Monday, May 31, 2010

கரவெட்டியில் பெண் கொலை. நகைகள் கொள்ளை.

வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் வீட்டிலிருந்த வரை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டி யைச் சேர்ந்த ஜெயபாலா விஜயலட்சுமி (வயது 54) என்பவரே கொல்லப்பட்டடுள்ளார்.

மோட்டார் சைகிளில் சென்ற நபரொருவர் பெண்ணை வெளியே இழுத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கணேசபுரம் மலக்குழியில் காண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும் ஊடகங்களும்.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் மீள் குடியேறியவர்கள் தமது வீடுகள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து வருகின்றனர். அவ்வாறு வீடொன்றின் உரிமையாளர் ஒருவர் தனது மலக்குழியை சுத்தம் செய்தபோது அதிலிருந்து கறுப்பு பைகளில் பெண்களின் சடல்கள் வெளிவந்ததாக ஊடகங்கள் தெரிவித்திருந்தது.

இவ்வுடலங்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் வவுனியா மாவட்ட சட்ட வைத்தி அதிகாரி பா. சிறிதரன் அவர்களின் மேற்பார்வையில் குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வெளியே எடுக்கப்பட்ட பைகளில் வெறும் எலும்புக் கூடுகளே காணப்பட்டுள்ளது. இவ் எலும்புக்கூடுகளுக்கான உடலங்கள் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் இக்குழிகளில் போடப்பட்டிருக்கலாம் என மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேற்படி கறுப்பு பைகள் இராணுவ மற்றும் புலிகள் தரப்பினரால் உடலங்களை பரிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டவையாகும். இவற்றில் அடைக்கப்படும் உடலங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பழுதடையாமல் வைத்திருக்கும் தன்மை கொண்டவையாகும் இப்பைகள். ஆனால் இவ்வுடலங்கள் யாருடையது ? எதற்காக இக்குழியில் போடப்பட்டன என்ற கேள்விக்கு பலரும் பலவழிகளிலும் விடைதேடலாம். பையிலிருந்து மரபுவழி இராணும் ஒன்று பாவிக்கும் இடுப்பு பட்டிகள் காணப்படுகின்றது எனும்போது இது இராணுவம் அல்லது புலிகளுடைய சடலம் என்பதும் அவர்கள் போர்முனையில் சீருடையில் மரணித்தவை என்பதும் தெளிவானது.

இவ்வுடலங்கள் அண்ணளவாக எப்போது இக்குழியில் போடப்பட்டிருக்கும் என்ற பகுப்பாய்வு அறிக்கை வெளிவரும்போது இது எத்தரப்பினரால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் ஒன்றிற்கு வரமுடியுமே தவிர இது புலிகளாலோ அன்றில் இராணுவத்தினராலோ மேற்கொள்ளப்பட்டது என்ற முடிவுக்கு எவராலும் வந்துவிடமுடியாது. காரணம் இறுதி யுத்தம் என்பது இருதரப்புமே தமது முழு இராணுவ மற்றும் புலனாய்வு உச்ச வலுவை பயன்படுத்திய யுத்தமாகும். உடலம் போடப்பட்ட காலப்பகுதியில் எத்தரப்பு கணேசபுரம் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என அறிந்து கொண்டாலும் இருதரப்பினரும் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து எதிரியை கொன்றொழித்து பின்னர் தடயம் இல்லாமல் செய்வதற்காக அல்லது தாம் நுழைந்தமை தெரியாமல் இருப்பதற்காக இவ்வாறான விடயங்களை புரிந்தே உள்ளனர்.

அடுத்து புலிகள் இறுதி யுத்தத்தின்போது தமது சகாக்களின் உடலங்களை கையாள முடியாதவர்களாக கண்ட இடங்களிலெல்லாம் தீயிட்டுக்கொளுத்திய சம்பவங்களின் சாட்சியங்கள் இன்று எம்முன்னே நிற்கின்றனர். அதன் அடிப்படையில் இவை புலிகளின் முக்கியஸ்தர்களின் சடலங்களாகக்கூட இருக்கமுடியும். உடலங்களை எடுத்துச் செல்ல முடியாத புலிகள் தாம் தற்காலிகமாக பின்வாங்குகிறோம் என நினைத்து இவ்விடங்களை மீண்டும் கைப்பற்றும்போது ஒன்றில் சடலங்களை தோண்டி எடுத்து அஞ்சலி செலுத்தலாம் அல்லது சிங்கள இராணுவம் பொதுமக்களை கொன்று மலகூடத்தினுள் போட்டுள்ளது என மக்களை ஏமாற்றலாம் என்ற நினைப்பில் போட்டிருக்கவும் முடியும்.

இவ்வாறு இவ்விடயம் தொடர்பாக சந்தேகங்களையும் ஊகங்களையும் பெருக்கி கொண்டே போகலாம். அவ்வாறு பெருக்கி கொண்டு செல்வதால் கிடைக்கக்கூடிய லாபங்கள் என்னவென்பதே எம் முன்நிற்கின்ற கேள்விகள். இவ்விடயம் தொடர்பான செய்திகள் கசிந்தவுடன் பையிலிருந்து மீட்க்கப்பட்ட உடல் எச்சங்கள் தொடர்பான எவ்வித ஆதாரங்களுமில்லாத ஊடகங்கள் பல எழுந்தமானமாக கிளிநொச்சியில் கிணறுகளிலிருந்து பெண்களின் சடலங்கள் வெளிவருகின்றன என்ற பீதியை கிளப்பி விட்டனர். இவ்வாறான செய்திகளை பரப்புவதில் இன்று முன்னாள் நிதர்சனம்.கொம் சேதுவின் இடத்தினை லண்டனிலிருந்து ஊடகத்தொழில் புரியும் முன்னாள் புளொட் உறுப்பினர் கையிலெடுத்துள்ளார். முற்றிலும் என்ஜிஓ க்களினதும் ஏகாதிபத்தியங்களினதும் கைக்கூலியாக மாறியுள்ள இவர் ஒரு காலகட்டத்தில் ஜேவிபி எதிர் கருத்துக்களை கொண்டிருந்ததுடன் தற்போது முன்னாள் ஜேவிபி பிரதேச தலைவர்களில் ஒருவரான ஊடகவியலாரின் பரிவில் இவ்வாறான செய்திகளை பரப்புவதில் முன்னணியில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது. மேற்படி ஊடகவியலாளர் என்ஜிஓ க்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ளதுடன் அவர்களின் உதவியுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்களையும் எடுத்து லண்டனிலிருந்து இயங்கும் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்குகின்றார். குறிப்பிட்ட தமிழ் ஊடகம் ஏதோ ஊடக ஜாம்பவான்கள் போன்று அப்படங்களுக்கு முத்திரையும் குத்தி கதையும் விடுகின்றனர். அவர்கள் விடும் கதைகளில் மக்களுக்கு என்ன பயன்? இவை ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவிடுமா என்பது கேள்வி.

எதுவாக இருந்தாலும் மேற்படி செய்தியினை வைத்து கொஞ்ச நாட்களுக்கு காலம் ஓட்டலாம் என நினைத்திருந்து புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு நாளை அல்லது இன்னும் ஓரிரு தினங்களில் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி பதில் சொல்வார் என நம்பப்படுகின்றது.

Read more...

இந்து சமுத்திரத்தில் இராணுவக் கட்டமைப்பிற்கு பரிந்துரைக்கிறது ஆஸ்திரேலிய சிந்தனைக் குழு.

(By Nick Sutton) கான்பெர்ராவை தளமாகக் கொண்டதும் ஒரு அரசாங்க நிதியளிக்கும் சிந்தனைக்குழுவான Australian Stragegic Policy Institute (APSI) ஆனது பிரதம மந்திரி கெவின் ருட்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ நிலைப்பாடு மற்றும் மூலோபாயத்தை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. “நம் மேற்கு முன்னணி: ஆஸ்திரேலியாவும் இந்து சமுத்திரமும்’ என்ற தலைப்பில் உள்ள இந்த ஆய்வு, ASPI யைச் சேர்ந்த ஆன்டனி பெர்கின், மற்றும் Australian National Centre for Ocean Resources and Security ன் சாம் பேட்மன் ஆகியோரால் எழுதப்பட்டது, அப்பிராந்தியத்தில் பெரும் சக்திகளிடையே உள்ள போட்டியால் உந்துதல் பெற்றது.

இந்து சமுத்திரம் பெருகிய மூலபோய, அரசியல் கவனத்தின் குவிப்பாகிவிட்டது” என்று அறிக்கை விளக்குகிறது. “ஆஸ்திரேலியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் (IOR) முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டும், ஆனால் பசிபிற்கிற்காக இதைப் புறக்கணித்துவிட்டோம்.” இப்பிராந்தியத்தில் வெளியார் ஈடுபாட்டின் புது சகாப்தம், எரிசக்தி அரசியல் மற்றும் சீனா ஒரு புதிய சக்திவாய்ந்த பிராந்திய நாடு என்ற முறையில் வெளிப்பட்டுள்ளதின் மூலம் உந்துதல் பெற்றுள்ளது.” மேலும் ஆப்பிரிக்கக் கொம்புப் பகுதியில் நடைபெறும் கடற்கொள்ளையும் உந்துதல் கொடுத்துள்ளது. “கடற்கொள்கைக்கு எதிராக என அமெரிக்கா, பிரான்ஸ், சீனா இன்னும் மற்றய நாடுகள் நிலைநிறுத்தியுள்ள போர்க்கப்பல்களின் கூறப்படும் பங்கானது உண்மையில் அவை ஒரு பரந்த மூலோபாய நோக்கத்திற்கும் உதவுகின்றன……..கடற்கொள்ளை குறைந்துவிடும்போது அனைத்துக் கப்பல்களும் தங்கள் தாயகத் தளங்களுக்குத் திரும்பாது.” என்று அறிக்கை வெளிப்படையாக கூறியுள்ளது.

அறிக்கை தொடர்கிறது: “ஒரு புதிய கடற்பகுதி “பெரும் விளையாட்டு” இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் (IOR) ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மூலோபாயப் போட்டி வெளிப்படையாக வந்துள்ள அளவில், எழுச்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும் மற்றதால் கட்டுப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைக் கொண்டுள்ளது—சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவானது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆதரவைக் கொண்டுள்ளது. இதற்கு இடையில், அமெரிக்காவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூலோபாய, இராணுவ வகையில் தொடர்ந்து மேலாதிக்கம் கொண்டுள்ளது. இந்தியா தன்னை பிராந்திய மேலாதிக்க சக்தி என்று வளர்த்துக் கொள்ளுகிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீன வருகை இந்தியாவை எப்பொழுதும் அதைப் பற்றி சிந்திக்க வைத்துள்ளது. எனவே தன்னுடைய கடற்படையை அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றை வளர்க்கப் பெரிதும் பயன்படுத்துகிறது.

இப்பகுதியில் ஆஸ்திரேலிய நலன்கள் பற்றி ASPI வலியுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு வடமேற்கில் உள்ள நீர்நிலைகள் பெரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக கோர்கான் எரிவாயுத் திட்டம் உலகத்தின் இயற்கை எரிவாயு நீர்த்த தன்மைத் திறனில் 8 சதவிகிதத்தை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது விற்பனை ஒப்பந்தங்களில் $200 பில்லியன் மதிப்புடையது ஆகும். மற்ற முக்கிய எரிவாயுத் திட்டத் தொடர்ச்சிகள் ஆஸ்திரேலியாவை உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடாக தசாப்தத்தின் இறுதிக்குள் கொண்டுவரக்கூடும்.

“நம்முடைய கடலுக்கு அப்பால் உள்ள இறைமை, இறைமை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குப் பெரும் சவால்கள் இந்து சமுத்திரத்தில் உள்ளன. நம்முடைய ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவருகின்றன. முக்கிய கடலுக்கு அப்பால் உள்ள வளர்ச்சி இப்பொழுது மேற்கு, வடமேற்கு என்று கண்டத்தில் உள்ளது. அதுதான் நம்முடைய வருங்கால வளரச்சிக்கு திறவுகோலாக அமையும். நாம் இன்னும் கடுமையாக உழைத்து முக்கியமான உள்கட்டுமானப் பாதுகாப்பிற்குத் திட்டமிட வேண்டும். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை இப்பகுதியில் அதன் நிலைப்பாட்டை அதிகரிக்க வேண்டும்” என்றும் ASPI குறிப்பிட்டுள்ளது.

இச்சிந்தனைக்குழு வடமேற்கில் ஒரு புதிய பெரிய கடற்படைத் தளத்தை நிறுவ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அது பெர்த்திற்கும் டார்வினுக்கும் இடையே உள்ள “இடைவெளியை” மூடும் என்றும், தற்பொழுதுள்ள கர்ட்டின், லேர்ன்மன்த் விமானப்படைத் தளங்கள், இப்பகுதியில் உள்ளவை, கூடுதலாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இராணுவப்பயிற்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இன்னும் கூடுதலான ராஜதந்திர முயற்சிகள் பெருகும் அழுத்தங்களைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ASPI அழைப்பு விடுத்துள்ளது. ஆய்வின் பரிந்துரைகளில், “இந்து சமுத்திர மாநாடு” என்று மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகரமான பெர்த்தில் கூட்டப்பட வேண்டும் அதில் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தொடர்பு படுத்தப்பட வேண்டும் என்றும் உள்ளது. இம்மாநாடு “எரிசக்திப் பிரச்சினைகள், சமுத்திரத்தின் நிர்வாகம், மீன்பிடித்தல் நிர்வாகம், இயற்கைச் சீற்றங்கள் குறைப்பு, கடற்பகுதி விஞ்ஞான ஆராய்ச்சி” போன்ற பல பிரச்சினைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆராயும். ஆனால் “மரபார்ந்த பாதுகாப்புப் பிரச்சினைகள்” நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படக்கூடாது, “அவை கூருணர்ச்சிகளைத் (Sensitivities) தூண்டிவிடும் தன்மை உடையவை” என்றும் ASPI பரிந்துரைத்துள்ளது.

“கூருணர்ச்சிகள்” பற்றி குறிப்பு ஏற்கனவே விரைவாக வெளிவந்துள்ள அழுத்தங்கள் பற்றியதாகும். ஒரு பிராந்தியப் போர் வருங்காலத்தில் நிகழலாம் என்பதை ASPI ஒப்புக் கொண்டுள்ளது—“நம் மேலை எல்லை” என்ற அபாயகரமான தன்மையை அறிக்கை இதன் தலைப்பாகக் கொடுத்துள்ளது.

இந்து சமுத்திர சுற்றுவெளியில் மூன்று மிக மூலோபாயமான உணர்வுடைய எரிசக்தி அளிப்புப்பாதைகள் உள்ளன—Djiboouti, ஏமனுக்கு இடையே செங் கடல் மற்றும் சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் Babe el Mandeb Strait, பேர்சிய வளைகுடாவிற்குச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே இருப்பது மற்றும் இந்தோனிசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி மற்றும் தெற்கு சீனக்கடலுக்குச் செல்வது ஆகியவையே அவை.” அது முடிவுரையாகக் கூறுவது: “எண்ணெய், எரிசக்தி அரசியல் இந்து சமுத்திர மூலோபாய இயக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது ஒத்துழைப்பிற்கு உகந்த தன்மையைக் கொடுக்காமற் போகலாம். பகுதியில் பெருகும் இராணுவத் திறன்களும் ஒத்துழைப்பைத் தடுக்கும் விதத்தில் நீண்ட காலமாக இருக்கும் இராணுவ அச்சுறுத்தல்கள் பற்றிய உணர்வை வலுப்படுத்தி, பிராந்திய நாடுகளிடையே பாதுகாப்புச் சங்கடங்களை ஏற்படுத்தலாம்.”

ASPI அறிக்கை ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கை எதிர்கொள்ளும் மூலோபாயச் சங்கடம் பற்றி இன்னும் அதிகமாக கூறுகிறது. இந்த முரண்பாடு வரலாற்றளவில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருக்கும் இராணுவ மூலோபாய உடன்பாட்டு நம்பிக்கைக்கும் சீனா, கிழக்கு ஆசியாவில் அது கொண்டுள்ள பொருளாதார நம்பகத் தன்மைக்கும் இடையேயானது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் இந்தியா, சீனாவுடன் மாறுபட்ட உறவுகள் இருப்பதை சிந்தனைக்குழு வலியுறுத்தியுள்ளது.

“இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவின் உறவு சம பங்காளிகளுக்கு இடையே உள்ளது போல் இருக்க வேண்டும்” என்று அறிக்கை கூறியுள்ளது. “இது கடினமாக இருக்கலாம். இந்தியா ஆஸ்திரேலியாவை சம அந்தஸ்தில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டுகிறது. இது இந்தியா அதன் செல்வாக்கை பொது மூலோபாய நலன்கள் உள்ள பகுதிகளில் செலுத்த விரும்பும்போது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். …இந்தியா இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாகத்தான் இருக்கத் திட்மிட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கு சவால்களையும் வாய்ப்புக்களையும் அளிக்கிறது. ஒரு மேலாதிக்கப் பங்கைச் செலுத்துவதில் இந்தியா எந்த அளவிற்குப் பொறுப்புடன் இருக்கும் என்பதை நாம் இனிமேல்தான் காணமுடியும். இந்தியாவின் இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவாக்கம், மேலாதிக்கம் கூட ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது, ஆனால் நாம் போட்டியிடும் நிலையில் இல்லை.”

ஆனால் இப்பகுதியில் வாஷிங்டன் நிலைக்கு எதிராக, பெய்ஜிங் தன் நிலைப்பாட்டை அதிகரித்துக் கொள்ளுவது பற்றி ASPI க்கு மன உறுத்துல் ஏதும் இல்லை. அறிக்கை கூறுவது: “அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவின் முக்கிய உடன்பாடு இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவாக்கம் கொண்டுள்ளது. ஆனால் நம் நலன்களும் கொள்கைகளும் எப்பொழுதும் அமெரிக்காவுடன் இணைந்திராது என்ற வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா சில தொழில்நுட்பக் கூறுபாடுகளை இந்தியாவிற்கு மாற்றி, இராணுவக் கோட்பாடு, உளவுத் தகவல்களை பறிமாற்றம் செய்துகொள்ளும்போது. சீனா பற்றிய மாறுபட்ட முன்னோக்குகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருப்பது இந்தக் கொள்கைத் தொடர்புச் சிதைவின் இதயத்தானமாக இருக்கலாம், ஒரு சக்தி வாய்ந்த இந்தியா, சக்தி வாய்ந்த சீனாவை விட இப்பகுதியில் நல்ல நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதில், ஆஸ்திரேலியா அமெரிக்காவை விட குறைந்த நம்பிக்கையுடன்தான் உள்ளது.”

இப்பகுதியில் முக்கிய உறுதிகுலைக்கும் காரணி பற்றி —அதாவது அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புத் தன்மை பற்றி அறிக்கை ஏதும் கூறவில்லை. தன் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” ஒரு பகுதியாக ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அதன் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை அடைய தீவிரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான பாக்கிஸ்தானில் தன் சார்பில் ஒரு போரை நடத்துகிறது, ஈரானை அச்சுறுத்துகிறது. இந்தியாவுடன் அது வளர்க்கும் மூலோபாயப் பிணைப்புக்கள் சீனாவை சுற்றி வளைத்தல், தெற்கு ஆசியாவில் அதன் செல்வாக்கை எதிர்கொள்ளுதல் என்ற மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் நீண்ட காலமாக இருக்கும் தன் கடற்படை மேலாதிக்கத்திற்கு எவ்வித சீன சவாலுக்கும் அமெரிக்கா விரோதத் தன்மையைக் காட்டும். அதேபோல் மத்திய கிழக்கிற்கும் வடகிழக்கு ஆசியாவிற்கும் இடையே மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கியமான கடல் பாதைகளை கடற்படை “நெரிக்கும் பகுதிகள்” கொண்டிருப்பதற்கு சீனச் சவால்கள் வந்தால் அவற்றையும் எதிர்க்கும். அறிக்கை தெரிவிப்பது போல் “ஒரு நிதானமான பங்கு” என்பதற்கு மிகவும் அப்பாற்பட்ட பங்கு என்பதில் இருந்து, அமெரிக்கா இப்பகுதியில் புதிய போர்களுக்கான ஆபத்தைத்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நீக்கம் தற்செயல் நிகழ்வு அல்ல. அமெரிக்க நடவடிக்கைகள் கான்பெர்ரா எதிர்கொள்ளும் சங்கடங்களை அதிகரிக்கையில், தொடர்ச்சியான ஆஸ்திரேலிய அரசாங்கங்களான தொழிற் கட்சி மற்றும் லிபரல் நேஷனல் கூட்டணிகள் நிபந்தனையற்ற முறையில் அமெரிக்க உடன்பாட்டையும் ஆப்கானிஸ்தானில் அது நடத்தும் போருக்கும் ஆதரவு கொடுத்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய துருப்புக்களும் பங்கு பெறுகின்றன. இந்து சமுத்திரத்தில் எவ்வித ஆஸ்திரேலிய இராணுவக் கட்டமைப்பும் ஐயத்திற்கு இடமின்றி வெள்ளை மாளிகை, பென்டகன் உடன் மிக மிக நெருக்கமான ஒத்துழைப்பு, உடந்தையுடன்தான் நடக்கும்.

Read more...

ஜெனரல் பொன்சேகாவின் மகள் கிலாரி கிளின்டனிடம் கடதமொன்றை பாரமளித்தார்.

இராணுவத் தடுதப்புக்காவிலிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கொழும்பு மாவட்ட பாராளுன்ற ஊறுப்பினருமான ஜெனரல் பொன்சேகாவின் மகள் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலர் கிலாரி கிளின்டனிடம் கடிதமொன்றை கையளித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கிலாரி கிளின்டன் அவர்கள் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இக்கடதம் கையளிக்கப்பட்டுதாக தெரியவருகின்றது.

எனும் அமைப்பின் ஸ்தாபகர்களான அப்சரா உட்பட நால்வர் அக்கதத்தின் கையொப்பமிட்டுள்ளனர். அக்கடிதத்தின் இலங்கை வெளிநாட்டுக் கொள்கைள் மிகவும் பாரதூரமான முறையில் தவறாக கையாளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கை சீனா, ரசியா, மியன்மார், ஈரான், லிபியா போன்ற நாடுகள் இலங்கையின் மிக நெருங்கிய நேச சக்கிகளாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி நீதிக்கு புறம்பான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

சரணடையும் புலிகளை கொல்லமாட்டோம் என நம்பியாரிடம் கூறவில்லை. பாலித ஹோகன

சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க் கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் பாலித ஹோகன்ன ஆகியோர் உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தமை குறித்துப் பாலித ஹோகன்ன விடம் இன்னர் சிற்றிப் பிரஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட மாட்டார்கள் என்று தான் எந்த உறுதி மொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்து விட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தைக் கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் ஹோகன்ன தெரிவித்தார் என இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான ஜனாதிபதி மகிந்த விடமும் கோத்தபாயவிடமும் கருத்தைக் கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம் அவரிடம் இது குறித்து கேட்ட றிவதற்கு முற்பட்டபோது-பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு ஹோகன்ன அனுமதிகவில்லை என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய ஊடக கழகத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அங்கு ஊடகவி யலாளர்களைச் சந்திக்காமல் வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடகக் கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினைப் படு கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது தாக்குதல்,

ஜேவிபி.ஆதரவுப் பத்திரிகையான லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார். மொனராகலையில் கலை விழா ஒன்றிற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த போதே உள்ளுர் ஆளும்கட்சி அரசியல்வாதியின் குண்டர் படையால் இவர் தாக்குதலுக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வூடகவியலாளரைத் தாக்கிய காடையர்கள் அவருடைய கைத்தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு வந்த குண்டர்களுடைய வாகனத்தையும் அவ்வூடகவியலாளர் படம் பிடித்துள்ளார். பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லங்கா ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு எதிர்காலத்தில் எவ்வித இடையூறும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவ்வரசியல்வாதி உறுதி வழங்கியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களினால் ஜனநாயகம் குறித்து பிழையான கருதுகோள்கள் சமூகத்தில் உருவாகும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களினால் ஜனநயாகம் குறித்து பிழையான கருதுகோள்கள் சமூகத்தில் உருவாகக் கூடிய அபாயம் காணப்படுவதாக அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால் சமூகத்தில் எதிர்மறையான எண்ணக்கருக்கள் உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. லங்கா பத்திரிகையின் அனுசரணையில் நடைபெறவுள்ள கலை விழா தொடர்பான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் லங்கா ஊடகவியலாளர் மொனராகலை பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். மொனராகலை பிரதேச சபையின் தலைவர் ஆர்.எம்.ரட்ணவீரவின் வாகனத்தில் பயணித்த நபரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஊடக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Read more...

அமரர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் இலங்கையில் விடுமுறை.

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடந்த 21வருடங்களின் பின்னர விடுமுறை நிமிர்த்தம் இலங்கை வந்துள்ளனர். 1989 ஜூலை மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கள் 21வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் கேகாலை, அம்பலம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள, அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரான டீ.ஏ. நிஸ்ஸங்க என்பவரின் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தனர , அமரர் அமிர்தலிங்கத்தின் மெய்ப் பாதுகாவலருக்கு நன்றி பாராட்டும் நோக்கில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். 21 ஆண்டுகளின் பின்னர் குறித்த மெய்ப் பாதுகாவலரை சந்தித்த அமிர்தலிங்கம் குடும்பத்தார், உணர்வுபூர்வமாக தமது நன்றியை தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி புல்லர்ஸ் பிளேஸ் கட்டமொன்றில் அமிர்தலிங்கம் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த மூன்று ஆயுததாரிகளை மேற்படி மெய்ப்பாதுகாவளரான நிஸ்ஸங்க, சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகவியளாளர்களிடம் பேசிய மங்கையர்க்கரசி அவர்கள், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான திறமை ஜனாதிபதியிடம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சுதந்திரமானதொரு நடமாட்ட நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இருப்பினும் இனங்களுக்கிடையே சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நாட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முயற்சி பாராட்டுக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாராம்.

வயது முதிர்ந்து விட்டதால் அரசியல் விவகாரங்களில் தமக்கு எவ்வித நாட்டமும் கிடையாது எனவும் அரசியலினால் தமது குடும்பம் சொல்லொனா துயரங்களை அடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசியலில் பிரவேசிப்பதன் மூலம் மட்டுந்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றில்லை என அமரர் அமிர்தலிங்கத்தின் புதல்வரும் வைத்தியருமான பகீரதன் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியலில் ஈடுபடும் எவ்வித நோக்கமும் தமக்குக் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.



Read more...

முல்லைத்தீவு மாவட்ட மக்களை மீள்குடியேற்ற முடியாது

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவததள்ளார்.

"இந்த மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும்.

வவுனியாவிலுள்ள ஆறு நலன்புரி வலயங்களில் ஒன்றினை இன்னும் இரண்டொரு தினங்களில் நாம் மூடவுள்ளோம். மீதியாக ஐந்து வலயங்களே உள்ளன. இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரையும் குடியேற்றிய பின்னர் இந்த வலயங்களையும் மூடக்கூடியதாகவிருக்கும்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகள் இந்தியாவிலிருந்தே எமக்குக் கிடைக்கின்றன. கூரைத் தகடுகளை ஏற்றிய கப்பல்கள் இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்ததும் அவற்றினைத் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகரிடம் இவை ஒப்படைக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும்.

மேலும், கடந்த காலங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியுடனேயே அரசாங்கம் ஆறுமாத காலத்துக்கான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இவை முடிவுறும் நிலையிலிருந்தாலும் அவற்றினைத் தொடர்ந்து வழங்குவது குறித்து உலக உணவுத் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பெரும்பாலும் இது சாத்தியப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்னம் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை

நுகேகொடவிலுள்ள தனது வீட்டில் வெடிபொருள்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளரும், பணிப்பாளருமான சந்திரன் ரட்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத நிலையிலேயே, கங்கொடவில நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இலங்கையின் யுத்தத்தை மையமாக வைத்து 'ஆனையிறவுக்கான பாதை' என்ற திரைப்படத்தை சந்திரன் ரட்னம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிலிருந்து பெற்றிருந்த விசேட உரிமத்தை சந்திரன் ரட்னம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

காவல்துறை அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி.

காவல்துறை அதிகாரங்கள் மத்தியமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கக் கூடாது என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மும்பை தாக்குதல்களின் போது மாநில அரசாங்கத்தின் அனுமதிக்காக மத்திய அரசாங்கத்தின் கமான்டோக்கள் காத்திருந்தமையினால் இழப்புக்கள் அதிகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே, காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு அவர்களே காரணம் எனவும், தமது
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களை புலிகள் உதாசீனம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடியாது என்ற காரணத்தினால் வேறு வழியின்று இராணுவ நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுத்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழித்து விட்டதாக தாம் கருதவில்லை எனவும், உறங்கும் போராளிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டதாகவும், சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபாகரனின் தாய் தந்தையருக்கே தமது அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ள நிலையில் சாதாரண பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் முகாம்களில் இன்னமும் 30,000 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், மீள் குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லதொழிப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் சீனாவிடம் ஆயுதங்களை பெற்றுக் கொண்ட காரணத்தினால் சீனாவுடன் இலங்கை மிக நெருங்கிப் பழகுவதாக அர்த்தப்படாது எனவும், அவசர தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஆயுதக் கொள்வனவு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நட்பு காணப்படுகின்றது என்று கூறுவதனை விடவும், நட்பைத் தாண்டிய உறவு காணப்படுவதாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது உறவினர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்ற போதிலும், ஜனநாயக ரீதியான தேர்தலின் மூலம் அமோக வெற்றியீட்டியுள்ளார்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனதை ஆறுதல் படுத்தும் நோக்கில் ஹிந்தித் திரைப்படங்களை மாலை வேளையில் தாம் ரசித்து பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read more...

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்ற நேரிடும்.

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக அவர்களது உத்தியோபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுநிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்த சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். செல்லசாமி, பாராளுமன்ற உறுப்பினர்களாக ரஞ்சித் அலுவிகார மற்றும் அமீர் அலி உள்ளிட்டோரும் இந்த குழுவில் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட காலக் கெடுவை பயன்படுத்தி சிலர் வெளியேறத் தவறியுள்ளதாகவும், இதனால் மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமைச்சர்கள் வெளியேறும் வரையில் புதிய அமைச்சர்களுக்கு வீட்டு வாடகைக் கொடுப்பனவாக தலா 50,000 ரூபா வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more...

இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்

‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்

உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. 1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

உலகில் காணப்படும் மெல்லக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும். இத்தாவரத்தின் தண்டுப் பகுதியைவிடவும், இலைப் பகுதியிலேயே அதிக இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி. டி. ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பாவிக்கிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார் தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக்கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பாவித்து புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பாவித்து வருகிறார்கள்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து தவிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கிறது.

உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.

பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும், அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.

புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%, விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%, மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னையநாள் பணிப்பாளர் ‘வில்லியம் பொலின்’ வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியதே. ‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக்கூடியது. அடிமையானவர்களில் 60% – 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப்பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் யுவதிகள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

‘பகையைக் கூட புகையாய் ஊதித் தள்ளிவிடும் மனிதன் இந்தப் புகை என்னும் பகையை பகைக்க முடியாமல் திணறுகிறான்’. உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது? இவ்விடத்தில் சிறிதேனும் ஆராய்தல் வேண்டும். புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதையீ புற்றுநோய்இ சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரபையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.

