புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது- ரோஹன லக்ஷ்மன் பியதாச சூளுரை.
புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை கண்டிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, இதனை கூறினார்.
புதிய அரசியலமைப்பு யோசனை, அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பல விவாதங்கள் இடம்பெறவேண்டும்.
அரசியலமைப்பொன்றை எடுத்த எடுப்பில் நிறைவேற்றிவிட முடியாது. இப்போதுள்ள நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இல்லை என்பது, அனைவருக்கும் தெரிந்த விடயமே என ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். எனினும் தற்போது அவர்களை இணைத்துக் கொண்டாலும் அவர்களினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. அவர்களுக்கு இன்னும் 20 – 25 பேரின் ஆதரவு தேவையாகவுள்ளது.
எனவே, இந்த அரசியலமைப்பினை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற முடியும் என தான் நம்பவில்லை என்பதோடு, மக்களும் இந்த புதிய அரசியல் அமைப்பை எதிர்ப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment