Wednesday, January 23, 2019

நாடு தழுவிய 'ஆயிரம் இயக்கம்’ எனும் மாபெரும் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

'ஒருமீ' சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

குறித்த போராட்டங்கள், கேகாலை, பதுளை, ஹப்புத்தளை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, ஹட்டன், மத்துகம, மட்டக்களப்பு, தலவாக்கலை, ராகல,நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி முதலான இடங்களில் நடைபெறவுள்ளன. இதேவேளை ருகுணு, ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு, சப்ரகமுவ, கிழக்கு ரஜரட, களனி, வடமேல் மற்றும் பேராதனைப் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ‘ஆயிரம் இயக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்ட அமைப்புக்களை தாண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக வேறு ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு தங்கள் பொறுப்பளிக்க மாட்டோம் என, ஆயிரம் இயக்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் ஐந்துலாம்பு சந்தியில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதனத்தை வலியுறுத்தி மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி, சகல பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன், இன்று பிற்பகல் 3 .00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com