அத்தோடு புகையிலை பாவனை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனத்தை அதிகரிக்க உதவலாம். அதேநேரம் நிறைகுறைந்த குழந்தை பிறப்பும், குறைமாதக் குழந்தை பிறப்பும், கர்ப்பப் பையினுள்ளே சிசு இறந்து பிறப்பதும் புகையிலைப் பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும்.

இதேவேளை புகைபிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைபிடிக்காதோர் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் ஆஸ்துமா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில் தொற்று, சுவாசத் தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்றவாறான பாதிப்புக்களுக்கும் உள்ளாக நேரிடும். அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி ஹிப்னோற்டிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சிறிது காலத்தின் பின் இச்சிகிச்சை பெற்றவர் பிரச்சினைகள் அல்லது வேறு காரணங்களால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி. யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார்.

புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டு வந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவறுத்தலுக்கமைய அநேகமான நாடுகள் புகை பிடிப்பவர்களை எச்சரிப்பதற்காக சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சில நாடுகளில் புகைத்தலை தடுப்பதற்காக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய முடியாது.

பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் சட்டமியற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பொது இடங்களில் புகைபிடித்தால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக சில நாடுகள் புகைத்தல் தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சுகாதாரப் பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதேவேளை, சிலநாடுகளில் புகையிலையும், மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது. குறிப்பாக புகைத்தலின் தீங்குகளைப் பற்றி பிரசாரம் செய்யும் சுகாதாரப் பகுதியினர் அல்லது நிறுவனங்கள் புகைத்தல் தொடர்பான உற்பத்திகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது வேதனைக்குரியதே. இவற்றால் புகையிலை உற்பத்திகளை தடுக்க முடியாது. ஏனெனில், புகையிலை உற்பத்திகள் மூலமாக அரசாங்கத்துக்கு பெருமளவுக்கு வருமான வரியை ஈட்டுகின்றன.

1988ல் பின்லாந்தும், 1994ல் பிரான்சும் மதுபான, புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து போன்றவையும் நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் இந்நிலையை துரிதப்படுத்துகின்றன. எவ்வாறிருந்தபோதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது மாத்திரமே உண்மை.

ஒரு நபர் புகைப்பிடிப்பதினால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக ‘நாட்டிங்காம்’ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு எத்தகையோர் புகைப்பிடிக்கின்றார்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பழக்கவழக்கங்கள் காரணமாக 21 %, மகிழ்ச்சிக்காக 21.1% , புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 22.7% , நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காக 8.2%, தனிமையிலிருந்து விடுபடுவதற்காக 7.5% , ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி 3.3%, பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் 7.6% , நண்பர்களின் அழுத்தம் காரணமாக 7.6 % , பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நோக்கில் 3.3% த்தினரும் புகைப்பிடிப்பதாக தெரிய வருகின்றது. மேலும், இலங்கையில் புகைப்பாவனையாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் 17.1% , கொழும்பு மாவட்டத்தில் 20.4%, கேகாலை மாவட்டத்தில் 24.5% , அநுராதபுர மாவட்டத்தில் 27.9% , கம்பஹா மாவட்டத்தில் 29.8%, காலி மாவட்டத்தில் 44.2% இருப்பதைக் காணமுடிகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதற்கு இடைப்பட்ட விகிதத்திலே இருப்பதை அவதானிக்கலாம். மேற்படி தகவல் சிகரட் விற்பனையை மையமாகக் கொண்டு பெறப்பட்டதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தினால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளினை முன்வைக்கின்றது. அவை வருமாறு:

1990 - Childhood and youth without tobacco: growing up without tobacco
1991 - Public places and transport: better be tobacco free
1992 - Tobacco free workplaces: safer and healthier
1993 - Health services: our windos to a tobacco free world
1994 - Media and tobacco: get the message across
1995 - Tobacco costs more than you think
1996 - Sport and art without tobacco: play it tobacco free
1997 - United for a tobacco free world
1998 - Growing up without tobacco
1999 - Leave the pack behind
2000 - tobacco kills, don’t be duped
2001 - second-hand smoke kills
2002 - tobacco free sports
2003 - tobacco free film, tobacco free fashion
2004 - tobacco and poverty, a vicious circle
2005 - health professionals against tobacco
2006 - tobacco: deadly in any form or disguise
2007 - smoke free inside
2008 - tobacco-free youth
2009 - tobacco health warnings

Read more...

Saturday, May 29, 2010

சரத் பொன்சேகாவின் உரிமைகளுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் , ரொபர்ட் ஓ பிளெக் ,

இராணுவத் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய வலயத்திற்கு பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலளார் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கள் தொடர்பில் சிவில் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகள் சட்ட திட்டங்களுக்கு அமைவான முறையில் நடைபெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பினைத் தொடர்ந்து, ரொபர்ட் ஓ பிளெக் இதனை அறிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஐ.தே.க ஜனாதிபதியிடம் கோரிக்கை ,

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் யோசனைகளுக்கு செவி சாய்க்கத் தயார் என அண்மையில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தமது கருத்திற்கு ஜனாதிபதி செவி மடுத்ததாகவும், அதேபோன்று இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

புலிகளின் முக்கிய உறுப்பினர் புல்மோட்டையில் கைது:

புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் புல்மோட்டை கட்டக்குளம்மீதிரியாய பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். செல்வகுமார் உதயகுமார் என்பவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த காலங்களில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தகவல்களி கிடைத்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சந்தேக நபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு புல்மோட்டை காவற்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நுகெகொடவில் வெடிபொருட்களை வைததிருந்ததாக தமிழ்த் திரைப்பட இயக்குனர் கைது

நுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் டெட்டநேட்டகர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் விசேட காவற்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

அனுமதிப் பத்திரமின்றி 4.95 கிலோ கிராம் வெடி மருந்து, 7 டெட்டநேட்டர்கள் மற்றும் உபகரணங்களை தன்வசம் வைத்திருந்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழரான திரைப்பட இயக்குனர் அரிச்சந்திரன் குமார்ரட்ணம் நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். விசேட அதிரடிப்படையில் குண்டு செயலிழக்கும் பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட டெட்டநேட்டர்களை செயலிழக்க செய்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வெடிப் பொருட்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரம் தன்னிடம் இருப்பதாக சந்தேக நபர் கூறிய போதிலும் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இதனால் விசாரணைகளை நிறைவுசெய்ய முடியவில்லை எனவும் இதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டாம் எனவும் காவற்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள 6வது ஒழுங்கையில் ரோஷி அபேவிக்ரம என்பவரது வீட்டை சோதனையிட்டதாகவும் வீட்டின் மேல் மாடியில் இருந்த வெடிப் பொருட்கள் பெட்டியொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். போர் தொடர்பான அலிமங்கட, அக்னியன் போன்ற படங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வெடிப் பொருட்களை தான் வைத்திருந்தாக குமார் ரட்ணம் தெரிவித்தாகவும் எனினும் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரத்தை இதுவரை காவற்துறையில் சமர்பிக்கவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குமார் ரட்ணம் சிங்கள திரைப்படங்களை இயக்கி வரும் தமிழராவர், அவர் பல முக்கிய சிங்களப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.



Read more...

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்துரையாடலும்.. ஓர் அலசல்!

எமது தாயகத்தில் தமிழ்த் தேசிய உரிமைக்கென்று பல குரல்கள் ஒலித்து... அவை பல வடிவங்கள் பெற்று... அவற்றிலிருந்து பல விடுதலை அமைப்புகள் உருவாக்கி... அதில் தனிப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரால் அவரின் பதினேழு வயது பருவத்தில் கையில் துப்பாக்கி ஏந்தி ஆரம்பித்து வைக்கப்பட்ட புலிகள் என்ற இயக்கம்... தமிழீழ விடுதலைப் புலிகளாக ஓர் இனத்தின் பெயரால் தாமே தமக்கு ஏகபோக உரிமையை எடுத்து... தம் இனத்தின் சக விடுதலை அமைப்புகளை... தமிழ்த் தலைவர்களை... பல அறிஞர்களை... கொன்றொளித்தது மட்டுமல்லாமல், அதே தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களை தம் வாழ்விடங்களை விட்டு அப்புறப்படுத்தி ஓர் இனச் சுத்திகரிப்பை செய்தது மட்டுமல்லாமல், தம் சொந்த தமிழ் உறவுகளையே துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றொளித்து... பாலகர்களை கட்டாய ஆள்சேர்ப்பில் எண்ணிக்கை கூட்டி.. மூளைச் சலவை செய்து... கடைசியில் பதுங்கியிருந்து தாக்கும் வீரமுள்ள புலிஎன்ற வரைவிலக்கணத்துக்கு மாறாக தம் இன மக்களையே தமக்கு கவசமாக வைத்து அவர்களை தாமும் படுகொலை செய்து பொது எதிரிக்கும் வாய்ப்பளித்து... தம்மையே... தம் அமைப்பின் தலைமையையே... தம் குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல்... உலக வரைபடத்தில் முள்ளிவாய்க்காலை புள்ளியிட்டு காட்டுமளவிற்கு ஓர் இனத்தின் தலைவிதியையே மாற்றுமளவிர்க்கு ஓர் மரண ஓலம் நிறைந்த... இரத்த ஆறு ஓடிய... உயிரற்ற மனித உடல்கள் தீக்கிரையாக்கிய... ஒருபோதும் மற்றவர்களையே கையேந்தாமல், சுய உணவை பூர்த்தி செய்த மக்களை மரண அவல... ஓலத்தின் பின் முட்கம்பிகளின் பின் அநாதைகளாக்கிய... வரலாற்றில் மறக்க முடியாத நாளாகிய “மே 18”யை அமைப்பின் பெயராகக் கொண்டவர்களினால் "தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்துரையாடலும்" என்ற தலைப்பில் ஓர் கலந்துரையாடல் கடந்த சனியன்று (22.05.2010) கனடா டொராண்டோவில் நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்ட கலந்துரையாடல் ஆறு மணியளவில் எமது தாயகத்தில் இப் போரினால் இறந்து போன அனைத்து மக்களிற்கும் அஞ்சலி செலுத்தி, மண்டபம் நிறைந்து சமூகமளிதிருந்தவர்களை வரவேற்கும் தலைமையுரையுடன் ஆரம்பித்து, ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய முகவுரையில் 'மே 18 இல் முடிவு பெற்ற இனப்படுகொலையின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் கனத்த, நீண்ட ஓராண்டு இது. இழந்தவற்றிற்காக கவலைப்படுவதா, உள்ளேயிருப்பவர்கள் பற்றி வேதனைப்படுவதா, அல்லது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதா என்று தெரியாமல் மிகவும் குழம்பிப் போயிருந்த காலம் இது. நாம் ஏன் இப்படித் தோற்றுப் போனோம் என்று யோசித்து இன்னமும் விடைகாண முடியாமல் தமது நித்திரையை தொலைத்துவிட்டவர்கள் பலர். இறந்துவிட்ட தமது தலைவனுக்கே அஞ்சலி செய்ய வக்கற்றவர்கள், மீண்டும் ஒரு தடவை மக்கள் மீது சவாரிவிட முனைவதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர்கள் இன்னும் பலர். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவுமே, கடந்த காலம் பற்றிய மீளாய்வுடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

இப்படியாக நாம் தோற்றுப் போனதற்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்விக்கு, விடுதலைப் புலிகளே காரணமானவர்கள் என்ற பதில் கேட்கிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. கடந்த காலத்தில் மாற்று அமைப்புக்கள் அணைத்தையும் அழித்தொழித்து, தமது ஏகபிரதிநிதித்துவத்தை சக போராளிகளது சாம்பல் மேட்டில் நிறுவியவர்கள், வெளியில் இருந்து எழுத்த கேள்விகளுக்கெல்லாம் தலைவருக்கு தெரியும் என்று இறுமாப்புடன் பதில் அளித்தவர்கள் இந்த தோல்விக்கும் பொறுப்பெடுத்துதான் ஆக வேண்டியுள்ளது. அதனைவிட, இன்று புலிகளது ஆதரவாளர்கள் சித்தரிகக் விரும்புவது போல இந்த தோல்வியொன்றும் சர்வதேச சதியினால் விளைந்ததல்ல. நாம் எப்போது சர்வதேச சமூகத்தை ஒரு பொருட்டாக மதித்தோம், அந்த சர்வதேச சமூகம் எமது போராட்டத்தைப் பற்றி அக்கறைப்படுவதற்கு? ஒரு விடுதலைப் போராட்டத்தில் செய்யக் கூடாத அத்தனைத் தவறுகளையும் ஒட்டு மொத்தமாக செய்து விட்டு, வெறுமனே சர்வதேச சமூகத்தில் மாத்திரம் தோல்விக்கான பொறுப்பை சாட்டிவிட முடியாது. எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளக் கூடிய, அதற்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடிய அத்தனை சக்திகளிடம் இருந்தும் தம்மை தனிமைப் படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், அதன் மூலமாகவே தமது தோல்வியை தாமே வரவழைத்துக் கொண்டார்கள் என்பதுதான் சரியானதாக இருக்கும். 2001 செப்டம்பர் 11 இற்கு பின்பு சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மகிந்த அரசின் வருகை, அவர்கள் வகுத்த புரொஜெக்ட் பீக்கன், அதற்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தை அணிதிரட்டியமை போன்றவற்றை புரிந்து கொண்டு, அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்ளும் திறன் அற்றவர்களாக இருந்தார்கள். இந்த யுத்தத்தின் அனைத்து முன்னெடுப்புக்களும் சிறீலங்கா அரசின் கைகளிலேயே இருக்க, இவர்கள் அவற்றை எதிர்கொள்வதில் செயல் முனைப்பு அற்றவர்களாக இருந்தார்கள். அதனைவிட இந்த கடைசி யுத்தத்தில் மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் வரையிலான போர்க்களங்களில் எத்தனை தீவிரமான சமர்கள் நடைபெற்றன? பல நூற்றுக்கணக்கான மைல்கள் நீளமான போர்முனையில் ஊடுறுவும் தாக்குதல்கள் எத்தனை நடத்தப்பட்டன? இவை யாவும் யுத்தத்தில் இராணுவ சமபல நிலை சிறீலங்கா அரசின் பக்கமே இருந்ததை காட்டின. இதனை புலிகள் அமைப்பானது எப்படி அனுமதித்தது?

கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக யுத்த களத்தில் நின்ற ஒரு வீரன், இராணுவ நிபுணன் எப்படி நந்திக்கடல் போன்றதொரு வெட்டவெளியில் தனது படையை இறுதிக் கட்டத்தில் குவித்திருக்க முடியும். தனது சகதோழர்களையே நம்பாத ஒருவர் யாரை நம்பி, யாருக்காக இப்படி காத்திருந்தார்? அதனைவிட அவலமானது, இவர்கள் தம்மை காத்துக் கொள்ளும் நோக்கில் பலியிட்ட சாதாரண குடிமக்களது எண்ணிக்கை! இத்தனை மக்களை பலியிட்டு எதனை காத்துக் கொள்ள முனைந்தார்கள்? போராட்டம் தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருப்பது தெரிந்தும், அதனை தவிர்ப்பதற்கு, இழப்புகளை குறைப்பதற்கு, போராட்டத்தின் தொடர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதற்கு முயலாமல் இப்படியாக நந்திக் கடலில் சங்கமிக்கச் செய்தமையானது, தமது செயல்திறன் அற்ற தலைமையை காப்பதற்கு ஒரு தேசத்தின் நலன்களை பலியிட்டதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்று தலைவனது இறப்பை மக்களுக்கு சொல்லாமல், அவரது தவறுகளுக்கும் அப்பால், அவருக்கு உரிய மறியாதையையும் செய்யாமல் இவர்கள் எதனை, யாரை காக்க முனைகிறார்கள்?

இப்படியாக எழும் கேள்விகளும், விமர்சனங்களும் தொடரவே செய்கின்றன. இவை சரியானதும்தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இவை அனைத்துமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டும்தான் என்பதுதான். இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதுதான் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு உருவானதில், அதனை தாங்கிப் பிடித்ததில் தமிழ் சமூகத்தின் பாத்திரம் என்ன? என்பதாகும். அதனைவிட முக்கியமாக, இதனை கடந்து வருவதில் தமிழ் சமூகத்தின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள் என்ன என்பதாகும். நான் நினைக்கிறேன் சுயவிமர்சனம்தான் மிகச் சிறந்த விமர்சனம் என்று. அதனால் நாம் முற்போக்கு, ஜனநாயக சக்திகளது பாத்திரம் பற்றிய சுயவிமர்சனத்தில் இருந்துதான் எமது எதிர்கால திட்டமிடல்களை ஆரம்பித்தாக வேண்டியுள்ளது. அதுதான் இந்த உரையின் நோக்கமாகவும் இருக்கிறது.

தேசம் என்பது ஒரு வரலாற்றுபூர்வமான உருவாக்கமாகும். நாம் என்னதான் கல் தோன்றி மண் தோன்றா காலம் பற்றி பழம் பெருமைகள் பல பேசிக் கொண்டாலும், தேசங்கள் என்பவை முதலாளித்துவ காலகட்டத்திற்கு உரியவையாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஈழத் தமிழரைப் பொறுத்த வரையில் காலனித்துவ காலத்தில் தொடங்கி, சுதந்திரம் பெற்றது வரையிலான காலம் இப்படிப் பட்ட கால கட்டமாக அமைகிறது. இந்த கட்டத்தை பரிசீலிப்பதன் மூலமாகவே ஈழத் தமிழர் தேசமாக உருப் பெற்றது பற்றிய விடயங்களையும், இலங்கையில் தேசிய பிரச்சனையின் முக்கியமாக அம்சங்களையும் சரிவர புரிந்து கொள்ள முடியும். இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நாம், எமது தேசத்தின் விடுதலைப் போரட்டம் பற்றிய பிரச்சனையையும் சரிவர அணுக முடியும். வரலாறு பற்றிய எமது ஆய்வுகளில் அடிக்கடி இடையூறு விதித்து வரும் இரண்டு போக்குகளை இனம் கண்டு அவற்றை முதலிலேயே தவிர்த்து விடுவது அவசியமானதாகிறது.

முதலாவது, பொருளாதாரவாதம்: அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவம் பற்றிய அக்கறைகள் மாத்திரம் இந்த சிக்கலான விடயத்தை விளக்கிவிட போதுமாவை என்ற விதத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள். இவை முக்கியமாக இடதுசாரி சக்திகளால் முன்வைக்கப்பட்டன, இப்போதும் முன் வைக்கப்படுகின்றன. இரண்டாவது, இன அடிப்படையிலான அரசியல் இது தமிழ் தேசியவாத தலைமைகளினால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டது, இப்போதும் முன்வைக்கப்பட்டு வருவது. இப்படிப்பட்ட ஒற்றைப் பரிமாண வியாக்கீனங்களானவை, தாம் எதனை விளக்க முனைகின்றனவோ, அதனை விளக்குவதற்கு அறவே தகுதியற்றவை யாகின்றன. ஏனெனில் யதார்த்தமானது இந்த ஒற்றைப் பரிமாண அரசியல் கட்டமைக்க விழையும் விம்பங்களைவிட மிகவும் வளமானதாகும். அதனால் நாம் முன்னெடுக்கும் கோட்பாடுகள் இந்த சமூக யதார்த்தங்கள் போலவே பன்முக பரிமாணங்களையும் உள்ளடக்கக் கூடியதாக, வளமானதாக, உண்மையிலேயே மிகவும் முன்னேறிய கோட்பாடாக இருப்பது அவசியமானதாகிறது. அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு பொருளாதாரம் என்பதற்கும் மேலாக, சாதியம், பிரதேசவாதம், மதம், இனத்துவம், பால்நிலை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக எமது விசாரணைகள் அமைவது அவசியமானதாகிறது. சரியான கோட்பாட்டு சாதனங்கள் இன்றி நாம் சரியான கோட்பாட்டு செயற்பாடுகளை செய்துவிட முடியாது என்பதை நினைவிற் கொள்வது அவசியமானதாகிறது.'

என்று எடுத்துக் கூறி, ஐரோப்பியர்கள் இலங்கையை ஆக்கிரமித்தபோது இலங்கையில் இருந்த கண்டி, யாழ்ப்பாணம், கோட்டை இராச்சியங்களை நினைவுபடுத்தி... அதன்பின் தொடர்ச்சியாக மக்களின் விவசாயம் மூலமான தன்னிறவையும்... காலானித்துவ ஆட்சியையும்... அதன் பிரதிபலிப்புகளையும்... மாற்றங்களையும்... அதன்பின் ஏற்ப்பட்ட சிங்கள கரவா சாதியினரின் எழுச்சி... பவுத்த மறுமலர்ச்சி...கண்டி சிங்களவரது மனக் குறைகள்... அரசியல் சீர்திருத்தங்கள்... Celyon National Congress இன் உருவாக்கம்... டொனமூர் அரசியல் அமைப்பு... சோல்பெரி அரசியல் சீர்திருத்தம்... தமிழரசு கட்சியின் தோற்றம்... வட்டுக்கோட்டைத் தீர்மானம்... வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் வென்றவர்களின் வார்த்தை ஜாலங்கள்... இடதுசாரி அமைப்புகளின் பங்கெடுப்புகள்...இளைஜர் அமைப்புகள்... அவற்றின் பங்கெடுப்புகள்... விடுதலைப் புலிகளின் தோற்றம்... அவர்கள் தாமே தன்னிச்சையாக ஏகபோக தலைமையை கையில் எடுத்து தலைமை தாங்கும் சக்தி அறவே இல்லாமல் தாமே தமது அழிவைத் தேடியது... என்று ஓர் சுருக்கமான விளக்கமா வரலாற்றை அப்படியே கண் முன் கொண்டுவந்தார்.

