Tuesday, January 22, 2019

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு வந்தது சோதனை - 9 MM துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

9 Millimeter ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஹேமசிறி பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் 4700 பதிவு செய்யப்பட்ட கைத் துப்பாக்கிகள் உள்ள நிலையில், இவை தொடர்பிலான தகவல்கள் முறையாக காணப்படாதுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். குறித்த துப்பாக்கிகள் என்ன நோக்கத்துக்காக பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் காணப்படாதுள்ளதாகவும் அவர் கூறினார். ஒருவரின் பெயரில் 14 அல்லது 15 துப்பாக்கிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், 9 MM ரக துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்தாவதாகவும், குறித்த வகை துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக புதிய அனுமதிப்பத்திரம் நாளை 23 ஆம் திகதி முதல் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்து தமது துப்பாக்கிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com