Wednesday, March 18, 2020

மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவாராம் கோத்தா!

நாட்டு மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை இலங்கைக்கு அழைத்துவர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் எந்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரும் இலங்கையில் பதிவு செய்யப்படாது இருந்தாலும், இந்த வைரஸினால் எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதற்காக ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசேட தேசிய செயலணி குழுவொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவராக இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை உடனடியான ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் பெப்ரவரி 19ஆம் திகதியாகும்போது முழுமையாக குணமடைந்து இலங்கையிலிருந்து தனது நாட்டுக்கு சென்றார்.

விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் மத்தளை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு தியத்தலாவையில் விசேடமாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முகாமில் 14 நாட்கள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு சென்றனர். இக்காலத்தில் விமான நிலையத்தினூடாக வருகை தருபவர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அடிப்படை பரிசோதனைகள் விமான நிலையத்திலேயே மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெப்ரவரி 26ஆம் திகதி தொற்றுக்குள்ளான சீன பெண் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒரு மாதகாலம்வரை வேறு எந்தவொரு நோயாளி பற்றியும் அறியக் கிடைக்கவில்லை. சீனாவிற்கு வெளியே வேறு நாடுகளிலும் வைரஸின் தாக்கம் பரவியதன் காரணமாக இத்தாலி, தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வருகைதரும் விமானப் பயணிகள் 14 நாட்களுக்கு கண்காணிப்புக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானம் மார்ச் மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்டது. இதன்படி கந்தகாடு, மட்டக்களப்பு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை உள்வாங்குதல் ஆரம்பமாகியது. இது ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தாலி அல்லது கொரியாவிலிருந்து வருகை தந்த ஒரு சிலர் அதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்து செல்லும் வழியில் திரும்பிச் செல்லவும் ஒரு சிலர் முற்பட்டனர்.

மார்ச் மாதம் 11ஆம் திகதி எமக்கு கொரோனா தொற்றுக்குள்ளன முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார். அவர் இத்தாலி சுற்றுலா குழுவொன்றிற்கு வழிகாட்டக்கூடிய சுற்றுலா ஆலோசகராவார்.

கண்காணிப்பு நிலையத்தினுள் மற்றும் அதற்கு வெளியே எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் மூலம் மேலும் பல தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களாக இருந்தமை மிக முக்கிய விடயமாகும்.

மார்ச் 13ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்கு உள்வாங்கப்படுவது ஆரம்பமானது. இவற்றுள் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிட்சலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவும் ஒன்று சேர்ந்தது. தற்போது இங்கிலாந்து, பெல்ஜியம், நோர்வே, கனடா, கட்டார் மற்றும் பஹ்ரேன் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். நாளை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து சுற்றுலா பயணிகளும் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 10ஆம் திகதி கந்தகாடு மற்றும் பூனானி கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 16 கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணியாகும்போது 1882 பயணிகள் இக்கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 92 பேர் தற்போது பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எமக்கு தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினை என்னவெனில் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த நாடுகளிலிருந்து 2000 பேரளவில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையாகும்.

தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றுக்குள்ளான 34 பேரில் 19 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பது கண்காணிப்பு நிலையங்களிலிருந்தாகும். அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள். ஏனையோர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தவர்கள் அல்லது வருகை தந்தவர்கள் மூலம் தொற்றுக்குள்ளனாவர்கள். நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்த அனைவரும் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளிலேயே சுயகண்காணிப்புக்குட்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்காக பொலிஸார், முப்படையினர், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதோடு, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com