அப்படியே தொடர்ந்து போராட புறப்பட்ட அமைப்புகளின்... தலைவர்களின்... பாதிப்புகள்...புலிகளின் வீழ்ச்சியையும்.. இன்றைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு... நாடு கடந்த அரசு... அவர்களின் ஏமாற்று... இணக்க அரசியலின் தேவை... இணக்க அரசியலின் விளக்கம்... மாற்று அரசியல்... என்று பலவற்றை ஓர் விமர்சனக் கண்ணோட்டத்துடன் எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகள் என்பது வரலாற்றில் ஓர் முடிந்து போன அத்தியாயம் என்றும் வரலாற்றின் வரலாறு என்பதை அழகாக எடுத்துவந்து மே 18 யை ஓர் முற்றுப் புள்ளியாக கருதாமல் ஓர் தரிப்புக் குறியாக மாற்றுவோம் என தமது "மே 18 " அமைப்பின் "முடிவல்ல... புதிய தொடக்கம்!" என்பதின் அர்த்தத்தையும் நாசூக்காக அர்த்தத்துடன் எடுத்துரைத்து தமது உரையை முடித்தார்.


அதன் பின் தொடர்ச்சியாக அறிவுபூர்வமான ஓர் கலந்துரையாடல் ஆரம்பமாகியது.

இதில் விடுதலைப் புலிகளின் முடிவு எல்லாவற்றிற்கும் தீர்வா?

இன்றைய நிலைக்கு யார் காரணம்? யார் பொறுப்பு?

ஜனநாயக விழுமியங்களை விழுங்கியதா?

ஏனைய அமைப்பை தடை செய்தது எல்லாவற்றிக்கும் புலிதான் காரணமா?

போராட்டத்தை நாம் பின் நோக்கிப் பார்க்கவேண்டும்!

எந்தவிதமான ஒளிவு மறைவு இல்லாமல் ஓர் கருத்தாடல் தேவை!

புலிகள் அழிக்கப்பட்டுவிட்டது, ஆனால் தேசம் இருக்கிறது... இருக்கப்போகிறது...!

சமூகம் என்பது எளிமையானது அல்ல, பல அமைப்புகள் சார்ந்தது... இவற்றால் பல அரசியல் போராட்டங்கள் நடைபெறுகிறது!

சமூக சீர்திருத்தங்கள்... அரசியல் அமைப்புகள்... என பலவற்றின் தேவை!

போராட்டம்... விடுதலை அமைப்பு... என்று சரியான தீர்க்க தரிசனம் இல்லாமல், நண்பர்கள், எதிரிகள் யார் என்று இனம் காணாமல் இயக்கங்களை காப்பாற்றுவதற்கான கொலைகள்... எதுவும் செய்யலாம் என்ற நிலை... எல்லா இயக்கங்களிலும் பிரச்சனைகள்...அதில் புலி ஆதிக்க சக்தி... வெறியாக மாறி, முரண்பாடுகளை வன்முறையால் தீர்த்தது... மிகப் பெரிய இராணுவம் ஏன் கடலிற்குப் போனது...ஆயுதம் எங்கே?... தவறு எங்கே?...சர்வதேச சமூகம் காடிக் கொடுத்தது என்பது பிழை... முஸ்லிம் சமூகம் விரட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை... பிரபாகரன் இறந்தது சொல்ல துணிவில்லை... All are thinking we all are smart ... ஆனால் தைரியமில்லை... முதுகின் பின் செயல் படுகிறோம்... முன்பு செய்திருக்கலாம்... all are excuses ... ஓடுகிற குதிரையில் ஏறும் புத்திஜீவிகள் என்பவர்கள்...

மக்களிற்கு உண்மையாக விசுவாசமா இருக்க வேண்டும்... not like நாடு கடந்த அரசு!

சிறு துளி பெரு வெள்ளம்! We put all together!

குழுவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்!

நடந்ததை விவாதிப்போம்!

வெளிப்படையாகப் பேசுவோம்!

இப்படியே ஜான் கருத்துக்கள் வைத்து அனைவரையும் அழைப்பு வைத்த மத்தியில்...

கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்நாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் (ஏன் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறி போனது என்று கேட்காதீர்கள்) , தமது வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகலிடம் கொடுத்துவிட்டு திரும்பியவருமான திரு. ஈழவேந்தன் அவர்கள் தொலைநோக்கோடு... சிந்தனை இல்லாமல் இருந்ததை இழந்தோம் என்று எடுத்து வந்து, பிரபாகரனிற்காக அரசியல் இல்லாமல், தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் இந்த நிலை என்று கூறி, இஸ்லாமியரை எம் உடன்பிறப்பாகக் கருதுகிறோம்... எம்மிடம் குற்றம் குறையுண்டு... ஆய்வுகள் மட்டும் பிரச்சனைகளை தீர்க்காது. But we need not stop, ரகுமான் ஜானின் ஆய்வு ஓர் நல்ல ஆய்வு என்று கூறினார்.

அதன் பின் திரு. சபேசன் அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு என்பன பற்றி "மே 18" அமைப்பினரின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்?

அதன் பின் கருத்துக் கூறிய ஒருவர் "நாம் மாறினால்தான் சமூகத்தை மாற்றலாம் என்று கூறி,

புலம் பெயர் நாட்டில் அரசியல், இங்கிருந்து கொண்டே செய்யும் அரசியல், Within our country (Sri Lanka என்னும் ஒரு தேசத்திற்குள்), வட கிழக்கு அரசியல் என்பனவற்றின் தேவையை கூறி, சிந்தனையான பேச்சு, வரலாற்றை படித்த பேச்சு என்பனவற்றின் அவசியத்தை கூறினார்.

He said, "Today also not too late, still we can do” also he said “In this one year period so far no open minded debate. In this how to discuss about Vaddukkoddai resolution, it’s like a Bible”. அத்துடன் No self searching என்றும் கூறினார்

அதன் பின் கருத்துக் கூறிய ஓர் முன்னால் போராளியும் ஜனநாயகவாதியுமனவர், சமூகம் என்பது நான்தான்!

சமூகத்தை குறை சொல்வது என்னைக் குறை சொல்வது போன்றது!

1986 இலேயே LTTE யின் வீழ்ச்சி என்று கூறி, அக்காலத்தில் நல்லூர் கோவண சாமி என்று ஒருவர் "அடிபடப் போறாங்கள்; அடிபட்டுச் சாகப்போறாங்கள்" என்று கூறியதை நினைவு படுத்தினார்.

அத்துடன் தனி மனித வழிபாடு; துதி பாடு; கண்ணை மூடிக் கொண்டு போவது என்பதே இன்றைய அவலத்திற்கு காரணம் என்பதுடன், Geo political , military என்பனவற்றின் வறுமைத்தனம் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறி, Wisdom ஊடாக சமூதாயத்தை வளர்க்க வேண்டும், என்றும் "

Within all what we can do for our people, we have to do and with Singhalese brotherhood only we can do all!

We have to bring all in English for our younger generation, என்று எடுத்துக் கூறி, நடந்தவற்றை எல்லாம் document பண்ண வேண்டும் என்று ஓர் கோரிக்கை வைத்தார்.

அடுத்ததாக எல்லோரிலும் வயது முதிர்ந்த ஒருவர் தனது கருத்துக்ககளை கூறுகையில், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு For a permanent solution need solidarity with all என்றும் need a solution within Sri Lanka not from external forces என்பதை வலியுறுத்தினார்.

மேலும் ஒருவர் தனது கருத்தைக் கூறுகையில் இன்றைய நாடு கடந்த தமிழீழத்தையும் தலாய் லாமாவையும் ஒப்பிட்டு தனது கருத்தை வைத்து இவர்கள் விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், யாழில் இருந்து இஸ்லாமியரை அவர்கள் பிறந்த மண்ணை விட்டு அகற்றியது போன்ற கடந்த கால வரலாற்று தவறுகள் இனியும் எம் தேசத்தில் நடக்ககூடாது என்பதை எடுத்து வைத்தார்.

இன்னொருவர் தனது கருத்தில், நாம் விடுதலைப் புலிகளின் தோல்வியை மட்டும் ஆராயாமல் ஜே.வீ.பி. யின் போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களையும் ஆராய வேண்டும் என தனது கருத்தை... வேண்டுகோளை வைத்தார்.

அடுத்ததாக ஒருவர் சுவாரசியமாக "இருந்த அரசை நாடு கடத்தி விட்டு இப்ப என் நாடு கடந்த அரசு?" என்று கேட்டார்.

அத்துடன் "மே 18 " அமைப்பு ஓர் திறந்த கதைக்கும் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, விவாதங்கள்... கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அது சரி இதை ஓர் அலசலாக... கண்ணோட்டமாக... ஓர் பார்வையாளனாக இருந்து நான் எழுதும்போது நான் என்ன சொல்லியிருப்பேன்... கலந்துரையாடலிற்கு தலைமை வகித்தவர் ஒவ்வொருவரையும் 5 நிமிடங்களிற்கு மேல் எடுக்கவேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தும் நேரம் போதாமையினால் கூட்டம் முடிவுற நிலையில் கடைசியாக, 20 வருடங்களிற்கு மேலாக கூறும் அதே கருத்தான... வேண்டுகோளான... "இப்படியே நாலு சுவர்களிற்குள்ளே தொடர்ந்து கூட்டம் போடாமல், இங்கு வைக்கும் கருத்துக்கள் வெளியே போக வேண்டும், முக்கியமாக இளம் வயதில் கனடா வந்த இளம் சந்ததியினருக்கு, இங்கு பிறந்து வளர்ந்தவர்கட்கு கடந்த கால உண்மைகள் தெரிய வேண்டும், இதற்க்கு முக்கியமாக ஆங்கிலத்தில், நடப்பவை... நடந்த நிஜங்கள் வெளி வர வேண்டும். இன்று புலி புலம்பெயர் நாடுகளில் ஊடகங்களின் ஊடாகவும், தமது பிரச்சார உத்திகளாலும் எமது இளம் சந்ததியினரை தவறான பாதையில் கொண்டு சென்று விட்டது மட்டுமல்லாமல் இன்றும் நாடு கடந்து... அரசு... என்று தொடர்கிறது, இவற்றிக்கு அவர்களில் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் நாம் என்ன செய்கிறோம் என்றுதான் உள்ளது என்றும் புலியின் வளர்ச்சி மட்டுமல்ல இன்று எமது போரின் நாட்களிலும், உலகின் எங்கும் பிரசாரத்தில் தான் எல்லாம் தங்கியுள்ளது என்றும், பிரபாகரன் என்றவர் ஓர் தனிப்பட்டவர், அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரும் தமிழனின் ஓர் பங்கு, புலிகள் என்பது திடீரென்று பிறந்தது இல்லை, எம்மக்கள் மத்தியில் இருந்துதான் உருவாகியது, இன்று நாம் விட்ட பிழைகளினால்தான் புலிகள் வளர்ந்தார்கள் என்று கூறி எனது கருத்தை அவசரமாக வைத்தேன்.

