்திலும், அனைத்துத் தருணத்திலும் நான் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுகளை மேற்கொண்டேன். சில சந்தர்ப்பங்களில் கடுமையான அறிக்கைகளை விடுத்தேன்... வற்புறுத்தினேன்... கண்டித்தேன்' என்று கூறினார்.

இலங்கைக்கான விஜயத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுள்ள முகாம்களுக்குச் செல்வதற்குத் தடையற்ற, முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததாகவும் அது அவ்வாறே நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்பின்னர், இவ்வருட இறுதிக்குள் இந்த மக்களில் 80 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் உரையாற்றிய பொதுச் செயலர் பான் கீ மூன், 'சர்வதேச சமூகம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கருத்தை கருத்தில் எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும், முழுமையாகப் பொறுப்புக் கூறவேண்டியதன் அவசியத்தையும் நான் அவருக்குத் தெரிவித்தேன். வெளியே இருந்து திணிக்கப்படுவதற்கு முன்பாக பொறுப்புக் கூறுவதற்காக அர்ப்பணிக்குமாறு நான் கேட்டேன். அவர்கள் அதற்கு இணங்கினார்கள். மோதலில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தாலும் அது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. துரதிஸ்டவசமாகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 20 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்ற தகவல்களை ஐ.நா. அலட்சியப்படுத்தியது, அதனைக் குறைத்து மதிப்பிட்டது எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றுமுழுதாக உண்மையானதல்ல. நாங்கள் இவ்வாறு செயற்படவில்லை. என்னை இதற்குப் பொறுப்பாளியாக்கக் கூடாது. இது முழுமையாகச் சரியானதல்ல. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. மோசமான சூழ்நிலையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களைப் பெற முடியவில்லை'எனவும் கூறியுள்ளார்.




Read more...

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான 60% நிதியை அரசு பெற்றுக்கொண்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான 60% நிதியை இலங்கை அரசு சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு தேவைப்படும் 155 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60% கிடைக்கப்பெற்றுள்ளது. இப்பணத்தை எமக்கு வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் மிகவும் பொறுப்புணர்சியுடனும், பற்றுடனும் செயற்பட்டிருக்கின்றன என மேலும் கூறிய அவர், இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு அரசு மிகவும் கடின உழைப்பை மேற்கொண்டு வருதவதாகவும் கூறியுள்ளார்.

Read more...

வவுனியா நகரின் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்வு

வவுனியா நகரில் இதுவரை காலமும் இருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா நகரின் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அகற்றப்பட்டிருக்கும் அதேவேளை, தேக்கம்காடு முதல் மூன்று முறிப்பு வரையில் மேற்கே பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அடுத்த சில தினங்களில் மதவாச்சி சோதனை நிலையத்தின் ஊடான போக்குவரத்திலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படுமெனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டே, இந்தப் பாதுகாப்புக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read more...

மரணதண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுமா?

அண்மையில் நீதி அமைச்சராக நியமனம் பெற்ற மிலிந்த மொறகொட அவர்கள் இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நாடாத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 200 பேர் சிறைகளில் உள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

கனடாவில் வீரமக்கள் தினம், யூலை 13- யூலை 16

தமிழ் மக்களின் தானைத்தலைவர் அமரர் அமிர்தலிங்கம், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் உமாமகேஸ்வரன் ஆகியோர் உட்பட தமிழீழ போராட்டத்திற்காக தம்முயிரை அர்ப்பணித்த தலைவர்களான ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா உட்பட தளபதிகள், போராளிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், பொதுமக்களை நினைவு கூரும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் "வீரமக்கள்" தினமாக யூலை 13ம் திகதியில் இருந்து யூலை 16ம் திகதி வரையிலான நாட்களை பிரகடனம் செய்து வருடா வருடம் நினைவுகூர்ந்து வருகின்றது.

இந் நாட்களை நினைவு கூருமுகமாக இவ்வாண்டு கனடாவின் ரொறன்ரோ நகரில் அஞ்சலி நிகழ்வையும் 1983 கறுப்பு யூலை இனப்படுகொலை தினத்தினையும் நினைவு கூருமுகமாக இவ் அஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: 45 Ludstone Dr, Etobocoke, Ontario, (401/Dixon)

காலம்: 25.07.2009 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6:00 மணி


தமிழ் மக்களின் உரிமைக்காக தம்முயிரை அர்ப்பணித்த தலைவர்கள், தளபதிகள், போராளிகள், பொதுமக்களை நினைவுரும் இவ் நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு மரணித்த எம் உறவுகளை நினைவுகூர்ந்திடுவோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-(DPLF) (கனடா

Read more...

