அரசியலமைப்பை நிராகரிப்பது, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும் - மனோ கணேசன்.
இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீயின் தலைமையில் அரசியலமைப்புச் சபை கூடியது. இதன்போது புதிதான கொண்டுவரப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பான யோசனைகளும், வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
இந்த சபையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புதிய அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால், அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, எச்சரிக்கை விடுத்தார்.
அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு அரசியலமைப்பை நிராகரித்தால் புலிகளை மீள உருவாக்குங்கள். இங்கே பிரச்சினை உண்டு. மீண்டும் யுத்தத்தை ஆரம்பியுங்கள் என்ற செய்தி, புலம்பெயர் தமிழர்களுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.
இனவாதம், மதவாதம் பிரிவினைவாதம் போன்ற காரணங்களால் எமது நாடு முன்னேற்றமின்றி காணப்படுகிறது. தேர்தல் உரிமை பெற்ற ஒரு நாடு இன்று பின்னடைந்து செல்கிறது. இந்நாட்டில் ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரிமை உண்டு என்றால் அதுதான் பிரிவினைவாதம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment