Friday, December 7, 2018

கிளிநொச்சியில் மைத்திரிக்கு ஆலாத்தி! இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்தார் !

இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கிளிநொச்சி பெண்கள் ஆலாத்தி எடுத்து வரவேற்க அவர் இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த இரணைமடுக்குளமானது யுத்தகாலத்தில் செலற்றுக்கிடந்ததுடன் யுத்தத்தின் கோரத்தினால் பாதிப்படைந்திருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்ததோடு, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகனிடம் இரணைமடுகுளத்தின் ஆவணத்தையும் கையளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் நிகழ்வையும் அரிசியிட்டு ஆரம்பித்து வைத்தார்.

இரணைமடுகுளத்தின் தற்போதைய நீர் மட்டம் 36 அடியை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஒரு வான்கதவினை ஆறு இஞ்சி அளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.


இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 8500 ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இனிவரும் காலங்களில் 12500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர்களான மகிந்த சமரசிங்க முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com