கடைசியாக ரகுமான் ஜான் அவர்கள் கலந்துரையாடலில் வைத்த கேள்விக்ளிர்க்கான பதிலில் "மே 18" அமைப்பென்பது ஓர் அரசியல் கட்சியல்ல என்பதை தெளிவு படுத்தியதுடன் ஈழமக்களின் சரித்திரம் முள்ளிவாய்க்காலின் முடியவில்லை என்றும், சரித்திரங்கள் தொடர்கிறது... என்று சுருக்கமாக உதாரணங்களுடன் தெளிவு படுத்தினார்.

அப்படியே பல ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயகவாதிகள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைவாதிகள், வெவ்வேறு முன்னால் அமைப்புகளைச் சேர்ந்த முன்னால் போராளிகள், பெண்ணியவாதிகள் என்று பலரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஆரோக்கியமாக குறிக்கப்பட்ட நேரத்திற்குள் மண்டபம் விட வேண்டிய நிலையில் நிறைவு பெற்றது.


நன்றி!


தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.

Read more...

Friday, May 28, 2010

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவன் விபத்தில் பலி

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த பொறியில் பீடத்தை சேர்ந்த சண்முகநாதன் சுஜீவன் என்ற மாணவன் ஆனையிறவில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை ஐந்து மணியளவில் ஆனையிறவுப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குறித்த மாணவன்மீது லொறி காற்றுப் போய் சரிந்தது. மோட்டார் சைக்களில் குறித்த மாணவனும் அவரது சகோதரனும் பயணம் செய்திருந்தனர். அவரது சகோதரன் காயங்களுடன் அதிஸ்ட வசமாக உயிர் தப்பி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பலியாகிய சண்முகநாதன் சுஜீவன் கிளிநொச்சி திருவையாற்றை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

சந்திரநேரு லண்டனில்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய சந்திரநேரு லண்டன் சென்று அங்கு குடிகொண்டு விட்டதாக தெரியவருகின்றது. இவர் அடுத்ததேர்தலுக்கு நாடுதிரும்புவார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பாக ஆவனங்கள் தேடுவதாக பிதட்டும் புலிப் பினாமிகளுக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

Read more...

இப்படியும் நடக்கின்றது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சாதாரண மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப முனைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் விசமிகளின் செயற்பாடுகள் மக்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளிவிடுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த விடயத்தில் ஆத்திரமடைந்த இளைஞன் கால்நடையின் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளான். சுமார் 75 வயதுக்கும் மேலான வயோதிபர் இளைஞனின் தாக்குலினால் மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான செய்திகள் யாவற்றிக்கும் தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இவ்வாறான பகுத்தறிவு கெட்ட செயல்களுமே காரணமாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது.

இலங்கை பொலிஸ் பிரிவின் கீழ் இயக்கி வந்த வீசேட அதிரடிப்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த 12ம் திகதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவினால் அமைச்சரவைக்கு விடுக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது.

1983 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட துணைப்படையான விசேட அதிரப்படைக்கு முதற் தளபதியாக ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அப்போது பாதுகாப்பு அமைச்சின் நேரடிக்கட்டுப்பாட்டிலிருந்த விசேட அதிரடிப்படை 1996ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் பணிப்புரையின்பேரில் பொலிஸ் மா அதிபரின் காண்காணிப்பின் கீழ் கொண்டவரப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்குவதில் பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ள விசேட அதிரடிப்படையினர் 1990ம் ஆண்டு இரண்டாம் ஈழப்போரின் பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாட்டங்களை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்துடன், அப்பிரதேசங்களில் எவ்வித கலகங்களும் ஏற்படாதவாறு கடமை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக விஐபி செக்குறிரி எனப்படும் அதி முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்குவதில் விசேட பயிற்சி பெற்றுள்ள விசேட அதிரடிப்படையினர் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய சகல அசமந்த நிலைகளையும் சமநிலைப்படுத்துவதில் தமது பூணர பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினரின் சேவையின் முக்கியத்துவம் கருதி அதை பாதுபாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

இந்தியா: ரயில் விபத்தில் 65 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் குறைந்தபட்சம் 65 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ரயில் பாதையை சேதப்படுத்தியதால்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக மாநில காவல்துறையினர் கூறுகிறார்கள்.

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஸர்திகா ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கப் பயன்படுத்தப்படும் பிஷ்பிளேட் எனப்படும் இணைப்புத் துண்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் அடுத்துள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது ரயில் பாதையில் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில், கவிழந்து கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளின் மீது படுவேகமாக மோதியது.

அதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் குறைந்தபட்சம் நான்கு பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 65 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 200 பேர் காயடமைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் மிகமோசமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் சதிவேலைதான் காரணம் என்று மேற்கு வங்க மாநில காவல்துறைத் தலைவர் புபிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள் ஆதரவு அமைப்பான பிசிபிஏ எனப்படும் போலீஸ் அராஜகத்தக்கு எதிரான மக்கள் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் பிசிபிஏ அமைப்பினர், தாங்கள்தான் பொறுப்பு என்று எழுதி இரண்டு போஸ்டர்களை விட்டுச் சென்றிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

விபத்து நடந்த மேற்கு மிதினாபூர் மாவட்டம் மாவோயிஸ்டுள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு துவங்கியுள்ள கிரீன்ஹன்ட் நடவடிக்கையைக் கண்டித்து, மாவோயிஸ்டுகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரம் கறுப்புவாரம் அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Thanks BBC


Thanks BBC.

Read more...

ஐ.நா பாதுகா‌ப்பு கவு‌ன்‌சி‌லி‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு இ‌ட‌ம் : சீன அ‌திப‌ர் உறு‌தி

ஆறு நா‌ள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள இந்திய குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் ‌சீனா அ‌திப‌ர் ஹூ ஜின்டாவோவை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். இரு தர‌ப்பு உறவை மே‌ம்படு‌த்துவது கு‌றி‌த்து இருவரு‌ம் ஆலோசனை நட‌த்‌தியுள்ளனர். இதன்போது ஐ.நா சபை‌யி‌ன் பாதுகா‌ப்பு கவு‌ன்‌சி‌லி‌ல் இ‌ந்‌தியா இட‌ம் பெற ‌சீனா உத‌வி செ‌ய்யு‌ம் எ‌ன்று சீன‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ஹூ ஜின்டாவோ உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌ன் ‌பி‌ன்ன‌ர் இரு நாடுகளு‌க்கு‌ம் இடையே 3 மு‌க்‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தாகியுள்ளன. விமான ஊழியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, இரு நாடுகள் இடையே நிர்வாக ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பது,விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது போ‌‌ன்ற ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌‌ள் இருநா‌ட்டு தலைவ‌ர்க‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் கையெழு‌த்தா‌யின.

இத‌ன் ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய இ‌ந்‌திய அயலுறவு‌த்துறை செயல‌ர் ‌நிருபமா ரா‌வ், ஐ‌க்‌கிய நாடுக‌ளி‌ன் சபை‌யி‌‌ன் பாதுகா‌ப்பு கவு‌ன்‌சி‌லி‌ல் இ‌ந்‌‌தியா இட‌ம் பெற ‌சீன அ‌திப‌ர் ஹூ ஜின்டாவோ உறு‌திய‌ளி‌த்து‌ள்ளமையை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

Read more...

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடை- முறைப்படுத்த முடியாது. JHU - NFF

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை -இந்திய உடன்படிக்கைக்கமைய மாகாண சபைகளுக்கான காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை அரச தலைவர்கள் அதற்கு எதிராக அரசாங்கத்திற்குள் போராட்டங்களை முன்னெடுப்பது என ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளனர்.

குறைந்தளவு அதிகாரங்களுடன் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கேட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைமையில் இந்திய அழுத்தங்களுக்கு எதிராக முனைப்புகளை மேற்கொள்வது குறித்து தமது கட்சி அடுத்த சில தினங்களில் ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுக்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் முன்னணியின் முக்கிஸ்தர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

நாடு எதிர்நோக்கும் அடுத்த அச்சுறுத்தல் போதைப்பொருள்.- பொலிஸ் மா அதிபர்.

இலங்கையை பீடித்திருந்த பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் நாடு எதிர்நோக்கியிருக்கும் அடுத்த அச்சுறுத்தலாக போதைப்பொருள் உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இவ்வியடம் தொடர்பாக வீசேட ஊடகவியாலளர் மாநாடொன்றில் பேசிய அவர் , நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுறுத்தலில் நாட்டில் இயங்கும் சகல மசாஜ் நிலையங்கள், மதுபாண விற்பனை நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களில் தவறுகளை செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து சட்டத்தின் பிரகாரம் அதிகூடிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இன்று போதைப் பொருள் வியாபரிகள் பாடசாலைகளுக்கு அருகில் தமது வியாபாரத்தினை வியாபித்துள்ளதாகவும் இதன்பால் ஈர்க்கப்படும் இளம் சமூகத்தினர் தமது வாழ்வினை இழக்கும் அபாயத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே மாநாட்டில் பேசிய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ் , போதைப்பொருள் வியாபாரிகள், சட்டவிரோத மதுபாண விற்பனை , விபச்சார விடுதி , கஞ்சா வியாபாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படும் எனவும் தகவல் வழங்குனர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கீழ் குறிப்பிடப்படும் இலக்கங்களுக்கு தகவல்களை வழங்கலாம் எனவும் கூறியுள்ளார். 2343333இ 2343334இ 2332985இ 2324626 ழச

பிரதி பொலிஸ் மா அதிபரின் கையடக்க தொலைபேசி 077-3679900

Read more...

விமானப்படையின் பயிற்சிகளை முடித்து 640 பேர் வெளியேறினர்.