Tuesday, July 14, 2009

இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மூவரில் ஒருவர் எழுத்தாளர்.

இந்திய கரையோரப் பிரதேசத்தில் வைத்து எல்லைக்காவல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மூவரில் ஒருவர் எழுத்தாளரான கே. திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது தாம் மன்னார் பிரதேசத்தில் இருந்து படகோட்டி ஒருவரின் உதவியுடன் வந்ததாகவும், படகோட்டி தம்மை ராமேஸ்வரத்தை அண்டிய தீவுப் பகுதி ஒன்றில் இறக்கி விட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

நான் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் ஏன் இவ்வாறு பயித்தியகார தனமான வேலைகளை செய்தீர் எனக் கேட்டிருப்பேன் -ஜனாதிபதி

ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபர் யோதி ரொட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் என்ன கேட்டிருப்பீர்கள் என கேட்டபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புன்னகைத்தவாறு நான் பிரபாகரனை உயிருடன் சந்தித்திருந்தால் ஏன் இவ்வாறு பயித்தியகார தனமான வேலைகளை செய்தீர் என கேட்டிருப்பேன். இதைவிட வேறு என்ன கேட்கமுடியும் என வினவியதாக என ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபர் கூறினார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனான ரைம்ஸ் சஞ்சிகையின் நிருபரின் பேட்டியின் தொகுப்பு

ரைம்ஸ்: பிரபாகரன் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டதும் உங்கள் மனம் எவ்வாறு இருந்தது?

ஜனாதிபதி: இறைவனுக்கு நன்றியை தெரிவித்தேன். அது ஒரு வரப்பிரசாதம்

ரைம்ஸ்:அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஜனாதிபதி: அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியும். அவ்வளவுதான். அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றி கண்டுபிடிப்பதற்கு எனக்கு ஆர்வமில்லை. அவர் தற்போது இல்லை என்பதே முக்கியமான விடயம். அவரை இங்கு கொண்டுவந்து கதைப்பதற்கு ஆசைப்பட்டேன். நான் ஒருபோதும் அவரை பார்த்ததில்லை.

ரைம்ஸ்: இறுதி யுத்த சந்தர்பத்தில் யுத்தநிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ,ஜரோப்பிய நாடுகளும் கொடுத்த அழுத்தத்தையும் மீறி இறுதியுத்தத்தில் ஈடுபட்டீர்கள். இது தெடர்பாக பல்வேறு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளீர்கள் இது தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

ஜனாதிபதி: அமெரிக்காவும் ,ஜரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பாண்மை கொண்டவை என நான் கருதவில்லை. அவர்களே பயங்கரவாதத்தை அழிப்பதற்கு ஊக்கமளித்தவர்கள். நாங்கள்
ஜோஜ் புஸ்சை பின்பற்றினோம். அவருக்கு தேவையானதை நாங்கள் நிறைவேற்றினோம். அவர்கள் எங்களை பாராட்ட வேண்டும். நாங்கள் அவர்களுடைய யுத்தத்தை முன்னெடுத்தோம். பயங்கரவாதத்தை தோற்கடிக்கலாம் என நாங்கள் காண்பித்தோம்.

ரைம்ஸ்: யுத்தத்தின் கடைசிகட்டத்தை பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஒரு பரீட்சார்த்த களமாக கருதியிருக்கவேண்டும் என வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்?

ஜனாதிபதி: எனது நாட்டு மக்கள். நான் அவர்களுக்கு பொறுப்புக் கூறவேன்டியவன். அவர்களை பாதுகாத்து பாதுகாப்பாக வெளியே கொண்டவருவது எனது பொறுப்பு. இந்த வேலையை செய்வதற்கு சர்வதேச நாடுகளை அழைத்திருந்தால் அவர்கள் பெரும்பாலான மக்களை கொன்றிருப்பார்கள். ஆகவே எனது படைவீரர்களே எனது மக்களை பாதுகாத்தார்கள். அவர்கள் எனது மக்கள், எனது வாக்காளர்கள். எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் உதவிகளை செய்யவேண்டும்.

ரைம்ஸ்: மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கம் அம்மக்களுக்கு எதிராக செயற்பட்டால் என்ன செய்வது?

ஜனாதிபதி: அதற்காக எல்லா மக்களையும் தண்டிக்கப்போகின்றீர்களா? அல்லது அதற்கு பொறுப்புக் கூறவேன்டியவர்களையா? இப்போது என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மகிந்த ராஜபக்ஸவை தண்டிக்கப்போகின்றீர்களா? அல்லது தடைகள் முட்டுக்கட்டைகள், பயணக்கட்டுப்பாடுகள் என்பவற்றால் மக்களை தண்டிக்கப்போகின்றீர்களா? என்னை தண்டிப்பதாயின் அதற்கும் வழியண்டு. இப்படிசொல்வதற்காகவும் நான் தண்டிக்கப்படலாம் (சிரிக்கின்றார்)

ரைம்ஸ்: இறுதி யுத்தத்தை முடிக்கும் போது மனிதஉரிமை மீறல், பொதமக்கள் அழிவு என்பன உச்சச்கட்டத்தில் இருந்ததாக பலரும் கருதுகின்றார்களே?

ஜனாதிபதி: நான் இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். மனிதஉரிமை மீறல்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை. பொதுமக்கள் அழிவு இடம்பெறவில்லை. அப்படி செய்வதாக இருந்தால் இந்ந யுத்தத்தை முடிப்பதற்கு எமக்கு இரண்டரை வருடங்கள் தேவைப்பட்டிருக்காது. ஓருசிலமணி நேரத்தில் இந்ந யுத்தத்தை முடித்திருக்கலாம். இவை எல்லாம் பொய்பிரசாரங்கள்.

ரைம்ஸ்: ஏழாயிரம் பேர்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது?

ஜனாதிபதி : ஏழாயிரம் பேரா? ஒருபோதும் இல்லை. கிழக்கில் ஒரு இழப்பும் இல்லை. அதுபோல் வடக்கில் ஒரு இழப்பும் இல்லை என கூறமாட்டேன். தப்பமுயன்ற சிலரை விடுதலை புலிகள் சுட்டுக் கொன்றனர்.


ஜனாதிபதியிடம் மீள குடியமர்த்துதல் அரசியல் தீர்வு தொடர்பாக வினவப்பட்டபோது

இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் உள்ளனர். விடுதலை புலிகள் வடக்கின் எல்லா இடங்களிலும் கண்னிவெடிகளை புதைத்து வைத்திருக்கின்றார்கள். அவற்றை முதலில் அகற்றவேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆக குறைந்தது 50வீதமானவர்களை (60 வீதம் என்றே சொல்லலாம்) அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள குடியமர்தப்படுவர் என தெரிவித்த ஜனாதிபதி இன அடிப்படையில் தனி தனி பிரதேசங்களை வழங்காமல் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களே அப்பிரதேசங்களை நிர்வகிக்கமுடியும் என தெரிவிர்தார்.

Read more...

அழிந்துபோன கட்சிளை அரசு தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றது. ஆனந்தசங்கரி.


தமிழ் மக்கள் மக்கள் மத்தியில் தோன்றியவேகத்தில் அழிந்துபோன தமிழ் கட்சிகளை அரசு தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க முற்படுகின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். எவ்வித அரசியல் பின்புலமோ அன்றில் மக்கள் ஆதரவோ அற்ற இக்கட்சிளை மக்கள் முன் திணிப்பதற்கு அரசு செலவிடும் பணத்தை, இன்று வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கு செலவிட முன்வருவார்களேயானால் அரசிற்கு பூரண ஆதரவு வழங்குவேன் என்றார்.

Read more...

கருணாநிதியின் மூன்றாம் மனைவியின் மகள் கனிமொழி இலங்கை வருகின்றார்.

தமிழ் நாடு முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை வரும் இவருடன் மேலும் இரு இந்திய அமைச்சர்களும் வரவுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Read more...

லங்காநீயூஸ்வெப் இணையம் இலங்கையில் தடைசெய்யப்படுகின்றது.

லங்காநீயூஸ்வெப் இணையம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்விணையத்தில் பிரபாகரனது மகன் பாலச்சந்திரன், மற்றும் ஜனாதிபதியின் மகன் நாமல் ஆகியோர் சம்பந்தமான இரு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமையே இவ் இணையத்திற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்துள்ளது.

Read more...

மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதத்தினர் சிறைச்சாலைகளில்.

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதத்தினர் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் டி.சில்வா தெரிவித்துள்ளார். நீதி மற்றும் சட்ட அமுலாக்கல் அமைச்சராக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் மிலிந்த மொறக்கொட அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது நடந்த நிகழ்வில் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்காண்டவாறு தெரிவித்ததுடன், அவ்வாறு சிறைகளில் உள்ளவர்களில் 36.5 வீதத்தினர் போதைப்பொருள் சம்மந்தமான குற்றங்களும், 25 சதவீதமானனோர் மதுபாணம் தொடர்பான குற்றங்களை புரிந்தவர்களுமாகும் என தெரிவித்துள்ளர்.

Read more...

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

பொலிஸ் மைதானத்திற்கு அருகாமையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் காயமடைந்து கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com