இலங்கை விமானப்படையின் பயிற்சிகளை முடித்த 640 பேர் கொண்ட அணி ஒன்ற கடந்த 26ம் திகதி வெளியேறியுள்ளது. இந்நிகழவ்வின் விசேட வைபவம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

பயிற்சியினை முடித்து வெளியேறியோருக்கு அணிவகுப்பு, துப்பாக்கி கையாளுதல், வியூகங்கள், விமானங்கள் தொடர்பாக, தீயணைப்பு, வெடிமருந்து கையாளுதல், மனிதஉரிமைச் சட்டங்கள், விமானப்படை சட்டம், முதலுதவி என்பனவற்றில் மேலதிகமாக 14 வாரங்களுக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Read more...

வைகோ உள்பட ஆயிர‌க்கண‌க்கானோர் கைது .

நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்ய முயன்ற ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்சனைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளா அரசு பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும் ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.

வலந்தாயமரத்தில் நடைபெ‌ற்ற ம‌றிய‌‌லி‌ல் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் ம.தி.மு.க விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி, மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு நாடாளும‌ன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

Read more...

அமெரிக்காவில் ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து ஜீ.எல் பீரிஸ் வெளியேற்றம்.

உத்தியோகபூர்ய விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு தேசிய பத்திரிகையாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற மேற்படி ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் காரணம் எதனையும் தெரிவிக்காது அங்கிருந்து வெளியேறியதாக தேசிய பத்திரிகையாளர் அமைப்பின் தலைவர் ரெஜின்டர் சிங் குறிப்பிட்டார்.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் , மேற்படி ஊடவியலாளர்கள் மாநாட்டிலிருந்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியேறியமைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும்; தெரிவித்துள்ளனர்.

Read more...

இலங்கை உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆசிய வங்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பு.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்உட்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ குரோடா ஜனாதிபதியிடம் உறுதியளித் துள்ளார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருஹிகோ குரோடா தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தற்போது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து தான் பெரிதும் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இத்திட்டங்கள் நடைமுறைப்படு த்துவதன் ஊடாக இதுவரை கிடைத்துள்ள சாதகத்தன்மை குறித்தும் தான் திருப்தியடை வதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதிக்குபாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கைக்கான தனது இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று 28 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்

Read more...

Thursday, May 27, 2010

சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத் திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இன்னர் சிற்றிப் பிரஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது,சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக ளைப் பகிர்ந்து கொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டி ருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாக இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

Read more...

Wednesday, May 26, 2010

றோ அதிகாரிகள் இலங்கையில்.

இலங்கையில் எதிர்வரும் 3, 4, 5 ம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் இந்திய திரைப்பட விழா வில் கலந்துகொள்ள வந்துள்ள இந்திய கலைஞர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு இந்தியாவின் றோ உட்பட பல்வேறுபட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தம்நாட்டு கலைஞர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இங்குவந்துள்ளதாகவும் அரச தகவல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more...

2 ½ கிலோ தங்கத்துடன் கொள்ளைக் கும்பலொன்று வெள்ளவத்தையில் கைது.

கொறவப்பொத்தான பகுதியிலுள்ள முக்கிய இடமொன்றிலிருந்து தங்க குவியல் ஒன்றை கொள்ளையடித்துக் கொண்டு கொழும்புக்குள் நுழைந்த நால்வர் கொண்ட குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸ் காவல் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் முன்னாள் பிக்கு ஒருவர் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பிரபல படப்பிடிப்பாளர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது.

Read more...

ஐ.நா செயலாளர நாயகம்; ஒத்துழைப்பு வழங்க மாட்டார். குணதாஸ அமரசேகர.

மேற்குலக நாடுகளிலுள்ள தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கிலும், மீண்டும் இலங்கையில் ஈழக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவும் யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு என்ற அரச சார்பற்ற அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையிடம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய புத்திஜீவிகள் சபையினால் கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு, தயாரித்துள்ள இந்த அறிக்கையை உலகிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய முடியாது. அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் வெறும் தகவல்கள் மாத்திரமே. இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடாக விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காகவே அந்த அமைப்பு இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டார் என நம்புகிறோம்.

இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த அறிக்கை மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வறிய நாடாக இருக்கலாம். எனினும், எமக்கு சுய கௌரவம் இருக்கிறது. இதனடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என குணதாஸ அமரசேகர கூறியுள்ளார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி, எஸ்.எல். குணசேகர, இலங்கையில் இடம்பெற்றவை குறித்து பொய்யான அறிக்கைகளை தயாரிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கோ, நபர்களுக்கோ உரிமையில்லை. இது போன்ற வெளிநாட்டு சூழ்ச்சிகளுக்கு எதிராக நாம் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களை சமூகம் புறக்கணிக்க வேண்டும். 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு இந்திய இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவற்றுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் இந்தியா விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததன் காரணமாகவே அவர்கள் இலங்கைக்கு உதவினர் என சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜாதிக்க ஹெல உறுமயவின் செயலாளர் ஓபல்பே சோபித்த தேரர், சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு யுத்த குற்றங்களை மேற்கொள்ளும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும். அவர்கள் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கம். இந்த அறிக்கையை சமர்ப்பித்ததன் மூலம் அவர்கள் அதனையே எதிர்பார்த்துள்ளனர். நாம் அனைவரும் ஒன்றாக இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை பாரிய அழிவை நோக்கி செல்லக்கூடும் என ஓபல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பொன்கேகாவின் வழக்கு ஜூன் 7ம் திகதி : ஐ.நா நிரந்தர பிதிநிதயிடம் வாக்குமூலம்.


புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த அவ்வியக்கத்தின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் உத்தரவிட்டிருந்தார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக கூறப்படும் செய்தி தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஜெனரல் பொன்சேகா மீது கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் பதியப்பட்டுள்ள வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி செய்தி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத கொலைகளுக்கான விசேட பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தப் பிரதிநிதி ஷேனுக்காக செனவிரட்ணவிடம் பெற்றுக்கொண்ட விழக்கம் தொடர்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடமிருந்து வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுள்ளதாக மன்றிற்கு தெரிவித்துள்ளனர்.
மஜிஸ்ரேட் சம்பா ஜானிகி முன் எடுத்துக்கொள்ளப்பட்ட மேற்படி வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்று கொண்டுவரப்பட்டிருந்தார்.

அதேநேரம் ஐ.நா வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேற்படி அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பான்கீமூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெ‌ரி‌க்கா‌வி‌ட‌ம் இரு‌ந்து ஆயுத‌‌ங்க‌ள் வா‌ங்க இ‌ந்‌திய இராணுவ தளப‌தி எ‌தி‌ர்‌ப்பு.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் இரு‌ந்து ஆயுத‌ங்க‌ள் வா‌ங்க இ‌ந்‌திய இராணுவ‌த் தளப‌தி ‌கடு‌ம் எ‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்‌திய இராணுவ‌த்‌தி‌ற்கு தேவையான ஆயுத‌ங்‌களை ம‌த்‌திய அரசு‌க்‌காக அமெ‌ரி‌க்கா அரசு வா‌ங்‌கி ‌வி‌ற்பனை செ‌ய்து வரு‌கிறது. இத‌ற்காக
கு‌றி‌ப்‌பி‌ட்ட தொகையை அமெ‌ரி‌க்கா அரசு க‌மிஷனாகவு‌ம் பெறு‌கிறது.

டெ‌ண்ட‌ர் ‌விட‌ப்படாம‌ல் அரசுகளு‌க்கு இடையேயான உட‌ன்பாடுக‌ள் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ‌‌வி‌ற்பனை செ‌‌ய்ய‌ப்படுவ‌தி‌ல் முறைகேடுக‌ள் நட‌ப்பதாக இராணுவ‌‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

தர‌ம‌ற்ற ஆயுத‌ங்களை இ‌ந்‌தியாவு‌க்கு அமெ‌ரி‌க்கா வழ‌ங்குவதாக புகா‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள இ‌ந்‌திய இராணுவ தலைமை தளப‌தி ‌‌‌வி.கே.‌சி‌ங், இ‌ந்த மோசடி கு‌றி‌த்து ‌வி‌‌ழி‌ப்புட‌ன் இரு‌‌க்குமாறு பாதுகா‌ப்பு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி‌‌க்கு கடித‌ம் எழு‌‌தி இரு‌ப்பதாக இராணுவ வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.

கட‌ந்த 2002ஆ‌ம் ஆ‌ண்டு அமெ‌ரி‌க்கா‌விட‌ம் இரு‌ந்து வா‌ங்க‌ப்ப‌ட்ட ரேடா‌ர் கரு‌விக‌ள் உடனடியாக பழு‌து அட‌ை‌ந்து‌வி‌ட்டதாக கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள தலைமை தளப‌தி ‌வி.கே.‌சி‌ங், இது கு‌றி‌‌த்த புகா‌ர்களை அமெ‌ரி‌க்க அரசு அ‌ல‌ட்‌சிய‌ப்படு‌த்‌தி ‌வி‌ட்டதாகவு‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

3 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய்‌க்கு 145 கோ‌வி‌ட்ட‌ர் ‌பீர‌ங்‌கிகளையு‌ம், 10 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய்‌க்கு ‌10 பே‌ர் விமான‌ங்களையு‌ம் அமெ‌ரி‌க்கா‌விட‌ம் இரு‌ந்து இ‌ந்‌தியா வா‌ங்‌குவத‌ற்கு மு‌ன் ச‌‌ர்வதேச ச‌ட்ட ‌நிபுண‌ர்க‌ளிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டு‌‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Read more...

மனித உரிமை நிபுணர் குழு : அரசின் கோரிக்கை பான் கி மூனால் நிராகரிப்பு.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு அமைப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரீஸ் கூறியதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நிராகரித்துள்ளார்.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் என்றும், அதனை அமெரிக்கா வரவேற்றுள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவை நியமிக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் முடிவெடுத்திருப்பது தங்கள் நாட்டின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிடுவது ஆகும் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை நியூ யார்க்கில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனைச் சந்தித்தபோதும் அவரிடம் இக்கருத்தை நேரில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பான் கி மூன், 'இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களைப் பொறுப்பாக்குவது குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கும் பணி தொடரும்' என்று கூறியுள்ளார்.

'மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பொறுப்பாக்குவது என்பது சிறிலங்க அரசு எனக்கு அளித்த உறுதி மொழியாகும். அந்த உறுதிமொழியின் மீது சர்வதேச விதிமுறைகளின் படி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து எனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன்' என்றும் கூறியுள்ள பான் கி மூன், 'சிறிலங்க அரசு விசாரணை ஆணையம் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள், அந்த ஆணையம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் நிபுணர் குழு எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com